LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

அமெரிக்க தமிழ்சங்கங்களின் பொங்கல் விழாக்களில் ஹூஸ்டன் தமிழ் இருக்கை

இவ்வாண்டு பொங்கல் விழாக்களில் அமெரிக்காவில் மிச்சிகன், சியாட்டில், சிகாகோ, சான் பிரான்சிஸ்கோ வளைகுடா, அட்லாண்டா, சான் அன்டோனியோ, டாலஸ், ஹூஸ்டன், ஃபிலடெல்ஃபியா, வாஷிங்டன் டிசி, நியூஜெர்சி, நியூயார்க் ஆகிய மாகாணங்கள்/பெருநகரங்கள் மற்றும் கனடாவின் கேல்கரி தமிழ் சங்கத்திலும், தமிழகத்தின் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு,  தேனி பொதிகை தமிழ் சங்கம், பொன்னமராவதி, தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திலும் ஹூஸ்டன் தமிழ் இருக்கையின் அறிமுகம் மிக சிறப்பாக நடைபெற்றது.

சங்கங்களின் உறுப்பினர்கள் மற்றும் விழா அரங்குகளில் குழுமியிருந்த உலகத்தமிழர்கள் பல்லாயிரக்கணக்கானோருக்கும் ஹூஸ்டன் தமிழ் இருக்கை குறித்த விழிப்புணர்வு பெறும் வகையில் இருக்கையின் நிர்வாகிகள், ஆலோசகர்கள், குறிக்கோள்கள், முன்னெடுப்புகள்,மக்களின் பங்களிப்பு, சமீப-நீண்ட எதிர்கால திட்டப்பணிகள் குறித்து பிரதிநிதிகளால் விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டன. மேலும்,அந்தந்த நகரங்களில் சங்கங்களின் நிர்வாகிகளுடன், இருக்கை பிரதிநிதிகளின் கலந்தாய்வு கூட்டங்களும் சிறப்பாக நடந்தன.

தமிழ் மொழி, தமிழரின் கலாச்சாரம்-பண்பாடு, மானுட வாழ்வியல் மற்றும் வாணிபத்திறன் ஆகியவற்றை ஆராய்ந்து, சீராக தரவாக்கவுள்ள ஹூஸ்டன் தமிழ் இருக்கையின் முழு மதிப்பான ₹42 கோடி ($6 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) சரிபாதி தொகையான ₹21 கோடி( $3 மில்லியன்) நிதியை அமெரிக்காவின் டெக்ஸஸ் மாகாண அரசு, அதன் ஆய்வகங்கள் நிறுவும் அரசின் ஊக்கத்தொகையிலிருந்து வழங்க முன்வந்துள்ளது. மீதமுள்ள ₹21 கோடி ($3 மில்லியன்) டாலர்களை திரட்டும் முன்னெடுப்பு துவங்கியுள்ள நிலையில் அதன் சரிபாதியை, அதாவது $1½ மல்லியன் டாலர்களை டெக்ஸஸ் மாகாணத்தில் வாழும் தமிழர்களே திரட்டித்தர உத்தரவாதங்களும், நிதித்திரட்டல் நிகழ்வுகளும் முழுவீச்சில் தொடங்கிவிட்டன. இதுவரை ₹2 கோடி ($0.3 மில்லியன்) பெறுமானமுள்ள நிதி திரட்டப்பட்டுள்ளது. 

தமிழகத்திலிருந்து மரபுக்கலை நிகழ்ச்சிகள் நடத்த திரு.சோமசுந்தரம் அவர்களின் தலைமையில் அமெரிக்கா வந்துள்ள கலைஞர்கள் அனைவருடனும் உரையாடல்களை நிகழ்த்திய ஹூஸ்டன் தமிழ் இருக்கையின் பிரதிநிதிகள், அந்த கலைஞர்களின் வாழ்க்கை,பொருளாதாரம், அவர்களின் எதிர்கால திட்டங்கள், அவர்களின் கலைத்தொன்மை-திறன்களை அடுத்த தலைமுறையினர் எடுத்து நடத்திச்செல்ல தேவையான முன்னெடுப்புகளுக்கு தமிழ் இருக்கை சார்பான திட்டமிடல்கள் குறித்த ஆலோசனைகளையும் நடத்தினர். ஃபிலடெல்ஃபியா, வாஷிங்டன், நியூயார்க் நகரங்களில் கலைஞர்களுடன் பயணித்த தமிழ் இருக்கையின் பிரதிநிதிகள், கலைஞர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தனித்திறன்களை கண்டுகளித்தும், வெகுவாக பாராட்டியும் மகிழ்ந்தனர்.

தமிழகத்தின் கல்வித்துறையில் குறிப்பிடத்தக்க நல்ல மாற்றங்களையும் சீர்திருத்தங்களையும் நிகழ்வித்து காட்டி சாதித்துள்ள மதிப்பிற்குரிய திரு.உதயசந்திரன் ஐ.ஏ.எஸ் அவர்களுடன் வாஷிங்டன் மாநகரில் ஹூஸ்டன் தமிழ் இருக்கை பிரதிநிதிகளின் கலந்துரையாடல் குறிப்பிடத்தகுந்ததாய் அமைந்தது. அமெரிக்க தமிழ் பள்ளிகளில் மாணவர்கள் தமிழ் பயிலும் முறை, பாடத்திட்டம் ஆகியவற்றிற்கு உதவியாய் இருக்க ஹூஸ்டன் தமிழ் இருக்கை எடுக்க வேண்டிய முயற்சிகள் மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் குறித்த ஆலோசனைகள் பெறப்பட்டன. திரு.உதயசந்திரன் ஐ.ஏ.எஸ் அவர்களை ஹூஸ்டன் மாநகரத்துக்கு வந்து தமிழ் இருக்கை அமையவுள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் தமிழ் இருக்கையின் மூத்த நிர்வாகிகளுடன் நேரில் சந்தித்து பேசி ஆலோசனைகள் வழங்க பிரதிநிதிகள் சிறப்பு அழைப்பையும் விடுத்துள்ளனர்.

அமெரிக்காவின் பல நகரங்களில் பரவி வாழும் தமிழர்களை ஒருசேர ஒருங்கிணைக்கும் விதமாக தமிழ்சங்கங்களின் தலைவர்கள்/நிர்வாகிகள் மேற்கண்ட நகரங்களுக்கு பயணமாகி அங்குள்ள தமிழ் சங்கங்களின் பொங்கல் விழாக்களில் ஹூஸ்டன் தமிழ் இருக்கையின் பிரதிநிதிகளாக பங்கேற்று, இருக்கை குறித்த விளக்கவுரையை மேடையேறி அளித்தது இந்த ஆண்டின் பொங்கல் விழாக்களில் சிறப்பம்சமாக இருந்தது.

ஹூஸ்டன் தமிழ் இருக்கையின் தலைவரான திரு.சொக்கலிங்கம் சாம். கண்ணப்பன் அமெரிக்க வாழ் தமிழர்களின் முத்தவர்களில் ஒருவரும், முன்னோடியுமாவார். பொருளாளர் முனைவர்.நா கணேசன் அவர்கள் அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவில் மூத்த தமிழ் விஞ்ஞானி. இயக்குனர்கள் முனைவர்.திரு.அப்பன் அவர்கள் நம் தமிழ் சமூகத்தில் மூத்தவரும் அமெரிக்க பெருவணிகத்தில் மிக நீண்டகால அனுபவம் பெற்றவருமாவார். மற்றொரு இயக்குனரான திரு.நாராயணன் பல பத்தாண்டு காலமாக அமெரிக்காவின் சமூக பங்களிப்பில் முன்னோடியும் மூத்தவருமாக இருந்து வருபவர். மற்றும் டாக்டர் திருவேங்கடம் ஆறுமுகம் (ஆராய்ச்சி துணை தலைமை) மற்றும் திரு துப்பில் நரசிம்மன் (நிதி துணை தலைவர்) ஆகியோர் பக்க பலமாக உள்ளார்கள். இருக்கையின் நிர்வாகக்குழு செயலாளர் திரு. பெருமாள் அண்ணாமலை, ஐ.டி. துறையில் மென்பொருள் வல்லுனர் மற்றும் பல சமூகப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட இளம் தலைமுறை தமிழர்.

ஹூஸ்டன் தமிழ் இருக்கையின் ஆலோசகர்களாக கலைமாமணி முனைவர்.திரு.வி.ஜி.சந்தோசம், திரு.பாலசந்திரன் ஐ.ஏ.எஸ் (ஓய்வு),கலைமாமணி திரு.அபிராமி ராமநாதன், திரு.வாழப்பாடி இராம.சுகந்தன் ஆகியோர் தங்களின் மேலான பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.

இருக்கை குறித்த மேலும் பலதகவல்களுக்கு சமூக வளைதளங்களிலும், இணையத்தில் www.HoustonTamilChair.org என்ற முகவரியிலும் அணுகி விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

தலைவாழை இலையில் பாரம்பரிய தமிழ் உணவுகள் பரிமாறப்பட்டு, கரும்பு, மஞ்சள், மாவிலை தோரணங்களுடன் இந்த ஆண்டு ஹூஸ்டன் தமிழ் இருக்கையின் அறிமுகமும் பொங்கல் விழாக்களை சிறப்பித்துள்ளது என்று கூறுவது மிகையாகாது.

மேற்கண்ட விவரங்கள் ஹூஸ்டன் தமிழ் இருக்கையின் செய்திப்பிரிவுடன் நடந்த உரையாடலிலிருந்து தொகுத்து வழங்கப்படுகிறது.

by Swathi   on 08 Feb 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
Tamil Summer Camp, எளிதாகத் தமிழ் பேச, எழுதப் பழகுவோம்.. Tamil Summer Camp, எளிதாகத் தமிழ் பேச, எழுதப் பழகுவோம்..
மார்ச் மாத வலைத்தமிழ் பன்னாட்டு இதழ் மார்ச் மாத வலைத்தமிழ் பன்னாட்டு இதழ்
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 33 ஆவது FeTNA 2020 தமிழ் விழா வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 33 ஆவது FeTNA 2020 தமிழ் விழா
பேரவையின் 33வது தமிழ் விழா பேரவையின் 33வது தமிழ் விழா
உலகெங்கும் இந்தியாவின் 71-வது குடியரசுதின நிகழ்வுகள்.. உலகெங்கும் இந்தியாவின் 71-வது குடியரசுதின நிகழ்வுகள்..
தைத் திருநாள் விழாவிற்கு வேட்டி உடுத்தி வந்த இங்கிலாந்து அமைச்சர்கள் தைத் திருநாள் விழாவிற்கு வேட்டி உடுத்தி வந்த இங்கிலாந்து அமைச்சர்கள்
சிகாகோ தமிழ்ச்சங்கத்திற்குத் தமிழ்த்தாய் விருது சிகாகோ தமிழ்ச்சங்கத்திற்குத் தமிழ்த்தாய் விருது
சிகாகோவில் சிகாகோவில் "திருவள்ளுவர் தினம்" முதல் முறையாக அய்யன் திருவள்ளுவர் திருவுருவச் சிலை முன்னிலையில் மிகச்சிறப்புடன் கொண்டாடப்பட்டது.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.