LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- பெரிய புராணம்

முதற் காண்டம் - தில்லை வாழ் அந்தணர் சருக்கம்


2. 1 தில்லை வாழ் அந்தணர் புராணம்
திருச்சிற்றம்பலம்

350    ஆதியாய் நடுவுமாகி அளவு இலா அளவுமாகிச்
சோதியாய் உணர்வுமாகித் தோன்றிய பொருளுமாகிப்
பேதியா ஏகம் ஆகிப் பெண்ணுமாய் ஆணும் ஆகிப்
போதியா நிற்கும் தில்லைப் பொது நடம் போற்றி போற்றி     2.1.1
351    கற்பனை கடந்த சோதி கருணையே உருவம் ஆகி
அற்புதக் கோலம் நீடி அரு மறைச் சிறத்தின் மேலாம்
சிற்பர வியோமம் ஆகும் திருச் சிற்றம்பலத்துள் நின்று
பொற்புடன் நடம் செய்கின்ற பூங் கழல் போற்றி போற்றி     2.1.2
352    போற்றி நீள் தில்லை வாழ் அந்தணர் திறம் புகலல் உற்றேன்
நீற்றினால் நிறைந்த கோல நிருத்தனுக்கு உரிய தொண்டாம்
போற்றினார் பெருமைக்கு எல்லை ஆயினார் பேணி வாழும்
ஆற்றினார் பெருகும் அன்பால் அடித்தவம் புரிந்து வாழ்வார்     2.1.3
353    பொங்கிய திருவில் நீடும் பொற்புடைப் பணிகள் ஏந்தி
மங்கலத் தொழில்கள் செய்து மறைகளால் துதித்து மற்றும்
தங்களுக்கு ஏற்ற பண்பில் தரும் பணித் தலை நின்று உய்த்தே
அங்கணர் கோயில் உள்ளா அகம் படித் தொண்டு செய்வார்     2.1.4
354    வரு முறை எரி மூன்று ஓம்பி மன்னுயிர் அருளால் மல்க
தருமமே பொருளாக் கொண்டு தத்துவ நெறியில் செல்லும்
அருமறை நான்கினோடு ஆறு அங்கமும் பயின்று வல்லார்
திரு நடம் புரிவார்க்கு ஆளாம் திருவினால் சிறந்த சீரார்     2.1.5
355    மறுவிலா மரபின் வந்து மாறிலா ஒழுக்கம் பூண்டார்
அறு தொழில் ஆட்சியாலே அருங்கலி நீக்கி உள்ளார்
உறுவது நீற்றின் செல்வம் எனக் கொளும் உள்ளம் மிக்கார்
பெறுவது சிவன் பால் அன்பாம் பேறு எனப் பெருகி வாழ்வார்     2.1.6
356    ஞானமே முதலாம் நான்கும் நவை அறத் தெரிந்து மிக்கார்
தானமும் தவமும் வல்லார் தகுதியின் பகுதி சார்ந்தார்
ஊனமேல் ஒன்றும் இல்லார் உலகெலாம் புகழ்ந்து போற்றும்
மானமும் பொறையும் தாங்கி மனை அறம் புரிந்து வாழ்வார்     2.1.7
357    செம்மையால் தணிந்த சிந்தைத் தெய்வ வேதியர்கள் ஆனார்
மும்மை ஆயிரவர் தாங்கள் போற்றிட முதல்வனாரை
இம்மையே பெற்று வாழ்வார் இனிப் பெறும் பேறு ஒன்று இல்லார்
தம்மையே தமக்கு ஒப்பான நிலைமையால் தலைமை சார்ந்தார்     2.1.8
358    இன்றிவர் பெருமை எம்மால் இயம்பலாம் எல்லைத்தாமோ
தென் தமிழ்ப் பயனாய் உள்ள திருத் தொண்டத் தொகை முன் பாட
அன்று வன் தொண்டர் தம்மை அருளிய ஆரூர் அண்ணல்
முன் திரு வாக்கால் கோத்த முதல் பொருள் ஆனார் என்றால்     2.1.9
359    அகல் இடத்து உயர்ந்த தில்லை அந்தணர் அகிலம் எல்லாம்
புகழ் திரு மறையோர் என்றும் பொது நடம் போற்றி வாழ
நிகழ் திரு நீல கண்டக் குயவனார் நீடு வாய்மை
திகழும் அன்புடைய தொண்டர் செய் தவம் கூறல் உற்றாம்     2.1.10

திருச்சிற்றம்பலம்

2.2. திருநீலகண்ட நாயனார் புராணம்
திருச்சிற்றம்பலம்

360     வேதியர் தில்லை மூதூர் வேட் கோவர் குலத்து வந்தார்
மாதொரு பாகம் நோக்கி மன்னு சிற்றம்பலத்தே
ஆதியும் முடிவும் இல்லா அற்புதத் தனிக் கூத்து ஆடும்
நாதனார் கழல்கள் வாழ்தி வழிபடும் நலத்தின் மிக்கார்     2.2.1
361    பொய் கடிந்து அறத்தின் வாழ்வார் புனற் சடை முடியார்க்கு அன்பர்
மெய் அடியார் கட்கு ஆன செயும் விருப்பில் நின்றார்
வையகம் போற்றும் செய்கை மனை அறம் புரிந்து வாழ்வார்
சைவ மெய்த் திருவின் சார்வே பொருள் எனச் சாரு நீரார்     2.2.2
362    அளவிலா மரபின் வாழ்க்கை மண் கலம் அமுதுக்கு ஆக்கி
வளரிளம் திங்கள் கண்ணி மன்றுளார் அடியார்க்கு என்றும்
உள மகிழ் சிறப்பின் மல்க ஓடு அளித்து ஒழுகும் நாளில்
இளமை மீது ஊர இன்பத் துறையினில் எளியர் ஆனார்     2.2.3
363    அவர் தம் கண் மனைவியாரும் அருந்ததி கற்பின் மிக்கார்
புவனங்கள் உய்ய ஐயர் பொங்கு நஞ்சு உண்ண யாம் செய்
தவ நின்று அடுத்தது என்னத் தகைந்து தான் தரித்தது என்று
சிவன் எந்தை கண்டம் தன்னைத் திரு நீல கண்டம் என்பார்     2.2.4
364    ஆன தம் கேள்வர் அங்கோர் பரத்தை பால் அணைந்து நண்ண
மானமுன் பொறாது வந்த ஊடலால் மனையின் வாழ்க்கை
ஏனைய எல்லாஞ் செய்தே உடன் உறைவு இசையார் ஆனார்
தேனலர் கமலப் போதில் திருவினும் உருவம் மிக்கார்     2.2.5
365    மூண்ட அப் புலவி தீர்க்க அன்பனார் முன்பு சென்று
பூண்டயங்கு இளமென் சாயல் பொன் கொடி அனையார் தம்மை
வேண்டுவ இரந்து கூறி மெய்யுற அணையும் போதில்
தீண்டுவீர் ஆயின் எம்மைத் திரு நீல கண்டம் என்றார்     2.2.6
366    ஆதியார் நீல கண்டத்து அளவு தாம் கொண்ட ஆர்வம்
பேதியா ஆணை கேட்ட பெரியவர் பெயர்ந்து நீங்கி
ஏதிலார் போல நோக்கி எம்மை என்றதனால் மற்றை
மாதரார் தமையும் என் தன் மனத்தினும் தீண்டேன் என்றார்     2.2.7
367    கற்புறு மனைவியாரும் கணவனார்க்கு ஆன எல்லாம்
பொற்புற மெய் உறாமல் பொருந்துவ போற்றிச் செய்ய
இல் புறம்பு ஒழியாது அங் கண் இருவரும் வேறு வைகி
அன்புறு புணர்ச்சி இன்மை அயலறியாமை வாழ்ந்தார்     2.2.8
368    இளமையின் மிக்குளார்கள் இருவரும் அறிய நின்ற
அளவில் சீர் ஆணை போற்றி ஆண்டுகள் பலவும் செல்ல
வள மலி இளமை நீங்கி வடிவுறு மூப்பு வந்து
தளர்வொடு சாய்ந்தும் அன்பு தம்பிரான் திறத்துச் சாயார்     2.2.9
369    இந் நெறி ஒழுகும் நாளில் எரி தளர்ந்தது என்ன நீண்ட
மின்னொளிர் சடையோன் தானுந் தொண்டரை விளக்கங் காண
நன்னெறி இதுவாம் என்று ஞாலத்தார் விரும்பி உய்யும்
அந் நெறி காட்டும் ஆற்றல் அருள் சிவ யோகி ஆகி     2.2.10
370    கீள் ஒடு கோவணம் சாத்திக் கேடு இலா
வாள் விடு நீற்று ஒளி மலர்ந்த மேனி மெல்
தோளொடு மார்பிடைத் துவளும் நூலுடன்
நீளொளி வளர் திரு முண்ட நெற்றியும்     2.2.11
371    நெடுஞ் சடை கரந்திட நெறித்த பம்பையும்
விடுங் கதிர் முறுவல் வெண்ணிலவும் மேம்பட
இடும் பலிப் பாத்திரம் ஏந்து கையராய்
நடந்து வேட்கோவர் தம் மனையில் நண்ணினார்     2.2.12
372    நண்ணிய தவச் சிவ யோக நாதரைக்
கண்ணுற நோக்கிய காதல் அன்பர் தாம்
புண்ணியத் தொண்டராம் என்று போற்றி செய்து
எண்ணிய வகையினால் எதிர் கொண்டு ஏத்தினார்     2.2.13
373    பிறை வளர் சடை முடிப் பிரானைத் தொண்டர் என்று
உறை உளில் அணைந்து பேர் உவகை கூர்ந்திட
முறைமையின் வழி பட மொழிந்த பூசைகள்
நிறை பெரு விருப்பொடு செய்து நின்ற பின்     2.2.14
374    எம்பிரான் யான் செயும் பணி எது என்றனர்
வம்புலா மலர்ச் சடை வள்ளல் தொண்டனார்
உம்பர் நாயகனும் இவ்வோடு நின்பால் வைத்து
நம்பி நீ தருக நாம் வேண்டும் போது என்று     2.2.15
375    தன்னை ஒப்பு அரியது தலத்துத் தன் உழைத்
துன்னிய யாவையும் தூய்மை செய்வது
பொன்னினும் மணியினும் போற்ற வேண்டுவது
இன்ன தன்மையது இது வாங்கு நீ என     2.2.16
376    தொல்லை வேட்கோவர் தம் குலத்துள் தோன்றிய
மல்கு சீர்த் தொண்டனார் வணங்கி வாங்கிக் கொண்டு
ஒல்லையின் மனையில் ஓர் மருங்கு காப்புறும்
எல்லையில் வைத்து வந்து இறையை எய்தினார்     2.2.17
377    வைத்த பின் மறையவர் ஆகி வந்து அருள்
நித்தனார் நீங்கிட நின்ற தொண்டரும்
உய்த்து உடன் போய் விடை கொண்டு மீண்டனர்
அத்தர் தாம் அம்பலம் அணைய மேவினார்     2.2.18
378    சால நாள் கழிந்த பின்பு தலைவனார் தாம் முன் வைத்த
கோலமார் ஓடு தன்னைக் குறி இடத்து அகலப் போக்கிச்
சீலமார் கொள்கை என்றும் திருந்து வேட்கோவர் தம்பால்
வாலி தாம் நிலைமை காட்ட முன்பு போல் மனையில் வந்தார்     2.2.19
379    வந்த பின் தொண்டனாரும் எதிர் வழி பாடு செய்து
சிந்தை செய்து அருளில் எங்கள் செய்தவம் என்று நிற்ப
முந்தை நாள் உன்பால் வைத்த மெய்யொளி விளங்கும் ஓடு
தந்து நில் என்றான் எல்லாம் தான் வைத்து வாங்க வல்லான்     2.2.20
380    என்றவர் விரைந்து கூற இருந்தவர் ஈந்த ஓடு
சென்று முன் கொணர்வான் புக்கார் கண்டிலர் திகைத்து நோக்கி
நின்றவர் தம்மைக் கேட்டார் தேடியும் காணார் மாயை
ஒன்றும் அங்கு அறிந்திலார் தாம் உரைப்பது ஒன்று இன்றி நின்றார்     2.2.21
381    மறையவன் ஆகி நின்ற மலைமகள் கேள்வன் தானும்
உறை உளில் புக்கு நின்ற ஒரு பெருந் தொண்டர் கேட்ட
இறையில் இங்கு எய்தப் புக்காய் தாழ்த்தது என் என்ன வந்து
கறை மறை மிடற்றினானைக் கை தொழுது உரைக்கல் உற்றார்     2.2.22
380    இழையணி முந்நூல் மார்பின் எந்தை நீர் தந்து போன
விழை தகும் ஓடு வைத்த வேறு இடம் தேடிக் காணேன்
பழைய மற்று அதனில் நல்ல பாத்திரம் தருவன் கொண்டு இப்
பிழையினைப் பொறுக்க வேண்டும் பெரும என்று இறைஞ்சி நின்றார்     2.2.23
383    சென்னியால் வணங்கி நின்ற தொண்டரைச் செயிர்த்து நோக்கி
என்னிது மொழிந்தவா நீ யான் வைத்த மண் ஓடு அன்றிப்
பொன்னினால் அமைத்துத் தந்தாய் ஆயினுங் கொள்ளேன் போற்ற
முன்னை நான் வைத்த ஓடே கொண்டு வா என்றான் முன்னோன்     2.2.24
384    கேடு இலாப் பெரியோய் என்பால் வைத்தது கெடுதலாலே
நாடியும் காணேன் வேறு நல்லது ஓர் ஓடு சால
நீடு செல்வது தான் ஒன்று தருகிறேன் எனவும் கொள்ளாது
ஊடி நின்று உரைத்தது என் தன் உணர்வு எலாம் ஒழித்தது என்ன     2.2.25
385    ஆவதென் உன்பால் வைத்த அடைக்கலப் பொருளை வௌவிப்
பாவகம் பலவும் செய்து பழிக்கு நீ ஒன்றும் நாணாய்
யாவரும் காண உன்னை வளைத்து நான் கொண்டே அன்றிப்
போவதும் செய்யேன் என்றான் புண்ணியப் பொருளாய் நின்றான்     2.2.26
386    வளத்தினால் மிக்க ஓடு வௌவினேன் அல்லேன் ஒல்லை
உளத்தினும் களவிலாமைக்கு என் செய்கேன் உரையும் என்ன
களத்து நஞ்சு ஒளித்து நின்றான் காதல் உன் மகனைப் பற்றிக்
குளத்தினில் மூழ்கிப் போ என்று அருளினான் கொடுமை இல்லான்     2.2.27
387    ஐயர் நீர் அருளிச் செய்த வண்ணம் யான் செய்வதற்குப்
பொய்யில் சீர்ப் புதல்வன் இல்லை என் செய்கேன் புகலும் என்ன
மையறு சிறப்பின் மிக்க மனையவள் தன்னைப் பற்றி
மொய் அலர் வாவி புக்கு மூழ்குவாய் என மொழிந்தார்     2.2.28
388    கங்கை நதி கரந்த சடை கரந்து அருளி எதிர் நின்ற
வெங் கண் விடையவர் அருள வேட்கோவர் உரைசெய்வார்
எங்களில் ஓர் சபதத்தால் உடன் மூழ்க இசைவு இல்லை
பொங்கு புனல் யான்மூழ்கித் தருகின்றேன் போதும் என     2.2.29
389    தந்தது முன் தாராதே கொள்ளாமைக்கு உன் மனைவி
அந் தளிர்ச் செங் கைப்பற்றி அலை புனலில் மூழ்காதே
சிந்தை வலித்து இருக்கின்றாய் தில்லை வாழ் அந்தணர்கள்
வந்து இருந்த பேர் அவையில் மன்னுவன் யான் எனச் சென்றார்     2.2.30
390    நல் ஒழுக்கம் தலை நின்றார் நான் மறையின் துறை போனார்
தில்லை வாழ் அந்தணர்கள் வந்து இருந்த திருந்தவையில்
எல்லை இலான் முன் செல்ல இருந்தொண்டர் அவர் தாமும்
மல்கு பெரும் காதலினால் வழக்கு மேலிட்டு அணைந்தார்     2.2.31
391    அந்தணன் ஆம் எந்தை பிரான் அரு மறையோர் முன் பகர்வான்
இந்த வேட்கோவன்பால் யான் வைத்த பாத்திரத்தைத்
தந்து ஒழியான் கெடுத்தானேல் தன் மனைவி கைப்பற்றி
வந்து மூழ்கியும் தாரான் வலி செய்கின்றான் என்றார்     2.2.32
392    நறை கமழும் சடை முடியும் நாற்றோளும் முக் கண்ணும்
கறை மருவும் திரு மிடரும் கரந்து அருளி எழுந்து அருளும்
மறையவன் இத்திறம் மொழிய மா மறையோர் உரை செய்வார்
நிறையுடைய வேட்கோவர் நீர் மொழியும் புகுந்தது என     2.2.33
393    நீணிதியாம் இது என்று நின்ற இவர் தரும் ஓடு
பேணி நான் வைத்த இடம் பெயர்ந்து கரந்தது காணேன்
பூண் அணி நூல் மணி மார்பீர் புகுந்த பரிசு இது என்று
சேணிடையும் தீங்கு அடையாத் திருத்தொண்டர் உரைசெய்தார்     2.2.34
394    திருவுடை அந்தணாளர் செப்புவார் திகழ்ந்த நீற்றின்
உருவுடை இவர் தாம் வைத்த ஓட்டினைக் கொடுத்தீர் ஆனால்
தருமிவர் குளத்தில் மூழ்கித் தருக என்று உரைத்தார் ஆகில்
மருவிய மனைவியொடு மூழ்குதல் வழக்கே என்றார்     2.2.35
395    அருந் தவத் தொண்டர் தாமும் அந்தணர் மொழியக் கேட்டுத்
திருந்திய மனைவியாரைத் தீண்டாமை செப்ப மாட்டார்
பொருந்திய வகையால் மூழ்கித் தருகின்றேன் போதும் என்று
பெருந் தவ முனிவரோடும் பெயர்ந்து தம் மனையைச் சார்ந்தார்     2.2.36
396    மனைவியார் தம்மைக் கொண்டு மறைச் சிவ யோகியார் முன்
சினவிடைப் பாகர் மேவும் திருப்புலீச் சுரத்து முன்னர்
நனை மலர்ச் சோலை வாவி நண்ணித் தம் உண்மை காப்பார்
புனை மணி வேணுத் தண்டின் இரு தலை பிடித்துப் புக்கார்     2.2.37
397    தண்டிரு தலையும் பற்றிப் புகும் அவர் தம்மை நோக்கி
வெண் திரு நீற்று முண்ட வேதியர் மாதைத் தீண்டிக்
கொண்டு உடன் மூழ்கீர் என்னக் கூடாமை பாரோர் கேட்கப்
பண்டு தம் செய்கை சொல்லி மூழ்கினார் பழுது இலாதார்     2.2.38
398    வாவியின் மூழ்கி ஏறும் கணவரும் மனைவி யாரும்
மேவிய மூப்பு நீங்கி விருப்புறும் இளமை பெற்றுத்
தேவரும் முனிவர் தாமும் சிறப்பொடு பொழியுந் தெய்வப்
பூவின் மா மழையின் மீள மூழ்குவார் போன்று தோன்ற     2.2.39
399    அந்நிலை அவரைக் காணும் அதிசயம் கண்டார் எல்லாம்
முன்நிலை நின்ற வேத முதல் வரைக் கண்டார் இல்லை
இந்நிலை இருந்த வண்ணம் என் என மருண்டு நின்றார்
துன்னிய விசும்பின் ஊடு துணையுடன் விடை மேல் கொண்டார்     2.2.40
400    கண்டனர் கைகளாரத் தொழுதனர் கலந்த காதல்
அண்டரும் ஏத்தினார்கள் அன்பர்தம் பெருமை நோக்கி
விண்டரும் பொலிவு காட்டி விடையின் மேல் வருவார் தம்மைத்
தொண்டரும் மனைவியாரும் தொழுது உடன் போற்றி நின்றார்     2.2.41
401    மன்றுளே திருக் கூத்து ஆடி அடியவர் மனைகள் தோறும்
சென்றவர் நிலைமை காட்டும் தேவர்கள் தேவர் தாமும்
வென்ற ஐம் புலனால் மிக்கீர் விருப்புடன் இருக்க நம்பால்
என்றும் இவ் இளமை நீங்காது என்று எழுந்து அருளினாரே     2.2.42
402    விறலுடைத் தொண்டனாரும் வெண்ணகைச் செவ்வாய் மென் தோள்
அறல் இயல் கூந்தல் ஆளாம் மனைவியும் அருளின் ஆர்ந்த
திறலுடைச் செய்கை செய்து சிவலோகம் அதனை எய்திப்
பெறல் அரும் இளமை பெற்றுப் பேர் இன்பம் உற்றார் அன்றே     2.2.43
403    அயல் அறியாத வண்ணம் அண்ணலார் ஆணை உய்த்த
மயலில் சீர்த் தொண்டனாரை யான் அறிவகையால் வாழ்த்திப்
புயல் வளர் மாடம் நீடும் பூம்புகார் வணிகர் பொய்யில்
செயல் இயற் பகையார் செய்த திருத் தொண்டு செப்பல் உற்றேன்.     2.2.44

திருச்சிற்றம்பலம்

2.3 இயற்பகை நாயனார் புராணம்
திருச்சிற்றம்பலம்

404     சென்னி வெண்குடை நீடு அநபாயன் திருக் குலம் புகழ் பெருக்கிய சிறப்பின்
மன்னு தொல் புகழ் மருத நீர் நாட்டு வயல் வளம் தர இயல்பினில் அளித்துப்
பொன்னி நல் நதி மிக்க நீர் பாய்ந்து புணரி தன்னையும் புனித மாக்குவதோர்
நன்னெடும் பெரும் தீர்த்த முன்னுடைய நலம் சிறந்தது வளம் புகார் நகரம்     2.3.1
405    அக் குலப் பதிக் குடி முதல் வணிகர் அளவில் செல்வத்து வளமையின் அமைந்தார்
செக்கர் வெண் பிறைச் சடையவர் அடிமைத் திறத்தின் மிக்கவர் மறைச் சிலம்படியார்
மிக்க சீர் அடியார்கள் யார் எனினும் வேண்டும் யாவையும் இல்லை என்னாதே
இக் கடல் படி நிகழ முன் கொடுக்கும் இயல்பின் நின்றவர் உலகு இயற் பகையார்     2.3.2
406    ஆறு சூடிய ஐயர் மெய் அடிமை அளவிலாத ஓர் உளம் நிறை அருளால்
நீறு சேர் திரு மேனியார் மனத்து நினைத்த யாவையும் வினைப்பட முடித்து
மாறு இலாத நன்னெறியினில் விளங்கும் மனை அறம் புரி மகிழ்ச்சியின் வந்த
பேறெலாம் அவர் ஏவின செய்யும் பெருமையே எனப் பேணி வாழ் நாளில்     2.3.3
407    ஆயும் நுண் பொருள் ஆகியும் வெளியே அம்பலத்துள் நின்று ஆடுவார் உம்பர்
நாயகிக்கும் அஃது அறியவோ பிரியா நங்கைதான் அறியாமையோ அறியோம்
தூய நீறு பொன் மேனியில் விளங்கத் தூர்த்த வேடமும் தோன்ற வேதியராய்
மாய வண்ணமே கொண்டு தம் தொண்டர் மாறாத வண்ணமும் காட்டுவான் வந்தார்    2.3.4
408    வந்து தண்புகார் வணிகர் தம் மறுகின் மருங்கு இயற் பகையார் மனை புகுந்த
எந்தை எம்பிரான் அடியவர் அணைந்தார் என்று நின்றதோர் இன்ப ஆதரவால்
சிந்தை அன்பொடு சென்று எதிர் வணங்கிச் சிறப்பின் மிக்க அர்ச்சனைகள் முன் செய்து
முந்தை எம் பெரும் தவத்தினாலென்கோ முனிவர் இங்கு எழுந்து அருளியது என்றார்     2.3.5
409    என்று கூறிய இயற்பகையார் முன் எய்தி நின்ற அக் கைதவ மறையோர்
கொன்ற வார்சடையார் அடியார்கள் குறித்து வேண்டின குணம் எனக் கொண்டே
ஒன்றும் நீர் எதிர் மறாது உவந்து அளிக்கும் உண்மை கேட்டு நும் பாலொன்று வேண்டி
இன்று நான் இங்கு வந்தனன் அதனுக்கு இசையலாம் எனில் இயம்பலாம் என்றார்     2.3.6
410    என்ன அவ்வுரை கேட்டு இயற்பகையார் யாதும் ஒன்றும் என் பக்கல் உண்டாகில்
அன்னது எம்பிரான் அடியவர் உடைமை ஐயம் இல்லை நீர் அருள் செயும் என்ன
மன்னு காதல் உன் மனைவியை வேண்டி வந்தது இங்கு என அங்கணர் எதிரே
சொன்ன போதிலும் முன்னையின் மகிழ்ந்து தூய தொண்டனார் தொழுது உரை செய்வார்     2.3.7
411    இது எனக்கு முன்பு உள்ளதே வேண்டி எம் பிரான் செய்த பேறு எனக்கு என்னாக்
கதுமெனச் சென்று தம் மனைவாழ் வாழ்க்கை கற்பின் மேம்படு காதலி யாரை
விதி மணக் குல மடந்தை இன்றுனை இம் மெய்த் தவர்க்கு நான் கொடுத்தனன் என்ன
மது மலர்க் குழலாள் மனைவியார் கலங்கி மனம் தெளிந்த பின் மற்று இது மொழிவார்     2.3.8
412    இன்று நீர் எனக்கு அருள் செய்தது இதுவேல் என உயிர்க்கு ஒரு நாத நீர் உரைத்தது
ஒன்றை நான் செயும் அத்தனை அல்லால் உரிமை வேறு உளதோ எனக்கு என்று
தன் தனிப்பெருங் கணவரை வணங்கத் தாழ்ந்து தொண்டனார் தாம் எதிர் வணங்க
சென்று மாதவன் சேவடி பணிந்து திகைத்து நின்றனள் திருவினும் பெரியாள்     2.3.9
413    மாது தன்னை முன் கொடுத்த மாதவர் தாம் மனம் மகிழ்ந்து பேர் உவகையின் மலர்ந்தே
யாது நான் இனிச் செய் பணி என்றே இறைஞ்சி நின்றவர் தம் எதிர் நோக்கி
சாதி வேதியர் ஆகிய தலைவர் தையல் தன்னை யான் தனிக் கொடு போகக்
காதல் மேவிய சுற்றமும் பதியும் கடக்க நீ துணை போதுக என்றார்     2.3.10
414    என்று அவர் அருளிச் செய்ய யானே முன் செய் குற்றேவல்
ஒன்றியது தன்னை என்னை உடையவர் அருளிச் செய்ய
நின்றது பிழையாம் என்று நினைந்து வேறு இடத்துப் புக்குப்
பொன் திகழ் அறுவை சாத்தி பூங்கச்சுப் பொலிய வீக்கி     2.3.11
415    வாளொடு பலகை ஏந்தி வந்து எதிர் வணங்கி மிக்க
ஆளரி ஏறு போல்வார் அவரை முன் போக்கிப் பின்னே
தோளிணை துணையே ஆகப் போயினார் துன்னினாரை
நீளிடைப் பட முன் கூடி நிலத்திடை வீழ்த்த நேர்வார்     2.3.12
416    மனைவியார் சுற்றத்தாரும் வள்ளலார் சுற்றத்தாரும்
இனையது ஒன்றி யாரே செய்தார் இயற்பகை பித்தன் ஆனால்
புனை இழை தன்னைக் கொண்டு போவதாம் ஒருவன் என்று
துனை பெரும் பழியை மீட்பான் தொடர்வதற்கு எழுந்து சூழ்வார்     2.3.13
417    வேலொடு வில்லும் வாளும் சுரிகையும் எடுத்து மிக்க
காலென விசையில் சென்று கடிநகர் புறத்துப் போகிப்
பாலிரு மருங்கும் ஈண்டிப் பரந்த ஆர்வம் பொங்க
மால் கடல் கிளர்ந்தது என்ன வந்து எதிர் வளைத்துக் கொண்டார்     2.3.14
418    வழி விடும் துணை பின் போத வழித்துணை ஆகி உள்ளார்
கழி பெரும் காதல் காட்டிக் காரிகை உடன் போம் போதில்
அழிதகன் போகேல் ஈண்டவ் வருங் குலக் கொடியை விட்டுப்
பழிவிட நீ போ என்று பகர்ந்து எதிர் நிரந்து வந்தார்     2.3.15
419    . மறை முனி அஞ்சினான் போல் மாதினைப் பார்க்க மாதும்
இறைவனே அஞ்ச வேண்டாம் இயற்பகை வெல்லும் என்ன
அறை கழல் அண்ணல் கேளா அடியனேன் அவரை எல்லாம்
தறை இடைப் படுத்துகின்றேன் தளர்ந்து அருள் செய்யேல் என்று     2.3.16
420    பெரு விறல் ஆளி என்னப் பிறங்கு எரி சிதற நோக்கிப்
பரிபவப் பட்டு வந்த படர் பெருஞ் சுற்றத் தாரை
ஒருவரும் எதிர் நில்லாமே ஓடிப் போய்ப் பிழையும் அன்றேல்
எரி சுடர் வாளில் கூறாய்த் துடிக்கின்றீர் என்று நேர்ந்தார்     2.3.17
421    ஏட! நீ என் செய்தாயால்? இத்திறம் இயம்பு கின்றாய்
நாடுறு பழியும் ஒன்னார் நகையையும் நாணாய் இன்று
பாடவம் உரைப்பது உன்றன் மனைவியைப் பனவற்கு ஈந்தோ
கூடவே மடிவது அன்றிக் கொடுக்க யாம் ஓட்டோ ம் என்றார்     2.3.18
422    மற்றவர் சொன்ன மாற்றம் கேட்டலும் மனத்தின் வந்த
செற்ற முன் பொங்க உங்கள் உடல் துணி எங்கும் சிந்தி
முற்று நும் உயிரை எல்லாம் முதல் விசும்பு ஏற்றிக் கொண்டு
நற்றவர் தம்மைப் போக விடுவேன் என்று எழுந்தார் நல்லோர்     2.3.19
423    நேர்ந்தவர் எதிர்ந்த போது நிறைந்த அச் சுற்றத்தாரும்
சார்ந்தவர் தம் முன் செல்லார் தையலைக் கொண்டு பெற்றம்
ஊர்ந்தவர் படிமேற் செல்ல உற்று எதிர் உடன்று பொங்கி
ஆர்ந்த வெஞ் சினத்தால் மேல் சென்று அடர்ந்து எதிர் தடுத்தார் (அன்றே.     2.3.20
424    சென்று அவர் தடுத்த போதில் இயற்பகையார் முன் சீறி
வன்றுணை வாளே யாகச் சாரிகை மாறி வந்து
துன்றினர் தோளும் தாளும் தலைகளும் துணித்து வீழ்த்து
வென்றடு புலியேறு அன்ன அமர் விளையாட்டில் மிக்கார்     2.3.21
425    மூண்டு முன் பலராய் வந்தார் தனி வந்து முட்டினார்கள்
வேண்டிய திசைகள் தோறும் வேறு வேறு அமர் செய் போழ்தில்
ஆண்டகை வீரர் தாமே அனைவர்க்கும் அனைவர் ஆகிக்
காண்டகு விசையில் பாய்ந்து கலந்து முன் துணித்து வீழ்த்தார்     2.3.22
426    சொரிந்தன குடல்கள் எங்கும் துணிந்தன உடல்கள் எங்கும்
விரிந்தன தலைகள் எங்கும் மிடைந்தன கழுகும் எங்கும்
எரிந்தன விழிகள் எங்கும் எதிர்ப்பவர் ஒருவர் இன்றித்
திரிந்தனர் களனில் எங்கும் சிவன் கழல் புனைந்த வீரர்     2.3.23
427    மாடலை குருதி பொங்க மடிந்த செங் களத்தின் நின்றும்
ஆடுறு செயலின் வந்த கிளைஞரோடு அணைந்தார் தம்மில்
ஓடினார் உள்ளார் உய்ந்தார் ஒழிந்தவர் ஒழிந்தே மாண்டார்
நீடிய வாளும் தாமும் நின்றவர் தாமே நின்றார்     2.3.24
428    திருவுடை மனைவியாரைக் கொடுத்து இடைச் செறுத்து முன்பு
வரு பெரும் சுற்றம் எல்லாம் வாளினால் துணித்து மாட்டி
அருமறை முனியை நோக்கி அடிகள் நீர் அஞ்சா வண்ணம்
பொருவருங் கானம் நீங்க விடுவன் என்று உடனே போந்தார்     2.3.25
429    இருவரால் அறிய ஒண்ணா ஒருவர் பின் செல்லும் ஏழை
பொரு திறல் வீரர் பின்பு போக முன் போகும் போதில்
அருமறை முனிவன் சாய்க்காடு அதன் மருங்கு அணைய மேவித்
திரு மலி தோளினானை மீள் எனச் செப்பினானே     2.3.26
430    தவ முனி தன்னை மீளச் சொன்ன பின் தலையால் ஆர
அவன் மலர்ப் பதங்கள் சூடி அஞ்சலி கூப்பி நின்று
புவனம் மூன்று உய்ய வந்த பூசுரன் தன்னை ஏத்தி
இவன் அருள் பெறப் பெற்றேன் என்று இயற்பகையாரும் மீண்டார்     2.3.27
431    செய்வதற்கு அரிய செய்கை செய்த நல் தொண்டர் போக
மை திகழ் கண்டன் எண்தோள் மறையவன் மகிழ்ந்து நோக்கிப்
பொய் தரும் உள்ளம் இல்லான் பார்க்கிலன் போனான் என்று
மெய் தரு சிந்தையாரை மீளவும் அழைக்கல் உற்றான்     2.3.28
432    இயற்பகை முனிவா ஓலம் ஈண்டு நீ வருவாய் ஓலம்
அயர்ப்பு இலாதானே ஓலம் அன்பனே ஓலம் ஓலம்
செயற்கருஞ் செய்கை செய்த தீரனே ஓலம் என்றான்
மயக்கறு மறை ஓலிட்டு மால் அயன் தேட நின்றான்     2.3.29
433    அழைத்த பேர் ஓசை கேளா அடியனேன் வந்தேன் வந்தேன்
பிழைத்தவர் உளரேல் இன்னும் பெருவலி தடக்கை வாளின்
இழைத்தவர் ஆகின்றார் என்று இயற்பகையார் வந்து எய்தக்
குழைப் பொலி காதினானும் மறைந்தனன் கோலம் கொள்வான்     2.3.30
434    சென்றவர் முனியைக் காணார் சேயிழை தன்னைக் கண்டார்
பொன்திகழ் குன்று வெள்ளிப் பொருப்பின் மேல் பொலிந்தது என்ன
தன்துணை உடனே வானில் தலைவனை விடை மேல் கண்டார்
நின்றிலர் தொழுது வீழ்ந்தார் நிலத்தினின்று எழுந்தார் நேர்ந்தார்     2.3.31
435    சொல்லுவது அறியேன் வாழி தோற்றிய தோற்றம் போற்றி
வல்லை வந்து அருளி என்னை வழித்தொண்டு கொண்டாய் போற்றி
எல்லையில் இன்ப வெள்ளம் எனக்கு அருள் செய்தாய் போற்றி
தில்லை அம்பலத்துள் ஆடும் சேவடி போற்றி என்ன     2.3.32
436    விண்ணிடை நின்ற வெள்ளை விடையவர் அடியார் தம்மை
எண்ணிய உலகு தன்னில் இப்படி நம்பால் அன்பு
பண்ணிய பரிவு கண்டு மகிழ்ந்தனம் பழுது இலாதாய்
நண்ணிய மனைவி யோடு நம்முடன் போதுக என்று     2.3.33
437    திருவளர் சிறப்பின் மிக்க திருத் தொண்டர் தமக்குந் தேற்றம்
மருவிய தெய்வக் கற்பின் மனைவியார் தமக்குந் தக்க
பெருகிய அருளின் நீடு பேறு அளித்து இமையோர் ஏத்தப்
பொரு விடைப் பாகர் மன்னும் பொற் பொது அதனுள் புக்கார்     2.3.34
438    வானவர் பூவின் மாரி பொழிய மா மறைகள் ஆர்ப்ப
ஞான மா முனிவர் போற்ற நல மிகு சிவலோகத்தில்
ஊனமில் தொண்டர் கும்பிட்டு உடன் உறை பெருமை பெற்றார்
ஏனைய சுற்றத்தாரும் வானிடை இன்பம் பெற்றார்     2.3.35
439    இன்புறு தாரம் தன்னை ஈசனுக்கு அன்பர் என்றே
துன்புறாது உதவும் தொண்டர் பெருமையைத் தொழுது வாழ்த்தி
அன்புறு மனத்தால் நாதன் அடியவர்க்கு அன்பு நீடு
மன்புகழ் இளைசை மாறன் வளத்தினை வழுத்தல் உற்றேன்     2.3.36

திருச்சிற்றம்பலம்

2.4 இளையான் குடி மாற நாயனார் புராணம்
திருச்சிற்றம்பலம்

440     அம் பொன் நீடிய அம்பலத்தினில் ஆடுவார் அடி சூடுவார்
தம்பிரான் அடிமைத் திறத்து உயர் சால்பின் மேன்மை தரித்துளார்
நம்பு வாய்மையில் நீடு சூத்திர நற் குலம் செய் தவத்தினால்
இம்பர் ஞாலம் விளக்கினார் இளையான் குடிப் பதி மாறனார்     2.4.1
441    ஏரின் மல்கு வளத்தினால் வரும் எல்லை இல்லதொர் செல்வமும்
நீரின் மல்கிய வேணியார் அடியார் திறத்து நிறைந்ததோர்
சீரின் மல்கிய அன்பின் மேன்மை திருந்த மன்னிய சிந்தையும்
பாரின் மல்க விரும்பி மற்றவை பெற்ற நீடு பயன் கொள்வார்     2.4.2
442    ஆரம் என்பு புனைந்த ஐயர் தம் அன்பர் என்பதோர் தன்மையால்
நேர வந்தவர் யாவர் ஆயினும் நித்தம் ஆகிய பத்தி முன்
கூர வந்து எதிர் கொண்டு கைகள் குவித்து நின்று செவிப் புலத்து
ஈரம் மென் மதுரப் பதம் பரிவு எய்த முன்னுரை செய்தபின்     2.4.3
443    கொண்டு வந்து மனைப் புகுந்து குலாவு பாதம் விளக்கியே
மண்டு காதலின் ஆதனத்து இடைவைத்து அருச்சனை செய்த பின்
உண்டி நாலு விதத்தில் ஆறு சுவைத் திறத்தினில் ஒப்பு இலா
அண்டர் நாயகர் தொண்டர் இச்சையில் அமுது செய்ய அளித்துளார்     2.4.4
444    ஆளும் நாயகர் அன்பர் ஆனவர் அளவு இலார் உளம் மகிழவே
நாளும் நாளும் நிறைந்து வந்து நுகர்ந்த தன்மையின் நன்மையால்
நீளும் மா நிதியின் பரப்பு நெருங்கு செல்வம் நிலாவி எண்
தோளினார் அளகைக்கு இருத்திய தோழனார் என வாழும் நாள்     2.4.5
445    செல்வம் மேவிய நாளில் இச்செயல் செய்வது அன்றியும் மெய்யினால்
அல்லல் நல்குரவு ஆன போதினும் வல்லர் என்று அறிவிக்கவே
மல்லல் நீடிய செல்வம் மெல்ல மறைந்து நாள் தொறும் மாறி வந்து
ஒல்லையில் வறுமைப் பதம் புக உன்னினார் தில்லை மன்னினார்     2.4.6
446    இன்னவாறு வளம் சுருங்கவும் எம்பிரான் இளையான் குடி
மன்னன் மாறன் மனம் சுருங்குதல் இன்றி உள்ளன மாறியும்
தன்னை மாறி இறுக்க உள்ள கடன்கள் தக்கன கொண்டு பின்
முன்னை மாறில் திருப்பணிக் கண் முதிர்ந்த கொள்கையர் ஆயினார்     2.4.7
447    மற்று அவர் செயல் இன்ன தன்மையது ஆக மால் அயனான அக்
கொற்ற ஏனமும் அன்னமும் தெரியாத கொள்கையர் ஆயினர்
பெற்றம் ஊர்வதும் இன்றி நீடிய பேதையாளுடன் இன்றி ஓர்
நற்றவத்தவர் வேடமே கொடு ஞாலம் உய்ந்திட நண்ணினார்     2.4.8
448    மாரிக் காலத்து இரவினில் வைகியோர்
தாரிப்பு இன்றிப் பசி தலைக் கொள்வது
பாரித்து இல்லம் அடைந்த பின் பண்புற
வேரித்து ஆரான் விருந்து எதிர் கொண்டனன்     2.4.9
449    ஈர மேனியை நீக்கி இடங் கொடுத்து
ஆர இன்னமுது ஊட்டுதற்கு ஆசையால்
தார மாதரை நோக்கித் தபோதனர்
தீரவே பசித்தார் செய்வது என் என்று     2.4.10
450    . நமக்கு முன்பு இங்கு உணவிலை ஆயினும்
இமக் குலக்கொடி பாகர்க்கு இனியவர்
தமக்கு நாம் இன் அடிசில் தகவுற
அமைக்கு மாறு எங்ஙனே அணங்கே என     2.4.11
451    . மாது கூறுவாள் மற்று ஒன்றுங் காண்கிலேன்
ஏதிலாரும் இனித் தருவார் இல்லை
போதும் வைகிற்றுப் போம் இடம் வேறில்லை
தீது செய்வினை யேற்கு என் செயல்     2.4.12
452    .செல்லல் நீங்கப் பகல் வித்திய செந்நெல்
மல்லல் நீர் முளை வாரிக் கொடு வந்தால்
வல்லவாறு அமுது ஆக்கலும் ஆகும் மற்று
அல்லது ஒன்று அறியேன் என்று அயர்வுற     2.4.13
453    . மற்ற மாற்றம் மனைவியார் கூற முன்
பெற்ற செல்வம் எனப் பெரிது உள் மகிழ்ந்து
உற்ற காதலினால் ஒருப் பட்டனர்
சுற்று நீர் வயல் செல்லத் தொடங்குவார்     2.4.14
454    .பெருகு வானம் பிறங்க மழை பொழிந்து
அருகு நாப்பண் அறிவருங் கங்குல் தான்
கருகு மை இருளின் கணம் கட்டு விட்டு
உருகு கின்றது போன்றது உலகு எலாம்     2.4.15
455    .எண்ணும் இவ் உலகத்தவர் யாவரும்
துண்ணெனும்படி தோன்ற முன் தோன்றிடில்
வண்ண நீடிய மைக்குழம்பாம் என்று
நண்ணல் செய்யா நடுவிருள் யாமத்து     2.4.16
456    .உள்ளம் அன்பு கொண்டு ஊக்கவோர் பேரிடாக்
கொள்ள முன் கவித்துக் குறியின் வழிப்
புள்ளும் உறங்கும் வயல் புகப் போயினார்
வள்ளலார் இளையான் குடி மாறனார்     2.4.17
457    .காலினால் தடவிச் சென்று கைகளால்
சாலி வெண் முளை நீர் வழிச் சார்ந்தன
கோலி வாரி இடா நிறையக் கொண்டு
மேல் எடுத்துச் சுமந்து ஒல்லை மீண்டார்     2.4.18
458    .வந்த பின் மனைவியாரும் வாய்தலின் நின்று வாங்கிச்
சிந்தையில் விரும்பி நீரில் சேற்றினை அலம்பி ஊற்றி
வெம் தழல் அடுப்பின் மூட்ட விறகு இல்லை என்ன மேலோர்
அந்தமில் மனையில் நீடும் அலகினை அறுத்து வீழ்த்தார்     2.4.19
459    . முறித்து அவை அடுப்பின் மாட்டி முளை வித்துப் பதம் முன் கொள்ள
வறுத்த பின் அரிசியாக்கி வாக்கிய உலையில் பெய்து
வெறுப்பில் இன் அடிசில் ஆக்கிமேம் படு கற்பின் மிக்கார்
கறிக்கு இனி என் செய்கோம் என்று இறைஞ்சினார் கணவனாரை     2.4.20
460    .வழி வரும் இளைப்பின் ஓடும் வருத்திய பசியினாலே
அழிவுறும் ஐயன் என்னும் அன்பினில் பொலிந்து சென்று
குழி நிரம்பாத புன்செய்க் குறும்பயிர் தடவிப் பாசப்
பழி முதல் பறிப்பார் போலப் பறித்து அவை கறிக்கு நல்க     2.4.21
461    மனைவியார் கொழுநர் தந்த மனம் மகிழ் கறிகள் ஆய்ந்து
புனல் இடைக் கழுவித் தக்க புனித பாத்திரத்துக் கைம்மை
வினையினால் வேறு வேறு கறி அமுது ஆக்கிப் பண்டை
நினைவினால் குறையை நேர்ந்து திருவமுது அமைத்து நின்று     2.4.22
462    கணவனார் தம்மை நோக்கிக் கறி அமுது ஆன காட்டி
இணை இலாதாரை ஈண்ட அமுது செய்விப்போம் என்ன
உணவினால் உணர ஒண்ணா ஒருவரை உணர்த்த வேண்டி
அணைய முன் சென்று நின்று அங்கு அவர் துயில் அகற்றல் உற்றார்     2.4.23
463    அழுந்திய இடருள் நீங்கி அடியனேன் உய்ய என்பால்
எழுந்தருள் பெரியோய் ஈண்டு அமுது செய்து அருள்க என்று
தொழும்பனார் உரைத்த போதில் சோதியாய் எழுந்துத் தோன்றச்
செழுந் திரு மனைவியாரும் தொண்டரும் திகைத்து நின்றார்     2.4.24
464    மாலயற்கு அரிய நாதன் வடிவு ஒரு சோதி ஆகச்
சாலவே மயங்குவார்க்குச் சங்கரன் தான் மகிழ்ந்தே
ஏலவார் குழலாள் தன்னோடு இடப வாகனனாய் தோன்றிச்
சீலமார் பூசை செய்த திருத் தொண்டர் தம்மை நோக்கி     2.4.25
465    அன்பனே அன்பர் பூசை அளித்த நீ அணங்கினோடும்
என் பெரும் உலகம் எய்தி இருநிதிக் கிழவன் தானே
முன் பெரு நிதியம் ஏந்தி மொழி வழி ஏவல் கேட்ப
இன்பம் ஆர்ந்து இருக்க என்றே செய்தான் எவர்க்கும் மிக்கான்     2.4.26
466    இப்பரிசு இவர்க்குத் தக்க வகையினால் இன்பம் நல்கி
முப்புரம் செற்றார் அன்பர் முன்பு எழுந்து அருளிப் போனார்
அப் பெரியவர் தம் தூய அடி இணை தலை மேல் கொண்டு
மெய்ப் பொருள் சோதி வேந்தன் செயலினை விளம்பல் உற்றேன்     2.4.27

திருச்சிற்றம்பலம்

2.5. மெய்ப் பொருள் நாயனார் புராணம்
திருச்சிற்றம்பலம்

467     சேதி நன்னாட்டு நீடு திருக் கோவலூரின் மன்னி
மாதொரு பாகர் அன்பின் வழி வரு மலாடர் கோமான்
வேத நல் நெறியின் வாய்மை விளங்கிட மேன்மை பூண்டு
காதலால் ஈசர்க்கு அன்பர் கருத்து அறிந்து ஏவல் செய்வார்     2.5.1
468    அரசியல் நெறியின் வந்த அறநெறி வழாமல் காத்து
வரை நெடும்ந்தோளால் வென்று மாற்றலர் முனைகள் மாற்றி
உரை திறம்பாத நீதி ஓங்கு நீர்மையினின் மிக்கார்
திரை செய் நீர்ச்சடையான் அன்பர் வேடமே சிந்தை செய்வார்     2.5.2
469    மங்கையைப் பாகமாக உடையவர் மன்னும் கோயில்
எங்கணும் பூசை நீடி ஏழிசைப் பாடல் ஆடல்
பொங்கிய சிறப்பின் மல்கப் போற்றுதல் புரிந்து வாழ்வார்
தங்கள் நாயகருக்கு அன்பர் தாளலால் சார்பு ஒன்று இல்லார்     2.5.3
470    தேடிய மாடு நீடு செல்வமும் தில்லை மன்றுள்
ஆடிய பெருமான் அன்பர்க்கு ஆவன ஆகும் என்று
நாடிய மனத்தினோடு நாயன்மார் அணைந்த போது
கூடிய மகிழ்ச்சி பொங்கக் குறைவு அறக் கொடுத்து வந்தார்     2.5.4
471    இன்னவாறு ஒழுகும் நாளில் இகல் திறம் புரிந்து ஓர் மன்னன்
அன்னவர் தம்மை வெல்லும் ஆசையால் அமர் மேற்கொண்டு
பொன் அணி ஓடை யானைப் பொரு பரி காலாள் மற்றும்
பன் முறை இழந்து தோற்றுப் பரிபவப் பட்டுப் போனான்     2.5.5
472    இப்படி இழந்த மாற்றான் இகலினால் வெல்ல மாட்டான்
மெய்ப் பொருள் வேந்தன் சீலம் அறிந்து வெண் நீறு சாத்தும்
அப்பெரு வேடம் கொண்டே அற்றத்தில் வெல்வான் ஆகச்
செப்பரு நிலைமை எண்ணித் திருக் கோவலூரில் சேர்வான்     2.5.6
473    மெய் எல்லாம் நீறு பூசி வேணிகள் முடித்துக் கட்டிக்
கையினில் படை கரந்த புத்தகக் கவளி ஏந்தி
மை பொதி விளக்கே என்ன மனத்தினுள் கறுப்பு வைத்துப்
பொய் தவ வேடம் கொண்டு புகுந்தனன் முத்த நாதன்     2.5.7
474    மா தவ வேடம் கொண்ட வன்கணான் மாடம் தோறும்
கோதை சூழ் அளக பாரக் குழைக் கொடி ஆட மீது
சோதி வெண் கொடிகள் ஆடுஞ் சுடர் நெடு மறுகில் போகிச்
சேயதிர் பெருமான் கோயில் திருமணி வாயில் சேர்ந்தான்     2.5.8
475    கடை உடைக் காவலாளர் கை தொழுது ஏற நின்றே
உடையவர் தாமே வந்தார் உள் எழுந்து அருளும் என்னத்
தடை பல புக்க பின்பு தனித் தடை நின்ற தத்தன்
இடை தெரிந்து அருள வேண்டும் துயில் கொள்ளும் இறைவன் என்றான்     2.5.9
476    என்று அவன் கூறக் கேட்டே யான் அவற்கு உறுதி கூற
நின்றிடு நீயும் என்றே அவனையும் நீக்கிப் புக்குப்
பொன் திகழ் பள்ளிக் கட்டில் புரவலன் துயில மாடே
மன்றலங் குழல் மென் சாயல் மா தேவி இருப்பக் கண்டான்     2.5.10
477    கண்டு சென்று அணையும் போது கதும் என இழிந்து தேவி
வண்டலர் மாலையானை எழுப்பிட உணர்ந்து மன்னன்
அண்டர் நாயகனார் தொண்டராம் எனக் குவித்த செங்கை
கொண்டு எழுந்து எதிரே சென்று கொள்கையின் வணங்கி நின்று     2.5.11
478    மங்கலம் பெருக மற்று என் வாழ்வு வந்து அணைந்தது என்ன
இங்கு எழுந்து அருளப் பெற்றது என் கொலோ என்று கூற
உங்கள் நாயகனார் முன்னம் உரைத்த ஆகம நூல் மண்மேல்
எங்கும் இலாதது ஒன்று கொடு வந்தேன் இயம்ப என்றான்     2.5.12
479    பேறு எனக்கு இதன் மேல் உண்டோ பிரான் அருள் செய்த இந்த
மாறிலா ஆகமத்தை வாசித்து அருள வேண்டும் என்ன
நாறு பூங் கோதை மாது தவிரவே நானும் நீயும்
வேறு இடத்து இருக்க வேண்டும் என்று அவன் விளம்ப வேந்தன்     2.5.13
480    திருமகள் என்ன நின்ற தேவியார் தம்மை நோக்கிப்
பரிவுடன் விரைய அந்தப்புரத்திடைப் போக ஏவித்
தரு தவ வேடத்தானைத் தவிசின் மேல் இருத்தித் தாமும்
இரு நிலத்து இருந்து போற்றி இனி அருள் செய்யும் என்றான்     2.5.14
481    கைத் தலத்து இருந்த வஞ்சக் கவளிகை மடி மேல் வைத்துப்
புத்தகம் அவிழ்ப்பான் போன்று புரிந்த அவர் வணங்கும் போதில்
பத்திரம் வாங்கித் தான் முன் நினைத்த அப் பரிசே செய்ய
மெய்த் தவ வேடமே மெய்ப்பொருள் எனத் தொழுது வென்றார்     2.5.15
482    மறைத்தவன் புகுந்த போதே மனம் அங்கு வைத்த தத்தன்
இறைப் பொழுதின் கண் கூடி வாளினால் எறியல் உற்றான்
நிறைத்த செங் குருதி சோர வீழ்கின்றார் நீண்ட கையால்
தறைப் படும் அளவில் தத்தா நமர் எனத் தடுத்து வீழ்ந்தார்     2.5.16
483    வேதனை எய்தி வீழ்ந்த வேந்தரால் விலக்கப் பட்ட
தாதனாந் தத்தன் தானும் தலையினால் வணங்கித் தாங்கி
யாது நான் செய்கேன் என்ன எம்பிரான் அடியார் போக
மீதிடை விலக்கா வண்ணம் கொண்டு போய் விடு நீ என்றார்     2.5.17
484    அத் திறம் அறிந்தார் எல்லாம் அரசனைத் தீங்கு செய்த
பொய்த் தவன் தன்னைக் கொல்வோம் எனப் புடை சூழ்ந்த போது
தத்தனும் அவரை எல்லாம் தடுத்து உடன் கொண்டு போவான்
இத் தவன் போகப் பெற்றது இறைவனது ஆணை என்றான்     2.5.18
485    அவ்வழி அவர்கள் எல்லாம் அஞ்சியே அகன்று நீங்கச்
செவ்விய நெறியில் தத்தன் திருநகர் கடந்து போந்து
கை வடி நெடுவாள் ஏந்தி ஆளுறாக் கானஞ் சேர
வெவ் வினைக் கொடியோன் தன்னை விட்ட பின் மீண்டு போந்தான்     2.5.19
486    மற்று அவன் கொண்டு போன வஞ்சனை வேடத்தான் மேல்
செற்றவர் தம்மை நீக்கித் தீது இலா நெறியில் விட்ட
சொல் திறம் கேட்க வேண்டிச் சோர்கின்ற ஆவி தாங்கும்
கொற்றவன் முன்பு சென்றான் கோமகன் குறிப்பில் நின்றான்     2.5.20
487    சென்று அடி வணங்கி நின்று செய் தவ வேடம் கொண்டு
வென்றவற்கு இடையூறு இன்றி விட்டனன் என்று கூற
இன்று எனக்கு ஐயன் செய்தது யார் செய வல்லார் என்று
நின்றவன் தன்னை நோக்கி நிறை பெரும் கருணை கூர்ந்தார்     2.5.21
488    அரசியல் ஆயத்தார்க்கும் அழிவுறும் காதலார்க்கும்
விரவிய செய்கை தன்னை விளம்புவார் விதியினாலே
பரவிய திரு நீற்று அன்பு பாது காத்து உய்ப்பீர் என்று
புரவலர் மன்றுள் ஆடும் பூங் கழல் சிந்தை செய்தார்     2.5.22
489    தொண்டனார்க்கு இமயப் பாவை துணைவனார் அவர் முன் தம்மைக்
கண்டவாறு எதிரே நின்று காட்சி தந்தருளி மிக்க
அண்ட வானவர் கட்கு எட்டா அருள் கழல் நீழல் சேரக்
கொண்டவாறு இடை அறாமல் கும்பிடும் கொள்கை ஈந்தார்     2.5.23
490    இன்னுயிர் செகுக்கக் கண்டும் எம்பிரான் அன்பர் என்றே
நன் நெறி காத்த சேதி நாதனார் பெருமை தன்னில்
என் உரை செய்தேன் ஆக இகல் விறன் மிண்டர் பொற் தாள்
சென்னி வைத்து அவர் முன் செய்த திருத் தொண்டு செப்பல் உற்றேன்     2.5.24

திருச்சிற்றம்பலம்

2.6. விறன்மிண்ட நாயனார் புராணம்
திருச்சிற்றம்பலம்

491     விரை செய் நறும் பூந் தொடை இதழி வேணியார் தம் கழல் பரவிப்
பரசுபெறு மா தவ முனிவன் பரசு ராமன் பெறு நாடு
திரை செய் கடலின் பெருவளவனும் திருந்து நிலனின் செழு வளனும்
வரையின் வளனும் உடன் பெருகி மல்கு நாடு மலை நாடு     2.6.1
492    வாரி சொரியும் கதிர் முத்தும் வயல்மென் கரும்பில் படு முத்தும்
வேரல் விளையும் குளிர் முத்தும் வேழ மருப்பின் ஒளிர் முத்தும்
மூரல் எனச் சொல் வெண் முத்த நகையார் தெரிந்து முறை கோக்கும்
சேரர் திரு நாட்டு ஊர்களின் முன் சிறந்த மூதூர் செங்குன்றூர்     2.6.2
493    என்னும் பெயரின் விளங்கி உலகேறும் பெருமை உடையது தான்
அன்னம் பயிலும் வயல் உழவின் அமைந்த வளத்தால் ஆய்ந்த மறை
சொன்ன நெறியின் வழி ஒழுகும் தூய குடிமைத் தலை நின்றார்
மன்னும் குலத்தின் மா மறை நூல் மரபிற் பெரியோர் வாழ் பதியாம்     2.6.3
494    அப் பொன் பதியின் இடை வேளாண் குலத்தை விளக்க அவதரித்தார்
செப்பற்கு அரிய பெரும் சீர்த்திச் சிவனார் செய்ய கழல் பற்றி
எப் பற்றினையும் அற எறிவார் எல்லை தெரிய ஒண்ணாதார்
மெய்ப் பத்தர்கள் பால் பரிவுடையார் எம்பிரானார் விறன் மிண்டர்     2.6.4
495    நதியும் மதியும் புனைந்த சடை நம்பர் விரும்பி நலம் சிறந்த
பதிகள் எங்கும் கும்பிட்டுப் படரும் காதல் வழிச் செல்வார்
முதிரும் அன்பில் பெரும் தொண்டர் முறைமை நீடு திருக் கூட்டத்து
எதிர் முன் பரவும் அருள் பெற்றே இறைவர் பாதம் தொழப் பெற்றார்     2.6.5
496    பொன் தாழ் அருவி மலைநாடு கடந்து கடல் சூழ் புவி எங்கும்
சென்று ஆள் உடையார் அடியவர் தம் திண்மை ஒழுக்க நடை செலுத்தி
வன் தாள் மேருச் சிலை வளைத்துப் புரங்கள் செற்ற வைதிகத் தேர்
நின்றார் இருந்த திருவாரூர் பணிந்தார் நிகர் ஒன்று இல்லாதார்     2.6.6
497    திருவார் பெருமை திகழ்கின்ற தேவ ஆசிரியன் இடைப் பொலிந்து
மருவா நின்ற சிவனடியார் தம்மைத் தொழுது வந்து அணையாது
ஒருவாறு ஒதுங்கும் வன் தொண்டன் புறகென்று உரைப்பச் சிவன் அருளால்
பெருகா நின்ற பெரும் பேறு பெற்றார் மற்றும் பெற நின்றார்     2.6.7
498    சேண் ஆர் மேருச் சிலை வளைத்த சிவனார் அடியார் திருக்கூட்டம்
பேணாது ஏகும் ஊரனுக்கும் பிரானாம் தன்மைப் பிறை சூடிப்
பூணார் அரவம் புனைந்தார்க்கும் புறகு என்று உரைக்க மற்றவர் பால்
கோணா அருளைப் பெற்றார் மற்று இனியார் பெருமை கூறுவார்     2.6.8
499    ஞாலம் உய்ய நாம் உய்ய நம்பி சைவ நன் னெறியின்
சீலம் உய்யத் திருத் தொண்டத் தொகை முன் பாடச் செழு மறைகள்
ஓலம் இடவும் உணர்வு அரியார் உடனாம் உளது என்றால்
ஆலம் அமுது செய்த பிரான் அடியார் பெருமை அறிந்தாரார்     2.6.9
500    ஒக்க நெடு நாள் இவ் உலகில் உயர்ந்த சைவப் பெருந் தன்மை
தொக்க நிலைமை நெறி போற்றித் தொண்டு பெற்ற விறன் மிண்டர்
தக்க வகையால் தம் பெருமான் அருளினாலே தாள் நிழல்ற்கீழ்
மிக்க கண நாயகர் ஆகும் தன்மை பெற்று விளங்கினார்     2.6.10
501    வேறு பிரிதென் திருத் தொண்டத் தொகையால் உலகு விளங்க வரும்
பேறு தனக்குக் காரணராம் பிரானார் விறன் மிண்டரின் பெருமை
கூறும் அளவு என் அளவிற்றே அவர் தாள் சென்னி மேற் கொண்டே
ஆறை வணிகர் அமர் நீதி அன்பர் திருத் தொண்டு அறைகுவாம்     2.6.11

திருச்சிற்றம்பலம்

2.7. அமர் நீதி நாயனார் புராணம்
திருச்சிற்றம்பலம்

502    சீரில் நீடிய செம்பியர் பொன்னி நன்னாட்டுக்
காரின் மேவிய களி அளி மலர்ப் பொழில் சூழ்ந்து
தேரின் மேவிய செழு மணிவீதிகள் சிறந்து
பாரில் நீடிய பெருமை சேர் பதி பழையாறை     2.7.1
503    மன்னும் அப் பதி வணிகர் தம் குலத்தினில் வந்தார்
பொன்னும் முத்தும் நல் மணிகளும் பூந்துகில் முதலா
எந் நிலத்தினும் உள்ளன வரு வளத்து இயல்பால்
அந் நிலைக்கண் மிக்கவர் அமர் நீதியார் என்பார்     2.7.2
504    சிந்தை செய்வது சிவன் கழல் அல்லது ஒன்று இல்லார்
அந்தி வண்ணர் தம் அடியவர்க்கு அமுது செய்வித்துக்
கந்தை கீள் உடை கோவணம் கருத்து அறிந்து உதவி
வந்த செல்வத்தின் வளத்தினால் வரும் பயன் கொள்வார்     2.7.3
505    முக்கண் நக்கராம் முதல்வனார் அவர் திரு நலூர்
மிக்க சீர் வளர் திருவிழா விருப்புடன் வணங்கித்
தக்க அன்பர்கள் அமுது செய் திருமடம் சமைத்தார்
தொக்க சுற்றமும் தாமும் வந்து அணைந்தனர் தூயோர்     2.7.4
506    மருவும் அன்பொடு வணங்கினர் மணி கண்டர் நல்லூர்த்
திரு விழா அணி சேவித்துத் திரு மடத்து அடியார்
பெருகும் இன்பமோடு அமுது செய்திட அருள் பேணி
உருகு சிந்தையின் மகிழ்ந்து உறை நாள் இடை ஒருநாள்     2.7.5
507    பிறைத் தளிர் சடைப் பெருந்தகைப் பெரும் திரு நல்லூர்க்
கறைக் களத்து இறை கோவணப் பெருமை முன் காட்டி
நிறைத்த அன்புடைத் தொண்டர்க்கு நீடருள் கொடுப்பான்
மறைக் குலத்தொரு பிரமசாரியின் வடிவு ஆகி     2.7.6
508    செய்ய புன் சடை கரந்தது ஓர் திருமுடிச் சிகையும்
சைவ வெண் திரு நீற்று முண்டகத்து ஒளித் தழைப்பும்
மெய்யின் வெண் புரி நூலுடன் விளங்கும் மான் தோலும்
கையில் மன்னிய பவித்திர மரகதக் கதிரும்     2.7.7
509    முஞ்சி நாணுற முடிந்தது சாத்திய அரையில்
தஞ்ச மா மறைக் கோவண ஆடையின் அசைவும்
வஞ்ச வல் வினைக் கறுப்பறும் மனத்து அடியார்கள்
நெஞ்சில் நீங்கிடா அடி மலர் நீணிலம் பொலிய     2.7.8
510    கண்டவர்க்கு உறு காதலின் மனம் கரைந்து உருகத்
தொண்டர் அன்பு எனும் தூ நெறி வெளிப் படுப்பார் ஆய்த்
தண்டின் மீது திரு கோவணம் நீற்றுப்பை தருப்பை
கொண்டு வந்து அமர் நீதியார் திரு மடம் குறுக     2.7.9
511    வடிவு காண்டலும் மனத்தினும் மிக முகம் மலர்ந்து
கடிது வந்து எதிர் வணங்கி இம் மடத்தினில் காணும்
படி இலாத நீர் அணைய முன் பயில் தவம் என்னோ
அடியனேன் செய்தது என்றனர் அமர்நீதி அன்பர்     2.7.10
512    பேணும் அன்பரை நோக்கி நீர் பெருகிய அடியார்க்கு
ஊணும் மேன்மையில் ஊட்டி நற் கந்தை கீள் உடைகள்
யாணர் வெண் கிழிக் கோவணம் ஈதல் கேட்டு உம்மைக்
காண வந்தனம் என்றனன் கண் நுதல் கரந்தோன்     2.7.11
513    என்று தம்பிரான் அருள் செய இத் திரு மடத்தே
நன்று நான் மறை நற்றவர் அமுது செய்து அருளத்
துன்று வேதியர் தூய்மையின் அமைப்பதும் உளதால்
இன்று நீரும் இங்கு அமுது செய்து அருளும் என்று இறைஞ்ச     2.7.12
514    வணங்கும் அன்பரை நோக்கி அம் மறையவர் இசைந்தே
அணங்கு நீர்ப் பொன்னி ஆடி நான் வர மழை வரினும்
உணங்கு கோவணம் வைத்து நீர் தாரும் என்று ஒரு வெண்
குணங் கொள் கோவணம் தண்டினில் அவிழ்த்துக் கொடுப்பார்     2.7.13
515    ஓங்கு கோவணப் பெருமையை உள்ளவாறு உமக்கே
ஈங்கு நான் சொல்ல வேண்டுவது இல்லை நீர் இதனை
வாங்கி நான் வரும் அளவும் உம்மிடத்து இகழாதே
ஆங்கு வைத்து நீர் தாரும் என்று அவர் கையில் கொடுத்தார்     2.7.14
516    கொடுத்த கோவணம் கைக் கொண்டு கோது இலா அன்பர்
கடுப்பில் இங்கு எழுந்து அருளும் நீர் குளித்து எனக் கங்கை
மடுத்த தும்பிய வளர் சடை மறைத்த அம் மறையோர்
அடுத்த தெண்டிரைப் பொன்னி நீர் ஆட என்று அகன்றார்     2.7.15
517    தந்த கோவணம் வாங்கிய தனிப் பெருந் தொண்டர்
முந்தை அந்தணர் மொழி கொண்டு முன்பு தாம் கொடுக்கும்
கந்தை கீள் உடை கோவணம் அன்றி ஓர் காப்புச்
சிந்தை செய்து வேறு இடத்து ஒரு சேமத்தின் வைத்தார்     2.7.16
518    போன வேதியர் வைத்த கோவணத்தினைப் போக்கிப்
பானலந்துறைப் பொன்னி நீர் படிந்து வந்தாரோ
தூநறுஞ் சடைக் கங்கை நீர் தோய்ந்து வந்தாரோ
வானம் நீர் மழை பொழிந்திட நனைந்து வந்து அணைந்தார்     2.7.17
519    கதிர் இளம் பிறைக் கண்ணியர் நண்ணிய பொழுதில்
முதிரும் அன்பு உடைத் தொண்டர் தாம் முறைமையின் முன்னே
அதிக நன்மையின் அறு சுவைத் திருவமுது ஆக்கி
எதிர் எழுந்து சென்று இறைஞ்சிட நிறைந்த நூல் மார்பர்     2.7.18
520    தொண்டர் அன்பு எனும் தூய நீர் ஆடுதல் வேண்டி
மண்டு தண் புனல் மூழ்கிய ஈரத்தை மாற்றத்
தண்டின் மேலதும் ஈரம் நான் தந்த கோவணத்தைக்
கொண்டு வாரும் என்று உரைத்தனர் கோவணக் கள்வர்     2.7.19
521    ஐயர் கைதவம் அறிவுறாது அவர் கடிது அணுகி
எய்தி நோக்குறக் கோவணம் இருந்த வேறு இடத்தில்
மை இல் சிந்தையர் கண்டிலர் வைத்த கோவணம் முன்
செய்தது என் என்று திகைத்தனர் தேடுவார் ஆனார்     2.7.20
522    பொங்கு வெண் கிழிக் கோவணம் போயின நெறி மேல்
சங்கை இன்றியே தப்பினது என்று தம் சரக்கில்
எங்கு நாடியும் கண்டிலர் என் செய்வார் நின்றார்
அங்கண் வேதியர் பெரும் தொடக்கினில் அகப் பட்டார்     2.7.21
523    மனைவி யாரொடு மன்னிய கிளைஞரும் தாமும்
இனையது ஒன்று வந்து எய்தியது என இடர் கூர்ந்து
நினைவது ஒன்று இலர் வருந்தினர் நிற்கவும் மாட்டார்
புனைய வேறு ஒரு கோவணம் கொடு புறப்பட்டார்     2.7.22
524    அத்தர் முன்பு சென்று அடிகள் நீர் தந்த கோவணத்தை
வைத்த இடத்து நான் கண்டிலேன் மற்றும் ஓர் இடத்தில்
உய்த்து ஒளித்தனர் இல்லை அஃது ஒழிந்தவாறு அறியேன்
இத்தகைத்த வேறு அதிசயம் கண்டிலேன் என்று     2.7.23
525    வேறு நல்லது ஓர் கோவணம் விரும்பி முன் கொணர்ந்தேன்
கீறு கோவணம் அன்று நெய்தமைத்தது கிளர் கொள்
நீறு சாத்திய நெற்றியீர் மற்றுது களைந்து
மாறு சாத்தி என் பிழை பொறுப்பீர் என வணங்க     2.7.24
526    நின்ற வேதியர் வெகுண்டு அமர் நீதியார் நிலைமை
நன்று சாலவும் நாள் இடை கழிந்ததும் அன்றால்
இன்று நான் வைத்த கோவணம் கொண்டு அதற்கு எதிர் வேறு
ஒன்று கொள்க என உரைப்பதே நீர் என உரையா     2.7.25
527    நல்ல கோவணம் கொடுப்பன் என்று உலகின் மேல் நாளும்
சொல்லும் விதத்தது என் கோவணம் கொள்வது துணிந்தோ
ஒல்லை ஈங்கு உறு வாணிபம் அழகிதே உமக்கு என்று
எல்லை இல்லவன் எரி துள்ளினால் என வெகுண்டான்     2.7.26
528    மறி கரந்து தண்டு ஏந்திய மறைவர் வெகுளப்
பொறி கலங்கிய உணர்வினர் ஆய் முகம் புலர்ந்து
சிறிய என் பெரும் பிழை பொறுத்து அருள் செய்வீர் அடியேன்
அறிய வந்தது ஒன்று என அடி பணிந்து அயர்வார்     2.7.27
529    செயத்தகும் பணி செய்வன் இக் கோவணம் அன்றி
நயத் தகுந்தன நல்ல பட்டு ஆடைகள் மணிகள்
உயர்த்த கோடி கொண்டு அருளும் என்று உடம்பினில் அடங்காப்
பயத்தொடுங்குலைந்து அடி மிசைப் பல முறை பணிந்தார்     2.7.28
530    பணியும் அன்பரை நோக்கி அப் பரம் பொருளானார்
தணியும் உள்ளத்தார் ஆயினார் போன்று நீர் தந்த
மணியும் பொன்னும் நல் ஆடையும் மற்றும் என் செய்ய
அணியும் கோவணம் நேர் தர அமையும் என்றான்     2.7.29
531    மலர்ந்த சிந்தையர் ஆகிய வணிகர் ஏறு அனையார்
அலர்ந்த வெண்ணிறக் கோவணம் அதற்கு நேராக
இலங்கு பூந் துகில் கொள்வதற்கு இசைந்து அருள் செய்யீர்
நலங் கொள் கோவணம் தரும் பரிசு யாதென நம்பர்     2.7.30
532    உடுத்த கோவணம் ஒழிய நாம் உம் கையில் தர நீர்
கொடுத்ததாக முன் சொல்லும் அக் கிழிந்த கோவணநேர்
அடுத்த கோவணம் இது என்று தண்டினில் அவிழாது
எடுத்து மற்று இதன் எடையிடும் கோவணம் என்றார்     2.7.31
533    நன்று சால என்று அன்பரும் ஒரு துலை நாட்டக்
குன்ற வில்லியார் கோவணம் ஒரு தட்டில் இட்டார்
நின்ற தொண்டரும் கையினில் நெய்த கோவணத் தட்டு
ஒன்றிலே இட நிறை நிலாது ஒழிந்தமை கண்டார்     2.7.32
534    நாடும் அன்பொடு நாயன்மார்க் களிக்க முன் வைத்த
நீடு கோவணம் அடைய நேராக ஒன்று ஒன்றாக்
கோடு தட்டின் மீது இடக் கொண்டு எழுந்தது கண்டு
ஆடு சேவடிக்கு அயரும் அற்புதம் எய்தி     2.7.33
535    உலகில் இல்லதோர் மாயை இக் கோவணம் ஒன்றுக்கு
அலகில் கோவணம் ஒத்தில என்று அதிசயத்துப்
பலவும் மென் துகில் பட்டுடன் இட இட உயர
இலகு பூந்துகிற் பொதிகளை எடுத்து மேல் இட்டார்     2.7.34
536    முட்டில் அன்பர் தம் அன்பிடுந் தட்டுக்கு முதல்வர்
மட்டு நின்ற தட்டு அருளொடு தாழ்வு உறும் வழக்கால்
பட்டொடும் துகில் அநேக கோடிகளிடும் பத்தர்
தட்டு மேற் படத் தாழ்ந்தது கோவணத் தட்டு     2.7.35
537    ஆன தன்மை கண்டு அடியவர் அஞ்சி அந்தணர் முன்
தூ நறுந் துகில் வர்க்க நூல் வர்க்கமே முதலா
மானம் இல்லன குவிக்கவும் தட்டின் மட்டு இதுவால்
ஏனை என் தனம் இடப்பெற வேண்டும் என்று இறைஞ்ச     2.7.36
538    மங்கை பாகராம் மறையவர் மற்று அதற்கு இசைந்தே
இங்கு நாம் இனி வேறு ஒன்று சொல்வது என் கொல்
அங்கு மற்று உங்கள் தனங்களினாகிலும் இடுவீர்
எங்கள் கோவணம் நேர் நிற்க வேண்டுவது என்றார்     2.7.37
539    நல்ல பொன்னொடும் வெள்ளியும் நவ மணித் திரளும்
பல் வகைத் திறத்து உலோகமும் புணர்ச்சிகள் பலவும்
எல்லை இல் பொருள் சுமந்து அவர் இட இடக் கொண்டே
மல்கு தட்டு மீது எழுந்தது வியந்தனர் மண்ணோர்     2.7.38
540    தவம் நிறைந்த நான் மறைப் பொருள் நூல்களால் சமைந்த
சிவன் விரும்பிய கோவணம் இடும் செழுந்தட்டுக்கு
அவனி மேலமர் நீதியார் தனமெலாம் அன்றிப்
புவனம் யாவையும் நேர் நிலா என்பது புகழோ     2.7.39
541    நிலைமை மற்றது நோக்கிய நிகர் இலார் நேர் நின்று
உலைவில் பஃறனம் ஒன்று ஒழியாமை உய்த்து ஒழிந்தேன்
தலைவ யானும் என் மனைவியும் சிறுவனும் தகுமேல்
துலையில் ஏறிடப் பெறுவது உன் அருள் எனத் தொழுதார்     2.7.40
542    பொச்சமில்ல அடிமைத் திறம் புரிந்தவர் எதிர்நின்று
அச்ச முன்புற உரைத்தலும் அங்கணர் அருளால்
நிச்சயித்தவர் நிலையினைத் துலை எனுஞ் சலத்தால்
இச் சழக்கினின்று ஏற்றுவார் ஏறுதற்கு இசைந்தார்     2.7.41
543    மனம் மகிழ்ந்து அவர் மலர்க்கழல் சென்னியால் வணங்கிப்
புனை மலர்க் குழல் மனைவியார் தம்மொடு புதல்வன்
தனை உடன் கொடு தனித் துலை வலம் கொண்டு தகவால்
இனைய செய்கையில் ஏறுவார் கூறுவார் எடுத்து     2.7.42
544    இழைத்த அன்பினில் இறை திருநீற்று மெய் அடிமை
பிழைத்திலோம் எனில் பெருந்துலை நேர் நிற்க என்று
மழைத் தடம் பொழில் திரு நல்லூர் இறைவரை வணங்கித்
தழைத்த அஞ்செழுத்து ஓதினார் ஏறினார் தட்டில்     2.7.43
545    மண்டு காதலின் மற்றவர் மகிழ்ந்து உடன் ஏற
அண்டர் தம்பிரான் திரு அரைக் கோவணம் அதுவும்
கொண்ட அன்பினில் குறைபடா அடியவர் அடிமைத்
தொண்டும் ஒத்தலால் ஒத்து நேர் நின்றது அத் துலைதான்     2.7.44
546    மதி விளங்கிய தொண்டர் தம் பெருமையை மண்ணோர்
துதி செய்து எங்கணும் அதிசயம் உற எதிர் தொழுதார்
கதிர் விசும்பு இடை கரந்திட நிரந்த கற்பகத்தின்
புதிய பூ மழை இமையவர் மகிழ்வுடன் பொழிந்தார்     2.7.45
547    அண்டர் பூ மழை பொழிய மற்று அதனிடை ஒளித்த
முண்ட வேதியர் ஒரு வழியான் முதல் நல்லூர்ப்
பண்டு தாம் பயில் கோலமே விசும்பினிற் பாகங்
கொண்ட பேதையும் தாமுமாய்க் காட்சி முன் கொடுத்தார்     2.7.46
548    தொழுது போற்றி அத் துலை மிசை நின்று நேர் துதிக்கும்
வழுவில் அன்பரும் மைந்தரும் மனைவியார் தாமும்
முழுதும் இன்னருள் பெற்றுத் தம் முன் தொழுது இருக்கும்
அழிவில் வான் பதங் கொடுத்து எழுந்து அருளினார் ஐயர்     2.7.47
549    நாதர் தம் திரு அருளினால் நல் பெருந் துலையே
மீது கொண்டெழு விமானம் அதுவாகி மேல் செல்லக்
கோதில் அன்பரும் குடும்பமும் குறைவு அறக் கொடுத்த
ஆதி மூர்த்தியார் உடன் சிவ புரியினை அணைந்தார்     2.7.48
550    மலர் மிசை அயனும் மாலும் காணுதற்கு அரிய வள்ளல்
பலர் புகழ் வெண்ணெய் நல்லூர் அவணப் பழமை காட்டி
உலகு உய்ய ஆண்டு கொள்ளப் பெற்றவர் பாதம் உன்னித்
தலை மிசை வைத்து வாழும் தலைமை நம் தலைமை ஆகும்     2.7.49

by Swathi   on 26 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
சமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன் சமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன்
சித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan சித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan
குறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA குறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA
செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம் செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்
குறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன் குறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன்
செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம் செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்
கவிதை : அதிசயக் குறுந்தொகை! அறுசுவை பலவகை - திரு.மகேந்திரன் பெரியசாமி கவிதை : அதிசயக் குறுந்தொகை! அறுசுவை பலவகை - திரு.மகேந்திரன் பெரியசாமி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.