LOGO
  முதல் பக்கம்    மற்றவை    தகவல் Print Friendly and PDF

பெட்ரோலுக்கு மாற்று எரிபொருளாக எத்தனால் !! பயன்தருமா !!

வருடம் தவறாமல் நமது சம்பளம் ஏறுகிறதோ இல்லையோ, மாதம் தவறாமல் பெட்ரோல், டீசல் விலை ஏறிக்கொண்டே இருக்கிறது. இதை தடுக்க வழிதான் என்ன? இதற்கு ஏதேனும் மாற்று ஏறிபொருள் இருக்கிறதா என்பதைப் பற்றி இந்த கட்டுரையில் விரிவாக காண்போம். 


பெட்ரோலிய பொருட்களை பொறுத்த வரை நம் நாட்டின் மொத்த தேவையில் வெறும் 20 சதவிகிதம் மட்டும்தான் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது. மீதம் உள்ள 80 சதவிகிதத்தை ஈரான், ஈராக், குவைத், சவுதி அரேபியாவில் இருந்து இறக்குமதி செய்கிறோம். இதன் மூலமாக, ஒவ்வொரு ஆண்டும் நம்முடைய அந்நியச் செலாவணி இழப்பு ஆறு லட்சம் கோடி. இது நம் நாட்டின் ராணுவத்துக்குச் செய்யும் செலவை விட இரண்டு மடங்கு அதிகம். 


மேலும் உலகம் முழுவதும் பெட்ரோலிய பொருட்கள் இன்னும் 25 வருடங்கள் மட்டுமே கிடைக்குமாம். பிறகு, படிப்படியாக உற்பத்தி குறைந்து வற்றும் நிலை உருவாகிவிடும் என எச்சரிக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.


பெட்ரோலுக்கு மாற்று எரிப்பொருள் : 


பெட்ரோலிய பொருட்களுக்கு பதிலாக மாற்று எரிபொருளைக் கண்டுபிடிப்பதில் ஒவ்வொரு நாடும் போட்டி போட்டுக்கொண்டு களம் இறங்கி இருக்கின்றன. 


அந்த வகையில் உலக நாடுகளுக்கெல்லாம் முன்னோடியாக பிரேசிலும், அமெரிக்காவும் பெட்ரோலுக்கு பதிலாக எத்தனாலை பயன்படுத்த ஆரம்பித்து விட்டன. இதனால் அமெரிக்காவில்  'இ85(E85)’ என்று போர்டு போட்ட எரிபொருள் பங்க்குகளே அதிகம் உள்ளன. 


பிரேசிலின் அபார வளர்ச்சிக்கு வித்திட்ட எத்தனால் :


30 ஆண்டுகளுக்கு முன்பு, அதிகப்படியான பெட்ரோலிய இறக்குமதியால் நிதி நிலைமை மோசமாகி, உலகமெங்கும் கடன் வாங்கி, மிகப் பெரிய பொருளாதாரச் சீர்கேட்டைச் சந்தித்த பிரேசில், மாற்று எரிபொருளாக எத்தனாலைப் பயன்படுத்த ஆரம்பித்த பிறகுதான் மெள்ள மெள்ள வளர்ச்சி அடைய ஆரம்பித்தது. அடுத்த ஒலிம்பிக் போட்டியை நடத்தும் அளவுக்கு நிதி வசதியில் உச்சம் தொடக் காரணம், எத்தனால்தான்.


பெட்ரோலின் பயன்பாட்டை குறைக்கவும், அதில் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசை கட்டுப்படுத்தவும், 1927-ம் ஆண்டே எத்தனாலை வாகன எரிபொருளாக விற்பனை  செய்யத் தொடங்கிவிட்டது பிரேசில். இங்கு 1942-ல் எத்தனால் உற்பத்தி 16 ஆயிரம் டன்னாக இருந்தது. இன்று 2.5 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. 2019-ல் இதை 5 கோடி டன்னாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. 


உலகிலேயே கரும்பு உற்பத்தியில் பிரேசில் முதல் இடத்திலும், இந்தியா 2-ம் இடத்திலும் உள்ளன. இந்தியாவில் எத்தனால் உற்பத்தி 4.8 லட்சம் டன்தான். இதன் உற்பத்தியை பெருக்குவதற்கு இந்திய அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால் இந்த வருட இறுதிக்குள் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.100 ஆகவும், டீசல் விலையை ரூ.70 ஆகவும் உயர்த்த திட்டமிட்டுள்ளது.


பிரேசிலில் ஒவ்வொரு பெட்ரோல் பங்கிலும் எத்தனால் பம்ப் இருக்கும். வாகன ஓட்டிகள் தங்கள் விருப்பம் போல் பெட்ரோலுடன் எத்தனால் கலந்து கொள்ளலாம். மேலும் அங்கு எத்தனாலில் மட்டுமே ஓடும் வாகனங்களும் உண்டு. எத்தனாலின் விலையும் லிட்டருக்கு ரூ.20 தான். இது மட்டுமன்றி எத்தனால் அல்லது பெட்ரோலில் ஓடும் வாகன என்ஜின்களையும் உற்பத்தி செய்கின்றனர்.பெட்ரோலுடன் 24 % எத்தனால் கலந்து ஓட்டலாம். இதற்கு வாகனத்தில் என்ஜினில் எந்த மாற்றமும் செய்ய வேண்டியதில்லை. இதேபோல் எத்தனால் 85 %, பெட்ரோல் 15 % கலந்து பயன்படுத்தலாம். இதற்கு என்ஜினில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும். இதுபோக 100 % எத்தனாலில் ஓடும் வாகனங்களும் உண்டு. பிரேசிலில் உள்ள போர்டு நிறுவனம் 2 வகையான என்ஜின்களையும் தயாரித்து வருகிறது.


சமீப காலமாக ஆப்பிரிக்க, கரீபிய நாடுகளும் எத்தனால் உற்பத்தியில் இறங்கி உள்ளன. சீனா, எத்தனாலை இறக்குமதி செய்ய ஆரம்பித்து விட்டது.


எத்தனாளுக்கு வேண்டிய மூல பொருட்கள் எனென்ன ? 


எந்த ஒரு விவசாயப் பண்டத்தில் இருந்தும் எத்தனாலை உற்பத்தி செய்ய முடியும். மக்காச்சோளம், உருளைக் கிழங்கு என எதையும் பயன்படுத்தலாம். ஆனால், கரும்பில் இருந்து தயாரிப்பதுதான் எத்தனால் உற்பத்தி செய்வதற் கான செலவைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.


கரும்பை எத்தனால் பயன்பாடுக்குக் கொடுத்து விட்டால் சர்க்கரைக்கு எங்கே போவது? என்ற கேள்வி பலருக்கு எழலாம். இந்தியாவில் சும்மார் 560 சர்க்கரை ஆலைகள் இருக்கின்றன. இந்த ஆலைகள் சர்க்கரைத் தயாரிப்பை மட்டுமே செய்யட்டும். ஆனால், இனி உருவாக்கப்படுகிற ஆலைகளை எத்தனால் உற்பத்திக்காகப் பயன்படுத்துவோமே.


சரி, அந்த ஆலைகளின் பயன்பாடுக்கான கரும்புக்கு எங்கே போவது? 


இந்தியா ஒரு வெப்ப மண்டல நாடு. அதனால், இங்கே மூன்று போகமும் வேளாண்மை செய்ய முடியும். நம் நாட்டில் இருக்கிற பல கோடிக்கணக்கான வானம் பார்த்த பூமியில், இந்த ஆலைகளின் தேவைக்கான கரும்பை உற்பத்தி செய்ய முடியும். இந்த உற்பத்திக்கான தண்ணீரும் நம் கைவசம் இருக்கிறது. ஆண்டு தோறும் நமக்குக் கிடைக்கும் நீர்வளம் எழுபதாயிரம் டி.எம்.சி. ஆனால், இதில், பயன்பாடு போக இருபதாயிரம் டி.எம்.சி நீர் வீணாக கடலுக்குச் செல்கிறது. இதைத் தடுத்து நிறுத்தி, ஆங்காங்கே நதிகளை ஒரு இணைப்பின் கீழே கொண்டு வந்து நீர் மேலாண்மையைச் சிறப்பாகச் செய்தாலே, கரும்பை கோடிக்கணக்கான டன்களில் உற்பத்தி செய்து, அதில் இருந்து எத்தனால் தயாரிக்கலாம்!'' என்றார்.


எத்தனாலைத் தயாரிப்பது எப்படி?


நொதித்த கரும்புச் சாற்றை 80 டிகிரி சென்டி கிரேடில் சூடேற்ற வேண்டும். அப்போது 78 டிகிரி சென்டி கிரேடில் ஈத்தேல் ஆல்கஹால் கிடைக்கும். இதை அப்படியே வடிய வைத்துச் சேமித்தால், அதுதான் ஆல்கஹால். இதோடு தண்ணீரைக் கலந்தால், அது குடி சாராயம். டீசலுக்கு மாற்றாக எத்தனாலைப் பயன்படுத்த முடியாது. பெட்ரோலுக்குப் பதிலாக முழுக்க முழுக்க எத்தனாலைப் பயன்படுத்தி வாகனங்களை ஓட்டலாம். 


ஆனால், தொடக்க காலத்தில் 75% பெட்ரோலும், 25% எத்தனாலும் பயன்படுத்த ஆரம்பிப்பது நல்லது. 


இந்தியாவைப் பொறுத்தவரையில் 2000-வது ஆண்டுக்குப் பிறகு தயாரிக்கப்பட்ட பெட்ரோல் இன்ஜின் கொண்ட வாகனங்களில் இந்தப் பயன்பாடு சாத்தியம். பெட்ரோல் விலையில் பாதிதான் கரும்பு மூலமாக உருவாக்கப்படும் எத்தனாலின் விலை இருக்கும். 


எத்தனாலை பயன்படுத்தினால் வாகனத்தின் பிக்-அப் குறையுமா ?


எத்தனால் பயன் படுத்தினால், வாகனத்தின் பிக்-அப் குறையும் என்று சொல்லப்படுகிறது. ஆனால், இன்றைக்கு இருக்கின்ற நவீன தொழில்நுட்பத்தில் விரைவாகவே இந்தப் பிரச்னையையும் தீர்க்க கூடிய ஒன்றுதான்.


எத்தனால் இந்தியாவிற்கு சாத்தியமான எரிபொருளா?


பிரேசில் போன்ற சிறிய நாடுகளில் எத்தனால் பயன்பாடு சாத்தியம் ஆகும் போது. வேளாண்மை தொழிலை தனது முதன்மை தொழிலாக போற்றி வரும் இந்தியாவிலும் எத்தனால் உற்பத்தியும், பயன்பாடும் சாத்தியமே! ஆனால், இங்கு நம் அரசாங்கத்தின் கொள்கைகள் அதற்கு ஏற்ற மாதிரி இருக்க வேண்டியது அவசியம். 


கரும்பு விவசாயத்தில் இருந்து அதிகமான எத்தனாலைத் தயாரிக்க முடியும். ஆனால், சர்க்கரைத் தொழிற்சாலையில் இருந்து கிடைக்கும் எத்தனாலுக்கு நமது அரசாங்கம் தர முன்வரும் பணம் குறைவாக இருப்பதாக ஆலை முதலாளிகள் நினைக்கிறார்கள். எத்தனாலுக்குக் கொடுப்பதைவிட குடி சாராயத்துக்குக் கொடுப்பது லாபம் என்பது அவர்களின் கணக்கு. எனவே, இந்த நிலையை மாற்ற வேண்டும். பெட்ரோலைவிட எத்தனாலின் விலை நிச்சயம் கணிசமான அளவு குறைவாக இருக்கும் என்பதோடு, பெட்ரோல் பயன்பாட்டால் ஏற்படும் சுற்றுச் சூழல் மாசு கேட்டை விட எத்தனால் பயன் பாட்டால் அடைவது மிக குறைவாக இருக்கும். இதை யெல்லாம் தாண்டி, பல காரணங்களால் மெள்ள அழிந்து கொண்டு இருக்கும் இந்திய விவசாயச் சூழல், எத்தனால் தயாரிப்பின் மூலம் நிச்சயம் செழிக்கும் என்பது சுற்றுசூழல் ஆர்வலர்களின் விருப்பமாக இருக்கிறது.

by Swathi   on 28 Mar 2014  1 Comments
Tags: Ethanol   Ethanol Fuel   Ethanol Fuel India   எத்தனால்   பெட்ரோல்   எத்தனால் பெட்ரோல்   எத்தனால் தயாரிப்பது எப்படி  
 தொடர்புடையவை-Related Articles
பெட்ரோல், டீசலை சேமிக்க பெஸ்டான ஐடியாக்கள் !! பெட்ரோல், டீசலை சேமிக்க பெஸ்டான ஐடியாக்கள் !!
பெட்ரோல் விலை குறைப்பு !! பெட்ரோல் விலை குறைப்பு !!
பெட்ரோலுக்கு மாற்று எரிபொருளாக எத்தனால் !! பயன்தருமா !! பெட்ரோலுக்கு மாற்று எரிபொருளாக எத்தனால் !! பயன்தருமா !!
பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தாலும், தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது !! பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தாலும், தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது !!
பெட்ரோல், டீசல் விலை உயர்வு !! பெட்ரோல், டீசல் விலை உயர்வு !!
கருத்துகள்
07-Sep-2018 02:52:33 AR SURIAMOORTHY said : Report Abuse
World First Sugar Manufacturers COUNTRY KUBA.
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.