LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

பதினோராம் திருமுறை-23

7.3. சிவபெருமான் திருவந்தாதி



வெண்பா

572.     ஒன்று முதலாக நூறளவும் ஆண்டுகள்வாழ்ந்
தொன்றும் மனிதர் உயிரையுண் - டொன்றும்
மதியாத கூற்றுதைத்த சேவடியான் வாய்ந்த
மதியான் இடப்பக்கம் மால்.     1

573     
மாலை ஒருபால் மகிழ்ந்தானை வண்கொன்றை
மாலை ஒருபால் முடியானை - மாலை
ஒளியானை உத்தமனை உண்ணாநஞ் சுண்டற்
கொளியானை ஏத்தி உளம்.     2

574     
உளமால்கொண் டோடி ஒழியாது யாமும்
உளமாகில் ஏத்தவா றுண்டே - உளம்மாசற்
றங்கமலம் இல்லா அடல்வெள்ளே றூர்ந்துழலும்
அங்கமல வண்ணன் அடி.     3

575     
அடியார்தம் ஆருயிரை அட்டழிக்குங் கூற்றை
அடியால் அருவாகச் செற்றான் - அடியார்தம்
அந்தரத்தால் ஏத்தி அகங்குழைந்து மெய்யரும்பி
அந்தரத்தார் சூடும் அலர்.     4

576     
அலராளுங் கொன்றை அணியலா ரூரற்
கலராகி யானும் அணிவன் - அலராகி
ஓதத்தான் ஒட்டினேன் ஓதுவான்யான் ஓங்கொலிநீர்
ஓதத்தான் நஞ்சுண்டான் ஊர்.     5

577     
ஊரும தொற்றியூர் உண்கலனும் வெண்தலையே
ஊரும் விடையொன் றுடைதோலே - ஊரும்
படநாகம் மட்டார் பணமாலை ஈதோ
படநாகம் அட்டார் பரிசு.     6

578     
பரியானை ஊராது பைங்கணே றூரும்
பரியானைப் பாவிக்க லாகா - பரியானைக்
கட்டங்கம் ஏந்தியாக் கண்டுவாழ் நன்னெஞ்சே
கட்டங்கம் ஏந்தியாக் கண்டு.     7

579     
கண்டங் கரியன் உமைபாலுந் தன்பாலும்
கண்டங் கரியன் கரிகாடன் - கண்டங்கள்
பாடியாட் டாடும் பரஞ்சோதிக் கென்னுள்ளம்
பாடியாக் கொண்ட பதி.     8

580     
பதியார் பழிதீராப் பைங்கொன்றை தாவென்
பதியான் பலநாள் இரக்கப் - பதியாய
அம்மானார் கையார் வளைகவர்ந்தார் அதேகொல்
அம்மானார் கையார் அறம்.     9

581     
அறமானம் நோக்கா தநங்கனையும் செற்றங்
கறமாநஞ் சுண்ட அமுதன் - அறமான
ஓதியாள் பாகம் அமர்ந்தான் உயர்புகழே
ஓதியான் தோற்றேன் ஒளி.     10

582     
ஒளியார் சுடர்மூன்றுங் கண்மூன்றாக் கோடற்
கொளியான் உலகெல்லாம் ஏத்தற் - கொளியாய
கள்ளேற்றான் கொன்றையான் காப்பிகந்தான் நன்னெஞ்சே
கள்ளேற்றான் கொன்றை கடிது.     11

583     
கடியரவர் அக்கர் கரிதாடு கோயில்
கடியரவர் கையதுமோர் சூலம் - கடியரவர்
ஆனேற்றார்க் காட்பட்ட நெஞ்சமே அஞ்சல்நீ
ஆனேற்றார்க் காட்பட்டேம் யாம்.     12

584     
யாமான நோக்கா தலர்கொன்றைத் தார்வேண்ட
யாமானங் கொண்டங் கலர்தந்தார் - யாமாவா
ஆவூரா ஊரும் அழகா அனலாடி
ஆவூரார்க் கென்னுரைக்கோம் யாம்.     13

585     
யானென்றங் கண்ணா மலையான் அகம்புகுந்து
யானென்றங் கையறிவும் குன்றுவித்து - யானென்றங்
கார்த்தானே யாயிடினும் அம்பரன்மேல் அங்கொன்றை
ஆர்த்தானேல் உய்வ தரிது.     14

586     
அரியாரும் பூம்பொழில் சூழ் ஆமாத்தூர் அம்மான்
அரியாரும் பாகத் தமுதன் - அரியாரும்
வேங்கடத்து மேயானை மேவா உயிரெல்லாம்
வேங்கடத்து நோயால் வியந்து.     15

587     
வியந்தாழி நன்னெஞ்சே மெல்லியலார்க் காளாய்
வியந்தாசை யுள்மெலிய வேண்டா - வியந்தாய
கண்ணுதலான் எந்தைகா பாலி கழலடிப்பூக்
கண்ணுதலாம் நம்பாற் கடன்.     16

588     
கடனாகம் ஊராத காரணமுங் கங்கை
கடனாக நீகவர்ந்த வாறும் - கடனாகப்
பாரிடந்தான் மேவிப் பயிலும் பரஞ்சோதி
பாரிடந்தான் மேயாய் பணி.     17

589     
பணியாய் மடநெஞ்சே பல்சடையான் பாதம்
பணியாத பத்தர்க்குஞ் சேயன் - பணியாய
ஆகத்தான் செய்துமேல் நம்மை அமரர்கோ
னாகத்தான் செய்யும் அரன்.     18

590     
அரன்காய நைவேற் கநங்கவேள் அம்பும்
அரன்காயும் அந்தியும்மற் றந்தோ - அரங்காய
வெள்ளில்சேர் காட்டாடி வேண்டான் களிறுண்ட
வெள்ளில்போன் றுள்ளம் வெறிது.     19

591     
வெறியானை ஊர்வேந்தர் பின்செல்லும் வேட்கை
வெறியார்பூந் தாரான் விமலன் - வெறியார்தம்
அல்லல்நோய் தீர்க்கும் அருமருந்தாம் ஆருர்க்கோன்
அல்லனோ நெஞ்சே அயன்.     20

592     
அயமால்ஊண் ஆடரவம் நாண்அதள தாடை
அயமாவ தானேறூர் ஆரூர் - அயமாய
என்னக்கன் தாழ்சடையன் நீற்றன் எரியாடி
என்னக்கன் றாழும் இவள்.     21

593     
ஆழும் இவளையும் கையகல ஆற்றேனென்
றாழும் இவளை அயராதே - ஆழும்
சலமுடியாய் சங்கரனே சங்கக் குழையாய்
சலமுடியா தின்றருளுன் தார்.     22

594     
தாராய தண்கொன்றை யானிரப்பத் தானிதனைத்
தாராதே சங்கம் சரிவித்தான் - தாராவல்
ஆனைமேல் வைகும் அணிவயல்ஆ ரூர்க்கோன்நல்
ஆனையும் வானோர்க் கரசு.     23

595     
அரசுமாய் ஆள்விக்கும் ஆட்பட்டார்க் கம்மான்
அரசுமாம் அங்கொன்று மாலுக் - கரசுமான்
ஊர்தி எரித்தான் உணருஞ் செவிக்கின்பன்
ஊர்தி எரித்தான் உறா.     24

596     
உறாவேயென் சொற்கள் ஒளிவளைநின் உள்ளத்
துறாவேதீ உற்றனகள் எல்லாம் - உறாவேபோய்க்
காவாலி தார்நினைந்து கைசோர்ந்து மெய்மறந்தாள்
காவாலி தாநின் கலை.     25

597     
கலைகாமின் ஏர்காமின் கைவளைகள் காமின்
கலைசேர் நுதலீர்நாண் காமின் - கலையாய
பான்மதியன் பண்டரங்கன் பாரோம்பு நான்மறையன்
பான்மதியன் போந்தான் பலிக்கு.     26

598     
பலிக்குத் தலையேந்திப் பாரிடங்கன் சூழப்
பலிக்கு மனைப்புகுந்து பாவாய் - பலிக்குநீ
ஐயம்பெய் என்றானுக் கையம்பெய் கின்றேன்மேல்
ஐயம்பெய் தான்அநங்கன் ஆய்ந்து.     27

599     
ஆயம் அழிய அலர்கொன்றைத் தார்வேண்டி
ஆயம் அழிய அயர்வேன்மேல் - ஆயன்வாய்த்
தீங்குழலும் தென்றலும் தேய்கோட் டிளம்பிறையும்
தீங்குழலும் என்னையே தேர்ந்து.     28

600     
தேரோன் கதிரென்னுஞ் செந்தழலால் வெந்தெழுபேய்த்
தேரோன் கதிரென்னுஞ் செய்பொருள்நீ - தேராதே
கூடற்கா வாலி குரைகழற்கா நன்னெஞ்சே
கூடற்கா வாலிதரக் கூர்.     29

601     
கூரால மேயாக் குருகோடு நைவேற்குக்
கூரார்வேற் கையார்க்காய்க் கொல்லாமே - கூரார்
பனிச்சங்காட் டார்சடைமேற் பால்மதியைப் பாம்பே
பனிச்சங்காட் டாய்கடிக்கப் பாய்ந்து.     30

602     
பாயும் விடையூர்தி பாசுபதன் வந்தெனது
பாயிற் புகுதப் பணை முலைமேல் - பாயிலனற்
கொன்றாய் குளிர்சடையாற் கென்நிலைமை கூறாதே
கொன்றாய் இதுவோ குணம்.     31

603     
குணக்கோடி கோடாக் குளிர்சடையான் வில்லின்
குணக்கோடி குன்றஞ்சூழ் போகிக் - குணக்கோடித்
தேரிரவில் வாரான் சிவற் காளாஞ் சிந்தனையே
தேரிரவில் வாழும் திறம்.     32

604     
திறங்காட்டுஞ் சேயாள் சிறுகிளியைத் தான்தன்
திறங்காட்டுந் தீவண்ணன் என்னும் - திறங்காட்டின்
ஊரரவம் ஆர்த்தானோ டென்னை உடன்கூட்டின்
ஊரரவஞ் சால உடைத்து.     33

605     
உடையோடு காடாடி ஊர்ஐயம் உண்ணி
உடையாடை தோல்பொடிசந் தென்னை - உடையானை
உன்மத் தகமுடிமேல் உய்த்தானை நன்னெஞ்சே
உன்மத் தகமுடிமேல் உய்.     34

606     
உய்யாதென் ஆவி ஒளிவளையும் மேகலையும்
உய்யா துடம்பழிக்கும் ஒண்திதலை - உய்யாம்
இறையானே ஈசனே எம்மானே நின்னை
இறையானும் காண்கிடாய் இன்று.     35

607     
இன்றியாம் உற்ற இடரும் இருந்துயரும்
இன்றியாம் தீர்தும் எழில்நெஞ்சே - இன்றியாம்
காட்டாநஞ் சேற்றாஅன் காமரு வெண்காட்டான்
காட்டான்அஞ் சேற்றான் கலந்து.     36

608     
கலம்பெரியார்க் காஞ்சிரங்காய் வின்மேரு என்னும்
கலம்பெரிய ஆற்கீழ் இருக்கை - கலம்பிரியா
மாக்கடல்நஞ் சுண்டார் கழல்தொழார்க் குண்டாமோ
மாக்கடனஞ் சேரும் வகை.     37

609     
கையா றவாவெகுளி அச்சங் கழிகாமம்
கையாறு செஞ்சடையான் காப்பென்னும் - கையாறு
மற்றிரண்ட தோளானைச் சேர்நெஞ்சே சேரப்போய்
மற்றிரண்ட தோளான் மனை.     38

610     
மனையாய் பலிக்கென்று வந்தான்வண் காமன்
மனையா சறச்செற்ற வானோன் - மனையாய
என்பாவாய் என்றேனுக் கியானல்லேன் நீதிருவே
என்பாவாய் என்றான் இறை.     39

611     
இறையாய வெண்சங் கிவைதருவேன் என்னும்
இறையாகம் இன்றருளாய் என்னும் - இறையாய்
மறைக்காட்டாய் மாதவனே நின்னுருவம் இங்கே
மறைக்காட்டாய் என்னும்இம் மாது.     40

612     
மாதரங்கந் தன்னரங்கஞ் சேர்த்தி வளர்சடைமேல்
மாதரங்கக் கங்கைநீர் மன்னுவித்து - மாதரங்கத்
தேரானை யூரான் சிவற்காளாஞ் சிந்தனையே
தேரானை யூரானைத் தேர்.     41

613     
தெருளிலார் என்னாவார் காவிரிவந் தேறும்
அருகில் சிராமலையெங் கோமான் - விரியுலகில்
செல்லுமதில் மூன்றெரித்தான் சேவடியே யாம்பரவிச்
செல்லும்எழில் நெஞ்சே தெளி.     42

614     
தெளியாய் மடநெஞ்சே செஞ்சடையான் பாதம்
தெளியாதார் தீநெறிக்கட் செல்வர் - தெளியாய
பூவார் சடைமுடியான் பொன்னடிக்கே ஏத்துவன்நற்
பூவாய வாசம் புனைந்து.     43

615     
புனைகடற்குப் பொன்கொடுக்கும் பூம்புகார் மேயான்
புனைகடுக்கை மாலைப் புராணன் - புனைகடத்து
நட்டங்கம் ஆட்டயரும் நம்பன் திருநாமம்
நட்டங்க மாட்டினேன் நக்கு.     44

616     
நக்கரை சாளும் நடுநாளை நாரையூர்
நக்கரை வக்கரையோம் நாமென்ன - நக்குரையாம்
வண்டாழங் கொன்றையான் மால்பணித்தான் மற்றவர்க்காய்
வண்டாழங் கொண்டான் மதி.     45

617     
மதியால் அடுகின்ற தென்னும்மால் கூரும்
மதியாதே வைதுரப்பர் என்னும் - மதியாதே
மாதெய்வம் ஏத்தும் மறைக்காடா ஈதேகொல்
மாதெய்வம் கொண்ட வனப்பு.     46

618     
வனப்பார் நிறமும் வரிவளையும் நாணும்
வனப்பார் வளர்சடையான் கொள்ள - வனப்பாற்
கடற்றிரையு மீருமிக் கங்குல்வா யான்கட்
கடற்றிரையு மீருங் கனன்று.     47

619     
கனன்றாழி நன்னெஞ்சே கண்ணுதலார்க் காளாய்க்
கனன்றார் களிற்றுரிமால் காட்டக் - கனன்றோர்
உடம்பட்ட நாட்டத்தர் என்னையுந்தன் ஆளா
உடம்பட்ட நாட்டன் உரு.     48

620     
உருவியலுஞ் செம்பவளம் ஒன்னார் உடம்பில்
உருவியலுஞ் சூலம் உடையன் - உருவியலும்
மாலேற்றான் நான்முகனும் மண்ணோடு விண்ணும்போய்
மாலேற்றாற் கீதோ வடிவு.     49

621     
வடிவார் அறப்பொங்கி வண்ணக்கச் சுந்தி
வடிவார் வடம்புனைந்தும் பொல்லா - வடிவார்மேல்
முக்கூடல் அம்மா முருகமருங் கொன்றையந்தார்
முக்கூட மாட்டா முலை.     50

622     
முலைநலஞ்சேர் கானப்பேர் முக்கணான் என்னும்
முலைநலஞ்சேர் மொய்சடையான் என்னும் -முலைநலஞ்சேர்
மாதேவா என்று வளர்கொன்றை வாய்சோர
மாதேவா சோரல் வளை.     51

623     
வளையாழி யோடகல மால்தந்தான் என்னும்
வளையாழி நன்னெஞ்சே காணில் - வளையாழி
வன்னஞ்சைக் கண்டமரர் வாய்சோர வந்தெதிர்ந்த
வன்னஞ்சக் கண்டன் வரில்.     52

624     
வரிநீல வண்டலம்பு மாமறைக்காட் டங்கேழ்
வரிநீர் வலம்புரிகள் உந்தி - வரிநீர்
இடுமணல்மேல் அந்நலங்கொண் டின்னாநோய் செய்தான்
இடுமணல்மேல் ஈசன் எமக்கு.     53

625     
அக்காரம் ஆடரவம் நாண்அறுவை தோல்பொடிசாந்
தக்காரம் தீர்ந்தேன் அடியேற்கு -வக்காரம்
பண்டரங்கன் எந்தை படுபிணஞ்சேர் வெங்காட்டுப்
பண்டரங்கன் எங்கள் பவன்.     54

626     
பவனடிபார் விண்நீர் பகலோன் மதிதீப்
பவனஞ்சேர் ஆரமுதம் பெண்ஆண் -பவனஞ்சேர்
காலங்கள் ஊழி அவனே கரிகாட்டிற்
காலங்கை ஏந்தினான் காண்.     55

627     
காணங்கை இன்மை கருதிக் கவலாதே
காணங்கை யாற்றொழுது நன்னெஞ்சே - காணங்கை
பாவனையாய் நின்றான் பயிலும் பரஞ்சோதி
பாவனையாய் நின்ற பதம்.     56

628     
பதங்க வரையுயர்ந்தான் பான்மகிழ்ந்தான் பண்டு
பதங்கன் எயிறு பறித்தான் - பதங்கையால்
அஞ்சலிகள் அன்பாலும் ஆக்குதிகாண் நெஞ்சேகூர்ந்
தஞ்சலிகள் அன்பாலும் ஆக்கு.     57

629     
ஆக்கூர் பனிவாடா ஆவிசோர்ந் தாழ்கின்றேன்
ஆக்கூர் அலர்தான் அழகிதா - ஆக்கூர்
மறையோம்பு மாடத்து மாமறையோ நான்கு
மறையோம்பு மாதவர்க்காய் வந்து.     58

630     
வந்தியான் சீறினும் ஆழி மடநெஞ்சே
வந்தியா உள்ளத்து வைத்திராய் -வந்தியாய்
நம்பரனை யாடும் நளிர்புன் சடையானை
நம்பரனை நாள்தோறும் நட்டு.     59

631     
நட்டமா கின்றன வொண்சங்கம் நானவன்பால்
நட்டமா நன்னீர்மை வாடினேன் - நட்டமா
டீயான் எரியாடி எம்மான் இருங்கொன்றை
ஈயானேல் உய்வ திலம்.     60

632     
இலமலரஞ் சேவடியார் ஏகப் பெறாரே
இலமலரே ஆயினும் ஆக - இலமலரும்
ஆம்பல்சேர் செவ்வாயார்க் காடாதே ஆடினேன்
ஆம்பல்சேர் வெண்தலையர்க் காள்.     61

633     
ஆளானம் சேர்களிறும் தேரும் அடல்மாவும்
ஆளானார் ஊரத்தான் ஏறூரும் - தாளான்பொய்
நாடகங்க ளாட்டயரும் நம்பன் திருநாமம்
நாடகங்கள் ஆடி நயந்து.     62

634     
நயந்தநாள் யானிரப்ப நற்சடையான் கொன்றை
நயந்தநாள் நன்னீர்மை வாட - நயந்தநாள்
அம்பகலஞ் செற்றான் அருளான் அநங்கவேள்
அம்பகலம் பாயும் அலர்ந்து.     63

635     
அலங்காரம் ஆடரவம் என்பதோல் ஆடை
அலங்கார வண்ணற் கழகார் - அலங்காரம்
மெய்காட்டு வார்குழலார் என்னாவார் வெள்ளேற்றான்
மெய்காட்டும் வீடாம் விரைந்து.     64

636     
விரையார் புனற்கங்கை சேர்சடையான் பொன்னார்
விரையார் பொழிலுறந்தை மேயான் - விரையாநீ
றென்பணிந்தான் ஈசன் இறையான் எரியாடி
என்பணிந்தான் ஈசன் எனக்கு.     65

637     
எனக்குவளை நில்லா எழில்இழந்தேன் என்னும்
எனக்குவளை நில்லாநோய் செய்தான் - இனக்குவளைக்
கண்டத்தான் நால்வேதன் காரோணத் தெம்மானைக்
கண்டத்தான் நெஞ்சேகாக் கை.     66

638     
காக்கைவளை என்பார்ப்பார்க் கன்பாப்பா னையாதே
காக்கைவளை யென்பார்ப்பான் ஊன்குரக்குக் - காக்கைவளை
ஆடானை ஈருரியன் ஆண்பெண் அவிர்சடையன்
ஆடானை யான தமைவு.     67

639     
அமையாமென் தோள்மெலிவித் தம்மாமை கொண்டிங்
கமையாநோய் செய்தான் அணங்கே - எமையாளும்
சாமத்த கண்டன் சடைசேர் இளம்பிறையன்
சாமத்தன் இந்நோய்செய் தான்.     68

640     
தானக்கன் நக்க பிறையன் பிறைக்கோட்டுத்
தானக் களிற்றுரியன் தண்பழனன் - தானத்
தரையன் அரவரையன் ஆயிழைக்கும் மாற்கும்
அரையன் உடையான் அருள்.     69

641     
அருள்நம்பாற் செஞ்சடையன் ஆமாத்தூர் அம்மான்
அருள்நம்பால் நல்கும் அமுதன் - அருள்நம்பால்
ஓராழித் தேரான் எயிறட்ட உத்தமனை
ஓராழி நெஞ்சே உவ.     70

642     
உவவா நறுமலர்கொண் டுத்தமனை உள்கி
உவவா மனமகிழும் வேட்கை - உவவா
றெழுமதிபோல் வான்முகத் தீசனார்க் கென்னே
எழுமதிபோல் ஈசன் இடம்.     71

643     
இடமால் வலமாலை வண்ணமே தம்பம்
இடமால் வலமானஞ் சேர்த்தி -இடமாய
மூளா மதிபுரையும் முன்னிலங்கு மொய்சடையான்
மூவா மதியான் முனி.     72

644     
முனிவன்மால் செஞ்சடையான் முக்கணான் என்னும்
முனிவன்மால் செய்துமுன் நிற்கும் - முனிவன்மால்
போற்றார் புரமெரித்த புண்ணியன்தன் பொன்னடிகள்
போற்றாநாள் இன்று புலர்ந்து.     73

645     
புலர்ந்தால்யான் ஆற்றேன் புறனுரையும் அதே
புலர்ந்தானூர் புன்கூரான் என்னும் - புலர்ந்தாய
மண்டளியன் அம்மான் அவர்தம் அடியார்தம்
மண்டளியன் பின்போம் மனம்.     74

646     
மனமாய நோய்செய்தான் வண்கொன்றை தாரான்
மனமாய உள்ளார வாரான் -மனமாயப்
பொன்மாலை சேரப் புனைந்தான் புனைதருப்பைப்
பொன்மாலை சேர்சடையான் போந்து.     75

647     
போந்தார் புகஅணைந்தார் பொன்னேர்ந்தார் பொன்னாமை
போந்தார் ஒழியார் புரமெரித்தார் - போந்தார்
இலங்கோல வாள்முகத் தீசனாற் கெல்லே
இலங்கோலந் தோற்ப தினி.     76

648     
இனியாரும் ஆளாக எண்ணுவர்கொல் எண்ணார்
இனியானஞ் சூணிருக்கைக் குள்ளான் - இனியானைத்
தாளங்கை யாற்பாடித் தாழ்சடையான் தானுடைய
தாளங்கை யால்தொழுவார் தாம்.     77

649     
தாமரைசேர் நான்முகற்கும் மாற்கும் அறிவரியார்
தாமரைசேர் பாம்பர் சடாமகுடர் - தாமரைசேர்
பாணியார் தீர்ந்தளிப்பர் பாரோம்பு நான்மறையார்
பாணியார் தீர்ந்தளிப்பர் பார்.     78

650     
பார்கால்வான் நீர்தீப் பகலோன் பனிமதியோன்
பார்கோல மேனிப் பரனடிக்கே - பார்கோலக்
கோகரணத் தானறியக் கூறுதியே நன்னெஞ்சே
கோகரணத் தானாய கோ.     79

651     
கோப்பாடி ஓடாதே நெஞ்சம் மொழி கூத்தன்
கோப்பாடிக் கோகரணங் குற்றாலம் -கோப்பாடிப்
பின்னைக்காய் நின்றார்க் கிடங்கொடுக்கும் பேரருளான்
பின்னைக்காம் எம்பெருமான் பேர்.     80

652     
பேரானை ஈருரிவை போர்த்தானை ஆயிரத்தெண்
பேரானை ஈருருவம் பெற்றானைப் - பேராநஞ்
சுண்டானை உத்தமனை உள்காதார்க் கெஞ்ஞான்றும்
உண்டாம்நா ளல்ல உயிர்.     81

653     
உயிராய மூன்றொடுக்கி ஐந்தடக்கி உள்ளத்
துயிராய ஒண்மலர்த்தாள் ஊடே - உயிரான்
பகர்மனத்தான் பாசுபதன் பாதம் பணியப்
பகர்மனமே ஆசைக்கட் பட்டு.     82

654     
பட்டாரண் பட்டரங்கன் அம்மான் பரஞ்சோதி
பட்டார் எலும்பணியும் பாசுபதன் - பட்டார்ந்த
கோவணத்தான் கொல்லேற்றன் என்றென்று நெஞ்சமே
கோவணத்து நம்பனையே கூறு.     83

655     
கூற்றும் பொருளும்போற் காட்டியென் கோல்வளையைக்
கூற்றின் பொருள்முயன்ற குற்றாலன் - கூற்றின்
செருக்கழியச் செற்ற சிவற்கடிமை நெஞ்சே
செருக்கழியா முன்னமே செய்.     84

656     
செய்யான் கருமிடற்றான் செஞ்சடையான் தேன்பொழில்சூழ்
செய்யான் பழனத்தான் மூவுலகும் - செய்யாமுன்
நாட்டுணாய் நின்றானை நாடுதும்போய் நன்னெஞ்சே
நாட்டுணாய் நின்றானை நாம்.     85

657     
நாவாய் அகத்துளதே நாமுளமே நம்மீசன்
நாவாய்போல் நன்னெறிக்கண் உய்க்குமே - நாவாயால்
துய்க்கப் படும்பொருளைக் கூட்டுதும் மற்றவர்க்காள்
துய்க்கப் படுவதாஞ் சூது.     86

658     
சூதொன் றுனக்கறியச் சொல்லினேன் நன்னெஞ்சே
சூதன் சொலற்கரிய சோதியான் - சூதின்
கொழுந்தேன் கமழ்சோலைக் குற்றாலம் பாடிக்
கொழுந்தே இழந்தேன் குருகு.     87

659     
குருகிளவேய்த் தோள்மெலியக் கொங்கைமார் புல்கிக்
குருகிளையார் கோடு கொடாமே - குருகிளரும்
போதார் கழனிப் புகலூர் அமர்ந்துறையும்
போதாநின் பொன்முடிக்கட் போது.     88

660     
போதரங்க வார்குழலார் என்னாவார் நன்னெஞ்சே
போதரங்க நீர்கரந்த புண்ணியனைப் - போதரங்கக்
கானகஞ்சேர் சோதியே கைவிளக்கா நின்றாடும்
கானகஞ்சேர் வாற்கடிமை கல்.     89

661     
கற்றான்அஞ் சாடுகா வாலி களந்தைக்கோன்
கற்றானைக் கல்லாத நாளெல்லாம் - கற்றான்
அமரர்க் கமரர் அரர்க்கடிமை பூண்டார்
அமரர்க் கமரரா வார்.     90

662     
ஆவா மனிதர் அறிவிலரே யாதொன்றும்
ஆவார்போற் காட்டி அழிகின்றார் - ஆஆ
பகல்நாடிப் பாடிப் படர்சடைக்குப் பல்பூப்
பகல்நாடி ஏத்தார் பகர்ந்து.     91

663     
பகனாட்டம் பாட்டயரும் பாட்டோ டாட் டெல்லி
பகனாட்டம் பாழ்படுக்கும் உச்சி - பகனாட்டம்
தாங்கால் தொழுதெழுவார் தாழ்சடையார் தம்முடைய
தாங்கால் தொழுதல் தலை.     92

664     
தலையாலங் காட்டிற் பலிதிரிவர் என்னும்
தலையாலங் காடர்தாம் என்னும் -தலையாய
பாகீ ரதிவளரும் பல்சடையீர் வல்லிடையீர்
பாகீ ரதிவளரும் பண்பு.     93

665     
பண்பாய நான்மறையான் சென்னிப் பலிதேர்ந்தான்
பண்பாய பைங்கொன்றைத் தார்அருளான் - பண்பால்
திருமாலு மங்கைச் சிவற் கடிமை செய்வான்
திருமாலு மங்கைச் சிவன்.     94

666     
சிவன்மாட் டுகவெழுதும் நாணும் நகுமென்னும்
சிவன்மேய செங்குன்றூர் என்னும் -சிவன்மாட்டங்
காலிங் கனம்நினையும் ஆயிழையீர் அங்கொன்றை
யாலிங் கனம்நினையு மாறு.     95

667     
ஆறாவெங் கூற்றுதைத் தானைத்தோல் போர்த்துகந்தங்
காறார் சடையீர்க் கமையாதே - ஆறாத
ஆனினித்தார் தாந்தம் அணியிழையி னார்க்கடிமை
ஆனினத்தார் தாந்தவிர்ந்த தாட்டு.     96

668     
ஆட்டும் அரவர் அழிந்தார் எலும்பணிவார்
ஆட்டும் இடுபலிகொண் டார்அமரர் - ஆட்டுமோர்
போரேற்றான் கொன்றையான் போந்தான் பலிக்கென்று
போரேற்றான் போந்தான் புறம்.     97

669     
புறந்தாழ் குழலார் புறனுரைஅஞ் சாதே
புறந்தாழ் புலிப்பொதுவுள் ஆடி - புறந்தாழ்பொன்
மேற்றளிக்கோன் வெண்பிறையான் வெண்சுடர்போல் மேனியான்
மேற்றளிக்கோன் என்றுரையான் மெய்.     98

670     
மெய்யன் பகலாத வேதியன் வெண்புரிநூல்
மெய்யன் விரும்புவார்க் கெஞ்ஞான்றும் -வெய்ய
துணையகலா நோக்ககலா போற்றகலா நெஞ்சே
துணையிகலா கூறுவான் நூறு.     99

671     
நூறான் பயன்ஆட்டி நூறு மலர்சொரிந்து
நூறா நொடிஅதனின் மிக்கதே - நூறா
உடையான் பரித்தஎரி உத்தமனை வெள்ளே
றுடையானைப் பாடலால் ஒன்று.     100


திருச்சிற்றம்பலம்

by   on 26 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.