LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- தென்கிழக்கு ஆசியா

வேர்களைத் தேடி - நீயா நானா நிகழ்ச்சி புலம்பெயர் சமூகத்தின் வாழ்வியலை முழுமையாக வெளிப்படுத்தியது

தொலைக்காட்சியில் "நீயா நானா' என்ற நிகழ்ச்சியில் மூன்று தலைமுறைகளுக்கும்மேலாக,வெளி நாடுகளில் வாழும் புலம் பெயர்ந்த தமிழர்களின் இன்றைய -இளைய தலைமுறையினர் சந்தித்து உரையாடும் நிகழ்வு நடந்தது. அதைப் பார்த்த பொழுது, பல்வேறு கருத்துகள் மனதில் எழுந்தன. அதைப் பதிவு செய்வது முக்கியம் என நினைக்கிறேன். மேலும், நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் இருபது முதல் முப்பது வயதுக்கு உட்பட்டவர்கள். இவர்களது உரையாடல்களைப்பார்த்த போது, தரணியெங்கும் பரவிக்கிடக்கிற. அடையாளங்களைத் தேடுகிற-தேடியலைகிற தமிழர்களின் மனசின் அடியாழத்திலிருந்து எழுகிற உணர்வு புரிந்தது. தாய்ப் பூமியாம், தமிழ் மண்ணில் கால்வைத்த பெருமிதத்தை அவர்களின் முகத்தில் பார்க்க முடிந்தது. தமிழ்ப் பெருங்குடி மக்களுக்காக இதைப் பதிவு செய்வது காலத்தின் கட்டாயம் என்பதை உணர்ந்தேன்.

இடப் பெயர்வுக்கான காரணங்கள்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியில்
தமிழக மக்கள் ( பெரும்பாலும் விவசாயிகள்) , காலனிய ஆட்சியாளர்களால் உலகெங்கும் கூலித் தொழிலாளர்களாக, அழைத்துச் செல்லப் பட்டார்கள். இப்படித் தொழிலுக்காகப் போனவர்கள்; வணிகம் செய்வதற்காகப் போனவர்கள்; ஒப்பந்த அடிப்படையில் சென்றவர்கள் எனப் பல்வேறு முறைகளில் அழைத்துச் செல்லப்பட்டார்கள்.
இன்றையக் காலக் கட்டத்தில் கணினி வல்லுநர்களாகச் செல்கின்றனர்.

முதற்பயணம்

வேர்களைத் தேடி நிகழ்வில், இதுவரை தமிழகத்தைப் பார்க்காத.. முதல் முறையாக.. தமிழகம் வருகின்ற மூன்று மற்றும் நான்காம் தலைமுறையினர் பர்மா, தென்ஆப்பிரிக்கா, பிஜி, மலேசியா, உகாண்டா, மியான்மர், மொரீசியஸ், கரீபியன் எனப் பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருக்கின்றனர்.

இந்த இளைஞர்களின் தாத்தா ,பாட்டிகளின் பெயர்கள் ரங்கா, முனியம்மா, ஆறுமுகம், அமராவதி, சந்நியாசி (சன்னாசி) , சுப்பையா, வள்ளி, சண்முகம், சரவணன், எனத் தமிழ்ப் பெயர்களாக மாறாமல் உள்ளன. இளைஞர் ஒருவர் தனது அம்மா பெயர் 'ராமசாமி' என்று குறிப்பிட்டார். இந்த இடத்தில் பெண்களுக்கு ஆண்கள் பெயரை வைக்கிற மரபு இருப்பதையும் அதைப் புலம்பெயர்ந்த தமிழர்கள் பயன் படுத்துவதையும் பார்க்க முடிகிறது. ராமு என்று இருபாலருக்கும் பெயர் வைப்பார்கள். கனகு, முத்து, ராதா, சிங்காரம், அழகு,காமாட்சி, தங்கம், திரவியம் போன்ற பல்வேறு பெயர்கள் பொதுப் பெயர்களாக இன்றும் தமிழகத்தில் வைக்கப்படுகின்றன.
இது தமிழரின் பொதுமரபாகும்.

வழிபாடும் நம்பிக்கையும்

தமிழகத்திலிருந்து ரப்பர் தோட்டங்கள், தேயிலைத் தோட்டங்கள் என்று வேலைக்குச் சென்றவர்கள் மாரியம்மன், மதுரை வீரன், முருகன், வெள்ளையம்மாள், பொம்மியம்மாள் எனத் தங்கள் தெய்வங்களையும் கொண்டு சென்றுள்ளனர். வழிபாட்டில் தீ மிதித்தல் முதலிய நேர்த்திக் கடன்களையும் செலுத்துவதாக மலேயா மக்கள்
கூறுகின்றனர். உலகின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் அவர்களின் நம்பிக்கை தமிழகத்தில் வேரூன்றி கிடப்பதை அவதானிக்க முடிகிறது.

கலைகள்

தென்னாப்பிரிக்க இளைஞர் ஒருவர், "அம்மா முத்துமாரி-எங்கள் அழகு முத்துமாரி" என்ற மாரியம்மன் வழிபாட்டுப் பாடலைப் பாடினார். விருந்தினராக வந்திருந்த பெண்கள் இணைந்து கும்மியடித்து ஆடினர். தமிழ்க் கலை-உயிராக இருந்ததைப் பார்க்க முடிந்தது. ஆங்கிலம் தாய்மொழியாக இல்லாத அந்த நாடுகளில்,பாட்டும் இசையும் ஆட்டமும் பண்பாடும் வாழ்க்கையும் தமிழ் மரபிலிருந்து விலகாமல் அப்படியே இருக்கிறது. மொழியின் வீச்சு.. பேச்சில் சற்றே மாறினாலும் மூச்சு தமிழோடு உறவாடுவதைப் பார்க்கமுடிகிறது.


மற்றொரு இளைஞர், கருப்பசாமி மாதிரியே முடியலங்காரம் மற்றும் ஒப்பனை செய்திருந்தார். நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஆய்வாளர் ஒருவர், புலம் பெயர்ந்த மக்களின் ஒட்டுமொத்த உணர்வைக் காட்டும் பாடல் ஒன்றைப் பாடிக் காட்டினார். ஒன்றரை வருடம் கடற்பயணத்தின் போது,கடலுக்குள் தூக்கி எறியப்பட்ட, நோய்வாய்ப்பட்டு இறந்தவர்கள்போக, மீதியும் பாதியுமாய் வந்து சேர்ந்த மக்களின் சொல்லொன்னா துயரங்களைச் சொல்லும்,


"வந்த கதை
வாழ்ந்த கதை-எங்க
வயிறெரிஞ்சு போன கதை

சுட்ட கருவாட்டுல
கஞ்சிய குடிச்சுகினு

காசு பணம் சேர்க்கலான்னு
கையிலடிச்சு
கொண்டுவந்தாங்க

காசு பணம் சேரலங்க
கொசுவால குடிச்ச
மிச்சம்
கொல்லயில
போனாங்க

கொய்னா தண்ணிய
குடிக்கவும்வச்சாங்க
கருங்கடலத்
தாண்டி வந்து
கைகட்டி நின்னோ மிங்க

கல்ப்பமும் உண்டுண்னு
கையேந்தி ஊமையானோம்..

என்ற பாடல், இப்பூமிப்பந்தின் கடற்பரப்பெங்கும் வீசியடிக்கும் கடலலையினிலும் பெருவெளியினிலும் ஒலித்துக்கொண்டே பூமியைச் சுழற்றியடித்துக் கொண்டிருக்கிறது.

நம் பெருமூச்சோடு கலந்து.. காற்றில் கலக்கிறது. ஒருநாள் அவர்கள் வாழும் நிலத்தில் தமிழ் மூச்சாய் உயிரில் கலக்கும்.
யாதும் ஊரே யாவரும் கேளிர்!

-முனைவர் அழகு அண்ணாவி

by Swathi   on 16 Sep 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் மன்றத்தின் முதல் வரவேற்பறை  நேர்காணல் வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் மன்றத்தின் முதல் வரவேற்பறை நேர்காணல்
அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தமிழ் மரபுக்கலைகளைப்  பயிற்றுவித்து தமிழகம் திரும்பிய முனைவர் அழகு அண்ணாவிக்குப்  பாராட்டுவிழா அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தமிழ் மரபுக்கலைகளைப்  பயிற்றுவித்து தமிழகம் திரும்பிய முனைவர் அழகு அண்ணாவிக்குப்  பாராட்டுவிழா
அமெரிக்கத் தலைநகர் வாசிங்டன் டி.சி.யின் பெரும்பாலான சாலைகள் சைக்கிள் ஒட்டிகளுக்காக மூடல்! அமெரிக்கத் தலைநகர் வாசிங்டன் டி.சி.யின் பெரும்பாலான சாலைகள் சைக்கிள் ஒட்டிகளுக்காக மூடல்!
அமெரிக்காவில் , தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு  மு.க.ஸ்டாலின் அவர்களின்  முன்னிலையில் மிகச்சிறப்பாக நடைபெற்ற அயலகத் தமிழர் நாள் விழா! அமெரிக்காவில் , தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் முன்னிலையில் மிகச்சிறப்பாக நடைபெற்ற அயலகத் தமிழர் நாள் விழா!
தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்துடன், கலாமஞ்சரி ஒப்பந்தம் செய்துகொண்டது. தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்துடன், கலாமஞ்சரி ஒப்பந்தம் செய்துகொண்டது.
அமெரிக்காவில் முதன்முறையாகத் தமிழ் மரபுக்கலைகள், மரபு விளையாட்டுக்களுடன் கோடைக்கால முகாம் அமெரிக்காவில் முதன்முறையாகத் தமிழ் மரபுக்கலைகள், மரபு விளையாட்டுக்களுடன் கோடைக்கால முகாம்
வாசிங்டன் முருகன் கோவிலில் இலங்கை நல்லூர் முருகன் தேர்த்திருவிழா வாசிங்டன் முருகன் கோவிலில் இலங்கை நல்லூர் முருகன் தேர்த்திருவிழா
“தமிழ் அறிவு வளாகம்” அமைக்க அமெரிக்காவில்  நிதி திரட்டும் கருத்தரங்கங்கள் “தமிழ் அறிவு வளாகம்” அமைக்க அமெரிக்காவில் நிதி திரட்டும் கருத்தரங்கங்கள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.