LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- ரெ.கார்த்திகேசு

காதலினால் அல்ல!Part4

 

19
அந்த இரவு மோகனமாக இருந்தது. பினாங்கின் நகரக் கடற்கரைப் பகுதியான கர்னி டிரைவ் அந்த சனிக்கிழமை பதினொரு மணி இரவிலும் ஆட்கள் நடமாட்டத்தோடு கலகலப்பாக இருந்தது. பலர் ஜோடி ஜோடியாக இருந்தார்கள். சிலர் குடும்பத்தோடு இருந்தார்கள். சிலர் தூண்டில் போட்டு மீன் பிடிக்க முயன்று கொண்டிருந்தார்கள். ஒட்டுக் கடை வியாபாரம் ஜேஜேவென்று நடந்து கொண்டிருந்து. ஆனால் கணேசனுக்கு அதெல்லாம் கருத்தில் படவில்லை. அகிலா ஒருத்தியே அவன் நினைவிலும் கண்களிலும் இருந்தாள். தான் கதாநாயகனாகவும் அவள் கதாநாயகியாகவும் நிற்கும் இந்தப் படத்தில் இந்தக் கூட்டமெல்லாம் அவ்வளவு முக்கியமில்லாத உப நடிகர்கள் கூட்டமாகத்தான் இருந்தது.
அவர்கள் முன்னால் கடல் விரிந்து கிடந்தது. இருட்டில் அதன் தண்ணீரின் நிறம் தெரியவில்லை. கரையிலுள்ள மங்கிய விளக்குக் கம்பங்களின் இலேசான பிரதிபலிப்பு மட்டும் அலை முகடுகளில் பட்டு மின்னியது. மென்மையான அலைகள் வந்து அங்கு கட்டப் பட்டிருந்த சுவர்த் தடுப்பை மோதும் போது தாளத்திற்கு இணங்காத சலசலவென்ற சத்தம் கேட்டுக் கொண்டிருந்து. ஆழமில்லாத சேற்றுக் கரையைக் கொண்ட இந்தப் பகுதியிலிருந்து சேற்றின் மணம் வந்து கொண்டிருந்தது.
பினாங்கின் இந்தக் கரையிலிருந்து ஏறிட்டுப் பார்த்தால் தூரத்தில் அக்கரையில் பட்டர்வொர்த் கடற்கரையும் செபராங் பிறை கடற்கரையும் அரை நிலா வட்டத்தில் தெரிந்தன. கடற்கரையோரமாக உள்ள விளக்குக் கம்பங்கள் ஒளிக் கோடுகள் போட்டிருந்தன. அக்கரையின் சில உயர்ந்த கட்டடங்களில் விளக்குகள் தெரிந்தன. கப்பளா பத்தாஸ் ராணுவ விமான தளத்தை நோக்கி ஒரு ராணுவ விமானம் வேகமாகப் பறந்து கொண்டிருந்தது புள்ளி விளக்காகத் தெரிந்தது. அதன் ஓசை சற்று தாமதமாக அவர்கள் காதுகளுக்கு வந்தது.
கர்னி டிரைவ் அருகில் உள்ள படகு கிளப்பில் (Yacht Club) சில இயந்திரப் படகுகள் துறையில் கட்டி வைக்கப் பட்டு லேசான அலைகளில் ஆடிக் கொண்டிருந்தன. ஒரு படகில் மட்டும் உள்ளே விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. அந்த விளக்குகளின் பிரதிபலிப்புகள் கடலுக்குள் ஒளித் தூண்களாக இறங்கியிருந்தன. கடலின் நெளிவில் அந்த ஒளித் தூண்களும்நெளிந்து கொண்டிருந்தன.
கரையோரச் சுவரின் மேல் அவனுக்கு அணுக்கமாக உட்கார்ந்திருந்தாள் அகிலா. ஒட்டுக் கடையில் மீ கோரேங் மற்றும் ஐஸ் கச்சாங் சாப்பிட்டுவிட்டு பழக் கலவையான பினேங் ரோஜாக்கை பொட்டலம் கட்டி வாங்கிக் கொண்டு இங்கு வந்து காற்றாட உட்கார்ந்தார்கள். ரோஜாக் இனிப்பும் புளிப்பும் உறைப்பும் கலந்திருந்தது. இன்றைக்குத் தன் அனுபவங்கள் இப்படித்தான் கலவையாக இருக்கின்றன என்று எண்ணினான் கணேசன். ஆனால் இப்போதைய கணம் முழுவதும் இனிப்புதான்.
அகிலாவின் முடி கொஞ்சம் கலைந்தாற்போல் இருந்தது. உடம்பிலிருந்து ஒப்பனையைக் கலைக்கப் பூசிய களிம்பின் மணம் இன்னும் வந்து கொண்டிருந்தது. கணேசன் அதை ரசித்துக் கொண்டிருந்தான். இது பெண்ணின் வாசனை. இது காதலியின் வாசனை.
அவள் காதலியாகிவிட்டாளா? அது சரியாகத் தெரியவில்லை. சாப்பாட்டுக்கு அழைத்து வந்ததற்காக இதுவரை பலமுறை நன்றி சொல்லி விட்டாள். ஷங்ரிலாவிலிருந்து மோட்டார் சைக்கிளில் ஏறி இங்கு வந்து சேரும் வரை தோளைத் தொட்டும் தொடாமலும் பிடித்து வந்தாள். சாப்பாட்டு நேரத்தில் தங்கள் பல்கலைக் கழகப் பாடம் பற்றிய கதைகளைப் பகிர்ந்து கொண்டார்கள். ஆரம்பப் பள்ளி இடை நிலைப் பள்ளிப் படிப்பனுபவங்கள் பற்றிப் பேசினார்கள். தங்கள் ஊர்களைப் பற்றிப் பேசினார்கள். நாளை நடை பெறவிருக்கும் பட்டமளிப்பு விழாவில் தங்களுக்கு என்னென்ன வேலைகள் உள்ளன என்பது பற்றிப் பேசினார்கள். அதற்கு மேல் அந்தப் பேச்சில் அந்தரங்கங்கள் ஏதும் பேசப்படவில்லை.
ஆனால் கடை மேசையில் கும்பலோடு உட்கார்ந்து சாப்பிட்டு முடிந்தவுடன் காசு கொடுத்து எழுந்து கடலலைகள் வருடும் இந்தச் சுவர் அருகில் கொஞ்சம் இருட்டான இடத்துக்கு வந்தவுடன் ஏற்பட்ட ஏகாந்தத்தில் ஒரு மோக உணர்ச்சி அவனுக்கு வந்தது. அதிலும் அவள் ஆடிக் களைத்திருந்து இப்போது சாப்பாட்டுக்குப் பின் பெற்றிருந்த மலர்ச்சியும் அவள் அணுக்கத்தினால் வந்து கொண்டிருந்த அந்த வாசனைகளும் அவனைக் கிறங்க அடித்துக் கொண்டிருந்தன.
இந்தத் தனிமையில் எதைப் பற்றிப் பேசுவது என்று தெரியவில்லை. அணுக்கமாகிவிட்டாளே என அந்தரங்கமாக ஏதாவது பேச ஆரம்பித்தால் அவள் கோபித்துக் கொள்ளக் கூடும். “உன்னை நண்பன் என்று நம்பி வந்தேன். இப்படிச் செய்து விட்டாயே!” என ஆரம்பித்துவிட்டால்? ஆனால் இத்தனை தனிமையில், அணுக்கத்தில் இருவரும் வந்து இங்கு அரையிருளில் கடலலைகள் பின்னணியில் உட்கார்ந்திருப்பது எதற்காக? பாடங்களையும் குடும்பக் கதைகளையும் பேசவா? இந்தச் சூழ்நிலையிலேயே சிருங்காரம் இருக்கிறதல்லவா? காற்றில் ஒரு காதல் ரசம் இருக்கிறதல்லவா?
ஆனால் அவளும் அப்படி நினைக்கிறாளா? இல்லாவிட்டால் உண்மையிலேயே ஹோட்டல் சாப்பாடு பிடிக்காமல் இங்கு வந்து சாப்பிட்டு திரும்ப விடுதிக்குப் போக தன்னைச் சோற்று டிக்கட்டாகவும் போக்குவரத்து வசதியாகவும் மட்டும் பாவித்துக் கொண்டாளா? ஐயோ, இந்தப் பெண்களையே புரிய மாட்டேனென்கிறது!
“அந்த பட்டர்வொர்த் கடற்கரை இங்கிருந்து ராத்திரியில பார்க்க ரொம்ப அழகா இருக்கில்ல கணேஷ்?” என்று மௌனத்தை அவளே உடைத்தாள்.
அவளுக்கு அவன் நேரடியாக பதில் சொல்லவில்லை. “ரொம்ப நன்றி அகிலா!” என்றான்.
திகைத்தவள் போல் பார்த்தாள். “எதுக்கு திடீர்னு நன்றி சொல்றிங்க! இங்க கொண்டு வந்து எனக்கு சாப்பாடு வாங்கிக் கொடுத்ததுக்கு நானில்ல உங்களுக்கு நன்றி சொல்லணும்!” என்றாள். அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்திருந்தாள். பாதி இருளில் எஞ்சியிருந்த அரிதாரத் துளிகள் மின்னின.
“சாப்பாடு பெரிசில்ல அகிலா! அந்த சாப்பாட்டை இவ்வளவு சுவையுள்ளதா ஆக்கினிங்களே! அதுக்காக!”
“அது மீ கோரேங் பெரட்டிக் கொடுத்த அந்த மாமாவின் கை வண்ணமா இருக்கும். நான் என்ன பண்ணினேன்?”
“எவ்வளவோ பண்ணியிருக்கிங்க! இந்த இரவு நேரத்த இவ்வளவு அழகாக்கினது நீங்கதான். இந்த கர்னி டிரைவுக்கு நண்பர்களோடு வந்து எத்தனையோ முறை சாப்பிட்டுப் போயிருக்கிறேன். ஆனா இந்த இடம் இத்தனை அழகா இருந்ததில்ல!”
“அது ஏன் இன்னைக்கு மட்டும் அப்படி?”
“நீங்க என் பக்கத்தில இருக்கிறதுதான் காரணம். கேம்பஸ் கூட இப்ப எனக்குப் புதுசாத்தான் தெரியுது. ரொம்ப அழகான இடமா மாறிட்டதாத் தெரியுது!”
“ரொம்பத்தான் புகழ்றிங்க! எனக்குக் கூச்சமா இருக்கு போங்க!” என்றாள்.
கூச்சமாக இருந்தால் சரி. இல்லாவிட்டால் இவ்வளவு பேசியதற்குக் கோபம் வந்திருக்க வேண்டும்.
“உண்மையில என்ன இன்னைக்கி ரொம்ப சந்தோஷப் படுத்திட்டிங்க. என்னை அந்த ரேகிங் விசாரணையில இருந்து மீட்டதுக்கும் எனக்காக வருத்தப் பட்டு அழுததுக்கும் உங்களுக்கு நல்ல முறையில நன்றி சொல்ல ஒரு சந்தர்ப்பத்தை எதிர் பார்த்துக் கிட்டிருந்தேன். அது எதிர் பாராம இன்னைக்குக் கிடைச்சிது!” என்றான்.
அவனைச் சில விநாடிகள் கூர்ந்து பார்த்தாள். “அதே போல கணேஷ், ரேகிங்ல இருந்து என்னை நீங்க காப்பாத்தினதுக்கு உங்களுக்கு மனந் திறந்து நன்றி சொல்ல நானுந்தான் ஒரு சந்தர்ப்பத்த எதிர் பார்த்துக் கிட்டிருந்தேன். இன்னைக்கு அது வாய்ச்சது, எதிர் பாராம!” என்றாள்.
அவள் கையை குலுக்குவதற்காக நீட்டினாள். அவன் வலது கையால் அழுத்திப் பிடித்து அதன் மேல் இடது கையையும் வைத்து மூடினான். அவள் கொஞ்சம் தயங்கித் தன் இடது கையை அதன் மேல் வைத்து மூடினாள். கொஞ்ச நேரம் கைகளை உருவிக் கொள்ளாமல் அப்படியே ஒருவரை ஒருவர் பார்த்திருந்தார்கள்.
கடலை மூடியிருந்த இருட்டு வானத்தில் ஒரு மின்னல் நெளிந்து மறைந்தது. தொடர்ந்து இடி ஒன்று இடித்து உருண்டது. சடசடவென மழை கொட்ட ஆரம்பித்தது. சட்டென்று கையை உருவிக் கொண்டாள். “ஐயோ மழை வந்திருச்சே! வாங்க ரொம்ப வர்ரதுக்குள்ளே போயிடுவோம் கணேசன்!” என்று எழுந்தாள்.
அவனுக்குப் பெரிய ஏமாற்றமாக இருந்தது. கையை விடாமல் பிடித்திருந்து அவள் விழிக்குள் இன்னும் ஒரு மணி நேரம் பார்த்திருக்கத் தயாராக இருந்தான். அவனுடைய காதல் துடிப்புக்களையெல்லாம் அவளிடம் மணிக் கணக்கில் சொல்லத் தயாராகியிருந்தான். ஆனால் இந்தப் பாழும் மழை…!
இருவருமாக அவன் மோட்டார் சைக்கிளை நோக்கி ஓடினார்கள். அவன் மழைக் கோட்டு ஒன்றுதான் வைத்திருந்தான். அவளிடம் கொடுத்தான். “நீங்க போட்டுக்கங்க!” அகிலா என்றான்.
அவள் மழைக் கோட்டைப் போர்த்திக் கொண்டு பின்னால் உட்கார்ந்தாள். அவன் மோட்டார் சைக்கிளை ஓட்ட ஆரம்பித்ததும் அதை இழுத்து அவன் தலைக்கு மேல் கொண்டு வந்தாள். அதை அப்படியே அவன் தோளோடு போர்த்தி அவள் இரு கைகளையும் அவன் கைகளுக்குள் நுழைத்து இறுக்கிப் பிடித்துக் கொண்டாள்.
மழைக் கோட்டைச் சற்றும் சட்டை செய்யாமல் மழை அவர்களை தாரை தாரையாக நனைத்துக் கொண்டிருந்தது. ஆனால் அவன் மழைக்கு மனதார நன்றி சொல்லிக் கொண்டிருந்தான்.
பாதி வழியில் மழை நின்று விட்டது. ஆகவே மோட்டார் சைக்கிளை நிறுத்தி மழைக் கோட்டை மடித்து வைத்தான். அதன் பின்னர் பயணம் தொடர்ந்த போதும் அவள் கைகள் முன்னைப் போலவே அவனைப் பின்னியிருந்தன.
பல்கலைக் கழகத்துக்குள் அவர்கள் வந்து சேர்ந்த போது மணி பனிரெண்டாகி விட்டது. மறுநாள் காலை தொடங்கும் பட்டமளிப்பு விழாவிற்கான கடைகள் அமைப்பதில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் நடமாட்டம் அந்த இரவிலும் இருந்தது. தேசா கெமிலாங்குக்கு வந்து வாசலில் கொண்டு நிறுத்தினான். அவள் இறங்கினாள். “ரொம்ப நன்றி. அறைக்குப் போனதும் குளிச்சிடுங்க! இல்லன்னா சளிக்காய்ச்சல் பிடிக்கும்!” என்றாள் சிரித்துக் கொண்டே!
“இன்றைக்குப் பிடித்திருப்பது சளிக் காய்ச்சலல்ல, காதல் காய்ச்சல்” என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டு “நீயும் போய் குளிச்சிரு அகிலா!” என்றான். சொன்னவுடன் உதட்டைக் கடித்துக் கொண்டான். அவளை “நீ” என்று சொல்ல இப்படி உரிமை எடுத்துக் கொள்ளலாமா என அவனுக்கே தெரியவில்லை.
மறுக்கவில்லை. “சரி” என்றாள் சிரித்துக் கொண்டே.
அவன் புறப்படும் வரை வாசலில் காத்திருந்தாள். அவளுக்குக் கையசைத்துவிட்டு அவன் மோட்டார் சைக்கிளைக் கிளப்பித் திரும்பிய போது ஜெசிக்கா வரவேற்பறையின் கதவின் ஓரத்தில் நின்றவாறு தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பது அவன் கண்ணில் பட்டது. அவள் கண்களில் ரௌத்திரம் இருந்ததை அந்த ஒரு கணத்தில் உணர முடிந்தது.
*** *** ***
பட்டமளிப்பு விழாவின் பல்வேறு துணை நிகழ்ச்சிகளில் அகிலாவை கணேசன் தேடித் தேடிச் சென்று சந்தித்தான். ரோஜா மலர்கள் விற்க அவளுக்குத் துணை செய்தான். அவள் தோழிகளோடு சேர்ந்து கொட்டமடித்தான். பலமுறை அகிலா போக வேண்டிய இடங்களுக்கெல்லாம் அவளை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு போனான். அந்தச் சில நாட்களில் வளாகத்தில் அவர்கள் மற்ற மாணவர்களின் கண்களுக்கு வழக்கமான ஜோடியாகிப் போனார்கள்.
அதற்கு அடுத்த வாரம் வழக்கம் போல் புதன் கிழமை இரவில் ஐசெக் மீட்டிங் நடந்த போது ஜெசிக்கா உம்மென்றிருந்தாள். எப்போதும் கணேசனைத் தேடிப் பிடித்து அவனோடு மோட்டார் சைக்கிளில் ஏறி வருபவள் அந்த வாரம் தானாகத் தன் மோட்டார் சைக்கிளிலேயே வந்திருந்தாள். கணேசனும் அவளைத் தேட முயற்சி செய்யவில்லை. ஜெசிக்காவுக்கும் தனக்குமுள்ள தூரத்தை கொஞ்சம் அதிகப் படுத்திக் கொள்வதே இப்போதைக்கு நல்லது என அவனுக்குப் பட்டது. ஆனால் ஜெசிக்கா போன்ற ஒரு நல்ல தோழியை அவன் இழக்கவும் விரும்பவில்லை. நீண்ட கால நட்பு முறிந்து விடக் கூடாதே என்ற கவலை அவனுக்கு இருந்தது.
கூட்டத்தின் ஆரம்பத்தில் ஜெசிக்காவைப் பார்த்து அவன் சிரிக்க முயன்ற போது அவள் முகம் திருப்பிக் கொண்டாள். கூட்டத்தில் பல முக்கியமான விஷயங்கள் பேசப் பட்டன. அந்த ஆண்டு நடக்கவிருக்கும் அனைத்துலக ஐசேக் பேராளர் மாநாடு பற்றிய எல்லா விஷயங்கள் பற்றியும் சங்கத்தின் செயலாளரான அவள் உற்சாகமில்லாமல் விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
கணேசனுக்கு அவளுடைய மன இறக்கத்தின் காரணம் புரிந்தது. அது அவனுக்குச் சங்கடமாகவும் இருந்தது. ஜெசிக்கா அவனுக்கு நல்ல தோழி. அவளோடு பல முறை சாப்பிடப் போயிருக்கிறான். ஐசெக் சங்க வேலைகளுக்காகப் பல முறை அவளோடு சுற்றித் திரிந்திருக்கிறான். நூலகத்தில் ஒரே மேசையில் உட்கார்ந்து அந்த இடத்தின் மௌனச் சூழ்நிலையில் கால்கள் உரசப் படித்ததும் உண்டு. அவனுடன் சிரித்துச் சிரித்துப் பேசவும் அவன் நலனில் அக்கறைப் படவும் அவளைப் போல் ஒரு துணை கிடைத்திருப்பது அவனுக்குப் பெருமையாக இருந்தது.
சில வேளைகளில் தோழி என்ற நெருக்கத்தைக் காதலி என்ற அளவுக்குக் கொண்டு போகலாம் என்ற ஆசையும் இருந்தது. தன்னை விட ஜெசிக்காவுக்கு அது இன்னும் அதிகமாக இருந்தது என்பது அவனுக்குத் தெரியும். ஆனால் ஜெசிக்கா அவன் மீது முற்றாக ஆதிக்கம் செலுத்த முயன்றது அவனுக்குப் பிடிக்கவில்லை. அவனுக்கு என்ன விருப்பம் என்பதைப் பற்றிச் சற்றும் கவலைப் படாமல் தான் விரும்பியதையெல்லாம் அவன் மீது திணிக்கின்ற அவளுடைய ஆர்ப்பாட்டம் அவனைத் தயங்கச் செய்தது.
கூட்டம் முடிந்த போது அவள் விசுக்கென்று எழுந்து விட்டாள். ஆனால் அவளை அந்தக் கோபத்தோடு அப்படியே விட்டு விட கணேசன் விரும்பவில்லை. அவள் அறையை விட்டு வெளியேறுவதற்குள் விரைந்து போய் அவள் கையைப் பிடித்தான். “என்ன” என்பது போல் திரும்பி அவனை முறைத்தாள்.
“ஏன் என்னிடம் பேசாமல் போகிறாய், ஜெசிக்கா?” என்று கேட்டான்.
“உன்னிடம் பேச என்ன இருக்கிறது? எனக்கு நிறைய வேலை இருக்கிறது. நான் போக வேண்டும்!” என்றாள். முகத்தில் கோபம் கொதித்துக் கொண்டிருந்தது.
“கொஞ்ச நேரம் உட்கார்ந்து என்னிடம் பேசு ஜெசிக்கா!” என்றான்.
கொஞ்சம் இணங்கி வந்து கலாச்சார மண்டபத்தின் படிகளில் அவனோடு உட்கார்ந்தாள்.
“என் மேல் உனக்கு என்ன கோபம்?” என்று அவளைக் கேட்டான்.
கொஞ்ச நேரம் பேசாமல் இருந்து அப்புறம் தரை பார்த்துப் பேசினாள். “அது உனக்கே தெரிய வேண்டுமே?”
“தெரியவில்லை. உனக்குக் கோபம் வருமாறு நான் என்ன செய்தேன்?”
“புதிதாக ஆள் பிடித்து விட்டாய். ஆகவே பழையவர்கள் துணை உனக்குத் தேவைப்படாமல் போய்விட்டது!”
“யார் புதிய ஆள்? யார் பழைய ஆள்?”
“உனக்கே தெரிய வேண்டும்!”
“அகிலாவைச் சொல்கிறாயா?” என்று நேராக அவள் கண்களைப் பார்த்துக் கேட்டான்.
“அந்தப் பிசாசை நீ மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு வந்ததைப் பார்த்தேன். நட்ட நடுநிசியில் மழையில் நனைந்த ஈரத்துடன் ஒருத்தரை ஒருத்தர் கட்டிப் பிடித்துக் கொண்டு வந்து இறங்கினீர்களே! எனக்குத் தெரியாது என்று நினைத்துக் கொண்டாயா?” என்றாள்.
அவளிடம் தெளிவாகப் பேச வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான். “ஆமாம் ஜெசிக்கா! அன்றைக்கு வேந்தர் விருந்து முடிந்து அகிலாவுடன் சென்று சாப்பிட்டு விட்டு அவளைக் கொண்டு வந்து விடுதியில் விட்டேன். வரும் போது மழை வந்து விட்டது. நனைந்துதான் வந்தோம். இதில் உன்னிடம் என்ன மறைக்க வேண்டியிருக்கிறது?”
அவனை கோபத்தோடு ஏறிட்டுப் பார்த்தாள். “அவள் கூப்பிட்டாளா, நீ கூப்பிட்டாயா?”
“யார் கூப்பிட்டால் என்ன ஜெசிக்கா?”
தரையைப் பார்த்தாள். “நீ அவளைக் காதலிக்கிறாயா கணேசன்?” அவள் தொனி இறங்கியிருந்தது. குரலில் தளு தளுப்பு இருந்தது.
அவன் மென்மையாகப் பேசினான். “ஜெசிக்கா, நீ இப்படி மொட்டையாகக் கேட்பதால் நானும் சொல்கிறேன். ஆமாம். அவளைக் காதலிக்கிறேன். ஆனால் அவள் என்னைக் காதலிக்கிறாளா என்பது இன்னும் தெரியவில்லை!”
அவனை மீண்டும் ஏறிட்டுப் பார்த்தாள். “அப்படியானால் இதுதான் நம் உறவின் முடிவா?” என்று கேட்டாள்.
“ஏன் உறவு முடிய வேண்டும் ஜெசிக்கா? நீ எந்நாளும் எனக்குத் தோழிதான். அது ஏன் மாற வேண்டும்?”
“இதற்குக் காரணம் நான் சீனப் பெண் என்பதாலா? சீனப் பெண் தோழியாக இருக்கத் தகுந்தவள், ஆனால் காதலியாக இருக்கத் தகுந்தவள் இல்லை என முடிவு செய்து விட்டாயா?”
“இல்லை ஜெசிக்கா. உன் மேல் உண்மையான காதல் எனக்கு வளர்ந்திருந்தால் இந்த இன வேறுபாடு எனக்குத் தடையாக இருந்திருக்காது என்றுதான் நினைக்கிறேன். ஆனால் அந்த பிரச்சினை அளவுக்கு நம் உறவு போகவில்லையே! எனக்கு உன்மேல் அன்பு உண்டு. ஆனால் அது எந்தக் காலத்திலும் காதலாக வளர்ந்ததில்லை”
ஜெசிக்கா நீண்ட நேரம் யோசித்திருந்து பெரு மூச்சு விட்டுப் பேசினாள். “நான் உன்னைப் பற்றி வேறுவிதமான ஆசைகளை வளர்த்துக் கொண்டேன். என் தவறுதான் போல இருக்கிறது. உன் நெருக்கம் என்னை ஏமாற்றி விட்டது. உன் கம்பீரமும் புத்திசாலித் தனமும் என்னை வசீகரித்து என் புத்தியை மழுங்கடித்து விட்டன. இன வேறுபாட்டைக் கடந்து நம் புத்தியின் சம பலத்தால் நாம் காதலித்துக் கல்யாணமும் செய்து கொள்ள முடியும் என நம்பினேன். ஆனால் அது எல்லாம் தவறு என இப்போது தெரிந்து விட்ட போது என் மீதே எரிச்சல் வருகிறது. அந்த எரிச்சலை உன் மீது காட்டியதற்கு மன்னித்துக் கொள்!” என்றாள்.
“மன்னிப்பெல்லாம் தேவையில்லை! நாம் இன்னும் நண்பர்கள்தான். அது ஏன் மாற வேண்டும்?” என்றான்.
“அது மாற வேண்டியதில்லை. ஆனால் மட்டுப் படுத்தப் படவேண்டும். முன்பு போல் நாம் இறுக்கிப் பிடித்துக் கொண்டு மோட்டார் பைக்கில் சுற்ற முடியாது. அந்த உரிமை உன் புதுக் காதலிக்குத்தான் உண்டு!” என்றாள்.
“ஜெசிக்கா! திரும்பத் திரும்ப அப்படிச் சொல்லாதே! அவள் என் காதலியா என்று இன்னும் தெரியவில்லை. அவள் மனதை இன்னும் எனக்குத் திறந்து காட்டவில்லை. ஆகவே இது ஒரு தலைக் காதலாகவும் இருக்கலாம்!” என்றான்.
“நான் வேண்டுமானால் போய் அந்தப் பிசாசிடம் பேசி ஒரு பதில் வாங்கிக் கொண்டு வரட்டுமா?” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள்.
“ஐயோ வேண்டாம்! அதன் பின் உண்மையான பேயாக மாறி என்னைக் குடலைப் பிடுங்கிக் கொன்றாலும் கொன்று விடுவாள்!” என்றான் பதிலுக்குச் சிரித்துக் கொண்டே.
அவள் எழுந்தாள். “சரி கணேசன்! உனக்கென ஒரு நல்ல இந்தியப் பெண்ணைப் பிடித்துக் கொண்டாய்! இன ஒருமைப் பாட்டுக்காக நான் வகுத்திருந்த திட்டத்தை முறியடித்து விட்டாய். இனி நான் எனக்கேற்ற ஒரு சீன மாப்பிள்ளையைத் தேட வேண்டும். ஆனால் ஒரு இந்திய மாணவனோடு சுற்றியலைந்த சீனத்தியை எந்த சீன மாணவன் ‘செக்கன்ட் ஹென்டாக’ ஏற்றுக் கொள்வானோ தெரியவில்லை!” என்று சொல்லிவிட்டு தன் மோட்டார் பைக்கை நோக்கி நடந்தாள் ஜெசிக்கா.
கணேசன் அவள் மோட்டார் சைக்கிள் ஏறிப் போவதைப் பார்த்தவாறு இருந்தான். எத்தனை எளிதாக சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிச் சரிப் படுத்திக் கொண்டாள்! “என்னை ஏமாற்றி விட்டாய்! என் வாழ்வையே குலைத்து விட்டாய்!” என்று ஒப்பாரி வைக்காமல் சட்டென்று வழித்துப் போட்டு விட்டு வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்குத் தயாராகி விட்டாள்.
அவள் போவதை ஒருவித வருத்தத்தோடு பார்த்துக் கொண்டிருந்த கணேசனுக்கு திடீரென்று அவனுடைய அத்தை மகள் மல்லிகாவின் நினைவு வந்தது.
***
——————————————————————————–
20
பல்கலைக் கழகத்தில் அந்த ஆண்டின் முதல் பருவம் ஒரு முடிவுக்கு வந்து கொண்டிருந்தது. பாடத் திட்டத்தின்படி விரிவுரைகளை முடிப்பதற்கு விரிவுரையாளர்கள் அவசரப் பட்டுக் கொண்டிருந்தார்கள். பருவ இறுதி எசைன்மென்ட் (assignment) கட்டுரைகளுக்கான முடிவு நாட்கள் நெருங்கிக் கொண்டிருந்தன. முதல் பருவத் தேர்வுக்கான பட்டியல் வெளியாகிவிட்டது. நூலகத்தில் எந்த நேரமும் கூட்டம் நிரம்பி வழிந்தது. பகல் நேரங்களில் வெள்ளென போனால் ஒழிய உட்கார இடம் கிடைக்கவில்லை.
அகிலா செய்திருந்த எசைன்மென்டில் நான்கை விரிவுரையாளர்கள் திருத்திக் கொடுத்திருந்தார்கள். கணினி எசைன்மென்டுகளில் இரண்டு B-யும் ஒரு C-யும் வாங்கியிருந்தாள். கணிதத்தில் மட்டும் A கிடைத்திருந்தது. ஒரு முதலாண்டு மாணவருக்கு இது மிகவும் நல்ல கிரேடுகள் என்று கணேசன் அவளைப் பாராட்டினான். முதலாண்டு மாணவர்கள் பல்கலைக் கழகப் படிப்பு முறை தெரியாமல் தடுமாறுகிற ஆண்டு. ஆகவே எசைன்மென்டில் C வாங்கினாலே பெரிய விஷயம்தான்.
கணேசன் அகிலாவுக்கு எல்லா விஷயங்களிலும் துணையாகவும் வழிகாட்டியாகவும் மாறிவிட்டான். நூலகத்தில் அவளுக்கு இடம் பிடித்து வைத்தான். அகிலாவுக்கு போக்குவரத்துப் பிரச்சினையும் தீர்ந்திருந்தது. தனக்கு வாய்ப்பு இருக்கும் போதெல்லாம் கணேசன் அவள் போக வேண்டிய இடங்களுக்கு அவளைத் தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு போகத் தயாராக இருந்தான். அவள் வேண்டாம், வேண்டாம் என்று சொன்னாலும் அவன் கேட்பதில்லை.
இதற்கிடையே இந்திய கலாச்சாரக் கழகம் மாணவர் உபகாரச் சம்பள நிதிக்காக ஆண்டு தோறும் நடத்தும் கலைவிழாவுக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தது. அந்த விழாவில் அகிலாவின் பரதநாட்டியம் ஒன்று இடம் பெற வேண்டும் என கணேசன் அவளை வற்புறுத்தி இணங்க வைத்துப் பெயர் கொடுத்திருந்தான்.
இத்தனை படிப்பு வேலைகளுக்கிடையில் மேலும் ஒரு நடனத்துக்குப் புதிதாகப் பயிற்சி செய்து அரங்கேற்றுவதில் நேரம் அதிகம் செலவாகும் என்றுதான் முதலில் தயங்கினாள். இரண்டாயிரம் பேர் வந்து பார்க்கின்ற அந்த பிரம்மாண்டமான கலை நிகழ்ச்சியில் ஆட அவளுக்கு நடுக்கமாகவும் இருந்தது. இருந்தாலும் வேந்தர் விருந்தில் ஆடிய அனுபவம் கொஞ்சம் கை கொடுத்தது. அதோடு இந்திய மாணவர்கள் கலை நிகழ்ச்சிக்கு உதவ வேண்டும் என்ற ஆர்வமும் இருந்தது. மேலும் பல்கலைக் கழகங்களில் நடை பெறுகின்ற எல்லா இனக் கலை நிகழ்ச்சிகளிலும் அதிகமான கூட்டம் வருவது இந்திய கலாச்சாரக் கழகம் நடத்துகின்ற இந்தக் கலை நிகழ்ச்சிக்குத்தான். அதில் ஆட வாய்ப்புக் கிடைத்திருப்பது ஒரு பெருமைதான் என எண்ணினாள். அடுத்த முறை வீட்டுக்குப் போகும்போது தனது பரத நாட்டிய பயிற்சிக் கேசட்டுகளில் தேடி ஒரு சிறிய பாடலை எடுத்துப் பயிற்சி பண்ணிக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தாள்.
பரத நாட்டிய ஆடைகள் எல்லாம் அம்மாதான் அடுக்கி வைத்திருக்கிறாள். அம்மாவுக்கு முன்னதாகப் போன் பண்ணி நல்ல ஒரு ஆடையைத் தேர்ந்தெடுத்து பெட்டி போட்டு வைக்கச் சொல்ல வேண்டும்.
அம்மாவை எண்ணிய போது மனசுக்குள் ஒரு சிறிய நடுக்கம் வந்தது. இப்போது இங்கே நடப்பதை அம்மா தெரிந்து கொண்டால் என்ன சொல்லுவாள்? நிச்சயம் கோபப் படுவாள். “ஏண்டி! நீ பினாங்குக்குப் படிக்கப் போனியா, இல்ல ஆம்பளப் பசங்களோட சுத்திறதுக்குப் போனியா? போயி இன்னும் மூணு மாசம் முழுசா முடியில. அதுக்குள்ள ஒனக்கு போய் ·பிரன்ட் தேவைப் படுதா?” என்று சீறுவாள்.
அப்பா அமைதியாக இருப்பார். கோபப் பட்டாலும் சத்தமில்லாமல் பொறுமையாக என்ன விஷயம் என்று கேட்பார். ஆனால் அம்மாவுக்கு அந்தப் பொறுமை இருக்காது. அம்மாவுக்கு இதெல்லாம் கண்டிப்பாகப் பிடிக்காது.
தனக்கே கூட இன்னும் சரியாகத் தெரியவில்லை. தானும் கணேசனும் ஏதோ ஒரு வகையில் இந்தப் பல்கலைக் கழகத்தில் ஜோடியாகிவிட்டது தெரிந்தது. தான் அவனை எந்நேரமும் நினைத்திருப்பது தெரிந்தது. அவனுக்காக ஏங்குவது புரிந்தது. அவன் இல்லாத நேரங்கள் வெறுமையாக இருப்பது தெரிந்தது. அவனை நினைத்த போதெல்லாம் மனதில் ஒரு தண்மையான வெப்பம் பரவுவது சுகமாக இருந்தது.
இதுதான் காதல் என்பதா? நான் அவனுக்குக் காதலியா? நான் அவனுக்குக் காதலி என்பதன் அர்த்தம் என்ன? அவனுக்கு நான் என்னைப் பட்டயம் எழுதிக் கொடுத்துவிட்டேனா? ‘என்னை அனுபவித்துக் கொள்’ என்ற லைசன்ஸ் கொடுக்கப் பட்டது போலவா?
அவன் எனக்குக் காதலன் என்பதன் அர்த்தம் என்ன? இனி என்னைத் தவிர வேறு பெண்கள் அவனை அணுகக் கூடாது என்ற கட்டுப்பாட்டுக்காகவா? அவன் மகிழ்ச்சியிலும் அவன் துயரத்திலும் தனக்கும் பங்கு என்பதாக இனி ஆகி விடுமா? இந்தப் பெண்ணுக்காகப் பெயர் குறிப்படப்பட்ட ஆணாக அவனும் அந்த ஆணுக்காகப் பெயர் குறிப்பிடப்பட்டுவிட்டப் பெண்ணாகத் தானும்… இனி வாழ்நாள் முழுவதும்….
நினைக்க இன்பமாகவும் இருந்தது. பயமாகவும் இருந்தது. இந்த மாதிரி ஒரு பெரிய முடிவை நானாகச் செய்ய முடியுமா? அப்பாவுக்குச் சொல்லி அனுமதி கேட்க வேண்டாமா? அம்மாவுக்கு விளக்கி அனுமதி கேட்க வேண்டாமா?
ஒரு வேளை அவர்கள் அனுமதி மறுத்து விட்டால்? “எந்த மாதிரிக் குடும்பமோ, என்ன எளவோ தெரியில! முன்ன பின்ன தெரியாத அவனோட இனிமே சுத்தாத!” என்று அம்மா தடுத்து விட்டால்…?
“ஏம்மா! உனக்கு இவ்வளவு செஞ்சு வச்ச நாங்க, வளத்து, ஆளாக்கி, படிக்க வைச்ச நாங்க, உனக்கொரு நல்ல மாப்பிள்ளயத் தேடி ஒரு நல்ல வாழ்க்கய அமைச்சிக் கொடுக்க மாட்டோமா? ஏன் அவசரப் பட்ற இப்ப?” என்று அப்பா தனக்கே உரிய அமைதியோடும் உறுதியோடும் வழியை அடைத்து விட்டால்…?
“சரி அப்பா! அப்படியே ஆகட்டும்!” என்று அப்பாவிடம் சொல்லி விட்டு “மன்னிச்சிக்குங்க கணேசன்! எங்க பெற்றோர்கள் இதை வேண்டாங்கிறாங்க. ஆகவே இதை இப்படியே விட்டிடுவோம்!” என்று சொல்லி விடுதலை பெற்றுக்கொள்ள முடியுமா?
இல்லையென்றால் “அது முடியாது அப்பா! நான் அவரையே காதலராகவும் கணவராகவும் ஏத்துக்க முடிவு பண்ணிட்டேன்! உங்களுக்கு விருப்பமில்லன்னா நான் வீட்ட விட்டு வெளியேறிப் போயிட்றேன்!” என்று, கட்டிய துணிகளோடு…. அந்தக் காட்சி வெறுப்பாக இருந்தது.
ஏராளமான காதல் நாவல்களில் காதலனுக்காகப் பெண் சகலத்தையும் துறக்கும் முடிவுகளை அகிலா படித்துப் படுக்கையில் இரவு நேரங்களில் கண்ணீரும் விட்டிருக்கிறாள். ஆனால் தன் இரத்தமும் சதையுமான அப்பாவையும் அம்மாவையும் முன்னால் வைத்துக் கொண்டு தன்னால் அப்படிச் சொல்ல முடியும் என்று தோன்றவில்லை.
அப்படி முறித்துக் கொண்டு வர வேண்டிய அவசியம்தான் என்ன? கணேசன் யார்? தன் வாழ்க்கையில் நேற்று முளைத்தவன் அல்லவா? நல்லவனா கெட்டவனா என்பது கூட இன்னும் சரியாகத் தெரியவில்லை. தன் மேல் உண்மையான காதல் வைத்திருக்கிறானா அல்லது ஜெசிக்காவை கூட்டிக் கொண்டு அலைந்தது போல, அவள் சலித்து விட்டதால் புதிய பெண் துணையாகத் தன்னைக் கருதிக் கொண்டிருக்கிறானா என்பதும் தெரியவில்லை. அவன் கண்களில் உண்மை இருப்பது போலத்தான் இருக்கிறது. ஆனால் அது உண்மையா அல்லது காதல் மயக்கத்தில் கிறங்கிப் போனதால் அப்படித் தெரிகிறதா என்றும் அவளால் நிச்சயித்துக்கொள்ள முடியவில்லை.
ஆனால் காதலில் நிச்சயங்களைத் தேடி அலைவதில் பொருளில்லை என்றும் அவளுக்குப் பட்டது. காதலில் உத்தரவாதம் கேட்க முடியுமா? சாயம் போகாத காதலாக இருந்தால்தான் ஏற்றுக் கொள்ளுவேன் என்று கன்டிஷன் போட்டுக் காதலிக்க முடியுமா?
கவர்ச்சியாக, அன்பாக இருக்கிறான். ஆனால் வாழ்நாள் முழுக்கத் தனக்கு உறவாகிப் போன அம்மாவையும் அப்பாவையும் விடவா? அவன் காட்டுகிற அன்பு அம்மாவும் அப்பாவும் காட்டுகிற அன்பை விடத் தீவிரமாகத்தான் இருக்கிறது. தனக்கும் அவன் மேல் ஏற்படுகின்ற அன்பு தன் அம்மா அப்பா மீது ஏற்படுகின்ற அன்பை விடத் தீவிரமாகத்தான் இருக்கிறது. என்னதான் பாசமான அம்மா அப்பாவாக இருந்தாலும் அவர்களை இருபத்து நாலு மணி நேரமும் நினைத்துக் கொண்டிருப்பதில்லை. அவர்கள் நினைவு மனதின் ஒரு மூலையில் எப்போதும் ஒரு சிறிய கிராமத்து மூலைக் கோயில் போல ஆரவாரமில்லாமல் இருக்கிறது. ஆனால் கணேசனின் நினைவு இருபத்து நாலு மணி நேரமும் மனசின் முன்னாலேயே இருக்கிறது. ஒரு இனிய தென்றல் போல வீசிக் கொண்டிருக்கிறது. சாப்பிடும் போதும் குளிக்கும் போதும் தூங்கும் போதும் விரிவுரைகளின் போதும்….
இது ஏன் என்று விளங்கவில்லை. எப்படித் தவிர்ப்பது என்று தெரியவில்லை. தென்றலை அடக்கி வைக்க முடியுமா? வீசத் தொடங்கிய பின்னர் “போ போ” என்றால் போய் விடுமா? இது இயற்கையின் நியதியல்லவா? பள்ளம் நோக்கிப் பாய்கின்ற தண்ணீரை நிறுத்த முடியுமா?
முடியாதென்றால், இதுதான் இயற்கை நியதி என்றால், அப்புறம் ஏன் இந்தக் குற்ற உணர்வு? அம்மாவிடமும் அப்பாவிடமும் இதனை விளக்கிச் சொன்னால் புரிந்து கொள்ள மாட்டார்களா?
“அம்மா நான் பல்கலைக் கழகத்தில ஒருத்தர விரும்புறேன். நீ சரின்னு சொன்னா அவரைக் காதலிக்கிலான்னு பாக்கிறேன்! எனக்கு அனுமதி கொடு!” முடியுமா? வாய் வருமா? இது அசிங்கமான பேச்சு என்று பொருள் வரும்படியாக இல்லாமல் இதைச் சொல்ல முடியுமா?
எந்தக் கதையில், எந்தக் காவியத்தில் அம்மா அப்பாவின் அனுமதியுடன் காதல் நடந்திருக்கிறது? கல்யாணத்திற்கு அனுமதி கேட்டு சண்டை போட்ட கதைகள் பல இருக்கின்றன. ஆனால் எந்த நாயகி, எந்த நாயகன் காதலிக்க அனுமதி கேட்டிருக்கிறார்கள்? அனுமதி பெற்றுக் கொண்டு காதலிப்பது காதலாகுமா? காதல் என்பதே ரகசியம்தானே! ரகசியத்தில்தானே காதலின் மகரந்தங்கள் இருக்கின்றன! இல்லாவிடில் இந்த விஷயத்தில் இத்தனை இனிப்பு எப்படி வரும்? மூடப்பட்ட சூடப் பெட்டியாக இருப்பதால்தானே இதில் இத்தனை வாசம் இருக்கிறது? திறந்த, அனுமதிக்கப் பட்ட காதலாக இருந்தால் அது நீர்த்துப் போய்விடாதா?
கொஞ்ச நாள் அம்மா அப்பாவிடமிருந்து இதை மறைத்து வைப்பதுதான் நல்லது என அகிலாவுக்குத் தோன்றியது. எப்படிப் பார்த்தாலும் அவர்களைக் கோபப்படுத்தாமல், வருத்தப் படுத்தாமல், இதை அவர்கள் முன் பேச முடியும் என அவளுக்குத் தோன்றவில்லை. பேசுவதற்கு போதிய தைரியம் வரும் என்றும் தோன்றவில்லை. காதல் உறுதிப் பட்டபின், முகையாக மட்டுமே இப்போது இருக்கின்ற உறவு காயாகிக் கனியும் வரை வளர்ந்தால், அப்போது அம்மா அப்பாவிடம் சொல்லலாம். ஆனால் அப்போது காலம் கடந்து விட்டிருக்கும். அவர்களின் அனுமதியை வேண்டி நிற்கின்ற நிலையில் அது இருக்காது. வெட்டு ஒன்று துண்டு ரெண்டாகத்தான் இருக்கும். அந்த நிலையில் அவர்கள் மறுத்தால் “நான் என் காதலனுடன் போகிறேன்!” என்றுதான் சொல்ல வேண்டியிருக்கும்.
ஆனால் அந்த அளவுக்கு இது வளருமா என்றும் தெரியவில்லை. இப்போது அது விளையாட்டாக வளர்ந்து கொண்டிருக்கிறது. பேச்சும் கொண்டாட்டமும் நண்பர்களின் கேலியும் சிரிப்பும் என அது கட்டுப்பாட்டுக்கு அடங்காமல் வளர்ந்து கொண்டிருக்கிறது. அதில் ஒரு ஆழம் இல்லாமல் இருக்கிறது.
அடுத்த முறை கணேசனோடு தனியாக இருக்கும் வேளை வந்தால் இந்தக் காதலைப் பற்றி ஆழமாகப் பேசவேண்டும் என்று அகிலா முடிவு செய்து கொண்டாள். அந்த சந்தர்ப்பம் வந்தது.
இந்தியக் கலைநிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவின் கூட்டத்திற்கு அகிலா அன்று போயிருந்தாள். என்னென்ன அங்கங்கள் என்பது பற்றியும் டிக்கட்டுகள் விநியோகம் பற்றியும் பேசினார்கள். கூட்டம் முடிந்து வெளியே வந்த போது கணேசன் சொன்னான்: “நாளைக்கு நீ என்னோட கண்டிப்பா சாப்பிட வரணும்!”
“ஏன் அப்படி கண்டிப்பா வரணும்?”
“ஏன்னா என்னோட பிறந்த நாள்!”
“அப்படியா? வாழ்த்துக்கள். யாராரெல்லாம் வாராங்க நம்ம கூட?” என்று கேட்டாள்.
“இனிமே கூட்டத்த சேர்த்துக்கிட்டுச் சாப்பிடப் போறதில எனக்கு அவ்வளவு ஆசையில்ல அகிலா! இந்தப் பிறந்த நாள உன்னோட மட்டும் தனியாக் கொண்டாடணும்!” என்றான்.
அவன் கண்களை கூர்ந்து பார்த்துவிட்டு புன்னகையோடு “சரி!” என்றாள்.
*** *** ***
அவ்வளவு பகட்டான இடத்துக்கு அவன் அவளை அழைத்து வருவான் என அவள் எதிர்பார்க்கவில்லை. புக்கிட் ஜம்போல் கோல்·ப் திடலை அடுத்துள்ள ஆடம்பர ஹோட்டலான இக்குவிடோரியல் ஹோட்டலின் கோ·பி ஹவுஸில் நுழைந்த போது அவள் அசந்து போனாள்.
அலங்காரத்துக்காக வைக்கப் பட்டிருந்த மங்கிய விளக்கு எரியும் மேஜைகளில், மற்றவர்கள் தொந்திரவு இல்லாத ஒரு மூலையில் அவர்கள் சென்று உட்கார்ந்த பிறகு அகிலா கேட்டாள்: “ஏன் இத்தனை விலையுயர்ந்த இடத்துக்கு கூப்பிட்டு வந்திங்க கணேஷ்? இது பணக்காரங்க காசைக் கரியாக்கிற இடமில்லையா?”
அன்று அவள் அழகான பஞ்சாபி உடை ஒன்றினை எடுத்து அணிந்து கொண்டிருந்தாள். அவனுக்கு இது பிடிக்குமா, இது பிடிக்குமா என்று தனக்குள் கேட்டுக் கொண்டு தேடித் தேடி எடுத்த உடை. ஏனோ அவனை சந்தோஷப் படுத்த வேண்டும் என்ற எண்ணம் தீவிரமாக இருந்தது. தனது நீல நிற பஞ்சாபி ஆடைக்கேற்ப ஒரு மெல்லிய நீலத்தில் துப்பட்டாவும் அணிந்து கொண்டிருந்தாள். நெற்றியில் அதே நீல வண்ணத்தில் ஸ்டிக்கர் பொட்டு இட்டிருந்தாள். தலை முடியை அழுந்த வாரிக் கட்டியிருந்தாள். அவனுக்காக, அவனுக்காகவென்றே கண்ணில் இலேசாக மை தீட்டியிருந்தாள்.
அவன் பார்த்த அந்த ஆசைப் பார்வையில் அந்த உடையலங்காரத்தை அவன் அங்கீகரித்தான் என்றே தோன்றியது. அவள் கேள்விக்கு பதில் சொல்லாமல் “இன்னைக்கு நீ ரொம்ப அழகா இருக்க அகிலா!” என்றான்.
அவளுக்கு அது சங்கீதமாக இருந்தது. அவனும் அன்று எடுப்பாகத்தான் உடுத்திக் கொண்டு வந்திருந்தான். என்றும் போல் ஜீன்ஸ் டீ சட்டை என்றில்லாமல் ஒரு உயர்ந்த பிரேன்ட் சின்னம் பாக்கெட்டில் பதித்திருந்த சில்க் போன்ற துணியில் முழுக்கை சட்டை அணிந்திருந்தான்.
“ரொம்ப நன்றி. உங்களுடைய பிறந்த நாளாச்சே, உங்களுக்கு சந்தோஷமா இருக்கட்டுமேன்னுதான் இப்படி உடுத்தி வந்தேன். சந்தோஷம்தானே?”
“நான் வானத்தில பறக்கிறேன்னு என்னைப் பார்த்தா தெரியல?”
“தெரியுது! கொஞ்சம் இறங்கி வந்து பதில் சொல்லுங்க. ஒரு பல்கலைக் கழக மாணவர் இப்படி வந்து ஹோட்டல்ல காச வீணாக்கலாமா? அவ்வளவு பணக்கார வீட்டுப் பிள்ளையா நீங்க?”
சர்வர் வந்து நின்றார். மெனுவை வாங்கிப் பார்த்தார்கள். விலைகளைப் பார்த்ததும் அகிலாவுக்கு திக்கென்றது. அவள் இம்மாதிரியான இடத்திற்கு வந்து சாப்பிட்டதே இல்லை. இந்த மாதிரி விலைகளை இதற்கு முன் கண்டதும் இல்லை. எந்த உணவையும் வேண்டும் என்று சொல்ல அவளுக்கு பயமாக இருந்தது. கணேசன்தான் வற்புறுத்தி அதைச் சாப்பிடு இதைச் சாப்பிடு என்று ஆர்டர் கொடுத்தான்.
சர்வர் போனபின் கணேசன் சொன்னான்: “இன்னைக்கு இந்தப் பிறந்த நாள முதல் முதல்ல உன்னோடு சேர்ந்து கொண்டாட்றேன் இல்லியா அகிலா! அதினால அது ஸ்பெஷலா இருக்கணும்னு நெனச்சேன். நீயும் நானும் என்னைக்கும் நெனைச்சுப் பார்த்து மகிழக் கூடியதா இருக்கணும்னு நெனச்சேன். அதினாலதான் இந்த இடம்.”
“நீங்க அன்றைக்கு வாங்கிக் கொடுத்த மீ கோரேங், ரோஜாக் கூட நான் நெனப்பில வச்சிருக்கேன். அதுக்காக இவ்வளவு காசு செலவு பண்ணனுமா? உங்க பெற்றோர்கள் ரொம்ப பணக்காரங்க இருப்பாங்க போல இருக்கே!” என்றாள்.
“என் பெற்றோர்கள் ரொம்ப ஏழைகள் அகிலா! தோட்டத்து வாழ்க்கையிலேயே இன்னைக்கும் கிடந்து குடியும் கூழுமா அவதிப் பட்றாங்க. ஆனா எனக்கு ஒரு அத்தை இருக்காங்க, அட்சய பாத்திரம் மாதிரி…”
அன்று இரவில் ஏராளமாக அவர்களுடைய வாழ்க்கைக் கதைகள் பரிமாறிக் கொள்ளப் பட்டன. தன் வாழ்க்கையும் அவனுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காக தன் பெற்றோர்களைப் பற்றியும் குடும்பத்தைப் பற்றியும் அனைத்தையும் கூறினாள் அகிலா. சுவையான உணவுகளூடே அந்தரங்க வாழ்க்கைகள் பரிமாறப் பரிமாற அவர்களிடையே அந்நியோன்யம் வளர்ந்து கொண்டிருந்தது.
அவன் பேச்சு அவளுக்குப் பிடித்திருந்தது. அவளுக்கு எது எது விருப்பம், என்ன பாட்டு பிடிக்கும், என்ன உடை பிடிக்கும், எந்தத் தோழி உயிர்த்தோழி என்றெல்லாம் அவன் அக்கறையோடு கேட்டுக் கேட்டுத் தெரிந்து கொள்வது அவளுக்குப் பிடித்திருந்தது. ஒவ்வொன்றுக்கும் பதிலாக தனக்கு என்ன பிடிக்கும் என்ற தகவலை அவன் பரிமாறிக் கொண்ட போது பல அவளுடைய விருப்பங்களுக்கு ஒத்திருப்பது அவளுக்குப் பிடித்திருந்தது. ஐஸ்கிரீம் முடியும் வரை பேசிக் கொண்டிருந்தார்கள்.
சாப்பாடு முடிந்ததும் கிட்டத்தட்ட அறுபது வெள்ளியைக் கொடுத்து விட்டு அவர்கள் வெளியே வந்தார்கள். அவன் மோட்டார் சைக்கிளின் பின்னால் ஏறி அமர்ந்து அணுக்கமாக அணைத்துக் கொண்டாள். கேம்பசுக்குத் திரும்பினார்கள். யாராவது பார்த்து விடுவார்களே என்ற அச்சம் பல நாட்களுக்கு முன்பே அவளுக்கு நீங்கி விட்டிருந்தது.
“கொஞ்ச நேரம் வி.சி. ரோக் பக்கம் போய்உக்காந்திருப்போமா, அகிலா?” என்று கேட்டான்.
“சரி!” என்றாள். அந்த இரவு குளுகுளு வென்றிருந்தது. இந்தக் காதலனின் அணைப்பு வெது வெதுப்பாக இருந்தது.
வி.சி. பாறை மாணவர் விவகாரப் பிரிவுக்கு முன்னால் இருந்தது. துணை வேந்தரின் பழைய அலுவலகம் அங்கு அமைந்திருந்ததால் அந்த இடத்தை துணை வேந்தர் பாறை என்று மாணவர்கள் அழைக்க அதுவே நிலைத்து விட்டது. மாணவ காதல் ஜோடிகள் இரவில் உட்கார்ந்து பேச வசதியான இடம்.
மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு இறங்கி நடந்தார்கள். அகிலா தலை முடியை இறுகப் பிடித்திருந்த ரிப்பனை அவிழ்த்து விட்டு முடியை கழுத்திலும் தோளிலும் படரவிட்டாள். அவர்களிடையே எல்லா இறுக்கங்களும் தளர்ந்திருந்தன.
வி.சி. பாறையிலிருந்து பார்த்தால் கடல் பரப்பும் பினாங்குப் பாலமும் தெரியும். பினாங்குத் தீவின் கரையில் ஒரு தென்னந் தோப்பும் தெரியும். அன்று அந்தத் தென்னந்தோப்பின் மேலாக ஒரு பிரகாசமான நிலா வானத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. பினாங்குப் பாலம் முழுவதும் விளக்குகள் எரிந்து ஒளிமிக்கக் கற்கள் பதித்த தங்கச் சங்கிலி போல இருந்தது. உறுதியான அந்தப் பாலத்தின் மென்மையான அசையும் பிம்பம் கடலில் பிரதிபலித்துக் கொண்டிருந்தது.
தூரத்தில் அக்கரையில் பட்டர் வொர்த் கப்பல் துறையில் உயர்ந்த கிரேன்கள் தெரிந்தன. துறையை ஒட்டியும் அருகில் கடலிலும் பல பெரிய சரக்குக் கப்பல்கள் கம்பீரமாக நின்றிருந்தன. இரும்பும் எ·குமாக செய்யப்பட்ட அந்தக் கப்பல்களின் மீதெல்லாம் சந்திர ஒளி உருகி வழிந்து அவற்றின் முரட்டுத் தனங்களை மென்மைப் படுத்திக் கொண்டிருந்தது.
அந்த இரவுப் பொழுதும் வானமும் கடலும் சந்திரனும் தங்கள் இருவருக்காகவும்தான் படைக்கப் பட்டிருக்கின்றன என அகிலா நினைத்துக் கொண்டாள். இந்த அனுபவம் மிக மிகப் புதியதாக இருந்தது. இதை அவள் புத்தகங்களில் படித்திருக்கிறாள். அப்போது இந்த அனுபவங்களுக்காக அவள் ஏங்கியதுண்டு. இப்போது அது இங்கே நிகழும் போது ஒரு இனிய கனவு கண்டு விழித்த போது அது கனவல்ல உண்மை என்று தெரிந்து கொண்டது போல் இதயம் மகிழ்ச்சியில் தளும்பிக் கொண்டிருந்தது.
அவன் அவள் கையை அழுத்திப் பிடித்துக் கொண்டு வழி நடத்தினான். அவள் விருப்பத்தோடு அவனை ஒட்டிக் கொண்டு நடந்தாள். இவன் தனக்குத் தலைமையேற்று வழி நடத்தத் தக்க நல்ல ஆண்மகன்தான் என்ற கருத்து அவள் உள்ளத்தில் உறுதிப் பட்டுக் கொண்டிருந்தது.
அவர்கள் வசதியான ஒரு புல் மேட்டில் உட்கார்ந்தார்கள். அவன் அவள் தோள்களைத் தழுவியிருந்தான். அவள் துப்பட்டாவினய் ஓரங்கள் அவன் அணைப்பில் கொஞ்சம் நசுக்கின. முகம் திருப்பி முத்தம் கொடுக்க வந்தான். கொஞ்சமாக இதழைக் கொடுத்துப் பின் வாங்கிக் கொண்டாள். இது வேண்டும் என்றும் இது குற்றம் என்றும் மனது மாறி மாறிச் சொல்லிக் கொண்டிருந்தது.
அந்த வேளையில் அன்று இரவு முழுவதும் குறுகுறுத்துக் கொண்டிருந்த அந்தக் கேள்வி முட்டி மோதிக் கொண்டு வெளிப்பட்டது: “உங்க குடும்பத்தில எல்லாரையும் பத்திச் சொன்னிங்க! ஆனா ஒருத்தர் பத்தி மட்டும் சொல்லலியே!”
“யாரப் பத்தி சொல்லலே?”
“அதான், உங்க அத்த மக, மல்லிகா!”
“ஓ மல்லிகாவா?” கொஞ்சம் யோசித்துச் சொன்னான். “அவ சின்னப் பிள்ளை. வயசு ஆயிடுச்சே தவிர ஒண்ணும் தெரியாத வெகுளி! அவ எனக்குத் தங்கச்சி மாதிரி!”
***
——————————————————————————–
21
வளாகத்தில் முதல் பருவப் பரிட்சைக் காய்ச்சல் தணிந்து விடுமுறைக்கு வீடு திரும்பும் காய்ச்சல் அனைவரையும் பிடித்துக் கொண்டிருந்தது. குறிப்பாக முதலாண்டு மாணவர்கள் வீடு திரும்பத் துடித்துக் கொண்டிருந்தார்கள். வீடு, குடும்பம், பழைய பள்ளி மாணவர்கள், அம்மாவின் சமையல் என்ற எண்ணங்கள் இன்னும் பலமாக ஒட்டிக் கொண்டிருப்பது அவர்களிடையேதான். இரண்டாமாண்டில் இந்தத் தீவிரம் கொஞ்சம் தணியும். மூன்றாம் ஆண்டில் வீட்டுப் பாசம் ரொம்பத் தணிந்துவிடும். விடுமுறையில் பயிற்சிக்குச் செல்ல வேண்டும், புரோஜெக்ட் செய்ய வேண்டும் என்று பல மாணவர்கள் வளாகத்திலேயே தங்கி விடுவதும் உண்டு.
இந்த முதல் பருவத்தின் கடைசி வாரங்கள் எக்கச்சக்கமான நெருக்குதல் மிக்க வாரங்களாக இருந்தன. முதலில் இந்தியக் கலாச்சார சங்கத்தின் மாணவர்கள் கலை விழா அவளை இடுப்பை முறித்தது. பரத நாட்டியம் ஆடுவது என்பது பெரிதாக இருக்கவில்லை. ஆனால் கலை விழாவிற்கு டிக்கெட்டுகளை அலைந்து விற்க வேண்டியிருந்தது. அவர்கள் தயாரித்த நினைவு மலருக்கு விளம்பரங்கள் தேடி அலைய வேண்டியிருந்தது. ஆனால் எல்லாவற்றையும் கணேசனின் துணையோடு செய்தது ஆறுதலாக இருந்தது.
கலை விழாவுக்கு அரங்கம் நிறைந்த கூட்டம் வந்திருந்தது. மாண்பு மிகு அமைச்சர் டத்தோ ஸ்ரீ சாமிவேலு வந்து தலைமை உரையாற்றினார். மாணவர் விவகாரங்களுக்கான உதவித் துணை வேந்தர் டத்தோ சலீம் வந்திருந்து வாழ்த்துரையாற்றினார். மாணவர் உபகாரச் சம்பள நிதிக்கு பத்தாயிரம் வெள்ளி திரண்டது. அமைச்சர் மேலும் பத்தாயிரம் வெள்ளி தருவதாக அறிவித்தார். நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாக்கி வந்திருந்த குளுகோர் வட்டாரத்து இளைஞர்கள் ஆரவாரமாகக் கைதட்டிச் சீட்டியடித்து நிகழ்ச்சியைக் கலகலப்பாக்கிக் கொண்டிருந்தார்கள்.
ஏற்பாட்டுக் குழுவின் மாணவர்கள் சீருடை போல பெரிய பூப்போட்ட பாத்தேக் முழுக்கை சட்டை அணிந்திருந்தார்கள். மாணவிகள் அனைவரும் தழையத் தழைய சேலை கட்டியிருந்தார்கள். அரங்கின் முன்னால் பெரிய குத்து விளக்கு ஏற்றி வைத்து வண்ண அரிசி மாவில் கோலமும் போட்டிருந்தார்கள். அந்த சையட் புத்ரா அரங்கு அன்று தோரணமும் மாவிலையும் கட்டப்பட்டு முழுக்க முழுக்க ஒரு உற்சாகமான இந்தியச் சூழ்நிலையில் இருந்தது.
கலை நிகழ்ச்சி முடிந்து மாணவர்கள் வெளியே வந்த போது பேராசிரியர் முருகேசுவை தற்செயலாகச் சந்தித்தாள் அகிலா.
“ரொம்ப அருமையா இருந்ததம்மா உன் நாட்டியம். இந்த மாணவர்கள் டப்பாங்குத்து ஆட்ற வேகத்தில நம்ப கலைகளையே மறந்து போயிடுவாங்ளோன்னு பயந்திருந்தேன். உன்னைப் போல பரத நாட்டியத்தை முறையா தெரிஞ்சிக்கிட்டு ஆட்றவங்களப் பாக்கும் போதுதான் ஆறுதலா இருக்கு” என்றார். அவருக்கு வெட்கத்துடன் நன்றி சொன்னாள். “அப்பாவ விசாரிச்சேன்னு சொல்லு!” என்று சொல்லி அவர் போய்விட்டார்.
கலை நிகழ்ச்சியால் தேங்கிப் போய்க்கிடந்த எசைன்மென்ட் வேலைகளை முடிக்க இரவும் பகலுமாத உழைக்க வேண்டியிருந்தது. அப்புறம் பரிட்சைகளுக்குத் தயார் செய்ய வேண்டியிருந்தது. நாட்கள் குடைராட்டினம் போல சுழன்றன. கடைசித் தாள் முடிந்த போது ஏற்பட்ட விடுதலை உணர்வுக்கு இணையே இல்லை.
அகிலா வீட்டுக்குத் திரும்புவதை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் கணேசனை விட்டு இன்னும் ஒரு ஐந்தாறு வாரங்களுக்குப் பிரிந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் வருத்தமாக இருந்தது. கணேசனும் வீடு திரும்புவதற்கு ஆயத்தமாக இருந்தான். “ஒரு ரெண்டு வாரம் இருந்திட்டுத் திரும்பிடுவேன் அகிலா! எனக்குப் புரோஜெக்ட் வேலைகள் இருக்கு. அதோடு ஐசெக் வேலைகளும் இருக்கு. ஆகவே கேம்பஸ்ல இருந்தாதான் அதெல்லாம் நடக்கும்!” என்றான்.
தானும் இரண்டு வாரம் தங்கித் திரும்பி விடலாமா என நினைத்தாள். ஆனால் பெற்றோர்கள் பெரும் வேதனை அடைவார்கள் என்று எண்ணினாள். அவளுக்காக நல்ல உணவாக சமைத்துப் போட அம்மா காத்திருக்கிறாள் என்பதை தொலைபேசியில் வீட்டுக்குப் பேசும் போதெல்லாம் அம்மா சொல்லிக் கொண்டிருந்தாள். “அங்கெல்லாம் என்ன குப்பை மலாய்க்கார சாப்பாட்டையும் சீனன் சாப்பாட்டையும் சாப்பிட்றியோ தெரியில. வந்து வீட்டில உக்காந்து ஒளுங்கா சாப்பிடு.”
வீட்டின் ஈர்ப்பு தீவிரமாக இருந்தது. வீட்டின் சுகம் தனி. தன் அறையின், தன் கட்டிலின், தன் தலையணையின் சுகம் தனி. அந்த வாசனைகள் இன்னும் மறக்கவில்லை. தம்பியுடன் அடித்துப் பிடித்து விளையாடும் சுகம் தனி. பள்ளித் தோழிகளைக் கூப்பிட்டு வைத்துக் கொண்டு அரட்டை அடிக்கும் சுகம் தனி. அவை இல்லாமல் போன இந்தப் பல்கலைக் கழக நாட்களில் அவற்றை எண்ண எண்ண ஏக்கம் பெருகியது.
மாதம் ஒரு முறை பஸ் ஏறி வீட்டுக்குப் போய்விடும் தனக்கே இப்படி என்றால் தூர தூரப் பகுதிகளிலிருந்து வந்து, அடிக்கடி வீடு திரும்ப முடியாத மாணவர்களின் ஏக்கம் எப்படியிருக்கும் என்பதை அகிலாவால் புரிந்து கொள்ள முடிந்தது. குறிப்பாக மலாய் மாணவர்களுக்குக் கம்பத்தின் பிடிப்பு மிக அதிகம். கூடும் போதெல்லாம் தங்கள் கம்பங்களைப் பற்றிய கதைகளையே ஏக்கத்தோடு பேசிக் கொண்டிருப்பதை அவள் கவனித்திருக்கிறாள்.
இந்த மூன்று மாதங்களில் அவளுக்கு நெருங்கிய தோழியாகிவிட்ட மாலதியும் ஜோகூரில் உள்ள தன் ஊருக்குத் திரும்பத் தயாராகிக் கொண்டிருந்தாள். இருவரும் வீட்டுத் தொலை பேசி எண்களைப் பரிமாறிக் கொண்டார்கள். இரண்டு நாட்களுக்கு முன்னரே பரிட்சை முடிந்து பயணமான மாலதியை வழியனுப்பி வைக்க அகிலாவோடு கணேசனும் வந்திருந்தான். மாலதி பஸ் புறப்படும் நேரத்தில் அகிலாவிடம் கண்ணடித்து கணேசனைக் காட்டி “எல்லாம் எனக்குத் தெரியும்! ஆள விட்டுடாத. பத்திரமா முடிச்சி போட்டு வச்சிக்க!” என்று சொல்லிப் போனாள். அது அகிலாவுக்கு வெட்கங் கலந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது.
அகிலா வீட்டுக்குப் புறப்பட்ட அன்று கணேசன் அவளை பஸ் ஏற்றிவிட வந்திருந்தான். தனது பேக்கைத் தூக்கிக் கொண்டு அவனுடைய மோட்டார் சைக்கிள் பின்னால் உட்கார்ந்துதான் குளுகோரில் பஸ் நிற்குமிடத்திற்கு வந்தாள். பஸ்ஸில் அவளுடைய பேக்கைத் தூக்கி வைத்து இருக்கை எண் தேடி அவளை உட்கார வைத்தான்.
“இனி இந்த அஞ்சாறு வாரம் எப்படிப் போகும்னு எனக்குக் கவலையா இருக்கு அகிலா!” என்றான்.
“ஏன், உங்களுக்குத்தான் நிறைய வேலை இருக்குன்னு சொன்னிங்கள! அதோட ஐசெக் வேலைகளுக்காக ஜெசிக்கா உங்க கூடவே இருக்கப் போறா! உங்களுக்குப் பொழுது நல்லாப் போயிடும்!” என்றாள் ஒரு குறும்பான சிரிப்புடன்.
“பாத்தியா! இது பெண்களுக்கே உள்ள சந்தேகம் போல இருக்கு! நான் எவ்வளவு சொன்னாலும் இனிமே என் மேல உனக்கு நம்பிக்கை ஏற்படாது! ஆனா உனக்கு ஒரு சந்தோஷமான விஷயம் சொல்றேன் அகிலா! ஜெசிக்காவுக்கு ஒரு புதிய போய் ·பிரன்ட் கிடைச்சிட்ட மாதிரிதான் இருக்கு!” என்றான்.
“யாரது?”
“சுதாகரன்! என்னோட மேனேஜ்மென்டில இருக்கார். அவங்க ரெண்டு பேரும் மாணவர் பேரவையிலும் இருக்காங்க. முன்பே பழக்கம். இப்ப நெருக்கம்!”
நல்லதுதான் என அகிலா நினைத்தாள். பஸ் புறப்பட்ட சமயத்தில் “அடிக்கடி ·போன் பண்ணுங்க!” என்று வலியுறுத்திச் சொல்லி விட்டு கை காட்டிப் போனாள். பஸ் பினாங்கு பாலத்தைக் கடக்கையிலேயே கணேசனைப் பிரிந்திருக்கப் போகிறோம் என்ற ஏக்கம் அவளைப் பற்றிக் கொண்டது.
*** *** ***
வீட்டுக்குப் போனதிலிருந்தே அவனுடைய தொலைபேசி அழைப்புக்களுக்கு அவள் ஏங்கிக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு முறையும் ·போன் மணி அடித்த போது அவனாக இருக்கக் கூடாதா என்று எதிர் பார்த்தாள். அவள் வீடு சேர்ந்த இரண்டாம் நாள் அவன் கூப்பிட்டான். தம்பிதான் அவளை முந்திக் கொண்டு போய் எடுத்து யார் எவர் என்று முழுமையாக விசாரித்து விட்டு “யாரோ ஒன்னோட யுனிவர்சிட்டி ·பிரண்டாம்!” என்று அவளிடம் தந்தான்.
“எனக்கு கோல் வந்தா நீ ஏன் பேரையெல்லாம் விசாரிக்கிற?” என்று அவனிடம் சண்டை பிடித்து விட்டு தணிந்த குரலில் பேசினாள். தம்பி கொஞ்சம் தூரத்தில் உட்கார்ந்து கொண்டு அவள் டெலி·போனுக்குள் கொஞ்சுகின்ற அழகை வேறு வேலை இல்லாமல் கவனித்துக் கொண்டிருந்தான்.
மாலதி ஒரு முறை ஜோகூரிலிருந்து கூப்பிட்டுப் பேசினாள். பல்கலைக் கழகத்தில் இருந்த போதெல்லாம் வீட்டு நினைப்பாக இருந்தது போல வீட்டுக்கு வந்த பின் பல்கலைக் கழக நினைவாக இருக்கிறதென்றாள். தனக்கும் அப்படித்தான் இருக்கிறதென்றாள் அகிலா. “பல்கலைக் கழக நெனைப்பா அல்லது கணேசன் நினைப்பா?” என்று மாலதி கேட்டது கிளர்ச்சியூட்டுதாக இருந்தது.
கணேசன் அந்த வாரம் அவளை மூன்று முறை தொலைபேசியில் கூப்பிட்டு விட்டான். இரண்டு முறை பினாங்கிலிருந்து! மூன்றாம் முறை தான் கிள்ளானில் அத்தை வீட்டிலிருந்து பேசுவதாகக் கூறினான்.
“எப்படி இருக்காங்க உங்க அத்த மக?” என்று கேட்டாள் அகிலா.
“அதுக்கென்ன. நல்லா சாப்பிட்டுட்டு குண்டாதான் இருக்குது!” என்றான். அப்புறம் அர்த்தமில்லாத சில்லறைக் கதைகள் நெடு நேரம் பேசினார்கள். பொழுது போகமாட்டேனென்கிறது, போரடிக்கிறது என்று பரிமாறிக் கொண்டார்கள். விஷயமில்லாத இனிப்புப் பேச்சில் இருபது நிமிடங்கள் முதல் அரை மணி நேரம் வரை அவர்களால் பேச முடிந்தது.
அகிலா நீண்ட நேரம் ·போனில் பேசுவதை அம்மா கொஞ்சம் உற்றுப் பார்த்தாள். மகள் சாப்பாடு உட்பட எந்த விஷயத்திலும் உற்சாகமில்லாமல் டெலி·போனையே எதிர் பார்த்துக் கொண்டிருப்பது அவளுக்கு சந்தேகத்தை விளைவித்தது.
மகனைக் கூப்பிட்டு “அக்கா யாரோட பேசுது?” என்று கேட்டாள்.
“தெரிலம்மா! யாரோ அவங்க யுனிவர்சிட்டி ·பிரண்டாம்!”
“ஆம்பிளயா பொம்பளயா?”
“ஆம்பிள!”
“பேரென்ன?”
“தெரியில! எனக்குக் கோல் வந்தா நீ ஏன் அதையெல்லாம் கேக்கிறன்னு அக்கா என்னப் பிடிச்சி ஏசுது!” என்றான்.
சாப்பிடும் போது அம்மா அந்தப் பேச்சை எடுத்தாள். “யாரோடம்மா அவ்வளவு நேரம் பேசிக்கிட்டிருக்க?”
அகிலா தயங்கிச் சொன்னாள்: “என் கூட படிக்கிற ·பிரண்டம்மா!”
“பொம்பிள பிள்ளயா?”
“இல்ல. பையன்தான். ஏன் பேசக் கூடாதா?”
“பேசலாம். என்னா எப்படி சௌரியமான்னு கேட்டா போதாதா? என்ன அவ்வளவு நீளமா பேச வேண்டியிருக்குது?”
அப்பா குறுக்கிட்டார். “அது என்ன வனஜா நீ இத்தனை குறுக்கு விசாரணை பண்ற? ஒண்ணாப் படிக்கிறவங்க, பாடத்த பத்தி எவ்வளவோ பேசுவாங்க!”
அம்மா முகத்தைக் கொஞ்சம் கடுமையாக வைத்துக் கொண்டு அமைதியாகச் சாப்பிட்டாள். அகிலா மௌனமாக இருந்தாள். தான் எதிர்பார்த்ததை விட வேகமாக இந்த விஷயம் சபைக்கு வரப் போகிறது என அவளுக்குத் தோன்றியது.
*** *** ***
அன்று இரவு அவள் அறைக்குள் படுத்துப் படித்துக் கொண்டிருந்த போது அப்பாவின் அறையிலிருந்து அம்மாவும் அப்பாவும் ஏதோ விவாதம் செய்வது இலேசாகக் கேட்டது. என்னவென்று புரியவில்லை. புத்தகத்திலும் மனம் ஒட்டாமல் கணேசன் இப்போது என்ன செய்து கொண்டிருப்பான் என்ற எண்ணத்துடன் கண்களை மட்டும் மேயவிட்டுக் கொண்டிருந்தாள்.
சற்று நேரத்தில் அம்மா தன் அறைக் கதவைத் தட்டித் திறந்தாள். “அகிலா இப்படி வா கொஞ்ச நேரம்!” என்று கூப்பிட்டாள். அகிலா வெளியே வந்தாள்.
அப்பா வரவேற்பறையில் உட்கார்ந்திருந்தார். அகிலா அவருக்கு எதிரே போய் உட்கார்ந்தாள். அப்பா சிரித்தவாறே பேசினார்.
“இல்லம்மா, ஏதோ ஒரு பையனோட டெலி·போன்ல ரொம்ப நேரம் பேசிக்கிட்டே இருக்கன்னு உங்க அம்மா சொல்லுது. அது என்ன விஷயம்னு கேட்டுத் தெரிஞ்சிக்காம அதுக்குத் தூக்கம் வர மாட்டேங்குது. அது கேட்டா நீ சரியா பதில் சொல்ல மாட்டேங்கிறியாம். அதுக்காகத்தான் என்னையும் இதில இழுத்து விட்றிச்சி உங்கம்மா!”
அகிலா கொஞ்ச நேரம் மௌனமாக இருந்து சொன்னாள். “யுஎஸ்எம்-ல மூன்றாம் ஆண்டு நிர்வாகப் படிப்பு படிக்கிற மாணவர் அப்பா. ரேகிங் சமயத்தில என்னக் காப்பாத்தி அதுக்கப்புறம் விசாரணையில மாட்டி விடுதலையானாருன்னு முன்னமே உங்ககிட்ட சொல்லியிருக்கேனே, அவருதான். கணேசன்னு பேரு!” என்றாள்.
“அந்தப் பையன் ஏன் இத்தன தடவ உனக்குப் ·போன் பண்ணனும்?” அம்மா கோபமாகக் கேட்டாள்.
“அதுக்கப்புறம் நாங்க நல்ல கூட்டாளிகளாயிட்டோம். அந்த நட்பிலதான் ·போன் பண்றாரு!”
“கூட்டாளின்னா என்ன அர்த்தம்? ஏன் அந்த யுனிவர்சிட்டியில ஒனக்குப் பொம்பிள கூட்டாளிகள் கெடைக்கலியா?”
“இருக்காங்கம்மா. அவங்களும்தான் கூப்பிட்டுப் பேசிறாங்க! இதுல என்ன குத்தம்னு நீ இப்படிக் கேள்வியெல்லாம் கேக்கிற?”
“நீ இப்படி ஆம்பிள பசங்களோட சுத்திறதுக்குத்தான் நாங்க உன்னக் கொண்டி யுனிவர்சிட்டியில விட்டமா?” அம்மா பொரிந்தாள். இந்தக் கேள்வி வரும் என்பது ஏற்கனவே அகிலா ஊகித்து வைத்திருந்ததுதான். ஆனால் இப்படி சீறிக் கொண்டு வந்த போது அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
தான் கணேசனோடு மோட்டார் சைக்கிளில் ஏறி சுற்றியது அம்மாவுக்குத் தெரிய வழியில்லைதான். ஆனால் தொலைபேசி அழைப்புகளை அடிப்படையாக வைத்தே பல்கலைக் கழகத்தில் என்னவெல்லாம் நடக்குமென்று சரியாகத்தான் ஊகித்திருக்கிறாள். அவளை மறுத்துப் பேச அகிலாவால் முடியவில்லை.
“இதுக்கு ஏன் இப்படி கோவமாப் பேசிற வனஜா? அமைதியா கேட்டுத் தெரிஞ்சிக்க வேண்டியதுதானே! அவ இன்னும் என்ன சின்னப் பிள்ளயா? நல்லது கெட்டது தெரிஞ்ச பிள்ளதானே!” என்றார் அப்பா. அகிலா அப்பாவை நன்றியோடு பார்த்தாள்.
“ஆண்களும் பெண்களும் கலந்து படிக்கிற இடத்தில கலந்துதான் பழக வேண்டியிருக்கு. இதை எப்படித் தடுக்கிறதின்னு தெரியில. ஏன் தடுக்கணும்னும் தெரியில! அங்க எல்லாரும் சின்னப் பிள்ளைகளா தடுத்து வைக்கிறதுக்கு?” என்றாள் அகிலா.
அம்மா சுருதி இறங்கிப் பேசினாள். “நீ சின்னப் பிள்ள இல்லம்மா! அது எனக்குத் தெரியுது. ஆனா என்ன இருந்தாலும் பெண் பிள்ள இல்லியா? அதிகமா ஆம்பிளைகள் இருக்கிற எடத்தில ரொம்ப ஜாக்கிரதையா ஒரு கட்டுப்பாட்டோடதான் இருக்கணும். ஒரு ஆம்பிளயோட நீ சுத்தித் திரியிறது நாளைக்கு எல்லாருக்கும் தெரிய வந்திச்சின்னா அப்புறம் பேர் கெட்டுப் போகும். அப்புறம் என்ன படிச்சி என்ன உத்தியோகம் பார்த்து என்ன பிரயோஜனம்? ஒரு நல்ல இடத்தில கல்யாணம் அமையுமா? எத்தனை கல்யாணத்தில இந்தப் பிரச்சினைகள் வந்திருக்கிறத நான் பாத்திருக்கிறேன்!”
அம்மாவுக்குத் தன் படிப்பையும் உத்தியோகத்தையும் விட தனது கல்யாணம்தான் பெரிதாக இருந்தது. அவள் உலகத்தில் கல்யாணம் குடும்பம் என்பதே தலையாய விஷயங்கள். அம்மா எந்தக் காலத்திலும் வெளியே போய் வேலை செய்ததில்லை. அவளுக்குத் தெரிந்த அவள் பாராட்டுகிற உலகம் இந்தக் குடும்பம்தான்.
“கல்யாணத்தப் பத்தி எல்லாம் இப்ப ஏம்மா பேசணும்! படிப்பே இப்பதான ஆரம்பிச்சிருக்கு?”
“கல்யாணம் அவசரம்னு நான் சொல்லல! ஆனா அது நடக்க வேண்டிய காலம் வரும் போது இதெல்லாம் ஒரு முட்டுக் கட்டையா வரதுக்கு இடங் கொடுக்கக் கூடாதேன்னுதான் அப்படிச் சொல்றேன் அகிலா!”
அப்பா பேசினார்: “அகிலா! அம்மா கொஞ்சம் பழைய காலத்து ஆளு. ஆனாலும் அது சொல்றதில நெறய உண்மை இருக்கம்மா. பல்கலைக் கழகத்துக்குப் போயிட்டோம்கிறதினால சாதாரணமா நாம் கடைப் பிடிச்சி வந்த கட்டுப்பாடுகள விட்ற கூடாது. அதினால அம்மா பயப்பட்றது சரிதான். ஆனா உனக்கு நல்ல புத்தி இருக்கு. நீ எதுவும் தப்பா செஞ்சிட மாட்டேங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு. நீ ஆண்களோட பழகக் கூடாதுன்னு நாங்க ஒண்ணும் உத்திரவு போடல. அப்படி உத்தரவு போட்டா எங்க பொண்ணு மேலயே எங்களுக்கு நம்பிக்கை இல்லைன்னு அர்த்தம். ஆகவே நீ யாரோட வேணுன்னாலும் பழகு. ஆனா ஒரு வேள பல்கலைக் கழகத்தில நீ எந்த ஆணோடயாவது ஒரு நண்பன்கிற அளவுக்கு மேல பழக ஆரம்பிச்சிட்டேன்னா – நான் சொல்றது விளக்குதுதானம்மா? – ஒண்ணு பண்ணு. அந்தப் பையன வீட்டுக்குக் கொண்டு வந்து எங்களுக்கு அறிமுகப் படுத்தி வச்சிரு. நாங்க ஒரு முறை பாத்துப் பேசிப் பழகிட்டா பையன் யாருன்னு தெரிஞ்சிக்கிட்டா எங்களுக்கும் பயமில்லாம இருக்கும்!” என்றார்.
அப்பாவின் பேச்சு ஆறுதலாக இருந்தது. “சரிப்பா!” என்றாள் அகிலா. சந்திப்பு முடிந்து அப்பா எழுந்தார். அகிலா படுக்கைக்கு வந்தாள். வரும் வழியில் தம்பி தன் அறைக் கதவை ஒருக்களித்துத் திறந்து வைத்துக் கொண்டிருப்பதைக் கவனித்தாள். இவ்வளவு நேரம் ஒட்டுக் கேட்டிருக்கிறான் என்று தெரிந்தது. தூங்குவது போல் நடித்துக் கொண்டிருந்த அவனை முறைத்து விட்டு அவன் அறைக் கதவை இறுகச் சாத்திவிட்டு வந்தாள்.
புத்தகத்தில் அப்புறம் மனம் செல்லவில்லை. புத்தகப் பக்கத்தின் காதை மடித்து வைத்து விட்டு விளக்கை அணைத்துவிட்டுப் படுத்தாள். தூக்கம் எளிதில் வரவில்லை.
அப்பா முப்பது ஆண்டுகளாகப் பள்ளி ஆசிரியர். அந்த அனுபவத்தில்தான் இந்தப் பிரச்சினைக்கு இவ்வளவு எளிதாக, தெளிவாக ஒரு தீர்வைச் சொல்லிவிட்டார். அகிலாவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அம்மாவுக்கு இந்த அறிவுரை பிடிக்கவில்லை என்பது அவள் முகத்தில் இன்னும் இறுக்கம் விலகாததிலிருந்து தெரிந்தது.
அம்மா அப்படியொன்றும் உலகம் தெரியாதவளல்ல. உலகமும் ஆண்-பெண் உறவுகளும் மாறி வருவது தெரிந்துதான் இருக்க வேண்டும். அதனால்தான் அதற்கு மேல் எதிர்ப் பேச்சு பேசாமல் விட்டுக் கொடுத்து விட்டாள். அம்மா வளர்ந்த சூழ்நிலையில் கல்யாணத்திற்கு முன் இந்த ஆண்-பெண் பழக்கம், சிரிப்புப் பேச்சு என்பதெல்லாம் கடுமையான தவறுகள் என்று சொல்லிக் கொடுக்கப் பட்டது அவள் மண்டைக்குள் இன்னமும் சுழன்று கொண்டே இருக்கிறது. ஆனால் அவள் தன்னைச் சுற்றிப் பார்க்கும் போது கல்வி முன்னேற்றத்தினால், நாகரிக முன்னேற்றத்தினால் இந்த பழக்கங்கள் தளர்ந்திருப்பதைப் பார்த்திருக்கிறாள். அந்தத் தளர்ந்து விட்ட சூழ்நிலையில் தன் பிள்ளையை மட்டும் பொத்திப் பொத்தி வளர்க்க முடியாது என்பதும் அவளுக்குத் தெரிந்திருக்கிறது. பிடியைத் தளர்த்தத்தான் வேண்டும் என்று முடிவு செய்ததனால்தான் வீட்டை விட்டு வெளியேறிப் பட்டப் படிப்பை மேற்கொள்ள ஆட்சேபம் இல்லாமல் அனுப்பி வைத்தாள்.
ஆனால் பெற்றோர்களின் பிடி அதிகமாகத் தளர்ந்ததினால் எத்தனையோ பிள்ளைகள் தறிகெட்டுப் போய் விடுகிறார்கள் என்பதையும் அம்மா பார்த்திருக்கிறாள். தன் கன்றும் அப்படிப் போய் விடக்கூடாது என்ற பயமும் அவளுக்கு வருகிறது. ஆகவேதான் தளர்த்திய பிடியை சில சமயம் இறுக்குகிறாள். அகிலாவுக்குப் புரிந்தது.
தான் அம்மாவின் கட்டுப்பாடுகளையெல்லாம் நிராகரித்துவிட்டுப் போய்விடுகிற அளவுக்கு அறிவாளியாகிவிட்டோம் என்று அகிலா எண்ணவில்லை. படிப்பு வேறு, அம்மா பன்னிப் பன்னி சொல்லுகின்ற வாழ்க்கை நெறிகள் வேறு என்பது அவளுக்குப் புரிந்தது.
கணேசனோடு தான் பழகுவதில் தான் எந்தத் தப்பும் பண்ணிவிடவில்லை என தன்னைத் திருப்திப் படுத்திக் கொண்டாள். அவன் அளவோடு தொடவும் தழுவவும் முத்தம் தரவும் இடம் கொடுத்தது தவறில்லை. அவையில்லாமல் காதல் வளர முடியாது. அவற்றைத் தவிர்த்து விட்டு மன உணர்வுகளைப் பரிமாறிக் கொள்ள முடியாது. ஆனால் அம்மா இவற்றை எந்த நாளும் ஏற்க மாட்டாள். தான் அந்த அளவுக்குத் தன்னை பூட்டி வைத்துக் கொள்ள முடியாது. ஆனால் இவற்றுக்கெல்லாம் எல்லைகள் இருக்கின்றன. அவற்றைத் தான் வரையறுத்துக் கொள்ள வேண்டும் என அகிலா தீர்மானம் செய்து கொண்டாள்.
ஆனால் இந்த எல்லைகள் தன்னை ஒத்த வயதினரிடையே விரைவாக மாறி வருகின்றன என்பது அவளுக்குப் புரிந்தது. பல்கலைக் கழகத்தில் மாணவர்களுக்கு உள்ள சுதந்திரம் இந்த எல்லைகளை எல்லாம் உடைக்க அவர்களுக்கு வாய்ப்பளித்திருப்பதையும் பலர் அப்படி உடைப்பதிலேயே பெருமைப் படுவதையும் அவள் பார்த்து விட்டாள். அவற்றைப் பார்த்து அதைப் போல் பின் பற்ற தான் மட்டும் ஏன் சுதந்திரம் எடுத்துக் கொள்ளக்கூடாது, தான் மட்டும் ஏன் அனுபவிக்கக் கூடாது என்று மனது இழுத்துக் கொண்டே இருக்கிறது. அதனால்தான் இன்று போடப்பட்டுள்ளது போலக் குடும்பக் கடிவாளங்கள் தேவையாக இருக்கின்றன.
தம்பி ஒட்டுக் கேட்டது நல்லதுதான் என அகிலா நினைத்தாள். இந்தக் குடும்பத்தின் அடிப்படை நெறிகள் என்ன என்பதை அவனும் மறைமுகமாகக் கற்றுக் கொண்டிருப்பான். கற்றல் இப்படித்தான் நிகழ்கிறது. நேரடி உபதேசத்தை விடப் பார்த்துக் கேட்டுக் கற்றுக் கொள்வதே நிலைக்கும்.
விரைவில் கணேசனை அழைத்துக் கொண்டு வந்து அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அறிமுகப் படுத்த வேண்டும் என்ற இனிமையான நினைப்பில் அகிலா தூங்கிப் போனாள்.
***
——————————————————————————–
22
“சாப்பிடு கணேசு! பாரு எப்படி எளச்சிப் போய் கெடக்க! உங்க யுனிவர்சிட்டியில என்னதான் சாப்பாடு போட்றாங்களோ தெரியில! இப்படி எலும்புந் தோலுமா வந்து நிக்கிற” என்று அத்தை சத்தமாக உபசரித்தாள்.
யுனிவர்சிட்டியில் யாரும் சாப்பாடு போடுவதில்லை; வேண்டுவதைத் தானாகத்தான் தேடிக் கொள்ள வேண்டும் என்று அத்தைக்குச் சொல்லி விளங்க வைக்க முடியாது. அதோடு தான் அப்படி ஒன்றும் இளைத்துப் போகவில்லை என்பதை எடுத்துச் சொன்னாலும் ஏற்றுக் கொள்ள மாட்டாள்.
சாப்பாட்டு மேசையில் பத்து பேர் சாப்பிடக் கூடிய உணவு இருந்தது. ஆடு பிரட்டி வைத்து கோழிக் குழம்பு வைத்திருந்தாள். கோழி ஈரலைத் தனியாகப் பிரட்டியிருந்தாள். நெய் மணக்க பிரியாணி செய்திருந்தாள். ஊடான் கலந்த முட்டைக் கோஸ் பிரட்டல். தயிர் விட்ட வெள்ளரிக்காய். நல்ல சர்க்கரை விட்டு இனிக்க இனிக்க மாங்காய் சட்டினி செய்திருந்தாள். ஒரு ஜக்கில் சிவப்புக் கலரில் சிரப் கலக்கி வைத்திருந்தாள்.
“சிரப் நான்தான் கலக்கினேன். வெள்ளரிக்காயும் நான்தான் வெட்டினேன்!” என்று தன் பங்கைத் தம்பட்டமடித்தாள் மல்லிகா.
“இப்பல்லாம் கிள்ளான்ல நல்ல நாட்டாட்டுக் கறியே கெடைக்கிறதில்ல. அதினால காப்பாருக்கு ஆள் அனுப்பி வாங்கியாரச் சொன்னேன். கோழியும் நாட்டாட்டுக் கோழிதான். அந்த சமையக்கரம்மாகிட்ட சொல்லி கொஞ்சம் முந்தரிப் பருப்பு அரைச்சி போடச் சொன்னேன். நல்ல ருசியா இருக்கும். ஏலக்கா போட்டிருக்கலாம். மணமா இருக்கும். இருந்திச்சி, முடிஞ்சி போச்சி கணேசு. சாப்பிடு, சாப்பிடு” என்றாள்.
“முட்டக் கோஸ் நல்லா இருக்கம்மா. ஊடான் போட்டிருக்கில்ல, அதுதான்!” என்று மல்லிகாவும் சுவைத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
“ரெண்டு முட்டையும் ஒடச்சிப் போட்டிருக்கலாம். எங்க, இந்த சமையக்காரம்மா சுத்த சோம்பேறி. நாம்ப ஒண்ண சொன்னா அது ஒண்ணச் செய்யும். பாரு பிரியாணில நெய்யே காணும்!”
மேசையில் மட்டும் சாப்பாடு நிரம்பி வழியவில்லை. அத்தையின் பேச்சிலும் மல்லிகாவின் பேச்சிலும் சாப்பாட்டைத் தவிர வேறு விஷயங்களே இருக்கவில்லை. கறிக்குத் தேங்காயைப் பிழிந்து போடுவதற்கும் அரைத்துப் போடுவதற்கும் என்ன வித்தியாசம் என்பது முதல் கோழி இறைச்சியை சமைப்பதற்கு முன் எப்படிப் பக்குவப் படுத்துவது என்பது வரை அத்தை அவனுக்கு விளக்கிக் கொண்டே இருந்தாள். மல்லிகாவும் அத்தையும் இப்படிப் பெருத்துக் கொழு கொழுவென்றிருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை என்று நினைத்துக் கொண்டான்.
அத்தையின் சாப்பாடு மிக ருசியாகத்தான் இருந்தது. கணேசன் தன் தேவைக்கு அதிகமாகவே சாப்பிட்டான். ஆனால் ஓரளவுக்கு மேல் அவனால் சாப்பிட முடியவில்லை. பல்கலைக் கழகத்திற்குப் போனதிலிருந்து மேகி மீயும் ரொட்டிச் சானாயும் சப்பாத்தியும் தோசையுமாகக் கொறித்துக் கொறித்துச் சாப்பிட்டு பழக்கமாக்கிக் கொண்ட பின்னர் இப்படி தட்டு முழுக்கக் கொட்டிச் சாப்பிடுவது முன்பு போல் முடியவில்லை.
“இந்த மாமா மிந்தியெல்லாம் வந்தா நல்லா கலகலன்னு பேசும். இப்ப ஏன் இப்படி உம்மணா மூஞ்சாக் கிடக்குது?” என்று மல்லிகா சீண்டினாள்.
உண்மையில் அவர்களின் இடைவிடாத பேச்சுக்கு அவனால் ஈடு கொடுக்க முடியவில்லைதான். சாப்பாட்டைப் பற்றி அவர்களைப் போல் இடைவிடாமல் வருணிக்க அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை.
“எனக்கு சாப்பிட்றதுக்கே நேரமில்ல. இதில பேச எங்க நேரம்? மல்லிகா! பேசிக்கிட்டே சாப்பிட்டா செரிக்காதுன்னு சொல்றாங்க. அதினால பேசாம சாப்பிடு!” என்றான்.
“ஆமா! என்னைக்குமா இப்படிப் பேசிக்கிட்டே சாப்பிட்றோம்! மாமா வீட்டுக்கு வந்திருக்கேன்னுதான் இத்தன பேச்சி!”
“ஆமாப்பா! இந்த மல்லிகா சாப்பாட்டத் தட்டில போட்டுகிட்டு போய் ஏதாவது வீடியோ பாக்க உக்காந்திரும். அப்புறம் பேச்சாவது, மூச்சாவது! தட்டில என்ன இருக்கின்னு கூட தெரியாது! இன்னைக்கு மாமாவ பாத்ததில இத்தன கொண்டாட்டம்” என்று அத்தையும் தாளம் போட்டாள்.
அந்த வீட்டின் நடைமுறைகள் ஏனோ அவனுக்கு வேடிக்கையாக இருந்தன. அந்த வீடு அவன் பழகிய வீடுதான். அங்குதான் அவன் வளர்ந்தான். இந்தப் பழக்கங்கள் எல்லாம் அவனுக்கும் பழகியவைதான். ஆனால் பல்கலைக் கழகத்திற்குப் போன இந்த மூன்றாண்டுகளில் அந்தப் பழக்கங்களெல்லாம் அவனுக்கு மெது மெதுவாக அன்னியமாகிக் கொண்டு வந்தன.
முதலில் அந்த வீட்டின் பெருந்தீனி அவனுக்குப் பிடிக்கவில்லை. ஏராளமாகச் சமைத்து ஏராளமாகக் கொட்டுகிறார்கள். சமையலுக்கு ஆளிருந்தது. அந்த அம்மா ஏராளமாக ஆக்கிப் போடுவது தனது கடமை என ஆக்கிக் கொண்டிருந்தாள். அத்தையோ மல்லிகாவோ அதைக் கண்டு கொள்வதில்லை.
காலையில் ஒன்பது வரை தூங்கினார்கள். 10 மணிக்குக் கறியுடன் இட்டிலி தோசை பண்ணிப் பசியாறி பிற்பகலில் தூங்கி எழுந்து மூன்று மணிக்குச் சாப்பிட்டார்கள். பிற்பகலிலும் இரவில் ஒரு மணி வரையிலும் தமிழ் வீடியோ பார்த்துக் கொண்டிருந்தார்கள். வீட்டில் சினிமா இதழ்கள் இரைந்து கிடந்தன. ஞாயிற்றுக் கிழமை மட்டுமே தமிழ்ப்பத்திரிகை வாங்கி முக்கியமாகச் சினிமாச் செய்தியைத்தான் படித்தார்கள். மல்லிகாவுக்கு எல்லா நடிகர் நடிகையர் பேரும் தெரிந்திருந்தது. அவர்கள் அந்தரங்க வாழ்கைகளை அறிந்து வைத்திருந்தாள். அதைப் பற்றியே சளசளவென்று பேசினாள்.
அத்தைக்குப் படிப்பில்லை. அத்தை கணவர் சுமாராகப் படித்து வியாபார மூளையை வளர்த்துக் கொண்டவர். அத்தைக்குப் பெரும் பணத்தைத் தேடி வைத்து விட்டு இளம் வயதில் செத்துப் போனார். அத்தை மல்லிகாவைப் படிக்க வைக்க முயன்று தோற்றுப் போனாள். அந்த வீட்டில் எங்கும் அறிவின் அறிகுறிகள் இல்லை. பணம் நிறைய இருந்தது. கொச்சையான ஆடம்பரம் இருந்தது.
அத்தை எந்த நேரமும் மொத்தமாக ஒரு அட்டிகை போட்டுக் கொண்டிருந்தாள். அதை ஆண்டுக்கொரு முறை அழித்து புதிதாகச் செய்வாள். மூக்கில் வைரமும் விரலில் நவரத்தினங்களாகவும் போட்டுக் கொண்டிருந்தாள். அவளும் மல்லிகாவும் அடிக்கடி நகைப் பெட்டியை வெளியே எடுத்து நகைகளை எடுத்து வரிசைப் படுத்தி அழகு பார்த்துக் கொண்டிருந்தார்கள். “இது உனக்கு, இது எனக்கு!” என்று பங்கு போட்டுக் கொண்டிருந்தார்கள்.
மாமா வாங்கிப் போட்டிருந்த வீடுகளிலிருந்து வாடகை வந்து கொண்டிருந்தது. அவருடைய சேமிப்புப் பணத்தை எடுத்து இரண்டு மூன்று நம்பிக்கையான ஆட்கள் மூலமாக அத்தை வட்டிக்கு விட்டிருந்தாள். அந்த வட்டித் தரகர்கள் வீட்டுக்கு வந்து அத்தையுடன் உட்கார்ந்து பேசும் போது பதினைந்து வட்டி இருபது வட்டி என்று பேரம் நடப்பதை கணேசன் கேட்டிருக்கிறான். ஆனால் அதில் எதிலும் மல்லிகாவையோ அல்லது கணேசனையோ அத்தை ஈடுபடுத்துவதில்லை. அந்த விஷயங்களையெல்லாம் அந்தரங்கமாக வைத்துக் கொண்டிருந்தாள்.
அந்த வட்டித் தரகர்கள் அத்தையையும் அத்தை மகளையும் ஏகமாகக் காக்காய் பிடித்துக் கொண்டிருந்தார்கள். வரும் போதெல்லாம் பழம், இனிப்பு என்று வாங்கி வருவார்கள். சில சமயங்களில் உடும்பு இறைச்சி, காட்டுப்பன்றி இறைச்சி என்றும் கொண்டு வருவார்கள். ஊருக்குப் போய்விட்டு வரும் நேரங்களில் அத்தைக்குப் பட்டுப் புடவை நகை என்று வாங்கி வந்து ஒன்றைப் பரிசாகக் கொடுத்து விட்டு இன்னும் நான்கைந்தை அகோர விலைக்கு விற்றுச் செல்வார்கள்.
அத்தைக்கு அவர்கள் தன் மேல் காட்டும் கரிசனம் – அது தன் பணத்துக்காகத்தான் என்று தெரிந்திருந்தாலும் – வேண்டியிருந்தது. அவளுக்கு வேறு உறவினர்கள் இல்லை. இருக்கின்ற சிலரையும் தன் பணத்தைக் கொள்ளையிட வந்தவர்கள் என்று பேசி விரட்டிப் பகைத்துக் கொண்டாள். தன் அண்ணனை – கணேசனின் அப்பாவை – மட்டும் பணத்தையும் பொருளையும் கொஞ்சம் கொஞ்சம் காட்டிக் கையில் போட்டுக் கொண்டிருந்தாள்.
அவர்களையும் அவள் வீட்டுக்குள் அண்ட விடுவதில்லை. அவளே போய் அவர்களைப் பார்த்து ஏதாகிலும் பொருள்கள் வாங்கிக் கொடுத்துக் கொஞ்சம் காசையும் கையில் கொடுத்து விட்டு தன் வீட்டுப் பக்கம் வரத் தேவையில்லாமல் ஆக்கி விடுவாள்.
கணேசன் விடுமுறைக்கு வரும் போதெல்லாம் தன் வீட்டுக்குத்தான் முதலில் வர வேண்டும் என்று கட்டளை போட்டிருந்தாள். அப்படி அவன் வந்தவுடன் ஓரிரு நாட்கள் அவனை வீட்டில் வைத்திருந்து தானே தனது டிரைவர் வைத்த காரில் அவனை ஏற்றிச் சென்று அவர்களுக்குக் காட்டிவிட்டு கையோடு திரும்பக் கொண்டு வந்து விடுவாள். போகும் போதே ஒரு டஜன் பீர் போத்தல்களையும் காரில் வாங்கிப் போட்டுக் கொள்வாள். அதற்காகவே அப்பா அவளை அமோகமாக வரவேற்பார். அதற்குப் பிறகு அந்த பீரைத் திறப்பதிலும் குடிப்பதிலும் உள்ள அக்கறை வேறு எதிலும் அவருக்கு இருக்காது.
அதே வேகத்தில் பக்கத்து எஸ்டேட்டில் கல்யாணமாகி குழந்தை குட்டிகளோடு வாழும் அவனுடைய அக்காளையும் கொண்டு கொஞ்ச நேரம் காட்டிவிட்டு வந்து விடுவாள். அக்காளின் கணவருக்கும் சில பீர் போத்தல்கள் சென்று சேரும். அங்கும் கொண்டாட்டங்கள்தான் இருக்குமே தவிர எந்த முக்கியமான விஷயத்தையும் பேச முடியாது.
கணேசனின் அண்ணன் அப்பாவுடன் சண்டை போட்டுக் கொண்டு சிங்கப்பூருக்கு வேலை தேடிப் போய் அங்கேயே தங்கிவிட்டார். எப்போதாவது தீபாவளிக்கு வந்து ஒவ்வொரு முறையும் சண்டை போட்டுக் கொண்டு போவதோடு சரி!
இந்த முறையும் நாளைக்குக் காலையில் இப்படி ஒரு மின்னல் வேகப் பயணத்தை அத்தை ஏற்பாடு செய்திருந்தாள்.
சாப்பாடு முடிந்து இரண்டு பேரும் ஏப்பம் விட்டுக் கொண்டிருக்கும் வேளையில் கணேசன் சொன்னான்: “அத்தை! நாளைக்கி அப்பா வீட்டுக்குப் போனா நான் அங்கயே ரெண்டு நாள் தங்கிட்டு வரலான்னு பாக்கிறேன்!” என்றான்.
“ஏன் கணேசு?” அத்தை அதிர்ந்து போய்க் கேட்டாள். “இங்க என்னா கொற உனக்கு?”
“இங்க ஒரு கொறயும் இல்ல அத்த! அம்மாவோட ஒக்காந்து கொஞ்சம் பேசணும். எப்பவுமே அவசரமா திரும்பிட்றோம்… அதினாலதான்!”
“ஐயோ, என்னா பேசப் போற அவங்களோட? அந்த அசிங்கத்தில போயி எப்படித்தான் இருக்கப் போறியோ! சரி, ரெண்டு நாள் வேணாம்! ஒருநாள் இருந்திட்டு வந்திடு!” என்றாள்.
“ஆமாம் மாமா! ஒரு நாள் போதும். வந்திடு எனக்குப் பொளுதே போவாது!” என்றாள் மல்லிகா.
*** *** ***
அத்தை வந்ததிலிருந்து வீடு கோலாகலமாக இருந்தது. அப்பாவும் அம்மாவும் தான் வந்திருப்பதை விட அத்தை வந்திருப்பதையே பெரிதும் விரும்பியிருப்பது போலத் தெரிந்தது. வழக்கமான பீர் போத்தல்களும், ஆட்டு இறைச்சி இரண்டு கட்டியும் வாங்கிக் கொண்டு வந்திருந்தாள் அத்தை.
அத்தைக்கு கணேசனை அங்கு விட்டுச் செல்ல விருப்பமே இல்லை. போகும் போது “நாளைக்கு மத்தியானம் டிரைவரை அனுப்பி வைக்கிறேன். வந்திடு கணேசு!” என்று சொல்லிச் சென்றாள்.
“மாமா! மறக்காம வந்திடு! இல்லன்னா ஒங்கிட்ட பேசமாட்டேன்!” என்று சிணுங்கிப் போனாள் மல்லிகா.
அத்தை திரும்பிப் போவதற்கு முன்னமே அப்பா போதையில் சாய்ந்து விட்டார். அத்தையின் பீர் போத்தல்களில் மூன்றைக் காலி செய்திருந்தார்.
அப்பா தூங்கிக் கொண்டிருந்த போது அம்மாவிடம் பேச்சுக் கொடுத்தான் கணேசன்: “ஏம்மா! அப்பாவ ஏன் இப்படி குடிக்க விட்ற? உடம்பு என்னத்துக்கு ஆகும். இப்பவே பாரு, அவருக்குக் கையெல்லாம் ஆடுது. எதுவுமே ஞாபகத்தில இருக்கிறதில்ல. இப்படியே இருந்தா எப்படி?”
அம்மா சட்டென்று பதில் சொன்னாள்: “இல்ல கணேசு. அப்பாவுக்கு வேல கஷ்டமான வேல பாரு! செம்பன கொலய அறுக்கணும். தூக்கணும். லோரில போடணும். உடம்பு வலி போறதுக்கு இப்படிக் கொஞ்சம் குடிப்பாங்க, அப்புறம் தூங்கிடுவாங்க. ஒரு வம்பு தும்புக்கு போவ மாட்டாங்க!”
“உடம்பு வலிக்கு புஷ்டியான ஆகாரம் சாப்பிடணும். நல்ல வைட்டமின்கள் சாப்பிடணும். குடியா அதுக்கு மருந்து?”
“நான் நல்ல சாப்பாடுதான போட்றேன். அவங்கதான் சாப்பிட மாட்றாங்க. குடிக்கலேன்னா தூங்க மாட்டாங்க. வெளிக்குப் போக மாட்டாங்க! ரொம்ப கஷ்டப் படுவாங்க! என்னதான் போட்டு திட்டுவாங்க, அடிப்பாங்க!”
இந்த அம்மாவே இப்படி குடி என்பது முக்கியம்தான் என்பது போலப் பேசினால் இந்த அப்பாவை யார்தான் திருத்த முடியும் என்பது அவனுக்கு விளங்கவில்லை. அம்மாவின் இந்த அறியாமையாவது சுட்டிக் காட்ட வேண்டும் என்று எண்ணினான்.
“ஏம்மா! நீயுந்தான வேல செய்ற! ஒனக்கு ஒடம்பு வலியில்லியா? நீ ஏன் குடிக்கிறதில்ல? குடிக்காம எப்படி ஒன்னால தூங்க முடியுது?” என்று கேட்டான்.
“எனக்கு எதுக்கு குடி? சீ, நான் வாய்லியே வச்சதில்ல! நான் ரெண்டு இஞ்சியத் தட்டி ஒரு கசாயத்த வச்சிக் குடிச்சன்னா எல்லாம் சரியாப் போயிடும். மரக்கட்ட மாதிரி தூங்கிடுவேன்.” பெருமையுடன் சொன்னாள்.
“அப்ப அந்தக் கஷாயத்த அப்பாவுக்கு வச்சிக் குடுத்தா என்னா?”
“அதுக்கா? கசாயமா? நல்லா இருக்கு நீ பேசிறது! அதுக்கு தண்ணிதான் கசாயம். அத விட்டு கசாயத்தக் கொண்டி குடுத்தா என் மூஞ்சிலியே ஊத்தி, என் மயரப் புடிச்சி இளுத்து அடிக்கும்.”
“அடிச்சா நீ வாங்கிக்குவியா!”
“வாங்கிக்காம என்ன பண்றது? புருஷனாப் போயிடுச்ச! பொம்பிளயா வந்தவ வாங்கிக்கத்தான் வேணும்!”
இருபதாம் நூற்றாண்டும் பெண் விடுதலை இயக்கமும் அவனது பெற்றோர்களை எப்படித் திரும்பிப் பார்க்காமலேயே தாண்டிப் போயின என்று அவனுக்கு விளங்கவில்லை. அவனுடைய பெற்றோர்கள் பழைமையில் மரத்துப் போனார்கள். அவர்கள் மூளையின் உயரணுக்கள் செத்து விட்டன. அவனால் அவற்றுக்கு உயிரூட்ட முடியுமா?
அன்று பின்னிரவில் அப்பா கொஞ்சம் போதை தெளிந்து எழுந்திருந்தார். அம்மாவை எழுப்பி சாப்பிட உட்கார்ந்தார். மத்தியானம் செய்த ஆட்டுக் கறியை சூடாக்கிப் பரிமாறினாள் அம்மா. கணேசன் எழுந்து அவர் பக்கத்தில் உட்கார்ந்தான்.
“கணேசு, சாப்பிட்டியா?” என்று கேட்டார்.
“அத்தையோட உக்காந்து அப்பதே சாப்பிட்டனே, நீங்க பாத்திட்டுத்தான இருந்திங்க அப்பா! அது கூடவா உங்களுக்கு ஞாபகம் இல்ல?”
“ஆமா, ஆமா! எங்க அது, தங்கச்சி போயிடுச்சா?”
“போயிட்டாங்க!”
“எங்கிட்ட சொல்லிக்கிலிய!”
“நீங்க படுத்துத் தூங்கிட்டிங்க!”
“ஓஹோ! கொஞ்சம் தண்ணி சாப்பிட்டன்ல! ஒடம்பு அசதி வேற. அதான் தூங்கிட்டேன்.”
தன் மனைவியைப் பார்த்தார். “தண்ணி இன்னும் மிச்சமிருக்கா புள்ள!”
ஒரு போத்தல் மீதமிருந்தது. எடுத்து வர விருட்டென்று எழுந்தவளை கணேசன் கைப்பிடித்து உட்கார வைத்தான்.
“அப்பா! இப்படி நீங்க தண்ணி சாப்பிட்றது ஒடம்புக்கு நல்லதில்லப்பா. கொஞ்சம் கொஞ்சமா கொறச்சி, அப்படியே விட்டிருங்கப்பா!” என்றான்.
“அட, நான் ரொம்ப சாப்பிட்றதில்ல கணேசு. இன்னைக்கு தங்கச்சி வாங்கிட்டு வந்து ஊத்திச்சா ரெண்டு போத்த சாப்பிட்டேன். இல்லன்னா ஒரு நாளக்கு அரை போத்ததான். அவ்வளவுதான்!”
“இல்லப்பா! நான் கேள்விப் பட்டேன். தினமும் ரெண்டு மூணு போத்தல் குடிக்கிறிங்களாம். இன்னைக்கு நீங்க மூணு போத்தல் குடிச்சத நானே பாத்தேனே! இப்படிக் குடிச்சா ஒடம்பு என்னத்துக்கு ஆகும்?”
“இல்லவே இல்லயே! இன்னைக்கு உங்க அத்தை வந்திச்சி, நீ வந்திருக்க, அந்த சந்தோஷத்தில குடிச்சேன். இல்லன்னா ரொம்ப வச்சிக்க மாட்டேனே!”
அவன் அவரை இரக்கமாகப் பார்த்தான். இவர் முழுகப் போகும் மனிதர். நான் கரையேற்றத் துடிக்கிறேன். இல்லை நான் முழுகத்தான் போகிறேன், என்னை விடு என்று இன்னும் ஆழப் போகிறார்.
“ஆளு இப்படி மெலிஞ்சிப் போயிருக்கிங்க! கையெல்லாம் ஆடுது. மூச்சு வாங்குது. இதுக்கெல்லாம் குடிதான் காரணம்னு தெரியிலியா உங்களுக்கு?”
“வேல ரொம்ப கஷ்டம் கணேசு. நான் என்னா ஆபிசில ஒக்காந்து கிராணி உத்தியோகமா பாக்கிறேன்? செம்பன கொல தள்ளணும். ஒரு கொல என்னா கனம் தெரியுமா? ஒன்னால ஒரு கொல தள்ள முடியுமா? ஏன் கை ஆடாது? ஆனா கொல தள்ளும் போது வந்து பாரு! கையும் காலும் ஸடெடியா இருக்கும்!”
பல தடவை விழுந்திருக்கிறார். ஒரு முறை கால் முறிந்து ஆஸ்பத்திரியில் ஒரு மாதம் இருந்தார். எல்லாம் அவருக்கே மறந்து விட்டது.
கணேசன் பெருமூச்சு விட்டான். “அப்பா. இன்னும் ரெண்டு வருஷத்தில எனக்குப் படிப்பு முடிஞ்சிரும். நான் வேலைக்குப் போன பிறகு நீங்களும் அம்மாவும் வேலய விட்டிருங்க. என்னோட வந்து இருங்க. சௌக்கியமா இருங்க. ஆனா அதுக்குள்ள இந்தக் குடிப் பளக்கத்த விட்டிரணும். இது அசிங்கமான பளக்கம். அநாகரிகமான பளக்கம்!”
அப்பா அம்மாவை முறைத்துப் பார்த்தார்.” ம்… கேட்டுக்கிட்டியா? புள்ள ரொம்ப படிச்சிருச்சி பாத்தியா? அதுதான் அப்பனுக்கே புத்தி சொல்லுது.”
“அப்பா! நான் நல்லதுக்குத்தான் சொல்றேன். இந்தக் குடியினால பின்னால பெரிய பிரச்னைகள்ளாம் வரும். உடம்புக்கு ஆகாது. உடனே விட்ருங்கன்னு சொல்லுல! கொஞ்சங் கொஞ்சமா விடுங்க.”
“நீயா எனக்குத் தண்ணி வாங்கித் தர்ர? உன் கிட்ட நான் கேட்டனா? உன் காசிலியா குடிக்கிறேன்? நான் சம்பாதிக்கிறேன், நான் குடிக்கிறேன்!” கத்தினார்.
“நீங்க சம்பாதிச்சி நீங்க குடிக்கல. உங்க சம்பாத்தியம் சாப்பாட்டுக்கே பத்தாது. அத்தை கொண்ணாந்து குடுக்கிற காசில குடிக்கிறிங்க. அது ஒரு பெருமையா உங்களுக்கு?”
“என் தங்கச்சி எனக்குக் குடுக்கிறா! நீயும் அவ வூட்டுல ஒக்காந்துதான சாப்பிட்ற? அது ஒனக்கு வெக்கமா இல்லியா? நீ என்னைக்காச்சும் எனக்குக் காசு குடுத்திருக்கியா? ஒன்னால எனக்கு என்ன பிரயோஜனம்? மூணு புள்ளைங்கள பெத்து எனக்கு என்ன பிரயோஜனம்? யாராவது என்னக் கவனிக்கிறிங்களா?” அவர் கையாட்டிய வேகத்தில் சோறு எங்கணும் தெறித்தது.
பேச்சு வேறு முரட்டுத் தனமான திக்கில் போய்க் கொண்டிருப்பது தெரிந்தது. அவருக்கு போதை தெளிந்திருக்கலாம். ஆனால் அறியாமை தெளியவில்லை. எப்போது தெளியும்? தெளியுமா? தெரியவில்லை.
கணேசன் காசை அவ்வப்போது மிச்சம் பிடித்து அம்மாவிடம் கொடுத்திருக்கிறான். அதை அப்பாவிடம் இப்போது சொல்ல முடியாது. சொல்லுகின்ற தைரியம் அம்மாவுக்கும் இல்லை.
இந்த அப்பாவின் இயலாமையால்தான் அவன் அத்தை வீட்டில் உட்கார்ந்து சாப்பிட வேண்டியிருக்கிறது. அத்தை அன்பாகத்தான் சோறு போடுகிறாள். மகன் போல வைத்துக் கொள்ளுகிறாள். ஆனால் அப்பா அம்மா இருக்கும் போதே அத்தை வீட்டுச் செலவில் படிப்பதும் சாப்பிடுவதும் வெட்கம்தான். ஆனால் யாருக்கு வெட்கம்? தனக்கா தன்னைப் பெற்றவர்களுக்கா?
கணேசன் எழுந்து சென்றுப் படுத்து விட்டான். அப்பா பாதி சாப்பாட்டில் எழுந்து போத்தலைக் கையில் தூக்கிக் கொண்டு வெளியில் போய் உட்கார்ந்து கொண்டார். அம்மா ஒரு பேச்சும் பேசாமல் போய்ப் படுத்து விட்டாள். அப்பாவின் குரல் அவனுக்கு மட்டுமல்லாமல் அடுத்துள்ள ஐந்து வீடுகளுக்கும் அந்த பின்னிரவில் ஒரு நாயின் ஊளையைப் போல வழிந்து கொண்டே இருந்தது.
“புத்தி சொல்ல வந்திட்டானுங்க புத்தி! இவனுங்களா வந்து கொலை தள்ளுறானுங்க? கொலையத் தூக்கி லோரில போட்டுப் பாத்திருக்கியா? பாம்பு கடிச்சா வந்து பாப்பியா? அப்பனுக்கு ஒடம்பு வலிக்கு ஒரு தண்ணி வாங்கிக் குடிக்க அஞ்சு வெள்ளி தரதுக்கு நாதியில்லாத நாய்க்கெல்லாம் பேச்சில கொறச்ச இல்ல! எங்கிருந்து வந்த? அப்பன் இல்லாம வந்தியா? பெத்ததுக்கு ஒரு நன்னியுண்டா…? படிக்கிறானுங்களாம் படிப்பு…!”
பெற்றதுக்கு நன்றி சொல்ல வேண்டுமா என்று கணேசன் தன்னையே கேட்டுக் கொண்டான். பன்றிகளும்தான் பெற்றுப் போடுகின்றன. “என்னைப் பன்றியாகப் பெற்றாயே!” என்று நன்றி சொல்ல வேண்டுமா? பெற்றது ஒரு பெருமையா? பெறாமல் இருந்திருக்கலாமே! இந்தத் துன்பங்களுக்கெல்லாம் இடம் இல்லாமல் போயிருக்குமே!
கணேசனுக்குத் தூக்கம் வரவில்லை. அம்மா தூக்கிக் கொடுத்த அழுக்குப் பிடித்த தலையணையின் நாற்றமும் வெளியிலிருந்து வரும் இடைவிடாத பேச்சின் நாற்றமும் புழுக்கள் போல அவன் மனசிலும் உடம்பிலும் ஊர்ந்து கொண்டே இருந்தன.
அத்தையின் காரும் டிரைவரும் எத்தனை மணிக்கு வருவார்கள் என்று ஏங்க ஆரம்பித்தான்.
இன்னொரு கவலையும் அவனைப் பற்றிக் கொண்டிருந்தது. அகிலா என்னும் அந்த அழகிய மலரை இந்தச் சாக்கடைக்குள் எப்படிக் கொண்டு வந்து வைப்பேன் என்றும் கவலைப் பட ஆரம்பித்தான்.
***
——————————————————————————–

          அந்த இரவு மோகனமாக இருந்தது. பினாங்கின் நகரக் கடற்கரைப் பகுதியான கர்னி டிரைவ் அந்த சனிக்கிழமை பதினொரு மணி இரவிலும் ஆட்கள் நடமாட்டத்தோடு கலகலப்பாக இருந்தது. பலர் ஜோடி ஜோடியாக இருந்தார்கள். சிலர் குடும்பத்தோடு இருந்தார்கள். சிலர் தூண்டில் போட்டு மீன் பிடிக்க முயன்று கொண்டிருந்தார்கள். ஒட்டுக் கடை வியாபாரம் ஜேஜேவென்று நடந்து கொண்டிருந்து. ஆனால் கணேசனுக்கு அதெல்லாம் கருத்தில் படவில்லை. அகிலா ஒருத்தியே அவன் நினைவிலும் கண்களிலும் இருந்தாள். தான் கதாநாயகனாகவும் அவள் கதாநாயகியாகவும் நிற்கும் இந்தப் படத்தில் இந்தக் கூட்டமெல்லாம் அவ்வளவு முக்கியமில்லாத உப நடிகர்கள் கூட்டமாகத்தான் இருந்தது.அவர்கள் முன்னால் கடல் விரிந்து கிடந்தது. இருட்டில் அதன் தண்ணீரின் நிறம் தெரியவில்லை. கரையிலுள்ள மங்கிய விளக்குக் கம்பங்களின் இலேசான பிரதிபலிப்பு மட்டும் அலை முகடுகளில் பட்டு மின்னியது.

 

         மென்மையான அலைகள் வந்து அங்கு கட்டப் பட்டிருந்த சுவர்த் தடுப்பை மோதும் போது தாளத்திற்கு இணங்காத சலசலவென்ற சத்தம் கேட்டுக் கொண்டிருந்து. ஆழமில்லாத சேற்றுக் கரையைக் கொண்ட இந்தப் பகுதியிலிருந்து சேற்றின் மணம் வந்து கொண்டிருந்தது.பினாங்கின் இந்தக் கரையிலிருந்து ஏறிட்டுப் பார்த்தால் தூரத்தில் அக்கரையில் பட்டர்வொர்த் கடற்கரையும் செபராங் பிறை கடற்கரையும் அரை நிலா வட்டத்தில் தெரிந்தன. கடற்கரையோரமாக உள்ள விளக்குக் கம்பங்கள் ஒளிக் கோடுகள் போட்டிருந்தன. அக்கரையின் சில உயர்ந்த கட்டடங்களில் விளக்குகள் தெரிந்தன. கப்பளா பத்தாஸ் ராணுவ விமான தளத்தை நோக்கி ஒரு ராணுவ விமானம் வேகமாகப் பறந்து கொண்டிருந்தது புள்ளி விளக்காகத் தெரிந்தது. அதன் ஓசை சற்று தாமதமாக அவர்கள் காதுகளுக்கு வந்தது.கர்னி டிரைவ் அருகில் உள்ள படகு கிளப்பில் (Yacht Club) சில இயந்திரப் படகுகள் துறையில் கட்டி வைக்கப் பட்டு லேசான அலைகளில் ஆடிக் கொண்டிருந்தன. ஒரு படகில் மட்டும் உள்ளே விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. அந்த விளக்குகளின் பிரதிபலிப்புகள் கடலுக்குள் ஒளித் தூண்களாக இறங்கியிருந்தன.

 

       கடலின் நெளிவில் அந்த ஒளித் தூண்களும்நெளிந்து கொண்டிருந்தன.கரையோரச் சுவரின் மேல் அவனுக்கு அணுக்கமாக உட்கார்ந்திருந்தாள் அகிலா. ஒட்டுக் கடையில் மீ கோரேங் மற்றும் ஐஸ் கச்சாங் சாப்பிட்டுவிட்டு பழக் கலவையான பினேங் ரோஜாக்கை பொட்டலம் கட்டி வாங்கிக் கொண்டு இங்கு வந்து காற்றாட உட்கார்ந்தார்கள். ரோஜாக் இனிப்பும் புளிப்பும் உறைப்பும் கலந்திருந்தது. இன்றைக்குத் தன் அனுபவங்கள் இப்படித்தான் கலவையாக இருக்கின்றன என்று எண்ணினான் கணேசன். ஆனால் இப்போதைய கணம் முழுவதும் இனிப்புதான்.அகிலாவின் முடி கொஞ்சம் கலைந்தாற்போல் இருந்தது. உடம்பிலிருந்து ஒப்பனையைக் கலைக்கப் பூசிய களிம்பின் மணம் இன்னும் வந்து கொண்டிருந்தது. கணேசன் அதை ரசித்துக் கொண்டிருந்தான். இது பெண்ணின் வாசனை. இது காதலியின் வாசனை.அவள் காதலியாகிவிட்டாளா? அது சரியாகத் தெரியவில்லை. சாப்பாட்டுக்கு அழைத்து வந்ததற்காக இதுவரை பலமுறை நன்றி சொல்லி விட்டாள். ஷங்ரிலாவிலிருந்து மோட்டார் சைக்கிளில் ஏறி இங்கு வந்து சேரும் வரை தோளைத் தொட்டும் தொடாமலும் பிடித்து வந்தாள்.

 

      சாப்பாட்டு நேரத்தில் தங்கள் பல்கலைக் கழகப் பாடம் பற்றிய கதைகளைப் பகிர்ந்து கொண்டார்கள். ஆரம்பப் பள்ளி இடை நிலைப் பள்ளிப் படிப்பனுபவங்கள் பற்றிப் பேசினார்கள். தங்கள் ஊர்களைப் பற்றிப் பேசினார்கள். நாளை நடை பெறவிருக்கும் பட்டமளிப்பு விழாவில் தங்களுக்கு என்னென்ன வேலைகள் உள்ளன என்பது பற்றிப் பேசினார்கள். அதற்கு மேல் அந்தப் பேச்சில் அந்தரங்கங்கள் ஏதும் பேசப்படவில்லை.ஆனால் கடை மேசையில் கும்பலோடு உட்கார்ந்து சாப்பிட்டு முடிந்தவுடன் காசு கொடுத்து எழுந்து கடலலைகள் வருடும் இந்தச் சுவர் அருகில் கொஞ்சம் இருட்டான இடத்துக்கு வந்தவுடன் ஏற்பட்ட ஏகாந்தத்தில் ஒரு மோக உணர்ச்சி அவனுக்கு வந்தது. அதிலும் அவள் ஆடிக் களைத்திருந்து இப்போது சாப்பாட்டுக்குப் பின் பெற்றிருந்த மலர்ச்சியும் அவள் அணுக்கத்தினால் வந்து கொண்டிருந்த அந்த வாசனைகளும் அவனைக் கிறங்க அடித்துக் கொண்டிருந்தன.இந்தத் தனிமையில் எதைப் பற்றிப் பேசுவது என்று தெரியவில்லை. அணுக்கமாகிவிட்டாளே என அந்தரங்கமாக ஏதாவது பேச ஆரம்பித்தால் அவள் கோபித்துக் கொள்ளக் கூடும்.

 

        “உன்னை நண்பன் என்று நம்பி வந்தேன். இப்படிச் செய்து விட்டாயே!” என ஆரம்பித்துவிட்டால்? ஆனால் இத்தனை தனிமையில், அணுக்கத்தில் இருவரும் வந்து இங்கு அரையிருளில் கடலலைகள் பின்னணியில் உட்கார்ந்திருப்பது எதற்காக? பாடங்களையும் குடும்பக் கதைகளையும் பேசவா? இந்தச் சூழ்நிலையிலேயே சிருங்காரம் இருக்கிறதல்லவா? காற்றில் ஒரு காதல் ரசம் இருக்கிறதல்லவா?ஆனால் அவளும் அப்படி நினைக்கிறாளா? இல்லாவிட்டால் உண்மையிலேயே ஹோட்டல் சாப்பாடு பிடிக்காமல் இங்கு வந்து சாப்பிட்டு திரும்ப விடுதிக்குப் போக தன்னைச் சோற்று டிக்கட்டாகவும் போக்குவரத்து வசதியாகவும் மட்டும் பாவித்துக் கொண்டாளா? ஐயோ, இந்தப் பெண்களையே புரிய மாட்டேனென்கிறது!“அந்த பட்டர்வொர்த் கடற்கரை இங்கிருந்து ராத்திரியில பார்க்க ரொம்ப அழகா இருக்கில்ல கணேஷ்?” என்று மௌனத்தை அவளே உடைத்தாள்.அவளுக்கு அவன் நேரடியாக பதில் சொல்லவில்லை. “ரொம்ப நன்றி அகிலா!” என்றான்.திகைத்தவள் போல் பார்த்தாள்.

 

      “எதுக்கு திடீர்னு நன்றி சொல்றிங்க! இங்க கொண்டு வந்து எனக்கு சாப்பாடு வாங்கிக் கொடுத்ததுக்கு நானில்ல உங்களுக்கு நன்றி சொல்லணும்!” என்றாள். அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்திருந்தாள். பாதி இருளில் எஞ்சியிருந்த அரிதாரத் துளிகள் மின்னின.“சாப்பாடு பெரிசில்ல அகிலா! அந்த சாப்பாட்டை இவ்வளவு சுவையுள்ளதா ஆக்கினிங்களே! அதுக்காக!”“அது மீ கோரேங் பெரட்டிக் கொடுத்த அந்த மாமாவின் கை வண்ணமா இருக்கும். நான் என்ன பண்ணினேன்?”“எவ்வளவோ பண்ணியிருக்கிங்க! இந்த இரவு நேரத்த இவ்வளவு அழகாக்கினது நீங்கதான். இந்த கர்னி டிரைவுக்கு நண்பர்களோடு வந்து எத்தனையோ முறை சாப்பிட்டுப் போயிருக்கிறேன். ஆனா இந்த இடம் இத்தனை அழகா இருந்ததில்ல!”“அது ஏன் இன்னைக்கு மட்டும் அப்படி?”“நீங்க என் பக்கத்தில இருக்கிறதுதான் காரணம். கேம்பஸ் கூட இப்ப எனக்குப் புதுசாத்தான் தெரியுது. ரொம்ப அழகான இடமா மாறிட்டதாத் தெரியுது!”“ரொம்பத்தான் புகழ்றிங்க! எனக்குக் கூச்சமா இருக்கு போங்க!” என்றாள்.கூச்சமாக இருந்தால் சரி. இல்லாவிட்டால் இவ்வளவு பேசியதற்குக் கோபம் வந்திருக்க வேண்டும்.“உண்மையில என்ன இன்னைக்கி ரொம்ப சந்தோஷப் படுத்திட்டிங்க. என்னை அந்த ரேகிங் விசாரணையில இருந்து மீட்டதுக்கும் எனக்காக வருத்தப் பட்டு அழுததுக்கும் உங்களுக்கு நல்ல முறையில நன்றி சொல்ல ஒரு சந்தர்ப்பத்தை எதிர் பார்த்துக் கிட்டிருந்தேன். அது எதிர் பாராம இன்னைக்குக் கிடைச்சிது!” என்றான்.அவனைச் சில விநாடிகள் கூர்ந்து பார்த்தாள்.

 

      “அதே போல கணேஷ், ரேகிங்ல இருந்து என்னை நீங்க காப்பாத்தினதுக்கு உங்களுக்கு மனந் திறந்து நன்றி சொல்ல நானுந்தான் ஒரு சந்தர்ப்பத்த எதிர் பார்த்துக் கிட்டிருந்தேன். இன்னைக்கு அது வாய்ச்சது, எதிர் பாராம!” என்றாள்.அவள் கையை குலுக்குவதற்காக நீட்டினாள். அவன் வலது கையால் அழுத்திப் பிடித்து அதன் மேல் இடது கையையும் வைத்து மூடினான். அவள் கொஞ்சம் தயங்கித் தன் இடது கையை அதன் மேல் வைத்து மூடினாள். கொஞ்ச நேரம் கைகளை உருவிக் கொள்ளாமல் அப்படியே ஒருவரை ஒருவர் பார்த்திருந்தார்கள்.கடலை மூடியிருந்த இருட்டு வானத்தில் ஒரு மின்னல் நெளிந்து மறைந்தது. தொடர்ந்து இடி ஒன்று இடித்து உருண்டது. சடசடவென மழை கொட்ட ஆரம்பித்தது. சட்டென்று கையை உருவிக் கொண்டாள்.

 

     “ஐயோ மழை வந்திருச்சே! வாங்க ரொம்ப வர்ரதுக்குள்ளே போயிடுவோம் கணேசன்!” என்று எழுந்தாள்.அவனுக்குப் பெரிய ஏமாற்றமாக இருந்தது. கையை விடாமல் பிடித்திருந்து அவள் விழிக்குள் இன்னும் ஒரு மணி நேரம் பார்த்திருக்கத் தயாராக இருந்தான். அவனுடைய காதல் துடிப்புக்களையெல்லாம் அவளிடம் மணிக் கணக்கில் சொல்லத் தயாராகியிருந்தான். ஆனால் இந்தப் பாழும் மழை…!இருவருமாக அவன் மோட்டார் சைக்கிளை நோக்கி ஓடினார்கள். அவன் மழைக் கோட்டு ஒன்றுதான் வைத்திருந்தான். அவளிடம் கொடுத்தான். “நீங்க போட்டுக்கங்க!” அகிலா என்றான்.அவள் மழைக் கோட்டைப் போர்த்திக் கொண்டு பின்னால் உட்கார்ந்தாள். அவன் மோட்டார் சைக்கிளை ஓட்ட ஆரம்பித்ததும் அதை இழுத்து அவன் தலைக்கு மேல் கொண்டு வந்தாள். அதை அப்படியே அவன் தோளோடு போர்த்தி அவள் இரு கைகளையும் அவன் கைகளுக்குள் நுழைத்து இறுக்கிப் பிடித்துக் கொண்டாள்.மழைக் கோட்டைச் சற்றும் சட்டை செய்யாமல் மழை அவர்களை தாரை தாரையாக நனைத்துக் கொண்டிருந்தது. ஆனால் அவன் மழைக்கு மனதார நன்றி சொல்லிக் கொண்டிருந்தான்.

 

     பாதி வழியில் மழை நின்று விட்டது. ஆகவே மோட்டார் சைக்கிளை நிறுத்தி மழைக் கோட்டை மடித்து வைத்தான். அதன் பின்னர் பயணம் தொடர்ந்த போதும் அவள் கைகள் முன்னைப் போலவே அவனைப் பின்னியிருந்தன.பல்கலைக் கழகத்துக்குள் அவர்கள் வந்து சேர்ந்த போது மணி பனிரெண்டாகி விட்டது. மறுநாள் காலை தொடங்கும் பட்டமளிப்பு விழாவிற்கான கடைகள் அமைப்பதில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் நடமாட்டம் அந்த இரவிலும் இருந்தது. தேசா கெமிலாங்குக்கு வந்து வாசலில் கொண்டு நிறுத்தினான். அவள் இறங்கினாள். “ரொம்ப நன்றி. அறைக்குப் போனதும் குளிச்சிடுங்க! இல்லன்னா சளிக்காய்ச்சல் பிடிக்கும்!” என்றாள் சிரித்துக் கொண்டே!“இன்றைக்குப் பிடித்திருப்பது சளிக் காய்ச்சலல்ல, காதல் காய்ச்சல்” என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டு “நீயும் போய் குளிச்சிரு அகிலா!” என்றான். சொன்னவுடன் உதட்டைக் கடித்துக் கொண்டான். அவளை “நீ” என்று சொல்ல இப்படி உரிமை எடுத்துக் கொள்ளலாமா என அவனுக்கே தெரியவில்லை.மறுக்கவில்லை.

 

     “சரி” என்றாள் சிரித்துக் கொண்டே.அவன் புறப்படும் வரை வாசலில் காத்திருந்தாள். அவளுக்குக் கையசைத்துவிட்டு அவன் மோட்டார் சைக்கிளைக் கிளப்பித் திரும்பிய போது ஜெசிக்கா வரவேற்பறையின் கதவின் ஓரத்தில் நின்றவாறு தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பது அவன் கண்ணில் பட்டது. அவள் கண்களில் ரௌத்திரம் இருந்ததை அந்த ஒரு கணத்தில் உணர முடிந்தது.*** *** ***பட்டமளிப்பு விழாவின் பல்வேறு துணை நிகழ்ச்சிகளில் அகிலாவை கணேசன் தேடித் தேடிச் சென்று சந்தித்தான். ரோஜா மலர்கள் விற்க அவளுக்குத் துணை செய்தான். அவள் தோழிகளோடு சேர்ந்து கொட்டமடித்தான். பலமுறை அகிலா போக வேண்டிய இடங்களுக்கெல்லாம் அவளை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு போனான். அந்தச் சில நாட்களில் வளாகத்தில் அவர்கள் மற்ற மாணவர்களின் கண்களுக்கு வழக்கமான ஜோடியாகிப் போனார்கள்.அதற்கு அடுத்த வாரம் வழக்கம் போல் புதன் கிழமை இரவில் ஐசெக் மீட்டிங் நடந்த போது ஜெசிக்கா உம்மென்றிருந்தாள். எப்போதும் கணேசனைத் தேடிப் பிடித்து அவனோடு மோட்டார் சைக்கிளில் ஏறி வருபவள் அந்த வாரம் தானாகத் தன் மோட்டார் சைக்கிளிலேயே வந்திருந்தாள்.

 

    கணேசனும் அவளைத் தேட முயற்சி செய்யவில்லை. ஜெசிக்காவுக்கும் தனக்குமுள்ள தூரத்தை கொஞ்சம் அதிகப் படுத்திக் கொள்வதே இப்போதைக்கு நல்லது என அவனுக்குப் பட்டது. ஆனால் ஜெசிக்கா போன்ற ஒரு நல்ல தோழியை அவன் இழக்கவும் விரும்பவில்லை. நீண்ட கால நட்பு முறிந்து விடக் கூடாதே என்ற கவலை அவனுக்கு இருந்தது.கூட்டத்தின் ஆரம்பத்தில் ஜெசிக்காவைப் பார்த்து அவன் சிரிக்க முயன்ற போது அவள் முகம் திருப்பிக் கொண்டாள். கூட்டத்தில் பல முக்கியமான விஷயங்கள் பேசப் பட்டன. அந்த ஆண்டு நடக்கவிருக்கும் அனைத்துலக ஐசேக் பேராளர் மாநாடு பற்றிய எல்லா விஷயங்கள் பற்றியும் சங்கத்தின் செயலாளரான அவள் உற்சாகமில்லாமல் விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தாள்.கணேசனுக்கு அவளுடைய மன இறக்கத்தின் காரணம் புரிந்தது. அது அவனுக்குச் சங்கடமாகவும் இருந்தது. ஜெசிக்கா அவனுக்கு நல்ல தோழி. அவளோடு பல முறை சாப்பிடப் போயிருக்கிறான்.

 

      ஐசெக் சங்க வேலைகளுக்காகப் பல முறை அவளோடு சுற்றித் திரிந்திருக்கிறான். நூலகத்தில் ஒரே மேசையில் உட்கார்ந்து அந்த இடத்தின் மௌனச் சூழ்நிலையில் கால்கள் உரசப் படித்ததும் உண்டு. அவனுடன் சிரித்துச் சிரித்துப் பேசவும் அவன் நலனில் அக்கறைப் படவும் அவளைப் போல் ஒரு துணை கிடைத்திருப்பது அவனுக்குப் பெருமையாக இருந்தது.சில வேளைகளில் தோழி என்ற நெருக்கத்தைக் காதலி என்ற அளவுக்குக் கொண்டு போகலாம் என்ற ஆசையும் இருந்தது. தன்னை விட ஜெசிக்காவுக்கு அது இன்னும் அதிகமாக இருந்தது என்பது அவனுக்குத் தெரியும். ஆனால் ஜெசிக்கா அவன் மீது முற்றாக ஆதிக்கம் செலுத்த முயன்றது அவனுக்குப் பிடிக்கவில்லை. அவனுக்கு என்ன விருப்பம் என்பதைப் பற்றிச் சற்றும் கவலைப் படாமல் தான் விரும்பியதையெல்லாம் அவன் மீது திணிக்கின்ற அவளுடைய ஆர்ப்பாட்டம் அவனைத் தயங்கச் செய்தது.கூட்டம் முடிந்த போது அவள் விசுக்கென்று எழுந்து விட்டாள். ஆனால் அவளை அந்தக் கோபத்தோடு அப்படியே விட்டு விட கணேசன் விரும்பவில்லை. அவள் அறையை விட்டு வெளியேறுவதற்குள் விரைந்து போய் அவள் கையைப் பிடித்தான்.

 

     “என்ன” என்பது போல் திரும்பி அவனை முறைத்தாள்.“ஏன் என்னிடம் பேசாமல் போகிறாய், ஜெசிக்கா?” என்று கேட்டான்.“உன்னிடம் பேச என்ன இருக்கிறது? எனக்கு நிறைய வேலை இருக்கிறது. நான் போக வேண்டும்!” என்றாள். முகத்தில் கோபம் கொதித்துக் கொண்டிருந்தது.“கொஞ்ச நேரம் உட்கார்ந்து என்னிடம் பேசு ஜெசிக்கா!” என்றான்.கொஞ்சம் இணங்கி வந்து கலாச்சார மண்டபத்தின் படிகளில் அவனோடு உட்கார்ந்தாள்.“என் மேல் உனக்கு என்ன கோபம்?” என்று அவளைக் கேட்டான்.கொஞ்ச நேரம் பேசாமல் இருந்து அப்புறம் தரை பார்த்துப் பேசினாள். “அது உனக்கே தெரிய வேண்டுமே?”“தெரியவில்லை. உனக்குக் கோபம் வருமாறு நான் என்ன செய்தேன்?”“புதிதாக ஆள் பிடித்து விட்டாய். ஆகவே பழையவர்கள் துணை உனக்குத் தேவைப்படாமல் போய்விட்டது!”“யார் புதிய ஆள்? யார் பழைய ஆள்?”“உனக்கே தெரிய வேண்டும்!”“அகிலாவைச் சொல்கிறாயா?” என்று நேராக அவள் கண்களைப் பார்த்துக் கேட்டான்.

 

      “அந்தப் பிசாசை நீ மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு வந்ததைப் பார்த்தேன். நட்ட நடுநிசியில் மழையில் நனைந்த ஈரத்துடன் ஒருத்தரை ஒருத்தர் கட்டிப் பிடித்துக் கொண்டு வந்து இறங்கினீர்களே! எனக்குத் தெரியாது என்று நினைத்துக் கொண்டாயா?” என்றாள்.அவளிடம் தெளிவாகப் பேச வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான். “ஆமாம் ஜெசிக்கா! அன்றைக்கு வேந்தர் விருந்து முடிந்து அகிலாவுடன் சென்று சாப்பிட்டு விட்டு அவளைக் கொண்டு வந்து விடுதியில் விட்டேன். வரும் போது மழை வந்து விட்டது. நனைந்துதான் வந்தோம். இதில் உன்னிடம் என்ன மறைக்க வேண்டியிருக்கிறது?”அவனை கோபத்தோடு ஏறிட்டுப் பார்த்தாள். “அவள் கூப்பிட்டாளா, நீ கூப்பிட்டாயா?”“யார் கூப்பிட்டால் என்ன ஜெசிக்கா?”தரையைப் பார்த்தாள். “நீ அவளைக் காதலிக்கிறாயா கணேசன்?” அவள் தொனி இறங்கியிருந்தது. குரலில் தளு தளுப்பு இருந்தது.அவன் மென்மையாகப் பேசினான்.

 

     “ஜெசிக்கா, நீ இப்படி மொட்டையாகக் கேட்பதால் நானும் சொல்கிறேன். ஆமாம். அவளைக் காதலிக்கிறேன். ஆனால் அவள் என்னைக் காதலிக்கிறாளா என்பது இன்னும் தெரியவில்லை!”அவனை மீண்டும் ஏறிட்டுப் பார்த்தாள். “அப்படியானால் இதுதான் நம் உறவின் முடிவா?” என்று கேட்டாள்.“ஏன் உறவு முடிய வேண்டும் ஜெசிக்கா? நீ எந்நாளும் எனக்குத் தோழிதான். அது ஏன் மாற வேண்டும்?”“இதற்குக் காரணம் நான் சீனப் பெண் என்பதாலா? சீனப் பெண் தோழியாக இருக்கத் தகுந்தவள், ஆனால் காதலியாக இருக்கத் தகுந்தவள் இல்லை என முடிவு செய்து விட்டாயா?”“இல்லை ஜெசிக்கா. உன் மேல் உண்மையான காதல் எனக்கு வளர்ந்திருந்தால் இந்த இன வேறுபாடு எனக்குத் தடையாக இருந்திருக்காது என்றுதான் நினைக்கிறேன். ஆனால் அந்த பிரச்சினை அளவுக்கு நம் உறவு போகவில்லையே! எனக்கு உன்மேல் அன்பு உண்டு. ஆனால் அது எந்தக் காலத்திலும் காதலாக வளர்ந்ததில்லை”ஜெசிக்கா நீண்ட நேரம் யோசித்திருந்து பெரு மூச்சு விட்டுப் பேசினாள்.

 

    “நான் உன்னைப் பற்றி வேறுவிதமான ஆசைகளை வளர்த்துக் கொண்டேன். என் தவறுதான் போல இருக்கிறது. உன் நெருக்கம் என்னை ஏமாற்றி விட்டது. உன் கம்பீரமும் புத்திசாலித் தனமும் என்னை வசீகரித்து என் புத்தியை மழுங்கடித்து விட்டன. இன வேறுபாட்டைக் கடந்து நம் புத்தியின் சம பலத்தால் நாம் காதலித்துக் கல்யாணமும் செய்து கொள்ள முடியும் என நம்பினேன். ஆனால் அது எல்லாம் தவறு என இப்போது தெரிந்து விட்ட போது என் மீதே எரிச்சல் வருகிறது. அந்த எரிச்சலை உன் மீது காட்டியதற்கு மன்னித்துக் கொள்!” என்றாள்.“மன்னிப்பெல்லாம் தேவையில்லை! நாம் இன்னும் நண்பர்கள்தான். அது ஏன் மாற வேண்டும்?” என்றான்.“அது மாற வேண்டியதில்லை. ஆனால் மட்டுப் படுத்தப் படவேண்டும். முன்பு போல் நாம் இறுக்கிப் பிடித்துக் கொண்டு மோட்டார் பைக்கில் சுற்ற முடியாது. அந்த உரிமை உன் புதுக் காதலிக்குத்தான் உண்டு!” என்றாள்.“ஜெசிக்கா! திரும்பத் திரும்ப அப்படிச் சொல்லாதே! அவள் என் காதலியா என்று இன்னும் தெரியவில்லை. அவள் மனதை இன்னும் எனக்குத் திறந்து காட்டவில்லை. ஆகவே இது ஒரு தலைக் காதலாகவும் இருக்கலாம்!” என்றான்.“நான் வேண்டுமானால் போய் அந்தப் பிசாசிடம் பேசி ஒரு பதில் வாங்கிக் கொண்டு வரட்டுமா?” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள்.

 

    “ஐயோ வேண்டாம்! அதன் பின் உண்மையான பேயாக மாறி என்னைக் குடலைப் பிடுங்கிக் கொன்றாலும் கொன்று விடுவாள்!” என்றான் பதிலுக்குச் சிரித்துக் கொண்டே.அவள் எழுந்தாள். “சரி கணேசன்! உனக்கென ஒரு நல்ல இந்தியப் பெண்ணைப் பிடித்துக் கொண்டாய்! இன ஒருமைப் பாட்டுக்காக நான் வகுத்திருந்த திட்டத்தை முறியடித்து விட்டாய். இனி நான் எனக்கேற்ற ஒரு சீன மாப்பிள்ளையைத் தேட வேண்டும். ஆனால் ஒரு இந்திய மாணவனோடு சுற்றியலைந்த சீனத்தியை எந்த சீன மாணவன் ‘செக்கன்ட் ஹென்டாக’ ஏற்றுக் கொள்வானோ தெரியவில்லை!” என்று சொல்லிவிட்டு தன் மோட்டார் பைக்கை நோக்கி நடந்தாள் ஜெசிக்கா.கணேசன் அவள் மோட்டார் சைக்கிள் ஏறிப் போவதைப் பார்த்தவாறு இருந்தான். எத்தனை எளிதாக சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிச் சரிப் படுத்திக் கொண்டாள்! “என்னை ஏமாற்றி விட்டாய்! என் வாழ்வையே குலைத்து விட்டாய்!” என்று ஒப்பாரி வைக்காமல் சட்டென்று வழித்துப் போட்டு விட்டு வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்குத் தயாராகி விட்டாள்.அவள் போவதை ஒருவித வருத்தத்தோடு பார்த்துக் கொண்டிருந்த கணேசனுக்கு திடீரென்று அவனுடைய அத்தை மகள் மல்லிகாவின் நினைவு வந்தது.***

 

      பல்கலைக் கழகத்தில் அந்த ஆண்டின் முதல் பருவம் ஒரு முடிவுக்கு வந்து கொண்டிருந்தது. பாடத் திட்டத்தின்படி விரிவுரைகளை முடிப்பதற்கு விரிவுரையாளர்கள் அவசரப் பட்டுக் கொண்டிருந்தார்கள். பருவ இறுதி எசைன்மென்ட் (assignment) கட்டுரைகளுக்கான முடிவு நாட்கள் நெருங்கிக் கொண்டிருந்தன. முதல் பருவத் தேர்வுக்கான பட்டியல் வெளியாகிவிட்டது. நூலகத்தில் எந்த நேரமும் கூட்டம் நிரம்பி வழிந்தது. பகல் நேரங்களில் வெள்ளென போனால் ஒழிய உட்கார இடம் கிடைக்கவில்லை.அகிலா செய்திருந்த எசைன்மென்டில் நான்கை விரிவுரையாளர்கள் திருத்திக் கொடுத்திருந்தார்கள். கணினி எசைன்மென்டுகளில் இரண்டு B-யும் ஒரு C-யும் வாங்கியிருந்தாள். கணிதத்தில் மட்டும் A கிடைத்திருந்தது. ஒரு முதலாண்டு மாணவருக்கு இது மிகவும் நல்ல கிரேடுகள் என்று கணேசன் அவளைப் பாராட்டினான். முதலாண்டு மாணவர்கள் பல்கலைக் கழகப் படிப்பு முறை தெரியாமல் தடுமாறுகிற ஆண்டு. ஆகவே எசைன்மென்டில் C வாங்கினாலே பெரிய விஷயம்தான்.கணேசன் அகிலாவுக்கு எல்லா விஷயங்களிலும் துணையாகவும் வழிகாட்டியாகவும் மாறிவிட்டான்.

 

     நூலகத்தில் அவளுக்கு இடம் பிடித்து வைத்தான். அகிலாவுக்கு போக்குவரத்துப் பிரச்சினையும் தீர்ந்திருந்தது. தனக்கு வாய்ப்பு இருக்கும் போதெல்லாம் கணேசன் அவள் போக வேண்டிய இடங்களுக்கு அவளைத் தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு போகத் தயாராக இருந்தான். அவள் வேண்டாம், வேண்டாம் என்று சொன்னாலும் அவன் கேட்பதில்லை.இதற்கிடையே இந்திய கலாச்சாரக் கழகம் மாணவர் உபகாரச் சம்பள நிதிக்காக ஆண்டு தோறும் நடத்தும் கலைவிழாவுக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தது. அந்த விழாவில் அகிலாவின் பரதநாட்டியம் ஒன்று இடம் பெற வேண்டும் என கணேசன் அவளை வற்புறுத்தி இணங்க வைத்துப் பெயர் கொடுத்திருந்தான்.இத்தனை படிப்பு வேலைகளுக்கிடையில் மேலும் ஒரு நடனத்துக்குப் புதிதாகப் பயிற்சி செய்து அரங்கேற்றுவதில் நேரம் அதிகம் செலவாகும் என்றுதான் முதலில் தயங்கினாள். இரண்டாயிரம் பேர் வந்து பார்க்கின்ற அந்த பிரம்மாண்டமான கலை நிகழ்ச்சியில் ஆட அவளுக்கு நடுக்கமாகவும் இருந்தது. இருந்தாலும் வேந்தர் விருந்தில் ஆடிய அனுபவம் கொஞ்சம் கை கொடுத்தது. அதோடு இந்திய மாணவர்கள் கலை நிகழ்ச்சிக்கு உதவ வேண்டும் என்ற ஆர்வமும் இருந்தது. மேலும் பல்கலைக் கழகங்களில் நடை பெறுகின்ற எல்லா இனக் கலை நிகழ்ச்சிகளிலும் அதிகமான கூட்டம் வருவது இந்திய கலாச்சாரக் கழகம் நடத்துகின்ற இந்தக் கலை நிகழ்ச்சிக்குத்தான். அதில் ஆட வாய்ப்புக் கிடைத்திருப்பது ஒரு பெருமைதான் என எண்ணினாள்.

 

      அடுத்த முறை வீட்டுக்குப் போகும்போது தனது பரத நாட்டிய பயிற்சிக் கேசட்டுகளில் தேடி ஒரு சிறிய பாடலை எடுத்துப் பயிற்சி பண்ணிக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தாள்.பரத நாட்டிய ஆடைகள் எல்லாம் அம்மாதான் அடுக்கி வைத்திருக்கிறாள். அம்மாவுக்கு முன்னதாகப் போன் பண்ணி நல்ல ஒரு ஆடையைத் தேர்ந்தெடுத்து பெட்டி போட்டு வைக்கச் சொல்ல வேண்டும்.அம்மாவை எண்ணிய போது மனசுக்குள் ஒரு சிறிய நடுக்கம் வந்தது. இப்போது இங்கே நடப்பதை அம்மா தெரிந்து கொண்டால் என்ன சொல்லுவாள்? நிச்சயம் கோபப் படுவாள். “ஏண்டி! நீ பினாங்குக்குப் படிக்கப் போனியா, இல்ல ஆம்பளப் பசங்களோட சுத்திறதுக்குப் போனியா? போயி இன்னும் மூணு மாசம் முழுசா முடியில. அதுக்குள்ள ஒனக்கு போய் ·பிரன்ட் தேவைப் படுதா?” என்று சீறுவாள்.அப்பா அமைதியாக இருப்பார். கோபப் பட்டாலும் சத்தமில்லாமல் பொறுமையாக என்ன விஷயம் என்று கேட்பார். ஆனால் அம்மாவுக்கு அந்தப் பொறுமை இருக்காது. அம்மாவுக்கு இதெல்லாம் கண்டிப்பாகப் பிடிக்காது.தனக்கே கூட இன்னும் சரியாகத் தெரியவில்லை. தானும் கணேசனும் ஏதோ ஒரு வகையில் இந்தப் பல்கலைக் கழகத்தில் ஜோடியாகிவிட்டது தெரிந்தது.

 

       தான் அவனை எந்நேரமும் நினைத்திருப்பது தெரிந்தது. அவனுக்காக ஏங்குவது புரிந்தது. அவன் இல்லாத நேரங்கள் வெறுமையாக இருப்பது தெரிந்தது. அவனை நினைத்த போதெல்லாம் மனதில் ஒரு தண்மையான வெப்பம் பரவுவது சுகமாக இருந்தது.இதுதான் காதல் என்பதா? நான் அவனுக்குக் காதலியா? நான் அவனுக்குக் காதலி என்பதன் அர்த்தம் என்ன? அவனுக்கு நான் என்னைப் பட்டயம் எழுதிக் கொடுத்துவிட்டேனா? ‘என்னை அனுபவித்துக் கொள்’ என்ற லைசன்ஸ் கொடுக்கப் பட்டது போலவா?அவன் எனக்குக் காதலன் என்பதன் அர்த்தம் என்ன? இனி என்னைத் தவிர வேறு பெண்கள் அவனை அணுகக் கூடாது என்ற கட்டுப்பாட்டுக்காகவா? அவன் மகிழ்ச்சியிலும் அவன் துயரத்திலும் தனக்கும் பங்கு என்பதாக இனி ஆகி விடுமா? இந்தப் பெண்ணுக்காகப் பெயர் குறிப்படப்பட்ட ஆணாக அவனும் அந்த ஆணுக்காகப் பெயர் குறிப்பிடப்பட்டுவிட்டப் பெண்ணாகத் தானும்…

 

     இனி வாழ்நாள் முழுவதும்….நினைக்க இன்பமாகவும் இருந்தது. பயமாகவும் இருந்தது. இந்த மாதிரி ஒரு பெரிய முடிவை நானாகச் செய்ய முடியுமா? அப்பாவுக்குச் சொல்லி அனுமதி கேட்க வேண்டாமா? அம்மாவுக்கு விளக்கி அனுமதி கேட்க வேண்டாமா?ஒரு வேளை அவர்கள் அனுமதி மறுத்து விட்டால்? “எந்த மாதிரிக் குடும்பமோ, என்ன எளவோ தெரியில! முன்ன பின்ன தெரியாத அவனோட இனிமே சுத்தாத!” என்று அம்மா தடுத்து விட்டால்…?“ஏம்மா! உனக்கு இவ்வளவு செஞ்சு வச்ச நாங்க, வளத்து, ஆளாக்கி, படிக்க வைச்ச நாங்க, உனக்கொரு நல்ல மாப்பிள்ளயத் தேடி ஒரு நல்ல வாழ்க்கய அமைச்சிக் கொடுக்க மாட்டோமா? ஏன் அவசரப் பட்ற இப்ப?” என்று அப்பா தனக்கே உரிய அமைதியோடும் உறுதியோடும் வழியை அடைத்து விட்டால்…?“சரி அப்பா! அப்படியே ஆகட்டும்!” என்று அப்பாவிடம் சொல்லி விட்டு “மன்னிச்சிக்குங்க கணேசன்! எங்க பெற்றோர்கள் இதை வேண்டாங்கிறாங்க. ஆகவே இதை இப்படியே விட்டிடுவோம்!” என்று சொல்லி விடுதலை பெற்றுக்கொள்ள முடியுமா?இல்லையென்றால் “அது முடியாது அப்பா! நான் அவரையே காதலராகவும் கணவராகவும் ஏத்துக்க முடிவு பண்ணிட்டேன்! உங்களுக்கு விருப்பமில்லன்னா நான் வீட்ட விட்டு வெளியேறிப் போயிட்றேன்!” என்று, கட்டிய துணிகளோடு…. அந்தக் காட்சி வெறுப்பாக இருந்தது.

 

      ஏராளமான காதல் நாவல்களில் காதலனுக்காகப் பெண் சகலத்தையும் துறக்கும் முடிவுகளை அகிலா படித்துப் படுக்கையில் இரவு நேரங்களில் கண்ணீரும் விட்டிருக்கிறாள். ஆனால் தன் இரத்தமும் சதையுமான அப்பாவையும் அம்மாவையும் முன்னால் வைத்துக் கொண்டு தன்னால் அப்படிச் சொல்ல முடியும் என்று தோன்றவில்லை.அப்படி முறித்துக் கொண்டு வர வேண்டிய அவசியம்தான் என்ன? கணேசன் யார்? தன் வாழ்க்கையில் நேற்று முளைத்தவன் அல்லவா? நல்லவனா கெட்டவனா என்பது கூட இன்னும் சரியாகத் தெரியவில்லை. தன் மேல் உண்மையான காதல் வைத்திருக்கிறானா அல்லது ஜெசிக்காவை கூட்டிக் கொண்டு அலைந்தது போல, அவள் சலித்து விட்டதால் புதிய பெண் துணையாகத் தன்னைக் கருதிக் கொண்டிருக்கிறானா என்பதும் தெரியவில்லை. அவன் கண்களில் உண்மை இருப்பது போலத்தான் இருக்கிறது. ஆனால் அது உண்மையா அல்லது காதல் மயக்கத்தில் கிறங்கிப் போனதால் அப்படித் தெரிகிறதா என்றும் அவளால் நிச்சயித்துக்கொள்ள முடியவில்லை.ஆனால் காதலில் நிச்சயங்களைத் தேடி அலைவதில் பொருளில்லை என்றும் அவளுக்குப் பட்டது.

 

     காதலில் உத்தரவாதம் கேட்க முடியுமா? சாயம் போகாத காதலாக இருந்தால்தான் ஏற்றுக் கொள்ளுவேன் என்று கன்டிஷன் போட்டுக் காதலிக்க முடியுமா?கவர்ச்சியாக, அன்பாக இருக்கிறான். ஆனால் வாழ்நாள் முழுக்கத் தனக்கு உறவாகிப் போன அம்மாவையும் அப்பாவையும் விடவா? அவன் காட்டுகிற அன்பு அம்மாவும் அப்பாவும் காட்டுகிற அன்பை விடத் தீவிரமாகத்தான் இருக்கிறது. தனக்கும் அவன் மேல் ஏற்படுகின்ற அன்பு தன் அம்மா அப்பா மீது ஏற்படுகின்ற அன்பை விடத் தீவிரமாகத்தான் இருக்கிறது. என்னதான் பாசமான அம்மா அப்பாவாக இருந்தாலும் அவர்களை இருபத்து நாலு மணி நேரமும் நினைத்துக் கொண்டிருப்பதில்லை. அவர்கள் நினைவு மனதின் ஒரு மூலையில் எப்போதும் ஒரு சிறிய கிராமத்து மூலைக் கோயில் போல ஆரவாரமில்லாமல் இருக்கிறது. ஆனால் கணேசனின் நினைவு இருபத்து நாலு மணி நேரமும் மனசின் முன்னாலேயே இருக்கிறது. ஒரு இனிய தென்றல் போல வீசிக் கொண்டிருக்கிறது.

 

      சாப்பிடும் போதும் குளிக்கும் போதும் தூங்கும் போதும் விரிவுரைகளின் போதும்….இது ஏன் என்று விளங்கவில்லை. எப்படித் தவிர்ப்பது என்று தெரியவில்லை. தென்றலை அடக்கி வைக்க முடியுமா? வீசத் தொடங்கிய பின்னர் “போ போ” என்றால் போய் விடுமா? இது இயற்கையின் நியதியல்லவா? பள்ளம் நோக்கிப் பாய்கின்ற தண்ணீரை நிறுத்த முடியுமா?முடியாதென்றால், இதுதான் இயற்கை நியதி என்றால், அப்புறம் ஏன் இந்தக் குற்ற உணர்வு? அம்மாவிடமும் அப்பாவிடமும் இதனை விளக்கிச் சொன்னால் புரிந்து கொள்ள மாட்டார்களா?“அம்மா நான் பல்கலைக் கழகத்தில ஒருத்தர விரும்புறேன். நீ சரின்னு சொன்னா அவரைக் காதலிக்கிலான்னு பாக்கிறேன்! எனக்கு அனுமதி கொடு!” முடியுமா? வாய் வருமா? இது அசிங்கமான பேச்சு என்று பொருள் வரும்படியாக இல்லாமல் இதைச் சொல்ல முடியுமா?எந்தக் கதையில், எந்தக் காவியத்தில் அம்மா அப்பாவின் அனுமதியுடன் காதல் நடந்திருக்கிறது? கல்யாணத்திற்கு அனுமதி கேட்டு சண்டை போட்ட கதைகள் பல இருக்கின்றன. ஆனால் எந்த நாயகி, எந்த நாயகன் காதலிக்க அனுமதி கேட்டிருக்கிறார்கள்? அனுமதி பெற்றுக் கொண்டு காதலிப்பது காதலாகுமா? காதல் என்பதே ரகசியம்தானே! ரகசியத்தில்தானே காதலின் மகரந்தங்கள் இருக்கின்றன! இல்லாவிடில் இந்த விஷயத்தில் இத்தனை இனிப்பு எப்படி வரும்? மூடப்பட்ட சூடப் பெட்டியாக இருப்பதால்தானே இதில் இத்தனை வாசம் இருக்கிறது? திறந்த, அனுமதிக்கப் பட்ட காதலாக இருந்தால் அது நீர்த்துப் போய்விடாதா?கொஞ்ச நாள் அம்மா அப்பாவிடமிருந்து இதை மறைத்து வைப்பதுதான் நல்லது என அகிலாவுக்குத் தோன்றியது.

 

      எப்படிப் பார்த்தாலும் அவர்களைக் கோபப்படுத்தாமல், வருத்தப் படுத்தாமல், இதை அவர்கள் முன் பேச முடியும் என அவளுக்குத் தோன்றவில்லை. பேசுவதற்கு போதிய தைரியம் வரும் என்றும் தோன்றவில்லை. காதல் உறுதிப் பட்டபின், முகையாக மட்டுமே இப்போது இருக்கின்ற உறவு காயாகிக் கனியும் வரை வளர்ந்தால், அப்போது அம்மா அப்பாவிடம் சொல்லலாம். ஆனால் அப்போது காலம் கடந்து விட்டிருக்கும். அவர்களின் அனுமதியை வேண்டி நிற்கின்ற நிலையில் அது இருக்காது. வெட்டு ஒன்று துண்டு ரெண்டாகத்தான் இருக்கும். அந்த நிலையில் அவர்கள் மறுத்தால் “நான் என் காதலனுடன் போகிறேன்!” என்றுதான் சொல்ல வேண்டியிருக்கும்.ஆனால் அந்த அளவுக்கு இது வளருமா என்றும் தெரியவில்லை. இப்போது அது விளையாட்டாக வளர்ந்து கொண்டிருக்கிறது. பேச்சும் கொண்டாட்டமும் நண்பர்களின் கேலியும் சிரிப்பும் என அது கட்டுப்பாட்டுக்கு அடங்காமல் வளர்ந்து கொண்டிருக்கிறது. அதில் ஒரு ஆழம் இல்லாமல் இருக்கிறது.அடுத்த முறை கணேசனோடு தனியாக இருக்கும் வேளை வந்தால் இந்தக் காதலைப் பற்றி ஆழமாகப் பேசவேண்டும் என்று அகிலா முடிவு செய்து கொண்டாள். அந்த சந்தர்ப்பம் வந்தது.இந்தியக் கலைநிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவின் கூட்டத்திற்கு அகிலா அன்று போயிருந்தாள். என்னென்ன அங்கங்கள் என்பது பற்றியும் டிக்கட்டுகள் விநியோகம் பற்றியும் பேசினார்கள்.

 

       கூட்டம் முடிந்து வெளியே வந்த போது கணேசன் சொன்னான்: “நாளைக்கு நீ என்னோட கண்டிப்பா சாப்பிட வரணும்!”“ஏன் அப்படி கண்டிப்பா வரணும்?”“ஏன்னா என்னோட பிறந்த நாள்!”“அப்படியா? வாழ்த்துக்கள். யாராரெல்லாம் வாராங்க நம்ம கூட?” என்று கேட்டாள்.“இனிமே கூட்டத்த சேர்த்துக்கிட்டுச் சாப்பிடப் போறதில எனக்கு அவ்வளவு ஆசையில்ல அகிலா! இந்தப் பிறந்த நாள உன்னோட மட்டும் தனியாக் கொண்டாடணும்!” என்றான்.அவன் கண்களை கூர்ந்து பார்த்துவிட்டு புன்னகையோடு “சரி!” என்றாள்.அவ்வளவு பகட்டான இடத்துக்கு அவன் அவளை அழைத்து வருவான் என அவள் எதிர்பார்க்கவில்லை. புக்கிட் ஜம்போல் கோல்·ப் திடலை அடுத்துள்ள ஆடம்பர ஹோட்டலான இக்குவிடோரியல் ஹோட்டலின் கோ·பி ஹவுஸில் நுழைந்த போது அவள் அசந்து போனாள்.அலங்காரத்துக்காக வைக்கப் பட்டிருந்த மங்கிய விளக்கு எரியும் மேஜைகளில், மற்றவர்கள் தொந்திரவு இல்லாத ஒரு மூலையில் அவர்கள் சென்று உட்கார்ந்த பிறகு அகிலா கேட்டாள்: “ஏன் இத்தனை விலையுயர்ந்த இடத்துக்கு கூப்பிட்டு வந்திங்க கணேஷ்? இது பணக்காரங்க காசைக் கரியாக்கிற இடமில்லையா?”அன்று அவள் அழகான பஞ்சாபி உடை ஒன்றினை எடுத்து அணிந்து கொண்டிருந்தாள். அவனுக்கு இது பிடிக்குமா, இது பிடிக்குமா என்று தனக்குள் கேட்டுக் கொண்டு தேடித் தேடி எடுத்த உடை. ஏனோ அவனை சந்தோஷப் படுத்த வேண்டும் என்ற எண்ணம் தீவிரமாக இருந்தது. தனது நீல நிற பஞ்சாபி ஆடைக்கேற்ப ஒரு மெல்லிய நீலத்தில் துப்பட்டாவும் அணிந்து கொண்டிருந்தாள்.

 

        நெற்றியில் அதே நீல வண்ணத்தில் ஸ்டிக்கர் பொட்டு இட்டிருந்தாள். தலை முடியை அழுந்த வாரிக் கட்டியிருந்தாள். அவனுக்காக, அவனுக்காகவென்றே கண்ணில் இலேசாக மை தீட்டியிருந்தாள்.அவன் பார்த்த அந்த ஆசைப் பார்வையில் அந்த உடையலங்காரத்தை அவன் அங்கீகரித்தான் என்றே தோன்றியது. அவள் கேள்விக்கு பதில் சொல்லாமல் “இன்னைக்கு நீ ரொம்ப அழகா இருக்க அகிலா!” என்றான்.அவளுக்கு அது சங்கீதமாக இருந்தது. அவனும் அன்று எடுப்பாகத்தான் உடுத்திக் கொண்டு வந்திருந்தான். என்றும் போல் ஜீன்ஸ் டீ சட்டை என்றில்லாமல் ஒரு உயர்ந்த பிரேன்ட் சின்னம் பாக்கெட்டில் பதித்திருந்த சில்க் போன்ற துணியில் முழுக்கை சட்டை அணிந்திருந்தான்.“ரொம்ப நன்றி. உங்களுடைய பிறந்த நாளாச்சே, உங்களுக்கு சந்தோஷமா இருக்கட்டுமேன்னுதான் இப்படி உடுத்தி வந்தேன். சந்தோஷம்தானே?”“நான் வானத்தில பறக்கிறேன்னு என்னைப் பார்த்தா தெரியல?”“தெரியுது! கொஞ்சம் இறங்கி வந்து பதில் சொல்லுங்க. ஒரு பல்கலைக் கழக மாணவர் இப்படி வந்து ஹோட்டல்ல காச வீணாக்கலாமா? அவ்வளவு பணக்கார வீட்டுப் பிள்ளையா நீங்க?”சர்வர் வந்து நின்றார்.

 

      மெனுவை வாங்கிப் பார்த்தார்கள். விலைகளைப் பார்த்ததும் அகிலாவுக்கு திக்கென்றது. அவள் இம்மாதிரியான இடத்திற்கு வந்து சாப்பிட்டதே இல்லை. இந்த மாதிரி விலைகளை இதற்கு முன் கண்டதும் இல்லை. எந்த உணவையும் வேண்டும் என்று சொல்ல அவளுக்கு பயமாக இருந்தது. கணேசன்தான் வற்புறுத்தி அதைச் சாப்பிடு இதைச் சாப்பிடு என்று ஆர்டர் கொடுத்தான்.சர்வர் போனபின் கணேசன் சொன்னான்: “இன்னைக்கு இந்தப் பிறந்த நாள முதல் முதல்ல உன்னோடு சேர்ந்து கொண்டாட்றேன் இல்லியா அகிலா! அதினால அது ஸ்பெஷலா இருக்கணும்னு நெனச்சேன். நீயும் நானும் என்னைக்கும் நெனைச்சுப் பார்த்து மகிழக் கூடியதா இருக்கணும்னு நெனச்சேன். அதினாலதான் இந்த இடம்.”“நீங்க அன்றைக்கு வாங்கிக் கொடுத்த மீ கோரேங், ரோஜாக் கூட நான் நெனப்பில வச்சிருக்கேன். அதுக்காக இவ்வளவு காசு செலவு பண்ணனுமா? உங்க பெற்றோர்கள் ரொம்ப பணக்காரங்க இருப்பாங்க போல இருக்கே!” என்றாள்.“என் பெற்றோர்கள் ரொம்ப ஏழைகள் அகிலா! தோட்டத்து வாழ்க்கையிலேயே இன்னைக்கும் கிடந்து குடியும் கூழுமா அவதிப் பட்றாங்க. ஆனா எனக்கு ஒரு அத்தை இருக்காங்க, அட்சய பாத்திரம் மாதிரி…”அன்று இரவில் ஏராளமாக அவர்களுடைய வாழ்க்கைக் கதைகள் பரிமாறிக் கொள்ளப் பட்டன.

 

      தன் வாழ்க்கையும் அவனுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காக தன் பெற்றோர்களைப் பற்றியும் குடும்பத்தைப் பற்றியும் அனைத்தையும் கூறினாள் அகிலா. சுவையான உணவுகளூடே அந்தரங்க வாழ்க்கைகள் பரிமாறப் பரிமாற அவர்களிடையே அந்நியோன்யம் வளர்ந்து கொண்டிருந்தது.அவன் பேச்சு அவளுக்குப் பிடித்திருந்தது. அவளுக்கு எது எது விருப்பம், என்ன பாட்டு பிடிக்கும், என்ன உடை பிடிக்கும், எந்தத் தோழி உயிர்த்தோழி என்றெல்லாம் அவன் அக்கறையோடு கேட்டுக் கேட்டுத் தெரிந்து கொள்வது அவளுக்குப் பிடித்திருந்தது. ஒவ்வொன்றுக்கும் பதிலாக தனக்கு என்ன பிடிக்கும் என்ற தகவலை அவன் பரிமாறிக் கொண்ட போது பல அவளுடைய விருப்பங்களுக்கு ஒத்திருப்பது அவளுக்குப் பிடித்திருந்தது. ஐஸ்கிரீம் முடியும் வரை பேசிக் கொண்டிருந்தார்கள்.சாப்பாடு முடிந்ததும் கிட்டத்தட்ட அறுபது வெள்ளியைக் கொடுத்து விட்டு அவர்கள் வெளியே வந்தார்கள். அவன் மோட்டார் சைக்கிளின் பின்னால் ஏறி அமர்ந்து அணுக்கமாக அணைத்துக் கொண்டாள். கேம்பசுக்குத் திரும்பினார்கள். யாராவது பார்த்து விடுவார்களே என்ற அச்சம் பல நாட்களுக்கு முன்பே அவளுக்கு நீங்கி விட்டிருந்தது.

 

       “கொஞ்ச நேரம் வி.சி. ரோக் பக்கம் போய்உக்காந்திருப்போமா, அகிலா?” என்று கேட்டான்.“சரி!” என்றாள். அந்த இரவு குளுகுளு வென்றிருந்தது. இந்தக் காதலனின் அணைப்பு வெது வெதுப்பாக இருந்தது.வி.சி. பாறை மாணவர் விவகாரப் பிரிவுக்கு முன்னால் இருந்தது. துணை வேந்தரின் பழைய அலுவலகம் அங்கு அமைந்திருந்ததால் அந்த இடத்தை துணை வேந்தர் பாறை என்று மாணவர்கள் அழைக்க அதுவே நிலைத்து விட்டது. மாணவ காதல் ஜோடிகள் இரவில் உட்கார்ந்து பேச வசதியான இடம்.மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு இறங்கி நடந்தார்கள். அகிலா தலை முடியை இறுகப் பிடித்திருந்த ரிப்பனை அவிழ்த்து விட்டு முடியை கழுத்திலும் தோளிலும் படரவிட்டாள். அவர்களிடையே எல்லா இறுக்கங்களும் தளர்ந்திருந்தன.வி.சி. பாறையிலிருந்து பார்த்தால் கடல் பரப்பும் பினாங்குப் பாலமும் தெரியும். பினாங்குத் தீவின் கரையில் ஒரு தென்னந் தோப்பும் தெரியும். அன்று அந்தத் தென்னந்தோப்பின் மேலாக ஒரு பிரகாசமான நிலா வானத்தில் தொங்கிக் கொண்டிருந்தது.

 

      பினாங்குப் பாலம் முழுவதும் விளக்குகள் எரிந்து ஒளிமிக்கக் கற்கள் பதித்த தங்கச் சங்கிலி போல இருந்தது. உறுதியான அந்தப் பாலத்தின் மென்மையான அசையும் பிம்பம் கடலில் பிரதிபலித்துக் கொண்டிருந்தது.தூரத்தில் அக்கரையில் பட்டர் வொர்த் கப்பல் துறையில் உயர்ந்த கிரேன்கள் தெரிந்தன. துறையை ஒட்டியும் அருகில் கடலிலும் பல பெரிய சரக்குக் கப்பல்கள் கம்பீரமாக நின்றிருந்தன. இரும்பும் எ·குமாக செய்யப்பட்ட அந்தக் கப்பல்களின் மீதெல்லாம் சந்திர ஒளி உருகி வழிந்து அவற்றின் முரட்டுத் தனங்களை மென்மைப் படுத்திக் கொண்டிருந்தது.அந்த இரவுப் பொழுதும் வானமும் கடலும் சந்திரனும் தங்கள் இருவருக்காகவும்தான் படைக்கப் பட்டிருக்கின்றன என அகிலா நினைத்துக் கொண்டாள். இந்த அனுபவம் மிக மிகப் புதியதாக இருந்தது. இதை அவள் புத்தகங்களில் படித்திருக்கிறாள். அப்போது இந்த அனுபவங்களுக்காக அவள் ஏங்கியதுண்டு. இப்போது அது இங்கே நிகழும் போது ஒரு இனிய கனவு கண்டு விழித்த போது அது கனவல்ல உண்மை என்று தெரிந்து கொண்டது போல் இதயம் மகிழ்ச்சியில் தளும்பிக் கொண்டிருந்தது.அவன் அவள் கையை அழுத்திப் பிடித்துக் கொண்டு வழி நடத்தினான். அவள் விருப்பத்தோடு அவனை ஒட்டிக் கொண்டு நடந்தாள். இவன் தனக்குத் தலைமையேற்று வழி நடத்தத் தக்க நல்ல ஆண்மகன்தான் என்ற கருத்து அவள் உள்ளத்தில் உறுதிப் பட்டுக் கொண்டிருந்தது.அவர்கள் வசதியான ஒரு புல் மேட்டில் உட்கார்ந்தார்கள். அவன் அவள் தோள்களைத் தழுவியிருந்தான். அவள் துப்பட்டாவினய் ஓரங்கள் அவன் அணைப்பில் கொஞ்சம் நசுக்கின. முகம் திருப்பி முத்தம் கொடுக்க வந்தான். கொஞ்சமாக இதழைக் கொடுத்துப் பின் வாங்கிக் கொண்டாள். இது வேண்டும் என்றும் இது குற்றம் என்றும் மனது மாறி மாறிச் சொல்லிக் கொண்டிருந்தது.அந்த வேளையில் அன்று இரவு முழுவதும் குறுகுறுத்துக் கொண்டிருந்த அந்தக் கேள்வி முட்டி மோதிக் கொண்டு வெளிப்பட்டது: “உங்க குடும்பத்தில எல்லாரையும் பத்திச் சொன்னிங்க! ஆனா ஒருத்தர் பத்தி மட்டும் சொல்லலியே!”“யாரப் பத்தி சொல்லலே?”“அதான், உங்க அத்த மக, மல்லிகா!”“ஓ மல்லிகாவா?” கொஞ்சம் யோசித்துச் சொன்னான். “அவ சின்னப் பிள்ளை. வயசு ஆயிடுச்சே தவிர ஒண்ணும் தெரியாத வெகுளி! அவ எனக்குத் தங்கச்சி மாதிரி!”

 

       வளாகத்தில் முதல் பருவப் பரிட்சைக் காய்ச்சல் தணிந்து விடுமுறைக்கு வீடு திரும்பும் காய்ச்சல் அனைவரையும் பிடித்துக் கொண்டிருந்தது. குறிப்பாக முதலாண்டு மாணவர்கள் வீடு திரும்பத் துடித்துக் கொண்டிருந்தார்கள். வீடு, குடும்பம், பழைய பள்ளி மாணவர்கள், அம்மாவின் சமையல் என்ற எண்ணங்கள் இன்னும் பலமாக ஒட்டிக் கொண்டிருப்பது அவர்களிடையேதான். இரண்டாமாண்டில் இந்தத் தீவிரம் கொஞ்சம் தணியும். மூன்றாம் ஆண்டில் வீட்டுப் பாசம் ரொம்பத் தணிந்துவிடும். விடுமுறையில் பயிற்சிக்குச் செல்ல வேண்டும், புரோஜெக்ட் செய்ய வேண்டும் என்று பல மாணவர்கள் வளாகத்திலேயே தங்கி விடுவதும் உண்டு.இந்த முதல் பருவத்தின் கடைசி வாரங்கள் எக்கச்சக்கமான நெருக்குதல் மிக்க வாரங்களாக இருந்தன. முதலில் இந்தியக் கலாச்சார சங்கத்தின் மாணவர்கள் கலை விழா அவளை இடுப்பை முறித்தது. பரத நாட்டியம் ஆடுவது என்பது பெரிதாக இருக்கவில்லை. ஆனால் கலை விழாவிற்கு டிக்கெட்டுகளை அலைந்து விற்க வேண்டியிருந்தது. அவர்கள் தயாரித்த நினைவு மலருக்கு விளம்பரங்கள் தேடி அலைய வேண்டியிருந்தது. ஆனால் எல்லாவற்றையும் கணேசனின் துணையோடு செய்தது ஆறுதலாக இருந்தது.கலை விழாவுக்கு அரங்கம் நிறைந்த கூட்டம் வந்திருந்தது. மாண்பு மிகு அமைச்சர் டத்தோ ஸ்ரீ சாமிவேலு வந்து தலைமை உரையாற்றினார்.

 

      மாணவர் விவகாரங்களுக்கான உதவித் துணை வேந்தர் டத்தோ சலீம் வந்திருந்து வாழ்த்துரையாற்றினார். மாணவர் உபகாரச் சம்பள நிதிக்கு பத்தாயிரம் வெள்ளி திரண்டது. அமைச்சர் மேலும் பத்தாயிரம் வெள்ளி தருவதாக அறிவித்தார். நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாக்கி வந்திருந்த குளுகோர் வட்டாரத்து இளைஞர்கள் ஆரவாரமாகக் கைதட்டிச் சீட்டியடித்து நிகழ்ச்சியைக் கலகலப்பாக்கிக் கொண்டிருந்தார்கள்.ஏற்பாட்டுக் குழுவின் மாணவர்கள் சீருடை போல பெரிய பூப்போட்ட பாத்தேக் முழுக்கை சட்டை அணிந்திருந்தார்கள். மாணவிகள் அனைவரும் தழையத் தழைய சேலை கட்டியிருந்தார்கள். அரங்கின் முன்னால் பெரிய குத்து விளக்கு ஏற்றி வைத்து வண்ண அரிசி மாவில் கோலமும் போட்டிருந்தார்கள். அந்த சையட் புத்ரா அரங்கு அன்று தோரணமும் மாவிலையும் கட்டப்பட்டு முழுக்க முழுக்க ஒரு உற்சாகமான இந்தியச் சூழ்நிலையில் இருந்தது.கலை நிகழ்ச்சி முடிந்து மாணவர்கள் வெளியே வந்த போது பேராசிரியர் முருகேசுவை தற்செயலாகச் சந்தித்தாள் அகிலா.“ரொம்ப அருமையா இருந்ததம்மா உன் நாட்டியம். இந்த மாணவர்கள் டப்பாங்குத்து ஆட்ற வேகத்தில நம்ப கலைகளையே மறந்து போயிடுவாங்ளோன்னு பயந்திருந்தேன். உன்னைப் போல பரத நாட்டியத்தை முறையா தெரிஞ்சிக்கிட்டு ஆட்றவங்களப் பாக்கும் போதுதான் ஆறுதலா இருக்கு” என்றார். அவருக்கு வெட்கத்துடன் நன்றி சொன்னாள். “அப்பாவ விசாரிச்சேன்னு சொல்லு!” என்று சொல்லி அவர் போய்விட்டார்.கலை நிகழ்ச்சியால் தேங்கிப் போய்க்கிடந்த எசைன்மென்ட் வேலைகளை முடிக்க இரவும் பகலுமாத உழைக்க வேண்டியிருந்தது. அப்புறம் பரிட்சைகளுக்குத் தயார் செய்ய வேண்டியிருந்தது. நாட்கள் குடைராட்டினம் போல சுழன்றன. கடைசித் தாள் முடிந்த போது ஏற்பட்ட விடுதலை உணர்வுக்கு இணையே இல்லை.அகிலா வீட்டுக்குத் திரும்புவதை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் கணேசனை விட்டு இன்னும் ஒரு ஐந்தாறு வாரங்களுக்குப் பிரிந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் வருத்தமாக இருந்தது. கணேசனும் வீடு திரும்புவதற்கு ஆயத்தமாக இருந்தான்.

 

       “ஒரு ரெண்டு வாரம் இருந்திட்டுத் திரும்பிடுவேன் அகிலா! எனக்குப் புரோஜெக்ட் வேலைகள் இருக்கு. அதோடு ஐசெக் வேலைகளும் இருக்கு. ஆகவே கேம்பஸ்ல இருந்தாதான் அதெல்லாம் நடக்கும்!” என்றான்.தானும் இரண்டு வாரம் தங்கித் திரும்பி விடலாமா என நினைத்தாள். ஆனால் பெற்றோர்கள் பெரும் வேதனை அடைவார்கள் என்று எண்ணினாள். அவளுக்காக நல்ல உணவாக சமைத்துப் போட அம்மா காத்திருக்கிறாள் என்பதை தொலைபேசியில் வீட்டுக்குப் பேசும் போதெல்லாம் அம்மா சொல்லிக் கொண்டிருந்தாள். “அங்கெல்லாம் என்ன குப்பை மலாய்க்கார சாப்பாட்டையும் சீனன் சாப்பாட்டையும் சாப்பிட்றியோ தெரியில. வந்து வீட்டில உக்காந்து ஒளுங்கா சாப்பிடு.”வீட்டின் ஈர்ப்பு தீவிரமாக இருந்தது. வீட்டின் சுகம் தனி. தன் அறையின், தன் கட்டிலின், தன் தலையணையின் சுகம் தனி. அந்த வாசனைகள் இன்னும் மறக்கவில்லை. தம்பியுடன் அடித்துப் பிடித்து விளையாடும் சுகம் தனி. பள்ளித் தோழிகளைக் கூப்பிட்டு வைத்துக் கொண்டு அரட்டை அடிக்கும் சுகம் தனி. அவை இல்லாமல் போன இந்தப் பல்கலைக் கழக நாட்களில் அவற்றை எண்ண எண்ண ஏக்கம் பெருகியது.

 

       மாதம் ஒரு முறை பஸ் ஏறி வீட்டுக்குப் போய்விடும் தனக்கே இப்படி என்றால் தூர தூரப் பகுதிகளிலிருந்து வந்து, அடிக்கடி வீடு திரும்ப முடியாத மாணவர்களின் ஏக்கம் எப்படியிருக்கும் என்பதை அகிலாவால் புரிந்து கொள்ள முடிந்தது. குறிப்பாக மலாய் மாணவர்களுக்குக் கம்பத்தின் பிடிப்பு மிக அதிகம். கூடும் போதெல்லாம் தங்கள் கம்பங்களைப் பற்றிய கதைகளையே ஏக்கத்தோடு பேசிக் கொண்டிருப்பதை அவள் கவனித்திருக்கிறாள்.இந்த மூன்று மாதங்களில் அவளுக்கு நெருங்கிய தோழியாகிவிட்ட மாலதியும் ஜோகூரில் உள்ள தன் ஊருக்குத் திரும்பத் தயாராகிக் கொண்டிருந்தாள். இருவரும் வீட்டுத் தொலை பேசி எண்களைப் பரிமாறிக் கொண்டார்கள். இரண்டு நாட்களுக்கு முன்னரே பரிட்சை முடிந்து பயணமான மாலதியை வழியனுப்பி வைக்க அகிலாவோடு கணேசனும் வந்திருந்தான். மாலதி பஸ் புறப்படும் நேரத்தில் அகிலாவிடம் கண்ணடித்து கணேசனைக் காட்டி “எல்லாம் எனக்குத் தெரியும்! ஆள விட்டுடாத. பத்திரமா முடிச்சி போட்டு வச்சிக்க!” என்று சொல்லிப் போனாள். அது அகிலாவுக்கு வெட்கங் கலந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது.அகிலா வீட்டுக்குப் புறப்பட்ட அன்று கணேசன் அவளை பஸ் ஏற்றிவிட வந்திருந்தான். தனது பேக்கைத் தூக்கிக் கொண்டு அவனுடைய மோட்டார் சைக்கிள் பின்னால் உட்கார்ந்துதான் குளுகோரில் பஸ் நிற்குமிடத்திற்கு வந்தாள். பஸ்ஸில் அவளுடைய பேக்கைத் தூக்கி வைத்து இருக்கை எண் தேடி அவளை உட்கார வைத்தான்.“இனி இந்த அஞ்சாறு வாரம் எப்படிப் போகும்னு எனக்குக் கவலையா இருக்கு அகிலா!” என்றான்.“ஏன், உங்களுக்குத்தான் நிறைய வேலை இருக்குன்னு சொன்னிங்கள! அதோட ஐசெக் வேலைகளுக்காக ஜெசிக்கா உங்க கூடவே இருக்கப் போறா! உங்களுக்குப் பொழுது நல்லாப் போயிடும்!” என்றாள் ஒரு குறும்பான சிரிப்புடன்.

 

 

        “பாத்தியா! இது பெண்களுக்கே உள்ள சந்தேகம் போல இருக்கு! நான் எவ்வளவு சொன்னாலும் இனிமே என் மேல உனக்கு நம்பிக்கை ஏற்படாது! ஆனா உனக்கு ஒரு சந்தோஷமான விஷயம் சொல்றேன் அகிலா! ஜெசிக்காவுக்கு ஒரு புதிய போய் ·பிரன்ட் கிடைச்சிட்ட மாதிரிதான் இருக்கு!” என்றான்.“யாரது?”“சுதாகரன்! என்னோட மேனேஜ்மென்டில இருக்கார். அவங்க ரெண்டு பேரும் மாணவர் பேரவையிலும் இருக்காங்க. முன்பே பழக்கம். இப்ப நெருக்கம்!”நல்லதுதான் என அகிலா நினைத்தாள். பஸ் புறப்பட்ட சமயத்தில் “அடிக்கடி ·போன் பண்ணுங்க!” என்று வலியுறுத்திச் சொல்லி விட்டு கை காட்டிப் போனாள். பஸ் பினாங்கு பாலத்தைக் கடக்கையிலேயே கணேசனைப் பிரிந்திருக்கப் போகிறோம் என்ற ஏக்கம் அவளைப் பற்றிக் கொண்டது. வீட்டுக்குப் போனதிலிருந்தே அவனுடைய தொலைபேசி அழைப்புக்களுக்கு அவள் ஏங்கிக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு முறையும் ·போன் மணி அடித்த போது அவனாக இருக்கக் கூடாதா என்று எதிர் பார்த்தாள். அவள் வீடு சேர்ந்த இரண்டாம் நாள் அவன் கூப்பிட்டான். தம்பிதான் அவளை முந்திக் கொண்டு போய் எடுத்து யார் எவர் என்று முழுமையாக விசாரித்து விட்டு “யாரோ ஒன்னோட யுனிவர்சிட்டி ·பிரண்டாம்!” என்று அவளிடம் தந்தான்.“எனக்கு கோல் வந்தா நீ ஏன் பேரையெல்லாம் விசாரிக்கிற?” என்று அவனிடம் சண்டை பிடித்து விட்டு தணிந்த குரலில் பேசினாள்.

 

      தம்பி கொஞ்சம் தூரத்தில் உட்கார்ந்து கொண்டு அவள் டெலி·போனுக்குள் கொஞ்சுகின்ற அழகை வேறு வேலை இல்லாமல் கவனித்துக் கொண்டிருந்தான்.மாலதி ஒரு முறை ஜோகூரிலிருந்து கூப்பிட்டுப் பேசினாள். பல்கலைக் கழகத்தில் இருந்த போதெல்லாம் வீட்டு நினைப்பாக இருந்தது போல வீட்டுக்கு வந்த பின் பல்கலைக் கழக நினைவாக இருக்கிறதென்றாள். தனக்கும் அப்படித்தான் இருக்கிறதென்றாள் அகிலா. “பல்கலைக் கழக நெனைப்பா அல்லது கணேசன் நினைப்பா?” என்று மாலதி கேட்டது கிளர்ச்சியூட்டுதாக இருந்தது.கணேசன் அந்த வாரம் அவளை மூன்று முறை தொலைபேசியில் கூப்பிட்டு விட்டான். இரண்டு முறை பினாங்கிலிருந்து! மூன்றாம் முறை தான் கிள்ளானில் அத்தை வீட்டிலிருந்து பேசுவதாகக் கூறினான்.“எப்படி இருக்காங்க உங்க அத்த மக?” என்று கேட்டாள் அகிலா.“அதுக்கென்ன. நல்லா சாப்பிட்டுட்டு குண்டாதான் இருக்குது!” என்றான். அப்புறம் அர்த்தமில்லாத சில்லறைக் கதைகள் நெடு நேரம் பேசினார்கள். பொழுது போகமாட்டேனென்கிறது, போரடிக்கிறது என்று பரிமாறிக் கொண்டார்கள். விஷயமில்லாத இனிப்புப் பேச்சில் இருபது நிமிடங்கள் முதல் அரை மணி நேரம் வரை அவர்களால் பேச முடிந்தது.அகிலா நீண்ட நேரம் ·

 

      போனில் பேசுவதை அம்மா கொஞ்சம் உற்றுப் பார்த்தாள். மகள் சாப்பாடு உட்பட எந்த விஷயத்திலும் உற்சாகமில்லாமல் டெலி·போனையே எதிர் பார்த்துக் கொண்டிருப்பது அவளுக்கு சந்தேகத்தை விளைவித்தது.மகனைக் கூப்பிட்டு “அக்கா யாரோட பேசுது?” என்று கேட்டாள்.“தெரிலம்மா! யாரோ அவங்க யுனிவர்சிட்டி ·பிரண்டாம்!”“ஆம்பிளயா பொம்பளயா?”“ஆம்பிள!”“பேரென்ன?”“தெரியில! எனக்குக் கோல் வந்தா நீ ஏன் அதையெல்லாம் கேக்கிறன்னு அக்கா என்னப் பிடிச்சி ஏசுது!” என்றான்.சாப்பிடும் போது அம்மா அந்தப் பேச்சை எடுத்தாள். “யாரோடம்மா அவ்வளவு நேரம் பேசிக்கிட்டிருக்க?”அகிலா தயங்கிச் சொன்னாள்: “என் கூட படிக்கிற ·பிரண்டம்மா!”“பொம்பிள பிள்ளயா?”“இல்ல. பையன்தான். ஏன் பேசக் கூடாதா?”“பேசலாம். என்னா எப்படி சௌரியமான்னு கேட்டா போதாதா? என்ன அவ்வளவு நீளமா பேச வேண்டியிருக்குது?”அப்பா குறுக்கிட்டார். “அது என்ன வனஜா நீ இத்தனை குறுக்கு விசாரணை பண்ற? ஒண்ணாப் படிக்கிறவங்க, பாடத்த பத்தி எவ்வளவோ பேசுவாங்க!”அம்மா முகத்தைக் கொஞ்சம் கடுமையாக வைத்துக் கொண்டு அமைதியாகச் சாப்பிட்டாள். அகிலா மௌனமாக இருந்தாள். தான் எதிர்பார்த்ததை விட வேகமாக இந்த விஷயம் சபைக்கு வரப் போகிறது என அவளுக்குத் தோன்றியது.

 

      அன்று இரவு அவள் அறைக்குள் படுத்துப் படித்துக் கொண்டிருந்த போது அப்பாவின் அறையிலிருந்து அம்மாவும் அப்பாவும் ஏதோ விவாதம் செய்வது இலேசாகக் கேட்டது. என்னவென்று புரியவில்லை. புத்தகத்திலும் மனம் ஒட்டாமல் கணேசன் இப்போது என்ன செய்து கொண்டிருப்பான் என்ற எண்ணத்துடன் கண்களை மட்டும் மேயவிட்டுக் கொண்டிருந்தாள்.சற்று நேரத்தில் அம்மா தன் அறைக் கதவைத் தட்டித் திறந்தாள். “அகிலா இப்படி வா கொஞ்ச நேரம்!” என்று கூப்பிட்டாள். அகிலா வெளியே வந்தாள்.அப்பா வரவேற்பறையில் உட்கார்ந்திருந்தார். அகிலா அவருக்கு எதிரே போய் உட்கார்ந்தாள். அப்பா சிரித்தவாறே பேசினார்.“இல்லம்மா, ஏதோ ஒரு பையனோட டெலி·போன்ல ரொம்ப நேரம் பேசிக்கிட்டே இருக்கன்னு உங்க அம்மா சொல்லுது. அது என்ன விஷயம்னு கேட்டுத் தெரிஞ்சிக்காம அதுக்குத் தூக்கம் வர மாட்டேங்குது. அது கேட்டா நீ சரியா பதில் சொல்ல மாட்டேங்கிறியாம். அதுக்காகத்தான் என்னையும் இதில இழுத்து விட்றிச்சி உங்கம்மா!”அகிலா கொஞ்ச நேரம் மௌனமாக இருந்து சொன்னாள். “யுஎஸ்எம்-ல மூன்றாம் ஆண்டு நிர்வாகப் படிப்பு படிக்கிற மாணவர் அப்பா. ரேகிங் சமயத்தில என்னக் காப்பாத்தி அதுக்கப்புறம் விசாரணையில மாட்டி விடுதலையானாருன்னு முன்னமே உங்ககிட்ட சொல்லியிருக்கேனே, அவருதான். கணேசன்னு பேரு!” என்றாள்.“அந்தப் பையன் ஏன் இத்தன தடவ உனக்குப் ·போன் பண்ணனும்?” அம்மா கோபமாகக் கேட்டாள்.“அதுக்கப்புறம் நாங்க நல்ல கூட்டாளிகளாயிட்டோம். அந்த நட்பிலதான் ·

 

        போன் பண்றாரு!”“கூட்டாளின்னா என்ன அர்த்தம்? ஏன் அந்த யுனிவர்சிட்டியில ஒனக்குப் பொம்பிள கூட்டாளிகள் கெடைக்கலியா?”“இருக்காங்கம்மா. அவங்களும்தான் கூப்பிட்டுப் பேசிறாங்க! இதுல என்ன குத்தம்னு நீ இப்படிக் கேள்வியெல்லாம் கேக்கிற?”“நீ இப்படி ஆம்பிள பசங்களோட சுத்திறதுக்குத்தான் நாங்க உன்னக் கொண்டி யுனிவர்சிட்டியில விட்டமா?” அம்மா பொரிந்தாள். இந்தக் கேள்வி வரும் என்பது ஏற்கனவே அகிலா ஊகித்து வைத்திருந்ததுதான். ஆனால் இப்படி சீறிக் கொண்டு வந்த போது அதிர்ச்சியாகத்தான் இருந்தது.தான் கணேசனோடு மோட்டார் சைக்கிளில் ஏறி சுற்றியது அம்மாவுக்குத் தெரிய வழியில்லைதான். ஆனால் தொலைபேசி அழைப்புகளை அடிப்படையாக வைத்தே பல்கலைக் கழகத்தில் என்னவெல்லாம் நடக்குமென்று சரியாகத்தான் ஊகித்திருக்கிறாள். அவளை மறுத்துப் பேச அகிலாவால் முடியவில்லை.“இதுக்கு ஏன் இப்படி கோவமாப் பேசிற வனஜா? அமைதியா கேட்டுத் தெரிஞ்சிக்க வேண்டியதுதானே! அவ இன்னும் என்ன சின்னப் பிள்ளயா? நல்லது கெட்டது தெரிஞ்ச பிள்ளதானே!” என்றார் அப்பா. அகிலா அப்பாவை நன்றியோடு பார்த்தாள்.“ஆண்களும் பெண்களும் கலந்து படிக்கிற இடத்தில கலந்துதான் பழக வேண்டியிருக்கு. இதை எப்படித் தடுக்கிறதின்னு தெரியில. ஏன் தடுக்கணும்னும் தெரியில! அங்க எல்லாரும் சின்னப் பிள்ளைகளா தடுத்து வைக்கிறதுக்கு?” என்றாள் அகிலா.

 

        அம்மா சுருதி இறங்கிப் பேசினாள். “நீ சின்னப் பிள்ள இல்லம்மா! அது எனக்குத் தெரியுது. ஆனா என்ன இருந்தாலும் பெண் பிள்ள இல்லியா? அதிகமா ஆம்பிளைகள் இருக்கிற எடத்தில ரொம்ப ஜாக்கிரதையா ஒரு கட்டுப்பாட்டோடதான் இருக்கணும். ஒரு ஆம்பிளயோட நீ சுத்தித் திரியிறது நாளைக்கு எல்லாருக்கும் தெரிய வந்திச்சின்னா அப்புறம் பேர் கெட்டுப் போகும். அப்புறம் என்ன படிச்சி என்ன உத்தியோகம் பார்த்து என்ன பிரயோஜனம்? ஒரு நல்ல இடத்தில கல்யாணம் அமையுமா? எத்தனை கல்யாணத்தில இந்தப் பிரச்சினைகள் வந்திருக்கிறத நான் பாத்திருக்கிறேன்!”அம்மாவுக்குத் தன் படிப்பையும் உத்தியோகத்தையும் விட தனது கல்யாணம்தான் பெரிதாக இருந்தது. அவள் உலகத்தில் கல்யாணம் குடும்பம் என்பதே தலையாய விஷயங்கள். அம்மா எந்தக் காலத்திலும் வெளியே போய் வேலை செய்ததில்லை. அவளுக்குத் தெரிந்த அவள் பாராட்டுகிற உலகம் இந்தக் குடும்பம்தான்.“கல்யாணத்தப் பத்தி எல்லாம் இப்ப ஏம்மா பேசணும்! படிப்பே இப்பதான ஆரம்பிச்சிருக்கு?”“கல்யாணம் அவசரம்னு நான் சொல்லல! ஆனா அது நடக்க வேண்டிய காலம் வரும் போது இதெல்லாம் ஒரு முட்டுக் கட்டையா வரதுக்கு இடங் கொடுக்கக் கூடாதேன்னுதான் அப்படிச் சொல்றேன் அகிலா!”அப்பா பேசினார்:

 

        “அகிலா! அம்மா கொஞ்சம் பழைய காலத்து ஆளு. ஆனாலும் அது சொல்றதில நெறய உண்மை இருக்கம்மா. பல்கலைக் கழகத்துக்குப் போயிட்டோம்கிறதினால சாதாரணமா நாம் கடைப் பிடிச்சி வந்த கட்டுப்பாடுகள விட்ற கூடாது. அதினால அம்மா பயப்பட்றது சரிதான். ஆனா உனக்கு நல்ல புத்தி இருக்கு. நீ எதுவும் தப்பா செஞ்சிட மாட்டேங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு. நீ ஆண்களோட பழகக் கூடாதுன்னு நாங்க ஒண்ணும் உத்திரவு போடல. அப்படி உத்தரவு போட்டா எங்க பொண்ணு மேலயே எங்களுக்கு நம்பிக்கை இல்லைன்னு அர்த்தம். ஆகவே நீ யாரோட வேணுன்னாலும் பழகு. ஆனா ஒரு வேள பல்கலைக் கழகத்தில நீ எந்த ஆணோடயாவது ஒரு நண்பன்கிற அளவுக்கு மேல பழக ஆரம்பிச்சிட்டேன்னா – நான் சொல்றது விளக்குதுதானம்மா? – ஒண்ணு பண்ணு. அந்தப் பையன வீட்டுக்குக் கொண்டு வந்து எங்களுக்கு அறிமுகப் படுத்தி வச்சிரு. நாங்க ஒரு முறை பாத்துப் பேசிப் பழகிட்டா பையன் யாருன்னு தெரிஞ்சிக்கிட்டா எங்களுக்கும் பயமில்லாம இருக்கும்!” என்றார்.

 

     அப்பாவின் பேச்சு ஆறுதலாக இருந்தது. “சரிப்பா!” என்றாள் அகிலா. சந்திப்பு முடிந்து அப்பா எழுந்தார். அகிலா படுக்கைக்கு வந்தாள். வரும் வழியில் தம்பி தன் அறைக் கதவை ஒருக்களித்துத் திறந்து வைத்துக் கொண்டிருப்பதைக் கவனித்தாள். இவ்வளவு நேரம் ஒட்டுக் கேட்டிருக்கிறான் என்று தெரிந்தது. தூங்குவது போல் நடித்துக் கொண்டிருந்த அவனை முறைத்து விட்டு அவன் அறைக் கதவை இறுகச் சாத்திவிட்டு வந்தாள்.புத்தகத்தில் அப்புறம் மனம் செல்லவில்லை. புத்தகப் பக்கத்தின் காதை மடித்து வைத்து விட்டு விளக்கை அணைத்துவிட்டுப் படுத்தாள். தூக்கம் எளிதில் வரவில்லை.அப்பா முப்பது ஆண்டுகளாகப் பள்ளி ஆசிரியர். அந்த அனுபவத்தில்தான் இந்தப் பிரச்சினைக்கு இவ்வளவு எளிதாக, தெளிவாக ஒரு தீர்வைச் சொல்லிவிட்டார். அகிலாவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அம்மாவுக்கு இந்த அறிவுரை பிடிக்கவில்லை என்பது அவள் முகத்தில் இன்னும் இறுக்கம் விலகாததிலிருந்து தெரிந்தது.அம்மா அப்படியொன்றும் உலகம் தெரியாதவளல்ல.

 

       உலகமும் ஆண்-பெண் உறவுகளும் மாறி வருவது தெரிந்துதான் இருக்க வேண்டும். அதனால்தான் அதற்கு மேல் எதிர்ப் பேச்சு பேசாமல் விட்டுக் கொடுத்து விட்டாள். அம்மா வளர்ந்த சூழ்நிலையில் கல்யாணத்திற்கு முன் இந்த ஆண்-பெண் பழக்கம், சிரிப்புப் பேச்சு என்பதெல்லாம் கடுமையான தவறுகள் என்று சொல்லிக் கொடுக்கப் பட்டது அவள் மண்டைக்குள் இன்னமும் சுழன்று கொண்டே இருக்கிறது. ஆனால் அவள் தன்னைச் சுற்றிப் பார்க்கும் போது கல்வி முன்னேற்றத்தினால், நாகரிக முன்னேற்றத்தினால் இந்த பழக்கங்கள் தளர்ந்திருப்பதைப் பார்த்திருக்கிறாள். அந்தத் தளர்ந்து விட்ட சூழ்நிலையில் தன் பிள்ளையை மட்டும் பொத்திப் பொத்தி வளர்க்க முடியாது என்பதும் அவளுக்குத் தெரிந்திருக்கிறது. பிடியைத் தளர்த்தத்தான் வேண்டும் என்று முடிவு செய்ததனால்தான் வீட்டை விட்டு வெளியேறிப் பட்டப் படிப்பை மேற்கொள்ள ஆட்சேபம் இல்லாமல் அனுப்பி வைத்தாள்.ஆனால் பெற்றோர்களின் பிடி அதிகமாகத் தளர்ந்ததினால் எத்தனையோ பிள்ளைகள் தறிகெட்டுப் போய் விடுகிறார்கள் என்பதையும் அம்மா பார்த்திருக்கிறாள். தன் கன்றும் அப்படிப் போய் விடக்கூடாது என்ற பயமும் அவளுக்கு வருகிறது. ஆகவேதான் தளர்த்திய பிடியை சில சமயம் இறுக்குகிறாள். அகிலாவுக்குப் புரிந்தது.தான் அம்மாவின் கட்டுப்பாடுகளையெல்லாம் நிராகரித்துவிட்டுப் போய்விடுகிற அளவுக்கு அறிவாளியாகிவிட்டோம் என்று அகிலா எண்ணவில்லை.

 

      படிப்பு வேறு, அம்மா பன்னிப் பன்னி சொல்லுகின்ற வாழ்க்கை நெறிகள் வேறு என்பது அவளுக்குப் புரிந்தது.கணேசனோடு தான் பழகுவதில் தான் எந்தத் தப்பும் பண்ணிவிடவில்லை என தன்னைத் திருப்திப் படுத்திக் கொண்டாள். அவன் அளவோடு தொடவும் தழுவவும் முத்தம் தரவும் இடம் கொடுத்தது தவறில்லை. அவையில்லாமல் காதல் வளர முடியாது. அவற்றைத் தவிர்த்து விட்டு மன உணர்வுகளைப் பரிமாறிக் கொள்ள முடியாது. ஆனால் அம்மா இவற்றை எந்த நாளும் ஏற்க மாட்டாள். தான் அந்த அளவுக்குத் தன்னை பூட்டி வைத்துக் கொள்ள முடியாது. ஆனால் இவற்றுக்கெல்லாம் எல்லைகள் இருக்கின்றன. அவற்றைத் தான் வரையறுத்துக் கொள்ள வேண்டும் என அகிலா தீர்மானம் செய்து கொண்டாள்.ஆனால் இந்த எல்லைகள் தன்னை ஒத்த வயதினரிடையே விரைவாக மாறி வருகின்றன என்பது அவளுக்குப் புரிந்தது. பல்கலைக் கழகத்தில் மாணவர்களுக்கு உள்ள சுதந்திரம் இந்த எல்லைகளை எல்லாம் உடைக்க அவர்களுக்கு வாய்ப்பளித்திருப்பதையும் பலர் அப்படி உடைப்பதிலேயே பெருமைப் படுவதையும் அவள் பார்த்து விட்டாள். அவற்றைப் பார்த்து அதைப் போல் பின் பற்ற தான் மட்டும் ஏன் சுதந்திரம் எடுத்துக் கொள்ளக்கூடாது, தான் மட்டும் ஏன் அனுபவிக்கக் கூடாது என்று மனது இழுத்துக் கொண்டே இருக்கிறது. அதனால்தான் இன்று போடப்பட்டுள்ளது போலக் குடும்பக் கடிவாளங்கள் தேவையாக இருக்கின்றன.தம்பி ஒட்டுக் கேட்டது நல்லதுதான் என அகிலா நினைத்தாள். இந்தக் குடும்பத்தின் அடிப்படை நெறிகள் என்ன என்பதை அவனும் மறைமுகமாகக் கற்றுக் கொண்டிருப்பான். கற்றல் இப்படித்தான் நிகழ்கிறது. நேரடி உபதேசத்தை விடப் பார்த்துக் கேட்டுக் கற்றுக் கொள்வதே நிலைக்கும்.விரைவில் கணேசனை அழைத்துக் கொண்டு வந்து அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அறிமுகப் படுத்த வேண்டும் என்ற இனிமையான நினைப்பில் அகிலா தூங்கிப் போனாள்.***

 

         “சாப்பிடு கணேசு! பாரு எப்படி எளச்சிப் போய் கெடக்க! உங்க யுனிவர்சிட்டியில என்னதான் சாப்பாடு போட்றாங்களோ தெரியில! இப்படி எலும்புந் தோலுமா வந்து நிக்கிற” என்று அத்தை சத்தமாக உபசரித்தாள்.யுனிவர்சிட்டியில் யாரும் சாப்பாடு போடுவதில்லை; வேண்டுவதைத் தானாகத்தான் தேடிக் கொள்ள வேண்டும் என்று அத்தைக்குச் சொல்லி விளங்க வைக்க முடியாது. அதோடு தான் அப்படி ஒன்றும் இளைத்துப் போகவில்லை என்பதை எடுத்துச் சொன்னாலும் ஏற்றுக் கொள்ள மாட்டாள்.சாப்பாட்டு மேசையில் பத்து பேர் சாப்பிடக் கூடிய உணவு இருந்தது. ஆடு பிரட்டி வைத்து கோழிக் குழம்பு வைத்திருந்தாள். கோழி ஈரலைத் தனியாகப் பிரட்டியிருந்தாள். நெய் மணக்க பிரியாணி செய்திருந்தாள். ஊடான் கலந்த முட்டைக் கோஸ் பிரட்டல். தயிர் விட்ட வெள்ளரிக்காய். நல்ல சர்க்கரை விட்டு இனிக்க இனிக்க மாங்காய் சட்டினி செய்திருந்தாள். ஒரு ஜக்கில் சிவப்புக் கலரில் சிரப் கலக்கி வைத்திருந்தாள்.“சிரப் நான்தான் கலக்கினேன். வெள்ளரிக்காயும் நான்தான் வெட்டினேன்!” என்று தன் பங்கைத் தம்பட்டமடித்தாள் மல்லிகா.“இப்பல்லாம் கிள்ளான்ல நல்ல நாட்டாட்டுக் கறியே கெடைக்கிறதில்ல. அதினால காப்பாருக்கு ஆள் அனுப்பி வாங்கியாரச் சொன்னேன். கோழியும் நாட்டாட்டுக் கோழிதான். அந்த சமையக்கரம்மாகிட்ட சொல்லி கொஞ்சம் முந்தரிப் பருப்பு அரைச்சி போடச் சொன்னேன். நல்ல ருசியா இருக்கும். ஏலக்கா போட்டிருக்கலாம். மணமா இருக்கும். இருந்திச்சி, முடிஞ்சி போச்சி கணேசு. சாப்பிடு, சாப்பிடு” என்றாள்.

 

        “முட்டக் கோஸ் நல்லா இருக்கம்மா. ஊடான் போட்டிருக்கில்ல, அதுதான்!” என்று மல்லிகாவும் சுவைத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.“ரெண்டு முட்டையும் ஒடச்சிப் போட்டிருக்கலாம். எங்க, இந்த சமையக்காரம்மா சுத்த சோம்பேறி. நாம்ப ஒண்ண சொன்னா அது ஒண்ணச் செய்யும். பாரு பிரியாணில நெய்யே காணும்!”மேசையில் மட்டும் சாப்பாடு நிரம்பி வழியவில்லை. அத்தையின் பேச்சிலும் மல்லிகாவின் பேச்சிலும் சாப்பாட்டைத் தவிர வேறு விஷயங்களே இருக்கவில்லை. கறிக்குத் தேங்காயைப் பிழிந்து போடுவதற்கும் அரைத்துப் போடுவதற்கும் என்ன வித்தியாசம் என்பது முதல் கோழி இறைச்சியை சமைப்பதற்கு முன் எப்படிப் பக்குவப் படுத்துவது என்பது வரை அத்தை அவனுக்கு விளக்கிக் கொண்டே இருந்தாள். மல்லிகாவும் அத்தையும் இப்படிப் பெருத்துக் கொழு கொழுவென்றிருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை என்று நினைத்துக் கொண்டான்.அத்தையின் சாப்பாடு மிக ருசியாகத்தான் இருந்தது.

 

     கணேசன் தன் தேவைக்கு அதிகமாகவே சாப்பிட்டான். ஆனால் ஓரளவுக்கு மேல் அவனால் சாப்பிட முடியவில்லை. பல்கலைக் கழகத்திற்குப் போனதிலிருந்து மேகி மீயும் ரொட்டிச் சானாயும் சப்பாத்தியும் தோசையுமாகக் கொறித்துக் கொறித்துச் சாப்பிட்டு பழக்கமாக்கிக் கொண்ட பின்னர் இப்படி தட்டு முழுக்கக் கொட்டிச் சாப்பிடுவது முன்பு போல் முடியவில்லை.“இந்த மாமா மிந்தியெல்லாம் வந்தா நல்லா கலகலன்னு பேசும். இப்ப ஏன் இப்படி உம்மணா மூஞ்சாக் கிடக்குது?” என்று மல்லிகா சீண்டினாள்.உண்மையில் அவர்களின் இடைவிடாத பேச்சுக்கு அவனால் ஈடு கொடுக்க முடியவில்லைதான். சாப்பாட்டைப் பற்றி அவர்களைப் போல் இடைவிடாமல் வருணிக்க அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை.“எனக்கு சாப்பிட்றதுக்கே நேரமில்ல. இதில பேச எங்க நேரம்? மல்லிகா! பேசிக்கிட்டே சாப்பிட்டா செரிக்காதுன்னு சொல்றாங்க. அதினால பேசாம சாப்பிடு!” என்றான்.“ஆமா! என்னைக்குமா இப்படிப் பேசிக்கிட்டே சாப்பிட்றோம்! மாமா வீட்டுக்கு வந்திருக்கேன்னுதான் இத்தன பேச்சி!”“ஆமாப்பா! இந்த மல்லிகா சாப்பாட்டத் தட்டில போட்டுகிட்டு போய் ஏதாவது வீடியோ பாக்க உக்காந்திரும். அப்புறம் பேச்சாவது, மூச்சாவது! தட்டில என்ன இருக்கின்னு கூட தெரியாது! இன்னைக்கு மாமாவ பாத்ததில இத்தன கொண்டாட்டம்” என்று அத்தையும் தாளம் போட்டாள்.அந்த வீட்டின் நடைமுறைகள் ஏனோ அவனுக்கு வேடிக்கையாக இருந்தன. அந்த வீடு அவன் பழகிய வீடுதான். அங்குதான் அவன் வளர்ந்தான். இந்தப் பழக்கங்கள் எல்லாம் அவனுக்கும் பழகியவைதான். ஆனால் பல்கலைக் கழகத்திற்குப் போன இந்த மூன்றாண்டுகளில் அந்தப் பழக்கங்களெல்லாம் அவனுக்கு மெது மெதுவாக அன்னியமாகிக் கொண்டு வந்தன.முதலில் அந்த வீட்டின் பெருந்தீனி அவனுக்குப் பிடிக்கவில்லை.

 

      ஏராளமாகச் சமைத்து ஏராளமாகக் கொட்டுகிறார்கள். சமையலுக்கு ஆளிருந்தது. அந்த அம்மா ஏராளமாக ஆக்கிப் போடுவது தனது கடமை என ஆக்கிக் கொண்டிருந்தாள். அத்தையோ மல்லிகாவோ அதைக் கண்டு கொள்வதில்லை.காலையில் ஒன்பது வரை தூங்கினார்கள். 10 மணிக்குக் கறியுடன் இட்டிலி தோசை பண்ணிப் பசியாறி பிற்பகலில் தூங்கி எழுந்து மூன்று மணிக்குச் சாப்பிட்டார்கள். பிற்பகலிலும் இரவில் ஒரு மணி வரையிலும் தமிழ் வீடியோ பார்த்துக் கொண்டிருந்தார்கள். வீட்டில் சினிமா இதழ்கள் இரைந்து கிடந்தன. ஞாயிற்றுக் கிழமை மட்டுமே தமிழ்ப்பத்திரிகை வாங்கி முக்கியமாகச் சினிமாச் செய்தியைத்தான் படித்தார்கள். மல்லிகாவுக்கு எல்லா நடிகர் நடிகையர் பேரும் தெரிந்திருந்தது. அவர்கள் அந்தரங்க வாழ்கைகளை அறிந்து வைத்திருந்தாள். அதைப் பற்றியே சளசளவென்று பேசினாள்.அத்தைக்குப் படிப்பில்லை. அத்தை கணவர் சுமாராகப் படித்து வியாபார மூளையை வளர்த்துக் கொண்டவர். அத்தைக்குப் பெரும் பணத்தைத் தேடி வைத்து விட்டு இளம் வயதில் செத்துப் போனார். அத்தை மல்லிகாவைப் படிக்க வைக்க முயன்று தோற்றுப் போனாள். அந்த வீட்டில் எங்கும் அறிவின் அறிகுறிகள் இல்லை. பணம் நிறைய இருந்தது. கொச்சையான ஆடம்பரம் இருந்தது.அத்தை எந்த நேரமும் மொத்தமாக ஒரு அட்டிகை போட்டுக் கொண்டிருந்தாள். அதை ஆண்டுக்கொரு முறை அழித்து புதிதாகச் செய்வாள்.

 

       மூக்கில் வைரமும் விரலில் நவரத்தினங்களாகவும் போட்டுக் கொண்டிருந்தாள். அவளும் மல்லிகாவும் அடிக்கடி நகைப் பெட்டியை வெளியே எடுத்து நகைகளை எடுத்து வரிசைப் படுத்தி அழகு பார்த்துக் கொண்டிருந்தார்கள். “இது உனக்கு, இது எனக்கு!” என்று பங்கு போட்டுக் கொண்டிருந்தார்கள்.மாமா வாங்கிப் போட்டிருந்த வீடுகளிலிருந்து வாடகை வந்து கொண்டிருந்தது. அவருடைய சேமிப்புப் பணத்தை எடுத்து இரண்டு மூன்று நம்பிக்கையான ஆட்கள் மூலமாக அத்தை வட்டிக்கு விட்டிருந்தாள். அந்த வட்டித் தரகர்கள் வீட்டுக்கு வந்து அத்தையுடன் உட்கார்ந்து பேசும் போது பதினைந்து வட்டி இருபது வட்டி என்று பேரம் நடப்பதை கணேசன் கேட்டிருக்கிறான். ஆனால் அதில் எதிலும் மல்லிகாவையோ அல்லது கணேசனையோ அத்தை ஈடுபடுத்துவதில்லை. அந்த விஷயங்களையெல்லாம் அந்தரங்கமாக வைத்துக் கொண்டிருந்தாள்.அந்த வட்டித் தரகர்கள் அத்தையையும் அத்தை மகளையும் ஏகமாகக் காக்காய் பிடித்துக் கொண்டிருந்தார்கள். வரும் போதெல்லாம் பழம், இனிப்பு என்று வாங்கி வருவார்கள். சில சமயங்களில் உடும்பு இறைச்சி, காட்டுப்பன்றி இறைச்சி என்றும் கொண்டு வருவார்கள்.

 

      ஊருக்குப் போய்விட்டு வரும் நேரங்களில் அத்தைக்குப் பட்டுப் புடவை நகை என்று வாங்கி வந்து ஒன்றைப் பரிசாகக் கொடுத்து விட்டு இன்னும் நான்கைந்தை அகோர விலைக்கு விற்றுச் செல்வார்கள்.அத்தைக்கு அவர்கள் தன் மேல் காட்டும் கரிசனம் – அது தன் பணத்துக்காகத்தான் என்று தெரிந்திருந்தாலும் – வேண்டியிருந்தது. அவளுக்கு வேறு உறவினர்கள் இல்லை. இருக்கின்ற சிலரையும் தன் பணத்தைக் கொள்ளையிட வந்தவர்கள் என்று பேசி விரட்டிப் பகைத்துக் கொண்டாள். தன் அண்ணனை – கணேசனின் அப்பாவை – மட்டும் பணத்தையும் பொருளையும் கொஞ்சம் கொஞ்சம் காட்டிக் கையில் போட்டுக் கொண்டிருந்தாள்.அவர்களையும் அவள் வீட்டுக்குள் அண்ட விடுவதில்லை. அவளே போய் அவர்களைப் பார்த்து ஏதாகிலும் பொருள்கள் வாங்கிக் கொடுத்துக் கொஞ்சம் காசையும் கையில் கொடுத்து விட்டு தன் வீட்டுப் பக்கம் வரத் தேவையில்லாமல் ஆக்கி விடுவாள்.

 

   கணேசன் விடுமுறைக்கு வரும் போதெல்லாம் தன் வீட்டுக்குத்தான் முதலில் வர வேண்டும் என்று கட்டளை போட்டிருந்தாள். அப்படி அவன் வந்தவுடன் ஓரிரு நாட்கள் அவனை வீட்டில் வைத்திருந்து தானே தனது டிரைவர் வைத்த காரில் அவனை ஏற்றிச் சென்று அவர்களுக்குக் காட்டிவிட்டு கையோடு திரும்பக் கொண்டு வந்து விடுவாள். போகும் போதே ஒரு டஜன் பீர் போத்தல்களையும் காரில் வாங்கிப் போட்டுக் கொள்வாள். அதற்காகவே அப்பா அவளை அமோகமாக வரவேற்பார். அதற்குப் பிறகு அந்த பீரைத் திறப்பதிலும் குடிப்பதிலும் உள்ள அக்கறை வேறு எதிலும் அவருக்கு இருக்காது.அதே வேகத்தில் பக்கத்து எஸ்டேட்டில் கல்யாணமாகி குழந்தை குட்டிகளோடு வாழும் அவனுடைய அக்காளையும் கொண்டு கொஞ்ச நேரம் காட்டிவிட்டு வந்து விடுவாள். அக்காளின் கணவருக்கும் சில பீர் போத்தல்கள் சென்று சேரும். அங்கும் கொண்டாட்டங்கள்தான் இருக்குமே தவிர எந்த முக்கியமான விஷயத்தையும் பேச முடியாது.கணேசனின் அண்ணன் அப்பாவுடன் சண்டை போட்டுக் கொண்டு சிங்கப்பூருக்கு வேலை தேடிப் போய் அங்கேயே தங்கிவிட்டார். எப்போதாவது தீபாவளிக்கு வந்து ஒவ்வொரு முறையும் சண்டை போட்டுக் கொண்டு போவதோடு சரி!இந்த முறையும் நாளைக்குக் காலையில் இப்படி ஒரு மின்னல் வேகப் பயணத்தை அத்தை ஏற்பாடு செய்திருந்தாள்.சாப்பாடு முடிந்து இரண்டு பேரும் ஏப்பம் விட்டுக் கொண்டிருக்கும் வேளையில் கணேசன் சொன்னான்: “அத்தை! நாளைக்கி அப்பா வீட்டுக்குப் போனா நான் அங்கயே ரெண்டு நாள் தங்கிட்டு வரலான்னு பாக்கிறேன்!” என்றான்.“ஏன் கணேசு?” அத்தை அதிர்ந்து போய்க் கேட்டாள்.

 

      “இங்க என்னா கொற உனக்கு?”“இங்க ஒரு கொறயும் இல்ல அத்த! அம்மாவோட ஒக்காந்து கொஞ்சம் பேசணும். எப்பவுமே அவசரமா திரும்பிட்றோம்… அதினாலதான்!”“ஐயோ, என்னா பேசப் போற அவங்களோட? அந்த அசிங்கத்தில போயி எப்படித்தான் இருக்கப் போறியோ! சரி, ரெண்டு நாள் வேணாம்! ஒருநாள் இருந்திட்டு வந்திடு!” என்றாள்.“ஆமாம் மாமா! ஒரு நாள் போதும். வந்திடு எனக்குப் பொளுதே போவாது!” என்றாள் மல்லிகா.*** *** ***அத்தை வந்ததிலிருந்து வீடு கோலாகலமாக இருந்தது. அப்பாவும் அம்மாவும் தான் வந்திருப்பதை விட அத்தை வந்திருப்பதையே பெரிதும் விரும்பியிருப்பது போலத் தெரிந்தது. வழக்கமான பீர் போத்தல்களும், ஆட்டு இறைச்சி இரண்டு கட்டியும் வாங்கிக் கொண்டு வந்திருந்தாள் அத்தை.அத்தைக்கு கணேசனை அங்கு விட்டுச் செல்ல விருப்பமே இல்லை. போகும் போது “நாளைக்கு மத்தியானம் டிரைவரை அனுப்பி வைக்கிறேன். வந்திடு கணேசு!” என்று சொல்லிச் சென்றாள்.

 

     “மாமா! மறக்காம வந்திடு! இல்லன்னா ஒங்கிட்ட பேசமாட்டேன்!” என்று சிணுங்கிப் போனாள் மல்லிகா.அத்தை திரும்பிப் போவதற்கு முன்னமே அப்பா போதையில் சாய்ந்து விட்டார். அத்தையின் பீர் போத்தல்களில் மூன்றைக் காலி செய்திருந்தார்.அப்பா தூங்கிக் கொண்டிருந்த போது அம்மாவிடம் பேச்சுக் கொடுத்தான் கணேசன்: “ஏம்மா! அப்பாவ ஏன் இப்படி குடிக்க விட்ற? உடம்பு என்னத்துக்கு ஆகும். இப்பவே பாரு, அவருக்குக் கையெல்லாம் ஆடுது. எதுவுமே ஞாபகத்தில இருக்கிறதில்ல. இப்படியே இருந்தா எப்படி?”அம்மா சட்டென்று பதில் சொன்னாள்: “இல்ல கணேசு. அப்பாவுக்கு வேல கஷ்டமான வேல பாரு! செம்பன கொலய அறுக்கணும். தூக்கணும். லோரில போடணும். உடம்பு வலி போறதுக்கு இப்படிக் கொஞ்சம் குடிப்பாங்க, அப்புறம் தூங்கிடுவாங்க. ஒரு வம்பு தும்புக்கு போவ மாட்டாங்க!”“உடம்பு வலிக்கு புஷ்டியான ஆகாரம் சாப்பிடணும். நல்ல வைட்டமின்கள் சாப்பிடணும். குடியா அதுக்கு மருந்து?”“நான் நல்ல சாப்பாடுதான போட்றேன். அவங்கதான் சாப்பிட மாட்றாங்க.

 

       குடிக்கலேன்னா தூங்க மாட்டாங்க. வெளிக்குப் போக மாட்டாங்க! ரொம்ப கஷ்டப் படுவாங்க! என்னதான் போட்டு திட்டுவாங்க, அடிப்பாங்க!”இந்த அம்மாவே இப்படி குடி என்பது முக்கியம்தான் என்பது போலப் பேசினால் இந்த அப்பாவை யார்தான் திருத்த முடியும் என்பது அவனுக்கு விளங்கவில்லை. அம்மாவின் இந்த அறியாமையாவது சுட்டிக் காட்ட வேண்டும் என்று எண்ணினான்.“ஏம்மா! நீயுந்தான வேல செய்ற! ஒனக்கு ஒடம்பு வலியில்லியா? நீ ஏன் குடிக்கிறதில்ல? குடிக்காம எப்படி ஒன்னால தூங்க முடியுது?” என்று கேட்டான்.“எனக்கு எதுக்கு குடி? சீ, நான் வாய்லியே வச்சதில்ல! நான் ரெண்டு இஞ்சியத் தட்டி ஒரு கசாயத்த வச்சிக் குடிச்சன்னா எல்லாம் சரியாப் போயிடும். மரக்கட்ட மாதிரி தூங்கிடுவேன்.” பெருமையுடன் சொன்னாள்.“அப்ப அந்தக் கஷாயத்த அப்பாவுக்கு வச்சிக் குடுத்தா என்னா?”“அதுக்கா? கசாயமா? நல்லா இருக்கு நீ பேசிறது! அதுக்கு தண்ணிதான் கசாயம். அத விட்டு கசாயத்தக் கொண்டி குடுத்தா என் மூஞ்சிலியே ஊத்தி, என் மயரப் புடிச்சி இளுத்து அடிக்கும்.”

 

      “அடிச்சா நீ வாங்கிக்குவியா!”“வாங்கிக்காம என்ன பண்றது? புருஷனாப் போயிடுச்ச! பொம்பிளயா வந்தவ வாங்கிக்கத்தான் வேணும்!”இருபதாம் நூற்றாண்டும் பெண் விடுதலை இயக்கமும் அவனது பெற்றோர்களை எப்படித் திரும்பிப் பார்க்காமலேயே தாண்டிப் போயின என்று அவனுக்கு விளங்கவில்லை. அவனுடைய பெற்றோர்கள் பழைமையில் மரத்துப் போனார்கள். அவர்கள் மூளையின் உயரணுக்கள் செத்து விட்டன. அவனால் அவற்றுக்கு உயிரூட்ட முடியுமா?அன்று பின்னிரவில் அப்பா கொஞ்சம் போதை தெளிந்து எழுந்திருந்தார். அம்மாவை எழுப்பி சாப்பிட உட்கார்ந்தார். மத்தியானம் செய்த ஆட்டுக் கறியை சூடாக்கிப் பரிமாறினாள் அம்மா. கணேசன் எழுந்து அவர் பக்கத்தில் உட்கார்ந்தான்.“கணேசு, சாப்பிட்டியா?” என்று கேட்டார்.“அத்தையோட உக்காந்து அப்பதே சாப்பிட்டனே, நீங்க பாத்திட்டுத்தான இருந்திங்க அப்பா! அது கூடவா உங்களுக்கு ஞாபகம் இல்ல?”“ஆமா, ஆமா! எங்க அது, தங்கச்சி போயிடுச்சா?”“போயிட்டாங்க!”“எங்கிட்ட சொல்லிக்கிலிய!”“நீங்க படுத்துத் தூங்கிட்டிங்க!”“ஓஹோ! கொஞ்சம் தண்ணி சாப்பிட்டன்ல! ஒடம்பு அசதி வேற. அதான் தூங்கிட்டேன்.”தன் மனைவியைப் பார்த்தார்.

 

      “தண்ணி இன்னும் மிச்சமிருக்கா புள்ள!”ஒரு போத்தல் மீதமிருந்தது. எடுத்து வர விருட்டென்று எழுந்தவளை கணேசன் கைப்பிடித்து உட்கார வைத்தான்.“அப்பா! இப்படி நீங்க தண்ணி சாப்பிட்றது ஒடம்புக்கு நல்லதில்லப்பா. கொஞ்சம் கொஞ்சமா கொறச்சி, அப்படியே விட்டிருங்கப்பா!” என்றான்.“அட, நான் ரொம்ப சாப்பிட்றதில்ல கணேசு. இன்னைக்கு தங்கச்சி வாங்கிட்டு வந்து ஊத்திச்சா ரெண்டு போத்த சாப்பிட்டேன். இல்லன்னா ஒரு நாளக்கு அரை போத்ததான். அவ்வளவுதான்!”“இல்லப்பா! நான் கேள்விப் பட்டேன். தினமும் ரெண்டு மூணு போத்தல் குடிக்கிறிங்களாம். இன்னைக்கு நீங்க மூணு போத்தல் குடிச்சத நானே பாத்தேனே! இப்படிக் குடிச்சா ஒடம்பு என்னத்துக்கு ஆகும்?”“இல்லவே இல்லயே! இன்னைக்கு உங்க அத்தை வந்திச்சி, நீ வந்திருக்க, அந்த சந்தோஷத்தில குடிச்சேன். இல்லன்னா ரொம்ப வச்சிக்க மாட்டேனே!”அவன் அவரை இரக்கமாகப் பார்த்தான். இவர் முழுகப் போகும் மனிதர். நான் கரையேற்றத் துடிக்கிறேன். இல்லை நான் முழுகத்தான் போகிறேன், என்னை விடு என்று இன்னும் ஆழப் போகிறார்.“ஆளு இப்படி மெலிஞ்சிப் போயிருக்கிங்க! கையெல்லாம் ஆடுது. மூச்சு வாங்குது. இதுக்கெல்லாம் குடிதான் காரணம்னு தெரியிலியா உங்களுக்கு?”“வேல ரொம்ப கஷ்டம் கணேசு. நான் என்னா ஆபிசில ஒக்காந்து கிராணி உத்தியோகமா பாக்கிறேன்? செம்பன கொல தள்ளணும். ஒரு கொல என்னா கனம் தெரியுமா? ஒன்னால ஒரு கொல தள்ள முடியுமா? ஏன் கை ஆடாது? ஆனா கொல தள்ளும் போது வந்து பாரு! கையும் காலும் ஸடெடியா இருக்கும்!”பல தடவை விழுந்திருக்கிறார்.

 

       ஒரு முறை கால் முறிந்து ஆஸ்பத்திரியில் ஒரு மாதம் இருந்தார். எல்லாம் அவருக்கே மறந்து விட்டது.கணேசன் பெருமூச்சு விட்டான். “அப்பா. இன்னும் ரெண்டு வருஷத்தில எனக்குப் படிப்பு முடிஞ்சிரும். நான் வேலைக்குப் போன பிறகு நீங்களும் அம்மாவும் வேலய விட்டிருங்க. என்னோட வந்து இருங்க. சௌக்கியமா இருங்க. ஆனா அதுக்குள்ள இந்தக் குடிப் பளக்கத்த விட்டிரணும். இது அசிங்கமான பளக்கம். அநாகரிகமான பளக்கம்!”அப்பா அம்மாவை முறைத்துப் பார்த்தார்.” ம்… கேட்டுக்கிட்டியா? புள்ள ரொம்ப படிச்சிருச்சி பாத்தியா? அதுதான் அப்பனுக்கே புத்தி சொல்லுது.”“அப்பா! நான் நல்லதுக்குத்தான் சொல்றேன். இந்தக் குடியினால பின்னால பெரிய பிரச்னைகள்ளாம் வரும். உடம்புக்கு ஆகாது. உடனே விட்ருங்கன்னு சொல்லுல! கொஞ்சங் கொஞ்சமா விடுங்க.”“நீயா எனக்குத் தண்ணி வாங்கித் தர்ர? உன் கிட்ட நான் கேட்டனா? உன் காசிலியா குடிக்கிறேன்? நான் சம்பாதிக்கிறேன், நான் குடிக்கிறேன்!” கத்தினார்.“நீங்க சம்பாதிச்சி நீங்க குடிக்கல. உங்க சம்பாத்தியம் சாப்பாட்டுக்கே பத்தாது. அத்தை கொண்ணாந்து குடுக்கிற காசில குடிக்கிறிங்க. அது ஒரு பெருமையா உங்களுக்கு?”“என் தங்கச்சி எனக்குக் குடுக்கிறா! நீயும் அவ வூட்டுல ஒக்காந்துதான சாப்பிட்ற? அது ஒனக்கு வெக்கமா இல்லியா? நீ என்னைக்காச்சும் எனக்குக் காசு குடுத்திருக்கியா? ஒன்னால எனக்கு என்ன பிரயோஜனம்? மூணு புள்ளைங்கள பெத்து எனக்கு என்ன பிரயோஜனம்? யாராவது என்னக் கவனிக்கிறிங்களா?” அவர் கையாட்டிய வேகத்தில் சோறு எங்கணும் தெறித்தது.

 

       பேச்சு வேறு முரட்டுத் தனமான திக்கில் போய்க் கொண்டிருப்பது தெரிந்தது. அவருக்கு போதை தெளிந்திருக்கலாம். ஆனால் அறியாமை தெளியவில்லை. எப்போது தெளியும்? தெளியுமா? தெரியவில்லை.கணேசன் காசை அவ்வப்போது மிச்சம் பிடித்து அம்மாவிடம் கொடுத்திருக்கிறான். அதை அப்பாவிடம் இப்போது சொல்ல முடியாது. சொல்லுகின்ற தைரியம் அம்மாவுக்கும் இல்லை.இந்த அப்பாவின் இயலாமையால்தான் அவன் அத்தை வீட்டில் உட்கார்ந்து சாப்பிட வேண்டியிருக்கிறது. அத்தை அன்பாகத்தான் சோறு போடுகிறாள். மகன் போல வைத்துக் கொள்ளுகிறாள். ஆனால் அப்பா அம்மா இருக்கும் போதே அத்தை வீட்டுச் செலவில் படிப்பதும் சாப்பிடுவதும் வெட்கம்தான். ஆனால் யாருக்கு வெட்கம்? தனக்கா தன்னைப் பெற்றவர்களுக்கா?கணேசன் எழுந்து சென்றுப் படுத்து விட்டான். அப்பா பாதி சாப்பாட்டில் எழுந்து போத்தலைக் கையில் தூக்கிக் கொண்டு வெளியில் போய் உட்கார்ந்து கொண்டார். அம்மா ஒரு பேச்சும் பேசாமல் போய்ப் படுத்து விட்டாள். அப்பாவின் குரல் அவனுக்கு மட்டுமல்லாமல் அடுத்துள்ள ஐந்து வீடுகளுக்கும் அந்த பின்னிரவில் ஒரு நாயின் ஊளையைப் போல வழிந்து கொண்டே இருந்தது.“புத்தி சொல்ல வந்திட்டானுங்க புத்தி! இவனுங்களா வந்து கொலை தள்ளுறானுங்க? கொலையத் தூக்கி லோரில போட்டுப் பாத்திருக்கியா? பாம்பு கடிச்சா வந்து பாப்பியா? அப்பனுக்கு ஒடம்பு வலிக்கு ஒரு தண்ணி வாங்கிக் குடிக்க அஞ்சு வெள்ளி தரதுக்கு நாதியில்லாத நாய்க்கெல்லாம் பேச்சில கொறச்ச இல்ல! எங்கிருந்து வந்த? அப்பன் இல்லாம வந்தியா? பெத்ததுக்கு ஒரு நன்னியுண்டா…? படிக்கிறானுங்களாம் படிப்பு…!”பெற்றதுக்கு நன்றி சொல்ல வேண்டுமா என்று கணேசன் தன்னையே கேட்டுக் கொண்டான். பன்றிகளும்தான் பெற்றுப் போடுகின்றன.

 

          “என்னைப் பன்றியாகப் பெற்றாயே!” என்று நன்றி சொல்ல வேண்டுமா? பெற்றது ஒரு பெருமையா? பெறாமல் இருந்திருக்கலாமே! இந்தத் துன்பங்களுக்கெல்லாம் இடம் இல்லாமல் போயிருக்குமே!கணேசனுக்குத் தூக்கம் வரவில்லை. அம்மா தூக்கிக் கொடுத்த அழுக்குப் பிடித்த தலையணையின் நாற்றமும் வெளியிலிருந்து வரும் இடைவிடாத பேச்சின் நாற்றமும் புழுக்கள் போல அவன் மனசிலும் உடம்பிலும் ஊர்ந்து கொண்டே இருந்தன.அத்தையின் காரும் டிரைவரும் எத்தனை மணிக்கு வருவார்கள் என்று ஏங்க ஆரம்பித்தான்.இன்னொரு கவலையும் அவனைப் பற்றிக் கொண்டிருந்தது. அகிலா என்னும் அந்த அழகிய மலரை இந்தச் சாக்கடைக்குள் எப்படிக் கொண்டு வந்து வைப்பேன் என்றும் கவலைப் பட ஆரம்பித்தான்.

by parthi   on 15 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர் அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்
கவனம்-இரமா ஆறுமுகம் கவனம்-இரமா ஆறுமுகம்
நெஞ்சோரமாய்…கலையரசி சிவசுந்தர பாண்டியன் நெஞ்சோரமாய்…கலையரசி சிவசுந்தர பாண்டியன்
கழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும் கழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும்
மனித நேயம் மனித நேயம்
உலகத் தமிழ் மாநாடு 1968 அறிஞர் அண்ணா உலகத் தமிழ் மாநாடு 1968 அறிஞர் அண்ணா
அவர் - நிலாரவி அவர் - நிலாரவி
காதல் வீரியம் - எஸ்.கண்ணன் காதல் வீரியம் - எஸ்.கண்ணன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.