கும்பகோணம் வெற்றிலை, கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மாணிக்க மாலைக்குப் புவிசார் குறியீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சேர்ந்த தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு மத்திய அரசால் புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. புவிசார் பெற்ற பொருட்களை வியாபார நோக்கத்தோடும், போலியாக வேறு பெயர்களில் பயன்படுத்துவதையும் தடுக்க முடியும்.
அந்த வகையில் தமிழகத்தில் திண்டுக்கல் பூட்டு, சேலம் சுங்குடி சேலை, காஞ்சி பட்டு, மதுரை மல்லிகை, தஞ்சாவூர் கலைத்தட்டு, திருவில்லிப்புத்தூர் பால்கோவா, கோவில்பட்டி கடலை மிட்டாய், பழநி பஞ்சாமிர்தம், கொடைக்கானல் மலைப்பூண்டு உட்படப் பல்வேறு உணவு, வேளாண் மற்றும் பாரம்பரிய உற்பத்திப் பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளன.
சமீபத்தில், மதுரை மரிக்கொழுந்து மற்றும் விளாச்சேரி களிமண் பொம்மைகளுக்குப் புவிசார் குறியீடு அறிவிக்கப்பட்டு இருந்தது.
கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் 13ம் தேதி, தமிழ்நாடு வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்திலிருந்து கும்பகோணம் வெற்றிலை உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் சார்பில் கும்பகோணம் வெற்றிலைக்கும், தமிழ்நாடு கைவினைப்பொருட்கள் மேம்பாட்டுக் கழகம் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகத்தின் மூலம் தோவாளை மாணிக்க மாலைக்கும் புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது. அதன்படி நவம்பர் மாதம் மத்திய அரசு அரசிதழில் வெளியிடப்பட்டது. ஏப்ரல் 1-ம் தேதி கும்பகோணம் வெற்றிலை, கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மாணிக்க மாலைக்குப் புவிசார் குறியீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
|