LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்)

காற்றுக்கு வந்த சோகம்

முழுவியளத்துக்கு
ஒரு மனுவறியாச் சூனியத்தைக் கண்டு
சூரியனே திகைத்துப் போன காலையிலிருந்து
இப்படித்தான்
உயிர்ப்பிழந்து விறைத்த கட்டையெனக்
கிடக்கிறது இக்கிராமம்.

கிராமத்தின் கொல்லைப் புறமாய்
உறங்கிய காற்று
சோம்பல் முறித்தபடியே
எழும்பி மெல்ல வருகிறது.

வெறிச்சோடிய புழுதித்தெரு,
குழம்பிக் கிடக்கும் சுவடுகள் மேலாய்
சப்பாத்துக் கால்களின் அழுத்தம்,
காற்றுக்கு குழப்பமாயிருந்தது.

முற்றங்கள் பெருக்கும் ஓசைலயம்
பாத்திரங்களோடு தேய்படும் வளையல் ஒலி,
ஆச்சி, அப்பு, அம்மோயென
அன்பொழுகும் குரல்கள்-
ஒன்றையுமே காணோம்.

என்ன நடந்தது?
ஏனிந்தக் கிராமம் குரலிழந்து போயிற்று?
திகைத்து நின்றது காற்று
தேரடியில் துயின்ற சிறுவன்
திருவிழாச் சந்தடி கலைத்திருந்தமை கண்டு
மலங்க விழித்தது போல.

திறந்த வாசலினூடே வீட்டுச் சொந்தக்காரனென
சுதந்திரமாய் நுழைகிற காற்று
இப்போ தயங்கியது.
தயங்கித் தயங்கி மெல்ல
ஓர் வீட்டுவாசலை எட்டிப் பார்த்தது.
ஆளரவமே இல்லை.

இன்னுமொரு வாசல்; இல்லை.
இன்னும் ஒன்று; இல்லை.
இன்னும் ஒன்றை எட்டிப் பார்க்கையில்
இழுத்துப் பறிக்கும் மூச்சின் ஓசை.
சற்றே கிட்டப் போனது.
வாசற் படியிலே

வழுக்கிக் கிடந்தது ஓர் முதுமை.
ஊன்றுகோல் கையெட்டாத் தொலைவிலே.
இழுத்துப் பறிக்கும் மூச்சினிடையே
எதையோ சொல்ல வாயெடுக்கவும்
பறிபோயின சொற்கள்.
பறியுண்ட மூச்சு
மடியைப் பிடித்து உலுக்குவதாய்
காற்று ஒருகால் நடுங்கிற்று.

பதற்றத்தோடே
படலையைத் தாண்டிப் பார்த்தது
தூக்க எடுக்க துணை கிடைக்குமாவென்று.
ஆருமே இல்லை.

காற்றென்ன செய்யும்?
ஒப்பாரி எழுந்தால் ஏந்தியெடுத்து
ஊரின் காதிலே போடும்.
ஒரு குரலின் உரைசலும் இல்லையே.
உண்மையிலேயே
காற்றிற்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

பக்கத்திருந்து உறவுகள்
பால் பருக்க,
கால் பிடிக்க,
கை பிடிக்க,
தேவாரம் ஓத,
கோலாகலமாய் பிரிகின்ற உயிர்
அநாதரவாய்,
அருகெரியும் சுடர் விளக்கின்றி
பறை முழக்கமின்றி, பாடையின்றி.....
அட, சாவிலும் கூட ஒரு வாழ்விருந்த கிராமம் இது.

காற்று பரிதவித்தது.
"எங்கே போயின இதன் உறவுகள்?"
ஒன்றும் விளங்காமல் அந்தரித்தது.
அதற்கெங்கே தெரியும்?
காற்றுறங்கும் அகாலத்தில்தான்
மூட்டை முடிச்சுக்களோடு மக்கள்
கிராமத்தை ஊமையாய் விட்டுப்போன கதை.

ஒரு பெருமூச்சை உதிர்ந்தபடி
மீண்டும் உள்ளே நுழைந்தது.
முதுமையினருகில் குந்தியிருக்கும்
இன்னொரு கூனற்கிழமாய் தன்னைப் பாவித்திருந்து
பிறகெழுந்து
சேலைத்- தலைப்புள் வாயைப்புதைத்தபடி
வந்தது வெளியே.

வீதியில் தலைநீட்டிய முட்செடியன்றை
வேலியோரமாய் விலக்கியபடியே
மெல்ல நடந்தது காற்று
சொல்லிக் கொள்ளாமல் போன புதல்வரைத் தேடும்
சோகந் தாளாத தாயைப் போல.

by Swathi   on 21 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
ஆற்றின் கரையோரம் ஆற்றின் கரையோரம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.