LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- தேவாரப் பதிகங்கள்

நான்காம் திருமுறை முதற் பகுதி


4.01 திருவதிகைவீரட்டானம்
பன் - கொல்லி
திருச்சிற்றம்பலம்

1    கூற்றாயின வாறுவி லக்ககிலீர்
    கொடுமைபல செய்தன நானறியேன்
    ஏற்றாயடிக் கேஇர வும்பகலும்
    பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
    தோற்றாதென் வயிற்றின் அகம்படியே
    குடரோடு துடக்கி முடக்கியிட
    ஆற்றேன் அடியேன்அதி கைக்கெடில
    வீரட்டா னத்துறை அம்மானே.     4.1.1
2    நெஞ்சம்முமக் கேயிட மாகவைத்தேன்
    நினையாதொரு போதும் இருந்தறியேன்
    வஞ்சம்மிது வொப்பது கண்டறியேன்
    வயிற்றோடு துடக்கி முடக்கியிட
    நஞ்சாகி வந்தென்னை நலிவதனை
    நணுகாமல் துரந்து கரந்துமிடீர்
    அஞ்சேலுமென் னீர்அதி கைக்கெடில
    வீரட்டா னத்துறை அம்மானே.     4.1.2
3    பணிந்தாரன பாவங்கள் பாற்றவல்லீர்
    படுவெண்டலை யிற்பலி கொண்டுழல்வீர்
    துணிந்தேயுமக் காட்செய்து வாழலுற்றாற்
    சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்
    பிணிந்தார்பொடி கொண்டுமெய் பூசவல்லீர்
    பெற்றமேற்றுகந் தீர்சுற்றும் வெண்டலைகொண்
    டணிந்தீரடி கேள்அதி கைக்கெடில
    வீரட்டா னத்துறை அம்மனே.     4.1.3
4    முன்னம்மடி யேன்அறி யாமையினான்
    முனிந்தென்னை நலிந்து முடக்கியிடப்
    பின்னையடி யேனுமக் காளும்பட்டேன்
    சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்
    தன்னையடைந் தார்வினை தீர்ப்பதன்றோ
    தலையாயவர் தங்கட னாவதுதான்
    அன்னநடை யார்அதி கைக்கெடில
    வீரட்டா னத்துறை அம்மானே.     4.1.4
5    காத்தாள்பவர் காவல் இகழ்ந்தமையாற்
    கரைநின்றவர் கண்டுகொ ளென்றுசொல்லி
    நீத்தாய கயம்புக நூக்கியிட
    நிலைக்கொள்ளும் வழித்துறை யொன்றறியேன்
    வார்த்தையிது வொப்பது கேட்டறியேன்
    வயிற்றோடு துடக்கி முடக்கியிட
    ஆர்த்தார்புன லார்அதி கைக்கெடில
    வீரட்டா னத்துறை அம்மானே.     4.1.5
6    சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்
    தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
    நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன்
    உன்னாமம் என்னாவின் மறந்தறியேன்
    உலர்ந்தார்தலை யிற்பலி கொண்டுழல்வாய்
    உடலுள் ளுறுசூலை தவிர்த்தருளாய்
    அலந்தேன்அடி யேன்அதி கைக்கெடில
    வீரட்டா னத்துறை அம்மானே.     4.16
7    உயர்ந்தேன்மனை வாழ்க்கையும் ஒண்பொருளும்
    ஒருவர்தலை காவலி லாமையினல்
    வயந்தேயுமக் காட்செய்து வாழலுற்றால்
    வலிக்கின்றது சூலை தவிர்த்தருளீர்
    பயந்தேயென் வயிற்றின கம்படியே
    பறித்துப்புரட் டியறுத் தீர்த்திடநான்
    அயர்ந்தேன்அடி யேன்அதி கைக்கெடில
    வீரட்டா னாத்துறை அம்மானே.     4.1.7
8    வலித்தேன்மனை வாழ்கை மகிழ்ந்தடியேன்
    வஞ்சம்மன மொன்று மிலாமையினாற்
    சலித்தாலொரு வர்துணை யாருமில்லைச்
    சங்கவெண்குழைக் காதுடை எம்பெருமான்
    கலித்தேயென் வயிற்றி னகம்படியே
    கலக்கி மலக்கிட்டுக் கவர்ந்துதின்ன
    அலுத்தேனடி யேன்அதி கைக்கெடில
    வீரட்டா னத்துறை அம்மானே.     4.1.8
9    பொன்போல மிளிர்வதொர் மேனியினீர்
    புரிபுன்சடை யீர்மெலி யும்பிறையீர்
    துன்பேகவ லைபிணி யென்றிவற்றை
    நணுகாமற் றுரந்து கரந்துமிடீர்
    என்போலிக ளும்மை இனித்தெளியார்
    அடியார்படு வதிது வேயாகில்
    அன்பேஅமை யும்மதி கைக்கெடில
    வீரட்டா னத்துறை அம்மானே.     4.1.9
10    போர்த்தாயங்கோ ரானையின் ஈருரிதோல்
    புறங்காடரங் காநட மாடவல்லாய்
    ஆர்த்தானரக் கன்றனை மால்வரைக்கீழ்
    அடர்த்திட்டருள் செய்த வதுகருதாய்
    வேர்த்தும்புரண் டும்விழுந் தும்மெழுந்தால்
    என்வேதனை யான விலக்கியிடாய்
    ஆர்த்தார்புனல் சூழ்அதி கைக்கெடில
    வீரட்டா னத்துறை அம்மானே.     4.1.10

இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீரட்டானேசுவரர், தேவியார் - திருவதிகைநாயகி.
இப்பதிகம் சூலைநோய்தீர ஓதியருளியது.

திருச்சிற்றம்பலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
4.02 திருக்கெடிலவடவீரட்டானம்*
*திருவதிகைவீரட்டானம் என்பதும் இது
    பண் - காந்தாரம்
    திருச்சிற்றம்பலம்

    11    சுண்ணவெண் சந்தனச் சாந்துஞ்
        சுடர்த் திங்கட் சூளாமணியும்
        வண்ண உரிவை யுடையும்
        வளரும் பவள நிறமும்
        அண்ணல் அரண்முர ணேறும்
        அகலம் வளாய அரவும்
        திண்ணன் கெடிலப் புனலும்
        உடையா ரொருவர் தமர்நாம்
        அஞ்சுவ தியாதொன்று மில்லை
        அஞ்ச வருவது மில்லை.     4.2.1
    12    பூண்டதோர் கேழல் எயிறும்
        பொன்றிகழ் ஆமை புரள
        நீண்டதிண் டோ ள்வலஞ் சூழ்ந்து
        நிலாக்கதிர் போலவெண் ணூலுங்
        காண்டகு புள்ளின் சிறகுங்
        கலந்தகட் டங்கக் கொடியும்
        ஈண்டு கெடிலப் புனலும்
        உடையா ரொருவர் தமர்நாம்
        அஞ்சுவ தியாதொன்று மில்லை
        அஞ்ச வருவது மில்லை.     4.2.2
    13    ஒத்த வடத்திள நாகம்
        உருத்திர பட்ட மிரண்டும்
        முத்து வடக்கண் டிகையும்
        முளைத்தெழு மூவிலை வேலுஞ்
        *சித்த வடமும் அதிகைச்
        சேணுயர் வீரட்டஞ் சூழ்ந்து
        தத்துங் கெடிப் புனலும்
        உடையா ரொருவர் தமர்நாம்
        அஞ்சுவ தியாதொன்று மில்லை
        அஞ்ச வருவது மில்லை.
        (*) சித்தவடம் என்பது இத்தலத்துக்குச் சமீபத்திலிருப்பது.    4.2.3
    14    மடமான் மறிபொற் கலையும்
        மழுபாம் பொருகையில் வீணை
        குடமால் வரைய திண்டோ ளுங்
        குனிசிலைக் கூத்தின் பயில்வும்
        இடமால் தழுவிய பாகம்
        இருநில னேற்ற சுவடுந்
        தடமார் கெடிலப் புனலும்
        உடையா ரொருவர் தமர்நாம்
        அஞ்சுவ தியாதொன்று மில்லை
        அஞ்ச வருவது மில்லை.     4.2.4
    15    பலபல காமத்த ராகிப்
        பதைத்தெழு வார்மனத் துள்ளே
        கலமலக் கிட்டுத் திரியுங்
        கணபதி யென்னுங் களிறும்
        வலமேந் திரண்டு சுடரும்
        வான்கயி லாய மலையும்
        நலமார் கெடிலப் புனலும்
        உடையா ரொருவர் தமர்நாம்
        அஞ்சுவ தியாதென்று மில்லை
        அஞ்ச வருவது மில்லை.     4.2.5
    16    கரந்தன கொள்ளி விளக்குங்
        கறங்கு துடியின் முழக்கும்
        பரந்த பதினெண் கணமும்
        பயின்றறி யாதன பாட்டும்
        அரங்கிடை நூலறி வாளர்
        அறியப் படாததோர் கூத்தும்
        நிரந்த கெடிலப் புனலும்
        உடையா ரொருவர் தமர்நாம்
        அஞ்சுவ தியாதொன்று மில்லை
        அஞ்ச வருவது மில்லை.     4.2.6
    17    கொலைவரி வேங்கை அதளுங்
        குலவோ டிலங்குபொற் றோடும்
        விலைபெறு சங்கக் குழையும்
        விலையில் கபாலக் கலனும்
        மலைமகள் கைக்கொண்ட மார்பும்
        மணியார்ந் திலங்கு மிடறும்
        உலவு கெடிலப் புனலும்
        உடையா ரொருவர் தமர்நாம்
        அஞ்சுவ தியாதொன்று மில்லை
        அஞ்ச வருவது மில்லை.     4.2.7
    18    ஆடல் புரிந்த நிலையும்
        அரையில் அசைத்த அரவும்
        பாடல் பயின்ற பல்பூதம்
        பல்லா யிரங்கொள் கருவி
        நாடற் கரியதோர் கூத்தும்
        நன்குயர் வீரட்டஞ் சூழ்ந்து
        ஓடுங் கெடிலப் புனலும்
        உடையா ரொருவர் தமர்நாம்
        அஞ்சுவ தியாதொன்று மில்லை
        அஞ்ச வருவது மில்லை.     4.2.8
    19    சூழு மரவத் துகிலுந்
        துகில்கிழி கோவணக் கீளும்
        யாழின் மொழியவள் அஞ்ச
        அஞ்சா தருவரை போன்ற
        வேழ முரித்த நிலையும்
        விரிபொழில் வீரட்டஞ் சூழ்ந்து
        தாழுங் கெடிலப் புனலும்
        உடையா ரொருவர் தமர்நாம்
        அஞ்சுவ தியாதொன்று மில்லை
        அஞ்ச வருவது மில்லை.     4.2.9
    20    நரம்பெழு கைகள் பிடித்து
        நங்கை நடுங்க மலையை
        உரங்களெல் லாங்கொண் டெடுத்தான்
        ஒன்பதும் ஒன்றும் அலற
        வரங்கள் கொடுத்தருள் செய்வான்
        வளர்பொழில் வீரட்டஞ் சூழ்ந்து
        நிரம்பு கெடிலப் புனலும்
        உடையா ரொருவர் தமர்நாம்
        அஞ்சுவ தியாதொன்று மில்லை
        அஞ்ச வருவது மில்லை.     4.2.10

    இப்பதிகம் சமணர்களேவிய யானை அஞ்சும்படி ஓதி அருளியது.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4. 03 திருவையாறு
    பண் - காந்தாரம்
    திருச்சிற்றம்பலம்

    21    மாதர்ப் பிறைக்கண்ணி யானை
        மலையான் மகளொடும் பாடிப்
        போதொடு நீர்சுமந் தேத்திப்
        புகுவா ரவர்பின் புகுவேன்
        யாதுஞ் சுவடு படாமல்
        ஐயா றடைகின்ற போது
        காதன் மடப்பிடி யோடுங்
        களிறு வருவன கண்டேன்
        கண்டே னவர்திருப் பாதங்
        கண்டறி யாதன கண்டேன்.     4.3.1
    22     போழிளங் கண்ணியி னானைப்
        பூந்துகி லாளொடும் பாடி
        வாழியம் போற்றியென் றேத்தி
        வட்டமிட் டாடா வருவேன்
        ஆழி வலவனின் றேத்தும்
        ஐயா றடைகின்ற போது
        கோழி பெடையொடுங் கூடிக்
        குளிர்ந்து வருவன கண்டேன்
        கண்டே னவர்திருப் பாதங்
        கண்டறி யாதன கண்டேன்.     4.3.2
    23    எரிப்பிறைக் கண்ணியி னானை
        யேந்திழை யாளொடும் பாடி
        முரித்த இலயங்க ளிட்டு
        முகமலர்ந் தாடா வருவேன்
        அரித்தொழு கும்வெள் ளருவி
        ஐயா றடைகின்ற போது
        வரிக்குயில் பேடையொ டாடி
        வைகி வருவன கண்டேன்
        கண்டே னவர்திருப் பாதங்
        கண்டறி யாதன கண்டேன்.     4.3.3
    24    பிறையிளங் கண்ணியி னானைப்
        பெய்வளை யாளொடும் பாடித்
        துறையிளம் பன்மலர் தூவித்
        தோளைக் குளிரத் தொழுவேன்
        அறையிளம் பூங்குயி லாலும்
        ஐயா றடைகின்ற போது
        சிறையிளம் பேடையொ டாடிச்
        சேவல் வருவன கண்டேன்
        கண்டே னவர்திருப் பாதங்
        கண்டறி யாதன கண்டேன்.     4.3.4
    25     ஏடு மதிக்கண்ணி யானை
        ஏந்திழை யாளொடும் பாடிக்
        காடொடு நாடு மலையுங்
        கைதொழு தாடா வருவேன்
        ஆட லமர்ந்துறை கின்ற
        ஐயா றடைகின்ற போது
        பேடை மயிலொடுங் கூடிப்
        பிணைந்து வருவன கண்டேன்
        கண்டே னவர்திருப் பாதங்
        கண்டறி யாதன கண்டேன்.     4.3.5
    26     தண்மதிக் கண்ணியி னானைத்
        தையல்நல் லாளொடும் பாடி
        உண்மெலி சிந்தைய னாகி
        உணரா வுருகா வருவேன்
        அண்ண லமர்ந்துறை கின்ற
        ஐயா றடைகின்ற போது
        வண்ணப் பகன்றிலொ டாடி
        வைகி வருவன கண்டேன்
        கண்டே னவர்திருப் பாதங்
        கண்டறி யாதன கண்டேன்.     4.3.6
    27    கடிமதிக் கண்ணியி னானைக்
        காரிகை யாலொடும் பாடி
        வடிவொடு வண்ண மிரண்டும்
        வாய்வேண் டுவசொல்லி வாழ்வேன்
        அடியிணை ஆர்க்குங் கழலான்
        ஐயா றடைகின்ற போது
        இடிகுர லன்னதோர் ஏனம்
        இசைந்து வருவன கண்டேன்
        கண்டே னவர்திருப் பாதங்
        கண்டறி யாதன கண்டேன்.     4.3.7
    28     விரும்பு மதிக்கண்ணி யானை
        மெல்லிய லாளொடும் பாடிப்
        பெரும்புலர் காலை யெழுந்து
        பெறுமலர் கொய்யா வருவேன்
        அருங்கலம் பொன்மணி யுந்தும்
        ஐயா றடைகின்ற போது
        கருங்கலை பேடையொ டாடிக்
        கலந்து வருவன கண்டேன்
        கண்டே னவர்திருப் பாதங்
        கண்டறி யாதன கண்டேன்.     4.3.8
    29    முற்பிறைக் கண்ணியி னானை
        மொய்குழ லாளொடும் பாடிப்
        பற்றிக் கயிறறுக் கில்லேன்
        பாடியும் ஆடா வருவேன்
        அற்றருள் பெற்றுநின் றாரோ
        டையா றடைகின்ற போது
        நற்றுணைப் பேடையொ டாடி
        நாரை வருவன கண்டேன்
        கண்டே னவர்திருப் பாதங்
        கண்டறி யாதன கண்டேன்.     4.3.9
    30     திங்கள் மதிக்கண்ணி யானைத்
        தேமொழி யாளொடும் பாடி
        எங்கருள் நல்குங்கொ லெந்தை
        எனக்கினி யென்னா வருவேன்
        அங்கிள மங்கைய ராடும்
        ஐயா ரடைகின்ற போது
        பைங்கிளி பேடையொ டாடிப்
        பறந்து வருவன கண்டேன்
        கண்டே னவர்திருப் பாதங்
        கண்டறி யாதன கண்டேன்.     4.3.10
    31    வளர்மதிக் கண்ணியி னானை
        வார்குழ லாளொடும் பாடிக்
        களவு படாததோர் காலங்
        காண்பான் கடைக்கணிக் கின்றேன்
        அளவு படாததோ ரன்போ
        டையா றடைகின்ற போது
        இளமண நாகு தழுவி
        ஏறு வருவன கண்டேன்
        கண்டே னவர்திருப் பாதங்
        கண்டறி யாதன கண்டேன்.     4.3.11

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - செம்பொற்சோதீசுவரர், தேவியார் - அறம்வளர்த்தநாயகி.
    இது இந்தத்தலத்திலிருக்கும் ஆலயமே,
    கயிலாசமாகச் சுவாமி தரிசனங்கட்டளையிட்டபோது ஓதியருளிய பதிகம்.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4. 04 திருவாரூர்
    பண் - காந்தாரம்
    திருச்சிற்றம்பலம்

    32    பாடிளம் பூதத்தி னானும்
        பவளச்செவ் வாய்வண்ணத் தானுங்
        கூடிள மென்முலை யாளைக்
        கூடிய கோலத்தி னானும்
        ஓடிள வெண்பிறை யானும்
        ஒளிதிகழ் சூலத்தி னானும்
        ஆடிளம் பாம்பசைத் தானும்
        ஆரூ ரமர்ந்தஅம் மானே.     4.4.1
    33     நரியைக் குதிரைசெய் வானும்
        நரகரைத் தேவுசெய் வானும்
        விரதங்கொண் டாடவல் லானும்
        விச்சின்றி நாறுசெய் வானும்
        முரசதிர்ந் தானை முன்னோட
        முன்பணிந் தன்பர்கள் ஏத்த
        அரவரைச் சாத்திநின் றானும்
        ஆரூ ரமர்ந்தஅம் மானே.     4.4.2
    34     நீறுமெய் பூசவல் லானும்
        நினைப்பவர் நெஞ்சத்து ளானும்
        ஏறுகந் தேறவல் லானும்
        எரிபுரை மேனியி னானும்
        நாறு கரந்தையி னானும்
        நான்மறைக் கண்டத்தி னானும்
        ஆறு சடைக்கரந் தானும்
        ஆரூ ரமர்ந்தஅம் மானே.     4.4.3
    35    கொம்புநல் வேனி லவனைக்
        குழைய முறுவல்செய் தானுஞ்
        செம்புனல் கொண்டெயில் மூன்றுந்
        தீயெழக் கண்சிவந் தானும்
        வம்புநற் கொன்றையி னானும்
        வாட்கண்ணி வாட்டம தெய்த
        அம்பர ஈருரி யானும்
        ஆரூ ரமர்ந்தஅம் மானே.     4.4.4
    36    ஊழி யளக்கவல் லானும்
        உகப்பவர் உச்சியுள் ளானுந்
        தாழிளஞ் செஞ்சடை யானுந்
        தண்ணமர் திண்கொடி யானுந்
        தோழியர் தூதிடை யாடத்
        தொழுதடி யார்கள் வணங்க
        ஆழி வளைக்கையி னானும்
        ஆரூ ரமர்ந்தஅம் மானே.     4.4.5
    37    ஊர்திரை வேலையுள் ளானும்
        உலகிறந் தொண்பொரு ளானுஞ்
        சீர்தரு பாடலுள் ளானுஞ்
        செங்கண் விடைக்கொடி யானும்
        வார்தரு பூங்குழ லாளை
        மருவி யுடன்வைத் தவனும்
        ஆதிரை நாளுகந் தானும்
        ஆரூ ரமர்ந்தஅம் மானே.     4.4.6
    38     தொழற்கங்கை துன்னிநின் றார்க்குத்
        தோன்றி யருளவல் லானுங்
        கழற்கங்கை பன்மலர் கொண்டு
        காதல் கனற்றநின் றானுங்
        குழற்கங்கை யாளையுள் வைத்துக்
        கோலச் சடைக்கரந் தானும்
        அழற்கங்கை ஏந்தவல் லானும்
        ஆரூ ரமர்ந்தஅம் மானே.     4.4.7
    39    ஆயிரந் தாமரை போலும்
        ஆயிரஞ் சேவடி யானும்
        ஆயிரம் பொன்வரை போலும்
        ஆயிரந் தோளுடை யானும்
        ஆயிர ஞாயிறு போலும்
        ஆயிர நீண்முடி யானும்
        ஆயிரம் பேருகந் தானும்
        ஆரூ ரமர்ந்தஅம் மானே.     4.4.8
    40    வீடரங் காநிறுப் பானும்
        விசும்பினை வேதி தொடர
        ஓடரங் காகவைத் தானும்
        ஓங்கியோ ரூழியுள் ளானுங்
        காடரங் காமகிழ்ந் தானுங்
        காரிகை யார்கள் மனத்துள்
        ஆடரங் கத்திடை யானும்
        ஆரூ ரமர்ந்தஅம் மானே.     4.4.9
    41    பையஞ் சுடர்விடு நாகப்
        பள்ளிகொள் வானுள்ளத் தானுங்
        கையஞ்சு நான்குடை யானைக்
        கால்விர லாலடர்த் தானும்
        பொய்யஞ்சி வாய்மைகள் பேசிப்
        புகழ்புரிந் தார்க்கருள் செய்யும்
        ஐயஞ்சின் அப்புறத் தானும்
        ஆரூ ரமர்ந்தஅம் மானே.     4.4.10

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4. 05 திருவாரூர்ப்பழமொழி
    பண் - காந்தாரம்
    திருச்சிற்றம்பலம்

    42    மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித்த
        மேனியான் தாள்தொ ழாதே
        உய்யலா மென்றெண்ணி உறிதூக்கி
        யுழிதந்தென் உள்ளம் விட்டுக்
        கொய்யுலா மலர்ச்சோலைக் குயில்கூவ
        மயிலாலும் ஆரூ ரரைக்
        கையினாற் றொழா தொழிந்து
        கனியிருக்கக் காய்கவர்ந்த கள்வனேனே.     4.5.1
    43     என்பிருத்தி நரம்புதோல் புகப்பெய்திட்
        டென்னையோர் உருவ மாக்கி
        இன்பிருத்தி முன்பிருந்த வினைதீர்த்திட்
        டென்னுள்ளங் கோயி லாக்கி
        அன்பிருத்தி அடியேனைக் கூழாட்கொண்
        டருள்செய்த ஆரூ ரர்தம்
        முன்பிருக்கும் விதியின்றி முயல்விட்டுக்
        காக்கைப்பின் போன வாறே.     4.5.2
    44    பெருகுவித்தென் பாவத்தைப் பண்டெலாங்
        குண்டர்கள்தஞ் சொல்லே கேட்டு
        உருகுவித்தென் உள்ளத்தின் உள்ளிருந்த
        கள்ளத்தைத் தள்ளிப் போக்கி
        அருகுவித்துப் பிணிகாட்டி ஆட்கொண்டு
        பிணிதீர்த்த ஆரூ ரர்தம்
        அருகிருக்கும் விதியின்றி அறமிருக்க
        மறம்விலைக்குக் கொண்ட வாறே.     4.5.3
    45    குண்டானாய்த் தலைபறித்துக் குவிமுலையார்
        நகைகாணா துழிதர் வேனைப்
        பண்டமாப் படுத்தென்னைப் பால்தலையிற்
        றெளித்துத்தன் பாதங் காட்டித்
        தொண்டெலா மிசைபாடத் தூமுறுவல்
        அருள்செய்யும் ஆரூ ரரைப்
        பண்டெலாம் அறியாதே பனிநீராற்
        பரவைசெயப் பாவித் தேனே.     4.5.4
    46    துன்னாகத் தேனாகித் துர்ச்சனவர்
        சொற்கேட்டுத் துவர்வாய்க் கொண்டு
        என்னாகத் திரிதந்தீங் கிருகையேற்
        றிடவுண்ட ஏழை யேன்நான்
        பொன்னாகத் தடியேனைப் புகப்பெய்து
        பொருட்படுத்த ஆரூ ரரை
        என்னாகத் திருத்தாதே ஏதன்போர்க்
        காதனாய் அகப்பட் டேனே.     4.5.5
    47    பப்போதிப் பவணனாய்ப் பறித்ததொரு
        தலையோடே திரிதர் வேனை
        ஒப்போட வோதுவித்தென் உள்ளத்தின்
        உள்ளிருந்தங் குறுதி காட்டி
        அப்போதைக் கப்போதும் அடியவர்கட்
        காரமுதாம் ஆரூ ரரை
        எப்போது நினையாதே இருட்டறையின்
        மலடுகறந் தெய்த்த வாறே.     4.5.6
    48     கதியொன்றும் அறியாதே கண்ணழலத்
        தலைபறித்துக் கையில் உண்டு
        பதியொன்று நெடுவீதிப் பலர்காண
        நகைநாணா துழிதர் வேற்கு
        மதிதந்த ஆருரில் வார்தேனை
        வாய்மடுத்துப் பருகி உய்யும்
        விதியின்றி மதியிலியேன் விளக்கிருக்க
        மின்மினித்தீக் காய்ந்த வாறே.     4.5.7
    49     பூவையாய்த் தலைபறித்துப் பொறியற்ற
        சமண்நீசர் சொல்லே கேட்டுக்
        காவிசேர் கண்மடவார்க் கண்டோ டிக்
        கதவடைக்குங் கள்வ னேன்றன்
        ஆவியைப் போகாமே தவிர்த்தென்னை
        யாட்கொண்ட ஆரூ ரரைப்
        பாவியேன் அறியாதே பாழூரிற்
        பயிக்கம்புக் கெய்த்த வாறே.     4.5.8
    50    ஒட்டாத வாளவுணர் புரம்மூன்றும்
        ஓரம்பின் வாயின் வீழக்
        கட்டானைக் காமனையுங் காலனையுங்
        கண்ணினொடு காலின் வீழ
        அட்டானை ஆரூரில் அம்மானை
        ஆர்வச்செற் றக்கு ரோதந்
        தட்டானைச் சாராதே தவமிருக்க
        அவஞ்செய்து தருக்கி னேனே.     4.5.9
    51     மறுத்தானோர் வல்லரக்கன் ஈரைந்து
        முடியினொடு தோளுந் தாளும்
        இறுத்தானை எழில்முளரித் தவிசின்மிசை
        இருத்தான்றன் தலையி லொன்றை
        அறுத்தானை ஆரூரில் அம்மானை
        ஆலாலம் உண்டு கண்டங்
        கறுத்தானைக் கருதாதே கரும்பிருக்க
        இரும்புகடித் தெய்த்த வாறே.     4.5.10

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4. 06 திருக்கழிப்பாலை
    பண் - காந்தாரம்
    திருச்சிற்றம்பலம்

    52    வனபவள வாய்திறந்து வானவர்க்குந்
        தானவனே என்கின் றாளாற்
        சினபவளத் திண்டோ ள்மேற் சேர்ந்திலங்கு
        வெண்ணீற்றன் என்கின் றாளால்
        அனபவள மேகலையோ டப்பாலைக்
        கப்பாலான் என்கின் றாளாற்
        கனபவளஞ் சிந்துங் கழிப்பாலைச்
        சேர்வானைக் கண்டாள் கொல்லோ.     4.6.1
    53    வண்டுலவு கொன்றை வளர்புன்
        சடையானே என்கின் றாளால்
        விண்டலர்ந்து நாறுவதோர் வெள்ளெருக்க
        நாண்மலருண் டென்கின் றாளால்
        உண்டயலே தோன்றுவதோர் உத்தரியப்
        பட்டுடையன் என்கின் றாளாற்
        கண்டயலே தோன்றுங் கழிப்பாலைச்
        சேர்வானைக் கண்டாள் கொல்லோ.     4.6.2
    54    பிறந்திளைய திங்களெம் பெம்மான்
        முடிமேல தென்கின் றாளால்
        நிறங்கிளருங் குங்குமத்தின் மேனி
        யவன்நிறமே யென்கின் றாளால்
        மறங்கிளர்வேற் கண்ணாள் மணிசேர்
        மிடற்றவனே யென்கின் றாளாற்
        கறங்கோத மல்குங் கழிப்பாலைச்
        சேர்வானைக் கண்டாள் கொல்லோ.     4.6.3
    55     இரும்பார்ந்த சூலத்தன் ஏந்தியோர்
        வெண்மழுவன் என்கின் றாளாற்
        சுரும்பார்ந்த மலர்க்கொன்றைச் சுண்ணவெண்
        ணீற்றவனே என்கின் றாளாற்
        பெரும்பால னாகியோர் பிஞ்ஞக
        வேடத்தன் என்கின் றாளாற்
        கரும்பானல் பூக்குங் கழிப்பாலைச்
        சேர்வானைக் கண்டாள் கொல்லோ.     4.6.4
    56     பழியிலான் புகழுடையன் பால்நீற்றான்
        ஆனேற்றன் என்கின் றாளால்
        விழியுலாம் பெருந்தடங்கண் இரண்டல்ல
        மூன்றுளவே என்கின் றாளாற்
        சுழியுலாம் வருகங்கை தோய்ந்த
        சடையவனே என்கின் றாளாற்
        கழியுலாஞ் சூழ்ந்த கழிப்பாலைச்
        சேர்வானைக் கண்டாள் கொல்லோ.     4.6.5
    57     பண்ணார்ந்த வீணை பயின்ற
        விரலவனே என்கின் றாளால்
        எண்ணார் புரமெரித்த எந்தை
        பெருமானே என்கின் றாளாற்
        பண்ணார் முழவதிரப் பாடலோ
        டாடலனே என்கின் றாளாற்
        கண்ணார் பூஞ்சோலைக் கழிப்பாலைச்
        சேர்வானைக் கண்டாள் கொல்லோ.     4.6.6
    58     முதிருஞ் சடைமுடிமேல் முழ்கும்
        இளநாகம் என்கின் றாளால்
        அதுகண் டதனருகே தோன்றும்
        இளமதியம் என்கின் றாளாற்
        சதுர்வெண் பளிக்குக் குழைகாதின்
        மின்னிடுமே என்கின் றாளாற்
        கதிர்முத்தஞ் சிந்துங் கழிப்பாலைச்
        சேர்வானைக் கண்டாள் கொல்லோ.     4.6.7
    59    ஓரோத மோதி உலகம்
        பலிதிரிவான் என்கின் றாளால்
        நீரோத மேற நிமிர்புன்
        சடையானே என்கின் றாளாற்
        பாரோத மேனிப் பவளம்
        அவனிறமே என்கின் றாளாற்
        காரோத மல்குங் கழிப்பாலைச்
        சேர்வானைக் கண்டாள் கொல்லோ.     4.6.8
    60     வானுலாந் திங்கள் வளர்புன்
        சடையானே என்கின் றாளால்
        ஊனுலாம் வெண்டலைகொண் டூரூர்
        பலிதிரிவான் என்கின் றாளாற்
        தேனுலாங் கோதை திளைக்குந்
        திருமார்பன் என்கின் றாளாற்
        கானுலாஞ் சூழ்ந்த கழிப்பாலைச்
        சேர்வானைக் கண்டாள் கொல்லோ.     4.6.9
    61    அடர்ப்பரிய இராவணனை அருவரைக்கீழ்
        அடர்த்தவனே என்கின் றாளாற்
        சுடர்ப்பெரிய திருமேனிச் சுண்ணவெண்
        ணீற்றவனே என்கின் றாளால்
        மடற்பெரிய ஆலின்கீழ் அறம்நால்வர்க்
        கன்றுரைத்தான் என்கின் றாளாற்
        கடற்கருவி சூழ்ந்த கழிப்பாலைச்
        சேர்வானைக் கண்டாள் கொல்லோ.     4.6.10

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - பால்வண்ணநாதர், தேவியார் - வேதநாயகியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4. 07 திருஏகம்பம்
    பண் - காந்தாரம்
    திருச்சிற்றம்பலம்

    62    கரவாடும் வன்னெஞ்சர்க் கரியானைக் கரவார்பால்
    விரவாடும் பெருமானை விடையேறும் வித்தகனை
    அரவாடச் சடைதாழ அங்கையினில் அனலேந்தி
    இரவாடும் பெருமானை என்மனத்தே வைத்தேனே.     4.7.1
    63     தேனோக்குங் கிளிமழலை உமைகேள்வன் செழும்பவளந்
    தானோக்குந் திருமேனி தழலுருவாஞ் சங்கரனை
    வானோக்கும் வளர்மதிசேர் சடையானை வானோர்க்கும்
    ஏனோர்க்கும் பெருமானை என்மனத்தே வைத்தேனே.     4.7.2
    64     கைப்போது மலர்தூவிக் காதலித்து வானோர்கள்
    முப்போதும் முடிசாய்த்துத் தொழநின்ற முதல்வனை
    அப்போது மலர்தூவி ஐம்புலனும் அகத்தடக்கி
    எப்போதும் இனியானை என்மனத்தே வைத்தேனே.     4.7.3
    65    அண்டமாய் ஆதியாய் அருமறையோ டைம்பூதப்
    பிண்டமாய் உலகுக்கோர் பெய்பொருளாம் பிஞ்ஞகனைத்
    தொண்டர்தாம் மலர்தூவிச் சொன்மாலை புனைகின்ற
    இண்டைசேர் சடையானை என்மனத்தே வைத்தேனே.     4.7.4
    66    ஆறேறு சடையானை ஆயிரம்பே ரம்மானைப்
    பாறேறு படுதலையிற் பலிகொள்ளும் பரம்பரனை
    நீறேறு திருமேனி நின்மலனை நெடுந்தூவி
    ஏறேறும் பெருமானை என்மனத்தே வைத்தேனே.     4.7.5
    67    தேசனைத் தேசங்கள் தொழநின்ற திருமாலாற்
    பூசனைப் பூசனைகள் உகப்பானைப் பூவின்கண்
    வாசனை மலைநிலநீர் தீவளிஆ காசமாம்
    ஈசனை எம்மானை என்மனத்தே வைத்தேனே.     4.7.6
    68     நல்லானை நல்லான நான்மறையோ டாறங்கம்
    வல்லானை வல்லார்கள் மனத்துறையும் மைந்தனைச்
    சொல்லானைச் சொல்லார்ந்த பொருளானைத் துகளேதும்
    இல்லானை எம்மானை என்மனத்தே வைத்தேனே.     4.7.7
    69    விரித்தானை நால்வர்க்கு வெவ்வேறு வேதங்கள்
    புரித்தானைப் பதஞ்சந்திப் பொருளுருவாம் புண்ணியனைத்
    தரித்தானைக் கங்கைநீர் தாழ்சடைமேல் மதில்மூன்றும்
    எரித்தானை எம்மானை என்மனத்தே வைத்தேனே.     4.7.8
    70     ஆகம்பத் தரவணையான் அயன்அறிதற் கரியானைப்
    பாகம்பெண் ணாண்பாக மாய்நின்ற பசுபதியை
    மாகம்ப மறையோதும் இறையானை மதிற்கச்சி
    ஏகம்ப மேயானை என்மனத்தே வைத்தேனே.     4.7.9
    71    அடுத்தானை உரித்தானை அருச்சுனற்குப் பாசுபதங்
    கொடுத்தானைக் குலவரையே சிலையாகக் கூரம்பு
    தொடுத்தானைப் புரமெரியச் சுனைமல்கு கயிலாயம்
    எடுத்தானைத் தடுத்தானை என்மனத்தே வைத்தேனே.     4.7.10

    இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - ஏகாம்பரநாதர்,
    தேவியார் - காமாட்சியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4. 08 சிவனெனுமோசை
    பண் - பியந்தைக்காந்தாரம்
    திருச்சிற்றம்பலம்

    72    சிவனெனு மோசையல்ல தறையோ வுலகிற்
        றிருநின்ற செம்மை யுளதே
        அவனுமோ ரையமுண்ணி யதளாடை யாவ
        ததன்மேலொ ராட லரவங்
        கவணள வுள்ளஉண்கு கரிகாடு கோயில்
        கலனாவ தோடு கருதில்
        அவனது பெற்றிகண்டு மவனீர்மை கண்டு
        மகநேர்வர் தேவ ரவரே.     4.8.1
    73    விரிகதிர் ஞாயிறல்லர் மதியல்லர் வேத
        விதியல்லர் விண்ணு நிலனுந்
        திரிதரு வாயுவல்லர் செறுதீயு மல்லர்
        தெளிநீரு மல்லர் தெரியில்
        அரிதரு கண்ணியாளை ஒருபாக மாக
        அருள்கார ணத்தில் வருவார்
        எரியர வாரமார்பர் இமையாரு மல்லர்
        இமைப்பாரு மல்லர் இவரே.     4.8.2
    74    தேய்பொடி வெள்ளைபூசி யதன்மேலோர் திங்கள்
        திலகம் பதித்த நுதலர்
        காய்கதிர் வேலைநீல ஒளிமா மிடற்றர்
        கரிகாடர் காலோர் கழலர்
        வேயுட னாடுதோளி அவள்விம்ம வெய்ய
        மழுவீசி வேழவுரி போர்த்
        தேயிவ ராடுமாறும் இவள்காணு மாறும்
        இதுதா னிவர்க்கோ ரியல்பே.     4.8.3
    75     வளர்பொறி யாமைபுல்கி வளர்கோதை வைகி
        வடிதோலும் நூலும் வளரக்
        கிளர்பொறி நாகமொன்று மிளிர்கின்ற மார்பர்
        கிளர்காடு நாடு மகிழ்வர்
        நளிர்பொறி மஞ்ஞையன்ன தளிர்போன்ற சாய
        லவள்தோன்று வாய்மை பெருகிக்
        குளிர்பொறி வண்டுபாடு குழலா லொருத்தி
        யுளள்போல் குலாவி யுடனே.     4.8.4
    76    உறைவது காடுபோலு முரிதோ லுடுப்பர்
        விடையூர்வ தோடு கலனா
        இறையிவர் வாழும்வண்ண மிதுவேலு மீச
        ரொருபா லிசைந்த தொருபால்
        பிறைநுதல் பேதைமாதர் உமையென்னு நங்கை
        பிறழ்பாட நின்று பிணைவான்
        அறைகழல் வண்டுபாடும் அடிநீழ லாணை
        கடவா தமர ருலகே.     4.8.5
    77     கணிவளர் வேங்கையோடு கடிதிங்கள் கண்ணி
        கழல்கால் சிலம்ப அழகார்
        அணிகிள ராரவெள்ளை தவழ்சுண்ண வண்ண
        மியலா ரொருவ ரிருவர்
        மணிகிளர் மஞ்ஞையால மழையாடு சோலை
        மலையான் மகட்கு மிறைவர்
        அணிகிள ரன்னவண்ணம் அவள் வண்ணவண்ணம்
        அவர்வண்ண வண்ணம் அழலே.     4.8.6
    78    நகைவலர் கொன்றைதுன்று நகுவெண் டலையர்
        நளிர்கங்கை தங்கு முடியர்
        மிகைவளர் வேதகீத முறையோடும் வல்ல
        கறைகொள் மணிசெய் மிடறர்
        முகைவளர் கோதைமாதர் முனிபாடு மாறு
        மெரியாடு மாறு மிவர்கைப்
        பகைவளர் நாகம்வீசி மதியங்கு மாறு
        மிதுபோலும் ஈச ரியல்பே.     4.8.7
    79    ஒளிவளர் கங்கைதங்கு மொளிமா லயன்ற
        னுடல்வெந்து வீய சுடர்நீ
        றணிகிள ராரவெள்ளை தவழ்சுண்ண வண்ணர்
        தமியா ரொருவ ரிருவர்
        களிகிளர் வேடமுண்டோ ர் கடமா வுரித்த
        உடைதோல் தொடுத்த கலனார்
        அணிகிள ரன்னதொல்லை யவள்பாக மாக
        எழில்வேத மோது மவரே.     4.8.8
    80    மலைமட மங்கையோடும் வடகங்கை நங்கை
        மணவாள ராகி மகிழ்வர்
        தலைகல னாகவுண்டு தனியே திரிந்து
        தவவாண ராகி முயல்வர்
        விலையிலி சாந்தமென்று வெறிநீறு பூசி
        விளையாடும் வேட விகிர்தர்
        அலைகடல் வெள்ளமுற்று மலறக் கடைந்த
        அழல்நஞ்ச முண்ட வவரே.     4.8.9
    81    புதுவிரி பொன்செயோலை யொருகாதோர் காது
        சுரிசங்க நின்று புரள
        விதிவிதி வேதகீத மொருபாடு மோத
        மொருபாடு மெல்ல நகுமால்
        மதுவிரி கொன்றைதுன்று சடைபாக மாதர்
        குழல்பாக மாக வருவர்
        இதுஇவர் வண்ணவண்ணம் இவள்வண்ண வண்ணம்
        எழில்வண்ண வண்ண மியல்பே.     4.8.10

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4. 9 திருஅங்கமாலை
    பண் - சாதாரி
    திருச்சிற்றம்பலம்

    82     தலையே நீவணங்காய் - தலை
        மாலை தலைக்கணிந்து
        தலையா லேபலி தேருந் தலைவனைத்
        தலையே நீவணங்காய்.     4.9.1
    83    கண்காள் காண்மின்களோ - கடல்
        நஞ்சுண்ட கண்டன்றன்னை
        எண்டோ ள் வீசிநின் றாடும் பிரான்றன்னைக்
        கண்காள் காண்மின்களோ.     4.9.2
    84    செவிகாள் கேண்மின்களோ - சிவன்
        எம்மிறை செம்பவள
        எரிபோல் மேனிப்பி ரான்றிறம் எப்போதுஞ்
        செவிகள் கேண்மின்களோ.     4.9.3
    85    மூக்கே நீமுரலாய் - முது
        காடுறை முக்கணனை
        வாக்கே நோக்கிய மங்கை மணாளனை
        மூக்கே நீமுரலாய்.     4.9.4
    86     வாயே வாழ்த்துகண்டாய் - மத
        யானை யுரிபோர்த்துப்
        பேய்வாழ் காட்டகத் தாடும் பிரான்றன்னை
        வாயே வாழ்த்துகண்டாய்.     4.9.5
    87    நெஞ்சே நீநினையாய் - நிமிர்
        புன்சடை நின்மலனை
        மஞ்சா டும்மலை மங்கை மணாளனை
        நெஞ்சே நீநினையாய்.     4.9.6
    88     கைகாள் கூப்பித்தொழீர் - கடி
        மாமலர் தூவிநின்று
        பைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனைக்
        கைகள் கூப்பித்தொழீர்.     4.9.7
    89    ஆக்கை யாற்பயனென் - அரன்
        கோயில் வலம்வந்து
        பூக்கை யாலட்டிப் போற்றி யென்னாதவிவ்
        வாக்கை யாற்பயனென்.     4.9.8
    90    கால்க ளாற்பயனென் - கறைக்
        கண்ட னுறைகோயில்
        கோலக் கோபுரக் கோகர ணஞ்சூழாக்
        கால்க ளாற்பயனென்.     4.9.9
    91    உற்றா ராருளரோ - உயிர்
        கொண்டு போம்பொழுது
        குற்றா லத்துறை கூத்தனல் லால்நமக்
        குற்றார் ஆருளரோ.     4.9.10
    92     இறுமாந் திருப்பன்கொலோ - ஈசன்
        பல்கணத் தெண்ணப்பட்டுச்
        சிறுமா னேந்திதன் சேவடிக் கீழ்ச்சென்றங்
        கிறுமாந் திருப்பன்கொலோ.     4.9.11
    93    தேடிக் கண்டுகொண்டேன் - திரு
        மாலொடு நான்முகனுந்
        தேடித் தேடொணாத் தேவனை என்னுளே
        தேடிக் கண்டுகொண்டேன்.     4.9.12

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4. 10 திருக்கெடிலவாணர்
    பண் - காந்தாரம்
    திருச்சிற்றம்பலம்

    94    முளைக்கதிர் இளம்பிறை மூழ்க வெள்ளநீர்
    வளைத்தெழு சடையினர் மழலை வீணையர்
    திளைத்ததோர் மான்மழுக் கையர் செய்யபொன்
    கிளைத்துழித் தோன்றிடுங் கெடில வாணரே.     4.10.1
    95    ஏறினர் ஏறினை ஏழை தன்னொரு
    கூறினர் கூறினர் வேதம் அங்கமும்
    ஆறினர் ஆறிடு சடையர் பக்கமுங்
    கீறின வுடையினர் கெடில வாணரே.     4.10.2
    96    விடந்திகழ் கெழுதரு மிடற்றர் வெள்ளைநீ
    றுடம்பழ கெழுதுவர் முழுதும் வெண்ணிலாப்
    படந்தழ கெழுதரு சடையிற் பாய்புனல்
    கிடந்தழ கெழுதிய கெடில வாணரே.     4.10.3
    97    விழுமணி அயிலெயிற் றம்பு வெய்யதோர்
    கொழுமணி நெடுவரை கொளுவிக் கோட்டினார்
    செழுமணி மிடற்றினர் செய்யர் வெய்யதோர்
    கெழுமணி அரவினர் கெடில வாணரே.     4.10.4
    98     குழுவினர் தொழுதெழும் அடியர் மேல்வினை
    தழுவின கழுவுவர் பவள மேனியர்
    மழுவினர் மான்மறிக் கையர் மங்கையைக்
    கெழுவின யோகினர் கெடில வாணரே.     4.10.5
    99    அங்கையில் அனலெரி யேந்தி யாறெனும்
    மங்கையைச் சடையிடை மணப்பர் மால்வரை
    நங்கையைப் பாகமு நயப்பர் தென்றிசைக்
    கெங்கைய தெனப்படுங் கெடில வாணரே.     4.10.6
    100    கழிந்தவர் தலைகல னேந்திக் காடுறைந்
    திழிந்தவ ரொருவரென் றெள்க வாழ்பவர்
    வழிந்திழி மதுகர மிழற்ற மந்திகள்
    கிழிந்ததேன் நுகர்தருங் கெடில வாணரே.     4.10.7
    101    கிடந்தபாம் பருகுகண் டரிவை பேதுறக்
    கிடந்தபாம் பவளையோர் மயிலென் றையுறக்
    கிடந்தநீர்ச் சடைமிசைப் பிறையும் ஏங்கவே
    கிடந்துதான் நகுதலைக் கெடில வாணரே.     4.10.8
    102    வெறியுறு விரிசடை புரள வீசியோர்
    பொறியுறு புலியுரி யரைய தாகவும்
    நெறியுறு குழலுமை பாக மாகவுங்
    கிறிபட உழிதர்வர் கெடில வாணரே.     4.10.9
    103    பூண்டதோர் அரக்கனைப் பொருவில் மால்வரைத்
    தூண்டுதோ ளவைபட அடர்த்த தாளினார்
    ஈண்டுநீர்க் கமலவாய் மேதி பாய்தரக்
    கீண்டுதேன் சொரிதருங் கெடில வாணரே.     4.10.10

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4. 11 நமச்சிவாயப்பதிகம்
    பண் - காந்தாரம்
    திருச்சிற்றம்பலம்

    104    சொற்றுணை வேதியன் சோதி வானவன்
    பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
    கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
    நற்றுணை யாவது நமச்சி வாயவே.     4.11.1
    105     பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை
    ஆவினனுக் கருங்கலம் அரனஞ் சாடுதல்
    கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது
    நாவினுக் கருங்கலம் நமச்சி வாயவே.     4.11.2
    106     விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
    உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம்
    பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை
    நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே.     4.11.3
    107     இடுக்கண்பட் டிருக்கினும் இரந்தி யாரையும்
    விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம்
    அடுக்கற்கீழ்க் கிடக்கினு மருளின் நாமுற்ற
    நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே.     4.11.4
    108     வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம்
    அந்தணர்க் கருங்கலம் அருமறை யாறங்கந்
    திங்களுக் கருங்கலந் திகழு நீண்முடி
    நங்களுக் கருங்கலம் நமச்சி வாயவே.     4.11.5
    109     சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால்
    நலமிலன் நாடொறு நல்கு வான்நலன்
    குலமில ராகிலுங் குலத்திற் கேற்பதோர்
    நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே.     4.11.6
    110     வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள்
    கூடினார் அந்நெறி கூடிச் சென்றலும்
    ஓடினே னோடிச்சென் றுருவங் காண்டலும்
    நாடினேன் நாடிற்று நமச்சி வாயவே.     4.11.7
    111     இல்லக விளக்கது இருள் கெடுப்பது
    சொல்லக விளக்கது சோதி யுள்ளது
    பல்லக விளக்கது பலருங் காண்பது
    நல்லக விளக்கது நமச்சி வாயவே.     4.11.8
    112     முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன்
    தன்னெறி யேசர ணாதல் திண்ணமே
    அந்நெறி யேசென்றங் கடைந்த வர்க்கெலாம்
    நன்னெறி யாவது நமச்சி வாயவே.     4.11.9
    113     மாப்பிணை தழுவிய மாதோர் பாகத்தன்
    பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ
    நாப்பிணை தழுவிய நமச்சி வாயப்பத்
    தேத்தவல் லார்தமக் கிடுக்க ணில்லையே.     4.11.10

    இது சமணர்கள் கற்றூணிற்கட்டிக் கடலிலே வீழ்த்தினபோது ஓதியருளியது.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4. 12 திருப்பழனம்
    பண் - பழந்தக்கராகம்
    திருச்சிற்றம்பலம்

    114    சொன்மாலை பயில்கின்ற குயிலினங்காள் சொல்லீரே
    பன்மாலை வரிவண்டு பண்மிழற்றும் பழனத்தான்
    முன்மாலை நகுதிங்கள் முகிழ்விளங்கு முடிச்சென்னிப்
    பொன்மாலை மார்பன்என் புதுநலமுண் டிகழ்வானோ.     4.12.1
    115     கண்டகங்காள் முண்டகங்காள் கைதைகாள் நெய்தல்காள்
    பண்டரங்க வேடத்தான் பாட்டோ வாப் பழனத்தான்
    வண்டுலாந் தடமூழ்கி மற்றவனென் தளிர்வண்ணங்
    கொண்டநாள் தானறிவான் குறிக்கொள்ளா தொழிவானோ.     4.12.2
    116     *மனைக்காஞ்சி இளங்குருகே மறந்தாயோ மதமுகத்த
    பனைக்கைமா வுரிபோர்த்தான் பலர்பாடும் பழனத்தான்
    நினைக்கின்ற நினைப்பெல்லாம் உரையாயோ நிகழ்வண்டே
    சுனைக்குவளை மலர்க்கண்ணாள் சொற்றூதாய்ச் சோர்வாளோ.
    * மனைக்காஞ்சியென்பது வீட்டுக்குச் சமீபத்திலிருக்குங் காஞ்சிமரம்.    4.12.3
    117     புதியையாய் இனியையாம் பூந்தென்றால் புறங்காடு
    பதியாவ திதுவென்று பலர்பாடும் பழனத்தான்
    மதியாதார் வேள்விதனை மதித்திட்ட மதிகங்கை
    விதியாளன் என்னுயிர்மேல் விளையாடல் விடுத்தானோ.     4.12.4
    118     மண்பொருந்தி வாழ்பவர்க்கும் மாதீர்த்த வேதியர்க்கும்
    விண்பொருந்து தேவர்க்கும் வீடுபேறாய் நின்றானைப்
    பண்பொருந்த இசைபாடும் பழனஞ்சேர் அப்பனையென்
    கண்பொருந்தும் போழ்தத்துங் கைவிடநான் கடவேனோ.     4.12.5
    119     பொங்கோத மால்கடலிற் புறம்புறம்போய் இரைதேருஞ்
    செங்கால்வெண் மடநாராய் செயற்படுவ தறியேன்நான்
    அங்கோல வளைகவர்ந்தான் அணிபொழில்சூழ் பழனத்தான்
    தங்கோல நறுங்கொன்றைத் தாரருளா தொழிவானோ.     4.12.6
    120     துணையார முயங்கிப்போய்த் துறைசேரும் மடநாராய்
    பணையார வாரத்தான் பாட்டோ வாப் பழனத்தான்
    கணையார இருவிசும்பிற் கடியரணம் பொடிசெய்த
    இணையார மார்பன்என் எழில்நலமுண் டிகழ்வானோ.     4.12.7
    121     *கூவைவாய் மணிவரன்றிக் கொழித்தோடுங் **காவிரிப்பூம்
    பாவைவாய் முத்திலங்கப் பாய்ந்தாடும் பழனத்தான்
    கோவைவாய் மலைமகள்கோன் கொல்லேற்றின் கொடியாடைப்
    பூவைகாள் மழலைகாள் போகாத பொழுதுளதே.

    *கூவைவாய்மணி என்பது பூமியினிடத்தில்
    பொருந்திய முத்துக்கள் - அவையாவன -
    யானைக்கொம்பு, பன்றிக்கொம்பு, நாகம், பசுவின்பல்,
    மூங்கிற்கணு, கொக்கின்கழுத்து, கற்புள்ள
    மாதர்கண்டம் என்னுமிவ்விடங்களி லுண்டாயிருக்கு
    முத்துக்களாம்.
    ** காவிரிப்பூம்பாவைவாய் முத்து என்பது நீர்முத்து
    எனக்கொள்க. அவை - சங்கு, இப்பி, மீன், தாமரைமலர்
    என்னு மிவைகளி லுண்டாகு முத்துக்கள். இதனை
    "சிறைகொள் நீர்த்தரளத் திரல்கொணித்திலத்த" எனத்
    திருமாளிகைத்தேவர் அருளிச்செய்த திருவிசைப்பா,
    2-வது பதிகம் 5-வது திருப்பாடலானுமுணர்க.    4.12.8
    122     புள்ளிமான் பொறியரவம் புள்ளுயர்த்தான் மணிநாகப்
    பள்ளியான் தொழுதேத்த இருக்கின்ற பழனத்தான்
    உள்ளுவார் வினைதீர்க்கும் என்றுரைப்பர் உலகெல்லாங்
    கள்ளியேன் நான்இவற்கென் கனவளையுங் கடவேனோ.     4.12.9
    123     வஞ்சித்தென் வளைகவர்ந்தான் வாரானே யாயிடினும்
    பஞ்சிக்காற் சிறகன்னம் பரந்தார்க்கும் பழனத்தான்
    அஞ்சிப்போய்க் கலிமெலிய அழலோம்பும் அப்பூதி
    குஞ்சிப்பூ வாய்நின்ற சேவடியாய் கோடியையே.     4.12.10

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - ஆபத்சகாயர், தேவியார் - பெரியநாயகியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.13 திருவையாறு
    பண் - பழந்தக்கராகம்
    திருச்சிற்றம்பலம்

    124    விடகிலேன் அடிநாயேன் வேண்டியக்கால் யாதொன்றும்
    இடைகிலேன் அமணர்கள்தம் அறவுறைகேட் டலமலந்தேன்
    தொடர்கின்றேன் உன்னுடைய தூமலர்ச்சே வடிகாண்பான்
    அடைகின்றேன் ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே.     4.13.1
    125     செம்பவளத் திருவுருவர் திகழ்சோதி குழைக்காதர்
    கொம்பமருங் கொடிமருங்கிற் கோல்வளையா ளொருபாகர்
    வம்பவிழும் மலர்க்கொன்றை வளர்சடைமேல் வைத்துகந்த
    அம்பவள ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே.     4.13.2
    126     நணியானே சேயானே நம்பானே செம்பொன்னின்
    துணியானே தோலானே சுண்ணவெண் ணீற்றானே
    மணியானே வானவர்க்கு மருந்தாகிப் பிணிதீர்க்கும்
    அணியானே ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே.     4.13.3
    127     ஊழித்தீ யாய்நின்றாய் உள்குவார் உள்ளத்தாய்
    வாழித்தீ யாய்நின்றாய் வாழ்த்துவார் வாயானே
    பாழித்தீ யாய்நின்றாய் படர்சடைமேற் பனிமதியம்
    ஆழித்தீ ஐயாறார்க் காளாய்நான் உய்ந்தேனே.     4.13.4
    128     சடையானே சடையிடையே தவழுந்தண் மதியானே
    விடையானே விடையேறிப் புரமெரித்த வித்தகனே
    உடையானே உடைதலைகொண் டூரூருண் பலிக்குழலும்
    அடையானே ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே.     4.13.5
    129     நீரானே தீயானே நெதியானே கதியானே
    ஊரானே உலகானே உடலானே உயிரானே
    பேரானே பிறைசூடீ பிணிதீர்க்கும் பெருமானென்
    றாராத ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே.     4.13.6
    130     கண்ணானாய் மணியானாய் கருத்தானாய் *அருத்தானாய்
    எண்ணானாய் எழுத்தானாய் எழுத்தினுக்கோர் இயல்பானாய்
    விண்ணானாய் விண்ணிடையே புரமெரித்த வேதியனே
    அண்ணான ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே.
    * அருத்தனாயென்பதற்கு - உண்ணப்படும் பொருள்களாயின
    எனப் பொருள்படுகின்றது.    4.13.7
    131     மின்னானாய் உருமானாய் வேதத்தின் பொருளானாய்
    பொன்னானாய் மணியானாய் பொருகடல்வாய் முத்தானாய்
    நின்னானார் இருவர்க்குங் காண்பரிய நிமிர்சோதி
    அன்னானே ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே.     4.13.8
    132     முத்திசையும் புனற்பொன்னி மொய்பவளங் கொழித்துந்தப்
    பத்தர்பலர் நீர்மூழ்கிப் பலகாலும் பணிந்தேத்த
    எத்திசையும் வானவர்கள் எம்பெருமா னெனஇறைஞ்சும்
    அத்திசையாம் ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே.     4.13.9
    133     கருவரைசூழ் கடலிலங்கைக் கோமானைக் கருத்தழியத்
    திருவிரலால் உதகரணஞ் செய்துகந்த சிவமூர்த்தி
    பெருவரைசூழ் வையகத்தார் பேர்நந்தி என்றேத்தும்
    அருவரைசூழ் ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே.     4.13.10

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.14 தசபுராணம்
    பண் - பழம்பஞ்சுரம்
    திருச்சிற்றம்பலம்

    134    பருவரை யொன்றுசுற்றி அரவங்கை விட்ட
        இமையோர் இரிந்து பயமாய்த்
        திருநெடு மால்நிறத்தை அடுவான் விசும்பு
        சுடுவா னெழுந்த விசைபோய்ப்
        பெருகிட மற்றிதற்கொர் பிதிகார மொன்றை
        அருளாய் பிரானே எனலும்
        அருள்கொடு மாவிடத்தை எரியாமல் உண்ட
        அவனண்டர் அண்ட ரரசே.     4.14.1
    135     நிரவொலி வெள்ளமண்டி நெடுவண்ட மூட
        நிலநின்று தம்ப மதுவப்
        பரமொரு தெய்வமெய்த இதுவொப்ப தில்லை
        யிருபாலு நின்று பணியப்
        பிரமனு மாலுமேலை முடியோடு பாதம்
        அறியாமை நின்ற பெரியோன்
        பரமுத லாயதேவர் சிவனாய மூர்த்தி
        யவனா நமக்கோர் சரணே.     4.14.2
    136     காலமு நாள்கள்ஊழி படையா முன்ஏக
        உருவாகி மூவர் உருவில்
        சாலவு மாகிமிக்க சமயங்க ளாறின்
        உருவாகி நின்ற தழலோன்
        ஞாலமு மேலைவிண்ணோ டுலகேழு முண்டு
        குறளாயோ ராலின் இலைமேல்
        பாலனு மாயவற்கோர் பரமாய மூர்த்தி
        யவனா நமக்கோர் சரணே.     4.14.3
    137     நீடுயர் மண்ணுவிண்ணும் நெடுவேலை குன்றொ
        டுலகேழு மெங்கு நலியச்
        சூடிய கையராகி இமையோர் கணங்கள்
        துதியோதி நின்று தொழலும்
        ஓடிய தாருகன்றன் உடலம் பிளந்து
        ஒழியாத கோபம் ஒழிய
        ஆடிய மாநடத்தெ மனலாடி பாதம்
        அவையா நமக்கோர் சரணே.     4.14.4
    138     நிலைவலி இன்றியெங்கும் நிலனோடு விண்ணும்
        நிதனஞ்செய் தோடு புரமூன்
        றலைநலி வஞ்சியோடி அரியோடு தேவர்
        அரணம் புகத்தன் அருளாற்
        கொலைநலி வாளிமூள அரவங்கை நாணும்
        அனல்பாய நீறு புரமா
        மலைசிலை கையிலொல்க வளைவித்த வள்ள
        லவனா நமக்கோர் சரணே.     4.14.5
    139     நீலநன் மேனிசெங்கண் வளைவெள் ளெயிற்ற
        னெரிகேசன் நேடி வருநாள்
        காலைநன் மாலைகொண்டு வழிபாடு செய்யும்
        அளவின்கண் வந்து குறுகிப்
        பாலனை ஓடவோடப் பயமெய்து வித்த
        உயிர்வவ்வு பாசம் விடுமக்
        காலனை வீடுசெய்த கழல்போலும் அண்டர்
        தொழுதோது சூடு கழலே.     4.14.6
    140     உயர்தவ மிக்கதக்கன் உயர்வேள்வி தன்னில்
        அவியுண்ண வந்த இமையோர்
        பயமுறு மெச்சனங்கி மதியோனு முற்ற
        படிகண்டு நின்று பயமாய்
        அயனொடு மாலுமெங்க ளறியாமை யாதி
        கமியென் றிறைஞ்சி யகலச்
        சயமுறு தன்மைகண்ட தழல்வண்ணன் எந்தை
        கழல்கண்டு கொள்கை சரணே.     4.14.7
    141     நலமலி மங்கைநங்கை விளையாடி யோடி
        நயனத் தலங்கள் கரமா
        உலகினை ஏழுமுற்றும் இருள்மூட மூட
        இருளோட நெற்றி ஒருகண்
        அலர்தர அஞ்சிமற்றை நயனங்கை விட்டு
        மடவாள் இறைஞ்ச மதிபோல்
        அலர்தரு சோதிபோல அலர்வித்த முக்கண்
        அவனா நமக்கோர் சரணே.     4.14.8
    142     கழைபடு காடுதென்றல் குயில்கூவ அஞ்சு
        கணையோன் அணைந்து புகலும்
        மழைவடி வண்ணன்எண்ணி மகவோனை விட்ட
        மலரான தொட்ட மதனன்
        எழில்பொடி வெந்துவீழ இமையோர் கணங்கள்
        எரியென் றிறைஞ்சி யகலத்
        தழல்படு நெற்றிஒற்றை நயனஞ் சிவந்த
        தழல்வண்ணன் எந்தை சரணே.     4.14.9
    143     தடமலர் ஆயிரங்கள் குறைவொன்ற தாக
        நிறைவென்று தன்க ணதனால்
        உடன்வழி பாடுசெய்த திருமாலை யெந்தை
        பெருமான் உகந்து மிகவும்
        சுடரடி யான்முயன்று சுழல்வித் தரக்கன்
        இதயம் பிளந்த கொடுமை
        அடல்வலி ஆழியாழி யவனுக் களித்த
        அவனா நமக்கோர் சரணே.     4.14.10
    144     கடுகிய தேர்செலாது கயிலாய மீது
        கருதேலுன் வீரம் ஒழிநீ
        முடுகுவ தன்றுதன்ம மெனநின்று பாகன்
        மொழிவானை நன்று முனியா
        விடுவிடு வென்றுசென்று விரைவுற் றரக்கன்
        வரையுற் றெடுக்க முடிதோள்
        நெடுநெடு இற்றுவீழ விரலுற்ற பாதம்
        நினைவுற்ற தென்றன் மனனே.     4.14.11

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.15 பாவநாசத்திருப்பதிகம்
    பண் - பழம்பஞ்சுரம்
    திருச்சிற்றம்பலம்

    145     பற்றற் றார்சேற் பழம்பதியைப்
        பாசூர் நிலாய பவளத்தைச்
        சிற்றம் பலத்தெந் திகழ்கனியைத்
        தீண்டற் கரிய திருவுருவை
        *வெற்றி யூரில் விரிசுடரை
        விமலர் கோனைத் திரைசூழ்ந்த
        ஒற்றி யூரெம் உத்தமனை
        உள்ளத் துள்ளே வைத்தேனே.

        * வெற்றியூரென்பது வைப்புத்தலங்களிலொன்று.    4.15.1
    146     ஆனைக் காவில் அணங்கினை
        ஆரூர் நிலாய அம்மானைக்
        கானப் பேரூர்க் கட்டியைக்
        கானூர் முளைத்த கரும்பினை
        வானப் பேரார் வந்தேத்தும்
        வாய்மூர் வாழும் வலம்புரியை
        மானக் கயிலை மழகளிற்றை
        மதியைச் சுடரை மறவேனே.     4.15.2
    147     மதியங் கண்ணி ஞாயிற்றை
        மயக்கந் தீர்க்கும் மருந்தினை
        அதிகை மூதூர் அரசினை
        ஐயா றமர்ந்த ஐயனை
        விதியைப் புகழை வானோர்கள்
        வேண்டித் தேடும் விளக்கினை
        நெதியை ஞானக் கொழுந்தினை
        நினைந்தேற் குள்ளம் நிறைந்ததே.     4.15.3
    148     புறம்ப யத்தெம் முத்தினைப்
        புகலூர் இலங்கு பொன்னினை
        *உறந்தை யோங்கு சிராப்பள்ளி
        உலகம் விளக்கு ஞாயிற்றைக்
        கறங்கு மருவிக் கழுக்குன்றிற்
        காண்பார் காணுங் கண்ணானை
        அறஞ்சூழ் அதிகை வீரட்டத்
        தரிமான் ஏற்றை அடைந்தேனே.

        * உறந்தையென்பது உறையூர்.    4.15.4
    149     கோலக் காவிற் குருமணியைக்
        *குடமூக் குறையும் விடமுணியை
        ஆலங் காட்டி லந்தேனை
        அமரர் சென்னி யாய்மலரைப்
        பாலிற் றிகழும் பைங்கனியைப்
        பராய்த் துறையெம் பசும்பொன்னைச்
        சூலத் தானைத் துணையிலியைத்
        தோளைக் குளிரத் தொழுதேனே.

        *குடமூக்கென்பது கும்பகோணம்.    4.15.5
    150     மருக லுறையுமா ணிக்கத்தை
        வலஞ் சுழியின் மாலையை
        கருகா வூரிற் கற்பகத்தைக்
        காண்டற் கரிய கதிரொளியைப்
        பெருவே ளூரெம் பிறப்பிலியைப்
        பேணு வார்கள் பிரிவரிய
        திருவாஞ் சியத்தெஞ் செல்வனைச்
        சிந்தை யுள்ளே வைத்தேனே.     4.15.6
    151     எழிலார் இராச சிங்கத்தை
        இராமேச் சுரத்தெம் எழிலேற்றைக்
        குழலார் கோதை வரைமார்பிற்
        குற்றா லத்தெங் கூத்தனை
        நிழலார் சோலை நெடுங்களத்து
        நிலாய நித்த மணாளனை
        அழலார் வண்ணத் தம்மானை
        அன்பி லணைத்து வைத்தேனே.     4.15.7
    152     மாலைத் தோன்றும் வளர்மதியை
        மறைக்காட் டுறையும் மணாளனை
        ஆலைக் கரும்பி னின்சாற்றை
        அண்ணா மலையெம் அண்ணலைச்
        சோலைத் துருத்தி நகர்மேய
        சுடரிற் றிகழுந் துளக்கிலியை
        மேலை வானோர் பெருமானை
        விருப்பால் விழுங்கி யிட்டேனே.     4.15.8
    153     சோற்றுத் துறையெஞ் சோதியைத்
        துருத்தி மேய தூமணியை
        ஆற்றிற் பழனத் தம்மானை
        ஆல வாயெம் மருமணியை
        நீற்றிற் பொலிந்த நிமிர்திண்டோ ள்
        நெய்த்தா னத்தெந் நிலாச்சுடரைத்
        தோற்றக் கடலை அடலேற்றைத்
        தோளைக் குளிரத் தொழுதேனே.     4.15.9
    154     புத்தூ ருறையும் புனிதனைப்
        பூவ ணத்தெம் போரேற்றை
        வித்தாய் மிழலை முளைத்தானை
        வேள்விக் குடியெம் வேதியனைப்
        பொய்த்தார் புரமூன் றெரித்தானைப்
        பொதியில் மேய புராணனை
        வைத்தேன் என்றன் மனத்துள்ளே
        *மாத்தூர் மேய மருந்தையே.

        * மாத்தூரென்பது - திருவாமாத்தூர்.    4.15.10
    155     முந்தித் தானே முளைத்தானை
        மூரி வெள்ளே றூர்ந்தானை
        அந்திச் செவ்வான் படியானை
        அரக்க னாற்றல் அழித்தானைச்
        சிந்தை வெள்ளப் புனலாட்டிச்
        செஞ்சொன் மாலை யடிசேர்த்தி
        எந்தை பெம்மான் என்னெம்மான்
        என்பார் பாவ நாசமே.     4.15.11

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4. 16 திருப்புகலூர்
    பண் - இந்தளம்
    திருச்சிற்றம்பலம்

    156    செய்யர் வெண்ணூலர் கருமான் மறிதுள்ளுங்
    கையர் கனைகழல் கட்டிய காலினர்
    மெய்யர் மெய்ந்நின் றவர்க்கல்லா தவர்க்கென்றும்
    பொய்யர் புகலூர்ப் புரிசடை யாரே.     4.16.1
    157     மேகநல் ஊர்தியர் மின்போல் மிளிர்சடைப்
    பாக மதிநுத லாளையோர் பாகத்தர்
    நாக வளையினர் நாக வுடையினர்
    போகர் புகலூர்ப் புரிசடை யாரே.     4.16.2
    158     பெருந்தாழ் சடைமுடி மேற்பிறை சூடிக்
    கருந்தாழ் குழலியுந் தாமுங் கலந்து
    திருந்தா மனமுடை யார்திறத் தென்றும்
    பொருந்தார் புகலூர்ப் புரிசடை யாரே.     4.16.3
    159     அக்கார் அணிவடம் ஆகத்தர் நாகத்தர்
    நக்கார் இளமதிக் கண்ணியர் நாடொறும்
    உக்கார் தலைபிடித் துன்பலிக் கூர்தொறும்
    புக்கார் புகலூர்ப் புரிசடை யாரே.     4.16.4
    160     ஆர்த்தார் உயிரடும் அந்தகன் றன்னுடல்
    பேர்த்தார் பிறைநுதற் பெண்ணின்நல் லாள்உட்கக்
    கூர்த்தார் மருப்பிற் கொலைக்களிற் றீருரி
    போர்த்தார் புகலூர்ப் புரிசடை யாரே.     4.16.5
    161     தூமன் சுறவந் துதைந்த கொடியுடைக்
    காமன் கணைவலங் காய்ந்தமுக் கண்ணினர்
    சேம நெறியினர் சீரை யுடையவர்
    பூமன் புகலூர்ப் புரிசடை யாரே.     4.16.6
    162     உதைத்தார் மறலி உருளவோர் காலாற்
    சிதைத்தார் திகழ்தக்கன் செய்தநல் வேள்வி
    பதைத்தார் சிரங்கரங் கொண்டுவெய் யோன்கண்
    புதைத்தார் புகலூர்ப் புரிசடை யாரே.     4.16.7
    163     கரிந்தார் தலையர் கடிமதில் மூன்றுந்
    தெரிந்தார் கணைகள் செழுந்தழ லுண்ண
    விரிந்தார் சடைமேல் விரிபுனற் கங்கை
    புரிந்தார் புகலூர்ப் புரிசடை யாரே.     4.16.8
    164     ஈண்டார் அழலி னிருவருங் கைதொழ
    நீண்டார் நெடுந்தடு மாற்ற நிலையஞ்ச
    மாண்டார்தம் என்பு மலர்க்கொன்றை மாலையும்
    பூண்டார் புகலூர்ப் புரிசடை யாரே.     4.16.9
    165     கறுத்தார் மணிகண்டங் கால்விர லூன்றி
    இறுத்தார் இலங்கையர் கோன்முடி பத்தும்
    அறுத்தார் புலனைந்தும் ஆயிழை பாகம்
    பொறுத்தார் புகலூர்ப் புரிசடை யாரே.     4.16.10

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - அக்கினீசுவரர்,
    தேவியார் - கருந்தார்குழலியம்மை.


    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.17 திருவாரூர் - அரநெறி
    பண் - இந்தளம்
    திருச்சிற்றம்பலம்

    166     எத்தீ புகினும் எமக்கொரு தீதிலை
    தெத்தே யெனமுரன் றெம்முள் உழிதர்வர்
    முத்தீ யனையதோர் மூவிலை வேல்பிடித்
    தத்தீ நிறத்தார் அரநெறி யாரே.     4.17.1
    167     வீரமும் பூண்பர் விசயனொ டாயதோர்
    தாரமும் பூண்பர் தமக்கன்பு பட்டவர்
    பாரமும் பூண்பர்நற் பைங்கண் மிளிரர
    வாரமும் பூண்பர் அரநெறி யாரே.     4.17.2
    168     தஞ்சவண் ணத்தர் சடையினர் தாமுமோர்
    வஞ்சவண் ணத்தர்வண் டார்குழ லாளொடுந்
    துஞ்சவண் ணத்தர்துஞ் சாதகண் ணார்தொழும்
    அஞ்சவண் ணத்தர் அரநெறி யாரே.     4.17.3
    169     விழித்தனர் காமனை வீழ்தர விண்ணின்
    றிழித்தனர் கங்கையை யேத்தினர் பாவங்
    கழித்தனர் கல்சூழ் கடியரண் மூன்றும்
    அழித்தனர் ஆரூர் அரநெறி யாரே.     4.17.4
    170     துற்றவர் வெண்டலை யிற்சுருள் கோவணந்
    தற்றவர் தம்வினை யானவெல் லாமற
    அற்றவர் ஆரூர் அறநெறி கைதொழ
    உற்றவர் தாமொளி பெற்றனர் தாமே.     4.17.5
    171     கூடர வத்தர் குரற்கிண் கிணியடி
    நீடர வத்தர்முன் மாலை யிடையிருள்
    பாடர வத்தர் பணமஞ்சு பைவிரித்
    தாடர வத்தர் அரநெறி யாரே.     4.17.6
    172     கூடவல் லார்குறிப் பில்லுமை யாளொடும்
    பாடவல் லார்பயின் றந்தியுஞ் சந்தியும்
    ஆடவல் லார்திரு வாரூர் அரநெறி
    நாடவல் லார்வினை வீடவல் லாரே.     4.17.7
    173     பாலை நகுபனி வெண்மதி பைங்கொன்றை
    மாலையுங் கண்ணியு மாவன சேவடி
    காலையு மாலையுங் கைதொழு வார்மனம்
    ஆலயம் ஆரூர் அரநெறி யார்க்கே.     4.17.8
    174     முடிவண்ணம் வானமின் வண்ணந்தம் மார்பிற்
    பொடிவண்ணந் தம்புக ழூர்தியின் வண்ணம்
    படிவண்ணம் பாற்கடல் வண்ணஞ்செஞ் ஞாயி
    றடிவண்ணம் ஆரூர் அரநெறி யார்க்கே.     4.17.9
    175     பொன்னவில் புன்சடை யானடி யின்னிழல்
    இன்னருள் சூடியெள் காதுமி ராப்பகல்
    மன்னவர் கின்னரர் வானவர் தாந்தொழும்
    அன்னவர் ஆரூர் அரநெறி யாரே.     4.17.10
    176     பொருள்மன் னனைப்பற்றிப் புட்பகங் கொண்ட
    மருள்மன் னனையெற்றி வாளுட னீந்து
    கருள்மன் னுகண்டங் கறுக்க நஞ்சுண்ட
    அருள்மன்னர் ஆரூர் அரநெறி யாரே.     4.17.11

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - வன்மீகநாதர், தேவியார் - அல்லியங்கோதையம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.18 விடந்தீர்த்ததிருப்பதிகம்
    பண் - இந்தளம்
    திருச்சிற்றம்பலம்

    177    ஒன்றுகொ லாமவர் சிந்தை யுயர்வரை
    ஒன்றுகொ லாமுய ரும்மதி சூடுவர்
    ஒன்றுகொ லாமிடு வெண்டலை கையது
    ஒன்றுகொ லாமவர் ஊர்வது தானே.     4.18.1
    178     இரண்டுகொ லாமிமை யோர்தொழு பாதம்
    இரண்டுகொ லாமிலங் குங்குழை பெண்ணாண்
    இரண்டுகொ லாமுரு வஞ்சிறு மான்மழு
    இரண்டுகொ லாமவர் எய்தின தாமே.     4.18.2
    179     மூன்றுகொ லாமவர் கண்ணுத லாவன
    மூன்றுகொ லாமவர் சூலத்தின் மொய்யிலை
    மூன்றுகொ லாங்கணை கையது வில்நாண்
    மூன்றுகொ லாம்புர மெய்தன தாமே.     4.18.3
    180     நாலுகொ லாமவர் தம்முக மாவன
    நாலுகொ லாஞ்சன னம்முதற் றோற்றமும்
    நாலுகொ லாமவர் ஊர்தியின் பாதங்கள்
    நாலுகொ லாமறை பாடின தாமே.     4.18.4
    181     அஞ்சுகொ லாமவர் ஆடர வின்படம்
    அஞ்சுகொ லாமவர் வெல்புல னாவன
    அஞ்சுகொ லாமவர் காயப்பட் டான்கணை
    அஞ்சுகொ லாமவர் ஆடின தாமே.     4.18.5
    182     ஆறுகொ லாமவர் அங்கம் படைத்தன
    ஆறுகொ லாமவர் தம்மக னார்முகம்
    ஆறுகொ லாமவர் தார்மிசை வண்டின்கால்
    ஆறுகொ லாஞ்சுவை யாக்கின தாமே.     4.18.6
    183     ஏழுகொ லாமவர் ஊழி படைத்தன
    ஏழுகொ லாமவர் கண்ட இருங்கடல்
    ஏழுகொ லாமவர் ஆளு முலகங்கள்
    ஏழுகொ லாமிசை யாக்கின தாமே.     4.18.7
    184     எட்டுக்கொ லாமவர் ஈறில் பெருங்குணம்
    எட்டுக்கொ லாமவர் சூடு மினமலர்
    எட்டுக்கொ லாமவர் தோளிணை யாவன
    எட்டுக்கொ லாந்திசை யாக்கின தாமே.     4.18.8
    185     ஒன்பது போலவர் வாசல் வகுத்தன
    ஒன்பது போலவர் மார்பினில் நூலிழை
    ஒன்பது போலவர் கோலக் குழற்சடை
    ஒன்பது போலவர் பாரிடந் தானே.     4.18.9
    186     பத்துக்கொ லாமவர் பாம்பின்கண் பாம்பின்பல்
    பத்துக்கொ லாமெயி றுந்நெரிந் துக்கன
    பத்துக்கொ லாமவர் காயப்பட் டான்றலை
    பத்துக்கொ லாமடி யார்செய்கை தானே.     4.18.10

    இது அப்பூதிநாயனார் புத்திரரைத் தீண்டியவிடம்
    நீங்கும்படி அருளிச்செய்தது.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.19 திருவாரூர்
    பண் - சீகாமரம்
    திருச்சிற்றம்பலம்

    187    சூலப் படையானைச் சூழாக வீழருவிக்
    கோலத்தோட் குங்குமஞ்சேர் குன்றெட் டுடையானைப்
    பாலொத்த மென்மொழியாள் பங்கனைப் பாங்காய
    ஆலத்தின் கீழானை நான்கண்ட தாரூரே.     4.19.1
    188     பக்கமே பாரிடங்கள் சூழப் படுதலையிற்
    புக்கவூர்ப் பிச்சையேற் றுண்டு பொலிவுடைத்தாய்க்
    கொக்கிறகின் தூவல் கொடியெடுத்த கோவணத்தோ
    டக்கணிந்த அம்மானை நான்கண்ட தாரூரே.     4.19.2
    189     சேய உலகமுஞ் செல்சார்வு மானானை
    மாயப்போர் வல்லானை மாலைதாழ் மார்பனை
    வேயொத்த தோளியர்தம் மென்முலைமேல் தண்சாந்தின்
    ஆயத் திடையானை நான்கண்ட தாரூரே.     4.19.3
    190    ஏறேற்ற மாவேறி எண்கணமும் பின்படர
    மாறேற்றார் வல்லரணஞ் சீறி மயானத்தின்
    நீறேற்ற மேனியானாய் நீள்சடைமேல் நீர்ததும்ப
    ஆறேற்ற அந்தணனை நான்கண்ட தாரூரே.     4.19.4
    191    தாங்கோல வெள்ளெலும்பு பூண்டுதம் ஏறேறிப்
    பாங்கான வூர்க்கெல்லாஞ் செல்லும் பரமனார்
    தேங்காவி நாறுந் திருவாரூர்த் தொன்னகரில்
    பூங்கோயி லுள்மகிழ்ந்து போகா திருந்தாரே.     4.19.5
    192    எம்பட்டம் பட்ட முடையானை யேர்மதியின்
    நும்பட்டஞ் சேர்ந்த நுதலானை அந்திவாய்ச்
    செம்பட் டுடுத்துச் சிறுமா னுரியாடை
    அம்பட் டசைத்தானை நான்கண்ட தாரூரே.     4.19.6
    193    போழொத்த வெண்மதியஞ் சூடிப் பொலிந்திலங்கு
    வேழத் துரிபோர்த்தான் வெள்வளையாள் தான்வெருவ
    ஊழித்தீ யன்னானை ஓங்கொலிமாப் பூண்டதோர்
    ஆழித்தேர் வித்தகனை நான்கண்ட தாரூரே.     4.19.7
    194    வஞ்சனையா ரார்பாடுஞ் சாராத மைந்தனைத்
    துஞ்சிருளில் ஆடல் உகந்தானைத் தன்தொண்டர்
    நெஞ்சிருள் கூரும் பொழுது நிலாப்பாரித்
    தஞ்சுடராய் நின்றானை நான்கண்ட தாரூரே.     4.19.8
    195    காரமுது கொன்றை கடிநாறு தண்ணென்ன
    நீரமுது கோதையோ டாடிய நீள்மார்பன்
    பேரமுத முண்டார்கள் உய்யப் பெருங்கடல்நஞ்
    சாரமுதா வுண்டானை நான்கண்ட தாரூரே.     4.19.9
    196    தாட வுடுக்கையன் தாமரைப்பூஞ் சேவடியன்
    கோடலா வேடத்தன் கொண்டதோர் வீணையினான்
    ஆடரவக் கிண்கிணிக்கால் அன்னானோர் சேடனை
    ஆடுந்தீக் கூத்தனை நான்கண்ட தாரூரே.     4.19.10
    197    மஞ்சாடு குன்றடர வூன்றி மணிவிரலாற்
    றுஞ்சாப்போர் வாளரக்கன் றோள்நெரியக் கண்குருதிச்
    செஞ்சாந் தணிவித்துத் தன்மார்பில் பால்வெண்ணீற்
    றஞ்சாந் தணிந்தானை நான்கண்ட தாரூரே.     4.19.11

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.20 திருவாரூர்
    பண் - சீகாமரம்
    திருச்சிற்றம்பலம்

    198    காண்டலேகருத் தாய்நினைந்திருந்
        தேன்மனம்புகுந் தாய்கழலடி
        பூண்டுகொண் டொழிந்தேன்
        புறம்போயி னாலறையோ
        ஈண்டுமாடங்கள் நீண்டமாளிகை
        மேலெழுகொடி வானிளம்மதி
        தீண்டிவந் துலவுந்
        திருவாரூ ரம்மானே.     4.20.1
    199    கடம்படந்நட மாடினாய்களை
        கண்ணெனக்கொரு காதல்செய்தடி
        ஒடுங்கி வந்தடைந்
        தேனொழிப்பாய் பிழைப்பவெல்லாம்
        முடங்கிறால்முது நீர்மலங்கிள
        வாளைசெங்கயல் சேல்வரால்களி
        றடைந்த தண்கழனி
        அணியாரூ ரம்மானே.     4.20.2
    200    அருமணித்தடம் பூண்முலை
        அரம்பையரொ டருளிப்பாடியர்
        உரிமையிற் றொழுவார்
        உத்திர பல்கணத்தார்
        விரிசடைவிர திகளந்தணர்
        சைவர்பாசுப தர்கபாலிகள்
        தெருவினிற் பொலியுந்
        திருவாரூ ரம்மானே.     4.20.3
    201    பூங்கழல்தொழு தும்பரவியும்
        புண்ணியாபுனி தாவுன்பொற்கழல்
        ஈங்கிருக்கப் பெற்றேன்
        என்னகுறை யுடையேன்
        ஓங்குதெங்கிலை யார்கமுகிப
        வாழைமாவொடு மாதுளம்பல
        தீங்கனி சிதறுந்
        திருவாரூ ரம்மானே.     4.20.4
    202    நீறுசேர்செழு மார்பினாய்நிரம்
        பாமதியொடு நீள்சடையிடை
        ஆறுபாய வைத்தாய்
        அடியே அடைந்தொழிந்தேன்
        ஏறிவண்டொடு தும்பியஞ்சிற
        கூன்றவிண்ட மலரிதழ்வழி
        தேறல்பாய்ந் தொழுகுந்
        திருவாரூ ரம்மானே.     4.20.5
    203    அளித்துவந்தடி கைதொழுமவர்
        மேல்வினைகெடு மென்றிவையகங்
        களித்துவந் துடனே
        கலந்தாடக் காதலராய்க்
        குளித்துமூழ்கியுந் தூவியுங்குடைந்
        தாடுகோதையர் குஞ்சியுள்புகத்
        தெளிக்குந் தீர்த்தமறாத்
        திருவாரூ ரம்மானே.     4.20.6
    204    திரியுமூவெயில் தீயெழச்சிலை
        வாங்கிநின்றவ னேயென்சிந்தையுட்
        பிரியுமா றெங்ஙனே
        பிழைத்தேயும் போகலொட்டேன்
        பெரியசெந்நெற் பிரம்புரிகெந்த
        சாலிதிப்பிய மென்றிவையகத்
        தரியுந் தண்கழனி
        யணியாரூ ரம்மானே.     4.20.7
    205    பிறத்தலும்பிறந் தாற்பிணிப்பட
        வாய்ந்தசைந்துட லம்புகுந்துநின்
        றிறக்குமா றுளதே
        இழித்தேன் பிறப்பினைநான்
        அறத்தையேபுரிந் தமனத்தனாய்
        ஆர்வச்செற்றக்கு ரோதநீக்கியுன்
        திறத்தனாய் ஒழிந்தேன்
        திருவாரூ ரம்மானே.     4.20.8
    206    முளைத்தவெண்பிறை மொய்சடையுடை
        யாயெப்போதுமென் னெஞ்சிடங்கொள்ள
        வளைத்துக் கொண்டிருந்தேன்
        வலிசெய்து போகலொட்டேன்
        அளைப்பிரிந்த அலவன்போய்ப்புகு
        தந்தகாலமுங் கண்டுதன்பெடை
        திளைக்குந் தண்கழனித்
        திருவாரூ ரம்மானே.     4.20.9
    207    நாடினார்கம லம்மலரய
        னோடிரணியன் ஆகங்கீண்டவன்
        நாடிக் காணமாட்டாத்
        தழலாய நம்பானைப்
        பாடுவார்பணி வார்பல்லாண்டிசை
        கூறுபத்தர்கள் சித்தத்துள்புக்குத்
        தேடிக் கண்டுகொண்டேன்
        திருவாரூ ரம்மானே.     4.20.10

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.21 திருவாரூர்திருவாதிரைத்திருப்பதிகம்
    பண் - குறிஞ்சி
    திருச்சிற்றம்பலம்

    208    முத்து விதான மணிப்பொற் கவரி முறையாலே
    பத்தர்க ளோடு பாவையர் சூழப் பலிப்பின்னே
    வித்தகக் கோல வெண்டலை மாலை விரதிகள்
    அத்தன் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.     4.21.1
    209    நணியார் சேயார் நல்லார் தீயார் நாடோ றும்
    பிணிதான் தீரும் என்று பிறங்கிக் கிடப்பாரும்
    மணியே பொன்னே மைந்தா மணாளா என்பார்கட்
    கணியான் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.     4.21.2
    210    வீதிகள் தோறும் வெண்கொடி யோடுவி தானங்கள்
    சோதிகள் விட்டுச் சுடர்மா மணிகள் ஒளிதோன்றச்
    சாதிக ளாய பவளமு முத்துத் தாமங்கள்
    ஆதி ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.     4.21.3
    211    குணங்கள் பேசிக் கூடிப் பாடித் தொண்டர்கள்
    பிணங்கித் தம்மிற் பித்தரைப் போலப் பிதற்றுவார்
    வணங்கி நின்று வானவர் வந்து வைகலும்
    அணங்கன் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.     4.21.4
    212    நிலவெண் சங்கும் பறையும் ஆர்ப்ப நிற்கில்லாப்
    பலரு மிட்ட கல்ல வடங்கள் பரந்தெங்குங்
    கலவ மஞ்ஞை காரென் றெண்ணிக் களித்துவந்
    தலம ராரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.     4.21.5
    213    விம்மா வெருவா விழியாத் தெழியா வெருட்டுவார்
    தம்மாண் பிலராய்த் தரியார் தலையான் முட்டுவார்
    எம்மான் ஈசன் எந்தை எனப்பன் என்பார்கட்
    கம்மான் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.     4.21.6
    214    செந்துவர் வாயார் செல்வன் சேவடி சிந்திப்பார்
    மைந்தர்க ளோடு மங்கையர் கூடிம யங்குவார்
    இந்திர னாதி வானவர் சித்தர் எடுத்தேத்தும்
    அந்திரன் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.     4.21.7
    215    முடிகள் வணங்கி மூவா தார்கண் முன்செல்ல
    வடிகொள் வேய்த்தோள் வான்அர மங்கையர் பின்செல்லப்
    பொடிகள் பூசிப் பாடுந் தொண்டர் புடைசூழ
    அடிகள் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.     4.21.8
    216    துன்பம் நும்மைத் தொழாத நாள்கள் என்பாரும்
    இன்பம் நும்மை யேத்து நாள்கள் என்பாரும்
    நும்பின் எம்மை நுழையப் பணியே என்பாரும்
    அன்பன் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.     4.21.9
    217    பாரூர் பௌவத் தானைப் பத்தர் பணிந்தேத்தச்
    சீரூர் பாடல் ஆடல் அறாத செம்மாப்பார்ந்
    தோரூர் ஒழியா துலகம் எங்கும் எடுத்தேத்தும்
    ஆரூ ரன்றன் ஆதிரை நாளால் அதுவண்ணம்.     4.21.10

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.22 கோயில் - திருநேரிசை
    பண் - காந்தாரம்
    திருச்சிற்றம்பலம்

    218    செஞ்சடைக் கற்றை முற்றத்
        திளநிலா எறிக்குஞ் சென்னி
        நஞ்சடைக் கண்ட னாரைக்
        காணலா நறவ நாறும்
        மஞ்சடைச் சோலைத் தில்லை
        மல்குசிற் றம்ப லத்தே
        துஞ்சடை இருள் கிழியத்
        துளங்கெரி யாடு மாறே.     4.22.1
    219    ஏறனார் ஏறு தம்பால்
        இளநிலா எறிக்குஞ் சென்னி
        ஆறனார் ஆறு சூடி
        ஆயிழை யாளோர் பாகம்
        நாறுபூஞ் சோலைத் தில்லை
        நவின்றசிற் றம்ப லத்தே
        நீறுமெய் பூசி நின்று
        நீண்டெரி யாடு மாறே.     4.22.2
    220    சடையனார் சாந்த நீற்றர்
        தனிநிலா எறிக்குஞ் சென்னி
        உடையனா ருடைத லையில்
        உண்பதும் பிச்சை யேற்றுக்
        கடிகொள்பூந் தில்லை தன்னுட்
        கருதுசிற் றம்ப லத்தே
        அடிகழ லார்க்க நின்று
        வனலெரி யாடு மாறே.     4.22.3
    221    பையர வசைத்த அல்குற்
        பனிநிலா எறிக்குஞ் சென்னி
        மையரிக் கண்ணி யாளும்
        மாலுமோர் பாக மாகிச்
        செய்யெரி தில்லை தன்னுட்
        டிகழ்ந்தசிற் றம்ப லத்தே
        கையெரி வீசி நின்று
        கனலெரி யாடு மாறே.     4.22.4
    222    ஓதினார் வேதம் வாயால்
        ஒளிநிலா எறிக்குஞ் சென்னிப்
        பூதனார் பூதஞ் சூழப்
        புலியுரி யதள னார்தாம்
        நாதனார் தில்லை தன்னுள்
        நவின்றசிற் றம்ப லத்தே
        காதில்வெண் குழைகள் தாழக்
        கனலெரி யாடு மாறே.     4.22.5
    223    ஓருடம் பிருவ ராகி
        ஒளிநிலா எறிக்குஞ் சென்னிப்
        பாரிடம் பாணி செய்யப்
        பயின்றஎம் பரம மூர்த்தி
        காரிடந் தில்லை தன்னுட்
        கருதுசிற் றம்ப லத்தே
        பேரிடம் பெருக நின்று
        பிறங்கெரி யாடு மாறே.     4.22.6
    224    முதற்றனிச் சடையை மூழ்க
        முகிழ்நிலா எறிக்குஞ் சென்னி
        மதக்களிற் றுரிவை போர்த்த
        மைந்தரைக் காண லாகும்
        மதத்துவண் டறையுஞ் சோலை
        மல்குசிற் றம்ப லத்தே
        கதத்ததோ ரரவ மாடக்
        கனலெரி யாடு மாறே.     4.22.7
    225    மறையனார் மழுவொன் றேந்தி
        மணிநிலா எறிக்குஞ் சென்னி
        இறைவனார் எம்பி ரானார்
        ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார்
        சிறைகொள்நீர்த் தில்லை தன்னுட்
        டிகழ்ந்தசிற் றம்ப லத்தே
        அறைகழ லார்க்க நின்று
        வனலெரி யாடு மாறே.     4.22.8
    226    விருத்தனாய்ப் பால னாகி
        விரிநிலா எறிக்குஞ் சென்னி
        நிருத்தனார் நிருத்தஞ் செய்ய
        நீண்டபுன் சடைகள் தாழக்
        கருத்தனார் தில்லை தன்னுட்
        கருதுசிற் றம்ப லத்தே
        அருத்தமா மேனி தன்னோ
        டனலெரி யாடு மாறே.     4.22.9
    227    பாலனாய் விருத்த னாகிப்
        பனிநிலா எறிக்குஞ் சென்னி
        காலனைக் காலாற் காய்ந்த
        கடவுளார் விடையொன் றேறி
        ஞாலமாந் தில்லை தன்னுள்
        நவின்றசிற் றம்ப லத்தே
        நீலஞ்சேர் கண்ட னார்தாம்
        நீண்டெரி யாடு மாறே.     4.22.10
    228    மதியிலா அரக்க னோடி
        மாமலை யெடுக்க நோக்கி
        நெதியன்றோள் நெரிய வூன்றி
        நீடிரும் பொழில்கள் சூழ்ந்த
        மதியந்தோய் தில்லை தன்னுள்
        மல்குசிற் றம்ப லத்தே
        அதிசயம் போல நின்று
        வனலெரி யாடு மாறே.     4.22.11

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - மூலத்தானநாயகர், சபாநாதர். தேவியார் - சிவகாமியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.23 கோயில் - திருநேரிசை
    பண் - கொல்லி
    திருச்சிற்றம்பலம்

    229    பத்தனாய்ப் பாட மாட்டேன்
        பரமனே பரம யோகீ
        எத்தினாற் பத்தி செய்கேன்
        என்னைநீ இகழ வேண்டா
        முத்தனே முதல்வா தில்லை
        அம்பலத் தாடு கின்ற
        அத்தாவுன் ஆடல் காண்பான்
        அடியனேன் வந்த வாறே.     4.23.1
    230    கருத்தனாய்ப் பாட மாட்டேன்
        காம்பன தோளி பங்கா
        ஒருத்தரா லறிய வொண்ணாத்
        திருவுரு வுடைய சோதீ
        திருத்தமாந் தில்லை தன்னுட்
        டிகழ்ந்தசிற் றம்ப லத்தே
        நிருத்தம்நான் காண வேண்டி
        நேர்பட வந்த வாறே.     4.23.2
    231    கேட்டிலேன் கிளைபி ரியேன்
        கேட்குமா கேட்டி யாகில்
        நாட்டினேன் நின்றன் பாதம்
        நடுப்பட நெஞ்சி னுள்ளே
        மாட்டினீர் வாளை பாயு
        மல்குசிற் றம்ப லத்தே
        கூட்டமாங் குவிமு லையாள்
        கூடநீ யாடு மாறே.     4.23.3
    232    சிந்தையைத் திகைப்பி யாதே
        செறிவுடை அடிமை செய்ய
        எந்தைநீ அருளிச் செய்யாய்
        யாதுநான் செய்வ தென்னே
        செந்தியார் வேள்வி ஓவாத்
        தில்லைச்சிற் றம்ப லத்தே
        அந்தியும் பகலும் ஆட
        அடியிணை அலசுங் கொல்லோ.     4.23.4
    233    கண்டவா திரிந்து நாளுங்
        கருத்தினால் நின்றன் பாதங்
        கொண்டிருந் தாடிப் பாடிக்
        கூடுவன் குறிப்பி னாலே
        வண்டுபண் பாடுஞ் சோலை
        மல்குசிற் றம்ப லத்தே
        எண்டிசை யோரு மேத்த
        இறைவநீ யாடு மாறே.     4.23.5
    234    பார்த்திருந் தடிய னேன்நான்
        பரவுவன் பாடி யாடி
        மூர்த்தியே என்பன் உன்னை
        மூவரில் முதல்வன் என்பன்
        ஏத்துவார் இடர்கள் தீர்ப்பாய்
        தில்லைச்சிற் றம்ப லத்துக்
        கூத்தாவுன் கூத்துக் காண்பான்
        கூடநான் வந்த வாறே.     4.23.6
    235    பொய்யினைத் தவிர விட்டுப்
        புறமலா அடிமை செய்ய
        ஐயநீ அருளிச் செய்யாய்
        ஆதியே ஆதி மூர்த்தி
        வையகந் தன்னில் மிக்க
        மல்குசிற் றம்ப லத்தே
        பையநின் னாடல் காண்பான்
        பரமநான் வந்த வாறே.     4.23.7
    236    மனத்தினார் திகைத்து நாளும்
        மாண்பலா நெறிகள் மேலே
        கனைப்பரால் என்செய் கேனோ
        கறையணி கண்டத் தானே
        தினைத்தனை வேதங் குன்றாத்
        தில்லைச்சிற் றம்ப லத்தே
        அனைத்துநின் னிலயங் காண்பான்
        அடியனேன் வந்த வாறே.     4.23.8
    237    நெஞ்சினைத் தூய்மை செய்து
        நினைக்குமா நினைப்பி யாதே
        வஞ்சமே செய்தி யாலோ
        வானவர் தலைவ னேநீ
        மஞ்சடை சோலைத் தில்லை
        மல்குசிற் றம்ப லத்தே
        அஞ்சொலாள் காண நின்று
        அழகநீ யாடு மாறே.     4.23.9
    238    மண்ணுண்ட மால வனும்
        மலர்மிசை மன்னி னானும்
        விண்ணுண்ட திருவு ருவம்
        விரும்பினார் காண மாட்டார்
        திண்ணுண்ட திருவே மிக்க
        தில்லைச்சிற் றம்ப லத்தே
        பண்ணுண்ட பாட லோடும்
        பரமநீ யாடு மாறே.     4.23.10

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.24 திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை
    239    இரும்புகொப் பளித்த யானை
        ஈருரி போர்த்த ஈசன்
        கரும்புகொப் பளித்த இன்சொற்
        காரிகை பாக மாகச்
        சுரும்புகொப் பளித்த கங்கைத்
        துவலைநீர் சடையி லேற்ற
        அரும்புகொப் பளித்த சென்னி
        அதிகைவீ ரட்ட னாரே.     4.24.1
    240    கொம்புகொப் பளித்த திங்கட்
        கோணல்வெண் பிறையுஞ் சூடி
        வம்புகொப் பளித்த கொன்றை
        வளர்சடை மேலும் வைத்துச்
        செம்புகொப் பளித்த மூன்று
        மதிலுடன் சுருங்க வாங்கி
        அம்புகொப் பளிக்க எய்தார்
        அதிகைவீ ரட்ட னாரே.     4.24.2
    241    விடையுங்கொப் பளித்த பாதம்
        விண்ணவர் பரவி யேத்தச்
        சடையுங்கொப் பளித்த திங்கட்
        சாந்தவெண் ணீறு பூசி
        உடையுங்கொப் பளித்த நாகம்
        உள்குவார் உள்ளத் தென்றும்
        அடையுங்கொப் பளித்த சீரார்
        அதிகைவீ ரட்ட னாறே.     4.24.3
    242    கறையுங்கொப் பளித்த கண்டர்
        காமவேள் உருவம் மங்க
        இறையுங்கொப் பளித்த கண்ணார்
        ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார்
        மறையுங்கொப் பளித்த நாவர்
        வண்டுண்டு பாடுங் கொன்றை
        அறையுங்கொப் பளித்த சென்னி
        அதிகைவீ ரட்ட னாரே.     4.24.4
    243    நீறுகொப் பளித்த மார்பர்
        நிழல்திகழ் மழுவொன் றேந்திக்
        கூறுகொப் பளித்த கோதை
        கோல்வளை மாதோர் பாகம்
        ஏறுகொப் பளித்த பாதம்
        இமையவர் பரவி யேத்த
        ஆறுகொப் பளித்த சென்னி
        அதிகைவீ ரட்ட னாரே.     4.24.5
    244    வணங்குகொப் பளித்த பாதம்
        வானவர் பரவி யேத்தப்
        பிணங்குகொப் பளித்த சென்னிச்
        சடையுடைப் பெருமை யண்ணல்
        சுணங்குகொப் பளித்த கொங்கைச்
        சுரிகுழல் பாக மாக
        அணங்குகொப் பளித்த மேனி
        அதிகைவீ ரட்ட னாரே.     4.24.6
    245    சூலங்கொப் பளித்த கையர்
        சுடர்விடு மழுவாள் வீசி
        நூலுங்கொப் பளித்த மார்பில்
        நுண்பொறி யரவஞ் சேர்த்தி
        மாலுங்கொப் பளித்த பாகர்
        வண்டுபண் பாடுங் கொன்றை
        ஆலங்கொப் பளித்த கண்டத்
        ததிகைவீ ரட்ட னாறே.     4.24.7
    246    நாகங்கொப் பளித்த கையர்
        நான்மறை யாய பாடி
        மேகங்கொப் பளித்த திங்கள்
        விரிசடை மேலும் வைத்துப்
        பாகங்கொப் பளித்த மாதர்
        பண்ணுடன் பாடி யாட
        ஆகங்கொப் பளித்த தோளார்
        அதிகைவீ ரட்ட னாரே.     4.24.8
    247    பரவுகொப் பளித்த பாடல்
        பண்ணுடன் பத்தர் ஏத்த
        விரவுகொப் பளித்த கங்கை
        விரிசடை மேவ வைத்து
        இரவுகொப் பளித்த கண்டர்
        ஏத்துவா ரிடர்கள் தீர்ப்பார்
        அரவுகொப் பளித்த கையர்
        அதிகைவீ ரட்ட னாரே.     4.24.9
    248    தொண்டைகொப் பளித்த செவ்வாய்த்
        துடியிடைப் பரவை யல்குற்
        கொண்டைகொப் பளித்த கோதைக்
        கோல்வளை பாக மாக
        வண்டுகொப் பளித்த தீந்தேன்
        வரிக்கயல் பருகி மாந்தக்
        கெண்டைகொப் பளித்த தெண்ணீர்க்
        கெடிலவீ ரட்ட னாரே.     4.24.10

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.25 திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை
    249    வெண்ணிலா மதியந் தன்னை
        விரிசடை மேவ வைத்து
        உண்ணிலாப் புகுந்து நின்றங்
        குணர்வினுக் குணரக் கூறி
        விண்ணிலார் மீயச் சூரர்
        வேண்டுவார் வேண்டு வார்க்கே
        அண்ணியார் பெரிதுஞ் சேயார்
        அதிகைவீ ரட்ட னாரே.     4.25.1
    250    பாடினார் மறைகள் நான்கும்
        பாயிருள் புகுந்தென் உள்ளங்
        கூடினார் கூட லால
        வாயிலார் நல்ல கொன்றை
        சூடினார் சூடல் மேவிச்
        சூழ்சுடர்ச் சுடலை வெண்ணீ
        றாடினார் ஆடல் மேவி
        அதிகைவீ ரட்ட னாரே.     4.25.2
    251    ஊனையே கழிக்க வேண்டில்
        உணர்மின்கள் உள்ளத் துள்ளே
        தேனைய மலர்கள் கொண்டு
        சிந்தையுட் சிந்திக் கின்ற
        ஏனைய பலவு மாகி
        இமையவர் ஏத்த நின்று
        ஆனையின் உரிவை போர்த்தார்
        அதிகைவீ ரட்ட னாரே.     4.25.3
    252    துருத்தியாங் குரம்பை தன்னில்
        தொண்ணூற்றங் கறுவர் நின்று
        விருத்திதான் தருக வென்று
        வேதனை பலவுஞ் செய்ய
        வருத்தியால் வல்ல வாறு
        வந்துவந் தடைய நின்ற
        அருத்தியார்க் கன்பர் போலும்
        அதிகைவீ ரட்ட னாரே.     4.25.4
    253    பத்தியால் ஏத்தி நின்று
        பணிபவர் நெஞ்சத் துள்ளார்
        துத்திஐந் தலைய நாகஞ்
        சூழ்சடை முடிமேல் வைத்து
        உத்தர மலையர் பாவை
        உமையவள் நடுங்க அன்று
        அத்தியின் உரிவை போர்த்தார்
        அதிகைவீ ரட்ட னாரே.     4.25.5
    254    வரிமுரி பாடி யென்றும்
        வல்லவா றடைந்து நெஞ்சே
        கரியுரி மூட வல்ல
        கடவுளைக் காலத் தாலே
        சுரிபுரி விரிகு ழலாள்
        துடியிடைப் பரவை யல்குல்
        அரிவையோர் பாகர் போலும்
        அதிகைவீ ரட்ட னாரே.     4.25.6
    255    நீதியால் நினைசெய் நெஞ்சே
        நிமலனை நித்த மாகப்
        பாதியாம் உமைதன் னோடும்
        பாகமாய் நின்ற எந்தை
        சோதியாய்ச் சுடர்வி ளக்காய்ச்
        சுண்ணவெண் ணீற தாடி
        ஆதியும் ஈறு மானார்
        அதிகைவீ ரட்ட னாரே.     4.25.7
    256    எல்லியும் பகலு மெல்லாந்
        துஞ்சுவேற் கொருவர் வந்து
        புல்லிய மனத்துக் கோயில்
        புக்கனர் காம னென்னும்
        வில்லிஐங் கணையி னானை
        வெந்துக நோக்கி யிட்டார்
        அல்லியம் பழன வேலி
        அதிகைவீ ரட்ட னாரே.     4.25.8
    257    ஒன்றவே யுணர்தி ராகில்
        ஓங்காரத் தொருவ னாகும்
        வென்றஐம் புலன்கள் தம்மை
        விலக்குதற் குரியீ ரெல்லாம்
        நன்றவன் நார ணனும்
        நான்முகன் நாடிக் காண்குற்
        றன்றவர்க் கரியர் போலும்
        அதிகைவீ ரட்ட னாரே.     4.25.9
    258    தடக்கையால் எடுத்து வைத்துத்
        தடவரை குலுங்க ஆர்த்துக்
        கிடக்கையால் இடர்க ளோங்கக்
        கிளர்மணி முடிகள் சாய
        முடக்கினார் திருவி ரலான்
        முருகமர் கோதை பாகத்
        தடக்கினார் என்னை யாளும்
        அதிகைவீ ரட்ட னாரே.     4.25.10

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.26 திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை
    திருச்சிற்றம்பலம்

    259    நம்பனே எங்கள் கோவே
        நாதனே ஆதி மூர்த்தி
        பங்கனே பரம யோகி
        என்றென்றே பரவி நாளுஞ்
        செம்பொனே பவளக் குன்றே
        திகழ்மலர்ப் பாதங் காண்பான்
        அன்பனே அலந்து போனேன்
        அதிகைவீ ரட்ட னாரே.     4.26.1
    260    பொய்யினால் மிடைந்த போர்வை
        புரைபுரை அழுகி வீழ
        மெய்யனாய் வாழ மாட்டேன்
        வேண்டிற்றொன் றைவர் வேண்டார்
        செய்யதா மரைகள் அன்ன
        சேவடி இரண்டுங் காண்பான்
        ஐயநான் அலந்து போனேன்
        அதிகைவீ ரட்ட னாரே.     4.26.2
    261    நீதியால் வாழ மாட்டேன்
        நித்தலுந் தூயே னல்லேன்
        ஓதியும் உணர மாட்டேன்
        உன்னையுள் வைக்க மாட்டேன்
        சோதியே சுடரே உன்றன்
        தூமலர்ப் பாதங் காண்பான்
        ஆதியே அலந்து போனேன்
        அதிகைவீ ரட்ட னாரே.     4.26.3
    262    தெருளுமா தெருள மாட்டேன்
        தீவினைச் சுற்ற மென்னும்
        பொருளுளே அழுந்தி நாளும்
        போவதோர் நெறியுங் காணேன்
        இருளுமா மணிகண் டாநின்
        இணையடி இரண்டுங் காண்பான்
        அருளுமா றருள வேண்டும்
        அதிகைவீ ரட்ட னாரே.     4.26.4
    263    அஞ்சினால் இயற்றப் பட்ட
        ஆக்கைபெற் றதனுள் வாழும்
        அஞ்சினால் அடர்க்கப் பட்டிங்
        குழிதரும் ஆத னேனை
        அஞ்சினால் உய்க்கும் வண்ணங்
        காட்டினாய்க் கச்சந் தீர்ந்தேன்
        அஞ்சினால் பொலிந்த சென்னி
        அதிகைவீ ரட்ட னாரே.     4.26.5
    264    உறுகயி றூசல் போல
        ஒன்றுவிட் டொன்று பற்றி
        மறுகயி றூசல் போல
        வந்துவந் துலவு நெஞ்சம்
        பெறுகயி றூசல் போலப்
        பிறைபுல்கு சடையாய் பாதத்
        தறுகயி றூச லானேன்
        அதிகைவீ ரட்ட னாரே.     4.26.6
    265    கழித்திலேன் காம வெந்நோய்
        காதன்மை என்னும் பாசம்
        ஒழித்திலேன் ஊன்கண் நோக்கி
        உணர்வெனும் இமைதி றந்து
        விழித்திலேன் வெளிறு தோன்ற
        வினையெனுஞ் சரக்குக் கொண்டேன்
        அழித்திலேன் அயர்த்துப் போனேன்
        அதிகைவீ ரட்ட னாரே.     4.26.7
    266    மன்றத்துப் புன்னை போல
        மரம்படு துயர மெய்தி
        ஒன்றினால் உணர மாட்டேன்
        உன்னையுள் வைக்க மாட்டேன்
        கன்றிய காலன் வந்து
        கருக்குழி விழுப்ப தற்கே
        அன்றினான் அலமந் திட்டேன்
        அதிகைவீ ரட்ட னாரே.     4.26.8
    267    பிணிவிடா ஆக்கை பெற்றேன்
        பெற்றமொன் றேறு வானே
        பணிவிடா இடும்பை யென்னும்
        பாசனத் தழுந்து கின்றேன்
        துணிவிலேன் தூய னல்லேன்
        தூமலர்ப் பாதங் காண்பான்
        அணியனாய் அறிய மாட்டேன்
        அதிகைவீ ரட்ட னாரே.     4.26.9
    268    திருவினாள் கொழுந னாருந்
        திசைமுக முடைய கோவும்
        இருவரும் எழுந்தும் வீழ்ந்தும்
        இணையடி காண மாட்டா
        ஒருவனே எம்பி ரானே
        உன்திருப் பாதங் கண்பான்
        அருவனே அருள வேண்டும்
        அதிகைவீ ரட்ட னாரே.     4.26.10

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.27 திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை

    திருச்சிற்றம்பலம்
    269    மடக்கினார் புலியின் தோலை
        மாமணி நாகங் கச்சா
        முடக்கினார் முகிழ்வெண் டிங்கள்
        மொய்சடைக் கற்றை தன்மேல்
        தொடக்கினார் தொண்டைச் செவ்வாய்த்
        துடியிடைப் பரவை யல்குல்
        அடக்கினார் கெடில வேலி
        அதிகைவீ ரட்ட னாரே.     4.27.1
    270    சூடினார் கங்கை யாளைச்
        சூடிய துழனி கேட்டங்
        கூடினாள் நங்கை யாளும்
        ஊடலை ஒழிக்க வேண்டிப்
        பாடினார் சாம வேதம்
        பாடிய பாணி யாலே
        ஆடினார் கெடில வேலி
        அதிகைவீ ரட்ட னாரே.     4.27.2
    271    கொம்பினார் குழைத்த வேனற்
        கோமகன் கோல நீர்மை
        நம்பினார் காண லாகா
        வகையதோர் நடலை செய்தார்
        வெம்பினார் மதில்கள் மூன்றும்
        வில்லிடை எரித்து வீழ்த்த
        அம்பினார் கெடில வேலி
        அதிகைவீ ரட்ட னாரே.     4.27.3
    272    மறிபடக் கிடந்த கையர்
        வளரிள மங்கை பாகஞ்
        செறிபடக் கிடந்த செக்கர்ச்
        செழுமதிக் கொழுந்து சூடி
        பொறிபடக் கிடந்த நாகம்
        புகையுமிழ்ந் தழல வீக்கிக்
        கிறிபட நடப்பர் போலுங்
        கெடிலவீ ரட்ட னாரே.     4.27.4
    273    நரிவரால் கவ்வச் சென்று
        நற்றசை இழந்த தொத்த
        தெரிவரால் மால்கொள் சிந்தை
        தீர்ப்பதோர் சிந்தை செய்வார்
        வரிவரால் உகளுந் தெண்ணீணர்க்
        கழனிசூழ் பழன வேலி
        அரிவரால் வயல்கள் சூழ்ந்த
        அதிகைவீ ரட்ட னாரே.     4.27.5
    274    புள்ளலைத் துண்ட ஓட்டில்
        உண்டுபோய் பலாசங் கொம்பின்
        சுள்ளலைச் சுடலை வெண்ணீ
        றணிந்தவர் மணிவெள் ளேற்றுத்
        துள்ளலைப் பாகன் றன்னைத்
        தொடர்ந்திங்கே கிடக்கின் றேனை
        அள்ளலைக் கடப்பித் தாளும்
        அதிகைவீ ரட்ட னாரே.     4.27.6
    275    நீறிட்ட நுதலர் வேலை
        நீலஞ்சேர் கண்டர் மாதர்
        கூறிட்ட மெய்ய ராகிக்
        கூறினார் ஆறும் நான்குங்
        கீறிட்ட திங்கள் சூடிக்
        கிளர்தரு சடையி னுள்ளால்
        ஆறிட்டு முடிப்பர் போலும்
        அதிகைவீ ரட்ட னாரே.     4.27.7
    276    காணிலார் கருத்தில் வாரார்
        திருத்தலார் பொருத்த லாகார்
        ஏணிலார் இறப்பும் இல்லார்
        பிறப்பிலார் துறக்க லாகார்
        நாணிலார் ஐவ ரோடும்
        இட்டெனை விரவி வைத்தார்
        ஆணலார் பெண்ணும் அல்லார்
        அதிகைவீ ரட்ட னாரே.     4.27.8
        இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.     4.27.9
    277    தீர்த்தமா மலையை நோக்கிச்
        செருவலி அரக்கன் சென்று
        பேர்த்தலும் பேதை அஞ்சப்
        பெருவிர லதனை யூன்றிச்
        சீர்த்தமா முடிகள் பத்துஞ்
        சிதறுவித் தவனை யன்று
        ஆர்த்தவாய் அலற வைத்தார்
        அதிகைவீ ரட்ட னாரே.     4.27.10

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.28 திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை

    திருச்சிற்றம்பலம்
    278    முன்பெலாம் இளைய காலம்
        மூர்த்தியை நினையா தோடிக்
        கண்கண இருமி நாளுங்
        கருத்தழிந் தருத்த மின்றிப்
        பின்பக லுணங்கல் அட்டும்
        பேதைமார் போன்றேன் உள்ளம்
        அன்பனாய் வாழ மாட்டேன்
        அதிகைவீ ரட்ட னாரே.     4.28.1
    279    கறைப்பெருங் கண்டத் தானே
        காய்கதிர் நமனை யஞ்சி
        நிறைப்பெருங் கடலைக் கண்டேன்
        நீள்வரை யுச்சி கண்டேன்
        பிறைப்பெருஞ் சென்னி யானே
        பிஞ்ஞகா இவைய னைத்தும்
        அறுப்பதோர் உபாயங் காணேன்
        அதிகைவீ ரட்ட னாரே.     4.28.2
    280    நாதனா ரென்ன நாளும்
        நடுங்கின ராகித் தங்கள்
        ஏதங்கள் அறிய மாட்டார்
        இணையடி தொழுதோம் என்பார்
        ஆதனா னவனென் றெள்கி
        அதிகைவீ ரட்ட னேநின்
        பாதநான் பரவா துய்க்கும்
        பழவினைப் பரிசி லேனே.     4.28.3
    281    சுடலைசேர் சுண்ண மெய்யர்
        சுரும்புண விரிந்த கொன்றைப்
        படலைசேர் அலங்கல் மார்பர்
        பழனஞ்சேர் கழனித் தெங்கின்
        மடலைநீர் கிழிய வோடி
        அதனிடை மணிகள் சிந்துங்
        கெடிலவீ ரட்ட மேய
        கிளர்சடை முடிய னாரே.     4.28.4
    282    மந்திர முள்ள தாக
        மறிகட லெழுநெய் யாக
        இந்திரன் வேள்வித் தீயில்
        எழுந்ததோர் கொழுந்தின் வண்ணஞ்
        சிந்திர மாக நோக்கித்
        தெருட்டுவார் தெருட்ட வந்து
        கந்திரம் முரலுஞ் சோலைக்
        கானலங் கெடிலத் தாரே.     4.28.5
        இப்பதிகத்தில் 6,7,8,9-ம் செய்யுட்கள்
    சிதைந்து போயின.     4.28.6-9
    283    மைஞ்ஞல மனைய கண்ணாள்
        பங்கன்மா மலையை யோடி
        மெய்ஞ்ஞரம் புதிரம் பில்க
        விசைதணிந் தரக்கன் வீழ்ந்து
        கைஞ்ஞரம் பெழுவிக் கொண்டு
        காதலால் இனிது சொன்ன
        கின்னரங் கேட்டு கந்தார்
        கெடிலவீ ரட்ட னாரே.     4.28.10

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.29 திருச்செம்பொன்பள்ளி - திருநேரிசை

    திருச்சிற்றம்பலம்

    284    ஊனினுள் ளுயிரை வாட்டி
        யுணர்வினார்க் கெளிய ராகி
        வானினுள் வான வர்க்கும்
        அறியலா காத வஞ்சர்
        நானெனிற் றானே யென்னு
        ஞானத்தார் பத்தர் நெஞ்சுள்
        தேனும்இன் னமுது மானார்
        திருச்செம்பொன் பள்ளி யாரே.     4.29.1
    285    நொய்யவர் விழுமி யாரும்
        நூலினுள் நெறியைக் காட்டும்
        மெய்யவர் பொய்யு மில்லார்
        உடலெனும் இடிஞ்சில் தன்னில்
        நெய்யமர் திரியு மாகி
        நெஞ்சத்துள் விளக்கு மாகிச்
        செய்யவர் கரிய கண்டர்
        திருச்செம்பொன் பள்ளி யாரே.     4.29.2
    286    வெள்ளியர் கரியர் செய்யர்
        விண்ணவ ரவர்கள் நெஞ்சுள்
        ஒள்ளியர் ஊழி யூழி
        யுலகம தேத்த நின்ற
        பள்ளியர் நெஞ்சத் துள்ளார்
        பஞ்சமம் பாடி யாடுந்
        தெள்ளியர் கள்ளந் தீர்ப்பார்
        திருச்செம்பொன் பள்ளி யாரே.     4.29.3
    287    தந்தையுந் தாயு மாகித்
        தானவன் ஞான மூர்த்தி
        முந்திய தேவர் கூடி
        முறைமுறை இருக்குச் சொல்லி
        எந்தைநீ சரண மென்றங்
        கிமையவர் பரவி யேத்தச்
        சிந்தையுட் சிவம தானார்
        திருச்செம்பொன் பள்ளி யாரே.     4.29.4
    288    ஆறுடைச் சடையர் போலும்
        அன்பருக் கன்பர் போலுங்
        கூறுடை மெய்யர் போலுங்
        கோளர வரையர் போலும்
        நீறுடை யழகர் போலும்
        நெய்தலே கமழு நீர்மைச்
        சேறுடைக் கமல வேலித்
        திருச்செம்பொன் பள்ளி யாரே.     4.29.5
    289    ஞாலமும் அறிய வேண்டின்
        நன்றென வாழ லுற்றீர்
        காலமுங் கழிய லான
        கள்ளத்தை ஒழிய கில்லீர்
        கோலமும் வேண்டா ஆர்வச்
        செற்றங்கள் குரோத நீக்கில்
        சீலமும் நோன்பு மாவார்
        திருச்செம்பொன் பள்ளி யாரே.     4.29.6
    290    புரிகாலே நேசஞ் செய்ய
        இருந்தபுண் டரீகத் தாரும்
        எரிகாலே மூன்று மாகி
        இமையவர் தொழநின் றாரும்
        தெரிகாலே மூன்று சந்தி
        தியானித்து வணங்க நின்று
        திரிகாலங் கண்ட எந்தை
        திருச்செம்பொன் பள்ளி யாரே.     4.29.7
    291    காருடைக் கொன்றை மாலை
        கதிர்மதி அரவி னோடும்
        நீருடைச் சடையுள் வைத்த
        நீதியார் நீதி யுள்ளார்
        பாரொடு விண்ணும் மண்ணும்
        பதினெட்டுக் கணங்க ளேத்தச்
        சீரொடு பாட லானார்
        திருச்செம்பொன் பள்ளி யாரே.     4.29.8
    292    ஓவாத மறைவல் லானும்
        ஓதநீர் வண்ணன் காணா
        மூவாத பிறப்பி லாரும்
        முனிகளா னார்கள் ஏத்தும்
        பூவான மூன்றும் முந்நூற்
        றறுபது மாகும் எந்தை
        தேவாதி தேவ ரென்றுந்
        திருச்செம்பொன் பள்ளி யாரே.     4.29.9
    293    அங்கங்க ளாறு நான்கும்
        அந்தணர்க் கருளிச் செய்து
        சங்கங்கள் பாட ஆடுஞ்
        சங்கரன் மலைஎ டுத்தான்
        அங்கங்கள் உதிர்ந்து சோர
        அலறிட அடர்த்து நின்றுஞ்
        செங்கண்வெள் ளேற தேறுந்
        திருச்செம்பொன் பள்ளி யாரே.     4.29.10
    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - சொர்னபுரீசர், தேவியார் - சுகந்தவனநாயகி.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.30 திருக்கழிப்பாலை - திரு நேரிசை

    திருச்சிற்றம்பலம்

    294    நங்கையைப் பாகம் வைத்தார்
        ஞானத்தை நவில வைத்தார்
        அங்கையில் அனலும் வைத்தார்
        ஆனையின் உரிவை வைத்தார்
        தங்கையின் யாழும் வைத்தார்
        தாமரை மலரும் வைத்தார்
        கங்கையைச் சடையுள் வைத்தார்
        கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.     4.30.1
    295    விண்ணினை விரும்ப வைத்தார்
        வேள்வியை வேட்க வைத்தார்
        பண்ணினைப் பாட வைத்தார்
        பத்தர்கள் பயில வைத்தார்
        மண்ணினைத் தாவ நீண்ட
        மாலினுக் கருளும் வைத்தார்
        கண்ணினை நெற்றி வைத்தார்
        கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.     4.30.2
    296    வாமனை வணங்க வைத்தார்
        வாயினை வாழ்த்த வைத்தார்
        சோமனைச் சடைமேல் வைத்தார்
        சோதியுட் சோதி வைத்தார்
        ஆமனை யாட வைத்தார்
        அன்பெனும் பாசம் வைத்தார்
        காமனைக் காய்ந்த கண்ணார்
        கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.     4.30.3
    297    அரியன அங்கம் வேதம்
        அந்தணர்க் கருளும் வைத்தார்
        பெரியன புரங்கள் மூன்றும்
        பேரழ லுண்ண வைத்தார்
        பரியதீ வண்ண ராகிப்
        பவளம்போல் நிறத்தை வைத்தார்
        கரியதோர் கண்டம் வைத்தார்
        கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.     4.30.4
    298    கூரிருள் கிழிய நின்ற
        கொடுமழுக் கையில் வைத்தார்
        பேரிருள் கழிய மல்கு
        பிறைபுனற் சடையுள் வைத்தார்
        ஆரிருள் அண்டம் வைத்தார்
        அறுவகைச் சமயம் வைத்தார்
        காரிருள் கண்டம் வைத்தார்
        கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.     4.30.5
    299    உட்டங்கு சிந்தை வைத்தார்
        உள்குவார்க் குள்ளம் வைத்தார்
        விட்டங்கு வேள்வி வைத்தார்
        வெந்துயர் தீர வைத்தார்
        நட்டங்கு நடமும் வைத்தார்
        ஞானமு நவில வைத்தார்
        கட்டங்கந் தோண்மேல் வைத்தார்
        கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.     4.30.6
    300    ஊனப்பே ரொழிய வைத்தார்
        ஓதியே உணர வைத்தார்
        ஞானப்பேர் நவில வைத்தார்
        ஞானமு நடுவும் வைத்தார்
        வானப்பே ராறும் வைத்தார்
        வைகுந்தற் காழி வைத்தார்
        கானப்பேர் காதல் வைத்தார்
        கழிப்பாலைச் சேர்ப்ப னாரே     4.30.7
    301    கொங்கினும் அரும்பு வைத்தார்
        கூற்றங்கள் கெடுக்க வைத்தார்
        சங்கினுள் முத்தம் வைத்தார்
        சாம்பலும் பூச வைத்தார்
        அங்கமும் வேதம் வைத்தார்
        ஆலமும் உண்டு வைத்தார்
        கங்குலும் பகலும் வைத்தார்
        கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.     4.30.8
    302    சதுர்முகன் தானும் மாலுந்
        தம்மிலே இகலக் கண்டு
        எதிர்முக மின்றி நின்ற
        எரியுரு வதனை வைத்தார்
        பிதிர்முகன் காலன் றன்னைக்
        கால்தனிற் பிதிர வைத்தார்
        கதிர்முகஞ் சடையில் வைத்தார்
        கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.     4.30.9
    303    மாலினாள் நங்கை அஞ்ச
        மதிலிலங் கைக்கு மன்னன்
        வேலினான் வெகுண் டெடுக்கக்
        காண்டலும் வேத நாவன்
        நூலினான் நோக்கி நக்கு
        நொடிப்பதோ ரளவில் வீழக்
        காலினால் ஊன்றி யிட்டார்
        கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.     4.30.10

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - பால்வண்ணவீசுவரர், தேவியார் - பொற்பதவேதநாயகி.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.31 திருக்கடவூர் - திருநேரிசை

    திருச்சிற்றம்பலம்

    304    பொள்ளத்த காய மாயப்
        பொருளினைப் போக மாதர்
        வெள்ளத்தைக் கழிக்க வேண்டில்
        விரும்புமின் விளக்குத் தூபம்
        உள்ளத்த திரியொன் றேற்றி
        உணருமா றுணர வல்லார்
        கள்ளத்தைக் கழிப்பர் போலுங்
        கடவூர்வீ ரட்ட னாரே.     4.31.1
    305    மண்ணிடைக் குரம்பை தன்னை
        மதித்துநீர் மைய லெய்தில்
        விண்ணிடைத் தரும ராசன்
        வேண்டினால் விலக்கு வாரார்
        பண்ணிடைச் சுவைகள் பாடி
        ஆடிடும் பத்தர்க் கென்றுங்
        கண்ணிடை மணியர் போலுங்
        கடவூர்வீ ரட்ட னாரே.     4.31.2
    306    பொருத்திய குரம்பை தன்னுட்
        பொய்நடை செலுத்து கின்றீர்
        ஒருத்தனை யுணர மாட்டீர்
        உள்ளத்திற் கொடுமை நீக்கீர்
        வருத்தின களிறு தன்னை
        வருத்துமா வருத்த வல்லார்
        கருத்தினில் இருப்பர் போலுங்
        கடவூர்வீ ரட்ட னாரே.     4.31.3
    307    பெரும்புலர் காலை மூழ்கிப்
        பித்தற்குப் பத்த ராகி
        அரும்பொடு மலர்கள் கொண்டாங்
        கார்வத்தை யுள்ளே வைத்து
        விரும்பிநல் விளக்குத் தூபம்
        விதியினால் இடவல் லார்க்குக்
        கரும்பினிற் கட்டி போல்வார்
        கடவூர்வீ ரட்ட னாரே.     4.31.4
    308    தலக்கமே செய்து வாழ்ந்து
        தக்கவா றொன்று மின்றி
        விலக்குவா ரிலாமை யாலே
        விளக்கதிற் கோழி போன்றேன்
        மலக்குவார் மனத்தி னுள்ளே
        காலனார் தமர்கள் வந்து
        கலக்கநான் கலங்கு கின்றேன்
        கடவூர்வீ ரட்ட னாரே.     4.31.5
    309    பழியுடை யாக்கை தன்னிற்
        பாழுக்கே நீரி றைத்து
        வழியிடை வாழ மாட்டேன்
        மாயமுந் தெளிய கில்லேன்
        அழிவுடைத் தாய வாழ்க்கை
        ஐவரால் அலைக்கப் பட்டுக்
        கழியிடைத் தோணி போன்றேன்
        கடவூர்வீ ரட்ட னாரே.     4.31.6
    310    மாயத்தை அறிய மாட்டேன்
        மையல்கொள் மனத்த னாகிப்
        பேயொத்துக் கூகை யானேன்
        பிஞ்ஞகா பிறப்பொன் றில்லீ
        நேயத்தால் நினைய மாட்டேன்
        நீதனே நீசனேன் நான்
        காயத்தைக் கழிக்க மாட்டேன்
        கடவூர்வீ ரட்ட னாரே.     4.31.7
    311    பற்றிலா வாழ்க்கை வாழ்ந்து
        பாழுக்கே நீரி றைத்தேன்
        உற்றலாற் கயவர் தேறா
        ரென்னுங்கட் டுரையோ டொத்தேன்
        எற்றுளேன் என்செய் கேன்நான்
        இடும்பையால் ஞான மேதுங்
        கற்றிலேன் களைகண் காணேன்
        கடவூர்வீ ரட்ட னாரே.     4.31.8
    312    சேலின்நேர் அனைய கண்ணார்
        திறம்விட்டுச் சிவனுக் கன்பாய்ப்
        பாலுநற் றயிர்நெய் யோடு
        பலபல ஆட்டி யென்றும்
        மாலினைத் தவிர நின்ற
        மார்க்கண்டற் காக வன்று
        காலனை யுதைப்பர் போலுங்
        கடவூர்வீ ரட்ட னாரே.     4.31.9
    313    முந்துரு இருவ ரோடு
        மூவரு மாயி னாரும்
        இந்திர னோடு தேவர்
        இருடிகள் இன்பஞ் செய்ய
        வந்திரு பதுகள் தோளால்
        எடுத்தவன் வலியை வாட்டிக்
        கந்திரு வங்கள் கேட்டார்
        கடவூர்வீ ரட்ட னாரே.     4.31.10

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - அமிர்தகடேசுவரர், தேவியார் - அபிராமியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.32 திருப்பயற்றூர் - திரு நேரிசை

    திருச்சிற்றம்பலம்

    314    உரித்திட்டார் ஆனை யின்றோள்
        உதிரவா றொழுகி யோட
        விரித்திட்டார் உமையா ளஞ்சி
        விரல்விதிர்த் தலக்கண் நோக்கித்
        தரித்திட்டார் சிறிது போது
        தரிக்கில ராகித் தாமுஞ்
        சிரித்திட்டார் எயிறு தோன்றத்
        திருப்பயற் றூர னாரே.     4.32.1
    315    உவந்திட்டங் குமையோர் பாகம்
        வைத்தவர் ஊழி யூழி
        பவந்திட்ட பரம னார் தாம்
        மலைச்சிலை நாகம் ஏற்றிக்
        கவர்ந்திட்ட புரங்கள் மூன்றுங்
        கனலெரி யாகச் சீறிச்
        சிவந்திட்ட கண்ணர் போலுந்
        திருப்பயற் றூர னாரே.     4.32.2
    316    நங்களுக் கருள தென்று
        நான்மறை யோது வார்கள்
        தங்களுக் கருளும் எங்கள்
        தத்துவன் றழலன் றன்னை
        எங்களுக் கருள்செய் யென்ன
        நின்றவன் நாகம் அஞ்சுந்
        திங்களுக் கருளிச் செய்தார்
        திருப்பயற் றூர னாரே.     4.32.3
    317    பார்த்தனுக் கருளும் வைத்தார்
        பாம்பரை யாட வைத்தார்
        சாத்தனை மகனா வைத்தார்
        சாமுண்டி சாம வேதங்
        கூத்தொடும் பாட வைத்தார்
        கோளரா மதியம் நல்ல
        தீர்த்தமுஞ் சடைமேல் வைத்தார்
        திருப்பயற் றூர னாரே.     4.32.4
    318    மூவகை மூவர் போலும்
        முற்றுமா நெற்றிக் கண்ணர்
        நாவகை நாவர் போலும்
        நான்மறை ஞான மெல்லாம்
        ஆவகை யாவர் போலும்
        ஆதிரை நாளர் போலுந்
        தேவர்கள் தேவர் போலுந்
        திருப்பயற் றூர னாரே.     4.32.5
    319    ஞாயிறாய் நமனு மாகி
        வருணனாய்ச் சோம னாகித்
        தீயறா நிருதி வாயுத்
        திப்பிய சாந்த னாகிப்
        பேயறாக் காட்டி லாடும்
        பிஞ்ஞகன் எந்தை பெம்மான்
        தீயறாக் கையர் போலுந்
        திருப்பயற் றூர னாரே.     4.32.6
    320    ஆவியாய் அவியு மாகி
        அருக்கமாய்ப் பெருக்க மாகிப்
        பாவியர் பாவந் தீர்க்கும்
        பரமனாய்ப் பிரம னாகிக்
        காவியங் கண்ண ளாகிக்
        கடல்வண்ண மாகி நின்ற
        தேவியைப் பாகம் வைத்தார்
        திருப்பயற் றூர னாரே.     4.32.7
    321    தந்தையாய்த் தாயு மாகித்
        தரணியாய்த் தரணி யுள்ளார்க்
        கெந்தையு மென்ன நின்ற
        ஏழுல குடனு மாகி
        எந்தையெம் பிரானே என்றென்
        றுள்குவா ருள்ளத் தென்றுஞ்
        சிந்தையுஞ் சிவமு மாவார்
        திருப்பயற் றூர னாரே.     4.32.8
    322    புலன்களைப் போக நீக்கிப்
        புந்தியை யொருங்க வைத்து
        இலங்களைப் போக நின்று
        இரண்டையும் நீக்கி யொன்றாய்
        மலங்களை மாற்ற வள்ளார்
        மனத்தினுட் போக மாகிச்
        சினங்களைக் களைவர் போலுந்
        திருப்பயற் றூர னாரே.     4.32.9
    323    மூர்த்திதன் மலையின் மீது
        போகாதா முனிந்து நோக்கிப்
        பார்த்துத்தான் பூமி மேலாற்
        பாய்ந்துடன் மலையைப் பற்றி
        ஆர்த்திட்டான் முடிகள் பத்தும்
        அடர்த்துநல் லரிவை யஞ்சத்
        தேத்தெத்தா என்னக் கேட்டார்
        திருப்பயற் றூர னாரே.     4.32.10

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - திருப்பயத்தீசுவரர்,
    தேவியார் - காவியங்கண்ணியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.33 திருமறைக்காடு - திரு நேரிசை

    திருச்சிற்றம்பலம்

    324    இந்திர னோடு தேவர்
        இருடிகள் ஏத்து கின்ற
        சுந்தர மானார் போலுந்
        துதிக்கலாஞ் சோதி போலுஞ்
        சந்திர னோடுங் கங்கை
        அரவையுஞ் சடையுள் வைத்து
        மந்திர மானார் போலும்
        மாமறைக் காட னாரே.     4.33.1
    325    தேயன நாட ராகித்
        தேவர்கள் தேவர் போலும்
        பாயன நாட றுக்கும்
        பத்தர்கள் பணிய வம்மின்
        காயன நாடு கண்டங்
        கதனுளார் காள கண்டர்
        மாயன நாடர் போலும்
        மாமறைக் காட னாரே.     4.33.2
    326    அறுமையிவ் வுலகு தன்னை
        யாமெனக் கருதி நின்று
        வெறுமையின் மனைகள் வாழ்ந்து
        வினைகளால் நலிவு ணாதே
        சிறுமதி அரவு கொன்றை
        திகழ்தரு சடையுள் வைத்து
        மறுமையும் இம்மை யாவார்
        மாமறைக் காட னாரே.     4.33.3
    327    கால்கொடுத் திருகை யேற்றிக்
        கழிநிரைத் திறைச்சி மேய்ந்து
        தோல்படுத் துதிர நீராற்
        சுவரெடுத் திரண்டு வாசல்
        ஏல்வுடைத் தாவ மைத்தங்
        கேழுசா லேகம் பண்ணி
        மால்கொடுத் தாவி வைத்தார்
        மாமறைக் காட னாரே.     4.33.4
    328    விண்ணினார் விண்ணின் மிக்கார்
        வேதங்கள் விரும்பி யோதப்
        பண்ணினார் கின்ன ரங்கள்
        பத்தர்கள் பாடி யாடக்
        கண்ணினார் கண்ணி னுள்ளே
        சோதியாய் நின்ற எந்தை
        மண்ணினார் வலங்கொண் டேத்தும்
        மாமறைக் காட னாரே.     4.33.5
    329    அங்கையுள் அனலும் வைத்தார்
        அறுவகைச் சமயம் வைத்தார்
        தங்கையில் வீணை வைத்தார்
        தம்மடி பரவ வைத்தார்
        திங்களைக் கங்கை யோடு
        திகழ்தரு சடையுள் வைத்தார்
        மங்கையைப் பாகம் வைத்தார்
        மாமறைக் காட னாரே.     4.33.6
    330    கீதராய்க் கீதங் கேட்டுக்
        கின்னரந் தன்னை வைத்தார்
        வேதராய் வேத மோதி
        விளங்கிய சோதி வைத்தார்
        ஏதராய் நட்ட மாடி
        இட்டமாய்க் கங்கை யோடு
        மாதையோர் பாகம் வைத்தார்
        மாமறைக் காட னாரே.     4.33.7
    331    கனத்தினார் வலி யுடைய
        கடிமதில் அரணம் மூன்றுஞ்
        சினத்தினுட் சினமாய் நின்று
        தீயெழச் செற்றார் போலுந்
        தனத்தினைத் தவிர்ந்து நின்று
        தம்மடி பரவு வார்க்கு
        மனத்தினுள் மாசு தீர்ப்பார்
        மாமறைக் காட னாரே.     4.33.8
    332    தேசனைத் தேசன் றன்னைத்
        தேவர்கள் போற்றி சைப்பார்
        வாசனை செய்து நின்று
        வைகலும் வணங்கு மின்கள்
        காசினைக் கனலை என்றுங்
        கருத்தினில் வைத்த வர்க்கு
        மாசினைத் தீர்ப்பர் போலும்
        மாமறைக் காட னாரே.     4.33.9
    333    பிணியுடை யாக்கை தன்னைப்
        பிறப்பறுத் துய்ய வேண்டிற்
        பணியுடைத் தொழில்கள் பூண்டு
        பத்தர்கள் பற்றி னாலே
        துணிவுடை அரக்க னோடி
        எடுத்தலுந் தோகை அஞ்ச
        மணிமுடிப் பத்தி றுத்தார்
        மாமறைக் காட னாரே.     4.33.10

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - வேதாரணியேசுவரர்,
    தேவியார் - யாழைப்பழித்தமொழியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.34 திருமறைக்காடு - திரு நேரிசை

    திருச்சிற்றம்பலம்

    334    தேரையு மேல்க டாவித்
        திண்ணமாத் தெளிந்து நோக்கி
        யாரையு மேலு ணரா
        ஆண்மையான் மிக்கான் தன்னைப்
        பாரையும் விண்ணும் அஞ்சப்
        பரந்த தோள் முடியடர்த்துக்
        காரிகை அஞ்ச லென்பார்
        கலிமறைக் காட னாரே.     4.33.1
    335    முக்கிமுன் வெகுண்டெ டுத்த
        முடியுடை அரக்கர்கோனை
        நக்கிருந் தூன்றிச் சென்னி
        நாண்மதி வைத்த எந்தை
        அக்கர வாமை பூண்ட
        அழகனார் கருத்தி னாலே
        தெக்குநீர்த் திரைகள் மோதுந்
        திருமறைக் காட னாரே.     4.33.2
    336    மிகப்பெருத் துலாவ மிக்கா
        னக்கொரு தேர்க டாவி
        அகப்படுத் தென்று தானும்
        ஆண்மையால் மிக்க ரக்கன்
        உகைத்தெடுத் தான்ம லையை
        ஊன்றலும் அவனை யாங்கே
        நகைப்படுத் தருளி னானூர்
        நான்மறைக் காடு தானே.     4.33.3
    337    அந்தரந் தேர்க டாவி
        யாரிவ னென்று சொல்லி
        உந்தினான் மாம லையை
        ஊன்றலும் ஒள்ள ரக்கன்
        பந்தமாந் தலைகள் பத்தும்
        வாய்கள்விட் டலறி வீழச்
        சிந்தனை செய்து விட்டார்
        திருமறைக் காட னாரே.     4.33.4
    338    தடுக்கவுந் தாங்க வொண்ணாத்
        தன்வலி யுடைய னாகிக்
        கடுக்கவோர் தேர்க டாவிக்
        கையிரு பதுக ளாலும்
        எடுப்பன்நான் என்ன பண்ட
        மென்றெடுத் தானை ஏங்க
        அடுக்கவே வல்ல னூராம்
        அணிமறைக் காடு தானே.     4.33.5
    339    நாண்முடிக் கின்ற சீரான்
        நடுங்கியே மீது போகான்
        கோள்பிடித் தார்த்த கையான்
        கொடியன்மா வலிய னென்று
        நீண்முடிச் சடையர் சேரும்
        நீள்வரை யெடுக்க லுற்றான்
        தோண்முடி நெரிய வைத்தார்
        தொன்மறைக் காட னாரே.     4.33.6
    340    பத்துவாய் இரட்டிக் கைக
        ளுடையன்மா வலிய னென்று
        பொத்திவாய் தீமை செய்த
        பொருவலி அரக்கர் கோனைக்
        கத்திவாய் கதற அன்று
        கால்விர லூன்றி யிட்டார்
        முத்துவாய்த் திரைகள் மோதும்
        முதுமறைக் காட னாரே.     4.33.7
    341    பக்கமே விட்ட கையான்
        பாங்கிலா மதிய னாகிப்
        புக்கனன் மாம லைக்கீழ்ப்
        போதுமா றறிய மாட்டான்
        மிக்கமா மதிகள் கெட்டு
        வீரமும் இழந்த வாறே
        நக்கன பூத மெல்லாம்
        நான்மறைக் காட னாரே.     4.33.8
    342    நாணஞ்சு கைய னாகி
        நான்முடி பத்தி னோடு
        பாணஞ்சு முன்னி ழந்த
        பாங்கிலா மதிய னாகி
        நீணஞ்சு தானு ணரா
        நின்றெடுத் தானை அன்று
        ஏணஞ்சு கைகள் செய்தார்
        எழில்மறைக் காட னாரே.     4.33.9
    343    கங்கைநீர் சடையுள் வைக்கக்
        காண்டலும் மங்கை யூடத்
        தென்கையான் தேர்க டாவிச்
        சென்றெடுத் தான் மலையை
        முன்கைமா நரம்பு வெட்டி
        முன்னிருக் கிசைகள் பாட
        அங்கைவாள் அருளி னானூர்
        அணிமறைக் காடு தானே.     4.33.10

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.35 திருவிடைமருது - திருநேரிசை

    திருச்சிற்றம்பலம்

    344    காடுடைச் சுடலை நீற்றர்
        கையில்வெண் டலையர் தையல்
        பாடுடைப் பூதஞ் சூழப்
        பரமனார் மருத வைப்பிற்
        தோடுடைக் கைதை யோடு
        சூழ்கிடங் கதனைச் சூழ்ந்த
        ஏடுடைக் கமல வேலி
        இடைமரு திடங்கொண் டாரே.     4.34.1
    345    முந்தையார் முந்தி யுள்ளார்
        மூவர்க்கு முதல்வ ரானார்
        சந்தியார் சந்தி யுள்ளார்
        தவநெறி தரித்து நின்றார்
        சிந்தையார் சிந்தை யுள்ளார்
        சிவநெறி யனைத்து மானார்
        எந்தையார் எம்பி ரானார்
        இடைமரு திடங் கொண்டாரே.     4.34.2
    346    காருடைக் கொன்றை மாலை
        கதிர்மணி அரவி னோடு
        நீருடைச் சடையுள் வைத்த
        நீதியார் நீதி யாய
        போருடை விடையொன் றேற
        வல்லவர் பொன்னித் தென்பால்
        ஏருடைக் கமல மோங்கும்
        இடைமரு திடங் கொண்டாரே.     4.34.3
    347    விண்ணினார் விண்ணின் மிக்கார்
        வேதங்கள் நான்கும் அங்கம்
        பண்ணினார் பண்ணின் மிக்க
        பாடலார் பாவந் தீர்க்குங்
        கண்ணினார் கண்ணின் மிக்க
        நுதலினார் காமர் காய்ந்த
        எண்ணினார் எண்ணின் மிக்கார்
        இடைமரு திடங் கொண்டாரே.     4.34.4
    348    வேதங்கள் நான்குங் கொண்டு
        விண்ணவர் பரவி ஏத்தப்
        பூதங்கள் பாடி யாட
        லுடையவன் புனிதன் எந்தை
        பாதங்கள் பரவி நின்ற
        பத்தர்கள் தங்கள் மேலை
        ஏதங்கள் தீர நின்றார்
        இடைமரு திடங் கொண்டாரே.     4.34.5
    349    பொறியர வரையி லார்த்துப்
        பூதங்கள் பலவுஞ் சூழ
        முறிதரு வன்னி கொன்றை
        முதிர்சடை மூழ்க வைத்து
        மறிதரு கங்கை தங்க
        வைத்தவர் எத்தி சையும்
        ஏறிதரு புனல்கொள் வேலி
        இடைமரு திடங் கொண்டாரே.     4.34.6
    350    படரொளி சடையி னுள்ளாற்
        பாய்புனல் அரவி னோடு
        சுடரொளி மதியம் வைத்துத்
        தூவொளி தோன்றும் எந்தை
        அடரொளி விடையொன் றேற
        வல்லவர் அன்பர் தங்கள்
        இடரவை கெடவு நின்றார்
        இடைமரு திடங் கொண்டாரே.     4.34.7
    351    கமழ்தரு சடையி னுள்ளாற்
        கடும்புனல் அரவி னோடு
        தவழ்தரு மதியம் வைத்துத்
        தன்னடி பலரும் ஏத்த
        மழுவது வலங்கை யேந்தி
        மாதொரு பாக மாகி
        எழில்தரு பொழில்கள் சூழ்ந்த
        இடைமரு திடங் கொண்டாரே.     4.34.8
    352    பொன்றிகழ் கொன்றை மாலை
        புதுப்புனல் வன்னி மத்தம்
        மின்றிகழ் சடையில் வைத்து
        மேதகத் தோன்று கின்ற
        அன்றவர் அளக்க லாகா
        அனலெரி யாகி நீண்டார்
        இன்றுட னுலக மேத்த
        இடைமரு திடங் கொண்டாரே.     4.34.9
    353    மலையுடன் விரவி நின்று
        மதியிலா அரக்கன் நூக்கத்
        தலையுட னடர்த்து மீண்டே
        தலைவனாய் அருள்கள் நல்கிச்
        சிலையுடை மலையை வாங்கித்
        திரிபுர மூன்றும் எய்தார்
        இலையுடைக் கமல வேலி
        இடைமரு திடங் கொண்டாரே.     4.34.10

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - மருதீசர், தேவியார் - நலமுலைநாயகியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.36 திருப்பழனம் - திருநேரிசை

    திருச்சிற்றம்பலம்

    354    ஆடினா ரொருவர் போலு
        மலர்கமழ் குழலி னாலைக்
        கூடினா ரொருவர் போலுங்
        குளிர்புனல் வளைந்த திங்கள்
        சூடினா ரொருவர் போலுந்
        தூயநன் மறைகள் நான்கும்
        பாடினா ரொருவர் போலும்
        பழனத்தெம் பரம னாரே.     4.35.1
    355    போவதோர் நெறியு மானார்
        புரிசடைப் புனித னார்நான்
        வேவதோர் வினையிற் பட்டு
        வெம்மைதான் விடவுங் கில்லேன்
        கூவல்தான் அவர்கள் கேளார்
        குணமிலா ஐவர் செய்யும்
        பாவமே தீர நின்றார்
        பழனத்தெம் பரம னாரே.     4.35.2
    356    கண்டராய் முண்ட ராகிக்
        கையிலோர் கபால மேந்தித்
        தொண்டர்கள் பாடி யாடித்
        தொழுகழற் பரம னார்தாம்
        விண்டவர் புரங்க ளெய்த
        வேதியர் வேத நாவர்
        பண்டையென் வினைகள் தீர்ப்பார்
        பழனத்தெம் பரம னாரே.     4.35.3
    357    நீரவன் தீயி னோடு
        நிழலவன் எழில தாய
        பாரவன் விண்ணின் மிக்க
        பரமவன் பரம யோகி
        யாரவ னண்ட மிக்க
        திசையினோ டொளிக ளாகிப்
        பாரகத் தமுத மானார்
        பழனத்தெம் பரம னாரே.     4.35.4
    358    ஊழியா ரூழி தோறும்
        உலகினுக் கொருவ ராகிப்
        பாழியார் பாவந் தீர்க்கும்
        பராபரர் பரம தாய
        ஆழியான் அன்னத் தானும்
        அன்றவர்க் களப் பரிய
        பாழியார் பரவி யேத்தும்
        பழனத்தெம் பரம னாரே.     4.35.5
    359    ஆலின்கீழ் அறங்க ளெல்லாம்
        அன்றவர்க் கருளிச் செய்து
        நூலின்கீ ழவர்கட் கெல்லா
        நுண்பொரு ளாகி நின்று
        காலின்கீழ்க் காலன் றன்னைக்
        கடுகத்தான் பாய்ந்து பின்னும்
        பாலின்கீழ் நெய்யு மானார்
        பழனத்தெம் பரம னாரே.     4.35.6
    360    ஆதித்தன் அங்கி சோமன்
        அயனொடு மால்பு தனும்
        போதித்து நின்று லகிற்
        போற்றிசைத் தாரி வர்கள்
        சோதித்தா ரேழு லகுஞ்
        சோதியுட் சோதி யாகிப்
        பாதிப்பெண் ணுருவ மானார்
        பழனத்தெம் பரம னாரே.     4.35.7
    361    காற்றனாற் காலற் காய்ந்து
        காருரி போர்த்த ஈசர்
        தோற்றனார் கடலுள் நஞ்சைத்
        தோடுடைக் காதர் சோதி
        ஏற்றினார் இளவெண் டிங்கள்
        இரும்பொழில் சூழ்ந்த காயம்
        பாற்றினார் வினைக ளெல்லாம்
        பழனத்தெம் பரம னாரே.     4.35.8
    362    கண்ணனும் பிரம னோடு
        காண்கில ராகி வந்தே
        எண்ணியுந் துதித்து மேத்த
        எரியுரு வாகி நின்று
        வண்ணநன் மலர்கள் தூவி
        வாழ்த்துவார் வாழ்த்தி ஏத்தப்
        பண்ணுலாம் பாடல் கேட்டார்
        பழனத்தெம் பரம னாரே.     4.35.9
    363    குடையுடை அரக்கன் சென்று
        குளிர்கயி லாய வெற்பின்
        இடைமட வரலை அஞ்ச
        எடுத்தலும் இறைவன் நோக்கி
        விடையுடை விகிர்தன் றானும்
        விரலினா லூன்றி மீண்டும்
        படைகொடை அடிகள் போலும்
        பழனத்தெம் பரம னாரே.     4.35.10

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.37 திருநெய்த்தானம் - திருநேரிசை

    திருச்சிற்றம்பலம்

    364     காலனை வீழச் செற்ற
        கழலடி இரண்டும் வந்தென்
        மேலவா யிருக்கப் பெற்றேன்
        மேதகத் தோன்று கின்ற
        கோலநெய்த் தான மென்னுங்
        குளிர்பொழிற் கோயில் மேய
        நீலம்வைத் தனைய கண்ட
        நினைக்குமா நினைக்கின் றேனே.     4.37.1
    365    காமனை யன்று கண்ணாற்
        கனலெரி யாக நோக்கித்
        தூபமுந் தீபங் காட்டித்
        தொழுமவர்க் கருள்கள் செய்து
        சேமநெய்த் தான மென்னுஞ்
        செறிபொழிற் கோயில் மேய
        வாமனை நினைந்த நெஞ்சம்
        வாழ்வுற நினைந்த வாறே.     4.37.2
    366    பிறைதரு சடையின் மேலே
        பெய்புனற் கங்கை தன்னை
        உறைதர வைத்த எங்கள்
        உத்தமன் ஊழி யாய
        நிறைதரு பொழில்கள் சூழ
        நின்றநெய்த் தான மென்று
        குறைதரும் அடிய வர்க்குக்
        குழகனைக் கூட லாமே.     4.37.3
    367    வடிதரு மழுவொன் றேந்தி
        வார்சடை மதியம் வைத்துப்
        பொடிதரு மேனி மேலே
        புரிதரு நூலர் போலும்
        நெடிதரு பொழில்கள் சூழ
        நின்றநெய்த் தானம் மேவி
        அடிதரு கழல்கள் ஆர்ப்ப
        ஆடுமெம் அண்ண லாரே.     4.37.4
    368    காடிட மாக நின்று
        கனலெரி கையி லேந்திப்
        பாடிய பூதஞ் சூழப்
        பண்ணுடன் பலவுஞ் சொல்லி
        ஆடிய கழலார் சீரார்
        அந்தண்நெய்த் தானம் என்றுங்
        கூடிய குழக னாரைக்
        கூடுமா றறிகி லேனே.     4.37.5
    369    வானவர் வணங்கி யேத்தி
        வைகலும் மலர்கள் தூவத்
        தானவர்க் கருள்கள் செய்யும்
        சங்கரன் செங்கண் ஏற்றன்
        தேனமர் பொழில்கள் சூழத்
        திகழுநெய்த் தானம் மேய
        கூனிள மதியி னானைக்
        கூடுமா றறிகி லேனே.     4.37.6
    370    காலதிற் கழல்க ளார்ப்பக்
        கனலெரி கையில் வீசி
        ஞாலமுங் குழிய நின்று
        நட்டம தாடு கின்ற
        மேலவர் முகடு தோய
        விரிசடை திசைகள் பாய
        மாலொரு பாக மாக
        மகிழ்ந்தநெய்த் தான னாரே.     4.37.7
    371    பந்தித்த சடையின் மேலே
        பாய்புன லதனை வைத்து
        அந்திப்போ தனலு மாடி
        அடிகள்ஐ யாறு புக்கார்
        வந்திப்பார் வணங்கி நின்று
        வாழ்த்துவார் வாயி னுள்ளார்
        சிந்திப்பார் சிந்தை யுள்ளார்
        திருந்துநெய்த் தான னாரே.     4.37.8
    372    சோதியாய்ச் சுடரு மானார்
        சுண்ணவெண் சாந்து பூசி
        ஓதிவா யுலகம் ஏத்த
        உகந்துதாம் அருள்கள் செய்வார்
        ஆதியாய் அந்த மானார்
        யாவரும் இறைஞ்சி யேத்த
        நீதியாய் நியம மாகி
        நின்றநெய்த் தான னாரே.     4.37.9
    373    இலையுடைப் படைகை யேந்தும்
        இலங்கையர் மன்னன் றன்னைத்
        தலையுடன் அடர்த்து மீண்டே
        தானவற் கருள்கள் செய்து
        சிலையுடன் கணையைச் சேர்த்துத்
        திரிபுரம் எரியச் செற்ற
        நிலையுடை யடிகள் போலும்
        நின்றநெய்த் தான னாரே.     4.37.10

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - நெய்யாடியப்பர், தேவியார் - பாலாம்பிகையம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.38 திருவையாறு - திருநேரிசை

    திருச்சிற்றம்பலம்

    374    கங்கையைச் சடையுள் வைத்தார்
        கதிர்பொறி அரவும் வைத்தார்
        திங்களைத் திகழ வைத்தார்
        திசைதிசை தொழவும் வைத்தார்
        மங்கையைப் பாகம் வைத்தார்
        மான்மறி மழுவும் வைத்தார்
        அங்கையுள் அனலும் வைத்தார்
        ஐயனை யாற னாரே.     4.38.1
    375    பொடிதனைப் பூச வைத்தார்
        பொங்குவெண் ணூலும் வைத்தார்
        கடியதோர் நாகம் வைத்தார்
        காலனைக் காலில் வைத்தார்
        வடிவுடை மங்கை தன்னை
        மார்பிலோர் பாகம் வைத்தார்
        அடியிணை தொழவும் வைத்தார்
        ஐயனை யாற னாரே.     4.38.2
    376    உடைதரு கீளும் வைத்தார்
        உலகங்க ளனைத்தும் வைத்தார்
        படைதரு மழுவும் வைத்தார்
        பாய்புலித் தோலும் வைத்தார்
        விடைதரு கொடியும் வைத்தார்
        வெண்புரி நூலும் வைத்தார்
        அடைதர அருளும் வைத்தார்
        ஐயனை யாற னாரே.     4.38.3
    377    தொண்டர்கள் தொழவும் வைத்தார்
        தூமதி சடையில் வைத்தார்
        இண்டையைத் திகழ வைத்தார்
        எமக்கென்று மின்பம் வைத்தார்
        வண்டுசேர் குழலி னாளை
        மருவியோர் பாகம் வைத்தார்
        அண்டவா னவர்கள் ஏத்தும்
        ஐயனை யாற னாரே.     4.38.4
    378    வானவர் வணங்க வைத்தார்
        வல்வினை மாய வைத்தார்
        கானிடை நடமும் வைத்தார்
        காமனைக் கனலா வைத்தார்
        ஆனிடை ஐந்தும் வைத்தார்
        ஆட்டுவார்க் கருளும் வைத்தார்
        ஆனையின் உரிவை வைத்தார்
        ஐயனை யாற னாரே.     4.38.5
    379    சங்கணி குழையும் வைத்தார்
        சாம்பல்மெய்ப் பூச வைத்தார்
        வெங்கதிர் எரிய வைத்தார்
        விரிபொழி லனைத்தும் வைத்தார்
        கங்குலும் பகலும் வைத்தார்
        கடுவினை களைய வைத்தார்
        அங்கம தோத வைத்தார்
        ஐயனை யாற னாரே.     4.38.6
    380    பத்தர்கட் கருளும் வைத்தார்
        பாய்விடை யேற வைத்தார்
        சித்தத்தை ஒன்ற வைத்தார்
        சிவமதே நினைய வைத்தார்
        முத்தியை முற்ற வைத்தார்
        முறைமுறை நெறிகள் வைத்தார்
        அத்தியின் உரிவை வைத்தார்
        ஐயனை யாற னாரே.     4.38.7
    381    ஏறுகந் தேற வைத்தார்
        இடைமரு திடமும் வைத்தார்
        நாறுபூங் கொன்றை வைத்தார்
        நாகமும் அரையில் வைத்தார்
        கூறுமை யாகம் வைத்தார்
        கொல்புலித் தோலும் வைத்தார்
        ஆறுமோர் சடையில் வைத்தார்
        ஐயனை யாற னாரே.     4.38.8
    382    பூதங்கள் பலவும் வைத்தார்
        பொங்குவெண் ணீறும் வைத்தார்
        கீதங்கள் பாட வைத்தார்
        கின்னரந் தன்னை வைத்தார்
        பாதங்கள் பரவ வைத்தார்
        பத்தர்கள் பணிய வைத்தார்
        ஆதியும் அந்தம் வைத்தார்
        ஐயனை யாற னாரே.     4.38.9
    383    இரப்பவர்க் கீய வைத்தார்
        ஈபவர்க் கருளும் வைத்தார்
        கரப்பவர் தங்கட் கெல்லாங்
        கடுநர கங்கள் வைத்தார்
        பரப்புநீர்க் கங்கை தன்னைப்
        படர்சடைப் பாகம் வைத்தார்
        அரக்கனுக் கருளும் வைத்தார்
        ஐயனை யாற னாரே.     4.38.10

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.39 திருவையாறு - திருநேரிசை
    பண் - கொல்லி
    திருச்சிற்றம்பலம்

    384    குண்டனாய்ச் சமண ரோடே
        கூடிநான் கொண்ட மாலைத்
        துண்டனே சுடர்கொள் சோதீ
        தூநெறி யாகி நின்ற
        அண்டனே அமரர் ஏறே
        திருவையா றமர்ந்த தேனே
        தொண்டனேன் தொழுதுன் பாதஞ்
        சொல்லிநான் திரிகின் றேனே.     4.39.1
    385    பீலிகை இடுக்கி நாளும்
        பெரியதோர் தவமென் றெண்ணி
        வாலிய தறிகள் போல
        மதியிலார் பட்ட தென்னே
        வாலியார் வணங்கி ஏத்துந்
        திருவையா றமர்ந்த தேனோ
        டாலியா எழுந்த நெஞ்சம்
        அழகிதா எழுந்த வாறே.     4.39.2
    386    தட்டிடு சமண ரோடே
        தருக்கிநான் தவமென் றெண்ணி
        ஒட்டிடு மனத்தி னீரே
        உம்மையான் செய்வ தென்னே
        மொட்டிடு கமலப் பொய்கைத்
        திருவையா றமர்ந்த தேனோ
        டொட்டிடும் உள்ளத் தீரே
        உம்மைநான் உகந்திட் டேனே.     4.39.3
    387    பாசிப்பல் மாசு மெய்யர்
        பலமிலாச் சமண ரோடு
        நேசத்தா லிருந்த நெஞ்சை
        நீக்குமா றறிய மாட்டேன்
        தேசத்தார் பரவி யேத்துந்
        திருவையா றமர்ந்த தேனை
        வாசத்தால் வணங்க வல்லார்
        வல்வினை மாயு மன்றே.     4.39.4
    388    கடுப்பொடி யட்டி மெய்யிற்
        கருதியோர் தவமென் றெண்ணி
        வடுக்களோ டிசைந்த நெஞ்சே
        மதியிலி பட்ட தென்னே
        மடுக்களில் வாளை பாயுந்
        திருவையா றமர்ந்த தேனை
        அடுத்துநின் றுன்னு நெஞ்சே
        அருந்தவஞ் செய்த வாறே.     4.39.5
    389    துறவியென் றவம தோரேன்
        சொல்லிய செலவு செய்து
        உறவினால் அமண ரோடும்
        உணர்விலேன் உணர்வொன் றின்றி
        நறவமார் பொழில்கள் சூழ்ந்த
        திருவையா றமர்ந்த தேனை
        மறவிலா நெஞ்ச மேநன்
        மதியுனக் கடைந்த வாறே.     4.39.6
    390    பல்லுரைச் சமண ரோடே
        பலபல கால மெல்லாஞ்
        சொல்லிய செலவு செய்தேன்
        சோர்வனான் நினைந்த போது
        மல்லிகை மலருஞ் சோலைத்
        திருவையா றமர்ந்த தேனை
        எல்லியும் பகலு மெல்லாம்
        நினைந்தபோ தினிய வாறே.     4.39.7
    391    மண்ணுளார் விண்ணு ளாரும்
        வணங்குவார் பாவம் போக
        எண்ணிலாச் சமண ரோடே
        இசைந்தனை ஏழை நெஞ்சே
        தெண்ணிலா எறிக்குஞ் சென்னித்
        திருவையா றமர்ந்த தேனைக்
        கண்ணினாற் காணப் பெற்றுக்
        கருதிற்றே முடிந்த வாறே.     4.39.8
    392    குருந்தம தொசித்த மாலுங்
        குலமலர் மேவி னானுந்
        திருந்துநற் றிருவ டியுந்
        திருமுடி காண மாட்டார்
        அருந்தவ முனிவ ரேத்துந்
        திருவையா றமர்ந்த தேனைப்
        பொருந்திநின் றுன்னு நெஞ்சே
        பொய்வினை மாயு மன்றே.     4.39.9
    393    அறிவிலா அரக்க னோடி
        அருவரை எடுக்க லுற்று
        முறுகினான் முறுகக் கண்டு
        மூதறி வாளன் நோக்கி
        நிறுவினான் சிறுவி ரலால்
        நெரிந்துபோய் நிலத்தில் வீழ
        அறிவினால் அருள்கள் செய்தான்
        திருவையா றமர்ந்த தேனே.     4.39.10

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.40 திருவையாறு - திருநேரிசை

    திருச்சிற்றம்பலம்

    394    தானலா துலக மில்லை
        சகமலா தடிமை யில்லை
        கானலா தாட லில்லை
        கருதுவார் தங்க ளுக்கு
        வானலா தருளு மில்லை
        வார்குழல் மங்கை யோடும்
        ஆனலா தூர்வ தில்லை
        ஐயனை யாற னார்க்கே.     4.40.1
    395    ஆலலால் இருக்கை இல்லை
        அருந்தவ முனிவர்க் கன்று
        நூலலால் நொடிவ தில்லை
        நுண்பொரு ளாய்ந்து கொண்டு
        மாலுநான் முகனுங் கூடி
        மலரடி வணங்க வேலை
        ஆலலால் அமுத மில்லை
        ஐயனை யாற னார்க்கே.     4.40.2
    396    நரிபுரி சுடலை தன்னில்
        நடமலால் நவிற்ற லில்லை
        சுரிபுரி குழலி யோடுந்
        துணையலால் இருக்கை யில்லை
        தெரிபுரி சிந்தை யார்க்குத்
        தெளிவலால் அருளு மில்லை
        அரிபுரி மலர்கொண் டேத்தும்
        ஐயனை யாற னார்க்கே.     4.40.3
    397    தொண்டலாற் றுணையு மில்லை
        தோலலா துடையு மில்லை
        கண்டலா தருளு மில்லை
        கலந்தபின் பிரிவ தில்லை
        பண்டைநான் மறைகள் காணாப்
        பரிசின னென்றென் றெண்ணி
        அண்டவா னவர்கள் ஏத்தும்
        ஐயனை யாற னார்க்கே.     4.40.4
    398    எரியலா லுருவ மில்லை
        ஏறலால் ஏற லில்லை
        கரியலாற் போர்வை யில்லை
        காண்டகு சோதி யார்க்குப்
        பிரிவிலா அமரர் கூடிப்
        பெருந்தகைப் பிரானென் றேத்தும்
        அரியலாற் றேவி யில்லை
        ஐயனை யாற னார்க்கே.     4.40.5
    399    என்பலாற் கலனு மில்லை
        எருதலா லூர்வ தில்லை
        புன்புலால் நாறு காட்டிற்
        பொடியலாற் சாந்து மில்லை
        துன்பிலாத் தொண்டர் கூடித்
        தொழுதழு தாடிப் பாடும்
        அன்பலாற் பொருளு மில்லை
        ஐயனை யாற னார்க்கே.     4.406
    400    கீளலால் உடையு மில்லை
        கிளர்பொறி யரவம் பைம்பூண்
        தோளலாற் றுணையு மில்லை
        தொத்தலர் கின்ற வேனில்
        வேளலாற் காயப் பட்ட
        வீரரு மில்லை மீளா
        ஆளலாற் கைம்மா றில்லை
        ஐயனை யாற னார்க்கே.     4.40.7
    401    சகமலா தடிமை யில்லை
        தானலாற் றுணையு மில்லை
        நகமெலாந் தேயக் கையான்
        நாண்மலர் தொழுது தூவி
        முகமெலாங் கண்ணீர் மல்க
        முன்பணிந் தேத்துந் தொண்டர்
        அகமலாற் கோயி லில்லை
        ஐயனை யாற னார்க்கே.     4.40.8
    402    உமையலா துருவ மில்லை
        உலகலா துடைய தில்லை
        நமையெலா முடைய ராவர்
        நன்மையே தீமை யில்லை
        கமையெலா முடைய ராகிக்
        கழலடி பரவுந் தொண்டர்க்
        கமைவிலா அருள் கொடுப்பார்
        ஐயனை யாற னார்க்கே.     4.40.9
    403    மலையலா லிருக்கை யில்லை
        மதித்திடா அரக்கன் றன்னைத்
        தலையலால் நெரித்த தில்லை
        தடவரைக் கீழ டர்த்து
        நிலையிலார் புரங்கள் வேவ
        நெருப்பலால் விரித்த தில்லை
        அலையினார் பொன்னி மன்னும்
        ஐயனை யாற னார்க்கே.     4.40.10

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.41 திருச்சோற்றுத்துறை - திருநேரிசை
    பண் - கொல்லி
    திருச்சிற்றம்பலம்

    404    பொய்விரா மேனி தன்னைப்
        பொருளெனக் காலம் போக்கி
        மெய்விரா மனத்த னல்லேன்
        வேதியா வேத நாவா
        ஐவரால் அலைக்கப் பட்ட
        ஆக்கைகொண் டயர்த்துப் போனேன்
        செய்வரால் உகளுஞ் செம்மைத்
        திருச்சோற்றுத் துறைய னாரே.     4.41.1
    405    கட்டராய் நின்று நீங்கள்
        காலத்தைக் கழிக்க வேண்டா
        எட்டவாங் கைகள் வீசி
        எல்லிநின் றாடு வானை
        அட்டமா மலர்கள் கொண்டே
        ஆனஞ்சும் ஆட்ட ஆடிச்
        சிட்டராய் அருள்கள் செய்வார்
        திருச்சோற்றுத் துறைய னாரே.     4.41.2
    406    கல்லினாற் புரமூன் றெய்த
        கடவுளைக் காத லாலே
        எல்லியும் பகலு முள்ளே
        ஏகாந்த மாக ஏத்தும்
        பல்லில்வெண் டலைகை யேந்திப்
        பல்லிலந் திரியுஞ் செல்வர்
        சொல்லுநன் பொருளு மாவார்
        திருச்சோற்றுத் துறைய னாரே.     4.41.3
    407    கறையராய்க் கண்ட நெற்றிக்
        கண்ணராய்ப் பெண்ணோர் பாகம்
        இறையராய் இனிய ராகித்
        தனியராய்ப் பனிவெண் டிங்கட்
        பிறையராய்ச் செய்த வெல்லாம்
        பீடராய்க் கேடில் சோற்றுத்
        துறையராய்ப் புகுந்தெ னுள்ளச்
        சோர்வுகண் டருளி னாரே.     4.41.4
    408    பொந்தையைப் பொருளா வெண்ணிப்
        பொருக்கெனக் காலம் போனேன்
        எந்தையே ஏக மூர்த்தி
        யென்றுநின் றேத்த மாட்டேன்
        பந்தமாய் வீடு மாகிப்
        பரம்பர மாகி நின்று
        சிந்தையுட் டேறல் போலுந்
        திருச்சோற்றுத் துறைய னாரே.     4.41.5
    409    பேர்த்தினிப் பிறவா வண்ணம்
        பிதற்றுமின் பேதை பங்கன்
        பார்த்தனுக் கருள்கள் செய்த
        பாசுப தன்றி றமே
        ஆர்த்துவந் திழிவ தொத்த
        அலைபுனற் கங்கை யேற்றுத்
        தீர்த்தமாய்ப் போத விட்டார்
        திருச்சோற்றுத் துறைய னாரே.     4.41.6
    410    கொந்தார்பூங் குழலி னாரைக்
        கூறியே காலம் போன
        எந்தையெம் பிரானாய் நின்ற
        இறைவனை ஏத்தா தந்தோ
        முந்தரா அல்கு லாளை
        யுடன்வைத்த ஆதி மூர்த்தி
        செந்தாது புடைகள் சூழ்ந்த
        திருச்சோற்றுத் துறைய னாரே.     4.41.7
    411    அங்கதி ரோன வனை
        அண்ணலாக் கருத வேண்டா
        வெங்கதி ரோன் வழியே
        போவதற் கமைந்து கொண்மின்
        அங்கதி ரோன வனை
        யுடன்வைத்த ஆதி மூர்த்தி
        செங்கதி ரோன்வ ணங்குஞ்
        திருச்சோற்றுத் துறைய னாரே.     4.41.8
    412    ஓதியே கழிக்கின் றீர்கள்
        உலகத்தீர் ஒருவன் றன்னை
        நீதியால் நினைக்க மாட்டீர்
        நின்மலன் என்று சொல்லீர்
        சாதியா நான்மு கனுஞ்
        சக்கரத் தானுங் காணாச்
        சோதியாய்ச் சுடர தானார்
        திருச்சோற்றுத் துறைய னாரே.     4.41.9
    413    மற்றுநீர் மனம்வை யாதே
        மறுமையைக் கழிக்க வேண்டிற்
        பெற்றதோர் உபாயந் தன்னாற்
        பிரானையே பிதற்று மின்கள்
        கற்றுவந் தரக்க னோடிக்
        கயிலாய மலைஎ டுக்கச்
        செற்றுகந் தருளிச் செய்தார்
        திருச்சோற்றுத் துறைய னாரே.     4.41.10

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - தொலையாச்செல்வர், தேவியார் - ஒப்பிலாம்பிகை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.42 திருத்துருத்தி - திருநேரிசை
    பண் - கொல்லி
    திருச்சிற்றம்பலம்

    414    பொருத்திய குரம்பை தன்னைப்
        பொருளெனக் கருத வேண்டா
        இருத்தியெப் போதும் நெஞ்சுள்
        இறைவனை ஏத்து மின்கள்
        ஒருத்தியைப் பாகம் வைத்தங்
        கொருத்தியைச் சடையில் வைத்த
        துருத்தியஞ் சுடரி னானைத்
        தொண்டனேன் கண்ட வாறே.     4.42.1
    415    சவைதனைச் செய்து வாழ்வான்
        சலத்துளே யழுந்து கின்ற
        இவையொரு பொருளு மல்ல
        இறைவனை ஏத்து மின்னோ
        அவைபுர மூன்றும் எய்தும்
        அடியவர்க் கருளிச் செய்த
        சுவையினைத் துருத்தி யானைத்
        தொண்டனேன் கண்ட வாறே.     4.42.2
    416    உன்னியெப் போதும் நெஞ்சுள்
        ஒருவனை ஏத்து மின்னோ
        கன்னியை ஒருபால் வைத்துக்
        கங்கையைச் சடையுள் வைத்துப்
        பொன்னியின் நடுவு தன்னுள்
        பூம்புனல் பொலிந்து தோன்றுந்
        துன்னிய துருத்தி யானைத்
        தொண்டனேன் கண்ட வாறே.     4.42.3
    417    ஊன்றலை வலிய னாகி
        உலகத்துள் உயிர்கட் கெல்லாந்
        தான்றலைப் பட்டு நின்று
        சார்கன லகத்து வீழ
        வான்றலைத் தேவர் கூடி
        வானவர்க் கிறைவா வென்னுந்
        தோன்றலைத் துருத்தி யானைத்
        தொண்டனேன் கண்ட வாறே.     4.42.4
    418    உடல்தனைக் கழிக்க லுற்ற
        உலகத்துள் உயிர்கட் கெல்லாம்
        இடர்தனைக் கழிக்க வேண்டில்
        இறைவனை ஏத்து மின்னோ
        கடல்தனில் நஞ்ச முண்டு
        காண்பரி தாகி நின்ற
        சுடர்தனைத் துருத்தி யானைத்
        தொண்டனேன் கண்ட வாறே.     4.42.5
    419    அள்ளலைக் கடக்க வேண்டில்
        அரனையே நினைமி னீணர்கள்
        பொள்ளலிக் காயந் தன்னுட்
        புண்டரீ கத்தி ருந்த
        வள்ளலை வான வர்க்குங்
        காண்பரி தாகி நின்ற
        துள்ளலைத் துருத்தி யானைத்
        தொண்டனேன் கண்ட வாறே.     4.42.6
    420    பாதியில் உமையாள் தன்னைப்
        பாகமா வைத்த பண்பன்
        வேதியன் என்று சொல்லி
        விண்ணவர் விரும்பி ஏத்தச்
        சாதியாஞ் சதுர்மு கனுஞ்
        சக்கரத் தானுங் காணாச்
        சோதியைத் துருத்தி யானைத்
        தொண்டனேன் கண்ட வாறே.     4.42.7
    421    சாமனை வாழ்க்கை யான
        சலத்துளே யழுந்த வேண்டா
        தூமநல் லகிலுங் காட்டித்
        தொழுதடி வணங்கு மின்னோ
        சோமனைச் சடையுள் வைத்துத்
        தொன்னெறி பலவுங் காட்டுந்
        தூமனத் துருத்தி யானைத்
        தொண்டனேன் கண்டா வாறே.     4.42.8
    422    குண்டரே சமணர் புத்தர்
        குறியறி யாது நின்று
        கண்டதே கருது வார்கள்
        கருத்தெண்ணா தொழிமி னீணர்கள்
        விண்டவர் புரங்கள் எய்து
        விண்ணவர்க் கருள்கள் செய்த
        தொண்டர்கள் துணையி னானைத்
        துருத்திநான் கண்ட வாறே.     4.42.9
    423    பிண்டத்தைக் கழிக்க வேண்டிற்
        பிரானையே பிதற்று மின்கள்
        அண்டத்தைக் கழிய நீண்ட
        அடலரக் கன்றன் ஆண்மை
        கண்டொத்துக் கால்வி ரலால்
        ஊன்றிமீண் டருளிச் செய்த
        துண்டத்துத் துருத்தி யானைத்
        தொண்டனேன் கண்ட வாறே.     4.42.10

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - வேதேசுவரர்,
    தேவியார் - முகிழாம்பிகையம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.43 திருக்காஞ்சிமேற்றளி - திருநேரிசை
    பண் - கொல்லி
    திருச்சிற்றம்பலம்

    424    மறையது பாடிப் பிச்சைக்
        கென்றகந் திரிந்து வாழ்வார்
        பிறையது சடைமு டிமேற்
        பெய்வளை யாள்தன் னோடுங்
        கறையது கண்டங் கொண்டார்
        காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
        இறையவர் பாட லாடல்
        இலங்குமேற் றளிய னாரே.     4.43.1
    425    மாலன மாயன் றன்னை
        மகிழ்ந்தனர் விருத்த ராகும்
        பாலனார் பசுப தியார்
        பால்வெள்ளை நீறு பூசிக்
        காலனைக் காலாற் செற்றார்
        காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
        ஏலநற் கடம்பன் தாதை
        இலங்குமேற் றளிய னாரே.     4.43.2
    426    விண்ணிடை விண்ண வர்கள்
        விரும்பிவந் திறைஞ்சி வாழ்த்தப்
        பண்ணிடைச் சுவையின் மிக்க
        கின்னரம் பாடல் கேட்டார்
        கண்ணிடை மணியி னொப்பார்
        காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
        எண்ணிடை யெழுத்து மானார்
        இலங்குமேற் றளிய னாரே.     4.43.3
    427    சோமனை அரவி னோடு
        சூழ்தரக் கங்கை சூடும்
        வாமனை வான வர்கள்
        வலங்கொடு வந்து போற்றக்
        காமனைக் காய்ந்த கண்ணார்
        காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
        ஏமநின் றாடும் எந்தை
        இலங்குமேற் றளிய னாரே.     4.43.4
    428    ஊனவ ருயிரி னோடு
        முலகங்க ளூழி யாகித்
        தானவர் தனமு மாகித்
        தனஞ்சய னோடெ திர்ந்த
        கானவர் காள கண்டர்
        காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
        ஏனமக் கோடு பூண்டார்
        இலங்குமேற் றளிய னாரே.     4.43.5
    429    மாயனாய் மால னாகி
        மலரவ னாகி மண்ணாய்த்
        தேயமாய்த் திசையெட் டாகித்
        தீர்த்தமாய்த் திரிதர் கின்ற
        காயமாய்க் காயத் துள்ளார்
        காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
        ஏயமென் றோளி பாகர்
        இலங்குமேற் றளிய னாரே.     4.43.6
    430    மண்ணினை யுண்ட மாயன்
        தன்னையோர் பாகங் கொண்டார்
        பண்ணினைப் பாடி யாடும்
        பத்தர்கள் சித்தங் கொண்டார்
        கண்ணினை மூன்றுங் கொண்டார்
        காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
        எண்ணினை யெண்ண வைத்தார்
        இலங்குமேற் றளிய னாரே.     4.43.7
    431    செல்வியைப் பாகங் கொண்டார்
        சேந்தனை மகனாக் கொண்டார்
        மல்லிகைக் கண்ணி யோடு
        மாமலர்க் கொன்றை சூடிக்
        கல்வியைக் கரையி லாத
        காஞ்சிமா நகர்தன் னுள்ளால்
        எல்லியை விளங்க நின்றார்
        இலங்குமேற் றளிய னாரே.     4.43.8
    432    வேறிணை யின்றி யென்றும்
        விளங்கொளி மருங்கி னாளைக்
        கூறிய லாக வைத்தார்
        கோளரா மதியும் வைத்தார்
        ஆறினைச் சடையுள் வைத்தார்
        அணிபொழிற் கச்சி தன்னுள்
        ஏறினை யேறு மெந்தை
        இலங்குமேற் றளிய னாரே.     4.43.9
    433    தென்னவன் மலையெ டுக்கச்
        சேயிழை நடுங்கக் கண்டு
        மன்னவன் விரலா லூன்ற
        மணிமுடி நெரிய வாயாற்
        கன்னலின் கீதம் பாடக்
        கேட்டவர் காஞ்சி தன்னுள்
        இன்னவற் கருளிச் செய்தார்
        இலங்குமேற் றளிய னாரே.     4.43.10

    இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - திருமேற்றளிநாதர், தேவியார் - திருமேற்றளிநாயகி.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.44 திருஏகம்பம் - திருநேரிசை

    திருச்சிற்றம்பலம்

    434    நம்பனை நகர மூன்றும்
        எரியுண வெருவ நோக்கும்
        அம்பனை அமுதை யாற்றை
        அணிபொழிற் கச்சி யுள்ளே
        கம்பனைக் கதிர்வெண் திங்கட்
        செஞ்சடைக் கடவுள் தன்னைச்
        செம்பொனைப் பவளத் தூணைச்
        சிந்தியா எழுகின் றேனே.     4.44.1
    435    ஒருமுழம் உள்ள குட்டம்
        ஒன்பது துளையு டைத்தாய்
        அரைமுழம் அதன் அகலம்
        அதனில்வாழ் முதலை ஐந்து
        பெருமுழை வாய்தல் பற்றிக்
        கிடந்துநான் பிதற்று கின்றேன்
        கருமுகில் தவழும் மாடக்
        கச்சியே கம்ப னீரே.     4.44.2
    436    மலையினார் மகளோர் பாக
        மைந்தனார் மழுவொன் றேந்திச்
        சிலையினால் மதில்கள் மூன்றுந்
        தீயெழச் செற்ற செல்வர்
        இலையினார் சூலம் ஏந்தி
        ஏகம்பம் மேவி னாரைத்
        தலையினால் வணங்க வல்லார்
        தலைவர்க்குந் தலைவர் தாமே.     4.44.3
    437    பூத்தபொற் கொன்றை மாலை
        புரிசடைக் கணிந்த செல்வர்
        தீர்த்தமாங் கங்கை யாளைத்
        திருமுடி திகழ வைத்து
        ஏத்துவார் ஏத்த நின்ற
        ஏகம்பம் மேவி னாரை
        வாழ்த்துமா றறிய மாட்டேன்
        மால்கொடு மயங்கி னேனே.     4.44.4
    438    மையினார் மலர்நெ டுங்கண்
        மங்கையோர் பங்க ராகிக்
        கையிலோர் கபாலம் ஏந்திக்
        கடைதொறும் பலிகொள் வார்தாம்
        எய்வதோர் ஏனம் ஓட்டி
        ஏகம்பம் மேவி னாரைக்
        கையினாற் றொழவல் லார்க்குக்
        கடுவினை களைய லாமே.     4.44.5
    439    தருவினை மருவுங் கங்கை
        தங்கிய சடையன் எங்கள்
        அருவினை அகல நல்கும்
        அண்ணலை அமரர் போற்றுந்
        திருவினைத் திருவே கம்பஞ்
        செப்பிட உறைய வல்ல
        உருவினை உருகி ஆங்கே
        உள்ளத்தால் உகக்கின் றேனே.     4.44.6
    440    கொண்டதோர் கோல மாகிக்
        கோலக்கா வுடைய கூத்தன்
        உண்டதோர் நஞ்ச மாகில்
        உலகெலாம் உய்ய உண்டான்
        எண்டிசை யோரும் ஏத்த
        நின்றஏ கம்பன் றன்னைக்
        கண்டுநான் அடிமை செய்வான்
        கருதியே திரிகின் றேனே.     4.44.7
    441    படமுடை அரவி னோடு
        பனிமதி யதனைச் சூடிக்
        கடமுடை யுரிவை மூடிக்
        கண்டவர் அஞ்ச அம்ம
        இடமுடைக் கச்சி தன்னுள்
        ஏகம்பம் மேவி னான்றன்
        நடமுடை யாடல் காண
        ஞாலந்தான் உய்ந்த வாறே.     4.44.8
    442    பொன்றிகழ் கொன்றை மாலை
        பொருந்திய நெடுந்தண் மார்பர்
        நன்றியிற் புகுந்தெ னுள்ளம்
        மெள்ளவே நவில நின்று
        குன்றியில் அடுத்த மேனிக்
        குவளையங் கண்டர் எம்மை
        இன்றுயில் போது கண்டார்
        இனியர்ஏ கம்ப னாரே.     4.44.9
    443    துருத்தியார் பழனத் துள்ளார்
        தொண்டர்கள் பலரும் ஏத்த
        அருத்தியால் அன்பு செய்வார்
        அவரவர்க் கருள்கள் செய்தே
        எருத்தினை இசைய ஏறி
        ஏகம்பம் மேவி னார்க்கு
        வருத்திநின் றடிமை செய்வார்
        வல்வினை மாயு மன்றே.     4.44.10

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.45 திருவொற்றியூர் - திருநேரிசை
    பண் - கொல்லி
    திருச்சிற்றம்பலம்

    444    வெள்ளத்தைச் சடையில் வைத்த
        வேதகீ தன்றன் பாதம்
        மெள்ளத்தான் அடைய வேண்டின்
        மெய்தரு ஞானத் தீயாற்
        கள்ளத்தைக் கழிய நின்றார்
        காயத்துக் கலந்து நின்று
        உள்ளத்துள் ஒளியு மாகும்
        ஒற்றியூ ருடைய கோவே.     4.45.1
    445     வசிப்பெனும் வாழ்க்கை வேண்டா
        வானவர் இறைவன் நின்று
        புசிப்பதோர் பொள்ள லாக்கை
        யதனொடும் புணர்வு வேண்டில்
        அசிர்ப்பெனும் அருந்த வத்தால்
        ஆன்மாவி னிடம தாகி
        உசிர்ப்பெனும் உணர்வு முள்ளார்
        ஒற்றியூ ருடைய கோவே.     4.45.2
    446    தானத்தைச் செய்து வாழ்வான்
        சலத்துளே அழுந்து கின்றீர்
        வானத்தை வணங்க வேண்டில்
        வம்மின்கள் வல்லீ ராகில்
        ஞானத்தை விளக்கை ஏற்றி
        நாடியுள் விரவ வல்லார்
        ஊனத்தை ஒழிப்பர் போலும்
        ஒற்றியூ ருடைய கோவே.     4.45.3
    447    காமத்துள் அழுந்தி நின்று
        கண்டரால் ஒறுப்புண் ணாதே
        சாமத்து வேத மாகி
        நின்றதோர் சயம்பு தன்னை
        ஏமத்தும் இடையி ராவும்
        ஏகாந்தம் இயம்பு வார்க்கு
        ஓமத்துள் ஒளிய தாகும்
        ஒற்றியூ ருடைய கோவே.     4.45.4
    448    சமையமே லாறு மாகித்
        தானொரு சயம்பு வாகி
        இமையவர் பரவி யேத்த
        இனிதினங் கிருந்த ஈசன்
        கமையினை யுடைய ராகிக்
        கழலடி பரவு வார்க்கு
        உமையொரு பாகர் போலும்
        ஒற்றியூ ருடைய கோவே.     4.45.5
    449    ஒருத்திதன் றலைச்சென் றாளைக்
        கரந்திட்டான் உலக மேத்த
        ஒருத்திக்கு நல்ல னாகி
        மறுப்படுத் தொளித்து மீண்டே
        ஒருத்தியைப் பாகம் வைத்தான்
        உணர்வினால் ஐயம் உண்ணி
        ஒருத்திக்கு நல்ல னல்லன்
        ஒற்றியூ ருடைய கோவே.     4.45.6
    450    பிணமுடை உடலுக் காகப்
        பித்தராய்த் திரிந்து நீங்கள்
        புணர்வெனும் போகம் வேண்டா
        போக்கலாம் பொய்யை நீங்க
        நிணமுடை நெஞ்சி னுள்ளால்
        நினைக்குமா நினைக்கின் றார்க்கு
        உணர்வினோ டிருப்பர் போலும்
        ஒற்றியூ ருடைய கோவே.     4.45.7
    451    பின்னுவார் சடையான் தன்னைப்
        பிதற்றிலாப் பேதை மார்கள்
        துன்னுவார் நரகந் தன்னுள்
        தொல்வினை தீர வேண்டின்
        மன்னுவான் மறைக ளோதி
        மனத்தினுள் விளக்கொன் றேற்றி
        உன்னுவார் உள்ளத் துள்ளார்
        ஒற்றியூ ருடைய கோவே.     4.45.8
    452    முள்குவார் போகம் வேண்டின்
        முயற்றியா லிடர்கள் வந்தால்
        எள்குவார் எள்கி நின்றங்
        கிதுவொரு மாய மென்பார்
        பள்குவார் பத்த ராகிப்
        பாடியு மாடி நின்று
        உள்குவார் உள்ளத் துள்ளார்
        ஒற்றியூ ருடைய கோவே.     4.45.9
    453    வெறுத்துகப் புலன்க ளைந்தும்
        வேண்டிற்று வேண்டு நெஞ்சே
        மறுத்துக ஆர்வச் செற்றக்
        குரோதங்க ளான மாயப்
        பொறுத்துகப் புட்ப கத்தேர்
        உடையானை அடர வூன்றி
        ஒறுத்துகந் தருள்கள் செய்தார்
        ஒற்றியூ ருடைய கோவே.     4.45.10

    இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - மாணிக்கத்தியாகர், தேவியார் - வடிவுடையம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.46 திருவொற்றியூர் - திருநேரிசை

    திருச்சிற்றம்பலம்

    454    ஓம்பினேன் கூட்டை வாளா
        உள்ளத்தோர் கொடுமை வைத்துக்
        காம்பிலா மூழை போலக்
        கருதிற்றே முகக்க மாட்டேன்
        பாம்பின்வாய்த் தேரை போலப்
        பலபல நினைக்கின் றேனை
        ஓம்பிநீ உய்யக் கொள்ளாய்
        ஒற்றியூ ருடைய கோவே.     4.46.1
    455    மனமெனுந் தோணி பற்றி
        மதியெனுங் கோலை யூன்றிச்
        சினமெனுஞ் சரக்கை யேற்றிச்
        செறிகட லோடும் போது
        மதனெனும் பாறை தாக்கி
        மறியும்போ தறிய வொண்ணா
        துனையுனும் உணர்வை நல்காய்
        ஒற்றியூ ருடய கோவே.     4.46.2
        இப்பதிகத்தில் ஏனைய செய்யுட்கள் சிதைவுற்றன.     4.46.3-10
    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.47 திருக்கயிலாயம் - திருநேரிசை

    திருச்சிற்றம்பலம்

    456     கனகமா வயிர முந்து
        மாமணிக் கயிலை கண்டும்
        உனகனா யரக்க னோடி
        யெடுத்தலு முமையா ளஞ்ச
        அனகனாய் நின்ற ஈச
        னூன்றலு மலறி வீழ்ந்தான்
        மனகனா யூன்றி னானேல்
        மறித்துநோக் கில்லை யன்றே.     4.47.1
    457    கதித்தவன் கண்சி வந்து
        கயிலைநன் மலையை யோடி
        அதிர்த்தவன் எடுத்தி டலும்
        அரிவைதான் அஞ்ச ஈசன்
        நெதித்தவ னூன்றி யிட்ட
        நிலையழிந் தலறி வீழ்ந்தான்
        மதித்திறை யூன்றி னானேல்
        மறித்துநோக் கில்லை யன்றே.     4.47.2
    458    கறுத்தவன் கண்சி வந்து
        கயிலைநன் மலையைக் கையால்
        மறித்தலும் மங்கை அஞ்ச
        வானவர் இறைவன் நக்கு
        நெறித்தொரு விரலா லூன்ற
        நெடுவரை போல வீழ்ந்தான்
        மறித்திறை யூன்றி னானேல்
        மறித்துநோக் கில்லை யன்றே.     4.47.3
    459    கடுத்தவன் கண்சி வந்து
        கயிலைநன் மலையை யோடி
        எடுத்தலும் மங்கை அஞ்ச
        இறையவ னிறையே நக்கு
        நொடிப்பள விரலா லூன்ற
        நோவது மலறி யிட்டான்
        மடித்திறை யூன்றி னானேல்
        மறித்துநோக் கில்லை யன்றே.     4.47.4
    460    கன்றித்தன் கண்சி வந்து
        கயிலைநன் மலையை யோடி
        வென்றித்தன் கைத்த லத்தா
        லெடுத்தலும் வெருவ மங்கை
        நன்றுத்தான் நக்கு நாத
        னூன்றலு நகழ வீழ்ந்தான்
        மன்றித்தான் ஊன்றி னானேல்
        மறித்துநோக் கில்லை யன்றே.     4.47.5
    461    களித்தவன் கண்சி வந்து
        கயிலைநன் மலையை யோடி
        நெளித்தவ னெடுத்தி டலும்
        நேரிழை அஞ்ச நோக்கி
        வெளித்தவ னூன்றி யிட்ட
        வெற்பினா லலறி வீழ்ந்தான்
        மளித்திறை யூன்றி னானேல்
        மறித்துநோக் கில்லை யன்றே.     4.47.6
    462    கருத்தனாய்க் கண்சி வந்து
        கயிலைநன் மலையைக் கையால்
        எருத்தனாய் எடுத்த வாறே
        ஏந்திழை அஞ்ச ஈசன்
        திருத்தனாய் நின்ற தேவன்
        திருவிர லூன்ற வீழ்ந்தான்
        வருத்துவான் ஊன்றி னானேல்
        மறித்துநோக் கில்லை யன்றே.     4.47.7
    463    கடியவன் கண்சி வந்து
        கயிலைநன் மலையை யோடி
        வடிவுடை மங்கை அஞ்ச
        எடுத்தலும் மருவ நோக்கிச்
        செடிபடத் திருவி ரலா
        லூன்றலுஞ் சிதைந்து வீழ்ந்தான்
        வடிவுற வூன்றி னானேல்
        மறித்துநோக் கில்லை யன்றே.     4.47.8
    464    கரியத்தான் கண்சி வந்து
        கயிலைநன் மலையைப் பற்றி
        இரியத்தான் எடுத்தி டலும்
        ஏந்திழை அஞ்ச ஈசன்
        நெரியத்தான் ஊன்றா முன்னம்
        நிற்கிலா தலறி வீழ்ந்தான்
        மரியத்தான் ஊன்றி னானேல்
        மறித்துநோக் கில்லை யன்றே.     4.47.9
    465    கற்றனன் கயிலை தன்னைக்
        காண்டலும் அரக்கன் ஓடிச்
        செற்றவன் எடுத்த வாறே
        சேயிழை அஞ்ச ஈசன்
        உற்றிறை ஊன்றா முன்னம்
        உணர்வழி வகையால் வீழ்ந்தான்
        மற்றிறை ஊன்றி னானேல்
        மறித்துநோக் கில்லை யன்றே.     4.47.10

    இத்தலம் வடநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - கைலாயநாதர், தேவியார் - பார்வதியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.48 திருஆப்பாடி - திருநேரிசை

    திருச்சிற்றம்பலம்

    466    கடலகம் ஏழி னோடும்
        புவனமுங் கலந்த விண்ணும்
        உடலகத் துயிரும் பாரும்
        ஒள்ளழ லாகி நின்று
        தடமலர்க் கந்த மாலை
        தண்மதி பகலு மாகி
        மடலவிழ் கொன்றை சூடி
        மன்னும்ஆப் பாடி யாரே.     4.48.1
    467    ஆதியும் அறிவு மாகி
        அறிவினுட் செறிவு மாகிச்
        சோதியுட் சுடரு மாகித்
        தூநெறிக் கொருவ னாகிப்
        பாதியிற் பெண்ணு மாகிப்
        பரவுவார் பாங்க னாகி
        வேதியர் வாழுஞ் சேய்ஞல்
        விரும்பும்ஆப் பாடி யாரே.     4.48.2
    468    எண்ணுடை இருக்கு மாகி
        யிருக்கினுட் பொருளு மாகிப்
        பண்ணொடு பாடல் தன்னைப்
        பரவுவார் பாங்க னாகிக்
        கண்ணொரு நெற்றி யாகிக்
        கருதுவார் கருத லாகாப்
        பெண்ணொரு பாக மாகிப்
        பேணும்ஆப் பாடி யாரே.     4.48.3
    469    அண்டமார் அமரர் கோமான்
        ஆதியெம் அண்ணல் பாதங்
        கொண்டவன் குறிப்பி னாலே
        கூப்பினான் தாப ரத்தைக்
        கண்டவன் தாதை பாய்வான்
        காலற எறியக் கண்டு
        தண்டியார்க் கருள்கள் செய்த
        தலைவர்ஆப் பாடி யாரே.     4.48.4
    470    சிந்தையுந் தெளிவு மாகித்
        தெளிவினுட் சிவமு மாகி
        வந்தநற் பயனு மாகி
        வாணுதல் பாக மாகி
        மந்தமாம் பொழில்கள் சூழ்ந்த
        மண்ணித்தென் கரைமேல் மன்னி
        அந்தமோ டளவி லாத
        அடிகள்ஆப் பாடி யாரே.     4.48.5
    471    வன்னிவா ளரவு மத்தம்
        மதியமும் ஆறுஞ் சூடி
        மின்னிய உருவாஞ் சோதி
        மெய்ப்பொருட் பயனு மாகிக்
        கன்னியோர் பாக மாகிக்
        கருதுவார் கருத்து மாகி
        இன்னிசை தொண்டர் பாட
        இருந்தஆப் பாடி யாரே.     4.48.6
    472    உள்ளுமாய்ப் புறமு மாகி
        உருவுமாய் அருவு மாகி
        வெள்ளமாய்க் கரையு மாகி
        விரிகதிர் ஞாயி றாகிக்
        கள்ளமாய்க் கள்ளத் துள்ளார்
        கருத்துமாய் அருத்த மாகி
        அள்ளுவார்க் கள்ளல் செய்திட்
        டிருந்தஆப் பாடி யாரே.     4.48.7
    473    மயக்கமாய்த் தெளிவு மாகி
        மால்வரை வளியு மாகித்
        தியக்கமாய் ஒருக்க மாகிச்
        சிந்தையுள் ஒன்றி நின்று
        இயக்கமாய் இறுதி யாகி
        எண்டிசைக் கிறைவ ராகி
        அயக்கமாய் அடக்க மாய
        ஐவர்ஆப் பாடி யாரே.     4.48.8
    474    ஆரழல் உருவ மாகி
        அண்டமேழ் கடந்த எந்தை
        பேரொளி உருவி னானைப்
        பிரமனும் மாலுங் காணாச்
        சீரவை பரவி யேத்திச்
        சென்றடி வணங்கு வார்க்குப்
        பேரருள் அருளிச் செய்வார்
        பேணும்ஆப் பாடி யாரே.     4.48.9
    475    திண்டிறல் அரக்க னோடிச்
        சீகயி லாயந் தன்னை
        எண்டிறல் இலனு மாகி
        எடுத்தலும் ஏழை அஞ்ச
        விண்டிறல் நெறிய வூன்றி
        மிகக்கடுத் தலறி வீழப்
        பண்டிறல் கேட்டு கந்த
        பரமர்ஆப் பாடி யாரே.     4.48.10

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - பாலுவந்தநாயகர், தேவியார் - பெரியநாயகியம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.49 திருக்குறுக்கை - திருநேரிசை
    476    ஆதியிற் பிரம னார்தாம்
        அர்ச்சித்தார் அடியி ணைக்கீழ்
        ஓதிய வேத நாவர்
        உணருமா றுணர லுற்றார்
        சோதியுட் சுடராய்த் தோன்றிச்
        சொல்லினை யிறந்தார் பல்பூக்
        கோதிவண் டறையுஞ் சோலைக்
        குறுக்கைவீ ரட்ட னாரே.     4.49.1
    477    நீற்றினை நிறையப் பூசி
        நித்தலும் நியமஞ் செய்து
        ஆற்றுநீர் பூரித் தாட்டும்
        அந்தண னாரைக் கொல்வான்
        சாற்றுநாள் அற்ற தென்று
        தருமரா சற்காய் வந்த
        கூற்றினைக் குமைப்பர் போலுங்
        குறுக்கைவீ ரட்ட னாரே.     4.49.2
    478    தழைத்ததோர் ஆத்தி யின்கீழ்த்
        தாபர மணலாற் கூப்பி
        அழைத்தங்கே ஆவின் பாலைக்
        கறந்துகொண் டாட்டக் கண்டு
        பிழைத்ததன் றாதை தாளைப்
        பெருங்கொடு மழுவால் வீசக்
        குழைத்ததோர் அமுதம் ஈந்தார்
        குறுக்கைவீ ரட்ட னாரே.     4.49.3
    479    சிலந்தியும் ஆனைக் காவிற்
        திருநிழற் பந்தர் செய்து
        உலந்தவண் இறந்த போதே
        கோச்செங்க ணானு மாகக்
        கலந்தநீர்க் காவி ரிசூழ்
        சோணாட்டுச் சோழர் தங்கள்
        குலந்தனிற் பிறப்பித் திட்டார்
        குறுக்கைவீ ரட்ட னாரே.     4.49.4
    480    ஏறுடன் ஏழ டர்த்தான்
        எண்ணியா யிரம்பூக் கொண்டு
        ஆறுடைச் சடையி னானை
        அர்ச்சித்தான் அடியி ணைக்கீழ்
        வேறுமோர் பூக்கு றைய
        மெய்ம்மலர்க் கண்ணை மிண்டக்
        கூறுமோர் ஆழி ஈந்தார்
        குறுக்கைவீ ரட்ட னாரே.     4.49.5
    481    கல்லினால் எறிந்து கஞ்சி
        தாமுணுஞ் சாக்கி யனார்
        நெல்லினார் சோறு ணாமே
        நீள்விசும் பாள வைத்தார்
        எல்லியாங் கெரிகை ஏந்தி
        எழில்திகழ் நட்ட மாடிக்
        கொல்லியாம் பண்ணு கந்தார்
        குறுக்கைவீ ரட்ட னாரே.     4.49.6
    482    காப்பதோர் வில்லும் அம்புங்
        கையதோர் இறைச்சிப் பாரந்
        தோற்பெருஞ் செருப்புத் தொட்டுத்
        தூயவாய்க் கலசம் ஆட்டித்
        தீப்பெருங் கண்கள் செய்யக்
        குருதிநீர் ஒழுகத் தன்கண்
        கோப்பதும் பற்றிக் கொண்டார்
        குறுக்கைவீ ரட்ட னாரே.     4.49.7
    483    நிறைமறைக் காடு தன்னில்
        நீண்டெரி தீபந் தன்னைக்
        கறைநிறத் தெலிதன் மூக்குச்
        சுட்டிடக் கனன்று தூண்ட
        நிறைகடல் மண்ணும் விண்ணும்
        நீண்டவா னுலக மெல்லாங்
        குறைவறக் கொடுப்பர் போலுங்
        குறுக்கைவீ ரட்ட னாரே.     4.49.8
    484    அணங்குமை பாக மாக
        அடக்கிய ஆதி மூர்த்தி
        வணங்குவார் இடர்கள் தீர்க்கும்
        மருந்துநல் அருந்த வத்த
        கணம்புல்லர்க் கருள்கள் செய்து
        காதலாம் அடியார்க் கென்றுங்
        குணங்களைக் கொடுப்பர் போலுங்
        குறுக்கைவீ ரட்ட னாரே.     4.49.9
    485    எடுத்தனன் எழிற் கயிலை
        இலங்கையர் மன்னன் தன்னை
        அடுத்தொரு விரலால் ஊன்ற
        அலறிப்போய் அவனும் வீழ்ந்து
        விடுத்தனன் கைந ரம்பால்
        வேதகீ தங்கள் பாடக்
        கொடுத்தனர் கொற்ற வாணாள்
        குறுக்கைவீ ரட்ட னாரே.     4.49.10

    இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
    சுவாமிபெயர் - வீரட்டேசுவரர், தேவியார் - ஞானாம்பிகையம்மை.

    திருச்சிற்றம்பலம்

    உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப
    4.50 திருக்குறுக்கை - திருநேரிசை
    486     நெடியமால் பிரம னோடு
        நீரெனும் பிலயங் கொள்ள
        அடியொடு முடியுங் காணார்
        அருச்சுனற் கம்பும் வில்லுந்
        துடியுடை வேட ராகித்
        தூயமந் திரங்கள் சொல்லிக்
        கொடிநெடுந் தேர்கொ டுத்தார்
        குறுக்கைவீ ரட்ட னாரே.     4.50.1
    487     ஆத்தமாம் அயனு மாலும்
        அன்றிமற் றொழிந்த தேவர்
        சோத்தமெம் பெருமான் என்று
        தொழுதுதோத் திரங்கள் சொல்லத்
        தீர்த்தமாம் அட்ட மிமுன்
        சீருடை ஏழு நாளுங்
        கூத்தராய் வீதி போந்தார்
        குறுக்கைவீ ரட்ட னாரே.     4.50.2

        இப்பதிகத்தில் ஏனைய செய்யுட்கள் சிதைவுற்றன.     4.50.3-10

by Swathi   on 26 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
சமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன் சமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன்
சித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan சித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan
குறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA குறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA
செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம் செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்
குறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன் குறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன்
செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம் செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்
கவிதை : அதிசயக் குறுந்தொகை! அறுசுவை பலவகை - திரு.மகேந்திரன் பெரியசாமி கவிதை : அதிசயக் குறுந்தொகை! அறுசுவை பலவகை - திரு.மகேந்திரன் பெரியசாமி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.