LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- ஆதவன்

ஞாயிற்றுக் கிழமைகளும் பெரிய நகரமும் அறையில் ஓர் இளைஞனும்

 

சாப்பிட்டு விட்டு நாகராஜ் அறைக்குத் திரும்பியபோது மணி பதினொன்று ஆகியிருந்தது. ஞாயிற்றுக் கிழமையாயிருந்தும் காலை பதினொரு மணிக்கே சாப்பாடு முடிந்து விட்டதேயென்று அவனுக்கு ஆச்சரியமாகவும், சற்றே ஏமாற்றமாகவும் இருந்தது. காலையில் ஒரு மார்னிங் ஷோவுக்குப் போயிருந்தாலோ, அல்லது முடிவெட்டிக் கொள்ளப் போயிருந்தாலோ சற்றே நேரமாகியிருந்திருக்கும். சாப்பிட்டுச் சற்றே கண்ணயர்ந்து விழித்துக் கொண்டால் மாலை ஆகியிருக்கும்; காப்பி குடித்துவிட்டு உலாவப் போகும்போது இருட்டத் தொடங்கியிருக்கும்.
ஆனால் காலையில் முடிவெட்டிக் கொள்ளவும், சினிமாவுக்காகக் கிளம்பவும் சோம்பலாக இருந்தது. அதன் விளைவாகப் பதினோரு மணிக்கே சாப்பாடு முடிந்து, ஒரு முழுநாள் இப்போது பயங்கரமாக அவன் முன்னால் நீண்டு கிடந்தது. நாகராஜ் பெருமூச்சுடன் அன்றைய தினசரியைக் கையிலெடுத்துக் கொண்டு, கட்டிலில் சாய்ந்தாற்போல் உட்கார்ந்தான். சிகரெட் பாக்கெட்டைத் திறந்து ஒரு சிகரெட்டைக் கையிலெடுத்தான். பாண்ட் பாக்கெட்டில் தீப்பெட்டியைத் தேடினான். கிடைக்கவில்லை. சமையலறைக்குச் சென்றுதான் எடுத்துவர வேண்டியிருக்கும் போலிருந்தது. இதற்காகப் படுக்கையில் ஒரு முறை சாய்ந்த பிறகு மறுபடி எழுந்து செல்லவும் பிடிக்கவில்லை. வெறும் சிகரெட்டையே உதடுகளுக்கிடையில் பொருத்திக் கொண்டு, அவன் தினசரியைப் பிரித்தான் – கடைசிப் பக்கத்துக்கு முந்தைய பக்கம்; ரேஸ் செய்திகள் வெளியாகியிருந்த பக்கம்.
‘லக்கி ஸ்டார் ஜெயிக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது’ என்ற கொட்டைத் தலைப்பின் அடியில், அன்றைய ரேஸ் விவரங்கள் நாலு பத்திகளில் தரப்பட்டிருந்தன. இந்தப் பத்திகளின் மேல் அவன் விழிகள் சாவகாசமாக மேயத் தொடங்கின. இரண்டாவது பத்தியில் மேய்ந்து கொண்டிருந்தபோது, உண்ட மயக்கத்தில் அவனுடைய விழிகள் சற்றே கிறங்கின; தலை துவண்டது. வாயிலிருந்த சிகரெட் நழுவித் தினசரியின் மேல் விழுந்தது …
படபடவென்று வாசல் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. நாகராஜ் திடுக்கிட்டு விழித்துக் கொண்டான். நழுவிக் கிடந்த சிகரெட்டை ஜாக்கிரதையாக எடுத்துக் கொண்டு, கட்டிலை விட்டு இறங்கினான். கதவைத் திறந்தான். சாரங்கனும், அவனுடன் நாகராஜுக்குத் தெரியாத இன்னொரு இளைஞனும் நின்றிருந்தார்கள். “இவன் ரமணி – என் ஃபிரண்டு டில்லியிலிருந்து வந்திருக்கிறான்” என்று சாரங்கன் தன்னுடன் இருந்தவனை அறிமுகப்படுத்தினான். நாகராஜ் ரமணியின் முகத்தைக் கூடப் பார்க்காமல் ளள அவனுடன் கை குலுக்கினான். அவனுடைய கவனமெல்லாம் சாரங்கனின் கையிலிருந்து புகைந்து கொண்டிருக்கும் சிக ரெட் துணுக்கின் மேல் இருந்தது. அந்தச் சிகரெட் துணுக் கைச் சுவாதீனமாக உருவித் தன் சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டான் அவன். சமயசஞ்சீவினியாக வந்த சாரங்கன் பால் அவன் மனத்தில் நன்றியும் பரிவும் பொங்கி வழிந்தன.
மூவரும் உள்ளே வந்து உட்கார்ந்தார்கள். “இன்னிக்கு என்ன நம்பர் வருது தெரியுமா?”
“ஸெவன்” என்றான் சாரங்கன்.
“எந்த ரேஸிலே?”
“எந்த ரேஸிலே?
“ரேஸ் இல்லைடா மடையா. மட்கா”
“மட்காவா”என்றான் நாகராஜன். பிறகு “ஸெவன் புதன் கிழமை வந்தாச்சு” என்றான். மட்கா என்பது பம்பாயில் இலக்கங்களை வைத்து நடத்தப்படும் ஒரு சூதாட்டம். ‘நியூயார்க் பருத்தி’ மாதிரி தினசுரி ஒரு ஆரம்ப இலக்கம்; ஒரு இறுதி இலக்கம். குறைந்த பட்ச ‘பெட்’ நாலணா.
“இன்னிக்கும் ஸெவன்தான்” என்றான் சாரங்கன்.
“இதுவரை ஒருநாளாவது நீ சொன்ன நம்பர் வந்ததில்லை”.
“டேய்! போனமாசம் எவ்வளவு நாள் வந்தது!”
“எவ்வளவு நாளாம்?”
சாரங்கனுடைய ‘மட்கா’ ஊகங்கள் நூற்றுக்குத் தொண்ணூறு பலிப்பதில்லையென்று நாகராஜ் நிரூபிக்க முயன்றான். ஆனால் சாரங்கன் ஒப்புக் கொள்ளவில்லை. தன் தோல்விகளை அவன் எப்போதுதான் ஒப்புக் கொண்டிருக்கிறான்? சர்ச்சையை வளர்த்த விரும்பாமல் நாகராஜ் தன் வாதங்களை நிறுத்திக் கொண்டான்.
“சரி; இன்றைக்கு என்ன ப்ரோகிராம்?” என்று சாரங்கன் கேட்டான்.
“அம்பி வீட்டுக்குப் போகலாமென்றிருந்தேன்” என்றான் நாகராஜ்.
“போகாதே. அங்கே நிற்க இடமில்லை. மேலும் இரவு முழுவதும் அம்பிக்கு ஹெவி லாஸாம். நீ இப்போ போனால் கடன் கேட்பான்.”
“உன்னைக் கேட்டானா?”
“எனக்கு அவன் ஏற்கனவே பாக்கி”.
நாகராஜ் பேசாமலிருந்தான். அம்பி வீட்டில் சனிக்கிழமை சாயங்காலம் தொடங்கி திங்கட்கிழமை காலைவரை தொடர்ந்து நடக்கும் சீட்டாட்ட சபைகளை நினைத்துக் கொண்டபோது அவனுடைய உடலெல்லாம் ஒருமுறை குலுங்கியது. ஆறு மாதங்களுக்கு முன்பு வரை அவன் இந்தச் சபையில் வாரந்தவறாமல் போய்க் கலந்து கொண்டிருந்தான். அது சாரங்கனுடன் நெருங்கிப் பழகுவதற்கு முன்பு, சாரங்கனுக்குச் சீட்டாட்டத்தில் சிரத்தை இல்லை. ஒரு இடத்தில் பல மணி நேரம் உட்கார்ந்திருக்கும் பொறுமையில்லை. இதே காரணத்தால் கிரிக்கெட் மாட்சுக்குப் போய் உட்காருவதிலும் அவனுக்குச் சிரத்தை கிடையாது. இன்றுகூட ஒரு ராஞ்சி ட்ராஃபி மாட்ச் இருந்தது.
“நாங்கள் ரேஸுக்குப் போகிறோம்; நீயும் வருகிறாயா?” என்றான் சாரங்கன் சிறிது நேரங் கழித்து.
“ஒன்றரை மணிக்குத்தானே ரேஸ்? இப்போதே என்ன அவசரம்?”
“ரேஸ் போவதற்கு முன் இவனுக்கு மகாலட்சுமி கோவிலையும் காட்டி விடலாமென்று நினைத்தேன்”.
நாகராஜ் மறுபடி பேசாமலிருந்தான். பொழுதைப் போக்கு வதற்கு சாரங்கன் சொல்லும் யோசனைகளைத்தான் அவன் எப்போதும் ஏற்க வேண்டியிருக்கிறதே தவிர, அவன் சொல்லும் யோசனைகளை சாரங்கன் ஒருபோதும் ஏற்ப தில்லை. சாரங்கனுடன் போகத்தான் வேண்டுமா என்று அவன் யோசித்தான். இங்கே அறையில் மனது நிச்சலன மாகவும், அமைதியாகவும் இருக்கிறது. வெளியே போனால் எல்லாமே மாறிவிடும். தன் அறையில் அவன்தான் அரசன். ஆனால் வெளியே அவன் பல்வேறு இடங்கள், சூழ்நிலைகள், மனிதர்கள் ஆகியவற்றின் அடிமை. சாரங்கனுக்கும் அவனுக்குமிடையே இருந்த நேச உடன்பாடுகளின் அடிமை.
“என்ன யோசிக்கிறாய்?” என்றான் சாரங்கன்.
“ஒண்ணுமில்லை” என்று நாகராஜ் எழுந்தான். “கிளம்ப வேண்டியதுதானா அப்போ?”
“சீக்கிரம்”.
நாகராஜ் டிரஸ் பண்ணிக் கொள்ளத் தொடங்கினான். அவன் பாண்ட் அணிந்து முடியும்வரை காத்திருந்துவிட்டு, “குடிக்கத் தண்ணீர் கொடுக்கிறாயா?” என்றான் சாரங்கன்.
நாகராஜ் உடனே பக்கத்து அறைக்குச் சென்றான். இந்த அறைதான் சமையலறையாக உபயோகமாகிறதென்பதை அங்கிருந்த பாத்திரங்கள், ஷெல்புகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த டப்பாக்கள் முதலியவை பறைசாற்றின.
“வீட்டுக்காரன் லீவில் ஊருக்குப் போயிருக்கிறான். நான்தான் முழு வீட்டுக்கும் காவல்” என்று நாகராஜ் மூலையிலிருந்த பானையிலிருந்து ஒரு தம்ளரில் நீர் மொண்டு நீட்டினான். சாரங்கன் தம்ளரை வாங்கிக் கொண்டே,”இந்த ரூமை இப்போதுதான் முதல் தடவையாகப் பார்க்கிறேன்” என்று அறையைச் சுற்றி நோட்டம் விட்டான்.
அவனுக்குச் சமீபத்தில் கல்யாணம் நிச்சயமாகியிருந்தது. ஆகவே வீடு, சமையலறை ஆகியவற்றில் அவனுக்கு ஒரு புதிய சிரத்தையும் ஆர்வமும் ஏற்பட்டிருந்தது.
தண்ணீரைக் குடித்து முடித்த பிறகு,”ஸோ, எல்லோருமே ஊருக்குப் போய் விட்டார்களாக்கும்”என்று ‘எல்லோருமே’யில் ஒரு அழுத்தத்துடன் சாரங்கன் கூறினான்.
“அதுதான் இப்படி வருத்தமாயிருக்கிறாய்”.
நாகராஜுக்குத் தலைக்குப்புற மண்ணில் விழுந்தது போலிருந்தது. பளிச்சென்று சாரங்கன் கன்னத்தில் ஒரு அறை விடலாம் போலிருந்தது; அவன் மிக அதிகமான உரிமை எடுத்துக் கொள்வதாகத் தோன்றியது. ஆனால் நாகராஜ் ஒரு அசட்டுச் சிரிப்பு மட்டும் சிரித்துவிட்டுப் பேசாமலிருந்தான். வீட்டுக்காரனுக்கு ஒரு அழகான பெண் இருந்தாள். அவள்பால் தன் உள்ளத்தில் மலரத் தொடங்கியிருந்த உணர்வுகளைப் பற்றி ஒரு பலவீனமான தருணத்தில் அவன் சாரங்கனிடம் சொல்லியிருந்தான். பிறகு அவனிடம் சொல்லியிருக்க வேண்டாமென்று தோன்றியது. தனக்கு மிகவும் அந்தரங்கமான ஒரு விஷயத்தைச் சாரங்கன் பொறுப்பும் மரியாதையும் இன்றி எகத்தாளமாகச் சுட்டிக் காட்டுவதையோ, கேலி செய்வதையோ அவன் வெறுத்தான். அதே சமயத்தில் இந்த வெறுப்பைத் தைரியமாகச் சாரங்கனின் கவனத்துக்குக் கொண்டு வந்து அதன் மூலம் அவனுக்கம் தனக்குமிடையேயிருந்த உறவின் மெல்லிய கயிறுகள்முறுக்கேறி, நைந்து போகக் கூடிய சந்தர்ப்பத்தை உருவாக்கவும் அவன் பயந்தான். சாரங்கனுடைய தோழமையைக் காப்பாற்றிக் கொள்வதற்காகத் தன்னுடைய சுய கௌரவத்தின் எல்லைகளையும், பல அந்தரங்கமான விருப்பு வெறுப்புகளையும், தீர்மானங்களையும் அவன் அடிக்கடி தளர்த்திக் கொள்ள வேண்டியிருந்தது. எந்தப் பிரத்தியேகமான ருசி வேறுபாடுகளும், முரண்பாடுகளும் அவனை ஒரு தனி மனிதனாகப் பிரித்துக் காட்டினவோ, அவற்றையெல்லாம் தற்காலிகமாக அடகு வைக்க வேண்டியிருந்தது. தனிமையைப் போக்கிக் கொள்வதற்காகத் தன்னுடைய தனித் தன்மையையே அழித்துக் கொள்ள வேண்டியிருந்தது.
பதினொன்றரை மணிக்கு அவர்கள் வீட்டிலிருந்து கிளம்பினார்கள். மாதுங்காவிலிருந்து முதலில் ஸயானுக்குச் சென்று, அங்கேயிருந்த இன்னொரு பஸ்ஸைப் பிடித்தார்கள். ஸயான் பஸ் ஸ்டாண்டில் சாரங்கன் ‘ரேஸ் டிப்ஸ்’ புத்தகம் ஒன்று வாங்கினான். பஸ்ஸில் செல்லும் வழியெல்லாம் அன்றைய ரேஸ்களில் எந்தெந்தக் குதிரைகள் ஜெயிக்கப் போகின்றனவென்பதை அவன் தக்க காரணங்களுடன் நாகராஜுக்கு நிரூபிக்கத் தொடங்கினான்.
மகாலட்சுமி கோவில் படிக்கட்டுகளில் ஏறும்போதும், கோவில் வாசலில் செருப்பைக் கழட்டி வைக்கும் போதும் கூட அவர்கள் ரேஸைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருந் தார்கள். கோவிலுக்குள் சென்றதும் சாரங்கன் ரேஸைப் பற்றிச் சற்றே மறந்து, அந்தக் கோவிலைப் பற்றி ரமணியிடம் கூறத் தொடங்கினான்.
கோவிலுக்குப் பின்னால் பெரும் கடலலைகள் பேரிரைச்சலுடன் பாறைகள் மேல் மோதிச் சின்னஞ்சிறு நீர்த் திவலைகளாகச் சிதறிக் கொண்டிருந்தன. கடலரசி கடவுளுக்கு முன்னால் அலைத் தேங்காய்களைப் போட்டு உடைக்கிறாளோ? பாபாத்மாக்களான இநதப் பம்பாய் வாசிகளைவிட்டு என்னிடமே வந்து விடும் என்று அழைக்கிறாளோ? நாகராஜுக்கு அந்த அலைகளையே பார்த்துக் கொண்டு நிற்கலாம் போலிருந்தது.
கோவிலிலிருந்து கீழே இறங்கும் வழியிலிருந்த கரும்புச்சாறுக் கடையில் ஆளுக்கு ஒரு தம்ளர் கரும்புச்சாறு பருகிவிட்டு, அவர்கள் ரேஸ்கோர்ஸை நோக்கி நடக்கத் தொடங்கினார்கள்.
ரேஸ் கோர்ஸ் நெருங்க நெருங்க, சாலையில் கார்களின் எண்ணிக்கையும், நடைபாதையில் மக்களின் எண்ணிக்கை யும் தலை சுற்ற வைத்தது. சாலையில் இருந்ததைப்போல இரண்டு மடங்கு கார்கள் ரேஸ் கோர்ஸ் காம்பவுண்டுக்குள் நின்றன. தலைக்கு எட்டு ரூபாய் கொடுத்து நுழைவுச் சீட்டுகள் வாங்கிக் கொண்டு அவர்கள் ‘என்க்ளோஷருக்குள்’ நுழைந்தார்கள். மணி ஒன்று நாற்பது. முதல் ரேஸ் தொடங்க இருபது நிமிடம் இருந்தது.
எதிரே உயரமான போர்டு எந்தெந்தக் குதிரைக்கு எவ்வளவு டிக்கெட்டுகள் விற்பனையாகின்றன என்ற விவரத்தைப் பளிச்சென்று காட்டிக் கொண்டிருந்தது. ஆறாம் நம்பர் குதிரைக்குத்தான் அதிக டிக்கெட்டுகள் விற்பனையாகியிருந்தன. “ஆறாம் நம்பர்தான் ஃபேவரைட்” என்றான் சாரங்கன்.
“நாமும் அதற்கு ஒரு டிக்கெட் வாங்குவோமே” என்றான் ரமணி.
சாரங்கன் சிரித்தான். “எந்தக் குதிரை ஜெயிக்கும் என்று பார்த்தால் மட்டும் போதாது; எந்தக் குதிரை நிறையப் பணம் தருகின்றது என்றும் பார்கக வேண்டும். ஆறாம் நம்பர்க் குதிரைக்கு இரண்டாயிரத்துச் சொச்சம் டிக்கெட்டுகள் விற்பனையாயிருக்கின்றன. ஆகவே அது ஜெயித்தால் பரிசுத் தொகை இரண்டாயிரம் பேருக்கிடையில் அல்லவா பங்கிடப் படும்? ஐந்து ரூபாய் போட்டாயானால் ஆறு ரூபாயோ அல்லது ஏழு ரூபாயோ கிடைக்கும்.”
“மூன்றாம் நம்பர் குதிரைக்குத்தான் குறைவான டிக்கெட்டுகள் விற்றிருக்கின்றன.”
ரமணி விழித்தான். சாரங்கன் Forecast Pool என்று எழுதப்பட்டிருந்த இன்னொரு போர்டைச் சுட்டிக் காட்டினான். “முதல் குதிரையை ஊகிப்பதுடன் நில்லாமல் இரண்டாவதாக எது வரும் என்பதையும் ஊகிப்பது ஃபோர்காஸ்ட்.முதல் குதிரையை ஃப்ளூக்கில் கூட பல பேர் ஊகித்து விடலாம். ஆனால் முதலாவது, இரண்டாவது இரண்டையுமே ஒழுங்கான வரிசையில் சரியாக ஊகிப்பவர்கள் குறைவாகத் தானே இருப்பார்கள்? ஆகவே Forecast-இல் அதிகப் பணம் பண்ணும் வாய்ப்பு இருக்கிறது. வெவ்வேறு முதல் இரண்டு ஸ்தானச் சேர்க்கைகளுக்குக் கிடைக்கக் கூடிய பங்கீட்டுத் தொகையை இந்தப் போர்டு காட்டுகிறது. இந்த ரேஸில் ஆறு, நாலு, ஒன்று இந்த மூன்றும் தான் முக்கியமான குதிரைகள். இவற்றுள் ஏதாவது ஒன்றை முதலாவதாகவும், இன்னொன்றை இரண்டாவதாகவும் வைத்துப் பெட் கட்டலாம். ஆறு நாலுக்குக் கிடைக்கும் தொகையை விட ஆறு-ஒன்றுக்குக் கிடைக்கும் தொகை அதிகமாக இருப்பதால், அதற்கு ஒரு டிக்கெட் வாங்கலாம்.”
சாரங்கன் ஆறு-ஒன்று, ஒன்று-ஆறு என்று இரண்டு விதமாகவும் டிக்கெட் வாங்கிக் கொண்டான்.
“நாலுதான் இரண்டாவதாக வருமென்று நிச்சயமாகத் தெரிந்தால் ஆறு-நாலு என்றே வாங்கியிருக்கலாம்!” என்றான் ரமணி.
“இது சூதாட்டம். சரியான விடையைக் கண்டு பிடிப்பதைவிட லாபகரமான விடையைக் கண்டு பிடிப்பதில்தான் இருக்கிறது சாமர்த்தியம்” என்றான் சாரங்கன்.
மூவரும் காலரியில் போய் உட்கார்ந்தார்கள். ரேஸ் தொடங்குவதற்கு முன்பாகக் குதிரைகள் காலரிகளுக்கு எதிர்த்தாற்போல் மெல்ல ஓட்டிச் செல்லப்பட்டன. நாகராஜ் அருகிலிருந்த ஒருவரிடம் பைனாகுலரைக் கடன் வாங்கிக் கொண்டு, குதிரைகளைப் பார்க்காமல் புடவைகளைப் பார்க்கத் தொடங்கினான். ரேஸ்கோர்ஸுக்கு வரும் அழகிகளைப் பார்ப்பதற்கே எட்டு ரூபாய் கொடுக்கலாமென்பது அவன் அபிப்பிராயம்.
“எது நல்ல குதிரை என்று எப்படிக் கண்டுபிடிப்பது?” என்றான் ரமணி.
“எவ்வளவோ இருக்கிறது. குதிரையின் பரம்பரை என்ன. சொந்தக்காரர் யார். ட்ரெயினர் யார், ஜாக்கி யார், சமீப ரேஸ்களில் இந்தக் குதிரை எப்படி ஓடியிருக்கிறது. என்றெல்லாம் பார்க்க வேண்டும்” என்றான் சாரங்கன். “இந்த நம்பரில் ஆறாம் நம்பராக ஓடும் குதிரை லக்கி ஸ்டார் ஜிப்ரால்டர் எனும் குதிரையின் குட்டி. ஜிப்ரால்டரின் குட்டி எதுவுமே இதுவரை சோடை போனதில்லை. இந்த சீஸனில் கல்கத்தா, சென்னை, பெங்களூர், பூனா எல்லா இடங்களிலும் லக்கி ஸ்டார் பிரமாதமாக ஓடியிருக்கிறது. லக்கிஸ்டாரை சந்துலால் டிரெயின் பண்ணியிருக்கிறான். ஜான்ஸன் ஓட்டப்போகிறான். இரண்டு பேருமே திறமைசாலிகள். லக்கிஸ்டாரின் சொந்தக்காரர் எஸ்.கே. மெஹ்தா. ஆகவே எஸ்.கே. மெஹ்தாவுடன் போட்டியிடக் கூடிய குதிரைச் சொந்தக்காரர்கள் யார் யாரென்று நாம் பார்க்க வேண்டும். இரண்டு மூன்று ஐந்து ஆகிய குதிரைகளின் சொந்தக்காரர்களெல்லாம் எஸ்.கே. மெஹ்தாவின் கட்சி. இவர்களுக்குள் யாராவது ஒர்வருடைய குதிரை முதலில் வருகிறதென்றால் மற்றவர் அதைத் தோற்கடிக்க முயலமாட்டார். ஆகவே ஒன்றும் நாலும் தான் ஆறுடன் போட்டியிடப் போகின்றன.
ஆரம்பக் கோட்டின் மேல் கிளம்பத் தயாராக நின்ற குதிரைகள் ஸிக்னல் கிடைத்ததும் குபுக்கென்று ஓடத் தொடங்கின. “தே ஆர் ஆஃப்” என்று ஒலிபெருக்கியில் காமெண்ட்ரி தொடங்கியது. “நம்பர் ஸிக்ஸ் லீடிங்!” என்றது ஒலிபெருக்கி. சிறிது நேரங்கழித்து சாரங்கன், பெருமையுடன் ரமணியைப் பார்த்தான்.
முக்கால்வாசி தூரம் வரையில் நம்பர் ஸிக்ஸ்தான் முன்னால் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் ஃபினிஷுக்கு இருநூறு கஜதூரம் இருக்கும்போது ஒன்றாம் நம்பர் திடீரென்று எமவேகத்தில் ஒரு பாய்ச்சல் பாய்ந்து நம்பர் ஸிக்ஸை முந்திக் கொண்டது. கடைசி வரையில் அந்த வேகத்தையும் பாய்ச்சலையும் சிறிதும் தளர்த்தாமல் ரேஸையும் ஜெயித்துவிட்டது. “நம்பர் ஒன், நம்பர் ஒன்” என்று கரகோஷம் எழுந்தது. ஒரு வினாடி கழித்து நம்பர் நாலும் நம்பர் ஆறும் போட்டி போட்டுக்கொண்டு ஃபினிஷிங்கு லைனைக் கடந்தன. மற்றக் குதிரைகளும் பின் தொடர்ந்தன. “நம்பர் ஒன்றுதான் முதலாவது ஸ்தானம் பெற்றிருக்கிறது” என்று ஒலிபெருக்கி அறிவித்தது.
“இரண்டாவது ஸ்தானம் பற்றிய விவரம் போட்டோ ஃபினிஷில் பார்த்து விரைவில் தெரிவிக்கப்படும். போட்டோ ஃபினிஷில் உள்ள குதிரைகள் நம்பர் நாலும், நம்பர் ஆறும்”.
“ஆறு இரண்டாவதாக வந்தால் நல்லது. ஒன்று ஆறுக்கும் நான் டிக்கெட் வாங்கியிருக்கிறேனல்லவா?” என்றான் சாரங்கன்.
ஒரு நிமிடத்தில் முடிவு அறிவிக்கப்பட்டது. “போட்டோ ஃபினிஷின் முடிவு வருமாறு. நம்பர் நாலு இரண்டாவது ஸ்தானம், நம்பர் ஆறு மூன்றாவது ஸ்தானம்”.
சாரங்கன் தன் கையிலிருந்த டிக்கெட்டுகளைக் கிழித்தெறிந்தான். ஐந்தும் ஐந்தும் பத்து ரூபாய் தண்டம்.
அவர்கள் காலரியிலிருந்து கீழேயிறங்கிக் காப்பி குடிக்கச் சென்றார்கள். அங்கே சாரங்கன் தனக்குத் தெரிந்த நண்பனொருவனைப் பார்த்து “ஹலோ!” என்று அவனுடன் கை குலுக்கினான். “லக்கிஸ்டார் இப்படிப் பண்ணிவிட்டதேடா!” என்றான்.
“ஜான்ஸன் இப்படிப் பண்ணிவிட்டானே என்று சொல்லு” என்றான் நண்பன். “ஆறாம் நம்பர் மேல் எக்கச்சக்கமான பெட்டிங் இருந்ததால், குதிரையை முதலில் கொண்டு வராமலிருப்பதற்காக புக்கிகள் ஜான்ஸனுக்குப் பணம் ஞாயிற்றுக் கிழமைகளும்…
கொடுத்திருக்கிறார்களாம்”.
“சே, சே, ஜான்ஸன் இப்படியெல்லாம் செய்யமாட்டான்”. “இப்போது செய்திருக்கிறானே, இதற்கு என்ன சொல்லுகிறாய்?”
சாரங்கன் மெளனமாக இருந்தான். பிறகு “உனக்கும் போச்சா?” என்றான்.
“நான் ஒன்றாம் நம்பர்மேல் கட்டியிருந்தேன்”.
“ரியலி? கங்க்ராஜூலேஷன்ஸ்!”.
“அவசரப்படாதே, என்னுடையது ஜாக்பாட் டிக்கெட் ஒன்றாவது ரேஸும் இரண்டாவதும் சரியாக வந்திருக்கின்றன. மீதி ரேஸ்கள் எப்படியோ பார்க்கலாம்”.
மூன்றாவது ரேஸ்க்கு டிக்கெட் எதுவும் வாங்காமல் வெறுமனே பார்க்க நிச்சயித்தவர்களாக அவர்கள் காலரியில் போய் அமர்ந்தார்கள். பின்வரிசையில் அமர்ந்திருந்த கறுப்புக் கண்ணாடி யுவதி ஒருத்தி கைவளையல்கள் சப்திக்க, சேலைத் தலைப்பையும் தலைமயிரையும் அனாவசியமாகச் சரி செய்து கொண்டாள். நாகராஜ் திரும்பி அவளை ஒருமுறை பார்த்தான்.
ரேஸ் தொடங்கி விட்டது. அதே நம்பர்கள். ஆனால் வேறு குதிரைகள், வேறு ஜாக்கிகள். “மூன்றாம் நம்பர் தான் ஜெயிக்கப் போகிறது!” என்றான் சாரங்கன். ‘அது ஜெயிக்காமல் இருக்கக் கடவதாக!’ என்று நாகராஜ் நினைத்துக் கொண்டான். சாரங்கன் ரேஸ்களையும் குதிரைகளையும் பற்றித் தனக்கு மட்டுமே எல்லாம் தெரிந்தது போலக் காட்டிக் கொண்டது அவனுக்கு தெரியும்; என்னைக் கேட்டு விளையாடியிருந்தால் இதற்குள் ஒரு ரேஸிலாவது பணம் பண்ணியிருக்கலாம் என்று அவன் நினைத்தான். சாரங்கன் யோசனை கேட்குமளவிற்குத் தன்னைப் பெரியவனாக அங்கிகரிக்காதது அவனுக்கு மனத்தாங்கலாக இருந்தது. அதே சமயத்தில் தானாக வலிய மாறுபட்ட கருத்துக்களைக் கூறிச் சர்ச்சையைக் கிளப்பவும் தயக்கமாக இருந்தது.
ரேஸ் சூடு பிடிக்கத் தொடங்கியவுடன் உட்கார்ந்திருந்த வர்கள் எல்லாரும் பரபரப்புடன் எழுந்து நின்றார்கள். “கம் ஆன், கம் ஆன்!” என்ற கூச்சல்கள் எழுந்தன. “கம் ஆன் மும்தாஜ்!” என்ற கூச்சலுடன் நாகராஜின் தோளின் மேல் ஒரு கை விழுந்தது. திடுக்கிட்டு அவன் திரும்பிப் பார்த்தான். “ஓ ஐஆம் ஸாரி” என்று கறுப்புக் கண்ணாடிக்காரி சடக்கென்று தன கையை இழுத்துக் கொண்டாள். பரபரப்பில் தன்னையறியாமல் அவன் மேல் கை போட்டிருப்பாள்; அல்லது வேண்டுமென்றேயா? அதன் பிறகு நாகராஜின் மனம் ரேஸில் செல்லவில்லை. ‘ஒருவேளை கிராண்ட் ரோடுவாசியாக இருப்பாளோ?’ என்று அவனுக்குச் சந்தேகமாக இருந்தது.
மூன்றாம் நம்பர்தான் ஜெயித்தது. “த்சு, த்சு, கட்டியிருக்கலாம்” என்று சாரங்கன் கையை உதறிக் கொண்டான். நாகராஜ் கறுப்புக் கண்ணாடியின் ரியாக்க்ஷனைப் பார்ப்பதற்காகப் பின்புறம் பார்த்தான். இதற்கென்றே காத்திருந்தவள் போல அவள் அவனைப் பார்த்துப் புன்னகை செய்தாள். “எக்ஸ்க்யூஸ் மீ!” என்று பேசத் தொடங்கினான். நாகராஜுக்கு மூர்ச்சை போட்டுவிடும் போலிருந்தது.
“எக்ஸ்க்யூஸ் மீ! அடுத்த ரேஸுக்கு ஏதாவது டிப் தர முடியுமா?”
நாகராஜ் பேச வாய் திறக்கும் முன்பே, “நம்பர் டூ அல்லது நம்பர் ஃ பைவ்!” என்றான் சாரங்கன், அவனைப் பார்த்து. “தாங்க்யூ!” என்று அவள் புன்னகை செய்தாள். நாகராஜுக்கு எரிச்சலாக இருந்தது. என்னிடம் தான் கேள்வி கேட்டாள்? இவனை யார் பதில் சொல்லச் சொன்னது?
“டிக்கெட் வாங்கிக் கொண்டு வரலாம்டா” என்று சாரங்கன் கிளம்பினான். “இரு, இரு” என்று நாகராஜ் கறுப்புக் கண்ணாடியைப் பார்த்து “உங்களுக்கு ஏதாவது டிக்கெட் வாங்க வேண்டுமா?” என்று கேட்டான். “யெஸ் வெரி கைன்ட் ஆஃப் யூ” என்று தன கைப் பையைத் திறந்து ஒரு ஐந்து ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுத்தாள். “டூ-ஃபைவுக்கு ஒரு டிக்கெட்”.
டிக்கெட் கௌண்டரில் கறுப்புக் கண்ணாடிக்கு “டூ-ஃபைவுக்கு ஒரு டிக்கெட்டும், தங்களுக்கு ஃபை – டூவுக்கு இரண்டு டிக்கெட்டுகளும் வாங்கிக் கொண்டான் சாரங்கன். காலரிக்குச் சென்றதும் நாகராஜ் கறுப்புக் கண்ணாடியிடம் டூ-ஃபைவ் டிக்கெட்டைக் கொடுத்து அவளிடமிருந்து ஒரு போனஸ் புன்னகையைப் பெற்றுக் கொண்டான். அந்தப் புன்னகையின் மீது எவ்வளவு வேண்டுமானாலும் பெட் கட்ட அவன் தயாராக இருந்தான்.
ரேஸ் தொடங்கியது. ஐந்தாம் நம்பரும் இரண்டாம் நம்பரும் ஆரம்பத்திலிருந்தே மற்றக் குதிரைகளைப் பின் தங்க வைத்து விட்டு முன்னால் தாவின. கிட்டத்தட்ட சமவேகத்துடன் ஓடிக் கொண்டிருந்த அந்தக் குதிரைகளில் எது முதலில் வருமென்றே சொல்ல முடியவில்லை. ஆனால், ஃபினிஷை நெருங்கும்போது திடீரென்று இரண்டாம் நம்பரின் வேகம் அதிகரித்தது; தரையில் கால் பாவாமல் அது காற்றில் நீந்திச் செல்வது போலத தோன்றியது. கறுப்புக் கண்ணாடி யுவதி உற்சாகத்துடன் கைக்குட்டையை ஆட்டியவாறே குதிகுதியென்று குதித்தாள்; கூச்சலிட்டாள். அதோ இரண்டாம் நம்பர் ஃபினிஷிங்க் லைனைக் கடந்தே விட்டது கறுப்புக் கண்ணாடி யுவதியைக் கட்டிப் பிடிக்க முடியாது போலிருந்தது. “தாங்க் யூ!” என்று அவள் எதிர்பாராதவிதமாக நாகராஜனின் கையைப் பிடித்துக் குலுக்கினாள். எலெக்ட்ரிக் ஷாக் அடிப்பது போலிருந்தது அவனுக்கு. இவள் கிராண்ட் ரோடுதான், சந்தேகமேயில்லை. “பணம் கலெக்ட் பண்ணிக் கொண்டு வருகிறேன்” என்று சொல்லிக் கொள்ளக் கடமைப் பட்டவள் போல அவள் நாகராஜனிடம் கூறிவிட்டுச் சென்றாள். சாரங்கன் இதைக் கவனிக்காமல், “இன்றைக்கு இவ்வளவுதான்; இனிமேல் விளையாடப் போவதில்லை” என்று முணுமுணுத்தவாறு டிக்கெட்டுகளைக் கிழித்தெறிந்தான்.
அடுத்த ரேஸ்களில் பணம் எதுவும் கட்டாமல் அவர்கள் வெறுமனே வேடிக்கை பார்த்தார்கள்-சாரங்கனும் ரமணியும் குதிரைகளை; நாகராஜ் கறுப்புக் கண்ணாடி யுவதியை. நாலு மணி ரேஸ் முடிந்ததும், “போகலாம்டா. இவன் வேறே இடமெல்லாம் பார்க்கணுமென்கிறான்” என்று சாரங்கன் கிளம்பினான். நாகராஜுக்கு ஏமாற்றமாக இருந்தது. கறுப்புக் கண்ணாடியை விட்டுவிட்டுப் போக அவனுக்கு மனமில்லை. அதே சமயத்தில் நான் வரவில்லை என்று சாரங்கனிடம் சொல்லவும் தைரியமில்லை. கறுப்புக் கண்ணாடியைப் பார்த்து மதிப்பாகத் தலையை ஆட்டி ஒரு புன்னகை செய்துவிட்டு, அவன் சாரங்கனையும், ரமணியையும் பின் தொடர்ந்தான். சரியான கோழை என்று அவள் நினைத்திருப்பாள்.
மூவரும் ரேஸ்கோர்ஸுக்கு வெளியே வந்தார்கள். சினிமா பார்ப்பதற்கு முடிவு செய்து, வித்யா விஹார் ஸ்டேஷன் வரை நடந்து அங்கிருந்து வி.டி.க்கு மின்சார ரயில் பிடித்தார்கள். வி.டி.-யில் ஒவ்வொரு சினிமாத் தியேட்டராக நுழைந்து பார்த்தார்கள். ஆனால், எங்கும் டிக்கெட் கிடைக்கவில்லை.
“நான் ஒன்று சொல்லட்டுமா?” என்றான் சாரங்கன். பேசாமல் எங்கேயாவது போய் பீர் குடிக்கலாம்”
“எங்கே?”
“எனக்கு ஒரு இடம் தெரியும்”.
“நான் ரெடி” என்றான் ரமணி. சாரங்கன் நாகராஜைப் பார்த்தான். “ஓகே” என்றான் நாகராஜ்.
கொலாபா வரையில் நடந்து, அங்கிருந்த ஒரு சந்துக்குள் அவர்களை அழைத்துச் சென்றான் சாரங்கன். கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருந்த அடுக்கு மாடிக் கட்டிடங்களிடையே, குறிப்பிட்டட ஒரு கட்டிடத்ததை எப்படியோ அடையாளம் கண்டு கொண்டு உள்ளே நுழைந்தான். எதிரேயிருந்த ஒரு கதவைத் தட்டினான். சிறிது நேரம் தட்டிய பிறகு. குள்ளமான ஒரு இளைஞன் கதவை ஒருக்களித்தாற்போலத் திறந்து தலையை மட்டும் வெளியே நீட்டினான்.
“திறந்திருக்கிறதா?” என்று சாரங்கன் கேட்டான்.
“உம்” என்று அவன் கதவை நன்றாகத் திறந்தான். அவர்கள் உள்ளே வந்ததும், மறுபடி கதவை முடித் தாழிட்டான். சுவரில் சாய்த்தப்பட்டிருந்து மூன்று ஸ்டீல் நாற்காலிகளை அவர்கள் உட்காருவதற்காக அங்கிருந்த மேஜையொன்றை ஒட்டினாற்போல எடுத்துப் போட்டான்..
“மூன்று பாட்டில் பீர்”
“பீர் பாட்டில்களையும் ஊற்றிக் குடிக்கக் கண்ணாடித் தம்ளர்களையும் பையன் மேஜை மேல் கொண்டு வந்து வைத்தான். அவனே பாட்டில்களைத் திறந்தும் கொடுத்தான்.
“வெறும் பீர் குடித்துப் பிரயோசமில்லையடா” என்றான் ரமணி.
“வேறென்ன வேண்டும்?”
“விஸ்கி ஆர் ஸம்திங்”. சாரங்கன் பையனைக் கூப்பிட்டு விஸ்கி விலையை விசாரித்தான். பிறகு ரம் விலையை விசாரித்தான். ரம்தான் மலிவாக இருந்ததால் அதையே குடிப்பதென்று முடிவு செய்தார்கள்.
மூன்று பைன்ட் ரம் வாங்கிக் கொண்டு, பீரும் ரம்முமாகக் கலந்து காக்டெயில் அருந்தத் தொடங்கினார்கள். காக்டெயிலின் செந்நிறத்தில் ஒரு கவர்ச்சி: அதன் நெடியில் ஒரு மயக்கும் குளுமம் அதன் ருசியில் புரிந்து கொள்ள முடியாத – ஆனால் புரிந்து கொள்ளத் தூண்டும் ஒரு கசப்பு. அதிகம் பழக்கமில்லாததால் மளக் மளக்கென்று அவசரமாக அவர்களால் குடிக்க முடியவில்லை. ஏதேதோ பேசிக் கொண்டு மெதுவாகக் குடித்தார்கள். ஆரம்பத்தில் அச்சிடத் தகுந்ததாக இருந்த அவர்கள் பேச்சு மெல்ல மெல்ல அச்சிடத் தகாததாக மாறிக் கொண்டு போயிற்று. நாகராஜ் கறுப்புக் கண்ணாடி மங்கையை நினைத்துக் கொண்டான். அவனுடைய கண்கள் கிறங்கின. இரு கன்னங்களிலும் யாரோ சரக் சரக்கென்று தேய்ப்பது போலவும், விலுக் விலுக்கென்று சதையைப் பிடித்து இழுப்பது போலவும் இருந்தது. குடித்தது போதுமென்று தோன்றியது. ஆனால் பாதியில் நிறுத்த வெட்கப்பட்டுக் கொண்டு, கௌரவத்துக்காகவும், வீறாப்புக்காகவும் அவன் குடித்துக் கொண்டேயிருந்தான். பையனிடம் எட்டணாவுக்கு கார பிஸ்கட் வாங்கி வரச் சொல்லி ஆளுக்கு இன்னும் சிறிது ரம் ஊற்றச் சொன்னார்கள். பிஸ்கெட் தின்று கொண்டே குடித்தார்கள். பிறகு, சிகரெட் புகைத்துக் கொண்டே குடித்தார்கள்.
அரைமைணி நேரம் கழித்து வெளியே வந்தபோது மூவரின் மனதிலும் உற்சாகம் நிரம்பியிருந்தது. ஒரு குருட்டுத்தனமான, அசட்டுத் துணிச்சல் கலந்த உற்சாகம். கொலாபாவில் நடந்து கொண்டிருந்த விடுமுறைக் கூட்டத்தை, நடைபாதைக் கடைகளை – வேடிக்கை பார்த்துக் கொண்டே அவர்கள் நடந்தார்கள். சாலையில் எதிரே வந்த பெண்கள் மேலெல்லாம் நாகராஜ் வேண்டுமென்றே இடித்துக் கொண்டு நடந்தான். “டேய், டேய்!” என்று சாரங்கன் அவனைத் தடுத்தான். நாகராஜன் உடனே சாரங்கனை இறுக்கக் கட்டிக் கொண்டான். “கோச்சுக்காதேடா!” என்றான்.
கொலாபாவில் மேலும் கீழுமாகச் சிறிது நேரம் உலாவிய பிறகு, கேட் வே ஆஃப் இந்தியா வரை அவர்கள் நடந்து சென்றார்கள். அங்கே ஒரு பெஞ்சில் போய் உட்கார்ந்தார்கள். எலிஃபென்டாவிலிருந்து ஒரு டூரிஸ்டு படகு அப்போதுதான் திரும்பி வந்து படித்துறையருகில் நின்றிருந்தது. பிரயாணிகள் படகிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்தார்கள் “பத்து பைசாவில் கப்பல் பாருங்கள் ஸாப்!” என்று கழுத்திலும் தோளிலும் நிறையப் பைனாகுலர்களை மாட்டிக் கொண்டிருந்த ஒருவன் அவர்களருகே வந்து நின்றான். “பைனாகுலர் இல்லாமலே கப்பல்தான் தெரிகிறதே!” என்றான் சாரங்கள்.
“கப்பலின் மேலுள்ள எழுத்துக்களைப் பார்க்கலாம் ஸாப்!”
“அதைப் பார்ப்பதால்தான் என்ன உபயோகம்!”
திடீரென்று நாகராஜுக்கு குமட்டிக் கொண்டு வந்தது; கட்டுப்படுத்திக் கொள்ள முயன்றான்; முடியவில்லை. ‘களக்’ என்று வாந்தி எடுத்தான். “களக், களக்’ என்று தொடர்ந்து வாந்தியெடுத்துக் கொண்டிருந்தான். சாராய நெடி குப்பென்று வீசியது. தலைக்கு மேல் வட்டமிட்டுக் கொண்டிருந்த கடற்பறவையொன்று இந்தக் காட்சியைக் காணச் சகியாதது போலக் கடலை நோக்கிப் பறந்து சென்றது.
“இவன் இப்படித்தான், அளவு தெரியாமல் குடிப்பான்” என்றான் சாரங்கன், ரமணியிடம். தலையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்த நாகராஜை அங்கேயே விட்டு விட்டு அவர்கள் படிகளில் இறங்கி நீரருகில் சென்றார்கள். அரேபியக் கடல் முழுச் சூரியனை அனாயசமாக விழுங்குவதைப் பார்த்தார்கள்.
அவர்கள் திரும்பி வந்தபோது நாகராஜ் பெஞ்சில் படுத்துக் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தான். “டேய், எழுந்திருடா, எழுந்திருடா!” என்று சாரங்கன் அவனை எழுப்பினான். அங்கிருந்து ஒரு டாக்ஸி வைத்துக் கொண்டு அவர்கள் சௌபாத்திக்குச் சென்றார்கள். டாக்ஸியில் செல்லும் வழியெல்லாம் நாகராஜ் தூங்கிக் கொண்டே
இருந்தான்.
செளபாத்தி கடற்கரையில் பேல்பூரி, பானிபூரி, ஆலுபூரி வகையறாக்களை சாரங்கனும், ரமணியும் ஒரு கை பார்த்தார்கள். நாகராஜுக்கு எதுவும் வேண்டியிருக்கவில்லை. சாப்பிட்டால் மறுபடி வாந்தியெடுக்குமோ என்று பயமாக இருந்தது. மூவரும் மணலில் உட்கார்ந்து கடற்கரைக் கூட்டத்தையும், கோவேறு கழுதைகள், ஒட்டகங்கள் மேல் சிறியவர்களும், பெரியவர்களும் சவாரி செய்வதையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இருட்டிய பிறகு, மலபார் ஹில்ஸ் ஏறி, அங்கிருந்த ஒரு ரெஸ்டாரன்டுக்குச் சென்றார்கள்.
ரெஸ்டாரன்டின் கூரையில் நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. அங்கிருந்து பார்த்தால் பம்பாய் நகரம் ஜகஜ்ஜோதியாகத் தெரிந்தது. பேல்பூரி ஸ்டால்களின் காஸ்லைட்டுகள் முதல் மாரீன் டிரைவின் பிரகாசமான மெர்க்குரி வரிசை வரையில் எல்லாமே தெரிந்தது. ஆனால், நாகராஜுக்கு இவை ஒன்றுமே தெரியவில்லை. அருகேயிருந்த ஒரு மேஜையில் உலகததையே மறந்தவர்களாக ஒருவரில் ஒருவர் ஆழ்ந்து அமர்ந்திருந்த இளம் காதலர்கள் இருவர்கள்தான் அவன் கண்களுக்குப் பூதாகாரமாகத் தெரிந்தார்கள். இன்னும் சில நாட்களில் சாரங்கன் தன் மனைவியுடன் இந்த ரெஸ்டாரன்டில் வந்து உட்காரக் கூடும். நாகராஜ் கறுப்புக் கண்ணாடி யுவதியை நினைத்துக் கொண்டான். எளிதில் பெற்றிருக்கக் கூடிய ஏதோ ஒன்றை இழந்து விட்ட ஏக்கமும் தவிப்பும் அவன் உள்ளத்தில் நிரம்பியிருந்தன.
ரெஸ்டாரன்டிலிருந்து அவர்கள் வெளியே வந்தபோது மலபார் ஹில்ஸ் பஸ் ஸ்டாண்டுகளில் விடுமுறைக் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. வேறு வழியின்றி, மின்சார ரயில் பிடிப்பதற்காக கிராண்ட் ரோடு ஸ்டே ஷனை நோக்கி அவர்கள் நடந்தார்கள். நாகராஜை இப்போதுதான் போதை முழு வேகத்துடன் தாக்கத் தொடங்கியிருந்தது. ஏதேதோ சம்பந்தமில்லாமல் பிதற்றியவாறு அவன் நடந்தான். நோவல்டி தியேட்டரருகே செல்லும்போது சட்டென்று அவன் நின்றான். என்ன ஆச்சரியம்! தியேட்டர் வாசலில் எங்கோ பார்த்தவாறு கறுப்புக் கண்ணாடி யுவதி நின்றிருந்தாள். “மிஸ்!”, என்று நாகராஜ் அவளை நோக்கிப் பாய்ந்தான். ரமணியும் சாரங்கனுமாக மிகவும் பாடுபட்டு அவனை ஸ்டே ஷன்வரை இழுத்துக் கொண்டு போனார்கள்; ரயிலில் உட்கார்த்தினார்கள். ரயிலில் செல்லும் வழியெல்லாம் நாகராஜ் தன்மீது பிரயோகிக்கப்பட்ட பலாத்காரத்தை எதிர்த்து, மனத்தாங்கலுடன் ஒரு பலகீனமான எரிச்சலுடனும் சாரங்கன் மீது முறைப்பான பார்வையை வீசியவாறு, அவனுக்கு ஒரு பரிகாசப் பொருளாகவும் பெட்டியில் இருந்த மற்றவர்களுக்கு ஒரு சுவையான காட்சிப் பொருளாகவும் இருந்தான்.
பத்தரை மணிக்கு அவர்கள் மாதுங்காவை அடைந்தார்கள். சாரங்கனும் ரமணியும் நாகராஜை அவனுடைய பில்டிங் வாசல் வரையில் கொண்டு சேர்த்தார்கள். “அறைவரையில் வரட்டுமா, அல்லது நீ போய்க் கொள்கிறாய?” என்றான் சாரங்கன். அவனுடைய குரலில் ஒரு ஏளனமும் அலட்சியமும் இருந்ததாக நாகராஜுக்குத் தோன்றியது. தோழமைக்கும் பொழுதை ஓட்டுவதற்கும் நாகராஜ் பெருமளவுக்குத் தன்னையே நம்பியிருந்தானென்ற உணர்வால் ஏற்பட்ட அலட்சியம். சுயமாகத் தன் தனிமைப் பிரச்னைக்குத் தீர்வு காணும் சக்தியும் திறமையும் இல்லாதவன் அவனென்ற நினைப்பில் விளைந்த ஏளனம். “நீங்கள் போய்க் கொள்ளுங்கள்; ஐவில் மானேஜ்” என்றான் நாகராஜ். அவர்கள் சென்று விட்டார்கள்.
நாகராஜ் மாடிப்படிகளில் ஏறித் தன் அறையை அடைந்தான். ஆயாசத்துடன் கட்டிலில் சாய்ந்தான். சாரங்கன் உதவியால் ஒரு ஞாயிற்றுக் கிழமையை எப்படியோ கழித்து விட்டோமென்று அவனுக்குத் திருப்தியாக இருந்தது. அதே சமயத்தில் சாரங்கன் உதவியில்லாமல் அது கழிந்திருக்க முடியாதா என்ன என்றும் தோன்றியது. சாரங்கனும் அவனும் ஒரு பரஸ்பரத் தேவையைப் பூர்த்தி செய்தார்கள். நாகராஜுக்குத் தேவையாக இருந்தது பின்னப்படாமல் தன்னை முழுமையாக ஆட்கொண்டு தன் தனிமையை நீக்கக் கூடிய ஒரு பெருஞ்சக்தி. சாரங்கனுக்குத் தேவையாயிருந்தது தன் சாகஸங்களையும் திறமைகளையும் அங்கீகரித்து ஏற்றுக் கொள்ளும் ஒரு பரம பக்தன். அவர்கள் இருவரும் இந்தத் தேவைகளை ஒருவருக்கொருவர் எப்போதுமே இல்லாவிட்டா லும், சில சமயங்களில், முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்குப் பூர்த்தி செய்து கொள்ள முடிந்தது.
ஆனால் கல்யாணமான பிறகு சாரங்கனுடைய தேவை தன் மனைவியிடம் பூர்த்தி யடைந்துவிடக்கூடும். இனி சாரங்க னின் தயவில்லாமல் விடுமுறை நாட்களைக் கழிக்க அவன் பழகிக்கொள்ள வேண்டும். ‘அடுத்த ஞாயிற்றுக் கிழமை காலையில் முடி வெட்டிக் கொள்ள வேண்டும்’ என அவன் நினைத்தான். ‘சாப்பிட்டுவிட்டு ஒரு மாட்டினி ஷோ பார்த்து விட்டு வந்தால் ஒரு நாள் தீர்ந்து போகும். அல்லது பேசாமல் அம்பி வீட்டுக்குப் போகலாம். அல்லது ரேஸுக்குப் போய் ஒரு ஜாக்பாட் டிக்கட் வாங்கிக் கொண்டு அங்கேயே உட்கார்ந்து விடலாம். அந்தக் கறுப்புக் கண்ணாடி மங்கையை ஒரு வேளை அவன் மீண்டும் அங்கேயே சந்திக்கக்கூடும். அல்லது அவளைப் போல வேறு யாராவது, யாரென்பது முக்கியமில்லை. எங்கே யென்பது முக்கியமில்லை. தனித் தன்மையை இழந்துதான் தனிமையைப் போக்கிக் கொள்ள வேண்டுமென்றால் அதற்கு நிரந்தரமான ஏற்பாடுகள் எதற்காக? சிநேக உடன்பாடுகள் தான் எதற்காக? அவ்வப்போது உருவாகும் சந்தர்ப்பங்கள், தற்காலிகமான ஷரத்துகளற்ற உறவுகள் இவையே போதுமானவை. இவையே சிறந்தவை.
சீட்டாட்டத்தின் ஜன்னி, ரேஸ்கோர்ஸ் அல்லது விளையாட்டு மைதானத்தில் குழுமியுள்ள ஜனத்திரளின் இரைச்சல், சினிமாத் தியேட்டரின் இருள், ஒரு அழகிய பெண்ணின் கணநேரப் புன்னகை, இவை நிரந்தர மான உருவமும் இயக்கமும் இல்லாதவை. இவற்றிலெல்லாம் அவன் தன் தனித் தன்மையை அடகு வைத்தால் உடனுக்குடன் மீட்டுக் கொள்ளலாம். வீடு வரை கூடவே வந்து, “அறை வரையில் வரட்டுமா?” என்று அவை கேட்காது. திங்கட்கிழமை காலையில் ஆபிஸுக்குப் போன் பண்ணி “ராத்திரி தூங்கினாயா?” என்று விசாரித்து அவனுடைய தனித் தன்மையின் இழப்பை மீண்டும் மீண்டும் நினைவூட்டி, அதை ஒரு நிரந்தரமான இழப்பாகச் செய்யாது.

         சாப்பிட்டு விட்டு நாகராஜ் அறைக்குத் திரும்பியபோது மணி பதினொன்று ஆகியிருந்தது. ஞாயிற்றுக் கிழமையாயிருந்தும் காலை பதினொரு மணிக்கே சாப்பாடு முடிந்து விட்டதேயென்று அவனுக்கு ஆச்சரியமாகவும், சற்றே ஏமாற்றமாகவும் இருந்தது. காலையில் ஒரு மார்னிங் ஷோவுக்குப் போயிருந்தாலோ, அல்லது முடிவெட்டிக் கொள்ளப் போயிருந்தாலோ சற்றே நேரமாகியிருந்திருக்கும். சாப்பிட்டுச் சற்றே கண்ணயர்ந்து விழித்துக் கொண்டால் மாலை ஆகியிருக்கும்; காப்பி குடித்துவிட்டு உலாவப் போகும்போது இருட்டத் தொடங்கியிருக்கும்.ஆனால் காலையில் முடிவெட்டிக் கொள்ளவும், சினிமாவுக்காகக் கிளம்பவும் சோம்பலாக இருந்தது. அதன் விளைவாகப் பதினோரு மணிக்கே சாப்பாடு முடிந்து, ஒரு முழுநாள் இப்போது பயங்கரமாக அவன் முன்னால் நீண்டு கிடந்தது. நாகராஜ் பெருமூச்சுடன் அன்றைய தினசரியைக் கையிலெடுத்துக் கொண்டு, கட்டிலில் சாய்ந்தாற்போல் உட்கார்ந்தான். சிகரெட் பாக்கெட்டைத் திறந்து ஒரு சிகரெட்டைக் கையிலெடுத்தான்.

 

         பாண்ட் பாக்கெட்டில் தீப்பெட்டியைத் தேடினான். கிடைக்கவில்லை. சமையலறைக்குச் சென்றுதான் எடுத்துவர வேண்டியிருக்கும் போலிருந்தது. இதற்காகப் படுக்கையில் ஒரு முறை சாய்ந்த பிறகு மறுபடி எழுந்து செல்லவும் பிடிக்கவில்லை. வெறும் சிகரெட்டையே உதடுகளுக்கிடையில் பொருத்திக் கொண்டு, அவன் தினசரியைப் பிரித்தான் – கடைசிப் பக்கத்துக்கு முந்தைய பக்கம்; ரேஸ் செய்திகள் வெளியாகியிருந்த பக்கம்.‘லக்கி ஸ்டார் ஜெயிக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது’ என்ற கொட்டைத் தலைப்பின் அடியில், அன்றைய ரேஸ் விவரங்கள் நாலு பத்திகளில் தரப்பட்டிருந்தன. இந்தப் பத்திகளின் மேல் அவன் விழிகள் சாவகாசமாக மேயத் தொடங்கின. இரண்டாவது பத்தியில் மேய்ந்து கொண்டிருந்தபோது, உண்ட மயக்கத்தில் அவனுடைய விழிகள் சற்றே கிறங்கின; தலை துவண்டது. வாயிலிருந்த சிகரெட் நழுவித் தினசரியின் மேல் விழுந்தது …படபடவென்று வாசல் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. நாகராஜ் திடுக்கிட்டு விழித்துக் கொண்டான்.

 

      நழுவிக் கிடந்த சிகரெட்டை ஜாக்கிரதையாக எடுத்துக் கொண்டு, கட்டிலை விட்டு இறங்கினான். கதவைத் திறந்தான். சாரங்கனும், அவனுடன் நாகராஜுக்குத் தெரியாத இன்னொரு இளைஞனும் நின்றிருந்தார்கள். “இவன் ரமணி – என் ஃபிரண்டு டில்லியிலிருந்து வந்திருக்கிறான்” என்று சாரங்கன் தன்னுடன் இருந்தவனை அறிமுகப்படுத்தினான். நாகராஜ் ரமணியின் முகத்தைக் கூடப் பார்க்காமல் ளள அவனுடன் கை குலுக்கினான். அவனுடைய கவனமெல்லாம் சாரங்கனின் கையிலிருந்து புகைந்து கொண்டிருக்கும் சிக ரெட் துணுக்கின் மேல் இருந்தது. அந்தச் சிகரெட் துணுக் கைச் சுவாதீனமாக உருவித் தன் சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டான் அவன். சமயசஞ்சீவினியாக வந்த சாரங்கன் பால் அவன் மனத்தில் நன்றியும் பரிவும் பொங்கி வழிந்தன.மூவரும் உள்ளே வந்து உட்கார்ந்தார்கள். “இன்னிக்கு என்ன நம்பர் வருது தெரியுமா?”“ஸெவன்” என்றான் சாரங்கன்.“எந்த ரேஸிலே?”“எந்த ரேஸிலே?“ரேஸ் இல்லைடா மடையா. மட்கா”“மட்காவா”என்றான் நாகராஜன். பிறகு “ஸெவன் புதன் கிழமை வந்தாச்சு” என்றான். மட்கா என்பது பம்பாயில் இலக்கங்களை வைத்து நடத்தப்படும் ஒரு சூதாட்டம்.

 

    ‘நியூயார்க் பருத்தி’ மாதிரி தினசுரி ஒரு ஆரம்ப இலக்கம்; ஒரு இறுதி இலக்கம். குறைந்த பட்ச ‘பெட்’ நாலணா.“இன்னிக்கும் ஸெவன்தான்” என்றான் சாரங்கன்.“இதுவரை ஒருநாளாவது நீ சொன்ன நம்பர் வந்ததில்லை”.“டேய்! போனமாசம் எவ்வளவு நாள் வந்தது!”“எவ்வளவு நாளாம்?”சாரங்கனுடைய ‘மட்கா’ ஊகங்கள் நூற்றுக்குத் தொண்ணூறு பலிப்பதில்லையென்று நாகராஜ் நிரூபிக்க முயன்றான். ஆனால் சாரங்கன் ஒப்புக் கொள்ளவில்லை. தன் தோல்விகளை அவன் எப்போதுதான் ஒப்புக் கொண்டிருக்கிறான்? சர்ச்சையை வளர்த்த விரும்பாமல் நாகராஜ் தன் வாதங்களை நிறுத்திக் கொண்டான்.“சரி; இன்றைக்கு என்ன ப்ரோகிராம்?” என்று சாரங்கன் கேட்டான்.“அம்பி வீட்டுக்குப் போகலாமென்றிருந்தேன்” என்றான் நாகராஜ்.“போகாதே. அங்கே நிற்க இடமில்லை. மேலும் இரவு முழுவதும் அம்பிக்கு ஹெவி லாஸாம். நீ இப்போ போனால் கடன் கேட்பான்.”“உன்னைக் கேட்டானா?”“எனக்கு அவன் ஏற்கனவே பாக்கி”.நாகராஜ் பேசாமலிருந்தான். அம்பி வீட்டில் சனிக்கிழமை சாயங்காலம் தொடங்கி திங்கட்கிழமை காலைவரை தொடர்ந்து நடக்கும் சீட்டாட்ட சபைகளை நினைத்துக் கொண்டபோது அவனுடைய உடலெல்லாம் ஒருமுறை குலுங்கியது.

 

       ஆறு மாதங்களுக்கு முன்பு வரை அவன் இந்தச் சபையில் வாரந்தவறாமல் போய்க் கலந்து கொண்டிருந்தான். அது சாரங்கனுடன் நெருங்கிப் பழகுவதற்கு முன்பு, சாரங்கனுக்குச் சீட்டாட்டத்தில் சிரத்தை இல்லை. ஒரு இடத்தில் பல மணி நேரம் உட்கார்ந்திருக்கும் பொறுமையில்லை. இதே காரணத்தால் கிரிக்கெட் மாட்சுக்குப் போய் உட்காருவதிலும் அவனுக்குச் சிரத்தை கிடையாது. இன்றுகூட ஒரு ராஞ்சி ட்ராஃபி மாட்ச் இருந்தது.“நாங்கள் ரேஸுக்குப் போகிறோம்; நீயும் வருகிறாயா?” என்றான் சாரங்கன் சிறிது நேரங் கழித்து.“ஒன்றரை மணிக்குத்தானே ரேஸ்? இப்போதே என்ன அவசரம்?”“ரேஸ் போவதற்கு முன் இவனுக்கு மகாலட்சுமி கோவிலையும் காட்டி விடலாமென்று நினைத்தேன்”.நாகராஜ் மறுபடி பேசாமலிருந்தான். பொழுதைப் போக்கு வதற்கு சாரங்கன் சொல்லும் யோசனைகளைத்தான் அவன் எப்போதும் ஏற்க வேண்டியிருக்கிறதே தவிர, அவன் சொல்லும் யோசனைகளை சாரங்கன் ஒருபோதும் ஏற்ப தில்லை. சாரங்கனுடன் போகத்தான் வேண்டுமா என்று அவன் யோசித்தான். இங்கே அறையில் மனது நிச்சலன மாகவும், அமைதியாகவும் இருக்கிறது. வெளியே போனால் எல்லாமே மாறிவிடும். தன் அறையில் அவன்தான் அரசன். ஆனால் வெளியே அவன் பல்வேறு இடங்கள், சூழ்நிலைகள், மனிதர்கள் ஆகியவற்றின் அடிமை. சாரங்கனுக்கும் அவனுக்குமிடையே இருந்த நேச உடன்பாடுகளின் அடிமை.“என்ன யோசிக்கிறாய்?” என்றான் சாரங்கன்.“ஒண்ணுமில்லை” என்று நாகராஜ் எழுந்தான்.

 

        “கிளம்ப வேண்டியதுதானா அப்போ?”“சீக்கிரம்”.நாகராஜ் டிரஸ் பண்ணிக் கொள்ளத் தொடங்கினான். அவன் பாண்ட் அணிந்து முடியும்வரை காத்திருந்துவிட்டு, “குடிக்கத் தண்ணீர் கொடுக்கிறாயா?” என்றான் சாரங்கன்.நாகராஜ் உடனே பக்கத்து அறைக்குச் சென்றான். இந்த அறைதான் சமையலறையாக உபயோகமாகிறதென்பதை அங்கிருந்த பாத்திரங்கள், ஷெல்புகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த டப்பாக்கள் முதலியவை பறைசாற்றின.“வீட்டுக்காரன் லீவில் ஊருக்குப் போயிருக்கிறான். நான்தான் முழு வீட்டுக்கும் காவல்” என்று நாகராஜ் மூலையிலிருந்த பானையிலிருந்து ஒரு தம்ளரில் நீர் மொண்டு நீட்டினான். சாரங்கன் தம்ளரை வாங்கிக் கொண்டே,”இந்த ரூமை இப்போதுதான் முதல் தடவையாகப் பார்க்கிறேன்” என்று அறையைச் சுற்றி நோட்டம் விட்டான்.அவனுக்குச் சமீபத்தில் கல்யாணம் நிச்சயமாகியிருந்தது. ஆகவே வீடு, சமையலறை ஆகியவற்றில் அவனுக்கு ஒரு புதிய சிரத்தையும் ஆர்வமும் ஏற்பட்டிருந்தது.தண்ணீரைக் குடித்து முடித்த பிறகு,”ஸோ, எல்லோருமே ஊருக்குப் போய் விட்டார்களாக்கும்”என்று ‘எல்லோருமே’யில் ஒரு அழுத்தத்துடன் சாரங்கன் கூறினான்.“அதுதான் இப்படி வருத்தமாயிருக்கிறாய்”.நாகராஜுக்குத் தலைக்குப்புற மண்ணில் விழுந்தது போலிருந்தது. பளிச்சென்று சாரங்கன் கன்னத்தில் ஒரு அறை விடலாம் போலிருந்தது; அவன் மிக அதிகமான உரிமை எடுத்துக் கொள்வதாகத் தோன்றியது. ஆனால் நாகராஜ் ஒரு அசட்டுச் சிரிப்பு மட்டும் சிரித்துவிட்டுப் பேசாமலிருந்தான்.

 

         வீட்டுக்காரனுக்கு ஒரு அழகான பெண் இருந்தாள். அவள்பால் தன் உள்ளத்தில் மலரத் தொடங்கியிருந்த உணர்வுகளைப் பற்றி ஒரு பலவீனமான தருணத்தில் அவன் சாரங்கனிடம் சொல்லியிருந்தான். பிறகு அவனிடம் சொல்லியிருக்க வேண்டாமென்று தோன்றியது. தனக்கு மிகவும் அந்தரங்கமான ஒரு விஷயத்தைச் சாரங்கன் பொறுப்பும் மரியாதையும் இன்றி எகத்தாளமாகச் சுட்டிக் காட்டுவதையோ, கேலி செய்வதையோ அவன் வெறுத்தான். அதே சமயத்தில் இந்த வெறுப்பைத் தைரியமாகச் சாரங்கனின் கவனத்துக்குக் கொண்டு வந்து அதன் மூலம் அவனுக்கம் தனக்குமிடையேயிருந்த உறவின் மெல்லிய கயிறுகள்முறுக்கேறி, நைந்து போகக் கூடிய சந்தர்ப்பத்தை உருவாக்கவும் அவன் பயந்தான். சாரங்கனுடைய தோழமையைக் காப்பாற்றிக் கொள்வதற்காகத் தன்னுடைய சுய கௌரவத்தின் எல்லைகளையும், பல அந்தரங்கமான விருப்பு வெறுப்புகளையும், தீர்மானங்களையும் அவன் அடிக்கடி தளர்த்திக் கொள்ள வேண்டியிருந்தது. எந்தப் பிரத்தியேகமான ருசி வேறுபாடுகளும், முரண்பாடுகளும் அவனை ஒரு தனி மனிதனாகப் பிரித்துக் காட்டினவோ, அவற்றையெல்லாம் தற்காலிகமாக அடகு வைக்க வேண்டியிருந்தது. தனிமையைப் போக்கிக் கொள்வதற்காகத் தன்னுடைய தனித் தன்மையையே அழித்துக் கொள்ள வேண்டியிருந்தது.பதினொன்றரை மணிக்கு அவர்கள் வீட்டிலிருந்து கிளம்பினார்கள்.

 

       மாதுங்காவிலிருந்து முதலில் ஸயானுக்குச் சென்று, அங்கேயிருந்த இன்னொரு பஸ்ஸைப் பிடித்தார்கள். ஸயான் பஸ் ஸ்டாண்டில் சாரங்கன் ‘ரேஸ் டிப்ஸ்’ புத்தகம் ஒன்று வாங்கினான். பஸ்ஸில் செல்லும் வழியெல்லாம் அன்றைய ரேஸ்களில் எந்தெந்தக் குதிரைகள் ஜெயிக்கப் போகின்றனவென்பதை அவன் தக்க காரணங்களுடன் நாகராஜுக்கு நிரூபிக்கத் தொடங்கினான்.மகாலட்சுமி கோவில் படிக்கட்டுகளில் ஏறும்போதும், கோவில் வாசலில் செருப்பைக் கழட்டி வைக்கும் போதும் கூட அவர்கள் ரேஸைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருந் தார்கள். கோவிலுக்குள் சென்றதும் சாரங்கன் ரேஸைப் பற்றிச் சற்றே மறந்து, அந்தக் கோவிலைப் பற்றி ரமணியிடம் கூறத் தொடங்கினான்.கோவிலுக்குப் பின்னால் பெரும் கடலலைகள் பேரிரைச்சலுடன் பாறைகள் மேல் மோதிச் சின்னஞ்சிறு நீர்த் திவலைகளாகச் சிதறிக் கொண்டிருந்தன. கடலரசி கடவுளுக்கு முன்னால் அலைத் தேங்காய்களைப் போட்டு உடைக்கிறாளோ? பாபாத்மாக்களான இநதப் பம்பாய் வாசிகளைவிட்டு என்னிடமே வந்து விடும் என்று அழைக்கிறாளோ? நாகராஜுக்கு அந்த அலைகளையே பார்த்துக் கொண்டு நிற்கலாம் போலிருந்தது.கோவிலிலிருந்து கீழே இறங்கும் வழியிலிருந்த கரும்புச்சாறுக் கடையில் ஆளுக்கு ஒரு தம்ளர் கரும்புச்சாறு பருகிவிட்டு, அவர்கள் ரேஸ்கோர்ஸை நோக்கி நடக்கத் தொடங்கினார்கள்.ரேஸ் கோர்ஸ் நெருங்க நெருங்க, சாலையில் கார்களின் எண்ணிக்கையும், நடைபாதையில் மக்களின் எண்ணிக்கை யும் தலை சுற்ற வைத்தது.

 

         சாலையில் இருந்ததைப்போல இரண்டு மடங்கு கார்கள் ரேஸ் கோர்ஸ் காம்பவுண்டுக்குள் நின்றன. தலைக்கு எட்டு ரூபாய் கொடுத்து நுழைவுச் சீட்டுகள் வாங்கிக் கொண்டு அவர்கள் ‘என்க்ளோஷருக்குள்’ நுழைந்தார்கள். மணி ஒன்று நாற்பது. முதல் ரேஸ் தொடங்க இருபது நிமிடம் இருந்தது.எதிரே உயரமான போர்டு எந்தெந்தக் குதிரைக்கு எவ்வளவு டிக்கெட்டுகள் விற்பனையாகின்றன என்ற விவரத்தைப் பளிச்சென்று காட்டிக் கொண்டிருந்தது. ஆறாம் நம்பர் குதிரைக்குத்தான் அதிக டிக்கெட்டுகள் விற்பனையாகியிருந்தன. “ஆறாம் நம்பர்தான் ஃபேவரைட்” என்றான் சாரங்கன்.“நாமும் அதற்கு ஒரு டிக்கெட் வாங்குவோமே” என்றான் ரமணி.சாரங்கன் சிரித்தான். “எந்தக் குதிரை ஜெயிக்கும் என்று பார்த்தால் மட்டும் போதாது; எந்தக் குதிரை நிறையப் பணம் தருகின்றது என்றும் பார்கக வேண்டும். ஆறாம் நம்பர்க் குதிரைக்கு இரண்டாயிரத்துச் சொச்சம் டிக்கெட்டுகள் விற்பனையாயிருக்கின்றன. ஆகவே அது ஜெயித்தால் பரிசுத் தொகை இரண்டாயிரம் பேருக்கிடையில் அல்லவா பங்கிடப் படும்? ஐந்து ரூபாய் போட்டாயானால் ஆறு ரூபாயோ அல்லது ஏழு ரூபாயோ கிடைக்கும்.”“மூன்றாம் நம்பர் குதிரைக்குத்தான் குறைவான டிக்கெட்டுகள் விற்றிருக்கின்றன.”ரமணி விழித்தான். சாரங்கன் Forecast Pool என்று எழுதப்பட்டிருந்த இன்னொரு போர்டைச் சுட்டிக் காட்டினான். “முதல் குதிரையை ஊகிப்பதுடன் நில்லாமல் இரண்டாவதாக எது வரும் என்பதையும் ஊகிப்பது ஃபோர்காஸ்ட்.முதல் குதிரையை ஃப்ளூக்கில் கூட பல பேர் ஊகித்து விடலாம். ஆனால் முதலாவது, இரண்டாவது இரண்டையுமே ஒழுங்கான வரிசையில் சரியாக ஊகிப்பவர்கள் குறைவாகத் தானே இருப்பார்கள்? ஆகவே Forecast-இல் அதிகப் பணம் பண்ணும் வாய்ப்பு இருக்கிறது.

 

     வெவ்வேறு முதல் இரண்டு ஸ்தானச் சேர்க்கைகளுக்குக் கிடைக்கக் கூடிய பங்கீட்டுத் தொகையை இந்தப் போர்டு காட்டுகிறது. இந்த ரேஸில் ஆறு, நாலு, ஒன்று இந்த மூன்றும் தான் முக்கியமான குதிரைகள். இவற்றுள் ஏதாவது ஒன்றை முதலாவதாகவும், இன்னொன்றை இரண்டாவதாகவும் வைத்துப் பெட் கட்டலாம். ஆறு நாலுக்குக் கிடைக்கும் தொகையை விட ஆறு-ஒன்றுக்குக் கிடைக்கும் தொகை அதிகமாக இருப்பதால், அதற்கு ஒரு டிக்கெட் வாங்கலாம்.”சாரங்கன் ஆறு-ஒன்று, ஒன்று-ஆறு என்று இரண்டு விதமாகவும் டிக்கெட் வாங்கிக் கொண்டான்.“நாலுதான் இரண்டாவதாக வருமென்று நிச்சயமாகத் தெரிந்தால் ஆறு-நாலு என்றே வாங்கியிருக்கலாம்!” என்றான் ரமணி.“இது சூதாட்டம். சரியான விடையைக் கண்டு பிடிப்பதைவிட லாபகரமான விடையைக் கண்டு பிடிப்பதில்தான் இருக்கிறது சாமர்த்தியம்” என்றான் சாரங்கன்.மூவரும் காலரியில் போய் உட்கார்ந்தார்கள்.

 

       ரேஸ் தொடங்குவதற்கு முன்பாகக் குதிரைகள் காலரிகளுக்கு எதிர்த்தாற்போல் மெல்ல ஓட்டிச் செல்லப்பட்டன. நாகராஜ் அருகிலிருந்த ஒருவரிடம் பைனாகுலரைக் கடன் வாங்கிக் கொண்டு, குதிரைகளைப் பார்க்காமல் புடவைகளைப் பார்க்கத் தொடங்கினான். ரேஸ்கோர்ஸுக்கு வரும் அழகிகளைப் பார்ப்பதற்கே எட்டு ரூபாய் கொடுக்கலாமென்பது அவன் அபிப்பிராயம்.“எது நல்ல குதிரை என்று எப்படிக் கண்டுபிடிப்பது?” என்றான் ரமணி.“எவ்வளவோ இருக்கிறது. குதிரையின் பரம்பரை என்ன. சொந்தக்காரர் யார். ட்ரெயினர் யார், ஜாக்கி யார், சமீப ரேஸ்களில் இந்தக் குதிரை எப்படி ஓடியிருக்கிறது. என்றெல்லாம் பார்க்க வேண்டும்” என்றான் சாரங்கன். “இந்த நம்பரில் ஆறாம் நம்பராக ஓடும் குதிரை லக்கி ஸ்டார் ஜிப்ரால்டர் எனும் குதிரையின் குட்டி. ஜிப்ரால்டரின் குட்டி எதுவுமே இதுவரை சோடை போனதில்லை. இந்த சீஸனில் கல்கத்தா, சென்னை, பெங்களூர், பூனா எல்லா இடங்களிலும் லக்கி ஸ்டார் பிரமாதமாக ஓடியிருக்கிறது. லக்கிஸ்டாரை சந்துலால் டிரெயின் பண்ணியிருக்கிறான். ஜான்ஸன் ஓட்டப்போகிறான். இரண்டு பேருமே திறமைசாலிகள். லக்கிஸ்டாரின் சொந்தக்காரர் எஸ்.கே. மெஹ்தா. ஆகவே எஸ்.கே. மெஹ்தாவுடன் போட்டியிடக் கூடிய குதிரைச் சொந்தக்காரர்கள் யார் யாரென்று நாம் பார்க்க வேண்டும்.

 

         இரண்டு மூன்று ஐந்து ஆகிய குதிரைகளின் சொந்தக்காரர்களெல்லாம் எஸ்.கே. மெஹ்தாவின் கட்சி. இவர்களுக்குள் யாராவது ஒர்வருடைய குதிரை முதலில் வருகிறதென்றால் மற்றவர் அதைத் தோற்கடிக்க முயலமாட்டார். ஆகவே ஒன்றும் நாலும் தான் ஆறுடன் போட்டியிடப் போகின்றன.ஆரம்பக் கோட்டின் மேல் கிளம்பத் தயாராக நின்ற குதிரைகள் ஸிக்னல் கிடைத்ததும் குபுக்கென்று ஓடத் தொடங்கின. “தே ஆர் ஆஃப்” என்று ஒலிபெருக்கியில் காமெண்ட்ரி தொடங்கியது. “நம்பர் ஸிக்ஸ் லீடிங்!” என்றது ஒலிபெருக்கி. சிறிது நேரங்கழித்து சாரங்கன், பெருமையுடன் ரமணியைப் பார்த்தான்.முக்கால்வாசி தூரம் வரையில் நம்பர் ஸிக்ஸ்தான் முன்னால் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் ஃபினிஷுக்கு இருநூறு கஜதூரம் இருக்கும்போது ஒன்றாம் நம்பர் திடீரென்று எமவேகத்தில் ஒரு பாய்ச்சல் பாய்ந்து நம்பர் ஸிக்ஸை முந்திக் கொண்டது. கடைசி வரையில் அந்த வேகத்தையும் பாய்ச்சலையும் சிறிதும் தளர்த்தாமல் ரேஸையும் ஜெயித்துவிட்டது.

 

         “நம்பர் ஒன், நம்பர் ஒன்” என்று கரகோஷம் எழுந்தது. ஒரு வினாடி கழித்து நம்பர் நாலும் நம்பர் ஆறும் போட்டி போட்டுக்கொண்டு ஃபினிஷிங்கு லைனைக் கடந்தன. மற்றக் குதிரைகளும் பின் தொடர்ந்தன. “நம்பர் ஒன்றுதான் முதலாவது ஸ்தானம் பெற்றிருக்கிறது” என்று ஒலிபெருக்கி அறிவித்தது.“இரண்டாவது ஸ்தானம் பற்றிய விவரம் போட்டோ ஃபினிஷில் பார்த்து விரைவில் தெரிவிக்கப்படும். போட்டோ ஃபினிஷில் உள்ள குதிரைகள் நம்பர் நாலும், நம்பர் ஆறும்”.“ஆறு இரண்டாவதாக வந்தால் நல்லது. ஒன்று ஆறுக்கும் நான் டிக்கெட் வாங்கியிருக்கிறேனல்லவா?” என்றான் சாரங்கன்.ஒரு நிமிடத்தில் முடிவு அறிவிக்கப்பட்டது. “போட்டோ ஃபினிஷின் முடிவு வருமாறு. நம்பர் நாலு இரண்டாவது ஸ்தானம், நம்பர் ஆறு மூன்றாவது ஸ்தானம்”.சாரங்கன் தன் கையிலிருந்த டிக்கெட்டுகளைக் கிழித்தெறிந்தான். ஐந்தும் ஐந்தும் பத்து ரூபாய் தண்டம்.அவர்கள் காலரியிலிருந்து கீழேயிறங்கிக் காப்பி குடிக்கச் சென்றார்கள். அங்கே சாரங்கன் தனக்குத் தெரிந்த நண்பனொருவனைப் பார்த்து “ஹலோ!” என்று அவனுடன் கை குலுக்கினான். “லக்கிஸ்டார் இப்படிப் பண்ணிவிட்டதேடா!” என்றான்.

 

       “ஜான்ஸன் இப்படிப் பண்ணிவிட்டானே என்று சொல்லு” என்றான் நண்பன். “ஆறாம் நம்பர் மேல் எக்கச்சக்கமான பெட்டிங் இருந்ததால், குதிரையை முதலில் கொண்டு வராமலிருப்பதற்காக புக்கிகள் ஜான்ஸனுக்குப் பணம் ஞாயிற்றுக் கிழமைகளும்…கொடுத்திருக்கிறார்களாம்”.“சே, சே, ஜான்ஸன் இப்படியெல்லாம் செய்யமாட்டான்”. “இப்போது செய்திருக்கிறானே, இதற்கு என்ன சொல்லுகிறாய்?”சாரங்கன் மெளனமாக இருந்தான். பிறகு “உனக்கும் போச்சா?” என்றான்.“நான் ஒன்றாம் நம்பர்மேல் கட்டியிருந்தேன்”.“ரியலி? கங்க்ராஜூலேஷன்ஸ்!”.“அவசரப்படாதே, என்னுடையது ஜாக்பாட் டிக்கெட் ஒன்றாவது ரேஸும் இரண்டாவதும் சரியாக வந்திருக்கின்றன. மீதி ரேஸ்கள் எப்படியோ பார்க்கலாம்”.மூன்றாவது ரேஸ்க்கு டிக்கெட் எதுவும் வாங்காமல் வெறுமனே பார்க்க நிச்சயித்தவர்களாக அவர்கள் காலரியில் போய் அமர்ந்தார்கள். பின்வரிசையில் அமர்ந்திருந்த கறுப்புக் கண்ணாடி யுவதி ஒருத்தி கைவளையல்கள் சப்திக்க, சேலைத் தலைப்பையும் தலைமயிரையும் அனாவசியமாகச் சரி செய்து கொண்டாள். நாகராஜ் திரும்பி அவளை ஒருமுறை பார்த்தான்.ரேஸ் தொடங்கி விட்டது. அதே நம்பர்கள். ஆனால் வேறு குதிரைகள், வேறு ஜாக்கிகள். “மூன்றாம் நம்பர் தான் ஜெயிக்கப் போகிறது!” என்றான் சாரங்கன்.

 

         ‘அது ஜெயிக்காமல் இருக்கக் கடவதாக!’ என்று நாகராஜ் நினைத்துக் கொண்டான். சாரங்கன் ரேஸ்களையும் குதிரைகளையும் பற்றித் தனக்கு மட்டுமே எல்லாம் தெரிந்தது போலக் காட்டிக் கொண்டது அவனுக்கு தெரியும்; என்னைக் கேட்டு விளையாடியிருந்தால் இதற்குள் ஒரு ரேஸிலாவது பணம் பண்ணியிருக்கலாம் என்று அவன் நினைத்தான். சாரங்கன் யோசனை கேட்குமளவிற்குத் தன்னைப் பெரியவனாக அங்கிகரிக்காதது அவனுக்கு மனத்தாங்கலாக இருந்தது. அதே சமயத்தில் தானாக வலிய மாறுபட்ட கருத்துக்களைக் கூறிச் சர்ச்சையைக் கிளப்பவும் தயக்கமாக இருந்தது.ரேஸ் சூடு பிடிக்கத் தொடங்கியவுடன் உட்கார்ந்திருந்த வர்கள் எல்லாரும் பரபரப்புடன் எழுந்து நின்றார்கள். “கம் ஆன், கம் ஆன்!” என்ற கூச்சல்கள் எழுந்தன. “கம் ஆன் மும்தாஜ்!” என்ற கூச்சலுடன் நாகராஜின் தோளின் மேல் ஒரு கை விழுந்தது. திடுக்கிட்டு அவன் திரும்பிப் பார்த்தான். “ஓ ஐஆம் ஸாரி” என்று கறுப்புக் கண்ணாடிக்காரி சடக்கென்று தன கையை இழுத்துக் கொண்டாள்.

 

        பரபரப்பில் தன்னையறியாமல் அவன் மேல் கை போட்டிருப்பாள்; அல்லது வேண்டுமென்றேயா? அதன் பிறகு நாகராஜின் மனம் ரேஸில் செல்லவில்லை. ‘ஒருவேளை கிராண்ட் ரோடுவாசியாக இருப்பாளோ?’ என்று அவனுக்குச் சந்தேகமாக இருந்தது.மூன்றாம் நம்பர்தான் ஜெயித்தது. “த்சு, த்சு, கட்டியிருக்கலாம்” என்று சாரங்கன் கையை உதறிக் கொண்டான். நாகராஜ் கறுப்புக் கண்ணாடியின் ரியாக்க்ஷனைப் பார்ப்பதற்காகப் பின்புறம் பார்த்தான். இதற்கென்றே காத்திருந்தவள் போல அவள் அவனைப் பார்த்துப் புன்னகை செய்தாள். “எக்ஸ்க்யூஸ் மீ!” என்று பேசத் தொடங்கினான். நாகராஜுக்கு மூர்ச்சை போட்டுவிடும் போலிருந்தது.“எக்ஸ்க்யூஸ் மீ! அடுத்த ரேஸுக்கு ஏதாவது டிப் தர முடியுமா?”நாகராஜ் பேச வாய் திறக்கும் முன்பே, “நம்பர் டூ அல்லது நம்பர் ஃ பைவ்!” என்றான் சாரங்கன், அவனைப் பார்த்து. “தாங்க்யூ!” என்று அவள் புன்னகை செய்தாள். நாகராஜுக்கு எரிச்சலாக இருந்தது. என்னிடம் தான் கேள்வி கேட்டாள்? இவனை யார் பதில் சொல்லச் சொன்னது?“டிக்கெட் வாங்கிக் கொண்டு வரலாம்டா” என்று சாரங்கன் கிளம்பினான். “இரு, இரு” என்று நாகராஜ் கறுப்புக் கண்ணாடியைப் பார்த்து “உங்களுக்கு ஏதாவது டிக்கெட் வாங்க வேண்டுமா?” என்று கேட்டான். “யெஸ் வெரி கைன்ட் ஆஃப் யூ” என்று தன கைப் பையைத் திறந்து ஒரு ஐந்து ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுத்தாள்.

 

        “டூ-ஃபைவுக்கு ஒரு டிக்கெட்”.டிக்கெட் கௌண்டரில் கறுப்புக் கண்ணாடிக்கு “டூ-ஃபைவுக்கு ஒரு டிக்கெட்டும், தங்களுக்கு ஃபை – டூவுக்கு இரண்டு டிக்கெட்டுகளும் வாங்கிக் கொண்டான் சாரங்கன். காலரிக்குச் சென்றதும் நாகராஜ் கறுப்புக் கண்ணாடியிடம் டூ-ஃபைவ் டிக்கெட்டைக் கொடுத்து அவளிடமிருந்து ஒரு போனஸ் புன்னகையைப் பெற்றுக் கொண்டான். அந்தப் புன்னகையின் மீது எவ்வளவு வேண்டுமானாலும் பெட் கட்ட அவன் தயாராக இருந்தான்.ரேஸ் தொடங்கியது. ஐந்தாம் நம்பரும் இரண்டாம் நம்பரும் ஆரம்பத்திலிருந்தே மற்றக் குதிரைகளைப் பின் தங்க வைத்து விட்டு முன்னால் தாவின. கிட்டத்தட்ட சமவேகத்துடன் ஓடிக் கொண்டிருந்த அந்தக் குதிரைகளில் எது முதலில் வருமென்றே சொல்ல முடியவில்லை. ஆனால், ஃபினிஷை நெருங்கும்போது திடீரென்று இரண்டாம் நம்பரின் வேகம் அதிகரித்தது; தரையில் கால் பாவாமல் அது காற்றில் நீந்திச் செல்வது போலத தோன்றியது. கறுப்புக் கண்ணாடி யுவதி உற்சாகத்துடன் கைக்குட்டையை ஆட்டியவாறே குதிகுதியென்று குதித்தாள்; கூச்சலிட்டாள். அதோ இரண்டாம் நம்பர் ஃபினிஷிங்க் லைனைக் கடந்தே விட்டது கறுப்புக் கண்ணாடி யுவதியைக் கட்டிப் பிடிக்க முடியாது போலிருந்தது. “தாங்க் யூ!” என்று அவள் எதிர்பாராதவிதமாக நாகராஜனின் கையைப் பிடித்துக் குலுக்கினாள். எலெக்ட்ரிக் ஷாக் அடிப்பது போலிருந்தது அவனுக்கு. இவள் கிராண்ட் ரோடுதான், சந்தேகமேயில்லை.

 

       “பணம் கலெக்ட் பண்ணிக் கொண்டு வருகிறேன்” என்று சொல்லிக் கொள்ளக் கடமைப் பட்டவள் போல அவள் நாகராஜனிடம் கூறிவிட்டுச் சென்றாள். சாரங்கன் இதைக் கவனிக்காமல், “இன்றைக்கு இவ்வளவுதான்; இனிமேல் விளையாடப் போவதில்லை” என்று முணுமுணுத்தவாறு டிக்கெட்டுகளைக் கிழித்தெறிந்தான்.அடுத்த ரேஸ்களில் பணம் எதுவும் கட்டாமல் அவர்கள் வெறுமனே வேடிக்கை பார்த்தார்கள்-சாரங்கனும் ரமணியும் குதிரைகளை; நாகராஜ் கறுப்புக் கண்ணாடி யுவதியை. நாலு மணி ரேஸ் முடிந்ததும், “போகலாம்டா. இவன் வேறே இடமெல்லாம் பார்க்கணுமென்கிறான்” என்று சாரங்கன் கிளம்பினான். நாகராஜுக்கு ஏமாற்றமாக இருந்தது. கறுப்புக் கண்ணாடியை விட்டுவிட்டுப் போக அவனுக்கு மனமில்லை. அதே சமயத்தில் நான் வரவில்லை என்று சாரங்கனிடம் சொல்லவும் தைரியமில்லை. கறுப்புக் கண்ணாடியைப் பார்த்து மதிப்பாகத் தலையை ஆட்டி ஒரு புன்னகை செய்துவிட்டு, அவன் சாரங்கனையும், ரமணியையும் பின் தொடர்ந்தான். சரியான கோழை என்று அவள் நினைத்திருப்பாள்.மூவரும் ரேஸ்கோர்ஸுக்கு வெளியே வந்தார்கள். சினிமா பார்ப்பதற்கு முடிவு செய்து, வித்யா விஹார் ஸ்டேஷன் வரை நடந்து அங்கிருந்து வி.டி.க்கு மின்சார ரயில் பிடித்தார்கள்.

 

         வி.டி.-யில் ஒவ்வொரு சினிமாத் தியேட்டராக நுழைந்து பார்த்தார்கள். ஆனால், எங்கும் டிக்கெட் கிடைக்கவில்லை.“நான் ஒன்று சொல்லட்டுமா?” என்றான் சாரங்கன். பேசாமல் எங்கேயாவது போய் பீர் குடிக்கலாம்”“எங்கே?”“எனக்கு ஒரு இடம் தெரியும்”.“நான் ரெடி” என்றான் ரமணி. சாரங்கன் நாகராஜைப் பார்த்தான். “ஓகே” என்றான் நாகராஜ்.கொலாபா வரையில் நடந்து, அங்கிருந்த ஒரு சந்துக்குள் அவர்களை அழைத்துச் சென்றான் சாரங்கன். கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருந்த அடுக்கு மாடிக் கட்டிடங்களிடையே, குறிப்பிட்டட ஒரு கட்டிடத்ததை எப்படியோ அடையாளம் கண்டு கொண்டு உள்ளே நுழைந்தான். எதிரேயிருந்த ஒரு கதவைத் தட்டினான். சிறிது நேரம் தட்டிய பிறகு. குள்ளமான ஒரு இளைஞன் கதவை ஒருக்களித்தாற்போலத் திறந்து தலையை மட்டும் வெளியே நீட்டினான்.“திறந்திருக்கிறதா?” என்று சாரங்கன் கேட்டான்.“உம்” என்று அவன் கதவை நன்றாகத் திறந்தான். அவர்கள் உள்ளே வந்ததும், மறுபடி கதவை முடித் தாழிட்டான். சுவரில் சாய்த்தப்பட்டிருந்து மூன்று ஸ்டீல் நாற்காலிகளை அவர்கள் உட்காருவதற்காக அங்கிருந்த மேஜையொன்றை ஒட்டினாற்போல எடுத்துப் போட்டான்..“மூன்று பாட்டில் பீர்”“பீர் பாட்டில்களையும் ஊற்றிக் குடிக்கக் கண்ணாடித் தம்ளர்களையும் பையன் மேஜை மேல் கொண்டு வந்து வைத்தான். அவனே பாட்டில்களைத் திறந்தும் கொடுத்தான்.

 

        “வெறும் பீர் குடித்துப் பிரயோசமில்லையடா” என்றான் ரமணி.“வேறென்ன வேண்டும்?”“விஸ்கி ஆர் ஸம்திங்”. சாரங்கன் பையனைக் கூப்பிட்டு விஸ்கி விலையை விசாரித்தான். பிறகு ரம் விலையை விசாரித்தான். ரம்தான் மலிவாக இருந்ததால் அதையே குடிப்பதென்று முடிவு செய்தார்கள்.மூன்று பைன்ட் ரம் வாங்கிக் கொண்டு, பீரும் ரம்முமாகக் கலந்து காக்டெயில் அருந்தத் தொடங்கினார்கள். காக்டெயிலின் செந்நிறத்தில் ஒரு கவர்ச்சி: அதன் நெடியில் ஒரு மயக்கும் குளுமம் அதன் ருசியில் புரிந்து கொள்ள முடியாத – ஆனால் புரிந்து கொள்ளத் தூண்டும் ஒரு கசப்பு. அதிகம் பழக்கமில்லாததால் மளக் மளக்கென்று அவசரமாக அவர்களால் குடிக்க முடியவில்லை. ஏதேதோ பேசிக் கொண்டு மெதுவாகக் குடித்தார்கள். ஆரம்பத்தில் அச்சிடத் தகுந்ததாக இருந்த அவர்கள் பேச்சு மெல்ல மெல்ல அச்சிடத் தகாததாக மாறிக் கொண்டு போயிற்று. நாகராஜ் கறுப்புக் கண்ணாடி மங்கையை நினைத்துக் கொண்டான். அவனுடைய கண்கள் கிறங்கின. இரு கன்னங்களிலும் யாரோ சரக் சரக்கென்று தேய்ப்பது போலவும், விலுக் விலுக்கென்று சதையைப் பிடித்து இழுப்பது போலவும் இருந்தது. குடித்தது போதுமென்று தோன்றியது. ஆனால் பாதியில் நிறுத்த வெட்கப்பட்டுக் கொண்டு, கௌரவத்துக்காகவும், வீறாப்புக்காகவும் அவன் குடித்துக் கொண்டேயிருந்தான். பையனிடம் எட்டணாவுக்கு கார பிஸ்கட் வாங்கி வரச் சொல்லி ஆளுக்கு இன்னும் சிறிது ரம் ஊற்றச் சொன்னார்கள். பிஸ்கெட் தின்று கொண்டே குடித்தார்கள். பிறகு, சிகரெட் புகைத்துக் கொண்டே குடித்தார்கள்.

 

         அரைமைணி நேரம் கழித்து வெளியே வந்தபோது மூவரின் மனதிலும் உற்சாகம் நிரம்பியிருந்தது. ஒரு குருட்டுத்தனமான, அசட்டுத் துணிச்சல் கலந்த உற்சாகம். கொலாபாவில் நடந்து கொண்டிருந்த விடுமுறைக் கூட்டத்தை, நடைபாதைக் கடைகளை – வேடிக்கை பார்த்துக் கொண்டே அவர்கள் நடந்தார்கள். சாலையில் எதிரே வந்த பெண்கள் மேலெல்லாம் நாகராஜ் வேண்டுமென்றே இடித்துக் கொண்டு நடந்தான். “டேய், டேய்!” என்று சாரங்கன் அவனைத் தடுத்தான். நாகராஜன் உடனே சாரங்கனை இறுக்கக் கட்டிக் கொண்டான். “கோச்சுக்காதேடா!” என்றான்.கொலாபாவில் மேலும் கீழுமாகச் சிறிது நேரம் உலாவிய பிறகு, கேட் வே ஆஃப் இந்தியா வரை அவர்கள் நடந்து சென்றார்கள். அங்கே ஒரு பெஞ்சில் போய் உட்கார்ந்தார்கள். எலிஃபென்டாவிலிருந்து ஒரு டூரிஸ்டு படகு அப்போதுதான் திரும்பி வந்து படித்துறையருகில் நின்றிருந்தது. பிரயாணிகள் படகிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்தார்கள் “பத்து பைசாவில் கப்பல் பாருங்கள் ஸாப்!” என்று கழுத்திலும் தோளிலும் நிறையப் பைனாகுலர்களை மாட்டிக் கொண்டிருந்த ஒருவன் அவர்களருகே வந்து நின்றான்.

 

          “பைனாகுலர் இல்லாமலே கப்பல்தான் தெரிகிறதே!” என்றான் சாரங்கள்.“கப்பலின் மேலுள்ள எழுத்துக்களைப் பார்க்கலாம் ஸாப்!”“அதைப் பார்ப்பதால்தான் என்ன உபயோகம்!”திடீரென்று நாகராஜுக்கு குமட்டிக் கொண்டு வந்தது; கட்டுப்படுத்திக் கொள்ள முயன்றான்; முடியவில்லை. ‘களக்’ என்று வாந்தி எடுத்தான். “களக், களக்’ என்று தொடர்ந்து வாந்தியெடுத்துக் கொண்டிருந்தான். சாராய நெடி குப்பென்று வீசியது. தலைக்கு மேல் வட்டமிட்டுக் கொண்டிருந்த கடற்பறவையொன்று இந்தக் காட்சியைக் காணச் சகியாதது போலக் கடலை நோக்கிப் பறந்து சென்றது.“இவன் இப்படித்தான், அளவு தெரியாமல் குடிப்பான்” என்றான் சாரங்கன், ரமணியிடம். தலையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்த நாகராஜை அங்கேயே விட்டு விட்டு அவர்கள் படிகளில் இறங்கி நீரருகில் சென்றார்கள். அரேபியக் கடல் முழுச் சூரியனை அனாயசமாக விழுங்குவதைப் பார்த்தார்கள்.அவர்கள் திரும்பி வந்தபோது நாகராஜ் பெஞ்சில் படுத்துக் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தான். “டேய், எழுந்திருடா, எழுந்திருடா!” என்று சாரங்கன் அவனை எழுப்பினான். அங்கிருந்து ஒரு டாக்ஸி வைத்துக் கொண்டு அவர்கள் சௌபாத்திக்குச் சென்றார்கள். டாக்ஸியில் செல்லும் வழியெல்லாம் நாகராஜ் தூங்கிக் கொண்டேஇருந்தான்.செளபாத்தி கடற்கரையில் பேல்பூரி, பானிபூரி, ஆலுபூரி வகையறாக்களை சாரங்கனும், ரமணியும் ஒரு கை பார்த்தார்கள்.

 

        நாகராஜுக்கு எதுவும் வேண்டியிருக்கவில்லை. சாப்பிட்டால் மறுபடி வாந்தியெடுக்குமோ என்று பயமாக இருந்தது. மூவரும் மணலில் உட்கார்ந்து கடற்கரைக் கூட்டத்தையும், கோவேறு கழுதைகள், ஒட்டகங்கள் மேல் சிறியவர்களும், பெரியவர்களும் சவாரி செய்வதையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இருட்டிய பிறகு, மலபார் ஹில்ஸ் ஏறி, அங்கிருந்த ஒரு ரெஸ்டாரன்டுக்குச் சென்றார்கள்.ரெஸ்டாரன்டின் கூரையில் நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. அங்கிருந்து பார்த்தால் பம்பாய் நகரம் ஜகஜ்ஜோதியாகத் தெரிந்தது. பேல்பூரி ஸ்டால்களின் காஸ்லைட்டுகள் முதல் மாரீன் டிரைவின் பிரகாசமான மெர்க்குரி வரிசை வரையில் எல்லாமே தெரிந்தது. ஆனால், நாகராஜுக்கு இவை ஒன்றுமே தெரியவில்லை. அருகேயிருந்த ஒரு மேஜையில் உலகததையே மறந்தவர்களாக ஒருவரில் ஒருவர் ஆழ்ந்து அமர்ந்திருந்த இளம் காதலர்கள் இருவர்கள்தான் அவன் கண்களுக்குப் பூதாகாரமாகத் தெரிந்தார்கள். இன்னும் சில நாட்களில் சாரங்கன் தன் மனைவியுடன் இந்த ரெஸ்டாரன்டில் வந்து உட்காரக் கூடும். நாகராஜ் கறுப்புக் கண்ணாடி யுவதியை நினைத்துக் கொண்டான். எளிதில் பெற்றிருக்கக் கூடிய ஏதோ ஒன்றை இழந்து விட்ட ஏக்கமும் தவிப்பும் அவன் உள்ளத்தில் நிரம்பியிருந்தன.ரெஸ்டாரன்டிலிருந்து அவர்கள் வெளியே வந்தபோது மலபார் ஹில்ஸ் பஸ் ஸ்டாண்டுகளில் விடுமுறைக் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. வேறு வழியின்றி, மின்சார ரயில் பிடிப்பதற்காக கிராண்ட் ரோடு ஸ்டே ஷனை நோக்கி அவர்கள் நடந்தார்கள்.

 

         நாகராஜை இப்போதுதான் போதை முழு வேகத்துடன் தாக்கத் தொடங்கியிருந்தது. ஏதேதோ சம்பந்தமில்லாமல் பிதற்றியவாறு அவன் நடந்தான். நோவல்டி தியேட்டரருகே செல்லும்போது சட்டென்று அவன் நின்றான். என்ன ஆச்சரியம்! தியேட்டர் வாசலில் எங்கோ பார்த்தவாறு கறுப்புக் கண்ணாடி யுவதி நின்றிருந்தாள். “மிஸ்!”, என்று நாகராஜ் அவளை நோக்கிப் பாய்ந்தான். ரமணியும் சாரங்கனுமாக மிகவும் பாடுபட்டு அவனை ஸ்டே ஷன்வரை இழுத்துக் கொண்டு போனார்கள்; ரயிலில் உட்கார்த்தினார்கள். ரயிலில் செல்லும் வழியெல்லாம் நாகராஜ் தன்மீது பிரயோகிக்கப்பட்ட பலாத்காரத்தை எதிர்த்து, மனத்தாங்கலுடன் ஒரு பலகீனமான எரிச்சலுடனும் சாரங்கன் மீது முறைப்பான பார்வையை வீசியவாறு, அவனுக்கு ஒரு பரிகாசப் பொருளாகவும் பெட்டியில் இருந்த மற்றவர்களுக்கு ஒரு சுவையான காட்சிப் பொருளாகவும் இருந்தான்.பத்தரை மணிக்கு அவர்கள் மாதுங்காவை அடைந்தார்கள். சாரங்கனும் ரமணியும் நாகராஜை அவனுடைய பில்டிங் வாசல் வரையில் கொண்டு சேர்த்தார்கள். “அறைவரையில் வரட்டுமா, அல்லது நீ போய்க் கொள்கிறாய?” என்றான் சாரங்கன். அவனுடைய குரலில் ஒரு ஏளனமும் அலட்சியமும் இருந்ததாக நாகராஜுக்குத் தோன்றியது. தோழமைக்கும் பொழுதை ஓட்டுவதற்கும் நாகராஜ் பெருமளவுக்குத் தன்னையே நம்பியிருந்தானென்ற உணர்வால் ஏற்பட்ட அலட்சியம். சுயமாகத் தன் தனிமைப் பிரச்னைக்குத் தீர்வு காணும் சக்தியும் திறமையும் இல்லாதவன் அவனென்ற நினைப்பில் விளைந்த ஏளனம்.

 

      “நீங்கள் போய்க் கொள்ளுங்கள்; ஐவில் மானேஜ்” என்றான் நாகராஜ். அவர்கள் சென்று விட்டார்கள்.நாகராஜ் மாடிப்படிகளில் ஏறித் தன் அறையை அடைந்தான். ஆயாசத்துடன் கட்டிலில் சாய்ந்தான். சாரங்கன் உதவியால் ஒரு ஞாயிற்றுக் கிழமையை எப்படியோ கழித்து விட்டோமென்று அவனுக்குத் திருப்தியாக இருந்தது. அதே சமயத்தில் சாரங்கன் உதவியில்லாமல் அது கழிந்திருக்க முடியாதா என்ன என்றும் தோன்றியது. சாரங்கனும் அவனும் ஒரு பரஸ்பரத் தேவையைப் பூர்த்தி செய்தார்கள். நாகராஜுக்குத் தேவையாக இருந்தது பின்னப்படாமல் தன்னை முழுமையாக ஆட்கொண்டு தன் தனிமையை நீக்கக் கூடிய ஒரு பெருஞ்சக்தி. சாரங்கனுக்குத் தேவையாயிருந்தது தன் சாகஸங்களையும் திறமைகளையும் அங்கீகரித்து ஏற்றுக் கொள்ளும் ஒரு பரம பக்தன். அவர்கள் இருவரும் இந்தத் தேவைகளை ஒருவருக்கொருவர் எப்போதுமே இல்லாவிட்டா லும், சில சமயங்களில், முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்குப் பூர்த்தி செய்து கொள்ள முடிந்தது.ஆனால் கல்யாணமான பிறகு சாரங்கனுடைய தேவை தன் மனைவியிடம் பூர்த்தி யடைந்துவிடக்கூடும். இனி சாரங்க னின் தயவில்லாமல் விடுமுறை நாட்களைக் கழிக்க அவன் பழகிக்கொள்ள வேண்டும். ‘அடுத்த ஞாயிற்றுக் கிழமை காலையில் முடி வெட்டிக் கொள்ள வேண்டும்’ என அவன் நினைத்தான். ‘சாப்பிட்டுவிட்டு ஒரு மாட்டினி ஷோ பார்த்து விட்டு வந்தால் ஒரு நாள் தீர்ந்து போகும். அல்லது பேசாமல் அம்பி வீட்டுக்குப் போகலாம். அல்லது ரேஸுக்குப் போய் ஒரு ஜாக்பாட் டிக்கட் வாங்கிக் கொண்டு அங்கேயே உட்கார்ந்து விடலாம். அந்தக் கறுப்புக் கண்ணாடி மங்கையை ஒரு வேளை அவன் மீண்டும் அங்கேயே சந்திக்கக்கூடும். அல்லது அவளைப் போல வேறு யாராவது, யாரென்பது முக்கியமில்லை.

 

         எங்கே யென்பது முக்கியமில்லை. தனித் தன்மையை இழந்துதான் தனிமையைப் போக்கிக் கொள்ள வேண்டுமென்றால் அதற்கு நிரந்தரமான ஏற்பாடுகள் எதற்காக? சிநேக உடன்பாடுகள் தான் எதற்காக? அவ்வப்போது உருவாகும் சந்தர்ப்பங்கள், தற்காலிகமான ஷரத்துகளற்ற உறவுகள் இவையே போதுமானவை. இவையே சிறந்தவை.சீட்டாட்டத்தின் ஜன்னி, ரேஸ்கோர்ஸ் அல்லது விளையாட்டு மைதானத்தில் குழுமியுள்ள ஜனத்திரளின் இரைச்சல், சினிமாத் தியேட்டரின் இருள், ஒரு அழகிய பெண்ணின் கணநேரப் புன்னகை, இவை நிரந்தர மான உருவமும் இயக்கமும் இல்லாதவை. இவற்றிலெல்லாம் அவன் தன் தனித் தன்மையை அடகு வைத்தால் உடனுக்குடன் மீட்டுக் கொள்ளலாம். வீடு வரை கூடவே வந்து, “அறை வரையில் வரட்டுமா?” என்று அவை கேட்காது. திங்கட்கிழமை காலையில் ஆபிஸுக்குப் போன் பண்ணி “ராத்திரி தூங்கினாயா?” என்று விசாரித்து அவனுடைய தனித் தன்மையின் இழப்பை மீண்டும் மீண்டும் நினைவூட்டி, அதை ஒரு நிரந்தரமான இழப்பாகச் செய்யாது.

by parthi   on 12 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மாங்காய் மாங்காய் மாங்காய் மாங்காய்
உடல்நிலை உடல்நிலை
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர் அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்
கவனம்-இரமா ஆறுமுகம் கவனம்-இரமா ஆறுமுகம்
நெஞ்சோரமாய்…கலையரசி சிவசுந்தர பாண்டியன் நெஞ்சோரமாய்…கலையரசி சிவசுந்தர பாண்டியன்
கழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும் கழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும்
மனித நேயம் மனித நேயம்
உலகத் தமிழ் மாநாடு 1968 அறிஞர் அண்ணா உலகத் தமிழ் மாநாடு 1968 அறிஞர் அண்ணா
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.