LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

இனி கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டு சிறை - வருகிறது புதிய சட்டம்

 

கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்க வகைசெய்யும் மசோதாவைச் சட்டப்பேரவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்தார். 
இந்த மசோதா வரும் 29-ம் தேதி நிறைவேற்றப்பட உள்ளது.

"பணக் கடன் வழங்குவோர் மற்றும் அடகுக் கடைகள் தொழிலை ஒழுங்குமுறைப்படுத்தி, கடும் வட்டியிலிருந்து மக்களைக் காப்பதில் முன்னோடி மாநிலமாகத் தமிழகம் விளங்குகிறது. தமிழ்நாடு அடகுக் கடைக்காரர்கள் சட்டம்-1943, தமிழ்நாடு பணக் கடன் வழங்குவோர் சட்டம்-1957, தமிழ்நாடு கந்துவட்டி தடைச் சட்டம்-2003 ஆகியவற்றை அரசு இயற்றியுள்ளது. ஆனாலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய, நலிந்த பிரிவினர், குறிப்பாக விவசாயிகள், விவசாயக் கூலித் தொழிலாளர்கள், மகளிர் சுயஉதவி குழுவினர், பணியாளர்கள், நடைபாதை வியாபாரிகள், பால் பண்ணைத் தொழிலாளர்கள், கட்டிடப் பணியாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆகியோர் பணக் கடன் வழங்கும் நிறுவனங்களால் ஈர்க்கப்படுகின்றனர். அத்தகைய கவர்ச்சிகரமான கடன்களுக்கு இரையாகி, தாங்க இயலாத கடன் சுமைக்கு ஆளாகின்றனர்.

அதேநேரம், பணக் கடன் வழங்கும் நிறுவனங்கள், ஏற்கெனவே நிதிச் சுமையில் இருக்கும் கடனாளிகளிடம் இருந்து கடனை வசூலிக்க, முறையற்ற வழிகளை நாடுகின்றனர். அது துயரத்தில் இருக்கும் கடனாளிகளைத் தற்கொலை செய்துகொள்ளத் தூண்டுதலாக அமைந்து, அதன்மூலம் பலருடைய குடும்பங்களை அழித்து, சமூக ஒழுங்கைப் பாதிப்படையச் செய்து விடுகிறது.
எனவே, தனிநபர், சுயஉதவிக் குழுக்கள், கூட்டுப் பொறுப்புக் குழுக்கள் ஆகியோருக்குப் பணக் கடன் வழங்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் வலுக்கட்டாய வசூலிப்பு முறையால் ஏற்படும் இன்னல்களிலிருந்து, பொருளாதாரத்தில் பின்தங்கிய, நலிந்த பிரிவினரைப் பாதுகாக்கச் சட்டம் இயற்றுவது அவசியமாகிறது. அதற்கான சட்டத்தை இயற்ற அரசு முடிவு செய்துள்ளது. அதற்கு இந்த மசோதா வழிவகை செய்கிறது.

வங்கிகள், ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்பட்ட வங்கி சாரா நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள் தவிர, தமிழகத்தில் உள்ள பணக் கடன் வழங்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் இந்தச் சட்டம் பொருந்தும். ஆனால், கடன் வாங்கியவரிடம் வலுக்கட்டாய வசூல் நடவடிக்கை மேற்கொண்டால், இந்த வங்கிகள், பதிவு செய்யப்பட்ட வங்கி சாரா நிறுவனங்கள், கூட்டுறவுச் சங்கங்களுக்கும் இந்தச் சட்டம் பொருந்தும்.

கடன் வழங்கிய நிறுவனமோ, அதன் முகவரோ, கடன் வாங்கியவர் மற்றும் அவரது குடும்பத்தினரை வலுக்கட்டாய நடவடிக்கைக்கு உட்படுத்த கூடாது. அந்த வகையில், அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது, வன்முறையைப் பயன்படுத்துவது, அவமதிப்பது, மிரட்டுவது, அவர்கள் செல்லும் இடங்களில் பின்தொடர்வது, அவர்களுக்குச் சொந்தமான அல்லது பயன்படுத்தும் சொத்துகளில் தலையிடுவது, அதைப் பயன்படுத்த முடியாமல் இடையூறு செய்வது, அந்தச் சொத்துகளைப் பறித்துக் கொள்வது ஆகிய செயல்களில் ஈடுபடக் கூடாது.
அதேபோல, கடன் வாங்கியவரின் வீடு, வசிப்பிடம், வேலை அல்லது தொழில் செய்யும் இடம் ஆகியவற்றுக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்த அல்லது கடனை வசூலிக்க, தேவையற்ற செல்வாக்கைப் பயன்படுத்தி வலுக்கட்டாயப்படுத்துவது, தனியார் அல்லது வெளி தரப்பு முகமைகளின் சேவைகளைப் பயன்படுத்துவது, அரசுத் திட்டத்தின்கீழ் உரிமை அளிக்கும் ஆவணங்கள், பிற முக்கிய ஆவணங்கள், பொருட்கள், வீட்டு உடமைகளை வலுக்கட்டாயமாக எடுக்கக் கோருவது போன்றவை இச்சட்டத்தின் 20-ஆவது பிரிவின்படி வலுக்கட்டாய நடவடிக்கைகளாகக் கருதப்படும்.

தண்டனைகள்: அதன்படி, 20-ஆவது பிரிவில் கூறப்பட்டுள்ள குற்றங்களைச் செய்தால், 3 ஆண்டு சிறைத் தண்டனை அல்லது ரூ.5 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். வலுக்கட்டாய நடவடிக்கைகளுக்கு வெளி முகமைகளைப் பயன்படுத்துவது, ஆவணங்களை எடுப்பது போன்ற குற்றங்களுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். கடன் பெற்றவர் அல்லது அவரது குடும்ப உறுப்பினர் யாராவது தற்கொலை செய்து, அதற்குக் கடன் வழங்கிய நிறுவனம் அல்லது முகவரின் வலுக்கட்டாய நடவடிக்கை காரணமாக இருந்தால், அது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் 108-ஆவது பிரிவின்கீழ் குற்றமாகக் கருதப்படும். மேலும், கடன் வழங்கும் நிறுவனம் பதிவுச் சான்றிதழ் பெறாமல் கடன் வழங்கினால், 3 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். 
இவ்வாறு அந்த மசோதாவில்  கூறப்பட்டுள்ளது.

இந்த மசோதா குறித்து விரிவாக விவாதிக்க வேண்டும் என்று அதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ‘‘பேரவையில் வரும் 29-ம் தேதி விவாதத்துக்குப் பிறகு இந்த மசோதா நிறைவேற்றப்பட உள்ளது. அப்போது பேசலாம்’’ என்று பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

 

 

by hemavathi   on 27 Apr 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கன்னியாகுமரியில் குறளங்காடி திறப்பு விழா கன்னியாகுமரியில் குறளங்காடி திறப்பு விழா
வலைத்தமிழ் ச.பார்த்தசாரதிக்கு  'தகைமைசால் திருக்குறள் பல்நோக்கு ஆளுமையர்' விருது! வலைத்தமிழ் ச.பார்த்தசாரதிக்கு 'தகைமைசால் திருக்குறள் பல்நோக்கு ஆளுமையர்' விருது!
ஜெய்சங்கர் சாலை ஆனது சென்னை கல்லூரி சாலை ஜெய்சங்கர் சாலை ஆனது சென்னை கல்லூரி சாலை
விவசாயத்துக்கு ட்ரோன்களைப் பயன்படுத்தும் தஞ்சாவூர் விவசாயிகள் விவசாயத்துக்கு ட்ரோன்களைப் பயன்படுத்தும் தஞ்சாவூர் விவசாயிகள்
ஸ்ரீ லஸ்ரீ காசிவாசி முத்துக்குமாரசுவாமிகள் மகா சமாதியடைந்தார் ஸ்ரீ லஸ்ரீ காசிவாசி முத்துக்குமாரசுவாமிகள் மகா சமாதியடைந்தார்
தாம்பரத்தில் ரூ.110 கோடியில் பிரமாண்ட மருத்துவமனை - முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார் தாம்பரத்தில் ரூ.110 கோடியில் பிரமாண்ட மருத்துவமனை - முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
ஆகஸ்ட் 15 முதல்;சுங்கசாவடி ஆண்டு சந்தா  அமல் ஆகஸ்ட் 15 முதல்;சுங்கசாவடி ஆண்டு சந்தா அமல்
14 ஆண்டுகளுக்குப் பிறகு இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சியை எட்டிய தமிழ்நாடு 14 ஆண்டுகளுக்குப் பிறகு இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சியை எட்டிய தமிழ்நாடு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.