LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- வைக்கம் முஹம்மது பஷீர்

நெய் திருட்டு

நீண்ட காலத்திற்கு முன்பு நடைபெற்ற சம்பவம் இது. பிள்ளைகளாக நானும் அப்துல் காதரும் ஹனீஃபா வும் பாத்தும்மாவும் மட்டுமே அப்போது இருந்தோம். ஆனும்மாவை அப்போது உம்மா பெற்றுவிட்டாளா என்பது சந்தேகம். அபு பிறக்கவே இல்லை.

வீட்டில் பசுக்கறவை இருந்தது. பாலும் தயிரும் சாதாரணமாக கிடைத்துக் கொண்டிருந்தன.

அப்போது வாப்பாவிற்கு படகு வியாபாரம் இருந்தது. மர வியாபாரத்திற்கு மத்தியில் மலைகளில் இருந்து மரத்தடியை வெட்டி, அங்கு வைத்தே படகாக ஆக்கி, நதிகளின் வழியாகக் கூட்டம் கூட்டமாகக் கொண்டு வந்து, மலைவாழ் மக்களைக் கொண்டு இயக்கி, மொத்தமாகப் பெரிய தொகைக்கு விற்பனை செய்வது என்பது வாடிக்கையாக இருந்தது.



அப்போது வீட்டில் எப்போதும் நெய் இருக்கும். மஞ்சள் நிறத்தில் பெரிய மணல் துகள்களைப்போல இருந்த நெய். அது ஒரு பெரிய கண்ணாடிப் பாத்திரம் நிறைய அங்கே இருக்கும்.

குடயத்தூர் மலைகளில் இருந்த பசும்புல்லைத் தின்று நன்கு வளர்ந்திருக்கும் பசுவின் நெய் அது. இப்படி வாப்பா கூறியதாக நான் நினைத்துப் பார்க்கிறேன். நெய் இருக்கும் பாத்திரத்திற்கு அருகிலேயே கண்ணாடிப் பாத்திரத்தில் சர்க்கரையும் இருக்கிறது. இரண்டும் இருப்பது மூலையில் இருந்த பலகையில்.

சாதத்திலும் பலகாரத்திலும் நெய்யைச் சேர்த்து சாப்பிடுவது உண்டு.

அந்தக் காலத்தில் வாப்பாவின் கையால் நான் நிறைய அடிகள் வாங்கியிருக் கிறேன். அப்துல் காதருக்கு சிறிதுகூட அடி கிடையாது. எனக்கு மட்டும் சர்வ சாதாரணமாக அடி கிடைக்கும். சில நேரங்களில் காரணம் இருக்கும். சில நேரங்களில் காரணம் இருக்காது. தந்தைகள் பிள்ளைகளை அடிப்பார்கள். தாய்மார்களும் அடிப்பார்கள். ஓ... என்னுடைய உம்மாவும் என்னை அடித்திருக்கிறாள். கரண்டியின் கைப்பிடியை வைத்து அடித்து அடித்து என்னைச் சமையலறை யிலிருந்து விரட்டி விட்டிருக்கி றாள். எதையாவது தின்ன வேண்டும். சமையலறைக்குள் நுழைந்து எதையாவது கைவிட்டு எடுத்துத் தின்பேன். அப்படி அப்துல் காதரும் தின்றிருக்கி றான். ஆனால் யாரும் நம்ப மாட்டார்கள். அவன் திருடித் தின்றாலும் அது நான்தான். அடி எனக்குத்தான்.

அன்றொரு நாள் காலை நேரத் தேநீருக்கும் மதிய சாப்பாட்டிற்கும் இடையில் இருக்கும் சுபமுகூர்த்தம். பசி சற்று தோன்ற ஆரம்பித்திருந்தது. கொஞ்சம் எதையாவது தின்பதற்கு ஏற்ற நேரமாக அது இருந்தது. சமையலறையை நோக்கி நான் சென்றேன். அங்கு உம்மா இருந்தாள். வேலைக்காரி யும் இருந்தாள். நங்ஙேலி என்பது வேலைக்காரியின் பெயர். இந்த நங்ஙேலியும் என்னை அடிப்பாள். அடித்து விரட்டியிருக்கிறாள்.

நான் சின்ன எஜமான். சின்ன எஜமானை வேலைக்காரி அடிக்கக்கூடாது. இந்த நியாயம் அங்கு செல்லுபடியாகாது. உம்மாவிடம் சொன்னால் "நல்லாப் போச்சு, நீ கையை விட்டு திருடினேல்ல?' என்று கூறுவாள். போதாக் குறைக்கு இந்த நங்ஙேலியின் மார்பகத்தில் நான் பால் வேறு குடித்திருக்கிறேனாம்! (நிறைய பெண்களின் மார்பகங்களில் நான் பால் குடித்திருக்கிறேன். உம்மாவும் கூறிய விஷயம் இது). பிறகு நான் யோசித்தேன். ஒரு பச்சை மாங்காயைத் தின்போம். ஆனால் அதுவும் கிடைக்க வழியில்லை. நங்ஙேலி கூறுவாள்:

""கொஞ்ச நேரம் அப்படியே பசியுடன் இரு. இப்போ சாப்பிடலாம். இல்லாவிட்டால் அடி வேணுமா?''

ம்ஹும்! எதுவும் பேசாமல் அப்படியே நடந்து வீட்டிற்குள் நுழைந்தபோது, நான் புதிதாக ஒன்றைக் கண்டுபிடித்தேன். நெய்யும் சர்க்கரையும் அருகருகே இருக்கின்றன. இரண்டும் ஒன்றாகச் சேர்ந்தால் சில நல்ல விஷயங்கள் இருக்கின்றன. ம்ஹும்! பிறகு அதிக நேரம் தாமதிக்கவில்லை. யாருக்கும் தெரியாமல் நான் ஒரு குழிவாக இருந்த கிண்ணத்தை எடுத்தேன். யாருக்கும் தெரியாமல் வாப்பா படுக்கும் அறையை அடைந்தேன். நெய் பாத்திரத்தை மெதுவாக எடுத்து வாப்பாவின் கட்டிலில் வைத்தேன். மூடியை மெதுவாகக் கழற்றி என்னுடைய சுத்தமான கையால் நெய்யை எடுத்து கிண்ணத்தின் பாதிவரை நிறைத்தேன். பிறகு நெய் பாத்திரத்தை எடுத்து மூலையில் இருந்த பலகையில் வைத்தேன். சர்க்கரையையும் அதே மாதிரி குழியாக இருந்த கிண்ணத்தில் தாராளமாக எடுத்துப் போட்டேன். பாத்திரங்கள் இரண்டும் மூலையில் இருந்த பலகையில் இருந்தன. யார் பார்த்தாலும் ஒரு மாற்றமும் உண்டானதாகத் தோன்றாது. வாப்பா எடுப்பதைப்போலவே செய்து நான் வைத்திருந்தேன். வாப்பா கரண்டியால் எடுத்து விட்டு மெதுவாகப் பாத்திரங் களுக்குள் சமப்படுத்தி வைத்து விடுவார். அதேமாதிரி நான் கையால் செய்துவிட்டு, வாப்பா வின் கட்டிலில் உட்கார்ந்து நெய்யையும் சர்க்கரையையும் சேர்த்துக் குழைத்து கொஞ்சம் வாய்க்குள் போட்டு கருமுரா என்று மென்று தின்றேன். பெரிய பெரிய சர்க்கரை. நன்றாகக் கலக்கவில்லை. எனினும் ஸ்டைலாக தின்று கொண்டிருந் தேன். அப்போது மெதுவாக, மிகவும் மெதுவாக தாழ்ந்த

குரலில் ஒரு கேள்வி! நான் அதிர்ந்து போய்விட்டேன். கேள்வி கேட்டவன் அப்துல் காதர். அவன் அருகிலேயே நின்றிருந்தான். எப்படி எப்போது அந்த அறைக்குள் வந்தான்? ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை. அவன் மெதுவான குரலில் கேட்டான்:

""அண்ணா, நீங்க என்ன தின்றீங்க?''

நான் மெதுவான குரலில் சொன்னேன்:

""ஒரு மருந்து...''

""நான் உங்க பின்னாடிதான் இருந்தேன். எல்லாவற்றையும் நான் பார்த்தேன். எனக்கும் தாங்க. இல்லைன்னா நான் சொல்லிடுவேன்!''

மிகவும் ரகசியம் என்பதைப் போல மெதுவான குரலில் நான் கேட்டேன்:

""டேய், நீ என் தம்பிதானே?''

""அப்படின்னா எனக்கும் தாங்க.''

நான் அவனுக்குக் கொடுத்தேன். பாத்திரத்தை நக்கி சுத்தமாக்கியது அவன்தான்.

""இனி நான் எடுக்க மாட்டேன்''- நான் சொன்னேன்: ""நீயும் எடுக்கக்கூடாது.''

இப்படி ஒப்புக்கொண்டு நாங்கள் வெளியேறினோம். பாத்திரத்தை அது இருந்த இடத் தில் கொண்டுபோய் வைத்து விட்டு உலகத்தில் எதுவுமே நடக்கவில்லை என்பதைப்போல நாங்கள் நடந்தோம்.

அதற்குப் பிறகு நெய்யையும் சர்க்கரையையும் நான் எடுக்க வில்லை என்பது சத்தியமான உண்மை. நெய்யின் சிறப்பைப் பற்றி எதுவும் தெரியாது. எனினும் எதுவும் இல்லாதபோது நெய்யையும் சர்க்கரையையும் சாப்பிட்டேன். அவ்வளவுதான். தின்பதற்கு பல பொருட்களும் வீட்டில் இருந்தன. பழுத்த பலாப்பழம் இருந்தது. மாம்பழம் இருந்தது. வறுத்த மாமிசம் ஒரு பாத்திரத்தில் வைக்கப்பட்டு அலமாரியில் இருந்தது. நான் அவற்றின் மீதெல்லாம் கவனத்தைப் பதித்துக்கொண்டு அப்படியே நடந்து திரிந்தேன். நாட்கள் அப்படியே கடந்து சென்றன. நான் வெறுமனே அடிகள் வாங்க ஆரம்பித்திருந் தேன்! அப்துல் காதருக்கு காய்ச்சலும் பேதியும்!

அடி வாங்குவதற்குக் காரணம்- யாரோ நெய்யை அள்ளி அள்ளித் திருடித் தின்கிறார்கள்! பாத்திரத்திற்கு வெளியிலும் கட்டிலிலும் ரேகைகள் இருக்கின்றன. நான் அடிகள் வாங்கினேன். அப்துல் காதருக்கு இருந்த காய்ச்சல்தான் சுவாரசியமானது. அவன் அப்படியே தவிலைப்போல வீங்கிக் கொண்டிருந்தான். எப்போது பார்த்தாலும் நீரைக் குடிப்பான். எதையும் சாப்பிட முடியாது.

""பிள்ளைகளுக்கு ஏதோ காய்ச்சல்!''- உம்மாவும் நங்ஙேலியும் சொன்னார்கள். வாப்பா ஜோதிடரை அழைப்பதற்காகச் சென்றார். ஜோதிடர்கள் அப்போது பெரிய வைத்தியர்கள்.

அப்போது உம்மா அப்துல் காதரைத் தாங்கி மடியில் எடுத்து வைத்துக்கொண்டு கவலையுடன் தடவிக் கொண்டிருந்தாள்:

""கடவுளே! என் தங்கத்துக்கு என்ன ஆச்சு?''

நங்ஙேலி சொன்னாள்:

""கடவுளே! என் தங்கக் குடத்திற்கு எதுவும் இல்லையே!''

அப்துல் காதர் எந்தவொரு உணர்ச்சி மாறுதலும் இல்லாமல் காய்ச்சலுடன் தடிமனான உடம்புடன் முக்கிய மனிதனாக அங்கு உட்கார்ந்திருந்தான்.

நான் அவனுடைய முகத்தைப் பார்த்தேன். "டேய் திருடா, நீ அந்த நெய் முழுவதை யும் திருடி உடல் தடித்துப் போய் அங்கு உட்கார்ந்திருக் கிறாய் அல்லவா?' என்பதைப் போல நான் பார்த்தேன்.

அவனுக்கு எந்தவொரு கூச்சமும் இல்லை. ஜோதிடர் வந்தார். அதற்குப் பிறகு வேறொரு வைத்தியரான வேலன் வந்தார். அது முடிந்ததும் முஸல்யார் வந்தார்.

நாட்கள் அப்படியே போய்க் கொண்டிருந்தன. நெய் குறைந்து கொண்டு வந்தது. எப்போதும்போல அடிகளை நான் வாங்கிக் கொண்டிருந்தேன். அப்துல் காதர் தவிலாக மாறிக் கொண்டிருந்தான். அவன் மருந்து எதையும் குடிப்பதில்லை. யார் கண்ணிலும் படாமல் அவன் போய் விடுவான். எப்போதாவது கொஞ்சம் சாதம் சாப்பிடுவான். அவன் நோய் வாய்ப்பட்டவனாக இருந்ததால் எல்லாரும் அவனைக் கொஞ்சிக் கொண்டிருந்தார்கள். அவனுக்கு எந்தவொரு களைப்பும் இல்லை. அப்படிக் காட்டிக்கொள்வான். பரவாயில்லைடா!

தினமும் அவன் நெய்யையும் சர்க்கரையையும் சாப்பிடுகிறான் என்ற விஷயம் எனக்குத் தெரியும். ஆனால் யாரிடம் கூறுவது? கூறினால் யாரும் நம்புவதில்லை.

ஒருநாள் நான் அவனுக்கு கொஞ்சம் வறுத்த மாமிசத்தைக் கொடுத்தேன். யாருக்கும் தெரியாமல் நான் அதை அலமாரி யில் இருந்து திருடி எடுத்தேன். அவன் மாமிசத்தை வாங்கிச் சாப்பிட்டான். நான் சொன்னேன்:

""டேய், நீ என்னுடைய தம்பி! உண்மையைச் சொல்லு. நீ இப்படித் தவிலாக மாறியது எப்படித் தெரியுமா? நெய்யையும் சர்க்கரையையும் சாப்பிட்டுத் தான்...''

""சும்மா போங்க அண்ணா. எனக்குக் காய்ச்சல் என்று சொல்லலையா?''

அவனுடைய திருட்டுத் தனத்தை பொதுமக்களுக்கு முன்னால் எப்படிக் கொண்டு வருவேன்? சொன்னால், யார் நம்புவார்கள்? எனினும் நான் உம்மாவிடம் சொன்னேன். நங்ஙேலியிடமும் சொன்னேன். நெய்யையும் சர்க்கரையையும் சாப்பிட்டுத் தீர்க்கும் பெரிய திருடன் அப்துல் காதர்!

சொன்னதைப்போலவே யாரும் நம்பவில்லை. என்னுடைய இதயத்தின் புனிதத் தன்மையால் ஒரு சம்பவம் நடந்தது. ஒரு வெள்ளிக் கிழமை. வாப்பா ஜும்மா தொழுவதற்காக பள்ளிவாசலுக்குப் போயிருந்தார். உம்மா சில பெண்களுடன் பக்கத்து வீட்டில் உட்கார்ந்து கொண்டு பேன் பார்த்துக் கொண்டே, ஊர் விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தாள். பேச்சோடு பேச்சாக அப்துல்காதரின் புனித நோயைப் பற்றியும் சொன்னாள். அவற்றை யெல்லாம் கேட்ட நான் வீட்டிற்கு வந்தேன். நங்ஙேலி தூங்கிக் கொண்டிருந்தாள். சமையலறைக்குள் நுழைந்து நான் சிறு சிறு சோதனைகளை நடத்தினேன். சிலவற்றைக் கையை நுழைத்து எடுத்துத் தின்றேன். பிறகு வீட்டிற்குள்ளி ருந்து வராந்தாவை நோக்கி மெதுவாக வந்து கொண்டிருந் தேன். வாப்பா படுக்கும் அறையில் ஏதோ அசைவு... ஒரு கருமுரா சத்தம்! நான் மெதுவாகப் பார்த்தேன். வாப்பாவின் கட்டிலுக்குக் கீழே இரண்டு கால்களைப் பார்த்தேன். அவற்றில் ஒன்று ஊனமான கால்.

அப்துல் காதர் நெய்யையும் சர்க்கரையையும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான்!

நான் மெதுவாக, மிகவும் மெதுவாக வெளியே சென்று ஓடி உம்மாவின் அருகில் போனேன்.

""அப்துல் காதரின் காய்ச்சலைப் பார்க்கணுமா? வாங்க...''

எல்லாரையும் நான் அழைத் துக்கொண்டு வந்து மெதுவாக வாசற்படியில் நிறுத்தினேன். நான் உள்ளே நுழைந்து இரண்டு கதவுகளையும் ஒரு நொடியில் திறந்து விரித்துவிட்டேன்.

அப்துல் காதர் குழியாக இருந்த கிண்ணத்தில் நெய்யையும் சர்க்கரையையும் தின்றவாறு கட்டிலுக்கு அடியில் உட்கார்ந்திருந்தான்!

அவனை நான் பாத்திரத்துடன் பிடித்து வெளியே கொண்டு வந்தேன். உம்மா அவனைத் தாறுமாறாக அடித்தாள். ஆரவாரம் கேட்டு நங்ஙேலி கண்விழித்துவிட்டாள். விஷயத்தைத் தெரிந்து நங்ஙேலியும் அவனை அடித்தாள்.

அந்த அருமையான காட்சியைப் பார்த்துக் கொண்டே நான் நின்றிருந்தேன்.

வாப்பா வந்ததும் அவரும் அவனை அடித்தார்.

இவை எல்லாம் முடிந்ததும் தனியாக இருக்கும்போது அவன் என்னிடம் கேட்டான்:

""அண்ணா, நான் உங்களோட சின்ன தம்பிதானே! என்னை எதற்குக் காட்டிக் கொடுத்தீங்க?''

நான் சொன்னேன்:

""பெரும் திருடா! உனக்காக நான் எவ்வளவு அடிகள் வாங்கியிருப்பேன்! அப்ப நீ நினைச்சியா அண்ணன்றதை- பெரும் திருடா!''

by Swathi   on 27 Mar 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கரடியின் கர்வம் கரடியின் கர்வம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.