|
||||||||
நலம் காக்கும் சித்த மருத்துவம் : தும்மலை ஏன் அடக்கக் கூடாது ? – 40 |
||||||||
![]() தும்மல் (Sneeze or Sternutation) என்பது மூக்கில் எற்படும் பிரச்சனைகளை (உறுத்தல், அரிப்பு) நீக்க உடலால் ஏற்படுத்தப்படும் ஒரு செயல் (Way of removing an irritation from the nose).
தும்மல் ஏற்பட பல காரணங்கள் உண்டு. சில நோய் நிலைகள் தொடர்ச்சியான தும்மலை ஏற்படுத்தும். சில வேளை மூக்கின் உட்புறம் சிறு தூசி ஒட்டிக் கொண்டால் ஒரேயொரு தும்மலோடு அந்த தூசி வெளியேறும். பின்பு தும்மல் வராது. இது எப்படிப்பட்ட தும்மலாக இருந்தாலும் (காரணம் முக்கியமல்ல) அதனை அடக்கக் கூடாது. அது பல பின் விளைவுகளை ஏற்படுத்தும். எனவே சித்தர்கள் அடக்கக் கூடாத உடல் வேகங்களில் ஒன்றாகத் தும்மலை வகைப் படுத்தியுள்ளார்கள்.
“தும்மலைத் தடைதான் செய்தால்
தொகுத்திடும் தலை நோய் உண்டாம்
இம்மையிந் திரிய மெல்லாம்
இயல்புடன் தெறித்தலாகும்
செம்மையில் முகம் வலித்தல்
தீரவே யரை வாதங்கள்
வெம்மையாம் வாயு கொண்டால்
விளைந்திடுங் குணங்களாமே”
தும்மல் இயல்பாக நிகழ்வதற்கு மூக்கில் இருந்து செயல்படும் ஒரு காற்றின் வேலையே காரணம். அந்தத் தும்மலைத் தடுத்தால் தலையின் உள்புறம் பல நோய்கள் உண்டாகும். மூளை பாதிக்கப்படும். கன்ம இந்திரியங்கள் (Organs of motor functions) எனப்படும் வாய், கால், கை, மலவாய், சிறுநீர் வாயில் மற்றும் ஞான இந்திரியங்கள் (Organs of sensory functions) எனப்படும் மெய், வாய், கண், மூக்கு, செவி என்கிற பத்து முக்கிய உறுப்புகளும் இயல்பாக இருப்பது போன்ற தோற்ற மளித்தாலும் அவை கேடடையும். அதாவது இந்த இந்திரியங்களுக்கு (உறுப்புகளுக்கு) அடிப்படைக் கூறுகள் மூளையில் இருப்பதால் அவை பாதிப்படைகின்றன.
முகம் ஒருபுறம் கோணுதலை ஏற்படுத்தும் முகவாதம் ஏற்படும். வயிற்றின் அழுத்தம் கூடுவதால் ஆண்களுக்கு விதை வீக்கம், குடல் இறக்கம் ஏற்படும். பெண்களுக்கு கொப்பூழ் பிதுக்கம் (Umbilical hernia) ஏற்படும் என்று மேலேயுள்ள சித்தர் பாடல் நமக்குத் தெரிவிக்கின்றது.
தும்மல்: மூக்கின் உட்புறம் உள்ள சளிச்சவ்வில் (Mucus membrane) ஏதேனும் ஒரு காரணத்தால் உருவாகும் அரிப்பு அல்லது உறுத்தல் (Irritation) மூளையின் ஒரு குறிப்பிட்ட சிறப்பான பகுதியைத் தூண்டுகிறது. அந்தப் பகுதிக்கு தும்மல் மையம் (Sneeze center) என்று பெயர். தும்மல் மையம் தூண்டப்பட்டவுடன் அது தும்மலை உருவாக்கும் தசைகளுக்கு ஆணை பிறப்பித்து தும்மலை உண்டாக்குகின்றது. தும்மலை வயிற்றுத் தசைகள், மார்புத் தசைகள், உதர விதானம் (Diaphragm), குரலை உண்டாக்கும் தசைகள், கழுத்துத் தசைகள், கண் தசைகள் போன்ற தசைகள் இணைந்து உருவாக்குகின்றன.
தும்மல் உருவாகும் போது நுரையீரலிலிருந்து காற்று மணிக்கு 100 மைல் தூரம் என்ற வேகத்தில் மூக்கின் வழியேயும் வாயின் வழியேயும் வெளியேறும். அப்போது ஏறத்தாள 5000 குட்டிக்குட்டி நீர்த்திவலைகள் (Droplets) 12 அடி தொலைவு வரை வெளித் தள்ளப்படும். இந்த நிகழ்வு மூக்கில் ஏற்பட்டிருக்கும் பிரச்சனையை சரிசெய்ய உதவும். அங்கு தங்கி உறுத்தலை ஏற்படுத்தும் தூசிகளையும் வெளிப்புறத் துகள்களையும் கிருமிகளையும் வேகமாக வெளியேற்றும்.
தும்மல் உண்டாக்கும் காரணிகள்:
1. வெளிப்புறத்திலிருந்து மூக்கிற்குள் சென்று ஒட்டிக் கொள்ளும் சிறு துகள்கள். காட்டாக தூசு, வேதிப் பொருள், புகை, மிளகு போன்ற வாசனைப் பொருட்கள், மண மூட்டிகள், விலங்குகளின் மெல்லிய முடி, வீட்டில் வளர்க்கப்படும் விலங்குகளின் தோல் கழிவுகள் (Pet animal dander) தாவரங்களிலிருந்து வரும் ஒவ்வாத பொருட்கள் (Pollen)
2. சுற்றுப்புறத்தின் திடீர் வெப்பநிலை மாறுபாடு. சூடு கூடுவதோ குளிர் கூடுவதோ திடீரென நிகழ்ந்தால் தும்மல் உண்டாகும். மூக்கின் உட்புறமுள்ள சிறப்பான சவ்வு நுரையீரலுக்கு ஒரே சீரான வெப்பநிலையுள்ள காற்றையே அனுப்பும். அந்தச் சவ்வு தம்மைத் தகவமைத்துக் கொள்ளும் போது தும்மல் ஏற்படும்.
3. குளிர் காற்று, சாரல், மழை.
4. வயிறு முழுமையும் நிரம்பும்படியாக உணவருந்தல்.
5. திடீரென அதிக வெளிச்சத்தைப் பார்த்தல்.
6. கிருமித் தொற்று.
7. சில நோய்நிலைகள். காட்டாக சாதாரண மூக்கடைப்பு (சலதோடம்), மூக்கு உள்பகுதியில் ஏற்படும் அழற்சி (Rhinitis – Nasal cavity – inflammation) சுரம், மூக்கில் அடிபடுதல் (Injury to the Nasal cavity).
இப்படி பல்வேறு காரணங்களால் ஏற்படும் தும்மல் பொது இடங்களிலோ, முக்கியக் கூட்டங்களிலோ, அமைதியான இடத்திலோ, வழிபாட்டுத் தளங்களிலோ, பள்ளி கல்லூரி வகுப்புகளிலோ நிகழ்ந்தால் அங்கு நிலவும் அமைதியை கெடுக்கும் என்கிற எண்ணத்தால் பலராலும் அடக்குப் படுகின்றது. இவ்விதம் தும்மலை அடக்குவதால் பல்வேறு துன்பங்கள் தொடரும் என இக்கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவை எல்லாம் சித்தர்கள் பலகாலம் முன்பாக சொன்னவற்றை ஒட்டியே உள்ளன.
அவை:
1. மூளையில் பரவியிருக்கும் இரத்தக்குழாய் விரிவடைந்து இரத்தத் தேக்கம் ஏற்படும் (Brain vessels – ANNEURYSM). மூளையின் நரம்பு செல்கள் பாதிப்படையும். இதனால் தற்காலிகமாகவோ தொடர்ச்சியாகவோ தலைவலி உண்டாகும்.
2. வெளியாகும் காற்று அழுத்தம் தடைபடுவதால் அந்த அழுத்தம் அப்படியே காதிற்குள் சென்று செவிப்பறையை (Ear drum) பாதிக்கச் செய்யும். சில வேளை கேட்கும் திறன் இழப்பு ஏற்படும்.
3. மூக்கில் தங்கியிருக்கும் (பிரச்சனையை ஏற்படுத்தும்) பொருட்களை வெளிப்படுத்தவே தும்மல் ஏற்படுகிறது. அதனைத் தடுத்தால் பிரச்சனையை ஏற்படுத்தும் பொருட்கள் குறிப்பாக நுண்கிருமிகள் மூக்கிலேயே தங்கி எதிர்விளைவுகளை ஏற்படுத்தும். மூக்கின் உள் சவ்வு வீக்கம் ஏற்பட்டு அதன் தாக்கம் உடலின் பல இடங்களுக்குப் பரவும்.
4. தும்மலைத் தடுத்தலால் ஏற்படும் அழுத்தம் மார்பு அறை அழுத்தத்தைப் பாதிக்கும். மார்பறை (Chest) அழுத்தம் அதிகமாவதால் இதயத்திற்குள் செல்லும் இரத்தம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு மீண்டும் செலுத்தப்படும். இந்த நிகழ்வு ஒருமுறை எனில் இதயம் தன்னைத் தகவமைத்துக் கொள்ளும். தொடர்ச்சியாகப் பலமுறை எனில் இரத்த ஓட்டத்திலும் இதய இயக்கத்திலும் பாதிப்புகள் ஏற்படும்.
5. தும்மலைத் தடுத்தலால் ஏற்படும் அழுத்தம் வயிற்றறையையும் பாதிக்கும். இதனால் வயிற்றறை அழுத்தம் அதிகமாகி குடல் பிதுக்கம் (Hernia) ஏற்படும். அது கொப்பூழ் பகுதியிலோ (Umbilical hernia) அல்லது தொடையிடுக்குப் பகுதியிலோ (Inguinal hernia) ஏற்படலாம்.
6. கண் அழுத்தம் அதிகமாதல், கண் உட்புறத்தில் உள்ள நுட்பமான இரத்தக் குழாய்கள் பாதிக்கப்படுதல், இரத்தக்கசிவு ஏற்படல் போன்றவை ஏற்படும்.
தும்மல் வருவதற்கானக் காரணங்களை அறிந்து அவற்றை தான் நீக்குதல் வேண்டும். தும்மலை அடக்கவே கூடாது.
தும்மல் வருவதைத் தடுக்க ஆவிபிடித்தல், நசிய மருத்துவம் (முன்பு விளக்கப்பட்டுள்ளது) போன்றவற்றை மேற்கொள்ளலாம். மருத்துவ ஆலோசனை பெற்று முறையான மருத்துவம் மேற்கொண்டால் தடுத்தவிட முடியும் அல்லாமல் சூழல் மாறுபாடுகளால் ஏற்படும் திடீர் தும்மலை அடக்காமல் விடுதல் வேண்டும்.
நலப்பயணம் தொடரும்.............................
|
||||||||
by Swathi on 16 Jun 2015 1 Comments | ||||||||
Tags: சித்த மருத்துவம் Siddha Maruthuvam தும்மல் ஏன் வருகிறது தும்மல் வராமல் தடுக்க தும்மல் நிற்க தும்மல் குணமாக Sneeze Reflex | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|