|
|||||
இயற்கை என்னும் அற்புதம் |
|||||
இயற்கையின் முக்கிய செய்கை என்று கேட்டால் படைத்தல் அல்லது பிறத்தல் அடுத்தது அழித்தல் அல்லது இறத்தல் இவைகள் மட்டும்தான். மற்றவை எல்லாம்? என்னும் கேள்வி எழும்போது அவைகள் மற்ற உயிரினங்களால் அல்லது மனித கூட்டங்களால் உருவக்கப்பட்டிருக்கும் செயல்பாடுகளே தவிர இயற்கை மற்ற எந்த நிகழ்வுகளிலும் தலையிட்டு கொள்வதில்லை. அதனுடைய செயல்பாடுகள் என்பது உலகம் அது பாட்டுக்கு இயங்கி கொண்டிருக்க வேண்டும், அது இயங்கி கொண்டிருக்க, அனைத்து செயல்கள் நடந்து கொண்டிருக்க வேண்டும். அந்த செயல்களை செய்ய, மற்ற உயிரினங்கள் படைக்கபட்டிருக்க வேண்டும். அந்த உயிரினங்களின் தேவைகள், பூமியில் தீரும் போது அவைகளை அழிக்கப்பட வேண்டும். இவைகளைத்தான் இயற்கை இன்றளவும் செய்து கொண்டிருக்கிறது. இயற்கையின் கோட்பாடுகளுக்கு தகுந்தவாறு நீர், நெருப்பு, காற்று, இவைகளை உருவாக்கி அதன் மூலமே தன்னுடைய அழிவுகளை நடத்தி கொண்டிருக்கிறது. உயிரினங்களின் படைப்பு என்பதனை மட்டும் அது உருவாக்கிய உயிரினங்களின் மீது வாழும் உரிமையை கொடுத்து விட்டிருக்கிறது. இதனால் புதிய உயிரினங்களை அந்தந்த உயிரினங்களே உருவாக்கி கொள்கின்றன. அதே நேரத்தில் அதற்கும் ஒரு வரைமுறையை வகுத்துத்தான் மற்ற உயிரினங்களின் பிறப்பையும் செயல்படுத்தி வரைமுறைப்படுத்தி வருகிறது. ஆண் உயிரினம், பெண் உயிரினம் இரண்டும் சேர்ந்தால்தான் ஒரு உயிரினத்தை படைக்க முடியும் என்னும் கோட்பாட்டைத்தான் வைத்திருக்கிறது. சற்று உள் நோக்கி பார்த்தீர்கள் என்றால் தாவரங்களுக்கும் கூட அத்தகைய கோட்பாடுதான்.ஆனால் அவைகள் கண்ணுக்கு தெரிவதில்லை. மற்றபடி மகரந்த சேர்க்கை மூலமே சூல் கொள்ள வைத்து மொட்டாகி பூவாகி காயாகி கனியாகி கடைசியில் விதையாகிறது. இந்த விதைகள் மூலம் அதே வகை தாவரங்கள் படைக்கப்பட்டு அவைகளும் மகரந்த சேர்க்கை மூலம் பல தலை முறை தாவரங்கள் இப்படித்தான் உருவாகிறது. அதே நேரத்தில் இப்படியொரு கேள்வி எழலாம் ஏதோ ஒரு சில உயிரினங்கள் ஆணின் துணை இல்லாமலேயே அல்லது பெண்ணின் துணை இல்லாமலேயே தனித்து மற்றோரு உயிர்களை படைத்து கொள்கிறதே, அடுத்து தாவரங்களில் விதையில்லாமலேயே அல்லது அதன் துணை இல்லாமலேயே மற்றொரு வகை தாவரங்கள் வரத்தான் செய்கின்றன என்பதும். நாம் இயற்கையை புரிந்து கொள்வதற்கு கூட இவை ஒரு சான்றாகும், ஒவ்வொரு உயிரினத்தின் படைப்புக்கும் அதன் உறுப்புக்கள் அந்த உயிரினங்களின் எல்லாவித வாழ தகுந்த செயல்பாட்டுக்கு தக்கவாறே படைக்கப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் இரு பால்களின் இணை இல்லாமலேயே அல்லது வெறும் தாவரத்தின் தண்டை வைத்து மற்றொரு தாவரத்தை உருவாக்கவும் முடியும் என்னும் வசதியையைம், ஒரு சிலவற்றிற்கு மட்டும் இயற்கை படைத்திருக்கிறது. ஒவ்வொரு படைப்பின் கருவின் வளர்ச்சியில் ஆரம்பித்து அது வெளி வரும் கால நேரத்தை கூட கன கச்சிதமாய் அமைத்துதான் கொடுத்திருக்கிறது இயற்கை. நன்கு திட்டமிட்டு ஒவ்வொரு உயிரினத்தின் படைப்பிற்கும் வித்தியாசங்களை கொடுத்து, அதை இந்த உலகத்திற்கு கொண்டு வந்த இயற்கை அந்த உயிரினங்களின் உணவு மற்றும் வாழ்க்கையை வாழ்வதற்கு தேவையான அறிவு, இவைகளை அவைகளின் போக்கிலேயே ஏற்படுத்தி கொடுத்திருக்க வேண்டும். ஒவ்வொன்றும் உயிர் வாழ ஒன்றை ஒன்று சார்ந்து ஒரு சங்கிலியை கோர்த்தாற்போல் அமைத்து கொடுத்தும் விட்டது. அதே போல் அந்த சங்கிலியில் இருந்து வெளி வந்திருப்பதற்கும் தோதுவாக ஒரு சில உயிரினங்களை படைத்திருக்கிறது. அதில் முக்கியமான உயிரினம் “மனிதன்” மனிதனின் படைப்பில் மட்டும் ஒரு சில அமைப்புக்கள் மற்ற உயிரினங்களை விட மாற்றி அமைக்கப்பட்டிருக்கலாம். அதனால் அந்த உயிரினம் தனக்கு இயற்கை அளித்துள்ள சிறப்பு அமைப்புகளால் மற்ற உயிரினங்களின் மீது தனது ஆக்ரமிப்பை ஏற்படுத்தி உரிமையை இந்த பூமியில் நிலை நாட்ட முயற்சிக்கிறது. மற்றபடி “கால நேரம்” என்பது இயற்கையின் படி எல்லாம் ஒரே அளவுதான். “எங்கும் இருள்” என்றாலும் சூரியன் போன்ற எரிதல் குழம்பு தோன்றி அதை சுற்றி ஒவ்வொரு கோள்களும் சுற்றி வருகின்றன. இதற்கு ஈர்ப்பு விசை என்று ஒன்றை உருவாக்கி கொடுத்திருப்பதால் அவையும் அந்தரத்தில் நின்று கொண்டுதான் இருக்கிறது. இதே போல் அண்ட வெளியை அந்தரத்தில் சுற்றி வரும் கோள்கள் சூரியனை சுற்றி வருகின்றன என்றாலும் சூரியனின் ஈர்ப்பினுள் அதனுடன் போய் ஒட்டி கொள்ளாமல் இருக்க வேண்டி, அவைகள் தன்னைத்தானே சுழற்றி கொள்ள வேண்டியிருக்கிறது. அப்படி சுழற்றும் போது சூரிய வெளிச்சம் படும் இடம் பகலாகவும் மறு புறம் இருட்டாகவும் இருக்கிறது. இதற்கு பெயர் கூட மனிதர்கள் வைத்து கொண்டதுதான். “இரவு பகல்”. அது போல் இயற்கையின் ஓட்டம் என்பதை மனிதன் தான் கணக்கிட்டு கொண்டானே தவிர இயற்கையாக நேரம் காலம் நிர்ணயித்து பயணிப்பதில்லை. மனிதர்கள் நேரத்தையும் காலத்தையும் குறிப்பிட்டு, மணி, விநாடி,நொடி என்னும் வழியில் கணக்கிட்டு அதன் வழியில் தங்களுடைய வாழ்க்கையை நிர்மாணித்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மற்ற உயிரினங்களுக்கு அத்தகைய அறிவு வளர்ச்சி இல்லையென்றாலும் அவைகள் இயற்கையோடு ஒன்றி வாழ தங்களை பழக்கப்படுத்தி கொண்டன. தாங்கள் வாழும் சூழல், இடம் இவைகளுக்கு தக்கவாறு இயற்கை தரும் ஒரு சில பொருட்களை வைத்து கூட தங்கள் வாழும் இடத்தை அமைத்து கொள்கின்றன. அதே போல் இயற்கை மனிதனுக்கு தராத ஒரு சில வசதிகளை மற்ற உயிரினங்களுக்கு அளித்திருக்கின்றன. பறப்பது, நீந்துவது, மற்றும் பல அம்சங்கள். இயற்கை என்பது ஒரு அற்புதம் என்று மனிதர்களால் கூறப்படும் வார்த்தையை நாம் உபயோகித்தாலும் அந்த இயற்கையே படைத்த அனைத்தையும் அவைகளே ஏதோவொரு கட்டத்தில் அழித்து விடுகின்றன. அதற்கு மனிதன் வைத்திருக்கும் பெயர் “இறப்பு” அல்லது அழிவு. ஆனால் “இயற்கை” என்னும் சொல் கூட மனித வார்த்தைகளால் புழங்கப்பட்டாலும் “இது ஒரு மாயை” என்று கூட சொல்ல தோன்றுகிறது. மற்றபடி மனிதர்களாகிய நாமோ அல்லது மற்ற உயிரினங்களோ படும் துன்பங்களோ இன்பங்களோ அந்த உயிரினத்தின் வாழ்க்கை இயல்பு சம்பந்தப்பட்டதே தவிர இயற்கை வெறும் பார்வையாளனாகவே எல்லாவற்றையும் கடத்தி சென்று கொண்டிருக்கின்றன. அவைகளுக்கு பிறப்பு இறப்பு இல்லை என்றாலும் எல்லாமே அவைகள்தான், எல்லா இயக்கங்களையும் கண்ணுக்கு தெரியாத காந்த சக்தி என்பார்களே அதை கொண்டுதான் இயக்குகின்றன. மனிதன் “புத்திசாலியான உயிரினம்” என்பதால் அது உருவாக்கி வைத்திருக்கிற ஒவ்வொரு பொருளுக்கும் மூலம் எதுவென கண்டு பிடித்து அதனை கொண்டு அதை போல படைக்க முற்படுகிறான். உதாரணமாக “நீர்” என்பதின் மூலம் “ஹைட்ரஜனும் ஆக்சிஜனும், என்பதை கண்டு பிடித்ததும், அணுவை கண்டு பிடித்ததும்,மண்ணுக்கடியில் கிடைக்கும் பல பொருட்களை கண்டு தோண்டி எடுப்பதும், அதை கொண்டு பல்வேறு விஞ்ஞான வித்தைகளை காட்டி, இந்த உலகத்தில் இயற்கையை விட தான் மேலானவன் என்பது போல வாழ்ந்து கொண்டிருக்கிறான். இறுதியில் மற்ற உயிரினங்களை போலவே இயற்கையிடம் சரணா கதி அடைந்து மறைந்து “வாழ்ந்த சுவடு” தெரியாமலேயே காணாமலேயே போய் விடுகிறான். |
|||||
Nature is genius | |||||
by Dhamotharan.S on 06 Jan 2024 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|