|
||||||||
அயர்லாந்து இந்தியத் தூதரக முதன்மைச் செயலாளர் திரு. முருகராஜ் தாமோதரன்,IFS அவர்களுடன் ஓர் இலக்கியச் சந்திப்பு : தமிழ்மைந்தன் ஜான் ரிச்சர்டு |
||||||||
![]() திருமிகு. முருகராஜ் தாமோதரன் அவர்கள் இந்திய வெளியுறத் துறையின் உயர் அலுவலர். பொறுப்பு வகிப்பவர். இயந்திரப் பொறியியலில் முதுநிலை (M.E. Mechanical Engineering) முடித்த பின் பொறியியல் கல்லூரியில் துறைத் தலைவராகப் பணியாற்றி, பிறகு இந்தியக் குடிமையியல் தேர்வு எழுதி, இந்திய வெளியுறவுப் பணிக்குத் (IFS) தேர்வு பெற்றவர். இந்தியக் குடிமையியல் தேர்வுக்குத் தமிழ் இலக்கியத்தை விருப்பப் பாடமாகத் தேர்வு செய்து தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்றவர் என்பது பெருமைக்குரியது. தமிழ்ச் சங்க இலக்கியங்கள் குறித்த ஆர்வம் மிக்கவர். 1330 நாட்களாகத் தொடர்ந்து சமூக ஊடகங்களான முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் அனைத்துக் குறட்பாக்களுக்கும் ஆங்கிலம் மற்றும் தமிழில் பொழிப்புரை எழுதி திருக்குறள் பணியாற்றினார். இவரது பொழிப்புரை நவீனத்துவச் சிந்தனையுடன் இக்காலத்திற்கு ஏதுவாய் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இவற்றைத் தொகுத்து, அண்மையில் நூலாக வெளியிட்டுள்ளார். இந்நூலில் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் பொழிப்புரை இடம் பெற்றுள்ளதால், வெளிநாடுகளில் உள்ள அடுத்த தலைமுறைக்கும் இது பயனுள்ளதாக அமையும் என்பது உறுதி. திருமிகு. முருகராஜ் அவர்களை, வலைத் தமிழ் வாசகரும், அயர்லாந்தில் வாழும் தமிழ் எழுத்தாளருமான தமிழ்மைந்தன் ஜான் ரிச்சர்டு நேர்காணல் செய்தார்..
தமிழ்மைந்தன் ஜான் ரிச்சர்டு: வணக்கம் ஐயா. உலகப்பொதுமறை திருக்குறளை உள்ளத்தில் ஏந்தி, இக்காலச் சூழலுக்குப் பொருந்தும் வண்ணம், அருமையான விளக்க உரையை ஆங்கிலம், மற்றும் தமிழில் எழுதி நூலாக்கியத் தங்களுக்கு மனமார்ந்த நன்றிகளும், பாராட்டும். இந்த மகிழ்வான சூழலில் தங்களுடன் உரையாடுவதில் மகிழ்ச்சி. திருக்குறளுக்கு உரை எழுதுவது மிகச் சுலபம் அல்ல. அது ஒரு இமாலயப் பணி. இந்த எண்ணம் உங்களுக்குள் எப்படி உதித்தது? திருமிகு. முருகராஜ்: வணக்கம் ஜான் அவர்களே. தமிழ்நாட்டின் ஏனைய சராசரி மனிதரைப் போலவே என்னுடைய குழந்தை மற்றும் இளமைப் பருவமும் திருக்குறளை உள்வாங்கியும் வியந்து நோக்கியும் வளர்ந்தது. பள்ளிப் பாடநூட்கள், அரசுப் பேருந்துகள், அரசு கட்டிடச் சுற்றுச் சுவர்கள், பெரியவர்கள் மற்றும் பெற்றோர்கள் குறிப்பாக அம்மாவின் அறிவுரைகள் ஆகியவற்றின் மூலம் நன்கு அறிமுகமாகி விட்ட திருக்குறளை வாழ்வில் ஒருமுறையேனும் முழுமையாகப் படித்து விட வேண்டும் என்ற அளப்பறிய ஆவலும் கூடவே வளர்ந்தது. அலுவலகம், குடும்பம் மற்றும் சமூகப் பணிகளுக்கு இடையே, ஒரு நாளைக்கு ஒரு குறளை மட்டுமாவது மனதை ஊன்றிக் கற்று விட வேண்டும் என்பது எனது நெடுநாளைய விருப்பம். ஒருவழியாக 2020ல் புது தில்லியில் பணியாற்றிய போது ஒவ்வொரு நாளும் ஒரு திருக்குறள் படிக்கும் திட்டம் இனிதே சாத்தியமானது.
தமிழ்மைந்தன் ஜான் ரிச்சர்டு: 1330 நாட்கள் தொடர்ந்து நேரம் ஒதுக்கி, சமூக ஊடகங்களில் - நாளுக்கு ஒரு குறளுக்கு விளக்க உரை என்று தொடர்ந்து, தொய்வில்லாமல் திருக்குறளுக்குப் பணி ஆற்றி உள்ளீர்கள். ஒவ்வொரு நாளும் உங்கள் உணர்வு எப்படி இருந்தது? திருமிகு. முருகராஜ் : மனதிற்கு மிகப்பிடித்த தின்பண்டங்களையோ, விளையாட்டு பொருட்களையோ சிறார்கள் எந்தளவுக்கு ஆவலுடனும் மகிழ்ச்சியுடனும் கைக் கொள்வார்களோ அதற்கு சற்றும் குறைவில்லா இன்பம் எனக்கு வாய்த்தது. ஒரு வேறுபாடு - எனக்கு ஒவ்வொரு நாளும், தொடச்சியாக ஏறக்குறைய நான்கு ஆண்டுகளுக்கு அப்பேறு வாய்த்தது. ஆண்டுக்கொருமுறை ஊர்த்திருவிழாவிற்கு வந்து செல்லும் காதலி, தந்து செல்லும் காதல் போல, ஒரு குறளுக்காக நான் செலவிட்ட அரை மணி நேரம் ஒரு நாள் முழுதும் எனக்குள் ஏற்படுத்திய பரவச உணர்வு சொல்லி மாளாது; அனுபவித்தே உணரக் கூடியது.
தமிழ்மைந்தன் ஜான் ரிச்சர்டு : 1330 நாட்கள் தொடர்ந்து விளக்க உரை எழுதி முடித்த பின், அதைக் கடந்து சென்றிருக்கலாம். ஆனால், அனைத்தையும் தொகுத்து நூலாக்க வேண்டும் என்ற எண்ணம் உதித்ததற்கான பின்புலம் என்ன? அதை எப்படிச் சாத்தியப் படுத்தினீர்கள்? திருமிகு. முருகராஜ்: சமூக வலைதளங்களில் எனது எளிமையான விளக்கங்களைப் பகிரத் தொடங்க, அனேக உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அவற்றை வரவேற்றதோடு தங்களுக்கும் பயனுள்ளதாக இருப்பதாகக் கூறி ஊக்குவித்தனர். கொரோனா கால குறுகிய இடைவெளி தவிர முடிந்தவரை தினமும் ஒரு குறளைப் படிப்பதையும் அதன் பொருளை தமிழிலும் ஆங்கிலத்திலும் எளிமையான முறையில் எழுதுவதையும் வழக்கமாக்கிக் கொண்டேன். இப்படியாகக் கடந்த நாண்காண்டுகளில் எழுதியவற்றைத் தொகுத்து ஒரு நூலாக வெளியிடும் முயற்சியை சாத்தியமாக்கிய டிஸ்கவரி புக் பேலஸ் திரு. வேடியப்பன் அவர்களுக்கும் அவரை அறிமுகம் செய்து உதவிய நண்பர் தமிழ் மைந்தன் திரு. ஜான் ரிச்சர்டு அவர்களுக்கும் அறிவுரை வழங்கிய பேராசிரியர் திரு. இளங்கோ அவர்களுக்கும் வாழ்த்துரை வழங்கிய அசர்பைஜனுக்கான இந்தியத் தூதர் திரு. பயணிதரன் அவர்களுக்கும் அயர்லாந்துக்கான இந்திய தூதர் திரு. அகிலேஷ் மிஷ்ரா அவர்களுக்கும் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.
தமிழ்மைந்தன் ஜான் ரிச்சர்டு: குறளுக்கான விளக்க உரையைத் தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ மட்டும் எழுதியிருக்கலாம். ஆனால், நீங்கள் இருமொழிகளையும் தேர்ந்தெடுத்து எழுதியுள்ளீர்கள். என்ன காரணம்? திருமிகு. முருகராஜ்: ஒன்று, மூல மொழியான தமிழில் மிக நடுநிலையான விளக்கத்தைத் தர வேண்டும்; இரண்டாவதாக, இந்திய மற்றும் உலக அலவில் மிகப் பரவலாக பயன்பாட்டிலிருக்கும் மொழியான ஆங்கிலத்தில் எளிமையான விளக்கத்தைத் தர வேண்டும். இவ்வாறாக முடிந்தவரையில் அநேக மக்களிடமும் திருக்குறள் கருத்துகள் எளிதாக சென்றடையவேண்டும் என்பதே குறிக்கோள்.
தமிழ்மைந்தன் ஜான் ரிச்சர்டு : திருக்குறளுக்கு மணக்குடவர், காலிங்கர், பரிமேலழகர் முதற்கொண்டு தமிழறிஞர் மு.வரதராசனார், பேராசிரியர் சாலமன் பாப்பையா, கலைஞர் மற்றும் இந்நாள் கவிஞர் பெருமக்கள் வரை உரை எழுதியுள்ளனர். தாங்கள் எழுதிய உரையை ஒரு உரையாளராக எப்படி பார்க்கிறீர்கள்? அதை எழுதி முடித்தவுடன் உங்களுள் எழுந்த மன ஓட்டம் என்ன? திருமிகு. முருகராஜ்: ஏற்கனவே மிகப்பலர் திருக்குறளுக்கு உரை தந்திருந்தாலும், என்னுடைய முயற்சி சிலவகைகளில் வேறுபட்டிருப்பதாகவே கருதுகிறேன். முதலாவதாக, இருபாலருக்கும் பொருந்துவதாகவும் முடிந்தவரை பால்வேற்றுமைகளைக் களைந்தும் எழுதியிருக்கிறேன். எடுத்துக்காட்டாக, வாழ்க்கைத் துணைநலம் என்னும் அதிகாரத்தில் கற்பு, கடமை, பண்பு, குணநலம் ஆகிய சிறப்புகள் மனைவிக்கு மட்டுமே உரியதாகப் பிறர் உரை எழுதுவதை, கணவன்-மனைவி இருவருக்கும் உரியதாக எழுதியிருக்கிறேன். அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம் ; குறள்: 56 தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண். (கற்புநெறியில் தன்னையும் தன் துணையையும் காத்துக் கொண்டு, குடும்பத்திற்கு பெருமை சேர்க்கும் புகழையும் அறவழியில் காப்பாற்றிக் கொள்ளும் உறுதி கொண்டவரே உண்மையான வாழ்க்கைத்துணை) இதைப் போலவே, முற்போக்கு சிந்தனையுடனும், தற்காலத்திற்குப் பொருந்தும் வகையிலும் தர முயன்றிருக்கிறேன். ஏழுபிறப்பு என்பதை ஏழு தலைமுறை என்றும் அவ்வுலகம் என்பதை அடுத்தத் தலைமுறை என்றும் மறுமை என்பதை சந்ததியினர் என்றும் பொருள் கொண்டு உரை எழுதியிருக்கிறேன்.
அதிகாரம்: செய்நன்றி அறிதல்; குறள்: 107 எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் விழுமந் துடைத்தவர் நட்பு. (பெரியோர் தமது துன்பத்தைப் போக்கியவரின் நட்பை ஏழேழு தலைமுறைக்கும் போற்றுவர்)
மேலும், அதிகாரம்: அருளுடைமை; குறள்: 247 அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு. (பொருட்செல்வம் இல்லாதவர்க்கு இவ்வுலகத்து வாழ்க்கை சிறப்பாக அமையாததைப் போல, பிற உயிர்களிடத்தில் அருள் இல்லாதவரின் அடுத்த தலைமுறைக்கு சிறப்பான வாழ்க்கை அமையாது)
காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் போன்று அரசர்களுக்கு உரிய பண்புகளை தற்காலத்திற்குப் பொருந்தும் வகையில் ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் உரியவையாக கையாண்டிருக்கிறேன்.
அதிகாரம்: இறைமாட்சி; குறள்: 386 காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம் (மக்கள் வந்து காண்பதற்கு எளியவராகவும், கடுஞ்சொல் கூறாத இனியவராகவும் இருப்பவரின் ஆட்சியை உலகம் புகழும்)
அதிகாரம்: மன்னரைச் சேர்ந்தொழுகல்; குறள்: 700 பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும் கெழுதகைமை கேடு தரும். (தனக்கு ஆட்சியாளருடன் உள்ள நீண்ட நாள் பழக்கத்தின் காரணமாக தகாத செயல்களை செய்யத் துணிவது ஒருவருக்கு அழிவை ஏற்படுத்தும்)
மேலும், குழந்தைகளுக்கும் அதிகம் மொழிப் புலமை அற்றவர்களுக்கும் விளங்கும் வகையில் எளிய மொழிநடையில் தமிழ் ஆங்கிலம் ஆகிய இருமொழிகளில் விளக்கத்தைத் தந்திருக்கிறேன். மிகவும் முக்கியமாக, வள்ளுவனுள் இருக்கும் வாசுகியின் பார்வையில் திருக்குறளை மறுபார்வை செய்திருப்பது முற்றும் முழுதுமாக முதல் முயற்சி என்ற வகையில் பெருமை கொள்கிறேன்.
தமிழ்மைந்தன் ஜான் ரிச்சர்டு : உண்மையில் மிகச் சிறந்த முயற்சி ஐயா. வாழ்த்துகள். இந்தியக் குடிமையியல் தேர்வுக்குத் தயார் செய்த போது தமிழ் இலக்கியத்தை ஒரு விருப்பப் பாடமாக எடுத்துப் படித்து, தேர்வில் வெற்றி பெற்று - இந்திய வெளியுறவுப் பணியில் (IFS) சேர்ந்தவர் நீங்கள். தமிழ் இலக்கியத்தை விருப்பப் பாடமாகத் தேர்ந்தெடுத்தது குறித்து நாங்கள் அறிந்து கொள்ளலாமா? திருமிகு. முருகராஜ்: ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே தமிழ்வழியில் கல்வி கற்க முடிந்தாலும், பள்ளி இறுதியாண்டு வரையிலும் தமிழைக் குறைந்த பட்சம் ஒரு பாடமாகவாவது படிக்க முடிந்தது. ஆனால் பொறியியல் கல்லூரி காலத்தில் ஏற்பட்ட சற்றே நீண்ட இடைவெளி தமிழ் மீதான ஏக்கத்தை மிகவும் அதிகரித்தது. இத்தகைய தமிழ் படிக்கும் தீராத ஆவல் தான், என்னை குடிமையியல் தேர்வுக்குத் தமிழ் இலக்கியத்தை ஒரு விருப்பப் பாடமாக தேர்ந்து எடுக்கச் செய்து, அந்த ஏக்கத்தைச் சற்றே தனித்துக் கொள்ள வைத்தது என்று கூறலாம்.
தமிழ்மைந்தன் ஜான் ரிச்சர்டு: இயந்திரப் பொறியாளரிலிருந்து - கல்லூரிப் பேராசிரியர் - துறைத் தலைவர் - வெளியுறவுத் துறைப் பணி ,இந்தப் பயண அனுபவம் குறித்து எங்களிடம் கூறுவீர்களா? திருமிகு. முருகராஜ்: இயந்திர பொறியியல் - இளநிலை மற்றும் முதுநிலை சேர்த்து 6 ஆண்டுகள்; கல்லூரிப் பேராசிரியராக - 10 ஆண்டுகள்; அதில் துறைத் தலைவராக - 3 ஆண்டுகள்; வெளியுறவுத் துறையில் இதுவரையில் - 11 ஆண்டுகள். இவ்வாறான இந்த 30 ஆண்டு பயணம் எனது ஆளுமைக்குள் ஏற்படுத்தி வரும் நேர்மறையான தாக்கங்களை மனப்பூர்வமாக ஏற்று முழுமையாக புரிந்து கொள்ள முயல்கிறேன். கால ஆற்றின் வழியில் பயணிக்கும் வாழ்க்கைப் படகில், துடுப்பு என்னும் முயற்சியைக் கொண்டு கரை என்னும் விருப்பங்களை அடைந்து அவ்வப்போது சிறிதே மனநிறைவு கொள்கிறேன். ஆனால், ஓய்வெடுப்பது அல்லவே படகின் பயன்பாடு. பயணத்தின் தூரமும் சேரும் இடமும் உறுதியாகத் தெரியாவிடினும், ஒவ்வொரு மணித்துளியையும் ரசித்து ருசித்து இனிவரும் பயணமும் இனிதே தொடரும்.
தமிழ்மைந்தன் ஜான் ரிச்சர்டு : இயந்திரப் பொறியாளர் - கல்லூரிப் பேராசிரியர் - இந்திய வெளியுறவுத் துறை உயர் அலுவலர் - திருக்குறள் உரையாளர் - தமிழ் இலக்கிய ஆர்வலர் - இவற்றில் திரு. முருகராஜ் அவர்களுக்குப் பிடித்த பரிமாணம் எது? திருமிகு. முருகராஜ்: விவரம் தெரிந்த காலத்திலிருந்து என்னுள் குடிகொண்டு என்னுடனே பயணிக்கும் தமிழ் இலக்கியத்தின் மீதான ஆர்வம் எனக்கு முக்காலத்திலும் மனநிறைவையும் மகிழ்ச்சியையும் தரவல்லது என்று உறுதியாக நம்புகிறேன். தமிழ் இலக்கியங்கள் வழி பெற்ற அறநெறிகளை, குறிப்பாக "யாதும் ஊரே; யாவரும் கேளிர்" என்னும் மனித நேயக் கோட்பாட்டை என் வாழ்க்கையில் செயல்படுத்த ஊக்கம் அளித்து, பக்குவப்படுத்துவது நான் பணியாற்றும் துறை. இந்திய வெளியுறவுத் துறையில் பணியாற்றும் ஒவ்வொரு நாளும் புதுப் புது மனிதர்களைச் சந்திக்கிறேன். புதுப் புது அனுபவங்களைப் பெற்று என்னையே செதுக்கிக் கொள்கிறேன் என்பதும் உண்மை.
தமிழ்மைந்தன் ஜான் ரிச்சர்டு : திரு. முருகராஜ் அவர்களிடன் குடும்பம் குறித்து…. திருமிகு. முருகராஜ்: உயிர் ஈந்த பெற்றோர் - தேவகி தாமோதரன் - என்னை விருப்பப்படி செதுக்கிக் கொள்ள அனுமதித்து திசைக்கொன்றாக அவர்களின் நான்கு கரங்களின் மூலம் அரவணைத்து தற்போதும் வழிநடத்துபவர்கள்; தோள் கொடுத்த துணைவி - ஶ்ரீபிரியதர்ஷினி - வாழ்வின் வெற்றிடங்களை வெற்றிக்கான இடங்களாய் மாற்றியவர்; என்னை ஈனாத பெற்றோர் அவர்; இரண்டாய் பிறந்த இரட்டையர் நாங்கள்; நேரம் பகிர்ந்த பிள்ளைகள் - சங்கீத் வர்ஷினி, பாரத் நரேன்; இக்காலத்தையும் தாண்டி முற்காலத்தையும் எனக்கு காட்டும் கண்ணாடிகள்; அன்பு மற்றும் அறத்தின் வழி சமர்த்தாக நடைபயில கற்றுக் கொள்கிறார்கள். ஊக்கம் தந்த சுற்றம் - ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பதை மெய்ப்பிக்கும் விதமாய் பூமியின் சிறு துளியான எனக்கு பிரபஞ்சமாய் இருந்து ஆற்றல் தந்தவர்கள்.
தமிழ்மைந்தன் ஜான் ரிச்சர்டு : மிக்க மகிழ்ச்சி. தமிழ் எழுத்தாளராக அடுத்த திட்டம் என்ன? திருமிகு. முருகராஜ்: இந்தியக் குடிமையியல் தேர்வு எழுத விரும்பும் இளையோருக்குத் தேவையான வழிகாட்டுதல் நூலாக அடுத்த மாதம் வெளிவருகிறது.
தமிழ்மைந்தன் ஜான் ரிச்சர்டு : மிக்க நன்றி திருமிகு. முருகராஜ் அவர்களே. தங்களது வெளியுறவுப் பணியோடு, தமிழ் இலக்கிய பணியும் செழித்துச் செழிக்கட்டும். வாழ்த்துகள். புது நூலுக்காகக் காத்திருக்கிறோம்.
திருமிகு. முருகராஜ் அவர்கள், மிகச் சிறந்த ஓவியரும் கூட. 2024 ஆம் ஆண்டு திருமிகு. முருகராஜ் அவர்கள் வரைந்த ஓவியம். திருமிகு. முருகராஜ் எழுதிய திருக்குறள் விளக்கவுரை நூல், அமேசான் வலைத்தளத்தில் https://www.amazon.in/dp/8119541499 என்ற இணைப்பிலும் டிஸ்கவரி புக் பேலஸ் நிறுவனத்தின் www.discoverybookpalace.com என்ற இணைப்பிலும் கிடைக்கிறது.
நேர்காணல் : எழுத்தாளர் தமிழ்மைந்தன் ஜான் ரிச்சர்டு, அயர்லாந்து
|
||||||||
![]() ![]() |
||||||||
![]() ![]() |
||||||||
![]() ![]() |
||||||||
by Swathi on 01 Apr 2025 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|