|
|||||
பிரதமர் திறந்துவைத்த பாம்பன் புதிய ரயில் பாலத்தின் சிறப்பம்சங்கள் என்னென்ன? |
|||||
![]() மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து, ராமேஸ்வரம் ரயில் நிலையத்திற்குச் செல்லும் வழியில் கடல் நடுவே புதிதாகக் கட்டப்பட்ட செங்குத்து தூக்கு பாலத்துடன் கூடிய புதிய ரயில் பாலத்தைப் பிரதமர் நரேந்திரமோடி திறந்து வைத்தார். பாம்பனில் நூற்றாண்டு பழமையான தூக்குப் பாலத்திற்குப் பதிலாக இந்த புதிய பாலம் நிறுவப்பட்டுள்ளது.
முதலில் பழைய பாலத்தின் சிறப்புகளைப் பார்ப்போம்.
பாம்பன் ரயில் பாலம் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழ்நாட்டின் அடையாளங்களில் ஒன்றாக விளங்குகிறது. நூற்றாண்டு பழமையான பாம்பன் பாலம் சிகாகோவின் ஸெர்ஷர் ரோலிங் மின்தூக்கி பிரிட்ஜ் (Scherzer Rolling lift Bridge) நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு இங்கிலாந்தின் தோர்னபி-ஆன்-டீஸின் ஹெட் ரைட்சன் ரூ கோ லிமிடெட் (Head Wrightson & Co Ltd of Thornaby -on –Tees) மூலம் கட்டப்பட்டது.
இந்தப் பாலத்தின் ஸ்பெயினைச் சேர்ந்த பொறியாளர் ஸெர்ஷர் வடிவமைத்துச் செயல்படுத்தியதால் ஸெர்ஷர் பாலம் எனப் பெயரிடப்பட்டது. கடல் மட்டத்திலிருந்து 12.5 மீட்டர் (41 அடி) உயரத்தில் அமைந்துள்ளது இப்பாலம். 2.05 கி மீ நீளமுள்ள இந்தப் பாலம் 143 தூண்களைக் கொண்டது. பாலத்தில், கப்பல்கள் கடந்து செல்வதற்கு ஏதுவாக பாலத்தின் மையப் பகுதியில் 289 அடி நீளத் தூக்கு பாலம் அமைந்துள்ளது. தூக்கு பாலத்தின் இரண்டு தூக்குகளும் நெம்புகோல்களைப் பயன்படுத்தி கையால் திறக்கப்படுகின்றன.
1964 ஆம் ஆண்டு தனுஷ்கோடியைத் தாக்கிய புயலின் போது பாம்பன் ரயில் பாலத்தின் 124 ஸ்பான்கள் அடித்துச் செல்லப்பட்டன.
ஷெர்சர் ஸ்பானும் 19 கான்கிரீட் தூண்களும் மட்டுமே தப்பின. அப்போது செயற்பொறியாளராக இருந்த ஸ்ரீதரன் தலைமையில் புனரமைப்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டன. கடலிலிருந்து கர்டர்கள் மீட்டெடுக்கப்பட்டுப் புனரமைப்புப் பணிகள் 67 நாட்களில் முடிக்கப்பட்டன.
பாம்பன் ரயில் பாலத்தின் 56-ஆவது தூணில் அனிமோமீட்டர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்தக் கருவி காற்றின் வேகத்தைப் பதிவு செய்யும். மணிக்கு 58 கிமீ வேகத்தைக் காற்று தாண்டும் போதெல்லாம், பாலத்தின் மீது ரயில்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
பாம்பன் பாலம் கட்டப்பட்ட போது அதன் மீது குறுகிய அகலம் கொண்ட (மீட்டர் கேஜ்) ரயில் பாதை இருந்து வந்தது. ரயில்வே பொறியாளர்கள், சென்னை ஐஐடி மற்றும் தமிழ்நாடு அரசின் தொழில்நுட்ப நிபுணர்களுடன் சேர்ந்து, விரிவான ஆய்வை மேற்கொண்டு, புதிய பாலம் கட்டுவதற்குப் பதில், தற்போது உள்ள பாலத்தை அகலப்பாதை தரநிலைகளின்படி மாற்றப் பரிந்துரைத்தனர்.
அதன்படி, பாம்பன் ரயில் பாலத்தில் ரூ. 24 கோடி செலவில் அகல ரயில் பாதை பணிகள் மேற்கொள்ளப்பட்டு 47 கர்டர்கள் (தூண்கள்) புதிதாக மாற்றப்பட்டன. மேலும் 98 கர்டர்கள் அகலப்பாதை தர நிலைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டு மானாமதுரை - ராமேஸ்வரம் அகல ரயில் பாதைப் பிரிவு, ஆகஸ்ட் 12, 2007 அன்று போக்குவரத்துக்காகத் திறக்கப்பட்டது.
1914 முதல் 1988 வரை, ரயில்வே பாலத்தையொட்டி சாலைப் பாலம் கட்டப்படும் வரை, ராமேஸ்வரம் தீவிற்கு ஒரே இணைப்பாக இந்தப் பழைய கடல் பாலம் மட்டுமே இருந்து வந்தது.
நூற்றாண்டுக் காலச் சேவைக்குப் பிறகு, சென்னை ஐஐடி நிபுணர்கள் குழு ரயில் போக்குவரத்தின் போது பாம்பன் பாலத்தின் மையப் பகுதியில் உள்ள தூக்கு பாலத்தில் அதிகப்படியான அதிர்வுகள் ஏற்படுவதைக் கண்டறிந்தனர். இதனால் பாதுகாப்பு கருதி, 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ம் தேதியுடன் பாம்பன் பாலம் வழியாகச் செல்லும் அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டது.
பாம்பன் பாலத்திற்கு அருகிலேயே புதிய ரயில் பாலத்துக்கு 01.03.2019-ல் பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலம் அடிக்கல் நாட்டினார். ரூ.545 கோடி மதிப்பில் பணிகள் துவங்கின. புதிய ரயில் பாலம் பாலம் 2078 மீட்டர் நீளமும், கடல் மட்டத்திலிருந்து 15.5 மீட்டர் உயரம் கொண்டது. அதாவது பழைய பாலத்தைக் காட்டிலும் 3 மீட்டர் உயரமானது. 333 கான்கிரீட் அடித்தளங்கள், 101 தூண்களும், 99 இணைப்பு கர்டர்களையும் கொண்டது.
அதிக துருப்பிடிக்கும் சூழலைக் கொண்ட பாம்பன் பகுதியில் புதிய பாலம் கட்டப்பட்டுள்ளதால் துருப்பிடிக்காமல் இருக்கப் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
துருப்பிடிக்காமல் இருக்க உதவும் வர்ணங்கள் பல அடுக்குகளாகப் பூசப்பட்டுள்ளன. முதல் அடுக்கில் 200 மைக்ரான் துத்தநாகக் கலவை, அடுத்த அடுக்கில் 25 மைக்ரான் ஜெல்லி போன்ற எபோக்ஸி பூச்சு, கடைசி மேல் அடுக்கில் சிலிக்கான் ஆக்சிஜன் கலந்த சிந்தடிக் பாலிமர் பூச்சு செய்யப்பட்டது.
இந்தியாவிலேயே முதன்முறையாக, பாலத்தின் நடுவே கப்பல்கள் கடந்து செல்லச் செங்குத்து தூக்கு பாலம் இங்கே கட்டப்பட்டுள்ளது. பழைய ரயில் பாலத்தில் உள்ள தூக்குப்பாலம் இரும்பாலானது, 400 டன் எடை கொண்டது. அத்துடன் மனித உழைப்பைக் கொண்டு இயங்கக் கூடியது.
ஆனால் புதிய ரயில் பாலத்தின் நடுவே அமைக்கப்பட்டுள்ள செங்குத்து தூக்கு பாலத்திற்கு விமானத் தொழில் நுட்பத்தில் பயன்படக் கூடிய அலுமினிய உலோகக் கலவை (Aluminium alloy) கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் எடை சுமார் 650 டன் ஆகும். இந்தச் செங்குத்து தூக்கு பாலத்தின் உயரம் 33 மீட்டர், நீளம் 77 மீட்டர் ஆகும்.
மனித உழைப்பின்றி மோட்டார்கள் மூலம் ஹைட்ராலிக் மின்தூக்கி மூலம் இவற்றை இயக்க இயலும். இதன் மூலம் 5.3 நிமிடத்தில் பாலத்தை மேலே தூக்கித் திறந்து விட முடியும். கப்பல் கடந்து செல்வதற்கு வசதியாக பாலத்திலிருந்து 17 மீட்டர் உயரத்திற்கு உயர்த்தலாம். இது சாலை பால உயரத்திற்கு இணையானது. பாலத்தின் இருபுறமும் உள்ள கோபுரங்களில் ஹைட்ராலிக் மின்தூக்கியை இயக்கக்கூடிய இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. அங்குக் கணினி மூலம் 650 டன் எடை கொண்ட செங்குத்து தூக்கு பாலம் மேலே தூக்கி கீழே இறங்கி இயக்கப்படுகிறது.
செங்குத்து தூக்குப்பாலம் உணர்கருவிகள் பொருத்தப்பட்டு முழுமையாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. கப்பல் பாம்பன் பாலம் வழியாகக் கடந்து செல்லும் போது மட்டுமே இந்தச் செங்குத்து தூக்கு பாலம் திறக்கப்படும். செங்குத்து தூக்கு பாலத்திற்கு அருகில் இரண்டு மாடிக் கட்டடத்தில் இயக்குபவர் அறை, டிரான்ஸ்பார்மர் அறை, மின்சார கம்பிவடம் உள்ளிட்ட சாதனங்கள் வைப்பதற்கான அறை கட்டப்பட்டுள்ளது
|
|||||
by hemavathi on 08 Apr 2025 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|