|
|||||
சாதி, மதம் இல்லை எனச் சான்றிதழ் வழங்கும் வகையில் அரசாணை பிறப்பிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் |
|||||
![]() சாதி, மதம் இல்லை எனச் சான்றிதழ்கள் வழங்கும் வகையில் உரிய அரசாணையைப் பிறப்பிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் தனக்குச் சாதி, மதம் இல்லை என்று சான்றிதழ் வழங்கும்படி திருப்பத்தூர் வட்டாட்சியருக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மனுவில், “எனது குழந்தைகளுக்குச் சாதி மற்றும் மதத்தின் அடிப்படையிலான இடஒதுக்கீடு உள்ளிட்ட அரசின் எந்தச் சலுகைகளையும் கேட்கப் போவதில்லை,” எனக் குறிப்பிட்டிருந்தார். அப்போது, அரசுத் தரப்பில், “சாதி, மதம் இல்லை என்று சான்றிதழ் வழங்க வட்டாட்சியர்களுக்கு அதிகாரம் அளிக்கும் எந்த உத்தரவும் இல்லை,” எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கைத் தள்ளுபடி செய்து தனி நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சந்தோஷ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் எம் எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “இது தொடர்பாக ஏற்கெனவே திருப்பத்தூர், கோவை, அம்பத்தூர் வட்டாட்சியர்கள் சாதி, மதம் இல்லை எனச் சான்றிதழ்கள் வழங்கி உள்ளனர். மனுதாரருக்கு அது போல் சான்றிதழை ஒரு மாதத்தில் வழங்க வேண்டும்,” என உத்தரவிட்டனர். மேலும், சாதி ரீதியிலான பாரபட்சத்தைத் தடுக்க வேண்டும் வேண்டும் எனப் போராடி வரும் நிலையில், சாதி, மதம் இல்லை எனச் சான்றிதழ் கோரும் மனுதாரருக்கு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர். சாதி, மதம் இல்லை எனச் சான்றிதழ் வழங்க வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கி, உரிய அரசாணையைப் பிறப்பிக்க வேண்டுமெனத் தமிழக அரசுக்குப் பரிந்துரைத்தனர். நாட்டில் நிலவும் சாதி, மத பாகுபாடுகளைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அரசியல் சாசனம் சாதி ரீதியிலான பாகுபாடுகளைத் தடை செய்துள்ள போதும், சமூக வாழ்க்கையில், அரசியலில், கல்வியில், வேலைவாய்ப்பில் ஏற்கெனவே சாதி, மதம் இன்றளவும் முக்கியத்துவம் பெற்றுள்ளதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
|
|||||
by hemavathi on 11 Jun 2025 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|