LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- அமரர் கல்கி

கவர்னர் வண்டி

 

கதை ஆசிரியர்: அமரர் கல்கி
1
     மறுநாள் தீபாவளி. தலையாரி முத்துவின் பெண்சாதி பணியாரம் சுடுவதற்காக மாவு அரைத்துக் கொண்டிருந்தாள். மகன் சின்னானும் மகள் அஞ்சலையும் ஓர் உடைந்த தகரப் பெட்டியைத் திறப்பதும் மூடுவதுமாக யிருந்தார்கள். அந்தப் பெட்டியில் தீபாவளிக்காக வாங்கிவந்த புதுவேட்டியும், பாவாடையும், இரண்டு மூன்று பட்டாசுக் கட்டுகளும் இருந்தன. பட்டாசுக் கட்டை இப்போதே பிரித்துவிட வேண்டுமென்று சின்னான் சொன்னான். அஞ்சலை “கூடாது, நாளைக் காலையில்தான் பிரிக்க வேண்டும்” என்றாள்.
     தலையாரி முத்து அவசரமாய் உள்ளே நுழைந்தான். “நான் போய்த் தொலைய வேண்டும். இந்தப் பாழும் சர்க்கார் உத்தியோகம் இப்படித்தான். நாள், கிழமை கூடக் கிடையாது” என்றான்.
     ”ஐயோ! இதென்ன அநியாயம்? எங்கே போக வேண்டும்? அதெல்லாம் முடியாது. இராத்திரி எப்படியும் வந்துவிட வேண்டும்” என்றாள் அவன் மனைவி மதுரம்மா.
     ”நான் என்ன செய்யட்டும்? யாரோ கவர்னர் துரை வருகிறானாம். ரயில் பாதை முழுவதும் காவல் காக்க வேணுமாம். கணக்குப்பிள்ளை, மணியக்காரர், தலையாரி எல்லோரும் போகிறார்கள். இந்தத் தாலூகா முழுவதும் அப்படி. ரெவினியூ இன்ஸ்பெக்டர் ஐயாகூடத் தடியைப் பிடித்துக் கொண்டு காவல் காப்பாராம்” என்று சொல்லி முத்து சிரித்தான். ரெவினியூ இன்ஸ்பெக்டரை அத்தகைய நிலைமையில் எண்ணிப் பார்த்தபோதே அவனுக்குச் சிரிப்பு வந்தது.
     ”அது எப்படியாவது பாழாய்ப் போகட்டும். பண்டிகை யன்றுதானா இந்த இழவு வந்து தொலைய வேண்டும்? எப்படியும் இராத்திரி திரும்பி வந்து விடக் கூடாதா? ஐயோ! வெள்ளைப் பணியாரம் செய்ய மாவு அரைத்திருக்கிறேனே? நீ இல்லாமற் போனால் சந்தோஷமாகவே இராது” என்றாள் மதுரம்.
     ”இராத்திரி வரப்போகிறாராம் துரை. அதற்கு சாயங்கால முதல் காவல் காக்க வேண்டுமாம். வண்டி போனவுடனே புறப்பட்டு ஓடி வந்து விடுகிறேன்” என்றான் முத்து.
     இதற்குள் அஞ்சலை ஓடிவந்து தகப்பன் கையைப் பிடித்துக் கொண்டு, “அப்பா, அப்பா, எனக்குப் பூ மத்தாப்பு வாங்கிக் கொண்டு வா.” என்றாள்.
     சின்னான் ஓடிவந்து அரை வேட்டியைப் பிடித்துக் கொண்டு, “அப்பா, எனக்குத் துப்பாக்கி வாங்கி வர வேண்டும். என்ன, வாங்கி வருகிறாயா, சொல்லு. இல்லாவிட்டால் உன்னை விடமாட்டேன்” என்றான்.
     ”பணியாரமெல்லாம் ஆறிப்போகும். சுடச் சுடச் தின்றால்தானே தேங்காயப்பம் நன்றாயிருக்கும்? உனக்குப் பிடிக்குமே? நீ போகாதிருந்து விட்டாலென்ன? உடம்பு காயலாவென்று சொல்லி விடேன்” என்றாள் மதுரம்.
     ”ஐயோ! தலை போய்விடும். இருபது வருஷமாய் வேலை பார்த்துவிட்டு இப்போது கெட்ட பெயர் எடுக்கலாமா? இந்தக் காலத்தில் எட்டு ரூபாய் யார் கொடுக்கிறார்கள்? சர்க்கார் உத்தியோகம் இலேசா?” என்றான் முத்து. தான் சர்க்கார் உத்தியோகஸ்தன் என்னும் விஷயத்தில் அவனுக்கு எப்போதுமே கொஞ்சம் பெருமையுண்டு.
     பிறகு, மத்தாப்புப் பெட்டியும், விளையாட்டுத் துப்பாக்கியும் வாங்கி வருவதாகக் குழந்தைகளுக்கு வாக்களித்துவிட்டு முத்து புறப்பட்டுச் சென்றான்.
2
     ஐப்பசி மாதத்து அடை மழை. வானம் ஓயாது கறுத்து இருண்டிருந்தது. பகலிலேயே வெளிச்சம் சொற்பம். இரவில் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் அந்த அந்தகாரத்தினிடையே ஒவ்வொரு சமயம் மின்னல் பளிச்சென்று வீசி ஒரு மணிநேரம் பிரகாசம் உண்டு பண்ணி வந்தது. சில சமயம் ‘சோ’ வென்று மழை கொட்டும். சில சமயம் தூற்றல் போடும். அபூர்வமாக ஒவ்வொரு சமயம் தூற்றல் நிற்கும். ஆனால் ஊதல் காற்று மட்டும் இடைவிடாமல் அடித்துக் கொண்டிருந்தது.
     அதோ வரிசையாக வெகு தூரத்துக்கு மின் மினிபோல் தெரிகின்றதே, அதெல்லாம் என்ன? கம்பங்கள் நாட்டிய விளக்குகளா? – இல்லை. ரயில் பாதையின் இருபுறமும் சுமார் ஐம்பது கஜத்துக்கு ஒருவர் வீதம் மனிதர்கள் நிற்கிறார்கள். அவர்கள் கையில் பிடித்துக் கொண்டிருக்கும் லாந்தர்கள் அவை. அப்படி நின்று கொண்டிருப்பவர்களில் நமது தலையாரி முத்துவும் ஒருவன். ஒரு கையில் லாந்தரும், மற்றொரு கையில் தடியும் பிடித்துக் கொண்டிருக்கிறான். வாடைக்காற்று ‘விர்’ என்று அடிப்பதால் அவன் உடம்பு குளிரினால் ‘வெடவெட’ வென்று நடுங்குகிறது. பல்லுக் கிட்டுகிறது. மேலே மழைக்கு ஒரு கோணிப் பை. மழை கோணிப் பைக்குள் நுழைந்து முதுகுக்கு வந்து வெகு நேரமாயிற்று. உடுத்திய வேட்டியைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.
     சர்க்கார் உத்தியோகத்துக்குத் தலை முழுகிவிட்டு ஓடிப் போகலாமா என்று நினைத்தான் முத்து. மதுரம் சொன்ன புத்திமதியை அப்போதே கேட்காமற் போனோமே என்று வருந்தினான். இத்தனை நேரம் கஷ்டப்பட்டது பட்டோ ம், இனிக் கொஞ்ச நேரந்தானே, இருந்து தொலைப்போம் என்று தைரியமடைந்தான். இதனிடையில் அடிக்கடி தன் மனைவி சுடச் சுடப் பணியாரம் செய்து கொண்டிருப்பாளென்பது ஞாபகம் வந்தது. “போகட்டும், பெண்சாதியும் குழந்தைகளுமாவது தின்பார்களல்லவா?” என்று எண்ணி ஆறுதல் அடைந்தான்.
     சாயங்காலம் நாலு மணிக்கு ஆரம்பித்த காவல் இரவு ஏழு மணி, எட்டு மணி, ஒன்பது மணியாகியும் முடியவில்லை. முத்துவுக்கு அந்த ஐந்து மணி ஐந்து யுகமாயிருந்தது. “ஏது? இனிமேல் தாங்காது” என்று அவன் தீர்மானித்த சமயத்தில், அங்கே கையில் தாழங்குடையும், உடம்பில் கம்பளிச் சட்டையும், தலையில் குரங்குக் குல்லாயும் தரித்து ஒருவர் வந்து சேர்ந்தார். அவர்தான் கிராம முன்சீப் குருசாமி உடையார். ஊரில் பெரிய பண்ணைக்காரர் அவர்தான். நாற்பது வேலி நிலமும், ஒரு ‘ல’கரம் ரொக்கமும் அவருக்குண்டு; ஆனாலும் தலையெழுத்து யாரை விட்டது?
     ”முத்து உஷார்! ஆயிற்று, இன்னும் அரை நாழிகைக்குள் வண்டி வந்துவிடும்” என்றார் கிராம முன்சீப்.
     ”எங்கப்பனாணை! இனிமேல் என்னால் முடியாது. நான் ஓடிப்போகிறேன், சாமி!” என்று நடுங்கிக் கொண்டே சொன்னான் முத்து.
     குருசாமி உடையாருக்கு முத்துவின் மேல் அபாரப் பிரியம். வேலையில் எப்போதும் முத்து கொஞ்சம் இழுப்புத்தான். ஆனால் பொய், புனைசுருட்டு, திருட்டுப் புரட்டு என்பது அவனிடம் கிடையவே கிடையாது. ஒரு வகையில் முத்துதான் கிராம முன்சீப்புக்கு மந்திரி என்று கூடச் சொல்லலாம். குருசாமி உடையாரின் குடும்ப யோக க்ஷேமம் எதுவும் முத்துவுக்குத் தெரியாததில்லை.
     ”அடே! புத்தி கெட்டவனே! இங்கே வா, நான் சொல்றதைக் கேளு” என்றார் முன்சீப்.
     சட்டைப் பையிலிருந்து நாலணா எடுத்து, முத்துவின் கையில் கொடுத்தார். “இதோ பார்! உன் ஆசாரம், பக்தி, பூஜையெல்லாம் மூட்டை கட்டி வை. பக்கத்தில் அதோ கடையிருக்கிறது. போய் ஒரு புட்டி குடித்துவிட்டு வா. குளிரெல்லாம் பறந்து போய்விடும். அதுவரையில் நானே இங்கே பார்த்துக் கொள்ளுகிறேன். ஓடிவந்து விடு.” என்றார்.
     முத்துவுக்கு மதுபானம் கெடுதல் என்ற நம்பிக்கை உண்டு. அவன் தெய்வ பக்தியுள்ளவன். கள்ளுக் குடித்தால் சுவாமிக்கு கோபமுண்டாகுமென்ற எண்ணம் அவனுக்கு எப்படியோ ஏற்பட்டிருந்தது. அதிலும் அவன் மனைவி இது விஷயத்தில் மிகவும் கண்டிப்பாய் இருந்தாள். ஒருநாள் அவன் கொஞ்சம் புத்தி பிசகிச் சகவாச தோஷத்தினால் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தபோது மதுரம் படுத்திய பாடு நன்றாய் அவன் உள்ளத்தில் பதிந்திருந்தது. “கிணற்றில் விழுந்து உயிரைவிடுகிறேன்” என்று அவள் ஓடியதும், அவளைத் தடுத்து நிறுத்தத்தான் பட்ட கஷ்டமும் அவனுக்கு ஞாபகம் இருந்தன. அது முதல் அவன் தப்பித் தவறிக் கூடக் கள்ளு சாராயக் கடைப்பக்கம் போவதில்லை. ஆனால் இப்போதோ?…
     கிராம முன்சீப்பின் போதனையும், குளிரின் கொடுமையும் சேர்ந்து அவன் உறுதியை மாற்றிவிட்டன. “அவளுக்குத் தெரியப் போவதில்லை” என்று மனதைத் திடப்படுத்திக் கொண்டான். பணத்தை வாங்கிக் கொண்டுபோய்க் கால்மணி நேரத்தில் திரும்பி வந்தான்.
     ”தாகசாந்தி செய்து கொண்டாயா? அதுதான் சரி முத்து! குளிரெல்லாம் பறந்து போயிற்றல்லவா? இன்னும் கொஞ்சம் பொறு; ஊருக்குப் புறப்பட்டுவிடலாம்” என்று சொல்லி விட்டுக் குருசாமி உடையார் தமது இடத்துக்குப் போய்ச் சேர்ந்தார்.
3
     முத்துவின் குளிர் பறந்து போயிற்று. ஆனால் அத்துடன் இன்னும் ஒன்றும் பறந்துவிட்டது. அது என்ன? உணர்ச்சி! உணர்ச்சி இருந்தால் அல்லவா குளிர் தெரியும்? கொஞ்ச நேரத்துக்கெல்லாம் புத்தி தடுமாற ஆரம்பித்தது. பிறகு மயக்கம் அதிகமாயிற்று. உலகம் கிறுகிறுவென்று சுழன்றது. கையிலிருந்த விளக்குக் கீழே விழுந்து உடைந்து அணைந்தது. ஒரு தந்திக் கம்பத்தைப் பிடித்துக் கொண்டு முத்து நின்றான். கம்பங்கூடச் சரியாய் நிற்காமல் சுழல ஆரம்பித்தது. ஏற்கெனவே காரிருள். இப்போது கண்ணும் இருண்டபடியால் கனாந்தகாரமாயிற்று.
     திடீரென்று தூரத்திலே ஒரு பெரிய வெளிச்சம் காணப்பட்டது. “அதென்ன பேயா? பூதமா? ஆமாம், தெரிந்தது. கொள்ளிவாய்ப் பிசாசு! பயங்கரமான சத்தமிட்டுக் கொண்டு அது மேலே மேலே அதிவேகமாய் வந்து கொண்டிருந்தது. இதோ அருகில் வந்து விட்டது. என்ன கொடிய பெரிய உருவம்! அதன் வாயில் எவ்வளவு பயங்கரமான தீ! ஐயோ! அது என்னை இழுக்கின்றதே! இதென்ன? நேரே அதன் வாயில் போய் விழுகிறேனே! ஓஹோ! உடையார் ஐயா! மாரியாயி!” அடுத்த கணத்தில் கவர்னர் துரையின் ஸ்பெஷல் ரயில் முத்துவின் உடம்பை ஆயரந் துகளாகச் செய்துவிட்டுப் பறந்து சென்றது. முத்துவின் உயிரும் இப்பூவுலகை விட்டுப் பறந்து போயிற்று.
     ”மேன்மை தங்கிய கவர்னர் துரையும் அவருடைய பரிவாரங்களும் சௌக்கியமாகத் துவரை நகரம் சேர்ந்தார்கள்” என்று மறுநாள் பத்திரிகைகளில் செய்தி வெளியாயிற்று.
     தலையாரி முத்துவின் மனைவி தீபாவளியன்று காலையில் பணியாரம் செய்து வைத்துக் கொண்டு புருஷன் வரவை எதிர்நோக்கிக் காத்திருந்தாள். சின்னானும், அஞ்சலையும் நிமிஷத்துக் கொருமுறை வாசல்புறம் போய் மத்தாப்பூ, துப்பாக்கியுடன் அப்பா வருகிறாரா என்று பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
*****
     சமீபத்தில் நான் மாயவரம் போனபோது கிராம முன்சீப் குருசாமி உடையாரிடமிருந்து மேற் சொன்ன விவரங்களைக் கேட்டறிந்தேன். உடையார் இப்போது மதுவிலக்கு இயக்கத்தில் பிசாசு பிடித்தவர் போல் வேலை செய்து வருகிறார். தற்போது அவரிடம் யாராவது சென்று கள்ளு, சாராயத்துக்குச் சாதகமாகப் பேசிவிட்டால் அவர்கள் தப்பிப் பிழைத்து வருவது கஷ்டந்தான்.
நன்றி: சென்னைநூலகம்.காம் (அமரர் கல்கியின் படைப்புகள்), அமரர் கல்கி, எழுத்தாளர், பத்திரிக்கையாளர்.

       மறுநாள் தீபாவளி. தலையாரி முத்துவின் பெண்சாதி பணியாரம் சுடுவதற்காக மாவு அரைத்துக் கொண்டிருந்தாள். மகன் சின்னானும் மகள் அஞ்சலையும் ஓர் உடைந்த தகரப் பெட்டியைத் திறப்பதும் மூடுவதுமாக யிருந்தார்கள். அந்தப் பெட்டியில் தீபாவளிக்காக வாங்கிவந்த புதுவேட்டியும், பாவாடையும், இரண்டு மூன்று பட்டாசுக் கட்டுகளும் இருந்தன. பட்டாசுக் கட்டை இப்போதே பிரித்துவிட வேண்டுமென்று சின்னான் சொன்னான். அஞ்சலை “கூடாது, நாளைக் காலையில்தான் பிரிக்க வேண்டும்” என்றாள்.     தலையாரி முத்து அவசரமாய் உள்ளே நுழைந்தான். “நான் போய்த் தொலைய வேண்டும். இந்தப் பாழும் சர்க்கார் உத்தியோகம் இப்படித்தான். நாள், கிழமை கூடக் கிடையாது” என்றான்.     ”ஐயோ! இதென்ன அநியாயம்? எங்கே போக வேண்டும்? அதெல்லாம் முடியாது. இராத்திரி எப்படியும் வந்துவிட வேண்டும்” என்றாள் அவன் மனைவி மதுரம்மா.     ”நான் என்ன செய்யட்டும்? யாரோ கவர்னர் துரை வருகிறானாம். ரயில் பாதை முழுவதும் காவல் காக்க வேணுமாம். கணக்குப்பிள்ளை, மணியக்காரர், தலையாரி எல்லோரும் போகிறார்கள். இந்தத் தாலூகா முழுவதும் அப்படி.

 

          ரெவினியூ இன்ஸ்பெக்டர் ஐயாகூடத் தடியைப் பிடித்துக் கொண்டு காவல் காப்பாராம்” என்று சொல்லி முத்து சிரித்தான். ரெவினியூ இன்ஸ்பெக்டரை அத்தகைய நிலைமையில் எண்ணிப் பார்த்தபோதே அவனுக்குச் சிரிப்பு வந்தது.     ”அது எப்படியாவது பாழாய்ப் போகட்டும். பண்டிகை யன்றுதானா இந்த இழவு வந்து தொலைய வேண்டும்? எப்படியும் இராத்திரி திரும்பி வந்து விடக் கூடாதா? ஐயோ! வெள்ளைப் பணியாரம் செய்ய மாவு அரைத்திருக்கிறேனே? நீ இல்லாமற் போனால் சந்தோஷமாகவே இராது” என்றாள் மதுரம்.     ”இராத்திரி வரப்போகிறாராம் துரை. அதற்கு சாயங்கால முதல் காவல் காக்க வேண்டுமாம். வண்டி போனவுடனே புறப்பட்டு ஓடி வந்து விடுகிறேன்” என்றான் முத்து.     இதற்குள் அஞ்சலை ஓடிவந்து தகப்பன் கையைப் பிடித்துக் கொண்டு, “அப்பா, அப்பா, எனக்குப் பூ மத்தாப்பு வாங்கிக் கொண்டு வா.” என்றாள்.     சின்னான் ஓடிவந்து அரை வேட்டியைப் பிடித்துக் கொண்டு, “அப்பா, எனக்குத் துப்பாக்கி வாங்கி வர வேண்டும். என்ன, வாங்கி வருகிறாயா, சொல்லு. இல்லாவிட்டால் உன்னை விடமாட்டேன்” என்றான்.     ”பணியாரமெல்லாம் ஆறிப்போகும். சுடச் சுடச் தின்றால்தானே தேங்காயப்பம் நன்றாயிருக்கும்? உனக்குப் பிடிக்குமே? நீ போகாதிருந்து விட்டாலென்ன? உடம்பு காயலாவென்று சொல்லி விடேன்” என்றாள் மதுரம். 

 

           ”ஐயோ! தலை போய்விடும். இருபது வருஷமாய் வேலை பார்த்துவிட்டு இப்போது கெட்ட பெயர் எடுக்கலாமா? இந்தக் காலத்தில் எட்டு ரூபாய் யார் கொடுக்கிறார்கள்? சர்க்கார் உத்தியோகம் இலேசா?” என்றான் முத்து. தான் சர்க்கார் உத்தியோகஸ்தன் என்னும் விஷயத்தில் அவனுக்கு எப்போதுமே கொஞ்சம் பெருமையுண்டு.     பிறகு, மத்தாப்புப் பெட்டியும், விளையாட்டுத் துப்பாக்கியும் வாங்கி வருவதாகக் குழந்தைகளுக்கு வாக்களித்துவிட்டு முத்து புறப்பட்டுச் சென்றான்.2     ஐப்பசி மாதத்து அடை மழை. வானம் ஓயாது கறுத்து இருண்டிருந்தது. பகலிலேயே வெளிச்சம் சொற்பம். இரவில் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் அந்த அந்தகாரத்தினிடையே ஒவ்வொரு சமயம் மின்னல் பளிச்சென்று வீசி ஒரு மணிநேரம் பிரகாசம் உண்டு பண்ணி வந்தது. சில சமயம் ‘சோ’ வென்று மழை கொட்டும். சில சமயம் தூற்றல் போடும். அபூர்வமாக ஒவ்வொரு சமயம் தூற்றல் நிற்கும். ஆனால் ஊதல் காற்று மட்டும் இடைவிடாமல் அடித்துக் கொண்டிருந்தது.     அதோ வரிசையாக வெகு தூரத்துக்கு மின் மினிபோல் தெரிகின்றதே, அதெல்லாம் என்ன? கம்பங்கள் நாட்டிய விளக்குகளா? – இல்லை. ரயில் பாதையின் இருபுறமும் சுமார் ஐம்பது கஜத்துக்கு ஒருவர் வீதம் மனிதர்கள் நிற்கிறார்கள். அவர்கள் கையில் பிடித்துக் கொண்டிருக்கும் லாந்தர்கள் அவை. அப்படி நின்று கொண்டிருப்பவர்களில் நமது தலையாரி முத்துவும் ஒருவன். ஒரு கையில் லாந்தரும், மற்றொரு கையில் தடியும் பிடித்துக் கொண்டிருக்கிறான்.

 

            வாடைக்காற்று ‘விர்’ என்று அடிப்பதால் அவன் உடம்பு குளிரினால் ‘வெடவெட’ வென்று நடுங்குகிறது. பல்லுக் கிட்டுகிறது. மேலே மழைக்கு ஒரு கோணிப் பை. மழை கோணிப் பைக்குள் நுழைந்து முதுகுக்கு வந்து வெகு நேரமாயிற்று. உடுத்திய வேட்டியைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.     சர்க்கார் உத்தியோகத்துக்குத் தலை முழுகிவிட்டு ஓடிப் போகலாமா என்று நினைத்தான் முத்து. மதுரம் சொன்ன புத்திமதியை அப்போதே கேட்காமற் போனோமே என்று வருந்தினான். இத்தனை நேரம் கஷ்டப்பட்டது பட்டோ ம், இனிக் கொஞ்ச நேரந்தானே, இருந்து தொலைப்போம் என்று தைரியமடைந்தான். இதனிடையில் அடிக்கடி தன் மனைவி சுடச் சுடப் பணியாரம் செய்து கொண்டிருப்பாளென்பது ஞாபகம் வந்தது. “போகட்டும், பெண்சாதியும் குழந்தைகளுமாவது தின்பார்களல்லவா?” என்று எண்ணி ஆறுதல் அடைந்தான்.     சாயங்காலம் நாலு மணிக்கு ஆரம்பித்த காவல் இரவு ஏழு மணி, எட்டு மணி, ஒன்பது மணியாகியும் முடியவில்லை.

 

          முத்துவுக்கு அந்த ஐந்து மணி ஐந்து யுகமாயிருந்தது. “ஏது? இனிமேல் தாங்காது” என்று அவன் தீர்மானித்த சமயத்தில், அங்கே கையில் தாழங்குடையும், உடம்பில் கம்பளிச் சட்டையும், தலையில் குரங்குக் குல்லாயும் தரித்து ஒருவர் வந்து சேர்ந்தார். அவர்தான் கிராம முன்சீப் குருசாமி உடையார். ஊரில் பெரிய பண்ணைக்காரர் அவர்தான். நாற்பது வேலி நிலமும், ஒரு ‘ல’கரம் ரொக்கமும் அவருக்குண்டு; ஆனாலும் தலையெழுத்து யாரை விட்டது?     ”முத்து உஷார்! ஆயிற்று, இன்னும் அரை நாழிகைக்குள் வண்டி வந்துவிடும்” என்றார் கிராம முன்சீப்.     ”எங்கப்பனாணை! இனிமேல் என்னால் முடியாது. நான் ஓடிப்போகிறேன், சாமி!” என்று நடுங்கிக் கொண்டே சொன்னான் முத்து.     குருசாமி உடையாருக்கு முத்துவின் மேல் அபாரப் பிரியம். வேலையில் எப்போதும் முத்து கொஞ்சம் இழுப்புத்தான். ஆனால் பொய், புனைசுருட்டு, திருட்டுப் புரட்டு என்பது அவனிடம் கிடையவே கிடையாது. ஒரு வகையில் முத்துதான் கிராம முன்சீப்புக்கு மந்திரி என்று கூடச் சொல்லலாம். குருசாமி உடையாரின் குடும்ப யோக க்ஷேமம் எதுவும் முத்துவுக்குத் தெரியாததில்லை.     ”அடே! புத்தி கெட்டவனே! இங்கே வா, நான் சொல்றதைக் கேளு” என்றார் முன்சீப்.     சட்டைப் பையிலிருந்து நாலணா எடுத்து, முத்துவின் கையில் கொடுத்தார்.

 

          “இதோ பார்! உன் ஆசாரம், பக்தி, பூஜையெல்லாம் மூட்டை கட்டி வை. பக்கத்தில் அதோ கடையிருக்கிறது. போய் ஒரு புட்டி குடித்துவிட்டு வா. குளிரெல்லாம் பறந்து போய்விடும். அதுவரையில் நானே இங்கே பார்த்துக் கொள்ளுகிறேன். ஓடிவந்து விடு.” என்றார்.     முத்துவுக்கு மதுபானம் கெடுதல் என்ற நம்பிக்கை உண்டு. அவன் தெய்வ பக்தியுள்ளவன். கள்ளுக் குடித்தால் சுவாமிக்கு கோபமுண்டாகுமென்ற எண்ணம் அவனுக்கு எப்படியோ ஏற்பட்டிருந்தது. அதிலும் அவன் மனைவி இது விஷயத்தில் மிகவும் கண்டிப்பாய் இருந்தாள். ஒருநாள் அவன் கொஞ்சம் புத்தி பிசகிச் சகவாச தோஷத்தினால் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தபோது மதுரம் படுத்திய பாடு நன்றாய் அவன் உள்ளத்தில் பதிந்திருந்தது. “கிணற்றில் விழுந்து உயிரைவிடுகிறேன்” என்று அவள் ஓடியதும், அவளைத் தடுத்து நிறுத்தத்தான் பட்ட கஷ்டமும் அவனுக்கு ஞாபகம் இருந்தன. அது முதல் அவன் தப்பித் தவறிக் கூடக் கள்ளு சாராயக் கடைப்பக்கம் போவதில்லை. ஆனால் இப்போதோ?…     கிராம முன்சீப்பின் போதனையும், குளிரின் கொடுமையும் சேர்ந்து அவன் உறுதியை மாற்றிவிட்டன. “அவளுக்குத் தெரியப் போவதில்லை” என்று மனதைத் திடப்படுத்திக் கொண்டான். பணத்தை வாங்கிக் கொண்டுபோய்க் கால்மணி நேரத்தில் திரும்பி வந்தான்.   

 

             ”தாகசாந்தி செய்து கொண்டாயா? அதுதான் சரி முத்து! குளிரெல்லாம் பறந்து போயிற்றல்லவா? இன்னும் கொஞ்சம் பொறு; ஊருக்குப் புறப்பட்டுவிடலாம்” என்று சொல்லி விட்டுக் குருசாமி உடையார் தமது இடத்துக்குப் போய்ச் சேர்ந்தார்.3     முத்துவின் குளிர் பறந்து போயிற்று. ஆனால் அத்துடன் இன்னும் ஒன்றும் பறந்துவிட்டது. அது என்ன? உணர்ச்சி! உணர்ச்சி இருந்தால் அல்லவா குளிர் தெரியும்? கொஞ்ச நேரத்துக்கெல்லாம் புத்தி தடுமாற ஆரம்பித்தது. பிறகு மயக்கம் அதிகமாயிற்று. உலகம் கிறுகிறுவென்று சுழன்றது. கையிலிருந்த விளக்குக் கீழே விழுந்து உடைந்து அணைந்தது. ஒரு தந்திக் கம்பத்தைப் பிடித்துக் கொண்டு முத்து நின்றான். கம்பங்கூடச் சரியாய் நிற்காமல் சுழல ஆரம்பித்தது. ஏற்கெனவே காரிருள். இப்போது கண்ணும் இருண்டபடியால் கனாந்தகாரமாயிற்று.     திடீரென்று தூரத்திலே ஒரு பெரிய வெளிச்சம் காணப்பட்டது. “அதென்ன பேயா? பூதமா? ஆமாம், தெரிந்தது. கொள்ளிவாய்ப் பிசாசு! பயங்கரமான சத்தமிட்டுக் கொண்டு அது மேலே மேலே அதிவேகமாய் வந்து கொண்டிருந்தது. இதோ அருகில் வந்து விட்டது. என்ன கொடிய பெரிய உருவம்! அதன் வாயில் எவ்வளவு பயங்கரமான தீ! ஐயோ! அது என்னை இழுக்கின்றதே! இதென்ன? நேரே அதன் வாயில் போய் விழுகிறேனே! ஓஹோ! உடையார் ஐயா! மாரியாயி!” அடுத்த கணத்தில் கவர்னர் துரையின் ஸ்பெஷல் ரயில் முத்துவின் உடம்பை ஆயரந் துகளாகச் செய்துவிட்டுப் பறந்து சென்றது. முத்துவின் உயிரும் இப்பூவுலகை விட்டுப் பறந்து போயிற்று.   

 

              ”மேன்மை தங்கிய கவர்னர் துரையும் அவருடைய பரிவாரங்களும் சௌக்கியமாகத் துவரை நகரம் சேர்ந்தார்கள்” என்று மறுநாள் பத்திரிகைகளில் செய்தி வெளியாயிற்று.     தலையாரி முத்துவின் மனைவி தீபாவளியன்று காலையில் பணியாரம் செய்து வைத்துக் கொண்டு புருஷன் வரவை எதிர்நோக்கிக் காத்திருந்தாள். சின்னானும், அஞ்சலையும் நிமிஷத்துக் கொருமுறை வாசல்புறம் போய் மத்தாப்பூ, துப்பாக்கியுடன் அப்பா வருகிறாரா என்று பார்த்துக் கொண்டிருந்தார்கள்.*****     சமீபத்தில் நான் மாயவரம் போனபோது கிராம முன்சீப் குருசாமி உடையாரிடமிருந்து மேற் சொன்ன விவரங்களைக் கேட்டறிந்தேன். உடையார் இப்போது மதுவிலக்கு இயக்கத்தில் பிசாசு பிடித்தவர் போல் வேலை செய்து வருகிறார். தற்போது அவரிடம் யாராவது சென்று கள்ளு, சாராயத்துக்குச் சாதகமாகப் பேசிவிட்டால் அவர்கள் தப்பிப் பிழைத்து வருவது கஷ்டந்தான்.நன்றி: சென்னைநூலகம்.காம் (அமரர் கல்கியின் படைப்புகள்), அமரர் கல்கி, எழுத்தாளர், பத்திரிக்கையாளர்.

by parthi   on 12 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கரடியின் கர்வம் கரடியின் கர்வம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.