LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- அமரர் கல்கி

இது என்ன சொர்க்கம்

 

கதை ஆசிரியர்: அமரர் கல்கி.
1
     ராவ்பகதூர் வியாக்ரபாத சாஸ்திரிகள் மிகுந்த வியாகூலத்துடன் போய்க் கொண்டிருந்தார். அவருடைய கண்கள் அங்குமிங்கும் ஆவலுடன் நோக்கின. ‘தெரிந்த முகம் ஏதாவது கண்ணுக்குத் தென்படாதா’ என்ற ஏக்கம் அவருடைய உள்ளத்தை அரித்துக் கொண்டிருந்தது. “அம்மா! இங்கு வந்து வருஷம் பன்னிரண்டுக்கு மேலாகிறது. பன்னிரண்டு வருஷந்தானா பன்னிரண்டு யுகம் போல் அல்லவா தோன்றுகிறது? – இருக்கட்டும்; இந்தப் பன்னிரண்டு வருஷத்தில் பழக்கமான முகம் ஒன்றைக் கூட காணமுடியவில்லை. பழைய ஞாபகங்களைப் பற்றிக் குஷாலாகப் பேசிக் கொண்டிருக்க ஒரு ஆத்மா கூட அகப்படவில்லை. இது என்ன சொர்க்கம்?” என்று எண்ணிப் பெருமூச்சு விட்டார் வியாக்ரபாத சாஸ்திரிகள். விஷயம் என்னவென்றால், அவருக்குச் சொர்க்கம் கொஞ்சங்கூடப் பிடிக்கவில்லை. இந்தச் சொர்க்கத்தை அடைவதற்காகப் பூலோகத்தில் அவர் செய்த காரியங்களை நினைத்தால், அவருக்குச் சிரிப்புச் சிரிப்பாய் வந்தது. இந்தச் சொர்க்கத்தை அடைவதற்காக அவர் செய்யாத காரியங்களை நினைத்தால் அவருக்கு அழுகையாய் வந்தது. ஆனால், தரித்திரம் பிடித்த இந்த சொர்க்கத்தில் சிரிக்க முடியுமா? முடியாது! அழத்தான் முடியுமா? அதுவும் முடியாது! இதற்குப் பெயர் சொர்க்கமாம். சிவ!சிவ! ராம! ராம! இல்லை. பிசகு! வாபஸ் வாங்கிக் கொள்கிறேன். சிவனையும் ராமனையும் பிரார்த்தித்துத்தான் இந்தச் சொர்க்கத்துக்கு வந்து சேர்ந்தேனே! போதாதா? சொர்க்கத்திலிருந்து பூலோகத்துக்குப் போவதற்கு யாரைப் பிரார்த்திக்கலாம்? சனீசுவரனைப் பிரார்த்தித்துப் பார்க்கலாமா? “சனிசுவர! சனீசுவர! சனீசுவர! சனீசுவர!”
     ”யார் சாஸ்திரிகள்வாளா?” என்று பழகிய குரல் காதில் விழுந்தது. சாஸ்திரிகள் மூன்று துள்ளி துள்ளி ஒரே குதியாய்க் குதித்தார். பார்த்தால் சாக்ஷாத் திவான்பகதூர் கச்சபேசுவர முதலியார் எதிரே வந்து கொண்டிருக்கிறார்.
     ”அடாடா!, முதலியார்வாளா? வாருங்கோ வாருங்கோ வாருங்கோ! பார்த்துப் பதினைந்து வருஷத்துக்கு மேலாச்சே! எப்போது வந்தீர்கள்? என்ன சேதி? என்ன சமாச்சாரம்?” என்று உற்சாகமாகக் கேட்டு சாஸ்திரிகள் முதலியாரின் கையைப் பிடித்துக் குலுக்க முயன்றார். ஆனால் கையில் ஒன்றும் அகப்படாமற் போகவே, முகத்தில் ஏமாற்றம் தோன்றியது.
     ”என்ன சாஸ்திரிகள் வாள்! இது சொர்க்கம் என்கிறதே மறந்து போய்விட்டாற் போலிருக்கிறது! பூலோகத்தில் இருப்பதாகவே ஞாபகமோ?” என்றார் கச்சபேசுவர முதலியார்.
     ”அப்படித்தான்னா அப்படித்தான்! உங்களைப் பார்த்த சந்தோஷத்தில் ஒரு நிமிஷம் இது சொர்க்கம் என்கிறதே மறந்துதான் போச்சு! பூலோகமென்றே நினைச்சுட்டேன்!” என்று சாஸ்திரிகள் கூறி ‘ஹிஹ்ஹிஹ்ஹி’ என்று சிரித்தார்.
     அப்போது அந்தப் பக்கமாகப் போன தேவர்களும் தேவிகளும் அவரை நோக்கி ஏளனமாகப் பார்த்துக் கொண்டு போனார்கள்.
     ”இந்த மாதிரி சிரிப்பைக் கேட்டுப் பத்து வருஷத்துக்கு மேலாகி விட்டது?” என்றார் முதலியார்.
     ”ஆமான்னா! அதை நினைத்தால் துக்கம் துக்கமாய் வருகிறது. ஊம் ஊம்!” என்று சாஸ்திரிகள் பலமாக அழுதார்.
     ”வேண்டான்னா, அழாதேங்கோ!” என்று முதலியார் கூறி, “இப்படி அழுகைக் குரலைக் கேட்டு எத்தனை நாள் ஆச்சு தெரியுமா? ஊம் ஊம்” என்று தாமும் அழத் தொடங்கினார்.
     இரண்டு பேரும் ஒருவருடைய கண்ணை ஒருவர் துடைக்க முயன்று, அதில் பிரயோஜனமில்லையென்று கண்டபோது, அதனுடைய ஹாஸ்ய ரசத்தை அநுபவித்துப் பலமாகச் சிரித்தார்கள்.
     ”அப்படின்னா, உங்களுக்கும் சொர்க்கம் பிடிக்கவில்லையென்று சொல்லுங்கோ?” என்றார் முதலியார்.
     ”பிடிக்கவில்லையா? அழகுதான். பிடிக்கவில்லையான்னா கேட்கிறீர்கள்? சொர்க்கம் என்கிறது இந்த மாதிரி இருக்கும் என்று மட்டும் தெரிந்திருந்தால் அவ்வளவு தானம் தர்மம் தலையிலே குட்டிக்கிறது, மூக்கைப் பிடிக்கிறது, கோவிலுக்குப் போகிறது – ஒன்றுமே பண்ணியிருக்க மாட்டேனே? இந்த அழகான சொர்க்கத்துக்காகப் பூலோகத்தை நன்றாக அனுபவிக்காமல் போனது என்ன முட்டாள்தனம் என்பதை எண்ணும் போது…”
 ”என் மனத்திலிருக்கிறதை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறீர்கள். சாஸ்திரிகள்வாள்! எங்கேயாவது ஓரிடத்தில் சாவகாசமாக உட்கார்ந்து பேச வேணும். இருக்கட்டும் இப்போ எங்கே கிளம்பிப் போய்க் கொண்டிருந்தீர்கள்” என்று முதலியார் கேட்டார்.
     ”எங்கே கிளம்பினேனா? ஓரிடத்துக்கும் இல்லை. இந்த அழகான சொர்க்கத்திலே எங்கே போனால் தான் என்ன? எல்லாம் ஒரே லட்சணந்தான்!” என்று சாஸ்திரிகள் அலுப்புடன் கூறினார்.
     ”அப்படியானால் வாருங்கள்! அதோ அந்த மந்தார மரத்தடியில் உட்கார்ந்து சாவகாசமாகப் பேசலாம்” என்றார் முதலியார்.
     இரண்டு பேரும் சமீபத்தில் தென்பட்ட மந்தார மரத்தடிக்குப் போய் உட்கார்ந்தார்கள்.
2
     மந்தார விருட்சம் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தது. அந்த மலர்களிலிருந்து கிளம்பிய திவ்ய பரிமள வாசனை நாலாபுறமும் சூழ்ந்திருந்தது. மரக்கிளையில் குயில்கள் உட்கார்ந்து ‘குக்கூ’ ‘குக்கூ’ என்று இனிய குரலில் பாடின.
     மரத்தினடியில் பச்சை ஜமக்காளம் விரித்தாற் போல் பசும் புல் படர்ந்திருந்தது. ஒரு தூசி தும்பு கிடையாது.
     சாஸ்திரிகள் ஒரு புல்லைப் பிடுங்கி வாயில் வைத்துக் கடித்தார்.
     ”என்ன, வியாக்ரபாத சாஸ்திரிகளே! புல்லைத் தின்கிறீர்களோ? புலி பசித்தாலும் புல்லைத் தின்னுமா என்னும் பழமொழி என்ன கதி ஆயிற்று?” என்று முதலியார் சொல்லி, ‘ஹிஹ்ஹிஹ்ஹி’ என்று சிரித்தார்.
     ”அதெல்லாம் பூலோகத்துப் பழமொழி! இந்தத் தரித்திரம் பிடித்த சொர்க்கத்திலே புலிக்கு பசியே தான் கிடையாதே?” என்று சாஸ்திரிகள் சொல்லி, ‘ஹஹ்ஹஹ்ஹா’ என்று சிரித்தார்.
     ”பின்னே என்னத்திற்காகப் புல்லைத் தின்கிறீர்கள்?”
     ”என்ன இருக்கிறது இங்கே தின்கிறதுக்கு? அமிர்தத்தைத் தவிர – வேறு ஒரு மண்ணாங்கட்டி கூட இல்லை. அமிர்தம் சாப்பிட்டுச் சாப்பிட்டு அலுத்துப் போய் விட்டது!”
     ”அமிர்தம் அலுத்துப் போய்விட்டதா? அது தான் கேட்டேன், ஏன் சாஸ்திரிகள்வாள்! பூலோகத்தில் நீர் எதற்கெடுத்தாலும் ‘அமிர்தமாயிருக்கு’ என்று சொல்லி வந்தீரோ, இல்லையோ? இனிமேல் சொல்ல மாட்டீரே.”
     ”என் வயிற்றெரிச்சலைக் கிளப்பாதீர்! இட்லி, மிளகாய்ப் பொடி, நல்லெண்ணெய் இந்த சொர்க்கத்தில் கிடையாது என்று மட்டும் தெரிந்திருந்தால்…அமிர்தமாம்! அமிர்தம்!”
     ”பிச்சுவய்யர் ஹோடலிலே வெங்காய கொத்ஸு பண்ணுவார்களே, அதன் காலிலே கட்டி அடிக்கவேணும் இந்த அமிர்தத்தை!”
     ”அடடா! நாம் லாகாலேஜில் படித்துக் கொண்டிருந்தபோது, சங்கரய்யர் ஹோட்டலிலே ரவா தோசை சாப்பிடுவோமே, ஞாபகமிருக்கா?”
     ”அதை நினைச்சுண்டா நாக்கிலே ஜலம் சொட்டுகிறது?”
     ”வேறு எது வேணாலும் இல்லாமற் போகட்டும்! காப்பியைச் சொல்லும்! காப்பி இல்லாத சொர்க்கம் சொர்க்கமா என்று கேட்கிறேன்.”
     இந்தச் சமயத்தில் மந்தார மரத்தின் கிளையிலிருந்து குயில் ஒன்று எட்டிப் பார்த்து ‘குக்கூ’ ‘குக்கூ’ என்று கத்திற்று.
     ”முதலியார்வாள்! இந்தக் குயிலைக் கொஞ்சம் பேசாமலிருக்கச் செய்கிறீரா? இல்லாவிட்டால், நான் எங்கேயாவது ஓடிப் போகட்டுமா? கேட்கச் சகிக்கவில்லை.”
     ”சாஸ்திரிகளே! பூலோகத்தில் நீர் எத்தனை தடவை நல்ல குரலைப் பற்றிப் பேசும் போது ‘குயில்தான்’ என்று சொல்லியிருக்கிறீர்? இப்போது ஏன் இப்படி அலுத்துக் கொள்கிறீர்?”
“அட சனியனே! அப்போதெல்லாம் நான் குயிலின் குரலையே கேட்டதில்லையே? அதனாலல்லவா அப்படிச் சொல்லித் தொலைத்தேன்.”
     ”இந்தச் சொர்க்கத்திலே சங்கீதம் எவ்வளவு கேவலமாயிருக்கிறது பாருங்களேன்! மகாமட்டம்!”
     ”அடடா, நாம் நடத்தினோமே பட்டணத்தில் கர்நாடக சங்கீத புனருத்தாரண சபை! எவ்வளவு ஜோராக நடத்தினோம்!”
     ”இங்கே பாடுகிறார்களே, தலைக்குத் தலை ஒரு வீணையை மீட்டிக் கொண்டு, இது ஒரு பாட்டா? நாலு மனைச் சவுக்கத்திலே முக்காலே அரைக்கால் இடத்தில் பல்லவியை எடுத்துக் கொண்டு நாலு ஆவர்தம் ஸ்வரம் பாடும் வித்வான் இங்கே யார் இருக்கிறார்? நம் ஊரில் சங்கீத கேஸரியின் கச்சேரி நடக்கும் போது மிருதங்கம், கஞ்சிரா, கடம், கொன்னக்கோல், டோ லக், இவ்வளவு பக்க வாத்தியங்களும் சேர்ந்து என்ன அமர்க்களமாயிருக்கும்? அது சங்கீதமா? இங்கே இவர்கள் அழுது வடிக்கிறார்களே, இது சங்கீதமா?”
     ”ஆமான்னா, ஆமாம்! இங்கே நான் எத்தனையோ பேரைக் கேட்டுட்டேன். ஹார்மோனியம் வாசிக்கத் தெரியுமா என்று அந்த மாதிரி வாக்கியத்தையே இங்கே ஒருவரும் கேட்டதில்லையாம்.”
     ”சரியாய்ப் போச்சு, போங்கள்! அது ஒன்று தான் இந்த சொர்க்கத்திலே நல்ல அம்சம் என்று நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். என்னுடைய நாட்டுப் பெண் ஸுலோசனா தினம் ஹார்மோனியத்தை எடுத்து வச்சுண்டு அழறதைக் கேட்கச் சகிக்காமல் தான், சீக்கிரமாகச் சொர்க்கத்துக்கு வந்து விடணும் என்று ஆசைப்பட்டேன். அம்மம்மா! அவள் என்னைப் படுத்தி வச்சப்பாடு! நான் ரொம்பக் கர்நாடகமாம்! நான் பகவத் கீதைப் பிரசங்கம் பண்ணுகிறதை அவள் என்னவெல்லாம் கேலி செய்தாள் தெரியுமோ? அவள் பவுடரைப் பூசிக்கிறதும், மினுக்குகிறதும், குலுக்குகிறதும் மகாமோசம்! ஆனால் முதலியார் இதற்கு நேர் விரோதம், நம்ம பையன். உள்ளூரிலே பகவத் கீதை பிரசங்கம் நான் செய்தால் நம்ம பஞ்சாமிதான் கடைசிவரையில் உட்கார்ந்து சிரத்தையாய்க் கேட்டுக் கொண்டிருப்பான்.”
     ”சாஸ்திரிகளே! உம்முடைய மனத்தில் இருப்பதை நிஜமாகச் சொல்லி விடட்டுமா. உம்முடைய பகவத் கீதைப் பிரசங்கத்தைக் கேட்பதற்குச் சொர்க்கத்தில் ஒருவரும் இல்லையென்பது தானே உம்முடைய மனக்குறை?”
     ”வாஸ்தவந்தான்! இந்த சொர்க்கத்தில் இருப்பவர்கள் அந்த விஷயத்தில் மகா மோசம். பகவத் கீதை உபநிஷத், பெரிய புராணம் ஒன்றிலுமே இவர்களுக்குச் சிரத்தை கிடையாது. சுத்த நாஸ்திகர்கள். எல்லாரும் ஆடல் பாடல்களிலேயே முழுகியிருக்கிறார்கள். ஏதடா! நாளைக்குப் போகும் கதிக்கு வழி தேடிக் கொள்ள வேண்டுமே என்று ஒருவருக்கும் கவலை கிடையாது.”
     ”இருக்கட்டும், முதலியார்! இங்கே சாயங்கால வேளையில் உங்களுக்கு எப்படிப் பொழுது போகிறது! பீச்சா, கிளப்பா, சபா கச்சேரியா, ஒரு இழவுந்தான் கிடையாதே! தினம் சாயங்காலம் வந்தால், பகவத் கீதையிலே நாலு நாலு சுலோகமாய்ச் சொல்லிண்டு வரேன்…”
     ”சாஸ்திரிகளே! நிறுத்தும். பூலோகத்தில் உம்மிடம் பகவத் கீதை பிரசங்கம் கேட்டதெல்லாம் போதும். வேறு பேச்சு ஏதாவது பேசுவதாயிருந்தால் நான் இருக்கிறேன். இல்லாவிட்டால் இதோ நடையைக் கட்டுகிறேன்” என்று முதலியார் எழுந்திருக்க, சாஸ்திரிகள் அவரைக் கையைப் பிடித்து உட்கார வைக்க முயன்று முடியாமற் போகவே, “வேண்டாம், நான் பகவத் கீதையைப் பற்றிப் பேசவில்லை. வேறு ஏதாவது பேசுவோம். தயவு செய்து உட்காருங்கள்” என்றார்.
     ”வேறு எதைப் பற்றி பேசலாம்?” என்று சாஸ்திரிகள் கேட்டார்.
     ”எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. உதாரணமாக, இந்தச் சொர்க்கலோகத்திலுள்ள ஸ்திரீகளைப் பற்றி உம்முடைய நிஜமான அபிப்ராயம் என்ன?”
     ”சுத்த மோசம் என்பதுதான்?”
     ”எந்த விஷயத்தில் மோசம்?”
“எல்லா விஷயத்திலுந்தான். முக்கியமாக, சொர்க்கத்தில் எந்த ஸ்திரீயைப் பார்த்தாலும் ஒரே மாதிரி இருக்கிறாள். அதில் என்ன விசேஷம் இருக்கிறது? பூலோகத்தில் நம்முடைய காலத்திலே என்ன?”
     ”எப்படி?”
     ”எது?”
     ”யாரு?”
     ”அவள்தான்னா மிஸ்ஸஸ் லோசனா தத்…”
     ”அப்படிச் சொல்லுங்கோ சாஸ்திரிகளே.”
3
     இதற்குப் பிறகு சாஸ்திரிகளும் முதலியாரும் பேசிய விஷயங்கள் கொஞ்சம் விரஸமாயும் அப்படியே பிரசுரிப்பதற்கு லாயக்கற்றவையாயும் இருந்தன. கடைசியாக அந்த “லோசனா தத்தின் பெயர் பத்திரிகையிலே கூடக் கொஞ்ச நாள் அடிபட்டதில்லையா?” என்றார் முதலியார்.
     ”ஆமான்னா ஆமாம். பத்திரிகை என்ற உடனே ஞாபகம் வருகிறது. இந்தச் சொர்க்கத்திலே ஒரு நியூஸ் பேப்பர் கூடக் கிடையாது. பார்த்தீரா? மற்றதெல்லாம் ஒரு புறம் இருக்க, நியூஸ் பேப்பர் இல்லை என்கிறதை நினைத்தால் தான், ‘இது என்ன தரித்திரம் பிடித்த சொர்க்கம்’ என்று தோன்றுகிறது.”
     ”வாஸ்தவந்தான். நியூஸ் பேப்பர் இல்லாததுதான் பெரிய குறை. சாஸ்திரிகளே! சமாசாரம் தெரியுமா? பூலோகத்திலே இப்போது பெரிய யுத்தம் நடக்கிறதாமே? நம்ம காலத்திலே நடந்த யுத்தத்தை இந்த யுத்தத்தின் காலில் கட்டி அடிக்க வேணுமாம்!”
     ”நிஜமாகவா? அடாடாடா! இப்பேர்ப்பட்ட சமயத்திலா நாம் பூலோகத்தில் இல்லாமல் இங்கே வந்து உட்கார்ந்திருக்கிறோம்? ஆனால் உங்களுக்கு எப்படித் தெரியும், முதலியார்!”
     ”நாலு நாளைக்கு முன்னால் ஒரு பிள்ளையாண்டான் பூலோகத்திலிருந்து வந்தான். அவனைப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தேன்.”
     ”நீர் அதிர்ஷ்டசாலி ஓய்! பூலோகத்திலிருந்து வந்தவனைப் பார்த்தீரா? அவன் இன்னும் என்னென்ன சொன்னான்?”
     ”யுத்தம் என்றால் உங்க வீட்டு யுத்தம், எங்க வீட்டு யுத்தம் இல்லையாம். ஆகாச விமானங்களிலே கொண்டு வந்து குண்டு போடுகிறார்களாம். ஊர் ஊராய்ப் பற்றி எரிகிறதாம். ஆமாம் சாஸ்திரிகளே! பூலோகத்திலே நாமெல்லாம் புராணங்களிலே வாசித்துக் கொண்டிருந்தோமே, தேவர்களும் அசுரர்களும் பிரமாத யுத்தம் செய்தார்கள் என்று, இங்கே ஒரு மண்ணாங்கட்டியையும் காணோமே.”
     ”அது தெரியாத உமக்கு? அசுரர்களையெல்லாம் கொன்றாகி விட்டதாம்! இனிமேல் இங்கே யுத்தம் என்பதே வராதாம்!”
     ”சட்சட்! இவ்வளவுதானா?”
     ”ஆமாம் முதலியார்வாள்! யாரோ பூலோகத்திலிருந்து புதிதாய் வந்தான் என்றீரே? அவனை எங்கே பார்த்தீர்? என் கண்ணிலே ஒருவனும் தட்டுப்படவில்லையே?”
     ”எங்கே பார்த்தேன் என்றா கேட்கிறீர்?”
     ”அதைத்தான் கேட்கிறேன்?”
     ”சொல்லப் பயமாயிருக்கிறது.”
     ”பயமா? என்னத்திற்குப் பயம்?”
     ”இந்த சொர்க்கம் எங்கே தான் போய் முடிகிறது என்று பார்ப்பதற்காக நான் பாட்டுக்குப் போய்க் கொண்டிருந்தேன். வெகு தூரம் போன பிறகு, பூலோகத்திலே நாம் கேள்விப்பட்டிருக்கிறோமே, மலைக் கணவாய் – அந்த மாதிரி ஒரு இடம் வந்தது. அந்தக் கணவாய் வழியாய்க் கொஞ்ச நேரத்துக்கு ஒரு தடவை ஒரு புது மனிதர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்.”
“ஆமாம்; அந்தக் கணவாய்க்குள் புகுந்து அது எங்கே போகிறது என்று பார்த்தீரா?”
     ”இல்லை, பயமாயிருந்தது.”
     ”என்ன பயம்?”
     ”சில பேர் அதற்குள் புகுந்து போனதைப் பார்த்தேன். அவர்கள் திரும்பி வரவேயில்லை.”
     ”என்ன நிஜந்தானா?”
     ”ஆமாம்.”
     ”சபாஷ்!” என்றார் சாஸ்திரியார்.
     ”எதற்கு சபாஷ்!”
     ”அந்தக் கணவாய்தான் பூலோகத்துக்குப் போகும் வழியாயிருக்க வேண்டும். முதலியார்வாள்! சத்தியமாகச் சொல்லும். உமக்கு இந்தச் சொர்க்கம் பிடிக்கிறதா?”
     ”கட்டோடே பிடிக்கவில்லை.”
     ”பூலோகத்துக்குப் போக வேண்டுமென்றிருக்கிறதல்லவா?”
     ”இருக்கிறது!”
     ”சரி, அப்படியானால் கிளம்பும்” என்று சாஸ்திரிகள் எழுந்தார். இரண்டு பேரும் காற்று வெளியில் மிதந்து வெகுதூரம் போனார்கள்.
     ”அதோ!” என்றார் முதலியார்.
     ”ஒரு நீண்ட மேக மலைத் தொடர் தெரிந்தது. அதன் நடுவில் ஒரு பிளவு தென்பட்டது.
     இருவரும் அந்தப் பிளவுக்குள் போனார்கள். கொஞ்ச தூரம் போனதும் சட்டென்று முடிந்து விட்டது. அப்புறம் ஒன்றுமே இல்லை. வெறும் வெளிதான். விளிம்பினருகில் போய்ப் பார்த்தால் கீழே அதல பாதாளம்.
     ”அம்மம்மா! எவ்வளவு பெரிய பள்ளம்! இதில் விழுந்தால்…”
     ”பூலோகத்துக்குப் போகலாமே” என்று முதலியாரின் குரல் கேட்டது.
     அவ்வளவுதான்! சாஸ்திரியார் கீழே கீழே கீழே விழுந்து கொண்டிருந்தார். காலவரம்பென்பதே இல்லாமல் அனந்தகாலம் கீழே போய்க் கொண்டிருந்ததாகத் தோன்றியது. அப்புறம் அவருடைய ஞாபகம் போய் விட்டது.
*****
     சாஸ்திரியாருக்கு மறுபடியும் சுயப் பிரக்ஞை வந்த போது படார், படார் என்று வெடிச் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. அவருக்குக் கீழேயும் பக்கங்களிலும் ஏதோ மிருதுவான வஸ்து இருப்பது போல் உணர்ச்சி உண்டாயிற்று. அடே! இதென்ன? சொர்க்கத்திலே ஸ்பரிச உணர்ச்சிதான் கிடையாதே! பார்க்கிறதோடு சரிதானே – ஜம்மென்று பூலோகத்தில் பஞ்சு மெத்தையில் படுத்துக் கொண்டிருப்பது போல் அல்லவா தோன்றுகிறது? – ஆமாம் கச்சபேசுவர முதலியார் எங்கே?
ஏதோ பேச்சுக்குரல் கேட்டது. ஆனால் முதலியாரின் குரல் இல்லை. ஸ்திரீகள் குரல். யாரோ குனிந்து பார்ப்பது போல் இருந்தது. ஓஹோ நமது பாரியாள் சீதாலக்ஷ்மி அம்மாள் அல்லவா? ஆனால், இதென்ன மாறுதல்? முகத்தில் இவ்வளவு சுருக்கங்கள் – தலை மயிர் ஒரே வெள்ளை! சரிதான்; பன்னிரண்டு வருஷம் கழித்துப் பார்க்கிறோமல்லவா?
     ”தாத்தாவையே உரித்து வச்சிருக்கு!” என்றாள் சீதாலக்ஷ்மி அம்மாள்.
     இன்னொரு குரல் பக்கத்திலிருந்து, “அபசகுனம் மாதிரி அப்படியெல்லாம் சொல்லாதேங்கோ. தாத்தாவுக்கு என்னைக் கண்டாலே பிடிக்காது. அவர் என் வயிற்றிலே பிறந்திருக்க மாட்டார்” என்றது. அவருடைய மாட்டுப் பெண் ஸுலோசனாவின் குரல் அது என்று தெரிந்து கொண்டார்.
     ”அப்படிச் சொல்லாதேடி, மனத்துக்குள்ளே உன் மேலே அவருக்கு ரொம்ப வாஞ்சை. கடைசி வரையில் குழந்தை மாதிரி தீபாவளிக்குப் பட்டாசுச் சுட்டு விடுவாரோல்யோ? அதுதான் தீபாவளியன்றைக்குப் பிறந்திருக்கிறார்” என்றாள் சீதாலக்ஷ்மி அம்மாள்.
     அப்போது சாஸ்திரியார் மனப்பூர்வமாக வெறுத்த அவருடைய மாட்டுப் பெண்ணின் முகம் – முன்னே பார்த்ததைக் காட்டிலும் பெருத்து உப்பியிருந்த முகம் – பவுடர் வாசனை மூக்கைத் துளைத்த முகம் – அவருடைய முகத்தின் மிக அருகில் வந்தது. அதைத் தடுத்துத் தள்ளுவதற்காகச் சாஸ்திரியார் கையைத் தூக்கினார். என்ன வேடிக்கை! கை துளியுண்டு இருக்கிறதே!
     ”என் கண்ணே! அதற்குள்ளே அம்மான்னு தெரிஞ்சு போச்சா!” என்றாள் ஸுலோசனா.
     அப்போதுதான் சாஸ்திரியாருக்கு விஷயம் தெரிந்தது. விதி தன்னை எவ்விதம் கேலிக்கூத்துக்கு உள்ளாக்கி விட்டதென்று! தன்னுடைய சொந்த வீட்டில் தான் தொட்டிலில் படுத்திருப்பதையும், தன் மாட்டுப் பெண்ணுக்குக் குழந்தையாய்ப் பிறந்திருப்பதையும் உணர்ந்தார். பிரமாதமான ஆத்திரமும், அழுகையும் வந்தது. கையையும் காலையும் உதைத்துக் கொண்டு ‘வீல்’ என்று அழுதார்.
     ”அம்மா நீங்கள் சொன்னது சரிதான். தொண்டையைப் பாருங்கோ! அசல் தாத்தாதான்” என்றாள் ஸுலோசனா.
     வெளியிலிருந்து சாஸ்திரிகளுடைய குமாரன் பஞ்சாமியின் குரல் சொல்லிற்று: “எத்தனை பகவத் கீதையைப் பிரசங்கம் பண்ணி, இருக்கிறவாள் பிராணனை எல்லாம் வாங்கப் போகிறாரோ.”
     இதைக் கேட்டதும் சாஸ்திரியார் மூர்ச்சையடைந்தார்.
     மறுபடியும் பிரக்ஞை வந்தது; ஆனால் நல்ல வேளையாய்ப் பூர்வ ஞாபகம் வரவில்லை.
நன்றி: சென்னைநூலகம்.காம் (அமரர் கல்கியின் படைப்புகள்), அமரர் கல்கி, எழுத்தாளர், பத்திரிக்கையாளர்.

           ராவ்பகதூர் வியாக்ரபாத சாஸ்திரிகள் மிகுந்த வியாகூலத்துடன் போய்க் கொண்டிருந்தார். அவருடைய கண்கள் அங்குமிங்கும் ஆவலுடன் நோக்கின. ‘தெரிந்த முகம் ஏதாவது கண்ணுக்குத் தென்படாதா’ என்ற ஏக்கம் அவருடைய உள்ளத்தை அரித்துக் கொண்டிருந்தது. “அம்மா! இங்கு வந்து வருஷம் பன்னிரண்டுக்கு மேலாகிறது. பன்னிரண்டு வருஷந்தானா பன்னிரண்டு யுகம் போல் அல்லவா தோன்றுகிறது? – இருக்கட்டும்; இந்தப் பன்னிரண்டு வருஷத்தில் பழக்கமான முகம் ஒன்றைக் கூட காணமுடியவில்லை. பழைய ஞாபகங்களைப் பற்றிக் குஷாலாகப் பேசிக் கொண்டிருக்க ஒரு ஆத்மா கூட அகப்படவில்லை. இது என்ன சொர்க்கம்?” என்று எண்ணிப் பெருமூச்சு விட்டார் வியாக்ரபாத சாஸ்திரிகள். விஷயம் என்னவென்றால், அவருக்குச் சொர்க்கம் கொஞ்சங்கூடப் பிடிக்கவில்லை. இந்தச் சொர்க்கத்தை அடைவதற்காகப் பூலோகத்தில் அவர் செய்த காரியங்களை நினைத்தால், அவருக்குச் சிரிப்புச் சிரிப்பாய் வந்தது. இந்தச் சொர்க்கத்தை அடைவதற்காக அவர் செய்யாத காரியங்களை நினைத்தால் அவருக்கு அழுகையாய் வந்தது. ஆனால், தரித்திரம் பிடித்த இந்த சொர்க்கத்தில் சிரிக்க முடியுமா? முடியாது! அழத்தான் முடியுமா? அதுவும் முடியாது! இதற்குப் பெயர் சொர்க்கமாம்.

 

          சிவ!சிவ! ராம! ராம! இல்லை. பிசகு! வாபஸ் வாங்கிக் கொள்கிறேன். சிவனையும் ராமனையும் பிரார்த்தித்துத்தான் இந்தச் சொர்க்கத்துக்கு வந்து சேர்ந்தேனே! போதாதா? சொர்க்கத்திலிருந்து பூலோகத்துக்குப் போவதற்கு யாரைப் பிரார்த்திக்கலாம்? சனீசுவரனைப் பிரார்த்தித்துப் பார்க்கலாமா? “சனிசுவர! சனீசுவர! சனீசுவர! சனீசுவர!”     ”யார் சாஸ்திரிகள்வாளா?” என்று பழகிய குரல் காதில் விழுந்தது. சாஸ்திரிகள் மூன்று துள்ளி துள்ளி ஒரே குதியாய்க் குதித்தார். பார்த்தால் சாக்ஷாத் திவான்பகதூர் கச்சபேசுவர முதலியார் எதிரே வந்து கொண்டிருக்கிறார்.     ”அடாடா!, முதலியார்வாளா? வாருங்கோ வாருங்கோ வாருங்கோ! பார்த்துப் பதினைந்து வருஷத்துக்கு மேலாச்சே! எப்போது வந்தீர்கள்? என்ன சேதி? என்ன சமாச்சாரம்?” என்று உற்சாகமாகக் கேட்டு சாஸ்திரிகள் முதலியாரின் கையைப் பிடித்துக் குலுக்க முயன்றார். ஆனால் கையில் ஒன்றும் அகப்படாமற் போகவே, முகத்தில் ஏமாற்றம் தோன்றியது.     ”என்ன சாஸ்திரிகள் வாள்! இது சொர்க்கம் என்கிறதே மறந்து போய்விட்டாற் போலிருக்கிறது! பூலோகத்தில் இருப்பதாகவே ஞாபகமோ?” என்றார் கச்சபேசுவர முதலியார்.     ”அப்படித்தான்னா அப்படித்தான்! உங்களைப் பார்த்த சந்தோஷத்தில் ஒரு நிமிஷம் இது சொர்க்கம் என்கிறதே மறந்துதான் போச்சு! பூலோகமென்றே நினைச்சுட்டேன்!” என்று சாஸ்திரிகள் கூறி ‘ஹிஹ்ஹிஹ்ஹி’ என்று சிரித்தார்.     அப்போது அந்தப் பக்கமாகப் போன தேவர்களும் தேவிகளும் அவரை நோக்கி ஏளனமாகப் பார்த்துக் கொண்டு போனார்கள்.   

 

           ”இந்த மாதிரி சிரிப்பைக் கேட்டுப் பத்து வருஷத்துக்கு மேலாகி விட்டது?” என்றார் முதலியார்.     ”ஆமான்னா! அதை நினைத்தால் துக்கம் துக்கமாய் வருகிறது. ஊம் ஊம்!” என்று சாஸ்திரிகள் பலமாக அழுதார்.     ”வேண்டான்னா, அழாதேங்கோ!” என்று முதலியார் கூறி, “இப்படி அழுகைக் குரலைக் கேட்டு எத்தனை நாள் ஆச்சு தெரியுமா? ஊம் ஊம்” என்று தாமும் அழத் தொடங்கினார்.     இரண்டு பேரும் ஒருவருடைய கண்ணை ஒருவர் துடைக்க முயன்று, அதில் பிரயோஜனமில்லையென்று கண்டபோது, அதனுடைய ஹாஸ்ய ரசத்தை அநுபவித்துப் பலமாகச் சிரித்தார்கள்.     ”அப்படின்னா, உங்களுக்கும் சொர்க்கம் பிடிக்கவில்லையென்று சொல்லுங்கோ?” என்றார் முதலியார்.     ”பிடிக்கவில்லையா? அழகுதான். பிடிக்கவில்லையான்னா கேட்கிறீர்கள்? சொர்க்கம் என்கிறது இந்த மாதிரி இருக்கும் என்று மட்டும் தெரிந்திருந்தால் அவ்வளவு தானம் தர்மம் தலையிலே குட்டிக்கிறது, மூக்கைப் பிடிக்கிறது, கோவிலுக்குப் போகிறது – ஒன்றுமே பண்ணியிருக்க மாட்டேனே? இந்த அழகான சொர்க்கத்துக்காகப் பூலோகத்தை நன்றாக அனுபவிக்காமல் போனது என்ன முட்டாள்தனம் என்பதை எண்ணும் போது…” ”என் மனத்திலிருக்கிறதை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறீர்கள். சாஸ்திரிகள்வாள்! எங்கேயாவது ஓரிடத்தில் சாவகாசமாக உட்கார்ந்து பேச வேணும். இருக்கட்டும் இப்போ எங்கே கிளம்பிப் போய்க் கொண்டிருந்தீர்கள்” என்று முதலியார் கேட்டார்.

 

             ”எங்கே கிளம்பினேனா? ஓரிடத்துக்கும் இல்லை. இந்த அழகான சொர்க்கத்திலே எங்கே போனால் தான் என்ன? எல்லாம் ஒரே லட்சணந்தான்!” என்று சாஸ்திரிகள் அலுப்புடன் கூறினார்.     ”அப்படியானால் வாருங்கள்! அதோ அந்த மந்தார மரத்தடியில் உட்கார்ந்து சாவகாசமாகப் பேசலாம்” என்றார் முதலியார்.     இரண்டு பேரும் சமீபத்தில் தென்பட்ட மந்தார மரத்தடிக்குப் போய் உட்கார்ந்தார்கள்.2     மந்தார விருட்சம் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தது. அந்த மலர்களிலிருந்து கிளம்பிய திவ்ய பரிமள வாசனை நாலாபுறமும் சூழ்ந்திருந்தது. மரக்கிளையில் குயில்கள் உட்கார்ந்து ‘குக்கூ’ ‘குக்கூ’ என்று இனிய குரலில் பாடின.     மரத்தினடியில் பச்சை ஜமக்காளம் விரித்தாற் போல் பசும் புல் படர்ந்திருந்தது. ஒரு தூசி தும்பு கிடையாது.     சாஸ்திரிகள் ஒரு புல்லைப் பிடுங்கி வாயில் வைத்துக் கடித்தார்.     ”என்ன, வியாக்ரபாத சாஸ்திரிகளே! புல்லைத் தின்கிறீர்களோ? புலி பசித்தாலும் புல்லைத் தின்னுமா என்னும் பழமொழி என்ன கதி ஆயிற்று?” என்று முதலியார் சொல்லி, ‘ஹிஹ்ஹிஹ்ஹி’ என்று சிரித்தார்.     ”அதெல்லாம் பூலோகத்துப் பழமொழி! இந்தத் தரித்திரம் பிடித்த சொர்க்கத்திலே புலிக்கு பசியே தான் கிடையாதே?” என்று சாஸ்திரிகள் சொல்லி, ‘ஹஹ்ஹஹ்ஹா’ என்று சிரித்தார். 

 

           ”பின்னே என்னத்திற்காகப் புல்லைத் தின்கிறீர்கள்?”     ”என்ன இருக்கிறது இங்கே தின்கிறதுக்கு? அமிர்தத்தைத் தவிர – வேறு ஒரு மண்ணாங்கட்டி கூட இல்லை. அமிர்தம் சாப்பிட்டுச் சாப்பிட்டு அலுத்துப் போய் விட்டது!”     ”அமிர்தம் அலுத்துப் போய்விட்டதா? அது தான் கேட்டேன், ஏன் சாஸ்திரிகள்வாள்! பூலோகத்தில் நீர் எதற்கெடுத்தாலும் ‘அமிர்தமாயிருக்கு’ என்று சொல்லி வந்தீரோ, இல்லையோ? இனிமேல் சொல்ல மாட்டீரே.”     ”என் வயிற்றெரிச்சலைக் கிளப்பாதீர்! இட்லி, மிளகாய்ப் பொடி, நல்லெண்ணெய் இந்த சொர்க்கத்தில் கிடையாது என்று மட்டும் தெரிந்திருந்தால்…அமிர்தமாம்! அமிர்தம்!”     ”பிச்சுவய்யர் ஹோடலிலே வெங்காய கொத்ஸு பண்ணுவார்களே, அதன் காலிலே கட்டி அடிக்கவேணும் இந்த அமிர்தத்தை!”     ”அடடா! நாம் லாகாலேஜில் படித்துக் கொண்டிருந்தபோது, சங்கரய்யர் ஹோட்டலிலே ரவா தோசை சாப்பிடுவோமே, ஞாபகமிருக்கா?”     ”அதை நினைச்சுண்டா நாக்கிலே ஜலம் சொட்டுகிறது?”     ”வேறு எது வேணாலும் இல்லாமற் போகட்டும்! காப்பியைச் சொல்லும்! காப்பி இல்லாத சொர்க்கம் சொர்க்கமா என்று கேட்கிறேன்.”     இந்தச் சமயத்தில் மந்தார மரத்தின் கிளையிலிருந்து குயில் ஒன்று எட்டிப் பார்த்து ‘குக்கூ’ ‘குக்கூ’ என்று கத்திற்று.     ”முதலியார்வாள்! இந்தக் குயிலைக் கொஞ்சம் பேசாமலிருக்கச் செய்கிறீரா? இல்லாவிட்டால், நான் எங்கேயாவது ஓடிப் போகட்டுமா? கேட்கச் சகிக்கவில்லை.” 

 

          ”சாஸ்திரிகளே! பூலோகத்தில் நீர் எத்தனை தடவை நல்ல குரலைப் பற்றிப் பேசும் போது ‘குயில்தான்’ என்று சொல்லியிருக்கிறீர்? இப்போது ஏன் இப்படி அலுத்துக் கொள்கிறீர்?”“அட சனியனே! அப்போதெல்லாம் நான் குயிலின் குரலையே கேட்டதில்லையே? அதனாலல்லவா அப்படிச் சொல்லித் தொலைத்தேன்.”     ”இந்தச் சொர்க்கத்திலே சங்கீதம் எவ்வளவு கேவலமாயிருக்கிறது பாருங்களேன்! மகாமட்டம்!”     ”அடடா, நாம் நடத்தினோமே பட்டணத்தில் கர்நாடக சங்கீத புனருத்தாரண சபை! எவ்வளவு ஜோராக நடத்தினோம்!”     ”இங்கே பாடுகிறார்களே, தலைக்குத் தலை ஒரு வீணையை மீட்டிக் கொண்டு, இது ஒரு பாட்டா? நாலு மனைச் சவுக்கத்திலே முக்காலே அரைக்கால் இடத்தில் பல்லவியை எடுத்துக் கொண்டு நாலு ஆவர்தம் ஸ்வரம் பாடும் வித்வான் இங்கே யார் இருக்கிறார்? நம் ஊரில் சங்கீத கேஸரியின் கச்சேரி நடக்கும் போது மிருதங்கம், கஞ்சிரா, கடம், கொன்னக்கோல், டோ லக், இவ்வளவு பக்க வாத்தியங்களும் சேர்ந்து என்ன அமர்க்களமாயிருக்கும்? அது சங்கீதமா? இங்கே இவர்கள் அழுது வடிக்கிறார்களே, இது சங்கீதமா?”     ”ஆமான்னா, ஆமாம்! இங்கே நான் எத்தனையோ பேரைக் கேட்டுட்டேன். ஹார்மோனியம் வாசிக்கத் தெரியுமா என்று அந்த மாதிரி வாக்கியத்தையே இங்கே ஒருவரும் கேட்டதில்லையாம்.”   

 

        ”சரியாய்ப் போச்சு, போங்கள்! அது ஒன்று தான் இந்த சொர்க்கத்திலே நல்ல அம்சம் என்று நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். என்னுடைய நாட்டுப் பெண் ஸுலோசனா தினம் ஹார்மோனியத்தை எடுத்து வச்சுண்டு அழறதைக் கேட்கச் சகிக்காமல் தான், சீக்கிரமாகச் சொர்க்கத்துக்கு வந்து விடணும் என்று ஆசைப்பட்டேன். அம்மம்மா! அவள் என்னைப் படுத்தி வச்சப்பாடு! நான் ரொம்பக் கர்நாடகமாம்! நான் பகவத் கீதைப் பிரசங்கம் பண்ணுகிறதை அவள் என்னவெல்லாம் கேலி செய்தாள் தெரியுமோ? அவள் பவுடரைப் பூசிக்கிறதும், மினுக்குகிறதும், குலுக்குகிறதும் மகாமோசம்! ஆனால் முதலியார் இதற்கு நேர் விரோதம், நம்ம பையன். உள்ளூரிலே பகவத் கீதை பிரசங்கம் நான் செய்தால் நம்ம பஞ்சாமிதான் கடைசிவரையில் உட்கார்ந்து சிரத்தையாய்க் கேட்டுக் கொண்டிருப்பான்.”     ”சாஸ்திரிகளே! உம்முடைய மனத்தில் இருப்பதை நிஜமாகச் சொல்லி விடட்டுமா. உம்முடைய பகவத் கீதைப் பிரசங்கத்தைக் கேட்பதற்குச் சொர்க்கத்தில் ஒருவரும் இல்லையென்பது தானே உம்முடைய மனக்குறை?”     ”வாஸ்தவந்தான்! இந்த சொர்க்கத்தில் இருப்பவர்கள் அந்த விஷயத்தில் மகா மோசம். பகவத் கீதை உபநிஷத், பெரிய புராணம் ஒன்றிலுமே இவர்களுக்குச் சிரத்தை கிடையாது. சுத்த நாஸ்திகர்கள்.

 

       எல்லாரும் ஆடல் பாடல்களிலேயே முழுகியிருக்கிறார்கள். ஏதடா! நாளைக்குப் போகும் கதிக்கு வழி தேடிக் கொள்ள வேண்டுமே என்று ஒருவருக்கும் கவலை கிடையாது.”     ”இருக்கட்டும், முதலியார்! இங்கே சாயங்கால வேளையில் உங்களுக்கு எப்படிப் பொழுது போகிறது! பீச்சா, கிளப்பா, சபா கச்சேரியா, ஒரு இழவுந்தான் கிடையாதே! தினம் சாயங்காலம் வந்தால், பகவத் கீதையிலே நாலு நாலு சுலோகமாய்ச் சொல்லிண்டு வரேன்…”     ”சாஸ்திரிகளே! நிறுத்தும். பூலோகத்தில் உம்மிடம் பகவத் கீதை பிரசங்கம் கேட்டதெல்லாம் போதும். வேறு பேச்சு ஏதாவது பேசுவதாயிருந்தால் நான் இருக்கிறேன். இல்லாவிட்டால் இதோ நடையைக் கட்டுகிறேன்” என்று முதலியார் எழுந்திருக்க, சாஸ்திரிகள் அவரைக் கையைப் பிடித்து உட்கார வைக்க முயன்று முடியாமற் போகவே, “வேண்டாம், நான் பகவத் கீதையைப் பற்றிப் பேசவில்லை. வேறு ஏதாவது பேசுவோம். தயவு செய்து உட்காருங்கள்” என்றார்.     ”வேறு எதைப் பற்றி பேசலாம்?” என்று சாஸ்திரிகள் கேட்டார்.     ”எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. உதாரணமாக, இந்தச் சொர்க்கலோகத்திலுள்ள ஸ்திரீகளைப் பற்றி உம்முடைய நிஜமான அபிப்ராயம் என்ன?”     ”சுத்த மோசம் என்பதுதான்?”     ”எந்த விஷயத்தில் மோசம்?”“எல்லா விஷயத்திலுந்தான். முக்கியமாக, சொர்க்கத்தில் எந்த ஸ்திரீயைப் பார்த்தாலும் ஒரே மாதிரி இருக்கிறாள். அதில் என்ன விசேஷம் இருக்கிறது? பூலோகத்தில் நம்முடைய காலத்திலே என்ன?”     ”எப்படி?”     ”எது?”     ”யாரு?”     ”அவள்தான்னா மிஸ்ஸஸ் லோசனா தத்…”     ”அப்படிச் சொல்லுங்கோ சாஸ்திரிகளே.”3   

 

         இதற்குப் பிறகு சாஸ்திரிகளும் முதலியாரும் பேசிய விஷயங்கள் கொஞ்சம் விரஸமாயும் அப்படியே பிரசுரிப்பதற்கு லாயக்கற்றவையாயும் இருந்தன. கடைசியாக அந்த “லோசனா தத்தின் பெயர் பத்திரிகையிலே கூடக் கொஞ்ச நாள் அடிபட்டதில்லையா?” என்றார் முதலியார்.     ”ஆமான்னா ஆமாம். பத்திரிகை என்ற உடனே ஞாபகம் வருகிறது. இந்தச் சொர்க்கத்திலே ஒரு நியூஸ் பேப்பர் கூடக் கிடையாது. பார்த்தீரா? மற்றதெல்லாம் ஒரு புறம் இருக்க, நியூஸ் பேப்பர் இல்லை என்கிறதை நினைத்தால் தான், ‘இது என்ன தரித்திரம் பிடித்த சொர்க்கம்’ என்று தோன்றுகிறது.”     ”வாஸ்தவந்தான். நியூஸ் பேப்பர் இல்லாததுதான் பெரிய குறை. சாஸ்திரிகளே! சமாசாரம் தெரியுமா? பூலோகத்திலே இப்போது பெரிய யுத்தம் நடக்கிறதாமே? நம்ம காலத்திலே நடந்த யுத்தத்தை இந்த யுத்தத்தின் காலில் கட்டி அடிக்க வேணுமாம்!”     ”நிஜமாகவா? அடாடாடா! இப்பேர்ப்பட்ட சமயத்திலா நாம் பூலோகத்தில் இல்லாமல் இங்கே வந்து உட்கார்ந்திருக்கிறோம்? ஆனால் உங்களுக்கு எப்படித் தெரியும், முதலியார்!”     ”நாலு நாளைக்கு முன்னால் ஒரு பிள்ளையாண்டான் பூலோகத்திலிருந்து வந்தான். அவனைப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தேன்.”     ”நீர் அதிர்ஷ்டசாலி ஓய்! பூலோகத்திலிருந்து வந்தவனைப் பார்த்தீரா? அவன் இன்னும் என்னென்ன சொன்னான்?”     ”யுத்தம் என்றால் உங்க வீட்டு யுத்தம், எங்க வீட்டு யுத்தம் இல்லையாம். ஆகாச விமானங்களிலே கொண்டு வந்து குண்டு போடுகிறார்களாம். ஊர் ஊராய்ப் பற்றி எரிகிறதாம். ஆமாம் சாஸ்திரிகளே! பூலோகத்திலே நாமெல்லாம் புராணங்களிலே வாசித்துக் கொண்டிருந்தோமே, தேவர்களும் அசுரர்களும் பிரமாத யுத்தம் செய்தார்கள் என்று, இங்கே ஒரு மண்ணாங்கட்டியையும் காணோமே.” 

 

           ”அது தெரியாத உமக்கு? அசுரர்களையெல்லாம் கொன்றாகி விட்டதாம்! இனிமேல் இங்கே யுத்தம் என்பதே வராதாம்!”     ”சட்சட்! இவ்வளவுதானா?”     ”ஆமாம் முதலியார்வாள்! யாரோ பூலோகத்திலிருந்து புதிதாய் வந்தான் என்றீரே? அவனை எங்கே பார்த்தீர்? என் கண்ணிலே ஒருவனும் தட்டுப்படவில்லையே?”     ”எங்கே பார்த்தேன் என்றா கேட்கிறீர்?”     ”அதைத்தான் கேட்கிறேன்?”     ”சொல்லப் பயமாயிருக்கிறது.”     ”பயமா? என்னத்திற்குப் பயம்?”     ”இந்த சொர்க்கம் எங்கே தான் போய் முடிகிறது என்று பார்ப்பதற்காக நான் பாட்டுக்குப் போய்க் கொண்டிருந்தேன். வெகு தூரம் போன பிறகு, பூலோகத்திலே நாம் கேள்விப்பட்டிருக்கிறோமே, மலைக் கணவாய் – அந்த மாதிரி ஒரு இடம் வந்தது. அந்தக் கணவாய் வழியாய்க் கொஞ்ச நேரத்துக்கு ஒரு தடவை ஒரு புது மனிதர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்.”“ஆமாம்; அந்தக் கணவாய்க்குள் புகுந்து அது எங்கே போகிறது என்று பார்த்தீரா?”     ”இல்லை, பயமாயிருந்தது.”     ”என்ன பயம்?”     ”சில பேர் அதற்குள் புகுந்து போனதைப் பார்த்தேன். அவர்கள் திரும்பி வரவேயில்லை.”     ”என்ன நிஜந்தானா?”     ”ஆமாம்.”     ”சபாஷ்!” என்றார் சாஸ்திரியார்.     ”எதற்கு சபாஷ்!”     ”அந்தக் கணவாய்தான் பூலோகத்துக்குப் போகும் வழியாயிருக்க வேண்டும். முதலியார்வாள்! சத்தியமாகச் சொல்லும். உமக்கு இந்தச் சொர்க்கம் பிடிக்கிறதா?”     ”கட்டோடே பிடிக்கவில்லை.”     ”பூலோகத்துக்குப் போக வேண்டுமென்றிருக்கிறதல்லவா?”     ”இருக்கிறது!”     ”சரி, அப்படியானால் கிளம்பும்” என்று சாஸ்திரிகள் எழுந்தார். இரண்டு பேரும் காற்று வெளியில் மிதந்து வெகுதூரம் போனார்கள். 

 

           ”அதோ!” என்றார் முதலியார்.     ”ஒரு நீண்ட மேக மலைத் தொடர் தெரிந்தது. அதன் நடுவில் ஒரு பிளவு தென்பட்டது.     இருவரும் அந்தப் பிளவுக்குள் போனார்கள். கொஞ்ச தூரம் போனதும் சட்டென்று முடிந்து விட்டது. அப்புறம் ஒன்றுமே இல்லை. வெறும் வெளிதான். விளிம்பினருகில் போய்ப் பார்த்தால் கீழே அதல பாதாளம்.     ”அம்மம்மா! எவ்வளவு பெரிய பள்ளம்! இதில் விழுந்தால்…”     ”பூலோகத்துக்குப் போகலாமே” என்று முதலியாரின் குரல் கேட்டது.     அவ்வளவுதான்! சாஸ்திரியார் கீழே கீழே கீழே விழுந்து கொண்டிருந்தார். காலவரம்பென்பதே இல்லாமல் அனந்தகாலம் கீழே போய்க் கொண்டிருந்ததாகத் தோன்றியது. அப்புறம் அவருடைய ஞாபகம் போய் விட்டது.*****     சாஸ்திரியாருக்கு மறுபடியும் சுயப் பிரக்ஞை வந்த போது படார், படார் என்று வெடிச் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. அவருக்குக் கீழேயும் பக்கங்களிலும் ஏதோ மிருதுவான வஸ்து இருப்பது போல் உணர்ச்சி உண்டாயிற்று. அடே! இதென்ன? சொர்க்கத்திலே ஸ்பரிச உணர்ச்சிதான் கிடையாதே! பார்க்கிறதோடு சரிதானே – ஜம்மென்று பூலோகத்தில் பஞ்சு மெத்தையில் படுத்துக் கொண்டிருப்பது போல் அல்லவா தோன்றுகிறது? – ஆமாம் கச்சபேசுவர முதலியார் எங்கே?ஏதோ பேச்சுக்குரல் கேட்டது. ஆனால் முதலியாரின் குரல் இல்லை. ஸ்திரீகள் குரல். யாரோ குனிந்து பார்ப்பது போல் இருந்தது. ஓஹோ நமது பாரியாள் சீதாலக்ஷ்மி அம்மாள் அல்லவா? ஆனால், இதென்ன மாறுதல்? முகத்தில் இவ்வளவு சுருக்கங்கள் – தலை மயிர் ஒரே வெள்ளை! சரிதான்; பன்னிரண்டு வருஷம் கழித்துப் பார்க்கிறோமல்லவா?     ”தாத்தாவையே உரித்து வச்சிருக்கு!” என்றாள் சீதாலக்ஷ்மி அம்மாள். 

 

           இன்னொரு குரல் பக்கத்திலிருந்து, “அபசகுனம் மாதிரி அப்படியெல்லாம் சொல்லாதேங்கோ. தாத்தாவுக்கு என்னைக் கண்டாலே பிடிக்காது. அவர் என் வயிற்றிலே பிறந்திருக்க மாட்டார்” என்றது. அவருடைய மாட்டுப் பெண் ஸுலோசனாவின் குரல் அது என்று தெரிந்து கொண்டார்.     ”அப்படிச் சொல்லாதேடி, மனத்துக்குள்ளே உன் மேலே அவருக்கு ரொம்ப வாஞ்சை. கடைசி வரையில் குழந்தை மாதிரி தீபாவளிக்குப் பட்டாசுச் சுட்டு விடுவாரோல்யோ? அதுதான் தீபாவளியன்றைக்குப் பிறந்திருக்கிறார்” என்றாள் சீதாலக்ஷ்மி அம்மாள்.     அப்போது சாஸ்திரியார் மனப்பூர்வமாக வெறுத்த அவருடைய மாட்டுப் பெண்ணின் முகம் – முன்னே பார்த்ததைக் காட்டிலும் பெருத்து உப்பியிருந்த முகம் – பவுடர் வாசனை மூக்கைத் துளைத்த முகம் – அவருடைய முகத்தின் மிக அருகில் வந்தது. அதைத் தடுத்துத் தள்ளுவதற்காகச் சாஸ்திரியார் கையைத் தூக்கினார். என்ன வேடிக்கை! கை துளியுண்டு இருக்கிறதே!     ”என் கண்ணே! அதற்குள்ளே அம்மான்னு தெரிஞ்சு போச்சா!” என்றாள் ஸுலோசனா.     அப்போதுதான் சாஸ்திரியாருக்கு விஷயம் தெரிந்தது. விதி தன்னை எவ்விதம் கேலிக்கூத்துக்கு உள்ளாக்கி விட்டதென்று! தன்னுடைய சொந்த வீட்டில் தான் தொட்டிலில் படுத்திருப்பதையும், தன் மாட்டுப் பெண்ணுக்குக் குழந்தையாய்ப் பிறந்திருப்பதையும் உணர்ந்தார். பிரமாதமான ஆத்திரமும், அழுகையும் வந்தது.

 

         கையையும் காலையும் உதைத்துக் கொண்டு ‘வீல்’ என்று அழுதார்.     ”அம்மா நீங்கள் சொன்னது சரிதான். தொண்டையைப் பாருங்கோ! அசல் தாத்தாதான்” என்றாள் ஸுலோசனா.     வெளியிலிருந்து சாஸ்திரிகளுடைய குமாரன் பஞ்சாமியின் குரல் சொல்லிற்று: “எத்தனை பகவத் கீதையைப் பிரசங்கம் பண்ணி, இருக்கிறவாள் பிராணனை எல்லாம் வாங்கப் போகிறாரோ.”     இதைக் கேட்டதும் சாஸ்திரியார் மூர்ச்சையடைந்தார்.     மறுபடியும் பிரக்ஞை வந்தது; ஆனால் நல்ல வேளையாய்ப் பூர்வ ஞாபகம் வரவில்லை.நன்றி: சென்னைநூலகம்.காம் (அமரர் கல்கியின் படைப்புகள்), அமரர் கல்கி, எழுத்தாளர், பத்திரிக்கையாளர்.

by parthi   on 12 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கரடியின் கர்வம் கரடியின் கர்வம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.