LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF
- இலக்கியக் கட்டுரைகள்

காப்பிய நாயகனும் கவிக்கு நாயகனும்

ராமனும் அனுமனும் கம்பர் வலியுறுத்தும் பண்புக்கூறான புலனடக்கத்தின் இருபெரும் சிகரங்கள் என்பது மிகையாகாது. எந்நிலையிலும் சினம் கொள்ளாது அன்பும் கருணையும் கொண்ட பண்பினனாகக் கம்பர் ராமனைக் காப்பியம் முழுவதிலும் காட்டியுள்ளார்.

குகன், ஜடாயுவைத் தொடர்ந்து, கிஷ்கிந்தையில் ராமனை முதலில் கண்டு உரையாடியவன் அனுமன். "காற்றில் வேந்தற்கு அஞ்சன வயிற்றில் வந்தேன்; நாமமும் அனுமன்' என்னும் கூற்றோடு கம்பர் அனுமனைக் கண்டு, பகைவர்களோ என்றஞ்சிய சுக்ரீவன் மலைக் குகையில் ஒளிந்துகொள்ள, இளம் பிரம்மசாரி வடிவில் ராமனைச் சந்திக்க முன்வரும் மாவீரனாய் அனுமன் காப்பியத்தில் நுழைகிறான்.

கம்பர் தமது பாத்திரப் படைப்புகளுள், காப்பிய நாயகனாகிய ராமனையும் விஞ்சிய அளவில் அனுமனைப் பல சிறப்பு அடைமொழிகளால் சுட்டிக்காட்டி சிறப்பித்துள்ளார். "ஐம்புலன் வென்றான்', "மடத்தோகையர் வலிவென்றவன்' எனும் அடைமொழிகள் அனுமனின் புலனடக்க வலிமையைத் தெரிவிப்பன. கிஷ்கிந்தா காண்டத்தில் அறிமுகமாகும் அனுமன் காப்பியத்தின் கடைசிவரை பேசப்படுகிறான்.

ராமனின் பாராட்டுக்கும் புகழ்ச்சிக்கும் பெரிதும் உரியவனாகக் காணப்படுகிறான். ""ஒருவரையொருவர் மெய்யாகப் புரிந்துகொண்டு, ஆழமான நட்பு கொள்ளக் காரணமானது அவ்விருவரிடையேயும் நிறைந்திருந்த புலனடக்கமே'' என்பார் அ.ச.ஞா. அனுமன் ராமனிடத்துத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, "பரிதிச் செல்வனாகிய சுக்ரீவன் விம்மலுற்று ஏவ வினவிய வந்தேன்' என்று வரவின் காரணம் கூறிய அளவிலேயே ராமன் அவன் சொற்கேட்டு வியக்கிறான். ஆற்றல், கல்வியமைதி, நிறைவு, அறிவு என்பவற்றில் வேற்றுமை இல்லாதவனாக அவனை மதிப்பிடுகிறான். அக்கணத்திலேயே,

""இல்லாத உலகத்து எங்கும் இங்கிவன் இசைகள்கூரக்
கல்லாத கலையும் வேதக் கடலுமே என்னும் காட்சி
சொல்லாலே தோன்றிற் றன்றே யார்கொல்இச் சொல்லின் செல்வன்
வில்லேர் தோள் இளைய வீர! விரிஞ்சனோ! விடைவலானோ!
(கிஷ்கிந்தா-அனுமப் படலம்-18) என்று பெருமிதத்தோடு புகழ்ந்து, அனுமனின் மதிப்பெருக்கத்துக்குச் சான்றளிக்கிறான். "இவன் கல்லாத கலைகளோ வேதமோ இல்லையென்பது இவனது சொற்களால் தெரிகிறதே. சொல்லின் செல்வனாய்த் திகழும் இவன் நான்முகனோ, சிவபெருமானோ!' என்று வியக்கிறான். இவ்வளவு கூறியும் அனுமன் பெருமையை இலக்குவன் அறியாதிருப்பது கண்ட ராமன், அவனுக்கு இடித்துரைப்பது போல அஞ்சனை மைந்தனைப்பற்றி மேலும் பேசுகிறான்.

""மணியாம் படிவம் அன்று மற்றிவன் வடிவம் மைந்த
ஆணிஇவ் வுலகுக்கு எல்லாம் என்னலாம் ஆற்றற்கு ஏற்ற சேணுயர் பெருமை தன்னைச் சிக்கறத் தெளிந்தேன் பின்னர்க் காணுதி மெய்ம்மை...
(கிஷ்கிந்தா-அ.ப.19) என்பது ராமன் கூற்று. அனுமன் தோற்றம் குறுகியது அன்று. இவன் இவ்வுலகுக்கு அச்சாணி போன்றியங்குபவன் என்பதைத் தாம் தெளிவுறத் தெரிந்துள்ளதாக ராமன் உறுதிபடச் சுட்டிக் காட்டுகிறான். இந்த அளவில் ராமனின் பெருமையறிந்த அனுமன் தான் கொண்டுள்ள வடிவிலேயே அவனை வணங்க, ராமன் இது தகாததெனத் தடுக்கிறான். அனுமன் தன் மெய்த்தோற்றத்தைக் காட்டியதும் கண்டு வியந்து,
""நாட்படா மறைகளாலும் நவைபடா ஞானத்தாலும்
கோட்படாப் பதமே ஐய குரங்குஉருக் கொண்டது''
(கி-அ.ப-33)
என்று பாராட்டுகிறான். "காலம் கடந்து நிற்கும் வேதத்தாலும் மாசற்ற ஞானத்தாலும் அறிந்துகொள்ள முடியாத "பதம்' குரங்கு வடிவமேற்று வந்ததோ?' என்று ராமன், அனுமனின் தோற்றத்தைக்கண்டு புகழ்ந்துரைக்கிறான். அனுமனைச் "சொல்லின் செல்வன்' என்றும், "உலகுக்கு ஆணி' என்றும், "வேதமும் அறியாத பதம்' என்றும் ராமன் கூறும் புகழுரை அனைத்தும் அனுமப் படலத்தில் உள்ள 35 பாடல்களுக்குள் அமைந்திருத்தல் குறிப்பிடத்தக்கதாகும்.

கம்பராமாயணத்தில் சுந்தர காண்டம் தவிர ஏனைய ஐந்திலும் தோன்றிப் பேசுகிறவனாக ராமனைக் கம்பர் படைத்துள்ளார். ஆனால், சுந்தர காண்டத்தில் மட்டும்  ராமன் தோன்றாது பேசப்படுகிறவனாக உள்ளான். இக்காண்டம் முழுவதும் ஏறத்தாழ அனுமனுக்குரிய காண்டமாகவே அமைந்துள்ளது. மனைவியைப் பிரிந்த ராமனின் துயருக்கு அனுமனால் முடிவேற்படும் நிலையில் காப்பியத்தின் சிக்கல் இக்காண்டத்தில்தான் அவிழ்க்கப்படுகிறது. ராமனின் பெருமையும் ஆற்றலும் அனுமனாலும் சீதையாலும் வெகுவாகப் போற்றி உரைக்கப்பட்டுள்ளன.

போரின் முடிவில் ராமன் முடிசூட்டி அரசேற்ற காலத்து தனக்கு உதவியவர்களுக்கு உற்ற பரிசில்களை வழங்குகிறான். முத்து, மணி, பொன், நிலம், குதிரை, தேர் என அவரவர் தகுதிக்கேற்ப வழங்கி விடை கொடுத்தனுப்புகிறான். அனுமன் முறையும் வந்தது. ராமன் அவனைப் பார்த்து,
""ஆர்உதவிடு தற்கு ஒத்தார் நீஅலால் அன்றுசெய்த
பேர்உதவிக்கு யான்செய் செயல் பிறிதில்லை பைம்பூண்
போர்உதவிய திண்தோளாய் பொருந்துறப் புல்லுக...
(யுத்த-விடைகொடுத்த படலம்-20) என்று அன்புடன் கூறுகிறான். அனுமன் பெற்ற இப்பரிசு எவர்க்கும் கிடைத்தற்கரியது. "வீரனே, என்னைக் கட்டிக் கொள்வாயாக' என்பதுதான் ராமனீந்த பரிசு.

ஒருவரைத் தழுவிக் கொள்வதும் ஒருவகைப் பரிசாகுமோ? உலகியலின்படி, தழுவுகின்றவன் உயர்ந்தவன் என்பதும், தழுவப்பெற்றவன் ஒருபடி அடுத்தவன் என்பதும் கருத்து. அவதார புருஷனான ராமன் தழுவிக்கொண்டால், அனுமன் அடுத்த நிலையுள்ளவனாகிறான். எனவே, நெடுமாலாகிய ராமன், அனுமன் தழுவிக்கொள்வதால், அனுமன், ராமனினும் உயர்ந்தவனாகிறான். இதை உணர்ந்தே ராமனும் ஈடு இணையற்ற அத்தகு பரிசினை அனுமனுக்கு வழங்கினான் என்றால், ராமன் அனுமன்பால் கொண்டிருந்த அன்புள்ளத்தை என்னவென்பது?

கம்பராமாயணத்தின் பின்னருள்ள மூன்று காண்டங்களிலும் அனுமனை ராமனுக்குச் சமமாகக் கம்பர் காட்டியுள்ளார். ராமன்பால் தோழமை கொண்டவர்களுள் அனுமனைப்போல் காப்பிய நாயகனால் புகழப்பட்டவர் எவருமில்லை. இருவருக்குமாக நிறைந்திருந்த புலனடக்கமே ஒருவரையொருவர் உணர்ந்துகொள்ள வைத்தது என்பதும் அனுமனை உயர்வாக்கியது என்பதும் காப்பிய நோக்கத்தின் வெற்றியல்லால் வேறில்லை.

by Swathi   on 10 Apr 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஜாலங்கள் ஜாலங்கள்
நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்) நகர்ந்து கொண்டே இருக்கும் நாணயம் (நா-நயம்)
மண்ணும் மரமும் காட்டும் பண்பு மண்ணும் மரமும் காட்டும் பண்பு
இயற்கை என்னும் அற்புதம் இயற்கை என்னும் அற்புதம்
கடவுள் நம்பிக்கை கடவுள் நம்பிக்கை
சின்ன சின்ன சந்தோசங்கள் சின்ன சின்ன சந்தோசங்கள்
இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . . இயற்கைமொழி ஆய்வின் (Natural Language Processing - NLP )இறுதி நோக்கம் . . .
பேச்சுத்தமிழின் முக்கியத்துவம் ! பேச்சுத்தமிழ் ''கொச்சைத் தமிழ் ''  இல்லை! ''பச்சைத் தமிழ்''! பேச்சுத்தமிழின் முக்கியத்துவம் ! பேச்சுத்தமிழ் ''கொச்சைத் தமிழ் '' இல்லை! ''பச்சைத் தமிழ்''!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.