LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    பண்டிகைகள் Print Friendly and PDF
- ஹிந்து பண்டிகைகள்

வைகுண்ட ஏகாதசியின் மகிமையும், விரத முறைகளும் !!

மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை பதினோராம் நாள் இந்துக்களால் வைகுண்ட ஏகாதசி எனக் கொண்டாடப்படுகிறது. ஏகாதசி என்ற சொல்லுக்குப் பதினோராம் தினம் என்று பொருள். ஞானேந்திரியங்கள் ஐந்து. கர்மேந்திரியங்கள் (வாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம்) ஐந்து. மனம் ஒன்று  ஆகிய பதினொன்றையும் பெருமாளுடன் ஐக்கியப்படுத்தித் தியானம் இருப்பதே ஏகாதசி விரதம். உடலாலும் உள்ளத்தாலும் பெருமாளுடன் ஒன்றியிருப்பதே உபவாசம். 

 

வைணவர்கள் தாம் வழிபடும் திருமாலின் இருப்பிடமாகக் கருதும் வைகுண்டத்தின் கதவுகள் இன்று திறக்கப்படுவதாக நம்புகின்றனர். இந்நாளின் முன்னிரவில் உறங்காது இருந்து திருமாலின் புகழ்பாடி கோவில் செல்வர். விடிகாலையில் பெருமாள் கோவில்களில் பொதுவாக வடக்குதிசையில் என்றும் மூடப்பட்டிருந்து இன்று மட்டுமே திறக்கும் "சொர்க்க வாயில்" என்றழைக்கப்படும் வாயில்வழியே சென்று இறைவனை வழிபடுவர். திருவரங்கம் கோவிலில் இந்நாளின் முந்தைய பத்து நாட்களில் "இராப்பத்து" என்றும் பிந்தைய பத்து நாட்களில் "பகல்பத்து" என்றும் சிறப்பாக விழா நடத்தப்படுகிறது.

 

பகல்பத்து :

 

இந்தப் பத்து நாட்களும், அரங்கன் பூரணமான அலங்காரத்துடன், அன்றன்று அரங்கேறும் பாசுரங்களுக்கு ஏற்ப தம்மை அலங்கரித்துக்கொண்டு, தமது துவாரபாலகர்கள் வாசல் வழியே வெளியே எழுந்தருளும்போது, எப்படி குகையிலிருந்து சிங்கம் வெளிவருமோ... அதேபோல் புறப்படுவார்.  இதற்கு 'சிம்மகதி’  என்று பெயர்.  பிறகு 'ஒய்யார நடை’ எனும் புலி போன்று நடையிட்டு படியேற்றம் கண்டு, துலுக்கநாச்சியாரை அனுக்கிரஹித்து அர்ஜூன மண்டபத்தில் அமர்ந்து திருமொழிப் பாடல்களான, நம்மாழ்வார் தவிர்த்த ஏனைய ஆழ்வார்களின் பாடல்களை அரையர்கள் ஆடிப்பாடி அபிநயிக்க, ஆழ்வார்கள் மற்றும் ஆச்சார்யர்கள் குழாம்களோடு, ஆனந்தமாகக் கேட்டு ரசிப்பார்.

 

 

இராப்பத்து :

 

இந்த உத்ஸவமானது வைகுண்ட ஏகாதசி தொடங்கி நடக்கும் பத்து நாள் உத்ஸவத் திருவிழாவாகும்! இராப்பத்துத் திருநாளில் வைணவ பக்தனான ஒரு முக்தன் எவ்விதம் வைகுந்தம் அடைகிறான் என்பது நம்பெருமாளாலேயே நடத்திக் காட்டப்படுகிறது.  

 

விரஜாநதி மண்டபம் எனப்படும் விரஜாநதி ஓடும் வைகுந்தத்திற்கு ஒப்பாக சிறப்பாகக் கூறப்படும் இந்த மண்டபம் வரை, அரங்கன் போர்வை சாற்றிக்கொண்டு புறப்படுவார்.  இந்த மண்டபத்தில் வேதவிண்ணப்பங்கள் நடைபெறும்.  இது ஒரு முக்தன் விரஜாநதிக் கரையை அடையும்போது, 'விரசைதனில் குளித்து, இங்கு அமானவனால் ஒளிக்கொண்ட சோதியும் பெற்று, அமரர் வந்தெதிர் கொண்டலங்கரித்து வாழ்த்தி வழிநடத்த’ என்று மணவாளமாமுனிகள் அருளியபடி,  வேதகோஷத்துடன் தேவர்கள் எதிர்கொண்டு அழைப்பதற்கு ஈடாகப் போற்றப்படுகிறது, இந்த வைபவம். 

வைகுண்டவாசல் திறக்கப்படும் முன்பு, போர்வை களையப்பட்டு நம்பெருமாள் அலங்காரங்கள் பளிச்சிட பிரகாசமாக ஸேவை தந்தருள்வார்.  இது விரஜாநதியைக் கடந்ததும் அந்த முக்தன் சரீரவாசனை துறந்து, சுத்த தேஜோமயமான அழிவில்லாத பிரகாசமான சரீரத்துடன் பயணப்படுவதைக் குறிக்கும் விதமாக அமைந்துள்ளது. பரந்தாமனே தன் பக்தர்களுக்காக இதை நடத்திக்காட்டுவது, நம்மை அவனிடத்தே அதிக பந்தப்படுத்துவதற்கு வழி வகுக்கிறது!

 

அரங்கன் திருமாமணி மண்டபம் எனப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில், ஆழ்வார்கள் மற்றும் ஆச்சார்யர்கள் புடைசூழ நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழிப் பாடல்களை அரையர்கள் அபிநயிக்கக் கேட்டும் கண்டும் இன்புறுவார் அரங்கன். இந்த மண்டபத்தை அரங்கனது 'லீலாவிபூதி’ என்பார்கள். 'நித்யவிபூதி’ என்பது நித்யம் வாஸம் செய்யும் இடமாம். லீலாவிபூதி அரங்கனின் லீலைகள் அரங்கேறும் இடம். இங்குதான் திருக்கைத்தல ஸேவை, நம்மாழ்வார் மோட்சம் போன்ற வைபவங்கள் நடந்தேறுகின்றன.  

 

அடுத்து, நம்பெருமாள் ஆஸ்தானம் திரும்பும்போது, நாழிகேட்டான் வாசல் கடந்ததும், மேற்கு முகமாக திரும்பியவுடன், அங்கு வீணாகானத்தோடும், சாத்தாத பூவிதழ்களோடு கலந்து தூவும் பச்சைக் கற்பூரத்தோடும் ஸ்ரீவைஷ்ணவர்கள் நிற்பார்கள். அப்போது, மெதுவாக தளிர்நடையிட்டும் அசைந்து அசைந்து ஆடியும் அரங்கன் ஆஸ்தானம் ஏறும் படியேற்ற ஸேவையைக் காணக் கண் கோடி வேண்டும்.

 

வைகுண்ட ஏகாதசியின் சிறப்பு:

 

ஒரு வருடத்தில் 25 ஏகாதசி விரத நாட்கள் வருகின்றன. வளர்பிறை ஏகாதசி என்றும், தேய் பிறை ஏகாதசி என்றும் ஒவ்வொரு மாதத்திலும் இரண்டு ஏகாதசிகள் உண்டு நாழிகை வேறுபாட்டினால் கூடுதலாக ஒரு ஏகாதசி நாள் வரும். ஆக இருபத்தைந்து ஏகாதசியும் விரதம் கடைபிடித்தால் வாழ்வின் உயர்ந்த அந்தஸ்துகள் நம்மைத் தேடிவரும். அனைத்து ஏகாதசியும் விரதம் கடைபிடிக்க முடியாவிட்டாலும் உதய காலத்தில் வைகுந்த வாசல் திறக்கும் மார்கழியில் வரும் வைகுந்த ஏகாதசி அன்று பகல் உண்ணாவிரதம் இருந்து இரவு கண்விழித்து விரதம் கடைபிடித்தால் மற்ற 24 ஏகாதசி விரத சிறப்புப்பலனும் சேர்ந்து கிடைக்கும்.

 

ஏகாதசியன்று இறந்தால் சொர்கத்திற்கு செல்வார்களா :

 

வைகுண்டம் நல்லவர்களின் காலடி பட்டவுடன் திறந்து கொள்ளும். ஏகாதசி திதியில் முழுமையாக திறந்திருக்கும். அதற்காக, வைகுண்டத்துக்குள் எல்லாரும் புகுந்து விட முடியாது. ஏகாதசி திதியன்று உயிர் நீப்பவர்களும் கூட அவரவர் பாவ, புண்ணிய பலன்களை அனுபவித்தே தீர வேண்டும்.வாழ்நாள் முழுவதும் இறைபக்தியுடனும், தர்ம சிந்தனையுடனும், இனிய குணத்துடனும் இருப்பவர்களே ஏகாதசியன்று மரணம் அடைவர் என்பதால் இவர் சொர்க்கத்திற்குள் செல்வது உறுதி  என்பர்.

 

ஏகாதசியன்று செய்யக்கூடாதது: 

 

வைகுண்ட ஏகாதசி நாளில் தாய், தந்தைக்கு சிரார்த்தம் (நினைவுநாள்) வந்தால் அன்று நடத்தாமல் மறுநாள் துவாதசியன்று நடத்த வேண்டும். அன்று கோயில்களில் தரப்படும் பிரசாதத்தைக் கூட சாப்பிடக்கூடாது. கூடுமானவரை கோயில்களில் பிரசாதம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகள், நோயாளிகள், முதியவர்களுக்கு கொடுக்கலாம். இந்நாளில் துளசி இலை பறிக்கக்கூடாது. தேவையானதை முதல்நாளே பறித்து வைத்து விட வேண்டும்.

 

ஏகாதசி விரதம் எப்படி அனுஷ்டிக்க வேண்டும் :

 

ஏகாதசியின் முந்தய நாள் தசமி திதியில் ஒரு பொழுது உணவு சாப்பிட்டு இரவு பால் பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் ஆரம்பிக்க வேண்டும். மருநாள் ஏகாதசி அன்று அதிகாலை எழுந்து நீராடி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை ஆலயம் சென்று கண்டு பரந்தாமன் லெட்சுமி தேவியுடன் வருவதை போற்றி வணங்க வேண்டும். ஏகாதசி விரதம் இருப்பவர்கள் பூரண உபவாசம் (பட்டினி)இருக்க வேண்டும். குளிர்ந்த நீர் குடிக்க தடையில்லை. ஏழு முறை துளசி இலை சாப்பிட வேண்டும். ஏகாதசி குளிர் மாதமான மார்கழியில் வருவதால், உடலுக்கு வெப்பம் கிடைக்க துளசியை சாப்பிட வேண்டும். பட்டினி கிடப்பதால், ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்கிறது. குளிர்ந்த நீர் வயிறை சுத்தமாக்குகிறது. 

 

முழுவிதைமாக பழம், இளநீர் மட்டும் சாப்பிட்டு இரவு முழுவதும் கண்விழித்து இறை நாமம் சொல்லி மருநாள் துவாதசி திதியில் (பொழுது விடியுமுன்) விரதம் பூர்த்தி செய்ய வேண்டும். விரதம் இருப்பவர்கள் ஏகாதசி அன்று அரிசி, உழுந்து கண்டிப்பாக சேர்க்கக்கூடாது. துவாதசி விரத உணவில் நெல்லிக்காய், அகத்திக்கீரை, சுண்டைக்காய் மூன்றும் சேர்த்து அல்லது கிடைக்கும் நெல்லிக்காயையாவது உணவில் கண்டிப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.

 

துவாதசி அன்று முதல் நாள் கண் விழித்தவர்கள் அதிகாலையில் குளித்து திருமாலை வணங்கி ஹரி  ஹரி ஹரி என மும்முறை கூறி சுண்டைக்காய், நெல்லிக்காய், இதில் கொஞ்சம் எடுத்து பல்லில்படாமல் உண்ண வேண்டும் இதற்கு "பாரனை'' (விரதம்) முடித்தல் என்று பொருள்.

by Swathi   on 09 Jan 2014  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழ்ப் பண்டிகைகளில் முக்கியமானது கார்த்திகையாகும்.. தமிழ்ப் பண்டிகைகளில் முக்கியமானது கார்த்திகையாகும்..
கார்த்திகை தீபம் கார்த்திகை தீபம்
தை முதல் நாளே- தமிழ்ப் புத்தாண்டு! தை முதல் நாளே- தமிழ்ப் புத்தாண்டு!
ஆவணி மாதத்தின் மகத்துவம்... ஆவணி மாதத்தின் மகத்துவம்...
காமன் பண்டிகை காமன் பண்டிகை
நவராத்திரி வழிபாடு ஒரு சிறப்பு பார்வை !! நவராத்திரி வழிபாடு ஒரு சிறப்பு பார்வை !!
சித்திரையை கொண்டாடுவோம் சித்திரையை கொண்டாடுவோம்
தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்? தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.