|
|||||
உலக சதுரங்க சாம்பியன் பட்டத்தை வென்றார் குகேஷ் |
|||||
![]() தமிழக வீரர் குகேஷ் உலக சதுரங்க சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார். சீனாவைச் சேர்ந்த டிங் லிரேனை வீழ்த்தி, 18 வயதான குகேஷ் இந்தச் சாதனையைச் செய்துள்ளார். அதோடு மிகக் குறைந்த வயதில் உலக சதுரங்க சாம்பியன் ஆகி வரலாறு படைத்துள்ளார் குகேஷ். உலக சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்றது. நடப்பு சாம்பியனான டிங் லிரேனை எதிர்த்து இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர்களில் ஒருவரான 18 வயது குகேஷ் தொம்மராஜு ஆடினார். இருவருக்கும் இடையில் 14 சுற்றுகள் நடைபெற்றன. ஆரம்பம் முதலே மிகவும் சவாலான போட்டியாக இருவருக்கும் இருந்து வந்துள்ளது.
முதலில் சில சுற்றுகளில் குகேஷின் கை ஓங்கியிருந்தாலும், அதன் பின் சீனாவைச் சேர்ந்த 32 வயதான டிங் லிரேன் தனது பட்டத்தைத் தக்க வைத்துக்கொள்ளக் கடுமையாக ஆடினார். ஒன்பதாவது சுற்றின் முடிவில், இருவரும் சமநிலையில் இருந்தனர். அதன் பிறகு ஒவ்வொரு சுற்றிலும் இருவருக்கும் சமமான வாய்ப்புகளும் சமமான சறுக்கல்களும் இருந்தன. ஆனால் ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் ஆடினர். பத்தாவது சுற்றின் இறுதியிலும் இருவரும் சமநிலையில் இருந்தனர். பதினொன்றாவது சுற்றில் குகேஷ் சிறப்பாக ஆடி, ஆட்டத்தைத் தன்வசப்படுத்தி இருந்தார். அடுத்த சுற்றையும் அவர் கைப்பற்றியிருந்தால் உலக சாம்பியன் பட்டத்துக்கான கனவு கிட்டத்தட்ட அப்போதே நிறைவேறியிருக்கும்.
12வது சுற்றில் மீண்டும் சவாலான ஆட்டத்தைக் கொடுத்து, தனக்கான புள்ளிகளை அதிகரித்துக் கொண்டார் டிங் லிரேன். எனவே அடுத்த சுற்றான 13வது ஆட்டத்தை உலகின் சதுரங்க ரசிகர்கள் அனைவரும் உற்று நோக்கி வந்தனர். 14வது ஆட்டம் தொடரும் போது, அது டிராவில் முடிவடையும் என்று பலர் கணித்தனர், ஆனால் குகேஷ் இறுதிவரை தொடர்ந்து உறுதியாக விளையாடி வெற்றி பெற்றார்.
சென்னையை சேர்ந்த குகேஷ் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சதுரங்கம் ஆடி வருகிறார். குடும்பத்தில் சதுரங்கம் சொல்லித் தரவோ, முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளவோ சதுரங்க வீரர்கள் யாரும் இல்லை. சதுரங்கத்தின் மீது இயல்பாக உருவான தனது ஆர்வத்தின் காரணமாக, தற்போது சர்வதேச அரங்குகளை எட்டியுள்ளார். பள்ளி மாணவராக இருந்த போதே, கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றார் குகேஷ். வீட்டில் பொழுதுபோக்காக குடும்பத்தினருடன் சதுரங்க ஆட்டத்தை விளையாடத் தொடங்கியவர் குகேஷ். சதுரங்க ஆட்டத்தின் அடிப்படை நகர்வுகள், விதிகளை இப்படித்தான் அவர் கற்றுக் கொண்டார்.
தந்தை தன் அன்றாடப் பணியை முடித்து வரும் வரை பள்ளியில் தனியாக அமர்ந்திருக்க வேண்டாம் என்பதற்காக சதுரங்கப் பயிற்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஓரிரு மாதங்களிலேயே அவருக்கு இருக்கும் சதுரங்க ஆர்வத்தை அவரது பயிற்சியாளர் அறிந்து கொண்டார். குகேஷை சிறப்புப் பயிற்சிகளுக்கு அனுப்ப பெற்றோரிடம் வலியுறுத்தியுள்ளார் அந்த பயிற்சியாளர்.
அவரது ஆர்வம் சதுரங்கத்தில் அதிகரிக்கவே, அதிக நேரத்தை சதுரங்கம் ஆடுவதில் செலவழித்தார். அவரது பெற்றோர்களும் பள்ளியும் குகேஷின் ஆர்வத்தை அங்கீகரித்து அதற்கான ஒத்துழைப்பை வழங்கினர். வார இறுதி நாட்களில் நகரில் எங்கு சதுரங்கப் போட்டி நடைபெற்றாலும் அதில் பங்கேற்று வெற்றி பெற்று, பரிசுடன் பள்ளிக்கு திரும்புவது குகேஷின் பொழுதுபோக்காகவே ஆனது.
குகேஷின் தந்தை ரஜினிகாந்த், காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை மருத்துவராக இருந்தார். சதுரங்கத்தில் குகேஷின் ஆர்வம் அதிகமாக இருப்பதைப் பார்த்து, கடந்த 2017ஆம் ஆண்டு தனது மருத்துவர் பணியைக் கைவிட்டார். எல்லா நாடுகளுக்கும் குகேஷை அழைத்துச் சென்று அனைத்து ஏற்பாடுகளையும் கவனித்துக் கொள்கிறார் குகேஷின் தந்தை. இதற்காக தனது பணியைக்கூட கடந்து ஆறு ஆண்டுகளுக்கு முன் அவர் நிறுத்திவிட்டார்.
குகேஷின் தாய் பத்மகுமாரி, சென்னை மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
FIDE தரவரிசையில் குகேஷ் தற்போது இந்தியாவில் இரண்டாவது இடத்திலும் உலகத்தில் ஐந்தாவது இடத்திலும் உள்ளார். இலோ (ELO) தரவரிசையில் 2750 புள்ளிகளை கடந்த இளம் சதுரங்க வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
|
|||||
by hemavathi on 14 Dec 2024 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|