LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- குருசாமி மயில்வாகனன்

“சொர்ணக்கா……. குளிக்கப்…………போறா”

                                                     -குருசாமி மயில்வாகனன்


    பரமேஸ்வரப்பூசாரி தன்னுடைய வீட்டை நெருங்கும்போது டீக்கடைக்காரர் மகன் அலறிக் கத்திக்கொண்டே அவரைத் தாண்டித் தெருவில் ஓடினான். வீட்டுக்கு வெளியிலேயே நின்று விட்ட பூசாரி, “நாந் தெப்பக்குளத்துக்குப் போறேன், நீயும் சீக்கிரமா வா” என வீட்டுக்கு உள்ளே இருந்த மனைவியிடம் சொல்லிக்கொண்டு அப்படியே கிளம்பினார்.

 

    பூசாரி தெப்பக்குளத்தை நெருங்கும்போது ஊரில் பாதிக்குமேற்பட்டவர்கள் தெப்பக்குளத்தைச் சூழ்ந்திருந்தனர். ஏற்கனவே சுற்றுச்சுவர் முழுவதும் சிறுவர்களும் இளைஞர்களும் நின்று கொண்டும் கால்களை ஆட்டிக்கொண்டு உட்கார்ந்துமாய் நெருக்கமாகயிருந்தார்கள். வடக்குப்படித்துறையும் அதன் கைப்பிடிச்சுவர் முழுதும் பெண்கள் மயம். எல்லா வயதுப் பெண்களும் அங்கே கூடியிருந்தனர்.

 

    எங்கும் கூட்டம் நிரம்பியிருந்த வழக்கமாக அந்த நாலுமணி மாலையில் இறங்குவெயில் சுள்ளென்றிருக்க வேண்டும். ஆனால், இரண்டு நாட்களாகப் பெய்த கடும் மழையின் ஈரத்தை விரட்டும் முயற்சியில் இருந்ததால் சூரியனின் வெப்பம் சோர்வடைந்திருந்தது. எனவே வெயில் யாருக்கும் உறைக்கவில்லை. அப்படியே, உறைத்தாலும் அது தோலைத் தாண்டுமா என்பதைச் சொல்லமுடியாது. ஏனென்றால், இவ்வளவு மக்கள் கூட்டத்தின் உணர்ச்சிக்குத்தான் இது இருக்கிறதே! எது? வேறெது! சொர்ணவள்ளிதான்.

 

    கூட்டம் ‘கோ’ எனக் கத்தியது. வேறெந்தச் சொல்லைப்போட்டு அந்தப் பேரிரைச்சலை எழுதுவது? பேரிரைச்சல் இன்னும் கூடுதலாக எழுந்தது. சொர்ணவள்ளி வந்துவிட்டது. 9 அடி உயரமிருக்கும். அகலமும் 4 அடிக்குக் குறையாமலிருக்கும். அவ்வளவு பருமனாக இல்லாவிட்டாலும் அதன் விறைத்த தன்மை ஒரு ஸ்பெஷல் ராஜபார்ட் நாடக நடிகரின் ராஜ கம்பீரத்தை ஒத்திருந்தது.

 

    தன்னினத்துக்கே உரிய நடையில் அது வந்து கொண்டிருந்தது. அதன் கழுத்தில் பாகன் தேவமாயன் உட்கார்ந்து வந்தான். பருமனும் குள்ளமுமானவன். அவன் நிறத்தில் சொர்ணக்கா நிறத்தைவிடக் கருப்பு அதிகம்தான். தலைக்கூந்தலை அவிழ்த்து விட்டிருந்தான். ஏதேனும் எண்ணெய் தடவி வந்திருக்கலாம். அது மின்னியது. சடை தோள்பட்டைக்குக் கீழே தொங்கியது. எல்லாம் சாதாரணம்தான். ஆனால் அவன் முருக்கு மீசைதான் அவனது கவர்ச்சிக்குறியீடு.

 

    தெப்பக்குளத்துப் படிக்கட்டின் அருகில் சொர்ணக்கா வந்து நிற்க, தரையில் குதித்த மாயன், மடித்துக்கட்டியிருந்த வேட்டியை அவிழ்த்துச் சுருட்டிக் கீழே வைத்துவிட்டு போட்டிருந்த உள்டவுசரோடு சொர்ணவள்ளியின் கையைப் பிடித்துக்கொண்டு தெப்பக்குளத்தில் இறங்கினான். கூட்டத்திலிருந்து கைதட்டலும் விசில்சத்தமும் பறந்தது. ஏழாவது படியில் மாயன் கால்வைத்தபோது அவனது நெஞ்சுக்கு மீறித் தண்ணீர் நின்றது. ஆறாவது படியில் நின்ற சொர்ணவள்ளியின் கையை விட்டுவிட்டு மாயன் தண்ணீருக்குள் முங்கினான். தனது கையினால் தண்ணீரை உறிஞ்சிய சொர்ணவள்ளி, முங்கியவன் எழுந்தபோது அவன் தலைமீது அதை வேகமாய்ப் பீச்சியது. விசிறியடிக்கப்பட்ட தண்ணீரில் மூடுவெயில் ஒளிபட்டு மின்னியது. கூடியிருந்த கூட்டத்தில் உற்சாகம் பொங்கியது. “மாயண்ணே! மாயண்ணே!” என சிறுவர் கூட்டம் கதறுகிறது. ஊரே அதிருகிறது. இப்போது ஊருக்குள்ளே யாருமே இல்லை. ஊரே தெப்பக் குளத்தைச் சுற்றி நிற்கிறது.

 

    சிறுவர்களின் அழைப்பின் அர்த்தம் புரிந்த மாயன் தனக்குள் சிரித்துக்கொண்டான். மீண்டும் தண்ணீருக்குள் முங்கிய அவனது தலைமட்டுமே இப்போது வெளியே தெரிந்தது. “ம்! ம்!” எனப் பெரிதாய் உறுமினான். டக்-கெனக் குளத்துக்குள் மூழ்கிவிட்டான். மாயனைக் காணோம். கூட்டம் அதற்கும் கதறியது. அனைவரது கவனமும் மணிமண்டபம் பக்கம் திரும்பியது. தெப்பக்குளத்தின் நடுவில் அந்த மணிமண்டபமிருந்தது. படித்துறைக்கும் மண்டபத்திற்கும் இடையே சுமார் 50 மீட்டர் இடைவெளி இருக்கும். தளும்பத் தளும்பத் தன்ணீர் பெருகிப் போயிருந்த தெப்பக்குளத்தின் ஆறாவது படியில், முழங்காலுக்கும் கீழளவுத் தண்ணீரில் நின்று கொண்டிருந்த சொர்ணவள்ளி தண்ணீருக்குள் முங்கிய மாயனைத் தேடியது. கூட்டத்தின் இரைச்சல் தொடர்ந்து கொண்டிருந்தபோதே மாயன் மணிமண்டபத்தின் கிழக்குப் பகுதியில் தாவி ஏறி அதன் சுற்றுத் தரையில் அமர்ந்தான். தளும்புகிற தண்ணீரில் பட்டுத் தெரித்த கூட்டத்தின் இரைச்சலை தெப்பக்குளமும் எதிரொலித்தது.

 

    அமர்ந்திருந்த மாயனை மேற்குப் படித்துறையில் நின்ற சொர்ணவள்ளியால் பார்க்க முடியவில்லை. அது தண்ணீருக்குள் அவன் முங்கிய இடத்தை தனது தலையை ஆட்டிக்கொண்டே பார்த்துக் கொண்டிருந்தது. மாயன் எழுந்து  மணிமண்டபத்திம் மேற்குப்பகுதிக்கு நடந்து வந்தான். கூட்டத்தின் இரைச்சல் குறைய ஆரம்பித்தது. தென்கிழக்கு முனைக்கு வந்த மாயன், இருகைகளாலும் தண்ணீர் வழியும் தனது கூந்தலைப் பின்புறமாய்ச் சுருட்டினான். குறையத் துவங்கிய இரைச்சல் சில வினாடிகளில் முழுவதுமாய் நின்றுவிட்டது. மாயனைக் கவனித்தது. முகத்தைத் துடைத்துக்கொண்ட மாயன் தனது இருகைகளையும் வட்டமாய்க் குவித்து உதடுகளைச் சுற்றி வைத்துக் கொண்டான். அந்த திடீர் அமைதியைக் கிழித்துக்கொண்டு அடிவயிற்றிலிருந்து கிளம்பி வந்தது அவன் குரல். ……..சொர்ணவள்ளீ…..ஈ…….ஈ….

 

    அந்தக்குரல், விசிறிக்கொண்டிருந்த சொர்ணவள்ளியின் காதுகளை அடைந்ததும் தலையை நிமிர்த்திப் பார்த்தது. தனது இடுப்பில் இரண்டு கைகளையும் வைத்தவாறு கால்களை அகட்டி மணிமண்டபத்தின் தென்கிழக்கு முனையில் நின்றுகொண்டு தன்னையே பார்த்துக் கொண்டிருந்த மாயன் இப்போது தெரிந்தான். ஆறாவதிலிருந்து ஏழாவது படிக்கு இறங்கிய சொர்ணவள்ளிக்கு அதுதான் கடைசிப்படி என்பது தெரியும். சடாரெனத் தெப்பக்குளத்தில் குதித்தது.

 

    அப்போது கிளம்பிய கூட்டத்தின் பேரிரைச்சலால் அருகிலிருந்த கோயிலின் கோபுரம் தடுமாறும் போலத் தோன்றியது. கூட்டத்து மக்கள் கொந்தளித்துப்போய்க் குரலெழுப்பினார்கள். படிக்கட்டுகளில் நின்றிருந்த பலர் ஆட ஆரம்பித்தனர். சுற்றுச் சுவர்களில் நின்றுகொண்டிருந்த இளைஞர்களில் பலர் தண்ணீருக்குள் குதித்தனர். சில சிறுவர்களும்கூட துணிச்சலாய்க் குதித்தனர். பெண்களெல்லாம் தமது கைகளைக் குவித்து சொர்ணவள்ளியை நோக்கியும் கோபுரத்தைப் பார்த்தும் வணக்கம் செய்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பெயரைச் சொல்லிக்கொண்டனர். அப்பெருங்கூட்டத்தின் ஓரிடத்தில் நின்றிருந்த பரமேஸ்வரப் பூசாரியின் கண்களில் தண்ணீர் வடிந்தது.

 

    அருகிலிருக்கும் கோபுரத்தின் உச்சியிலிருந்து தெப்பக்குளத்தைப் பார்த்தால், பரந்து விரிந்த அந்தத் தெப்பக்குளத்தில், பச்சைப் பசேலென்ற அந்தக் கரும்பச்சைத் தண்ணீரில் சொர்ணவள்ளி நீந்திக்கொண்டிருப்பது மிதப்பது போலத் தெரிந்திருக்கும். மிகப் பிரம்மாண்டமான அந்த உருவத்தின் நீச்சல் அதைப் பார்த்துக்கொண்டிருந்த மனிதர்களை உணர்ச்சி ததும்பிப் பொங்க வைத்தது.

    மாயன் மணிமண்டபத்தின் தென்கிழக்கு முனையிலிருந்து நகர்ந்து ஓரக்காலிலேயே, மேற்கே வந்து பிறகு வடக்கே வந்து மீண்டும் தென்கிழக்குப் பகுதியின் முனைக்கு வந்தான். சொர்ணவள்ளியும் அதுபோலவே தெப்பக்குளத்தை ஒரு சுற்று வந்து. மாயனருகில் நின்றது. ஒரு டைவ் அடித்த மாயன் நீந்திப்போய் சொர்ணவள்ளியின் கழுத்தில் ஏறிக் கொண்டான். கூட்டத்தின் இரைச்சலும் இனி அதிகரிக்கவே முடியாத அளவிற்கு கூடுதலாக ஒலித்தது. ஏற்கனவே குதித்திருந்த இளைஞர்களும் சிறுவர்களும் சொர்ணவள்ளியைச் சுற்றி வட்டமாய் நீந்தி வந்தனர். சொர்ணவள்ளியின் கழுத்தில் மாயன் தொடையில் இருகைகளையும் ஊன்றி அமர்ந்திருக்க, சொர்ணவள்ளி நீந்த, அதைச்சுற்றிப்பலர் வட்டமாய் நீந்திவர அது ஒரு தேரோட்டம் போலத் தோன்றியது.

 

    வடக்குப் படித்துறையின் மேலேறிய சொர்ணவள்ளியைச் சுற்றி மக்கள் கூடினர். சிலர் அதைத் தொட்டனர். பலர் அதை தொட்டு வணங்கினர். காதுகளையும் கையையும் ஆட்டியவாறு நடந்த சொர்ணவள்ளி கோயிலுக்குள் புகுந்தது. கூட்டம் களைய ஆரம்பித்தது. நீந்தியவர்களில் சிலர் மணிமண்டபம் வரை மீண்டும் போய்வந்து விட்டுக் கரையேறினார். இரைச்சல் கரைந்தது. போகும் போது பரமேஸ்வரப் பூசாரி சொன்னார், “சாகிறதுக்குள்ள இன்னோருக்கப் பாத்துட்டுச் சாகனும்”. விழுந்த பொழுது தேய்ந்ததற்குப் பின் மாலை நேரமும் இருளாகியது.

    கோயிலின் உள்ளே வனமண்டபத்தின் நடுவே நிற்கும் சொர்ணவள்ளியால் எதிர்பார்க்கப் பட்டிருந்த தகரப்பெட்டிகள் வரிசையாக வலதுபுற மேடையில் இறக்கி வைக்கப்பட்டிருந்தன. இறக்கி வைத்தவர்கள் சென்றதும் மாயன், சொக்கனைக் கூப்பிட்டான். ஓடிவந்த சொக்கன் புரிந்துகொண்டு பாதிக்கும் மேலான தகரப்பெட்டிகளை மண்டபத்திற்கு வெளியில் நின்றுகொண்டிருந்த தட்டுவண்டியில் தூக்கிக் கொண்டு போய் வைத்தான். சொர்ணவள்ளி இதைப் பார்த்துக் கொண்டேயிருந்தது, வழக்கம் போல. ஒவ்வொரு தகரப்பெட்டியின் மூடியையும் தனித்தனியாகக் கழற்றிவைத்தான் மாயன். நெய்வாசம் அதிலிருந்து வந்தது. இளம் மஞ்சள் நிறத்தில் உருட்டி வைக்கப்பட்டிருந்த பொங்கல்சோற்று உருண்டைகள். மாயன் தனது இரு கைகளாலும் ஒவ்வொன்றாக எடுத்து சொர்ணவள்ளியின் கையில் வைக்க அதை அப்படியே வாய்க்குள் நுழைத்து தள்ளிவிட்டது. இந்த வேலை இங்கு நடந்தாலும் ஏனோ அதன் பார்வை தட்டுவண்டியின் மீதே வெறித்தவாறு இருந்தது. வண்டியைச் சொக்கன் எடுத்துச் செல்கிறான். சொர்ணவள்ளியின் கண்களின் வண்ணம் மெதுவாக மாறிக்கொண்டிருந்தது.

 

    சாப்பாடு முடிந்தது. பதிநாலு உருண்டைகள். இனி வசந்த மண்டபத்திற்குப் போய் கால்களில் சங்கிலியைப் போட்டு பூட்டிவிட்டால் சொர்ணவள்ளியின் அன்றைய வேலைகள் முடிந்துவிடும். அதன்பிறகு கோவிலுக்கு வரும் பக்தர்களுக்குக் காட்சிப்பொருளாயும், வணங்கப்படும் உயிராயும் அங்கே கிடக்கும் கரும்புத்தோகையை அசை போட்டுக்கொண்டே நிற்கவேண்டியதுதான். இன்று அபூர்வமாக வருடத்திற்கு ஒருமுறையோ அல்லது இல்லாமலோ போகிற நீச்சுக்குளியல் நடந்தது என்பதால் கொஞ்சம் முன்னதாக அதற்கு ஓய்வு விடப்படும். சாதாரணக்குளியல் என்றால் அந்திவாரிப்பூசை முடியும் வரை சொர்ணவள்ளியும் வனமண்டபத்திற்குள்ளேயே நிற்க வேண்டும். இனி வசந்த மண்டபத்திற்குப் போகலாம்.

 

    வசந்த மண்டபத்திற்குப் போக சொர்ணவள்ளி மறுக்கிறது. மாயன் மெதுவாக அதட்டினான். சொ…ர்…ண….வ…..ள்…..ளீ… இல்லை. சொர்ணவள்ளி கேட்கவில்லை. சோறு தீர்ந்து காலியான தகரப்பெட்டிகளை இடது புற மேடையில் அடுக்கி வைத்துவிட்டு வந்த மாயன் சொர்ணவள்ளியின் கையைப்பிடித்து மீண்டும் இழுத்தபோதும் வர மறுத்தது. மாயன் கோபமாகிக் கொண்டிருந்தான். தட்டுவண்டியில் திரும்பிவந்த சொக்கன் வண்டியை விட்டு இறங்கி வந்து, “என்னண்ணே” என்றான். “என்னடா, ரொம்பக்கோவமா இருக்கா”, சொல்லிய மாயன் சொர்ணவள்ளியின் காதுக்குப்பின்புறம் ஓங்கித்தட்டி, ‘ம்! நட! நட!’ என்றான். இல்லை. நூலளவுகூட சொர்ணவள்ளி நகரவில்லை. ஏற்கனவே ஆட்டிக்கொண்டிருந்த தலையை இன்னும் வேகமாக ஆட்டி மறுத்தது. அதன் கை தட்டுவண்டியின் பக்கம் நீண்டது. அதைக்கவனித்த சொக்கன் ‘இன்னும் பசிக்குமோண்ணே’ என்றான். சொர்ணவள்ளியின் மாறிப்போன கண்களின் வண்ணம் இளஞ்சிவப்பாயிருந்தது. மூச்சும் இரைக்க ஆரம்பித்தது.

 

    மேற்கு மேடைத்தூணில் கட்டப்பட்டிருந்த மூங்கில் தடுப்பில் மாட்டி வைக்கப்பட்டிருந்த நீளமான துணிப்பையிலிருந்து இரண்டடிக் குச்சி ஒன்றை எடுத்து வந்தான் மாயன். அதன் நுனியில் கூர்மையான முனையைக் கொண்ட, சுண்டுவிரல் மோதிரம் அளவேயான ஒரு அலுமினிய வளையக் கொக்கி சொருகப்பட்டிருந்தது. சொர்ணவள்ளியின் இடது காதின் பின்புறம் அந்தக் கொக்கியைக் கொண்டு போய்க் குத்தி மாட்டிய மாயன் அதைத் திருகினான். ஒரு சொட்டு ரத்தம் கசிந்தது. ஆட்டிக்கொண்டிருந்த தலையை நிறுத்தியது சொர்ணவள்ளி. கோபமாக மாயன் ஏதேதோ சொல்லிக்கொண்டிருந்தான். இதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சொக்கன் சொர்ணவள்ளியைப் பார்த்த நேரத்தில்தான், சொர்ணவள்ளியின் கை மாயனின் இடுப்பைச் சுற்றிவளைத்து இறுகப் பிடித்தது. என்னவென்று யோசிப்பதற்குள் மாயனை அப்படியே மேலே தூக்கிய சொர்ணவள்ளி, இடது பக்க கிழக்குமேடைத் திண்ணையில் ஓங்கி அடித்தது. ஒரே அடிதான். ஒரு நொடியில் இது நடந்தது. அதிர்ந்து பார்த்துக்கொண்டிருந்த சொக்கனின் மீது நொறுங்கிய மாயனின் தலையிலிருந்து வந்த ரத்தமும் சதையும் தெரித்துச் சிதறியது. அலறி ஓடினான் சொக்கன்.

 

    கோவிலுக்கு வெளியே செய்திகேட்டுத் திரண்டிருந்த மக்களைப் பாதுகாப்புப் படையும், போலீசும் கட்டுப்படுத்தமுடியாமல் திணறினர். கோவிலின் உள்ளே கூடுதல் வெளிச்சத்திற்காக மின்விளக்குகள் தூண்களில் கட்டப்பட்டிருந்தன. கோவில் மேலாளர், போலீஸ் ஆய்வாளர், மருத்துவர்கள், முக்கியமான நிர்வாகிகள் என பதினைந்துபேர் அங்கிருந்தனர். மாயனின் உடலைத் தூக்கிச் செல்வதற்கான தூக்குப் படுக்கை கோயிலுக்கு உள்ளேயும், கொண்டுசெல்வதற்கான அமரர் ஊர்தி கோயிலுக்கு வெளியேயும் தயாராக இருந்தன.

 

    சொர்ணவள்ளி வலமும் இடமுமாய் கால்களை அசைக்காமல் தன்னை வேகமாக ஆட்டிக்கொண்டே நின்று கொண்டிருக்கிறது. அதன் முன்னங்காலருகில் மிச்சமிருந்த மாயனின் முகம் சிதறிய உடல் ஒருக்களித்தவாறு கிடக்கிறது. யாரும் நெருங்க முடியவில்லை. சொக்கன் அரைமணி நேரத்துக்கு முன்பு நெருங்கியபோது சீறியது போலவே சொர்ணவள்ளி இப்போதும் சீறிக்கொண்டிருந்தது. அங்கு நின்றிருந்த எல்லோருக்குமே அடிவயிற்றில் பயம் இருந்தது. தகரப்பெட்டிகளைப் பற்றி சொக்கன் எல்லோரிடமும் சொல்லியிருந்தான். ஆனால், நான்கு கால்களையும் பதித்த இடத்தை விட்டு நூலளவு கூட நகர்த்தாமல் அப்படியே நின்றது சொர்ணவள்ளி.

 

மருத்துவர் மேலாளரிடம் கேட்டார், “என்ன சார். நேரம் போய்கிட்டேயிருக்கு. ஏழுமணிநேரம் ஆச்சு சார்.” மேலாளர் பதில் சொன்னார், “பொள்ளாச்சி பாரஸ்டுக்குத் தகவல் சொல்லியாச்சு சார். அங்கிருந்து வந்ததுதான் இது. கொண்டாந்து விட்டவரு ரிட்டயர்டு ஆயிட்டாராம். இருந்தாலும் உள்ளூருதானாம் எல்லோரும் அப்போதே பொறப்புட்டாங்களாம். இன்னும்     அரைமணி நேரம்தான். வந்திருவாங்க சார். கொஞ்சம் பொறுத்துக்குங்க சார்”. டெட்டாலும், பினாயிலும் கலந்த கலவையை அந்த இடத்தைச் சுற்றிலும் தெளித்திரிந்தார்கள். அதன் வாசனை கோயிலுக்கு வெளியேயும் வந்தது.

 

    பொள்ளாச்சியிலிருந்து வந்தவர் சொர்ணவள்ளியிடம் ஏதேதோ சொல்லிக்கொண்டே, அது தன்ணீர் குடிக்கும் பெரிய அகலமான சட்டியை அதன் பக்கம் நகர்த்தினார். ஏற்கனவே தான் கொண்டு வந்திருந்த பொடியை அந்தத் தண்ணீரில் கலந்திருந்தார். தண்ணீரைக் குடிக்க ஆரம்பித்தது சொர்ணவள்ளி. வயதான பொள்ளாச்சிக்காரர் சொல்லச் சொல்ல சொர்ணவள்ளியின் சீற்றமும் மெதுவாகக் குறைய ஆரம்பித்தது. அவர் மாயனின் உடலை மெதுவாக இழுத்தார். மாயன் தூக்கிச் செல்லப்பட்டு விட்டான்.

 

    மேலாளரிடம் பொள்ளாச்சிக்காரர் சொன்னார், “தேறாதுங்க அய்யா, பின்னால பிரச்சினை     வரும்”

 

    “அப்ப என்ன செய்யுறது”

    “முன்னாலேயே முடிச்சுக்குங்க, கேட்டுச் சொல்லுங்கய்யா!, கொக்கி உள்ளபோய்ச் சிக்கீருச்சு.     வைத்தியச்செலவுதான் ஆகும். வேற வழியில்லீங்க அய்யா”

 

    மருத்துவரும் ஆமோதித்தார். அவர்கள் கூடிப்பேசினார்கள். மேலாளர் பலபேரிடம் போனில் பேசினார். பொள்ளாச்சிக்காரருக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தார் மேலாளர். உடனே விடை பெற்றுப்போன அவர் சரியாக மறுநாள் மதியம் ஒரு மணிக்கு வந்தார் கையிலிருந்த பெரிய லெதர் பேக்கிலிருந்து ஒரு மூங்கில் குச்சியால் கட்டப்பட்ட கூடையினை எடுத்தார். மருத்துவரும் வந்துவிட்டார், அவர், பொள்ளாச்சிக்காரர், மேலாளர், சொக்கனைத் தவிர மற்றவர்கள் யாரும் இப்போது அங்கில்லை. அசந்துபோய் நின்றுகொண்டிருந்த சொர்ணவள்ளிக்கு ஒரு ஊசியினைப் போட்டார் மருத்துவர். ஊசிக் குழாயிலிருந்த மருந்து அதன் உடலில் இறங்கத் திணறியது. அதன் பெருமூச்சு அப்போது வெகுவாகக் குறைந்திருந்தது.

 

    டாக்டர் ஊசியைப் போட்டு விட்டு வீட்டிற்கு வந்து குளித்துவிட்டு உடனே வெளியூருக்குப் புறப்பட்டுப் போய் விட்டார். அவரது குடும்பம் முதல் நாளே ஊரைக் காலி செய்து போய் விட்டிருந்தது. அந்த இரவே சொர்ணவள்ளி இறந்து விட்டது. மறுநாள் காலையில் சொர்ணவள்ளியின் உடலருகில் அடர்கருப்பான நிறத்தில் நீளமான விரியன் பாம்பு ஒன்றும் செத்துக் கிடந்தது. பொள்ளாச்சிக்காரர் தான் கொண்டுவந்த கூடையிலே செத்துக்கிடந்த பாம்பையும் எடுத்து வைத்தார்.

   

கருநாகம் தீண்டி சொர்ணவள்ளி இறந்ததாகவும், சொர்ணவள்ளி மிதித்து கருநாகம் செத்ததாகவும் ஊரில் மக்கள் சொல்லிக்கொண்டனர். சொர்ணவள்ளியின் உடலில் பாம்பு விசம் இருந்ததாக பிரேதப்பரிசோதனை அறிக்கை சொன்னது. ஊரெங்கும் இதே பேச்சு. ஓங்கிப்பேசும் குரல் எங்குமே கேட்கவில்லை. மாயன் உடல் அடக்கத்தில் நல்ல கூட்டம். சொர்ணவள்ளியின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. தெப்பக்குளத்தைச் சுற்றிப் போய் மேற்கேயிருந்த கோயில் இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. சில நாட்களில் அங்கொரு மண்டபமும் கட்டப்பட்டது. சில நாட்களில் ஊர்க்காரர்கள் அதை வழிபடவும் ஆரம்பித்தனர்.

   

மாயனை எரித்த ஊர்ச் சுடுகாட்டில் அதற்குப் பிறகும் பலரை எரித்திருந்தனர். அவர்களில் பலர் சொர்ணவள்ளி- மாயன் நீச்சல் விளையாட்டைப் பார்த்தவர்கள்தான். பரமேஸ்வரப் பூசாரியும் அதில் ஒருவர்.

by Swathi   on 12 Sep 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கரடியின் கர்வம் கரடியின் கர்வம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.