LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- சிங்கப்பூர்

சிங்கப்பூரில் இசைக்கவி ரமணனின் -இனிய நிகழ்ச்சி!


தமிழ்த் திரைப் பாடல்களில் பொதிந்து கிடக்கும் இலக்கியத் தாக்கத்தை எடுத்துக் கூறும் ஒர் அருமையான நிகழ்ச்சியை இசைக்கவி ரமணன் இன்று நமக்குத் தந்தார்.

குட்டிக் கவி அரங்கத்துடன் குதூகலமாகத் தொடங்கியது நிகழ்ச்சி!
கவிஞர் நதிநேசன் முன்னொலிக்க, ராஜேஷ்குமார், ராஜா, வெங்கட் ஆகியோர் ‘பாரதி யார்’ என்பதை கவிதைக் கோணத்தில் கண்டனர். பாய்ந்தோடும் நதி-அக்னிக் குஞ்சுகளின் சோலை’ என்றார் நதிநேசன். ’தமிழுக்குச் செறுக்கு’ என்ற வெங்கட்,சற்று உரைநடை பாணியில் கவிதையை முடித்தார். ‘பாரதி நம் உணர்வு’ என முடித்த ராஜேஷ் குமார் ’எட்டி நின்று போகாமல், கிட்ட வந்து பாடினாய்’ என்றார். ‘தாடி இல்லாத தாகூர்’ எனப் போற்றிப் புகழ்ந்தார் ராஜா. மேடைப் பேச்சில் சோடை போகாத இவர்கள் கவி பாட முன் வந்தது நமக்குப் புது வரவு. நதிநேசன் கணேஷ் முன்பே நல்ல கவிஞர்.

பாரதியை ஒரு சிறந்த பத்திரிக்கையாளர் என்பதற்கு செல்வி ஹரிணி காட்டிய உதாரணங்கள் நன்று. சுதேசமித்திரன் தினசரியில் பணியாற்றியபோது அதில் முதன் முதலாக கார்ட்டூன் என்கிற கேலிச் சித்திரத்தை அறிமுகப்படுத்தியது,எழுதுபவர்களுக்கு சன்மானம் தரும் பழக்கத்தைக் கொண்டு வந்தது, தென்னிந்திய மொழிகளை தரம்குறைந்து பேசிய அயல் நாட்டவரை ‘தமிழ் தெரியாத மூடர்’ எனச் சாடி விளக்கம் தந்தது...போன்ற பல தகவல்களை குறுகிய நேரத்தில் செறிவாகத் தந்தார் ஹரிணி.

பாடல் கவி ரமணன் நிகழ்ச்சியைத் தொடங்கினார். திரைப் பாடல்களைபற்றிக் கொண்டு அவர் தொடங்கிய இலக்கியப் பயணத்தைச் சுவையோடு ரசிக்க நாமும் அவரைப் பற்றிக் கொண்டோம். கிட்டதட்ட 90 நிமிடங்கள்! காளமேகம் வந்தார்-கம்பன் வந்தார்-நாலடியார் வந்தது- வள்ளுவர் நடமாடினார்- சம்பந்தர்-திருநாவுக்கரசர் அனைவரும் உலா வந்தனர் . தமிழ் இலக்கியக் கருத்துக்களைத் தேடிப் பிடித்து வெகு அநாயாசமாக அவற்றை இன்றைய திரை இசையோடு இணைத்துப் பிணைத்துக் காட்டிய பாங்கு பாராட்டுக்குரியது.

சினிமாப் பாடல்களை பக்க பல வாத்ய அரவணைப்போடு பாடும்போதே பிசிர் அடிக்கும் இந்தக் காலத்தில், அதன் விளிம்பு குறையாமல் பாடுவது எளிமையேயல்ல. ஆனால் ரமணன் அந்தப் பணியை சிறப்பாகச் செய்தார். குரல் வளம் அவருக்குக் கை கொடுத்தது. முறையான கமகங்கள் முண்டி அடித்து விழுந்தன. உன் கண்ணில் நீர் வழிந்தால், உனக்கென்ன மேலே நின்றாய் நந்தலாலா, எந்த ஊர் என்றவரே, மயக்கமா தயக்கமா, பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது, வண்ணத் தமிழ் பெண்ணொருத்தி என்னருகில் வந்தாள்..இன்னும் பல...நிறையவே ராக வடிவத்துடன் பாடினார் ரமணன்.

இன்றைய நிகழ்ச்சியில் கவியரசு கண்ணதாசன் தான் ராஜ நடை போட்டார். திரை இசைப் பாட்டுக்கு ஒரு புலவன் கண்ணதாசன் என்பதை கண் முன் நிறுத்தினார் இசைக்கவி. ’ மணி முத்து மாடத்தில் காத்திருந்த ஜானகி’ பாடலைப் பாடி, கம்பனின் வில் முறித்த (கோமுனியுடன் கண்டனன்) காட்சியை நினைவு படுத்தினார். ’உன் இன்பத்திற்கும், துன்பத்திற்கும் நீயே பொறுப்பு ’என்கிற நாலாடியார் வேதாந்தக் கருத்தை ‘சிலர் சிரிப்பார்-சிலர் அழுவார்’’ பாடலில் கவிஞன் சாறு பிழிந்து தந்ததை ரசித்தோம். ’சிரிப்பு பாதி-அழுகை பாதி சேர்ந்ததல்லவோ மனித ஜாதி’ பாடல் வழி, பாரதியின் பாஞ்சாலி சபதத்தைக் கவிதை நினைவாக்கினார்.

பட்டுக்கோட்டை-பாரதி இருவரின் பாட்டு நயத்தில் பொங்கிப் பூரித்த துடிப்புகளை (நெஞ்சு பொறுக்குதில்லையே- சின்னப் பயலே) பாடிக் காட்டினார். ‘உன் கண்ணில் நீர் வடிந்தால்’ பாடியபோது நெஞ்சுருகச் செய்தார்.

’வீடு நமக்கு திருவாலங் காடு’ எனத் திருவோடு ஏந்தி தெருப் பிச்சை எடுத்த முற்றும் துறந்த துறவி பட்டினத்தாரின் அரிய கருத்துகளை, ’ஆனாக்க அந்த மடம் -ஆவாட்டி சந்தை மடம்’ அர்த்த நயத்தோடு ரீஙரம் செய்த பழைய பாடல் வழி இலக்கிய ஜாலம் செய்த கவிஞர் மருதகாசியை நினைவு படுத்தினார். கவிஞர் புலமைப்பித்தன் என்ற சிறந்த கவிஞனின் கழைக் கூத்தாடிப் பாட்டு (நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி) நல்ல மாற்று!

இந்த நிகழ்வை ரசிக்க வந்த சட்ட, வெளியுறவு அமைச்சர் க.சண்முகம் கடைசி வரை இருந்ததோடு, தன் விருப்பப் பாடல் ஒன்றையும் பாடக் கேட்டு அசத்தினார். கவியரசுவின் ‘பரமசிவன் கழுத்திலிருந்து’ பாடல் தான் அது.

லிஷா அமைப்பின் புதிய அங்கமான லிஷா இலக்கிய மன்றத்தின் முதல் நிகழ்ச்சி இது. “ சிராங்கூன் லிட்டில் இந்தியா வட்டாரம் வெளிநாட்டுப் பயணிகளின் வருகையால் புகழ் பெற்றிருக்கும் வேளையில், இவ் வட்டார வர்த்தகர்களின் வியாபார வளர்ச்சிக்கு உதவும் வகையில், சிங்கப்பூர் தமிழர்களையும் கவரும் அளவுக்கு இத்தகைய இலக்கிய நிகழ்ச்சிகளைப் படைக்க விரும்புகிறோம்” என்று லிஷா அமைப்பின் தலைவர் திரு.ராஜ்குமார் சந்திரா என்னிடம் குறிப்பிட்டார்.

இசைக்கவி ரமணனின் பக்தி ரசப் பாடல்கள் கொண்ட சொற்பொழிவு நாளை பெருமாள் கோவில் அரங்கில் மாலை 6.30க்கு இடம் பெறுகிறது.

 

-வலைத்தமிழிற்காக சிங்கப்பூரிலிருந்து ஏ.பி.ராமன்

by Swathi   on 21 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
வலைத்தமிழ் கல்விக்கழகம் வலைத்தமிழ் கல்விக்கழகம்
புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா கொண்டாடிய அமெரிக்கா    -   (பிரசாத் பாண்டியன்) புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா கொண்டாடிய அமெரிக்கா - (பிரசாத் பாண்டியன்)
விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக அமெரிக்காவுக்கு 60 திருவள்ளுவர் சிலைகள் வழியனுப்பும் விழா விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக அமெரிக்காவுக்கு 60 திருவள்ளுவர் சிலைகள் வழியனுப்பும் விழா
58 ஆண்டுகள் பழமையான தமிழ்க்கல்வி நிறுவனத்தை மூடுவதா? 58 ஆண்டுகள் பழமையான தமிழ்க்கல்வி நிறுவனத்தை மூடுவதா?
மினசோட்டாவில் மிகச்சிறப்பாக நடத்த  பொங்கல் விழா   கொண்டாட்டம் மினசோட்டாவில் மிகச்சிறப்பாக நடத்த பொங்கல் விழா கொண்டாட்டம்
மினசோட்டாவில் தமிழ் மொழி மாதம் பிரகடனம் !! மினசோட்டாவில் தமிழ் மொழி மாதம் பிரகடனம் !!
பிரித்தானியாவில் தமிழ் மரபுத்திங்கள் கொண்டாட்டம் பிரித்தானியாவில் தமிழ் மரபுத்திங்கள் கொண்டாட்டம்
நன்றியறிதல் நாள் வாழ்த்துகள்..(Thanksgiving Day) நன்றியறிதல் நாள் வாழ்த்துகள்..(Thanksgiving Day)
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.