LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- சு.மு.அகமது

ஞாபகவிருட்சம் - சு.மு.அகமது

தபால்காரர் கொடுத்துவிட்டு சென்ற பதிவுத்தபாலின் கனம் என்னை சற்று சிந்திக்க வைத்தது. அடுத்து அதை அனுப்பியவரின் பெயர் எனக்கு அறிமுகமில்லாதது போன்று தோன்றியதால் யோசித்தேன்.

 

 

 

அனுப்பப்பட்ட ஊரின் பெயர் ஆம்பூர் என்பதால் அங்கு எனக்கு பரிச்சயமான சுசிலா ஆண்ட்டியை தவிரவும் அவர்களது வீட்டிலுள்ள மற்றவர்கள் பெயரும் இல்லாது போனது குழப்பம் அதிகரிக்க வழி வகுத்தது. யாராய் இருக்கும்?

 

 

 

நடுவறையின் சோபாவில் அமர்ந்து கொண்டு தபால் உறையை பிரித்தேன். கற்றையான வெள்ளைத்தாளில் பளிச்சிட்ட முத்தான எழுத்துக்கள். மூக்குக்கண்ணாடிக்கு வேலையில்லை. படிக்க ஆரம்பித்தேன்.

 

 

 

‘அன்புள்ள அக்கா அருள்மொழிக்கு’ என்ற ஆரம்பமே அவன் என்னை நன்கறிந்தவன் என்பதும் என்னினும் வயதில் சிறியவன் என்பதனையும் விளங்கிக்கொள்ள நேரம் பிடிக்கவில்லை எனக்கு. பெயர் மட்டும் புரிபடவில்லை. மூளையை கசக்கினேன். யாராயிருக்கும்? முடியவில்லை. கடிதத்தை படித்து முடிக்கும் போதாவது யாரென்று தெரிய வாய்ப்புள்ளதா என்று அறியும் ஆவலில் மேற்கொண்டு படிக்க ஆரம்பித்தேன்.

 

 

 

”அன்புள்ள அக்கா அருள்மொழிக்கு,

 

 

 

வணக்கம்.

 

 

 

’ஹாய்’ என்று வலது கையை தட்டி வணக்கம் கூறுவது தான் நமது வழக்கம். அது 1980 – ஆம் ஆண்டு திசம்பர் மாதம் நீங்கள் எங்கள் ஊருக்கு அரையாண்டு பரிட்சை விடுப்பில் வந்த போது அறிமுகப்படுத்தியது. நீங்கள் தங்கியிருந்த அந்த பதினைந்து நாட்களும் ஆரம்ப நாட்களில் கூச்சத்துடனும் பின்பு உங்களோடு ஒன்றிப்போயும் பிரிகையில் கண்களில் கனத்த கண்ணீர் தாரையோடும் தான் நானும் நண்பர்களும் உங்களையும் உங்கள் தங்கையையும் வழியனுப்பி வைத்தோம்.

 

 

 

இன்று இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து அதே திசம்பர் மாதத்தில் உங்களின் ஞாபக விதை முளைவிட தொடங்கியிருப்பது எனக்கே ஆச்சர்யத்தை கொடுக்கிறது. எதோ ஏகாந்தத்தில் தனித்து விடப்பட்டவனாய் இருந்திருந்தால் முன்பேயே உங்களைப்பற்றின நினைவுகள் கிளர்ந்திருக்கும். ஆனால் எனது படிப்பு, வேலை பின்பு மனைவி மக்களென்று குடும்பஸ்தனாக நான் மாறிவிட்ட பிறகு உங்களின் நினைப்பு என்னுள் பிரவாகமெடுக்கிறதென்றால் அதற்கு காரணம் திசம்பர் இருபத்து நான்காம் தேதியாய் தானிருக்கும். சந்தேகமில்லை.

 

 

 

1980 . திசம்பர் இருபத்து நான்காம் தேதி.

 

 

 

நீங்கள் எங்களுக்கு அறிமுகமாகி நான் கூச்சம் தெளிந்த ஆறாம் நாள். விடிந்தால் கிறிஸ்துமஸ் பெருநாள். எங்கும் பஜனைப்பாடல்களும் வண்ணமயமான கிறிஸ்துமஸ் மரங்களும் மகிழ்ச்சியின் பிடியில் சிக்கி அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது.

 

 

 

சுசிலா ஆண்ட்டியின் வீட்டிலிருந்த கிறிஸ்துமஸ் மரத்தில் சரிகையையும் வண்ணவண்ண காகிதங்களையும் பொருத்தி அலங்கரிக்கும் வேலையை நான் தான் செய்திருந்தேன். மிகவும் அழகாக அமைந்திருந்ததாக நீங்கள் என்னை மெச்சிய போது பூரித்துப்போனேன். எனது மென்விரல்களை உங்களது விரல்களில் கோர்த்துக்கொண்டு, ’உனக்கு கிறிஸ்துமஸ்ன்னா ரொம்ப பிடிக்குமா’ என்று கேட்டதும் நான் ’ஆம்’ என்பதாய் தலையாட்டினதும் அழியா ஓவியமாய் இன்னும் மனத்திரையில் பதிந்து ஓடுகிறது.

 

 

 

அன்று இரவு பனந்தோப்புக்காலனி சர்ச்சில் இரவு வழிபாட்டிற்காக சுசிலா ஆண்ட்டியின் குடும்பத்தோடு நாமும் சர்ச்சுக்கு சென்று பின் வரிசையில் அமர்ந்து கொண்டு ’அல்லேலூயா’ பாடியதும் ’காரிருள் வேளையிலும் கடுங்குளிர் நேரத்திலும்’ பாடலை கேட்டதும் மறந்திருக்காதென்று எண்ணுகிறேன்.

 

 

 

சிறிது நேரத்தில் அதில் ஒன்றாது போனதாலோ என்னமோ நீங்கள் என்னை சர்ச்சுக்கு வெளியே அழைத்து வந்து அந்த நடுவிரவில் வானத்தில் மின்னின நட்சத்திரங்களை காண்பித்து கண் சிமிட்டும் அவைகளை எத்தனை என்று எண்ணிப்பார்த்து சொல்ல சொன்னதும், நெற்பயிர்களின் நடுவில் வெண்மையாய் ஒரு சிறு கோட்டை போன்று தெரிந்த சர்ச்சை இருளில் மிளிரும் ’பளிங்குப்பாறை’ என்றதும் நினைவிலிருந்து நீங்காது நிற்கிறது.

 

 

 

கூடவே மினுமினுத்த மின்மினிப்பூச்சிகளை இரு கைகளையும் குவித்து அதனுள் ஒளித்து ‘ஒளி’ காண்பித்ததும், சில்லிட்ட குளிரில் ரீங்காரமிட்ட சில்வண்டுகளின் ஒலி லயத்திற்கேற்ப ’ரீ…ரிரீரீரீய்…’ என்று முணுமுணுத்ததும் பசுமையாய் இன்றும் இருந்தாலும், ஏதோ ஒன்றை இழந்த பரிதவிப்பு மட்டும் உங்களுக்குள் இருந்ததை நீங்கள் வெளிச்சம் போட்டு காட்டிய போது, ஏதோ ஒரு பெரியவரின் நினைவு நாளுக்கு பூமாலை போட முடியாது போனதாய் தான் நான் எண்ணிக்கொண்டேன்.

 

 

 

’எங்க அய்யா படத்துக்கு யாரு மரியாதை பண்ணப்போறாங்க. யாராவது படத்தை தொடச்சி ஒரு பூவாச்சும் வெப்பாங்களா’ என்று நீங்கள் ஆதங்கப்பட்டது அந்த ஈரோட்டு வெண்தாடி இளைஞருக்காக தான் என்பது அடுத்த நாள் நீங்கள் எனக்கு விளக்கிய போது என்னுள்ளும் கொஞ்சம் நீங்கள் அந்த அய்யாவாக தொற்றிக்கொண்டீர்கள். அதன் தாக்கம் இன்றளவும் என்னுள் இருக்கிறது.

 

 

 

இருந்தாலும், நேற்று தான் ஆம்பூர் சான்றோர்குப்பம் படிப்பகத்துக்கு முன்பு பாஸ்போர்ட் புகைப்படத்தை பெரிதாக்கிய வடிவத்தில் கல்மேடை மீது பொருத்தியிருந்த அய்யாவின் சிலைக்கு அருகில் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு சிறு பூவையாவது அவரது நெஞ்சுக்கு கீழே வைக்கின்ற ஆவலில் கைகள் துறுதுறுத்தன. ஆனால் காலம் செய்த கோலத்தால் எனக்கு தேவையானதை மட்டும் என்னோடும் மற்றவற்றை தேவையானவர்க்கும் விடுத்து காலத்தை கடத்திக்கொண்டிருக்கும் என்னால் அவ்வாறு செய்ய முடியாமல் போனது பற்றி என்ன சொல்ல?

 

 

 

அக்கா, நீங்கள் வந்து சென்று உங்களை நான் மறந்துவிட்ட நான்காம் ஆண்டில் பத்தாம் வகுப்பு அரசுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று நான் தேர்ச்சியடைந்தது அறிந்து சுசிலா ஆண்ட்டியிடம் மகிழ்ச்சியினை பரிமாறிக்கொண்டதை கண்களின் ஓரங்கள் பனிக்க அவர்கள் என்னிடம் கூறின போது மட்டும் இடையில் உங்களது நினைவு வந்து போனது.

 

 

 

மன்னிக்கவும். நான் பேண்ட் அணிய ஆரம்பித்த காலம் அது.

 

 

 

அப்பாவின் ஜீன்ஸ் பேண்ட்டை இடுப்பு பெல்ட் போட்டு இறுக்கி கட்டிக்கொண்டு கீழ்பாகத்தை நான்கு சுருளாய் மடித்துவிட்டு முதன்முதலில் வெளியே வலம் வந்தது பற்றி சுசிலா ஆண்ட்டி  சொல்லியிருக்கமாட்டார்கள்.

 

 

 

தோள்பட்டையுடனான பச்சைக்கட்டம் போட்ட அரை டிராயரும் கோடு போட்ட சிகப்பு நிறச்சட்டையும் தான் எனது அடையாளமாய் உங்கள் மனதில் பதிந்திருக்கும். நீங்கள் கூட அந்த பட்டைகளை பிடித்துக்கொண்டு என் பின்னால் நின்றபடி ’கூக் கூக்….’ என்றபடி இரயில் வண்டி ஓட்ட சொல்வீர்கள்.

 

 

 

கையை வாயருகே வைத்துக்கொண்டு சப்தமிட்டபடி நாம் ஓட, உங்கள் தங்கை தேன்மொழியக்கா,

 

’கழுத மாதிரி ஆயிட்டு என்னாடி வெளையாட்டு சின்னப்பசங்க கூட’ என்பார்.

 

பதிலுக்கு மூக்கை சுருக்கி ’போடீய்..ஊ…ஊ…’ என்று நீங்கள் ஊளையிட்டது, சுசிலா ஆண்ட்டியின் முகத்திலும் கூட புன்னகையின் இழைகளை வரவழைத்தது.அதோடு,

 

’மக பாத்துடீ.உனக்கு எதாவதுன்னா உங்கம்மா என்னைய உயிரு எடுத்திடுவா’ என்ற போது,

 

’அய்யிரு பொண்டாட்டிக்கு அலம்பலெல்லாம் கெடையாது ஆண்ட்டி. பயப்படாதீங்க’ என்று நீங்கள் வேடிக்கையாக கூறினது கூட பசுமையாய் நினைவிலேயே இருக்கிறது.

 

 

 

பின்னாட்களில் உங்கள் அம்மா முதலியார் என்றும் அப்பா பிராமணர் என்பதையும் அறிந்த  போது தான் நீங்கள் கிறிஸ்துவர் இல்லை என்பதும் சுசிலா ஆண்ட்டியின் தோழியின் மகள்கள் என்பதும் புரிந்தது. அப்போது தான் நான் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தேன். அதிர்ச்சியேதும் ஏற்படுத்தாத வயதென்பதால் ஆச்சரியமாய் அதை  மறந்து போனேன். எது எப்படியோ நீங்கள் எங்களின் பிரியமானவராய் மாறி மனங்களில் இடம் பிடித்து விட்டிருந்தீர்கள்.

 

 

 

நண்பர்கள் ’சுகாசினி மாதிரியே இருக்காங்கடா அக்கா’ என்று உங்களை பற்றி கூறும் போது ’ஏன் அவங்க அப்படியிருக்கனும். அக்கா அக்கா தான்’ என்று நான் கூற , நடிகை சுகாசினியை பார்க்காத எங்களுக்கு அவராகவே நீங்கள் தெரிந்ததும் ஆச்சர்யமே.

 

 

 

அக்கா, உங்கள் தங்கை தேன்மொழியக்கா எப்படியிருக்கிறார்கள்? அவர்கள் உங்களைப்போன்று கலகலப்பானவர்கள் இல்லை. முசுடு. பொசுக்கென்று கோபம் கொப்புளிக்கும். யாராவது அதிகம் சப்தமிட்டாலே எரிச்சலடைந்துவிடுவார்கள். டாக்டருக்கு படிக்கப்போகிறேனென்று சொல்வார்களே. டாக்டராகிவிட்டார்களா?

 

 

 

ஒரு முறை தேன்மொழி அக்காவுக்கு தலைவலி வந்து துடித்த போது  தமக்கையின் பொறுப்புணர்வோடான உங்களது பரிதவிப்பு சுசிலா ஆண்ட்டியோடு சேர்ந்து எங்களையும் கவலை கொள்ள வைத்தது. எங்களது நிலைமையை கண்ட நீங்கள் எங்களையெல்லாம் அழைத்துக்கொண்டு தூரத்திலிருந்த கொய்யாத்தோப்பிற்கு  சென்றுவிட்டீர்கள். அங்கு கொய்யாப்பழங்களை பொறுக்கியெடுக்கும் போது கூட வீட்டருகிலேயே இருந்தால் தங்கைக்கு தொந்தரவு அதிகமாகும் என்பதால் தான் எங்களை நீங்கள் அங்கு அழைத்து சென்றீர்கள் என்பதை அறியாதிருந்தோம்.

 

 

 

இப்படியாகத்தான் ஒரு ஞாயிற்றுக்கிழமை நாம் எல்லோரும் ’ஏழைகளின் ஊட்டி’ ஏலகிரி மலைக்கு வேனில் செல்லும் போது வழியில் வாணியம்பாடியில் எனது தாத்தாவின் வீட்டில் சற்று ஓய்வெடுக்க தங்கினோம். அப்போது தேன்மொழியக்கா வெளியே நின்றிருந்த வேனை ஸ்டார்ட் செய்ய அது உறுமலோடு தாவி குதித்து நின்றது. சத்தம் கேட்டு நாமெல்லோரும் வெளியே ஓடி வந்த போது பயத்தில் நடுங்கிக்கொண்டிருந்த அவர்களை டிரைவர் சாய்மாமா ஆசுவாசப்படுத்தினார்.

 

’நான் தான் வண்டியை கியரில் போட்டுவிட்டு சாவியை எடுக்க மறந்துவிட்டேன்’ என்று கூறிய போதும், நீங்கள் படபடப்போடு உங்கள் தங்கையை திட்டியதும் நினைவிலிருக்கிறதா? அப்போது உங்கள் மூக்கின் மீது படர்ந்த சிவப்பு நிறம் தான் கோபமா? இதை படிக்கும் போது கண்டிப்பாக உங்கள் உதடுகளில் புன்முறுவல் பூத்திருக்கும். உங்கள் சுபாவம் அப்படி”.

 

 

 

டிதத்தை படிப்பதை சற்று நிறுத்தினேன். உதடுகளில் தவழ்ந்த புன்சிரிப்பின் அதிர்வலைகளால் உடலெங்கும் சிலீரிட்டது. உள்ளங்கையால் குத்திட்டு நின்ற சிலிர்ப்பை தேய்த்து குறைத்துக்கொண்டேன். தோள்களை குலுக்கிக் கொண்டேன். கடிதத்துடன் இணைத்திருந்த புகைப்படத்தை பார்க்கிறேன். இளந்தாடியுடன் இருந்த இளைஞனின் முகத்திலிருந்து அவனை அடையாளம் காண முயன்றேன். என் கண்களில் மங்கலாய் அவனது முகம் தெளியத் துவங்கியது. நல்ல ஓய்வும் மனதின் அமைதியும் ஒருங்கே அமைந்தால் கோபம் கூட எட்டாத தூரத்தில் நின்று ஆதங்கத்தோடு தான் நம்மை பார்க்கும். கண்கள் தேக்கின கண்ணீரை புறங்கையால் துடைத்தபடி மீண்டும் கடிதத்தை படிக்க துவங்குகிறேன்.

 

 

 

”அக்கா, கடந்த இரண்டு ஆண்டுகளாய் நான் யாருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் கூறுவதையோ அனுப்புவதையோ மறந்திருந்தேன். மறக்கடிக்கப்படும் செயலாய் அது மாறிப்போன பொழுதில் தான் நான் உங்களது விலாசம் அறிய வேண்டி சுசிலா ஆண்ட்டியின் வீட்டிற்கு சென்றேன். என்னை கண்டதும் நான் வாழ்த்து கூற வந்ததாய்  நினைத்து அவர்கள் பரவசமடைய அதற்கு பாதகமேதும் ஏற்படுத்தாது வாழ்த்து கூறினேன்.

 

 

 

அதற்கு பிறகு அவர்கள் கூறின செய்தியை கேட்டு எனக்குள் ஏற்பட்ட திடுக்கம் குறித்து என்னால் எழுதாமல் இருக்க முடியாது.

 

 

 

துயருறும் நோயாளிகளுக்கும் வயோதிகருக்கும் பணிவிடை செய்வது தான் மனநிறைவை தருமென்று முன்பு நீங்கள்  கூறின போதெல்லாம் எனக்குள்ளும் ஏதோ ஒன்று பூத்து வெடிக்கும். ஆனால் குடும்ப சூழலும் படும் பாடுகளும் என்னை காலவெளியில் கரைத்துவிட்டது. நான் பலகீனன்.

 

 

 

இருப்பினும், அக்கா…நீங்களா…? நீங்களா அப்படி செய்திருப்பீர்கள். என் மனம் இன்னும் அதை நம்ப இடம் கொடுக்காமல் துயர்படுத்துகிறது. இளம் வயதிலேயே கொள்கை பிடிப்புடன் இருந்த நீங்கள் இன்னும் அதிகமான பற்றுதலுடன் இருப்பீர்கள் என்ற என் எண்ணத்தை பொய்ப்படுத்தும் விதமான அந்த செய்தி நிஜமா?

 

 

 

மேலும் எழுத முடியாமல் உள்ளம் தடுமாற்றம் கொள்வதால் இறுகின மனதோடு முடித்துக்கொள்கிறேன். ( கோபம் கனன்று எழுந்தால் அதை என் மீது துப்பிவிடுங்கள் )

 

 

 

அன்புடன்,

 

கண்களில் கண்ணீர் மல்க…

 

தம்பி முஸ்தாக் “

 

 

 

கடிதத்தை மடித்து மேஜை மீது வைத்தேன். புகைப்படத்திலிருந்த முகத்தில் இழைந்திருந்த புன்னகை இமைக்காமல் என்னை பார்ப்பதாய் உணர்ந்தேன். அதில் மறைந்திருக்கும் பொடியனின் பால்வடியும் முகத்தை பிரித்தறிய முயற்சித்தேன். மங்கலான நினைவுகள் தான் ஓங்கி நிற்கிறது.

 

 

 

கோபத்தை துப்பச்சொல்கிறான். எதற்காக எனக்கு கோபம் வர வேண்டும்.

 

 

 

மேஜை மீதிருந்த கடிதம் காற்றில் படபடத்தது.

 

 

 

நேரமாகியிருந்தது. மெதுவாக எழுந்தேன்.

 

 

 

ஹேங்கரில் தொங்கிக்கொண்டிருந்த ’அங்கி’யை அணிந்துகொண்டேன். கண்களில் நீர் பெருக ஆரம்பிக்கிறது. மார்பின் மீது படிந்திருந்த ஜெபமாலையிலிருந்த சிலுவைச்சின்னத்தை இரு கரங்களாலும் இறுக பற்றிக்கொள்கிறேன். உள்ளங்கையில் பதிந்த முனைகள் ஏற்படுத்தின வலி ஞாபக விருட்சத்தின் வேராய் என் உடலெங்கும் பரவ ஆரம்பிக்கிறது.

 

 

 

- சு.மு.அகமது

 

 

by Swathi   on 08 May 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கரடியின் கர்வம் கரடியின் கர்வம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.