LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பன்னிரு திருமுறை

பதினோராம் திருமுறை-33

12.2. கோயில் திருப்பண்ணியர் விருத்தம்



1056     நெஞ்சந் திருவடிக் கீழ்வைத்து நீள்மலர்க் கண்பனிப்ப
வஞ்சம் கடிந்துன்னை வந்தித்தி லேன்அன்று வானர்உய்ய
நஞ்சங் கருந்து பெருந்தகை யேநல்ல தில்லைநின்ற
அஞ்செம் பவளவண் ணாஅருட்கு யான்இனி யாரென்பரே.     1

1057     
என்பும் தழுவிய ஊனும் நெகஅக மேஎழுந்த
அன்பின் வழிவந்த ஆரமிர் தேஅடி யேன்உரைத்த
வன்புன் மொழிகள் பொறுத்திகொ லாம்வளர் தில்லைதன்னுள்
மின்புன் மிளிர்சடை வீசிநின் றாடிய விண்ணவனே.     2

1058     
அவநெறிக் கேவிழப் புக்கஇந் நான்அழுந் தாமைவாங்கித்
தவநெறிக் கேஇட்ட தத்துவ னேஅத் தவப்பயனாம்
சிவநெறிக் கேஎன்னை உய்ப்பவ னேசென னந்தொறுஞ்செய்
பவமறுத் தாள்வதற் கோதில்லை நட்டம் பயில்கின்றதே.     3

1059     
பயில்கின் றிலேன்நின் திறத்திரு நாமம் பனிமலர்த்தார்
முயல்கின் றிலேன் நின் திருவடிக் கேஅப்ப முன்னுதில்லை
இயல்கின்ற நாடகச் சிற்றம் பலத்துள்எந் தாய்இங்ஙனே
அயர்கின்ற நான்எங்ங னேபெறு மாறுநின் னாரருளே.     4

1060     
அருதிக்கு விம்மி நிவந்ததோ வெள்ளிக் குவடதஞ்சு
பருதிக் குழவி உமிழ்கின்ற தேஒக்கும் பற்றுவிட்டோர்
கருதித் தொழுகழற் பாதமும் கைத்தலம் நான்கும்மெய்த்த
சுருதிப் பதம்முழங் குந்தில்லை மேய சுடரினுக்கே.     5

1061     
சுடலைப் பொடியும் படுதலை மாலையும் சூழ்ந்தஎன்பும்
மடலைப் பொலிமலர் மாலைமென் தோள்மேல் மயிர்க்கயிறும்
அடலைப் பொலிஅயில் மூவிலை வேலும் அணிகொள்தில்லை
விடலைக்கென் ஆனைக் கழகிது வேத வினோதத்தையே.     6

1062     
வேத முதல்வன் தலையும் தலையாய வேள்விதன்னுள்
நாதன் அவன்எச்சன் நற்றலை யும்தக்க னார்தலையும்
காதிய தில்லைச்சிற் றம்பலத் தான்கழல் சூழந்துநின்று
மாதவர் என்னோ மறைமொழி யாலே வழுத்துவதே.     7

1063     
வழுத்திய சீர்த்திரு மால்உல குண்டவன் பாம்புதன்னின்
கழுத்தரு கேதுயின் றானுக்கப் பாந்தளைக் கங்கணமாச்
செழுத்திரள் நீர்த்திருச் சிற்றம் பலத்தான் திருக்கடையிட
அழுத்திய கல்லொத் தனன்ஆயன் ஆகிய மாயவனே.     8

1064     
மாயவன் முந்நீர்த் துயின்றவன் அன்று மருதிடையே
போயவன் காணாத பூங்கழல் நல்ல புலத்தினர்நெஞ்
சேயவன் சிற்றம் பலத்துள்நின் றாடுங் கழல்எவர்க்கும்
தாயவன் தன்பொற் கழல்என் தலைமறை நன்னிழலே.     9

1065     
நிழல்படு பூண்நெடு மால்அயன் காணாமை நீண்டவரே
தழல்படு பொன்னகல் ஏந்தித் தமருகந் தாடித்தமைத்
தெழில்பட வீசிக் கரமெறி நீர்த்தில்லை அம்பலத்தே
குழல்படு சொல்வழி ஆடுவர் யாவர்க்கும் கூத்தினையே.     10

1066     
கூத்தனென் றுந்தில்லை வாணன்என் றும்குழு மிட்டிமையோர்
ஏத்தனென் றுஞ்செவி மாட்டிசை யாதே இடுசுணங்கை
மூத்தவன் பெண்டீர் குணலையிட் டாலும் முகில்நிறத்த
சாத்தனென் றாலும் வருமோ இவளுக்குத் தண்ணெனவே.     11

1067     
தண்ணார் புனல்தில்லைச் சிற்றம்பலந்தன்னில் மன்னிநின்ற
விண்ணாள னைக்கண்ட நாள்விருப் பாயென் உடல்முழுதும்
கண்ணாங் கிலோதொழக் கையாங் கிலோதிரு நாமங்கள்கற்
றெண்ணாம் பரிசெங்கும் வாயாங்கி லோஎனக் கிப்பிறப்பே.     12

1068     
பிறவியிற் பெற்ற பயனொன்று கண்டிலம் பேரொலிநீர்
நறவியல் பூம்பொழில் தில்லையுள் நாடகம் ஆடுகின்ற
துறவியல் சோதியைச் சுந்தரக் கூத்தனைத் தொண்டர்தொண்டர்
உறவியல் வாற்கண்கள் கண்டுகண் டின்பத்தை உண்டிடவே.     13

1069     
உண்டேன் அவரருள் ஆரமிர் தத்தினை உண்டலுமே
கண்டேன் எடுத்த கழலும் கனலும் கவித்தகையும்
ஒண்டேன் மொழியினை நோக்கிய நோக்கும் ஒளிநகையும்
வண்டேன் மலர்த்தில்லை அம்பலத் தாடும் மணியினையே.     14

1070     
மணியொப் பனதிரு மால்மகு டத்து மலர்க்கமலத்
தணியொப் பனஅவன் தன்முடி மேல்அடி யேன்இடர்க்குத்
துணியச் சமைந்தநல் லீர்வாள் அனையன சூழ்பொழில்கள்
திணியத் திகழ்தில்லை அம்பலத் தான்தன் திருந்தடியே.     15

1071     
அடியிட்ட கண்ணினுக் கோஅவன் அன்பினுக் கோஅவுணர்
செடியிட்ட வான்துயர் சேர்வதற் கோதில்லை அம்பலத்து
முடியிட்ட கொன்றைநன் முக்கட் பிரான்அன்று மூவுலகும்
அடியிட்ட கண்ணனுக் கீந்தது வாய்ந்த அரும்படையே.     16

1072     
படைபடு கண்ணிதன் பங்கதென் தில்லைப் பரம்பரவல்
விடைபடு கேதுக விண்ணப்பம் கேள்என் விதிவசத்தால்
கடைபடு சாதி பிறக்கினும் நீவைத் தருளுகண்டாய்
புடைபடு கிங்கிணித் தாட்செய்ய பாதம்என் னுள்புகவே.     17

1073     
புகவுகிர் வாளெயிற் றால்நிலம் கீண்டு பொறிகலங்கி
மிகவுகு மாற்கரும் பாதத்த னேல்வியன் தில்லைதன்னுள்
நகவு குலாமதிக் கண்ணியற் கங்கணன் என்றனன்றும்
தகவு கொலாந்தக வன்று கொலாமென்று சங்கிப்பனே.     18

1074     
சங்கோர் கரத்தன் மகன்தக்கன் தானவர் நான்முகத்தோன்
செங்கோல இந்திரன் தோள்தலை ஊர்வேள்வி சீர்உடலம்
அங்கோல வெவ்வழ லாயிட் டழிந்தெரிந் தற்றனவால்
எங்கோன் எழில்தில்லைக் கூத்தன் கடைக்கண் சிவந்திடவே.     19

1075     
ஏவுசெய் மேருத் தடக்கை எழில்தில்லை அம்பலத்து
மேவுசெய் மேனிப் பிரான்அன்றி அங்கணர் மிக்குளரே
காவுசெய் காளத்திக் கண்ணுதல் வேண்டும் வரங்கொடுத்துத்
தேவுசெய் வான்வாய்ப் புனலாட் டியதிறல் வேடுவனே.     20

1076     
வேடனென் றாள்வில் விசயற்கு வெங்கணை அன்றளித்த
கோடனென் றாள்குழைக் காதனென் றாள்இடக் காதில்இட்ட
தோடனென் றாள்தொகு சீர்த்தில்லை அம்பலத் தாடுகின்ற
சேடனென் றாள்மங்கை அங்கைச் சரிவளை சிந்தினவே.     21

1077     
சிந்திக் கவும்உரை யாடவும் செம்மல ராற்கழல்கள்
வந்திக் கவும்மனம் வாய்கரம் என்னும் வழிகள்பெற்றும்
சந்திக் கிலர்சிலர் தெண்ணர்தண் ணார்தில்லை அம்பலத்துள்
அந்திக் கமர்திரு மேனிஎம் மான்தன் அருள்பெறவே.     22

1078     
அருள்தரு சீர்த்தில்லை அம்பலத் தான்தன் அருளி னன்றிப்
பொருள்தரு வானத் தரசாத லிற்புழு வாதல்நன்றாம்
சுருள்தரு செஞ்சடை யோன்அரு ளேல்துற விக்குநன்றாம்
இருள்தரு கீழேழ் நரகத்து வீழும் இருஞ்சிறையே.     23

1079     
சிறைப்புள வாம்புனல் சூழ்வயல் தில்லைச் சிற்றம்பலத்துப்
பிறைப்பிள வார்சடை யோன்திரு நாமங்க ளேபிதற்ற
மிறைப்புள வாகிவெண் ணீறணிந் தோடேந்தும் வித்தகர்தம்
உறைப்புள வோஅயன் மாலினொ டும்பர்தம் நாயகற்கே.     24

1080     
அகழ்சூழ் மதில்தில்லை அம்பலக் கூத்த அடியம்இட்ட
முகிழ்சூழ் இலையும் முகைகளும் ஏயுங்கொல் கற்பகத்தின்
திகழ்சூழ் மலர்மழை தூவித் திறம்பயில் சிந்தையராய்ப்
புகழ்சூழ் இமையவர் போற்றித் தொழும்நின் பூங்கழற்கே.     25

1081     
பூந்தண் பொழில்சூழ் புலியூர்ப் பொலிசொம்பொன் அம்பலத்து
வேந்தன் தனக்கன்றி ஆட்செய்வ தென்னே விரிதுணிமேல்
ஆந்தண் பழைய அவிழைஅன் பாகிய பண்டைப்பறைச்
சேந்தன் கொடுக்க அதுவும் திருவமிர் தாகியதே.     26

1082     
ஆகங் கனகனைக் கீறிய கோளரிக் கஞ்சிவிண்ணோர்
பாகங் கனங்குழை யாய்அரு ளாயெனத் தில்லைப்பிரான்
வேகந் தருஞ்சிம்புள் விட்டரி வெங்கதஞ் செற்றிலனேல்
மோகங் கலந்தன் றுலந்ததன் றோஇந்த மூவுலகே.     27

1083     
மூவுல கத்தவர் ஏத்தித் தொழுதில்லை முக்கட்பிராற்
கேவு தொழில்செய்யப் பெற்றவர் யாரெனில் ஏர்விடையாய்த்
தாவு தொழிற்பட் டெடுத்தனன் மால்அயன் சாரதியா
மேவிர தத்தொடு பூண்டதொன் மாமிக்க வேதங்களே.     28

1084     
வேதகச் சிந்தை விரும்பிய வன்தில்லை அம்பலத்து
மேதகக் கோயில்கொண் டோன்சேய வன்வீ ரணக்குடிவாய்ப்
போதகப் போர்வைப் பொறிவாள் அரவரைப் பொங்குசினச்
சாதகப் பெண்பிளை தன்னையன் தந்த தலைமகனே.     29

1085     
தலையவன் பின்னவன் தாய்தந்தை இந்தத் தராதலத்து
நிலையவம் நீக்கு தொழில்புரிந் தோன்நடு வாகிநின்ற
கொலையவன் சூலப் படையவன் ஆலத்தெழு கொழுந்தின்
இலையவன் காண்டற் கருந்தில்லை அம்பலத் துள்இறையே.     30

1086     
இறையும் தெளிகிலர் கண்டும் எழில்தில்லை அம்பலத்துள்
அறையும் புனற்சென்னி யோன்அரு ளால்அன் றடுகரிமேல்
நிறையும் புகழ்த்திரு வாரூ ரனும்நிறை தார்பரிமேல்
நறையுங் கமழ்தொங்கல் வில்லவ னும்புக்க நல்வழியே.     31

1087     
நல்வழி நின்றார் பகைநன்று நொய்யர் உறவிலென்னும்
சொல்வழி கண்டனம் யாம்தொகு சீர்த்தில்லை அம்பலத்து
வில்வழி தானவர் ஊர்எரித் தோன்வியன் சாக்கியனார்
கல்வழி நேர்நின் றளித்தனன் காண்க சிவகதியே.     32

1088     
கதியே அடியவர் எய்ப்பினில் வைப்பாக் கருதிவைத்த
நிதியே நிமிர்புன் சடைஅமிர் தேநின்னை என்னுள்வைத்த
மதியே வளர்தில்லை அம்பலத் தாய்மகிழ் மாமலையாள்
பதியே பொறுத்தரு ளாய்கொடி யேன்செய்த பல்பிழையே.     33

1089     
பிழையா யினவே பெருக்கிநின் பெய்கழற் கன்புதன்னில்
நுழையாத சிந்தையி னேனையும் மந்தா கினித்துவலை
முழையார் தருதலை மாலை முடித்த முழுமுதலே
புழையார் கரியுரித் தோய்தில்லை நாத பொறுத்தருளே.     34

1090     
பொறுத்தில னேனும்பன் னஞ்சினைப் பொங்கெரி வெங்கதத்தைச்
செறுத்தில னேனும்நந் தில்லைப் பிரான்அத் திரிபுரங்கள்
கறுத்தில னேனுங் கமலத் தயன்கதிர் மாமுடியை
அறுத்தில னேனும் அமரருக் கென்கொல் அடுப்பனவே.     35

1091     
அடுக்கிய சீலைய ராய்அகல் ஏந்தித் தசைஎலும்பில்
ஒடுக்கிய மேனியோ டூண்இரப் பார்ஒள் இரணியனை
நடுக்கிய மாநர சிங்கனைச் சிம்புள தாய்நரல
இடுக்கிய பாதன்தன் தில்லை தொழாவிட்ட ஏழையரே.     36

1092     
ஏழையென் புன்மை கருதா திடையறா அன்பெனக்கு
வாழிநின் பாத மலர்க்கே மருவ அருளுகண்டாய்
மாழைமென் நோக்கிதன் பங்க வளர்தில்லை அம்பலத்துப்
போழிளந் திங்கள் சடைமுடி மேல்வைத்த புண்ணியனே.     37

1093     
புண்ணிய னேஎன்று போற்றி செயாது புலன்வழியே
நண்ணிய னேற் கினி யாது கொலாம்புகல் என்னுள்வந்திட்
டண்ணிய னேதில்லை அம்பல வாஅலர் திங்கள் வைத்த
கண்ணிய னேசெய்ய காமன் வெளுப்பக் கறுத்தவனே.     38

1094     
கறுத்தகண் டாஅண்ட வாணா வருபுனற் கங்கைசடை
செறுத்தசிந் தாமணி யேதில்லை யாய்என்னைத் தீவினைகள்
ஒறுத்தல்கண் டால்சிரி யாரோ பிறர்என் உறுதுயரை
அறுத்தல்செய் யாவிடின் ஆர்க்கோ வருஞ்சொல் அரும்பழியே.     39

1095     
பழித்தக் கவும்இக ழான்தில்லை யான்பண்டு வேட்டுவனும்
பழித்திட் டிறைச்சி கலையன் அளித்த விருக்குழங்கன்
மொழித்தக்க சீர்அதி பத்தன் படுத்திட்ட மீன்முழுதும்
இழித்தக்க என்னா தமிர்துசெய் தான்என் றியம்புவரே.     40

1096     
வரந்தரு மாறிதன் மேலும்உண் டோவயல் தில்லைதன்னுள்
புரந்தரன் மால்தொழ நின்ற பிரான்புலைப் பொய்ம்மையிலே
நிரந்தர மாய்நின்ற என்னையும் மெய்ம்மையின் தன்னடியார்
தரந்தரு வான்செல்வத் தாழ்த்தினன் பேசருந் தன்மைஇதே.     41

1097     
தன்றாள் தரித்தார் இயாவர்க்கும் மீளா வழிதருவான்
குன்றா மதில்தில்லை மூதூர்க் கொடிமேல் விடைஉடையோன்
மன்றாட வும்பின்னும் மற்றவன் பாதம் வணங்கிஅங்கே
ஒன்றார் இரண்டில் விழுவர்அந் தோசில ஊமர்களே.     42

1098     
களைகண் இலாமையும் தன்பொற் கழல்துணை யாம்தன்மையும்
துளைகள் நிலாம்முகக் கைக்கரிப் போர்வைச் சுரம்நினையான்
தளைகள் நிலாமலர்க் கொன்றையன் தண்புலி யூரன்என்றேன்
வளைகள் நிலாமை வணங்கும் அநங்கன் வரிசிலையே.     43

1099     
வரித்தடந் திண்சிலை மன்மதன் ஆதலும் ஆழிவட்டம்
தரித்தவன் தன்மகன் என்பதோர் பொற்பும் தவநெறிகள்
தெரித்தவன் தில்லையுள் சிற்றம் பலவன் திருப்புருவம்
நெரித்தலுங் கண்டது வெண்பொடி யேயன்றி நின்றிலவே.     44

1100     
நின்றில வேவிச யன்னொடும் சிந்தை களிப்புறநீள்
தென்தில்லை மாநடம் ஆடும் பிரான்தன் திருமலைமேல்
தன்தலை யால்நடந் தேறிச் சரங்கொண் டிழிந்ததென்பர்
கன்றினை யேவிள மேலெறிந் தார்த்த கரியவனே.     45

1101     
கருப்புரு வத்திரு வார்த்தைகள் கேட்டலும் கண்பனியேன்
விருப்புரு வத்தினொ டுள்ளம் உருகேன் விதிர்விதிரேன்
இருப்புரு வச்சிந்தை என்னைவந் தாண்டதும் எவ்வணமோ
பொருப்புரு வப்புரி சைத்தில்லை ஆடல் புரிந்தவனே.     46

1102     
புரிந்தஅன்பின்றியும் பொய்ம்மையி லேயும் திசைவழியே
விரிந்தகங் கைமலர் சென்னியில் கூப்பில் வியன்நமனார்
பரிந்தவன் ஊர்புகல் இல்லை பதிமூன் றெரியஅம்பு
தெரிந்த எங் கோன்தன் திரையார் புனல்வயல் சேண்தில்லையே.     47

1103     
சேண்தில்லை மாநகர்த் திப்பியக் கூத்தனைக் கண்டும்அன்பு
பூண்டிலை நின்னை மறந்திலை ஆங்கவன் பூங்கழற்கே
மாண்டிலை இன்னம் புலன்வழி யேவந்து வாழ்ந்திடுவான்
மீண்டனை என்னைஎன் செய்திட வோசிந்தை நீவிளம்பே.     48

1104     
விளவைத் தளர்வித்த விண்டுவும் தாமரை மேல்அயனும்
அளவிற் கறியா வகைநின்ற அன்றும் அடுக்கல் பெற்ற
தளர்விற் றிருநகை யாளும்நின் பாகங்கொல் தண்புலியூர்க்
களவிற் கனிபுரை யுங்கண்ட வார்சடைக் கங்கையனே.     49

1105     
கங்கை வலம்இடம் பூவலம் குண்டலம் தோடிடப்பால்
தங்கும் கரவலம் வெம்மழு வீயிடம் பாந்தள்வலம்
சங்கம் இடம்வலம் தோலிடம் ஆடை வலம்அக்கிடம்
அங்கஞ் சரிஅம் பலவன் வலங்காண் இடம்அணங்கே.     50

1106     
அணங்கா டகக்குன்ற மாதற வாட்டிய வாலமர்ந்தாட்
கிணங்கா யவன்தில்லை எல்லை மிதித்தலும் என்புருகா
வணங்கா வழுத்தா விழாஎழும் பாவைத் தவாமதர்த்த
குணங்காண் இவள்என்ன என்றுகொ லாம்வந்து கூடுவதே.     51

1107     
கூடுவ தம்பலக் கூத்தன் அடியார் குழுவுதொறும்
தேடுவ தாங்கவன் ஆக்கம்அச் செவ்வழி அவ்வழியே
ஓடுவ துள்ளத் திருத்துவ தொண்சுட ரைப்பிறவி
வீடுவ தாக நினையவல் லோர்செய்யும் வித்தகமே.     52

1108     
வித்தகச் செஞ்சடை வெண்மதிக் கார்நிறக் கண்டத் தெண்தோள்
மத்தகக் கைம்மலைப் போர்வை மதில்தில்லை மன்னனைத்தம்
சித்தகக் கோயில் இருத்தும் திறத்தா கமிகர்க்கல்லால்
புத்தகப் பேய்களுக் கெங்குத்த தோஅரன் பொன்னடியே.     53

1109     
பொன்னம் பலத்துறை புண்ணியன் என்பர் புயல்மறந்த
கன்னம்மை தீரப் புனிற்றுக் கலிக்காமற் கன்றுபுன்கூர்
மன்னு மழைபொழிந் தீர்அறு வேலிகொண் டாங்கவற்கே
பின்னும் பிழைதவிர்ந் தீர்அறு வேலிகொள் பிஞ்ஞகனே.     54

1110     
நேசன்அல் லேன்நினை யேன்வினை தீர்க்குந் திருவடிக்கீழ்
வாசநன் மாமல ரிட்டிறைஞ் சேன்என்தன் வாயதனால்
தேசன்என் னானை பொன்னார் திருச் சிற்றம் பலம்நிலவும்
ஈசன்என் னேன்பிறப் பென்னாய்க் கழியுங்கொல் என்தனக்கே.     55

1111     
தனந்தலை சக்கரம் வானத் தலைமை குபேரன்தக்கன்
வனந்தலை ஏறடர்த் தோன்வா சவன்உயிர் பல்லுடல்ஊர்
சினந்தலை காலன் பகல்காமன் தானவர் தில்லைவிண்ணோர்
இனந்தலை வன்அரு ளால்முனி வால்பெற் றிகந்தவரே.     56

1112     
அவமதித் தாழ்நர கத்தில் இடப்படும் ஆதர்களும்
தவமதித் தொப்பிலர் என்னவிண் ஆளும் தகைமையரும்
நவநிதித் தில்லையுட் சிற்றம் பலத்து நடம்பயிலும்
சிவநிதிக் கேநினை யாரும் நினைந்திட்ட செல்வருமே.     57

1113     
வருவா சகத்தினில் முற்றுணர்ந் தோனைவண் தில்லைமன்னைத்
திருவாத வூர்ச்சிவ பாத்தியன் செய்திருச் சிற்றம்பலப்
பொருளார் தருதிருக் கோவைகண் டேயுமற் றப் பொருளைத்
தெருளாத உள்ளத் தவர்கவி பாடிச் சிரிப்பிப்பரே.     58

1114     
சிரித்திட்ட செம்பவ ளத்தின் திரளும் செழுஞ்சடைமேல்
விரித்திட்ட பைங்கதிர்த் திங்களும் வெங்கதப் பாந்தளும்தீத்
தரித்திட்ட அங்கையும் சங்கச் சுருளும்என் நெஞ்சினுள்ளே
தெரித்திட்ட வாதில்லைச் சிற்றம் பலத்துத் திருநடனே.     59

1115     
நடஞ்செய்சிற் றம்பலத் தான்முனி வென்செய்யும் காமன்அன்று
கொடுஞ்சினத் தீவிழித் தாற்குக் குளிர்ந்தனன் விற்கொடும்பூண்
விடுஞ்சினத் தானவர் வெந்திலர் வெய்தென வெங்கதத்தை
ஒடுங்கிய காலன்அந் நாள்நின் றுதையுணா விட்டனனே.     60

1116     
விட்டங் கொளிமணிப் பூண்திகழ் வன்மதன் மெய்யுரைக்கில்
இட்டங் கரியநல் லான்அல்லன் அம்பலத் தெம்பரன்மேல்
கட்டங் கியகணை எய்தலும் தன்னைப்பொன் னார்முடிமேல்
புட்டங்கி னான்மக னாமென்று பார்க்கப் பொடிந்தனனே.     61

1117     
பொடியேர் தருமே னியனாகிப் பூசல் புகவடிக்கே
கடிசேர் கணைகுளிப் பக்கண்டு கோயிற் கருவியில்லா
வடியே படஅமை யுங்கணை என்ற வரகுணன்தன்
முடியே தருகழல் அம்பலத் தாடிதன் மொய்கழலே.     62

1118     
கழலும் பசுபாச ராம்இமை யோர்தங் கழல்பணிந்திட்
டழலும் இருக்கும் தருக்குடை யோர்இடப் பால்வலப்பால்
தழலும் தமருக மும்பிடித் தாடிசிற் றம்பலத்தைச்
சுழலும் ஒருகால் இருகால் வரவல்ல தோன்றல்களே.     63

1119     
தோன்றலை வெண்மதி தாங்கியைத் துள்ளிய மாலயற்குத்
தான்தலை பாதங்கள் சார்எரி யோன்தன்னைச் சார்ந்தவர்க்குத்
தேன்தலை ஆன்பால் அதுகலந் தால்அன்ன சீரனைச்சீர்
வான்தலை நாதனைக் காண்பதென் றோதில்லை மன்றிடையே.     64

1120     
மன்றங் கமர்திருச் சிற்றம் பலவ வடவனத்து
மின்றங் கிடைக்குந்தி நாடக மாடக்கொல் வெண்தரங்கம்
துன்றங் கிளர்கங்கை யாளைச் சுடுசினத் தீயரவக்
கன்றங் கடைசடை மேல்அடை யாவிட்ட கைதவமே.     65

1121     
தவனைத் தவத்தவர்க் கன்பனைத் தன்அடி எற்குதவும்
சிவனைச் சிவக்கத் திரிபுரத் தைச்சிவந் தானைச் செய்ய
அவனைத் தவளத் திருநீ றனைப்பெரு நீர்கரந்த
பவனைப் பணியுமின் நும்பண்டை வல்வினை பற்றறவே.     66

1122     
பற்றற முப்புரம் வெந்தது பைம்பொழில் தில்லைதன்னுள்
செற்றரு மாமணிக் கோயிலில் நின்றது தேவர்கணம்
சுற்றரு நின்புகழ் ஏத்தித் திரிவது சூழ்சடையோய்
புற்றர வாட்டித் திரியும் அதுவொரு புல்லனவே.     67

1123     
புல்லறி வின்மற்றைத் தேவரும் பூம்புலி யூருள்நின்ற
அல்லெறி மாமதிக் கண்ணிய னைப்போல் அருளுவரே
கல்லெறிந் தானும்தன் வாய்நீர் கதிர்முடி மேலுகுத்த
நல்லறி வாளனும் மீளா வழிசென்று நண்ணினரே.     68

1124     
நண்ணிய தீவினை நாசஞ் செலுத்தி நமனுலகத்
தெண்ணினை நீக்கி இமையோர் உலகத் திருக்கலுற்றீர்
பெண்ணினொர் பாகத்தன் சிற்றம் பலத்துப் பெருநடனைக்
கண்ணினை யார்தரக் கண்டுகை யாரத் தொழுமின்களே.     69

1125     
கைச்செல்வம் எய்திட லாமென்று பின்சென்று கண்குழித்தல்
பொய்ச்செல்வர் செய்திடும் புன்மைகட்கே என்றும் பொன்றல்இல்லா
அச்செல்வம் எய்திட வேண்டுதி யேல்தில்லை அம்பலத்துள்
இச்செல்வன் பாதம் கருதிரந் தேன்உன்னை என்நெஞ்சமே.     70


திருச்சிற்றம்பலம்

by   on 26 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.