|
||||||||
சென்னையில் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கத் தமிழிசை விழா-2015: இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையின் 11-ஆம் ஆண்டு விழாவில் நடந்த பேரவையின் 3-ஆம் ஆண்டு தமிழிசை விழா |
||||||||
டிசம்பர் 29, 2015 செவ்வாய் காலை 9:30 மணி முதல் இரவு 10 மணி வரை பேரவையின் தமிழிசை விழா சென்னை தியாகராயநகர் ஆனந்த்-சந்தரசேகரன் திருமண மண்டபத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. சித்த மருத்துவர் செல்வசண்முகம் வழங்கிய நலம் காக்கும் சித்தமருத்துவம் பற்றிய சிறப்புச் சொற்பொழிவும், கலந்துரையாடலும் காலை முதல், பகல் உணவு இடைவேளை வரை நடைபெற்றன. இந்நிகழ்வில் பார்வையாளர்கள் பலரும் சித்த மருத்துவம் பற்றிய மிகுந்த விழிப்புணர்வோடு பங்கேற்றது மிகவும் குறிப்பிடத்தக்கது. தமிழிசை நிகழ்ச்சியினை பேரவையின் முன்னாள் தலைவர் க. சிவராமன் துவக்கிவைத்து சிறப்புரை ஆற்றினார். பிற்பகல் 2:15–க்கு ஆரம்பித்த குழந்தைகளின் சேர்ந்திசை நிகழ்ச்சிகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன. குண்டூர் சுப்பையாப்பிள்ளை மேநிலைப் பள்ளி மாணவிகள், மற்றும் நெல்லை நாயகம் துவக்கப்பள்ளி மாணவிகள் பாடிய சுற்றுப்புற விழிப்புணர்வை உணர்த்தும் பாடலும், கல்வி மற்றும் ஆசிரியர்களின் பெருமையைப் உணர்த்தும் பாடல்களும் மிகவும் சிறப்பாக இருந்தன. இக்குழந்தைகளுக்குச் சிறப்பாகப் பயிற்சி வழங்கி, விழாவுக்கு அழைத்து வந்திருந்த திருமதி பிரீதா அவர்கள் அனைவரின் பாராட்டினையும் பெற்று, பள்ளிகளுக்கும், பள்ளி நிறுவாகத்தினருக்கும் பெருமை சேர்த்தார். வள்ளல் சபாபதி பள்ளி மாணவிகளின் கருத்துப் பாடல்கள் விழாவிற்கு மேலும் சிறப்பு சேர்த்தது. இவர்கள் அனைவருக்கும் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் சார்பாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து ஒருமணி நேரம் புதுவைத் தமிழிசை வேந்தர் முனைவர் அரிமளம் பத்மநாபன் அவர்கள் வழங்கிய பாரதிதாசன் பாடல்கள் மட்டுமே கொண்ட தமிழிசை நிகழ்ச்சி வெகு சிறப்பாக அமைந்திருந்தது. அடுத்து கோவை இலக்குமி நூற்பாலை முன்னாள் ஊழியர்களின், விவேகானந்தர் குழுவினரின் தமிழ்ப்பாரம்பரிய கும்மி ஆட்டம் கருத்துப் பாடல்களுடன் சேர்ந்து நோக்கர்களின் கண்ணுக்கும் காதுக்கும், மனதுக்கும் பெருமகிழ்வினைத் தந்தது. 20-க்கும் மேற்பட்டவர்கள் அடங்கிய இக்குழுவினர் எப்படிதான் அத்துனைப் பாடல்களை மனப்பாடமாக வைத்து பாடினார்கள்/ஆடினார்கள் என்ற வியப்பு இன்னும் அனைவரின் மனதிலும் ஓடிக்கொண்டே உள்ளது. மாலையில் நடந்த சிறப்பு அழைப்பாளர்களின் நிகழ்ச்சிக்கு தொழிலதிபர் முனைவர் வி.ஜி. சந்தோசம் தலைமை வகித்தார். திரு பாலசந்திரன் ஐ.ஏ.எஸ், வேளாண்துறை இயக்குனர் இராசேந்திரன் ஐ.ஏ.எஸ், தஞ்சைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் சு. பாஸ்கரன், இந்திய பண்பாட்டு மண்டல இயக்குனர் திரு. அய்யனார், புதுவை பாரதிதாசன் பல்கலைக் கழக உயர்வாய்வு மையம் முனைவர் மு.இளங்கோவன் முதலியோர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சிக்கு மாம்பலம் சந்திரசேரகரன் முன்னிலை வகித்தார். இவர்கள் அனைவருமே தமிழிசையின் முக்கியத்துவம் பற்றியும், பரப்புதல் பற்றியும் சிறப்பாக உரையாற்றி அனைவரின் கனத்தையும் தக்க வைத்தனர். குறும்பட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முனைவர் சந்தோசம் பட்டயம் வழங்கி பாராட்டினார். இறுதியாக, புதுவைப் பல்கலைக்கழக நாடகக்குழுவினர் முனைவர் ராஜி இயக்கத்தில் வழங்கிய நேர்மையின் சின்னமாக வாழ்ந்து மறைந்த அரசியல் தியாகி கக்கன் அவர்களைப் பற்றிய நாடகம் அனைவரையும் நெகிழ வைத்தது. பேரவை விழாக்களில் கலந்து கொண்ட குட்டி ரேவதி, பூவுலகின் நண்பன் சுந்தரராஜன், மறைமலை இலக்குவனார், பறையிசைக் கலைஞர்கள் மகிழினி, மணிமாறன் முதலியோரும், மற்றும் இயக்குநர் விஜய் கிருஷ்ணராஜ், தமிழிசை ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர். பேரவையின் முன்னாள் தலைவர் முனைவர் வி.ஜி. தேவ், இன்னாள் தலைவர் நாஞ்சில் பீற்றர் இருவரும் இவ்விழாவில் கலந்து கொண்டு கலைஞர்களைச் சிறப்பு செய்தனர். இவ்விழாவினைச் சிறப்பாக நடத்த அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்த திருபுவனம் ஆத்மநாதன் ஐயா அவர்களின் நன்றியுரையுடன் இரவு 10- மணி சுமாருக்கு விழா இனிதே நிறைவுற்றது. செய்தி:கொழந்தைவேல் இராமசாமி , மக்கள் தொடர்புக்குழு ஒருங்கிணைப்பாளர்-வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவை |
||||||||
6 | ||||||||
by Swathi on 03 Jan 2016 0 Comments | ||||||||
Tags: FeTNA Tamilisai வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவை கொழந்தைவேல் இராமசாமி அரசியல் தியாகி கக்கன் | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|