LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- மற்றவர்கள்

ஜல்லிக்கட்டு - எஸ்.கண்ணன்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு இன்னமும் பத்து தினங்களே இருந்தன.

மதுரையைச் சுற்றியிருந்த கிராம மக்கள் தங்கள் வீட்டுக் காளைகளுக்கு பிரத்தியேக உபசரிப்புடன் ஜல்லிக்கட்டிற்காக கொம்பு சீவி விட்டுக் கொண்டிருந்தார்கள். 

உசிலம்பட்டியில், ஜல்லி ராமசாமித்தேவர் கடந்த ஆறு மாதங்களாகவே

தனது காளை மூக்கனை ஜல்லிக்கட்டுக்காக தனிப்பட்ட கவனத்துடன் தயார் செய்து கொண்டிருந்தார்.  இது அவர்கள் குடும்பத்தில் பரம்பரை பரம்பரையாக செய்து வருகின்ற காரியம்தான் என்றாலும், ராமசாமித் தேவரின் காளையை கடந்த ஐந்து வருடங்களாக எவரும் அடக்க முடியவில்லை. அதனால் அவருக்கு ஜல்லி ராமசாமித் தேவர் என்றே பெயர் நிலைத்து விட்டது. 

ராமசாமித்தேவர், மூக்கனை அன்புடன் அதன் திமிலில் தடவிக் கொடுத்தார். அது தன் உடலை சிலிர்த்துக் கொண்டு காதை விடைத்தபடி ராஜகம்பீரத்துடன் தேவரை வாஞசையுடன் பார்த்தது.

தேவர் தன் மகனிடம், “எலே தங்கம், நான் மூக்கன குளிப்பாட்டனுமிலே, கம்மாய்க்கு ஓட்டிடுப் போறேன்.  நீ அதுக்கு தீனி எடுத்து வை” என்று சொல்லி பதிலுக்கு காத்திராது மூக்கனை ஓட்டிச் சென்றார்.       

தங்கம் என்று அழைக்கப்படும் அவரது இருபது வயது மகன் தங்கசாமி, “எனக்கு இந்த வீட்ல சாப்பாடு ஒழுங்கா கிடைக்குதோ இல்லியோ மூக்கனுக்கு மட்டும் வேளை வேளைக்கு எல்லாம் நடக்குது” என்று தனக்குள் முனகிக் கொண்டான். 

தங்கசாமி மிகவும் அமைதியானவன், அதிர்ந்து பேச மாட்டான்.  கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு உசிலம்பட்டியில் ஒரு சர்குலேட்டிங் லைப்ரரி   

நடத்திக் கொண்டு அதன் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் வரை சேமித்து வந்தான்.  அவனுக்கு இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டில் உடன்பாடில்லை. 

ஒவ்வொரு வருடமும் உயிரை விடும் அப்பாவிகளையும், ரத்தக் களரியுடன் மண்ணில் சாயும் எண்ணற்ற இளைஞர்களையும் எண்ணி அடிக்கடி வருந்துவான். 

எது எதுக்கோ சட்டம் கொண்டு வருகிற அரசாங்கம் இந்த ஜல்லிக்கட்டு என்னும் விபரீத விளையாட்டை நிறுத்த சட்டம் கொண்டு வந்தால் என்ன என்று அவனுக்குத் தோன்றும்.  தவிர, தனது தந்தை தன்னிடம் அன்பு பாராட்டாது, மூக்கனின் வளர்ப்பை ஒரு பெரிய வேள்வியாகச் செய்து வருவது குறித்து அவ்வப்போது பொறாமையாக இருக்கும். 

மூக்கனுக்கு தீனி எடுத்து வைக்க முற்பட்டான். 

மூக்கனுக்கு ஒரு வேளைக்கு குறைந்தது இருநூறு ரூபாயாவது செலவாகும்.  அதற்குத் தீனி என்றால், புண்ணாக்கு தவிர, ஒரு கிலோ பச்சரிசி, பாசிப்பயிறு, பருத்திவிதை, மக்காச்சோள மாவு, அது தவிர அடிக்கடி காரட, அகத்திக்கீரை, கத்தரிக்காய் என சத்துள்ள காய்கறிகளும், கீரை வகைகளும் போடணும். 

தேவர் மூக்கனை தேய்த்து குளிப்பாட்டிவிட்டு, தானும் குளித்து விட்டு ஈர வேட்டியுடன் வந்தார். 

மூக்கன் கறுப்பு நிறத்தில் பளபளவென மின்னியது.

“எலே மூக்கனுக்கு தீனி ரெடியா?’ என வந்ததும் வராததுமாக தேவர் அதட்ட, தங்கசாமிக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

“என்னப் பத்தி ஒரு நாளைக்காவது நீரூ விசாரிச்சிருப்பீரா? நான் தினமும் வெய்யில்ல போயி லைப்ரரி புத்தகங்களை போட்டுட்டு களைச்சிப் போய்,

நாய் கணக்கா அலையுதேனே ! ஒரு வார்த்தையாச்சும் என்கிட்ட கரிசனமா பேசியிருப்பீரா? இந்த மூக்கன மட்டும் என்னவே அவ்வளவு கவனிப்பு?”

“எலே, உனக்கு இது புரியாதுல, இது பரம்பரை பரம்பரையா நாம செய்துகிட்டு வர்ற காரியம்.  இது நம்ம குடும்பத்தோட மானம், மருவாதி, ரோஷம் சம்பந்தப்பட்ட விஷயம்.  நம்ம காளை பிடிமாடு இல்லேங்கிறது ஒரு கெளரவமான விஷயம்.  அஞ்சு வர்ஷமா நம்ம மூக்கன எவனும் நெருங்க முடியல...

“அட அத்தவிடு, சுத்துப்பட்ட கிராமத்துல ஆயிரம் ராமசாமித்தேவர் இருக்காம்ல, ஆனா, ஜல்லி ராமசாமித்தேவர்னா அது நாந்தாம்ல.  இதுல கிடைக்கிற கெத்தும், கித்தாய்ப்பும் உசிலம்பட்டில எவனுக்குல கிடைச்சிருக்கு, என்று தன மீசையை பெருமையுடன் நீவிக் கொண்டார். 

ஜல்லிக்கட்டுக்கு இன்னமும் இரண்டு தினங்களே இருந்தன.  ராமசாமித்

தேவர் மூக்கனை தன் உதவியாளர்களுடன் ஒரு டெம்போவில் ஏற்றி

அலங்காநல்லூர் சென்றார். 

ஒருவித எதிர்பார்ப்பும் பரவசமுமாக இருந்தது அலங்காநல்லூர் கிராமம்.

களப்பலிகளுக்குத் தயாராக புழுதி பரக்கக் காத்திருந்தது அந்தக் களம்.

நூற்றைம்பது வருடங்களுக்கு மேலாக ஜல்லிக்கட்டுக்குப் பெயர் போன இந்தக் கிராமத்தில், ஒரு பக்கம் காளைகளை அடக்கும் இளைஞர்கள் தங்களை முருக்கேற்றியபடி தயாராகிக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம், தினவெடுத்து, சீறிப்பாய்ந்து, நின்றாடி கொம்புகளுக்கு ரத்தச் சாயம் பூசிக் கொள்ள காளைகளும் தயாராகின. 

கடைப்பல் முளைத்திருக்கிறதா, சுழி இருக்கிறதா, ஒச்சம் இருக்கிறதா என்று சகல லட்சனங்களையும் பார்த்து காளைகளை  வாங்கிவந்து எதோ

யுத்த களத்துக்கு அனுப்புவது போல அவற்றுக்குப் பிரத்தியேக பயிற்சிகள் கொடுப்பது, சீண்டி உக்கிரப் படுத்துவது என்று காளைகளுடனே தங்கள் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தார்கள் கிராமத்து இளைஞர்கள். 

ஜல்லிக்கட்டு தினம்.

அன்று காலையிலேயே காளைகளை குளிப்பாட்டி, கொம்புகளில் குஞ்சம் கட்டி, கழுத்தில் பல வண்ண நிறங்களில் ஜிகுஜிகு டிஸ்கோ கையிறு கட்டி

கொம்புகளை சீவி, ஜிகினா தூவி அழகு படுத்தினர். 

மூக்கனுக்கும் அவையனைத்தும் செய்யப்பட்டு, போனசாக ஆயிரம் ரூபாயை அதன் கொம்பில் இறுக்கிக் கட்டினார் ராமசாமித் தேவர்.

மூக்கனை அவிழ்த்து விடுவதற்கு முன்பாக, சூடம், மூக்குப்பொடி ரெண்டையும் சேர்த்து நுணுக்கி மூக்கிலேயும், கண்ணிலேயும் போட்டுவிட்டு, எலுமிச்சம் பழச் சாற்றையும் பிழிந்து விட்டனர்.  இதனால் எரிச்சல் அடைகிற மூக்கன், ஏடாகூடமாக பாய்ஞ்சு பிடிமடாம ஓடிவிடும் என்பது தேவரின் எதிர்பார்ப்பு. 

களத்து மைதானத்தில் ஏகப்பட்ட கூட்டம். வெய்யில் உக்கிரமாகத் தகித்தது. அயல் நாட்டவர்கள் அரைகுறை ஆடையுடன் தங்களது வீடியோ காமிரா, பைனாகுலருடன் தயாராக, சில தனியார் தொலைக்காட்சி நிலையங்களிலிருந்து வந்திருந்த காமிராக்களும் உஷாராயின.  பத்திரிக்கையாளர்களும் கணிசமான அளவில் குழுமியிருந்தனர். 

வேகவைத்த பனங்கிழங்கும், சர்க்கரை வள்ளிக் கிழங்கும், நிலக்கடலையும் பரபரப்பாக விற்பனையாயின. 

மைக்கில், இந்தா வருதுய்யா உசிலம்பட்டி காளை மூக்கன். பிடிச்சு அடக்குற ஆம்பளைக்கு ஆயிரம் ரூபாய் உடனடியாக.  வரிஞ்சு கட்டுகிற ஆம்பளைங்க ரெடியாகுங்க என்று குரல் வர, பரபரப்பும் அதிகரித்தது.  வெய்யிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்தது. 

தயாராக இருந்த எல்லாக் காளைகளும் அவிழ்த்து விடப்பட, அவைகள் வெறித்தனமாக ஓட ஆரம்பித்தன.  எங்கும் ஒரே புழுதி மயம், குழப்பம்.

தறி கெட்டு ஓடிய காளைகள் எதிர் பட்டோரை முட்டி தூக்கி எறிந்தன.

வேட்டி அவிழ்ந்த நிலையில் ஏராளமான இளைஞர்கள் உடம்பில் கொட்டும் வியர்வையுடன் குறுக்கும் நெடுக்கும் மாட்டைவிட வேகமாக ஓடி ஓடி துரத்திச் சென்றனர். ஹோ, ஹோவென்று ஒரே சத்தம்.  மாடு முட்டியதால் தூக்கி எறியப்பட்டவர்களின் அலறல் சத்தம் கேட்டுக் கொண்டேயிருந்தது.  ரத்தம் சிந்திய பலர், புழுதியின் நடுவில் விழுந்து கிடந்தது தீற்றலாகத் தெரிந்தது.  அங்கு இருந்த வெறித்தனமான உத்வேகத்தில் அடிபட்டவர்களுக்கு எவரும் முதல் உதவி அளிக்கக்கூட முன் வரவில்லை.  ரத்தமும், காயங்களும் மிக இயல்பாக கருதப்பட்டன.

அப்போதுதான் அது நடந்தது.

வாட்டசாட்டமான ஒரு இளைஞன் மூக்கனின் கொம்புகளை இறுகப் பற்றினான். மூக்கன் மிகவும் மூர்க்கமாக தன் தலையை இடப்புறமும், வலப்புறமுமாக உதறியது. அந்த இளைஞன் விடுவதாயில்லை.  தன்னுடைய பிடியை மேலும் நன்கு இறுக்கிக் கொண்டு மூக்கனின் தலையை பலத்துடன் திருப்பி, பணிய வைத்தான். வெற்றிகரமாக அதை படுக்க வைத்துவிட்டு கழுத்தில் ஏறி அமர்ந்து, கொம்பில் கட்டப் பட்டிருந்த ஆயிரம் ரூபாய் பணக்கட்டை எடுத்து கம்பீரமாக உயர்த்திக் காண்பிக்க, வந்திருந்த கூட்டம் முழுவதும் உற்சாகக் குரல் எழுப்பியது. 

மூக்கன் முற்றிலுமாக அடங்கிப்போனது. 

ராமசாமித் தேவருக்கு மிகுந்த ஏமாற்றமும் துக்கமும் பீரிட்டது. தன் கழுத்தை திருகி தன்னையே தரையில் தள்ளி விட்ட மாதிரி உணர்ந்தார். 

கடந்த ஐந்து வருடத்தில் மூக்கன் முதன் முறையாக தேவரை ஏமாற்றியது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தோல்விக்குப் பிறகு கடந்த இரண்டு நாட்களாக ராமசாமித் தேவர் சரியாக சாப்பிடாமல், தூங்காமல், துக்கத்துடன் வீட்டிலேயே அடைந்து கிடந்தார். வீடு அமைதியாக ஒரு இழவு வீடு போலக் காட்சியளித்தது. யார் யாரோ வீட்டிற்கு வந்து அவரைப் பார்த்து துக்கம் விசாரித்தார்கள். 

நான்காம் நாள் காலை.

ராமசாமித் தேவரைப் பார்க்க இரண்டு பேர் வந்திருந்தார்கள்.  அவர்கள் பேசிய தமிழில் மலையாள வாடை வீசியது.

பொதுவாக ஜல்லிக்கட்டில் ஒரு காளை அடக்கப்பட்டு விட்டால், அது அடிமாடு என்கிற கீழ்மைத் தன்மையை அடைந்து விடும். அந்த மாட்டை உடனே விற்று விடுவது மரபு.  மூக்கனைப் பற்றி கேள்விப் பட்டிருந்த மலையாளத்துக்காரர்கள் அதை விலை பேசி வாங்க பணத்துடன் வந்திருந்தனர். 

சிறிது நேர பேரத்திற்குப் பிறகு, இரண்டாயிரத்திற்கு தருவதாக ராமசாமித்தேவர் ஒப்புக்கொண்டு, அவர்களை அழைத்துக்கொண்டு வீட்டின் கொல்லைப்புறம் சென்றார். 

புதியவர்களைப் பார்த்ததும் எதோ விபரீதம் நடக்கப் போகிறது என்று மூக்கனுக்குப் புரிந்து போயிற்று.  உடலை விரைத்துக்கொண்டு அசையாது நின்றது. 

மூக்கனை நேரில் பார்த்ததும் வந்தவர்கள் அதன் மினுமினுப்பையும், கம்பீரத்தையும் பார்த்து அசந்து போனார்கள்.  முகத்தில் மகிழ்ச்சியுடன் சரியான விலைதான் பேசியிருக்கிறோம் என்று தங்களுக்குள் கண்களால் பேசிக் கொண்டார்கள்.  ராமசாமித் தேவர் மூக்கனின் கழுத்துக் கயிற்றை பற்றி இழுத்து, ‘’இந்தாங்க, உங்க மாடு’’ என்றார். 

தன்னை இதுகாறும் ‘ஏலே மூக்கன்’ என்று வாஞ்சையுடன் அழைக்கும் தேவர், தற்போது மூன்றாவது மனிதர்கள் முன்னிலையில் ‘மாடு’ என்று அழைத்தது  பிடிக்கவில்லை போலும்.  வந்தவர்களை நோக்கி விரோதமாக முறைத்தபடி நின்ற இடத்தை விட்டு அசையாமல் முரண்டு பிடித்தது. 

தேவர் கோபத்துடன் அருகே இருந்த ஒரு வலுவான குச்சியை எடுத்தார்.

“என் மானத்தை கப்பலேத்திய உனக்கு இந்த வீட்டில் இடமில்லை” என்று சொல்லி குச்சியால் அதை விளாசினார்.  மூக்கன் அடிகளை வாங்கிக்கொண்டு வலி தாங்காமல் அடிவயிற்றிலிருந்து ‘ம்மா’ என்ற சத்தத்துடன் கதறி அழ ஆரம்பித்தது.

கழனிக்கு சென்றிருந்த தங்கசாமி அப்போதுதான் அங்கு வந்து சேர்ந்தான்.

நிலைமையின் தீவிரத்தை உடனே புரிந்து கொண்டவன், தேவரை நோக்கி,

“யோவ், என்ன காரியம் பன்னுதீரூ, கண்ணுக் குட்டியிலிருந்தே புள்ள கணக்கா வளர்த்த ஒரு வாயில்லா ஜீவன ஜீவன எப்படிய்யா உமக்கு அடிக்க மனசு வந்துச்சு?  தடவித் தடவி அருமையா வளர்த்தீகளே !

உம்ம புத்தி கெடடுப்போச்சா? கேரளாவுக்கு ஓட்டிட்டுப் போயி நம்ம மூக்கன வெட்டித் துண்டம் போட்டு, மற்ற இன மாட்டு இறைச்சியுடன் கலந்து வித்துடுவானுங்கையா... கசாப்பு கடையில் நம்ம மூக்கன வெட்டி வியாபாரம் பண்னத்தானா இவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்தீறு?   

“......”

“அஞ்சு வருஷமா உம்மா புகழ் எட்டுப் படடிக்கும் ஒங்கக் காரணமாயிருந்த நம்ம புள்ள மூக்கணப் பிரிய எப்படிய்யா உனக்கு மனசு வருது?” என்றவன் வந்தவர்களை நேராகக் கையெடுத்துக் கும்பிட்டு, “ஐயா, உங்க சிரமத்திற்கு என்னை மன்னிச்சிடுங்க, மூக்கனை எங்க அப்பாரு விக்கப்போறது எனக்கே தெரியாது” என்றான்.

அங்கு நிற்காது நேராக கூடத்திற்கு வந்து தன் மேஜை இழுப்பறையைத் திறந்து, இதுகாறும் தான் சேமித்து வைத்திருந்த ஐயாயிரம் ரூபாயை எடுத்துக்கொண்டு வந்தான். 

தேவரிடம், ‘நீரூ என்ன விலைக்கு மூக்கன விலை பேசுணீர்ன்னு எனக்குத் தெரியாது. இப்போதைக்கு என்னிடம் ஐயாயிரம்தான் இருக்கு...மாசா மாசம்

வெயில்ல அலைஞ்சு உழைச்சு நான் சேமித்த பணம் இது.  இந்தப் பணம் ஒரு உயிரை அதுவும் நம்ம மூக்கன் உயிரைக் காப்பாத்த பயன் படும்னா எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம்.  இன்னும் இதுக்கு மேல தரணும்னா சொல்லும் நான் தரேன்.  இப்பத்திலேர்ந்து மூக்கன நான் வாங்கியாச்சு” என்றபடி ஐயாயிரத்தை அவர் கைகளில் திணித்தான். 

நிலைமையின் தாக்கத்தை உணர்ந்து வந்தவர்கள் திரும்பிச் சென்றனர்.

தேவர், கையில் பணத்துடன் ஒன்றும் பேசத்தோன்றாது தங்கசாமியைப் பார்க்க, “உங்க மனசு இவ்வளவு கல்லானது எப்படிப்பா? எனக்கு உங்க ஜல்லிக்கட்டில் உடன்பாடில்லையே தவிர, மூக்கனிடம் எப்போதுமே  அன்பு உண்டு.  ரத்தமின்மையும் அஹிம்சையும்தான் எனக்குப் பிரதானம்.

ரத்தக்களரியும், ஹிம்சையுமல்ல.  இனிமே மூக்கன வளர்க்க வேண்டியது என் பொறுப்பு” என்றான்.

 ராமசாமித்தேவர் உணர்ச்சிவசப்பட்டு, கண்களில் நீர் முட்ட தங்கசாமியின் கையைப் பற்றி, “எலே, என்ன மன்னிச்சிடுல, நீ ரொம்ப உசந்துட்டலே நான் உன்னிய படிக்கவெச்சது வீணாப் போகல... நீ சொல்றது எல்லாம் சத்திய வார்த்தைகள்தாம்ல.”  அவர் கண்களில் நீர் முட்டியது.

ஐயாயிரம் ரூபாய் பணத்தை அவனுடைய சட்டைப் பையில் திணித்தார்.

கலங்கிய கண்களுடன் மூக்கனின் கழுத்தை கட்டிக்கொண்டு அதனிடம் மன்னிப்புக் கேட்கும் பாவனையில் அதன் கன்னத்தில் முத்தமிட்டார்.

மூக்கனின் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது.

by Swathi   on 30 Dec 2015  1 Comments
Tags: ஜல்லிக்கட்டு   ஜல்லிக்கட்டு கதை   ஜல்லிக்கட்டு சிறுகதை   எஸ்.கண்ணன் சிறுகதைகள்   அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு   Jalikattu   Jalikattu Sirukathai  
 தொடர்புடையவை-Related Articles
ஜல்லிக்கட்டு - எஸ்.கண்ணன் ஜல்லிக்கட்டு - எஸ்.கண்ணன்
கருத்துகள்
06-Jul-2017 05:36:54 ஜீவா செல்வராஜ் said : Report Abuse
கதை என்பது ஒருவனின் வாழ்க்கை மையமாகவும் அவர்களின் கதைகளில் வரும் சுருக்கதையும் மையமாக கொண்டு உள்ளது.....எந்த கதை களை கும் மனிதனுக்கு உள்ள எதார்த்த மன அன்பை வெளிப்படுத்தும்..... சக்தி யாக உள்ளது......
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.