|
||||||||
ஜப்பானிய ரோபோக்கள்… |
||||||||
இன்றைய ‘சத்குரு சொன்ன குட்டிக் கதை’யில், மலை உச்சியிலிருந்து கடவுளுக்கு நன்றி சொல்லிய புத்திசாலியைப் பற்றியும், ஜப்பானியர்கள் ஏன் ரோபோக்களை உபயோகிக்கின்றனர் என்பதையும், தனக்கே உரிய நகைச்சுவை உணர்ச்சியோடு விவரிக்கிறார் சத்குரு… சிரித்து மகிழுங்கள்! சத்குரு: ஜப்பானிய ரோபோக்கள்… ஜப்பானிய வெளியுறவுத் துறை அதிகாரியும் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரியும் பரஸ்பர உறவு குறித்து விவாதித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது பேச்சின் நடுவில் ஜப்பானிய அதிகாரி வருத்தத்துடன், “எங்கள் நாட்டில் 70 சதவிகிதம் வயது முதிர்ந்தோர். அதனால் எங்கள் மக்கள் தொகை வெகு விரைவிலேயே குறைந்துவிடும், வேலை செய்வதற்குக்குக்கூட போதுமான ஆட்கள் இருக்கமாட்டார்கள்” என்றார். அதற்கு இந்திய அதிகாரி, “வருத்தப்படாதீர்கள், எங்கள் நாட்டிலிருந்து மக்களை உங்களுக்கு ஏற்றுமதி செய்கிறோம், அவர்கள் சில வருடங்களில் மக்கள் தொகை இழப்பை சரிசெய்து விடுவார்கள்.” அவசரமாக இடைமறித்த ஐப்பானிய அதிகாரி, “வேண்டாம், வேண்டாம்… நாங்கள் ரோபாட் வைத்து சமாளித்துக் கொள்கிறோம்,” என்றார். கடவுளே நன்றி! ஒரு நாள் ஒரு மனிதர் ஒரு மலைப்பாதையில் கார் ஓட்டிச் சென்று கொண்டிருந்தார். பயணத்தில் இருக்கும்போதே அவருடைய கார் ரிப்பேரானது. அருகில் தென்பட்ட ஒரு கிறிஸ்துவ மடாலயத்துக்குச் சென்று, ‘என்னுடைய கார் ரிப்பேராகிவிட்டது’ என்றார். மிக எளிமையான மடாலயம் அது. அவர்களிடம் ஒரே ஒரு கோவேறு கழுதை மட்டுமே இருந்தது. இருந்தும் பெரிய மனத்துடன், “எங்களிடம் உள்ள கோவேறு கழுதையைத் தருகிறோம். அதில் ஏறி பக்கத்திலிருக்கும் ஊருக்குச் சென்றுவிடுங்கள்” என்றனர். அந்தக் கழுதை மேல் ஏறியவர் தன் பயணத்தைத் தொடங்கும்போது, மடாலயத்தின் தலைவர், “இந்த கழுதைக்கு சில பயிற்சிகளைக் கொடுத்திருக்கிறோம். ‘தேங்க் காட்’ (Thank God & கடவுளே நன்றி) என்று சொன்னால் கழுதை நகரும். கழுதையை நிறுத்த ‘ஆமென்’ என்று சொல்ல வேண்டும்.” என்று சொன்னார். கழுதை மேல் ஏறி உட்கார்ந்தவர், ‘தேங்க் காட்’ என்றதும் கழுதை நகர்ந்தது. இவருக்கு அந்த மலைப்பகுதிப் பாதைகள் பரிச்சயமில்லை என்பதால் கழுதையை ஓட்டிச் செல்லாமல் அதன் போக்கில் செல்லவிட்டார். கழுதை நேராக சென்றது. வெகு தூரம் சென்ற கழுதை, ஒரு மலை உச்சியை நோக்கி சென்று கொண்டிருந்தது. மலை உச்சிக்குக் கீழே கிடுகிடு பள்ளம் இருப்பதைப் பார்த்த நம் மனிதர், கழுதையை நிறுத்துவதற்கான வார்த்தையை மறந்து விட்டார். அந்த மந்திரத்தை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வருவதற்கு படாதபாடு பட்டுக் கொண்டிருக்கும்போதே, கழுதை பயமில்லாமல் மலை உச்சியை நெருங்கியது. மலை உச்சியிலிருந்து கீழே விழுவதற்கு ஒரு அடியே இருக்கிற நிலையில், இவருக்கு மந்திரம் ஞாபகத்திற்கு வந்தது. உடனே ‘ஆமென், ஆமென்…’ என்று கூவினார். கழுதை அந்த மலை உச்சியின் நுனியில் போய் நின்றுவிட்டது. அப்பாடா என்று பெருமூச்சுவிட்டபடியே, கழுதையிலிருந்தே கொண்டே குனிந்து அங்கிருந்த கிடுகிடு பள்ளத்தைப் பார்த்தார். ஓ! தப்பித்தோம் என்று சந்தோஷமாய், ‘தேங்க் காட்’ என்று கத்தினார். அதன் பிறகு… |
||||||||
by Swathi on 29 Mar 2014 0 Comments | ||||||||
Tags: ரோபோ ரோபோக்கள் ஜப்பான் சத்குரு Japan Japanese Robots | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|