LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- மற்றவர்கள்

ஐயர் தாதா - எஸ்.கண்ணன்

தி.நகர்.  சென்னை.

சதாசிவ ஐயர் காலையிலேயே குளித்து பூஜை செய்துவிட்டு அன்றைய செய்தித் தாளில் மூழ்கியிருந்தார்.  

எட்டு மணி இருக்கும்.  வாசலில் நிழலாடவே ஐயர் நிமிர்ந்து பார்த்தார்.  ஒரு இளைஞன் அவரிடம், “சார் என் பெயர் நரசிம்மன்.  உங்களைப்பற்றி நிறைய கேள்விப்பட்டு உங்களை நாடி உதவிகேட்டு வந்துள்ளேன்.” என்றான்.

“உட்காருங்கோ...”

அவன் தயக்கத்துடன் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தான்.  பார்ப்பதற்கு இளமைத் துடிப்புடன் சிவந்த நிறத்தில் லட்சணமாக இருந்தான்.  

“சொல்லுங்கோ... நான் என்ன செய்யணும்?”

“சார்... நான் ஒரு ஐடி கம்பெனியில் இஞ்சினியர்.  மூன்று வருடமாக என்னுடன் வேலை செய்யும் அலமேலு என்கிற ஒரு பெண்ணை காதலிக்கிறேன்.  ஆனால் எங்களுடைய திருமணத்திற்கு அவள் வீட்டில் பயங்கர எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.  நீங்கள்தான் எங்களுக்கு மணமுடித்து எப்படியாவது எங்களை சேர்த்து வைக்க வேண்டும்...”

“என்னதான் பிரச்சினை?  ஜாதியா; பணமா; அந்தஸ்தா?”

“அந்தஸ்துதான்”.

“.........................”

“நாங்கள் இருவருமே ஐயர் ஜாதிதான்.  ஆனால் என்னுடைய அப்பா ஒரு புரோகிதர்.  அவளுடைய அப்பா ஒரு பெரிய மல்டி நேஷனல் கம்பெனியில் ஜெனரல் மானேஜர்...”

“அவர்கள்  பேமிலி டீடெய்ல்ஸ் என்ன?”

“அலமேலுவுக்கு ஒரு அக்கா.  அவளுக்குத் திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது.    அவள் கணவர் வங்கியில் வேலை செய்கிறார். அம்மா ஒரு ஹவுஸ் ஒய்ப். மாம்பலத்தில் வீடு...”

“உங்களின் வயதென்ன?”

“எனக்கு இருபத்தியெட்டு... அவளுக்கு இருபத்தைந்து.”  

“கவலைப் படாதே.  உங்களுடைய கல்யாணத்தை நான் நடத்தி வைக்கிறேன்.  அலமேலுவை நான் ஒருமுறை உன் முன்னிலையில் பார்த்துப் பேசவேண்டும்.   அவளை நாளை மாலை அழைத்து வா...”

“சரி சார்...” அவன் பவ்யமாக எழுந்து விடை பெற்றான்.

சதாசிவ ஐயரைப் பற்றி தி.நகர்; மாம்பலம்; மயிலாப்பூர் ஏரியாக்களில் குடியிருக்கும் பிராமணர்களுக்கு நன்கு தெரியும்.  வயது ஐம்பது. ஆஜானுபாகுவான தோற்றம். ஐயர் நாயகன் சினிமாவை நான்கு தடவைகள் பார்த்து, ரசித்தவர். அதில் வரும் வேலு நாயக்கரை அவருக்கு மிகவும் பிடித்துவிட, பிராமணர்களுக்கு மத்தியில் தானும் ஒரு தாதாவாக வலம் வரத் தொடங்கினார்.  அவரின் தாதா நாட்டாமை பிராமணர்களுக்கு மத்தியில் மட்டும்தான். அதனால் அவர் ஐயர் தாதா என்று அழைக்கப் பட்டார்.

ஐயர் இதுவரை ஐந்து காதல் கல்யாணங்களை அடிதடியில் முடியாமல் சுமுகமாக நடத்தி வைத்திருக்கிறார்.   ஓடிவரும் காதலர்களுக்கு தன் வீட்டிலேயே அடைக்கலம் கொடுத்த சம்பவங்கள் நிறைய. தி.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டருடன் ஐயர் நட்பு பாராட்டுவதால் நிறைய அடிதடி கேஸ்களை எளிதில் சமாளித்து விடுவார்.

ஐயருக்கு முணுக்கென்று கோபம் வரும்.

அப்படித்தான் ஐயர் ஒரு சதாபிஷேகத்திற்காக போன மாதம் ஸ்ரீரங்கம் சென்றிருந்தார்.  சதாபிஷேகத்திற்கு முந்தைய நாள் ஸ்ரீரங்கம் ஸ்ரீனிவாஸ் மஹாலில் காலை எட்டு மணிக்கு ருத்ர ஏகாதசி ஜப ஹோமம் நடப்பதால் ஐயரும் நேரத்திற்கு சென்றிருந்தார்.  

ஆனால் காலை எட்டு மணிக்கு வரவேண்டிய புரோகிதர் பதினோரு மணிக்கு ஒரு புதிய இன்னோவா காரில் தன் பரிவாரங்களுடன் வந்து பந்தாவாக இறங்கினார்.  காத்திருந்த வயதான பலர் ருத்ர ஏகாதசியை முன்னிட்டு எதுவும் சாப்பிடாமல் உபவாசம் இருந்தனர்.

பதினோரு மணிக்கு வந்த புரோகிதர் தன்னுடைய மூன்று மணிநேர தாமதத்திற்கு சிறிதும் குற்ற உணர்ச்சியோ; வருத்தமோ; வெட்கமோ படாமல் கட கடவென மந்திரங்களைச் சொல்ல ஆரம்பித்தார்.   

மத்திரங்கள் முடிந்து எல்லோரும் சாப்பிட்ட போது மணி இரண்டு.  ஐயர் பயங்கரக் கடுப்பாகி விட்டார். அங்கிருந்த ஒரு வயதானவரிடம் புரோகிதரைப் பற்றி கேட்டறிந்தார்.  

அவர் பெயர் கல்யாண வாத்தியாராம்.  லால்குடி சொந்த ஊராம். கல்யாண வாத்தியார் ஏகப்பட்ட சொத்துக்களுக்கு அதிபதியாம்.  தன்னை புரோகிதம் பண்ண அழைப்பவர்களிடம், சமையல் கான்ராக்டையும் தானே கேட்டு நிர்பந்தப்படுத்தி வாங்கிக் கொள்வாராம்.  ஸ்ரீ சிவா விஷ்ணு கேட்டரிங் என்று அதற்குப் பெயராம். தவிர வாடகைக்கு ஏகப்பட்ட கார்கள் வைத்திருக்கிறாராம். திருச்சியில் மட்டும் எட்டு பெரிய வீடுகளாம்; அதுதவிர நான்கு கமர்ஷியல் பில்டிங்குகளாம்.  பணம் என்றால் ஆலாய் பறப்பாராம்.

மறுநாள் சதாபிஷேகம் நடந்து முடிந்ததும்,  சென்னை திரும்பும் அவசரத்தில் ஐயர் முதல் பந்தியிலேயே சாப்பிட உட்கார்ந்தார்.  அவரோடு பலரும் சாப்பாட்டுக்கு பந்தியில் பசியுடன் காத்திருந்தனர்.

அப்போது காத்திருந்தவர்களுக்கு இலை கூட போடாமல், சமைத்து வைத்திருந்த பதார்த்தங்கள் ஒவ்வொன்றாக வெளியே எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு காத்திருந்த ஒரு மாருதி வேனில் ஏற்றப்பட்டது.  ஐயர் வெகுண்டார்.

விசாரித்ததில் கல்யாண வாத்தியார்தான் சமையல் காண்ட்ராக்ட் என்பதும்  சதாபிஷகத்திற்காக சமைக்கப பட்டவைகள் வேறு ஒரு பூணூல் கல்யாணத்துக்கும் சேர்த்து சமைக்கப்பட்டதையும், அதனால் இங்கு சமைத்துவிட்டு அங்கு அவசரமாக அனுப்பப் படுவதையும் அறிந்து கொண்டார்.

ஐயர் நேராக சமையல்காரரிடம் சென்று சண்டை போட்டார். “பணத்திற்காக என்னதான் செய்வது என்கிற விவஸ்தை இல்லையா? எங்களுக்கு முதலில் இலைபோட்டு பரிமாறுங்கள்...” என்று அதட்டினார்.

அவர் ஐயரைக் கண்டு கொள்ளாமல் மாருதி வேனுக்குச் சென்று அங்கிருந்த பதார்த்தங்களை கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தபோது, கோபத்துடன் பின்னாலேயே வந்த ஐயர் சட்டென்று தடாலடியாக மாருதி வேனின் சாவியை உருவி கையில் எடுத்துக்கொண்டு விட்டார்.

சமையல்காரர் உடனே உள்ளே ஓடிச்சென்று சதாபிஷேகத்திற்கான கூலி அறுபதாயிரம் பணத்தை எண்ணிக் கொண்டிருந்த கல்யாண வாத்தியாரிடம் போய் முறையிட்டார்.   

கல்யாண வாத்தியார் வெளியே வந்து ஐயரிடம் சாவி கேட்டு பெரிதாக சண்டைபோட, அங்கு பெரிய கூட்டம் கூடி, போலீஸ் வந்தது.  

ஐயர் ரொம்ப மிடுக்காக தி.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு மொபைலில் பேசிவிட்டு,  அங்கிருந்த போலீஸிடம் மொபைலக் கொடுத்தார். உடனே போலீஸ் பணத்தாசை பிடித்த கல்யாண வாத்தியாரை எச்சரித்தனர்.  உள்ளே சென்று ஐயர் முதல் பந்தியில் சாப்பிட்டதும்தான் கல்யாண வாத்தியாரிடம், “வைதீகம் ஒரு நேர்மையான, புனிதமான தொழில்.... காசு சம்பாதிக்க அல்ல...” என்று சொல்லி வேன் சாவியை அவர் மூஞ்சியில்  விட்டெறிந்தார்.

ஆனால் கல்யாண வாத்தியார் இன்றைய தேதிவரை திருந்துவதாக இல்லை.  அவருக்கு பணம் மட்டுமே பிரதானம்.

இதுமாதிரி ஐயர் கோபப்ப்டட்ட சம்பவங்கள் நிறைய.  

மறுநாள் மாலை.  

நரசிம்மன் அலமேலுவுடன் ஐயர் வீட்டுக்கு வந்தான்.  

ஐயர் அவர்கள் இருவரிடமும் ‘என்ன நடப்பினும்; எத்தனை சோதனைகள் வந்தாலும் நாங்கள் திருமணம் செய்து கொள்வோம்...’ என்று சத்தியம் வாங்கிக்கொண்டார்.  

அந்த ஞாயிறு அலமேலுவின் அப்பாவை அவர் வீட்டில் ஐயர் சந்தித்தார்.  

“ஒரு புரோகிதரின் மகனுக்கு என் பெண்ணைத் தர மாட்டேன்...என் ஸ்டாட்டஸ் தெரியுமா உங்களுக்கு?”

“உங்களின் ஸ்டாட்டசை விட ஒரு புரோகிதரின் ஸ்டாட்டஸ் மிக உயர்வானது.  அவர்களுக்கு அத்தியாவசியமான ஆச்சார அனுஷ்டானங்கள்; சம்ஸ்காரங்கள்; கிருஹஸ்த தருமம்; பூஜை புனஸ்காரங்கள் ஆகியவை நன்கு தெரியும்... உமக்கு என்ன தெரியும்?”

“என்னிடம் உங்களது சால்ஜாப்பு எதுவும் பலிக்காது.”

“இத பாருங்க ஒரு திருமணத்திற்கு ஆணும் பெண்ணும் மட்டும் போதுமானது... இரண்டு பெரும் ஒருவரையொருவர் விரும்புகிறார்கள்.  மனசு ஒன்று பட்டுவிட்டால் அவர்களை யாரும் தடுக்க முடியாது... மற்ற பேச்செல்லாம் அனாவசியம்.”

“நான் போலீஸுக்கு போவேன்.”

“தாராளமா போங்க.  நான் போலீஸ் ஸ்டேஷனிலேயே அவர்களுக்குத் திருமணம் செய்து வைப்பேன்... யாரிடம் பூச்சாண்டி காட்டுகிறீர்கள்?”

“.............................”

“அடுத்த ஞாயிறுக்குள் எனக்கு உங்களின் சம்மதம் வேண்டும். இல்லையெனில் உங்களது பெண் அலமேலுவை வீடு புகுந்து தூக்கிச்சென்று நரசிம்மனுடன் அவளுக்குத் திருமணம் நடத்தி வைப்பேன்...”

தன்னுடைய விஸிட்டிங் கார்டை அவர் கையில் திணித்துவிட்டு ஐயர் வெளியேறினார்.  

வெள்ளிக்கிழமையே அலமேலுவின் அப்பா, ஐயருக்கு போன் செய்து நரசிம்மனின் ஜாதகத்தை கேட்டு வாங்கிக் கொண்டார்.   

அடுத்த இரண்டு நாட்களில் “ஜாதகம் பார்த்தேன். இந்தக் கல்யாணம் நடக்கவே நடக்காது.  நரசிம்மனின் அப்பாவே இதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார்...” என்று போனில் கெக்கலித்தார்.  

“ஏன்?  ஜாதகம் பொருந்தாவிடினும்,  அதுதான் மனப் பொருத்தம் இருக்கிறதே?”

“ரெண்டு பெரும் ஒரே கோத்ரம்.  பரத்வாஜ கோத்திரம்... அதுனால சான்ஸே இல்லை.”

“அதனாலென்ன?  அவசியமிருந்தால் ஒரே கோத்ரத்தில் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று எங்கள் கனபாடிகளே சொல்லியிருக்கிறார்.  நீங்கள் அமராமல் உங்களது மூத்த மகளையும் மாப்பிள்ளையையும் திருமண மேடையில் அமர்ந்து தாரை வார்த்துக் கொடுக்கச் சொல்லுங்கள்... அவ்வளவுதான்.  காதலிப்பவர்கள் கோத்ரம் பார்த்துக்கொண்டா காதலிப்பார்கள்?”

“நீங்கள் போகாத ஊருக்கு வழி தேடுகிறீர்கள்.”

“ஒரே கோத்ரத்தில் நானே இரண்டு கல்யாணங்களை பார்த்திருக்கிறேன்.  அவர்கள் இப்போது குழந்தைகளுடன் சந்தோஷமாகத்தான் இருக்கிறார்கள்.  இந்தக் கல்யாணத்தை நல்லபடியாக நடத்தி வைப்பது உங்களின் பொறுப்பு. ப்ளீஸ்...”

அலமேலுவின் அப்பா பதில் சொல்லாமல் போனை வைத்துவிட்டார்.  

ஐயர் உடனே நேரத்தை விரயமாக்காமல் நரசிம்மனுக்கு போன் செய்து தன் வீட்டிற்கு அவனை வரச் செய்தார். அலமேலுவின் அத்திம்பேர் வேலை செய்யும் வங்கிக்கு அவனுடன் தன் காரில் விரைந்தார்.  

அவர் வங்கியை விட்டு வெளியே வந்ததும் ஐயர் தன்னையும், நரசிம்மனையும் அவரிடம் அறிமுகப் படுத்திக்கொண்டு அருகில் இருந்த ஹோட்டலுக்குச் சென்று அமர்ந்தனர்.  

ஐயர் நரசிம்மன்-அலமேலு காதலை அவரிடம் எடுத்துச்சொல்லி, அவர்கள் ஒரே கோத்ரம் என்பதால், அத்திம்பேர்தான் தன் மனைவியுடன்  மணமேடையில் அமர்ந்து அலமேலுவை தாரை வார்த்துக் கொடுக்கவேண்டும் என்று வேண்டிக் கொண்டார்.

அத்திம்பேர், “அடி சக்கை... அப்படியா சங்கதி?  உங்களுக்கு என் வாழ்த்துக்கள் சகலை” என்று உற்சாகத்துடன் கை குலுக்கினார்.  மேலும் “கவலையே படாதீங்க, என் மாமனாரை வழிக்கு கொண்டுவந்து இந்தக் கல்யாணத்தை நான் நடத்திக் காட்டுகிறேன்...” என்று உறுதியளித்தார்.  

அடுத்து ஐயர் நரசிம்மனுடன் அவன் வீட்டிற்குச் சென்று அவனுடைய பெற்றோர்களின் சம்மதத்தையும் வாங்கினார்.  

நரசிம்மன்-அலமேலு திருமணம் சென்னை குசலாம்பாள் கல்யாண மண்டபத்தில், அக்கா-அத்திம்பேர் தாரை வார்த்துக் கொடுக்க, ஐயரின் தலைமையில் மிகச் சிறப்பாக நடந்தது.  

ஐயர் தாதா நெஞ்சை நிமிர்த்திக் கொண்டார்.  

இது நடந்து நான்கு வருடங்கள் ஓடி விட்டது.  

அன்று காலை ஐயர் பேப்பர் படித்துக் கொண்டிருந்தபோது “சார்...” என்று வெளியே குரல் கேட்டது.    

ஐயர் “யாரது..?” என்று வெளியே வந்தார்.  

அங்கு ஒரு தம்பதியினர் கையில் குழந்தையுடன் நின்றிருந்தனர்.  

ஐயர் அவர்களை  உற்றுப் பார்க்க, “சார் நான்தான் நரசிம்மன்...இவள் அலமேலு.  உங்களின் தலைமையில்தான் எங்கள் காதல் திருமணம் குசலாம்பாள் கல்யாண மண்டபத்தில் நடந்தது.”

“ஓ... எஸ்... எஸ் ஐ ரிமம்பர்.  ப்ளீஸ் உள்ள வாங்க..”

அவர்கள் உள்ளே வந்து அமர்ந்தனர்.  

ஐயரை நமஸ்கரித்தனர்.  

ஐயர் தாதா குழந்தையை தூக்கி கொஞ்சிக்கொண்டே “அடிசக்கை  பையனா...குழந்தைக்கு என்ன பேர் வச்சிருக்கேள்?” என்றார்.  

“பரத்வாஜ்.”

by Swathi   on 15 Jun 2018  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
உணர்ந்த போது உணர்ந்த போது
புளிய மரம் புளிய மரம்
விஞ்ஞானியின் காதல் விஞ்ஞானியின் காதல்
“பீனிக்ஸ்” பறவை “பீனிக்ஸ்” பறவை
புதிதாய் பிறப்போம் புதிதாய் பிறப்போம்
கடந்த போன நூற்றாண்டுகளில் எப்படி இருந்திருக்கும் சமூக கதைகள் கடந்த போன நூற்றாண்டுகளில் எப்படி இருந்திருக்கும் சமூக கதைகள்
சண்டை சண்டை
திருடப்போனவன் திருப்பதி கிளம்பி போன கதை - கதை சொல்லி திருடப்போனவன் திருப்பதி கிளம்பி போன கதை - கதை சொல்லி
கருத்துகள்
16-Jun-2019 12:21:57 alagumurugan said : Report Abuse
சூப்பர் கதை நன்றி வணக்கம்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.