|
|||||
ஆற்றல் மிகு ஆசிரியர்- திருமதி. கி. கலைச்செல்வி |
|||||
![]() ஆற்றல் மிகு ஆசிரியர் திருமதி. கி. கலைச்செல்வி – பட்டதாரி ஆங்கில ஆசிரியர், அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி, மணச்சநல்லூர், திருச்சி ஒரு பள்ளியினுடைய வளர்ச்சிக்கும், சமுதாயத்தினுடைய வளர்ச்சிக்கும் ஆசிரியரின் பங்கு மகத்தானது. அவ்வகையில் ஆற்றல்மிகு ஆசிரியர்களை அடையாளம் காணும் நிகழ்வாக இந்நிகழ்வு அமைகிறது. சமூகத்தைச் செதுக்குவதில் ‘ஒரு ஆசிரியரின் பங்கு’ என எதை நீங்கள் கருதுகிறீர்கள்? ‘சமுதாய சிற்பி’ என்று ஆசிரியர்களைக் கூறுவோம். அதைப்போல் இந்த தேசத்தை உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள்தான். ஆக நாம் பாடம் நடத்தும்போதே பாடம், தேர்வு இவற்றை மட்டும் குறிக்கோளாக வைத்துச் செயல்படக்கூடாது. நேரடியான அனுபவத்தின் மூலமாகக் கிடைக்கக்கூடிய கல்விதான் இந்த சமுதாய உருவாக்கத்திற்குப் பாலமாக அமைகின்றது. ஒரு மாணவன் நல்ல வழக்கறிஞராகவோ, பொறியாளராகவோ, அரசியல்வாதியாகவோ எதுவாக மாறினாலும் அதில் ஆசிரியரின் பங்கு அளப்பரியது என்று நான் கருதுகிறேன். Reached the students before teaching என்பதே என் concept. கற்பிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அவர்கள் ஆசிரியராக இருப்பதற்கு அர்த்தமேயில்லை. ஒரு சிறந்த ஆசிரியர் பாடத்தைத் தொடுவதை விட, மாணவனின் இதயத்தைத்தான் முதலில் தொடவேண்டும். ஒரு ஆசிரியராக மாணவர்களை பாடபோதனைக்கு வெளியில், ஒரு பொறுப்பான சமூக சிந்தனை மிக்க மாணவர்களாகவும், சிறந்த மனிதர்களாகவும் ஆக்குவதில் உங்கள் பணி? ‘சிறந்த இளைஞர்’ என்ற ஒரு விருதைக் கூட எனது மாணவர் வாங்கியிருக்கிறார். விவேகானந்தர் நூற்றாண்டு விழாவில் ‘இந்தியாவின் நூறு இளைஞர்கள்’ என்று தேர்ந்தெடுத்தார்கள். அதில் எனது மாணவரும் தேர்வாகினார். எனது வகுப்பு மாணவர்களை மட்டும் நான் என் மாணவர்களாகப் பார்ப்பது கிடையாது. என்னை நோக்கி வரும் அனைவரையும் எனது மாணவராகத்தான் நான் பார்க்கிறேன். உங்கள் முன்னாள் மாணவ, மாணவிகள் குறித்து சில வார்த்தைகள்… என்னிடம் சுரபி என்றொரு மாணவி பத்தாம் வகுப்பு தமிழ்வழிக்கவ்வி படித்தார். அவள் பத்தாம் வகுப்பில் திருச்சி மாவட்டத்தில் முதல் மாணவியாக வந்தாள். நாமக்கல் மாவட்டம் குறிஞ்சி பள்ளியில் அவளுக்கு இடம் கிடைத்தது. பன்னிரண்டாம் வகுப்பு வரை தமிழ்வழிக்கல்வியே படித்தாள். அவள் மருத்துவராக விரும்பினாள். தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்த பிறகு என்னிடம் வந்து ஆசீர்வாதம் பெற்றுச் சென்றாள். எந்த நிலையிலும் ஆசிரியரை மறக்காத மாணவர்கள்தான் ஆசிரியரின் வெற்றியாக அமையும். எனது முன்னாள் மாணவர் மகேந்திரன் என்பவர் தற்போது அமெரிக்காவில் பணிபுரிந்து வருவதோடு சமூக சேவையும் செய்து வருகிறார். “ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மாணாக்கனைச் சான்றோர் எனகேட்ட ஆசான்” என்று ஆசிரியருக்கு ஏற்றவாறு குறளை மாற்ற விரும்புகிறேன்.. என்னிடம் படித்த மாணவர்கள் சிறந்த சமூக சேவை ஆற்றுபவர்களாகவும் உள்ளனர். Nation builder Award பெற்றுக்கொள்ளச் சென்ற போது, எனது மாணவி ஒருவரும் அந்த விருதைப் பெறுவதற்காக வந்திருந்தார். ஒரு ஆசிரியரும் மாணவரும் சேர்ந்து ஒரு விருதை வாங்கியதில் மட்டற்ற மகிழ்ச்சி எனக்கு. காவல்துறையில் கூட என்னிடம் படித்த மாணவர்கள் அதிகாரிகளாக உள்ளனர். இன்று வரை என்னுடன் பெரும்பாலான மாணவர்கள் தொடர்பிலும் உள்ளனர். மாணவ மாணவிகள் எழுத்து, பேச்சு, சமூக வாழ்க்கை, அரசியல் இது போன்று அவர்களை பொது வாழ்விலும் பிரகாசிக்க வைக்கும் வகையில் என்னென்ன விளைவுகளை, மாற்றங்களை நீங்கள் மாணவர்களிடம் ஏற்படுத்தி இருக்கிறீர்கள்? நடிகர்களாக இருந்தாலும் கூட அவர்கள் சிறந்த ஆசிரியர்களால் உருவாக்கப்படும் போது அவர்கள் சிறந்த ஆளுமையுடன் செயல்படக் கூடியவர்களாக இருக்கிறார்கள். இன்றைய மாணவர்கள் நெருப்பைப் போன்றவர்கள். அந்நெருப்பைச் சரியான முறையில் பயன்படுத்துகின்ற, பயன்படுத்த வைக்கின்ற பொறுப்பு பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மட்டுமே உண்டு. ஊதியம் என்பதைத் தாண்டி பாடத்திட்டத்தை மேற்கொள்ள ஆசிரியரின் பங்கு என நீங்கள் கருதுவது என்ன? ஊதியம் பெறுவதற்காக மட்டுமே ஒருவர் ஆசிரியப் பணிக்கு வந்தால் அவர் சரியான ஆசிரியராக இருக்க முடியாது. ஆசு + இரியர் = மாசு அற்றவர் = ஆசிரியர். ‘ஊதியத்திற்காக மட்டுமே நான் கற்பிப்பேன்’ என்று ஒரு ஆசிரியர் முடிவெடுக்கக் கூடாது. ஆசிரியத்தொழில் என்பது அறப்பணி. we are not for income but for outcome. மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணர்வதில் தான் ஆசிரியரின் வெற்றி இருக்கிறது. நான் வகுப்பிற்குள் நுழையும் போது, ஒரு மிட்டாய்க்காரனைப் போல் குழந்தைகள் என்னைச் சூழ்ந்து கொள்வர். அதற்குக் காரணம் அன்பான அணுகுமுறை மட்டுமே. அன்பை மட்டும் கொடுத்தால் போதும், இந்த குழந்தைகள் நமக்காக எதுவும் செய்யத் தயாராக இருக்கிறார்கள். 100 சதவீதம் தேர்ச்சி பெற வைத்திருக்கிறேன் என்பது ஆசிரியரின் வெற்றி கிடையாது. அது ஆசிரியருடைய கடமை. ஒரு ஆசிரியர் தொடர்ந்து படித்துக் கொண்டே இருக்க வேண்டுமா? படித்து முடித்த ஆசிரியரை விட, படித்துக் கொண்டே இருக்கும் ஆசிரியர் தான் இந்த நாட்டிற்குத் தேவை. புத்தகம் வாசித்தலை ஆசிரியர் விட்டுவிடக் கூடாது. எனது மாணவர்களையும் நான் படிப்பைத் தாண்டி புத்தகம் வாசித்தலில் ஈடுபடுத்துகிறேன். என் வீட்டிலிருந்தே புத்தகங்கள் எடுத்து வந்து மாணவர்களுக்குச் சுழற்சி முறையில் வாசிக்கக் கொடுக்கின்றேன். நான் அடிக்கடி கூறுவதுண்டு ‘At school you learn to read, After school you read to learn’ . வாழ்க்கையைத் தெரிந்து கொள்ளப் புத்தகங்கள் அவசியம். ஆசிரியப் பணிக்குப் புதிதாக வருபவர்களின் ஈடுபாடு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த உங்களின் கருத்து என்ன? இன்றைய ஆசிரியர்கள் கண்டிப்புடன் இருக்க வேண்டிய நேரத்தில் கண்டிப்புடன் இருக்க வேண்டும். மாணவர்களை வழிநடத்த வேண்டிய இடத்தில் ஒரு தாயாகவும், தந்தையாகவும், மாணவர்கள் துயரத்தில் இருக்கும் போது அதனைப் போக்க முயற்சிக்கும் ஒரு சகோதர, சகோதரியாகவும் இருக்க வேண்டும். மாணவர்கள் தவறும் போது தடம் மாறாமல் பார்த்துக் கொள்ளேவுண்டும். அனைவரிடத்திலும் அன்பாக இருக்க வேண்டும். உங்கள் வகுப்பில் நிகழ்ந்த, உங்களால் மறக்க முடியாத சுவையான தருணம் பற்றிக் கூறுங்கள்… Capital letters, Small letters எனக் குறிப்பிடப்படும் ஆங்கில எழுத்தின் வகைகளைச் சத்தமாகவும், மெதுவாகவும் உச்சரித்து வேறுபடுத்திச் சிரிப்பை உண்டாக்கிய மாணவனை மறக்க முடியாது. அது போல் ஒருமுறை நான் வானொலியில் பேசிவிட்டு வகுப்பிற்குச் சென்ற போது ஒரு மாணவி, ‘வானொலியிற்குள் புகுந்து பேசுவீர்களா?’ எனக் கேட்டத் தருணத்தையும் மறக்க முடியாது. அதற்குப் பிறகு அம்மாணவியை நேரடியாக அழைத்துச் சென்று வானொலியில் செய்தி எப்படி ஒலிபரப்பப்படுகிறது என்று காட்டினேன்.
இப்படிப்பட்ட ஆசிரியரின் பயணம் இனிதே தொடர வணக்கங்களும், வாழ்த்துக்களும்…. |
|||||
by Lakshmi G on 30 Jan 2021 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|