இருப்பினும், அனைத்து விளையாட்டுகளுக்குப் பயிற்சி அளிப்பதற்கும், போட்டிகள் நடத்துவதற்கும் தனியாக விளையாட்டு நகரம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. இதன் அடிப்படையில், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் நிதியில் சென்னையில் சர்வதேச விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
இதற்காக, பழைய மாமல்லபுரம் சாலையில், சோழிங்கநல்லுாரை அடுத்த செம்மஞ்சேரி, கிழக்குக் கடற்கரைச் சாலையில் திருவிடந்தை போன்ற இடங்கள் பரிசீலிக்கப்பட்டன. இதில், செம்மஞ்சேரி தேர்வு செய்யப்பட்டு அங்கு விளையாட்டு நகரம் அமைக்க, 105 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இங்கு நீச்சல் வளாகம், இறகுப்பந்தாட்டம், மேசை வரிப்பந்தாட்டம், கைப்பந்து, ஜிம்னாஸ்டிக் பயிற்சிக் கூடங்கள், ஹாக்கி மைதானம் என 20-க்கும் மேற்பட்ட விளையாட்டு அரங்குகள் அமையவுள்ளன. மேலும், இந்த வளாகத்தில் வீரர்கள் தங்கி பயிற்சி எடுக்கும் வகையில் பயிற்சிக் கூடங்கள், தங்கும் அறைகள், பணியாளர்களுக்கான குடியிருப்புகள், உணவகங்கள், ஓடுதளங்கள் உட்பட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் இதுபற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.