|
|||||
தமிழகத்தில் அரசுப் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படாது -போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் |
|||||
![]()
தமிழகத்தில் அரசுப் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படாது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறினார்.
இதுகுறித்து ஊடகத்தினரிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், "தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாகச் சில ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் தவறான தகவல் பரவி வருகிறது. தனியார் பேருந்து உரிமையாளர்கள், பேருந்துக் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
இதுகுறித்து மக்கள் கருத்து கேட்டு, அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அந்த அடிப்படையில்தான், மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் கருத்துகள் கேட்கப்பட்டு, நீதிமன்றத்திலா் தெரிவிக்கப்படும். அப்போது, பொதுமக்களுக்குச் சுமை இல்லாமல் இருக்க வேண்டும் என்ற கருத்துதான் வலியுறுத்தப்படும்.
ஏற்கெனவே இதுபோல பேருந்துக் கட்டண உயர்வு என்று தகவல் பரவியது. அப்போது, தமிழகத்தில் போக்குவரத்துத் துறையில் நெருக்கடி இருந்தாலும், பொருளாதாரச் சிக்கல் இருந்தாலும், மத்திய அரசு டீசல் விலையைப் பலமுறை உயர்த்தி இருந்தாலும், பேருந்துக் கட்டண உயர்வு இருக்காது என்று முதல்வர் மிகத் தெளிவாக அறிவித்திருந்தார். மீண்டும் அதையேதான் சொல்கிறோம். தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது.
இதேபோல, மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது எனக் கடந்த 10 நாட்களுக்கு முன் தகவல் பரவியபோதும், மின் கட்டணம் உயர்த்தப்படாது என்று முதல்வர் தெளிவுபடுத்தியிருந்தார். எனவே, தமிழகத்தில் நிச்சயம் அரசுப் பேருந்து கட்டண உயர்வு இருக்காது" என்று தெரிவித்தார்.
|
|||||
by hemavathi on 03 Jun 2025 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|