|
||||||||
அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தமிழ் மரபுக்கலைகளைப் பயிற்றுவித்து தமிழகம் திரும்பிய முனைவர் அழகு அண்ணாவிக்குப் பாராட்டுவிழா |
||||||||
அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு, தமிழ் மரபுக்கலைகள்-மரபிசை-மரபு விளையாட்டுகள் ஆகிய பயிற்சிகளை, தமிழ் மாணவர்களுக்கு-இளைஞர்களுக்கு வழங்கிய, முனைவர் ஆ. அழகுசெல்வம் (அழகு அண்ணாவி) அவர்களுக்கு விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாராட்டு விழா செப்டெம்பர் 6-ஆம் நாளன்று நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ச.அந்தோணி டேவிட் நாதன் தலைமை தாங்கினார். அந்நிகழ்வில் கலைமாமணி, நகைச்சுவைத் தென்றல் பேரா. கு.ஞானசம்பந்தன் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார். சாகித்திய அகாதமி விருது பெற்ற காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத்தலைவர் பா.ஆனந்தகுமார் 'பருத்திவீரன்' தங்கவேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கல்லூரியின் பேராசிரியர்கள், மாணவர்கள், பணியாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் பேசும்பொழுது, "கலைத்துறையில் அழகு அண்ணாவி, மேற்கத்திய நாடுகளுக்குச் சென்று, தமிழ் மரபுக் கலைகள்-மரபிசை-மரபு விளையாட்டுகள் ஆகிய பயிற்சிகள் வழங்கியுள்ளார் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும், எனது மாணவர் என் போலவே உயர்ந்து வருகிறார். வருங்காலங்களில் அவருடைய ஆளுமையால் இன்னும் பல்வேறு நாடுகளுக்குச் செல்ல வேண்டும் தமிழ்க்கலைகளைப் பயிற்றுவிக்க வேண்டும்" என வாழ்த்தினார். மேலும், எண்பதுகளில், சிவகங்கை மாவட்டத்தில் பேருந்து நின்று செல்லாத, துத்திக்குளம் என்ற சிறிய கிராமத்தில் இருந்துவந்து, இவ்வளவு தூரம் வளர்ந்துள்ளார். அதுவும், தமிழும் தமிழ்க்கலையும் கற்றதனால் வளர்ந்துள்ளார் எனவும் குறிப்பிட்டார். அழகு அண்ணாவியின் ஆளுமையை, பெருமையை அருப்புக்கோட்டை அரசுக்கல்லூரி பெற்றிருப்பதில் அதுவும் என் மாணவரால் பெற்றிருக்கிறது என்பதால் நான் பெருமைப்படுகிறேன் என்றார். கலைத்துறையை உயிராகக் கொண்ட மனிதனை தமிழ்ச் சமூகம் இன்னும் பாராட்ட வேண்டும் என்பதையும் சுட்டிக் காட்டினார். காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் பா. ஆனந்தகுமார், "எனது நண்பரும் மாணவருமான அழகுஅண்ணாவி கூடல் கலைக்கூடம் எனும் கலை மையத்தின் வழி, சமூக விழிப்புணர்வுக் கருத்துகளைப் பரப்பி வருகிறார். கவிஞர், குறும்பட இயக்குனர், பாடகர், நாடக இயக்குநர் என்னும் பன்முகத்தன்மை கொண்டவர். அமெரிக்கா, மலேசியா,சிங்கப்பூர் முதலான நாடுகளில் கலைப்பயிற்சிகள் வழங்கியதன் வழி, தமிழ் மொழி கற்றல் கற்பித்தல் செயற்பாட்டுக்கும் மதிப்புகளை (Values) வளர்த்தெடுப்பதிலும் உதவியுள்ளார்" எனக்குறிப்பிட்டார். தனது கலைச்செயற்பாட்டின்வழி, சமூகத்தின் கலைஞனாக மாறியுள்ளார் என வாழ்த்தினார். கல்லூரியின் பேராசிரியர்கள் முனைவர் ராஜமோகன், முனைவர் காந்திமதி, முனைவர் மார்க்கிரேட்பரிமளம், முனைவர் தனசேகர் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முனைவர் ஆ. அழகுசெல்வம் (அழகு அண்ணாவி) தன் ஏற்புரையில், தமிழ் மரபின் பல்வேறு கலை-இலக்கியக் கூறுகளின் வழி, மொழி கற்பித்தல்-கற்றல் செயற்பாட்டை முழுமையாக நிகழ்த்த முடியும். வகுப்பறைக்கு வெளியேயான இந்த நடவடிக்கை மற்றும் மரபுவிளையாட்டுகள்வழி, மாணவர்களை மதிப்புகள் நிறைந்த தனி மனிதர்களாக உருவாக்க முடியும். வருங்காலச் சமூகத்திற்குப் பங்களிப்பு மிக்க, மனிதர்களை மாற்ற முடியும். அந்த வகையில், அமெரிக்க மண்ணில் தமிழ் மரபுகளை வளர்க்கத் தொண்டாற்றி வரும், இந்த அரிய வாய்ப்பை வழங்கிய, ஐ-பாட்டி மற்றும் கொம்பு மரபிசை ஆய்வு மையத்தினர்க்கு நன்றியைத் தெரிவித்தார். முனைவர் வீ. ஆனந்த் வரவேற்புரை வழங்கினார். முனைவர் மு.பெரியசாமி நன்றியுரை கூறினார். முனைவர் க.மணிவண்ணன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
நன்றி - செய்திப் பகிர்வு முனைவர் அழகு அண்ணாவி நமது செய்தியாளர் – முருகவேலு வைத்தியநாதன் |
||||||||
by Swathi on 16 Sep 2024 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|