|
|||||
யுனெஸ்கோ பாரம்பரியச் சின்னமாக அறிவித்த செஞ்சிக்கோட்டையின் வரலாறு |
|||||
தமிழ் நிலத்தை ஆண்ட மன்னர்கள் எப்படி வாழ்ந்தார்கள், எங்கே இருந்து ஆட்சி செய்தார்கள் என்பதற்கெல்லாம் சாட்சி சொல்லும் சரித்திர அடையாளமாகக் கம்பீரத்துடன் நிமிர்ந்து நிற்கிறது செஞ்சிக் கோட்டை. சுமார் 830 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட செஞ்சிக் கோட்டை, முழுமையான வடிவத்துடன் மிச்சமிருக்கும் ஒரே தமிழ் மன்னர்களின் கோட்டை. தர்பார் மண்டபம், அந்தப்புரம், படைவீடுகள், யானை மண்டபம், குதிரை லாயங்கள், மாட மாளிகைகள், கோயில்கள், தானியக்களஞ்சியங்கள், ஆலயங்கள், உடற்பயிற்சிக்கூடம், பீரங்கி மேடை, வெடிமருந்துக் கிடங்கு, தோரண வாயில்கள், காவல் அரண்கள், பாதாளச் சிறை, மதில்சுவர், அகழி என ஒரு கோட்டைக்கான சகல அம்சங்களோடும் தமிழகத்தில் இருக்கும் ஒரே கோட்டை, செஞ்சிக் கோட்டை.
சோழ மன்னர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு செஞ்சி எழுச்சி பெற்றது. புதுச்சேரிக்கும் திருவண்ணாமலைக்கும் இடையில் இன்று ஒரு சிறுநகரமாக இருக்கும் செஞ்சி, ஒரு காலத்தில் ஆந்திராவின் நெல்லூரிலிருந்து தஞ்சை வரை பரவியிருந்த நெடு நிலத்தின் தலைநகராக இருந்தது.
செழிப்பும் செல்வமும் நிறைந்த நகராகச் செஞ்சி திகழ்ந்தது. செஞ்சிக்கு வந்திருந்த போர்ச்சுக்கீசிய மதபோதகரான பிமெண்டா, ‘நான் இந்தியாவில் பார்த்த நகரங்களில் செஞ்சி மிகச் சிறப்பானது. போர்ச்சுக்கல் நாட்டில் இருக்கும் லிஸ்பன் நகரைத் தவிர மற்ற எல்லா நகரங்களையும்விட இது பெரியது’ என வியந்து எழுதினார். அப்போது தென்னிந்தியாவில் மிக வசதியான தேசமாகச் செஞ்சி கருதப்பட்டது.
அந்தக் கால மன்னர்கள் போர் செய்து எதிரிகளை வெல்வதைவிட, சொந்த நாட்டின் மக்களை எதிரிகளிடமிருந்து பாதுகாப்பதையே பெருமையாகக் கருதினர். அப்படி ஒரு பாதுகாப்பான தலைநகரமாகச் செஞ்சி இருந்தது. 60 அடி அகலக் கோட்டைச்சுவர், அதற்கு வெளியில் 80 அடி அகலத்தில் அகழி, அதைத் தாண்டி மலையும் காடுகளும் என இயற்கை அரண்கள் சூழ்ந்த செஞ்சிக்கோட்டை, இந்தியாவின் மிகப் பாதுகாப்பான கோட்டையாக இருந்தது. இதனாலேயே இதை 'கிழக்கு உலகத்தின் டிராய் கோட்டை’ என ஐரோப்பியர்கள் புகழ்ந்தனர். பல ஆண்டுகள் எதிரிப்படைகள் முற்றுகையிட்டாலும் வீழாத கோட்டையாக இது இருந்தது.
இவற்றில் உயரமான மலை, ராஜகுரு. ஓர் உரலில் குழவியை வைத்தது மாதிரி செங்குத்தான மலைப் பகுதி இதன் உச்சியில் உள்ளது. 800 அடி உயரமுள்ள மலை இது. 1012 படிகளில் ஏறி மேலே செல்ல வேண்டும். இதன் உச்சியை நெருங்கும் இடத்தில் இயற்கையாகவே ஒரு மலைப்பிளவு உண்டு. இதன்மீது இப்போது மரப்பாலம் அமைத்திருக்கிறார்கள். முன்பு இங்கிருந்த தற்காலிகப் பாலத்தைப் போர்க்காலங்களில் அகற்றிவிட்டால், எதிரிகள் நெருங்கவே முடியாது. அரசவை உள்ளிட்ட மன்னரின் நிர்வாகப் பணிகள் நடைபெறும் இடம் இது.
இரண்டாவது மலை, கிருஷ்ணகிரி. சுமார் 300 விருந்தினர்களை மன்னர் சந்திக்கும் அழகிய தர்பார் மண்டபம் இதன் உச்சியில் உள்ளது. காற்று உள்ளே வந்து தாலாட்ட வசதியாகத் திறந்த சாளரங்களுக்கு மத்தியில் மன்னர் அமர இருக்கை. சுற்றிலும் விருந்தினர் இருக்கைகள் உள்ளன. இந்த இரண்டு மலைகளிலும் கோயில்கள், தானியக் களஞ்சியம் என எல்லாமே உள்ளன.
மற்ற இரண்டு மலைகளில் காவல் அரண்கள் தவிர முக்கியமாக ஏதுமில்லை. இந்த மூன்று மலைகளுக்கு மத்தியில் கீழக்கோட்டை பகுதி உள்ளது. இங்குச் சிவன் கோயில், வேணுகோபால சுவாமி கோயில், வெங்கடரமணர் கோயில் என நிறையக் கோயில்கள் உள்ளன. இவற்றில் குறிப்பாக வெங்கடரமணர் கோயிலின் பிரமாண்டம் எவரையும் வியக்க வைக்கும்.
பாதுகாப்பு அரண்களைக் கடந்து கோட்டையின் மையப் பகுதிக்குச் சென்றால், கல்யாண மகால் நம்மை வரவேற்கும். மையத்தில் ஒரு மேடை; நீச்சல் குளம், தண்ணீர் வருவதற்குச் சுடுமண் ஓடு குழாய்கள், சுற்றிலும் அரச குடும்பப் பெண்கள் தங்குவதற்கு அறைகள் இருக்கிறது. இதன் ஒரு பகுதியில் எட்டு அடுக்குகள் கொண்ட கோபுரம் உள்ளது. மேலும் கீழும் செல்லக் குறுகிய செங்குத்தான படிகள்; ஒவ்வொரு அடுக்கிலும் நடுவில் ஒரு அறை. இதன் உச்சி வரை தண்ணீர் செல்ல அந்தக் காலத்திலேயே சுடுமண் குழாய் பதித்திருந்த தொழில்நுட்பம் வியக்க வைக்கும். இதற்கு இணையாகச் சொல்ல ஒரு கட்டடம் எங்கும் இல்லை!
இதன் எதிரில் வீரர்கள் வசித்த குடியிருப்புகள் தரைமட்டமாகக் காணப்படுகின்றன. அருகிலேயே குதிரை லாயம், யானை மண்டபம் போன்றவை உள்ளன. யானைகளைக் குளிப்பாட்ட யானைக்குளம் இருக்கிறது. வீரர்கள் பயிற்சி எடுக்க உடற்பயிற்சிக்கூடம், பக்கத்திலேயே வெடிமருந்துக் கிடங்கு போன்றவை உள்ளன. கோட்டையின் இன்னொரு பகுதியில் பாதாளச் சிறைச்சாலை உள்ளது.
சற்றுத் தள்ளி அரண்மனையும் கொலு மண்டபமும் இருந்த இடத்தின் அடிப்பகுதி மட்டும் காணக் கிடைக்கிறது. மன்னரும் மகாராணியும் வசித்த இடம் இதுதான். இதன் மையத்தில் ஒரு பிரமாண்டக் கல் மேடையும், மன்னர் சாய்ந்து உட்காரக் கல் உருளையும் உள்ளது. தினசரி மன்னர் பலரையும் சந்திக்கும் இடமாக இதுதான் இருந்திருக்க வேண்டும். பக்கத்திலேயே கல்லால் அமைத்த சுழல் படிக்கட்டுகளுடன் ஒரு கட்டடம் உள்ளது. அதன் மேலே இருந்த கட்டடங்களும் சிதைந்துவிட்டன.
இந்தக் கீழக்கோட்டை பகுதியில் பிரமாண்டத் தானியக் களஞ்சியம் இருக்கிறது. மூன்று அறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இதில் தானியங்களைச் சேகரித்து வைத்துவிட்டால், கோட்டைக்கு வெளியில் வந்து எதிரிகள் பல ஆண்டுகள் முற்றுகையிட்டாலும் சமாளித்துவிடலாம்.
செஞ்சிக் கோட்டையில் சில காலம் பேரரசர் சிவாஜி தங்கி உள்ளார். அப்போது கோட்டை அரண்களைப் பலப்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்தி உள்ளார். சுற்றுச் சுவர் மதில்கள் பலப்படுத்தப்பட்டன. காவல் அரண்கள் ஏற்படுத்தப்பட்டன. தேவையற்ற கட்டிடங்கள் அகற்றப்பட்டு புதிய கட்டிடங்கள் எழுப்பப்பட்டன. இதனைப் பேரரசர் சிவாஜி கைப்பற்றிய சில நாட்களில், செஞ்சிக்கு வந்திருந்த பிரான்சிஸ் மார்ட்டின் பதிவு செய்து இருக்கிறார்.
இவரைத் தொடர்ந்து 1678-ல் செஞ்சிக்கு வந்திருந்த ஜெசூட் பாதிரியார் ஆன்ட்ரூ பிரைரா என்பவர், ‘இந்தப் பணியில், சிவாஜி தனது முழு ஆற்றலையும் பயன்படுத்தி, முக்கிய நகரங்களைப் பலப்படுத்தத் தனது மாநிலத்தின் அனைத்து வளங்களையும் பயன்படுத்தினார். செஞ்சியைச் சுற்றி புதிய அரண்களைக் கட்டினார், அகழிகளைத் தோண்டினார், கோபுரங்களை உயர்த்தினார் மற்றும் நீர்த்தேக்கங்களை அமைத்தார். மேலும், ஐரோப்பியப் பொறியாளர்களே வியக்கும் வகையில் அனைத்து வேலைகளையும் செய்துள்ளார்’ என்று விரிவாகப் பதிவு செய்து இருக்கிறார்.
சத்ரபதி சிவாஜியின் இந்தப் பணிகள் மராத்திய அரசுக்குப் பெரிதும் கைகொடுத்தன. இதனால், இவர்களிடமிருந்து செஞ்சியைக் கைப்பற்ற முகலாயர்கள் 7 ஆண்டுகள் முற்றுகையில் ஈடுபட வேண்டியதாக இருந்துள்ளது. சிவாஜியின் ஆளுகையின் கீழ் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த கோட்டையாகச் செஞ்சிக் கோட்டை மாற்றப்பட்டது.
“மராத்தியப் பேரரசர் சத்ரபதி சிவாஜியின் ராணுவ தளங்காக அமைந்திருந்த 12 கோட்டைகளை உலகப் பாரம்பரியச் சின்னங்களாக அறிவிக்க வேண்டும் என்று மகாராஷ்டிர அரசு கோரிக்கை விடுத்தது. இதில் 11 கோட்டைகள் மராட்டியத்திலும், 12-ஆவது கோட்டை தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சிக் கோட்டை அமைந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, செஞ்சிக் கோட்டையை யுனெஸ்கோ பிரதிநிதி ஹவாஜங் லீ ஜெகாம்ஸ் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் கள ஆய்வு செய்தார். இவரது அறிக்கையைத் தொடர்ந்து செஞ்சிக் கோட்டை உள்ளிட்ட 12 கோட்டைகளையும் உலக பாரம்பரியச் சின்னங்கள் பட்டியலில் இணைத்துள்ளது யுனெஸ்கோ நிறுவனம். இதன் அறிவிப்பு ஜூலை 11 வெளியானது. பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸில் நடந்த உலகப் பாரம்பரியக் குழுவின் 47-ஆவது அமர்வில், இம்முடிவு எடுக்கப்பட்டது.
|
|||||
| by hemavathi on 14 Jul 2025 0 Comments | |||||
| கருத்துகள் | |
|
| உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|