LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- ரெ.கார்த்திகேசு

காதலினால் அல்ல!Part3

 

13
நாற்காலியில் உட்கார்ந்து சுற்றிலும் கண்களைச் சுழலவிட்ட போது அவனுக்கு பல அதிர்ச்சிகள் காத்திருந்தன. அவன் எதிர்பார்த்தது போலவே டத்தோ சலீம், பேராசிரியர் முருகேசு, ரித்வான், அவனுடைய விடுதித் தலைவர் டாக்டர் ரஹீம் ஆகியோர் இருந்தனர். ஆனால் இன்னொரு பக்கத்தில் அகிலாவும் பரசுராமனும் இருந்தது அவன் முற்றிலும் எதிர்பார்க்காத அதிர்ச்சியாக இருந்தது. பரசுராமன் தலை குனிந்து இருந்தான். அகிலாவின் மீது அவன் பார்வை பட்ட போது அவள் மெலிதாகப் புன்னகைத்தாள். எப்படி இங்கே வந்தாள்? ஏன்?
இன்னொரு நாற்காலியில் ஓரமாக அவனுடைய விடுதியில் தங்கியிருக்கும் சீன மாணவரான லீ எம் பூன் இருந்தார். இவருக்கும் இங்கு என்ன வேலை என்று தெரியவில்லை. அதே போல பரசுராமன் தங்கியிருக்கும் அமான் விடுதியின் தலைவரான டாக்டர் கான் என்பவரும் அங்கிருந்தார். நிலைமை மிகவும் குழப்பமாக இருந்தது. படபடப்பு மேலும் அதிகமாக உட்கார்ந்து டத்தோ சலீமின் முகத்தைப் பார்த்தவாறு இருந்தான்.
டத்தோ சலீம் பேசினார். “இந்த விசாரணை இரண்டாவது கட்டமாக இன்று நடக்கிறது. இரண்டு விஷயங்களை இதில் விசாரிக்கப் போகிறோம். முதலில் பல்கலைக் கழக வளாகத்தில் ரேகிங் நடந்தது உண்மையா அல்லவா? அதற்குப் பொறுப்பானவர்கள் யார்? என்பது. இரண்டாவதாக ராஜனும் அவர் நண்பர் வின்சன்டும் வெளியில் உள்ள ரகசியக் கும்பல் ஆட்களை உள்ளே கொண்டு வந்து கணேசனை மிரட்டியதாக கணேசன் கொடுத்துள்ள முறையீடு.
“இந்த விசாரணையில் புதிய தகவல்கள் வெளிப்பட்டிருப்பதால் இன்றைய விசாரணைக்கு முன் காலை எட்டு மணிக்கெல்லாம் இன்னொரு முன் விசாரணையும் நடத்தப்பட்டது என்பதைப் புதிதாக வந்திருப்பவர்களுக்கு நான் அறிவிக்க விரும்புகிறேன். அந்த முன் விசாரணையில் பரசுராமன் என்ற முதலாண்டு மாணவர், அகிலா என்ற முதலாண்டு மாணவி, லீ எம் பூன் என்ற இறுதியாண்டு மாணவர் ஆகியோர் இதுவரை விசாரிக்கப் பட்டார்கள். அந்த விசாரணையில் வெளிப்பட்ட தகவல்களை இப்போது புகார்தாரர்களுக்கு, அதாவது கணேசன், ராஜன், வின்சன்ட் ஆகியவர்களுக்கு நான் தெரிவிக்கிறேன். அந்தத் தகவல்கள் உண்மையா அல்லவா என்பதைப் பற்றி அவர்கள் கருத்துரைக்கலாம்”
கணேசனுக்கு எல்லாம் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக இருந்தது. இப்படி ஒரு முன்விசாரணை நடத்த வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது? எப்படி?
ராஜனும் வின்சன்டும் கூட முகங்களை இறுக்கமாக வைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கும் இங்கு நடப்பது அதிர்ச்சியாக இருப்பது போலத்தான் தெரிந்தது.
டத்தோ சலீம் தொடர்ந்தார்: “முதலில் பரசுராமனின் சாட்சியம். முதலில் அவர் தன்னுடைய முதல் முறையீட்டில் தான் கணேசன் பற்றிக் கொடுத்துள்ள ரேகிங் முறையீடு பொய் என இப்போது ஒப்புக் கொண்டிருக்கிறார். ராஜன், வின்சன்ட் இவர்களின் வற்புறுத்தலினால்தான் தான் அந்த முறையீட்டைச் செய்ததாக ஒப்புக் கொள்கிறார். மேலும் கணேசன், அகிலா ஆகியோர் அந்த ரேகிங் நிகழ்ச்சி பற்றிக் கொடுத்துள்ள விளக்கங்கள்தான் சரி என ஒத்துக் கொண்டுள்ளார். அகிலாவிடமும் இது பற்றி விளக்கம் பெற்றிருக்கிறோம். பரசுராமன், அகிலா இருவரும் ரேகிங் எப்படி யாரால் நடத்தப்பட்டது என்பது பற்றியும் அதில் கணேசனின் பங்கு என்ன என்பது பற்றியும் ஒரே வகையான விவரங்களைத் தந்துள்ளார்கள்.
“இந்த விவரங்களின் படி ராஜன் அகிலாவை ஏமாற்றி ரேகிங் நடந்த இடத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். பரசுராமன் ஏற்கனவே அந்தக் கூட்டத்தில் இருந்திருக்கிறார். பரசுராமனை வற்புறுத்தி அகிலாவை முத்தமிடச் செய்தது ராஜனும் நண்பர்களும். கணேசன் அங்கு வந்து பரசுராமனை அடித்து வீழ்த்தி அகிலாவை மீட்டுச் சென்றுள்ளார்”
டத்தோ சலீம் நிறுத்தினார். கணேசனின் உள்ளத்தில் புதிய மகிழ்ச்சிப் புனல் பாய்ந்தது. எப்படி இவையெல்லாம் நிகழ்ந்தன? எந்தத் தெய்வம் தோன்றி என் தலைக்கு மேல் திரண்டிருந்த கருமேகங்களைப் போக்கியது? அகிலாவை நன்றியுடன் நோக்கினான்.
“பரசுராமனின் முதல் பொய் முறையீட்டுக்கு ராஜனும் வின்சன்டும் காரணமாக இருந்திருப்பதோடு பொய்யான சாட்சியங்களையும் வழங்கியிருக்கிறீர்கள் இன்று இதன் மூலம் தெரிகிறது. என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?”
ராஜன் நிமிர்ந்து உட்கார்ந்து சொன்னான்: “டத்தோ, இந்தப் பரசுராமனை யாரோ மிரட்டி இப்படிப் பொய் பேச வைத்திருக்கிறார்கள். அவர் இப்போது சொல்வதுதான் பொய். பரசுராமனை கணேசன் ரேகிங் செய்தார் என்பதற்கு நான் பல சாட்சிகளைக் கொண்டு வர முடியும்!”
டத்தோ சலீம் பரசுராமனைப் பார்த்தார். “பரசுராமன். நீ உன்னுடைய முதல் முறையீட்டை இப்படி மாற்றிக் கொண்டதற்கு என்ன காரணம் என்று சொல்!” என்றார்.
பரசுராமன் தணிந்த குரலில் பேசினான்: “டத்தோ! நான் புதிய மாணவன். என் சீனியர்களுக்கு பயந்து நடுங்கியிருந்தேன். ராஜனின் குழு என்னைப் பிடித்து ரேகிங் செய்த போது அவர்களைப் பகைத்துக் கொள்ள வேண்டாம் என்று அவர்கள் சொன்ன படியெல்லாம் செய்தேன். அப்புறம் இந்த ராஜன் அகிலாவைக் கொண்டு வந்து கேலி செய்து என்னைக் கூப்பிட்டு முத்தமிடச் செய்தார். அது எனக்கு அருவருப்பாக இருந்தாலும் அவர்களுக்குப் பயந்து செய்தேன். இதனால் அகிலா வருத்தப்பட்டு அழுதபோது நானும் வருந்தினேன். கணேசன் தலையிட்டு என்னை அடித்து அகிலாவைக் காப்பாற்றியது எனக்கு உண்மையில் பெரும் ஆறுதலாக இருந்தது. ஆனால் இந்த ராஜனும் நண்பர்களும் என்னை விடவில்லை. கையோடு அழைத்துப் போய் கணேசன் மீது முறையீடு கொடுக்கச் சொன்னார்கள். என்ன சொல்ல வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார்கள். அவர்கள் சக்தியில் நான் முற்றாகக் கட்டுப் பட்டிருந்தேன். என் மனசாட்சிக்கு மாறாகத்தான் அனைத்தையும் செய்தேன்” நிறுத்திக் கண்களைத் துடைத்தான்.
“இப்போது நீ மனம் மாறியது எப்படி?” டத்தோ சலீம் கேட்டார்.
“எனக்கு கணேசன் யாரென்று முன்னால் தெரியாது. ஆனால் இந்தச் சம்பவம் நடந்த பிறகு பலர் அவர் எவ்வளவு உதாரணமான மாணவர் என்றும் இவ்வளவு நல்ல மாணவர் தண்டிக்கப்படுவது எவ்வளவு பெரிய அநீதி என்றும் பேசிக் கொண்டதைக் கேட்ட போதுதான் நான் செய்த தவற்றால் ஒரு நல்ல உதாரணமான, குற்றமற்ற மாணவர் தண்டிக்கப்படப் போகிறார் என்று உணர்ந்தேன்”
“அதுதான் நீ உன் முறையீட்டை மாற்றிக் கொண்டதன் காரணமா?”
“இல்லை. ராஜனும் அவர் நண்பர்களும் எப்போதும் என்னைச் சூழ்ந்து கொண்டு மிரட்டிக் கொண்டே இருந்தார்கள். கணேசனுடனோ அவருக்கு அனுதாபமாக உள்ள மற்ற மாணவர்களுடனோ என்னைப் பழக விடவில்லை. ஆகவே நானும் பயந்து இருந்தேன்!” மௌனமானான்.
“அப்புறம்?”
“முந்தா நாள் நான் தங்கியிருக்கும் அமான் விடுதியின் தலைவர் டாக்டர் கான் இரவில் என்னை அவருடைய அலுவலகத்திற்குக் கூப்பிட்டனுப்பினார். அங்கே நான் போனபோது பேராசிரியர் முருகேசுவும் அவருடன் இருந்தார். இந்த ரேகிங் கேஸ் பற்றி என்னிடம் பேச விரும்புவதாகப் பேராசிரியர் கூறினார். நான் ஏற்கனவே முறையீட்டில் தெரிவித்ததைத் தவிர வேறு புதிய தகவல்கள் இருந்தால் அதைச் சொல்வதற்கு எனக்கு ஒரு வாய்ப்புக் கொடுப்பதாகவும் அதற்கு டாக்டர் கான் சாட்சியாக இருப்பார் என்றும் கூறினார். ராஜனின் அடக்குமுறைக்கு உட்படாமல் உண்மையைக் கூற இதுதான் சந்தர்ப்பம் என்று அவரிடம் எல்லா உண்மைகளையும் கூறினேன். பின்னர் அவர்கள் இருவரின் ஆலோசனையின் பேரில் இன்றைக்கு விசாரணையில் எல்லோர் முன்னிலையிலும் மீண்டும் உண்மைகளைக் கூற ஒப்புக் கொண்டேன்!” மீண்டும் கண்களைத் துடைத்துக் கொண்டான்.
“இப்போது ராஜனும் வின்சன்டும் என்ன சொல்கிறீர்கள்?”
ராஜன்தான் மீண்டும் பேசினான்: “டத்தோ! கணேசனைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் எல்லோரும் செயல் படுகிறீர்கள். பேராசிரியர் தலையிட்டு பரசுராமனின் மனசைக் கலைத்திருக்கிறார்”
பேராசிரியர் பேசினார்: “டத்தோ! இந்தக் குற்றச்சாட்டு என் மேல் வரும் என்று முன்னறிந்துதான் நான் இந்தப் பரசுராமன் என்ற மாணவரிடம் தனியாகப் பேசாமல் அவருடைய விடுதித் தலைவரின் அனுமதியுடன் அவர் முன்னிலையில் பேசினேன். ஆகவே எந்த விதத்திலும் அவர் மனதைக் கலைக்கவில்லை!”
டாக்டர் கான் குறுக்கிட்டுச் சொன்னார்: “உண்மைதான் டத்தோ! பரசுராமன் எந்த வகையிலும் வற்புறுத்தப் படவில்லை. இந்த சந்தர்ப்பம் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைந்தவராகத்தான் இருந்தார். எல்லா உண்மைகளையும் தாமாகத்தான் சொன்னார்”
ராஜனின் முகத்தில் கோபமும் குரோதமும் கொப்பளித்தன. அவனைச் சுற்றி ஒரு வலை இறுக்கப் படுகிறது என உணர்ந்து கொண்டான். ஆனால் இன்னும் அவன் விட்டுக் கொடுத்துவிடத் தயாராக இல்லை. “டத்தோ! ரேகிங் நிகழ்ச்சியை நேரில் பார்த்தவர்களில் என் நண்பர்கள் இன்னும் பல பேர் இருக்கிறார்கள். அவர்களை நீங்கள் விசாரித்துப் பார்த்தால் நான் சொல்வதை உறுதிப் படுத்துவார்கள்! அவர்களையெல்லாம் நம்பாமல் அகிலாவும் கணேசனும் இப்போது இந்தப் பரசுராமனும் சொல்லும் பொய்யை ஏன் நீங்கள் நம்பவேண்டும்?”
“பரசுராமன்தான் இதில் முறையீடு செய்தவர். அவருடைய பேச்சுக்குத்தான் நாம் முதல் மதிப்பு அளிக்க வேண்டும். முதலில் பொய்யான குற்றச் சாட்டு ஏன் சுமத்தினார் என்பதற்கும், பின்னால் அதை மாற்றிக் கொண்டதற்குமான சூழ்நிலைகளை அவர் விளக்கியிருப்பதால் அவை அனைத்தையும் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியதுதான் முக்கியம். இனி இதற்கு அதிகமான பேர்களை சாட்சிக்கு அழைக்கத் தேவையில்லை”
கோப்புகளைக் கொஞ்ச நேரம் புரட்டிப் பார்த்து மீண்டும் பேசினார்: “நான் இப்போது கணேசன் செய்த முறையீடு பற்றி விசாரிக்க விரும்புகிறேன். கணேசனின் விடுதியில் ராஜன் வெளியில் உள்ள குண்டர் கும்பல் உறுப்பினர்களைக் கொண்டு வந்து மிரட்டியதாக கணேசன் கூறியுள்ளார். அது முற்றிலும் பொய் என ராஜன் மறுத்துள்ளார். ஆனால் கணேசன் சொன்ன அந்தச் சம்பவம் நடந்தது உண்மைதான் எனச் சொல்ல இப்போது ஒரு சாட்சி கிடைத்திருக்கிறார்”
கணேசன் நிமிர்ந்து உட்கார்ந்தான். யார் சாட்சி? இத்தனை நாள் இல்லாமல் எங்கிருந்து வந்தது இந்த சாட்சி?
“லீ எம் பூன்! நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?”
லீ எம் பூன் நிமிர்ந்து உட்கார்ந்தார். “டத்தோ! எங்கள் விடுதியில் அந்த நாள் நான் இரவில் டெலிவிஷனில் குத்துச் சண்டை படம் பார்த்துக் கொண்டிருந்தேன். எல்லோரும் போய்விட்டதனால் வரவேற்பறையில் உள்ள செட்டியில் படுத்துக் கொண்டே பார்த்துக் கொண்டிருந்தேன். அப்புறம் எனக்குப் பின்னால் சிலர் பேசுகின்ற சத்தம் கேட்டது. தமிழிலும் மலாயிலும் மாறி மாறிப் பேசினார்கள். யார் என்று தலை உயர்த்திப் பார்த்தேன். கணேசனை அடையாளம் கண்டு கொண்டேன். ராஜனையும் எனக்குத் தெரியும். இன்னும் இரண்டு பேர் எனக்குத் தெரியாதவர்கள். அவர்கள் மாணவர்களா வெளி ஆட்களா என்று தெரியாது. ஆனால் கணேசன் சொன்னது போல அவர்கள் விடுதியின் வரவேற்பறையில் கொஞ்சம் கோபமாகப் பேசிக் கொண்டிருந்தது உண்மைதான். எதைப்பற்றிப் பேசினார்கள் என எனக்குத் தெரியாது!”
கணேசன் மனதில் மீண்டும் மகிழ்ச்சிப் புனல் பாய்ந்தது. லீ எம் பூன் தன்னைக் காக்க வந்த தெய்வம் போலத் தெரிந்தான்.
“மிஸ்டர் லீ! இந்தச் சம்பவம் பற்றித் தெரிந்தவர்கள் விடுதித் தலைவருக்கு அறிவிக்க வேண்டும் என பல நாள் நோட்டீஸ் எழுதிப் போட்டிருந்ததாக அறிகிறேன். நீங்கள் இது வரை சொல்லாமல் இருந்தது ஏன்?”
“டத்தோ, நான் வீடமைப்பு, கட்டடவியல், திட்டமிடுதல் பிரிவில் நான்காம் ஆண்டு மாணவன். மூன்றாம் ஆண்டு இறுதியில் விடுமுறையின் போது கோல லும்பூரில் என்னுடைய ஆண்டிறுதி புரொஜெக்ட் செய்ய ஆரம்பித்தேன். அதை முடிக்க முடியவில்லை. இந்தப் பருவ ஆரம்பத்தில் புதிய பாடங்களைப் பதிவு செய்வதற்காகத் திரும்பினேன். பதிவு முடிந்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு என் டீனிடம் அனுமதி பெற்று விடுமுறை எடுத்துக் கொண்டு மீண்டும் கோல லும்பூர் போய் புரொஜக்டை முடித்து இரண்டு நாள் முன்புதான் வந்தேன். நேற்றுதான் நோட்டீஸ் பார்த்தேன். உடனே பெங்காவாவைச் சென்று பார்த்தேன். அவர் உங்களிடம் பேசி இன்று காலை விசாரணை இருப்பதைக் கூறி என்னை அழைத்து வந்தார்”
“சரி! நீங்கள் அந்த அறையில் இருந்தது மற்றவர்களுக்குத் தெரியாமல் போனது எப்படி?”
“நான் படுத்திருந்தேன். சத்தம் கேட்டவுடன் தலையைத் தூக்கி குஷன்களின் இடுக்கில் பார்த்து விட்டு இந்த இந்திய மாணவர்கள் இப்படித்தான் ஒருவருக்கு ஒருவர் அடித்துக் கொள்வார்கள், நமக்கு என்ன என்று மீண்டும் குத்துச் சண்டையில் ஆழ்ந்து விட்டேன்! அந்த நிலையில் அவர்கள் என்னைப் பார்க்கச் சந்தர்ப்பம் இருந்திருக்காது”
டத்தோ சலீம் ராஜனைப் பார்த்தார். “ராஜன், அன்றைக்கு நீங்கள் கணேசனின் விடுதிக்குப் போகவே இல்லை என்று சொன்னீர்களே! இதற்கு என்ன சொல்கிறீர்கள்? உங்களுடன் விடுதிக்கு வந்திருந்த அந்த மற்ற இருவர் யார்? வெளி ஆட்கள் என்பது உண்மையா?”
ராஜனின் முகம் கடுமையாக இருந்தது. ஆனால் வின்சன்ட் பயந்து ஒடுங்கி இருந்தான். ராஜன் சத்தமாகப் பேசினான்: “டத்தோ! எனக்கு எதிராக இங்கே பெரிய சூழ்ச்சிகள் நடந்திருக்கின்றன. எல்லோரும் சேர்ந்து கொண்டு என்னைக் குற்றவாளியாக்கப் பார்க்கிறார்கள். இது அத்தனையும் பொய். இந்த லீ கணேசனின் நண்பர். அவருக்குப் பொய் சொல்லிக் கொடுத்து தயார் படுத்தியிருக்கிறார்கள்!”
கணேசனின் விடுதித் தலைவர் டாக்டர் ரஹீம் பேசினார். “டத்தோ! லீ எம் பூனும் கணேசனும் நண்பர்கள் என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் லீ எம் பூன் புரொஜக்ட் வேலை முடிந்து விடுதிக்குத் திரும்பிய பிறகு கணேசனைப் பார்க்கவே இல்லை. கணேசன் மீது இப்படி ஒரு விசாரணை இருக்கும் செய்தியே அவருக்குத் தெரியாது. நோட்டீஸ் போர்டில் நோட்டீஸ் பார்த்ததும் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் வரவேற்பறையில் டெலிவிஷன் பார்த்துக் கொண்டிருந்தவர் என்ற முறையில் என்னைப் பார்க்க வந்தார். இதையெல்லாம் அவரிடம் விசாரித்துத் தெரிந்து கொண்ட பிறகுதான் நான் உங்களுக்குப் போன் செய்தேன்!”
ராஜன் மீண்டும் உரத்த குரலில் பேசினான். “டத்தோ! இதில் முக்கியமாக கணேசன் ரேகிங்கில் ஈடுபட்டாரா இல்லையா என்பதுதானே முக்கியம்? ரேகிங் நடந்த அன்று என்னோடு இருந்தவர்கள் யார் யாரென்று நான் உங்களுக்குச் சொல்லத் தயாராக இருக்கிறேன். இன்னும் நான்கு முதல் ஐந்து பேர் ரேகிங்போது நடந்தது உண்மை என்று சாட்சி சொல்லுவார்கள். நீங்கள் அவர்களைக் கூப்பிட்டு விசாரிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளுகிறேன்! அப்போதுதான் உங்களுக்கு உண்மை விளங்கும். அதற்குப் பிறகு நடந்தது எல்லாம் கணேசனின் சகாக்களும் நண்பர்களும் இட்டுக்கட்டியுள்ள கற்பனைக் கதைகள்தான்!” என்றான்.
டத்தோ சலீம் சுற்றிலும் பார்த்தார். “அப்படியானால் இந்த இரண்டு விடுதித் தலைவர்கள், பேராசிரியர் முருகேசு எல்லோருமே கூடிப் பேசி இப்படி ஒரு பொய்க்கதையை உக்களுக்கு எதிராக ஜோடித்திருக்கிறார்கள் என்கிறீர்கள்!”
“அப்படித்தான் தெரிகிறது!”
“உங்கள் நண்பர்கள் இன்னும் நாலைந்து பேரை அழைத்துக் கேட்டால் அவர்கள் உங்கள் சார்பாக உண்மை பேசுவார்கள்!”
“என் சார்பாக அல்ல! நடந்த உண்மையைச் சொல்லுவார்கள்!”
பரசுராமன் கை உயர்த்தித் தான் பேச விரும்புவதைத் தெரிவித்தான். டத்தோ அவனுக்கு வாய்ப்புக் கொடுத்தார். “டத்தோ! அன்று ரேகிங் நிகழ்ச்சியில் கூடியிருந்தவர்கள் அனைவரும் ராஜாவின் தலைமையில் உள்ள காராட் கேங் உறுப்பினர்கள். ஆகவே தங்கள் ரகசியக் கும்பல் விசுவாசத்தால் ராஜனின் கூற்றை ஆதரிப்பார்கள். அதை ஏற்றுக் கொள்ள வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். காராட் கேங்கிற்கு வெளியே உள்ளவர்களாக அந்தக் கூட்டத்தில் இருந்தவர்கள் நான், அகிலா மற்றும் கணேசன் மூவரும்தான்!” என்றான்.
டத்தோ சலீம் நிமிர்ந்து உட்கார்ந்தார். “பரசுராமன் சொல்லியதிலிருந்து நாம் விசாரிக்க வேண்டிய இன்னொரு முக்கிய விஷயத்தையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். இந்த காராட் கேங் என்ற பெயரில் இந்திய மாணவர்கள் ரகசியக் கும்பல் ஒன்று இந்தப் பல்கலைக் கழகத்தில் இருக்கிறதா? ரித்வான்! உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்.
“இப்படி ஒரு கேங் இருப்பதாக வதந்திகள் கேள்விப் பட்டிருக்கிறேன் டத்தோ! ஆனால் இதுவரை அது நிருபிக்கப் படவில்லை. அப்படி இருந்தால் அந்தக் கும்பல் மிக ரகசியமாகச் செயல் படுகிறது என்றுதான் அர்த்தம்!” என்றார் பாதுகாப்புத் துறைத் தலைவர்.
“ராஜன்! இப்படி ஒரு கும்பலை நீங்கள் நடத்தி வருவது உண்மையா?” டத்தோ அவனை நோக்கி நேரடியாகக் கேட்டார்.
ராஜனின் முகம் இருண்டிருந்தது. “சுத்தப் பொய் டத்தோ. அப்படி ஏதும் கும்பல் இல்லை. அப்படி இருந்தாலும் எங்களுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை!”
“பரசுராமன், அப்படி ஒரு கும்பல் இருப்பதாக எப்படிச் சொல்லுகிறீர்கள்?”
பரசுராமன் நிதானமாகப் பேசினான்: “டத்தோ, இந்த காராட் கேங் என்று ஒன்று நிச்சயமாக இருக்கிறது. அதற்கு ராஜன்தான் தலைவர். என்னையும் காராட் கேங்கில் வற்புறுத்திச் சேர்த்து விட்டார்கள். இதோ இருக்கிறது சான்று!” பரசுராமன் தன் பைக்குள் வைத்திருந்த ஒரு வெள்ளை டீ சட்டையை எடுத்துக் காட்டினான். அதில் “காராட் கேங்” என எழுத்துக்கள் அச்சிடப் பட்டிருந்தன. “இதை எனக்குக் கொடுத்து அணிந்து கொள்ளச் சொன்னது ராஜன்தான்!” என்றான்.
டத்தோ ராஜனைப் பார்த்தார். “பொய் டத்தோ! எனக்கும் இந்த டீ சட்டைக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை! இந்த மாதிரு டீ சட்டையை யார் வேண்டுமானாலும் காசு கொடுத்து அச்சிட்டுக் கொள்ளலாம்”
பரசுராமன் மீண்டும் கை உயர்த்தினான். “டத்தோ! காராட் கேங் உறுப்பினர்கள் அனைவரும் எல்லா நேரங்களிலும் இந்த டீ சட்டையை தங்கள் மேல் சட்டைக்குள் அணிந்திருக்க வேண்டும் என்பது விதி. இந்த விதிப்படி ராஜனும் வின்சன்டும் இந்தச் சட்டையை இப்போதும் அணிந்திருக்கிறார்கள்!”
“பொய்!” என்று கத்தினான் ராஜன்.
“அது பொய் என்றால் உன் மேல் சட்டையை இப்போது அவிழ்த்து உள்ளே உள்ள டீ சட்டையைக் காட்ட முடியுமா?” என்று கேட்டார் டத்தோ சலீம்.
ராஜன் மீண்டும் கத்தினான். “டத்தோ! இது எங்களுக்குப் பெரிய அவமானம். ஒரு பெண் உட்பட இத்தனை பேர் நிறைந்துள்ள இந்த அவையில் எங்களை சட்டையை அவிழ்த்துக் காட்டச் சொல்ல உங்களுக்கு உரிமை இல்லை. நாங்கள் அப்படிச் செய்ய மறுக்கிறோம்”
பொறியில் அகப்பட்டுக் கொண்ட எலி முட்டி மோதித் திரிகிறது என கணேசன் நினைத்துக் கொண்டான்.
டத்தோ சலீம் அமைதியாகக் கூறினார்: “சரி! அப்படியானால் பாதுகாப்புத் தலைவர் ரித்வான் அவர்களோடு நீங்கள் ஒரு தனி அறைக்குப் போய் அவருக்கு மட்டும் சட்டையை அவிழ்த்துக் காட்ட முடியுமா?”
“முடியாது! அப்படி எங்களை வற்புறுத்த உங்களுக்கு உரிமையில்லை! நீங்கள் உங்களுக்கு முன் உள்ள வழக்கை வாய் மூலமாகத்தான் விசாரிக்க வேண்டும். இந்த வகையான அவமானத்துக்கு நாங்கள் உட்பட மாட்டோம்” என்று கத்தினான்.
டத்தோ சலீம் ரித்வானோடு குனிந்து காதில் பேசினார். இருவரும் தலையசைத்துக் கொண்டார்கள். பிறகு டத்தோ சலீம் ராஜனைப் பார்த்துச் சொன்னார். “என்னுடைய கோரிக்கைக்கு நீங்கள் கட்டுப்பட மறுப்பதால் மூன்று பாதுகாவலர்களை இங்கு அழைத்து வந்து உங்களை இந்த அறையிலேயே தடுத்து வைக்கப் போகிறேன். தொடர்ந்து போலீசுக்குப் போன் பண்ணி அவர்களை அழைத்து அவர்களிடம் உங்களை ஒப்புவிக்கப் போகிறேன். அது தவிர இதைச் சுமுகமாகத் தீர்க்கும் வழி எனக்குத் தெரியவில்லை!” என்றார்.
வின்சன்ட் திடீரென எழுந்து நின்றான். “டத்தோ அப்படிச் செய்யத் தேவையில்லை!” என்றான். அவர்கள் அனைவரின் முன்னும் சட்டைப் பொத்தான்களைக் கழற்றினான். உள்ளே இருந்த வெள்ளை டீ சட்டையில் “காராட் கேங்” எனக் கொட்டை எழுத்துக்களில் எழுதியிருந்தது.
——————————————————————————–
14
அகிலா தன் புதிய அறையில் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள்.
பிற்பகலில் அந்த கெமிலாங் விடுதி ஓ என்று கிடந்தது. முதல் பருவத்தின் மத்தியில் முதல் சோதனை விரைவில் வருவதால் மாணவர்கள் அனைவரும் விரிவுரையிலோ அல்லது நூல் நிலையத்திலோ இருந்தார்கள். அகிலாவுக்கும் அன்று பிற்பகலில் கம்ப்யூட்டர் லேப் இருந்தது. ஆனால் அவள் போகவில்லை. போக மனசு வரவில்லை.
விசாரணையும் அது முடிந்தவுடன் நடந்த நிகழ்ச்சிகளிலிருந்தும் அவளால் விடுபட முடியவில்லை. விடுதிக்குத் திரும்பும் வழியில் பொதுத் தொலைபேசியில் வீட்டுக்குப் போன் செய்து அப்பாவிடம் சுருக்கமாக முடிவைச் சொன்னாள். அவருக்கு பெரிய நிம்மதியாக இருந்தது. முடிவு எதிர்மறையாக இருந்தால் பல்கலைக் கழகத்திலிருந்து தான் விலகப் போவதாக அவள் முன்னமே எச்சரித்து குடும்பத்தில் பீதியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தாள். “அப்படிச் செய்யதேம்மா, என் கனவையெல்லாம் பாழாக்காத!” என்று அப்பா கெஞ்சியதைப் பொறுக்க முடியாமல் “முடிவு எப்படின்னு பாப்போம் அப்பா!” என்று அவருடைய ஆறுதலுக்காகச் சொல்லி வைத்திருந்தாள்.
இப்போது முடிவு சரியாக இருந்தது. ஆனால் அதை அனுபவிக்க மனம்தான் சரியில்லை.
விடுதிக்கு வந்து கொஞ்ச நேரம் தலையணையில் முகம் புதைத்து அழுதாகிவிட்டது. அப்புறம் “இது என்ன பைத்தியக்காரத்தனம்? யாருக்கு விடுதலை கிடைத்தால் என்ன? யார் யார் அந்த விடுதலையை எப்படிக் கொண்டாடினால் நமக்கென்ன? படிக்க வந்த வேலையைப் பார்ப்போம்” என்ற எண்ணம் வந்தது.
முகம் கழுவிக் கொண்டு மேசைக்கு முன் உட்கார்ந்து சில புத்தகங்களிலிருந்து குறிப்பெடுக்க முயன்று கொண்டிருந்தாள். ஆனால் புத்தகங்களில் மனம் பதியவில்லை. புத்தகப் பக்கங்களின் விஷயத்தை மறந்து கண்கள் வெறித்துப் போய் மனம் பின்னோக்கி அன்று காலை நடந்தவற்றை நினைத்த பொழுது அவள் கண்கள் அவளை மீறி அழுதன.
அன்று காலையில் சாப்பிடவில்லை. மத்தியானமும் சாப்பிடப் போக மனம் வரவில்லை. எதுவும் ருசிக்கவில்லை. பசி இருந்தாலும் மரத்துப் போன உடலில் அது அதிகமாகத் தெரியவில்லை. மனம் ஜெசிக்காவையும் கணேசனையும் மாறி மாறி நினைத்தது. சின்னஞ்சிறு பள்ளிக்கூடப் பெண்ணாகத் தன் வயதுத் தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த என் வாழ்க்கைக்குள் எப்படி இவர்கள் நுழைந்து புயல்களை எழுப்பினார்கள் என்பது அவளுக்கு வியப்பாக இருந்தது.
ஜெசிக்காவின் பனிப்போரையும் சிடுசிடுப்பையும் தாங்க முடியாமல் நேற்றுத்தான் இன்னொரு சீனத் தோழியுடன் பேசி உடன்பாடு செய்து கொண்டு விடுதித் தலைவருக்கு அறிவித்து விட்டு அறையை மாற்றிக் கொண்டிருந்தாள். புதிய அறைத் தோழியும் சீனப் பெண்தான். ஆனால் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருந்தாள்.
புதிய அறை பழைய அறையைப் போல வசதியாக இல்லை. இரவிலும் பகலிலும் ஒரே புழுக்கமாக இருந்தது. அறையிலிருந்த சீலிங் விசிறி சுழல்கையில் கரகரவென ஒரு பழைய டிராக்டரைப் போல சத்தம் போட்டது. சாலைக்குப் பக்கமாகவும் மோட்டார் சைக்கிள் நிறுத்துமிடத்தை ஒட்டியும் இருந்ததால் மோட்டார் சைக்கிள்கள் உதைத்துக் கிளப்பப்பட்டு சீறிப் பாயும் சத்தம் சகிக்கவில்லை. இந்த அறையிலிருந்த ஒரே நிம்மதி ஜெசிக்காவின் நச்சுப் பார்வை எந்நேரமும் தன் மேல் மேயவில்லை என்பதுதான்.
கணேசனின் விசாரணையில் ஏற்பட்ட எதிர்பாராத நல்ல திருப்பங்கள் அவள் உள்ளத்தை மகிழ்ச்சியின் முகடுக்குக் கொண்டு வந்திருந்தன. ஆனால் அதற்குப் பின் நடந்தவை அந்த முகடிலிருந்து அவளை ஏமாற்றப் பாதாளத்துக்குத் தள்ளிவிட்டிருந்தன.
தன் மேல் ஜெசிக்காவுக்கு ஏற்பட்டிருந்த இந்தக் காரணமற்ற வெறுப்பை அகிலாவால் புரிந்து கொள்ள முடியவில்லை. விசாரணைக்கு முன்னாலிருந்தே அகிலாவை விடாமல் குடைந்து கொண்டிருந்தாள். விசாரணை நெருங்க நெருங்கத் தன்னை ஒரு எதிரியாகவே பாவிக்கத் தொடங்கி விட்டாள்.
இரண்டு நாட்களுக்கு முன் வெளிப்படையாகவே சண்டையைத் தொடங்கினாள். “கணேசனின் இந்த நிலைக்கு யார் காரணம் சொல்? நீதானே? நீதானே? அப்படியிருக்க அவரைக் காப்பாற்ற நீ என்ன செய்கிறாய்? ஒரு அணுவாவது செய்கிறாயா? என்னைப் பார்! அவருக்கு ஆதரவு திரட்ட மாணவர் சங்கத்துக்கு தீர்மானம் போட்டிருக்கிறேன். கையெழுத்து வாங்கிச் சேகரித்து வருகிறேன். பெரித்தா கேம்பஸில் செய்தி எழுதியிருக்கிறேன். நீ என்ன செய்திருக்கிறாய், சொல்! நீ அவருடைய எதிர்காலத்தைக் குட்டிச் சுவராக்கியிருக்கிறாய்! அவ்வளவுதான்!”
கணேசனைக் காப்பாற்ற வேண்டும் என்று அகிலாவின் தசைகளும் ரத்தமும் துடித்துக் கொண்டிருப்பதை அவளால் ஜெசிக்காவுக்கு எடுத்துச் சொல்ல முடியவில்லை. கணேசன் தண்டிக்கப் பட்டால் அந்தத் தண்டனையைத் தானே தனக்கு விதித்துக் கொள்வது என்ற அவளின் முடிவையும் அவள் ஜெசிக்காவுக்குச் சொல்லவில்லை. அதைச் சொன்னால் ஜெசிக்கா அலட்சியப் பபடுத்துவாள். “ஆமாம்! நீ ஒருத்தி தொலைந்து போவதால் அதில் கணேசனுக்கு என்ன நன்மை?” என்று கேட்பாள்.
“ஜெசிக்கா! நீ இந்தப் பல்கலைக் கழகத்தில் மூன்று வருடங்கள் இருந்து எல்லாரையும் தெரிந்து வைத்திருக்கிறாய். நான் இப்போதுதான் வந்திருக்கும் முதலாண்டு மாணவி! உன்னால் செய்ய முடிந்ததெல்லாம் என்னால் எப்படிச் செய்ய முடியும்? அவருக்காக வருத்தப் படுவது ஒன்றுதான் என்னால் செய்ய முடியும்!” என்று அமைதியாக பதில் சொன்னாள்.
“ஆமாம்! உன் வருத்தத்தால் என்ன ஆகப் போகிறது? கணேசனின் எதிர்காலம் தொலைந்தது! தொலைந்தது! எல்லாம் உன்னால்!” என்றாள்.
ஒரு ஆற்றாமை உணர்வும் தான் காரணமில்லாமல் ஜெசிக்காவினால் சித்திரவதை செய்யப்படும் உணர்வும் கூடி அகிலாவின் மனதில் கோபத்தை எழுப்பின. ஒரு நாயால் மூர்க்கமாக விரட்டப் படும் பூனைக்குட்டி ஒரு மூலையில் அகப்பட்டுக் கொள்ளும் போது எதிர்த்துச் சீறுவது போல அகிலா சீறினாள். “என்னை என்ன செய்யச் சொல்கிறாய் ஜெசிக்கா? யார் என்னைக் காப்பாற்றும்படி இந்த கணேசனைக் கேட்டார்கள்? எத்தனையோ மாணவர்கள் வேடிக்கை பார்த்து விட்டுப் போனது போல அவரும் போயிருக்கலாமே! அப்படிப் போயிருந்தால் இப்படி ஒரு நிலை வந்திருக்காதல்லவா? நானா கூப்பிட்டேன்? அவராக வந்து இதில் மாட்டிக் கொண்டதற்கு நான் என்ன செய்யட்டும்?”
ஜெசிக்காவின் கண்களில் நெருப்புத் தணல்கள் எரிந்தன. “நன்றி கெட்ட மிருகமே! போ! என் அறையை விட்டுப் போ! என் கண் முன்னே நிற்காதே!” என்றாள்.
“இது உன் அறை இல்லை. எனக்குப் பல்கலைக் கழகம் முறைப்படி ஒதுக்கிய அறை. என்னைப் போகச் சொல்ல நீ யார்?” என்று திருப்பிக் கத்தினாள்.
ஜெசிக்கா கதவை ஓங்கி அறைந்து விட்டு எங்கோ போனாள். இந்த வெறி பிடித்த பெண்ணுடன் மேலும் காலம் கழிக்க முடியாது என்பது அகிலாவுக்குத் தெளிவாகிவிட்டது. அதன் பிறகுதான் ஜெசிக்காவுக்குத் தோழியான ஒரு சீனப் பெண்ணிடம் பேசி அறை மாற்றத்துக்கு ஏற்பாடு செய்து கொண்டாள்.
வியாழனன்று அறை மாற்றி வந்த போதும் இந்த அறையும் தனக்கு நீண்ட நாள் நீடிக்கப் போவதில்லை என்ற எண்ணமே மேலோங்கி நின்றது. நாளைக் காலை கணேசனுக்கு வழங்கப்படும் தீர்ப்பைப் பொறுத்து தானும் பல்கலைக் கழகத்தை விட்டு விலக வேண்டும் என்ற எண்ணம் உறுதிப்பட்டு விட்டது. ஆகவே இங்கிருந்தும் விரைவில் மூட்டை கட்டும் நிலை வரலாம்.
ஜெசிக்காவுடன் தான் போட்ட சண்டைக்குப் பின் தனக்கும் கணேசன் மேல் அனுதாப உணர்ச்சிகள் இருக்கின்றன என்பதை அவளுக்குக் காட்டுவதற்கு இது ஒரு அருமையான சந்தர்ப்பம் என நினைத்த போது அந்த முடிவு மேலும் இறுகியது.
கணேசன் மேல் அனுதாபமா? அனுதாபத்திற்காகவா இதைச் செய்கிறேன் என்று தன்னையே கேட்டுப் பார்த்தாள். மாணவர் கேன்டீனில் அன்று கணேசனும் ராகவனும் தனித்து உட்கார்ந்திருப்பதைக் கண்ட போது அவர்களுடன் போய்ப் பேச வேண்டும் என்று உந்தியதும் அனுதாபம்தானா?
மாலதியுடன் கேன்டீனில் பசியாறிக் கொண்டிருந்த போது கணேசனும் ராகவனும் வந்து உட்காருவதை அவள் கவனித்தாள். ஆனால் அவர்கள் இருவரும் அகிலாவைக் கவனித்ததாகத் தெரியவில்லை. அவர்கள் முகங்கள் செழிப்பில்லாமல் இருந்ததையும் அவர்கள் உரையாடலில் சிரிப்பில்லாமல் இருந்ததையும் அவள் கவனித்தாள்.
மாலதிக்கு விரிவுரை இருந்ததால் அவசரமாகப் பசியாறிவிட்டு அவள் புறப்பட்டுப் போய்விட்டாள். தனிமையில் உட்கார்ந்து தன் காப்பியை அருந்திக் கொண்டிருந்த அகிலா கொஞ்ச நேரம் அவர்களைக் கவனித்தவாறு இருந்தாள். கணேசனை அந்த சோகமான தருணத்தில் பார்த்த போது ஒரு பாசமும் நன்றி உணர்ச்சியும் சுரந்தன. “போ, போய்ப் பேசு” என்று அவளுடைய இளமை மனது சொல்லிற்று. “சீ! அந்நிய ஆண்களிடம் என்ன பேச்சு?” என்று அவளுடைய அம்மாவின் உருவத்தில் மரபு வழியான ஒரு மனது எச்சரிக்கையை விடுத்தது.
இவர் அந்நியரல்ல! எனக்குத் தெரிந்தவர். எனக்காக இந்த நிலைமைக்கு வந்தவர். அவரை நேரில் பார்த்து ஆறுதல் கூறுவதில் தவறில்லை. அது கடமையும் கூட. அவருக்காக நான் எடுத்துள்ள முடிவை நான் அவருக்கு அறிவிக்க வேண்டும். அது நன்றிக் கடன்!
எண்ணம் உறுதிப்பட்டதும் காப்பிக் கோப்பையை வைத்து விட்டு எழுந்து நடந்தாள்.
அவர்கள் இருவர் முன்னாலும் அமர்ந்து இத்தனை தைரியமாக, இத்தனை கோர்வையாகத் தன் முடிவைச் சொல்ல முடிந்தது அவளுக்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது. பள்ளி நாட்களில் பெற்றோர்களும் பள்ளிக்கூடமும் அமைத்துக் கொடுத்த கூட்டுக்குள்ளிருந்து ஒரு புழுவாக வாழ்ந்துவிட்டு இந்தப் பல்கலைக் கழகத்திற்கு வந்தவுடன் தான் வெளிப்பட்டு ஒரு வண்ணத்துப் பூச்சியைப் போல சிறகடித்துப் பறக்க முடிகிறது என்று நினைத்துக் கொண்டாள். நெருக்கடியான நிலைமைகள் புதிய பயங்களைக் கொடுப்பதைப் போலவே புதிய தைரியங்களைக் கொடுக்கின்றன. புதிய பழகு முறைகளையும் கொடுக்கின்றன. தான் முற்றி வருவதாக அகிலா நினைத்துக் கொண்டாள்.
ஆனால் கணேசனின் அந்த அன்புப் பிடி…! அதை அவள் எதிர் பார்க்கவில்லை. அவர்களிடம் ஒரு நாலு வாக்கியங்களில் தன் முடிவைச் சொல்லிவிட்டு திரும்பிப் பார்க்காமல் நடந்து போய்விட வேண்டும் என்று எண்ணி வந்திருந்தவள் அவனுடைய பிடியில் சிக்கிக் கொண்டாள்.
அவன் அவள் கைகளைப் பிடிப்பது இது முதன் முறையல்ல. அன்றைக்கு ரேகிங் கும்பலிடமிருந்த காப்பாற்றிய போதும் கை பிடித்துத்தான் இழுத்து வந்தான். ஆனால் இன்றைய பிடியில் மின்சாரம் பாய்ந்தது. அன்பும் பாசமும் நன்றி உணர்ச்சியும் பாய்ந்தன. அதுதான் தான் இருப்பது மாணவர்கள் நிறைந்த கேன்டீன் என்பதையும் மறந்து அவள் கண்களில் கண்ணீரைப் பெருக வைத்தது.
அங்கிருந்து புறப்பட்டு தன்னறைக்குத் திரும்பிய போது அவளுடைய மனம் பிசைந்து போட்டது போல மசிந்து கிடந்தது. திரும்பத் திரும்ப கணேசனின் அன்பான பிடியை நினைத்தது. வேண்டாம் என்று தடுத்தும் கேட்கவில்லை. தன் கட்டுப்பாட்டையும் மீறி அந்தப் பிடிக்கு ஆயிரம் அர்த்தங்களை மனம் கற்பித்துக் கொண்டே இருந்தது. அன்பு, பாசம் என்ற உணர்வுகளையும் மீறி இது காதல் என்றும் மனம் கற்பித்துக் கொண்டது.
அகிலாவின் அறிவு இந்த மன உணர்வுகளை வலிந்து மறுத்தது. ஒரு கண நேரம் தான் சொல்லிய முடிவில் வியந்து போய் கணேசன் தன் கைகளைப் பற்றிக் கொண்டதற்கு இத்தனை தீவிரமான அர்த்தங்களைக் கற்பித்துக் கொள்ளாதே என அது எச்சரித்தது. அது ஒரு தானியங்கியான நடவடிக்கை. அது தசைகளின் இயக்கம். அதன் பின் உள்ள உணர்வு வியப்பாக இருக்கலாம்; நன்றியாக இருக்கலாம். அது காதலாக இருக்க வேண்டியதென்பது அவசியம் இல்லை. இதைப் பெரிது படுத்தாதே, இதை விரிவு படுத்தாதே என்ற எச்சரிக்கைகள் அவள் தலைக்குள் கிசுகிசுத்தன.
அதனால் அடுத்த சில நாட்களில் கணேசனைச் சந்திப்பதை அவள் தவிர்த்து வந்தாள். ஓரிரு சந்தர்ப்பங்களில் அவனை நூல் நிலையத்திலும் கேண்டீனிலும் தூரத்தில் பார்த்த போது அங்கிருந்து அவன் கண்ணில் படாமல் அகன்றாள். சந்திக்கும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொண்டு தன் மனதில் அரும்புகின்ற உணர்வுகளுக்கு ஊக்கமூட்டுவதைத் தவிர்த்தாள்.
அவனை அடுத்து சந்திக்கும் சந்தர்ப்பம் கண்டிப்பாக விசாரணை நடைபெறும் நாளான வரும் வெள்ளிக் கிழமைதான். வெள்ளிக் கிழமை வெள்ளென மாணவர் விவகாரப் பிரிவுக் கட்டிடத்திற்குப் போக வேண்டும். ஆனால் ஜெசிக்கா கண்டிப்பாக அங்கிருப்பாள். அவள் நச்சுப் பார்வையைச் சந்திக்க வேண்டியிருக்கும். பரவாயில்லை. அந்தப் பிசாசின் அறையிலிருந்து விடுதலை பெற்றாகிவிட்டது. இனி அவளைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. அவள் பார்வைக்கு அஞ்சத் தேவையில்லை.
கணேசனைப் பார்த்து விசாரணையில் என்ன நடந்தாலும் அஞ்ச வேண்டாம் என்று உறுதி கூற வேண்டும். தன் முடிவை மறு உறுதிப் படுத்தி அவனுக்கு ஊக்கமூட்ட வேண்டும். விழவேண்டி நேர்ந்தால் இருவருமே தோழமையுடன் வீழ்வோம் என ஆதரவூட்ட வேண்டும். அவன் கைகளை ஒரு நண்பனின் கைகளாகக் குலுக்கி விசாரணையில் வெற்றி பெற வாழ்த்துக் கூற வேண்டும். விசாரணை முடியும் வரையில் அங்கேயே காத்திருக்க வேண்டும். விசாரணை முடிவை அவன் வாயாலேயே கேட்டுத் தெரிந்து கொண்டபின் தன்னுடைய அடுத்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து கொண்டாள்.
ஆனால் வியாழனன்று அறையை மாற்றிக் கொண்டிருந்த இக்கட்டான வேளையில் அவளுடைய விடுதியின் அலுவலர் ஒருவர் அவளைத் தேடி வந்து அவசரக் கடிதம் ஒன்றைக் கொடுத்து அதை சமர்ப்பித்துவிட்டதற்கான கையெழுத்தையும் வாங்கிக் கொண்டு சென்றார். அந்தக் கடிதம் மாணவர் விவகாரப் பிரிவிலிருந்து வந்திருந்தது. மறுநாள் காலையில் 8 மணிக்கு நடைபெறவிருக்கும் சிறப்பு விசாரணைக் கூட்டத்தில் அகிலா கலந்து கொள்ள வேண்டுமென்று உதவிப் பதிவதிகாரி முத்துராமன் கையெழுத்திட்டு அனுப்பிய கடிதம்.
அவளுக்குப் புரியவில்லை. ஒன்பது மணிக்கு நடைபெறவிருந்த விசாரணையை எட்டு மணிக்கெல்லாம் நடத்துகிறார்களா? அப்படியிருந்தாலும் தான் அதில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஒன்றும் சொல்லவில்லையே! இப்போது ஏன் தன்னை அவசரமாகக் கடைசி நேரத்தில் அழைத்திருக்கிறார்கள்?
எப்படியிருந்தாலும் எந்த விதத்திலாவது கணேசனுக்கு உதவ முடிந்தால் அந்த வாய்ப்பை நன்றாகப் பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என்று உறுதி செய்து கொண்டாள். ஒரு வேளை கணேசனுக்குத் தரப்படும் தண்டனையைத் தானும் தனக்கு விதித்துக் கொள்ளும் முடிவை விசாரணைக் குழுவில் முறையாக அறிவிக்க இது ஒரு சந்தர்ப்பமாக அமையும் என்று நினைத்துக் கொண்டாள். கணேசனைத் தேடிப் போய் இது பற்றிப் பேசலாமா என்று ஒரு கணம் நினைத்தாள். வேண்டாம் என்று தடையும் விதித்துக் கொண்டாள். கணேசனோடு இனி சந்திப்புக்கள் வேண்டாம். நாளை நடப்பது போல நடக்கட்டும் என உறுதி செய்து கொண்டாள்.
மறுநாள் எட்டு மணிக்கெல்லாம் அவள் மாணவர் விகாரப் பிரிவின் முன் நின்ற போது அவள் எதிர் பார்த்தது போல கணேசனை அங்கே காணோம். எதிர்வாதிகளான ராஜன், வின்சன்ட் ஆகியோர்களைக் கூடக் காணோம். ஆனால் பரசுராமன் அங்கிருந்தான். அகிலாவைப் பார்த்ததும் புன்னகை புரிய முயன்றான். அவள் வெறுப்புடன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
கூட்டம் எட்டு மணிக்குச் சரியாகத் தொடங்கியது. டத்தோ சலீம் அனைவருக்கும் நன்றி கூறி இந்தச் சிறப்பு அவசரக் கூட்டம் கூட்டப்பட்டிருந்ததன் நோக்கங்களை விளக்கினார். விசாரணைக் குழுவின் கவனத்துக்கு வந்துள்ள புதிய தகவல்களைத் தான் உறுதிப் படுத்திக் கொள்ளும் நோக்கத்தில் அவர்களை வரவழைத்திருப்பதை விவரித்து அந்தப் புதிய தகவல்கள் என்ன என்று சொல்லிய போது அவள் இதயத்தில் பால் பொழிந்தது. தன்னுடைய முறை வந்த போது மீண்டும் ஒருமுறை அன்று நடந்தவற்றை நினைவு படுத்தித் தெளிவாகக் கூறினாள். பரசுராமனின் முறை வந்த போது அவள் சொன்ன அனைத்தையும் அவனும் உறுதிப் படுத்தினான்.
அவளுடைய பயங்கள் ஒவ்வொன்றாக அகன்றன. நீதியை நிலை நாட்டுவதற்காக நடவடிக்கைகளை முயன்று எடுத்துள்ள பேராசிரியர் முருகேசுவை அவள் நன்றியுடன் நோக்கினாள். கடைசி நேரத்தில் உண்மையைச் சொல்லி அனைவரையும் காப்பாற்றியுள்ள – இதுவரை தான் வெறுத்து வந்துள்ள – பரசுராமன் மீது கூட அன்பு சுரந்தது. சாட்சி சொல்ல வந்துள்ள சீன மாணவர், உடன் சாட்சிக்கு வந்துள்ள விடுதித் தலைவர்கள் அனைவர் மீதும் நன்றியுணர்ச்சி பெருகியது. இந்த நல்லவர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு மோசமான அநீதி இழைக்கப் படுவதைத் தடுத்துள்ளார்கள். இது நல்ல இடம். இது நல்ல பல்கலைக் கழகம். இதில் வந்து படிக்க நான் கொடுத்து வைத்தவள் என நினைத்துக் கொண்டாள்.
இவையனைத்தும் கணேசனுக்குத் தெரியுமா? விசாரணையின் போக்கைப் பார்த்தால் அவனுக்கு இதுபற்றி இன்னும் சொல்லப்படவில்லை என்றுதான் தெரிந்தது. இனி ஒன்பது மணிக்கு அவன் அழைக்கப்பட்டு இந்த உண்மைகள் அவனுக்குச் சொல்லப்பட்டு அவனுடைய நேர்மை நிலைநாட்டப் படும் போது அவன் முகத்தைப் பார்க்க வேண்டும் என்று ஆவலுடன் காத்திருந்தாள்.
அது நிகழ்ந்தது. உண்மைகள் வெளிப்படும் வேளையில் கணேசனுடைய கண்கள் பலமுறை அகிலாவின் கண்களைச் சந்தித்தன. “நம் துன்பங்கள் களையப்பட்டு விட்டன அகிலா! நம் தளைகள் அறுபட்டுவிட்டன!” என அவன் கண்களால் அனுப்பிய செய்திக்கு அவள் நன்றிச் செய்திகள் அனுப்பிக் கொண்டிருந்தாள்.
“கணேசன் எல்லாக் குற்றங்களிலிருந்தும் விடுதலை செய்யப்படுகிறார். ராஜன், வின்சன்ட், பரசுராமன் ஆகியோரின் குற்றம் நிருபிக்கப்பட்டு விட்டது. அவர்களுக்கு என்ன தண்டனை என்பதை நான் கல்வி அமைச்சிடம் கலந்து பேச வேண்டும். அதன் பின் விசாரணைக் குழு நாளைக்குக் கூடி தண்டனையை நிர்ணயிக்கும். இந்தக் கூட்டம் இதனுடன் முடிகிறது. நீங்கள் அனைவரும் போகலாம்” என டத்தோ சலீம் கூறியவுடன் அனைவரும் எழுந்தனர். ராஜனும் வின்சன்டும் மற்றவர்களிடம் பேச விருப்பமில்லாமல் அவசரமாக வெளியே போனார்கள். மற்றவர்கள் மெதுவாக வெளியேறிக் கொண்டிருந்த நேரத்தில் டத்தோ சலீம் கணேசனுடன் கைகுலுக்கினார். “உனக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன். உண்மை வெளிப்பட்டதில் மிக மகிழ்கிறேன்!” என்றார்.
அவருக்கு நன்றி சொல்லிவிட்டு கணேசன் பேராசிரியர் முருகேசுவிடம் விரைந்து வந்தான். அவர் கைகளைப் பிடித்துக் கொண்டான். “என்னைக் காப்பாற்றி விட்டீர்கள். எப்படி நன்றி சொல்வது என்று புரியவில்லை!” என்றான்.
அவர் அவன் தோள்களைப் பற்றினார். “உண்மை தோற்காது என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு. கொஞ்சம் காலம் தாழ்த்தினாலும் அதுதான் வெல்லும்! வாழ்த்துக்கள்” என்றார். அவன் கண்களில் கண்ணீர் சுரந்தது. “போ கணேசன்! விரிவுரைகளை ஒரு நாளைக்கு மறந்து விட்டுப் போய் உன் வெற்றியைக் கொண்டாடு!” என்றார்.
அகிலா காத்திருந்தாள். பேராசிரியரின் பிடியிலிருந்து விடுபட்டு நேராக அவளை நோக்கி வந்தான். அவள் இரண்டு கைகளையும் மீண்டும் பிடித்துக் கொண்டான். “அகிலா! வாங்க நம்ம ரெண்டு பேரும் தனியா போய் இந்த வெற்றியைக் கொண்டாடுவோம்!”
அவளும் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தாள். அவள் முகம் சிரித்துச் சிவந்திருந்தது. அவனுடன் போகத் தயாராகத் தலையாட்டினாள்.
இதற்குள் செய்தி வெளியில் பரவிவிட்டிருந்தது. விசாரணை அறைக் கதவைத் திறந்து கொண்டு ஜெசிக்காவின் தலைமையில் கணேசனின் ஆதரவாளர்கள் ஆரவாரத்துடன் நுழைந்தார்கள். ஜெசிக்கா புயல்போல் ஓடிவந்து கணேசனை அப்படியே அணைத்துக் கொண்டாள். “கணேசன்! ஹிபிப் ஹ¤ரே!” என்று யாரோ கத்தினார்கள். தொடர்ந்து அனைவரும் முழங்கினார்கள். இரண்டு பேர் கணேசனைத் தூக்கினார்கள். “ஹிபிப் ஹ¤ரே” முழங்கியவாறு அவனை வெளியே தூக்கிச் சென்றார்கள். அந்த ஆரவாரத்தில் அகிலா பின் தள்ளப் பட்டாள்.
மோட்டார் சைக்கிள்கள் உதைத்துக் கிளப்பப் பட்டன. ஏறக்குறைய பத்து மோட்டார் சைக்கிள்களில் முடிந்தவர்கள் எல்லாம் ஏறிக் கொண்டார்கள். “ஹிபிப் ஹ¤ரே” சத்தத்தில் இன்னும் பலரும் கலந்து கொண்டார்கள். ஓரத்தில் முகம் தொங்கி நின்று கொண்டிருந்த ராஜாவையும் அவனுடைய கேங்கையும் கண்டபோது சத்தம் இன்னும் உச்ச கட்டத்தை அடைந்தது.
பாதுகாவலர்கள் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் தலைவர் ரித்வானும் நின்று புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தார். அவர்கள் கொண்டாட்டத்திற்கான காரணத்தை அவர் அங்கீகரிப்பவர் போலத் தோன்றினார்.
பரசுராமனும் ஒரு பக்கத்தில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். ராஜாவின் கூட்டம் அவனைக் கைகழுவி விட்டது. கணேசனின் வெற்றி ஊர்வலத்துக்கு அவனை யாரும் கூப்பிடவில்லை.
மோட்டார் சைக்கிள் ஊர்வலம் ஆரம்பமாகியிருந்தது. ஹாரன்கள் அலறின. ஜெசிக்காவின் மோட்டார் சைக்கிள்தான் முதன்மை வகித்துச் சென்றது. அவள் பின்னிருக்கையில் உட்கார்ந்து கணேசன் அனைவருக்கும் கையசைத்துக் கொண்டிருந்தான். “ஹிபிப் ஹ¤ரே!” என்ற எழுச்சி மந்திரத்துடன் பல்கலைக் கழக வளாகத்தைச் சுற்றிவர ஊர்வலம் விரைந்தது.
அகிலா கொஞ்ச நேரம் நின்று வேடிக்கை பார்த்தாள். ஊர்வலம் கண்களை விட்டு மறைந்ததும் மாணவர் விவகாரப் பிரிவு கட்டிட முன் வாசலில் நின்றவாறு மரங்களினூடே தெரியும் கடலை வெறித்துப் பார்த்தாள். கண்களில் கண்ணீர் அரும்பியது.
துடைத்துக் கொண்டு தன் விடுதியில் தன் புதிய அறையை நோக்கி நடந்தாள். அறையை அடைந்ததும் அந்தப் புழுங்கும் மத்தியான வேளையில் படுக்கையில் தலையணையில் முகம் புதைத்து தன் விருப்பம் போல் அழுதாள்.
***
——————————————————————————–
15
அழுகையோடு கிடந்து சோர்ந்து போய் மத்தியானப் புழுக்கத்தில் கொஞ்சம் தூங்கிவிட்டு எழுந்த போது மணி ஆறரையாகிவிட்டிருந்தது. உடம்பெல்லாம் வேர்த்துக் கிடந்தது. மத்தியானம் கம்ப்யூட்டர் லேபைத் தவறவிட்ட குற்ற உணர்ச்சி மனதில் வந்து நின்றது. ஏன் தவறவிட்டேன்? யாருக்காக இந்த மத்தியான வேளையில் தனியே கிடந்து அழுதேன்? இதற்காகத்தானா பல்கலைக் கழகம் வந்தது? இப்படித்தானா பெற்றோர்களின் குடும்பத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது? மனச்சான்று பிய்த்துத் தின்று கொண்டிருந்தது.
இரவு எட்டரை மணிக்கு நடனப் பயிற்சி இருக்கிறது. பேராசிரியர் கௌஸ் நடனம் இன்னும் சரியாக அமையவில்லை என அவர்களை விரட்டிக் கொண்டே இருக்கிறார். “இது என்ன பாசார் மாலாமில் ஆடுகின்ற நடனம் என நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? பல்கலைக் கழக வேந்தரான பெர்லிஸ் மன்னர் அங்கிருப்பார். பினாங்கு முதலமைச்சர் அங்கிருப்பார். இந்தப் பல்கலைக் கழகத்தின் அத்தனை பேராசிரியர்களும் அங்கிருப்பார்கள். இவர்கள் முன் உடம்பை வளைக்காமல் ஆடினால் என் பெயரல்லவா கெட்டுப் போகும்? கமான், கமான், இடுப்பை வளைக்கக் கற்றுக் கொள்ளுங்கள். நான் ஒருவன் இந்த வயதில் ஆடும் போது சிறுபிள்ளைகள் உங்களுக்கென்ன?” சத்தம் போடுவார்.
எட்டரை மணி பயிற்சியைத் தவறவிடக்கூடாது என உறுதி செய்து கொண்டாள். ஆனால் அதற்குள் கொஞ்சமாவது ஏதாவது சாப்பிட வேண்டும். காலையிலும் மத்தியானத்திலும் சாப்பிடாமல் வயிறு வெறுமனே கிடந்தது. சீக்கிரம் எழுந்து குளித்தால் மாலதியைக் கூட்டிக் கொண்டு குளுகோர் நகரில் சாலையோரக் கடைகளுக்குப் போகலாம்.
வளாகத்தின் தெற்கு வாசலைத் தாண்டி மின்டன் ஹைட்ஸ் வீடமைப்புப் பகுதிகளினூடே கொஞ்ச தூரம் நடக்க வேண்டியிருந்தாலும், இந்திய உணவு வேண்டும் மாணவர்களுக்கு அந்த குளுகோர் ஒட்டுக் கடைகள்தான் தஞ்சம். அங்கு தோசை, இட்டிலி, இடியப்பம், பிட்டு என்று ஏதாவது கிடைக்கும். மீ கோரேங், ரொட்டிச் சானாயும் கிடைக்கும். அறிவியல் பல்கலைக் கழக மாணவர்களை நம்பியே அந்தப் பகுதி செழிப்பாக வளர்ந்திருந்தது.
குளித்து உடைமாற்றி மாலதியின் அறைக்குப் போய் அவளையும் கூட்டிக் கொண்டு போகவேண்டும் என்று முடிவு செய்து எழுந்தாள். அங்கு எங்காவது கணேசனைப் பார்க்க முடியுமா என்று ஒரு நப்பாசை திடீர் என மனசுக்கு வந்தது. சீ என்று அதை அழித்தாள். அது ஜெசிக்கா எனும் கிளி கொத்திக் கொண்டு போன பழம். எச்சில் பழம். அது எனக்குத் தேவையில்லை. அதை நினைக்கவே வேண்டாம் என்று எண்ணிக் கொண்டாள்.
அவள் குளித்து ஜீன்சும் டீ சட்டையும் மாற்றிக் கொண்டு கண்ணாடியின் முன் நின்று ஸ்டிக்கர் பொட்டு வைத்துக் கொண்டிருந்த நேரத்தில் மாலதியே அவள் அறைக்கு வந்து விட்டாள். “என்ன ஆள எங்கியுமே பாக்க முடியில அகிலா? அறையை வேற சொல்லாம கொள்ளாம மாத்திட்டியே! என்ன விஷயம்?”
“வாங்க மாலதி! உங்களப் பாக்கதான் வர இருந்தேன். ஜெசிக்காவோட ஒத்து வரல. அதுதான் அறைய மாத்திக்கிட்டேன்!” என்றாள்.
“அப்படியா? அது இருக்கட்டும்! இன்னக்கிக் காலையில உங்க ஆளுக்குப் பெரிய வெற்றியாமே! கேம்பஸ் முழுக்க மோட்டார் சைக்கிள் வெற்றி ஊர்வலம் நடந்ததாமே! கேம்பஸ் முழுக்க இன்னைக்கு அதுதான் பேச்சு! அதப்பத்திக் கேக்கலாம்னு பாத்தா உன்ன எங்கியுமே பார்க்க முடியிலியே!” என்றாள் மாலதி.
“வெற்றி ஊர்வலத்துக்கும் எனக்கும் ஒண்ணும் சம்பந்தம் இல்ல. வெற்றி யாருக்குக் கிடைச்சதோ அவங்க கொண்டாடுவாங்க! எனக்கென்ன?” என்றாள்.
“என்ன ரொம்ப சலிப்பா பேசிற மாதிரி இருக்குது? உங்க ஆளு வெற்றியில உனக்குப் பங்கு இல்லாம போயிடுமா?”
“அது என்ன உங்க ஆளு? அவர் ஒண்ணும் என் ஆளு இல்ல”
மாலதி சிரித்தாள். “ஏன் அகிலா! எங்கிட்டயே மறைக்கப் பாக்கிறியா? அன்னைக்கு கேண்டீன்ல நான் புறப்பட்டுப் போன பிறகு ரெண்டு பேரும் கை கோத்துக் குலாவினிங்கன்னு கேள்விப் பட்டேனே!”
அகிலா அதிர்ச்சி அடைந்தாள். “சீ! குலாவினிங்க அப்படியிப்படின்னு பேசாதிங்க! ஒரு ஆறுதலுக்குக் கையப் பிடிச்சா குலவுறாங்கன்னு அர்த்தமா?”
“அது என்னமோ எனக்குத் தெரியாது! கேம்பஸ் முழுக்க அந்த விஷயம் தெரிஞ்சிருக்கு. நீதான் கணேசனுக்குப் புது கேர்ள் ·பிரண்டுன்னு முத்திரை குத்தியாச்சி. என்னாடா, நம்மளோட இவ்வளவு ·பிரண்டா இருந்தும் நம்மகிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லலியே இந்த அகிலான்னு நாங்கூட மனசுக்குள்ள நெனச்சிக்கிட்டேன்!”
அந்தச் செய்தி அதிர்ச்சியாகவும் இருந்தது. மகிழ்ச்சியாகவும் இருந்தது. கணேசனோடு தான் இணைத்துப் பேசப் படுவதில் அவள் உள் மனதிற்கு ஒரு கிளுகிளுப்பு இருக்கத்தான் செய்தது. ஜெசிக்கா தன் மீது இப்படி சீறி விழுவதற்கும் இந்தப் பேச்சுதான் காரணமாக இருக்க வேண்டும் என்று எண்ணினாள்.
ஆனால் உண்மையில் நான் கணேசனோடா இருக்கிறேன்? “வா அகிலா, இந்த வெற்றியைக் கொண்டாடலாம்” என்று சொன்ன சொற்களின் சூடு ஆறுவதற்குள் அதை மறந்து இன்னொருத்தியுடன் போய்விட்டான் அல்லவா? மகிழ்ச்சியில் தன்னை மலை முகட்டுக்கு அழைத்துச் சென்று ஏமாற்றப் படுகுழியில் தள்ளி விட்டானல்லவா? எப்படி வந்து எல்லார் முன்னிலையிலும் கட்டிப் பிடித்துக் கொண்டாள்! எவ்வளவு உல்லாசமாக ஒன்றாகப் புறப்பட்டுச் சென்றார்கள்! அந்த ஜெசிக்காவுக்கு நான் போட்டியா?
ஆனால் கணேசன் அன்பாகத்தானே பேசினான்! அந்த அன்பில் உண்மை கொஞ்சமாவது இருக்காதா? அந்தப் பார்வையில், அந்தப் பிடியில் நட்பைத் தவிர வேறு பொருள் இருக்காதா? அதைப் பற்றி யாரிடமாவது பேச வேண்டும் என்ற ஆதங்கம் வந்தது. அப்படிப் பேசினால் மனதுக்குக் கொஞ்சம் ஆறுதல் கிடைக்கும் என்று தோன்றியது.
“உட்காருங்க மாலதி!” என்றாள். கணேசனிடம் தான் கேன்டீனில் பேசியதைச் சொன்னாள். கணேசனிடம் தன் முடிவைச் சொன்னதைச் சொன்னாள். கணேசன் கைபிடித்ததையும் தான் அழுததையும் சொன்னாள். விசாரணையில் ஏற்பட்ட திருப்பங்களையும் அதன் முடிவில் கணேசன் தன்னிடம் வந்து பேசியதையும், அவனை ஜெசிக்கா பறித்துச் சென்றதையும் சொன்னாள். அந்த இறுதிக் கட்டத்தில் அவள் கண்களில் கண்ணீர் அரும்பியது.
“சரி, சரி! எல்லாம் நல்லவிதத்தில முடிஞ்சது மகிழ்ச்சியாத்தான் இருக்கு. கணேசன் மேல வந்த வீண் பழி மறைஞ்சதே, அது பெரிய விஷயம்! ஆனா நீ மனசப் போட்டு வீணா அலட்டிக்காத அகிலா! கணேசனுக்கும் ஜெசிக்காவுக்கும் ரெண்டு வருஷமா பழக்கம் இருக்குன்னுதான் கேள்விப்பட்டேன். ஆனா அவங்க வெறும் நண்பர்களா அல்லது அதற்கு மேலயான்னு யாருக்கும் தெரியாது. எதுக்கும் ஜாக்கிரதையா இரு அகிலா! அவங்க பழைய நண்பர்கள். நீதான் புதுசா வந்தவ. ஆகவே குறுக்கிடாம கொஞ்சம் ஒதுங்கியே இரு!” என்றாள் மாலதி.
அகிலாவுக்கும் அப்படித்தான் பட்டது. தான் ஒதுங்கிவிட வேண்டும். இந்தச் சிறிய புயல் அடித்துக் கொண்டிருந்தபோது படபடப்பாக இருந்தது. இப்போது இது ஓய்ந்து விட்டது. இனி இதை உதறிவிட்டுப் பாடங்களில் கவனம் செலுத்த வேண்டும். இனி தனக்கு உதவிக் கரம் நீட்டிய அந்த நல்லவனின் எதிர் காலம் என்னாகும், என்னாகும் என எண்ணி எண்ணி வருந்த வேண்டியதில்லை. என்னால் வீணானான் என்ற பழிக்கு அஞ்ச வேண்டியதில்லை.
“சரி மாலதி. நீங்க சொல்றது சரிதான். நான் ஒதுங்கிட்றேன்! அவங்க காரியத்தில நான் ஏன் தலையிடணும்? சரி. அது கிடக்கட்டும்! காலையிலயும் மத்தியானமும் நான் சாப்பிடல! பசிக்குது. வாங்க குளுகோர் போய் ஏதாவது சாப்பிட்டு வருவோம். எனக்கு எட்டரை மணிக்கு நடனப் பயிற்சி வேற இருக்கு! அதுக்குள்ள திரும்பிடனும்” என்றாள்.
“வா, வா! நானும் அதுக்குத்தான் வந்தேன். சாப்பாடு வாங்கப் போகனும்னு ராணியும் ராஜேஸ்வரியும் வேற காத்திக்கிட்டு இருக்காங்க. அவங்களையும் அழச்சிக்கிட்டுப் போகலாம்!” மாலதி எழுந்தாள்.
இருவரும் அவசரமாக வெளியேறி ராணி, ராஜேஸ்வரி என்ற அவர்களின் இரு தோழிகளையும் கூட்டிக் கொண்டு இறங்கி வந்தார்கள். விடுதியின் வரவேற்பறையை விட்டு படிக்கட்டுகளில் கால் வைத்து நடந்த போது மோட்டார் சைக்கிள் நிறுத்துமிடத்திலிருந்து கணேசன் அவர்களை நோக்கி வந்தான்.
முதலில் மாலதிதான் பார்த்தாள். அகிலாவை தோளில் இடித்துக் காட்டினாள். அகிலா அவனை கொஞ்சம் வியப்போடும் வெட்கத்தோடும் பார்த்தாள். பார்க்காதது மாதிரிப் போய்விடலாமா என்று ஒரு கணம் நினைத்தாள். ஆனால் அவன் விரைவாக நெருங்கி அவர்கள் முன் வந்து நின்றான்.
எல்லாரும் என்ன பேசுவது என்று தெரியாமல் நிற்க மாலதிதான் மௌனத்தைக் கலைத்தாள். “கணேசன், உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள். ரேகிங் விசாரணையில உண்மை வெளியாகி உங்களை விடுதலை செய்திட்டதா கேள்விப் பட்டோம். ரொம்ப மகிழ்ச்சி!” என்றாள்.
“ஆமாம் கணேசன், கன்கிராட்சுலேஷன்!” என்று ராணியும் ராஜேஸ்வரியும் அவன் கை பிடித்துக் குலுக்கினார்கள். அகிலா பேசாமல் இருந்தாள்.
“ரொம்ப நன்றி உங்க எல்லாருக்கும். அதுக்கு அகிலா ரொம்ப உதவி பண்ணியிருக்காங்க. அவங்களுக்கு சரியான முறையில நன்றி சொல்ல முடியாம போச்சி! அதுக்குத்தான் அவங்களத் தேடி வந்தேன்!” என்றான்.
தன்னைத் தேடி வந்தான் என்பது மகிழ்ச்சியாக இருந்தது. காலையில் தன்னை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் ஓடினான் என்ற நினைத்த போது கோபம் வந்தது. ஜெசிக்காவைக் கட்டிப் பிடித்துக் கொண்டிருந்த காட்சி மனசுக்கு வந்தது. பேசாமல் இருந்தாள்.
இரங்கிய குரலில் பேசினான்: “அகிலா! உங்களோட எப்ப ஓய்வா பேச முடியும்?”
மூன்று தோழிகளை நிற்க வைத்துக் கொண்டு அவனோடு பேசுவது கூச்சமாக இருந்தது. அதிலும் அவன் சந்திப்பிற்கு நேரம் கேட்பது இன்னும் வெட்கமாக இருந்தது. பின்னால் இந்தத் தோழிகளின் வெறும் வாய்க்கு இது அவலாகப் போகும் என நினைத்தாள். ஆனால் நேராக முகம் பார்த்து அவன் கேட்கும் போது பதில் சொல்லாமல் இருக்க முடியவில்லை. பேசினாள்: “நன்றி சொல்லத்தானே கேக்கிறிங்க? அதுக்குத் தேவையில்லை. நான் ஒண்ணும் செய்யலியே. உண்மை தானா வெளிப்பட்டது. அதுக்கு எதுக்கு நன்றி? உண்மையில உங்களுக்குத்தான் நான் நன்றி சொல்லணும் என்ன ரேகிங்ல இருந்து காப்பாத்தினதுக்கு!” என்றாள்.
“எப்படியும் உங்களைச் சந்திச்சி….”
இடை வெட்டினாள். “மன்னிச்சிக்குங்க கணேசன். எனக்கு எட்டரை மணியிலிருந்து பத்து மணிவரையில மாணவர் இல்லத்தில நடனப் பயிற்சி இருக்கு. போய் சாப்பாடு வாங்கி சாப்பிட்டுட்டு சீக்கிரம் திரும்பணும். இப்பவே நேரமாயிடுச்சி. அதுக்குத்தான் அவசரமா போயிட்டிருக்கோம். பை, பை! வாங்க மாலதி போலாம்!” என மாலதியின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு விரைவாக நடந்தாள்.
வழியில் மாலதி திட்டினாள். “என்ன அகிலா! இப்படி எடுத்தெறிஞ்சி பேசிட்டியே!” என்றாள்.
“பின்ன எப்படி? அவர் வழியில குறுக்கிடாதேன்னு கொஞ்சம் முன்னால நீங்கதானே யோசன சொன்னிங்க?”
“அது சரி! அதுக்காக இப்படி வெடுக்கினு பேசிறதா? ஒரு ஆறுதலா பேசக்கூடாது?”
“அப்படி என்ன பேசிட்டேன்? உண்மையில நமக்கு அவசரம்தான? நின்னு கதை பேச நேரமில்லையே, அத சொன்னது குத்தமா?”
“குத்தமில்ல! ஆனா நாளைக்கு வாங்க ஓய்வா பேசலாம்னு ஏதாவது சொல்லியிருக்கலாமே!”
பல்கலைக் கழகத்தின் பழம்பொருள் காட்சியகம் மற்றும் ஓவியக் கூடம் வைக்கப் பட்டிருந்த கட்டிடத்தைத் தாண்டி துணைவேந்தர் இல்லத்தின் வழியாக பரந்த விளையாட்டுத் திடலை ஒட்டி அந்தத் தெற்கு வாசலுக்கான வழி நீண்டிருந்தது. அங்கிருந்து பார்த்தால் கடலும் பினாங்குப் பாலமும் தெரியும். அகிலா பேச்சை மாற்ற வேறு வெற்றுப் பேச்சுக்களோடு நால்வரும் விரைந்து நடந்தார்கள்.
“நாளைக்குப் பேசலாம்” என்று சொல்லியிருக்கலாம்தான் என்று அகிலா நினைத்தாள். ஆனால் தேவையில்லை. நாளை வரைக்கும் காத்திருக்க வேண்டாம். இன்று ராத்திரி பத்து மணிக்கு மாணவர் இல்லத்திற்கு வெளியே காத்திருந்தால் போதும். ஜெசிக்காவுடன் ராத்திரி ராத்திரியாக உட்கார்ந்து பேசத் தெரிகிறதல்லவா? மூளை இருந்தால் நான் சொன்னது புரிந்திருக்கும் என்று நினைத்துக் கொண்டாள் அகிலா.
*** *** ***
மலாய் ஜோகேட் இசை, இந்திய மேளமும் மேற்கத்திய டிரம்மும் தனி ஆவர்தனம், சீன வயலின் சோலோ எனக் கலவையாக ஒரு இசையை உருவாக்கி அதற்கு “இணைதல்” என்ற ஒரு தலைப்பையும் கொடுத்து உருவாக்கியிருந்தார் பேராசிரியர் கௌஸ். இசை மிகத் துரிதமாக இருந்தது. நடனத்திலும் ஏராளமான அசைவுகள். பத்து நிமிட நேரம்தான் நீடிக்கிறது என்றாலும் சரியாகச் செய்ய கடினமாக பயிற்சி செய்ய வேண்டியிருந்தது.
நாலாவது முறையாக ஆடிக் கொண்டிருந்தவர்களைப் பாதியில் நிறுத்தி “நோ, நோ, நோ” என்று கத்தினார் கௌஸ். “இப்படி வெட்டி வெட்டி அசைய வேண்டாம். இது என்ன கராத்தே என்று நினைத்துக் கொண்டீர்களா? இது நடனம். இது தற்காப்பு விளையாட்டல்ல. கலை. அசைவில் எவ்வளவு வேகம் இருந்தாலும் அது நளினமாக இயல்பாக இருக்க வேண்டும். ஒரு கிளை அசைவதைப் போல, ஒரு அலை வீசுவது போல, ஒரு கவிதையின் வரிகள் போல… ஓக்கே! இன்னொரு முறை! ரெடி… ரோல் மியூசிக்!”
ஒலிப்பதிவு செய்யப்பட்ட அந்த இசை கொஞ்சம் பின்னோக்கித் தள்ளப்பட்டு திடீரென்று ஆரம்பித்தது. சரியான இடத்தைப் பிடிக்க சில விநாடிகள் தயாரித்துக் கொண்டு அந்த ஆறு பேரும் தக்க இடத்தில் இசையோடு சேர்ந்து கொண்டு ஆடினார்கள்.
அகிலா இசையின் கட்டளைக்கு ஆடினாள். கேட்டுக் கேட்டு அந்த இசை மனப்பாடம் ஆகிவிட்டது. ஆகவே ஒவ்வொரு இசைக் குறிப்பையும் அவளால் முன்னறிந்து சரியான லயத்துடன் அதில் இணைய முடிந்தது. ஆனால் அதிகம் யோசிப்பதற்கு இடம் கொடுக்காத வேகமான இசை. கிட்டத்தட்ட உடல் உறுப்புக்கள் தானியங்கியாக ஆட வேண்டும். அந்த அளவுக்குப் பலமுறை பயிற்சி செய்ய வேண்டும்.
இசை தொடங்கப்பட்டு நடனம் நடந்து கொண்டிருக்கும் போது அகிலாவின் எல்லாச் சிந்தனைகளும் இயக்கங்களும் அதனோடு ஒன்றியிருந்தன. வேறு நினைப்புக்கு இடம் இல்லை. ஆனால் பயிற்சியில் ஏற்படும் சிறு சிறு இடைவெளிகளில் உறுப்புக்கள் களைத்து மனம் தளர்ந்து இருக்கும்போது கணேசனின் நினைவு குப்பென்று பற்றிக் கொண்டது.
தன் குறிப்பைப் புரிந்து கொண்டு வந்திருப்பானா? தனக்காகக் காத்திருப்பானா? பயிற்சி அறையிலிருந்து வெளியேறும்போது எதிர்ப்படுவானா? என்ற கேள்விகள் தோன்றின. அப்படி காத்திருந்தால் என்ன பேசுவது? ஆள் அங்கு இல்லாமல் போனால் எப்படி? அது தனக்குப் பெரிய ஏமாற்றமாகுமா? ஏன் ஏமாற்றமாக வேண்டும்? இந்த கணேசன் என்ற மாணவருடன் தான் பேச வேண்டிய விஷயம் ஒன்றுமில்லையே! அவன்தான் ஏதோ பேச வேண்டும் என்றான். வந்தால் பேசலாம். வராவிட்டால் தான் ஏன் ஏமாற்றமடைய வேண்டும்?
ஆனால் அடுக்கடுக்கான அந்த சிந்தனைப் படலங்களில் ஒன்று அவன் வர வேண்டும், அவனைச் சந்திக்க வேண்டும், அவனுடன் பேசவேண்டும் என்று விரும்பிக்கொண்டே இருந்தது. அவன் வராவிட்டால் தனக்குப் பெரிய ஏமாற்றம்தான் என்று சொல்லிக் கொண்டே இருந்தது. நேரம் ஆக ஆக இந்த சிந்தனைதான் முன்னணியில் நின்றது. பத்து மணிக்குப் பின் அடிக்கடி கடிகாரத்தைப் பார்க்கத் தொடங்கினாள்.
“அகிலா – ரோஸ்மான் ஜோடி மற்றும் லத்தீப் – சபாரியா ஜோடி என்னைக் கவனியுங்கள். நானும் கேத்தரினும் முன்னால் வழிகாட்டுவோம். நீங்கள் சரியாக நான்கடி பின்னால் வலது பக்கமும் இடது பக்கமும் இருக்க வேண்டும். இரண்டு ஜோடிகளும் சமமான தூரத்தில் இருக்க வேண்டும். இதுதான் அடிப்படை அமைப்பு. மேடை முழுவதும் நாம் சுழன்று சுழன்று வந்தாலும் நடனத்தின் ஒரு பாகம் முடிந்து அடுத்த பாகம் ஆரம்பிக்கும் போது இந்த அமைப்புக்குத் திரும்பி விட வேண்டும்”
இன்னும் இரண்டு முறை ஆடி அமைப்பு சரியாக வருகிறதா என்று சோதித்தார்கள். அவளுடைய ஜோடியான ரோஸ்மான் அருமையான நடனக்காரன். பெண்களை விட அவனுடைய உடம்பு இன்னும் அருமையாக வளைந்தது. அவனுடைய முகத்தில் எப்போதும் ஒரு இளம் புன்னகை இருக்கும். ஆனால் அதிகம் பேசமாட்டான். அவனுடைய கவனம் முழுவதும் நடனத்தில்தான் இருக்கும். ரோஸ்மானோடு ஈடு கொடுத்து ஆடுவது அகிலாவுக்கு ஒரு சவாலாக இருந்தது.
அக்குளிலும் கழுத்திலும் வியர்வை கசகசத்தது. ஆடும் வசதிக்காகப் போட்டிருந்த முழங்கால் வரையிலான லியோடார்ட்ஸ் வியர்வையை உறிஞ்சினாலும் இடையிலும் தொடையிலும் அந்தக் கசகசப்பு இருக்கத்தான் செய்தது. முகம், தோள் கைகள் எங்கணும் வியர்வை வழிந்தது. எப்போது போய் துண்டை எடுத்துத் துவட்டலாம் எனக் காத்திருந்தாள்.
பத்து மணி ஆகியும் பேராசிரியர் கௌஸ¤க்கு திருப்தி ஏற்படவில்லை. “சரி, ·போர்மேஷன் ஒரு மாதிரியாக வந்துவிட்டது. ஆனால் அசைவுகளுக்கு இன்னும் மெருகூட்ட வேண்டும். ரோஸ்மான், நீ அருமையாக ஆடுகிறாய். ஆனால் பெண்கள் மாதிரி ஆடாதே. நீ ஆண். ஆடுவதில் ஆண்மை இருக்க வேண்டும். ஆகவே அசைவுகளை அளவாக வைத்துக் கொள்!”
அவனைத் தனியாகக் கூப்பிட்டு குனிந்து வளையச் சொல்லி அசைவுகளை அளவு படுத்தினார். அவன் டக்கென்று பிடித்துக் கொண்டான். மற்றவர்கள் வியர்வையைத் துடைத்துக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அகிலாவின் இறுகக் கட்டிய தலை முடிக்குள் ஈரம் கசகசத்தது. ரப்பர் ரிப்பனை அவிழ்த்து தலையை உதறி ஈரத்தை வழித்து விட்டாள்.
நேரம் பத்தே காலாயிற்று. அவளுக்கு உள்ளத்தில் கவலை படர்ந்தது. வந்திருப்பானா? வந்து பார்த்து காணவில்லையே என்று திரும்பிப் போயிருப்பானா?
ஏன் இந்தப் பேராசிரியர் இன்றைக்கு இப்படி நேரத்தைக் கடத்துகிறார் என்று எரிச்சல் பட்டாள். அப்புறம் அவன் வந்திருந்தால் என்ன? வந்து திரும்பியிருந்தால்தான் என்ன? வராமலே இருந்தால்தான் என்ன? ஏன் இப்படி மனம் அலைக்கழிக்கிறது? என்று தன் மீதே கோபப் பட்டாள்.
பத்து இருபதுக்குத்தான் கௌஸ் கடிகாரத்தைப் பார்த்தார். “ஓக்கே! நிகழ்ச்சிக்கு இன்னும் இரண்டு வாரம்தான் இருக்கிறது. ஆகவே பயிற்சியைத் தவற விடாதீர்கள். அடுத்த வாரம் காஸ்டியூம் ·பிட்டிங் இருக்கிறது. வந்து போட்டுப் பாருங்கள். சரி இன்றைக்குப் போதும்!” புறப்பட்டார்.
அவசரமாக தலைமுடியைச் சேர்த்து இறுக்கிக் கொண்டை போட்டாள். தொடர்ந்து ஊறிக் கோண்டிருந்த வியர்வையை மீண்டும் ஒரு முறை துண்டால் துடைத்தாள். கறுப்பு லியோடார்ட் சட்டைக்கு மேல் தனது வெள்ளை தொள தொள டீ சட்டையை அணிந்து கொண்டாள். “குட் நைட் ப்ரொ·பெசர்” என்று சொல்லி விட்டு விரைந்து இறங்கினாள்.
***
——————————————————————————–
16
பல்கலைக் கழகத்தின் அந்தக் கலாச்சார மண்டபத்தை அண்மையில்தான் கட்டியிருந்தார்கள். ஒரு 500 பேர் வரை குளுகுளு ஏர்கண்டிஷனில்சுகமாக உட்கார்ந்து கலாச்சார நிகழ்ச்சிகள், பல்கலைக் கழகத்தின் அதிகார பூர்வ விழாக்கள், திரைப்படங்கள் ஆகியவற்றைப் பார்க்கலாம். அரங்கம் முழுவதும் கம்பளம் விரித்து மெத்து மெத்தென்று இருக்கும். யுஎஸ்எம்மின் நுண்கலை இயல் மாணவர்களின் நாடகங்கள், நடனங்கள், கவிதைகள் போன்ற படைப்புகள் அங்கேதான் அதிகமாக அரங்கேறும்.
பல்கலைக் கழகத்திற்கு ஏற்கனவே ஒரு பிரம்மாண்டமான மண்டபம் இருக்கிறது. 2,200 பேர் வரை அமரக்கூடிய தேவான் சையட் புத்ரா என்ற பட்டமளிப்பு விழா மண்டபம். பட்டமளிப்பு விழா தவிர பெரிய அளவிலான கலைநிகழ்ச்சிகளும் அங்குதான் நடக்கும். ஆனால் சிறிய அளவிலான நிகழ்ச்சிகளுக்கு வசதியான மண்டபம் இல்லாத குறையை மாணவர் இல்லத்தின் பக்கத்தில் கட்டப்பட்ட இந்தப் புதிய கலாச்சார மண்டபம் போக்கியிருந்தது.
மாணவர் இல்லம், கலாச்சார மண்டபம் ஆகியவை அமைந்திருந்த இந்தப் பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாமல் அடைத்து மாணவர்கள் நடப்பதற்காக சிவப்பு நிறத்தில் ஓரங்களை வளைத்து வளைத்து வெட்டிய கற்கள் பதித்த அகன்ற நடைபாதை அமைத்திருந்தார்கள். அந்த நடைபாதையின் இரு பக்கங்களிலும் பிரம்மாண்டமான மழை மரங்கள் அமைந்திருந்ததால் எந்நேரமும் நிழலாக இருக்கும்.
கலாச்சார மண்டபம் கட்டி முடிக்கப்பட்ட கையோடு அந்த இடத்தை அழகு படுத்துவதற்காக அந்த நடைபாதையின் இருமருங்கிலும் புதிய சாலை விளக்குகளை அமைத்தார்கள். பளிங்கு நிறத்தில் பெரிய குடம் போன்ற விளக்குக் கூடுகளுக்குள் வெள்ளை நியான் விளக்குகள் கண்ணைக் குத்தாத மிருதுவான ஒளியை உமிழ்ந்தவாறு இருக்கும். இரவில் அந்தக் கம்பங்களின் அடியில் ஒளித் தீவுகள் தோன்றி நடைபாதையின் சிவப்புக் கற்களில் வண்ணக் கோலங்கள் போட்டிருக்கும்.
அதைவிடவும் இன்னொரு கலா பூர்வமான ஒளிப்பிரவாகமும் அங்கு உண்டு. கலாச்சார மண்டபத்தின் முன்னால் இருந்த பிரம்மாண்டமான மழை மரம் ஒன்றின் கீழ் சக்தி மிக்க விளக்குகள் பொருத்தி, அந்த ஒளியை மரத்தின் தண்டு மீதும் இலைகளின் மீதும் பாய்ச்சியிருந்தார்கள். அந்த ஒளி இரவில் மரத்தண்டின் பழுப்பு நிறத்தையும் இலைகளின் கரும் பச்சையையும் ஒரு இருள் கலந்த வண்ணத்தில் அழகாக எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தது. அந்த ஒளி வீச்சில் மரத்தினுள் விதம் விதமான நிழல் வீச்சுக்களும் தெரிந்தன.
இந்த அழகிய மரத்தின் அழகு பகலில் மட்டும் தெரிந்தால் போதாது, இரவிலும் தெரிய வேண்டும் என்று நினைத்து செலவைப் பாராமல் அதற்கு விளக்கு வசதிகள் செய்து கொடுத்த பல்கலைக் கழகத்தின் கலைமனத்தை எண்ணி வியந்தவாறு கணேசன் கலாச்சார மண்டபத்தின் படிக்கட்டுக்களுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தான்.
எட்டு மணிக்கு நடனப் பயிற்சி ஆரம்பித்தால் பத்து மணிக்கு முடியும் என உத்தேசித்தான். ஆனால் ஒரு வேளை சீக்கிரம் முடிந்து விட்டால் என்ன செய்வது என்று ஒன்பது மணிக்கெல்லாம் வந்து விட்டான். அன்று வெற்றி விழாக் களிப்பில் அவனோடு ஒட்டிக் கொண்டிருந்த நண்பர்களை மெதுவாகக் கழற்றிவிட்டு, “ரொம்ப வேல இருக்குப்பா. லைப்ரரிக்குப் போகணும் ஆள விடுங்க!” என்று புறப்பட்டு வந்தான். தனியாகக் காத்திருந்தான்.
மாணவர் விடுதிக்கு வந்து மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு முதல் மாடியில் நடனப் பயிற்சி நடக்கும் அறை எது எனக் கண்களை மேயவிட்டுப் பார்த்தான். பல அறைகளில் விளக்கு எரிவது மூடிய திரைகளூடே தெரிந்தது. அந்த அறைகளில் ஒன்றிலிருந்து ஜோகேட் இசை ஒலிப்பதும் நிற்பதுமாக லேசாகக் கேட்டது. அதுவாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். ஒலி நாடாவை நிறுத்தி இசைத்து பின்னோக்கிச் சுற்றி மீண்டும் இசைத்துத் தீவிரமாகப் பயிற்சி செய்கிறார்கள் என்று தெரிந்தது.
நடனமணிகள் ஜன்னல் திரைக்கு ஓரமாக வரும் சில வேளைகளில் மட்டும் அவர்கள் கருநிழல் நெளிந்து நெளிந்து தெரிந்தது. இதில் எந்த நிழல் அகிலாவின் நிழல்? சொல்ல முடியவில்லை. ஆண்களின் நிழலுக்கும் பெண்களின் நிழலுக்கும் கூட வித்தியாசம் தெரியவில்லை. கொஞ்ச நேரம் பார்த்துச் சோர்ந்து போனான்.
எந்த ஆண் அகிலாவோடு ஆடுகின்ற பாக்கியம் பெற்றிருக்கிறானோ என நினைத்த போது பொறாமையாகக்கூட இருந்தது. அவன் யார், மலாய்க்காரனா? சீனனா? இந்தியனா? தொட்டு ஆடுகிறார்களா, தொடாமல் ஆடுகிறார்களா?
ஜோகெட் நடனத்தில் நெருக்கமாக ஆடினாலும் தொட்டு ஆடுவதில்லை. ஆனால் பேராசிரியர் கௌஸின் நடன அமைப்பைப் பற்றிச் சொல்ல முடியாது. புதுமைகள் செய்கிறேன் என்று கட்டிப் பிடித்து ஆடவைத்தாலும் வைப்பார்.
அகிலாவை யாராவது தொட்டு ஆடுகிறார்களா என்பது பற்றி அவன் மனம் கவலைப் படுவது அவனுக்கே வேடிக்கையாக இருந்தது. தானும் கலாச்சாரக் குழுவில் சேர்ந்து நடனம் கற்றுக்கொள்ளலாமா என்று ஒரு கணம் எண்ணினான். அப்படியானால் இரவில் அகிலாவோடு சேர்ந்து பயிற்சி செய்யலாம். தானும் தொட்டு ஆடலாம். அவள் அருகிலேயே இருக்கலாம்.
“பைத்தியம், பைத்தியம்” என்று மனசு கூவியது. இருக்கின்ற சங்கப் பொறுப்புக்களே முதுகை ஒடிக்கின்றன. இதற்கு மேல் கலாச்சாரக் குழுவிலும் சேர்ந்து முழங்காலையும் உடைத்துக் கொள்ளப் போகிறாயா என்று கேட்டது. உண்மைதான் என அயர்ந்தான். ஆனால் அகிலாவின் பக்கத்தில், அவள் மூச்சு விடும் தூரத்தில் தான் எந்நாளும் இருக்க வேண்டும் என்று ஆசை கொடுக்குப் போட்டு இழுத்துக் கொண்டே இருந்தது.
“மன்னிச்சிக்குங்க கணேசன். எனக்கு எட்டரை மணியிலிருந்து பத்து மணிவரையில மாணவர் இல்லத்தில நடனப் பயிற்சி இருக்கு. போய் சாப்பாடு வாங்கி சாப்பிட்டுட்டு சீக்கிரம் திரும்பணும். இப்பவே நேரமாயிடுச்சி. அதுக்குத்தான் அவசரமா போயிட்டிருக்கோம். பை, பை” என்று வெடுக்கென்று சொல்லிவிட்டு அவள் போன போது முதலில் அவன் முகமும் மனதும் தொங்கிப் போயின. தான் நிராகரிக்கப் பட்டுவிட்டோம் என்னும் அவமான உணர்ச்சிதான் மேலோங்கி நின்றது. அதுவரை இருந்த வெற்றிக் களிப்புகள் தொலைந்திருந்தன.
அவர்கள் போகும் திசையைக் கொஞ்ச நேரம் பார்த்திருந்துவிட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்த பொழுது மனம் அவளுடைய வார்த்தைகளையே திரும்பத் திரும்ப அசை போட்டுக் கொண்டிருந்தது. அப்போதுதான் திடீரென அவனுக்குப் புரிந்தது. “வேண்டாம், உன் வழியைப் பார்த்துக் கொண்டு போ” என்ற சொல்ல வந்தவளாக இருந்தால் ஏன் தொடங்கும் நேரம் முடியும் நேரம் இடம் எல்லாம் இப்படி விரிவாகச் சொல்ல வேண்டும்? “பத்து மணிக்கு வந்து விடு அங்கே பேசிக்கொள்ளலாம்” என்ற செய்தி அவளுடைய பேச்சில் இருந்தது அப்போதுதான் புரிந்தது.
அதன் பிறகு உள்ளம் நிலை கொள்ளவில்லை. ஒன்பது மணிக்கெல்லாம் அங்கு வந்து அலைய ஆரம்பித்துவிட்டான். பத்து மணிக்கு எட்டி எட்டிப் பார்த்தான். பயிற்சி முடிகிற அறிகுறிகள் தெரியவில்லை. படிக்கட்டில் சோர்ந்து உட்கார்ந்து விட்டான்.
அப்படிக் காத்திருப்பது கொஞ்சம் வெட்கமாகவும் இருந்தது. நண்பர்கள் பார்த்துக் கேட்டால் என்ன சொல்வது? ஏன் இப்படிக் காத்திருக்க வேண்டும்? எப்படி இந்த அளவுக்குத் தன் மனதைக் கவ்வினாள்?
அவனுக்கு விடைகள் தெரியவில்லை. ஆனால் அவன் கை பிடிக்க அவள் கண்ணீர் விட்ட காட்சி மீண்டும் மீண்டும் வந்து நின்றது. அன்று விசாரணையில் தான் விடுதலை பெற்றதைப் பார்த்து மகிழ்ச்சியாக சிரித்த காட்சி நினைவுக்கு வந்தது. இப்படிச் சின்ன சின்ன அர்த்தமுள்ள பார்வைகளும் சிரிப்புகளும் கண்ணீரும்தான் தன் மனதில் காதல் கனலை மூட்டி விட்டன என்பது புரிந்தது.
முதல் மாடியில் இசை நின்றது. ஆட்கள் கலையும் அடையாளம் தெரிந்தது. எழுந்து படிக் கட்டுக்களுக்குள் நிழலில் உள்வாங்கி மறைவாகக் காத்திருந்தான். ஏன் மறைந்திருக்க வேண்டும் என்பது புரியவில்லை. ஆனால் மற்றவர்கள் கண்ணில் படாமல் அவளைப் பார்ப்பதுதான் சரி என்று பட்டது.
பேங்க் சிம்பானான் நேஷனல் பக்கத்தில் இருந்த படிக்கட்டுகளில் படபடவென சிலர் இறங்கினார்கள். கடைசியாக அகிலா இறங்கினாள். கையிலிருந்த துண்டால் கழுத்தைத் துடைத்துக் கொண்டு நடந்தவாறு நிமிர்ந்து பார்த்தாள். முகம் களைத்து இறுக்கமாக இருந்தது. கண்கள் கொஞ்சம் அலைந்து தேடின. என்னைத்தானா?
நிழலிலிருந்து வெளியே வந்தான். அவளைப் பார்த்து புன்னகைத்தான். அவனைப் பார்த்தாள். முக இறுக்கம் கலைந்து மெலிதாகப் புன்னகைத்தாள். அவளை நோக்கி முன்னேறினான்.
“உங்களுக்காகத்தான் காத்திருக்கேன் அகிலா?” என்றான்.
“எனக்காகவா? ஏன்?” ஒன்றும் தெரியாதவள் போல் கேட்டாள்.
“சாயந்தரம் பேசணும்னு வந்தேன். நேரமில்லன்னு சொல்லிட்டிங்க! அதினாலதான் இப்ப வந்தேன்!”
“இந்த ராத்திரியிலியா?”
“ஓய்வாப் பேசிறதுக்கு ராத்திரிதான நல்ல நேரம்?”
தயங்கி நின்றாள். ஆசை மனதில் இருந்தாலும் இரவு சந்திப்பு ஒரு பெரிய குற்றம் போலத் தோன்றியது. உடனிருந்த அனைவரும்போய்விட்டார்கள்.
“என்ன பேசணும்?”
“இப்படி கொஞ்ச நேரம் உக்காந்து பேசுவமா அகிலா?” படிக்கட்டுகளைக் காட்டினான்.
உட்கார்ந்தாள். அவன் பக்கத்தில் உட்கார்ந்தான். வியர்வை மணத்தோடு அவனோடு நெருங்கியிருப்பது கூச்சமாக இருந்தது. அடிக்கடி துடைத்துக் கொண்டாள். தலையைக் கைகளால் கோதிக் கொண்டாள். தலை முடி ரொம்ப கலைந்து அசிங்கமாக இருக்குமோ? முகமெல்லாம் வியர்வை வழிந்து கருப்புப் பொட்டுகள் தெரியுமோ? என்ற கவலைகள் அவளுக்குள் வந்தன.
ஆனால் அந்த கலைந்த தலைமுடியும் வியர்வையும் கருப்புப் பொட்டுக்களும்தான் அவனைக் கிறங்க அடித்தன. மிருதுவான சாலை விளக்குகளின் மஞ்சள் ஒளியில் அலங்காரமில்லாத ஆடம்பரமில்லாத சுய உருவத்தில் எத்தனை அழகாக இருக்கிறாள்! ஒரு புன்னகையையும் மருண்ட கண்களையும் மட்டுமே நகைகளாக அணிந்திருக்கிறாள். கழுத்தில் மட்டும் ஒரு தங்கச் சங்கிலி வியர்வையில் நனைந்து ஒட்டிக் கிடக்கிறது. அதன் பதக்கம் ஒன்று டீ ஷர்ட்டினுள் நிழலாடியது.
“என்னமோ சொல்லணும்னு சொன்னிங்க! பேசாம இருக்கிங்களே!” என்றாள்.
“எப்படி ஆரம்பிக்கிறதுன்னு தெரியல!”
“சரி! அப்ப யோசிச்சு வைங்க! பின்னால பேசிக்குவோம்!” எழுந்தாள். எழுவதாக நடித்தாள்.
பட்டென்று கையைப் பிடித்து உட்கார வைத்தான். இணங்கி உட்கார்ந்தாள். அந்தப் பிடி பிடித்திருந்தது.
“இன்னைக்குக் காலையில இருந்து நடந்ததை நினைக்கும் போது என் தலையே சுத்துது அகிலா! என்னோட மகிழ்ச்சிக்கு ஒரு அளவே இல்ல. ஆனா அந்த மகிழ்ச்சிய உங்ககிட்ட பகிர்ந்துக்க ஒரு சந்தர்ப்பமே கிடைக்காமப் போச்சு! அதுக்கு மன்னிப்புக் கேட்கத்தான் வந்தேன்!” தயங்கித் தயங்கிப் பேசினான்.
“உங்க மகிழ்ச்சிய என்னோட ஏன் கொண்டாடணும்? அதுக்குத்தான் இந்த கேம்பஸ்ல உங்களுக்கு அளவில்லாத நண்பர்கள், நண்பிகள் இருக்காங்களே!” என்றாள். ஏளனம் இருந்தது. கொஞ்சம் கோபமும் இருந்தது.
“இருக்காங்க. ஆனா இப்படியெல்லாம் நடந்ததுக்கும் நீங்கதான் காரணம். அதில இருந்து நான் விடுதலை பெற்றதுக்கும் நீங்க ஒரு காரணம். அதுக்கெல்லாம் மேல எனக்காக இந்த பல்கலைக் கழக இடத்தையே தியாகம் செய்ய முன் வந்திங்களே, எனக்காக அழுதிங்களே, இதுக்கெல்லாம் நான் நன்றி சொல்ல வேணாமா? ஆகவே இந்த நல்ல முடிவ உங்களோடக் கொண்டாட்றதுதான் நல்லதுன்னு தோணிச்சி. ஆனா நான் நெனச்ச மாதிரி நடக்கல!”
அவன் தன்னைப் பற்றி இவ்வளவு சிந்தித்து வைத்திருப்பது அகிலாவுக்கு இனிப்பாக இருந்தது. ஆனால் மறந்து விட்டு உதறி விட்டுத்தானே போனான்? கோபமாகவும் இருந்தது.
“அதினால என்னங்க கணேசன்? கடைசியா உங்களுக்கு வேண்டிய உற்ற தோழியோடதான போய் கொண்டாடினிங்க! எனக்கு வருத்தம் ஒண்ணுமில்ல, சந்தோஷம்தான்!” என்றாள்.
“ஜெசிக்காவத்தான சொல்றிங்க! நான் ஜெசிக்காவோட மட்டும் போகல! இன்னும் பல நண்பர்களோட கூட்டமாத்தான் போனோம். உண்மையில நானாப் போகல! என்ன இழுத்துக்கிட்டுப் போனாங்க. நீங்கதான் பாத்திங்களே!”
பேசாமல் இருந்தாள். மௌனத்துக்குப் பின் அவன் பேசினான்: “ஜெசிக்கா என் ·பிரண்டுதான். ஆனா விசேஷமான ·பிரண்ட் ஒண்ணும் இல்ல! எல்லாரையும் போலத்தான் சாதாரண ·பிரண்ட்!” என்றான். ஜெசிக்காவை மனதில் வைத்துக் கொண்டு அகிலா தன்னிடமிருந்து விலகிப் போய்விடக் கூடாது என்ற பயம் வந்தது.
“சாதாரண ·பிரண்டா விசேஷ ·பிரண்டான்னு எனக்கு எப்படித் தெரியும்? உங்களுக்கு நான் ஏதோ பெரிய தீங்கு செய்திட்டதாக ஜெசிக்கா என்னோட போட்ட சண்டை, என்னை தன் அறைய விட்டு விரட்டினது எல்லாத்தையும் பார்த்தா அவ சாதாரணக் கூட்டாளியா தெரியல. உங்களுக்கு மட்டும் விசாரணையில விடுதல கெடைக்காம தண்டனை கெடைச்சிருந்தா ஜெசிக்கா என்னக் கொண்ணே போட்டிருப்பா!”
“இல்ல அகிலா! ஜெசிக்கா எல்லாத்திலியும் உணர்ச்சி வசப் பட்றவ! அவ நெனச்ச காரியம் நடக்கிலேன்னா அப்படித்தான் எல்லாரையும் கலக்கி எடுத்திருவா. அதத் தவிர எங்களுக்குள்ள வேற எதுவும் இல்ல!”
அவனை ஏறிட்டுப் பார்த்தாள். “அத ஏன் ஏங்கிட்ட சொல்றிங்க கணேசன்? உங்களுக்கிடையில எப்படிப்பட்ட நட்பு இருந்தாலும் எனக்கென்ன?” கேட்டுக் குனிந்து கொண்டாள். ‘இல்லையென்று சொல், மறு உறுதிப் படுத்து’ என்று அவள் மனது அவனைக் கேட்டது.
“இத உங்ககிட்ட சொல்றது முக்கியம்னு நெனச்சேன். ஜெசிக்கா உங்ககிட்ட நடந்துகிட்ட விதத்துக்காக நான் மன்னிப்புக் கேட்டுக்கிறேன். அவ அப்படி நடந்தது தெரிஞ்ச உடனே நான் ரொம்ப கலங்கிப் போயிட்டேன். உங்க மனம் புண்படக் கூடாதுன்னு என் மனம் அடிச்சிக்கிச்சி!”
விளக்குக் கம்பங்களில் ஏதோ பூச்சிகள் வந்து மொய்க்கத் தொடங்கியிருந்தன. அந்த உரையாடல் அவளுக்குச் சுகமாக இருந்தது. ஆனால் அந்த இரவு நேரத்தில் அப்படி ஒரு ஆணிடம் உட்கார்ந்து பேசுவது குற்றம் என்றும் பட்டது. ஏன் அது குற்றம் என்றும் தெரியவில்லை. திடீரென அம்மாவை நினைத்துக் கொண்டாள். “ஆம்பிளப் பிள்ளங்களோட தனியா என்ன பேச்சு உனக்கு?” என்று சிறு வயது முதல் கண்டித்துக் கண்டித்து அவள் சொல்லிக் கொடுத்த ஒழுக்கத்திலிருந்து தவறுகிறோமோ என்ற எண்ணம் வந்தது.
“சரி கணேசன். நான் புரிஞ்சிக்கிட்டேன். இத இத்தனை தூரம் வந்து இந்த ராத்திரியில காத்திருந்து நீங்க சொன்னதுக்கு நன்றி. நான் வரட்டுமா?” என்று எழுந்தாள்.
“ஏன் இத்தனை அவசரப் பட்றிங்க?” என்று கெஞ்சுவது போல் கேட்டான்.
“இதோ பாருங்க, வேர்த்துக் கொட்டுது. நான் போய் குளிக்கணும்” என்றாள்.
“இதோ பைக்கில ஏறுங்க! ஒரு நிமிஷத்தில கொண்டு விட்டிர்ரேன்” என்றான்.
“ஐயோ, இந்த வேர்வையோடயா? உங்க பைக்கே அழுக்காப் போகும்!” என்று சிரித்தாள்.
“அழுக்கான பரவாயில்ல! அது அழுக்குன்னு நான் நெனைக்க மாட்டேன். உங்களுக்கு இந்தச் சின்ன உதவி கூட செய்லேன்னா எப்படி?”
தயங்கி நின்றாள். அவன் தோள் தழுவி பைக்கில் பின்னால் உட்காரும் எண்ணம் கிளுகிளுப்பாக இருந்தது. ஆனால் ‘வேண்டாம் இது அதிகம்’ என ஒன்று வந்து மறுத்தது. ஆண்களிடம் ஜாக்கிரதை என்று எச்சரித்தது. யார் உள்ளிருந்து எச்சரிக்கிறார்கள். அம்மாவா?
“வேணாம் வேணாம். இதோ இங்க இருக்கிற தேசாவுக்கு எதுக்கு பைக்? நான் வரேன் கணேசன்.” எழுந்து நடந்தாள்.
“நில்லுங்க அகிலா!” என்றான். நின்றாள்.
“என்னைக்காவது ஒரு நாள் நாம் ரெண்டு பேரும் போய் இந்த வெற்றியைக் கொண்டாடத்தான் வேணும். கொறைஞ்சது என்னோட வந்து ஒரு நாள் சாப்பிடுங்க!” என்றான்.
தயங்கி நின்று யோசித்தாள். “சரி! என்னோட தோழிகளக் கேட்டுச் சொல்றேன். அவங்களுக்கு எப்ப ஓய்வா இருக்கோ அப்ப போகலாம்!” என்றாள்.
“தோழிகளா? அவங்க எதுக்கு?” என்று கேட்டான்.
“நாம் ரெண்டு பேர் மட்டும் தனியாப் போறது நல்லா இருக்காது!” என்றாள்.
“ஏன்? உங்களுக்கு விருப்பமில்லையா?”
தயங்கினாள். விருப்பமில்லையா? விருப்பமாகத்தான் இருக்கிறது. ‘ஆம்’ என்றால் வற்புறுத்துவான். ‘இல்லை’ என்றால் முறித்தது போலாகிவிடும். “அதுக்காக இப்படி வெடுக்கினு பேசிறதா? ஒரு ஆறுதலா பேசக்கூடாது?” மாலையில் மாலதி கூறிய அறிவுரை நினைவுக்கு வந்தது.
“இன்னொரு நாளைக்கு சொல்றேன் கணேசன்! வரட்டுமா? பை பை!” தொங்கிப் போயிருந்த அவன் முகத்தைப் பார்த்துச் சொல்லிவிட்டு அப்புறம் திரும்பிப் பார்க்காமல் விரைவாக நடந்தாள்.
அவள் போகும் திக்கைப் பார்த்திருந்தான். அவள் ஒரு முறையாவது திரும்பிப் பார்ப்பாள் என்று ஒரு ஆசையுடன் காத்திருந்தான். அவள் திரும்பவில்லை. சாலையைக் கடந்து தேவான் சையட் புத்ரா ஓரமாகப் போன பாதையில் விறுவிறு வென்று நடந்தாள். ஒளிக்கம்பங்களின் கீழ் அவள் உருவம் தெரிவதும் இருளில் மறைவதுமாக இருந்தது.
கணேசன் அங்கேயே கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தான். மனம் சோர்ந்திருந்தது. எத்தனை அழுத்தமாக நிராகரித்து விட்டாள். இது முதன் முறையல்ல. மாலையில் அவளுடைய தோழிகள் முன்னிலையில் கேட்ட போதும் நிராகரித்தாள். இரவில் இந்த அமைதியான சூழ்நிலையில் தனிமையில் கேட்ட போதும் நிராகரித்து விட்டாள். ‘ஜெசிக்காவைப் பற்றி ஏன் என்னிடம் பேசுகிறாய்?’ என்று கேட்டதன் மூலம் தனக்கு யார் காதலி யார் காதலி இல்லை என்பதில் அவளுக்கு அக்கறை இல்லை எனத் தெரிந்தது. ‘அவசரப் படாதே கொஞ்ச நேரம் பேசலாம்’ என்றால் மறுத்து விட்டாள். ‘பைக்கில் ஏறு கொண்டு விடுகிறேன்’ என்றால் மறுத்து விட்டாள். ‘இன்னொரு நாள் சாப்பிடப் போகலாமா?’ என்றால் மறுத்து விட்டாள். கொஞ்சமும் இடம் கொடுக்கவில்லை. முற்றாக நிராகரித்து விட்டாள்.
தான் எவ்வளவு பெரிய முட்டாள் என்பது இப்போதுதான் அவனுக்கு விளங்கியது. தான் அவளுக்குச் சிறிதும் பொருட்டல்ல என்பது தெளிவாகிவிட்டது. அவளுடைய அழுகையையும் சிரிப்பையும் எவ்வளவு தப்பாக அர்த்தப் படுத்திக் கொண்டேன்! அவள் அழுதது இயல்பாக தங்கள் இருவருக்கும் நேர்ந்து விட்ட துன்பம் பற்றி! தான் பல்கலைக் கழகத்தை விட்டு விலக வேண்டி வருகிறதே என்ற பயம் பற்றி! அவள் சிரித்தது இந்தத் துன்பம் முடிந்ததே என்பதனால்.
இதிலே எனக்கென்று ஒன்றும் இல்லை. அழுகை எனக்காக அல்ல. சிரிப்பு எனக்காக அல்ல. எனக்கு என்று நானாக அர்த்தப் படுத்திக் கொண்டேன். நான் முட்டாள். வாழ்க்கையை, மனிதர்களை இன்னும் தெரிந்து கொள்ளாத மடையன்.
இதையெல்லாம் காதல் என்று எண்ணிக்கொண்டு ஒன்பது மணிக்கு இங்கு வந்து ஒரு மணிநேரம் இருட்டில் காத்திருந்து வீணாக்கிய இளிச்சவாயன். அவள் தன்னைச் சிறிதும் எண்ணியிருக்காத நிலையில் என்னை அவள் மீது திணிக்க முயன்றேன். அவள் என்னைத் தீண்டத் தகாதவன் போல இரக்கமில்லாமல் பிடித்துத் தள்ளிவிட்டாள். கீழே விழுந்து புழுதியைப் பூசிக் கொண்டேன். இது மற்றவர்களுக்குத் தெரிந்தால் எத்தனை அவமானம்!
சீ! இனி எந்த நாளிலும் அவள் பக்கத்தில் தலை வைத்துக் கூடப் படுக்கக் கூடாது. இந்த அவமானத்தை இனியொரு முறை சகித்துக் கொள்ள முடியாது. அடுத்த முறை பேசப் போனால் கன்னத்தில் அறைந்தாலும் அறைவாள்.
இந்தத் தமிழ்ப் பெண்களே இப்படித்தான். சகஜமாகப் பழகத் தெரியாது. இங்கிதமாகப் பேசத் தெரியாது.
இன்றைக்குக் காலையில் கிடைத்த வெற்றிகள் எல்லாம் அர்த்தமில்லாதவையாகத் தோன்றின. அவளுடைய நிராகரிப்பு என்னும் வெள்ளத்தில் அந்த வெற்றிகளெல்லாம் அடித்துக் கொண்டு போனது போல இருந்தது. மனசு ஏமாற்றத்தில் கனத்துக் கிடந்தது.
சோர்வுடன் எழுந்து தனது மோட்டார் சைக்கிளை நோக்கி நடந்தான்.
***
——————————————————————————–
17
புத்தம் புதிய சோப்பை அப்போதுதான் பிரித்தாள். ஷவரிலிருந்து வந்த குளிர் நீரில் நனைத்த போது அந்த சோப் புதிய எலுமிச்சம் பழ வாசனையை விடுவித்தது. உடம்பெல்லாம் பூசிக் கொண்ட போது நுரை நுரையாயாகப் பொங்கி வழிந்தது. அன்றைய பிற்பகல், இரவு வியர்வையெல்லாம் அதில் வழிந்து போய் தோலில் நறுமணம் ஏறிய போது அகிலாவுக்கு ஆனந்தமாக இருந்தது.
அன்றாட வாழ்வில் குளிக்கும் நேரம் போன்ற ஆனந்தமான நேரம் வேறு ஏதும் இல்லை. கதவை அடைத்துக் கொண்டு விட்டால் பிறர் கண் படாமல் தனக்கே தனக்கு என்று சொந்த உலகத்தைப் படைத்துக் கொள்ளலாம். சுவரை வெறித்துப் பார்த்துக் கொண்டு மனதுக்குள் வேண்டிய காட்சிகளைப் படைத்துக் கொள்ளலாம். குளிக்கும் நேரத்தில் எல்லா சாதாரண மனிதர்களும் கலைஞர்கள்தான்.
அகிலா தன் கழுத்துச் சங்கிலியின் சிறிய பதக்கத்தை வருடியவாறு சுவரில் கொஞ்சம் சாய்ந்து கொண்டு தண்ணீரை வழிய விட்டுக் கொண்டிருந்தாள். அது தலையில் கொட்டி கூந்தலில் இறங்கி தோள் வழியாக உடம்பு எங்கணும் பாய்ந்தது. தண்ணீரும் ஒரு மருந்துதான் என அகிலா எண்ணினாள். இப்படிப் பிறந்த மேனியான தோலில் பட்டு வழிந்தவுடன் எப்படி சுகப் படுத்துகிறது! இன்றைய மத்தியான வெயிலின் புண்களும் திறந்த வெளியின் தூசுகளும் அகன்று தோல் புதுப் பிறவி எடுத்துக் கொண்டிருந்தது.
இந்த விடுதியில் நிம்மதியாகக் குளிப்பதற்கு இரவு நல்ல நேரம். காலையிலும் பகலிலும் யாராவது காத்திருந்து அவசரப் படுத்திக் கொண்டே இருப்பார்கள். ஆனால் இரவில் அந்த அவசரம் இல்லை. நீண்ட நேரம் குளிக்கலாம். அப்போது நீர் அழுத்தமும் அதிகமாக இருக்கும். ஷவரை அருவியாகக் கருதிக் கொண்டு பாடலாம். நீரை வழிய விட்டவாறு கேசத்தைக் கோதிக் கொண்டு ஜலக்ரீடைக் கனவுகள் காணலாம்.
ஆனால் அகிலாவின் அந்த இனிய கனவுகளூடே நினைவுகளும் இடைப்பட்டு அவளை வருத்திக் கொண்டிருந்தன. ஏன் இப்படி நடந்து கொண்டேன்? ஏன் இப்படி விட்டுக் கொடுக்காமல் முரட்டுத் தனமாகப் பேசினேன்? ஏன் நயந்து வந்தவனை அப்படி முரட்டுத் தனமாகத் தள்ளினேன்? என்று பல கேள்விகளைத் தனக்குள் கேட்டுக் கொண்டாள்.
கணேசனை அவளுக்கு வெகுவாகப் பிடித்திருந்தது. மனம் அவனுக்காக ஆசைப் பட்டது. அவன் பேச்சுக்கும் பார்வைக்கும் அன்புப் பிடிக்கும் ஏங்கிக் கூட நின்றது. ஆனால் அப்படியெல்லாம் ஆசைப் படுவது குற்றம் என்றும் அதே மனம் சொல்லியது. அந்த எச்சரிக்கைதான் இன்று வென்றது.
வென்ற பின் இப்போது வேகிறது. எத்தனை ஆசையாக என்னிடம் பேசவந்தான்! ஏன், வரச் சொல்லி சூசகமாகச் சொன்னதே நான்தானே! அப்படிச் சொன்னபிறகு நடனப் பயிற்சி நடந்த நேரத்திலெல்லாம் அவன் வந்திருப்பானா, வந்திருப்பானா என்று இந்த மனம் கிடந்து ஏங்கவில்லையா? அப்படியெல்லாம் ஏங்கி எதிர்பார்த்து அவன் நேரில் வந்து நின்ற போது ஏன் சுமுகமாகப் பேச முடியவில்லை? ‘வந்ததற்கு நன்றி, எனக்காகக் காத்திருந்ததற்கு நன்றி, என்னோடு உட்கார்ந்து பேசுவதற்கு நன்றி’ என்று மகிழ்ந்து சொல்ல வேண்டியதற்கு பதிலாக ‘ஏன் இங்கு வந்தாய்? என்னோடு உனக்கென்ன பேச்சு? நீ யார் நான் யார்?’ என்ற தொனியில் வெடுக்கென்று பேசி விரட்டத்தான் முடிந்தது.
பருவப் பெண்ணுக்கு இந்தத் தற்காப்பு உணர்வு தேவைதான் என அகிலாவுக்குப் புரிந்தது. அம்மா இதை மறை முகமாகச் சொல்லிக் கொடுத்திருக்கிறாள். இந்த விஷயங்கள் பற்றியெல்லாம் எந்த நாளும் அவள் நேராகத் தன்னிடம் பேசியது கிடையாது. ஆனால் மறைமுகமாக நிறையப் பேசியிருக்கிறாள்.
எட்டு ஒன்பது வயதிலேயே பக்கத்து வீட்டு எதிர்த்த வீட்டுப் பையன்களோடு அவள் பட்டம் விடுவதற்கு ஓடிய போது அம்மா “ஆம்பிள பிள்ளங்களோட உனக்கு என்ன விளையாட்டு?” என்று கோபத்துடன் ஏசியிருக்கிறாள். அது ஏன் என்பது ஒரு காலும் புரிந்ததில்லை. பையன்களும் பெண்களும் எல்லாரும் கூட்டாளிகளாகத்தான் தெரிந்தார்கள். ஆரம்பத்தில் பட்டம் விடும் ஆசை அதிகமாகி அம்மாவின் எச்சரிக்கையை சட்டை பண்ணாமல் அவள் ஓடிய போது அம்மா இழுத்து அடித்திருக்கிறாள். ஆகவே ஆண் பையன்களுடன் போய்ச் சுற்றுவது என்பது அம்மாவைக் கோபப்பட வைக்கின்ற விஷயம், தண்டிக்கப்பட வேண்டிய விஷயம் என்பது எட்டு வயதில் புரிந்து போயிற்று.
அவள் பருவமடைந்த போது அந்தத் திடீர் உதிர வெளிப்பாட்டில் தன் உடலுக்குள் ஏதோ தீராத நோய் வந்து விட்டதைப் போல அகிலா பயந்து கிடக்கையில் ஏதோ ஒரு வகையில் தான் சாக்கடையில் விழுந்து விட்டது போலக் கருதி அம்மா தீட்டுக் கழிப்புச் சடங்குளெல்லாம் செய்து அவளை ஒரு ஈனப் பிறவியாக்கினாள். பெண்கள் மாதாமாதம் அசிங்கப்பட்டு அந்த அசிங்கத்தை ஒளித்தும் மறைத்தும் வைத்துக் கூச வேண்டிய சாபம் பெற்றவர்கள் என்பதை அம்மா வேலைகள் செய்தவாறு யாருக்கோ சொல்லுவது போல தனக்குச் சொல்லி வைத்திருந்தாள்.
“இனிமே இந்த ஆம்பளப் பையன்களோட இளிச்சி இளிச்சி பேசாத, ஆமா!” என்று மீண்டும் எச்சரித்தாள். இந்த ஆண்களிடம் தன்னை அபாயத்துக்கு உள்ளாக்குகிற ஏதோ ஒரு மந்திரம் இருக்கிறது என அகிலா எண்ணினாள். அந்த மந்திரம் ஏதும் பெண்களிடம் இல்லை. ஆகவே ஆண்கள் அதிசயித்துப் பார்க்கத் தக்கவர்கள். பயப்படத் தக்கவர்கள். ஒரு மரியாதையுடன் நடத்தப்பட வேண்டியவர்கள் என்று அகிலா கற்றுக் கொண்டாள்.
ஆனால் தன் வயதை ஒத்த இந்தப் பையன்கள் ஆடுகிற விளையாட்டுகள், பேசுகிற பேச்சுக்கள் இவற்றையெல்லாம் பார்த்தால் தன்னை விட இவர்களுக்கு புத்திசாலித்தனம் மிகக் குறைவு என்று தெரிந்தது. வகுப்பில் கூடப் பெண்களை விட குறைவான மார்க்கே அவர்கள் வாங்கினார்கள். வாத்தியார் சொல்லுகின்ற பாடம் பெண் பிள்ளைகளுக்குப் புரிவது போல இந்தப் பையன்களுக்குப் பட்டென்று புரிவதில்லை. விளையாட்டிலேயே குறியாக உள்ள மண்டுகளாகத்தான் இருந்தார்கள்.
வீட்டில் கூட அப்பாவை விட அம்மாதான் புத்திசாலியாக இருந்தாள். வீட்டு நிர்வாகம், பண நிர்வாகம் சேமிப்பு, முதலீடு எல்லாம் அம்மாதான் முடிவு செய்தாள். அப்பா அவளிடம் கேட்டுக் கேட்டு நடந்து கொள்வார். “உங்களுக்கு என்னதான் தெரவசு இருக்கு?” என்று அம்மா அவரைத் திட்டக் கூடச் செய்வாள். ஆகவே இவர்களிடம் ஏன் பெண்கள் பயந்து நடக்க வேண்டும் என அகிலாவுக்குப் புரியவில்லை.
ஆனால் மூன்றாவது மனிதர் வீட்டுக்கு வந்து விட்டால் அம்மா உடனடியாக ஒடுங்கிப் போய்விடுவாள். அப்பாதான் எல்லாம் முன்னின்று பேச வேண்டும். முடிவுகள் எல்லாம் அப்பாதான் செய்ய வேண்டும். அறைக்குள் அம்மா தீர்மானமாகச் செய்கிற முடிவுகளையெல்லாம் அப்பா தானாகச் செய்தது போல வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த வேடங்களில் இருவருமே நன்றாக நடித்தார்கள். இந்த நடிப்பினால்தான் குடும்பத்தில் இணக்கம் தோன்றியது. நல்ல தம்பதிகள், நல்ல குடும்பம் என்று மற்றவர்கள் பேசிக் கொண்டார்கள். கல்யாணம், பிறந்த நாள், குழந்தைப் பேறு, குழந்தை பேர்வைப்பு என்று எந்தக் குடும்ப வைபவமானாலும் அப்பாவையும் அம்மாவையும் முன்னால் கூப்பிட்டு ஆசிர்வாதம் வாங்கினார்கள்.
வேறு குடும்பங்களைப் பற்றிப் பேசும் போதும் பெண்ணின் அடக்கம் என்பது ஒரு முக்கியமான விஷயமாகத்தான் பேசப்பட்டது. பல பெண்களை “அடக்கமில்லாத பெண்” என அம்மா நிராகரிக்க அகிலா கேட்டிருக்கிறாள். கல்யாண ஏற்பாடுகள் வரும்போது “பொண்ணு அடக்கமானவளான்னு பாத்துக்குங்க!” என்ற பேச்சு முக்கியமாக வரும். “அந்தப் பொம்பிளயா? பெரிய வாயாடியாச்சே!” என்ற கருத்து வரும்.
பெண்கள் அடக்கமாக இருக்க வேண்டும். ஆண்கள் முன் சுற்றக் கூடாது. அதிகம் பேசக் கூடாது. இவையெல்லாம் அம்மாவிடமிருந்தும் குடும்ப உதாரணங்களிலிருந்தும் சமூகப் பேச்சுக்களிலிருந்தும் அகிலா கற்றுக் கொண்டாள். வீட்டில் கூட விசேஷ காலங்களில் விருந்தினர் வரும் போது ஆண்கள் முன்னால் வரவேற்பறையிலும் பெண்கள் சாப்பாட்டு அறையிலும் சமையலறையிலும் உட்கார்ந்து பேசுவதே வழக்கமாக இருந்தது.
இதனால் எல்லாம் ஆண்களிடம் இயற்கையாக ஒரு பயம் அகிலாவுக்கு ஏற்பட்டு விட்டது. அவள் படித்தது கலப்புப் பள்ளியாக இருந்தாலும் அங்கும் ஆணுலகமும் பெண்ணுலகமும் தனித்தனியாகவே இயங்கின. ஆண்கள் முரட்டுப் பேச்சு முரட்டு விளையாட்டுகள் என்றும் பெண்கள் மென்மை விளையாட்டுகள், குசுகுசுப் பேச்சுகள், வெகுளிச் சிரிப்புகள் என்றும் தனித்தனி உலகில் இருந்தார்கள்.
ஒவ்வொருகால் ஆணும் பெண்ணும் கலந்து காதல் அது இது என்று வந்து விட்டால் அது குற்றமாகக் கருதித் தண்டிக்கப் பட்டது. ஆகவே ஆண்களுடன் பழக்கம், காதல் என்பதெல்லாம் குற்றச் செயல்கள் என்ற கருத்தே அவளுக்குள் வளர்ந்து வந்தது. மனம் அந்த ஆசையைத் தூண்டத் தூண்ட இது குற்றம், இது குற்றம் என அடக்கி அடக்கியே பழகிப் போய்விட்டது. குறிப்பாக எந்த ஆண் பிள்ளையுடனும் தனியாக நின்று பேசுவது ஒரு தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் என்ற கருத்துத் தெளிவாக மனதில் வந்து வேர் பிடித்திருந்தது.
அந்த உணர்வுதான் இன்று கணேசனை அப்படி மறுக்க வைத்தது என அவளுக்குத் தோன்றியது. இந்த எச்சரிக்கை உணர்வுகளின் ஏகப் பிரதிநிதியாக அம்மாதான் மனசுக்குள் இருந்தாள். ‘அம்மாவுக்கு இது தெரிந்தால் என்ன ஆகும்?’ என்ற நினைவே பயமாக இருந்தது. அம்மாவுக்கு நல்ல பிள்ளையாக இருக்க வேண்டுமானால் அவளுக்குத் தெரியாமல் இந்த மாதிரித் திருட்டுத் தனங்களில் ஈடுபடக் கூடாது என்ற பெரும் எச்சரிக்கை உணர்வு அப்போது மிகுந்திருந்தது.
இருந்தும் இது ஒரு திருட்டா என்பது அவளுக்குப் புரியவில்லை. இதில் என்ன திருட்டு உள்ளது? இதில் என்ன ஒளிவு மறைவு உள்ளது?
முதலில் கணேசனை இப்படித் தனியாக இரவில் சந்தித்துப் பேசுவது என்பது முறையல்ல என்ற குற்ற உணர்ச்சி இருந்தது. அதைத் தான் விரும்பி எதிர்பார்த்தது என்பது மேலும் ஒரு குற்றமாக இருந்தது. அவனுடைய பல்கலைக் கழக விசாரணையைப் பற்றி அவன் பேசியது தவறாகத் தெரியவில்லை. ஆனால் “வா இந்த வெற்றியைக் கொண்டாடலாம்!” என அவன் கூப்பிட்டது தவறாகத் தெரிந்தது. அப்படி அவன் கூப்பிட்டதைத் தான் விரும்பியது இன்னொரு குற்றமாக இருந்தது. “தனியாகப் போய்ச் சாப்பிடலாம்” என்ற அழைப்பு ஏதோ ஒரு குற்றச் செயலுக்குத் தன்னை அவன் அழைப்பது போலத் தோன்றியது. ஆகவே அதைச் சரிப்படுத்த “என் தோழிகளோடு வருகிறேன்!” என்று சொல்ல வேண்டியதாயிற்று.
“நான் என் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு போய் விடுதியில் விடுகிறேன்!” என்று அவன் சொன்னதும் ஏதோ ஒரு குற்றச் செயலுக்கு அழைப்பு விடுப்பது போலத்தான் இருந்தது. அதைக் கேட்டதும் அவன் தோள் தழுவி ஏறிப் போகலாம் என்ற கிளுகிளுப்பு தனக்கு உண்டானது மேலும் ஒரு பெரிய குற்றமாகத் தெரிந்தது. “வேண்டாம்! அம்மாவுக்குத் தெரிந்தால் ஏசுவாள்!” என்று ஒரு உள்ளுணர்வு சொல்லிற்று.
ஆயிற்று. எல்லாவற்றையும் மறுத்து எல்லாப் பாவங்களையும் முறியடித்து வந்தாயிற்று. அவன் கோரிக்கை விடுத்த எந்தக் குற்றச் செயலுக்கும் இணங்கவில்லை. தன் மனம் இழுத்து மயக்க முயன்ற எந்தத் தீச் செயலுக்கும் மயங்கவில்லை. ஆகவே இதன் முடிவில் வெற்றி எனக்குத்தான். நான் அப்பழுக்கு இல்லாதவளாக வந்திருக்கிறேன்.
ஷவரிலிருந்து தண்ணீரைத் தன் திறந்த மேனித் தோலின் மீது வழிய விட்டுக் கொண்டிருந்த அகிலாவுக்கு மனசு மட்டும் அந்த வெற்றிக் களிப்பில் எக்களிக்க மறுத்தது. இந்த வெற்றியில் ஏதோ போலித் தனம் இருப்பதாகத் தோன்றியது. இதில் ஏதோ இழப்பு இருப்பதாகத் தோன்றியது. வெறுமை உணர்வுதான் மனசில் வந்து தங்கியது.
தன் பெண்மை கெட்டுப் போகாமல் இருக்கத் தான் வேலிகள் போட்டுக் கொள்ள வேண்டியது சரிதான். ஆனால் தான் வேலிகளுக்கு மேல் செங்கல் வைத்து சிமிந்தி பூசி சுவரே கட்டிக் கொண்டது போல் இருந்தது. எந்த ஆணிடமிருந்தும் சுவாசக் காற்று கூடத் தன் மேனியில் படக்கூடாது என்று தடுப்புப் போட்டுக் கொண்டதாக எண்ணினாள்.
அப்படியெல்லாம் போட்டுக் கொண்டும் இந்த மனம் மட்டும் ஏன் அலைகிறது? இதை அலைப்பது எது? ஆணின் – குறிப்பாக அந்த கணேசனின் – அணுக்கம், பரிவு, தொடல் என்பது வேண்டும் என ஏங்குவது ஏன்? ஏங்கச் செய்வது எது? ஏங்குவது குற்றமா? ஏன் குற்றம்? குற்றம் எனத் தெரிந்தும் என் மனம் அடங்காமல் ஏன் ஏங்குகிறது?
குழப்பமாக இருந்தது. ஷவரை அடைத்துவிட்டு துண்டை எடுத்து தோளில் போர்த்தி உடம்பை மெதுவாகத் துவட்டினாள். “இன்னொரு நாளைக்குச் சொல்லுகிறேன்! பை பை!” என்று வெடுக்கென்று தான் சொல்லி விட்டுத் திரும்பிய போது அவன் முகம் தொங்கிப் போயிருந்த காட்சி நினைவுக்கு வந்தது. மிகவும் வருத்தி விட்டேன் என்று நினைத்துக் கொண்டாள்.
அவள் படித்திருந்த எந்தப் புத்தகத்திலும் ஆணும் பெண்ணும் தனியாக ஜோடியாக வெளியே போகக் கூடாது என்றோ உணவு அருந்தக் கூடாது என்றோ சொல்லவில்லை. உண்மையில் புத்தகங்கள் ஆண்-பெண் சமத்துவத்தைத்தான் அதிகம் பேசின. காதல் கதைகள் கூட பாடப் புத்தகங்களில் உண்டு. ஏராளமான “ரோமேன்ஸ்” நாவல்கள் படித்திருக்கிறாள்.
தன் சமூகத்தின் மூளைச் சலவைக்குத் தான் அதிகம் ஆளாகிவிட்டதாக நினைத்தாள் அகிலா. மனதின் இயற்கையான போக்குக்கு விட்டுக் கொடுக்காமல் பிடிவாதமாக மூக்கணாங்கயிறு போட்டுக் கொண்டிருக்கிறோம் என்று நினைத்தாள்.
இப்போது நான் பல்கலைக் கழகத்தில் இருக்கிறேன். பெரிய பெண். பட்டப் படிப்பில் உள்ளவள். உண்மையில் என் அம்மாவை விட அதிகம் அறிவுள்ளவள். இப்போது சுதந்திரத்தைப் பேணலாம். அம்மாவின் அறிவுரைகள் அம்மாவின் காலத்துக்கும் வாழ்க்கை முறைக்கும் சரி. எனக்கும் அது ஒத்து வருமா? என் வானம் அம்மாவை விடப் பெரிது. என் சிறகுகள் இன்னும் நீளமானவை. நான் அம்மா போல கூண்டுக்குள்ளிருந்து பயந்து பயந்து எட்டிப் பார்த்து வாழத் தேவையில்லை.
எவ்வளவு ஆசைகளோடு காத்திருந்திருப்பான். அத்தனையையும் உடைத்து விட்டேன். கொஞ்சம் இதமாகப் பேசியிருக்க வேண்டும். அவனோடு போய் ஒரு நாள் உணவு அருந்தி வரச் சம்மதித்திருக்கலாம். இதில் தவறு ஒன்றுமில்லை. இதிலிருந்து வரும் எந்தத் தீய விளைவிலிருந்தும் என்னைக் காத்துக் கொள்ள எனக்குத் தெரியும். என்னால் முடியும். ஆனால் என் முரட்டுத் தனமான தற்காப்புப் பயிற்சி அதை நிராகரித்து விடு என்று சொல்லியதைக் கேட்டு நிராகரித்து விட்டேன். ஆனால் அடுத்தமுறை கேட்டால்…!
அடுத்த முறை கேட்டால் சரியென்று சம்மதிக்க வேண்டும். வெள்ளன போய் வெள்ளன திரும்பி விடுவோம் என நிபந்தனை விதிக்கலாம். முதல் சந்திப்பிலேயே அதிகம் பேசக் கூடாது. காதல் கீதல் என்ற பேச்சு எழுந்தால் நேரமாகிறது போகலாம் எனப் புறப்பட்டு விட வேண்டும்.
மீண்டும் மனம் தற்காப்புப் பயிற்சியில் ஈடுபடுவதை அறிந்து சிரித்துக் கொண்டாள். “கொஞ்சம் விட்டுக் கொடு மனமே!’ என்று சொல்லிக் கொண்டாள். கொஞ்சம் இணக்கமாக இருக்கக் கற்றுக் கொள். கொஞ்சம் சிரித்துப் பேசு. அன்பு அரும்புவதற்கு வெளி கொடு. அந்த அன்பு காதலாக ஆனால்தான் என்ன? அது அரும்புவதும் மலர்வதும் காலத்தையும் சந்தர்ப்பத்தையும் இன்னும் எத்தனையோ ஆயிரம் விஷயங்களையும் பொருத்திருக்கிறது.
அந்த ஆண் நல்ல குணம் உள்ளவனா? தன்னோடு ஒத்த சிந்தனைகள் உள்ளவனா? ஒத்த விருப்பங்கள் உள்ளவனா? ஒத்த உணர்வுகள் உள்ளவனா? ஏற்ற வயது? உயரம்? சமூக அந்தஸ்து? எல்லாவற்றையும் பொறுத்துத்தானே இணைவது அமையும்! ஆனால் முதலில் அணுக விட்டால்தானே இதையெல்லாம் தெரிந்து கொள்ள முடியும்?
தன்னைச் சுற்றியுள்ள சுவரை அகற்றிக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து கொண்டாள். அடுத்த முறை அவன் தன்னை நாடி வரும் போது… நாடி வருவானா என்பது தெரியவில்லை. இன்று மனதை முற்றாக முறித்து விட்டேனோ என்று கவலைப் பட்டாள்.
உடம்பை முற்றாகத் துடைத்துக் கொண்டு துவாலையைக் கொண்டையில் ஈரம் உறிஞ்ச முடிந்து கொண்டு அறைக்கு வந்தாள். நைட்டியை மாட்டிக் கொண்டு தலை முடியை மீண்டும் ஈரம் போகக் கசக்கிக் கசக்கித் துவட்டிக் கொண்டிருந்த போது கணேசன் நிச்சயம் மீண்டும் தன்னைத் தேடி வருவான் என்றுதான் பட்டது. ஆண்கள் சபலம் உள்ளவர்கள். மீண்டும் மீண்டும் ஆசைப் படுவார்கள். பெண்களின் நிராகரிப்பு அவர்கள் முரட்டுத் தோலில் அவ்வளவாக உறைப்பதில்லை. ஆகவே வருவான்.
*** *** ***
அவன் வரவில்லை. அந்த வாரம் இரவு நடனப் பயிற்சிக்குப் போய்த் திரும்பும் போது அவன் போன வாரம் போலக் காத்திருப்பானா என்று நப்பாசையுடன் பார்த்தாள். இல்லை. இரவில் மர நிழலில் உள்வாங்கி நிற்கிறானா எனப் போகிற போக்கில் மீண்டும் ஒரு முறை பார்த்தாள். இல்லை.
அடுத்த இரண்டு வாரங்களில் அவன் மோட்டார் சைக்கிளில் அங்குமிங்கும் போவதை தூரத்தில் இருந்து பார்த்தாள். அவ்வளவுதான். அவன் பார்த்ததாகத் தெரியவில்லை. பார்த்திருந்தாலும் பார்த்ததாகக் காட்டிக் கொள்ளவில்லை. ஒரு முறை ஜெசிக்கா அவன் மோட்டார் சைக்கிளின் பின்னால் உட்கார்ந்து தோளைத் தழுவிப் போனதையும் பார்த்தாள்.
“ஜெசிக்கா என் ·பிரண்டுதான். ஆனா விசேஷமான ·பிரண்ட் ஒண்ணும் இல்ல! எல்லாரையும் போலத்தான் சாதாரண ·பிரண்ட்!” என்று அவன் சொன்னது நினைவு வந்தது. அப்படியும் இருக்கலாம். ஐசெக் சங்கத்தின் வேலையாக எங்காவது போவார்கள். தோளைப் பிடிக்காமல் மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்து போக முடியாது. ஆகவே இதையெல்லாம் பெரிதாக எண்ண ஒன்றுமில்லை.
ஆனால் இறுக்கமாகத்தான் பிடித்திருந்தாள். அது விழாமல் இருக்கப் பிடித்த பிடியல்ல. ஒரு கேர்ல் ·பிரன்டின் அன்புப் பிடி போலத்தான் இருந்தது. அப்படியும் இருக்கலாம். நான் வேண்டாம் என்று விரட்டி விட்ட பிறகு “சாதாரண ·பிரண்ட்”, “விசேஷமான ·பிரண்ட்” ஆக மாறியிருக்கலாம். அதைக் கேட்கவோ கவனிக்கவோ வருத்தப் படவோ நான் யார் என்று கேட்டுக் கொண்டாள். ஆனால் கணேசனைத் தூரத்தில் பார்க்கும் போது கூட தன் இருதய இயக்கம் சில துடிப்புக்கள் கூடி விடுவதை அவளால் தவிர்க்க முடியவில்லை.
நடனப் பயிற்சி மிக மும்முரமாக இருந்தது. எவ்வளவு நன்றாக ஆடினாலும் பேராசிரியர் கௌஸ் விரட்டிக் கொண்டே இருந்தார். ஆனால் நடக்கின்ற தவறுகளுக்கு அவரே பெரும்பாலும் காரணமாக இருந்தார். தான் சொன்ன அடிகளைத் தானே மறந்து விட்டு ஆடி மற்றவர்களையும் திரும்பத் திரும்ப ஆட வைத்துக் கொண்டிருந்தார். வயதாகிக் கொண்டிருக்கும் காலத்தில் இவர் ஆடாமல் மற்றவர்களை ஆடவிட்டால் என்ன என்று அகிலா மனதுக்குள் அவர் மீது கோபப் பட்டாள். ஆனால் நடனம் நன்றாக விறுவிறுப்பாக உருவெடுத்துக் கொண்டு வந்தது.
கணேசனின் விசாரணைக்கு அடுத்த வாரத்தில் ராஜனும் அவன் நண்பர்கள் இருவரும் பல்கலைக் கழகத்தை விட்டு ஓராண்டுக்குத் தள்ளி வைக்கப் பட்டிருப்பதான செய்தி வளாகம் முழுவதும் காட்டுத் தீ போல பரவியது. தங்கள் சமூக மாணவர்கள் சிலர் இப்படி தண்டிக்கப்பட்டிருப்பது இந்திய மாணவர்களுக்கிடையே வருத்தத்தை எழுப்பினாலும் ராஜனுக்காகவும் அவன் நண்பர்களுக்காகவும் தனிப்பட யாரும் வருந்தியதாகத் தெரியவில்லை. பரசுராமனுக்கும் பொய்ப் புகார் கொடுத்ததற்காக 100 ரிங்கிட் அபராதம் மட்டும் விதித்திருந்தார்கள். அவன் இறுதியில் உண்மையைச் சொல்லி இந்த விவகாரத்தைத் தீர்த்து வைத்ததற்காக அவனுக்குக் கருணை காட்டப் பட்டிருந்தது. பல்கலைக் கழகத்தின் நடவடிக்கையைப் பாராட்டி “பெரித்தா கேம்பஸ்” இதழில் ஜெசிக்கா தலையங்கம் எழுதியிருந்தாள்.
பட்டமளிப்பு விழாவுக்காகப் பல்கலைக் கழகம் களை கட்டிக் கொண்டிருந்தது. சையட் புத்ரா பட்டமளிப்பு மண்டபத்தை அலங்கரிக்கத் தொடங்கியிருந்தார்கள். பட்டமளிப்பு விழாவுக்காக வரும் ஆயிரக் கணக்கான பெற்றோர்களுக்காகவும் உறவினர்களுக்காகவும் சுற்று வட்டாரத்தில் மாணவர்கள் கடைகள் அமைக்கத் தொடங்கியிருந்தார்கள்.
ஒரு நாள் இரவில் அகிலா நடனப் பயிற்சி முடிந்து போகிற வழியில் அந்த மண்டபத்துக்குள் எட்டிப் பார்த்தாள். மண்பானைகளில் நடப்பட்ட நூற்றுக் கணக்கான சாமந்திப் பூச்செடிகள் அரங்கத்தைச் சுற்றிலும் அடுக்கப்பட்டிருந்தன. அரங்கத்தில் வேந்தர், துணை வேந்தர் மற்ற பேராசிரியர்கள் உட்கார நாற்காலிகள் அடுக்கிக் கொண்டிருந்தார்கள். சிவப்புக் கம்பளம் விரித்திருந்தார்கள். 2,200 பேர் உட்காரக் கூடிய அந்த மண்டபம் அப்போது ஆளில்லாமல் “ஓ”வென்றிருந்தது.
ஆனால் பட்டமளிப்பு நாளன்று இந்த இடம் “ஓஹோ”வென்றிருக்கும். பட்டதாரிகளின் வெல்வெட் கவுன்கள் ஆயிரக் கணக்கில் படபடக்கும். அவர்கள் தோளிலும் மார்பிலும் தங்கள் பட்டத்திற்கேற்ப வெவ்வேறு வண்ணங்களில் பட்டைகள் அணிந்திருப்பார்கள். அவர்களின் பலகைத் தொப்பிகள் குஞ்சம் அலைய தலையை மறைத்திருக்கும். பேராசிரியர்கள் பெயர் சொல்லிக் கூப்பிட அவர்கள் வரிசையாக கலை, அறிவியல், சமூகவியல், கட்டவியல், பொறியியல், மருத்துவம் என்று தங்கள் உழைப்புகளின் அறுவடையை வேந்தரின் கைகளிலிருந்தோ இணைவேந்தரின் கைகளிலிருந்தோ பெற்றுக் கொள்வார்கள்.
பல்கலைக் கழகத்தின் உச்ச கட்டமான இந்த மாபெரும் வைபவத்தில் முதலாண்டிலேயே தானும் ஓரளவு பங்கு பெற வாய்ப்புக் கிடைத்திருப்பது அகிலாவுக்குப் பெருமையாக இருந்தது. பட்டமளிப்பு விழாவுக்கு முதல் நாள் இரவில் வேந்தருக்கு அளிக்கப்படும் ஆடம்பர விருந்தில் நடனமாடுவது தான் பல்கலைக் கழகத்திற்கு அர்ப்பணிக்கும் சேவை என்று நினைத்தாள். மேலும் பட்டமளிப்பு விழா அன்று ரோஜா மலர்கள் விற்பதற்கு இந்திய மாணவர்கள் அமைத்திருந்த ஒரு குழுவில் அவளும் சேர்ந்திருந்தாள். ஆகவே இந்த ஆண்டுப் பட்டதாரிகளிடையேயும் அவர்கள் பெற்றோர்களிடையே கலந்து பழகலாம். அந்தப் பரபரப்பில் பங்கு கொள்ளலாம்.
எல்லாவற்றிற்கும் உச்ச கட்டமாக இன்னும் நான்கு ஆண்டுகளில் இதே அரங்கத்தில் தானும் பட்டம் வாங்கலாம். பட்டமளிப்பு கவுனின் வெல்வெட் துணியின் ஸ்பரிசத்தை அனுபவிக்கலாம். இரண்டாயிரம் பேர் பார்த்திருக்க, தன் பெற்றோர்கள் அவர்களிடையே பெருமையுடன் அமர்ந்திருக்க, இந்தப் பல்கலைக் கழகத்தின் உயர் பேராசிரியர்கள் முன்னிலையில் வேந்தர் முன் கம்பீரமாக நின்று கணினித்துறை இளங்கலைப் பட்டதாரி என்ற தகுதியைப் பெற்றுக் கொள்ளலாம்.
மனம் பெருமிதப் பட்டது. ஆனால் அதைக் காண கணேசன் அங்கிருக்க மாட்டான் என்ற நினைவு வந்தது. இன்னும் இரண்டாண்டுகளில் அவன் பட்டம் வாங்கி வெளியேறிவிடுவான். பின் அவன் யாரோ நான் யாரோ!
இப்போது மட்டுமென்ன! அவன் யாரோ நான் யாரோதான்!
கணேசன், உங்களுக்கு இரண்டாவது சந்தர்ப்பத்தில் நம்பிக்கையில்லையா? ஒரு முறை தோற்றால் மறு முறை முயலலாம் என்பது தெரியாதா? ஏன் என்னைப் பார்க்க வரவில்லை கணேசன்?
***
——————————————————————————–

        நாற்காலியில் உட்கார்ந்து சுற்றிலும் கண்களைச் சுழலவிட்ட போது அவனுக்கு பல அதிர்ச்சிகள் காத்திருந்தன. அவன் எதிர்பார்த்தது போலவே டத்தோ சலீம், பேராசிரியர் முருகேசு, ரித்வான், அவனுடைய விடுதித் தலைவர் டாக்டர் ரஹீம் ஆகியோர் இருந்தனர். ஆனால் இன்னொரு பக்கத்தில் அகிலாவும் பரசுராமனும் இருந்தது அவன் முற்றிலும் எதிர்பார்க்காத அதிர்ச்சியாக இருந்தது. பரசுராமன் தலை குனிந்து இருந்தான். அகிலாவின் மீது அவன் பார்வை பட்ட போது அவள் மெலிதாகப் புன்னகைத்தாள். எப்படி இங்கே வந்தாள்? ஏன்?இன்னொரு நாற்காலியில் ஓரமாக அவனுடைய விடுதியில் தங்கியிருக்கும் சீன மாணவரான லீ எம் பூன் இருந்தார். இவருக்கும் இங்கு என்ன வேலை என்று தெரியவில்லை. அதே போல பரசுராமன் தங்கியிருக்கும் அமான் விடுதியின் தலைவரான டாக்டர் கான் என்பவரும் அங்கிருந்தார். நிலைமை மிகவும் குழப்பமாக இருந்தது.

 

      படபடப்பு மேலும் அதிகமாக உட்கார்ந்து டத்தோ சலீமின் முகத்தைப் பார்த்தவாறு இருந்தான்.டத்தோ சலீம் பேசினார். “இந்த விசாரணை இரண்டாவது கட்டமாக இன்று நடக்கிறது. இரண்டு விஷயங்களை இதில் விசாரிக்கப் போகிறோம். முதலில் பல்கலைக் கழக வளாகத்தில் ரேகிங் நடந்தது உண்மையா அல்லவா? அதற்குப் பொறுப்பானவர்கள் யார்? என்பது. இரண்டாவதாக ராஜனும் அவர் நண்பர் வின்சன்டும் வெளியில் உள்ள ரகசியக் கும்பல் ஆட்களை உள்ளே கொண்டு வந்து கணேசனை மிரட்டியதாக கணேசன் கொடுத்துள்ள முறையீடு.“இந்த விசாரணையில் புதிய தகவல்கள் வெளிப்பட்டிருப்பதால் இன்றைய விசாரணைக்கு முன் காலை எட்டு மணிக்கெல்லாம் இன்னொரு முன் விசாரணையும் நடத்தப்பட்டது என்பதைப் புதிதாக வந்திருப்பவர்களுக்கு நான் அறிவிக்க விரும்புகிறேன். அந்த முன் விசாரணையில் பரசுராமன் என்ற முதலாண்டு மாணவர், அகிலா என்ற முதலாண்டு மாணவி, லீ எம் பூன் என்ற இறுதியாண்டு மாணவர் ஆகியோர் இதுவரை விசாரிக்கப் பட்டார்கள்.

 

      அந்த விசாரணையில் வெளிப்பட்ட தகவல்களை இப்போது புகார்தாரர்களுக்கு, அதாவது கணேசன், ராஜன், வின்சன்ட் ஆகியவர்களுக்கு நான் தெரிவிக்கிறேன். அந்தத் தகவல்கள் உண்மையா அல்லவா என்பதைப் பற்றி அவர்கள் கருத்துரைக்கலாம்”கணேசனுக்கு எல்லாம் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக இருந்தது. இப்படி ஒரு முன்விசாரணை நடத்த வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது? எப்படி?ராஜனும் வின்சன்டும் கூட முகங்களை இறுக்கமாக வைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கும் இங்கு நடப்பது அதிர்ச்சியாக இருப்பது போலத்தான் தெரிந்தது.டத்தோ சலீம் தொடர்ந்தார்: “முதலில் பரசுராமனின் சாட்சியம். முதலில் அவர் தன்னுடைய முதல் முறையீட்டில் தான் கணேசன் பற்றிக் கொடுத்துள்ள ரேகிங் முறையீடு பொய் என இப்போது ஒப்புக் கொண்டிருக்கிறார். ராஜன், வின்சன்ட் இவர்களின் வற்புறுத்தலினால்தான் தான் அந்த முறையீட்டைச் செய்ததாக ஒப்புக் கொள்கிறார். மேலும் கணேசன், அகிலா ஆகியோர் அந்த ரேகிங் நிகழ்ச்சி பற்றிக் கொடுத்துள்ள விளக்கங்கள்தான் சரி என ஒத்துக் கொண்டுள்ளார். அகிலாவிடமும் இது பற்றி விளக்கம் பெற்றிருக்கிறோம்.

 

      பரசுராமன், அகிலா இருவரும் ரேகிங் எப்படி யாரால் நடத்தப்பட்டது என்பது பற்றியும் அதில் கணேசனின் பங்கு என்ன என்பது பற்றியும் ஒரே வகையான விவரங்களைத் தந்துள்ளார்கள்.“இந்த விவரங்களின் படி ராஜன் அகிலாவை ஏமாற்றி ரேகிங் நடந்த இடத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். பரசுராமன் ஏற்கனவே அந்தக் கூட்டத்தில் இருந்திருக்கிறார். பரசுராமனை வற்புறுத்தி அகிலாவை முத்தமிடச் செய்தது ராஜனும் நண்பர்களும். கணேசன் அங்கு வந்து பரசுராமனை அடித்து வீழ்த்தி அகிலாவை மீட்டுச் சென்றுள்ளார்”டத்தோ சலீம் நிறுத்தினார். கணேசனின் உள்ளத்தில் புதிய மகிழ்ச்சிப் புனல் பாய்ந்தது. எப்படி இவையெல்லாம் நிகழ்ந்தன? எந்தத் தெய்வம் தோன்றி என் தலைக்கு மேல் திரண்டிருந்த கருமேகங்களைப் போக்கியது? அகிலாவை நன்றியுடன் நோக்கினான்.“பரசுராமனின் முதல் பொய் முறையீட்டுக்கு ராஜனும் வின்சன்டும் காரணமாக இருந்திருப்பதோடு பொய்யான சாட்சியங்களையும் வழங்கியிருக்கிறீர்கள் இன்று இதன் மூலம் தெரிகிறது. என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?”ராஜன் நிமிர்ந்து உட்கார்ந்து சொன்னான்: “டத்தோ, இந்தப் பரசுராமனை யாரோ மிரட்டி இப்படிப் பொய் பேச வைத்திருக்கிறார்கள். அவர் இப்போது சொல்வதுதான் பொய். பரசுராமனை கணேசன் ரேகிங் செய்தார் என்பதற்கு நான் பல சாட்சிகளைக் கொண்டு வர முடியும்!”டத்தோ சலீம் பரசுராமனைப் பார்த்தார்.

 

       “பரசுராமன். நீ உன்னுடைய முதல் முறையீட்டை இப்படி மாற்றிக் கொண்டதற்கு என்ன காரணம் என்று சொல்!” என்றார்.பரசுராமன் தணிந்த குரலில் பேசினான்: “டத்தோ! நான் புதிய மாணவன். என் சீனியர்களுக்கு பயந்து நடுங்கியிருந்தேன். ராஜனின் குழு என்னைப் பிடித்து ரேகிங் செய்த போது அவர்களைப் பகைத்துக் கொள்ள வேண்டாம் என்று அவர்கள் சொன்ன படியெல்லாம் செய்தேன். அப்புறம் இந்த ராஜன் அகிலாவைக் கொண்டு வந்து கேலி செய்து என்னைக் கூப்பிட்டு முத்தமிடச் செய்தார். அது எனக்கு அருவருப்பாக இருந்தாலும் அவர்களுக்குப் பயந்து செய்தேன். இதனால் அகிலா வருத்தப்பட்டு அழுதபோது நானும் வருந்தினேன். கணேசன் தலையிட்டு என்னை அடித்து அகிலாவைக் காப்பாற்றியது எனக்கு உண்மையில் பெரும் ஆறுதலாக இருந்தது. ஆனால் இந்த ராஜனும் நண்பர்களும் என்னை விடவில்லை. கையோடு அழைத்துப் போய் கணேசன் மீது முறையீடு கொடுக்கச் சொன்னார்கள். என்ன சொல்ல வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார்கள். அவர்கள் சக்தியில் நான் முற்றாகக் கட்டுப் பட்டிருந்தேன். என் மனசாட்சிக்கு மாறாகத்தான் அனைத்தையும் செய்தேன்” நிறுத்திக் கண்களைத் துடைத்தான்.“இப்போது நீ மனம் மாறியது எப்படி?” டத்தோ சலீம் கேட்டார்.

 

       “எனக்கு கணேசன் யாரென்று முன்னால் தெரியாது. ஆனால் இந்தச் சம்பவம் நடந்த பிறகு பலர் அவர் எவ்வளவு உதாரணமான மாணவர் என்றும் இவ்வளவு நல்ல மாணவர் தண்டிக்கப்படுவது எவ்வளவு பெரிய அநீதி என்றும் பேசிக் கொண்டதைக் கேட்ட போதுதான் நான் செய்த தவற்றால் ஒரு நல்ல உதாரணமான, குற்றமற்ற மாணவர் தண்டிக்கப்படப் போகிறார் என்று உணர்ந்தேன்”“அதுதான் நீ உன் முறையீட்டை மாற்றிக் கொண்டதன் காரணமா?”“இல்லை. ராஜனும் அவர் நண்பர்களும் எப்போதும் என்னைச் சூழ்ந்து கொண்டு மிரட்டிக் கொண்டே இருந்தார்கள். கணேசனுடனோ அவருக்கு அனுதாபமாக உள்ள மற்ற மாணவர்களுடனோ என்னைப் பழக விடவில்லை. ஆகவே நானும் பயந்து இருந்தேன்!” மௌனமானான்.“அப்புறம்?”“முந்தா நாள் நான் தங்கியிருக்கும் அமான் விடுதியின் தலைவர் டாக்டர் கான் இரவில் என்னை அவருடைய அலுவலகத்திற்குக் கூப்பிட்டனுப்பினார். அங்கே நான் போனபோது பேராசிரியர் முருகேசுவும் அவருடன் இருந்தார். இந்த ரேகிங் கேஸ் பற்றி என்னிடம் பேச விரும்புவதாகப் பேராசிரியர் கூறினார். நான் ஏற்கனவே முறையீட்டில் தெரிவித்ததைத் தவிர வேறு புதிய தகவல்கள் இருந்தால் அதைச் சொல்வதற்கு எனக்கு ஒரு வாய்ப்புக் கொடுப்பதாகவும் அதற்கு டாக்டர் கான் சாட்சியாக இருப்பார் என்றும் கூறினார்.

 

      ராஜனின் அடக்குமுறைக்கு உட்படாமல் உண்மையைக் கூற இதுதான் சந்தர்ப்பம் என்று அவரிடம் எல்லா உண்மைகளையும் கூறினேன். பின்னர் அவர்கள் இருவரின் ஆலோசனையின் பேரில் இன்றைக்கு விசாரணையில் எல்லோர் முன்னிலையிலும் மீண்டும் உண்மைகளைக் கூற ஒப்புக் கொண்டேன்!” மீண்டும் கண்களைத் துடைத்துக் கொண்டான்.“இப்போது ராஜனும் வின்சன்டும் என்ன சொல்கிறீர்கள்?”ராஜன்தான் மீண்டும் பேசினான்: “டத்தோ! கணேசனைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் எல்லோரும் செயல் படுகிறீர்கள். பேராசிரியர் தலையிட்டு பரசுராமனின் மனசைக் கலைத்திருக்கிறார்”பேராசிரியர் பேசினார்: “டத்தோ! இந்தக் குற்றச்சாட்டு என் மேல் வரும் என்று முன்னறிந்துதான் நான் இந்தப் பரசுராமன் என்ற மாணவரிடம் தனியாகப் பேசாமல் அவருடைய விடுதித் தலைவரின் அனுமதியுடன் அவர் முன்னிலையில் பேசினேன். ஆகவே எந்த விதத்திலும் அவர் மனதைக் கலைக்கவில்லை!”டாக்டர் கான் குறுக்கிட்டுச் சொன்னார்: “உண்மைதான் டத்தோ! பரசுராமன் எந்த வகையிலும் வற்புறுத்தப் படவில்லை. இந்த சந்தர்ப்பம் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைந்தவராகத்தான் இருந்தார்.

 

      எல்லா உண்மைகளையும் தாமாகத்தான் சொன்னார்”ராஜனின் முகத்தில் கோபமும் குரோதமும் கொப்பளித்தன. அவனைச் சுற்றி ஒரு வலை இறுக்கப் படுகிறது என உணர்ந்து கொண்டான். ஆனால் இன்னும் அவன் விட்டுக் கொடுத்துவிடத் தயாராக இல்லை. “டத்தோ! ரேகிங் நிகழ்ச்சியை நேரில் பார்த்தவர்களில் என் நண்பர்கள் இன்னும் பல பேர் இருக்கிறார்கள். அவர்களை நீங்கள் விசாரித்துப் பார்த்தால் நான் சொல்வதை உறுதிப் படுத்துவார்கள்! அவர்களையெல்லாம் நம்பாமல் அகிலாவும் கணேசனும் இப்போது இந்தப் பரசுராமனும் சொல்லும் பொய்யை ஏன் நீங்கள் நம்பவேண்டும்?”“பரசுராமன்தான் இதில் முறையீடு செய்தவர். அவருடைய பேச்சுக்குத்தான் நாம் முதல் மதிப்பு அளிக்க வேண்டும். முதலில் பொய்யான குற்றச் சாட்டு ஏன் சுமத்தினார் என்பதற்கும், பின்னால் அதை மாற்றிக் கொண்டதற்குமான சூழ்நிலைகளை அவர் விளக்கியிருப்பதால் அவை அனைத்தையும் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியதுதான் முக்கியம். இனி இதற்கு அதிகமான பேர்களை சாட்சிக்கு அழைக்கத் தேவையில்லை”கோப்புகளைக் கொஞ்ச நேரம் புரட்டிப் பார்த்து மீண்டும் பேசினார்: “நான் இப்போது கணேசன் செய்த முறையீடு பற்றி விசாரிக்க விரும்புகிறேன்.

 

      கணேசனின் விடுதியில் ராஜன் வெளியில் உள்ள குண்டர் கும்பல் உறுப்பினர்களைக் கொண்டு வந்து மிரட்டியதாக கணேசன் கூறியுள்ளார். அது முற்றிலும் பொய் என ராஜன் மறுத்துள்ளார். ஆனால் கணேசன் சொன்ன அந்தச் சம்பவம் நடந்தது உண்மைதான் எனச் சொல்ல இப்போது ஒரு சாட்சி கிடைத்திருக்கிறார்”கணேசன் நிமிர்ந்து உட்கார்ந்தான். யார் சாட்சி? இத்தனை நாள் இல்லாமல் எங்கிருந்து வந்தது இந்த சாட்சி?“லீ எம் பூன்! நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?”லீ எம் பூன் நிமிர்ந்து உட்கார்ந்தார். “டத்தோ! எங்கள் விடுதியில் அந்த நாள் நான் இரவில் டெலிவிஷனில் குத்துச் சண்டை படம் பார்த்துக் கொண்டிருந்தேன். எல்லோரும் போய்விட்டதனால் வரவேற்பறையில் உள்ள செட்டியில் படுத்துக் கொண்டே பார்த்துக் கொண்டிருந்தேன். அப்புறம் எனக்குப் பின்னால் சிலர் பேசுகின்ற சத்தம் கேட்டது. தமிழிலும் மலாயிலும் மாறி மாறிப் பேசினார்கள். யார் என்று தலை உயர்த்திப் பார்த்தேன். கணேசனை அடையாளம் கண்டு கொண்டேன்.

 

      ராஜனையும் எனக்குத் தெரியும். இன்னும் இரண்டு பேர் எனக்குத் தெரியாதவர்கள். அவர்கள் மாணவர்களா வெளி ஆட்களா என்று தெரியாது. ஆனால் கணேசன் சொன்னது போல அவர்கள் விடுதியின் வரவேற்பறையில் கொஞ்சம் கோபமாகப் பேசிக் கொண்டிருந்தது உண்மைதான். எதைப்பற்றிப் பேசினார்கள் என எனக்குத் தெரியாது!”கணேசன் மனதில் மீண்டும் மகிழ்ச்சிப் புனல் பாய்ந்தது. லீ எம் பூன் தன்னைக் காக்க வந்த தெய்வம் போலத் தெரிந்தான்.“மிஸ்டர் லீ! இந்தச் சம்பவம் பற்றித் தெரிந்தவர்கள் விடுதித் தலைவருக்கு அறிவிக்க வேண்டும் என பல நாள் நோட்டீஸ் எழுதிப் போட்டிருந்ததாக அறிகிறேன். நீங்கள் இது வரை சொல்லாமல் இருந்தது ஏன்?”“டத்தோ, நான் வீடமைப்பு, கட்டடவியல், திட்டமிடுதல் பிரிவில் நான்காம் ஆண்டு மாணவன். மூன்றாம் ஆண்டு இறுதியில் விடுமுறையின் போது கோல லும்பூரில் என்னுடைய ஆண்டிறுதி புரொஜெக்ட் செய்ய ஆரம்பித்தேன். அதை முடிக்க முடியவில்லை. இந்தப் பருவ ஆரம்பத்தில் புதிய பாடங்களைப் பதிவு செய்வதற்காகத் திரும்பினேன்.

 

      பதிவு முடிந்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு என் டீனிடம் அனுமதி பெற்று விடுமுறை எடுத்துக் கொண்டு மீண்டும் கோல லும்பூர் போய் புரொஜக்டை முடித்து இரண்டு நாள் முன்புதான் வந்தேன். நேற்றுதான் நோட்டீஸ் பார்த்தேன். உடனே பெங்காவாவைச் சென்று பார்த்தேன். அவர் உங்களிடம் பேசி இன்று காலை விசாரணை இருப்பதைக் கூறி என்னை அழைத்து வந்தார்”“சரி! நீங்கள் அந்த அறையில் இருந்தது மற்றவர்களுக்குத் தெரியாமல் போனது எப்படி?”“நான் படுத்திருந்தேன். சத்தம் கேட்டவுடன் தலையைத் தூக்கி குஷன்களின் இடுக்கில் பார்த்து விட்டு இந்த இந்திய மாணவர்கள் இப்படித்தான் ஒருவருக்கு ஒருவர் அடித்துக் கொள்வார்கள், நமக்கு என்ன என்று மீண்டும் குத்துச் சண்டையில் ஆழ்ந்து விட்டேன்! அந்த நிலையில் அவர்கள் என்னைப் பார்க்கச் சந்தர்ப்பம் இருந்திருக்காது”டத்தோ சலீம் ராஜனைப் பார்த்தார். “ராஜன், அன்றைக்கு நீங்கள் கணேசனின் விடுதிக்குப் போகவே இல்லை என்று சொன்னீர்களே! இதற்கு என்ன சொல்கிறீர்கள்? உங்களுடன் விடுதிக்கு வந்திருந்த அந்த மற்ற இருவர் யார்? வெளி ஆட்கள் என்பது உண்மையா?”ராஜனின் முகம் கடுமையாக இருந்தது. ஆனால் வின்சன்ட் பயந்து ஒடுங்கி இருந்தான். ராஜன் சத்தமாகப் பேசினான்: “டத்தோ! எனக்கு எதிராக இங்கே பெரிய சூழ்ச்சிகள் நடந்திருக்கின்றன. எல்லோரும் சேர்ந்து கொண்டு என்னைக் குற்றவாளியாக்கப் பார்க்கிறார்கள். இது அத்தனையும் பொய். இந்த லீ கணேசனின் நண்பர். அவருக்குப் பொய் சொல்லிக் கொடுத்து தயார் படுத்தியிருக்கிறார்கள்!”கணேசனின் விடுதித் தலைவர் டாக்டர் ரஹீம் பேசினார். “

 

     டத்தோ! லீ எம் பூனும் கணேசனும் நண்பர்கள் என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் லீ எம் பூன் புரொஜக்ட் வேலை முடிந்து விடுதிக்குத் திரும்பிய பிறகு கணேசனைப் பார்க்கவே இல்லை. கணேசன் மீது இப்படி ஒரு விசாரணை இருக்கும் செய்தியே அவருக்குத் தெரியாது. நோட்டீஸ் போர்டில் நோட்டீஸ் பார்த்ததும் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் வரவேற்பறையில் டெலிவிஷன் பார்த்துக் கொண்டிருந்தவர் என்ற முறையில் என்னைப் பார்க்க வந்தார். இதையெல்லாம் அவரிடம் விசாரித்துத் தெரிந்து கொண்ட பிறகுதான் நான் உங்களுக்குப் போன் செய்தேன்!”ராஜன் மீண்டும் உரத்த குரலில் பேசினான். “டத்தோ! இதில் முக்கியமாக கணேசன் ரேகிங்கில் ஈடுபட்டாரா இல்லையா என்பதுதானே முக்கியம்? ரேகிங் நடந்த அன்று என்னோடு இருந்தவர்கள் யார் யாரென்று நான் உங்களுக்குச் சொல்லத் தயாராக இருக்கிறேன். இன்னும் நான்கு முதல் ஐந்து பேர் ரேகிங்போது நடந்தது உண்மை என்று சாட்சி சொல்லுவார்கள். நீங்கள் அவர்களைக் கூப்பிட்டு விசாரிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளுகிறேன்! அப்போதுதான் உங்களுக்கு உண்மை விளங்கும். அதற்குப் பிறகு நடந்தது எல்லாம் கணேசனின் சகாக்களும் நண்பர்களும் இட்டுக்கட்டியுள்ள கற்பனைக் கதைகள்தான்!” என்றான்.

 

      டத்தோ சலீம் சுற்றிலும் பார்த்தார். “அப்படியானால் இந்த இரண்டு விடுதித் தலைவர்கள், பேராசிரியர் முருகேசு எல்லோருமே கூடிப் பேசி இப்படி ஒரு பொய்க்கதையை உக்களுக்கு எதிராக ஜோடித்திருக்கிறார்கள் என்கிறீர்கள்!”“அப்படித்தான் தெரிகிறது!”“உங்கள் நண்பர்கள் இன்னும் நாலைந்து பேரை அழைத்துக் கேட்டால் அவர்கள் உங்கள் சார்பாக உண்மை பேசுவார்கள்!”“என் சார்பாக அல்ல! நடந்த உண்மையைச் சொல்லுவார்கள்!”பரசுராமன் கை உயர்த்தித் தான் பேச விரும்புவதைத் தெரிவித்தான். டத்தோ அவனுக்கு வாய்ப்புக் கொடுத்தார். “டத்தோ! அன்று ரேகிங் நிகழ்ச்சியில் கூடியிருந்தவர்கள் அனைவரும் ராஜாவின் தலைமையில் உள்ள காராட் கேங் உறுப்பினர்கள். ஆகவே தங்கள் ரகசியக் கும்பல் விசுவாசத்தால் ராஜனின் கூற்றை ஆதரிப்பார்கள். அதை ஏற்றுக் கொள்ள வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். காராட் கேங்கிற்கு வெளியே உள்ளவர்களாக அந்தக் கூட்டத்தில் இருந்தவர்கள் நான், அகிலா மற்றும் கணேசன் மூவரும்தான்!” என்றான்.டத்தோ சலீம் நிமிர்ந்து உட்கார்ந்தார். “பரசுராமன் சொல்லியதிலிருந்து நாம் விசாரிக்க வேண்டிய இன்னொரு முக்கிய விஷயத்தையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். இந்த காராட் கேங் என்ற பெயரில் இந்திய மாணவர்கள் ரகசியக் கும்பல் ஒன்று இந்தப் பல்கலைக் கழகத்தில் இருக்கிறதா? ரித்வான்! உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்.

 

      “இப்படி ஒரு கேங் இருப்பதாக வதந்திகள் கேள்விப் பட்டிருக்கிறேன் டத்தோ! ஆனால் இதுவரை அது நிருபிக்கப் படவில்லை. அப்படி இருந்தால் அந்தக் கும்பல் மிக ரகசியமாகச் செயல் படுகிறது என்றுதான் அர்த்தம்!” என்றார் பாதுகாப்புத் துறைத் தலைவர்.“ராஜன்! இப்படி ஒரு கும்பலை நீங்கள் நடத்தி வருவது உண்மையா?” டத்தோ அவனை நோக்கி நேரடியாகக் கேட்டார்.ராஜனின் முகம் இருண்டிருந்தது. “சுத்தப் பொய் டத்தோ. அப்படி ஏதும் கும்பல் இல்லை. அப்படி இருந்தாலும் எங்களுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை!”“பரசுராமன், அப்படி ஒரு கும்பல் இருப்பதாக எப்படிச் சொல்லுகிறீர்கள்?”பரசுராமன் நிதானமாகப் பேசினான்: “டத்தோ, இந்த காராட் கேங் என்று ஒன்று நிச்சயமாக இருக்கிறது. அதற்கு ராஜன்தான் தலைவர். என்னையும் காராட் கேங்கில் வற்புறுத்திச் சேர்த்து விட்டார்கள். இதோ இருக்கிறது சான்று!” பரசுராமன் தன் பைக்குள் வைத்திருந்த ஒரு வெள்ளை டீ சட்டையை எடுத்துக் காட்டினான். அதில் “காராட் கேங்” என எழுத்துக்கள் அச்சிடப் பட்டிருந்தன. “இதை எனக்குக் கொடுத்து அணிந்து கொள்ளச் சொன்னது ராஜன்தான்!” என்றான்.டத்தோ ராஜனைப் பார்த்தார். “

 

       பொய் டத்தோ! எனக்கும் இந்த டீ சட்டைக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை! இந்த மாதிரு டீ சட்டையை யார் வேண்டுமானாலும் காசு கொடுத்து அச்சிட்டுக் கொள்ளலாம்”பரசுராமன் மீண்டும் கை உயர்த்தினான். “டத்தோ! காராட் கேங் உறுப்பினர்கள் அனைவரும் எல்லா நேரங்களிலும் இந்த டீ சட்டையை தங்கள் மேல் சட்டைக்குள் அணிந்திருக்க வேண்டும் என்பது விதி. இந்த விதிப்படி ராஜனும் வின்சன்டும் இந்தச் சட்டையை இப்போதும் அணிந்திருக்கிறார்கள்!”“பொய்!” என்று கத்தினான் ராஜன்.“அது பொய் என்றால் உன் மேல் சட்டையை இப்போது அவிழ்த்து உள்ளே உள்ள டீ சட்டையைக் காட்ட முடியுமா?” என்று கேட்டார் டத்தோ சலீம்.ராஜன் மீண்டும் கத்தினான். “டத்தோ! இது எங்களுக்குப் பெரிய அவமானம். ஒரு பெண் உட்பட இத்தனை பேர் நிறைந்துள்ள இந்த அவையில் எங்களை சட்டையை அவிழ்த்துக் காட்டச் சொல்ல உங்களுக்கு உரிமை இல்லை. நாங்கள் அப்படிச் செய்ய மறுக்கிறோம்”பொறியில் அகப்பட்டுக் கொண்ட எலி முட்டி மோதித் திரிகிறது என கணேசன் நினைத்துக் கொண்டான்.டத்தோ சலீம் அமைதியாகக் கூறினார்: “சரி! அப்படியானால் பாதுகாப்புத் தலைவர் ரித்வான் அவர்களோடு நீங்கள் ஒரு தனி அறைக்குப் போய் அவருக்கு மட்டும் சட்டையை அவிழ்த்துக் காட்ட முடியுமா?”“முடியாது! அப்படி எங்களை வற்புறுத்த உங்களுக்கு உரிமையில்லை! நீங்கள் உங்களுக்கு முன் உள்ள வழக்கை வாய் மூலமாகத்தான் விசாரிக்க வேண்டும். இந்த வகையான அவமானத்துக்கு நாங்கள் உட்பட மாட்டோம்” என்று கத்தினான்.டத்தோ சலீம் ரித்வானோடு குனிந்து காதில் பேசினார். இருவரும் தலையசைத்துக் கொண்டார்கள். பிறகு டத்தோ சலீம் ராஜனைப் பார்த்துச் சொன்னார்.

 

       “என்னுடைய கோரிக்கைக்கு நீங்கள் கட்டுப்பட மறுப்பதால் மூன்று பாதுகாவலர்களை இங்கு அழைத்து வந்து உங்களை இந்த அறையிலேயே தடுத்து வைக்கப் போகிறேன். தொடர்ந்து போலீசுக்குப் போன் பண்ணி அவர்களை அழைத்து அவர்களிடம் உங்களை ஒப்புவிக்கப் போகிறேன். அது தவிர இதைச் சுமுகமாகத் தீர்க்கும் வழி எனக்குத் தெரியவில்லை!” என்றார்.வின்சன்ட் திடீரென எழுந்து நின்றான். “டத்தோ அப்படிச் செய்யத் தேவையில்லை!” என்றான். அவர்கள் அனைவரின் முன்னும் சட்டைப் பொத்தான்களைக் கழற்றினான். உள்ளே இருந்த வெள்ளை டீ சட்டையில் “காராட் கேங்” எனக் கொட்டை எழுத்துக்களில் எழுதியிருந்தது.

 

       அகிலா தன் புதிய அறையில் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள்.பிற்பகலில் அந்த கெமிலாங் விடுதி ஓ என்று கிடந்தது. முதல் பருவத்தின் மத்தியில் முதல் சோதனை விரைவில் வருவதால் மாணவர்கள் அனைவரும் விரிவுரையிலோ அல்லது நூல் நிலையத்திலோ இருந்தார்கள். அகிலாவுக்கும் அன்று பிற்பகலில் கம்ப்யூட்டர் லேப் இருந்தது. ஆனால் அவள் போகவில்லை. போக மனசு வரவில்லை.விசாரணையும் அது முடிந்தவுடன் நடந்த நிகழ்ச்சிகளிலிருந்தும் அவளால் விடுபட முடியவில்லை. விடுதிக்குத் திரும்பும் வழியில் பொதுத் தொலைபேசியில் வீட்டுக்குப் போன் செய்து அப்பாவிடம் சுருக்கமாக முடிவைச் சொன்னாள். அவருக்கு பெரிய நிம்மதியாக இருந்தது. முடிவு எதிர்மறையாக இருந்தால் பல்கலைக் கழகத்திலிருந்து தான் விலகப் போவதாக அவள் முன்னமே எச்சரித்து குடும்பத்தில் பீதியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தாள்.

 

       “அப்படிச் செய்யதேம்மா, என் கனவையெல்லாம் பாழாக்காத!” என்று அப்பா கெஞ்சியதைப் பொறுக்க முடியாமல் “முடிவு எப்படின்னு பாப்போம் அப்பா!” என்று அவருடைய ஆறுதலுக்காகச் சொல்லி வைத்திருந்தாள்.இப்போது முடிவு சரியாக இருந்தது. ஆனால் அதை அனுபவிக்க மனம்தான் சரியில்லை.விடுதிக்கு வந்து கொஞ்ச நேரம் தலையணையில் முகம் புதைத்து அழுதாகிவிட்டது. அப்புறம் “இது என்ன பைத்தியக்காரத்தனம்? யாருக்கு விடுதலை கிடைத்தால் என்ன? யார் யார் அந்த விடுதலையை எப்படிக் கொண்டாடினால் நமக்கென்ன? படிக்க வந்த வேலையைப் பார்ப்போம்” என்ற எண்ணம் வந்தது.முகம் கழுவிக் கொண்டு மேசைக்கு முன் உட்கார்ந்து சில புத்தகங்களிலிருந்து குறிப்பெடுக்க முயன்று கொண்டிருந்தாள். ஆனால் புத்தகங்களில் மனம் பதியவில்லை. புத்தகப் பக்கங்களின் விஷயத்தை மறந்து கண்கள் வெறித்துப் போய் மனம் பின்னோக்கி அன்று காலை நடந்தவற்றை நினைத்த பொழுது அவள் கண்கள் அவளை மீறி அழுதன.அன்று காலையில் சாப்பிடவில்லை.

 

       மத்தியானமும் சாப்பிடப் போக மனம் வரவில்லை. எதுவும் ருசிக்கவில்லை. பசி இருந்தாலும் மரத்துப் போன உடலில் அது அதிகமாகத் தெரியவில்லை. மனம் ஜெசிக்காவையும் கணேசனையும் மாறி மாறி நினைத்தது. சின்னஞ்சிறு பள்ளிக்கூடப் பெண்ணாகத் தன் வயதுத் தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த என் வாழ்க்கைக்குள் எப்படி இவர்கள் நுழைந்து புயல்களை எழுப்பினார்கள் என்பது அவளுக்கு வியப்பாக இருந்தது.ஜெசிக்காவின் பனிப்போரையும் சிடுசிடுப்பையும் தாங்க முடியாமல் நேற்றுத்தான் இன்னொரு சீனத் தோழியுடன் பேசி உடன்பாடு செய்து கொண்டு விடுதித் தலைவருக்கு அறிவித்து விட்டு அறையை மாற்றிக் கொண்டிருந்தாள். புதிய அறைத் தோழியும் சீனப் பெண்தான். ஆனால் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருந்தாள்.புதிய அறை பழைய அறையைப் போல வசதியாக இல்லை. இரவிலும் பகலிலும் ஒரே புழுக்கமாக இருந்தது. அறையிலிருந்த சீலிங் விசிறி சுழல்கையில் கரகரவென ஒரு பழைய டிராக்டரைப் போல சத்தம் போட்டது.

 

    சாலைக்குப் பக்கமாகவும் மோட்டார் சைக்கிள் நிறுத்துமிடத்தை ஒட்டியும் இருந்ததால் மோட்டார் சைக்கிள்கள் உதைத்துக் கிளப்பப்பட்டு சீறிப் பாயும் சத்தம் சகிக்கவில்லை. இந்த அறையிலிருந்த ஒரே நிம்மதி ஜெசிக்காவின் நச்சுப் பார்வை எந்நேரமும் தன் மேல் மேயவில்லை என்பதுதான்.கணேசனின் விசாரணையில் ஏற்பட்ட எதிர்பாராத நல்ல திருப்பங்கள் அவள் உள்ளத்தை மகிழ்ச்சியின் முகடுக்குக் கொண்டு வந்திருந்தன. ஆனால் அதற்குப் பின் நடந்தவை அந்த முகடிலிருந்து அவளை ஏமாற்றப் பாதாளத்துக்குத் தள்ளிவிட்டிருந்தன.தன் மேல் ஜெசிக்காவுக்கு ஏற்பட்டிருந்த இந்தக் காரணமற்ற வெறுப்பை அகிலாவால் புரிந்து கொள்ள முடியவில்லை. விசாரணைக்கு முன்னாலிருந்தே அகிலாவை விடாமல் குடைந்து கொண்டிருந்தாள். விசாரணை நெருங்க நெருங்கத் தன்னை ஒரு எதிரியாகவே பாவிக்கத் தொடங்கி விட்டாள்.இரண்டு நாட்களுக்கு முன் வெளிப்படையாகவே சண்டையைத் தொடங்கினாள். “கணேசனின் இந்த நிலைக்கு யார் காரணம் சொல்? நீதானே? நீதானே? அப்படியிருக்க அவரைக் காப்பாற்ற நீ என்ன செய்கிறாய்? ஒரு அணுவாவது செய்கிறாயா? என்னைப் பார்! அவருக்கு ஆதரவு திரட்ட மாணவர் சங்கத்துக்கு தீர்மானம் போட்டிருக்கிறேன். கையெழுத்து வாங்கிச் சேகரித்து வருகிறேன்.

 

      பெரித்தா கேம்பஸில் செய்தி எழுதியிருக்கிறேன். நீ என்ன செய்திருக்கிறாய், சொல்! நீ அவருடைய எதிர்காலத்தைக் குட்டிச் சுவராக்கியிருக்கிறாய்! அவ்வளவுதான்!”கணேசனைக் காப்பாற்ற வேண்டும் என்று அகிலாவின் தசைகளும் ரத்தமும் துடித்துக் கொண்டிருப்பதை அவளால் ஜெசிக்காவுக்கு எடுத்துச் சொல்ல முடியவில்லை. கணேசன் தண்டிக்கப் பட்டால் அந்தத் தண்டனையைத் தானே தனக்கு விதித்துக் கொள்வது என்ற அவளின் முடிவையும் அவள் ஜெசிக்காவுக்குச் சொல்லவில்லை. அதைச் சொன்னால் ஜெசிக்கா அலட்சியப் பபடுத்துவாள். “ஆமாம்! நீ ஒருத்தி தொலைந்து போவதால் அதில் கணேசனுக்கு என்ன நன்மை?” என்று கேட்பாள்.“ஜெசிக்கா! நீ இந்தப் பல்கலைக் கழகத்தில் மூன்று வருடங்கள் இருந்து எல்லாரையும் தெரிந்து வைத்திருக்கிறாய். நான் இப்போதுதான் வந்திருக்கும் முதலாண்டு மாணவி! உன்னால் செய்ய முடிந்ததெல்லாம் என்னால் எப்படிச் செய்ய முடியும்? அவருக்காக வருத்தப் படுவது ஒன்றுதான் என்னால் செய்ய முடியும்!” என்று அமைதியாக பதில் சொன்னாள்.“ஆமாம்! உன் வருத்தத்தால் என்ன ஆகப் போகிறது? கணேசனின் எதிர்காலம் தொலைந்தது! தொலைந்தது! எல்லாம் உன்னால்!” என்றாள்.ஒரு ஆற்றாமை உணர்வும் தான் காரணமில்லாமல் ஜெசிக்காவினால் சித்திரவதை செய்யப்படும் உணர்வும் கூடி அகிலாவின் மனதில் கோபத்தை எழுப்பின. ஒரு நாயால் மூர்க்கமாக விரட்டப் படும் பூனைக்குட்டி ஒரு மூலையில் அகப்பட்டுக் கொள்ளும் போது எதிர்த்துச் சீறுவது போல அகிலா சீறினாள்.

 

       “என்னை என்ன செய்யச் சொல்கிறாய் ஜெசிக்கா? யார் என்னைக் காப்பாற்றும்படி இந்த கணேசனைக் கேட்டார்கள்? எத்தனையோ மாணவர்கள் வேடிக்கை பார்த்து விட்டுப் போனது போல அவரும் போயிருக்கலாமே! அப்படிப் போயிருந்தால் இப்படி ஒரு நிலை வந்திருக்காதல்லவா? நானா கூப்பிட்டேன்? அவராக வந்து இதில் மாட்டிக் கொண்டதற்கு நான் என்ன செய்யட்டும்?”ஜெசிக்காவின் கண்களில் நெருப்புத் தணல்கள் எரிந்தன. “நன்றி கெட்ட மிருகமே! போ! என் அறையை விட்டுப் போ! என் கண் முன்னே நிற்காதே!” என்றாள்.“இது உன் அறை இல்லை. எனக்குப் பல்கலைக் கழகம் முறைப்படி ஒதுக்கிய அறை. என்னைப் போகச் சொல்ல நீ யார்?” என்று திருப்பிக் கத்தினாள்.ஜெசிக்கா கதவை ஓங்கி அறைந்து விட்டு எங்கோ போனாள். இந்த வெறி பிடித்த பெண்ணுடன் மேலும் காலம் கழிக்க முடியாது என்பது அகிலாவுக்குத் தெளிவாகிவிட்டது. அதன் பிறகுதான் ஜெசிக்காவுக்குத் தோழியான ஒரு சீனப் பெண்ணிடம் பேசி அறை மாற்றத்துக்கு ஏற்பாடு செய்து கொண்டாள்.

 

      வியாழனன்று அறை மாற்றி வந்த போதும் இந்த அறையும் தனக்கு நீண்ட நாள் நீடிக்கப் போவதில்லை என்ற எண்ணமே மேலோங்கி நின்றது. நாளைக் காலை கணேசனுக்கு வழங்கப்படும் தீர்ப்பைப் பொறுத்து தானும் பல்கலைக் கழகத்தை விட்டு விலக வேண்டும் என்ற எண்ணம் உறுதிப்பட்டு விட்டது. ஆகவே இங்கிருந்தும் விரைவில் மூட்டை கட்டும் நிலை வரலாம்.ஜெசிக்காவுடன் தான் போட்ட சண்டைக்குப் பின் தனக்கும் கணேசன் மேல் அனுதாப உணர்ச்சிகள் இருக்கின்றன என்பதை அவளுக்குக் காட்டுவதற்கு இது ஒரு அருமையான சந்தர்ப்பம் என நினைத்த போது அந்த முடிவு மேலும் இறுகியது.கணேசன் மேல் அனுதாபமா? அனுதாபத்திற்காகவா இதைச் செய்கிறேன் என்று தன்னையே கேட்டுப் பார்த்தாள். மாணவர் கேன்டீனில் அன்று கணேசனும் ராகவனும் தனித்து உட்கார்ந்திருப்பதைக் கண்ட போது அவர்களுடன் போய்ப் பேச வேண்டும் என்று உந்தியதும் அனுதாபம்தானா?மாலதியுடன் கேன்டீனில் பசியாறிக் கொண்டிருந்த போது கணேசனும் ராகவனும் வந்து உட்காருவதை அவள் கவனித்தாள். ஆனால் அவர்கள் இருவரும் அகிலாவைக் கவனித்ததாகத் தெரியவில்லை. அவர்கள் முகங்கள் செழிப்பில்லாமல் இருந்ததையும் அவர்கள் உரையாடலில் சிரிப்பில்லாமல் இருந்ததையும் அவள் கவனித்தாள்.மாலதிக்கு விரிவுரை இருந்ததால் அவசரமாகப் பசியாறிவிட்டு அவள் புறப்பட்டுப் போய்விட்டாள். தனிமையில் உட்கார்ந்து தன் காப்பியை அருந்திக் கொண்டிருந்த அகிலா கொஞ்ச நேரம் அவர்களைக் கவனித்தவாறு இருந்தாள். கணேசனை அந்த சோகமான தருணத்தில் பார்த்த போது ஒரு பாசமும் நன்றி உணர்ச்சியும் சுரந்தன.

 

        “போ, போய்ப் பேசு” என்று அவளுடைய இளமை மனது சொல்லிற்று. “சீ! அந்நிய ஆண்களிடம் என்ன பேச்சு?” என்று அவளுடைய அம்மாவின் உருவத்தில் மரபு வழியான ஒரு மனது எச்சரிக்கையை விடுத்தது.இவர் அந்நியரல்ல! எனக்குத் தெரிந்தவர். எனக்காக இந்த நிலைமைக்கு வந்தவர். அவரை நேரில் பார்த்து ஆறுதல் கூறுவதில் தவறில்லை. அது கடமையும் கூட. அவருக்காக நான் எடுத்துள்ள முடிவை நான் அவருக்கு அறிவிக்க வேண்டும். அது நன்றிக் கடன்!எண்ணம் உறுதிப்பட்டதும் காப்பிக் கோப்பையை வைத்து விட்டு எழுந்து நடந்தாள்.அவர்கள் இருவர் முன்னாலும் அமர்ந்து இத்தனை தைரியமாக, இத்தனை கோர்வையாகத் தன் முடிவைச் சொல்ல முடிந்தது அவளுக்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது.

 

       பள்ளி நாட்களில் பெற்றோர்களும் பள்ளிக்கூடமும் அமைத்துக் கொடுத்த கூட்டுக்குள்ளிருந்து ஒரு புழுவாக வாழ்ந்துவிட்டு இந்தப் பல்கலைக் கழகத்திற்கு வந்தவுடன் தான் வெளிப்பட்டு ஒரு வண்ணத்துப் பூச்சியைப் போல சிறகடித்துப் பறக்க முடிகிறது என்று நினைத்துக் கொண்டாள். நெருக்கடியான நிலைமைகள் புதிய பயங்களைக் கொடுப்பதைப் போலவே புதிய தைரியங்களைக் கொடுக்கின்றன. புதிய பழகு முறைகளையும் கொடுக்கின்றன. தான் முற்றி வருவதாக அகிலா நினைத்துக் கொண்டாள்.ஆனால் கணேசனின் அந்த அன்புப் பிடி…! அதை அவள் எதிர் பார்க்கவில்லை. அவர்களிடம் ஒரு நாலு வாக்கியங்களில் தன் முடிவைச் சொல்லிவிட்டு திரும்பிப் பார்க்காமல் நடந்து போய்விட வேண்டும் என்று எண்ணி வந்திருந்தவள் அவனுடைய பிடியில் சிக்கிக் கொண்டாள்.அவன் அவள் கைகளைப் பிடிப்பது இது முதன் முறையல்ல. அன்றைக்கு ரேகிங் கும்பலிடமிருந்த காப்பாற்றிய போதும் கை பிடித்துத்தான் இழுத்து வந்தான். ஆனால் இன்றைய பிடியில் மின்சாரம் பாய்ந்தது.

 

       அன்பும் பாசமும் நன்றி உணர்ச்சியும் பாய்ந்தன. அதுதான் தான் இருப்பது மாணவர்கள் நிறைந்த கேன்டீன் என்பதையும் மறந்து அவள் கண்களில் கண்ணீரைப் பெருக வைத்தது.அங்கிருந்து புறப்பட்டு தன்னறைக்குத் திரும்பிய போது அவளுடைய மனம் பிசைந்து போட்டது போல மசிந்து கிடந்தது. திரும்பத் திரும்ப கணேசனின் அன்பான பிடியை நினைத்தது. வேண்டாம் என்று தடுத்தும் கேட்கவில்லை. தன் கட்டுப்பாட்டையும் மீறி அந்தப் பிடிக்கு ஆயிரம் அர்த்தங்களை மனம் கற்பித்துக் கொண்டே இருந்தது. அன்பு, பாசம் என்ற உணர்வுகளையும் மீறி இது காதல் என்றும் மனம் கற்பித்துக் கொண்டது.அகிலாவின் அறிவு இந்த மன உணர்வுகளை வலிந்து மறுத்தது. ஒரு கண நேரம் தான் சொல்லிய முடிவில் வியந்து போய் கணேசன் தன் கைகளைப் பற்றிக் கொண்டதற்கு இத்தனை தீவிரமான அர்த்தங்களைக் கற்பித்துக் கொள்ளாதே என அது எச்சரித்தது. அது ஒரு தானியங்கியான நடவடிக்கை. அது தசைகளின் இயக்கம். அதன் பின் உள்ள உணர்வு வியப்பாக இருக்கலாம்; நன்றியாக இருக்கலாம். அது காதலாக இருக்க வேண்டியதென்பது அவசியம் இல்லை. இதைப் பெரிது படுத்தாதே, இதை விரிவு படுத்தாதே என்ற எச்சரிக்கைகள் அவள் தலைக்குள் கிசுகிசுத்தன.அதனால் அடுத்த சில நாட்களில் கணேசனைச் சந்திப்பதை அவள் தவிர்த்து வந்தாள். ஓரிரு சந்தர்ப்பங்களில் அவனை நூல் நிலையத்திலும் கேண்டீனிலும் தூரத்தில் பார்த்த போது அங்கிருந்து அவன் கண்ணில் படாமல் அகன்றாள்.

 

      சந்திக்கும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொண்டு தன் மனதில் அரும்புகின்ற உணர்வுகளுக்கு ஊக்கமூட்டுவதைத் தவிர்த்தாள்.அவனை அடுத்து சந்திக்கும் சந்தர்ப்பம் கண்டிப்பாக விசாரணை நடைபெறும் நாளான வரும் வெள்ளிக் கிழமைதான். வெள்ளிக் கிழமை வெள்ளென மாணவர் விவகாரப் பிரிவுக் கட்டிடத்திற்குப் போக வேண்டும். ஆனால் ஜெசிக்கா கண்டிப்பாக அங்கிருப்பாள். அவள் நச்சுப் பார்வையைச் சந்திக்க வேண்டியிருக்கும். பரவாயில்லை. அந்தப் பிசாசின் அறையிலிருந்து விடுதலை பெற்றாகிவிட்டது. இனி அவளைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. அவள் பார்வைக்கு அஞ்சத் தேவையில்லை.கணேசனைப் பார்த்து விசாரணையில் என்ன நடந்தாலும் அஞ்ச வேண்டாம் என்று உறுதி கூற வேண்டும். தன் முடிவை மறு உறுதிப் படுத்தி அவனுக்கு ஊக்கமூட்ட வேண்டும். விழவேண்டி நேர்ந்தால் இருவருமே தோழமையுடன் வீழ்வோம் என ஆதரவூட்ட வேண்டும். அவன் கைகளை ஒரு நண்பனின் கைகளாகக் குலுக்கி விசாரணையில் வெற்றி பெற வாழ்த்துக் கூற வேண்டும். விசாரணை முடியும் வரையில் அங்கேயே காத்திருக்க வேண்டும்.

 

      விசாரணை முடிவை அவன் வாயாலேயே கேட்டுத் தெரிந்து கொண்டபின் தன்னுடைய அடுத்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து கொண்டாள்.ஆனால் வியாழனன்று அறையை மாற்றிக் கொண்டிருந்த இக்கட்டான வேளையில் அவளுடைய விடுதியின் அலுவலர் ஒருவர் அவளைத் தேடி வந்து அவசரக் கடிதம் ஒன்றைக் கொடுத்து அதை சமர்ப்பித்துவிட்டதற்கான கையெழுத்தையும் வாங்கிக் கொண்டு சென்றார். அந்தக் கடிதம் மாணவர் விவகாரப் பிரிவிலிருந்து வந்திருந்தது. மறுநாள் காலையில் 8 மணிக்கு நடைபெறவிருக்கும் சிறப்பு விசாரணைக் கூட்டத்தில் அகிலா கலந்து கொள்ள வேண்டுமென்று உதவிப் பதிவதிகாரி முத்துராமன் கையெழுத்திட்டு அனுப்பிய கடிதம்.அவளுக்குப் புரியவில்லை. ஒன்பது மணிக்கு நடைபெறவிருந்த விசாரணையை எட்டு மணிக்கெல்லாம் நடத்துகிறார்களா? அப்படியிருந்தாலும் தான் அதில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஒன்றும் சொல்லவில்லையே! இப்போது ஏன் தன்னை அவசரமாகக் கடைசி நேரத்தில் அழைத்திருக்கிறார்கள்?எப்படியிருந்தாலும் எந்த விதத்திலாவது கணேசனுக்கு உதவ முடிந்தால் அந்த வாய்ப்பை நன்றாகப் பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என்று உறுதி செய்து கொண்டாள்.

 

    ஒரு வேளை கணேசனுக்குத் தரப்படும் தண்டனையைத் தானும் தனக்கு விதித்துக் கொள்ளும் முடிவை விசாரணைக் குழுவில் முறையாக அறிவிக்க இது ஒரு சந்தர்ப்பமாக அமையும் என்று நினைத்துக் கொண்டாள். கணேசனைத் தேடிப் போய் இது பற்றிப் பேசலாமா என்று ஒரு கணம் நினைத்தாள். வேண்டாம் என்று தடையும் விதித்துக் கொண்டாள். கணேசனோடு இனி சந்திப்புக்கள் வேண்டாம். நாளை நடப்பது போல நடக்கட்டும் என உறுதி செய்து கொண்டாள்.மறுநாள் எட்டு மணிக்கெல்லாம் அவள் மாணவர் விகாரப் பிரிவின் முன் நின்ற போது அவள் எதிர் பார்த்தது போல கணேசனை அங்கே காணோம். எதிர்வாதிகளான ராஜன், வின்சன்ட் ஆகியோர்களைக் கூடக் காணோம். ஆனால் பரசுராமன் அங்கிருந்தான். அகிலாவைப் பார்த்ததும் புன்னகை புரிய முயன்றான். அவள் வெறுப்புடன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.கூட்டம் எட்டு மணிக்குச் சரியாகத் தொடங்கியது.

 

     டத்தோ சலீம் அனைவருக்கும் நன்றி கூறி இந்தச் சிறப்பு அவசரக் கூட்டம் கூட்டப்பட்டிருந்ததன் நோக்கங்களை விளக்கினார். விசாரணைக் குழுவின் கவனத்துக்கு வந்துள்ள புதிய தகவல்களைத் தான் உறுதிப் படுத்திக் கொள்ளும் நோக்கத்தில் அவர்களை வரவழைத்திருப்பதை விவரித்து அந்தப் புதிய தகவல்கள் என்ன என்று சொல்லிய போது அவள் இதயத்தில் பால் பொழிந்தது. தன்னுடைய முறை வந்த போது மீண்டும் ஒருமுறை அன்று நடந்தவற்றை நினைவு படுத்தித் தெளிவாகக் கூறினாள். பரசுராமனின் முறை வந்த போது அவள் சொன்ன அனைத்தையும் அவனும் உறுதிப் படுத்தினான்.அவளுடைய பயங்கள் ஒவ்வொன்றாக அகன்றன. நீதியை நிலை நாட்டுவதற்காக நடவடிக்கைகளை முயன்று எடுத்துள்ள பேராசிரியர் முருகேசுவை அவள் நன்றியுடன் நோக்கினாள். கடைசி நேரத்தில் உண்மையைச் சொல்லி அனைவரையும் காப்பாற்றியுள்ள – இதுவரை தான் வெறுத்து வந்துள்ள – பரசுராமன் மீது கூட அன்பு சுரந்தது. சாட்சி சொல்ல வந்துள்ள சீன மாணவர், உடன் சாட்சிக்கு வந்துள்ள விடுதித் தலைவர்கள் அனைவர் மீதும் நன்றியுணர்ச்சி பெருகியது. இந்த நல்லவர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு மோசமான அநீதி இழைக்கப் படுவதைத் தடுத்துள்ளார்கள். இது நல்ல இடம். இது நல்ல பல்கலைக் கழகம். இதில் வந்து படிக்க நான் கொடுத்து வைத்தவள் என நினைத்துக் கொண்டாள்.இவையனைத்தும் கணேசனுக்குத் தெரியுமா? விசாரணையின் போக்கைப் பார்த்தால் அவனுக்கு இதுபற்றி இன்னும் சொல்லப்படவில்லை என்றுதான் தெரிந்தது.

 

       இனி ஒன்பது மணிக்கு அவன் அழைக்கப்பட்டு இந்த உண்மைகள் அவனுக்குச் சொல்லப்பட்டு அவனுடைய நேர்மை நிலைநாட்டப் படும் போது அவன் முகத்தைப் பார்க்க வேண்டும் என்று ஆவலுடன் காத்திருந்தாள்.அது நிகழ்ந்தது. உண்மைகள் வெளிப்படும் வேளையில் கணேசனுடைய கண்கள் பலமுறை அகிலாவின் கண்களைச் சந்தித்தன. “நம் துன்பங்கள் களையப்பட்டு விட்டன அகிலா! நம் தளைகள் அறுபட்டுவிட்டன!” என அவன் கண்களால் அனுப்பிய செய்திக்கு அவள் நன்றிச் செய்திகள் அனுப்பிக் கொண்டிருந்தாள்.“கணேசன் எல்லாக் குற்றங்களிலிருந்தும் விடுதலை செய்யப்படுகிறார். ராஜன், வின்சன்ட், பரசுராமன் ஆகியோரின் குற்றம் நிருபிக்கப்பட்டு விட்டது. அவர்களுக்கு என்ன தண்டனை என்பதை நான் கல்வி அமைச்சிடம் கலந்து பேச வேண்டும். அதன் பின் விசாரணைக் குழு நாளைக்குக் கூடி தண்டனையை நிர்ணயிக்கும். இந்தக் கூட்டம் இதனுடன் முடிகிறது. நீங்கள் அனைவரும் போகலாம்” என டத்தோ சலீம் கூறியவுடன் அனைவரும் எழுந்தனர். ராஜனும் வின்சன்டும் மற்றவர்களிடம் பேச விருப்பமில்லாமல் அவசரமாக வெளியே போனார்கள். மற்றவர்கள் மெதுவாக வெளியேறிக் கொண்டிருந்த நேரத்தில் டத்தோ சலீம் கணேசனுடன் கைகுலுக்கினார்.

 

        “உனக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன். உண்மை வெளிப்பட்டதில் மிக மகிழ்கிறேன்!” என்றார்.அவருக்கு நன்றி சொல்லிவிட்டு கணேசன் பேராசிரியர் முருகேசுவிடம் விரைந்து வந்தான். அவர் கைகளைப் பிடித்துக் கொண்டான். “என்னைக் காப்பாற்றி விட்டீர்கள். எப்படி நன்றி சொல்வது என்று புரியவில்லை!” என்றான்.அவர் அவன் தோள்களைப் பற்றினார். “உண்மை தோற்காது என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு. கொஞ்சம் காலம் தாழ்த்தினாலும் அதுதான் வெல்லும்! வாழ்த்துக்கள்” என்றார். அவன் கண்களில் கண்ணீர் சுரந்தது. “போ கணேசன்! விரிவுரைகளை ஒரு நாளைக்கு மறந்து விட்டுப் போய் உன் வெற்றியைக் கொண்டாடு!” என்றார்.அகிலா காத்திருந்தாள். பேராசிரியரின் பிடியிலிருந்து விடுபட்டு நேராக அவளை நோக்கி வந்தான். அவள் இரண்டு கைகளையும் மீண்டும் பிடித்துக் கொண்டான். “அகிலா! வாங்க நம்ம ரெண்டு பேரும் தனியா போய் இந்த வெற்றியைக் கொண்டாடுவோம்!”அவளும் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தாள். அவள் முகம் சிரித்துச் சிவந்திருந்தது. அவனுடன் போகத் தயாராகத் தலையாட்டினாள்.இதற்குள் செய்தி வெளியில் பரவிவிட்டிருந்தது. விசாரணை அறைக் கதவைத் திறந்து கொண்டு ஜெசிக்காவின் தலைமையில் கணேசனின் ஆதரவாளர்கள் ஆரவாரத்துடன் நுழைந்தார்கள். ஜெசிக்கா புயல்போல் ஓடிவந்து கணேசனை அப்படியே அணைத்துக் கொண்டாள்.

 

      “கணேசன்! ஹிபிப் ஹ¤ரே!” என்று யாரோ கத்தினார்கள். தொடர்ந்து அனைவரும் முழங்கினார்கள். இரண்டு பேர் கணேசனைத் தூக்கினார்கள். “ஹிபிப் ஹ¤ரே” முழங்கியவாறு அவனை வெளியே தூக்கிச் சென்றார்கள். அந்த ஆரவாரத்தில் அகிலா பின் தள்ளப் பட்டாள்.மோட்டார் சைக்கிள்கள் உதைத்துக் கிளப்பப் பட்டன. ஏறக்குறைய பத்து மோட்டார் சைக்கிள்களில் முடிந்தவர்கள் எல்லாம் ஏறிக் கொண்டார்கள். “ஹிபிப் ஹ¤ரே” சத்தத்தில் இன்னும் பலரும் கலந்து கொண்டார்கள். ஓரத்தில் முகம் தொங்கி நின்று கொண்டிருந்த ராஜாவையும் அவனுடைய கேங்கையும் கண்டபோது சத்தம் இன்னும் உச்ச கட்டத்தை அடைந்தது.பாதுகாவலர்கள் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் தலைவர் ரித்வானும் நின்று புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தார். அவர்கள் கொண்டாட்டத்திற்கான காரணத்தை அவர் அங்கீகரிப்பவர் போலத் தோன்றினார்.பரசுராமனும் ஒரு பக்கத்தில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். ராஜாவின் கூட்டம் அவனைக் கைகழுவி விட்டது.

 

     கணேசனின் வெற்றி ஊர்வலத்துக்கு அவனை யாரும் கூப்பிடவில்லை.மோட்டார் சைக்கிள் ஊர்வலம் ஆரம்பமாகியிருந்தது. ஹாரன்கள் அலறின. ஜெசிக்காவின் மோட்டார் சைக்கிள்தான் முதன்மை வகித்துச் சென்றது. அவள் பின்னிருக்கையில் உட்கார்ந்து கணேசன் அனைவருக்கும் கையசைத்துக் கொண்டிருந்தான். “ஹிபிப் ஹ¤ரே!” என்ற எழுச்சி மந்திரத்துடன் பல்கலைக் கழக வளாகத்தைச் சுற்றிவர ஊர்வலம் விரைந்தது.அகிலா கொஞ்ச நேரம் நின்று வேடிக்கை பார்த்தாள். ஊர்வலம் கண்களை விட்டு மறைந்ததும் மாணவர் விவகாரப் பிரிவு கட்டிட முன் வாசலில் நின்றவாறு மரங்களினூடே தெரியும் கடலை வெறித்துப் பார்த்தாள். கண்களில் கண்ணீர் அரும்பியது.துடைத்துக் கொண்டு தன் விடுதியில் தன் புதிய அறையை நோக்கி நடந்தாள். அறையை அடைந்ததும் அந்தப் புழுங்கும் மத்தியான வேளையில் படுக்கையில் தலையணையில் முகம் புதைத்து தன் விருப்பம் போல் அழுதாள்.***

 

      அழுகையோடு கிடந்து சோர்ந்து போய் மத்தியானப் புழுக்கத்தில் கொஞ்சம் தூங்கிவிட்டு எழுந்த போது மணி ஆறரையாகிவிட்டிருந்தது. உடம்பெல்லாம் வேர்த்துக் கிடந்தது. மத்தியானம் கம்ப்யூட்டர் லேபைத் தவறவிட்ட குற்ற உணர்ச்சி மனதில் வந்து நின்றது. ஏன் தவறவிட்டேன்? யாருக்காக இந்த மத்தியான வேளையில் தனியே கிடந்து அழுதேன்? இதற்காகத்தானா பல்கலைக் கழகம் வந்தது? இப்படித்தானா பெற்றோர்களின் குடும்பத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது? மனச்சான்று பிய்த்துத் தின்று கொண்டிருந்தது.இரவு எட்டரை மணிக்கு நடனப் பயிற்சி இருக்கிறது. பேராசிரியர் கௌஸ் நடனம் இன்னும் சரியாக அமையவில்லை என அவர்களை விரட்டிக் கொண்டே இருக்கிறார். “இது என்ன பாசார் மாலாமில் ஆடுகின்ற நடனம் என நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? பல்கலைக் கழக வேந்தரான பெர்லிஸ் மன்னர் அங்கிருப்பார். பினாங்கு முதலமைச்சர் அங்கிருப்பார். இந்தப் பல்கலைக் கழகத்தின் அத்தனை பேராசிரியர்களும் அங்கிருப்பார்கள். இவர்கள் முன் உடம்பை வளைக்காமல் ஆடினால் என் பெயரல்லவா கெட்டுப் போகும்? கமான், கமான், இடுப்பை வளைக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

 

     நான் ஒருவன் இந்த வயதில் ஆடும் போது சிறுபிள்ளைகள் உங்களுக்கென்ன?” சத்தம் போடுவார்.எட்டரை மணி பயிற்சியைத் தவறவிடக்கூடாது என உறுதி செய்து கொண்டாள். ஆனால் அதற்குள் கொஞ்சமாவது ஏதாவது சாப்பிட வேண்டும். காலையிலும் மத்தியானத்திலும் சாப்பிடாமல் வயிறு வெறுமனே கிடந்தது. சீக்கிரம் எழுந்து குளித்தால் மாலதியைக் கூட்டிக் கொண்டு குளுகோர் நகரில் சாலையோரக் கடைகளுக்குப் போகலாம்.வளாகத்தின் தெற்கு வாசலைத் தாண்டி மின்டன் ஹைட்ஸ் வீடமைப்புப் பகுதிகளினூடே கொஞ்ச தூரம் நடக்க வேண்டியிருந்தாலும், இந்திய உணவு வேண்டும் மாணவர்களுக்கு அந்த குளுகோர் ஒட்டுக் கடைகள்தான் தஞ்சம். அங்கு தோசை, இட்டிலி, இடியப்பம், பிட்டு என்று ஏதாவது கிடைக்கும். மீ கோரேங், ரொட்டிச் சானாயும் கிடைக்கும். அறிவியல் பல்கலைக் கழக மாணவர்களை நம்பியே அந்தப் பகுதி செழிப்பாக வளர்ந்திருந்தது.குளித்து உடைமாற்றி மாலதியின் அறைக்குப் போய் அவளையும் கூட்டிக் கொண்டு போகவேண்டும் என்று முடிவு செய்து எழுந்தாள். அங்கு எங்காவது கணேசனைப் பார்க்க முடியுமா என்று ஒரு நப்பாசை திடீர் என மனசுக்கு வந்தது. சீ என்று அதை அழித்தாள். அது ஜெசிக்கா எனும் கிளி கொத்திக் கொண்டு போன பழம். எச்சில் பழம். அது எனக்குத் தேவையில்லை. அதை நினைக்கவே வேண்டாம் என்று எண்ணிக் கொண்டாள்.அவள் குளித்து ஜீன்சும் டீ சட்டையும் மாற்றிக் கொண்டு கண்ணாடியின் முன் நின்று ஸ்டிக்கர் பொட்டு வைத்துக் கொண்டிருந்த நேரத்தில் மாலதியே அவள் அறைக்கு வந்து விட்டாள்.

 

       “என்ன ஆள எங்கியுமே பாக்க முடியில அகிலா? அறையை வேற சொல்லாம கொள்ளாம மாத்திட்டியே! என்ன விஷயம்?”“வாங்க மாலதி! உங்களப் பாக்கதான் வர இருந்தேன். ஜெசிக்காவோட ஒத்து வரல. அதுதான் அறைய மாத்திக்கிட்டேன்!” என்றாள்.“அப்படியா? அது இருக்கட்டும்! இன்னக்கிக் காலையில உங்க ஆளுக்குப் பெரிய வெற்றியாமே! கேம்பஸ் முழுக்க மோட்டார் சைக்கிள் வெற்றி ஊர்வலம் நடந்ததாமே! கேம்பஸ் முழுக்க இன்னைக்கு அதுதான் பேச்சு! அதப்பத்திக் கேக்கலாம்னு பாத்தா உன்ன எங்கியுமே பார்க்க முடியிலியே!” என்றாள் மாலதி.“வெற்றி ஊர்வலத்துக்கும் எனக்கும் ஒண்ணும் சம்பந்தம் இல்ல. வெற்றி யாருக்குக் கிடைச்சதோ அவங்க கொண்டாடுவாங்க! எனக்கென்ன?” என்றாள்.“என்ன ரொம்ப சலிப்பா பேசிற மாதிரி இருக்குது? உங்க ஆளு வெற்றியில உனக்குப் பங்கு இல்லாம போயிடுமா?”“அது என்ன உங்க ஆளு? அவர் ஒண்ணும் என் ஆளு இல்ல”மாலதி சிரித்தாள். “ஏன் அகிலா! எங்கிட்டயே மறைக்கப் பாக்கிறியா? அன்னைக்கு கேண்டீன்ல நான் புறப்பட்டுப் போன பிறகு ரெண்டு பேரும் கை கோத்துக் குலாவினிங்கன்னு கேள்விப் பட்டேனே!”அகிலா அதிர்ச்சி அடைந்தாள்.

 

          “சீ! குலாவினிங்க அப்படியிப்படின்னு பேசாதிங்க! ஒரு ஆறுதலுக்குக் கையப் பிடிச்சா குலவுறாங்கன்னு அர்த்தமா?”“அது என்னமோ எனக்குத் தெரியாது! கேம்பஸ் முழுக்க அந்த விஷயம் தெரிஞ்சிருக்கு. நீதான் கணேசனுக்குப் புது கேர்ள் ·பிரண்டுன்னு முத்திரை குத்தியாச்சி. என்னாடா, நம்மளோட இவ்வளவு ·பிரண்டா இருந்தும் நம்மகிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லலியே இந்த அகிலான்னு நாங்கூட மனசுக்குள்ள நெனச்சிக்கிட்டேன்!”அந்தச் செய்தி அதிர்ச்சியாகவும் இருந்தது. மகிழ்ச்சியாகவும் இருந்தது. கணேசனோடு தான் இணைத்துப் பேசப் படுவதில் அவள் உள் மனதிற்கு ஒரு கிளுகிளுப்பு இருக்கத்தான் செய்தது. ஜெசிக்கா தன் மீது இப்படி சீறி விழுவதற்கும் இந்தப் பேச்சுதான் காரணமாக இருக்க வேண்டும் என்று எண்ணினாள்.ஆனால் உண்மையில் நான் கணேசனோடா இருக்கிறேன்? “வா அகிலா, இந்த வெற்றியைக் கொண்டாடலாம்” என்று சொன்ன சொற்களின் சூடு ஆறுவதற்குள் அதை மறந்து இன்னொருத்தியுடன் போய்விட்டான் அல்லவா? மகிழ்ச்சியில் தன்னை மலை முகட்டுக்கு அழைத்துச் சென்று ஏமாற்றப் படுகுழியில் தள்ளி விட்டானல்லவா? எப்படி வந்து எல்லார் முன்னிலையிலும் கட்டிப் பிடித்துக் கொண்டாள்! எவ்வளவு உல்லாசமாக ஒன்றாகப் புறப்பட்டுச் சென்றார்கள்! அந்த ஜெசிக்காவுக்கு நான் போட்டியா?ஆனால் கணேசன் அன்பாகத்தானே பேசினான்! அந்த அன்பில் உண்மை கொஞ்சமாவது இருக்காதா? அந்தப் பார்வையில், அந்தப் பிடியில் நட்பைத் தவிர வேறு பொருள் இருக்காதா? அதைப் பற்றி யாரிடமாவது பேச வேண்டும் என்ற ஆதங்கம் வந்தது. அப்படிப் பேசினால் மனதுக்குக் கொஞ்சம் ஆறுதல் கிடைக்கும் என்று தோன்றியது.

 

        “உட்காருங்க மாலதி!” என்றாள். கணேசனிடம் தான் கேன்டீனில் பேசியதைச் சொன்னாள். கணேசனிடம் தன் முடிவைச் சொன்னதைச் சொன்னாள். கணேசன் கைபிடித்ததையும் தான் அழுததையும் சொன்னாள். விசாரணையில் ஏற்பட்ட திருப்பங்களையும் அதன் முடிவில் கணேசன் தன்னிடம் வந்து பேசியதையும், அவனை ஜெசிக்கா பறித்துச் சென்றதையும் சொன்னாள். அந்த இறுதிக் கட்டத்தில் அவள் கண்களில் கண்ணீர் அரும்பியது.“சரி, சரி! எல்லாம் நல்லவிதத்தில முடிஞ்சது மகிழ்ச்சியாத்தான் இருக்கு. கணேசன் மேல வந்த வீண் பழி மறைஞ்சதே, அது பெரிய விஷயம்! ஆனா நீ மனசப் போட்டு வீணா அலட்டிக்காத அகிலா! கணேசனுக்கும் ஜெசிக்காவுக்கும் ரெண்டு வருஷமா பழக்கம் இருக்குன்னுதான் கேள்விப்பட்டேன். ஆனா அவங்க வெறும் நண்பர்களா அல்லது அதற்கு மேலயான்னு யாருக்கும் தெரியாது. எதுக்கும் ஜாக்கிரதையா இரு அகிலா! அவங்க பழைய நண்பர்கள். நீதான் புதுசா வந்தவ. ஆகவே குறுக்கிடாம கொஞ்சம் ஒதுங்கியே இரு!” என்றாள் மாலதி.

 

        அகிலாவுக்கும் அப்படித்தான் பட்டது. தான் ஒதுங்கிவிட வேண்டும். இந்தச் சிறிய புயல் அடித்துக் கொண்டிருந்தபோது படபடப்பாக இருந்தது. இப்போது இது ஓய்ந்து விட்டது. இனி இதை உதறிவிட்டுப் பாடங்களில் கவனம் செலுத்த வேண்டும். இனி தனக்கு உதவிக் கரம் நீட்டிய அந்த நல்லவனின் எதிர் காலம் என்னாகும், என்னாகும் என எண்ணி எண்ணி வருந்த வேண்டியதில்லை. என்னால் வீணானான் என்ற பழிக்கு அஞ்ச வேண்டியதில்லை.“சரி மாலதி. நீங்க சொல்றது சரிதான். நான் ஒதுங்கிட்றேன்! அவங்க காரியத்தில நான் ஏன் தலையிடணும்? சரி. அது கிடக்கட்டும்! காலையிலயும் மத்தியானமும் நான் சாப்பிடல! பசிக்குது. வாங்க குளுகோர் போய் ஏதாவது சாப்பிட்டு வருவோம். எனக்கு எட்டரை மணிக்கு நடனப் பயிற்சி வேற இருக்கு! அதுக்குள்ள திரும்பிடனும்” என்றாள்.“வா, வா! நானும் அதுக்குத்தான் வந்தேன். சாப்பாடு வாங்கப் போகனும்னு ராணியும் ராஜேஸ்வரியும் வேற காத்திக்கிட்டு இருக்காங்க. அவங்களையும் அழச்சிக்கிட்டுப் போகலாம்!” மாலதி எழுந்தாள்.

 

       இருவரும் அவசரமாக வெளியேறி ராணி, ராஜேஸ்வரி என்ற அவர்களின் இரு தோழிகளையும் கூட்டிக் கொண்டு இறங்கி வந்தார்கள். விடுதியின் வரவேற்பறையை விட்டு படிக்கட்டுகளில் கால் வைத்து நடந்த போது மோட்டார் சைக்கிள் நிறுத்துமிடத்திலிருந்து கணேசன் அவர்களை நோக்கி வந்தான்.முதலில் மாலதிதான் பார்த்தாள். அகிலாவை தோளில் இடித்துக் காட்டினாள். அகிலா அவனை கொஞ்சம் வியப்போடும் வெட்கத்தோடும் பார்த்தாள். பார்க்காதது மாதிரிப் போய்விடலாமா என்று ஒரு கணம் நினைத்தாள். ஆனால் அவன் விரைவாக நெருங்கி அவர்கள் முன் வந்து நின்றான்.எல்லாரும் என்ன பேசுவது என்று தெரியாமல் நிற்க மாலதிதான் மௌனத்தைக் கலைத்தாள். “கணேசன், உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள். ரேகிங் விசாரணையில உண்மை வெளியாகி உங்களை விடுதலை செய்திட்டதா கேள்விப் பட்டோம். ரொம்ப மகிழ்ச்சி!” என்றாள்.“ஆமாம் கணேசன், கன்கிராட்சுலேஷன்!” என்று ராணியும் ராஜேஸ்வரியும் அவன் கை பிடித்துக் குலுக்கினார்கள்.

 

       அகிலா பேசாமல் இருந்தாள்.“ரொம்ப நன்றி உங்க எல்லாருக்கும். அதுக்கு அகிலா ரொம்ப உதவி பண்ணியிருக்காங்க. அவங்களுக்கு சரியான முறையில நன்றி சொல்ல முடியாம போச்சி! அதுக்குத்தான் அவங்களத் தேடி வந்தேன்!” என்றான்.தன்னைத் தேடி வந்தான் என்பது மகிழ்ச்சியாக இருந்தது. காலையில் தன்னை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் ஓடினான் என்ற நினைத்த போது கோபம் வந்தது. ஜெசிக்காவைக் கட்டிப் பிடித்துக் கொண்டிருந்த காட்சி மனசுக்கு வந்தது. பேசாமல் இருந்தாள்.இரங்கிய குரலில் பேசினான்: “அகிலா! உங்களோட எப்ப ஓய்வா பேச முடியும்?”மூன்று தோழிகளை நிற்க வைத்துக் கொண்டு அவனோடு பேசுவது கூச்சமாக இருந்தது. அதிலும் அவன் சந்திப்பிற்கு நேரம் கேட்பது இன்னும் வெட்கமாக இருந்தது. பின்னால் இந்தத் தோழிகளின் வெறும் வாய்க்கு இது அவலாகப் போகும் என நினைத்தாள். ஆனால் நேராக முகம் பார்த்து அவன் கேட்கும் போது பதில் சொல்லாமல் இருக்க முடியவில்லை. பேசினாள்: “நன்றி சொல்லத்தானே கேக்கிறிங்க? அதுக்குத் தேவையில்லை. நான் ஒண்ணும் செய்யலியே. உண்மை தானா வெளிப்பட்டது. அதுக்கு எதுக்கு நன்றி? உண்மையில உங்களுக்குத்தான் நான் நன்றி சொல்லணும் என்ன ரேகிங்ல இருந்து காப்பாத்தினதுக்கு!” என்றாள்.“எப்படியும் உங்களைச் சந்திச்சி….”இடை வெட்டினாள். “மன்னிச்சிக்குங்க கணேசன். எனக்கு எட்டரை மணியிலிருந்து பத்து மணிவரையில மாணவர் இல்லத்தில நடனப் பயிற்சி இருக்கு. போய் சாப்பாடு வாங்கி சாப்பிட்டுட்டு சீக்கிரம் திரும்பணும். இப்பவே நேரமாயிடுச்சி. அதுக்குத்தான் அவசரமா போயிட்டிருக்கோம். பை, பை! வாங்க மாலதி போலாம்!” என மாலதியின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு விரைவாக நடந்தாள்.வழியில் மாலதி திட்டினாள்.

 

        “என்ன அகிலா! இப்படி எடுத்தெறிஞ்சி பேசிட்டியே!” என்றாள்.“பின்ன எப்படி? அவர் வழியில குறுக்கிடாதேன்னு கொஞ்சம் முன்னால நீங்கதானே யோசன சொன்னிங்க?”“அது சரி! அதுக்காக இப்படி வெடுக்கினு பேசிறதா? ஒரு ஆறுதலா பேசக்கூடாது?”“அப்படி என்ன பேசிட்டேன்? உண்மையில நமக்கு அவசரம்தான? நின்னு கதை பேச நேரமில்லையே, அத சொன்னது குத்தமா?”“குத்தமில்ல! ஆனா நாளைக்கு வாங்க ஓய்வா பேசலாம்னு ஏதாவது சொல்லியிருக்கலாமே!”பல்கலைக் கழகத்தின் பழம்பொருள் காட்சியகம் மற்றும் ஓவியக் கூடம் வைக்கப் பட்டிருந்த கட்டிடத்தைத் தாண்டி துணைவேந்தர் இல்லத்தின் வழியாக பரந்த விளையாட்டுத் திடலை ஒட்டி அந்தத் தெற்கு வாசலுக்கான வழி நீண்டிருந்தது. அங்கிருந்து பார்த்தால் கடலும் பினாங்குப் பாலமும் தெரியும். அகிலா பேச்சை மாற்ற வேறு வெற்றுப் பேச்சுக்களோடு நால்வரும் விரைந்து நடந்தார்கள்.“நாளைக்குப் பேசலாம்” என்று சொல்லியிருக்கலாம்தான் என்று அகிலா நினைத்தாள். ஆனால் தேவையில்லை. நாளை வரைக்கும் காத்திருக்க வேண்டாம். இன்று ராத்திரி பத்து மணிக்கு மாணவர் இல்லத்திற்கு வெளியே காத்திருந்தால் போதும். ஜெசிக்காவுடன் ராத்திரி ராத்திரியாக உட்கார்ந்து பேசத் தெரிகிறதல்லவா? மூளை இருந்தால் நான் சொன்னது புரிந்திருக்கும் என்று நினைத்துக் கொண்டாள் அகிலா.

 

          மலாய் ஜோகேட் இசை, இந்திய மேளமும் மேற்கத்திய டிரம்மும் தனி ஆவர்தனம், சீன வயலின் சோலோ எனக் கலவையாக ஒரு இசையை உருவாக்கி அதற்கு “இணைதல்” என்ற ஒரு தலைப்பையும் கொடுத்து உருவாக்கியிருந்தார் பேராசிரியர் கௌஸ். இசை மிகத் துரிதமாக இருந்தது. நடனத்திலும் ஏராளமான அசைவுகள். பத்து நிமிட நேரம்தான் நீடிக்கிறது என்றாலும் சரியாகச் செய்ய கடினமாக பயிற்சி செய்ய வேண்டியிருந்தது.நாலாவது முறையாக ஆடிக் கொண்டிருந்தவர்களைப் பாதியில் நிறுத்தி “நோ, நோ, நோ” என்று கத்தினார் கௌஸ். “இப்படி வெட்டி வெட்டி அசைய வேண்டாம். இது என்ன கராத்தே என்று நினைத்துக் கொண்டீர்களா? இது நடனம். இது தற்காப்பு விளையாட்டல்ல. கலை. அசைவில் எவ்வளவு வேகம் இருந்தாலும் அது நளினமாக இயல்பாக இருக்க வேண்டும். ஒரு கிளை அசைவதைப் போல, ஒரு அலை வீசுவது போல, ஒரு கவிதையின் வரிகள் போல… ஓக்கே! இன்னொரு முறை! ரெடி… ரோல் மியூசிக்!”ஒலிப்பதிவு செய்யப்பட்ட அந்த இசை கொஞ்சம் பின்னோக்கித் தள்ளப்பட்டு திடீரென்று ஆரம்பித்தது. சரியான இடத்தைப் பிடிக்க சில விநாடிகள் தயாரித்துக் கொண்டு அந்த ஆறு பேரும் தக்க இடத்தில் இசையோடு சேர்ந்து கொண்டு ஆடினார்கள்.

 

       அகிலா இசையின் கட்டளைக்கு ஆடினாள். கேட்டுக் கேட்டு அந்த இசை மனப்பாடம் ஆகிவிட்டது. ஆகவே ஒவ்வொரு இசைக் குறிப்பையும் அவளால் முன்னறிந்து சரியான லயத்துடன் அதில் இணைய முடிந்தது. ஆனால் அதிகம் யோசிப்பதற்கு இடம் கொடுக்காத வேகமான இசை. கிட்டத்தட்ட உடல் உறுப்புக்கள் தானியங்கியாக ஆட வேண்டும். அந்த அளவுக்குப் பலமுறை பயிற்சி செய்ய வேண்டும்.இசை தொடங்கப்பட்டு நடனம் நடந்து கொண்டிருக்கும் போது அகிலாவின் எல்லாச் சிந்தனைகளும் இயக்கங்களும் அதனோடு ஒன்றியிருந்தன. வேறு நினைப்புக்கு இடம் இல்லை. ஆனால் பயிற்சியில் ஏற்படும் சிறு சிறு இடைவெளிகளில் உறுப்புக்கள் களைத்து மனம் தளர்ந்து இருக்கும்போது கணேசனின் நினைவு குப்பென்று பற்றிக் கொண்டது.தன் குறிப்பைப் புரிந்து கொண்டு வந்திருப்பானா? தனக்காகக் காத்திருப்பானா? பயிற்சி அறையிலிருந்து வெளியேறும்போது எதிர்ப்படுவானா? என்ற கேள்விகள் தோன்றின. அப்படி காத்திருந்தால் என்ன பேசுவது? ஆள் அங்கு இல்லாமல் போனால் எப்படி? அது தனக்குப் பெரிய ஏமாற்றமாகுமா? ஏன் ஏமாற்றமாக வேண்டும்? இந்த கணேசன் என்ற மாணவருடன் தான் பேச வேண்டிய விஷயம் ஒன்றுமில்லையே! அவன்தான் ஏதோ பேச வேண்டும் என்றான். வந்தால் பேசலாம். வராவிட்டால் தான் ஏன் ஏமாற்றமடைய வேண்டும்?ஆனால் அடுக்கடுக்கான அந்த சிந்தனைப் படலங்களில் ஒன்று அவன் வர வேண்டும், அவனைச் சந்திக்க வேண்டும், அவனுடன் பேசவேண்டும் என்று விரும்பிக்கொண்டே இருந்தது. அவன் வராவிட்டால் தனக்குப் பெரிய ஏமாற்றம்தான் என்று சொல்லிக் கொண்டே இருந்தது.

 

        நேரம் ஆக ஆக இந்த சிந்தனைதான் முன்னணியில் நின்றது. பத்து மணிக்குப் பின் அடிக்கடி கடிகாரத்தைப் பார்க்கத் தொடங்கினாள்.“அகிலா – ரோஸ்மான் ஜோடி மற்றும் லத்தீப் – சபாரியா ஜோடி என்னைக் கவனியுங்கள். நானும் கேத்தரினும் முன்னால் வழிகாட்டுவோம். நீங்கள் சரியாக நான்கடி பின்னால் வலது பக்கமும் இடது பக்கமும் இருக்க வேண்டும். இரண்டு ஜோடிகளும் சமமான தூரத்தில் இருக்க வேண்டும். இதுதான் அடிப்படை அமைப்பு. மேடை முழுவதும் நாம் சுழன்று சுழன்று வந்தாலும் நடனத்தின் ஒரு பாகம் முடிந்து அடுத்த பாகம் ஆரம்பிக்கும் போது இந்த அமைப்புக்குத் திரும்பி விட வேண்டும்”இன்னும் இரண்டு முறை ஆடி அமைப்பு சரியாக வருகிறதா என்று சோதித்தார்கள். அவளுடைய ஜோடியான ரோஸ்மான் அருமையான நடனக்காரன். பெண்களை விட அவனுடைய உடம்பு இன்னும் அருமையாக வளைந்தது. அவனுடைய முகத்தில் எப்போதும் ஒரு இளம் புன்னகை இருக்கும். ஆனால் அதிகம் பேசமாட்டான். அவனுடைய கவனம் முழுவதும் நடனத்தில்தான் இருக்கும். ரோஸ்மானோடு ஈடு கொடுத்து ஆடுவது அகிலாவுக்கு ஒரு சவாலாக இருந்தது.அக்குளிலும் கழுத்திலும் வியர்வை கசகசத்தது. ஆடும் வசதிக்காகப் போட்டிருந்த முழங்கால் வரையிலான லியோடார்ட்ஸ் வியர்வையை உறிஞ்சினாலும் இடையிலும் தொடையிலும் அந்தக் கசகசப்பு இருக்கத்தான் செய்தது.

 

       முகம், தோள் கைகள் எங்கணும் வியர்வை வழிந்தது. எப்போது போய் துண்டை எடுத்துத் துவட்டலாம் எனக் காத்திருந்தாள்.பத்து மணி ஆகியும் பேராசிரியர் கௌஸ¤க்கு திருப்தி ஏற்படவில்லை. “சரி, ·போர்மேஷன் ஒரு மாதிரியாக வந்துவிட்டது. ஆனால் அசைவுகளுக்கு இன்னும் மெருகூட்ட வேண்டும். ரோஸ்மான், நீ அருமையாக ஆடுகிறாய். ஆனால் பெண்கள் மாதிரி ஆடாதே. நீ ஆண். ஆடுவதில் ஆண்மை இருக்க வேண்டும். ஆகவே அசைவுகளை அளவாக வைத்துக் கொள்!”அவனைத் தனியாகக் கூப்பிட்டு குனிந்து வளையச் சொல்லி அசைவுகளை அளவு படுத்தினார். அவன் டக்கென்று பிடித்துக் கொண்டான். மற்றவர்கள் வியர்வையைத் துடைத்துக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அகிலாவின் இறுகக் கட்டிய தலை முடிக்குள் ஈரம் கசகசத்தது. ரப்பர் ரிப்பனை அவிழ்த்து தலையை உதறி ஈரத்தை வழித்து விட்டாள்.நேரம் பத்தே காலாயிற்று. அவளுக்கு உள்ளத்தில் கவலை படர்ந்தது. வந்திருப்பானா? வந்து பார்த்து காணவில்லையே என்று திரும்பிப் போயிருப்பானா?ஏன் இந்தப் பேராசிரியர் இன்றைக்கு இப்படி நேரத்தைக் கடத்துகிறார் என்று எரிச்சல் பட்டாள். அப்புறம் அவன் வந்திருந்தால் என்ன? வந்து திரும்பியிருந்தால்தான் என்ன? வராமலே இருந்தால்தான் என்ன? ஏன் இப்படி மனம் அலைக்கழிக்கிறது? என்று தன் மீதே கோபப் பட்டாள்.பத்து இருபதுக்குத்தான் கௌஸ் கடிகாரத்தைப் பார்த்தார். “ஓக்கே! நிகழ்ச்சிக்கு இன்னும் இரண்டு வாரம்தான் இருக்கிறது. ஆகவே பயிற்சியைத் தவற விடாதீர்கள். அடுத்த வாரம் காஸ்டியூம் ·பிட்டிங் இருக்கிறது. வந்து போட்டுப் பாருங்கள். சரி இன்றைக்குப் போதும்!” புறப்பட்டார்.அவசரமாக தலைமுடியைச் சேர்த்து இறுக்கிக் கொண்டை போட்டாள். தொடர்ந்து ஊறிக் கோண்டிருந்த வியர்வையை மீண்டும் ஒரு முறை துண்டால் துடைத்தாள். கறுப்பு லியோடார்ட் சட்டைக்கு மேல் தனது வெள்ளை தொள தொள டீ சட்டையை அணிந்து கொண்டாள். “குட் நைட் ப்ரொ·பெசர்” என்று சொல்லி விட்டு விரைந்து இறங்கினாள்.

 

        பல்கலைக் கழகத்தின் அந்தக் கலாச்சார மண்டபத்தை அண்மையில்தான் கட்டியிருந்தார்கள். ஒரு 500 பேர் வரை குளுகுளு ஏர்கண்டிஷனில்சுகமாக உட்கார்ந்து கலாச்சார நிகழ்ச்சிகள், பல்கலைக் கழகத்தின் அதிகார பூர்வ விழாக்கள், திரைப்படங்கள் ஆகியவற்றைப் பார்க்கலாம். அரங்கம் முழுவதும் கம்பளம் விரித்து மெத்து மெத்தென்று இருக்கும். யுஎஸ்எம்மின் நுண்கலை இயல் மாணவர்களின் நாடகங்கள், நடனங்கள், கவிதைகள் போன்ற படைப்புகள் அங்கேதான் அதிகமாக அரங்கேறும்.பல்கலைக் கழகத்திற்கு ஏற்கனவே ஒரு பிரம்மாண்டமான மண்டபம் இருக்கிறது. 2,200 பேர் வரை அமரக்கூடிய தேவான் சையட் புத்ரா என்ற பட்டமளிப்பு விழா மண்டபம். பட்டமளிப்பு விழா தவிர பெரிய அளவிலான கலைநிகழ்ச்சிகளும் அங்குதான் நடக்கும். ஆனால் சிறிய அளவிலான நிகழ்ச்சிகளுக்கு வசதியான மண்டபம் இல்லாத குறையை மாணவர் இல்லத்தின் பக்கத்தில் கட்டப்பட்ட இந்தப் புதிய கலாச்சார மண்டபம் போக்கியிருந்தது.மாணவர் இல்லம், கலாச்சார மண்டபம் ஆகியவை அமைந்திருந்த இந்தப் பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாமல் அடைத்து மாணவர்கள் நடப்பதற்காக சிவப்பு நிறத்தில் ஓரங்களை வளைத்து வளைத்து வெட்டிய கற்கள் பதித்த அகன்ற நடைபாதை அமைத்திருந்தார்கள். அந்த நடைபாதையின் இரு பக்கங்களிலும் பிரம்மாண்டமான மழை மரங்கள் அமைந்திருந்ததால் எந்நேரமும் நிழலாக இருக்கும்.

 

        கலாச்சார மண்டபம் கட்டி முடிக்கப்பட்ட கையோடு அந்த இடத்தை அழகு படுத்துவதற்காக அந்த நடைபாதையின் இருமருங்கிலும் புதிய சாலை விளக்குகளை அமைத்தார்கள். பளிங்கு நிறத்தில் பெரிய குடம் போன்ற விளக்குக் கூடுகளுக்குள் வெள்ளை நியான் விளக்குகள் கண்ணைக் குத்தாத மிருதுவான ஒளியை உமிழ்ந்தவாறு இருக்கும். இரவில் அந்தக் கம்பங்களின் அடியில் ஒளித் தீவுகள் தோன்றி நடைபாதையின் சிவப்புக் கற்களில் வண்ணக் கோலங்கள் போட்டிருக்கும்.அதைவிடவும் இன்னொரு கலா பூர்வமான ஒளிப்பிரவாகமும் அங்கு உண்டு. கலாச்சார மண்டபத்தின் முன்னால் இருந்த பிரம்மாண்டமான மழை மரம் ஒன்றின் கீழ் சக்தி மிக்க விளக்குகள் பொருத்தி, அந்த ஒளியை மரத்தின் தண்டு மீதும் இலைகளின் மீதும் பாய்ச்சியிருந்தார்கள். அந்த ஒளி இரவில் மரத்தண்டின் பழுப்பு நிறத்தையும் இலைகளின் கரும் பச்சையையும் ஒரு இருள் கலந்த வண்ணத்தில் அழகாக எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தது. அந்த ஒளி வீச்சில் மரத்தினுள் விதம் விதமான நிழல் வீச்சுக்களும் தெரிந்தன.இந்த அழகிய மரத்தின் அழகு பகலில் மட்டும் தெரிந்தால் போதாது, இரவிலும் தெரிய வேண்டும் என்று நினைத்து செலவைப் பாராமல் அதற்கு விளக்கு வசதிகள் செய்து கொடுத்த பல்கலைக் கழகத்தின் கலைமனத்தை எண்ணி வியந்தவாறு கணேசன் கலாச்சார மண்டபத்தின் படிக்கட்டுக்களுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தான்.

 

          எட்டு மணிக்கு நடனப் பயிற்சி ஆரம்பித்தால் பத்து மணிக்கு முடியும் என உத்தேசித்தான். ஆனால் ஒரு வேளை சீக்கிரம் முடிந்து விட்டால் என்ன செய்வது என்று ஒன்பது மணிக்கெல்லாம் வந்து விட்டான். அன்று வெற்றி விழாக் களிப்பில் அவனோடு ஒட்டிக் கொண்டிருந்த நண்பர்களை மெதுவாகக் கழற்றிவிட்டு, “ரொம்ப வேல இருக்குப்பா. லைப்ரரிக்குப் போகணும் ஆள விடுங்க!” என்று புறப்பட்டு வந்தான். தனியாகக் காத்திருந்தான்.மாணவர் விடுதிக்கு வந்து மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு முதல் மாடியில் நடனப் பயிற்சி நடக்கும் அறை எது எனக் கண்களை மேயவிட்டுப் பார்த்தான். பல அறைகளில் விளக்கு எரிவது மூடிய திரைகளூடே தெரிந்தது. அந்த அறைகளில் ஒன்றிலிருந்து ஜோகேட் இசை ஒலிப்பதும் நிற்பதுமாக லேசாகக் கேட்டது. அதுவாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். ஒலி நாடாவை நிறுத்தி இசைத்து பின்னோக்கிச் சுற்றி மீண்டும் இசைத்துத் தீவிரமாகப் பயிற்சி செய்கிறார்கள் என்று தெரிந்தது.நடனமணிகள் ஜன்னல் திரைக்கு ஓரமாக வரும் சில வேளைகளில் மட்டும் அவர்கள் கருநிழல் நெளிந்து நெளிந்து தெரிந்தது. இதில் எந்த நிழல் அகிலாவின் நிழல்? சொல்ல முடியவில்லை.

 

        ஆண்களின் நிழலுக்கும் பெண்களின் நிழலுக்கும் கூட வித்தியாசம் தெரியவில்லை. கொஞ்ச நேரம் பார்த்துச் சோர்ந்து போனான்.எந்த ஆண் அகிலாவோடு ஆடுகின்ற பாக்கியம் பெற்றிருக்கிறானோ என நினைத்த போது பொறாமையாகக்கூட இருந்தது. அவன் யார், மலாய்க்காரனா? சீனனா? இந்தியனா? தொட்டு ஆடுகிறார்களா, தொடாமல் ஆடுகிறார்களா?ஜோகெட் நடனத்தில் நெருக்கமாக ஆடினாலும் தொட்டு ஆடுவதில்லை. ஆனால் பேராசிரியர் கௌஸின் நடன அமைப்பைப் பற்றிச் சொல்ல முடியாது. புதுமைகள் செய்கிறேன் என்று கட்டிப் பிடித்து ஆடவைத்தாலும் வைப்பார்.அகிலாவை யாராவது தொட்டு ஆடுகிறார்களா என்பது பற்றி அவன் மனம் கவலைப் படுவது அவனுக்கே வேடிக்கையாக இருந்தது. தானும் கலாச்சாரக் குழுவில் சேர்ந்து நடனம் கற்றுக்கொள்ளலாமா என்று ஒரு கணம் எண்ணினான். அப்படியானால் இரவில் அகிலாவோடு சேர்ந்து பயிற்சி செய்யலாம். தானும் தொட்டு ஆடலாம். அவள் அருகிலேயே இருக்கலாம்.“பைத்தியம், பைத்தியம்” என்று மனசு கூவியது. இருக்கின்ற சங்கப் பொறுப்புக்களே முதுகை ஒடிக்கின்றன. இதற்கு மேல் கலாச்சாரக் குழுவிலும் சேர்ந்து முழங்காலையும் உடைத்துக் கொள்ளப் போகிறாயா என்று கேட்டது.

 

         உண்மைதான் என அயர்ந்தான். ஆனால் அகிலாவின் பக்கத்தில், அவள் மூச்சு விடும் தூரத்தில் தான் எந்நாளும் இருக்க வேண்டும் என்று ஆசை கொடுக்குப் போட்டு இழுத்துக் கொண்டே இருந்தது.“மன்னிச்சிக்குங்க கணேசன். எனக்கு எட்டரை மணியிலிருந்து பத்து மணிவரையில மாணவர் இல்லத்தில நடனப் பயிற்சி இருக்கு. போய் சாப்பாடு வாங்கி சாப்பிட்டுட்டு சீக்கிரம் திரும்பணும். இப்பவே நேரமாயிடுச்சி. அதுக்குத்தான் அவசரமா போயிட்டிருக்கோம். பை, பை” என்று வெடுக்கென்று சொல்லிவிட்டு அவள் போன போது முதலில் அவன் முகமும் மனதும் தொங்கிப் போயின. தான் நிராகரிக்கப் பட்டுவிட்டோம் என்னும் அவமான உணர்ச்சிதான் மேலோங்கி நின்றது. அதுவரை இருந்த வெற்றிக் களிப்புகள் தொலைந்திருந்தன.அவர்கள் போகும் திசையைக் கொஞ்ச நேரம் பார்த்திருந்துவிட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்த பொழுது மனம் அவளுடைய வார்த்தைகளையே திரும்பத் திரும்ப அசை போட்டுக் கொண்டிருந்தது. அப்போதுதான் திடீரென அவனுக்குப் புரிந்தது.

 

        “வேண்டாம், உன் வழியைப் பார்த்துக் கொண்டு போ” என்ற சொல்ல வந்தவளாக இருந்தால் ஏன் தொடங்கும் நேரம் முடியும் நேரம் இடம் எல்லாம் இப்படி விரிவாகச் சொல்ல வேண்டும்? “பத்து மணிக்கு வந்து விடு அங்கே பேசிக்கொள்ளலாம்” என்ற செய்தி அவளுடைய பேச்சில் இருந்தது அப்போதுதான் புரிந்தது.அதன் பிறகு உள்ளம் நிலை கொள்ளவில்லை. ஒன்பது மணிக்கெல்லாம் அங்கு வந்து அலைய ஆரம்பித்துவிட்டான். பத்து மணிக்கு எட்டி எட்டிப் பார்த்தான். பயிற்சி முடிகிற அறிகுறிகள் தெரியவில்லை. படிக்கட்டில் சோர்ந்து உட்கார்ந்து விட்டான்.அப்படிக் காத்திருப்பது கொஞ்சம் வெட்கமாகவும் இருந்தது. நண்பர்கள் பார்த்துக் கேட்டால் என்ன சொல்வது? ஏன் இப்படிக் காத்திருக்க வேண்டும்? எப்படி இந்த அளவுக்குத் தன் மனதைக் கவ்வினாள்?அவனுக்கு விடைகள் தெரியவில்லை. ஆனால் அவன் கை பிடிக்க அவள் கண்ணீர் விட்ட காட்சி மீண்டும் மீண்டும் வந்து நின்றது. அன்று விசாரணையில் தான் விடுதலை பெற்றதைப் பார்த்து மகிழ்ச்சியாக சிரித்த காட்சி நினைவுக்கு வந்தது. இப்படிச் சின்ன சின்ன அர்த்தமுள்ள பார்வைகளும் சிரிப்புகளும் கண்ணீரும்தான் தன் மனதில் காதல் கனலை மூட்டி விட்டன என்பது புரிந்தது.முதல் மாடியில் இசை நின்றது. ஆட்கள் கலையும் அடையாளம் தெரிந்தது.

 

       எழுந்து படிக் கட்டுக்களுக்குள் நிழலில் உள்வாங்கி மறைவாகக் காத்திருந்தான். ஏன் மறைந்திருக்க வேண்டும் என்பது புரியவில்லை. ஆனால் மற்றவர்கள் கண்ணில் படாமல் அவளைப் பார்ப்பதுதான் சரி என்று பட்டது.பேங்க் சிம்பானான் நேஷனல் பக்கத்தில் இருந்த படிக்கட்டுகளில் படபடவென சிலர் இறங்கினார்கள். கடைசியாக அகிலா இறங்கினாள். கையிலிருந்த துண்டால் கழுத்தைத் துடைத்துக் கொண்டு நடந்தவாறு நிமிர்ந்து பார்த்தாள். முகம் களைத்து இறுக்கமாக இருந்தது. கண்கள் கொஞ்சம் அலைந்து தேடின. என்னைத்தானா?நிழலிலிருந்து வெளியே வந்தான். அவளைப் பார்த்து புன்னகைத்தான். அவனைப் பார்த்தாள். முக இறுக்கம் கலைந்து மெலிதாகப் புன்னகைத்தாள். அவளை நோக்கி முன்னேறினான்.“உங்களுக்காகத்தான் காத்திருக்கேன் அகிலா?” என்றான்.“எனக்காகவா? ஏன்?” ஒன்றும் தெரியாதவள் போல் கேட்டாள்.“சாயந்தரம் பேசணும்னு வந்தேன். நேரமில்லன்னு சொல்லிட்டிங்க! அதினாலதான் இப்ப வந்தேன்!”“இந்த ராத்திரியிலியா?”“ஓய்வாப் பேசிறதுக்கு ராத்திரிதான நல்ல நேரம்?”தயங்கி நின்றாள். ஆசை மனதில் இருந்தாலும் இரவு சந்திப்பு ஒரு பெரிய குற்றம் போலத் தோன்றியது. உடனிருந்த அனைவரும்போய்விட்டார்கள்.

 

           “என்ன பேசணும்?”“இப்படி கொஞ்ச நேரம் உக்காந்து பேசுவமா அகிலா?” படிக்கட்டுகளைக் காட்டினான்.உட்கார்ந்தாள். அவன் பக்கத்தில் உட்கார்ந்தான். வியர்வை மணத்தோடு அவனோடு நெருங்கியிருப்பது கூச்சமாக இருந்தது. அடிக்கடி துடைத்துக் கொண்டாள். தலையைக் கைகளால் கோதிக் கொண்டாள். தலை முடி ரொம்ப கலைந்து அசிங்கமாக இருக்குமோ? முகமெல்லாம் வியர்வை வழிந்து கருப்புப் பொட்டுகள் தெரியுமோ? என்ற கவலைகள் அவளுக்குள் வந்தன.ஆனால் அந்த கலைந்த தலைமுடியும் வியர்வையும் கருப்புப் பொட்டுக்களும்தான் அவனைக் கிறங்க அடித்தன. மிருதுவான சாலை விளக்குகளின் மஞ்சள் ஒளியில் அலங்காரமில்லாத ஆடம்பரமில்லாத சுய உருவத்தில் எத்தனை அழகாக இருக்கிறாள்! ஒரு புன்னகையையும் மருண்ட கண்களையும் மட்டுமே நகைகளாக அணிந்திருக்கிறாள். கழுத்தில் மட்டும் ஒரு தங்கச் சங்கிலி வியர்வையில் நனைந்து ஒட்டிக் கிடக்கிறது. அதன் பதக்கம் ஒன்று டீ ஷர்ட்டினுள் நிழலாடியது.“என்னமோ சொல்லணும்னு சொன்னிங்க! பேசாம இருக்கிங்களே!” என்றாள்.“எப்படி ஆரம்பிக்கிறதுன்னு தெரியல!”“சரி! அப்ப யோசிச்சு வைங்க! பின்னால பேசிக்குவோம்!” எழுந்தாள். எழுவதாக நடித்தாள்.பட்டென்று கையைப் பிடித்து உட்கார வைத்தான். இணங்கி உட்கார்ந்தாள். அந்தப் பிடி பிடித்திருந்தது.“இன்னைக்குக் காலையில இருந்து நடந்ததை நினைக்கும் போது என் தலையே சுத்துது அகிலா! என்னோட மகிழ்ச்சிக்கு ஒரு அளவே இல்ல. ஆனா அந்த மகிழ்ச்சிய உங்ககிட்ட பகிர்ந்துக்க ஒரு சந்தர்ப்பமே கிடைக்காமப் போச்சு! அதுக்கு மன்னிப்புக் கேட்கத்தான் வந்தேன்!” தயங்கித் தயங்கிப் பேசினான்.

 

        “உங்க மகிழ்ச்சிய என்னோட ஏன் கொண்டாடணும்? அதுக்குத்தான் இந்த கேம்பஸ்ல உங்களுக்கு அளவில்லாத நண்பர்கள், நண்பிகள் இருக்காங்களே!” என்றாள். ஏளனம் இருந்தது. கொஞ்சம் கோபமும் இருந்தது.“இருக்காங்க. ஆனா இப்படியெல்லாம் நடந்ததுக்கும் நீங்கதான் காரணம். அதில இருந்து நான் விடுதலை பெற்றதுக்கும் நீங்க ஒரு காரணம். அதுக்கெல்லாம் மேல எனக்காக இந்த பல்கலைக் கழக இடத்தையே தியாகம் செய்ய முன் வந்திங்களே, எனக்காக அழுதிங்களே, இதுக்கெல்லாம் நான் நன்றி சொல்ல வேணாமா? ஆகவே இந்த நல்ல முடிவ உங்களோடக் கொண்டாட்றதுதான் நல்லதுன்னு தோணிச்சி. ஆனா நான் நெனச்ச மாதிரி நடக்கல!”அவன் தன்னைப் பற்றி இவ்வளவு சிந்தித்து வைத்திருப்பது அகிலாவுக்கு இனிப்பாக இருந்தது. ஆனால் மறந்து விட்டு உதறி விட்டுத்தானே போனான்? கோபமாகவும் இருந்தது.“அதினால என்னங்க கணேசன்? கடைசியா உங்களுக்கு வேண்டிய உற்ற தோழியோடதான போய் கொண்டாடினிங்க! எனக்கு வருத்தம் ஒண்ணுமில்ல, சந்தோஷம்தான்!” என்றாள்.

 

       “ஜெசிக்காவத்தான சொல்றிங்க! நான் ஜெசிக்காவோட மட்டும் போகல! இன்னும் பல நண்பர்களோட கூட்டமாத்தான் போனோம். உண்மையில நானாப் போகல! என்ன இழுத்துக்கிட்டுப் போனாங்க. நீங்கதான் பாத்திங்களே!”பேசாமல் இருந்தாள். மௌனத்துக்குப் பின் அவன் பேசினான்: “ஜெசிக்கா என் ·பிரண்டுதான். ஆனா விசேஷமான ·பிரண்ட் ஒண்ணும் இல்ல! எல்லாரையும் போலத்தான் சாதாரண ·பிரண்ட்!” என்றான். ஜெசிக்காவை மனதில் வைத்துக் கொண்டு அகிலா தன்னிடமிருந்து விலகிப் போய்விடக் கூடாது என்ற பயம் வந்தது.“சாதாரண ·பிரண்டா விசேஷ ·பிரண்டான்னு எனக்கு எப்படித் தெரியும்? உங்களுக்கு நான் ஏதோ பெரிய தீங்கு செய்திட்டதாக ஜெசிக்கா என்னோட போட்ட சண்டை, என்னை தன் அறைய விட்டு விரட்டினது எல்லாத்தையும் பார்த்தா அவ சாதாரணக் கூட்டாளியா தெரியல. உங்களுக்கு மட்டும் விசாரணையில விடுதல கெடைக்காம தண்டனை கெடைச்சிருந்தா ஜெசிக்கா என்னக் கொண்ணே போட்டிருப்பா!”“இல்ல அகிலா! ஜெசிக்கா எல்லாத்திலியும் உணர்ச்சி வசப் பட்றவ! அவ நெனச்ச காரியம் நடக்கிலேன்னா அப்படித்தான் எல்லாரையும் கலக்கி எடுத்திருவா. அதத் தவிர எங்களுக்குள்ள வேற எதுவும் இல்ல!”அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.

 

        “அத ஏன் ஏங்கிட்ட சொல்றிங்க கணேசன்? உங்களுக்கிடையில எப்படிப்பட்ட நட்பு இருந்தாலும் எனக்கென்ன?” கேட்டுக் குனிந்து கொண்டாள். ‘இல்லையென்று சொல், மறு உறுதிப் படுத்து’ என்று அவள் மனது அவனைக் கேட்டது.“இத உங்ககிட்ட சொல்றது முக்கியம்னு நெனச்சேன். ஜெசிக்கா உங்ககிட்ட நடந்துகிட்ட விதத்துக்காக நான் மன்னிப்புக் கேட்டுக்கிறேன். அவ அப்படி நடந்தது தெரிஞ்ச உடனே நான் ரொம்ப கலங்கிப் போயிட்டேன். உங்க மனம் புண்படக் கூடாதுன்னு என் மனம் அடிச்சிக்கிச்சி!”விளக்குக் கம்பங்களில் ஏதோ பூச்சிகள் வந்து மொய்க்கத் தொடங்கியிருந்தன. அந்த உரையாடல் அவளுக்குச் சுகமாக இருந்தது. ஆனால் அந்த இரவு நேரத்தில் அப்படி ஒரு ஆணிடம் உட்கார்ந்து பேசுவது குற்றம் என்றும் பட்டது. ஏன் அது குற்றம் என்றும் தெரியவில்லை. திடீரென அம்மாவை நினைத்துக் கொண்டாள். “ஆம்பிளப் பிள்ளங்களோட தனியா என்ன பேச்சு உனக்கு?” என்று சிறு வயது முதல் கண்டித்துக் கண்டித்து அவள் சொல்லிக் கொடுத்த ஒழுக்கத்திலிருந்து தவறுகிறோமோ என்ற எண்ணம் வந்தது.“சரி கணேசன். நான் புரிஞ்சிக்கிட்டேன். இத இத்தனை தூரம் வந்து இந்த ராத்திரியில காத்திருந்து நீங்க சொன்னதுக்கு நன்றி. நான் வரட்டுமா?” என்று எழுந்தாள்.

 

     “ஏன் இத்தனை அவசரப் பட்றிங்க?” என்று கெஞ்சுவது போல் கேட்டான்.“இதோ பாருங்க, வேர்த்துக் கொட்டுது. நான் போய் குளிக்கணும்” என்றாள்.“இதோ பைக்கில ஏறுங்க! ஒரு நிமிஷத்தில கொண்டு விட்டிர்ரேன்” என்றான்.“ஐயோ, இந்த வேர்வையோடயா? உங்க பைக்கே அழுக்காப் போகும்!” என்று சிரித்தாள்.“அழுக்கான பரவாயில்ல! அது அழுக்குன்னு நான் நெனைக்க மாட்டேன். உங்களுக்கு இந்தச் சின்ன உதவி கூட செய்லேன்னா எப்படி?”தயங்கி நின்றாள். அவன் தோள் தழுவி பைக்கில் பின்னால் உட்காரும் எண்ணம் கிளுகிளுப்பாக இருந்தது. ஆனால் ‘வேண்டாம் இது அதிகம்’ என ஒன்று வந்து மறுத்தது. ஆண்களிடம் ஜாக்கிரதை என்று எச்சரித்தது. யார் உள்ளிருந்து எச்சரிக்கிறார்கள். அம்மாவா?“வேணாம் வேணாம். இதோ இங்க இருக்கிற தேசாவுக்கு எதுக்கு பைக்? நான் வரேன் கணேசன்.” எழுந்து நடந்தாள்.“நில்லுங்க அகிலா!” என்றான். நின்றாள்.“என்னைக்காவது ஒரு நாள் நாம் ரெண்டு பேரும் போய் இந்த வெற்றியைக் கொண்டாடத்தான் வேணும். கொறைஞ்சது என்னோட வந்து ஒரு நாள் சாப்பிடுங்க!” என்றான்.தயங்கி நின்று யோசித்தாள். “சரி! என்னோட தோழிகளக் கேட்டுச் சொல்றேன். அவங்களுக்கு எப்ப ஓய்வா இருக்கோ அப்ப போகலாம்!” என்றாள்.“தோழிகளா? அவங்க எதுக்கு?” என்று கேட்டான்.“நாம் ரெண்டு பேர் மட்டும் தனியாப் போறது நல்லா இருக்காது!” என்றாள்.“ஏன்? உங்களுக்கு விருப்பமில்லையா?”தயங்கினாள்.

 

      விருப்பமில்லையா? விருப்பமாகத்தான் இருக்கிறது. ‘ஆம்’ என்றால் வற்புறுத்துவான். ‘இல்லை’ என்றால் முறித்தது போலாகிவிடும். “அதுக்காக இப்படி வெடுக்கினு பேசிறதா? ஒரு ஆறுதலா பேசக்கூடாது?” மாலையில் மாலதி கூறிய அறிவுரை நினைவுக்கு வந்தது.“இன்னொரு நாளைக்கு சொல்றேன் கணேசன்! வரட்டுமா? பை பை!” தொங்கிப் போயிருந்த அவன் முகத்தைப் பார்த்துச் சொல்லிவிட்டு அப்புறம் திரும்பிப் பார்க்காமல் விரைவாக நடந்தாள்.அவள் போகும் திக்கைப் பார்த்திருந்தான். அவள் ஒரு முறையாவது திரும்பிப் பார்ப்பாள் என்று ஒரு ஆசையுடன் காத்திருந்தான். அவள் திரும்பவில்லை. சாலையைக் கடந்து தேவான் சையட் புத்ரா ஓரமாகப் போன பாதையில் விறுவிறு வென்று நடந்தாள்.

 

        ஒளிக்கம்பங்களின் கீழ் அவள் உருவம் தெரிவதும் இருளில் மறைவதுமாக இருந்தது.கணேசன் அங்கேயே கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தான். மனம் சோர்ந்திருந்தது. எத்தனை அழுத்தமாக நிராகரித்து விட்டாள். இது முதன் முறையல்ல. மாலையில் அவளுடைய தோழிகள் முன்னிலையில் கேட்ட போதும் நிராகரித்தாள். இரவில் இந்த அமைதியான சூழ்நிலையில் தனிமையில் கேட்ட போதும் நிராகரித்து விட்டாள். ‘ஜெசிக்காவைப் பற்றி ஏன் என்னிடம் பேசுகிறாய்?’ என்று கேட்டதன் மூலம் தனக்கு யார் காதலி யார் காதலி இல்லை என்பதில் அவளுக்கு அக்கறை இல்லை எனத் தெரிந்தது. ‘அவசரப் படாதே கொஞ்ச நேரம் பேசலாம்’ என்றால் மறுத்து விட்டாள். ‘பைக்கில் ஏறு கொண்டு விடுகிறேன்’ என்றால் மறுத்து விட்டாள். ‘இன்னொரு நாள் சாப்பிடப் போகலாமா?’ என்றால் மறுத்து விட்டாள். கொஞ்சமும் இடம் கொடுக்கவில்லை. முற்றாக நிராகரித்து விட்டாள்.தான் எவ்வளவு பெரிய முட்டாள் என்பது இப்போதுதான் அவனுக்கு விளங்கியது. தான் அவளுக்குச் சிறிதும் பொருட்டல்ல என்பது தெளிவாகிவிட்டது. அவளுடைய அழுகையையும் சிரிப்பையும் எவ்வளவு தப்பாக அர்த்தப் படுத்திக் கொண்டேன்! அவள் அழுதது இயல்பாக தங்கள் இருவருக்கும் நேர்ந்து விட்ட துன்பம் பற்றி! தான் பல்கலைக் கழகத்தை விட்டு விலக வேண்டி வருகிறதே என்ற பயம் பற்றி! அவள் சிரித்தது இந்தத் துன்பம் முடிந்ததே என்பதனால்.இதிலே எனக்கென்று ஒன்றும் இல்லை. அழுகை எனக்காக அல்ல. சிரிப்பு எனக்காக அல்ல. எனக்கு என்று நானாக அர்த்தப் படுத்திக் கொண்டேன்.

 

        நான் முட்டாள். வாழ்க்கையை, மனிதர்களை இன்னும் தெரிந்து கொள்ளாத மடையன்.இதையெல்லாம் காதல் என்று எண்ணிக்கொண்டு ஒன்பது மணிக்கு இங்கு வந்து ஒரு மணிநேரம் இருட்டில் காத்திருந்து வீணாக்கிய இளிச்சவாயன். அவள் தன்னைச் சிறிதும் எண்ணியிருக்காத நிலையில் என்னை அவள் மீது திணிக்க முயன்றேன். அவள் என்னைத் தீண்டத் தகாதவன் போல இரக்கமில்லாமல் பிடித்துத் தள்ளிவிட்டாள். கீழே விழுந்து புழுதியைப் பூசிக் கொண்டேன். இது மற்றவர்களுக்குத் தெரிந்தால் எத்தனை அவமானம்!சீ! இனி எந்த நாளிலும் அவள் பக்கத்தில் தலை வைத்துக் கூடப் படுக்கக் கூடாது. இந்த அவமானத்தை இனியொரு முறை சகித்துக் கொள்ள முடியாது. அடுத்த முறை பேசப் போனால் கன்னத்தில் அறைந்தாலும் அறைவாள்.இந்தத் தமிழ்ப் பெண்களே இப்படித்தான். சகஜமாகப் பழகத் தெரியாது. இங்கிதமாகப் பேசத் தெரியாது.இன்றைக்குக் காலையில் கிடைத்த வெற்றிகள் எல்லாம் அர்த்தமில்லாதவையாகத் தோன்றின. அவளுடைய நிராகரிப்பு என்னும் வெள்ளத்தில் அந்த வெற்றிகளெல்லாம் அடித்துக் கொண்டு போனது போல இருந்தது. மனசு ஏமாற்றத்தில் கனத்துக் கிடந்தது.சோர்வுடன் எழுந்து தனது மோட்டார் சைக்கிளை நோக்கி நடந்தான்.

 

        புத்தம் புதிய சோப்பை அப்போதுதான் பிரித்தாள். ஷவரிலிருந்து வந்த குளிர் நீரில் நனைத்த போது அந்த சோப் புதிய எலுமிச்சம் பழ வாசனையை விடுவித்தது. உடம்பெல்லாம் பூசிக் கொண்ட போது நுரை நுரையாயாகப் பொங்கி வழிந்தது. அன்றைய பிற்பகல், இரவு வியர்வையெல்லாம் அதில் வழிந்து போய் தோலில் நறுமணம் ஏறிய போது அகிலாவுக்கு ஆனந்தமாக இருந்தது.அன்றாட வாழ்வில் குளிக்கும் நேரம் போன்ற ஆனந்தமான நேரம் வேறு ஏதும் இல்லை. கதவை அடைத்துக் கொண்டு விட்டால் பிறர் கண் படாமல் தனக்கே தனக்கு என்று சொந்த உலகத்தைப் படைத்துக் கொள்ளலாம். சுவரை வெறித்துப் பார்த்துக் கொண்டு மனதுக்குள் வேண்டிய காட்சிகளைப் படைத்துக் கொள்ளலாம். குளிக்கும் நேரத்தில் எல்லா சாதாரண மனிதர்களும் கலைஞர்கள்தான்.அகிலா தன் கழுத்துச் சங்கிலியின் சிறிய பதக்கத்தை வருடியவாறு சுவரில் கொஞ்சம் சாய்ந்து கொண்டு தண்ணீரை வழிய விட்டுக் கொண்டிருந்தாள். அது தலையில் கொட்டி கூந்தலில் இறங்கி தோள் வழியாக உடம்பு எங்கணும் பாய்ந்தது.

 

       தண்ணீரும் ஒரு மருந்துதான் என அகிலா எண்ணினாள். இப்படிப் பிறந்த மேனியான தோலில் பட்டு வழிந்தவுடன் எப்படி சுகப் படுத்துகிறது! இன்றைய மத்தியான வெயிலின் புண்களும் திறந்த வெளியின் தூசுகளும் அகன்று தோல் புதுப் பிறவி எடுத்துக் கொண்டிருந்தது.இந்த விடுதியில் நிம்மதியாகக் குளிப்பதற்கு இரவு நல்ல நேரம். காலையிலும் பகலிலும் யாராவது காத்திருந்து அவசரப் படுத்திக் கொண்டே இருப்பார்கள். ஆனால் இரவில் அந்த அவசரம் இல்லை. நீண்ட நேரம் குளிக்கலாம். அப்போது நீர் அழுத்தமும் அதிகமாக இருக்கும். ஷவரை அருவியாகக் கருதிக் கொண்டு பாடலாம். நீரை வழிய விட்டவாறு கேசத்தைக் கோதிக் கொண்டு ஜலக்ரீடைக் கனவுகள் காணலாம்.ஆனால் அகிலாவின் அந்த இனிய கனவுகளூடே நினைவுகளும் இடைப்பட்டு அவளை வருத்திக் கொண்டிருந்தன. ஏன் இப்படி நடந்து கொண்டேன்? ஏன் இப்படி விட்டுக் கொடுக்காமல் முரட்டுத் தனமாகப் பேசினேன்? ஏன் நயந்து வந்தவனை அப்படி முரட்டுத் தனமாகத் தள்ளினேன்? என்று பல கேள்விகளைத் தனக்குள் கேட்டுக் கொண்டாள்.கணேசனை அவளுக்கு வெகுவாகப் பிடித்திருந்தது. மனம் அவனுக்காக ஆசைப் பட்டது. அவன் பேச்சுக்கும் பார்வைக்கும் அன்புப் பிடிக்கும் ஏங்கிக் கூட நின்றது. ஆனால் அப்படியெல்லாம் ஆசைப் படுவது குற்றம் என்றும் அதே மனம் சொல்லியது. அந்த எச்சரிக்கைதான் இன்று வென்றது.

 

       வென்ற பின் இப்போது வேகிறது. எத்தனை ஆசையாக என்னிடம் பேசவந்தான்! ஏன், வரச் சொல்லி சூசகமாகச் சொன்னதே நான்தானே! அப்படிச் சொன்னபிறகு நடனப் பயிற்சி நடந்த நேரத்திலெல்லாம் அவன் வந்திருப்பானா, வந்திருப்பானா என்று இந்த மனம் கிடந்து ஏங்கவில்லையா? அப்படியெல்லாம் ஏங்கி எதிர்பார்த்து அவன் நேரில் வந்து நின்ற போது ஏன் சுமுகமாகப் பேச முடியவில்லை? ‘வந்ததற்கு நன்றி, எனக்காகக் காத்திருந்ததற்கு நன்றி, என்னோடு உட்கார்ந்து பேசுவதற்கு நன்றி’ என்று மகிழ்ந்து சொல்ல வேண்டியதற்கு பதிலாக ‘ஏன் இங்கு வந்தாய்? என்னோடு உனக்கென்ன பேச்சு? நீ யார் நான் யார்?’ என்ற தொனியில் வெடுக்கென்று பேசி விரட்டத்தான் முடிந்தது.பருவப் பெண்ணுக்கு இந்தத் தற்காப்பு உணர்வு தேவைதான் என அகிலாவுக்குப் புரிந்தது. அம்மா இதை மறை முகமாகச் சொல்லிக் கொடுத்திருக்கிறாள். இந்த விஷயங்கள் பற்றியெல்லாம் எந்த நாளும் அவள் நேராகத் தன்னிடம் பேசியது கிடையாது. ஆனால் மறைமுகமாக நிறையப் பேசியிருக்கிறாள்.எட்டு ஒன்பது வயதிலேயே பக்கத்து வீட்டு எதிர்த்த வீட்டுப் பையன்களோடு அவள் பட்டம் விடுவதற்கு ஓடிய போது அம்மா “ஆம்பிள பிள்ளங்களோட உனக்கு என்ன விளையாட்டு?” என்று கோபத்துடன் ஏசியிருக்கிறாள். அது ஏன் என்பது ஒரு காலும் புரிந்ததில்லை. பையன்களும் பெண்களும் எல்லாரும் கூட்டாளிகளாகத்தான் தெரிந்தார்கள்.

 

         ஆரம்பத்தில் பட்டம் விடும் ஆசை அதிகமாகி அம்மாவின் எச்சரிக்கையை சட்டை பண்ணாமல் அவள் ஓடிய போது அம்மா இழுத்து அடித்திருக்கிறாள். ஆகவே ஆண் பையன்களுடன் போய்ச் சுற்றுவது என்பது அம்மாவைக் கோபப்பட வைக்கின்ற விஷயம், தண்டிக்கப்பட வேண்டிய விஷயம் என்பது எட்டு வயதில் புரிந்து போயிற்று.அவள் பருவமடைந்த போது அந்தத் திடீர் உதிர வெளிப்பாட்டில் தன் உடலுக்குள் ஏதோ தீராத நோய் வந்து விட்டதைப் போல அகிலா பயந்து கிடக்கையில் ஏதோ ஒரு வகையில் தான் சாக்கடையில் விழுந்து விட்டது போலக் கருதி அம்மா தீட்டுக் கழிப்புச் சடங்குளெல்லாம் செய்து அவளை ஒரு ஈனப் பிறவியாக்கினாள். பெண்கள் மாதாமாதம் அசிங்கப்பட்டு அந்த அசிங்கத்தை ஒளித்தும் மறைத்தும் வைத்துக் கூச வேண்டிய சாபம் பெற்றவர்கள் என்பதை அம்மா வேலைகள் செய்தவாறு யாருக்கோ சொல்லுவது போல தனக்குச் சொல்லி வைத்திருந்தாள்.“இனிமே இந்த ஆம்பளப் பையன்களோட இளிச்சி இளிச்சி பேசாத, ஆமா!” என்று மீண்டும் எச்சரித்தாள். இந்த ஆண்களிடம் தன்னை அபாயத்துக்கு உள்ளாக்குகிற ஏதோ ஒரு மந்திரம் இருக்கிறது என அகிலா எண்ணினாள். அந்த மந்திரம் ஏதும் பெண்களிடம் இல்லை. ஆகவே ஆண்கள் அதிசயித்துப் பார்க்கத் தக்கவர்கள். பயப்படத் தக்கவர்கள்.

 

       ஒரு மரியாதையுடன் நடத்தப்பட வேண்டியவர்கள் என்று அகிலா கற்றுக் கொண்டாள்.ஆனால் தன் வயதை ஒத்த இந்தப் பையன்கள் ஆடுகிற விளையாட்டுகள், பேசுகிற பேச்சுக்கள் இவற்றையெல்லாம் பார்த்தால் தன்னை விட இவர்களுக்கு புத்திசாலித்தனம் மிகக் குறைவு என்று தெரிந்தது. வகுப்பில் கூடப் பெண்களை விட குறைவான மார்க்கே அவர்கள் வாங்கினார்கள். வாத்தியார் சொல்லுகின்ற பாடம் பெண் பிள்ளைகளுக்குப் புரிவது போல இந்தப் பையன்களுக்குப் பட்டென்று புரிவதில்லை. விளையாட்டிலேயே குறியாக உள்ள மண்டுகளாகத்தான் இருந்தார்கள்.வீட்டில் கூட அப்பாவை விட அம்மாதான் புத்திசாலியாக இருந்தாள். வீட்டு நிர்வாகம், பண நிர்வாகம் சேமிப்பு, முதலீடு எல்லாம் அம்மாதான் முடிவு செய்தாள். அப்பா அவளிடம் கேட்டுக் கேட்டு நடந்து கொள்வார். “உங்களுக்கு என்னதான் தெரவசு இருக்கு?” என்று அம்மா அவரைத் திட்டக் கூடச் செய்வாள். ஆகவே இவர்களிடம் ஏன் பெண்கள் பயந்து நடக்க வேண்டும் என அகிலாவுக்குப் புரியவில்லை.ஆனால் மூன்றாவது மனிதர் வீட்டுக்கு வந்து விட்டால் அம்மா உடனடியாக ஒடுங்கிப் போய்விடுவாள். அப்பாதான் எல்லாம் முன்னின்று பேச வேண்டும். முடிவுகள் எல்லாம் அப்பாதான் செய்ய வேண்டும். அறைக்குள் அம்மா தீர்மானமாகச் செய்கிற முடிவுகளையெல்லாம் அப்பா தானாகச் செய்தது போல வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும்.இந்த வேடங்களில் இருவருமே நன்றாக நடித்தார்கள். இந்த நடிப்பினால்தான் குடும்பத்தில் இணக்கம் தோன்றியது.

 

        நல்ல தம்பதிகள், நல்ல குடும்பம் என்று மற்றவர்கள் பேசிக் கொண்டார்கள். கல்யாணம், பிறந்த நாள், குழந்தைப் பேறு, குழந்தை பேர்வைப்பு என்று எந்தக் குடும்ப வைபவமானாலும் அப்பாவையும் அம்மாவையும் முன்னால் கூப்பிட்டு ஆசிர்வாதம் வாங்கினார்கள்.வேறு குடும்பங்களைப் பற்றிப் பேசும் போதும் பெண்ணின் அடக்கம் என்பது ஒரு முக்கியமான விஷயமாகத்தான் பேசப்பட்டது. பல பெண்களை “அடக்கமில்லாத பெண்” என அம்மா நிராகரிக்க அகிலா கேட்டிருக்கிறாள். கல்யாண ஏற்பாடுகள் வரும்போது “பொண்ணு அடக்கமானவளான்னு பாத்துக்குங்க!” என்ற பேச்சு முக்கியமாக வரும். “அந்தப் பொம்பிளயா? பெரிய வாயாடியாச்சே!” என்ற கருத்து வரும்.பெண்கள் அடக்கமாக இருக்க வேண்டும். ஆண்கள் முன் சுற்றக் கூடாது. அதிகம் பேசக் கூடாது. இவையெல்லாம் அம்மாவிடமிருந்தும் குடும்ப உதாரணங்களிலிருந்தும் சமூகப் பேச்சுக்களிலிருந்தும் அகிலா கற்றுக் கொண்டாள்.

 

      வீட்டில் கூட விசேஷ காலங்களில் விருந்தினர் வரும் போது ஆண்கள் முன்னால் வரவேற்பறையிலும் பெண்கள் சாப்பாட்டு அறையிலும் சமையலறையிலும் உட்கார்ந்து பேசுவதே வழக்கமாக இருந்தது.இதனால் எல்லாம் ஆண்களிடம் இயற்கையாக ஒரு பயம் அகிலாவுக்கு ஏற்பட்டு விட்டது. அவள் படித்தது கலப்புப் பள்ளியாக இருந்தாலும் அங்கும் ஆணுலகமும் பெண்ணுலகமும் தனித்தனியாகவே இயங்கின. ஆண்கள் முரட்டுப் பேச்சு முரட்டு விளையாட்டுகள் என்றும் பெண்கள் மென்மை விளையாட்டுகள், குசுகுசுப் பேச்சுகள், வெகுளிச் சிரிப்புகள் என்றும் தனித்தனி உலகில் இருந்தார்கள்.ஒவ்வொருகால் ஆணும் பெண்ணும் கலந்து காதல் அது இது என்று வந்து விட்டால் அது குற்றமாகக் கருதித் தண்டிக்கப் பட்டது. ஆகவே ஆண்களுடன் பழக்கம், காதல் என்பதெல்லாம் குற்றச் செயல்கள் என்ற கருத்தே அவளுக்குள் வளர்ந்து வந்தது.

 

       மனம் அந்த ஆசையைத் தூண்டத் தூண்ட இது குற்றம், இது குற்றம் என அடக்கி அடக்கியே பழகிப் போய்விட்டது. குறிப்பாக எந்த ஆண் பிள்ளையுடனும் தனியாக நின்று பேசுவது ஒரு தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் என்ற கருத்துத் தெளிவாக மனதில் வந்து வேர் பிடித்திருந்தது.அந்த உணர்வுதான் இன்று கணேசனை அப்படி மறுக்க வைத்தது என அவளுக்குத் தோன்றியது. இந்த எச்சரிக்கை உணர்வுகளின் ஏகப் பிரதிநிதியாக அம்மாதான் மனசுக்குள் இருந்தாள். ‘அம்மாவுக்கு இது தெரிந்தால் என்ன ஆகும்?’ என்ற நினைவே பயமாக இருந்தது. அம்மாவுக்கு நல்ல பிள்ளையாக இருக்க வேண்டுமானால் அவளுக்குத் தெரியாமல் இந்த மாதிரித் திருட்டுத் தனங்களில் ஈடுபடக் கூடாது என்ற பெரும் எச்சரிக்கை உணர்வு அப்போது மிகுந்திருந்தது.இருந்தும் இது ஒரு திருட்டா என்பது அவளுக்குப் புரியவில்லை. இதில் என்ன திருட்டு உள்ளது? இதில் என்ன ஒளிவு மறைவு உள்ளது?முதலில் கணேசனை இப்படித் தனியாக இரவில் சந்தித்துப் பேசுவது என்பது முறையல்ல என்ற குற்ற உணர்ச்சி இருந்தது. அதைத் தான் விரும்பி எதிர்பார்த்தது என்பது மேலும் ஒரு குற்றமாக இருந்தது. அவனுடைய பல்கலைக் கழக விசாரணையைப் பற்றி அவன் பேசியது தவறாகத் தெரியவில்லை. ஆனால் “வா இந்த வெற்றியைக் கொண்டாடலாம்!” என அவன் கூப்பிட்டது தவறாகத் தெரிந்தது. அப்படி அவன் கூப்பிட்டதைத் தான் விரும்பியது இன்னொரு குற்றமாக இருந்தது.

 

         “தனியாகப் போய்ச் சாப்பிடலாம்” என்ற அழைப்பு ஏதோ ஒரு குற்றச் செயலுக்குத் தன்னை அவன் அழைப்பது போலத் தோன்றியது. ஆகவே அதைச் சரிப்படுத்த “என் தோழிகளோடு வருகிறேன்!” என்று சொல்ல வேண்டியதாயிற்று.“நான் என் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு போய் விடுதியில் விடுகிறேன்!” என்று அவன் சொன்னதும் ஏதோ ஒரு குற்றச் செயலுக்கு அழைப்பு விடுப்பது போலத்தான் இருந்தது. அதைக் கேட்டதும் அவன் தோள் தழுவி ஏறிப் போகலாம் என்ற கிளுகிளுப்பு தனக்கு உண்டானது மேலும் ஒரு பெரிய குற்றமாகத் தெரிந்தது. “வேண்டாம்! அம்மாவுக்குத் தெரிந்தால் ஏசுவாள்!” என்று ஒரு உள்ளுணர்வு சொல்லிற்று.ஆயிற்று. எல்லாவற்றையும் மறுத்து எல்லாப் பாவங்களையும் முறியடித்து வந்தாயிற்று. அவன் கோரிக்கை விடுத்த எந்தக் குற்றச் செயலுக்கும் இணங்கவில்லை. தன் மனம் இழுத்து மயக்க முயன்ற எந்தத் தீச் செயலுக்கும் மயங்கவில்லை. ஆகவே இதன் முடிவில் வெற்றி எனக்குத்தான். நான் அப்பழுக்கு இல்லாதவளாக வந்திருக்கிறேன்.

 

        ஷவரிலிருந்து தண்ணீரைத் தன் திறந்த மேனித் தோலின் மீது வழிய விட்டுக் கொண்டிருந்த அகிலாவுக்கு மனசு மட்டும் அந்த வெற்றிக் களிப்பில் எக்களிக்க மறுத்தது. இந்த வெற்றியில் ஏதோ போலித் தனம் இருப்பதாகத் தோன்றியது. இதில் ஏதோ இழப்பு இருப்பதாகத் தோன்றியது. வெறுமை உணர்வுதான் மனசில் வந்து தங்கியது.தன் பெண்மை கெட்டுப் போகாமல் இருக்கத் தான் வேலிகள் போட்டுக் கொள்ள வேண்டியது சரிதான். ஆனால் தான் வேலிகளுக்கு மேல் செங்கல் வைத்து சிமிந்தி பூசி சுவரே கட்டிக் கொண்டது போல் இருந்தது. எந்த ஆணிடமிருந்தும் சுவாசக் காற்று கூடத் தன் மேனியில் படக்கூடாது என்று தடுப்புப் போட்டுக் கொண்டதாக எண்ணினாள்.அப்படியெல்லாம் போட்டுக் கொண்டும் இந்த மனம் மட்டும் ஏன் அலைகிறது? இதை அலைப்பது எது? ஆணின் – குறிப்பாக அந்த கணேசனின் – அணுக்கம், பரிவு, தொடல் என்பது வேண்டும் என ஏங்குவது ஏன்? ஏங்கச் செய்வது எது? ஏங்குவது குற்றமா? ஏன் குற்றம்? குற்றம் எனத் தெரிந்தும் என் மனம் அடங்காமல் ஏன் ஏங்குகிறது?குழப்பமாக இருந்தது. ஷவரை அடைத்துவிட்டு துண்டை எடுத்து தோளில் போர்த்தி உடம்பை மெதுவாகத் துவட்டினாள். “இன்னொரு நாளைக்குச் சொல்லுகிறேன்! பை பை!” என்று வெடுக்கென்று தான் சொல்லி விட்டுத் திரும்பிய போது அவன் முகம் தொங்கிப் போயிருந்த காட்சி நினைவுக்கு வந்தது.

 

        மிகவும் வருத்தி விட்டேன் என்று நினைத்துக் கொண்டாள்.அவள் படித்திருந்த எந்தப் புத்தகத்திலும் ஆணும் பெண்ணும் தனியாக ஜோடியாக வெளியே போகக் கூடாது என்றோ உணவு அருந்தக் கூடாது என்றோ சொல்லவில்லை. உண்மையில் புத்தகங்கள் ஆண்-பெண் சமத்துவத்தைத்தான் அதிகம் பேசின. காதல் கதைகள் கூட பாடப் புத்தகங்களில் உண்டு. ஏராளமான “ரோமேன்ஸ்” நாவல்கள் படித்திருக்கிறாள்.தன் சமூகத்தின் மூளைச் சலவைக்குத் தான் அதிகம் ஆளாகிவிட்டதாக நினைத்தாள் அகிலா. மனதின் இயற்கையான போக்குக்கு விட்டுக் கொடுக்காமல் பிடிவாதமாக மூக்கணாங்கயிறு போட்டுக் கொண்டிருக்கிறோம் என்று நினைத்தாள்.இப்போது நான் பல்கலைக் கழகத்தில் இருக்கிறேன். பெரிய பெண். பட்டப் படிப்பில் உள்ளவள். உண்மையில் என் அம்மாவை விட அதிகம் அறிவுள்ளவள். இப்போது சுதந்திரத்தைப் பேணலாம். அம்மாவின் அறிவுரைகள் அம்மாவின் காலத்துக்கும் வாழ்க்கை முறைக்கும் சரி. எனக்கும் அது ஒத்து வருமா? என் வானம் அம்மாவை விடப் பெரிது.

 

      என் சிறகுகள் இன்னும் நீளமானவை. நான் அம்மா போல கூண்டுக்குள்ளிருந்து பயந்து பயந்து எட்டிப் பார்த்து வாழத் தேவையில்லை.எவ்வளவு ஆசைகளோடு காத்திருந்திருப்பான். அத்தனையையும் உடைத்து விட்டேன். கொஞ்சம் இதமாகப் பேசியிருக்க வேண்டும். அவனோடு போய் ஒரு நாள் உணவு அருந்தி வரச் சம்மதித்திருக்கலாம். இதில் தவறு ஒன்றுமில்லை. இதிலிருந்து வரும் எந்தத் தீய விளைவிலிருந்தும் என்னைக் காத்துக் கொள்ள எனக்குத் தெரியும். என்னால் முடியும். ஆனால் என் முரட்டுத் தனமான தற்காப்புப் பயிற்சி அதை நிராகரித்து விடு என்று சொல்லியதைக் கேட்டு நிராகரித்து விட்டேன். ஆனால் அடுத்தமுறை கேட்டால்…!அடுத்த முறை கேட்டால் சரியென்று சம்மதிக்க வேண்டும். வெள்ளன போய் வெள்ளன திரும்பி விடுவோம் என நிபந்தனை விதிக்கலாம். முதல் சந்திப்பிலேயே அதிகம் பேசக் கூடாது. காதல் கீதல் என்ற பேச்சு எழுந்தால் நேரமாகிறது போகலாம் எனப் புறப்பட்டு விட வேண்டும்.மீண்டும் மனம் தற்காப்புப் பயிற்சியில் ஈடுபடுவதை அறிந்து சிரித்துக் கொண்டாள்.

 

       “கொஞ்சம் விட்டுக் கொடு மனமே!’ என்று சொல்லிக் கொண்டாள். கொஞ்சம் இணக்கமாக இருக்கக் கற்றுக் கொள். கொஞ்சம் சிரித்துப் பேசு. அன்பு அரும்புவதற்கு வெளி கொடு. அந்த அன்பு காதலாக ஆனால்தான் என்ன? அது அரும்புவதும் மலர்வதும் காலத்தையும் சந்தர்ப்பத்தையும் இன்னும் எத்தனையோ ஆயிரம் விஷயங்களையும் பொருத்திருக்கிறது.அந்த ஆண் நல்ல குணம் உள்ளவனா? தன்னோடு ஒத்த சிந்தனைகள் உள்ளவனா? ஒத்த விருப்பங்கள் உள்ளவனா? ஒத்த உணர்வுகள் உள்ளவனா? ஏற்ற வயது? உயரம்? சமூக அந்தஸ்து? எல்லாவற்றையும் பொறுத்துத்தானே இணைவது அமையும்! ஆனால் முதலில் அணுக விட்டால்தானே இதையெல்லாம் தெரிந்து கொள்ள முடியும்?தன்னைச் சுற்றியுள்ள சுவரை அகற்றிக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து கொண்டாள். அடுத்த முறை அவன் தன்னை நாடி வரும் போது… நாடி வருவானா என்பது தெரியவில்லை. இன்று மனதை முற்றாக முறித்து விட்டேனோ என்று கவலைப் பட்டாள்.உடம்பை முற்றாகத் துடைத்துக் கொண்டு துவாலையைக் கொண்டையில் ஈரம் உறிஞ்ச முடிந்து கொண்டு அறைக்கு வந்தாள்.

 

       நைட்டியை மாட்டிக் கொண்டு தலை முடியை மீண்டும் ஈரம் போகக் கசக்கிக் கசக்கித் துவட்டிக் கொண்டிருந்த போது கணேசன் நிச்சயம் மீண்டும் தன்னைத் தேடி வருவான் என்றுதான் பட்டது. ஆண்கள் சபலம் உள்ளவர்கள். மீண்டும் மீண்டும் ஆசைப் படுவார்கள். பெண்களின் நிராகரிப்பு அவர்கள் முரட்டுத் தோலில் அவ்வளவாக உறைப்பதில்லை. ஆகவே வருவான்.அவன் வரவில்லை. அந்த வாரம் இரவு நடனப் பயிற்சிக்குப் போய்த் திரும்பும் போது அவன் போன வாரம் போலக் காத்திருப்பானா என்று நப்பாசையுடன் பார்த்தாள். இல்லை. இரவில் மர நிழலில் உள்வாங்கி நிற்கிறானா எனப் போகிற போக்கில் மீண்டும் ஒரு முறை பார்த்தாள். இல்லை.அடுத்த இரண்டு வாரங்களில் அவன் மோட்டார் சைக்கிளில் அங்குமிங்கும் போவதை தூரத்தில் இருந்து பார்த்தாள். அவ்வளவுதான். அவன் பார்த்ததாகத் தெரியவில்லை. பார்த்திருந்தாலும் பார்த்ததாகக் காட்டிக் கொள்ளவில்லை. ஒரு முறை ஜெசிக்கா அவன் மோட்டார் சைக்கிளின் பின்னால் உட்கார்ந்து தோளைத் தழுவிப் போனதையும் பார்த்தாள்.“ஜெசிக்கா என் ·பிரண்டுதான். ஆனா விசேஷமான ·பிரண்ட் ஒண்ணும் இல்ல! எல்லாரையும் போலத்தான் சாதாரண ·பிரண்ட்!” என்று அவன் சொன்னது நினைவு வந்தது. அப்படியும் இருக்கலாம். ஐசெக் சங்கத்தின் வேலையாக எங்காவது போவார்கள். தோளைப் பிடிக்காமல் மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்து போக முடியாது. ஆகவே இதையெல்லாம் பெரிதாக எண்ண ஒன்றுமில்லை.ஆனால் இறுக்கமாகத்தான் பிடித்திருந்தாள். அது விழாமல் இருக்கப் பிடித்த பிடியல்ல. ஒரு கேர்ல் ·பிரன்டின் அன்புப் பிடி போலத்தான் இருந்தது. அப்படியும் இருக்கலாம்.

 

        நான் வேண்டாம் என்று விரட்டி விட்ட பிறகு “சாதாரண ·பிரண்ட்”, “விசேஷமான ·பிரண்ட்” ஆக மாறியிருக்கலாம். அதைக் கேட்கவோ கவனிக்கவோ வருத்தப் படவோ நான் யார் என்று கேட்டுக் கொண்டாள். ஆனால் கணேசனைத் தூரத்தில் பார்க்கும் போது கூட தன் இருதய இயக்கம் சில துடிப்புக்கள் கூடி விடுவதை அவளால் தவிர்க்க முடியவில்லை.நடனப் பயிற்சி மிக மும்முரமாக இருந்தது. எவ்வளவு நன்றாக ஆடினாலும் பேராசிரியர் கௌஸ் விரட்டிக் கொண்டே இருந்தார். ஆனால் நடக்கின்ற தவறுகளுக்கு அவரே பெரும்பாலும் காரணமாக இருந்தார். தான் சொன்ன அடிகளைத் தானே மறந்து விட்டு ஆடி மற்றவர்களையும் திரும்பத் திரும்ப ஆட வைத்துக் கொண்டிருந்தார். வயதாகிக் கொண்டிருக்கும் காலத்தில் இவர் ஆடாமல் மற்றவர்களை ஆடவிட்டால் என்ன என்று அகிலா மனதுக்குள் அவர் மீது கோபப் பட்டாள். ஆனால் நடனம் நன்றாக விறுவிறுப்பாக உருவெடுத்துக் கொண்டு வந்தது.கணேசனின் விசாரணைக்கு அடுத்த வாரத்தில் ராஜனும் அவன் நண்பர்கள் இருவரும் பல்கலைக் கழகத்தை விட்டு ஓராண்டுக்குத் தள்ளி வைக்கப் பட்டிருப்பதான செய்தி வளாகம் முழுவதும் காட்டுத் தீ போல பரவியது. தங்கள் சமூக மாணவர்கள் சிலர் இப்படி தண்டிக்கப்பட்டிருப்பது இந்திய மாணவர்களுக்கிடையே வருத்தத்தை எழுப்பினாலும் ராஜனுக்காகவும் அவன் நண்பர்களுக்காகவும் தனிப்பட யாரும் வருந்தியதாகத் தெரியவில்லை.

 

        பரசுராமனுக்கும் பொய்ப் புகார் கொடுத்ததற்காக 100 ரிங்கிட் அபராதம் மட்டும் விதித்திருந்தார்கள். அவன் இறுதியில் உண்மையைச் சொல்லி இந்த விவகாரத்தைத் தீர்த்து வைத்ததற்காக அவனுக்குக் கருணை காட்டப் பட்டிருந்தது. பல்கலைக் கழகத்தின் நடவடிக்கையைப் பாராட்டி “பெரித்தா கேம்பஸ்” இதழில் ஜெசிக்கா தலையங்கம் எழுதியிருந்தாள்.பட்டமளிப்பு விழாவுக்காகப் பல்கலைக் கழகம் களை கட்டிக் கொண்டிருந்தது. சையட் புத்ரா பட்டமளிப்பு மண்டபத்தை அலங்கரிக்கத் தொடங்கியிருந்தார்கள். பட்டமளிப்பு விழாவுக்காக வரும் ஆயிரக் கணக்கான பெற்றோர்களுக்காகவும் உறவினர்களுக்காகவும் சுற்று வட்டாரத்தில் மாணவர்கள் கடைகள் அமைக்கத் தொடங்கியிருந்தார்கள்.ஒரு நாள் இரவில் அகிலா நடனப் பயிற்சி முடிந்து போகிற வழியில் அந்த மண்டபத்துக்குள் எட்டிப் பார்த்தாள். மண்பானைகளில் நடப்பட்ட நூற்றுக் கணக்கான சாமந்திப் பூச்செடிகள் அரங்கத்தைச் சுற்றிலும் அடுக்கப்பட்டிருந்தன. அரங்கத்தில் வேந்தர், துணை வேந்தர் மற்ற பேராசிரியர்கள் உட்கார நாற்காலிகள் அடுக்கிக் கொண்டிருந்தார்கள். சிவப்புக் கம்பளம் விரித்திருந்தார்கள்.

 

 

       2,200 பேர் உட்காரக் கூடிய அந்த மண்டபம் அப்போது ஆளில்லாமல் “ஓ”வென்றிருந்தது.ஆனால் பட்டமளிப்பு நாளன்று இந்த இடம் “ஓஹோ”வென்றிருக்கும். பட்டதாரிகளின் வெல்வெட் கவுன்கள் ஆயிரக் கணக்கில் படபடக்கும். அவர்கள் தோளிலும் மார்பிலும் தங்கள் பட்டத்திற்கேற்ப வெவ்வேறு வண்ணங்களில் பட்டைகள் அணிந்திருப்பார்கள். அவர்களின் பலகைத் தொப்பிகள் குஞ்சம் அலைய தலையை மறைத்திருக்கும். பேராசிரியர்கள் பெயர் சொல்லிக் கூப்பிட அவர்கள் வரிசையாக கலை, அறிவியல், சமூகவியல், கட்டவியல், பொறியியல், மருத்துவம் என்று தங்கள் உழைப்புகளின் அறுவடையை வேந்தரின் கைகளிலிருந்தோ இணைவேந்தரின் கைகளிலிருந்தோ பெற்றுக் கொள்வார்கள்.பல்கலைக் கழகத்தின் உச்ச கட்டமான இந்த மாபெரும் வைபவத்தில் முதலாண்டிலேயே தானும் ஓரளவு பங்கு பெற வாய்ப்புக் கிடைத்திருப்பது அகிலாவுக்குப் பெருமையாக இருந்தது. பட்டமளிப்பு விழாவுக்கு முதல் நாள் இரவில் வேந்தருக்கு அளிக்கப்படும் ஆடம்பர விருந்தில் நடனமாடுவது தான் பல்கலைக் கழகத்திற்கு அர்ப்பணிக்கும் சேவை என்று நினைத்தாள். மேலும் பட்டமளிப்பு விழா அன்று ரோஜா மலர்கள் விற்பதற்கு இந்திய மாணவர்கள் அமைத்திருந்த ஒரு குழுவில் அவளும் சேர்ந்திருந்தாள். ஆகவே இந்த ஆண்டுப் பட்டதாரிகளிடையேயும் அவர்கள் பெற்றோர்களிடையே கலந்து பழகலாம். அந்தப் பரபரப்பில் பங்கு கொள்ளலாம்.எல்லாவற்றிற்கும் உச்ச கட்டமாக இன்னும் நான்கு ஆண்டுகளில் இதே அரங்கத்தில் தானும் பட்டம் வாங்கலாம். பட்டமளிப்பு கவுனின் வெல்வெட் துணியின் ஸ்பரிசத்தை அனுபவிக்கலாம்.

 

        இரண்டாயிரம் பேர் பார்த்திருக்க, தன் பெற்றோர்கள் அவர்களிடையே பெருமையுடன் அமர்ந்திருக்க, இந்தப் பல்கலைக் கழகத்தின் உயர் பேராசிரியர்கள் முன்னிலையில் வேந்தர் முன் கம்பீரமாக நின்று கணினித்துறை இளங்கலைப் பட்டதாரி என்ற தகுதியைப் பெற்றுக் கொள்ளலாம்.மனம் பெருமிதப் பட்டது. ஆனால் அதைக் காண கணேசன் அங்கிருக்க மாட்டான் என்ற நினைவு வந்தது. இன்னும் இரண்டாண்டுகளில் அவன் பட்டம் வாங்கி வெளியேறிவிடுவான். பின் அவன் யாரோ நான் யாரோ!இப்போது மட்டுமென்ன! அவன் யாரோ நான் யாரோதான்!கணேசன், உங்களுக்கு இரண்டாவது சந்தர்ப்பத்தில் நம்பிக்கையில்லையா? ஒரு முறை தோற்றால் மறு முறை முயலலாம் என்பது தெரியாதா? ஏன் என்னைப் பார்க்க வரவில்லை கணேசன்?***

by parthi   on 15 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கரடியின் கர்வம் கரடியின் கர்வம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.