ஆந்திர முதலமைச்சராக கடந்த மே மாதம் பதவி ஏற்றிருக்கும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தான் பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு திட்டங்களை அறிவித்து ஆந்திர மக்களுக்கு அவ்வப்போது இன்ப அதிர்ச்சி அளித்து வருகிறார். ஆண்டுக்கு ரூபாய் 10 ஆயிரம் வீதம் 5 ஆண்டுக்கு நிதி உதவி அளிக்கும் திட்டம் தான் ஒய்.எஸ்.ஆர் வாகன மித்ரா திட்டம்.
தேர்தலுக்குமுன்னதாகஆந்திராமுழுவதும்பாதயாத்திரை நடத்தி மக்கள் படும் இன்னல்களை அறிந்து வந்த ஜெகன்மோகன் ரெட்டி, கார் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களின் கஷ்டங்களை குறித்து அவர்களிடம் நேரடியாக கேட்டு தெரிந்து கொண்டார். தான் ஆட்சிக்கு வந்த பிறகு ஆட்டோ மற்றும் கார் ஓட்டுநர்களுக்காக சிறப்பு திட்டங்கள் அறிமுகப்படுத்துவேன் என்று உறுதியளித்தார். அதேபோல் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஒய்.எஸ்.ஆர் வாகன மித்ரா திட்டம் கார் மற்றும் வாகன ஓட்டுநர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
அப்போது அவர் பேசியதாவது: இதே ஏலூரில் கடந்த 2018 மார்ச் 14-ஆம் தேதி எனது பாதயாத்திரையின் போது ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர்கள் என்னை சந்தித்து அவர்கள் குறைகளை தெரிவித்தனர். அப்போது ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுவது மூலமாக நாள்தோறும் ரூபாய் 300 முதல் 500 வரை மட்டுமே சம்பாதிக்க முடிகிறது. இவ்வாறு உள்ள நிலையில் ஆண்டுதோறும் வாகன தகுதி சான்றிதழ், இன்சூரன்ஸ், சாலை வரி கட்டுவதற்கு ரூபாய் 10ஆயிரம் செலவு செய்ய வேண்டி உள்ளதால் ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுனருக்கு பெரும் பாரமாக உள்ளது. இதுகுறித்து அரசு கண்டுகொள்ளவில்லை என தெரிவித்தார்கள். இதையடுத்து அப்போது நான் வாக்குறுதி அளித்தேன், நான் ஆட்சிக்கு வந்தால் இந்த தொகையை அரசே வழங்கும் என தெரிவித்தேன். அதேபோன்று நான் ஆட்சி பொறுப்பேற்று சரியாக நான்கு மாதத்தில் எனது சகோதரர்களுக்கு பாரமாக இருந்த வாகன பராமரிப்பு செலவு ரூபாய் 10 ஆயிரத்தை வழங்கினேன் என அவர் சொன்னார்.
இந்தத் திட்டத்தில் நிதி உதவி கேட்டு மொத்தம் ஒரு லட்சத்து 73, 352 விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும் அதில் ஒரு லட்சத்து 73, 102 விண்ணப்பங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர். ஆண்டுக்கு ரூபாய் 10 ஆயிரம் வீதம் ஐந்து ஆண்டுக்கு 50 ஆயிரம் வரை நிதி உதவி அளிக்கும் திட்டம் தான் ஒய்.எஸ்.ஆர் மித்ரா திட்டம். இந்த திட்டத்தை முதலமைச்சர் ஜெகன்மோகன் நேற்று மேற்கு கோதாவரி மாவட்டம் ஏலூரில் தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, ஆட்டோ ஓட்டுநரின் சீருடையான காக்கி உடை அணிந்து கொண்டு காசோலைகளை வழங்கினார். தற்போது அந்த புகைப்படங்கள் இந்திய அளவில் வைரலாகி வருகிறது.
|