LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- மற்றவர்கள்

இப்பவும், நிலா தொடர்கிறது...

எனக்கெல்லாம்... இத்தனை சிறு வயதில், இவ்வளவு யோசனைகள் இருந்ததில்லை. பரீட்சைக்கு படிக்கிறான்களோ இல்லையோ விடுமுறையில் என்ன செய்வது என்பது பற்றி ஏகப்பட்ட யோசனைகள் என் பசங்களுக்கு. அவனுங்களுக்கு, சினிமா போவது, பீச்சுக்குப் போவது, சாப்பிங்மால் போவது எல்லாம் சாதாரண வார விடுமுறை கொண்டாட்டங்களாம்.  கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடுவது, செல்போனில் கேம்ஸ் விளையாடுவது என்பதெல்லாம் அன்றாட விசயங்களாம். சப்பை மேட்டராம். சத்தியமா ‘சப்பை மேட்டர்’ என்ற வார்த்தை மூன்றாவது படிக்கும் இரண்டாவது வாலு சொன்னது.


எப்போதும் எதிர்எதிர் கருத்துக்களுடன் திரியும்… மேல அறிமுகப்படுத்தப்பட்ட சின்னவனுக்கும், ஆறாம் வகுப்பு முடித்த மூத்தவனுக்கும்.. கோடைகாலத்தைக் கொண்டாட என்னன்னவோ ஐடியாக்கள். ஒவ்வொன்றும் ஒருவனுக்குப் பிடித்திருந்தால்.. அடுத்தவனுக்குப் பிடிக்கவில்லை என பல்வேறு கருத்து மோதல்களைத் தாண்டி வானில் பறந்தும், கடலாடியும், ரயிலோடியும், பஸ்ஏறியும் எங்காவது செல்லாத இடந்தனுக்கு செல்ல வேண்டும்; என்பதில் ஒரே அபிப்ராயம், ஒரே விருப்பம், ஒரே எண்ணம். அதற்கு ஒரே தடை, என் மனைவி.


பூனையை வச்சுட்டுக்கூட சகுனம் பார்த்திடலாம், என் மனைவி வச்சிட்டு டூர் போறது சாத்தியமில்லை. என் மனைவிக்கு டிராவலோபோபியா. பஸ் ஏறுவது என்றாலே பயம், ஆட்டோ என்றால் அலர்ஜி, கார் கசுடம், இல்லமே இசுடம். இதையும் மீறி எங்கயாவது வெளியில் கிளம்ப வேண்டும் என்றால், போதும்.. போதும்னு போற அளவுக்கு படுத்திடுவா. இவ்வளவு ஏன்? அவளை ஹனிமூனுக்குக் கூப்பிட்;டுபோயி நான் பட்டபாடு இருக்கே… அவ்வ்வ்வவ்வ்வ்வ். கிளம்பின அன்னையிலிருந்து ஓரே தலைசுத்தல், வாந்தி, மயக்கம். இஞ்சிமுறைப்பாவிலிருந்து.. இங்கிலீசு வைத்தியம் வரை எதுவும் எடுபடவில்லை. வேற வழியில்லாம ஹனிமூனே! கொண்டாடாம படாதபாடுபட்டு திரும்பி வீட்டுக்கு வந்தா.. அவங்க பாட்டி சொல்லுச்சு.. பரவாயில்ல மாப்ள, ஹனிமூன் கூட்டிட்டு போயி, பொன்ன வாந்தியெடுக்க வச்சிட்டீங்களே!ன்னு.. ச்சே!


பிள்ளைகளை மட்டுமாவது சொந்தக்காரங்க வீட்டில் போய் ஒருவாரம், பத்து நாட்களுக்கு டேரா போட அனுப்பலாம் தான். ஆனால், அதில் சிக்கல் என்னவென்றால் பெருநகரத்தில் நானிருக்கும் வீட்டிற்குப் பக்கத்து தெருவிலேயே என் மனைவியின் அம்மா, அப்பா வசிப்பதால் விடுமுறைக்கு மாமியார் வீட்டிற்கு செல்வது ரூல்டு அவுட் ஆகிறது. மச்சினன் மும்பையில் இருக்கிறான். அங்கே புறப்பட்டு போகலாம் என்று நினைத்தாலே (அவனுக்கு எப்படி தெரியுமோ?) அவன் போன் போட்டு வருவதாக சொல்லிவிடுவான். என் மனைவி வகையில் வேறு சொந்தங்கள் வீட்டிற்கு அவள் சிறுவயதாய் இருப்பதிலிருந்தே செல்வதில்லையாம்.


ஏன்? உங்க அப்பா அம்மா வீட்டிற்கு போவது தானே என்றால், எனக்கு அப்பா இல்லை. அம்மா என்னுடனே தங்கி இருக்கிறார்கள். சொந்த ஊரில் வீடு மட்டும்தான் இருக்கிறது. அந்த கிராமத்திற்குப் போவதென்றாலோ என் பிள்ளைகளுக்கு அவ்வளவு அலர்ஜி. சொர சொர தாடி கிழவன்களின் கொஞ்சலும், வெத்தலைவாய்க் கிழவிகளின் முத்தங்களும், முரட்டு மாமாக்களின் கட்டிப்பிடித்தலும், எதிர்ப்படுவோர் அவர்களையே குருகுரு எனப் பார்ப்பதும் அவர்களுக்கு அப்படியான ஒரு உணர்வை உண்டாக்கி இருந்தது. பத்தாததிற்கு வீட்டை விட்டு வெளியே போனா சாப்பிங் மால்களை எதிர்பார்க்கும் அவர்களுக்கு, ஒரு சாப் கூட இருக்காது. செல்போன்ல சிக்னல் எடுக்காது. பகல் நேரத்துல பாதி நேரம் கரண்ட் கூட இருக்காது. அவர்கள் எதிர்பார்க்கும் ஒரு எண்டர்டெய்ண்மெண்டும் கிடையாது. ஊரில் ஆங்காங்கிருக்கும் எருமை மாடுகளும், வறுமைக் கோடுகளும் அவர்கள் ஊருக்கு வர விரும்பாததிற்கான காரணிகள்.


இதையெல்லாம் உத்தேசித்து, அதைச்செய்யலாம் இதைச்செய்யலாம் என என் நான் குடுத்த பல ஐடியாக்கள் பிள்ளைகளிடம் எடுபடவில்லை. என் மனைவியோ இம்மாதிரி சந்தர்ப்பங்களில் அதிகம் பேசி அலட்டிக் கொள்ளமாட்டாள். கடைசி முடிவாக.. பிள்ளைகளை இங்கேயே ஒரு ‘சம்மர் கோச்சிங் கேம்பில்’ சேர்த்துவிடுவது என்று முடிவாயிற்று. முடிவை நான் ஏற்றுக்கொண்டேன். (வேற என்ன செய்ய முடியும்?)


இது பிள்ளைகள், தானே எடுத்த முடிவென்று தனியாகச் சொல்லி ஒரு வரியை வேஸ்ட் பண்ண வேண்டியதில்லை. சொல்லவேண்டியது என்னவென்றால்.. இந்த முடிவை, என்னிடம் பசங்க சொன்னதும், ‘இப்ப எதுக்கு டைப்பிங் கிளாஸ்? எல்லாம் பத்தாவது முடிச்சவுடனே பாத்துக்கலாம்’ என்று சொன்னதுக்கு இரண்டாவது படவா, இடிஇடின்னு சிரிச்சான். அவன் அம்மா மாதிரி, தேவைக்கு மேல் பேசமாட்டான். மூத்தவன், ‘ஏம்ப்பா! இப்படி ஆதிவாசியா இருக்கீங்க..? இப்பெல்லாம் கம்ப்யூட்டர் கிளாஸ் கூட யாரும் போறதில்லை.. எல்லாம் தேர்டு ஸ்டாண்டர்டுலர்ந்து ஸ்கூல்லயே சொல்லிக் கொடுத்திடறாங்க. இது சம்மர் கோச்சிங்.. நாம வாழ்கைக்கு தேவைப்படுற இம்பார்ட்டண்ட் விசயங்களை டிரைன் பண்ணுவாங்கன்னு’ விளக்கிச் சொன்னான், என்பதுதான்.


நானெல்லாம் பள்ளி நாட்களை பெரும்பாலும் ஹாஸ்டலில் கழித்தவன். விடுமுறை நாட்களில் எங்கள் வீட்டுக்கு வருவதற்கே அவ்வளவு ஏங்கியிருக்கிறேன். என் பள்ளி லீவு நாட்களை அவ்வளவு ஜாலியாக எங்கள் ஊரில் கழித்திருக்கிறேன். அந்த நினைவுகளே இளவேனீர் காலத்து மாலை நேரத்தில், கடும் உழைப்பின் அலுப்புத்தீர ஆற்றில் குளித்து பின்னர் பசியும் ஆறி ஆசுவாசமாக சிறுகரட்டின் மேல் சாய்ந்து படுத்துக்கொண்டு மெல்லவந்து மேனிதொடும் இளந்தென்றலை அனுபவிப்பதைப் போல, சுகமளிக்கிறது.


கோவில் திடலில் பம்பரம் விடுறதுஇ குண்டு விளையாடறது, கிட்டிபுல் விளையாடறது, சோளத்தட்டையில் கிரிக்கெட், வீடு இருக்கும் தெருவில் திருடன்-போலீஸ், கல்லா-மண்ணா?, செவன் ஸ்டார், கட்ட தள்ளி, உயிர் கொடுத்தல், நண்பர்கள் வீட்டில் கேரம்போர்டு அப்பறம் பொம்பளப் பிள்ளைங்களோட சேந்து நொண்டி, ஸ்கிப்பிங், பண்ணாங்குழி, சொட்டாங்கல்லு, ராஜாராணி சீட்டு விளையாடுறதுன்னு கணக்கிலடங்கா விளையாட்டுக்கள். அதுவும் பத்தாம ஆத்துல குளிச்சு விளையாடுறது, மீன்பிடிச்சு விளையாடுறது, வாடகை சைக்கிள் ஓட்டுறது, டூரிங் கொட்டாயில் பார்த்த சினிமா படங்கள் என எல்லாத்தையும் லேசுல மறந்திட முடியுமா?


அப்படி ஆடித்திரிந்த காலத்தில் நண்பர்கள் வீட்டுல இருக்குற தீனிகளையும் கண்ட கண்ட நேரத்துல யாருக்கும் தெரியாமல் எடுத்துத் தின்போம். அம்மன் கோவில் தெரு, சேகர் வீட்டு அடுப்படியில் தூக்கு டப்பாக்களில் கிடைக்கும் முறுக்கு, சீனிச்சேவு எங்கள் எளிதான வேட்டை இலக்கு. கீழத்தெரு கண்ணன் வீட்டுல எக்கச்சக்க மாடு வளத்தாங்க. அவுங்க வீட்டுச் சாணி நாத்தம் ஊரே அடிக்கும். ( இப்போ அந்த வாசம்.. நினைச்சாலும் கெடைக்குமா? ) மாடு புதுக்கன்று போட்டுச்சுன்னா சீம்பால் எடுத்து வச்சிருப்பாங்க. அவங்க அம்மா மாட்டுக்கொட்டத்துக்கு போனவுடனே எடுத்துத் தின்போம். அதே தெருவில் இருக்கும் முரளி வீட்டில் எப்பவும் கம்மஞ்சோறை உருண்டை உருண்டையாக பிடித்து மோரில் போட்டு உரியில் தொங்க விட்டிருப்பார்கள். அதையும் அப்பப்ப தின்போம்.


எழாவது முடித்த கோடை விடுமுறையில் என்று நினைக்கிறேன், ஒரு சித்ரா பௌர்ணமி நாள். எங்க ஊர் ஆத்தோரத்து அம்மன் கோவிலில் விசேசமாக பூஜை நடக்கும். அதுக்கு முதல்நாள், வழக்கம்போல எங்க தெருவிளையாடல்களை முடிக்கும்போது இருட்டிருச்சு. அடுத்ததா, முரளி வீட்டில் கம்பஞ்சோத்து உருண்டை திங்கலாம்னு போனா.. உரி இருக்குற இடத்துல இல்ல.. அதுக்து பதிலா வேற ஒரு மண்சட்டி தொங்கிட்டிருந்துச்சு. ‘சேரி! புதுசா சட்டி வாங்கிருப்பாங்க போல’ன்னு நினைச்சுக்கிட்டு.. சட்டிய இறக்கினோம். உள்ள உருண்டைகள் இருந்துச்சு.. அதுபோதும்ல எங்களுக்கு. யாரும் வர்ரதுக்கு முன்னாடி அவக்கு.. அவக்குன்னு உருண்டைகளை பிச்சு முழுங்குனோம். என்னமோ மாதிரி இருந்துச்சு. எப்பயும் நானே ரெண்டு முழு உருண்டைய திம்பேன். ஆனா இன்னைக்கு ஒரு வாய் பிச்சு வச்சன்னையுமே ஒமட்டிக்கிட்டு வந்துச்சு. டேஸ்டும் கம்மஞ்சோறு மாதிரியில்லை. ஏதோ புளிக்கீரைய புல்லுக்கட்டோட சேத்து அரைகுறையா அரைச்சு உருட்டி வச்சமாதிரியிருந்துச்சு. அப்பறம்.. யாரோ வர்ற மாதிரி தெரியவும் சட்டிய அப்புடியே போட்டுட்டு ஓடிட்டோம். ராத்திரி நேர விளக்கில்லா வீட்டின் இருட்டில் ஒண்ணும் தெரியல.


பொழுது விடிய தெரிஞ்சுரும்மில்ல. முரளியோட அம்மா காலங்காத்தால கண்ணன் அம்மாகிட்ட வந்து,  ‘யக்கா.. கொஞ்சம் வீடு மொழுக, சாணியள்ளிக்கறேன்’னு கேக்க, கண்ணன் அம்மா ‘நேத்துத்தான இளங்கண்ணு சாணியா பாத்து உருட்டி உருட்டி எடுத்துட்டுப்போன, இன்னைக்கு மறுபடியும் வந்து கேக்குற’ ன்னு மறுகேள்வி கேக்க, ‘அதயேன்கா கேக்குறீக.. யாரு வீட்டுப்பூனைன்னு தெரியல, எப்பயும் வக்கிற கம்மஞ்சோறுன்னு நெனச்சு சாணியுருண்டைய தின்னு சட்டியையும் உடைச்சு விட்டுருச்சு’ ன்னு சொன்னாங்க. இதைக் கேட்ட பூனைகளாகிய எங்களுக்கு, அப்பறம் ரெண்டு நாளாகியும் வயிற்றோட்டம் நின்ற பாடில்லை என்பதெல்லாம்.. மரணப்படுக்கையிலும் மறக்க முடியாதல்லவா?


இப்படியெல்லாம் நினைத்தாலே இனிக்கும் சம்பவங்கள் ஏராளம். இம்மாதிரி விடுமுறைக் கொண்டாட்டங்களை ‘அதுக்கும் மேல’ ஆக்கியவர் பாண்டி மாமாதான். பாண்டி மாமா, சேகர் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் வேலை பார்ப்பவர். எப்போதும் மூடிய பெருங்கதவிற்குப் பின்னால் இருக்கும் அந்த அந்த விட்டினுள் செல்ல எனக்கோ, பசங்களுக்கோ ரொம்ப பயம். அதற்கு காரணம் அடைத்த கதவு மட்டுமல்ல. கதவிடுக்குகளின் வழியே பார்த்தால் தெரியும்.. கதவிற்கும் உள்வீட்டிற்குமான நீண்ட பாதையில் அலையும் சிங்கத்தனைய நாய்களும்தான்.


தெருவில் கிரிக்கெட் விளையாடும் போது, சில சமயங்களில் பந்து பாண்டி மாமா வேலை பார்த்த வீட்டிற்குள் எப்போதாவது போய்விடும். அப்போதெல்லாம் யார் பந்தை அந்தப்பக்கம் அடிக்கிறார்களோ அவர்கள் ‘அவுட்’ என்பதுடன், அவர்கள்தான் போய் பந்தையும் எடுத்து வரவேண்டும் என்பது ஆட்டவிதி. பெரும்பாலும் அந்தப்புறமாக அடித்துவிட்டு பந்தை எடுத்து வர பயந்தவர்கள் தெருமுனைக் கடையில் புது பந்து வாங்கித்தந்து விடுவார்கள். அப்போது ஒரு பந்து மூன்று ரூபாய் என நினைக்கிறேன். ஒருமுறை நான் அடித்த போது பந்து அந்த வீட்டிற்குள் போய்விட்டது. நானோ பயந்தவர்கள் பட்டியலில் முதலாள். எனவே புதுப்பந்து வாங்கித்தருவேன் என்று பசங்களுக்கு எதிர்பார்ப்பு. ஆனால், நான் பந்து வாங்க முடியாத சூழ்நிலையில் இருந்தேன். ஏனென்றால், அதற்கு முதல் நாள்தான் வீட்டில் ஐந்து ரூபாய் வாங்கி சினிமா கொட்டாயில் ரஜினிபடம் பார்த்து இருந்தேன். எனவே மீண்டும் காசு கேட்டால் வீட்டில் அம்மா அடிக்கும். அம்மாவுக்கு தெரியாமல் எங்கள் வீட்டில் தூசே எடுக்க முடியாது. பின்னர் எப்படி காசு எடுப்பது? பசங்களிடமும் பந்து இல்லை என்று சொல்ல முடியாது.


இங்கிட்டுப் போனால் தாய் அடிக்கும். அங்கிட்டுப் போனால் நாய் கடிக்கும். மனதில் நடந்த பட்டி மன்றத்தில், நாய் கடியில் கூட அதிர்டம் இருந்தால் தப்பிடலாம். ஆனால் தாய் அடிக்கு தப்பமுடியாது. எனவே நாயே பெட்டர் என்பது தீர்ப்பானது. ‘ஐயா! ஊர்க்கருப்பா! அறிஞ்சும் அறியாமச் செஞ்ச நல்லது கெட்டதுகள மன்னிச்சு நீதான் துணையா வந்து உன் பிள்ளைய அந்த நாய்கட்ட இருந்து காப்பாத்தி பந்தை எடுத்துட்டு வர உதவனு மய்யான்னு’ பய பக்தியுடன் வேண்டிக்கிட்டு கேட்டுக்குள்ள நுழைஞ்சா.. நுழைஞ்ச நிமிசத்திலிருந்து நாய் துரத்த ஆரம்பிச்சிருச்சு. ‘ஐயய்யோ செத்தம்டா!’ன்னு நெனச்சுட்டு,  ஏதோ ஒரு வேகத்துல, அந்த வீட்டு பக்கவாட்டு ஜன்னல் மேல கால்வெச்சு அதன் சிலாப்ல ஏறி உக்காந்துட்டேன்.


இறங்கினால் என்னைக் கடிக்கக் காத்துக்கொண்டிருந்த நாயிடமிருந்து காப்பாற்றியது, நான் வேண்டிய சாமி இல்லை, பாண்டி மாமாதான். நாய இழுத்துப் பிடிச்சு கட்டிட்டு என்னைய இறக்கி விட்டுச்சு. நான் அந்த வீட்டுக்குள் நுழைந்த காரணம் தெரிந்ததும், ‘விறகுவெட்டியின் தேவதை’யைப் போல், நான் அடித்த பந்தை மட்டுமில்லாமல் ஏற்கெனவே, அந்த வீட்டில் அடித்துவிட்டு நாங்கள் எடுக்காமல் விட்டிருந்த பந்துகளையும் சேர்த்து எடுத்துக் கொடுத்துச்சு. வெளியே காத்திருந்த நண்பர்களிடம் பல பந்துகளைக் கொடுத்து அந்த நிமிட ஹீரோவானேன்.


என்னை ஹீரோவாக்கியவர், எனது ஹீரோ ஆனார். அன்று முதல் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவரோடு சுற்ற ஆரம்பித்தேன். பாண்டிமாமா சிரிக்க சிரிக்கப் பேசும். சின்னச் சின்ன கதைகள் சொல்லும். ரொம்ப ஜாலியா இருக்கும். அதுக்கிட்ட கத்துக்கிட்ட விடுகதைகள பசங்கட்ட போட்டுக்காட்டுனா.. மிரளுவானுங்க. அந்த கெத்தே எனக்கு மாமாவிடம் அதிகம் பழகவச்சது.


மாமாட்ட பழகி கத்துக்க வேண்டியது நிறைய இருந்துச்சு. எந்தப் பொருளையும் வேணான்னு தூக்கிப்போடாது. பழைய பேப்பரானும் சேத்துவைச்சு வெண்ணி வைக்க அடுப்பெரிக்கும். பிளாஸ்டிக் குப்பைன்னாலும் சேத்து எதையாவது மடிச்சு கொடுக்க பயன்படுத்தும். எந்தக் குப்பைக்கும் அது அதுக்குன்னு ஏதேனும் ஒரு வேலை வச்சிருக்கும். கோழிப்பீயைக் கூட வீணாக்காது. ஆமா, அவங்க வீட்டில் நாய்களைத் தவிரவும் கோழி, ஆடு, மாடு என பல விலங்குகள். அவருக்கு அவைகளைப் பற்றி நிறைய விசயங்கள் தெரிந்திருந்தது. எனக்கு சொல்லியும் கொடுத்தது. நாயைப் பற்றி கத்துக்கிட்டேன். ‘முதல்ல நாய் துரத்தினால் ஓடக்கூடாது. பயப்படாமல் அல்லது பயந்தமாதிரி காட்டிக்காமல் நிக்கணும். எப்பேர்ப்பட்ட நாயும் ஓடாமல் நின்றால் ஒன்றும் செய்யாது. மீறி ஓடினால்.. அவ்ளோதான்!’ என்று சொல்லிக் கொடுத்தது. அந்தப் பாடம்தான் இப்போதும் லேட் நைட் வேலை முடித்து வரும் போது தெருவில் துரத்தும் நடுநிசிநாய்களிடம் இருந்து என்னைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது.


அந்த வீட்டில் குதிரையும் இருந்தது. உயரான குதிரை. உடம்பெல்லாம் வெள்ளையாக, அதன்மேல் பழுப்புநிறத்தில் உலக வரைபடம் போட்டதுபோல் அழகாக இருக்கும். சில சமயங்களில், நான் முன்னால் உட்கார மாமா ஓட்டும். குதிரைக்கு உண்ணி பார்த்து விடுவது என் வேலை. ஒருமுறை, நானாக அதில் ஏறி உட்கார முயற்சித்து கீழே விழுந்துவிட்டேன். அதிலிருந்து அக்குதிரைப் பக்கம் சில நாட்கள் செல்லாமல் இருந்தேன். ‘எதற்கும் தைரியமாக இருக்க வேண்டும், எதையும் ஒருதடவைக்கு மறுதடவை விருப்பத்துடன் செய்தால், அதில் பெரிய ஆளாக வரலாம்!’ என்றெல்லாம் சொல்லி அதை ஓட்டக் கத்துக் கொடுத்தது. மீண்டும் மீண்டும் முயற்ச்சி செய்து ஓட்டக் கத்துக்கொண்டேன். மாமா பாராட்டுச்சு. தைரியமாக தனியாக என்னிடம் குதிரையை அனுப்பும், வீட்டைத் தாண்டி போகக்கூடாது என்கிற உத்திரவுடன்.


கோழிகளுக்கு தீவனம் போட ஆரம்பித்தது.. அவர் வேலைக்குச் செல்லும் போது கூடவே தென்னந்தோப்பிற்கும், மலைக்காட்டிற்கும் போகும் அளவிற்கு பதவி உயர்வை(!) அடைந்தேன். எங்கே சென்றாலும் மாமா சொன்ன வேலைகளைச் செஞ்சிட்டு நான்பாட்டுக்கு திரிவேன். மலைச் சரிவுகளில் நடப்பதும் ஒரு தனிக்கலை. காலை எந்தக் கல்லில் ஊனனும், எப்படி எடுக்கணும், திடீரென சருக்கினால் என்ன செய்வது என்பதெல்லாம் தான் அந்த டிரிக். அதையும் மாமாதான் சொல்லிக் கொடுத்துச்சு. மரங்களில் ஏறவும், உயரங்களில் இருந்து குதிக்கவும் பழகினேன். அவங்க மலைக்காட்டுச் சரிவில் ஒரு நாவ்வா மரம் இருந்தது. ரொம்பப் பெரிய மரம். சீசன்களில், அந்தப் பிரதேசமெங்கும் பழம் சிதறிக்கிடப்பதை பொறுக்கித் தின்பேன். அவ்வளவு ருசியாக இருக்கும். அதைப் பொறுக்கவே சமயங்களில் பசங்களையும் கூட்டிப்போவேன். அத்தனை பேரும் போர்க்கால அடிப்படையில், பலநாள் பொறுக்கியும் பழம் தீராது.


தென்னந்தோப்புக்கு செல்லும் நாட்களில், ‘வெடிதேங்காய்’ செய்து திம்போம். வெடிதேங்காய் செய்ய, தேங்காயை உரித்து, அதன் கண்ணை மட்டும் திறந்து, தண்ணீரைக் குடித்துவிட்டு அந்த ஓட்டை வழியே.. இடித்த பொட்டுக்கடலையும் நாட்டுச்சக்கரையும் போட்டு நிரப்ப வேண்டும். தேங்காமட்டையில் தீ மூட்டி அதில் தயார் செய்த தேங்காயை போட்டு விட்டால் சிறிது நேரத்தில், சூட்டில் சிரட்டை வெடித்து உள் கொப்பரை வரும். உள்ளே இருந்த சக்கரையும், மாவும் உருகி தேங்காயில் ஊறி இருக்கும். கொஞ்சம் ஆறியவுடன் சாப்பிட்டால் அவ்வளவு டேஸ்டா இருக்கும்.


வழக்கமாக, வெடிதேங்காயை ஏற்பாடு செய்து அடுப்பில் போட்டு விட்டு, தோட்டக் கிணற்றில் நீச்சலடிக்கச் மாமா சொல்லித்தரும்;. குளித்துவிட்டு வந்து, ரெடியாயிருக்கும் வெடிதேங்காயை தின்போம். சாயங்காலம் மட்டப்பாறையில் படுத்துக் கொண்டு வானத்தில் மேகங்கள் கலைந்தோடுவதை வேடிக்கை பார்ப்போம். மேகங்களை யானைமாதிரி இருக்கு.. குதிரை மாதிரி இருக்குன்னு சொல்லிச் சிரிச்சு விளையாடுவோம். இருட்டியதும், மலையிடுக்குகளுக்கு அப்பால் எங்களைத் தொடரும் நிலாவைப் பார்த்து ரசித்த படியே வீடு வந்து சேருவோம்.


இவ்வளவு ஜாலியாகத் திரியும் பாண்டி மாமாவின் தனிப்பட்ட வாழ்க்iயைப் பற்றி எனக்கு அவ்வளவாக தெரிந்ததே இல்லை. எப்போதாவது ஒருமுறை அது சொந்த கிராமத்திற்கு போய்ட்டுவரும். தவிரவும், நானே விடுமுறையில் கிடைத்த சிறு காலத்தில் தான் அவருடன் இருந்திருப்பேன் என்பதாலும் அவரைப்பற்றி நிறையத் தெரிந்திருக்க வில்லை. ஆனால் ஒன்று, அவர் தனக்கு கிடைத்த வாழ்க்கையைச் சந்தோசமாக வாழ்ந்தார் என்பது மட்டும் நிச்சயம்.


பள்ளி இறுதி படிக்கையில், படிப்பில் கவனம்... பிறகு வெளியூர் கல்லூரி வாழ்க்கை, நகரத்தில் வேலைவாய்ப்பு, நகரத்திலேயே திருமணம் என மாமா தொடர்பு அறுந்தது. பின்னம் ஒருநாள் கிராமத்திற்கு போயிருக்கையில் அவரை விசாரித்தேன். அவர் அங்கு இல்லை. நினைவுகள் எவ்வளவு சுகம் தருகிறதோ அதற்கினையாக சோகமும் தந்து விடுகிறது.


அடுத்தடுத்து செய்ய வேண்டிய வேலைகள் தொடர்வதால் பொதுவாக பழசை நினைப்பதில்லை. இல்லையென்றால் செய்ய வேண்டிய வேலைகள் மறந்து போய் பிரச்சனை உண்டு பண்ணிவிடுகிறது. எல்லா ‘வொர்க் டு டூ’ வையும் செல்போனில் பதிந்து வைத்துக் கொண்டிருப்பதால் தப்பிக்கிறேன். இன்றைக்கு ஆபிஸிலிருந்து திரும்பும் போது இரண்டு வேலைகளை செல் ‘பீப்’பி நினைவூட்டியது. ஒன்று ‘இன்னைக்கு விசேசம், வரும்போது பழங்கள் வாங்கிட்டு வாடா’ன்னு அம்மா சொன்னது. அடுத்தது பசங்க சம்மர் கோச்சிங்க்கு பீஸ் கட்டுவது.


 ஏ.டி.எம்மில் பணம் எடுப்பதற்காக பைக்கை நிறுத்தும்போது, அங்கே சிறு வண்டியில் வைத்து பழங்களை விற்றுக் கொண்டிருந்தது ஒரு பெரிசு. பைக்கை நிறுத்த பழவண்டியை சற்று ஓரங்கட்டச் சொன்னேன். அதற்கு ‘நீ அப்படி நிறுத்து, இப்படி நிறுத்து என சட்டம் பேசி, நான் நிறுத்தியதுதான் தவறு என சொல்லி என் பைக்கை எடுக்க வைத்து விட்டது. ‘போய்யா! ஒரு வியாபாரிக்கு இவ்வளவு வாய் ஆகாது, திரும்பும் போது பழம் வாங்கலான்னு நெனைச்சேன்.. உன் பேச்சால கெடுத்துக்கிட்ட..’ என மனசுக்குள் கருவிக்கொண்டு ஏ.டி.எம் போனேன்.


திரும்பி வந்து பெரிசிடமே பழங்களை வாங்கினேன். ‘நம்ம பேசினால் தானே பெரிசு பதில் பேசும். நாம அதிகம் பேசாம பழத்தை மட்டும் வாங்கிவிட்டுப் போய்விடலாம்!’ என மனதை மாற்றிக் கொண்டேன். ஏனெனில், பெரிசின் பழவண்டியில் நவால் பழமும் இருந்தது. ஆசைப்பட்டு வாங்கினேன். கிலோ இருநூறு ரூபாயாம்.


‘ஏய்யா! இந்த பழம் நாங்க சும்மா பொறுக்கி எவ்வளவு தின்போம் தெரியுமா? இவ்வளவு விலை சொல்லுறியே?’ என கேட்கவேண்டாம் என்றுதான் நினைத்தேன், ஆனால், வாய்வரை வந்த வார்த்தையை என்னைக்கு அடக்கியிருக்கிறேன், இன்றைக்கு அடக்க? கேட்டேவிட்டேன்.


‘சும்மா கெடைக்குமா.. சும்மா? பயம் என்ன வில மார்கெட்ல விக்குதுன்னு தெர்மா உனக்கு?.. மண்ணவித்து வூடு கட்டியே.. வெசாயம் அயிஞ்சிருச்சு. வெவசாயியும் அயிஞ்சுட்டான். மிச்சமருந்தவனுங்கோ.. உடனே சம்பாரிக்கலம்னு ஆசயில இருக்கறத விட்டு பறக்குறதுல போயி சாகுதுங்கோ. அல்லாருக்கும் வெவசாயம் பத்தி பேச இனிக்கிது, செய்ய கசக்குது. அத்த வுடு.. சும்மா பயம் தின்னேன்னு சொல்ற நீயெல்லாம், அதுக்கோசரமாவது ஒரு மரமாவது நட்டு, முழுசா வளத்துக்கினியா?.. ஏதோ, பயம் கெடைக்குதேன்னு பாரு. உங்காலத்துல ஓசியா கெடைச்சது.. இப்ப துட்டுக்காச்சும் கெடைக்குதுன்னு சந்தோசப்படு!’ என, என்னை பொலந்தார் பழம் விற்கும் பெரிசு.


அப்புறம் ஏன் அங்க நிக்கிறேன். பட படவென்று பழம் வாங்கிவிட்டு. திரும்பிப்பாக்காம விருட்டுன்று பைக்கைக் கிளப்பி விரைந்த நான் வந்து நின்றது, பசங்க படிக்கிற கோச்சிங் சென்டர் வாசலில். பசங்களுக்கு கிளாஸ் முடிய இன்னும் சில நிமிடங்கள் இருந்தது. அந்த சென்டரின் முகப்பை சுற்றிப் பார்த்தேன். ஹால் அலங்கரிக்கப்பட்ட வனப்பில், பளபளத்துக் கொண்டு இருந்தது. சுவற்றில் அழகிய கொடி படந்திருப்பது போல் ஓவியம் வரைந்து இருந்தார்கள். கண்ணைக் கவர்ந்தது.  மறுபுற சுவற்றில், பயிற்சியில் என்னென்ன சொல்லித் தருகிறார்கள் என படம் போட்டு விளக்கியிருந்தார்கள்.


ஸ்விம்மிங், ஹார்ஸ் ரைடிங், டிரக்கிங், பிட்னஸ் கோர்ஸ், கிட்ஸ் குக்கிங், ஆர்ட் ஃபிரம் வேஸ்ட், பஸில்ஸ், கிரியேட்டிவ் அப்சர்வேசன்ஸ், ஸ்டோரி டெல்லிங், கவுன்சிலிங்… இத்யாதி, இத்யாதிகளின் இறுதியில் பயிற்சிக்கட்டணத்தை நினைவுப் படுத்தியிருந்தார்கள். அதிர்ச்சியுடன் அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, பழம்பெரிசு ‘உங்காலத்துல ஓசியா கெடைச்சது.. இப்ப துட்டுக்காச்சும் கெடைக்குதுன்னு சந்தோசப்படு!’ என்றது நினைவிற்கு வந்தது. கவுண்டரில் பீஸைக் கட்டிவிட்டு திரும்பியபோது, நான் பெற்ற செல்வங்கள் வகுப்பு முடிந்து திரும்பியிருந்தனர்.


அனைவரும் வீடு திரும்பிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் கவனிக்கா விட்டாலும் கட்டிடங்களுக்கு அப்பால் எங்களைத் தொடர்ந்து கொண்டிருந்தது சித்திரை நிலா. எதையும் முந்திக்கொண்டு பேசும் மூத்தவன் அமைதி காத்தான். சின்னவன் அதைக் கலைத்தான்.


‘ப்பா.. இன்னைக்கு கிளாஸ்ல அண்ணன் வாமிட் பண்ணிட்டான்.’


‘ஏன்டா? என்னாச்சு’ என நான் கேட்ட பின்னும் மூத்தவன், பேசாமலேதான் இருந்தான். சின்னவன் தொடர்ந்தான்.


‘இல்லப்பா.. எங்க சென்டர்ல நியூபில்டிங் ஓப்பன் பண்றாங்க. அந்த பூஜைக்காக ஒரு பாட்டில்ல ‘கௌ யூரின்’ வச்சிருந்தாங்கப்பா… அத அண்ணன் கூல்டிரிங்குன்னு நினைச்சு குடிச்சுட்டான்!’

Still, The Moon is following!
by   on 22 Apr 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கரடியின் கர்வம் கரடியின் கர்வம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.