நிலம் சார்ந்த சமூகத்தின் அத்தனை அடிப்படை வாழ்வியல் கூறுகளிலும் தனது மேலாண்மைத் திறனை புகுத்தி, அதனை அன்றைய உலகுக்கு எடுத்துகாட்டிய தமிழரின் ஆளுமை, கடல் சார்ந்த வணிகத்திலும் அதிகமாகவே இருந்தது எனலாம்.
தள்ளா வினையுள்ளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு (குறள் 731) என்பதற்கிணங்க, திகட்ட திகட்ட திரைகடல் ஓடி, திரண்டதொரு திரவியம் தேடியவர்கள் பண்டையத் தமிழர்கள். சென்ற இடங்களில் எல்லாம் தமக்கான செல்வத்தை சேர்த்தது மட்டுமின்றி, தாம் அங்கே சென்றதற்கான மற்றும் இருந்ததற்கான அடையாளத்தை, அங்கே இருக்கும் சமுதாய கட்டமைப்பின் பல்வேறு நிலைகளிலும் தமது மேலாண்மைத் திறன் மூலம் பல புதிய மாற்றங்களை உருவாக்கியும் வந்தவர்கள், உலகின் நாலாபக்கங்களிலும் நாவாய் செலுத்தி வெற்றி கண்டு, நாகரீக முகட்டைப் பிடித்த உயர்குடி மக்களாம் நம் தமிழர். ”கலத்தினும் சாவினும் தருவனச் சட்டக் குலத்தில் குன்றாக் கொழுங்குடிச் செல்வ” என வாழ்ந்துக் காட்டியவர்கள்.
நிலத்திலிருந்து நீருக்கும், நீரிலிருந்து நிலத்திற்கும் பண்டங்கள் ஏற்றவும் இறக்கவும் தென்னாட்டுத் துறைமுகங்கள் பல இருந்தன. உள்நாட்டு வெளிநாட்டு நாவாய்கள், குதிரைகள் வரிசையாக நிற்பது போல் நின்றிருந்தன. ஏற்றுமதி இறக்குமதி செய்துகொண்டிருந்தவர்களும் தணிக்கையாளர்களும் ஓய்வின்றி உழைத்தனர். கடல்வணிகத்தினால் பயன்கொள்ளும் பெருநகரம் பட்டினம் என்றழைக்கப்பட்டது. காவேரிபூம்பட்டினம், சென்னை பட்டினம், முசிறிப் பட்டினம் என்ற பெருநகரங்கள் அக்காலங்களில் பெரும் பெயர் விளங்கியது. இயற்கை செயற்கை துறைமுகங்களை உருவாக்கினர். அந்த துறைமுகங்களையொட்டி மாடமாளிகைகளும் ஆக்கிக்கோவிலும், குடியிருப்புகளையும் அமைத்துக் கொண்டனர்.
கலங்கரை விளக்கமும் நாவாய்கள் தங்கும் வசதியும் கொண்ட விசாலாமான துறைமுகமாக அமைக்கப்பட்டிருந்தது. பண்டைக்காலத்தே மேற்குக் கரைத் துறைமுகங்களில் கிரெக்கம், எகிப்து, அரேபியா, மற்றும் கிழக்குத் துறைமுகங்களில் ஈழம், இலக்கத்தீவுகள், கடாரம், கங்கைக் கழிமுகம், சீனம் முதலான இடங்களுக்குப் போக்குவரத்து நடைபெற்றது. மேற் கடற்கரைகளில் பழம் பெருந்துறைமுகங்களான முசிறி, தொண்டி, வஞ்சி முதலியன கோலோச்சி இருந்தன. பிற்காலத்தே கோழிக்கோடும் திருவனந்தபுரமும் சிறப்புற்று விளங்கின. இவையன்றி விழிஞம், காந்தளூர், நறவம் என்பனவும், பிறவும் சிறிய பெரிய துறைமுகங்களாக விளங்கி வந்தன.
நெல்லும் உயிரன்று ; நீரும் உயிரன்று மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்’ கல்வியும் செல்வமும் மக்கள் வாழ்க்கைக்கு அடிப்படை என்பதை வேந்தர்கள் உணர்ந்திருந்தனர். அதுவும் வணிகம் பொருட்டு இன்றைய நாகரீகம் வியக்கும் வண்ணம் பற்பல செயல்களை செய்திருந்தனர். வேந்தர்களுக்கு வருவாய் குறைவானக் காலங்களில் வணிகம் செய்து வளம் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்ற நியதியை கையாண்டனர். வேந்தர்கள் அரசியல் நிமித்தம் பணியாக இருக்கும்போது வணிகத்தை தக்காரைக் கொண்டு நிருவாகம் செய்து வந்தனர். ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் மதுரையில் இருந்து ஆண்டு வருங்கால் அவனது மைந்தன் கொற்கையில் தங்கி இருந்தான் என்பதை இலக்கியச் சான்றாகும். வேந்தர்கள் இளவரசர்களை வணிகக் காரியங்களில் ஈடுபடுத்தி வந்தனர்.
வணிகக் காரியங்களுக்காக வணிகச் சாத்துக்கன் பாதைகளை விரிவுபடுத்தினர். பாதைகள் பிரிந்து செல்லும் இடங்களில் விளக்கம் காட்டும் வழிகாட்டித் தூண்கள், நிழல்தரும் மரங்கள் நடப்பட்டிருந்தன. பெருவழிப் பாதை கள்வர்களை அடக்க பாதுகாப்புப்படை அமைக்கப்பட்டிருந்தது. “கைப்பொருள் இன்றாயினும் கழுத்தறுப்பட்டுத் துள்ளும் உடலைக் கண்டு கைகொட்டி ஆர்க்கும் கள்வர்தொல்லை தென்னாட்டில் இல்லை” என்று வேந்தர்கள் சிறப்பாக மக்களுக்கு பாதுகாப்பு வழங்கி வந்தனர். சிறந்த கப்பற்படையும் வாணிகத்தையும் வளத்தையும் பெருக்கிவந்தது. பாதுகாப்புப்படைக்கு தேவைப்படும் செலவுகளுக்கு சுங்கவரி வசூலிக்கப்பட்டது.
நாற்புறமும் பாதைகள் கூடும் இடங்களில் சுங்கத் தணிக்க்கையாளர்கள் வணிகர்களின் பொருட்களுக்கு வரியை வசூலித்தனர். மூவேந்தர்களின் இலச்சினைகளைப் பதித்து வணிகப்பொதிகளில் அவற்றின் அளவி, செல்லும் இடம், பிற குறிப்புகளையும் கண்ணெழுத்து எனும் ஒருவகை குறியீடுகளால் பொறித்து அனுப்பினர். பண்டங்களை பாதுகாக்க பண்டகச் சாலைகள் அமைக்கப்பட்டிருந்தன. பண்டகச்சாலைகளில் தென்னாட்டு வீரர்களுடன் பிறநாட்டின் வீரர்களும் நியமனம் செய்யப்பட்டிருந்தனர். கடற்கரையில் தீநா எனப்படும் கலங்கரை விளக்கம், கலங்களை கரைக்கு அழைக்கும் விதமாக அமைக்கப்பட்டிருந்தது. உள்நாட்டு நணயங்கள், வெளிநாட்டு நாணயங்கள் தயாரிப்பதற்கென்று அரண்மனைப் பொற்கொல்லர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். மரக்கால், நாழி, உரி, ஆழாக்கு, செவிடு என முகத்தல் அளவைகள் அன்றைய பயன்பாட்டில் இருந்தன.
பாண்டி நாட்டிலிருந்து உரோம் நாட்டுக்கு வணிகத் தூதன் சென்று வந்துள்ளதை பற்றிய சான்று உள. இராசராச சோழன், இராம்சந்திர சோழன், முதற் குலோத்துங்க சோழன் ஆகிய வேந்தர்கள் முறையே கி.பி 1015, கி.பி 1033, கி.பி 1077 ஆகிய ஆண்டுகளில் சீன நாட்டுக்கு தூதுவர்களை அனுப்பினர். நாகப்பட்டினத்தில் இராமசிம்ம பல்லவன் கட்டிய ஒரு பௌத்த கோவிலும், முசிறியில் அகஸ்டஸ் கோவில் இருந்ததையும் அறியலாம்.
வணிகரைப் பொருள் வளத்திற்கு ஏற்ப இப்பர், கவிப்பர், பெருங்குடியர் என வணிகர்களை மூவகைப்படுத்தியிருந்தனர். அறநெறியில் பொருள் ஈட்டும் வணிகர்களுக்கு எட்டி என்ற பட்டம் வழங்கப்பட்டது. அதற்கு அடையாளமாக அவர்களுக்கு பொற்பூ வழங்கப்பட்டது. சீர்மையும் செம்மையும் உடைய வணிகர்களுக்கு எட்டிப்புரவு என்ற நிலக்கொடை வழங்கப்பட்டது.
புகழ்பெற்ற துறைமுகமான பூம்புகாரில் வந்திறங்கிய பொருட்களை கடியலூர் உருத்திரங்கண்ணனார்,
நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
காவின் வந்த கருங்கறி முடையும்
வடமலைப் பறிந்த மணியும் பொன்னும்
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
தென்கடல் முத்தும் குணகடல் தூசிரும்
கங்கை வாரியும் காவரிப் பயனும்
ஈழத்துணவும் காழகத்து ஆக்கமும்
அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி
வளந்தலை மயக்கிய நனந்தலை மறுகின் (ப.பாலை – 185-194)
மேற்கண்ட பாடலில் வழி, எத்தனை வகையான பொருட்கள் வணிகத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்பதைத் தவிரவும், எத்தனை நாடுகளுடன் வணிகத் தொடர்பு இருந்துள்ளது என்பதையும் அறிந்துக் கொள்ளமுடியும். குறிப்பாக காழகம் என்பது அன்றைய கடாரமாக விளங்கிய இன்றைய மலேசியாவை குறிக்கிறது. அதுவே தென்கிழக்காசியாவின் வாயிலாகவும் தமிழர்களுக்கு அன்று விளங்கியுள்ளது. அங்கே பல நாட்டவர்களும் வணிகம் பொருட்டு தமிழர்களோடு கலந்துள்ளனர். கலாச்சாரங்களும் கலந்துள்ளன. மொழிகளைக் கூட ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளனர். தமிழர்களில் பெரும்பாலானோர் வணிகத்தை பெருக்கிட அந்தந்த நாடுகளிலேயே வசிக்கவும் தொடங்கியுள்ளனர். அந்நிலை தமிழகத் துறைமுகங்களை ஒட்டிய பகுதிகளிலும் காணப்பட்டது. பிறமொழி பேசுவர் புலம்பெயர் மாக்கள் என்று அழைக்கப்பட்டனர் எனவும் இதனையே,
’மொழிபல பெருகிய பழிநீர் தே எத்துப்
புலம்பெயர் மாக்கள் கலந்தினி துறையும் முட்டாச் சிறப்பிற் பட்டினம்’ என்று பட்டினப்பாலை(216, 216) கூறுகிறது.
அரபு நாடு, சாவகம், சுமத்ரா, சீனா, கிரேக்கம், ரோமபுரி, ஈழம், போன்ற நாடுகளிலிருந்து பட்டாடைகள், பல்வகைப் பொறிகள், மதுபான வகைகள், குதிரை, சீனர்களின் பீங்கான், சந்தனம் என ஐவகை வாசனைப் பொருட்கள், பவளம், ஈயம், தகரம், என பலப் பொருட்கள் இறக்குமதியாயின. அதேபோலவே பரிமாறிக் கொள்ளப்பட்ட மற்றும் வணிகத்தில் அன்று அதிக முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களாக, பழந்தமிழர்களால் போற்றப்பட்டவை - மிளகு, மயில்தோகை, வாசனைத் திரவியங்கள், மிக மெல்லிய ஆடைகள், அரிசி, நல்லெண்ணெய், கருவா, இஞ்சி, தேக்கு, வாழை, சோளம், கம்பு, புளி, வெற்றிலை, பாக்கு, பல்வகை முத்துக்கள் ஆகியனவாம்.
மறப்போர் பாண்டியர் அறத்தின் காக்கும் கொற்கை அம் பெருந்துறை முத்தின் (அகம் 127-8-9) ; முத்தமொடு வலம்புரி சொரிந்து (அகம் 201 – 5) ;வலம்புரி மூழ்கிய வாந்திமிற் பரதவர் ஒலிதலைப் பணிலம் ஆர்ப்ப, கல்லென கலிகெழு கொற்கை எதிர்கொள இழிதரும் குயவு மணல் நெடுங்காடு ஆங்கண் (அகம் 350i 11 – 14); - போன்றவை வணிகத்தில் சிறந்து விளங்கிய தமிழர் பற்றி கூறுவதோடு, தமிழரோடு பிற நாடுகள் கொண்டிருந்த தொடர்புகள் பற்றியும் எடுத்துரைக்கின்றன. குறிப்பாக கிரேக்க நாடுகளுக்கு சேரநாட்டு யானைத் தந்தங்கள், மிளகு மற்றும் பாண்டியநாட்டு முத்து உள்ளிட்டவையும் பொருட்கள் கடல்வழிச் சென்று, அங்கிருந்து தமிழகத்திற்கு செல்வங்கள் வந்து சேர்ந்த ஆதாரங்களும் காணப்படுகின்றன. ஆசியாவின் வளம் கொழித்த நிலமாகவும் தமிழகம் அன்று அறியப்பட, அன்றைய தமிழர்களின் வணிக மேலாண்மையும், அதனை செயல்படுத்திய விதமுமே பெரும் காரணங்கள் என்பதை யாரும் மறுக்கவும் இயலாது.
|