LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2014 தமிழ் விழா தமிழர் அடையாளங்களின் சங்கமமாக நடந்தேறியது..

அமெரிக்காவிலுள்ள தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பான வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 27 ஆவது தமிழ் விழா ஜூலை 4 மற்றும் 5 ஆம் நாட்களில் மிசௌரி மாகாணத்தின் செயின்ட் லூயிஸ் மாநகரத்தில், இராபர்ட் கால்டுவெல் இருநூற்றாண்டு விழாவாகவும், பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை. ப.சுந்தரேசனார் அவர்களின் நூற்றாண்டு விழாவாகவும் “தமிழர் அடையாளம் காப்போம் ; ஒன்றிணைந்து உயர்வோம் ” என்ற மைய நோக்குடன் நடைபெற்றது.

 

அமெரிக்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் பெட்னா விழா அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான ஆராய்ச்சியாளர்கள்,மருத்துவர்கள்,பொறியாளர்கள்,பலதுறையில் கற்றறிந்த வல்லுனர்கள் கூடி தமிழுக்கும் தமிழர்களுக்கும் எடுக்கும் தரமான கலை,மொழி விழாவாக உருவெடுத்துள்ளதை இந்த ஆண்டு விழாவும் உறுதிசெய்துள்ளது.

 

இப்படித் தரமான பொழுதுபோக்கு,மொழி,கலை,இலக்கியம், அரசியல் குறித்த ஆழ்ந்த  நோக்குடன் ஆயிரக்கணக்கான கற்றறிந்தோர் எடுக்கும் விழா உலகில் வேறு எங்கும்  நடைபெறுவது இல்லை.

 

ஒவ்வொரு ஆண்டும் சூலைத்திங்கள் முதல் வாரத்தில் அமெரிக்கத் தன்னுரிமைத் திருநாளை ஒட்டி இவ்விழா நடைபெறுவது வழக்கம். கூடிக்கலையும் விழாவாக இல்லாமல் அமெரிக்கா முழுவதும் பரவியிருக்கும் தமிழர்கள் ஒன்று கூடித் தங்கள் நண்பர்களையும், ஒத்த உணர்வுடையவர்களையும் கண்டு கலந்துரையாடும் இன்ப விழாவாகவும் இது இருக்கும்.


தமிழறிஞர்களை பெருமளவில் கௌரவிக்கும் ஒரே விழா:

தாய்த் தமிழகத்திலிருந்தும் அமெரிக்காவிலும் 15க்கும் மேற்பட்ட தமிழறிஞர்களை சிறப்பு விருந்தினர்களாக அழைத்து  கௌரவிப்பது இந்த விழாவை தனித்துவம் வாய்ந்ததாகவும், எழுத்து மற்றும் இலக்கிய உலகிற்குச் செய்யும் பெரும் சேவையாகக் கருதப்படுகிறது.

இம்முறை வந்த சிறப்பு விருந்தினர்கள்:

  1. எழுத்தாளர்.தியோடர் பாஸ்கரன்,
  2. கவிஞர் குட்டி ரேவதி.
  3. மருத்துவர் எழிலன்.
  4. வைதேகி ஹெர்பெர்ட்.
  5. திரு.முருகானந்தம்.
  6. முனைவர்.சொர்ணவேல் ஈசுவரன்.
  7. சுவாமிகந்தன்.
  8. முனைவர்.சோயி செரினியன்.Oklahoma University
  9. முனைவர்.ஆரன் பேஜ்.Wesleyan University.
  10. முனைவர்.செல்வ சண்முகம்.
  11. முனைவரி.இராமகி.
  12. மணி.மணிவண்ணன்.
  13. அம்மாபேட்டை கனேசன்.
  14. மு.ஹரிகிருஷ்ணன்.
  15. ஞானமணி இராஜப்பிரியர்.
  16. கவிஞர்.கோபாலகிருஷ்ணன்.
  17. நாகை.பாலகுமார்.
  18. மருத்துவர்.சொக்கலிங்கம்.
  19. முனைவர்.வேலு சரவணன்.
  20. முனைவர்.இராம.இராமமூர்த்தி.


தமிழர் விழா!

 இந்த ஆண்டு அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவையின்( பெட்னா) இருபத்தேழாம் ஆண்டு விழாவை 2014 சூலை 3 முதல் 6 வரை அமெரிக்காவில் செயிண்டு லூயிசில் மிசௌரித் தமிழ்ச்சங்கமும் தமிழ்ச்சங்கங்களின் பேரவையும் இணைந்து  மிகச் சிறப்பாக நடத்தியது. இந்த விழாவுக்கு முன்பதிவு செய்துகொண்டு குடும்பம் குடும்பமாகத் தமிழர்கள் ஒன்றுகூடியது தமிழர்களிடம் ஒற்றுமை உணர்ச்சி இன்னும் உண்டு என்பதை நிலைநாட்டுவதாக அமைந்தது.

இந்தப் பேரவை விழாவின் தனிச்சிறப்பு அமெரிக்கத் தமிழர் தாமே பயின்று அருங்கலைகளின் காவலர்களாய் அரங்கேற்றிய நிகழ்வுகள்தான்.

பண்பாடு/கலாச்சாரத்தை அமெரிக்கத் தமிழர் அறிந்து, உணர்ந்து, பயின்று, பயிற்றுவித்து இம்மண்ணிலேயே தழைத்தோங்கச் செய்வதில்தான் இதைப்போன்ற விழாக்களின் வெற்றி அமைந்துள்ளது. அதனை ஒட்டி செயிண்ட் லூயிசு பேரவை விழா ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

பறையாட்டம், சிலம்பாட்டம், தமிழிசை, தெருக்கூத்து, நாட்டிய நாடகம் போன்றவற்றைக் கடந்த சில ஆண்டுகளாகப் பேரவை அரும்பாடுபட்டு மிகுந்த பொருட்செலவில் அரங்கேற்றியது. இதன் மூலமாக இந்த அருங்கலைகளை அமெரிக்கத் தமிழருக்கு அடையாளப்படுத்தி அதற்கு அவசியமான முதன்மை இடத்தையும் அளிப்பதுதான் இக்கலைகளைக் காப்பதற்கான அவசிய/அவசரத் தேவை.

 

இந்தப் பெருமுயற்சியில் இவ்விழா வெற்றி பெற்றுள்ளது என்றே கருதுகிறோம்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலும் சாஸ்திரிய தமிழிசை முதல் மக்கள் இசை விரும்பிகள் வரையிலும், பாரம்பரிய கலையிலிருந்து நவீன கலை விரும்பிகள் வரையிலும் அனைவரின் விருப்பத்தையும் முழுமையாக பூர்த்தி செய்யும் வகையில் இந்த நிகழ்ச்சி இருந்தது. இரண்டு நாட்கள் பல்வேறு அரங்குகளில் இணையாக நடைபெற்ற பல நிகழ்ச்சிகளை வட அமெரிக்காவின் பல்வேறு பகுதியிலிருந்தும் வந்திருந்த 1500க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் மாறி மாறி ஒவ்வொரு அரங்கத்திலும்  ஆர்வ பெருக்குடன் கண்டு களித்தனர்.

 

இரு நாளும் நிகழ்ச்சிகள் திருக்குறள் மறை ஓதுதலுடன் தொடங்கியது. மக்களுக்கு வாழ்க்கையில் மறைந்திருக்கும் உண்மகளை தினம் தினம் சொல்லுவதுதான் ஓதுதல். எனவே இந்த மறை ஓதுதலை தினமும் வாழ்க்கையில் அனைவரும் கடைபிடிக்க வேண்டியது அவசியம் ஆகும்.

 

இவ்விழாவில் முதல்முறையாகக் குறும்படப் போட்டிகளும் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. ஹாலிவுட் இயக்குநர் திரு.சுவாமிகந்தன் மற்றும் மிசிகன் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர்.சொர்ணவேல் ஈஸ்வரன் ஆகியோர் சிறந்த படங்களைத் தேர்ந்தெடுத்துப் பரிசுகளும் அளித்தனர்.


இவ்விழாவில் நடைபெற்ற முத்தாய்ப்பான நிகழ்ச்சிகள் பற்றி பல்வேறு தலைப்புகளில் காண்போம்.


தமிழ் ஆர்வலர்களுக்கான நிகழ்ச்சி.

தமிழகத்திலிருந்து கவிஞர் திரு. குட்டி ரேவதி அவர்கள் வந்திருந்து பண்டிதர் அயோத்திதாசர் அவர்களைப் பற்றியும், எழுத்தாளர் திரு. தியோடர் பாஸ்கரன் அவர்கள் “திரைப்படங்களில் தமிழிலக்கியம்” என்ற தலைப்பிலும் உரையாற்றினர். தியோடர் பாஸ்கர் உரையாற்றிய போது தமிழிலக்கியம் சென்ற அளவிற்கு தமிழ் சினிமா சென்றடையவில்லை என்றும் ஏழை படும்பாடு மற்றும் யாருக்காக அழுதார் முதலிய படங்கள் இலக்கியத்திலிருந்து வந்த மிக முக்கியமான திரைப்படங்கள் என்றார். நூற்றாண்டு நாயகர்களான குடந்தை சுந்தரேசனார் பற்றி திரு ராமமூர்த்தி அவர்களும் ராபர்ட் கால்டுவெல் பற்றி ஆல்பர்ட் செல்லதுரை அவர்களும் பேசினர்.

 

கவிஞர் குட்டி ரேவதி அவர்கள் தலைமையில் “கிளம்பிற்றுக்காண் தமிழர் படை ” என்ற தலைப்பில் நடைபெற்ற கவியரங்கத்தில் இலக்கியம் வழி, இணையம் வழி, மேடை வழி, மேசை வழி, கலை கொண்டு, பண்பாடு போற்றி, அரசியல் வழி, அறிவியல் வழி என பல தலைப்புகளில் கவிதை வாசித்தனர். நிறைவாக பேசிய கவிஞர் குட்டி ரேவதி, இன்றைய இளம் கவிஞர்களுக்கு முன் மாதிரியானவர் கவிஞர் பிரமீள் என்று புதிதாக வளரும் கவிஞர்களுக்கு பாதை காட்டினார். அது மட்டுமின்றி இன்றைய தமிழ் சமுதாயத்தில் தமிழர் உணர்வுகள் செயல் வடிவம் பெற தமிழ் உணர்வாளர்களை கொண்டு ஊடக கல்வி கூடம் அமைக்க வேண்டியதன் அவசியத்தையும் இன்றைய தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட பெண்களுக்காக எழுத வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.

 

மருத்துவர் எழிலன் தலைமையில் அமெரிக்க தமிழர் கலந்து கொண்ட தமிழரின் வளர்ச்சிக்கு அடிப்படை உணர்வா?அறிவா? என்ற தலைப்பில் கருத்துக்களம் சிறப்பாக நடைபெற்றது. மருத்துவர் எழிலனின் துடிப்பான பேச்சும், சமயோசிதமான உரையாடல்களும் பார்வையாளர்களை கவர்ந்தது. முனைவர் இராமகி அவர்கள் தமிழர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைவதை பற்றியும் தமிழின் தொன்மை பற்றியும் , தமிழ் எழுத்துருவை மாற்ற முயற்சிப்பவர்களின் சதி பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.

 

அமெரிக்க தமிழரான வைதேகி ஹெர்பர்ட் அவர்கள் சங்கத்தமிழில் மீது கொண்ட ஆர்வம் காரணமாக தமிழகம் வந்து பழந்தமிழை பதம் பிரித்து படிக்க கற்றுக்கொண்டு ஒரு பல்கலைகழகத்தில் பல பேர் செய்ய வேண்டிய வேலையை 20 ஆண்டுகளாக கடுமையாக உழைத்து அதையே தவமாகக் கொண்டு அனைத்து சங்கத்தமிழ் நூல்களையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். அனைத்து மக்களும் சங்கத்தமிழ் படித்து இன்புற வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். அவருடைய பேச்சிலிருந்து ஒரு சுவையான தகவல். நாம் கடைகளில் வாங்கும் தூர்தால் என்பது துகர் -> சிவப்பு->துவரம் பருப்பு என்ற தமிழ் சொல்லிலிருந்து வந்ததாம்.

 

இவ்விழாவில் நடைபெற்ற முத்தாய்ப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று நாஞ்சில் அவர்களின் இலக்கிய வினாடிவினா எனலாம். 3 மாதத்துக்கு முன்பே பாடத்திட்டம் வகுக்கப்பட்டு பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், திருக்குறள், இலக்கணம் என பல்வேறு இலக்கண இலக்கியங்களிலிருந்து கேள்விகள் கேட்க்கப்பட்டன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். சிறுவர்களுக்கான தமிழ்த்தேனீ போட்டி, திருக்குறள், பேச்சு போட்டி, பாடல்களிலிருந்து கேள்வி, ஒருவார்த்தை (தனி நடிப்பு மூலம் வார்த்தை கண்டுபிடிப்பு) போன்ற பல வகைகளில் நடைபெற்றது.

 

தமிழர் விழிப்புணர்வுக்கான நிகழ்ச்சி:

உலக தமிழ் மன்றம் சார்பில் தமிழக இளைஞர்களுக்கு நாம் செய்ய வேண்டியன என்ன என்பது பற்றியும் ஈழமக்களுக்கு நாம் செய்யவேண்டியது பற்றியும் விவாதம் நடைபெற்றது. இதில் பல அமெரிக்க தமிழ் ஆர்வலர்கள் பங்கு பெற்றனர். மருத்துவர் எழிலன் அவர்கள் எவ்வாறு அறிவியல், பரிணாமம், வானியல், பகுத்தறிவு கருத்துகளை கிராமபுறங்களுக்கு எடுத்து செல்வது என்பது பற்றியும் பேசினார்.   திரு.எக்ஸ்னோரா நிர்மல் அவர்கள் ஈழத்தமிழர் இன படுகொலையை தமிழர் இனப்படுகொலை என்று சர்வதேச அரங்கில் எடுத்து செல்லாமல் இலங்கை முஸ்லீம்கள், இலங்கை கிறித்துவர்கள் மற்றும் இலங்கை இந்துக்கள் இனப்படுகொலை என்று சர்வதேச அரங்கில் எடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். சென்னையை சுத்தப்படுத்த எக்ஸ்னோரா என்ற அமைப்பின் மூலம் அவர் எடுத்து வரும் சீரிய பணியை பற்றி நாம் அறிந்திருப்போம். அனால் அவர் ஈழத்தமிழர்களுக்கு நீதிகிடைக்க நடத்தும் போராட்டம் மிகவும் பாராட்டுக்குறியது.

 

தமிழ் கல்வியின் அவசியத்தையும் கோவில்களில் தமிழ் வழி வழிபாட்டு முறை கொண்டுவருவதன் அவசியம் பற்றியும் அனைவரும் கர்ப்பக்கிரகம் செல்ல வழி விடுவது பற்றியும் பேரூர் மருதாசல அடிகளார் உரை ஆற்றினார். அதற்காக அவர் எடுத்து வரும் முயற்சி பற்றியும் எடுத்து கூறினார்.

 

அமெரிக்க தமிழர் அரசியல் தமிழர் செயற்குழு கூட்டம் (USTPAC – US Tamil Potical Action committee) தமிழ் உணர்வாளர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கூட்டம் ஆகும். இந்த அமைப்பின் தலைவர் திரு.காருண்யன் அருளானந்தன் அவர்கள் ஈழ இனப்படுகொலைக்குப் பிறகு அமெரிக்க அரசு மற்றும் அரசியல்வாதிகளை நெருங்க முடியாத நிலையில் இந்த அமைப்பை தொடங்கிய விதம் பற்றி கூறினார். இன்று உலகிலேயே வல்லரசாக இருக்கும் அமெரிக்காவில் திறந்த நிலை அரசியல் சூழல் நிலவுவதால் ஈழ மக்களின் நீதி கிடைக்க, லாபியிங் மற்றும் பல்வேறு முறை கொண்டு அமெரிக்க அரசியல்வாதிகள் மற்றும் அரசை நெருங்கி வருவதில் ஏற்பட்டு வரும் முன்னேற்றம் பற்றி கூறினார். சர்வதேச மனித உரிமை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கத் தீர்மானம் கொண்டுவருவதில் இந்த அமைப்பு முக்கிய பங்காற்றியுள்ளது. தற்போது பொது விசாரணை கொண்டுவர இந்த அமைப்பு செய்துவரும் முயற்சி பற்றியும் கூறினார். சர்வதேச போர் குற்றங்களுக்கான படிப்பிற்கான அமெரிக்க பேராசிரியர் Akerson பேசும் போது இலங்கைக்கு எதிரான போர்குற்றம் பற்றி சர்வதேச விசாரணை கொண்டுவர வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்றும் எடுத்துரைத்தார்.

 

உலக தமிழ் அமைப்பின் செயல்பாடு:

உலகத் தமிழ் அமைப்பின் முன்னாள் தலைவர் திரு.செல்வன் பச்சமுத்து அவர்கள் அமைப்பின் செயல்பாடுகள் குறித்து உரையாற்றினார். அவர் பேசுகையில், உலகத் தமிழ் அமைப்பு 20 ஆண்டுகளுக்கு முன்னாள் துவங்கிய அமைப்பின் நோக்கம் உலகலாவியத் தமிழர்களின் தன்னுரிமையை நிலைநாட்ட உதவுவது. குறிப்பாக ஈழத்தமிழர்களின் துயரத்தை உலகிற்கு உணர்த்தி அவர்களுக்கு நீதியும், உரிமையையும் வாங்கி கொடுப்பது இந்த அமைப்பின் முக்கியக் குறிக்கோள். சென்னையிலும், புது தில்லியிலும் கருத்தரங்கங்கள் நடத்தவுள்ளது குறித்தும் திரு.செல்வன் பேசினார்.


உலகத் தமிழ் அமைப்பின் உள்ளரங்கக் கூட்டத்தில் முனைவர் சேரன் அவர்கள் பேசும்போது பின்வருமாறு கூறினார், இந்த அமைப்பு அமெரிக்காவிலும் இந்தியாவிலும், தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் பணியாற்றிவருகிறது. இந்தியாவிலிருந்து தொல்.திருமாவளவன், டி.இராஜா போன்றோர்களை அழைத்துவந்து அவர்களுடன் தமிழினச் சிக்கல் குறித்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் செயல்பட்டுவரும் பல தமிழ் அமைப்புகளுடன் இணைந்து தமிழினத்திற்கு பெரும்பணியாற்றி வருகிறது.


இக்கூட்டத்தில், கவிஞர் குட்டி ரேவதி அவர்கள் தமிழகத்தின் நிலையை அழகாக எடுத்துக் கூறினார். நமக்கு ஒரு ஊடகமில்லை என்பதை போக்க நாம் முயல வேண்டும் என்று கூறியது அனைவரையும் கவர்ந்தது. தொடர்ந்து மருத்துவர் எழிலன் அவர்கள் செய்ய வேண்டிய செயல்கள் குறித்து பேசினார். திரு.நிர்மல் அவர்களும் தனது கருத்துகளை எடுத்துரைத்தார்.


தமிழ் இசை மற்றும் மக்கள் (பாரம்பர்ய) கலை ரசிகர்களுக்கான நிகழ்ச்சி:

மக்கள் கலை மற்றும் தமிழ் இசை ஆர்வலர்களுக்கான நிகழ்ச்சி இரண்டு நாட்களிலும் நிறையவே இருந்தன. அந்த நிகழ்ச்சிகளின் தரமும் அளவிற்கறியதாய் இருந்தன. மக்கள் அத்தகைய நிகழ்ச்சிகளை வெகுவாக ரசித்தனர்.


பாரம்பரிய கலைகளில் ஒன்றாகவும் கிராம மக்கள் ரசித்து பார்க்கும் கலையாகிய தோல்பாவை கூத்து கலையை தமிழகத்திலிருந்து வந்த அம்மாபேட்டை திரு.கணேசன் மற்றும் மற்றும் ஹரிகிருஷ்ணன் அவர்களும் அனுமன் தூது படலம் கதை கொண்டு நடத்தி காட்டினர். தமிழகத்தின் தொன்மையான கலை வடிவங்களில் ஒன்று தோல்பாவை கூத்து. இதற்கான பொம்மை மிருகங்களின் தோலைக் கொண்டு வடிவமைக்கப் படுகின்றன. பின்புலத்தில் இருந்து ஒளி பாய்ச்சப்பட்டு அதன் பிரதிபலிப்பு முன்னே உள்ள வெள்ளை திரையில் விழுமாறு செய்யப்படுகிறது. இக்கலைக்கு ஓவியம், கட்டுமானம், பாவையை இயக்கும் திறன் கொண்டோர், தமிழ் பாடல்கள் எழுதுவோர் என பல கலைஞர்களின் பங்களிப்பும் தேவைப்படுகிறது. நலிவடைந்த பாரம்பரிய கலையை காக்கவும், இந்த கலைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லவும், நலிந்து வரும் இந்த கலையை தொழிலாகக் கொண்ட கலைஞர்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கவும் திரு.ஹரிகிருஷ்ணன் அவர்கள் பல முயற்சிகளை எடுத்து வருகிறார். தருமபுரி அருகே இயற்கை சூழலில் குழந்தைகளுக்கு பள்ளி படிப்போடு இந்த பாரம்பரிய கலைகளை சொல்லி கொடுக்கவும் ஒரு பள்ளி கட்டி வருகிறார். அவருடைய சீரிய பணிக்கு உதவ அவரை 9894605371 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

  

இந்த ஆண்டு விழாவின் மற்றொரு சிறப்பு ‘தீரன் சின்னமலை’ நாட்டிய நாடகம் செயிண்ட் லூயிசு நகரில் வாழும் தமிழர்களால் அரங்கேற்றப்பட்டது. குரு நாகை பாலகுமார் அவர்கள். திருபுவனம் ஆத்மநாதன் அய்யா அவர்களின் இசையில், கவிமுகில் கோபாலகிருஷ்ணன் அவர்களின் பாடல்களில் இந்த நாட்டிய நாடகம் சிறப்பாக அரங்கேற்றபட்டது. இளம் தலைமுறையினர் மனதில் தீரன் சின்னமலை வரலாறு ஆழமாக பதிந்தது. அதில் நடித்த பாத்திரங்களின் நடிப்பும் நடனமும் மிகவும் அருமையாக இருந்தது.

 

கிராமங்களில் இன்றும் பிரபலமாக உள்ள கலை தெருக்கூத்து. பழந்தமிழ் இலக்கியங்களிலேயே தெருக்கூத்து பற்றிய குறிப்புகள் உள்ளன. மின்னிசோட்டா தமிழ்சங்கம் வடிவமைத்து இயக்கிய சிலம்பின் கதை என்ற தெருக்கூத்து, நான் சிறு வயதில் கிராமத்தில் பார்த்த தெருக்கூத்து நிகழ்வை ஞாபகப்படுத்தியது. அதில் இருந்த பாடல் வரிகளும், கலைஞர்கள் குரல் மற்றும் நடிப்பின் தரமும் சொல்லால் வெளிப்படுத்த முடியாது. அதைப் பார்த்த மக்களுக்கு முழு சிலப்பதிகாரத்தை படித்த திருப்தி ஏற்பட்டது என்றால் மிகையாகாது.

 

மக்கள் கலைகளான சிலம்பம், பறை, சுருள் கத்தி வீச்சு, வர்மம் போன்றவற்றையும் அரங்கில் செய்து காட்டினர். பறை பற்றி விரிவாக பின்னால் பார்ப்போம். இந்த நிகழ்வில் தமிழிசைக்கும் மிகுந்த முக்கியத்துவம் தரபட்டது. திரு.ராஜமணி ராஜப்பிரியர் அவர்களின் தமிழிசை நிகழ்வு அனைவரையும் ஈர்த்தது. தமிழை மட்டும் தான் பாடுவேன் என்ற உயரிய குறிக்கோளில் வாழும் பெரியவர் இவர். அது மட்டுமன்றி சங்க இலக்கிய தமிழிசை போன்ற நிகழ்ச்சிகளும் நடந்தது. இளம்சிறார்களின் ‘தமிழிசைப் போட்டி’ நிகழ்ச்சியில் புறநானூற்றுப்பாடலில் துவங்கி, இக்காலப் பாடல்வரை இசைத்தனர். முனைவர் வேலு சரவணன் அவர்கள் நடத்திய குழந்தைகளுக்கான எலிப்பதி தெரு நாடகம், குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களையும் கவர்ந்தது.

 

கர்நாடக இசை மற்றும் பரதநாட்டியம்:

இவ்விழாவில் சங்கத்தமிழ், சமய வழி மற்றும் பிற பாடல்களை கர்நாடக இசையில் பாடும் நிகழ்ச்சிகள் பலவும் இருந்தன. பல மாநிலங்களிருந்து வந்திருந்த தமிழர்கள் பல்வேறு பரத நாட்டிய நடனங்களையும் நடத்தி காட்டினர். விழாவின் முதல் நாளன்று குரு நாகை பாலகுமார் அவர்கள் ஆடிய பரத நாட்டிய நிகழ்ச்சி அனைவரையும் ரசித்து பார்க்க வைத்தது. அவர் விழாவின் மைய நோக்கான “தமிழர் அடையாளம் காப்போம்! ஒருங்கிணைந்து உயர்வோம்” என்ற கருவின் அடிப்படையில் கொண்ட பாடலுக்கு அனைத்து பாவனைகளுடன் அழகாக நடனமாடினார். கனடா தமிழ் மக்களின் பரத நாட்டிய நிகழ்ச்சியும் மிகவும் நேர்த்தியாக இருந்தது.

 

 அமெரிக்காவில் சாதனை படைத்த தமிழர்களுக்கு விருது வழங்கும் கொண்டாட்டம் – “Tamil American Pioneer Gala”:

பேரவை விழாவிலேயே முதன் முறையாக சாதனைத் தமிழர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு கோலாகலமாக நடந்தது. இந்த நிகழ்வை இரு அமெரிக்காவில் பிறந்து வாழ்ந்து வரும் இரு இளம் பெண்கள் ஒருங்கிணைத்திருந்த நம்பிக்கையைக் கொடுத்தது. “Tamil American Pioneer” என்கிற பெயரில் இவ்விருது பேரவை சார்பில் ஏழு தமிழர்களுக்கு வழங்கப்பட்டது. அனைவரும் விருது வாங்கிய பின் விரிவாக தமது அனுபவங்களையும், இளைஞர்களுக்கு நல்ல ஆலோசனைகளையும் வழங்கினர். விருது வாங்கியவர்கள் பட்டியல்:

Dr. Arogyaswami Paulraj,Professor (Emeritus),Stanford University

Dr. Raj Chetty, William Henry Bloomberg Professor of Economics, Harvard University

Dr. Chitra Dorai, IBM Distinguished Engineer and Master Inventor, IBM Corp.

Dr. Arun Mohan, Chief Medical Officer, Apollo MD Hospital Medicine

Dr. K. Sujata, President & CEO, Chicago Foundation for Women

Mr. Arun Subramanian, Esq., Partner at Susman Godfrey, LLP

Mr. Jay Vijayan, Chief Information Officer, Tesla Motors Inc.

இந்த விழாவின் இறுதியில் அடுத்த ஆண்டு சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியில் நடைபெறவுள்ள 28-வது பேரவை தமிழ் மாநாட்டில் இந்த நிகழ்வு தொடரும் என்று 2015 விழா ஒருங்கிணைப்பாளர் திரு.தில்லைக்குமரன் அவர்கள் உறுதியளித்தார். அடையாளமாக நிகழ்ச்சியை நடத்திய செல்வி. கிருத்திகா மற்றும் செல்வி. சௌந்திராவும் நிகழ்ச்சியின் நிரலை திரு. தில்லைக்குமரன் அவர்களுக்கு அளித்தனர்.


தமிழ் சாதனையாளர்கள் மற்றும் தமிழ் பிரபலங்கள்:

வட அமெரிக்க தமிழ்சங்கப் பேரவையின் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு தமிழ் சாதனையாளர்களையும் கௌரவித்தனர். சமூக முன்னேற்றத்துக்காக தன் கண்டுபிடிப்புகளை தியாகம் செய்த திரு.முருகானந்தம் அவர்கள் இவ்விழாவுக்கு வந்திருந்து சிறப்பித்தார். அவர் பெண்களுக்கான சானிடரி நாப்கினை குறைந்த விலையில் தயாரிக்க அவருக்கு தூண்டுதலாக இருந்த நிகழ்வையும், எப்படிப்பட்ட தடைகளையெல்லாம் கடந்து சென்று தனது கண்டு பிடிப்பை சந்தைக்கு கொண்டு சென்றார் என்றும் விளக்கினார். தற்போது பல்வேறு பெண்கள் சுய உதவி குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு 700க்கும் அதிகமான பிராண்டுகளில் விற்பனையாகிறது என்றும் தெரிவித்தார்.

 

சிகரம் தொட்ட தமிழர் திரு.ஆரோக்கியசாமி பால்ராஜ் அவர்கள் தற்போது ஸ்டான்போர்டு பல்கலைகழகத்தில் பணியாற்றுகிறார். அவருடைய MIMO தொழில்நுட்பம் மற்றும் பெரும்பாலான ஸ்மார்ட் போன்களில் உபயோகமாகிறது. அவர் இந்தியாவில் இருந்த போது Center for Artificial Intelligence Research, Center for Develipment of Advanced Computing (CDAC), Central Research lab போன்ற பல்வேறு ஆராய்ச்சி நிலையங்களை நிறுவி உள்ளார். அமெரிக்காவில் பல்வேறு நிறுவனங்களையும் தொடங்கி உள்ளார். அவர் மார்கோனி விருது மற்றும் பெல் விருது போன்றவற்றையும் வாங்கி உள்ளார். அவர் தமிழ் விஞ்ஞானிகளில் குறிப்பிட தகுந்தவர்களாக சந்திரசேகர், சி.வி.ராமன், ராமானுஜன், M.S.சுவாமிநாதன், நம்பி சேசாத்ரி, P.V.வைத்யநாதன்(CalTech), ராமசந்திரன்(UC-LA) போன்றோரை குறிபிட்டார். Tesla நிறுவனத்தின் CIO ஆக உள்ள திரு ஜெ விஜயன் அவர்களும், சித்ரா துரை அவர்களும் பேசினர்.

 

நம்பிக்கையூட்டும் நாளைய தலைமுறை என்ற தலைப்பில் இளம் அமெரிக்க தமிழ் சாதனையாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டனர். பறை, சிலம்பம் போன்ற பாரம்பரிய கலைகளில் வல்லுநர்களாகவும், தமிழ் கல்வி, நவீன இசை, சங்க இலக்கியத்தில் ஆர்வம், நாட்டியம் போன்றவற்றில் வல்லுநர்களாகவும் உள்ள இளம் தலைமுறையினர் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். ஹாலிவுட் இயக்குநர் சுவாமிகந்தன் அவர்களும் முனைவர் சுவர்ணவேல் அவர்களும் குறும்பட போட்டிக்கான வெற்றியாளர் தேர்வு செய்ததுடன் தமிழர்களை ஹாலிவுட் படத்துறைக்கு வருவதற்கும் வரவேற்றனர்.


உலக அரங்கில் சித்த மருத்துவம் பற்றியும் சித்த மருத்துவத்தின் சிறப்புகள் பற்றியும் முனைவர் செல்வ சண்முகம் அவர்கள் பேசினார்.


தமிழ் திரைத்துறையிலிருந்து வந்திருந்த நடிகர் நெப்போலியன் மற்றும் நடிகை திரிஷா ஆகியோர் தங்களது திரை அனுபவங்களை பகிர்ந்து கொண்டதோடு மக்களின் கேள்விக்கும் பதிலளித்தனர். சோனியா, சோனியா மற்றும் பிரபு நடத்திய கணேஷ் கிருபா குழுவினரின் மெல்லிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

 

முத்தாய்ப்பான நிகழ்ச்சி:

ஓக்லகாமா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கும் சோவி அவர்கள் பறை இசை பயிற்சி பட்டறை நடத்தினார். உலகிலேயே பிறப்பிலிருந்து சாவு வரை (திருமணம், பூப்பெய்தல்) அனைத்து விழாக்களிலும் இசைக்கப்படும் ஒரே இசை கருவி பறை மட்டும் தான் என்றார்.

 

சங்கங்களின் சங்கமம்:

வட அமெரிக்கத்தமிழ்சங்க பேரவையின் வரலாற்றில் முதல் முறையாக திரை கடல் ஓடியும் திரவியம் தேடு என்ற வாக்கிற்கிணங்க நீக்கமற நிறைந்திருக்கும் நம் தமிழர்கள் அனைவரும் இங்கே ஒன்று கூடி அமெரிக்காவில் இருக்கும் 40க்கும் மேலான தமிழ் சங்கங்களின் சங்கமத்தை/அணிவகுப்பினை, தமிழர் கலைகளான பரதநாட்டியம், சிலம்பம், பறை, கரகம், பொய்க்கால் குதிரை, தெருக்கூத்து , காவடியாட்டம் என மிகுந்த ஆரவாரத்துடன் நடத்தி காட்டினர்.


அனைவருக்கும் ஒற்றுமையை ஒருமித்த உணர்வை வழங்கும் மபெரும் எழுச்சியான  நிகழ்வாக இது அமைந்திருந்தது.


இந்த சங்கமத்தில் சில நூறுபேர் ஒரே நேரத்தில் கலந்துகொண்டது விழாவின் முத்தாய்ப்பாக அமைந்து வந்தோர் அனைவரையும் பரவசத்திலாழ்த்தியது.


அணிவகுப்பின் முடிவில் அரங்கின் அனைத்து பகுதியிலிருந்தும் அமெரிக்க பறை இசை கலைஞர்கள் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் பறை முழக்கத்துடன் அடியபடியே மேடைக்கு வந்து பறை இசையுடன் சேர்ந்து ஆடிய நடனம் ஒட்டு மொத்த மக்களையும் எழுந்து நின்று கைத்தட்ட வைத்து நடனமாட செய்தது. வெற்றியின் இசையாக அரங்கை அதிரவைத்த பறை ஒலி, தமிழ்நாட்டில் மக்களின் மனதில் அடிமையின் இசையாக பறையை கொண்டிருக்கும் நினைப்பையும், சாதிய அடக்குமுறைகளையும் தீயில் மாய்க்கும் அக்கினி குண்டமாக பரவட்டும் என்ற நம்பிக்கை அங்கு வந்த 1500க்கும் மேற்பட்ட தமிழர்களின் மனதிலும் ஏற்பட்டது.


ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலக்கிய அறிவுஜீவிகளிலிருந்து சாதாரண மக்கள் கூடும் கூட்டத்தில் பாரம்பரிய கலையிலிருந்து சாஸ்திரிய கலை வரையும், பாரம்பரிய இசையிலிருந்து சாஸ்திரிய இசை வரை ஒருமித்து முழங்கி தமிழ் மற்றும் தமிழரின் நலனுக்கான மாபெரும் தமிழ் திருவிழாகிய FeTNA போன்ற ஒரு நிகழ்ச்சியை தமிழ் நாட்டில் கூட காணமுடியாது.

 

விழா புகைப்படங்கள்:

http://fetna.org/images/photos/FeTNA2014-Photos/album/fetna2014.html

 

விழா காணொலியைக் காண :

http://www.fetna.org/index.php/media-gallery/video/2014-stlouis

 

 

 

 

 

f10
by Swathi   on 15 Jul 2014  1 Comments
Tags: Tamil Convention   Fetna 2014   வட அமெரிக்க தமிழ்ச் சங்கம்   பேரவை விழா           
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி
கருத்துகள்
03-Aug-2014 13:29:16 SalemARULPRAKASH.A said : Report Abuse
Valga Thamizh
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.