LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- ரெ.கார்த்திகேசு

காதலினால் அல்ல! பகுதி 5

 

23
அத்தை வீட்டுக்குத் திரும்பி வந்தும் கணேசனுக்கு இதயம் கனத்திருந்தது. பேச்சும் கலகலப்பும் குறைந்து விட்டது. அந்த இருட்டான எண்ணங்களை அகற்றி மனதை மகிழ்ச்சியாக்க வேண்டும் என்பதற்காக அன்று இரவு அகிலாவிடம் போன் பண்ணிப் பேசினான். அவள் குரலில், கொஞ்சலில் இருட்டில் ஒளி பாய்ச்சும் சக்தி இருக்கும் என எதிர்பார்த்தான். ஆனால் அன்று வழக்கத்திற்கு மாறாக அகிலா தயங்கித் தயங்கிப் பேசினாள்.
“ஏன் அகிலா தயக்கமா பேசிற?” என்று கேட்டான்.
“இல்ல கணேஷ், நேத்து வீட்டில ஒரு பேச்சுவார்த்தை நடந்திச்சி. யாருக்கு ·போன் பண்ணி இப்படி ரகசியமாப் பேசிறன்னு என்னப் பிடிச்சிக்கிட்டாங்க!”
“இனிமே ·போன் பேசக் கூடாதுன்னு சொன்னாங்களா?”
“சீச்சீ! என் அப்பா அம்மா அப்படிப் பட்டவங்க இல்ல. அப்படியெல்லாம் கட்டுப்பாடு போடல. ஆனா ஒரு சாதாரண நண்பராக இல்லாம, அதற்கு மேல யாரோட பழகினாலும் எங்ககிட்ட வந்து முதல்ல அறிமுகப் படுத்திட்டு பழகுன்னு அப்பா சொல்லிட்டாரு!”
“என் பேர சொல்லிட்டியா?”
“சொல்லிட்டேன். ஆனா முழுக்கவும் சொல்லல. அப்பாவோட அந்த அறிவுரைக்குப் பிறகு உங்கள முறையா வீட்டுக்குக் கொண்டாந்து அறிமுகப் படுத்தாம உங்களோட ரொம்ப நேரம் பேசிறது சரியில்லன்னு படுது.”
கணேசன் கொஞ்ச நேரம் ஒன்றும் பேசத் தோன்றாமல் அமைதியாக இருந்தான்.
“என்ன பேசாம இருக்கிங்க கணேஷ்?”
“என்ன சொல்றதுன்னு தெரியில. உங்கூட ·போன்ல பேசாம எப்படி இருக்கிறதுன்னு நெனச்சா கவலையா இருக்கு!”
“கொஞ்சம் அவங்க வார்த்தைக்கு மதிப்புக் கொடுத்து நடந்துக்குவோம் கணேஷ்! அடுத்த பருவம் தொடங்கினவுடன ஒரு நாள் எங்க வீட்டுக்கு நாம ரெண்டு பேரும் சேந்து வருவோம். எங்க பெற்றோர்களுக்கு உங்கள அறிமுகப் படுத்தி வச்சிர்ரேன்!”
“உங்க வீட்டுக்கு வர்ரதுக்கு பயமா இருக்கு அகிலா!”
“பயப்படாதீங்க! அப்பா ரொம்ப நல்லவர். பண்பானவர். தன்னுடைய எதிரியக் கூட சத்தமா பேசமாட்டார்!”
“என்ன ஏத்துக்குவாங்களா உக்க பெற்றோர்!”
“நிச்சயமா! உங்கள அவங்களுக்கு நிச்சயமா பிடிக்கும்! இப்பவே அந்த ரேகிங் சம்பவத்தில நீங்க எனக்கு உதவி பண்ணினதக் கேட்டு அப்பாவுக்கு ரொம்ப நல்ல அபிப்பிராயம் உங்க மேல!”
“சரி அகிலா!”
“வச்சிரட்டுமா?”
“சரி அகிலா!”
வைக்கவில்லை. தொடர்ந்து டெலி·போனை காதில் வைத்துக் கேட்டவாறிருந்தான்.
“அப்புறம் ஏன் வைக்காம இருக்கிங்க?”
“நீதானே வச்சிர்ரேன்னு சொன்ன, வச்சிர வேண்டியதுதானே!”
“ஊஹ¥ம், நீங்க மொதல்ல!”
“முடியாது நீதான்!”
கொஞ்ச நேரம் கொஞ்சல் சிணுங்கல்களைக் கேட்டு விட்டு ·போனைக் கீழே வைத்தான்.
*** *** ***
அன்றிரவு சாப்பாட்டின் போது மல்லிகா பெரிதாக முறையீடு செய்தாள்: “பாரும்மா இந்த அத்தான் இப்பல்லாம் எங்கிட்ட சரியா பேசவே மாட்டேங்குது. சிரிக்கிறது கூட இல்ல! ஒரு புஸ்தகத்த எடுத்து படிச்சிக்கிட்டே இருக்கு. இல்லன்னா டெலி·போன்ல யார் கிட்டயோ ரொம்ப நேரம் பேசிக்கிட்டே இருக்கு!”
“ஏய் மண்டு! நான் யுனிவர்சிட்டியில படிக்கிறேன்னு தெரியுந்தான உனக்கு? படிக்கிறவன் புஸ்தகத்த எடுத்துப் படிக்கிறதில என்ன ஆச்சர்யம் ஒனக்கு?” என்று திட்டினான்.
“அதான் உங்க யுனிவர்சிட்டி லீவு விட்டுட்டாங்கள! அப்புறம் ஏன் லீவிலியும் படிக்கிற?”
“யுனிவர்சிட்டி லீவு உன் பள்ளிக்கூட லீவு மாதிரியில்ல. லீவிலியும் எங்களுக்கு எவ்வளவோ வேலைகள் இருக்கு. படிக்கிறதுக்கும் நெறயப் பாடம் இருக்கு!”
“·போன்ல மாத்திரம் எப்படி ரொம்ப நேரம் பேசிற?”
“அது எல்லாம் பாட சம்பந்தமாத்தான். என் ·பிரன்ட்சுங்க சந்தேகம் கேக்கிறாங்க. நான் சொல்றேன்!” பச்சையாகப் பொய் சொன்னான்.
“சரி. பரவால்ல! இன்னைக்கு ஒரு நாளைக்கு என்ன படம் பாக்க கூட்டிக்கிட்டுப்போ. கிள்ளான்ல “எஜமான்” படம் விளையாடுது. ரஜினி படம்!”
கணேசனுக்குச் சலிப்பாக இருந்தது. “படமா? தோ பாரு மல்லிகா! நான் படமெல்லாம் பாக்கிற மூட்ல இல்ல! நீ எப்போதும் போற மாதிரி உங்க அம்மாவோட போயிட்டு வா! என்ன விட்டுடு!” என்றான்.
“எல்லாருமா போயிட்டு வருவோமேப்பா. புள்ள ஆசயா கேக்கிதில்ல!” என்று அத்தையும் சிபாரிசுக்கு வந்தாள்.
“இல்ல அத்த! நீங்க போயிட்டு வாங்க!” என்றான்.
அத்தை அவனைக் கொஞ்சம் சந்தேகக் கண்ணோடு பார்த்தாள். “என்னமோ உங்கப்பா ஊட்ல இருந்து திரும்பினதில இருந்து ஒரு மாதிரியாத்தான் இருக்கே! என்ன நடந்திச்சி அங்க?”
அத்தையைப் பார்த்தான். இவளிடம் எந்த அளவுக்கு மனம் விட்டுச் சொல்ல முடியும் என்பது அவனுக்கு நிச்சயமில்லாமல் இருந்தது. ஆனால் சொல்லத்தான் வேண்டும். என் நலனில் அக்கறை உள்ளவள். இந்த விஷயத்தில் சம்பந்தம் உள்ளவள். ஆகவே தயங்கித் தயங்கிச் சொன்னான்.
“இல்ல அத்த! அப்பா ரொம்ப குடிக்கிறாரு. அம்மா ஒண்ணும் தெரியாதவங்களா இருக்காங்க. அப்பாவுக்குச் சொல்லி மாத்திறதுக்கு அவங்களுக்கு முடியில. நான் அதச் சொல்லி கொஞ்சம் திருத்தலான்னு பாத்தா கொஞ்சங்கூட நான் சொல்றது அவங்களுக்கு விளங்க மாட்டேங்குது. நேத்து கொஞ்சம் பேசினதும் அப்பா கோவிச்சிக்கிட்டாரு. ராத்திரி முழுக்க தனியா உக்காந்து என்னையே திட்டிக்கிட்டு இருக்காரு!”
“இவ்வளவுதானா?” என்று ‘பூ’ என்று அந்த விஷயத்தை ஊதித் தள்ளினாள் அத்தை. “இது தெரிஞ்ச விசயந்தான கணேசு! அண்ணங் குடிச்சிக் குடிச்சி சீரளிஞ்சாச்சி! மூளையே செத்துப் போச்சி! அதுகிட்ட போய் சொன்னா இதெல்லாம் எடுபடுமா? உங்கம்மா இருக்கே, அதுக்கு ஒரு எளவும் வௌங்காது. நான் ஒருத்தி இருந்து ஆதரிச்சி வர்ரதினால ரெண்டு கௌங்களும் ஒருமாதிரியா இருக்கு. இல்லன்னா அவங்க கதி என்னாவும்? உங்கப்பா சம்பாதிக்கிறது அதோட பாதி குடிக்குக் கூடக் காணாது”
கணேசன் மீண்டும் தயங்கினான். அத்தையிடம் சொல்ல வேண்டிய விஷயம் இருந்தது. ஆனால் அவள் மனம் புண்படாமல் எப்படிச் சொல்வது என்று தயங்கினான். அத்தை கேட்பாளா? அல்லது அப்பாவைப் போலவே கோவித்துக் கொண்டு விவாதத்தைத் திசை திருப்புவாளா என்று தெரியவில்லை. இருந்தும் மெதுவாகச் சொன்னான்:
“அத்த! நீங்களாவது அப்பாவுக்கு இப்படி ஏராளமா தண்ணி வாங்கிக் குடுக்கிறத நிப்பாட்டலாமில்ல! நீங்க குடுக்கிறத நிறுத்தினா அவருக்கு இவ்வளவு குடிக்க வழியில்லியே!”
“ஆமாம்மா! நீதான் இப்படி தண்ணி வாங்கி வாங்கிக் குடுத்து அவங்களக் கெடுக்கிற!” என்று மல்லிகாவும் குறுக்கிட்டுப் பேசினாள்.
“சீ, நீ சும்மா கெட!” என்று அதட்டினாள் அத்தை. “சாப்பிட்டல்ல, போய் கைய களுவு!” மல்லிகா பயந்து போய் சாப்பாட்டுத் தட்டை தூக்கிக் கொண்டு ஓடிவிட்டாள்.
“என்னா பேசிற கணேசு? என்னா பேசிற?” அத்தையின் சுருதி ஏறிவிட்டது. “நான் குடிக்க வாங்கிக் குடுக்கலன்னா என்னா ஆவும் தெரியுமா? ஒங்கம்மாதான் ஒத பட்டு சாவும். அது சம்மதமா ஒனக்கு? இப்பவே ரெண்டு நாளக்கி ஒரு தடவ அடி ஒததான். உங்கம்மா யாருகிட்டயாவது சொல்லியனுப்பும். உடனே கொஞ்சம் காசு அனுப்பி வச்சி சமாதானப் படுத்துவேன். இல்லன்னா உங்கம்மா என்னைக்கோ செத்துப் போயிருக்கும்!”
கணேசன் சாப்பாடு இரங்காமல் தட்டை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அத்தை சொல்வதில் உள்ள கசப்பான உண்மை புரிந்தது. இந்தக் குடும்பத்தைக் கையில் போட்டுக் கொள்ள ஒரு உபாயமாகத்தான் அத்தை அவர்களோடு இத்தனை கரிசனமாக இருக்கிறாள். அப்பாவை மதுப் பித்தராக்கிவிட்டாள். இப்போது அவரால் அதில் இருந்து மீள முடியாது. அத்தை தண்ணி வாங்கி ஊற்றுவதை நிறுத்தி விட்டால் நிலைமை சீரடையப் போவதில்லை. இன்னும் மோசமாகத்தான் போகும்.
அத்தை சுருதி இறங்கி அன்பாகப் பேசினாள்: “கணேசு! இங்க பாரு! உங்க அப்பா அம்மா பத்தின கவல ஒனக்கு எதுக்கு? நான் இவ்வளவு காலம் அவங்களப் பராமரிக்கில? அந்த மாதிரி அதுங்க ரெண்டையும் நான் பாத்துக்கிறேன்! நீ கவலய உடு!”
“அதுக்கில்ல அத்த! எத்தனை நாள் அவங்கள உங்க பொறுப்பில விட்டிருக்க முடியும்? அடுத்த வருஷம் எனக்கு படிப்பு முடிஞ்சிடும். அந்த சமயத்தில அம்மாவும் அப்பாவும் ரிட்டையராயிடுவாங்க. ஒரு வேலையில அமர்ந்தப்புறம் நான்தான அவங்கள வச்சி பாக்கணும். அப்ப இந்த மாதிரியே இருந்தாங்கன்னா நல்லா இருக்குமா?” என்றான்.
“கணேசு! இதெல்லாம் எனக்குத் தெரியாதின்னு நெனச்சிக்கிட்டு இருக்கியா? இதப் பாரு! இந்த ரெண்டு கௌத்தோடயும் நீ இருந்து குப்பை கொட்ட முடியாது. இது ரெண்டையும் நீ மடியில தூக்கி வச்சிக்கிறதுக்கவா நான் இவ்வளவு கஷ்டப்பட்டு ஒன்னப் படிக்க வச்சிக்கிட்டு இருக்கிறேன்? ஒனக்கு அந்தக் கவலயே வேணாம். நீ பாட்டுக்கு படிச்சி உத்தியோகம் பாக்கிறதப் பாரு. இந்த கௌங்கள நான் கவனிச்சிக்கிறேன்!”
“என்ன சொல்றிங்க அத்தை? உங்க வீட்டிலியே கொண்டி வச்சிப் பாத்துக்கப் போறிங்களா?”
“சீச்சீ! நம்ப வீட்ல வச்சிக்கிறதா? நாறடிச்சிருவாங்க! என்ன சொல்றன்னா, இவங்க தோட்டத்த உட்டு வெளியேர்னவொண்ண இவங்களக் குடி வைக்கிறதுக்குன்னு இந்தக் கிள்ளான்லியே ஒரு கம்பத்து வீட்ட வாங்கிப் போட்டிருக்கேன். ஒரு சின்ன தோட்டங்கூடப் போட்டுக்கலாம். வசதியான வீடுதான். அங்க இருந்திட்டுப் போவட்டும். நாம அடிக்கடி போய் பாத்துக்குவோம்!” என்றாள்.
இதை நல்லெண்ணத்தோடு செய்கிறாளா, அல்லது அவர்களை நிரந்தரமாகத் தன் கட்டுப் பாட்டில் வைத்திருப்பதற்காக இப்படி சூழ்ச்சி பண்ணுகிறாளா என்பது அவனுக்கு விளங்கவில்லை.
“அத்தை! நீங்க சொல்றது எனக்கு விளங்குது. ஆனா பையன் படிச்சி முன்னேறிட்டவொடனே அப்பா அம்மாவ கவனிக்காம உட்டுட்டான்னு ஊர்ல பேச மாட்டாங்களா?”
“கணேசு! ஊர்ப் பேச்சா பெரிசு? ஊர்ல உள்ளவங்களா ஒனக்கு ஒதவி பண்ணுனாங்க? இல்ல உங்க அப்பா அம்மாதான் ஒன்னப் படிக்க வச்சிப் பெரிய ஆளா ஆக்கினாங்களா? யார் பேச்சயும் நீ சட்ட பண்ண வேணாம். நான் ஊர்ப் பேச்சையெல்லாம் கேட்டுக்கிட்டு ஒக்காந்திருந்தேன்னா இப்ப உங்க மாமா விட்டுட்டுப் போன இத்தன சொத்தையும் வச்சி ஆக்கியம் பண்ண முடியுமா? எனக்குத் தெரியாதின்னு நெனச்சிக்கிட்டிருக்கியா? இந்த ஊர்ல ஆளு மதிப்போட இருந்தா முன்னுக்குப் பாக்கிற போது ஈ ஈன்னு இளிப்பாங்க. முதுகு திரும்பினவொண்ண “இதப் பாரு இந்தப் படிப்பில்லாத முண்டத்துக்கு எத்தன ராங்கி!”ம்பாங்க. இதையெல்லாம் சட்டை பண்ண முடியுமா? நீ ஏன் அதையெல்லாம் நெனைக்கிற? நீ பாட்டுக்கு படிப்ப முடிச்சி உத்தியோகம் பாத்துக்கிட்டு கல்யாணத்தையும் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இரு. உங்க அப்பா அம்மா எம் பொறுப்பு. என் அண்ணனுக்கு அண்ணிக்கு சாகிற வரையில நான் கஞ்சி ஊத்திறேன். அவங்க ஒன்னத் தொந்திரவு பண்ணாம நான் பாத்துக்கிறேன். சரியா? கவலப் படாத! எங்க சிரி பாக்கலாம்?” என்றாள்.
கை கழுவி வாய் துடைத்துக் கொண்டு அந்தப் பக்கம் வந்த மல்லிகா அவன் தாடையைப் பிடித்து “ஆமா அத்தான், கொஞ்சம் சிரி!” என்று கொஞ்சினாள்.
ஒரு வறண்ட புன்னகையை உதிர்த்தான். அதில் உயிர் இல்லாமல் இருந்தது. மல்லிகாவின் கையை லேசாகத் தள்ளிவிட்டான். அத்தை சொல்லும் முடிவு சுமுகமாக இருந்தது. ஆனால் அதில் ஏதோ ஒரு குறை இருப்பது போலும் இருந்தது. முன்பு அவனுடைய பெற்றோர்களின் பொறுப்புக்களையெல்லாம் அத்தை அபகரித்துக் கொண்டாள். இப்போது மகன் என்ற அவனுடைய பொறுப்புக்களையும் அபகரித்துக் கொள்ளப் பார்க்கிறாள்.
தனது பெற்றோர்களின் பொறுப்புக்களை அவள் ஏற்றுத் தன்னை வளர்த்து ஆளாக்கியதில் சம்மதம் இருந்தது. ஆனால் தனக்கு வயது வந்து வசதிகளும் வரும் காலத்தில் தனக்குரிய பொறுப்புக்களையும் அவள் ஏற்றுக் கொள்ள முன் வந்திருப்பது வேண்டாததாகத் தோன்றியது. அப்படியானால் தான் என்ன அத்தையின் விளையாட்டுக்களுக்கு ஏற்ப தலையாட்டுகின்ற ஒரு பொம்மையா? அதில் தனக்குப் பெருமை இல்லை எனத் தோன்றியது.
அவன் அப்பா நேற்றிரவு வாயிலிருந்து சோறு தெறிக்கப் பேசிய பேச்சு நினைவுக்கு வந்தது: “நீயும் அவ வூட்டுல ஒக்காந்துதான சாப்பிட்ற? அது ஒனக்கு வெக்கமா இல்லியா? நீ என்னைக்காச்சும் எனக்குக் காசு குடுத்திருக்கியா? ஒன்னால எனக்கு என்ன பிரயோஜனம்? மூணு புள்ளைங்கள பெத்து எனக்கு என்ன பிரயோஜனம்? யாராவது என்னக் கவனிக்கிறிங்களா?”
அத்தையிடம் மீண்டும் பேசினான்: “அதுக்கு இல்ல அத்த! நீங்க அவங்க மேல அன்பு காட்றது சரி! ஆனா நாளைக்கு மல்லிகாவுக்குக் கல்யாணம் காட்சின்னு ஒண்ணு நடந்த பிறகு அதும் அது புருஷனும் எதுக்கு இந்தக் கௌங்கள கட்டிக்கிட்டு மாரடிக்கிறிங்கன்னு கேட்டா என்ன செய்விங்க?”
அத்தை அதிர்ச்சியடைந்து அவனைப் பார்த்தாள். மல்லிகாவும் ஒன்றும் புரியாமல் குழம்பி அவனைப் பார்த்தாள். கொஞ்ச நேரம் அங்கு குழப்பமான மௌனம் நிலவியது. அப்புறம் அத்தை திடீரென்று வெடித்துச் சிரித்தாள். எதற்குச் சிரிக்கிறாள் என கணேசனுக்குப் புரியவில்லை.
“என்ன அத்த! இது சிரிக்கிற விஷயமா?” என்று கேட்டான்.
“ஆமா! சிரிக்காம பின்ன என்ன பண்றது? கணேசு, ஒன் மனசில இருக்கிறது இப்பதான் எனக்குப் புரியிது! ஏன் புள்ள இப்படி பயந்து பயந்து தயங்கித் தயங்கிப் பேசுதுன்னு மனசுக்குள்ள நெனச்சிக்கிட்டே இருந்தேன். இப்பதான் புரியிது!”
“என்ன புரியிது அத்த?”
“அதாவது, எங்கடா இந்த மல்லிகாவ எனக்குக் குடுக்காம வேற ஆளுங்களுக்கு அத்த கட்டி வச்சிறப் போறாளோங்கிற பயம் ஒனக்கு வந்திருக்கில்ல கணேசு? அப்படி ஆயிட்டா இந்த கௌட்டு அப்பாவையும் அம்மாவையும் யார் வச்சி பாக்கப் போறாங்க அப்படிங்கிற கவல வந்திருக்கில்ல கணேசு? அப்படித்தான? சொல்லு!”
குழம்பியிருந்தான். அத்தை வேறு மாதிரி அர்த்தம் பண்ணிக் கொண்டாள். இதற்கு ஆமாம் என்று சொல்வதா இல்லையென்று சொல்வதா என்று யோசித்துச் சொன்னான்: “அத்த! மல்லிகாவுக்கு என்ன விட ஒசந்ததா எத்தனையோ மாப்பிள்ளங்க கெடைப்பாங்கதான். நீங்க விருப்பம் போல கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியதுதான!”
“கணேசு! ஒனக்கு அந்த பயமே வேணாம். உங்கிட்ட சொத்து இல்ல, சொகம் இல்லன்னு எனக்குத் தெரியும். உன் அப்பா அம்மா முன்ன நின்னு ஒனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிற நெலமையில இல்லன்னும் எனக்குத் தெரியும். அவங்க எனக்கு சமமான அந்தஸ்து உள்ள ஜனங்க இல்லன்னும் தெரியும். ஆனா ரத்த சொந்தம் விட்டுப் போகுமா? நான் விட்ருவேனா? எத்தன ஒசந்த மாப்பிள்ளங்க இருந்தா என்னா? அதெல்லாம் எனக்குக் கால் தூசு. மல்லிகா ஒனக்குத்தான்னு அவ பொறந்தப்பவே போட்டு வச்ச கணக்கு. அத யாரு மாத்திறது?”
கணேசன் அயர்ந்து போயிருந்தான். மல்லிகா தனக்கு ஒத்த பெண் அல்ல என்று சொல்ல வாய் வரவில்லை. படிப்பிலும் அறிவிலும் முதிர்ச்சியிலும் அவள் இணையானவள் அல்ல. அழகில் கூட இணையானவள் இல்லை. உட்கார்ந்தே சாப்பிட்டு ஊளைச் சதை வைத்துப் போயிருக்கிறாள். அளவாகச் சாப்பாட்டு பயிற்சி பண்ணி உடம்பை இரும்பாக வைத்திருக்கும் அவனுக்குப் பக்கத்தில் அவள் புளி மூட்டை போல இருந்தாள். உணர்வில் அனுதாபமும் பாசமும் காட்டப்பட வேண்டிய ஒரு வெகுளித் தங்கையாக மண்டுத் தங்கையாக மனதில் நின்றாள். அண்மையில் அகிலா வந்து எல்லாவற்றுக்கும் அவனுக்கு இணையாக மனதுக்குள் உட்கார்ந்தவுடன் தனக்கு வாழ்க்கைத் துணையாக இன்னொருத்தியை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.
ஆனால் அத்தை மல்லிகாவை எங்கோ தூக்கி வைத்திருக்கிறாள். மல்லிகாவின் தகுதிக்குத் தன் தகுதி குறைவாக இருப்பதாக நினைக்கிறாள். அப்படித் தகுதி குறைந்திருந்தும் உன்னை ரத்த சொந்தத்தால் மாப்பிள்ளையாக்கிக் கொள்ளத் தயாராக இருக்கிறேன் என்று சலுகை காட்டிப் பேசுகிறாள். அத்தைக்கு என்ன பதில் சொல்ல முடியும்?
இதை வேறு வகையில் அத்தைக்கு விளக்க வேண்டும் என எண்ணினான். தன் மனதில் என்ன இருக்கிறது என்பதை எப்படியாவது அவளுக்கு உணர்த்தி அவள் மனதை மாற்றி விட வேண்டும். இதை உரிய நேரத்தில் செய்யாவிட்டால் இது முற்றிப் போகும். காலம் கடந்து விடும்.
“அத்தை! பொறக்கும் போது கணக்குப் போட்டு வைக்கிறதுங்கிறதெல்லாம் அந்தக் காலத்தில. இந்தக் காலத்தில பிள்ளைங்களோட மனசப் பொறுத்துத்தான ஜோடி அமையும்? ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் விரும்பிறது, மனசு ஒத்துப் போறது முக்கியம் இல்லியா? அதக் கேட்டுத் தெரிஞ்சிக்க வேணாமா? பெரியவங்க மட்டும் முடிவு பண்ணிட்டா போதுமா?” என்றான்.
அத்தை அவனை குழப்பமாக வெறித்துப் பார்த்தாள். அப்புறம் மீண்டும் வெடித்துச் சிரித்தாள்.
“என்ன அத்த, நான் சீரியசாப் பேசிக்கிட்டிருக்கேன் நீங்க சிரிக்கிறிங்கள!”
“சிரிப்புத்தான் வருது கணேசு ஒம் பேச்சக் கேட்டா! அதாவது, எங்கடா இந்த மல்லிகா வேற யாரையாவது மனசில வச்சிக்கிட்டு இருக்காளோன்னுதான கேக்கிற? ரெண்டு வருஷம் இப்பிடிப் பிரிஞ்சி போயி பினாங்கில இருந்திட்டமே, இவ வேற ஆளத் தேடிக்கிட்டாளான்னு ஒனக்கு கவலை வந்திரிச்சி, அப்பிடித்தான? ஏன் கணேசு? எம்பிள்ளய எனக்குத் தெரியாது? நான் அப்படியா பிள்ளய வளத்திருப்பேன்?”
மீண்டும் அத்தை தப்பாகப் புரிந்து கொண்டாள் என்று தெரிந்தது. மீண்டும் விஷயத்தைத் தலைகீழ் ஆக்கிவிட்டாள். அவளுக்கு விளக்கியாக வேண்டும். “அது இல்ல அத்த…” என்று ஆரம்பித்தவனை வெட்டி நிறுத்தின்னாள் அத்தை. “மல்லிகா! இங்க வாம்மா! நீயே மனசு தொறந்து உங்க அத்தான்கிட்ட சொல்லிடு! உங்க அத்தான் ஒரு வேள உனக்கு வேற ஆள் மேல விருப்பமான்னு கேக்குது! உங்க அத்தான கல்யாணம் பண்ணிக்க ஒனக்கு மனப்பூர்வமா சம்மதமா இல்லையான்னு சொல்லிடு!”
மல்லிகா ஏதோ சொல்ல வாய் திறந்தாள். அத்தை திடீர் என தடுத்தாள். “இரு, இரு! நான் உள்ள போயிட்றேன்! நான் இங்க இருந்தா எனக்குப் பயந்துகிட்டுதான் நீ சொல்றேன்னு உங்க அத்தான் நெனைக்கும்!”
அத்தை விருட்டென்று எழுந்து கை கழுவி விட்டு அறையை நோக்கிப் போனாள். “இப்ப பேசுங்க ரெண்டு பேரும்” என்று கதவைச் சாத்திக் கொண்டாள்.
கணேசன் மல்லிகாவைப் பரிதாபமாகப் பார்த்தான். அவள் முகத்தில் குபீரென்று வெட்கம் ஏறியிருந்தது. “மல்லிகா! உங்கம்மா தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க! நான் சொல்ல வந்து என்னன்னா…”
திடீரென்று வந்து அவன் கையைப் பற்றிக் கொண்டாள். தன் நெஞ்சின் மேல் அதை வைத்து அழுத்திக் கொண்டாள். அவளுடைய மெல்லிய வழவழப்பான மேல்சட்டையின் ஊடே அவள் இள மார்புகளுக்கிடையே அவள் இதயம் படபடவென்று துடித்துக் கொண்டிருந்து அவன் விரல்கள் மூலம் ஊடுருவியது.
கண்களில் நீர் பனிக்க மல்லிகா பேசினாள்: “மாமா! உங்களுக்கு ஏன் இப்படி ஒரு சந்தேகம் வந்திச்சி? சந்தேகம் வர்ர மாதிரி நான் நடந்திக்கிட்டேனா? இப்ப சொல்றேன்! சாமி சாட்சியா, எங்கம்மா சாச்சியா நான் ஒங்களத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன். அப்படி ஒரு வேள நீங்க எனக்கு புருஷனா கிடைக்காமப் போனா நான் தற்கொலை பண்ணிக்கிட்டு செத்தே போயிடுவேன் மாமா! இது சத்தியம், இது சத்தியம்!”
********
——————————————————————————–
24
“காதல் என்பது இத்தனை சிக்கலானதாக இருக்கும் என நான் நினைக்கவே இல்லை” என்றான் கணேசன். ஜெசிக்கா வாய்விட்டு சிரித்தாள். அவள் வாயில் பாதி கடியுண்ட மெக்டோனால்ட்ஸ் ஹேம்பர்கரிலிருந்து தக்காளிச் சட்டினி சிதறித் தட்டில் விழுந்தது.
“காதல் என்பது மிகவும் சுலபமானது என நினைத்துக் கொண்டாயா? இந்த ஹேம்பர்கர் போல நினைத்தவுடன் வாங்கி சிரமமில்லாமல் சாப்பிட்டு நிம்மதியாக ஏப்பம் விடலாம் என நினைத்தாயா? சலித்துவிட்டது என்று தோன்றும்போது தூக்கி அதோ இருக்கிற குப்பைத் தொட்டியில் வீசி விட்டுப் போய்விடலாம் என நினைத்தாயா?” என்று அவனைக் கேட்டாள்.
வளாகத்துக்குத் திரும்பி வந்ததிலிருந்து கணேசனுக்கு முதுகை முறிக்கின்ற வேலைகள் இருந்தன. அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐசெக் ஆசியப் பிரதேச மாநாட்டிற்கான வேலைகள் குவிந்து கிடந்தன. ஐசெக் சங்கத் தலைவரும் பெரும்பாலான செயற்குழு உறுப்பினர்களும் விடுமுறையைப் பாதியில் முடித்துக் கொண்டு இந்த வேலைகளைக் கவனிக்க வெள்ளனத் திரும்பியிருந்தார்கள். ஜெசிக்காவும் திரும்பியிருந்தாள்.
திறப்பு விழாவுக்குக் கல்வி அமைச்சரை அழைப்பதிலிருந்து பேராளர்களுக்கு இருப்பிடம், உணவு முதலிய வசதிகளை ஏற்பாடு செய்யும் பொறுப்புக்களை எல்லாரும் சேர்ந்தே செய்தார்கள். ஏராளமான கடிதங்கள் எழுத வேண்டியிருந்தது. ஏராளமான தொலைபேசி அழைப்புக்கள் செய்ய வேண்டியிருந்தது. பல்கலைக் கழக மாணவர் விவகாரப் பிரிவு அதிகாரிகளை அடிக்கடி சந்தித்துப் பேச வேண்டியிருந்தது. ஏராளமான அரசாங்க அலுவலகங்களிலிருந்து ஏராளமான அனுமதிகள் பெற அலைய வேண்டியிருந்தது.
ஜெசிக்காவும் கணேசனும் அணுக்கமாக இருந்து பணியாற்ற வேண்டியிருந்தது. ஜெசிக்கா முற்றாக மாறிப் போயிருந்தாள். கணேசன் மீது அவளுக்கு இன்னும் அன்பு இருந்தது. ஆனால் முன்பு இருந்த பிரேமை இல்லை. ஒரு சக நண்பன் என்பதைத் தவிர்த்த எந்த உணர்ச்சியையும் அவள் காட்டவில்லை.
அவளுடைய புதிய காதலன் சுதாகரன் ஒரு சிறிய கார் வைத்திருந்தான். அவனுக்கு ஐசெக்கில் எந்த வேலையும் இல்லை என்றாலும் ஜெசிக்காவின் அருகில் இருப்பதற்காக அவனும் வளாகத்திற்கு விடுமுறை முடிவதற்கு முன்னரே திரும்பியிருந்தான். அவனிடம் நிறையப் பணமிருந்தது. ஒவ்வொரு இரவிலும் புதிது புதிதாக உடுத்திக் கொண்டு ஜெசிக்கா அவனோடு இரவு விடுதிகளுக்குப் போய் மறுநாள் காலையில் தூக்கம் மிகுந்த கண்களுடன் வந்து கொட்டாவி விட்டபடியே இருந்தாள்.
மத்தியான வேளைகளில் கணேசனும் அவளும் வேலையிலிருந்து ஓய்வெடுத்துக் கொண்டு அடிக்கடி சாப்பிடப் போனார்கள். தன் காதல் வாழ்க்கையைப் பற்றி அவள் கூச்சமில்லாமல் பேசினாள். அவள் பேசக் கேட்டுக் கேட்டு கணேசனுக்கும் கூச்சம் விட்டுப் போயிற்று. கொஞ்சம் கொஞ்சமாக அவளிடம் தன் அந்தரங்கங்களை அவன் சொல்ல ஆரம்பித்திருந்தான். அன்று மத்தியான வேளையில் ‘மெக்டோனால்ட்ஸ் போய் ஹேம்பர்கர் சாப்பிட்டு வரலாம் வா’ என்று அவள் அவனை இழுத்துக் கொண்டு போயிருந்த வேளையில் மல்லிகாவைப் பற்றி அவளிடம் சொல்ல வேண்டியதாயிற்று. “நீயில்லாவிட்டால் நான் செத்து விடுவேன்” என்று அவள் சொன்னதை ஜெசிக்காவிடம் சொன்னான். அவளை எப்படி சமாதானப் படுத்தி மாற்றுவது தனக்குத் தெரியவில்லை என்றான்.
அப்போதுதான் ஜெசிக்கா வாயிலிருந்து தக்காளி சாஸ் ஒழுகச் சிரித்தாள். “நானும் அப்படிச் சொல்லியிருந்தால் ஒரு வேளை உன்னைத் தக்க வைத்துக் கொண்டிருக்கலாம், இல்லையா கணேசன்?” என்று கேட்டாள்.
“அந்த அதிர்ஷ்டம் எனக்கு இல்லாமல் போனதே!” என்று சிரித்தவாறு வேடிக்கையாகச் சொன்னான்.
“ஆனால் அதிர்ஷ்டம் எனக்குத்தான். எனக்கு ஒரு அருமையான காதலன் கிடைத்திருக்கிறான் பார். உன்னை விடப் பணக்காரன், புத்திசாலி. இவனை விட்டு உன்னை எப்படிச் சுற்றிக் கொண்டிருந்தேனோ தெரியவில்லை!” என்றாள்.
கணேசனுக்கு அவள் உண்மையாகச் சொல்லுகிறாளா விளையாடுகிறாளா என்பது தெரியவில்லை. “அவனுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம் நான் அவனை விட மென்மையானவன் என்பதாய்த்தான் இருக்க வேண்டும். நான் அவனை விட நல்ல உணர்ச்சி மிக்க காதலனாக இருந்திருப்பேன். அந்த வாய்ப்புத்தான் விட்டுப் போய்விட்டது!” என்றான்.
ஜெசிக்கா அலட்சியமாகச் சிரித்தாள். “சுதா போல தீவிரமான காதலன்தான் எனக்குப் பொருத்தம். யாருக்கு வேண்டும் மென்மை? இப்போது பார், உனது மென்மையால் எந்தக் காதலியை ஏற்றுக் கொள்வது என்று தெரியாமல் தவிக்கிறாய்! உறுதியான முடிவுகள் எதையும் உன்னால் செய்ய முடியவில்லை!” என்று அவனைப் பழித்தாள்.
“அப்படி இல்லை ஜெசிக்கா! என் மனதில் எந்த சந்தேகமும் இல்லை! அகிலாதான் என் காதலி. மல்லிகாவை ஒரு விளையாட்டுத் தோழியாகத்தான் இதுவரை கருதி வந்தேன். அவள் இத்தனை ஆசைகளைத் தானே உருவாக்கி வைத்திருப்பாள் என்று எதிர் பார்க்கவில்லை. அவள் இத்தனை உறுதியாக இருப்பாள் என்றும் நினைக்கவில்லை!”
“அப்படியானால் ‘எனக்கு வேறு காதலி இருக்கிறாள். என்னை விட்டுத் தொலை’ என்று நேராகச் சொல்வதற்கென்ன? என்னிடம் நீ அப்படிச் சொல்லவில்லையா?”
“உன்னிடமும் அத்தனை கொடூரமாகச் சொல்லவில்லையே ஜெசிக்கா. நான் மென்மையானவன் என்று அப்போதே சொன்னேன் இல்லையா? உன்னிடம் மெதுவாகத்தானே எடுத்துச் சொன்னேன்!”
“அப்படியே அவளிடமும் சொல். தற்கொலை செய்து கொள்வேன் என்பதெல்லாம் ஒரு பயமுறுத்தல். ஒரு உத்தி. அவ்வளவுதான். எந்தப் பெண்ணும் அவ்வளவு எளிதில் உயிரை விட்டுவிட மாட்டாள்!”
ஜெசிக்காவின் பேச்சு அவனுக்கு ஆறுதலாக இருந்தது. ஆமாம். அப்படித்தான் இருக்க வேண்டும். கல்யாணத்துக்காகச் சத்தியம் பண்ணுவதையும் தற்கொலைசெய்து கொள்வதையும் இந்த மல்லிகா ஏராளமான மூன்றாந்தரத் தமிழ்ப் படங்களைப் பார்த்துக் கற்றுக் கொண்டிருக்கிறாள். ஆகவேதான் இந்த வசனங்கள் பேசுகிறாள். உண்மை வாழ்க்கை என்று வரும்போது புரிந்து கொள்வாள். அவளிடம் முறையாக எடுத்துச் சொல்ல வேண்டும்.
யோசித்தவாறு ஹேம்பர்கரைக் கடித்துக் கொண்டிருந்த போது அகிலா அடுத்த வாரம் திரும்பி விடுவாள் என்ற நினைப்பு வந்தது.
*** *** ***
வளாகம் கணேசனுக்கு வெறிச்சென்றிருந்தது. ஆனால் விடுமுறையாக இருந்தாலும் வளாகத்தில் மாணவர்கள் நடமாட்டம் இல்லாமல் இல்லை. வளாகத்துக்கு வெளியே இருந்து தொலைக்கல்வி மூலம் படிக்கும் ஓ·ப் கேம்பஸ் மாணவர்கள் நிறைய இருந்தார்கள். விடுமுறையில் மட்டுமே இவர்கள் சில வாரங்கள் வளாகத்துக்கு வந்து விரிவுரையாளர்கள் மூலமாக சில விரிவுரைகள் கேட்டு சந்தேகங்களும் கேட்டுத் தெளிவு பெறுவார்கள்.
அனைவரும் வேலை செய்கின்ற முதிர்ந்த மாணவர்கள். குடும்பம் உள்ளவர்கள். பள்ளிக்கூட நாட்களில் வறுமையாலும் வேறு காரணங்களாலும் உயர்கல்வி பெறும் வாய்ப்புக்களைத் தவற விட்டவர்கள். இப்போது அவர்கள் முகங்களில் உயர்கல்வி பெறுகின்ற தாகம் இருந்தது. நூலகங்களிலும் புத்தகக் கடைகளிலும் அவர்கள் கூட்டமே அதிகமாக இருந்தது.
குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு முழு நேர வேலையும் பார்த்துக் கொண்டு இவர்கள் படிப்பதற்குப் படும் கஷ்டம் கணேசனுக்குப் பரிதாபமாக இருந்தது. விரைவாக முன்னேறி வரும் மலேசியாவில் ஒரு பட்டம் இல்லாவிட்டால் தங்கள் முன்னேற்றம் முடங்கி விடும் என்பதை அவர்கள் கொஞ்சம் தாமதமாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். தங்களைச் சுற்றியுள்ள மற்றவர்கள் முன்னேறுவதைக் காணக் காண தாங்களும் அந்தப் போட்டியில் ஈடுபட வேண்டும் என்னும் மனநெருக்குதல் அவர்களுக்கு அதிகமாகிவிடுகிறது. ஆகவேதான் தற்காலிகமாகத் தங்கள் சுகங்களைத் துறந்து பட்டக் கல்வி பெற வந்திருக்கிறார்கள். சிலருக்கு ஏழு எட்டு வருடங்கள் நீடிக்கும் நீண்ட பயணமாக அது அமைந்து விடுகிறது.
அந்த வகையில் தான் எவ்வளவு அதிர்ஷ்டசாலி என்பதை எண்ண கணேசனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. படிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்தன. படிப்பை கிரகித்துக் கொள்ள மூளையில் போதுமான அறிவு இருந்தது. முன்னேற வேண்டும் என்ற உந்துதல் மனதில் இருந்தது. பல்கலைக் கழகத்தில் எளிதாக இடம் கிடைத்தது. எல்லாவற்றுக்கும் மேலாக தனக்குக் காவல் தேவதையாக ஒரு அத்தை வந்து சேர்ந்தாள்.
கிள்ளானை விட்டுப் புறப்பட்ட போது அத்தை அவனை மிக விசேஷமாகக் கவனித்துக் கொண்டாள். அவனுக்கு மருமகன் ஸ்தானம் உறுதிப் படுத்தப் பட்டுவிட்டதைப் போலவே நடந்து கொண்டாள். ஒவ்வொரு பருவ விடுமுறை முடியும் போதும் அவன் கையில் அவனுடைய கல்விக் கட்டணம் சாப்பாடு அனைத்துக்குமாக இரண்டாயிரம் வெள்ளி கொடுத்ததனுப்புவது வழக்கம். இந்த முறை 500 வெள்ளி அதிகமாகக் கொடுத்தனுப்பினாள்.
“நல்ல பொருளா வாங்கிச் சாப்பிடு, கணேசு! உடம்ப நல்லா பாத்துக்க! எதப் பத்தியும் கவலப் படாத! அத்தை இருக்கேன்ல! எல்லாத்தையும் கவனிச்சுக்குவேன்!” என்று சொல்லி பஸ் நிலையம் வரை வந்து வழியனுப்பினாள்.
“போய் மறக்காம ·போன் பண்ணு மாமா!” என்று கொஞ்சி விடை கொடுத்தாள் மல்லிகா. ஏனோ அவளோடு அவனால் முன்பு போல சரளமாகப் பேச முடியவில்லை. “மாமா! தீவாளி வருது. மறந்திராம வந்திரு!” என்று நினைவூட்டினாள்.
“ஆமா கணேசு! ரெண்டு நாளைக்கு மிந்தியே வந்திரு. நீ ஒண்ணும் புது உடுப்பு வாங்க வேணாம். எல்லாம் நான் எடுத்து வைக்கிறேன். உன் சைசெல்லாம் எங்கிட்ட இருக்கு. இங்க கிள்ளான்ல சௌரியமா வாங்கலாம்!” என்று அத்தையும் உற்சாகமாகச் சொன்னாள்.
“சரி அத்தை!” என்று பஸ் ஏறினான்.
எவ்வளவு மாணவர்கள் இருந்தாலும் திரும்பி வந்ததிலிருந்து கணேசனுக்கு வளாகம் வெறுமையானதாகத்தான் இருந்தது. அகிலா அங்கே இல்லை என்பதே முக்கிய காரணம். அகிலா அவன் வாழ்க்கைக்குள் வந்ததிலிருந்து அவன் மனசுக்குள் புதிய புதிய உணர்ச்சிகள் வந்திருந்தன. அழகுணர்ச்சி அதிகமாக இருந்தது. அவள் பக்கத்தில் இருந்த வரை வளாகத்தின் அழகிய மரங்களிலும் செடிகளிலும், வளாகத்தின் எல்லையிலிருந்த குன்றுகளிலும் எதிர்ப்புறத்திலிருந்த கடலிலும் காதல் பூச்சுப் பூசியிருந்தது. தொட்ட இடத்திலிருந்தெல்லாம் காதல் வாசனை வந்தது. அவள் இல்லாத இந்த வேளைகளில் இந்த அழகெல்லாம் வீணாகப் போவது போலத் தோன்றியது. இத்தனை பரபரப்பான வேலைகளுக்கிடையிலும் அவன் மனதைத் தனிமை பிழிந்து கொண்டிருந்தது.
அவன் மனதைப் பிழிய உண்மையில் பல விஷயங்கள் இருந்தன. கிள்ளான் போய் பெற்றோர்களைப் பார்த்து அத்தையையும் பார்த்து வந்ததிலிருந்து அவன் மனதில் ஒருவித புகை கவ்வியிருந்தது. அவனுடைய வாழ்க்கையில் புதிய குழப்பமான திருப்பங்கள் உருவாகியிருக்கின்றன என்று தோன்றியது. எதிர்காலத் திசை தெளிவாகத் தெரியவில்லை.
மல்லிகா எப்போது இந்தத் திருமண விஷயத்தை இவ்வளவு நிச்சயமாக மனதில் கொண்டாள் என்று அவனுக்குப் புரியவில்லை. அவள் மூக்கில் சளி ஒழுக உருளைச் சக்கரம் வைத்து ஓட்டிக் கொண்டிருந்த நாள் முதல் அவளை அவனுக்குத் தெரியும். அவன் அவளோடு ஆயிரம் தடவை சண்டை போட்டிருக்கிறான். நூற்றுக் கணக்கான தடவை தலையில் கொட்டி அழ வைத்திருக்கிறான். அவளும் கையில் கிடைத்ததைத் தூக்கி அடித்து அவனை விரட்டியிருக்கிறாள்.
அத்தை உத்தரவிடும் நேரத்திலெல்லாம் அவளுக்குப் பாவாடை கட்டி சட்டை போட்டு விட்டிருக்கிறான். முகத்திற்குப் பௌடர் பூசி விட்டிருக்கிறான். அவளுக்காகப் பரிந்து மற்ற பிள்ளைகளிடம் சண்டை போட்டிருக்கிறான். அவளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து அதைச் சரியாகச் செய்யாத போதெல்லாம் அவளுக்குத் தண்டனை கொடுத்து வாத்தியாராக இருந்திருக்கிறான்.
அவள் மேல் பாசம் உண்டு. அன்பு உண்டு. ஆனால் காதல்? அது எந்த நாளும் வந்ததில்லை. அவள் புஷ்பித்து அவள் அங்கங்களில் செழிப்பு பூசி அவள் முகத்தில் புதிய வெட்கம் வந்த போது கூட அவையெல்லாம் தனக்கு என அவன் நினைத்ததில்லை. அவள் அணுக்கம் அவனுக்கு எந்த நாளும் மோகம் ஊட்டியதில்லை.
வீட்டில் அத்தையும் மற்றவர்களும் அவர்களுக்கு முறை வைத்துப் பேசும் போதும் “கட்டிக்கிறியா? கட்டிக்கிறியா?” என்று கேட்ட போதும் அதை ஒரு பெரும் விளையாட்டு என்றுதான் நினைத்திருக்கிறான்.
மல்லிகாவுக்கும் அவனைப் பற்றி அதே நினைப்புத்தான் இருக்கும் என்பதைத் தவிர வேறு மாதிரி அவனால் நினைக்க முடியவில்லை. அத்தை பேசும் இந்தத் திருமண விளையாட்டுப் பேச்சுக்களை மல்லிகாவும் விளையாட்டு என்று புறக்கணித்திருப்பாள் என்றுதான் நம்பினான். ஆனால் அது சரியில்லை என்று இப்போது விளங்கிவிட்டது.
மல்லிகாவும் தானும் கணவன் மனைவியாகவா? முடியவே முடியாது என அவன் மனம் சொல்லியது. அத்தை இதற்காகத் திட்டம் போட்டிருக்கலாம். எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது அப்படித்தான் தெரிகிறது. பல வருடங்களுக்கு முன்பிருந்தே இப்படி ஒரு திட்டத்தை மனதில் வைத்துக் கொண்டு தன் பெற்றோர்களை வளைத்துத் தன் கைக்குள் போட்டுக் கொண்டிருந்திருக்கலாம். அவர்கள் மேல் அத்தைக்கு இத்தனை அக்கறை பொங்கி வழிவதற்கு இதுதான் காரணம் என விளங்கியது.
ஆனால் தன்னோடு தோழியாகவும் தங்கையாகவும் பழகிய மல்லிகாவுக்கும் இந்த கல்யாண நோக்கம் இருக்கும் என்பது அவனுக்கு வேடிக்கையாக இருந்தது. அத்தை இதை ஆழமாக விதைத்திருக்கிறாள். மல்லிகாவுக்கு வேறு வெளி உலகத்தைக் காட்டவில்லை. வேறு ஆண்களோடு சரளமாகப் பழகி தனக்கு வேண்டியவனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள அவளுக்கு ஒரு வாய்ப்புக் கொடுக்கவில்லை.
அத்தையின் உலகமும் மிகக் குறுகியதுதான். தானாகக் குறுக்கிக் கொண்டாள். அவளுக்கு ஆடம்பரமாக வாழத் தக்கப் பணம் இருந்தது. ஆனால் அந்த மாதிரி வாழுகின்ற மற்றவர்களுடன் சமமாகப் பழகப் போதிய அனுபவமோ வளர்ப்போ குடும்பப் பின்னணியோ இல்லை. தன் செல்வத்தைப் பயன் படுத்தித் தனக்குத் தாளம் போடுபவர்களும் தலையாட்டுபவர்களுமாக இரண்டு மூன்று கொடுக்கல் – வாங்கல் ஆட்களை மட்டும் வெளி உலகத் தொடர்புக்கு வைத்துக் கொண்டாள்.
குடும்பம், உறவு என்று சொல்வதற்குத் தன் பெற்றோர்களை வைத்துக் கொண்டாள். அவர்கள் அவள் கையில் வாங்கிச் சாப்பிட்டு அவளால் வாழுகிறார்கள். அவள் சொன்னதற்கு மறுப்பிருக்காது. அவர்கள் மேல் ஆதிக்கம் செலுத்துகின்ற ஆனந்தம் அத்தைக்கு இருந்தது.
அதோடு கணேசன் என்ற அவளுக்கு வேண்டிய முக்கியமான பொருளும் அங்கிருந்தது. கணேசனை மருமகனாக வளைத்துப் போட்டு விட்டால் அத்தையின் எதிர்காலம் பற்றிய பிரச்சினையும் வாரிசுப் பிரச்சினையும் தீரும். அந்நியர்களோடு போய் அவள் சம்பந்தம் வைத்துக் கொள்ள வேண்டியதில்லை. அவர்களோடு சமமாகப் பழக வேண்டிய நாகரிகம் தனக்கு இல்லையே என்ற தாழ்வு மனப்பான்மையில் உழலத் தேவையில்லை. கணேசனையும் கணேசனின் பெற்றோர்களையும் அவள் முழுதாக ஆதிக்கம் செலுத்த முடியும். சாகும் வரை இந்தக் குடும்பத்தின் தலைவியாகவும் அதிகாரியாகவும் இருந்து சாக முடியும்.
அத்தை போட்டிருக்கிற இந்த “மாஸ்டர் பிளேனுக்கு” தான் ஒரு வெறும் கருவிதான் என கணேசனுக்குப் புரிந்தது. அது புரிந்ததும் அத்தையின் மேல் அவனுக்கு இத்தனை நாள் இல்லாத பெரும் வெறுப்பும் வந்தது.
இந்த அத்தை தன்னை இத்தனை நாள் இப்படிப் பயன்படுத்திக் கொண்டது போகட்டும். இனியும் அதற்குத் தான் தலையாட்டிக் கொண்டிருக்க முடியாது என எண்ணினான். அத்தையின் இந்த ஆதிக்கத்திலிருந்து விலக வேண்டும். படிப்புச் செலவுக்கு இப்போதைக்கு அவளைத்தான் நம்பிக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. ஆனால் அது பெரிய விஷயம் அல்ல. இன்னும் ஒரு வருஷம்தான் இருக்கிறது. படிப்புக்குக் கடன் வாங்கலாம். பகுதி நேர வேலை பார்த்துச் சம்பாதிக்கலாம். எத்தனையோ மாணவர்கள் அப்படித்தான் படிக்கிறார்கள்.
தன் பெற்றோர்களையும் அவளுடைய ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க வேண்டும். அதில் பல சிரமங்கள் இருக்கின்றன. அப்பாவிடமும் அம்மாவிடமும் கடுமையாகப் பேசி அப்பாவுடைய குடிப் பழக்கத்தை மாற்ற வேண்டும். படிப்பு முடிந்ததும் அவர்களை அடிமை வாழ்க்கையில் கட்டிப் போட்டிருக்கின்ற அந்தத் தோட்ட வாழ்க்கையிலிருந்து வெளியேற்றிப் பட்டணப் புறத்தில் தன்னோடு வைத்துக் கொள்ள வேண்டும்.
ஆனால் மல்லிகா? அவளை அவன் புண் படுத்த விரும்பவில்லை. பச்சைப் பிள்ளை. ஒருவேளை நன்றாக எடுத்துச் சொன்னால் கேட்டுக் கொள்வாள். உலகம் பெரியது. அவளுக்கேற்ற எத்தனையோ மாப்பிள்ளைகள் கிடைப்பார்கள். “நானே உனக்கு என்ன விட அழகான, அன்பான, எடுத்ததுக்கெல்லாம் ஒன் தலையில கொட்டாத மாப்பிள்ளையா பாத்து கட்டி வைக்கிறேன் மல்லிகா” என்று சொல்லி அவள் மனதை மாற்ற வேண்டும். அவள் வெகுளி. கண் முன் கண்டதைப் பிடித்துக் கொண்டிருக்கிறாள். அவள் காணாதவை, அவள் தாய் அவளுக்குக் காணாமல் ஒளித்தவை, ஆயிரம் இருக்கின்றன என அவளுக்குக் காட்ட வேண்டும். இந்த வருடம் தீபாவளிக்கு கிள்ளான் திரும்பும் போது கொண்டாட்டப் பரபரப்புக்கள் ஓய்ந்த பின் அத்தையிடம் உட்கார்ந்து விரிவாகப் பேசவேண்டும். முடிந்த வரை அவள் கோபித்துக் கொள்ளாமல் இதமாக… இயலாவிட்டால் உறுதியாக, தேவையானால் முரட்டுத் தனமாக.
“அவ்வளவு திமிர் வந்திருச்சா ஒனக்கு! இனிமே ஒரு சல்லிக் காசு ஒனக்கோ ஒங்குடும்பத்துக்கொ குடுக்க மேட்டேன்!” என்பாள்.
“உங்க பணத்த நீங்களே வச்சிக்கிங்க! நான் கடன் வாங்கி படிச்சிக்கிறேன். வேல செய்ய ஆரம்பிச்சதும் உங்க கடன தூக்கி எறிஞ்சிட்றேன்!” என்று சொல்ல வேண்டும்.
எல்லாவற்றுக்கும் அகிலாவின் துணை வேண்டும். தன் பெற்றறோர்களைத் திருத்த, அவர்களைப் பராமரிக்க, அத்தையோடு பேசி வெல்ல, மல்லிகாவுக்கு வெளி உலகத்தைக் காட்ட, எல்லாவற்றிற்கும் தனக்கு பக்க பலமாக நிற்க அகிலா அவனுக்கு வேண்டும்.
இன்னும் இரண்டொரு நாட்களில் அகிலா திரும்பி விடுவாள். அவளோடு உட்கார்ந்து ஆழமாகப் பேச வேண்டும். தன் மனத்தையும் வாழ்க்கைப் பின்னணியையும் திறந்து காட்ட வேண்டும். “என் கையை உறுதியாகப் பிடித்துக் கொண்டு என் பக்கத்தில் எந்நாளும் நில் அகிலா!” என்று சொல்ல வேண்டும்.
ஆனால் காதல் அரும்பி வருகின்ற இந்த நேரத்தில் குடும்பத் துயரங்களை இப்படி விரிவாகச் சொல்ல வேண்டுமா? காதல் என்ற இந்தத் தளிர் ஒரு மகிழ்ச்சியான காற்றை சுவாசித்து, ஆசை, மோகம் என்ற நீர் பருகி உறுதியான செடியாக வளர காலம் தர வேண்டாமா? அதற்குள் “என் பெற்றோர் இப்படி!” “என் அத்தை மகள் இப்படி!” என்று சொல்லி அந்த இன்ப நேரங்களைக் கெடுத்துக் கொள்வதா?
அகிலா அவற்றைத் தாங்குகிற பெண்ணா? அல்லது இந்தத் தொல்லைகளெல்லாம் வேண்டாம் என்று ஓடுகிற பெண்ணா? தெரியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிந்து கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் கொஞ்சம் காலம் கழித்துச் சொல்லலாம். அவசரமில்லை. சிக்கல்களை அவிழ்க்க இன்னும் ஒரு வருடம், ஒன்றரை வருடம் இருக்கிறது.
முதலில் அகிலாவை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். அவள் அணுக்கத்தை அனுபவிக்க வேண்டும். அவள் ஸ்பரிசத்தில் மயக்கம் காண வேண்டும். மல்லிகாவைப் போல அல்லாமல், ஜெசிக்காவைப் போல அல்லாமல் பார்த்த அளவில் போதை தரும் ஓவியமாக இருக்கிறாள். பக்கத்தில் போனால் மோகம் தரும் மோகினியாக இருக்கிறாள்.
அகிலாவுக்காகத் தவிப்புடன் காத்திருந்தான்.
***
——————————————————————————–
25
“என்ன உங்களுக்குப் பிடிச்சிருக்கா?” என்று கேட்டாள் அகிலா.
கடலை ஒட்டியிருந்த தென்னை மரங்களின் கீற்றுக்களை சிலுசிலுவென்று ஆட்டி விளையாடிக் கொண்டிருந்த முன்னிரவுக் காற்றில் புரட்டாசி மாதத்து முழு நிலவு வானத்தில் பழுத்து ‘ஆ’வென்று தொங்கிக் கிடந்தது. பினாங்கின் வட நீரிணைக் கடலைப் பாலாக்கி அந்த நீண்ட பினாங்குப் பாலத்துக்குப் பொன் முலாம் பூசி “இந்தக் காட்சிகளெல்லாம் உனக்காகத்தான், உனக்காகவேதான்” என்று இயற்கை அள்ளி வழங்கியிருந்த ஆனந்தம் அவளை இந்தக் கேள்வியைக் கேட்க வைத்தது. அவர்கள் வி.சி. பாறையை ஒட்டிய புல் தரையில் உட்கார்ந்திருந்தார்கள். கணேசனின் கையை தன் கையில் இறுகக் கோத்துக் கொண்டு தன் மடியில் உரிமையோடு வைத்துக் கொண்டிருந்தாள் அகிலா. இந்த இடத்தில் முன்பும் பல முறை அவள் கணேசனோடு உட்கார்ந்து பேசியிருக்கிறாள். ஆனால் இந்தப் பூரண நிலவின் முழு மந்திரமும் இன்றுதான் அவளுக்குப் புலனானது. இது இளம் உள்ளங்களுக்கான போதை மருந்து. காதலுக்கான சொக்குப்பொடி. காவியங்களுக்கான முதலடி. அந்தச் சூழ்நிலையில் அந்தக் கேள்வியைத்தான் கேட்க அவளுக்குத் தோன்றியது.
“என்ன உங்களுக்குப் பிடிச்சிருக்கா?”
அவனுக்கு அவளைப் பிடித்திருக்கிறதென்பது தெரிந்துதான் இருந்தது. ஆனால் அதை அவன் வாயால் கேட்க வேண்டும் போல் இருந்தது. இந்த இரவு வேளைக்கான இன்ப சங்கீதமாக அந்தப் பதில் இருக்கும் என்று நினைத்தாள்.
“சொல்லுங்க! என்ன உங்களுக்குப் பிடிச்சிருக்கா?”
அவன் அவள் தோள்களோடு அழுத்தி உரசிச் சிரித்தான். “உன்னைப் பிடிக்காமலா இப்படி இந்த இருட்டுல உன்னோட உக்காந்திருக்கேன் அகிலா?”
“கேள்விக்கு பதில் கேள்வியா சொல்லாம நேரா பதில் சொல்லுங்க?”
“எப்படி?”
“நான் சொல்ல மாட்டேன். நீங்களே சொல்லுங்க?”
“இன்னும் என் மேல நம்பிக்கை இல்லியா?”
“பாத்திங்களா? மறுபடி கேள்விதான வருது? வேண்டாம் முழு வாக்கியமா பதில் சொல்லுங்க!”
சிரித்துச் சொன்னான்: “உன்ன எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அகிலா!”
“என்னைக் காதலிக்கிறிங்களா?”
“இதென்ன கேள்வி?”
“பதில் சொல்லுங்க!”
“ஏன் இத்தன கேள்வி?”
“உங்களுக்கு ஏன் இத்தன மறு கேள்விங்க? பதில மட்டும் சொல்லுங்க!”
மீண்டும் சிரித்துச் சொன்னான்: “உன்னை என் உயிருக்குயிரா காதலிக்கிறேன் அகிலா!”
அவன் மார்பில் நிம்மதியாக முகம் புதைத்தாள். “உயிருக்கு உயிராக” என்பதற்கான சரியான அர்த்தம் என்ன என்று புரியவில்லை. ஆனால் அந்த மாதிரி அர்த்தத்துக்கு அப்பாற்பட்ட உறுதிகள் அந்த நேரத்துக்குப் பொருந்தியிருந்தன.
“நானும் அப்படித்தான் கணேஷ். உங்கள உயிருக்குயிரா காதலிக்கிறேன்!” அவள் கண்களில் கொஞ்சம் கண்ணீர் கட்டியது. முழு நிலவு அதில் கொஞ்சம் கலங்கித் தெரிந்தது.
அதற்கு மேல் அந்த நேரத்தில் அவனிடம் பேச வேண்டும் என்று அவளுக்குத் தோன்றவில்லை. அவன் தன் கையை அவள் கைகளில் இருந்து பிரித்துக் கொண்டு அவள் தோள்களை இறுக அணைத்துக் கொண்டான். அதில் இனந் தெரியாத சுகம் இருந்தது.
“தாயார் அணைத்திருந்த அணைப்பு முண்டு – நான்
தந்தை மடி கிடந்த பழக்கமுண்டு
நீயாரோ நான் யாரோ தெரியவில்லை – இங்கு
நேர்ந்தது என்ன வென்று புரியவில்லை”
என்றோ கேட்ட பாடல் அவள் காதுகளில் கேட்டுக் கொண்டிருந்தது.
இரவுக் காற்றின் குளிர் உடைகளுக்குள் எல்லாம் ஊர்ந்து கொண்டிருந்தாலும் உடல் வெப்பமாக இருந்தது. அவளுடைய கன்னம் அவன் மார்பில் ஒட்டிக் கிடந்தது. அவளுடைய மூச்சு அவன் மார்பில் பட்டு எதிர்த்த போதெல்லாம் அந்தச் சூடு அவள் மேலும் தெறித்தது. அவனுடைய முத்தங்கள் அவள் உதடுகளில் இனித்துக் கொண்டிருந்தன. அவனுடைய சட்டைப் பொத்தானை நெருடியவாறிருந்தாள். இமையை நெறித்து கண்களை உயர்த்திப் பார்த்தால் புன்னகைக் கீற்று விழுந்திருந்த அவன் உதடுகள் தெரிந்தன. மீண்டும் தலை தாழ்த்தியிருந்தாள்.
“என்ன பேச்சையே காணும் அகிலா?”
மீண்டும் பேசாமல் இருந்தாள். “ஏதாகிலும் பேசு என் கண்ணு!” என்றான். பேசாமலே இருந்தாள்.
“என் மேல கோபமா அகிலா?” என்றான்.
“ஏன் கோபப் படணும்?”
“கண்ணுன்னு கூப்பிடதினால!”
“இல்ல கணேஷ்! உங்களுக்கு நான் இவ்வளவு இடம் கொடுத்தாச்சி! இதுக்குப் பிறகா இந்த “கண்ணு”காகக் கோவிச்சிக்கப் போறேன். கோபம் இல்ல. இனிப்பாதான் இருக்கு! மறுபடி கூப்பிடுங்க!”
“என் கண்ணு!” அணைப்பை இறுக்கினான். மீண்டும் மௌனமானாள்.
இதுதான் காதல் என்பதா? இதைத்தானா சினிமாவில் பார்த்து, பாடல்களில் கேட்டு, நாவல்களில் படித்து, தோழிகளுடன் பேசி, இரவில் மெய்மறந்து கனாக் கண்டு, என்று இது விளையும் என்று ஏங்கியிருந்தேன்? என்ன இது? என்ன செய்கிறேன்? இது சரியா? இது ஒளித்து மறைத்துச் செய்யும் குற்றமா? இது என் மனம் இழுக்கும் இழுப்புக்கு நான் ஓடுகின்ற தவறான நடத்தையா? இதுதான் கெட்டுப் போவது என்பதா? நான் இப்போது கெட்டுப் போகிறேனே? கெட்டுப் போவது என்பது ஏன் இத்தனை இன்பமாக இருக்கிறது? இந்த இன்பத்தோடு இந்தக் குற்ற உணர்ச்சி ஏன் வருகிறது? ஏன் அம்மாவின் நினைவு வருகிறது?
*** *** ***
விடுமுறை எப்போது முடியும் எனக் காத்திருந்தாள். ஒருநாளைக்கு முன்னாலேயே பெட்டியை எல்லாம் அடுக்கித் திரும்பத் தயாராக இருந்தாள்.
“நாளைக்கு போனா எப்ப திரும்ப வருவ?” என்று அன்றிரவு அம்மா கேட்டாள். அந்தக் கேள்வியில் வழக்கமான அன்பு இருந்ததை விட ஏதோ ஒரு சந்தேகம் இருந்தது என அகிலாவுக்குத் தோன்றியது.
“பார்ப்போம்மா! நிறைய வேலைகள் இருக்கும். எப்பப்ப ஓய்வு கெடைக்குதோ அப்ப வாரேன்!” என்றாள்.
“தோ இங்க இருக்கிற பினாங்கில இருந்து வர்ரதுக்கு எதுக்கு ஓய்வு? ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவ பஸ் ஏறி வந்திர வேண்டியதுதான?” என்றாள் அம்மா.
“பஸ் ஏறி வர்ரது பெரிசில்ல அம்மா. ஆனா விரிவுரையாளர்கள் குடுக்கிற எசைன்மென்டெல்லாம் வாரக் கடைசியிலதான் செய்ய முடியும். லைப்ரரிக்கும் போய் உக்காந்து ஆறுதலா அப்பதான் படிக்கலாம்!”
“இங்க இருந்த போது நீ வீட்டில இருந்து படிக்கிலியா? அப்படி வீட்டுக்கு வந்து படிக்க வேண்டியதுதான? ஒன் படிப்ப நாங்க கெடுக்கிறமா?” என்று அம்மா மீண்டும் வாதிட்டாள்.
அம்மாவுக்குத் தன்மேல் கடுமையான சந்தேகம் விழுந்துவிட்டது என்று தோன்றியது. ஏன் இப்படிச் சந்தேகிக்கிறாள்? ஏன் இது பற்றி எரிச்சல் படுகிறாள். அன்று இரவு இது பற்றித் தெளிவாகப் பேசியிருந்தாலும் அவள் பயம் இன்னமும் தீரவில்லை என்று தோன்றியது. மகள் கெட்டுப் போவதற்குத் தயாராகிவிட்டாள் என்றே அவள் உள்ளம் கணக்குப் போட்டுவிட்டதாகத் தோன்றியது.
“சரிம்மா! எப்ப எல்லாம் ஓய்வு கிடைக்குதோ அப்ப எல்லாம் வந்திர்ரேன். நீ சொல்றது போல இரண்டு வாரத்துக்கு ஒருமுறை வேணுன்னாலும் கண்டிப்பா வந்திர்ரேன்! அவ்வளவுதான உனக்கு வேணும்? அப்படியே செய்திட்றேன்!” என்றாள்.
அம்மா முறைத்துப் பார்த்தாள். “என்ன கிண்டல் பண்றியா அகிலா?” என்றாள்.
அகிலா பெரு மூச்சு விட்டாள். “அடிக்கடி வரமுடியாதின்னாலும் கோவிச்சிக்கிற! சரி ரெண்டு வாரத்துக்கு ஒருமுற வந்திர்ரேன்னு ஒப்புக் கொண்டாலும் கோவிச்சிக்கிர! நான் என்னதான் பண்றது?”
அம்மா கொஞ்ச நேரம் முறைத்துப் பார்த்தவாறு இருந்தாள். அப்புறம் முகம் சோர்ந்து வேறு புறமாகத் திருப்பிக்கொண்டாள். கண்களைத் துடைத்தாள்.
அகிலா அவள் தோளைப் பிடித்தாள். “ஏம்மா இப்படி சந்தேகப் பட்ற? நான் கெட்டுப் போகணும்னு நெனைச்சா நீ கொடுக்கிற ரெண்டு வார இடை வேளையில கெட்டுப் போக மாட்டேனா? ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவ இங்க வந்து உன்னுடைய விசாரணைகளுக்கு பதில் சொல்லிட்டு நான் திரும்பிப் போயிட்டா உனக்குத் திருப்தியாயிடுமா? உங்கிட்ட பொய் சொல்லி ஏமாத்த எனக்குத் தெரியாதா?”
அம்மாவின் முகத்தை வலுக்கட்டாயமாகத் திருப்பினாள். “இதோ பாரும்மா! ஒரு காலமும் இந்தக் குடும்பத்துப் பேருக்குக் களங்கம் வர்ர மாதிரி நான் நடந்துக்க மாட்டேன். ஆனா அதுக்காக இல்லாத கட்டுப்பாடெல்லாம் போட்டு என்னக் கட்டிப் போட்டுடாதம்மா! மத்த பெண்களப் போல சகஜமா நடந்துக்க எனக்கு சுதந்திரம் கொடு!” என்றாள்.
அம்மா அவளைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள். “எனக்கு உம்மேல நம்பிக்கை இருக்கு கண்ணு! கவனமா நடந்துக்க! அவ்வளவுதான்!” என்று சிரித்தாள் அம்மா.
*** *** ***
இவ்வளவும் பேசிய பின், இத்தனை உறுதி கொடுத்த பின் இப்படிக் கட்டிப் பிடித்துக் கொண்டிருப்பது குற்றமில்லையா என்று மனம் கேட்டவாறே இருந்தது.
விடுமுறை முடிந்து பல்கலைக் கழகத்துக்கு பஸ்ஸில் வந்து பெட்டியுடன் இறங்கியபோது கணேசன் பஸ் நிலையத்தில் அவளுக்காகக் காத்திருந்தான். தோளில் கைபோட்டு வரவேற்றான். பெட்டியுடன் அவளை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு விடுதியில் கொண்டு வந்து விட்டான். அன்று மாலையில் வெளியில் சென்று சாப்பிட்டுவிட்டு இரவில் இந்தப் பௌர்ணமிச் சந்தரனின் ஈர்ப்பில் இங்கு வந்தார்கள். சில வாரங்கள் அவனைப் பிரிந்திருந்ததில் அவன் நினைவு இன்னும் அதிகமாகி ஒரு காட்டுக் கொடி போல தன் மனத்தில் படர்ந்து கிடந்ததை அவளால் உணர முடிந்தது.
தன் உள்ளம் விரும்பியவனை பார்ப்பதும் பேசுவதும் எப்படித் தவறாகும் என்று உள்ளம் எதிர்வாதம் செய்தது. இப்படி இவனோடு தனிமையில் இருப்பது தவறாகுமா? கையைப் பிணைத்துக் கொள்வதும் தோளையும் துடையையும் உரசிக் கொள்வதும் தவறாகி விடுமா? முத்தம் பரிமாறிக் கொள்வது தவறாகுமா? தவறு இல்லையென்றால் தவறு எங்கிருந்து ஆரம்பிக்கும்? அம்மா போட நினைக்கும் கட்டுப்பாடுகளின் எல்லை என்ன? தான் எடுத்துக் கொள்ளவிருக்கும் சுதந்திரத்தின் எல்லைதான் என்ன?
அந்த எல்லைகளைக் கணித்துக் கொண்டா இந்த சந்திப்பு நடக்கிறது? இது போதும்; இதற்கு மேல் வேண்டாம் என்று எந்தக் கட்டத்தில் நான் சொல்ல வேண்டும்? இந்த இரவின் போதைகள் தலைக்கு ஏறிவிட்டால் எல்லா எல்லைகளையும் தாண்டிப் போய்விடுவேனா? மனதில் பயம் வந்தது.
அவன் மார்பில் புதைந்திருந்த முகத்தைப் பிரித்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்தாள்.
“என்ன அகிலா?” இரவில் அவன் வார்த்தைகள் மிருதுவாக வந்தன. அவள் முடியைக் கோதினான்.
“ஏதோ தவறு செய்றமோன்னு அடிக்கடி ஒரு சந்தேகம் வருது கணேஷ்!” என்றாள்.
“காதலிக்கிறது தவறுன்னு சொல்றியா அகிலா? உலகத்தில எல்லாருந்தான காதலிக்கிறாங்க?”
“உலகத்தில எல்லாரும் காதலிக்கிறதில்ல! எவ்வளவு பேரு ஒழுங்கா முறையா அப்பா அம்மா பாத்துக் குடுக்கிற வாழ்க்கைத் துணைய கட்டிக்கிட்டு இருக்காங்க! அப்படி இல்லாம நமக்கு நாமே ஜோடியத் தேடிக்கிறது கொஞ்சம் தறுதலைத் தனந்தானே!”
“எல்லாரும் காதலிக்கிறாங்க அகிலா. தங்கள் உள்ளத்தில தனக்குப் பிடிச்ச ஒரு பெண்ணையோ ஆணையோ காதலிக்கத்தான் செய்றாங்க. ஆனா பலருக்கு அந்தக் காதல் உள்ளத்தை விட்டு வெளியேற முடியிறதில்ல. ஆனா அதினால என்ன? நாம் பெற்றோர்கள் சம்மதம் கேட்டுத்தான கல்யாணம் பண்ணிக்கப் போறோம்! ஆனா அதுக்குக் காலம் வரணுமில்லியா?”
கால் பக்கத்தில் பனி ஈரம் தோய்ந்திருந்த ஒரு புல்லைப் பிடுங்கியவாறு சொன்னாள்: “அம்மா இந்த முறை என்ன பல மாதிரி கேள்வி கேட்டாங்க?”
“எப்படி?”
“அந்தப் பையன் ஏன் இத்தன தடவ உனக்குப் ·போன் பண்ணனும்னு கேட்டாங்க!”
“ஒரு நண்பர்னு சொல்ல வேண்டியதுதான?”
“சொன்னேன். அவங்களுக்கு திருப்தி ஏற்படல! ‘நீ இப்படி ஆம்பிள பசங்களோட சுத்திறதுக்குத்தான் நாங்க உன்னக் கொண்டி யுனிவர்சிட்டியில விட்டமா?’ன்னு பொரிஞ்சி தள்ளுனாங்க!”
“நீ என்ன சொன்ன?”
“ஆண்களும் பெண்களும் கலந்து படிக்கிற இடத்தில கலந்துதான் பழக வேண்டியிருக்கு. இதை எப்படித் தடுக்கிறதின்னு தெரியிலன்னு சொன்னேன்”
கணேசன் கொஞ்சம் யோசித்துச் சொன்னான்: “அப்ப உனக்கும் மனந்திறந்து “அவர் என் காதலர்னு” சொல்ல முடியில, இல்லியா?”
அவனை நிமிர்ந்து பார்த்தாள். “முடியில கணேஷ்! அதுக்குக் காலம் வரல. அம்மாகிட்ட இப்படிச் சொன்னா ஒடைஞ்சி போவாங்க. அதோட எனக்கே என் மனசுக்கு நிச்சயமா தெரியில!” என்றாள்.
“என்ன தெரியல?”
“இந்தக் காதல் எவ்வளவு தூரம் சரி, எவ்வளவு தூரம் பிழைன்னு தெரியல. ரொம்ப சீக்கிரமா பழகி ரொம்ப சீக்கிரமா முடிவுக்கு வந்திடறோமோன்னு ஒரு சந்தேகம்! இதுக்கு இன்னும் கொஞ்சம் கால அவகாசம் கொடுத்து பின்னால எல்லாத்தையும் உறுதி செய்யலாமேன்னு ஒரு தயக்கம்!”
“சரிதான் அகிலா! கால அவகாசம் கொடுக்கிறதில எனக்கு ஒண்ணும் ஆட்டசேபனை இல்ல! ஆனா உங்கம்மா இப்படி அவசரமா இந்தப் பேச்ச எடுக்காம இருந்திருந்தா இந்தப் பிரச்சினையே வந்திருக்காதில்ல! அவங்க அவசரப்பட்டு உன்ன இப்படி நேருக்கு நேர் கேக்கப் போயித்தான இப்படி இக்கட்டான நிலம வந்திருக்கு!”
“அவங்களோட பயம் எனக்குப் புரியிது கணேஷ். நாலு பேரு நம்மப் பார்த்திட்டு பேசிட்டா அவங்க குடும்ப மானம் போயிடும்னு அவங்க பயப்பட்றாங்க!”
“உங்க அப்பா என்ன சொன்னார்?”
“அப்பா ரொம்ப பரந்த மனம் உள்ளவரு! ‘நீ யாரோட வேணுன்னாலும் பழகு. ஆனா ஒரு வேள பல்கலைக் கழகத்தில நீ எந்த ஆணோடயாவது ஒரு நண்பன்கிற அளவுக்கு மேல பழக ஆரம்பிச்சிட்டேன்னா அந்தப் பையன வீட்டுக்குக் கொண்டு வந்து எங்களுக்கு அறிமுகப் படுத்தி வச்சிரு’ன்னு சொன்னாரு”
“அப்புறம் ஏன் இப்ப பயம் அகிலா?”
அவன் முகத்தை நேராகப் பார்த்தாள். “கண்டிப்பா நாம் கல்யாணம் பண்ணிக்குவோமா கணேஷ்?”
“எனக்கு எந்த சந்தேகமும் இல்ல! உனக்கு?”
தலை குனிந்தாள். “எனக்குக் குழப்பமா இருக்கு கணேஷ். உங்கள எனக்குப் பிடிக்குது. உங்களோட இப்படி ஒட்டியிருக்கப் பிடிக்குது. ஆனா கல்யாணங்கிறது நான் தீர்மானிக்க முடியாத விஷயம் போலவும், எனக்காக இதுவரைக்கும் எல்லாமும் செஞ்சிக் கொடுத்திருக்கிற பெற்றோர்கள் தீர்மானிக்க வேண்டிய விஷயம் போலவும் இருக்கு!”
“அப்ப அவுங்கிட்ட கூடிய சீக்கிரம் பேசித் தீர்மானிச்சிக்குவோமே!”
“அப்படி செய்யலாம். அதினாலதான் கூடிய சீக்கிரம் உங்கள வீட்டுக்கு வரச் சொல்லலாம்னு இருக்கேன்!”
“எப்ப?”
“அடுத்த மாசத்தில தீபாவளி வருதுல்ல. அன்னைக்கு வாங்களேன். தீபாவளிக்கு விருந்துக்கு வந்த மாதிரியும் இருக்கும். எங்க பெற்றோர்கள சந்திச்ச மாதிரியும் இருக்கும்.”
ஒரு திடீர்க் காற்றின் விசிறலில் இலைகள் சலசலத்தன. பௌர்ணமி நிலவு இன்னும் மேலே ஏறியிருந்தது. வானில் கொஞ்சம் கருமேகங்கள் கூடியிருந்தன. தூரத்தில் கடலில் இரவுப் படகு ஒன்று “டுப் டுப்” என்று சத்தம் எழுப்பிக்கொண்டு பாலத்தின் அடியில் போய்க் கொண்டிருந்தது.
“சரி அகிலா!” என்று அவன் சொன்னான். அந்தச் சொற்களில் கொஞ்சம் சோர்வும் தயக்கமும் இருந்தது போல அகிலாவுக்குத் தோன்றியது.
***
——————————————————————————–
26
தீபாவளி அவன் நினைத்ததைவிட அதிவேகமாக வந்து கொண்டிருப்பதாகத் தோன்றியது. அதற்கு முக்கிய காரணம் அவன் முன் குவிந்து விட்ட வேலைகளும் இடையறாத அலைச்சலும்தான். அவனுடைய நிறுவன நிர்வாகப் பாடத்திற்காக இந்தப் பருவத்தில் கேஸ் ஸ்டடி (case-study) ஒன்று செய்ய ஒன்று செய்ய வேண்டியிருந்தது. அதற்காகப் பினாங்கின் பழம் பெரும் நிறுவனமான பர்காத் ஸ்டோர்ஸை அவன் தேர்ந்தெடுத்திருந்தான். அந்த நிறுவனத்தின் தமிழ் முஸ்லிம் உரிமையாளர்கள் அவனுக்கு எல்லா ஒத்துழைப்பையும் தந்தார்கள். அவர்கள் நிறுவனத்திற்கு பல நாட்கள் சென்று நிர்வாகிகளுடன் உட்கார்ந்து பேசி கோப்புக்களைப் பார்த்து குறிப்பெடுத்து எழுத வேண்டியிருந்தது.
ஐசேக் மாநாட்டுக்கான ஏராளமான மனுபாரங்கள் வரத் தொடங்கியிருந்தன. இரவில் ஜெசிக்காவுடன் உட்கார்ந்து அவற்றுக்கெல்லாம் பதில் எழுத வேண்டியிருந்தது. தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் தனது தோட்டப்புற மாணவர் சேவைத் திட்டத்தை நிர்வகிப்பதில் அவனுடைய உதவியைக் கோரியிருந்தது. அகிலாவும் அந்தக் குழுவில் இருப்பதால் உற்சாகமாக ஒப்புக் கொண்டிருந்தான்.
இதற்கிடையே தீபாவளி நினைவுகள் வந்து கொண்டேயிருந்தன. அகிலாவின் வீட்டுக்குச் சென்று அவளுடைய பெற்றோர்களைச் சந்திப்பதை அவன் ஒரு வித மனப் படபடப்புடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். இது ஒரு நல்ல தொடக்கமாகத் தோன்றியது. ஆனால் நினைவு தெரிந்ததிலிருந்து அத்தை வீட்டில்தான் அவன் தீபாவளி கொண்டாடுவது வழக்கம். பினாங்கு வந்ததிலிருந்து சென்ற இரண்டு வருடங்களிலும் அவன் தீபாவளிக்குத் தவறாமல் போய் வந்திருக்கிறான்.
“ஆமா கணேசு! ரெண்டு நாளைக்கு மிந்தியே வந்திரு. நீ ஒண்ணும் புது உடுப்பு வாங்க வேணாம். எல்லாம் நான் எடுத்து வைக்கிறேன். உன் சைசெல்லாம் எங்கிட்ட இருக்கு. இங்க கிள்ளான்ல சௌரியமா வாங்கலாம்!” என்று அத்தை சொன்னது இன்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது.
அகிலாவுக்கு வாக்குக் கொடுத்த போது அத்தை வீட்டுக்குப் போகவேண்டும் என்ற நினைவு இல்லாமல் இல்லை. ஆனால் அவள் இதனை இத்தனை முக்கியமாக எண்ணிக் கேட்கும் பொழுது எந்தக் காரணம் கொண்டும் அதை ஒத்திப் போடுவதென்பது அவளை வருந்தச் செய்யலாம் என்ற எண்ணம் வந்து தடுத்தது. தீபாவளிக்கு ஒரு நாள் முன்னால் அல்லது பின்னால் அவள் வீட்டுக்குப் போவதும் கூட சரியானதாக இருக்காது. அது தீபாவளி விருந்தினராக வருவதைப் போல் இல்லாமல் விஷேச வருகையாகப் போய்விடும். ஆகவே தான் ஒப்புக் கொண்டது சரிதான் என்று தோன்றியது.
அதோடு அத்தையின் ஆதிக்கத்தை எதிர்ப்பதென்று முடிவு செய்தாயிற்று. அதற்கு இந்த தீபாவளிக்குப் போகாமல் இருப்பதே ஒரு நல்ல தொடக்கம் என்றும் சொல்லிக் கொண்டான். அத்தை இழுத்த இழுப்புக்கெல்லாம் இனிப் போகப் போவதில்லை. ஓரிரண்டு முறை “முடியாது” “வரமாட்டேன்” என்று சொல்லப் பழகிக் கொள்ள வேண்டும்.
ஆனால் அதை அத்தைக்கோ மல்லிகாவுக்கோ அறிவிப்பதைத் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தான். அவசரமில்லை, நாளைக்குச் சொல்லிக் கொள்ளலாம் என்றும் இன்னும் இரண்டு வாரம் இருக்கிறதே என்ன அவசரம் என்றும் நாட்கள் தள்ளிப் போயின. அத்தையிடம் இதைச் சொன்னால் கோபப் படுவாள். டெலிபோனிலேயே கத்துவாள். மல்லிகாவிடம் சொன்னாலும் உடனே அழுது அத்தையைத்தான் கூப்பிடுவாள். அப்படி இப்படியாக அழுது தன்னைக் கிள்ளானுக்கு வரச் செய்து விட்டால் அகிலாவுக்குத் தான் கொடுத்த வாக்கு தவறிப் போகும் என்ற பயமே அவனை இப்படித் தள்ளிக் கொண்டிருந்தது.
இதற்கிடையே அகிலா இரண்டு முறை அவனிடம் கேட்டு உறுதிப் படுத்திக் கொண்டாள்.
தீபாவளிக்கு முதல் நாள் கிள்ளான் போய்விட்டு அன்று காலை கிள்ளானில் பஸ் ஏறி மாலையில் அலோர்ஸ்டார் போகலாமா என்றும் நினைத்தான். ஆனால் கிள்ளான் போய்ச் சேர்ந்து விட்டால் அத்தையிடமிருந்து தப்பித்து வரமுடியாது. பெற்றோர் வீட்டுக்கும் போய் வரவேண்டியிருக்கும். ஒரு காலையில் இதெல்லாம் முடிக்க முடியாது. ஆகவே தீபாவளி காலை அகிலாவின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் போய்த் திரும்பிவிட்டு பினாங்கிலிருந்து பஸ்பிடித்தால் இரவில் கிள்ளான் போய் விடலாம். அதன் பின் ஒரு நாள் இருந்து வரலாம். அதுதான் நல்லது என முடிவு செய்தான்.
ஆனால் இதன் காரணங்களை அத்தையிடம் சொல்ல முடியாது. ஏதாகிலும் பொய் சொல்லித்தான் சமாளிக்க வேண்டும்.
தீபாவளிக்கு இரண்டு நாள் இருக்கும் போது ஒரு மாலை தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அத்தை வீட்டுக்குப் போன் பண்ணினான். மல்லிகாதான் பேசினாள்: “மாமா, எப்ப வர்ரிங்க? உங்களுக்கு நீலக் கலர்ல ஒண்ணும் பச்சைக் கலர்ல ஒண்ணுமா ரெண்டு சட்டை எடுத்திருக்கோம். ரெண்டு ஜீன்ஸ் வாங்கியாச்சி. அன்டர்வேர் கூட வாங்கி வச்சிருக்காங்க அம்மா!” என்றாள்.
“சரி, அம்மாவக் கூப்பிடு மல்லிகா!” என்றான்.
“அத்தை போனுக்கு வந்தாள். “நல்லா இருக்கியா கணேசு? என்னா போனதில இருந்து கூப்பிடவே இல்லியே!” என்றாள்.
“ரொம்ப வேல அத்த! அதுனாலதான் கூப்பிடல!”
“அப்படியா? சரி அப்ப தீவாளிக்கு வந்திடுவதான?
“அதச் சொல்லத்தான் கூப்பிட்டேன் அத்த! தீபாவளி அன்னிக்கின்னு பார்த்து ஒரு முக்கியமான வேல வந்திடுச்சி! அதினால தீபாவளி காலையில வர முடியாது. அன்னைக்கு ராத்திரிதான் வரமுடியும்னு நினைக்கிறேன்!”
அத்தையின் அதிர்ச்சி நிறைந்த முகம் நூற்றுக்கணக்கான கிலோமீட்டருக்கு அப்பாலிருந்தாலும் அவன் மனதில் தோன்றி கலவரப்படுத்தியது.
“என்னா சொல்ற கணேசு? என்ன அப்படி தல போற வேல? அதுவும் தீபாவளி அன்னைக்கு!”
“இங்க எங்க இந்திய மாணவர் சங்கம் அனாதைப் பிள்ளைகளுக்கெல்லாம் தீபாவளி அன்னைக்குக் காலையில ஒரு விருந்து நடத்திறாங்க அத்த! அத நடத்திறத என் பொருப்பில விட்டிருக்காங்க! நாந்தான் இருந்து செய்ய வேண்டியிருக்கு. அத முடிச்சிட்டு மத்தியானம் பஸ் ஏறி ராத்திரிக்கு அங்க வந்து சேந்திர்ரேன்!”
“என்னா இப்படி பண்ணிட்ட கணேசு!” அத்தையின் பெரு மூச்சில் ஏமாற்றத்தோடு ஆத்திரமும் இருந்தது எனத் தெரிந்தது. “வேற அங்க இருக்கிற பிள்ளைங்கள பாத்துக்க சொல்லக் கூடாதா? நான் காலையில உங்க மாமாவுக்கு சாம்பிராணி போட்டாகணுமே!”
“நீங்க போடுங்க அத்த! கண்டிப்பா நான் ராத்திரி வந்து சேர்ந்துர்ரேன். வச்சிரட்டுமா அத்த?” பதில் வருமுன் போனை வைத்தான்.
குற்ற உணர்வு நகங்கொண்டு உள்ளத்தைப் பிராண்டியது. தன் செய்தியால் அத்தையின் வீட்டில் இருள் கொஞ்சம் சூழ்வதை அவனால் கற்பனை செய்ய முடிந்தது. மல்லிகா சிணுங்கிச் சிணுங்கி இன்று சாப்பிடாமல் இருக்கப் போகிறாள் என்று தெரிந்தது. இந்தச் செய்தி தன் பெற்றோர் வீட்டுக்கும் பரவி அங்கும் கருமேகங்கள் கூடுவதையும், அன்றிரவு அப்பா கள் குடித்த பிறகு தோட்டம் முழுவதும் தெரியுமாறு கூச்சல் போட்டுக் கத்தப் போவதையும் நினைத்துப் பார்க்க முடிந்தது. இதன் விளைவாக அம்மா அடி வாங்குவாரா, இன்றிரவு? மனம் கலவரப்பட்டது.
ஏன் செய்தேன் என்றும் தன்னையே கேட்டுக் கொண்டான். ஒரு குடும்பத்தில் இத்தனை கலவரங்கள் ஏற்படும் விளைவுகள் தெரிந்திருந்தும் ஒரு பொய்யைச் சொல்ல வேண்டியது அவசியம்தானா என்று தன்னையே கேட்டான். அது தவிர்க்க முடியாதது என்று விடையையும் கூறிக் கொண்டான். அத்தையிடமோ மல்லிகாவிடமோ உண்மையைக் கூறி அனுமதி பெற்றிருக்க முடியாது. இதைத் தவிர வேறு வழியில்லை.
காதலின் மூர்க்கமும் காதலியின் ஈர்ப்பும் தனது குற்றத்தை மனதுக்குள் சமன் செய்ய விடுதி நோக்கி நடந்தான்.
*** *** ***
தீபாவளி அன்று காலையில் விடுதியில் தனியனாக எழுந்திருக்கும் போது என்னவோ போல் இருந்தது. இன்று தீபாவளிக்கு விசேஷமாக என்ன செய்வதென்று தெரியவில்லை. எப்போதும் வீட்டில் உள்ளவர்கள் யாராவது விரட்டி விரட்டியே எல்லாம் செய்து பழக்கமாகிவிட்டது. எண்ணெய் வைத்துக் குளிக்கலாமென்றால் அறையில் எண்ணெயோ சிகைக்காயோ இல்லை. ஷாம்பூ மட்டும் போட்டுக் குளித்து வந்தான்.
உடுத்திக் கொள்ள புதிது ஏதும் எடுத்து வைக்க வில்லை. பழையதில் நல்லதாகப் போட்டுக் கொண்டான்.
வணங்குவதற்கு அறையில் கடவுள் படம் ஏதும் இல்லை. அவனுடைய துணிப் பெட்டியைத் திறந்தால் மூடியின் உள் பக்கத்தில் கணேசர் படம் ஒன்று இருக்கும். அதை வணங்கி கொஞ்சம் திருநீறு இட்டுக் கொண்டான். அவனுடைய தீபாவளி வழிபாடு அதனோடு முடிந்தது.
வளாகத்தில் மருந்துக்குக் கூட ஒரு இந்திய மாணவர் இல்லை. அவனுடைய மலாய் அறைத் தோழன் கூட விடுமுறையைப் பயன் படுத்திக் கொண்டு வீட்டுக்குப் போய்விட்டான்.
விடுதிக் கண்டீனுக்குச் சென்று கிடைத்ததை வாங்கிச் சாப்பிட்டான். அத்தையின் வீட்டில் இன்று இறைச்சிக்கறி மணக்கும் பசியாறல் இருக்கும். தோசை இருக்கும். வெள்ளையும் மஞ்சளுமாக இந்தியப் பலகாரங்களும் சிகப்பும் பச்சையுமாக மலாய்ப் பலகாரங்களும் செய்து வைத்திருப்பாள். “சாப்பிடு கணேசு, சாப்பிடு கணேசு!” என்று அத்தை ஊட்டாத குறையாக அவனை வலியுறுத்தியிருப்பாள்.
இன்று இப்படி இருப்பாள்? முகம் சூம்பிப் போயிருப்பாளா? மல்லிகா எப்படி இருப்பாள்? இன்று இரவு அவர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சியை எண்ணி மனம் கொஞ்சம் மருண்டது.
ஏற்கனவே சொன்ன ஒரு பொய்யை நிறுவ இன்னும் எத்தனை கூடுதல் பொய்கள் சொல்ல வேண்டும்? அத்தையின் முகத்தை நேராகப் பார்த்துச் சொல்ல முடியுமா? சொல்லும் போது தன் முகம் நேராக இருக்குமா? தன் அகத்தின் அழுக்கு முகத்தில் தெரிந்து விடுமா?
ஆனால் அகிலாவின் வீட்டுக்குப் போகப் போகிறோம் என்ற நினைப்பு விரைவாக வந்து கலவரங்களை மாற்றியது. அவளுடைய பெற்றோர்களை முதன் முதலில் சந்திக்கப் போவதை நினைத்து ஒரு வித படபடப்பு வந்தது. அவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? அவர்கள் மனதில் ஒரு நல்லெண்ணம் எழும்படி செய்வது எப்படி? காதல் வேகத்தில் வந்திருக்கிறேன் என்பது பச்சையாகத் தெரியாமல் அடக்கமாக நடந்து கொள்வது எப்படி? மனதில் ஒத்திகை பார்த்துக் கொண்டே இருந்தான்.
அலோர் ஸ்டார் இதற்கு முன் அவன் பார்த்திராத ஊர். அகிலா வீட்டுக்கு வழி சொல்லியிருந்தாள். “அப்படியே வழி தவற விட்டிட்டிங்கன்னா எந்த இந்தியர் வீட்டிலாவது வாத்தியார் மயில்சாமி வீடுன்னு கேளுங்க, சொல்லுவாங்க!” என்றாள். ஆசிரியர் வேலை பார்க்கத் துவங்கிய காலத்திலிருந்து அங்கேயே இருக்கிறார். அரசியல், சமுதாய இயக்கங்கள் அனைத்திலும் இருக்கிறார். அகிலாவின் தந்தை அந்த ஊரில் பிரபலமான மனிதராக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.
கெடா மாநிலத்தின் நெற் களஞ்சியப் பகுதிகளில் மலாய்க் கம்பங்கள் நெடுஞ்சாலையின் இரு மருங்கிலும் நிறைய இருந்தன. காற்றைக் கிழித்துக் கொண்டு அந்த நெடுஞ்சாலையில் போகும் போது அகிலா அவன் மனதில் நிறைந்திருந்தாள். இந்த வருகை சாதாரண தீபாவளி வருகை இல்லை. அது அகிலாவின் பெற்றோர்களுக்கும் தெரிந்திருக்கிறது என்ற பிரக்ஞை அவனுக்கு இருந்தது.
” ‘ஆனா ஒரு வேள பல்கலைக் கழகத்தில நீ எந்த ஆணோடயாவது ஒரு நண்பன்கிற அளவுக்கு மேல பழக ஆரம்பிச்சிட்டேன்னா அந்தப் பையன வீட்டுக்குக் கொண்டு வந்து எங்களுக்கு அறிமுகப் படுத்தி வச்சிரு’ன்னு சொன்னாரு” என அகிலா தன் தந்தையின் சொற்களைச் சொல்லிக் காட்டியது அவன் மனதில் பதிந்திருந்தது. ஆகவே இன்று அவன் “ஒரு நண்பன்கிற அளவுக்கு” மேற்பட்டவன் என்பதை குடும்பம் புரிந்து கொள்ளும். அவனைக் கூர்ந்து பார்க்கும். அவனை எடை போடும்.
*** *** ***
அலோர் ஸ்டாரின் புறநகர் பகுதியில் ஒற்றை மாடி வரிசை வீடுகளில் ஒன்றாக வீட்டு எண் தவிர தனித்து அடையாளம் சொல்ல முடியாத அந்த வீட்டுக்கு முன்னால் அவன் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, தலைக் கவசத்தைக் கழற்றிவிட்டு சீப்பால் தலைசீவி முகத்தைத் துடைத்துக் கொண்டான். அந்தக் காலை பத்து மணிக்கு வீட்டில் கூட்டம் இல்லை. வரவேற்பறையில் ரேடியோ முழங்கிக் கொண்டிருந்தது. கதவு திறந்திருந்தது. நுழை வாசலில் “வருக, வணக்கம்” என்று தங்க நிறத் தாள் அலங்காரமாகக் கட்டப்பட்டிருந்தது.
கதவுக்குப் பக்கம் போனபோது கூட ஆட்களைக் காணோம். ஆனால் உள்ளே பேச்சு சத்தம் கேட்டது. யாரை எப்படிக் கூப்பிடுவதென்று தெரியவில்லை. ரொம்ப வெள்ளன வந்து விட்டோமா, அழையாத விருந்தாளி போல என்று எண்ணினான். சப்பாத்தைக் கழற்றி சாக்சையும் கழற்றி ஒதுப் புறமாக வைத்துவிட்டு வாசலில் அடியெடுத்து வைத்த போது ஒல்லியாக வேட்டி கட்டிய பெரியவர் வந்தார். இவர்தான் அப்பாவா?
“வாங்க” என்று வாய் நிறையக் கூப்பிட்டார்.
“வணக்கம், தீபாவளி வாழ்த்துகள்” என்றான்.
“வணக்கம். தீபாவளி வாழ்த்துகள் உங்களுக்கும். நீங்க….?”
“நான் அகிலாவோட படிக்கிறேன். கணேசன்!”
அவர் முகம் மலர்ந்தது. “ஓ சரி சரி. நீங்கதானா அது? அகிலா சொன்னிச்சி நீங்க வருவிங்கன்னு. உக்காருங்க தம்பி!” என்றார்.
உட்கார்ந்தான். உள்ளே பார்த்து “அகிலா!” என்று கூப்பிட்டார். உள்ளிருந்து ஓடிவந்தாள்.
அப்போதுதான் கோவிலுக்குப் போய் வந்த களை தெரிந்தது. திருநீறும் சந்தனமும் கருப்புச் சாந்துப் பொட்டும் கூந்தலில் சூடிய மல்லிகைச் சரம் தோளின் இருபக்கமும் சரிய….
புதுச் சேலை அணிந்திருந்தாள். அவளை அதிகமாக அவன் சேலையில் பார்த்ததில்லை. உடலைக் கவ்வியிருந்த அந்த மெல்லிய பட்டில் வண்ணக் கண்ணாடித் தாளில் சுற்றப்பட்ட ஈரங்காயாத மஞ்சள் ஒற்றை ரோஜா போல நளினமாக இருந்தாள்.
சிரித்தாள். “வாங்க கணேஷ்!” என்றாள். அப்பாவைப் பார்த்து “அப்பா இவரு..” என்று ஆரம்பித்த போது “தெரியும்மா, தம்பி பேர் சொன்னிச்சி! தம்பிக்கு சாப்பிட ஏதாவது கொண்டு வந்து குடும்மா!” என்றார். டெலிபோன் அடித்தது. மயில்சாமி போய் எடுத்து யாருடனோ பேசிக் கொண்டிருந்தார்.
“என்ன அகிலா! வீட்டில யாரையுமே காணுமே! நான் ரொம்ப வெள்ளன வந்திட்டேனா?” என்று கேட்டான்.
“எல்லாம் பதினொருமணிக்கு மேலதான் வருவாங்க. காலையில கோயிலுக்குப் போய் இப்பதான் திரும்பி வந்தோம். அம்மா சமையல்ல இருக்காங்க. தம்பி எங்கயோ கூட்டாளி வீட்டுக்கு ஓடிட்டான். இப்ப வந்திருவான்” என்றாள்.
வீடு சுத்தமாக இருந்தது. ஆடம்பரம் ஒன்றும் தெரியவில்லை. சாதாரண அலமாரிகளும் மேசை நாற்காலிகளும் இருந்தன. நடுநாயகமாக ஒரு தொலைக்காட்சிப் பெட்டியும் வீடியோவும் இருந்தன. சாப்பாட்டு மேசைமேல் பலகாரங்கள் இருந்தன. ஒரு அழகிய மலர்க்கொத்து இருந்தது. அவள் அங்கு இருந்ததால் வீடு அதிகக் களையுடன் தோன்றியது.
“வீடு கண்டு பிடிக்கிறது சுலபமா இருந்ததா?” என்று கேட்டாள்.
மயில்சாமி இன்னும் டெலிபோனில் பேசிக்கொண்டிருக்கிறார் என்ற தைரியத்தில் தணிந்த குரலில் “உன் வாசனையைப் பிடிச்சிக்கிட்டே வந்திட்டேன்!” என்றான். நாணிச் சிரித்து முகம் தாழ்த்தினாள். “உங்க ஊருக்கு இதுக்கு முன்னால நான் வந்ததே இல்ல அகிலா. ரொம்ப அழகா இருக்கு!” என்றான்.
“அரச நகரம் இல்லியா, அப்படித்தான் இருக்கும்!” என்றாள்.
மயில்சாமி டெலிபோனை வைத்து விட்டு வந்தார். “தம்பி என்ன படிக்கிறிங்க?” என்று கேட்டார்.
பாடம், வருடம் சொன்னான். அந்தப் படிப்புக்கு வேலை வாய்ப்புக்கள் எப்படி என்று கேட்டார். நல்ல வாய்ப்புக்கள் உள்ளன என்று சொன்னான். சொந்த ஊர், ஆரம்பக்கல்வி பற்றிக் கேட்டார். சொன்னான். இது முகமனுக்காகவா அல்லது தன் பின்னணியை ஆராய்வதற்காகவா என்று அவனுக்குத் தெரியவில்லை.
“என்ன அகிலா நீயும் கதை கேட்டுக்கிட்டு உக்காந்திருக்க! போயி சாப்பிடப் பலகாரங் கொண்டாந்து குடு! அம்மாவை வரச்சொல்லு” என்றார். அகிலா எழுந்து ஒரு விசிறலாக முந்தானை பறக்க உள்ளே போனாள்.
“நீங்க அகிலாவுக்குச் செஞ்ச உதவி, அதனால ஏற்பட்ட சிரமம் எல்லாம் அது விவரமா சொன்னிச்சி தம்பி. ரொம்ப நன்றி!” என்றார்.
“நன்றியெல்லாம் எதுக்குங்க? தற்செயலா செஞ்ச உதவி!” என்றான்.
“இருந்தாலும் அதனால நீங்க எவ்வளவு சிரமம் அனுபவிக்க வேண்டியதாய்ப் போச்சி!”
“நம் பையனுங்க சில பேருதான் இப்படி என்ன இக்கட்டுல மாட்டி விட்டுட்டாங்க. ஆனா இப்ப எல்லாம் ஒரு வகையா சரியாப் போச்சு” என்றான்.
“பல்கலைக் கழகத்திலேயே குண்டர் சங்கமா? என்னால நம்ப முடியில தம்பி!” என்றார்.
“இப்பதான் சிலர் ஆரம்பிக்க முயற்சி பண்ணினாங்க. இதுவரையில இப்படி நடந்ததில்ல பாருங்க. இனிமேலும் நடக்காது. பல்கலைக் கழக அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுத்திருக்காங்க. இனிமே அப்படி நடக்க வழியில்ல” என்றான். பல்கலைக் கழகத்தை விட்டுக் கொடுக்காமல் பேசினான்.
அகிலா பலகாரங்களும் இனிப்பு பானமும் கொண்டுவந்து வைத்தாள். ஆனால் அவன் எதிர் பார்த்தைப் போல அவளுடைய அம்மா வரவில்லை. அவர்களைப் பேசவிட்டு அப்பா உள்ளே போனார்.
“உங்க அப்பா ரொம்ப அன்பானவரா இருக்காரு அகிலா!” என்றாள்.
“பத்து நிமிஷங்கூட பேசில. அதுக்குள்ள எப்படித் தெரியும் உங்களுக்கு?” என்றாள்.
“பேசின வரைக்கும் தெரியுதில்ல! ஒரு தலைமை ஆசிரியருக்கு உள்ள கண்டிப்பு கூட இல்லியே” என்றான்.
“அதெல்லாம் பள்ளிக்கூடத்திலதான் தலைமை ஆசிரியர். வீட்டில அவரு அப்பாதான்!” என்றாள்.
வாசலில் நிழல் தெரிந்தது. ஒரு ஐந்து இளம் பையன்கள் நுழைந்தார்கள். அவர்களில் முன் நின்றவனை “இவன்தான் என் தம்பி!” என்று அறிமுகப் படுத்தி வைத்தாள். “ஹலோ அங்கிள்!” என்றான். அது கேட்கக் குளிர்ச்சியாக இருந்தது. அதோடு தன் நண்பர்களுடன் பலகாரம் சாப்பிட உள்ளே போய்விட்டான்.
உள்ளே போயிருந்த மயில்சாமி வெளியே வரவும் வாசலில் இன்னும் சில மலாய்க்கார நண்பர்கள் உள்ளே வரவும் சரியாக இருந்தது. அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் சொல்லி உட்கார வைத்தார் அவர். கணேசனையும் அவர்களுக்கு அறிமுகப் படுத்தி வைத்தார். வந்தவர்களில் ஒருவர் தேசியப் பள்ளியின் ஆசிரியர்; சொந்தத் தொழில் செய்யும் பக்கத்து வீட்டுக்காரர் குடும்பத்தோடு; மயில்சாமியோடு படித்து பெரிய மனிதராக இருக்கும் டத்தோ ஒருவர். அவருடைய அழகிய டத்தின் மனைவியுடன்.
அனைவரும் கணேசனுடன் முகமனுக்காகப் பேசினார்கள். தம் பிள்ளைகள் அறிவியல் பல்கலைக் கழகத்தில் பயில்வது பற்றிச் சொன்னார்கள். அப்புறம் மயில்சாமியோடு கட்டித் தழுவி ஊர்க்கதைகளும் அரசியலும் பழைய நினைவுகளுமாகக் கலந்து கலந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
அகிலாவின் அம்மா சிறிது நேரம் வெளியில் வந்து வந்தவர்களை வரவேற்றுவிட்டு உள்ளே போய் சாப்பாடு எடுத்து வைப்பதில் முனைப்பாக இருந்தார். அவன் பக்கம் வரவில்லை. வாய்ப்பில்லையா, தெரியவில்லையா அல்லது வேண்டாமென்றிருக்கிறாரா என்று புரியவில்லை. அகிலாவும் அம்மாவுக்குத் துணையாக ஓடிக் கொண்டிருந்தாள். அவ்வப்போது கணேசனைக் கண்ணால் பார்த்துப் புன்னகைப்பதோடு சரி.
மேலும் சிலர் வந்தார்கள். வீட்டில் கூட்டம் நெருக்கியது. அவனுக்குத் தனிமை அதிகமாக இருந்தது. தன் இருக்கையை இன்னொரு பெண்மணிக்கு விட்டுக் கொடுத்து நின்று கொண்டிருந்தான். அகிலா ஓடிவந்து அவனை இழுத்துக் கொண்டு சாப்பாட்டு மேசை அருகில் கொண்டு விட்டாள். காகிதத் தட்டைகளில் ஒன்றைக் கையில் கொடுத்து “சாப்பிடுங்க” என்றாள். அப்புறம் வேறு யாரையோ கவனிக்கப் போய்விட்டாள்.
கணேசன் தட்டில் இடியப்பமும், பூலுட்டும் நிரப்பிக் கொண்டு அவற்றில் கறி பெய்து ஒரு ஓரத்துக்கு எடுத்துக் கொண்டு வந்தான். சாப்பாடு சுவையாக இருந்தது. ஆனால் தனியாகச் சாப்பிடவேண்டியிருந்தது. அந்தக் கூட்டத்தில் அவனையொத்த வயதினர் யாரும் இல்லை. வந்தவர்கள் ஜோடி ஜோடியாக குடும்பக் கதை பேசிக் கொண்டிருந்தார்கள்.
சாப்பிட்டுக் கை கழுவினான். மயில்சாமி மட்டும் வந்து “என்ன தம்பி, முடிச்சிட்டிங்களா? இன்னுங் கொஞ்சம் சாப்பிடலாமே!” என்றார். போதும் என்றான். அகிலாவின் அம்மா சாப்பாடு கொண்டு வருவதும் சமயலறைக்குள் போவதுமாக இருந்தார். அவன் பக்கம் அவர் பார்வை திரும்பவில்லை.
இன்னும் சிலர் வர சிலர் விடைபெற்றுப் போனார்கள். அவனுக்கும் இடத்தை அடைத்துக் கொண்டு நிற்காமல் போவது நல்லது எனப் பட்டது. அகிலாவைப் பிடிக்க முடிந்தபோது சொன்னான்: “நான் புறப்படலாம்னு பாக்கிறேன் அகிலா!”
“என்ன அவசரம் கணேஷ்? கொஞ்சம் நேரம் இருங்க, போகலாம்!” என்றாள்.
“இல்ல அகிலா! நான் பினாங்கு திரும்பி, முடிஞ்ச சீக்கிரம் பஸ் பிடிச்சி கிள்ளானுக்குப் போயாகணும். இப்ப போகலன்னா ரொம்ப நேரம் ஆயிடும்!”
“அப்படியா!” அவனைப் பார்த்தவாறு விழிகள் படபடக்க ஏதோ யோசித்தவாறிருந்தாள். அப்புறம் அவன் கையை உறுதியாகப் பிடித்தாள். அவனை இழுத்துக் கொண்டு சமயலறைக்குச் சென்றாள். அங்கு அவள் அம்மாவும் அவருக்கு உதவியாக இன்னொரு பெண்ணும் இருந்தார்கள். “அம்மா, இவருதான் கணேஷ்! எங்கூடப் படிக்கிறவரு, வருவாருன்னு சொன்னேன்ல!”
ஒரு விநாடி நிமிர்ந்து பார்த்து “அப்படியா, வாங்க!” என்று மீண்டும் தலை குனிந்து வேலையில் ஈடுபட்டார். “இதோ இவங்க எங்க சின்னம்மா! இங்க பக்கத்திலதான் இருக்காங்க!” என்று அறிமுகப் படுத்தினாள்.
“வாங்க தம்பி! அகிலாவுக்கு ரொம்ப உதவி பண்ணினிங்களாமில்ல! ரொம்ப நன்றி!” என்றார் அந்தச் சின்னம்மா.
“பரவால்லிங்க! சின்ன விஷயம்!” என்றான்.
“இப்படிப் புது இடத்தில அண்ணன் மாதிரி இருந்து ஒருத்தர் ஒதவி செய்றது ஒரு பொம்பிள பிள்ளைக்கு தைரியந்தானே!” என்று தொடர்ந்தார் அந்தச் சின்னம்மா. கொஞ்சம் முட்டாள் தனமாகச் சிரித்தான்.
அகிலாவின் அம்மா ஏதோ ஒரு சாப்பாட்டைத் தூக்கிக் கொண்டு மீண்டும் வரவேற்பறைக்குப் போய்விட்டார். சமயலறையில் அதற்கு மேல் நிற்பதற்குக் காரணமில்லாமல் இருவரும் வெளியே வரும்போது அம்மா எதிரில் வந்தார். அகிலா அவரைத் தடுத்து “அம்மா, கணேஷ் போகணும்கிறாரு!” என்றாள்.
“சரிம்மா, போயிட்டு வரட்டும். பலகாரங் குடுத்தியா?” என்று கேட்டுக் கொண்டே பதிலுக்கக் காத்திராமல் நடந்தார்.
வரவேற்பறையில் மயில்சாமி எதிர்ப்பட்டார். “என்ன தம்பி கிளம்பிட்டிங்களா?” என்று கேட்டார். “ஆமாங்க, நான் இனி பினாங்கு போய், கிள்ளானுக்குப் போகணும்!” என்றான்.
“அப்படியா, சரி! முடிஞ்ச போது வந்து போங்க!” என்றார்.
அகிலா மோட்டார் சைக்கிள் வரைக்கும் வந்தாள். அவன் ஏறி உட்கார்ந்து தலைக் கவசத்தை அணிந்து கொண்டான். கொஞ்சம் வருத்தமான குரலில் சொன்னாள்: “அம்மாவுக்கு சரியான டென்ஷன் கணேஷ்! வீடு நெறய ஆட்கள் வந்துட்டாங்கள்ள! அதினாலதான் அவங்களால முகங் குடுத்து பேச முடியல!” என்றாள்.
“பரவாயில்ல அகிலா. அவங்களுக்கு டென்ஷன் வரதுக்கு நான் வந்தது காரணமில்லாம இருந்தா சரி!” என்றான்.
கையைப் பிடித்து அழுத்தி விடை கொடுத்தாள். “வாரேன் அகிலா! கேம்பஸ்ல பார்ப்போம்!” என்று சொல்லி அவன் மோட்டார் சைக்கிள் நகர்ந்த போது தம்பி பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கும் கையாட்டி நகர்ந்தான்.
நெடுஞ்சாலையில் முகத்தில் காற்று அறைய பினாங்கு நோக்கி விரைந்த போது மனதில் கொஞ்சம் வெறுமை இருந்தது. “இவ்வளவுதானா அறிமுகங்கள்? இதற்காகவா அத்தையிடம் இத்தனை பொய் சொல்லி வந்தேன்?” என்று கேட்டுக் கொண்டான். அந்த வீட்டில் தனக்குக் கொஞ்சம் நிராகரிப்பும் இருந்தது என்பதை அவனால் உணர முடிந்தது.
ஆனால் அகிலாவின் கனிவு, மயில்சாமியின் திறந்த மனதுடனான உபசரிப்பு ஆகியவை ஆறுதலாக இருந்தன. இன்றிரவு அத்தையைச் சந்தித்து தான் காலையில் வரமுடியாத காரணத்தை எப்படிச் சொல்லி விளக்குவது என்ற யோசனையில் மனது மீண்டும் கலவரமடைந்தது.
***
——————————————————————————–
27
எக்ஸ்பிரஸ் பஸ் விட்டிறங்கி உள்ளூர் பஸ் பிடித்து அத்தையின் வீட்டை அடைந்த போது இருட்டி விட்டிருந்தது. அத்தை வீட்டுக்குப் போகும் வழியில் நடந்து போன போது சில இந்தியர் வீடுகளில் தீபாவளி விருந்துகள் இன்னும் நடந்து கொண்டிருந்தன. வழி முழுவதும் நிறைய விருந்தினர்களின் கார்கள் ஓரத்தையெல்லாம் அடைத்துக் கொண்டு நின்றன. அந்த வீடுகளில் ஆட்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. கலகலவென்ற சத்தங்கள் கேட்டுக் கொண்டிருந்தன.
ஆனால் அத்தை வீட்டில் அந்தக் கலகலப்பெல்லாம் ஒன்றும் காணோம். வரவேற்பறையில் ஒரு மங்கலான விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது. தொலைக்காட்சிப் பெட்டியிலிருந்து வெளிச்சம் தெறித்து விழுந்து கொண்டிருந்தது.
கேட்டில் இருந்த அழைப்பு மணியை அழுத்தினான். மல்லிகா எட்டிப் பார்த்தாள். அவள் முகம் பிரகாசமானது அந்த அரையிருட்டிலும் தெரிந்தது. “அம்மா, மாமா வந்திரிச்சி…” என்று சொல்லியவாறு வீட்டுக் கம்பிக் கதவைத் திறந்து வெளியே வந்து பூட்டியிருந்த கேட்டையும் திறந்தாள். “இப்பதான் உங்களுக்கு வழி தெரிஞ்சதா மாமா?” என்ற கேள்வியில் கிண்டல் மட்டும் அல்லாது கோபமும் இருந்தது.
“சௌக்கியமா மல்லிகா?” என்று கேட்டுக் கொண்டே உள்ளே வந்தான். டெலிவிஷனில் ஏதோ உள்ளூர் கலை நிகழ்ச்சி தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியாக ஓடிக் கொண்டிருந்தது. யாரோ சினிமாவில் பாடிய பாட்டுக்கு வாயசைத்தவாறு பத்துப் பனிரெண்டு பெண்களும் ஆண்களும் அதே சினிமாவின் விரசமான நடனத்தை யந்திரத் தனமாக ஆடிக் கொண்டிருந்தார்கள். அத்தையைக் காணோம்.
“எங்க அத்தை?” என்று கேட்டான்.
“இருக்காங்க! வருவாங்க, நல்லா வாங்கப் போறிங்க!” என்றாள்.
“ஏன் வாங்கப் போறேன்? அதான் வந்திட்டேனே!” என்றான் ஒரு அசட்டுச் சிரிப்புடன்.
“ஆமா, வந்திட்டிங்க! நேத்தே வந்திருந்து எங்களோட காலையில இருந்து தீவாளி கும்பிடாம, யாரோ வெளி ஆளு மாதிரி வந்திருக்கிங்கள… ஏன் வெள்ளனே வர்ல மாமா?” அவள் குரல் குழைந்து தளுதளுக்க ஆரம்பித்தது. அழ ஆயத்தம் செய்கிறாள் என்று தோன்றியது.
“அட அதான் வந்திட்டனே, அப்புறம் என்ன மல்லிகா! நீ போய் எனக்கு தீபாவளி சாப்பாடு எடுத்து வை. பசியோட வந்திருக்கேன்!” என்றான்.
அத்தை உள்ளிருந்து வந்தாள். “ஆமா, எடுத்து வைடி! விருந்தாளி வந்திருக்கார்ல! போய் உபசாரம் பண்ணு! கேக்கிறதில மாத்திரம் வெக்கம் இல்ல!” சீறினாள்.
“ஏன் அத்த இவ்வளவு சூடா இருக்கிங்க?” என்று கேட்டான்.
“ஆமா, ஆமா! ஒண்ணும் தெரியாதவன் மாதிரி கேட்டுக்க! எவ்வளவு மானாக்கேடா போச்சி எனக்கு இன்னக்கி காலயில?” என்றாள்.
“என்ன மானக் கேடு அத்த?”
“சாம்பிராணி போட வீட்டில ஒரு ஆம்பிள இல்ல. காலையில வீட்டுக்கு வர்ரவங்கல்லாம், எங்க கணேசக் காணோம், வரலியா, வரலியான்னு கேக்கிறாங்க. பதில் சொல்லி மாளல எனக்கு! என்ன அநியாயம் பண்ணிட்ட இந்த வருஷம் நீ…?”
“இல்ல அத்த, முக்கியமா தவிர்க்க முடியாத வேல இருந்ததினாலதான நான் வர முடியாம போச்சி! நான்தான் போன்ல உங்களுக்குச் சொன்னன…!”
அத்தை அதைக் கேட்கத் தயாராக இல்லை. “அது என்னா தீவாளி அன்னைக்கி அப்படிப்பட்ட வேல உனக்கு? உங்க யுனிவர்சிட்டி வாத்தியாருங்களுக்கு இன்னக்கி தீவாளின்னு தெரியாதா? அவங்க ஊட்டில எல்லாம் தீவாளி கொண்டாட மாட்டாங்களா? யாருன்னு சொல்லு நான் வந்து கேக்கிறேன்!”
பொய்யைத் தொடர வேண்டியிருந்தது: “இதல்லாம் லெக்சரர்ஸ் குடுக்கிற வேலயில்ல அத்த. மாணவர்கள் தாங்களா செய்த ஏற்பாடு. அத என் தலையில போட்டுட்டாங்க!” என்றான்.
“அதெப்படி தீவாளி அன்னைக்குன்னு செய்வாங்க? ஒரு நாள் மின்ன பின்ன செய்ய மாட்டாங்களா? இங்கிருந்து போயி உன்னாட்டம் படிக்கிற எத்தன பேரு திரும்பி வந்திருக்காங்க! ஒனக்கு மாத்திரந்தான் ஸ்பெஷலா?”
அத்தை தன் பொய்களுக்கு உள்ளே ஊடுருவி விட்டாள் எனத் தெரிந்தது. தான் நினைத்தது போல அவள் இந்த விஷயங்களில் அத்தனை வெகுளியாக இல்லை. தன்னையொத்த மற்ற மாணவர்கள் திரும்பி வந்ததைப் பார்த்து பேசியும் இருப்பாள் எனத் தெரிந்தது. ஆனால் தான் வராததற்குக் காரணமாக அவள் எதைச் சந்தேகிக்கிறாள் எனத் தெரியவில்லை.
தொடர்ந்து இன்னுமொரு ஐந்து நிமிடக்கள் பொரிந்து கொண்டே இருந்தாள் அத்தை. ஒவ்வொரு வாக்கியத்தின் முடிவிலும் அவளை எதிர்த்துப் பேச வேண்டும் என்று தோன்றியது. ஆனால் இந்த விஷயம் இன்னும் பெரிதாகிவிடும் என்ற பயம் இருந்தது. மல்லிகா பயந்தவாறு ஒரு மூலையில் இருந்தாள்.
ஒரு இடைவெளி ஏற்பட்டபோது சொன்னான்: “ஏன் அத்த இந்த விஷயத்த இவ்வளவு பெரிசா எடுத்துக்கிறிங்க? முடிஞ்சா வந்திருக்க மாட்டேனா? முடியாமப் போச்சி, மன்னிச்சிக்குங்க!”
அத்தை முறைத்தபடி நின்றாள். “அதாவது, பிள்ளைய ரெண்டு மூணு வருஷம் தனியா விட்டதில கொஞ்சம் துளுத்துப் போச்சி! அதான் விஷயம். எல்லாம் நான் உங்க அப்பாகிட்ட சொல்லி வச்சிருக்கேன். அங்க போய் கேட்டுக்க! நாளக்கி அங்க போவதான? இல்ல அதுக்கும் நேரமில்லன்னு ஓடிடுவியா?”
“இல்ல அத்த நாளக்கி போய் அப்பாவயும் அம்மாவயும் பாத்துட்டுத்தான் போவேன்” என்றான்.
என்ன சொல்லி வைத்திருக்கிறாள் அத்தை? அவனுக்கு அவள் மீது எரிச்சலாக வந்தது. ஏன் இத்தனை அதிகாரம் செலுத்துகிறாள்? தன் மீது ஏன் இத்தனை குறைவான மரியாதை வைத்திருக்கிறாள்? பல்கலைக் கழகம் போய் படிக்கும் அளவுக்கு வளர்ந்தாயிற்று. அடுத்த வருடம் ஒரு நிறுவனத்தில் பெரிய பொறுப்பில் இருக்கப் போகும் பட்டதாரி. இன்னும் சின்னப் பொடியனைப் போலவே நடத்துகிறாள். நான்தான் ரொம்பவும் பணிந்து பணிந்து இடம் கொடுத்து விட்டேனோ எனக் கேட்டுக் கொண்டான். இனி கொஞ்சம் சிலிர்க்க வேண்டும். திரும்பப் பேசவேண்டும். “நான் விரும்பிய இடத்துக்குப் போவேன், அதைப்பற்றி உனக்கென்ன அத்தை?” என்று கேட்க வேண்டும். ஆனால் கொஞ்சம் காலம் போகட்டும் என இருந்தான்.
அத்தை உள்ளே போய்விட்டாள். மல்லிகா அங்கு வந்து பரிவோடு அவன் கையைப் பற்றினாள். அவனை இழுத்துக் கொண்டு சாப்பாட்டு மேசைக்குப் போனாள்.
வழக்கமான ஆடம்பரமான தீபாவளிச் சாப்பாடு இருந்தது. “சாப்பிடு மாமா, சாப்பிடு! பசிக்குதின்னு சொன்னேல்ல! சாப்பிடு! இந்த அம்மாவுக்கு புத்தியே இல்ல. தீவாளியும் அதுவுமா எப்படிப் புடிச்சிப் பேசிடிச்சி பாரு! நீ சாப்பிடு! ” என்று மல்லிகா கனிவோடு வற்புறுத்தியபடி இருந்தாள்.
அத்தை தனக்குக் கொடுத்த வரவேற்பினால் ஏற்பட்ட எரிச்சலில் வயிற்றில் சுரந்த அமிலங்களால் அவன் பசிதான் செத்துப் போயிருந்தது.
*** *** ***
மல்லிகா கொடுத்த புதுத் துணிகளை அணிந்து கொண்டு வீட்டில் காலையில் பசியாறிவிட்டு அவன் அப்பா வீட்டுக்குப் புறப்பட அத்தையிடம் சொல்லிக் கொள்ளச் சென்ற போது “இரு, ட்ரைவர் இப்ப வந்திடுவாரு! நானும் வர்ரேன்!” என்றாள். அத்தை தன் கூட வருவது அவனுக்குச் சற்றும் பிடிக்கவில்லை. “ஏன் உங்களுக்குச் சிரமம் அத்தை? நான் பஸ் பிடிச்சிப் போயிட்றனே!” என்றான்.
“பரவால்ல இரு. நானும் அங்க போக வேண்டிய வேலை இருக்கு” என்றாள். தானும் வருகிறேன் என்று கிளம்பிய மல்லிகாவை அத்தையே தடுத்து விட்டாள்.
“சும்மா கெட, ஒனக்கு அங்க வேல இல்ல! அந்த சுப்பையா செட்டியார் வந்து கொஞ்சம் காசு குடுக்கிறேன்னு சொல்லியிருக்காரு. வாங்கி வை!” என்று அதட்டி அவளை வரவிடவில்லை.
அப்பாவின் தோட்டப்புற வீடு எப்போதும் போல்தான் இருந்தது. நேற்று முடிந்த தீபாவளியின் எஞ்சிய களையாக. வீட்டில் ஒரு நிரந்தரமான பீர் மணம் இருந்தது. ஓரத்தில் பீர் போத்தல்கள் குவிக்கப்பட்டிருந்தன. ஆட்டிறைச்சி கோழியிறைச்சியின் தின்ற எச்சங்கள் சமயலறையிலிருந்து இன்னும் வெளியேறவில்லை. அத்தையின் உபயத்தில் நேற்று விருந்து மிகவும் உச்சமாக இருந்திருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டான். அத்தையோடு அவன் நண்பகலில் போய்ச் சேர்ந்த போது அப்பா இன்னும் தூங்கிக் கொண்டிருந்தார்.
அம்மா போய் அவரை உலுக்கி உலுக்கி எழுப்பினாள். அவர் புரண்டு உறுமி “ஏன் தொந்திரவு பண்ற?” என்று சீறி விழுந்து, “ஓ தங்கச்சி வந்திருக்கா? இதோ வந்தர்ரேன்!” என்று எழுந்து தூக்கக் கலக்கத்தில் கணேசனை கண்ணைக் குறுக்கிப் பார்த்து ஒரு வெறுப்பை உமிழ்ந்து விட்டு பின்னால் குளியலறைக்குப் போனார்.
“நேத்து அக்கா வந்திருந்திச்சிப்பா, பிள்ளைங்களோட. இருந்திட்டு ராத்திரிதான் போனாங்க!” என்று அம்மா பட்டும் படாமலும் சின்னச் சின்னக் குடும்பக் தைகளைச் சொல்லிக் கொண்டிருந்தாள். அவனுக்குக் குடிக்கக் கோப்பி கலந்து கொடுத்து சில முறுக்கு வகையறாக்களும் எடுத்து வைத்தாள். அத்தை ஒன்றும் சாப்பிடாமல் பேசாமல் உர்ரென்று இருந்தாள்.
அப்பா வந்ததும் விசாரணை ஆரம்பமாயிற்று. “அதென்ன அப்படி தீவாளிக்குக் கூட வர முடியாம ஒரு படிப்பு? இந்த உலகம் முளுக்க தீவாளிக்கு லீவு உட்றாங்க! ஒனக்கு மட்டும் லீவு உட்றதில்லியா? வருஷத்துக்கு ஒருநாளு மச்சான் படத்துக்கு சாம்பிராணி போடணும்னு தங்கச்சி எப்படி காத்துக்கிட்டு இருக்குது? ஒன்ன மகன் மாறி வச்சிப் பாக்கில? சோறு போட்ல? காசு குடுக்கில? இப்படித்தான் நன்னி செலுத்திறதா? அப்பாங்கிற மரியாத இல்ல, அம்மாங்கிற மரியாத இல்ல, தாயப்போல வளத்தாளே அத்தைங்கிற மரியாத இல்ல! புள்ளங்க ரொம்ப கெட்டுப் போச்சி!” என்று பினாத்திக் கொண்டே இருந்தார்.
நேற்றிரவு கொஞ்சம் பீர் உள்ளே இறங்கிய மயங்கிய நிலையில் அத்தை இந்த வார்த்தைகளை அவர் வாயில் திணித்திருக்க வேண்டும். அது இப்போது கக்கப்படுகிறது எனப் புரிந்து கொண்டான்.
“கெட்டுப் போனது மாத்திரமில்ல அண்ண! ரொம்ப துளுத்துப் போச்சி! மீசை வந்திடுச்சி, படிப்பு கொஞ்சம் ஏறிடுச்சி! திமிர் ஏறிப் போச்சி!” என்று அத்தை உடன் வாசித்தாள்.
கணேசனால் சும்மா இருக்க முடியவில்லை. “ஏன் அத்த அதயே திருப்பித் திருப்பிப் பேசிறிங்க! நான் வேணுமானா வராததுக்கு மன்னிப்பு கேட்டுக்கிறேன்! விடுங்க!” என்றான்.
கொஞ்ச நேரம் அமைதி நிலவியது. அப்புறம் அப்பா கேட்டார்: “என்னமோ படிப்பு படிப்புன்னு அலையிற. எதுக்கு படிப்பு? படிச்சி வேல பாத்து என்னா அப்படி சம்பாரிச்சி கிளிக்கப் போற! படிக்காதவன்லாம் அந்த பிஸ்னசு, இந்த பிஸ்னசுன்னு ஆயிரம் ஆயரமா சம்பாரிக்கிறான்! படிப்பாம் படிப்பு!”
என்ன சொல்லுகிறார் என்று புரியவில்லை. அவருக்கும் தனது படிப்புக்கும் எந்த சம்பந்தமுமில்லை. ஒருநாளும் படிப்பு பற்றிக் கேட்டதுமில்லை. ஒரு காசும் கொடுத்ததும் இல்லை. அப்படிச் சம்பந்தமில்லமல் ஒதுக்கி வைத்திருந்த விஷயத்தை இப்படி இழுத்துப் பேசுவதேன்? அவரை அண்ணாந்து பார்த்தான்.
“அத்த ஒரு நல்ல கட வச்சிக் குடுக்கிறேன்னு சொல்லுது, இங்கயே கிள்ளான்லியே! பெரிசா, மினிமார்க்கெட் மாதிரி! நாலு ஆளுங்கள வச்சி நடத்தலாம். உக்காந்து சம்பாரிக்கலாம். என்ன சொல்ற?”
அதிர்ச்சியோடு அத்தையைப் பார்த்தான். “என்ன அத்தை இது?” என்றான்.
“ஆமா. ஒரு மினிமார்க்கெட் வெலைக்கு வருது. நல்ல இடம்னு சொல்றாங்க. அருமையான வியாபாரம். ஒரு நாளக்கி ஆறாயிரம் ஏழாயிரம் வெள்ளிக்கு வியாபாரம் நடக்குதாம். நெறய சரக்கோட தர்ரன்னு சொல்றாங்க! வாங்கிப் போட்டா ஒன்னோட எதிர்காலத்துக்கு நல்லது!” என்றாள்.
அவனுக்கு மேலும் அதிர்ச்சியாக இருந்தது. “என்ன சொல்றிங்க அத்தை. என்னோட எதிர்காலத்தப் பத்தி இப்ப என்ன?” என்றான்.
“வேறென்னா, அப்பா சொல்ற மாதிரி நீ என்ன படிப்புப் படிச்சாலும் எவ்வளவு சம்பாரிக்க முடியும் சொல்லு. ரெண்டாயிரம் வெள்ளி சம்பாரிப்பியா? இப்பவே மாசத்துக்கு எல்லாச் செலவும் போக அந்த மினிமார்க்கெட்டில 20 ஆயிரம் வெள்ளி சம்பாரிக்கலான்னு சொல்றாங்க. யாரு ஒனக்கு அந்த மாதிரி சம்பளம் குடுப்பாங்க சொல்லு! இப்ப இந்த மாதிரி ஒரு சான்ஸ் இனி நமக்கு வருமா? அதான் இப்பவே வாங்கிப் போட்டு வியாபாரத்தில பூந்திட்டின்னா ஓஹோன்னு இருக்கலாம். அதுக்குத்தான்…!”
தன்னை தன் இடுப்பில் கட்டி வைத்துக் கொள்ள அத்தை ஒரு இனிப்பு வலை வரிக்கிறாள் எனத் தெரிந்தது. இருபதாயிரம் முப்பதாயிரம் என்று ஆசை காட்டுவதெல்லாம் தன்னை அவள் கால் விரல்களுக்குக் கீழ் அழுத்திக் கொள்ளப் போடுகிற திட்டம் எனத் தெரிந்தது. தான் அத்தையிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்காக எத்தனை தீவிரமாகத் திட்டம் தீட்டுகிறேனோ அதைவிடத் தீவிரமாக தன் அடிமைச் சாசனத்தை நீட்டிக்க அத்தை திட்டம் தீட்டுவதாகப் பட்டது. தான் தொடர்ந்து படிப்பது தன் சுதந்திரத்திற்கு வழி வகுத்துவிடும் என்று அத்தை தெரிந்து கொண்டாள். தனக்கு இறக்கைகள் முளைத்துத் தான் தன் சொந்த முயற்சியில் பறப்பது அத்தைக்குப் பிடிக்கவில்லை. ஆகவே தன் பணபலத்தைக் காட்டி அந்த இறக்கையை நறுக்க நினைக்கிறாள்.
“அத்தை! என் படிப்பு அடுத்த வருஷம் முடிஞ்சிடும். அது வரைக்கும் எனக்காக நீங்க எந்தத் திட்டமும் போட வேண்டாம். இப்ப அவசரப் பட்டா படிப்பு வீணாப் போயிடும். ஆகவே இந்த விஷயத்தில எனக்கு சம்மதம் இல்ல!” என்றான். அவனுடைய துணிச்சல் அவனுக்கே வியப்பாக இருந்தது.
அப்பா கத்தினார்: “நான் என்ன சொன்னேன் தங்கச்சி! இதெல்லாம் சொல் பேச்சு கேக்கிற பிள்ளையா? அதெல்லாம் நாம சொல்றபடி கேக்காது! நல்லதுக்குத்தான சொல்றாங்கன்னு தெரியாது. தலையில திமிர் பிடிச்சிப் போச்சி. எனக்குத் தெரியுமே!” என்றார்.
“அப்ப மத்ததயும் சொல்லிடுங்க அண்ண!” என்றாள் அத்தை. அடுக்கடுக்காகத் திட்டங்கள் வைத்திருக்கிறார்கள் என்று தெரிந்தது. இதைப் பற்றி இந்த இரண்டு பேரும் தான் இல்லாத வேளையில் விரிவாகப் பேசியிருக்கிறார்கள் என்றும் தெரிந்தது.
“ஆமா, சொல்லிட வேண்டியதுதான்” என்று தொடங்கினார் அப்பா. “சரி, உனக்குத்தான் தொழிலுக்கு ஒரு நல்ல வழி காட்டுனா வேணாங்கிற. என்னமோ படிச்சி கிளிச்சிட்டுத்தான் மறு வேலங்கிற. எப்படியோ தொலஞ்சி போ. ஆனா இப்ப தங்கச்சியோட மவ எவ்வளவு நாளா காத்திட்டு இருக்கு. அதுக்கும் வயிசாயிக்கிட்டு போவதில்ல! அதுக்கு ஒரு வளி பண்ணிட்டுப் போய்ப் படிச்சிட்டு வா!”
என்ன வழி? மல்லிகாவுக்குத் தான் ஏன் வழி சொல்ல வேண்டும்? புரியவில்லை.
“என்ன சொல்றிங்க அப்பா? மல்லிகாவுக்கு இப்ப என்ன?” என்றான்.
“அதான் வயசுக்கு வந்த பொம்பிள பிள்ளய எவ்வளவு நாள் சும்மா ஊட்டுலயே வச்சிக்கிட்டு இருக்கிறதுன்னு தங்கச்சி கவலப் படுது!”
“அதுக்கு?”
“உடனே நாள் பாத்து ஒரு கல்யாணத்தப் பண்ணிட்டா அப்புறம் கவல இருக்காது”
“யாருக்கும் யாருக்கும் கல்யாணம்?”
அத்தை திடீரென்று சீறினாள்: “பாத்திங்களா அண்ண! என்னமோ ஒண்ணும் தெரியாது மாதிரி பேசிறத! அன்னைக்கும் இந்த மாதிரிதான், என்னமோ தனக்கு சம்பந்தமிலாத மாதிரி பேச்சி! நீங்க சொன்ன மாதிரி யுனிவர்சிட்டி போனதில இருந்து பேச்சு நடத்தயெல்லாம் கொஞ்சம் மாறித்தான் போச்சி!”
“என்ன சொல்ல வர்ரிங்க அத்த? கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்!”
“இன்னும் என்னா வௌக்கமா சொல்றது? சீக்கிரமா அடுத்தடுத்த மாசத்தில மல்லிகாவக் கல்யாணம் பண்ணிக்கிட்டு அப்புறம் போய் படிப்ப முடிச்சிட்டு வான்னுதான் சொல்றேன்!”
அதிர்ந்தான். எதற்காக இப்படி அவசரப் படுகிறார்கள்? ஏன் இப்படி அதிவிரைவாகத் திட்டங்கள் தீட்டியிருக்கிறார்கள்? புரியவில்லை. அப்பாவுக்கும் அத்தைக்குமிடையிலான இந்த ரகசியப் பேச்சுகள் தான் நினைத்ததை விட மிகவும் ஆழமாக இருக்கின்றன என்று மட்டும் தெரிந்தது.
“அத்தை! இது என்ன தீடீர்ன்னு இப்படி ஒரு குண்ட போட்றிங்க? கல்யாணத்த பத்தி இப்ப நான் நெனைக்கவே இல்ல. படிப்பு ரொம்ப கஷ்டமா இருக்கு. ஆகவே அது முடிஞ்சி அடுத்த வருஷம் பரிட்சை எழுதி முடிச்சப்புறம்தான் கல்யாணத்தப் பத்தி யோசிக்கணும். எதுக்கு இப்படி திடீர்னு அவசரப் பட்டுச் செய்யணும்?”
அப்பா தனது வழக்கமான பாட்டைப் பாடினார்: “நான் சொல்லுல தங்கச்சி? நம்ப சொல்றது ஒண்ணயும் கேக்க மாட்டான். திமிருன்னா அப்படி ஒரு திமிரு!”
அத்தை கேட்டாள்: “ஏம் பண்ணிக்கக் கூடாது? உனக்கு என்ன கஷ்டம்? எல்லா வேலயும் நான் பாக்கிறேன். நாள் பாக்கிறதில இருந்து விருந்து ஏற்பாடு, தாலி எல்லாம் நான் செஞ்சுத் தரேன் உனக்கு. நீ ஒரு மூணு நாள் லீவு எடுத்திட்டு வந்து தாலிய மட்டும் கட்டிட்டுப் போ! போய் உன் படிப்பப் பாரு! யாரு வேணாங்கிறா?”
“ஏன் இப்படி ஒரு அவசரம் அத்தை? நான் என்ன ஓடியா போயிடப் போறேன்?”
“ஓடத்தான விருப்பப் பட்றாப்பில இருக்கு! நாலு எழுத்து படிக்கத் தெரிஞ்சவொடனே எங்க வீடெல்லாம் நாகரிகமில்லாமப் போச்சி! அதான் தீவாளிக்குக் கூட வர விருப்பமில்லாமப் போச்சி! அப்படி மாறிட்ட போது எங்க வீட்டுப் பொண்ண நாங்கதான பாதுகாக்கணும்! அதுக்காகத்தான் சொல்றேன்!”
தலைகுனிந்து யோசித்தான். அத்தைக்குத் தன் மீது பெரிய அழிக்க முடியாத சந்தேகம் விழுந்து விட்டது. அகிலாவையும் தன்னையும் இணைத்து யாராவது அவளிடம் சொல்லியிருப்பார்களா? இருக்கலாம்! இந்தப் பக்கமிருந்து தனக்குத் தெரிந்த மாணவர்கள் அங்கே பல்கலைக் கழகத்தில் படிக்கிறார்கள். அவர்கள் மூலமாகத் தகவல் வந்திருக்கலாம். அதனால்தான் அத்தை இப்படி கண்ணி வைத்துத் தன்னைப் பிடிக்கிறாள்.
என்ன சொல்வது என்று யோசித்தான். தற்காலிகச் சமாதானங்கள் சொல்லி இப்போதைக்கு விடுபடலாம். ஆனால் இதற்காக மேலும் பல பொய்கள் சொல்ல வேண்டி வரும். இப்போதே உண்மையச் சொல்லி விடுதலை வாங்கிக் கொள்ளலாம். இதனால் பூகம்பம் வெடிக்கும். பிரளயம் வரும். ஆனால் உண்மையாலும் உறுதியாலும்தான் இதனைச் சமாளிக்க வேண்டும். அத்தையின் முந்தானையில் தான் முடிந்து வைக்கப்படுவதிலிருந்து அவிழ்த்து வெளியேற இதுதான் நல்ல தருணம்.
அகிலா என்னும் அரிய காதலி தன் எதிர்கால வாழ்க்கையை ஒளிமயமாக்க அங்கே காத்திருக்கிறாள். அவளைக் கைப்பிடித்துத்தான் தன் கனவுக் குடும்பத்தை அமைக்க வேண்டும். அது பணமில்லாத, ஆடம்பரமில்லாத வாழ்வாக இருக்கலாம். ஆனால் காதல் தோய்ந்த மனம் ஒன்றித்த வாழ்வாக இருக்கும். இந்த அத்தையின் முரட்டு ஆதிக்கத்திலிருந்து வெளியேற அது ஒன்றுதான் வழி.
அத்தையை நேராகப் பார்த்தான். “அத்தை! இந்த கல்யாணத்துக்கு நான் சம்மதிக்க முடியாது!”
அத்தை அவனை கனல் கக்கும் விழிகளால் முறைத்துப் பார்த்தாள். “முடியாதா? ஏன் முடியாது? எனக்கு காரணம் சொல்லு!”
“ஏன்னா, நான் என்னோட படிக்கிற இன்னொரு பெண்ண விரும்பிறேன்! அதத்தான் கல்யாணம் செய்துக்கப் போறேன்!” என்றான்.
வீடு திகைத்திருக்க அப்பா மட்டும் உரத்த குரலில் கூவினார்: “நானு சொன்னனா இல்லியா? அத்தினியும் திமிரு, ஒடம்பு முளுக்கத் திமிரு!”
***
——————————————————————————–
28
அம்மாவின் முகத்தில் ஏன் இத்தனை கனல் இருக்கிறதென்று அகிலாவுக்குப் புரியவில்லை. தீபாவளியன்று மாலை வரை விருந்தினர் வருகின்ற நேரமெல்லாம் அவர்களோடு புன்னகைத்து உரையாடி உபசரித்துக் கொண்டுதான் இருந்தாள். எல்லாரும் போய் வீடு ஓய்ந்த பிறகு பாத்திரங்களைக் கழுவ ஆரம்பிக்கும் போது உம்மென்று ஆகிவிட்டாள். வீட்டில் ஒருவருடனும் பேசவில்லை. கேட்ட கேள்விகளுக்கு “உம்” “ஊகூம்” என்று முனகலில் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள். தம்பி அருண் எதையோ கேட்கப் போக “போடா, போய் வேலயப் பாரு!” என்று விரட்டினாள்.
கணேசன் வந்து போனதற்கும் அம்மாவின் மனமாற்றத்திற்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறதென்று அகிலாவுக்குத் தெரிந்தது. ஆனால் அது ஏன் எனப் புரியவில்லை. கணேசனோடு அம்மா பேச மறுத்து முகத்தைத் திருப்பிக் கொண்ட போதே அவளுக்கு கணேசன் அங்கு வந்திருப்பதில் விருப்பமில்லை என்று புரிந்து கொண்டாள். அப்பா மிகவும் நாகரிகத்துடன் நடந்து கொண்டார். அன்பாக உபசரித்தார். முகமன்களைக் குறைவில்லாமல் செய்தார். ஆனால் அதற்கு மேல் ஒன்றும் பட்டுக் கொள்ளாமல் இருந்தார்.
கணேசனை இப்படித் தீபாவளிக்கு வரச் சொன்னது தவறோ என நினைத்தாள். ஆனால் அப்பாவின் உத்தரவின் பேரில்தானே வரவழைத்தாள்! அதுவும் தீபாவளிக்கு முன் கூட்டியே பெற்றோர்களுக்குத் தெரிவித்திருந்தாள். அப்படித் தெரிவித்த போதும் அப்பா “அப்படியாம்மா! அதுக்கென்ன, நல்லா வரட்டும்!” என்று சொன்ன போது அம்மா மட்டும் ஒன்றும் சொல்லாமல் மௌனம்தான் சாதித்தாள்.
அன்று இரவு வீடு களைத்திருந்தது. தீபாவளித் துணிகளைக் களைந்து விட்டு இரவு உடுப்புகளுடன் தொலைக்காட்சி முன்னால் அனைவரும் சோர்ந்து கிடந்த போது அம்மா திடீரென ஆரம்பித்தாள்: “அந்தப் பையன் ஏன் நம்ம வீடு தேடி வரணும்?”
அகிலா தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஆழ்ந்திருந்ததால் இந்தக் கேள்வியை அவளால் சரியாகக் கிரகித்துக் கொள்ள முடியவில்லை.
“என்ன கேட்ட அம்மா?”
“அந்தப் பையன், அதான் உன் ·பிரண்டு, ஏன் இவ்வளவு தூரம் நம்ம வீடு தேடி வரணும்?” குரலில் கோபமும் எரிச்சலும் இருந்தன.
அகிலாவுக்கு ஏனோ அப்பாவைப் பார்க்க வேண்டும் போலத் தோன்றியது. ஏறிட்டுப் பார்த்தாள். அவர் பதில் சொல்லவில்லை. அகிலாவே பதில் சொல்ல வேண்டும் என்பது போலத் திரும்பப் பார்த்தார்.
அகிலா சொன்னாள். “என்ன கேக்கிற அம்மா? இன்னைக்குத் தீபாவளி! அவர் என் ·பிரன்டு! வீட்டுக்கு வந்ததில என்ன தப்பு? அவரப் போல எத்தனயோ ·பிரண்டுங்க வந்து போனாங்க. அவர் மட்டும் ஏன் வரக்கூடாது?”
“மத்த ·பிரண்டுங்க அக்கம் பக்கத்தில உள்ளவங்க. ஏற்கனவே நமக்குத் தெரிஞ்சவங்க! ஆனா கிள்ளான்ல வீடு இருக்கிற பையன், தீபாவளி அன்னைக்கு அவங்க வீட்டையெல்லாம் விட்டுட்டு இங்க முன்ன பின்ன அறிமுகம் இல்லாத ஊருக்கு வரணும்னு என்ன இருக்கு?” தொடர்ந்து கேட்டாள்.
“நாந்தான் வரச் சொன்னேன்! வந்து எங்க வீட்டப் பாத்துப் போங்கன்னு சொன்னேன்! இதில என்ன தப்பு? அவர் வரப் போரார்னு ஏற்கனவே உங்கிட்டியும் அப்பா கிட்டியும் சொல்லியிருக்கேனே!”
அப்பா வேடிக்கை பார்த்தவாறிருந்தார். இந்த உரையாடலில் வெளியே இருந்து பார்ப்பதையே விரும்பியவர் போல இருந்தார்.
“எனக்கென்னமோ இதல்லாம் நல்லதா படல! முன்ன பின்ன தெரியாதவங்கள இப்படி பெரிசா ஊட்டுக்கு நடுவுல கொண்டு வந்து உக்கார வச்சிக்கிறது அழகா இருக்கா?”
“யார் முன்ன பின்ன தெரியாதவங்க? என்னுடைய நண்பர், எனக்குப் பல்கலைக் கழகத்தில உதவி செய்தவர்னு எத்தன தடவ சொல்லியிருக்கேன்?” அகிலாவின் குரலிலும் சூடு ஏறியது.
“என்னடி நண்பர்? யுனிவர்சிட்டியில நண்பர்னா அங்கயே வச்சிக்கனும்? ஏன் வீட்டுக்குக் கொண்டு வர்ர? அவங்க குடும்பத்தப் பத்தி தெரியுமா? நல்லவங்களா கெட்டவங்களா என்ன மாதிரி பரதேசிங்கன்னு தெரியுமா? அந்தப் பையனப் பாத்தா சுத்த தோட்டக்காட்டான் மாதிரி தெரியுது. அதுங்களோடல்லாம் உனக்கு என்ன பளக்கம் வேண்டி கிடக்கு?”
அம்மாவின் சீற்றமும் இந்த உதாசீன மிக்க பேச்சும் அகிலாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. கணேசன் வந்தது பற்றி அம்மா விருப்பமில்லாமல் இருக்கிறாள் என்று தெரிந்திருந்தாலும் இத்தனை வெறுப்பை அவள் உமிழ்வாள் என்பதை அவள் எதிர்பார்க்கவில்லை.
தன்னைத் தற்காக்க அப்பா கூட முன்வராமல் இருந்தது அவளுக்குத் தவிப்பாக இருந்தது. கணேசனைப் பற்றி அம்மா முரட்டுத் தனமாக வீசும் சொற்களுக்குத் தானும் அதே தீவிரத்தில் பதில் சொன்னால் நிலைமை சூடாகிவிடும் என்று தெரிந்தது. ஆனால் தன் உள்ளத்தில் ஒரு பாசமான இடத்தில் வைத்திருக்கும் கணேசன் என்ற தனது நண்பனை — காதலனை — இப்படி உதாசீனப் படுத்தும் அம்மாவின் போக்கை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என்ன சூடான சொற்களால் பதில் சொல்லுவது என்று அவள் கொஞ்சம் யோசித்துக் கொண்டிருந்த போது அப்பா பேசினார்:
“என்ன வனஜா, எதுக்காக இப்படிப் பேசிற? ஒரு நல்ல நாளும் அதுவுமா தன்னோட படிக்கிற நண்பர வீட்டுக்கு வரச் சொல்றதில என்ன தப்பு? நீ பேசிறது எனக்கே சரியா புரியில! பிள்ளைக்கு எப்படிப் புரியும்?”
“ஆமா, இப்படி நீங்க எடங்குடுத்து எடங்குடுத்துத்தான் இவ இப்படிக் கெட்டுப் போயிட்டா! அன்னைக்கே அவ இந்தப் பையன வரச்சொல்றன்னு சொன்ன போது அதெல்லாம் வேண்டான்னு நீங்க தடுத்திருக்கனும். அப்படிச் செய்யாம நீங்களும் அவ கூடச் சேந்துக்கிட்டு கொஞ்சிறதினாலதான் அவளும் தலைக்கு மேல போறா!” அப்பாவிடமும் சீறினாள்.
“என்ன பேசிறன்னு எனக்குப் புரியலியே! தீவாளி அன்னைக்கு ஒரு ·பிரண்டு வீட்டுக்கு வந்திட்டுப் போறதுக்கு நீ இப்படி கோவிச்சிக்கிறியே!”
“ஏங்க, இந்தப் பையன் வெறும் கூட்டாளி இல்ல, இவங்களுக்கு இடையில என்னமோ இருக்குன்னு உங்களுக்குத் தெரியிலியா? போற போது அந்தப் பையன் இவ கைய பிடிச்சி சொல்லிட்டுப் போற அளவுக்கு இது முத்திப் போயிருக்கு. உங்களுக்கு சம்மதமா இதில? இதெல்லாம் மொளையிலேயே வெட்டி எறிய வேணாமா?”
தம்பி தான் பார்த்ததை அம்மாவிடம் சொல்லியிருக்கிறான் எனத் தெரிந்தது. அகிலா அவனை முறைத்தாள். அவன் அப்பாவித் தனமாக தொலைக்காட்சியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
ஆனால் தம்பி இதை உடைத்துச் சொல்லியிருப்பதில் ஒரு நன்மை இருப்பதாகவும் தோன்றிற்று. ஒரு வகையில் கணேசனை வீட்டுக்கு வரச் செய்ததே தன் பெற்றோரின் உணர்வுகளை ஆழம் பார்ப்பதற்குத்தானே! ஆகவே அதுதான் இப்போது நடக்கிறது. கணேசனின் கையைத் தான் பிடித்ததும், அவன் கையைப் பிடித்து அழுத்த அனுமதித்ததும் கூட பெற்றோருக்கும் தெரியட்டும் என்ற மன தைரியத்தில் நடந்ததுதான். ஆகவே தன் மனதைத் திறந்து சொல்ல இது சந்தர்ப்பம்தான் என அவளுக்குத் தோன்றியது. ஆனால் அதைக் கொஞ்சம் மறைமுகமாகவும் மெதுவாகவும் சொல்வது அவசியம் என எண்ணினாள்.
“போய்ட்டு வாரேன்னு கை குலுக்கிப் போனாரு. அதுவும் தப்பா?” என்று கேட்டாள்.
“இந்த நடிப்பெல்லாம் எங்கிட்ட வேணாம். எனக்குத் தெரியாதுன்னு நெனைச்சிக்காத. நீ அளவுக்கு மீறிப் போற. இதில எனக்குக் கொஞ்சம் கூட இஷ்டமில்ல!”
அகிலா தலை குனிந்திருந்தாள். பேசவில்லை.
அப்பா பேசினார். “என்ன இந்த விஷயத்த இவ்வளவு பெரிசு படுத்திற வனஜா? என்ன தப்பு நடந்து போச்சு இப்போ?”
“நீங்க இப்படியே எடங் குடுத்தீங்கன்னா இனிமேதான் நடக்கப் போவுது பெரிய தப்பு. இந்தப் பையன எனக்கு ஒரு துளிக் கூடப் பிடிக்கில. இகவே இந்தப் பளக்கம் வேண்டான்னு சொல்லிருங்க! இல்லன்னா, தன் இஷ்டப்படிதான் செய்வேன்னா இனிமே அவ எங்கிட்ட பேசவே வேணாம். அம்மாங்கிறவ ஒருத்தி வேணான்னு அவ இஷ்டத்துக்குப் பண்ணிக்கிட்டும்!”
அம்மா சரேலென எழுந்து அறைக்குள் போய் விட்டாள்.
கொஞ்ச நேரம் அந்த இடம் பேச்சடைத்துக் கிடந்தது. அப்பா நாற்காலியில் சாய்ந்து யோசித்தவாறு இருந்தார். தம்பி படம் பார்ப்பதாக நடித்துக் கொண்டிருந்தான். அகிலா அடக்கி அடக்கிப் பார்த்து தவிர்க்க முடியாமல் மெல்ல விம்ம ஆரம்பித்தாள்.
“நீ ஏம்மா இப்ப அளுவுற? அம்மா ஏதோ கோபத்தில பேசுது. விட்டுத் தள்ளு!” என்றார் அப்பா ஆறுதலாக.
“இப்ப இவ்வளவு பேசிற மாதிரி நான் என்ன குத்தம் செஞ்சிட்டேன் அப்பா?”
“எனக்கும் சரியா தெரியில அம்மா! அம்மாவுக்குக் கோவம் தணியட்டும். நான் கேட்டுப் பாக்கிறேன்!” என்றார்.
அந்த இறுக்கத்தில் கொஞ்ச நேரம் மௌனமாகக் கழிந்தது. தொலைக் காட்சிப் படத்தின் எல்லா அர்த்தங்களும் அந்த சூழ்நிலையின் தீவிரத்தில் தொலைந்து போக முதலில் தம்பி அங்கிருந்து சத்தமில்லாமல் நழுவி அறைக்குப் போனான். அகிலா தொலைக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தாலும் அவள் மனதில் வேறு குழப்பமான படங்கள் ஓடிக் கொண்டிருந்தன. அப்பாவும் கண்களும் மனமும் குவியாமல் தொலைக் காட்சியை வெறித்தவாறிருந்தார்.
அங்கு மேலும் நடப்பதற்கு ஒன்றுமில்லை என்று தெரிந்து கொண்டு அகிலா எழுந்து படுக்கப் போனாள்.
*** *** ***
மறுநாள் அவள் பினாங்குக்கு பஸ் ஏற அவளை பஸ் நிலையத்தில் கொண்டு வந்து விட்டார் அப்பா. கூட வரத் தயாரான தம்பி அருணை அவரே வேண்டாம் என்று சொல்லிவிட்டார். “போய்ட்டு வாரேம்மா!” என்று அகிலா கூவிச் சொன்ன போதும் சமையலறையில் இருந்த அம்மாவிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.
அரை மணி நேரம் முன்னதாகவே அவளை அவசரப் படுத்தி அழைத்து வந்தார். ஒரு மரத்தடியில் காரைப் போட்டு விட்டு அகிலாவிடம் பேசினார்.
“ராத்திரி அம்மாகிட்ட பேசினேன் அம்மா! அது ரொம்ப பிடிவாதமா இருக்கிது!” என்றார்.
“என்ன பிடிவாதம் அப்பா?”
“அந்தப் பையனோட உனக்குப் பழக்கம் இருக்கக் கூடாதாம். இப்ப இருக்கிற பழக்கத்த முறிச்சிக்க சொல்லுது!”
“ஏனாம்?”
“தெரில அம்மா. அந்தப் பையனப் பாத்தவொடனே உங்கம்மாவுக்குப் பிடிக்காம போச்சி!”
“ஏன் அப்படி? அவர சரியா ஏறெடுத்தும் பாக்கில. ஒரு வார்த்த கூட பேசில. அப்புறம் ஏன் இப்படி சொல்றாங்க?”
“எனக்குத் தெரியிலம்மா! உண்மையிலேயே அதோட மனப் போக்கு விளங்கல! அந்தப் பையனப் பார்த்தா நல்ல குடும்பத்துப் பையனா தெரியில, சுத்தத் தோட்டக் காடு மாதிரி இருக்குது அப்படின்னு கன்னா பின்னான்னு பேசுது. நான் சொல்றது எதையும் காதில போட்டுக்க மாட்டேங்குது” பெரு மூச்சு விட்டவாறு காரின் ஜன்னலூடே தெரிகின்ற மரத்தின் கிளையைப் பார்த்தவாறிருந்தார்.
“ஏன் அப்பா, பல்கலைக் கழகத்தில எனக்கு நண்பர்கள்னு சிலர் இருக்கத்தான வேணும்! அவர்கள்ள எனக்கு வேண்டியவர்கள தேர்ந்தெடுக்க எனக்குத்தானே தெரியும்! அம்மா வந்து எனக்குத் தேர்ந்தெடுத்துக் குடுக்க முடியுமா?” அவள் குரலில் கொஞ்சம் கோபம் நுழைந்தது.
அப்பா கொஞ்ச நேரம் ஓய்ந்திருந்து கொஞ்சம் தணிந்த குரலில் பேசினார்: “இந்தப் பையன் சாதாரண நண்பர் இல்லன்னு அம்மா நெனைக்குது. உன்னுடைய காதலனா இருக்கும்னு நெனைக்குது. அதனாலதான் இத்தனை ஆவேசம் வருது!”
அகிலா மௌனமாக இருந்தாள். அப்பா தலை திருப்பி அவளை நேரடியாகப் பார்த்துக் கேட்டார்: “அது சந்தேகப் பட்றது உண்மையா அகிலா?”
உண்மையா? அப்பாவுக்கு என்ன பதில் சொல்வது என்று அகிலாவுக்குத் தெரியவில்லை. அவள் மனமே இன்னும் உறுதிப்படவில்லை போல இருந்தது. கணேசனை எனக்குத் தெரியுமா? அழகன், அறிவாளி, நல்லவன் என்று நினைத்திருந்தேன். ஆனால் முதல் முறை பார்த்த அம்மாவின் மனதில் அவன் இப்படியெல்லாம் தோன்றவில்லை. உதாசீனப் படுத்தத் தக்க தோட்டக் காட்டானாகத் தோன்றியிருக்கிறான். தான்தான் தவறு செய்து விட்டேனோ? எனது தற்காப்புகள் அனைத்தும் இழந்திருந்த ஆதரவற்ற ஒரு அசாதாரண சந்தர்ப்பத்தில் அவனுடைய அறிமுகம் கிடைத்ததால் அறிவு பின்னின்று உணர்ச்சி முந்தி நிற்க கண்டவுடன் காதல் என்று கொண்டு விட்டேனோ?
“நீ இப்படி மௌனமா இருக்கிறதப் பார்த்தா அம்மா சந்தேகப் பட்றது சரின்னுதான் நெனைக்க வேண்டியிருக்கு!” என்றார் அப்பா.
நிமிர்ந்து பார்த்தாள். “பழக்கம் கொஞ்சம் நெருக்கமா இருக்கிறது உண்மைதான் அப்பா. ஆனா அதுக்காக கல்லாணம் வரைக்கும் நான் வந்திட்டேன்னு சொல்ல முடியாது. நல்லவரா இருக்கிறாரு. எனக்கு ஆதரவா இருக்கிறாரு. மனசுக்குப் பிடிச்சவரா இருக்கிறாரு! அவ்வளவுதான்!”
“அப்படின்னாம்மா, இப்ப அம்மாவுக்கு இவ்வளவு பிடிக்காமப் போயிட்டதினால நீ பழக்கத்தக் கொஞ்சம் குறைச்சிக்கிட்டு, மற்றவர்களைப் போல அவர ஒரு சாதாரண நண்பராகவே வச்சிக்கியேன். இல்லன்னா அம்மாவோட பகைச்சிக்க வேண்டி வரும். இல்லியா?”
அகிலாவுக்கு ஒன்று தெரிய வேண்டியிருந்தது: “அம்மா சொல்றது இருக்கட்டும் அப்பா. நீங்க என்ன சொல்றிங்க?”
அப்பா யோசிப்பதற்குக் கொஞ்ச நேரம் எடுத்துக் கொண்டார். அப்புறம் சொன்னார்: “முதல் பார்வையில ஒருத்தரப் பத்தி சொல்ல முடியாது. பையனப் பார்த்தா கொஞ்சம் சாதாரணமாத்தான் இருக்குது. நமக்குத் தெரிஞ்ச நல்ல குடும்பங்கள்ளியே இத விடவும் நல்ல நாகரிகமான படிச்ச அழகான பிள்ளைகள் எவ்வளவோ பேர் இருக்காங்களே. அதோடு கூடம்மா, இந்த விஷயங்கள்ள என்ன விட உங்கம்மாவுக்கு ஒரு உள்உணர்வு இருக்கு. அது முதல்ல சொல்றது தப்புங்கிற மாதிரி பட்டாலும் பின்னால அது சரியா இருந்திருக்கிறத நான் வாழ்க்கையில பல தடவ பாத்திருக்கிறேன். ஆகவே இந்த விஷயத்தில நான் உங்கம்மாவோட உணர்ச்சிக்குத்தான் மதிப்புக் கொடுக்க விரும்புறேம்மா! பரவால்ல நீ யோசிச்சிப் பாரு. நீயும் படிச்ச பிள்ள! உன் விருப்பத்தையும் நான் மதிக்கிறேன். உன் எதிர்காலத்த நீயே தீர்மானிக்கிறதும் முக்கியம்தான். ஆனா குடும்பத்தப் பகைச்சிக்காம அதச் செய்ய முடிஞ்சா எவ்வளவோ நல்லா இருக்கும் இல்லியா?”
*** *** ***
நெடுஞ்சாலையில் காட்சிகள் நகர்ந்து கொண்டிருந்தன. ஏர் கண்டிஷன் உள்ள பஸ்ஸில் இறுக்க மூடிய ஜன்னல்களிலிருந்து பார்க்கின்ற போது அவை சத்தம் எழுப்பாக ஊமைப் படங்களாகத் தெரிந்தன. அளவாக வெட்டி அலங்காரம் செய்யப்பட்டிருந்த நெடுஞ்சாலை விளிம்புகளில் அழகிய குட்டையான மரங்கள் அணிவகுத்து இருந்தன.
அப்பா தன்னை மிகவும் குழப்பி விட்டிருக்கிறார் என அகிலாவுக்குத் தோன்றியது. அம்மா சொன்னது செய்தது எல்லாவற்றையும் விடவும் அப்பா சொன்னதுதான் அவளை மிகவும் பாதித்திருந்தது. அம்மா தன்னைச் சுற்றியுள்ள சமுதாயத்தில் தன் மதிப்பைக் காத்துக்கொள்வதையே ஒரு பெரிய விஷயமாக நினைக்கிறாள். அவளுடைய முதிராத மனதில் இந்த சமுதாயப் பேச்சுதான் வாழ்வு-சாவுப் பிரச்சினையாக முக்கியத்துவம் பெற்று அவள் மூளையில் பாசியாக ஒட்டிக் கொண்டிருக்கிறது.
ஆனால் அப்பா தன் முதிர்ச்சியில் சோர்ந்திருக்கிறார். வீட்டின் தலைமைத்துவத்தை அம்மாவிடம் ஒப்படைத்துவிட்டு அவளுடைய புடவை முந்தானையில் தற்காப்புத் தேடிக் கொள்கிறார் என்று தோன்றியது. குடும்பத்தின் பெருமை என்பது அம்மாவின் சொற்படி மூட நம்பிக்கைகள் மிகுந்த வழியானாலும் பாதுகாப்பான பாதைகளில் நடப்பதுதான் என்று ஆக்கிக் கொண்டார்.
இந்த இரண்டு பிற்போக்குவாதிகளுக்குத் தானும் தலை குனிந்து போகவேண்டுமா என அகிலாவின் மனம் சீறியது. தன் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தடுக்கத் தனக்கு எந்த உரிமையும் இல்லை என்பது போலப் பேசுகிறார்களே! தான் படித்ததவள் என்பதையும் நவீனமான எதிர் காலத்தில் வாழப் போகிறவள் என்பதையும் மறந்து விடுகிறார்களே!
கணேசனுக்கு என்ன குறை என்று அவர்கள் நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை. அவன் அசாதாரண அழகனல்ல. ஆனால் எந்தப் பெண்ணின் நெஞ்சையும் கவரும் தோற்றமுடையவன்தான். அவனுக்கு நல்ல குணங்கள் இருக்கின்றன. அவன் குடித்தோ சிகரெட் புகைத்தோ அவள் பார்த்ததில்லை. தன் கண்ணுக்குத் தெரியாமல் செய்வானோ என்னவோ தெரியவில்லை. அப்படி இருந்திருந்தால் தெரியாமல் இருந்திருக்காது.
அவனைத் “தோட்டக்காட்டான்” என்று அம்மா சொன்னது அகிலாவை வெகுவாகப் புண் படுத்தியது. இது என்ன புதிய இழிஜாதியா? இன்னுமா அவன் தோட்ட வேலைக்காரன்? அவன் படிக்கவில்லையா? நாளை நிர்வாகத் துறையில் பட்டம் பெற்றால் ஆயிரக் கணக்கில் சம்பளம் வாங்கும் அதிகாரம் உள்ளவனாக இருக்கப் போகிறானே. அதையெல்லாம் ஒதுக்கி விட்டு அவன் பூர்வீகம் தோட்டப்புறமாக இருப்பதால் இப்படி எடுத்தெறிந்து பேசுவதா? அவன் என்ன ஜாதி என்பது இந்த நவீன காலத்தில் முக்கியமா?
எல்லாம் தெரிந்த அப்பாவும் ஏதோ அவன் நாகரிகமில்லாதவன் என்பது போலத்தானே பேசுகிறார். தனக்குத் தெரிந்த குடும்பங்களில் நாகரிகமுள்ள எத்தனையோ பிள்ளைகள் இருக்கிறார்கள் என்று சொன்னால் கணேசன் நாகரிகமில்லாதவன் என்றுதானே அர்த்தம்! அப்படி என்ன நாகரிகமில்லாதவனாக நடந்து கொண்டான் கணேசன்?
கணேசனுடன் தான் பழகியிருக்கும் பல்வேறு சந்தர்ப்பங்களை அகிலா நினைத்துப் பார்த்தாள். அவன் இதுவரை தன்னை ஒரு பூப்போலத்தான் நடத்தியிருக்கிறான். தன் எண்ணங்களை மதித்திருக்கிறான். தான் இடம்கொடுக்காமல் அவன் தன்னைத் தொட்டதில்லை. தான் வேண்டாம் என்ற எதையும் தன் மேல் அவன் திணித்ததில்லை.
கணேசனுடைய பெற்றோர்கள் ஒருவேளை தோட்டத்திலேயே வாழ்ந்த, பட்டண நாகரிகம் தெரியாதவர்களாக இருக்கக் கூடும். அவர்கள் பழைய தலைமுறை. தன்னால் அவர்களை அனுசரித்துப் போக முடியும். கணேசன் – அகிலா வாழ்க்கை முறையை அவர்கள் தீர்மானிக்க வேண்டியதில்லை. தன் வாழ்க்கையின் மேல் அவர்கள் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்க வேண்டியதில்லை. அதற்குக் கணேசனும் அனுமதிக்க மாட்டான். ஆகவே அவர்களோடு தாங்கள் சமாதான சகவாழ்வு நடத்த முடியும். அதே போலத்தான் தன் பெற்றோர்களும் தன் வாழ்க்கை மீது ஆதிக்கம் செலுத்த அனுமதிக்க வேண்டியதில்லை என அகிலா முடிவு செய்து கொண்டாள்.
கணேசனுக்கும் தனக்குமுள்ள காதலால், அன்பால் ஒரு புதிய குடும்பத்தைத் தாங்கள் அமைத்துக் கொள்ள முடியும். அவன் பார்வை கனிவானதாக இருக்கிறது. என் மேல் ஆதிக்கம் செலுத்த அவன் நினைக்கவில்லை. அவன் மேல் ஆதிக்கம் செலுத்த நானும் நினைக்கவில்லை. எங்கள் குடும்பம் அமைதியான இனிமையான இணக்கமான குடும்பமாக இருக்கும். அம்மா – அப்பாவின் பத்தாம் பசலித் தனங்கள் அதில் குறுக்கிடத் தான் அனுமதிக்கக் கூடாது.
கிட்டத்தட்ட “நான் என்னோட படிக்கிற இன்னொரு பெண்ண விரும்பிறேன்! அதத்தான் கல்யாணம் செய்துக்கப் போறேன்!” என்று கணேசன் தன் அத்தையிடம் சூளுரைத்த அதே நேரத்தில், கணேசன்தான் தன் வருங்காலக் கணவன் என்ற எண்ணம் அகிலாவின் மனதிலும் உறுதிப் படத் தொடங்கியிருந்தது.
***
——————————————————————————–
29
அத்தையின் காரில் கிள்ளானுக்குத் திரும்பி வரும் போது கணேசன் வாய் மூடிக் கிடந்தான். காரில் மௌனம் கனத்துக் கிடந்தது. அத்தை முகத்தில் சவக்களைதான் இருந்தது. டிரைவரும் நிலைமையைப் புரிந்து கொண்டு “உம்” என்று ஓட்டி வந்தார்.
பகல் முழுவதும் அப்பாவின் வீட்டில் அத்தையும் அப்பாவுமாகச் சேர்ந்து அவனைத் தார்தாராய்க் கிழித்துப் போட்டார்கள். அவனால் அந்த வீட்டின் கூரை இடிந்து விழுந்து விட்டதென்றும் குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லாம் செத்து மண்ணாய்ப் போகப் போகிறார்கள் என்னும் செய்திகளை வெவ்வேறு கடுமையான வார்த்தைகளால் இருவரும் மாறி மாறிச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அடுத்தடுத்த வீட்டுக்காரர்கள் சத்தம் கேட்டு எட்டிப் பார்க்கிறார்களே என்ற நாணம் ஏதும் இல்லாமல் பேசினார்கள்.
“யாரு அந்த வேசச் சிறுக்கி? எனக்குக் காட்டு! என்ன சொக்குப் பொடி போட்டு உன்ன மயக்கினான்னு நேரா நாலு வார்த்த கேக்கிறேன்!” என்று அத்தை சொன்ன போது அவனுக்கு கோபம் எரிமலையாகக் குமுறி எழுந்தது. நான் இதயத்தில் சூட்டிய பூவை இப்படிக் குதறுகிறாள். நான் புனிதமானதாக எண்ணிக் காப்பாற்றுகின்ற எண்ணங்களின் மீது எச்சில் உமிழுகிறாள். அவள் குரல்வளையைப் பற்ற வேண்டும் போல் கோபம் வந்தது. ஆனால் பல்லைக் கடித்துக் கொண்டு அமைதியாக இருந்தான். இந்தச் சந்தர்ப்பத்தில் இந்தக் கோபாவேசங்கள் நிலைமையை இன்னும் மோசமாக்கும் என்றுதான் அவனுக்குத் தோன்றியது.
இடையே ஓரிரண்டு முறை காதல் என்பதும் கல்யாணம் என்பதும் சம்பந்தப் பட்டவர்களின் சொந்த விஷயம் என்பதை கணேசன் அவர்களுக்கு உணர்த்த முயன்றான். அவர்கள் விவாதக் கூச்சலில் அது விகாரமான பதில்களைத்தான் பெற்றது. “ஓ, அப்ப இத்தன நாள் எங்கையில காசு வாங்கித் தின்னது ஒன் சொந்த விஷயமா? புஸ்தகத்துக்கு இத்தன வெள்ளி, சாப்பாட்டுக்கு இத்தன வெள்ளின்னு கணக்குப் பாத்து வாங்கிட்டுப் போனது சொந்த விஷயமா?” என்று அத்தை கத்தினாள்.
“நன்னி இல்லாத நாய்க்கெல்லாம் இப்படி வாரிக் கொட்டினா இப்படித்தான் பேசும்” என்று அப்பா தாளம் போட்டார்.
“அத்த, நீங்க கொடுத்த காச எல்லாம் நான் வேலக்கிப் போயி சம்பாரிச்சி திருப்பிக் குடுத்திட்றேன். நீங்க எனக்கு இன்னமே எந்தக் காசும் கொடுக்க வேணாம்!” என்றான்.
“அப்ப இத்தினி நா தின்ன சோத்தயும் திருப்பிக் குடுத்திருவியா? இத்தன நா அவ ஊட்ல இருந்து அவ தண்ணிய குடிச்சி அவ கட்டில்ல படுத்துப் பொரண்டியே, திருப்பிக் குடுத்திருவியா?” என்று அப்பா கேட்டார்.
அவனால் பேச முடியவில்லை. ஒரு கட்டத்தில் எரிச்சலடைந்து சோர்ந்து போய் தன் பையை மட்டும் தூக்கிக் கொண்டு வெளியேற முயன்றான்.
“நில்லு, எங்க போற?” என்று அத்தை அதட்டினாள்.
“நான் போறேன் அத்தை. இங்க இருந்தா இப்படியே பேசிக்கிட்டே இருப்பிங்க. என்னால எந்த பதிலும் சொல்ல முடியாது. நான் சொல்ல வேண்டியதை சொல்லியாச்சி. அதுல எந்த மாத்தமும் இல்ல. ஆகவே நான் இப்படியே போய் பஸ் பிடிச்சி பினாங்குக்குத் திரும்பிப் போறேன்!” என்றான்.
வீடு கொஞ்ச நேரம் அதிர்ந்து இருந்தது. அப்புறம் அத்தை சொன்னாள்: “இதோட முடிஞ்சி போச்சா கணேசு? இப்படி வெளியாயிட்ட எல்லாம் சரியாப் போயிடுமா? அப்ப சரி. ஆனா எம்பிள்ளைக்கு யாரு பதில் சொல்றது? நான் எப்படி அவ மொகத்த பார்த்து ‘ஒன் மாமன் ஒன்ன ஏச்சிட்டு இன்னொருத்தியோட போயிட்டான்னு’ சொல்றது? நீயே வா. இப்பவே எங்கூட வந்து நீயே அவ மொகத்த பாத்து சொல்லிட்டு எங்க வேணுமானா தொலஞ்சி போ!” என்றாள்.
கணேசனுக்கு அந்த இடத்தை விட்டு உடனே அகன்று விட வேண்டும் என்றிருந்தாலும் இந்த அத்தையின் முகத்தில் இனி எந்த நாளும் விழிக்க வேண்டாம் என்று இருந்தாலும், இவ்வளவு தூரம் வந்த பிறகு இந்த விஷயத்தை மல்லிகாவிடம் சொல்லாமல் போவது நல்லதல்ல என்றே பட்டது. அவள் எனக்கு எதிரியல்ல. அவளும் என் அன்புக்கு உகந்தவள்தான். அவள் இவர்களைப் போல வயதிலும் உணர்விலும் முற்றிப்போன கட்டையல்ல. இளம்பெண். இளைய புதிய தலைமுறை. காதல் என்பது என்ன என சொன்னால் அவளுக்குப் புரியும். அதிலும் அத்தையால் இந்த விஷயம் விகாரப் படுத்தப் பட்டும் கொச்சைப் படுத்தப்பட்டும் அவளுக்குச் சொல்லப் படுவதை விட தானே அவளுக்கு இதமாக எடுத்துச் சொல்லலாம். நிலைமையை உணர வைக்கலாம் அதுதான் சரி.
அத்தையுடன் மீண்டும் காரில் ஏறினான். ஆனால் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கவில்லை. கிள்ளான் வந்து சேரும் வரை ஒரு பேச்சும் பேசவில்லை. அத்தை பிரயாணம் முழுவதிலும் விம்மி விம்மி அழுது கண்களைத் துடைத்துக் கொண்டே இருந்தாள்.
*** *** ***
காரிலிருந்து இறங்கியவுடன் “ஏம்மா இவ்வளவு லேட்டா வர்ரிங்க?” என்று மல்லிகா தனக்கே உரிய குழந்தைத் தனத்துடன் சிணுங்கினாள். அத்தை ஒரு பதிலும் சொல்லாமல் கண்களைத் துடைத்துக் கொண்டு உள்ளே போனாள். மல்லிகா புதிர் நிறைந்த கண்களால் கணேசனைப் பார்த்தாள்.
கணேசன் வரவேற்பறையில் நாற்காலியில் உட்கார்ந்தான். மல்லிகாவின் முகத்தை உற்றுப் பார்த்தான். அவள் வந்து அவன் பக்கத்தில் உட்கார்ந்தாள். “ஏன் மாமா அம்மா ஒரு மாதிரியா இருக்காங்க? உங்க வீட்டில ஏதாச்சிம் சண்டையா?” என்று கேட்டாள்.
அவளைப் பார்க்கும் போது அவள் இன்னும் குழந்தையாகிவிட்டது போலத் தெரிந்தது. தான் சொல்லப் போகும் விஷயத்தை எப்படி எடுத்துக் கொள்வாள். “அப்படியா, சரி அதினால என்ன!” என்று தோள்களைக் குலுக்கிக் கொண்டு உதறி விடுவாளா? அல்லது அவள் அம்மா குமுறி எழுந்ததைப் போல எழுந்து ஏசுவாளா? “உன்னால் என் வாழ்வே சூன்யமாகிவிட்டதே” என்று சினிமா பாணியில் அழுவாளா? அவனால் தீர்மானிக்க முடியவில்லை.
ஜெசிக்காவுடன் இதைப் பற்றி அவன் ஒருமுறை பேசிய நினைவு வந்தது. கொஞ்சம் தைரியமும் வந்தது.
“என்ன மாமா பேசாம இருக்கிங்க?” என்றாள்.
அதற்குள் உள்ளே போயிருந்த அத்தை மீண்டும் வரவேற்பறைக்கு வந்தாள். “சொல்லுடா, சொல்லு! உன் வாயாலேயே சொல்லிட்டுப் போ. இத்தன நாள் உன்னோட நெனப்பலியே திரிஞ்சாள்ல, அவ மனசில நெருப்ப அள்ளிக் கொட்டு!” என்றாள்.
அத்தையின் முன்னிலையில் இந்த விஷயத்தைப் பேச முடியாது என்று தெரிந்தது. “மல்லிகா இப்படி வா!” என்று அவளை இழுத்துக் கொண்டு தான் வழக்கமாகப் படுத்துக் கொள்ளும் தன்னறைக்குள் அவளை இழுத்துப் போனான். அவனுடைய சாமான்கள் புத்தகங்கள் பல இன்னும் அந்த அறையில் இருந்தன. இவற்றையெல்லாம் வெளிப்படுத்தும் நாள் வந்து விட்டது என்பதுதான் அவன் மனதில் விளைந்த முதல் நினைப்பாக இருந்தது.
மல்லிகா கலவரத்துடன் படுக்கையின் மேல் உட்கார்ந்தாள். அவன் முகத்தைக் கூர்ந்து பார்த்த படி இருந்தாள்.
“மல்லிகா, ஒங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லப் போறேன். ஆர்ப்பாட்டம் பண்ணாம அமைதியா கேளு!” என்றான்.
“ஏன் அம்மா இப்படிச் சத்தம் போட்றாங்க? அவங்க சொல்றது ஒண்ணும் வௌங்கிலிய! என்ன நடந்திச்சி?” என்று கேட்டாள்.
மனதைத் திடப் படுத்திக் கொண்டு சொன்னான்: “மல்லிகா, இன்னக்கி எங்க வீட்டில அத்தை உன் கல்யாணப் பேச்ச எடுத்தாங்க!”
“என்ன பேச்சு? என்ன சொன்னாங்க!”
“உடனே எனக்கும் ஒனக்கும் கல்யாணம் நடக்கணும்னாங்க!”
கொஞ்சம் வெட்கப்பட்டவள் போல் சிறு புன்னகையை இழைய விட்டாள். ஆனால் அது மின்னலாக மறைந்து மீண்டும் அவள் கண்களில் கலவரம்தான் நிறைந்தது.
“ஒடனேன்னா, எப்ப?”
“இப்பவே, இந்த வருஷமே!”
“ஏன் அம்மாவுக்கு இவ்வளவு அவசரம்? அடுத்த வருஷம் உங்க படிப்பு முடிஞ்சவொண்ணதான இதப்பத்திப் பேசிறதா இருந்தது!” என்றாள்.
“நான் கல்யாணத்துக்குத் தயாரா இல்ல மல்லிகா!”
மல்லிகா கொஞ்சம் அகலமாகவே சிரித்தாள். “எனக்கும் ஒண்ணும் அவசரமில்ல மாமா! இதுதானா பிரச்சின? நான் அம்மாகிட்ட சொல்லிட்றனே, அடுத்த வருஷம் வச்சிக்கலாம்னு!”
“அப்படி இல்ல மல்லிகா! அது இல்ல பிரச்னை!”
மீண்டும் அவனைக் கலவரத்துடன் பார்த்தாள். “அப்புறம் என்ன பிரச்னை?” என்று கேட்டாள்.
அவளுடைய கைகளைப் பிடித்தான். “மல்லிகா, நான் ஒண்ணக் கல்யாணம் செஞ்சிக்க முடியாதுன்னு அத்தை கிட்ட சொல்லிட்டேன்!” என்றான்.
அதிர்ந்து போனாள். அவளுடைய கண்களில் கண்ணீர் ஊற ஆரம்பித்தது. “முடியாதுன்னா? ஏன் அப்படி…?”
“எனக்கு இன்னொரு பெண் இருக்கா, எங்க பல்கலைக் கழகத்தில. நாங்க ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் பிரியப் பட்றோம். அவளத்தான் நான் கல்யாணம் செஞ்சிக்கப் போறேன்”
அதிர்ச்சியில் குழம்பிப் போயிருந்தாள். அவனைக் கண் விரித்துப் பார்ப்பதும் படுக்கையை வெறித்துப் பார்ப்பதுமாக இருந்தாள். கண்களில் கண்ணீர் பெருகி வழியத் தொடங்கியது.
“மல்லிகா, நான் சொல்றத அமைதியா கேளு! நாம் ரெண்டு பேரும் ஒண்ணா வளந்தவங்க. ஒன்மேல எனக்கு ரொம்பப் பிரியம் இருக்கு. ஆனா ஒன்ன ஒரு தங்கச்சி மாதிரிதான் என்னால நினைக்க முடியுது மல்லிகா!” என்றான்.
அவனுக்கு ஒரு பதிலும் சொல்லாமல் அழுதவாறே இருந்தாள். அவள் பேசாத நிலையில் அவன்தான் பேச்சைத் தொடர வேண்டியிருந்தது.
“நீயே சொல்லு! என்னைக்காச்சும் உங்கிட்ட நான் தவறாப் பழகியிருக்கேனா? ஒன்ன காதலிக்கிறேன்னு சொல்லியிருக்கேனா? கல்யாணத்தப் பத்தி எப்பவாவது பேசியிருக்கேனா?”
மீண்டும் பேச்சில்லை. “ஒன்ன நான் ரொம்ப விரும்புறேன் மல்லிகா. எனக்கு என்னைக்குமே நீ ஒரு தங்கைதான். அதனாலதான் உங்கம்மோவோட விருப்பத்துக்கு என்னால சம்மதிக்க முடியில!”
நீர் குளங்கட்டியிருந்த கண்களால் அவனை நிமிர்ந்து பார்த்தாள். “அப்ப என்ன உங்களுக்கு வேண்டாமா?” என்று தேம்பல்களுக்கிடையில் கேட்டாள்.
“நீ எனக்கு வேணும் மல்லிகா. ஒரு தங்கையா இரு!” என்றான்.
“என்ன உங்களுக்குப் பிடிக்கிலியா? ஏன் திடீர்னு பிடிக்காம போச்சி? நான் என்ன தப்பு செஞ்சேன்?”
“நீ ஒரு தப்பும் செய்யில! ஒன்ன எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. ஆனா….!”
“நான் அழகா இல்லியா மாமா? அவ, நீங்க விரும்பிற பொண்ணு இன்னும் ரொம்ப அழகா இருக்கிறாளா?”
“சீ! ஒன்னோட அழகுக்கு என்ன கொறச்சல்? அவ ஒண்ணும் பெரிய அழகியில்ல…!”
“ஆனா நல்லாப் படிச்சவ, இல்ல? நல்லா பேசத் தெரிஞ்சவ, கெட்டிக்காரி! என்னப் போல படிக்காத முட்டாள் இல்ல!”
“ஏன் இப்படிப் பேசிற மல்லிகா. அதெல்லாம் எனக்கு முக்கியமில்ல! இது மனசு சம்பந்தப் பட்ட விஷயம். எங்கள ஒருத்தருக்கொருத்தர் ரொம்ப பிடிச்சிப் போச்சி!”
“அப்ப என்னப் பிடிக்கில. இன்னொருத்தியப் பாத்த வொண்ண நான் அவலட்சணமாவும் முட்டாளாவும் போயிட்டனா?”
“ஏன் இப்படிப் பேசிற மல்லிகா? அதெல்லாம் இல்ல. உன்ன என் மனைவியா நான் நெனச்சதே இல்ல. இதெல்லாம் எங்க அப்பாவும் உன் அம்மாவும் தாங்களா நெனைச்சிக்கிட்டு பேசிப் பேசி உன் மனசில ஏத்தின நம்பிக்கை. அதை நீ நம்ப வேணாம்!”
“அப்பவெல்லாம் பேசாமதான இருந்திங்க! அப்பவே ஏன் அப்படிச் சொல்லல! இவ எனக்கு வேணாம் அவலட்சணம், முட்டாள்னு அப்பவே சொல்லியிருந்தா நான் அப்பவே உங்கள மறந்திருப்பேனே!”
கொஞ்ச நேரம் குற்ற உணர்ச்சியில் வாய் மூடி இருந்தான். பின் பேசினான்: “அப்ப எல்லாம் அத நான் வேடிக்கையாதான் நெனச்சேன். அப்புறம் அது சீரியஸ்னு தெரிஞ்சப்பவும் மறுத்து சொல்ல தைரியம் இல்லாமப் போச்சி. ஆனா இப்ப அதை வெளிப்படுத்திற நேரம் வந்திருச்சி. நான் என்ன செய்ய முடியும் மல்லிகா?”
“நான் அவலட்சணம், நான் புத்தியில்லாத முட்டாள்” மீண்டும் மீண்டும் அதையே சொல்லி அழுதாள்.
“என்ன மல்லிகா இது! நீ அவலட்சணமும் இல்ல, முட்டாளும் இல்ல. அழகான புத்திசாலியான நல்ல பொண்ணு. உன்னக் கட்டிக்க எத்தனயோ பேர் தயாரா இருப்பாங்க! நானே ஒனக்கு மாப்பிள்ள பாத்துக் கட்டி வைக்கிறேன் பார் மல்லிகா!” என்றான்.
“வேணாம், ஒனக்கெதுக்கு அந்த சிரமம்? எனக்கெதுக்கு இனிமே மாப்பிள்ளையும் கல்யாணமும் கருமாதியும். எனக்கு ஒண்ணுமே தேவையில்ல! இனி வாழ்நாள் முழுக்க நான் அவலட்சணமாவும் முட்டாளுமாவே இருந்திட்டுப் போறேன்!” ஓங்கி அழுதாள். அறையிலிருந்து எழுந்து ஓடினாள். வரவேற்பறையில் காத்திருந்த அவளுடைய அம்மாவைக் கட்டிக் கண்டு குலுங்கி அழுதாள்.
“பாத்துக்கிட்டல்லம்மா! உங்க மாமன் எவ்வளவோ நாளா திட்டம் போட்டு வச்சிருந்திருக்கான். எப்படா படிப்பு முடியும், இவங்ககிட்ட இருந்து கறக்கிறதெல்லாம் கறந்துகிட்டு சமயம் வரும் போது எல்லாத்தையும் கைகழுவிட்டுப் போயிடுவோம்னு காத்துக்கிட்டே இருந்திருக்கான். இப்ப பிள்ளை தலை தூக்கியாச்சி, மீசை மொளச்சாச்சி. இந்த படிப்பிறிவில்லாத மூட ஜனங்களோட சகவாசம் வேணான்னு தூக்கிப் போட்டாச்சி! நம்பதான் ஏமாந்த முட்டாள்களா ஆயிட்டோம்!” அத்தை மல்லிகாவை அணைத்துக் கொண்டு பேசிக் கொண்டேயிருந்தாள்.
கணேசன் அறையிலிருந்து வெளியே வந்தான். “அத்தை நீங்க என்னக் கொஞ்சம் கூடப் புரிஞ்சிக்காம அசிங்கமா பேசிறிங்க. நீங்க என்ன ஆளாக்கிப் படிக்க வச்சதுக்கு என் தோலச் செருப்பா தச்சிப் போட நான் தயார். அந்த நன்றிய என்னைக்கும் மறக்க மாட்டேன். ஆனா என் தங்கையா நெனச்சிருக்கிற மல்லிகாவ…”
அவன் முடிப்பதற்குள் அத்தை சீறினாள். “என்ன தங்கச்சி தங்கச்சின்னு இன்னைக்குப் புதிசா ஆரம்பிச்சிருக்கிற? இத்தன நாள் மொறப் பொண்ணு, இன்னொருத்தி வந்தவுடனே தங்கச்சியா? ஒரு நாளாவது அவளத் தங்கச்சின்னு கூப்பிட்டிருப்பியா? என்ன அண்ணன்னு கூப்பிடுன்னு அவளுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கியா? திடீர்னு அண்ணன் வேஷம் போட்றியா?”
இந்த அத்தைக்குத் தன் உணர்வுகளை விளக்கிச் சொல்ல முடியாதென்று உறுதியாகிவிட்டது. விளக்கம் சொல்லச்சொல்ல அதை விகாராமாக்கிக் கொண்டிருக்கிறாள். இனி இதை வளர்த்த வேண்டாம் என்று தோன்றியது.
“அத்தை, இப்ப நான் என்ன சொன்னாலும் அது எடுபட மாட்டேங்குது. உங்க கோபம் கொஞ்சம் தணிஞ்சவொடனே இதப் பத்திப் பேசுவோம். நான் போயிட்டு வாரேன் அத்தை!” தன் துணிப் பையை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
வாசலில் நின்றான். “மல்லிகா! உன் அழுகையும் அதிர்ச்சியும் தீர்ந்தவொடன அமைதியா நெனச்சிப் பாரு. நான் சொல்றது உனக்குப் புரியும். உம்மேல எனக்கு எந்தக் கோவமும் இல்ல. கொஞ்ச நாள் கழிச்சி நான் போன் பண்றேன். போயிட்டு வாரேன்!” இறங்கி நடந்தான்.
*** *** ***
நெடுஞ்சாலையில் அந்த எக்ஸ்பிரஸ் பஸ் காற்றைக் கிழித்துக் கொண்டு போய்க் கொண்டிருந்தது. பினாங்குக்கான பஸ்ஸைப் பிடித்து அவன் ஏறி உட்கார்ந்த போதே மாலை ஆகிவிட்டது. மத்தியானம் அவனுக்கு யாரும் சாப்பாடு போடவில்லை. சாப்பாடு வாங்கிச் சாப்பிட வேண்டும் என்னும் எண்ணமும் மறந்து போயிருந்தது. வழியெல்லாம் உள்ளம் பெரும் குற்ற உணர்ச்சியால் அவதிப் பட்டுக் கொண்டேயிருந்தது.
என்ன செய்து விட்டேன்! அமைதியாகப் போய்க் கொண்டிருந்த இந்த இரண்டு குடும்பங்களிலும் அவலப் புயலை எழுப்பியதற்கு நான்தானா காரணம் என்று மனம் கேட்டுக் கொண்டே இருந்தது. அத்தை என்னதான் தந்திரக்காரியாக இருந்தாலும் அவள்தான் தனக்கு அம்மாவாக இருந்து அனைத்தும் செய்தவள். அவள் காண்பித்த உலகத்தில்தான் அவன் இத்தனை நாள் வாழ்ந்து கொண்டிருந்தான். “அத்தை, படம் பாக்கப் போறேன் காசு குடுங்க!” என்று பள்ளிக்கூட நாளிலிருந்து அவளிடம் உரிமையாகக் கேட்டு பழகியிருக்கிறான். இன்று எப்படி அந்த அத்தையை இந்த அளவுக்கு எதிரியாக எண்ண முடிந்தது? எப்படி அவளை எதிர்த்துப் பேசி விவாதிக்க முடிந்தது? எடுத்தெறிந்துவிட்டு வெளெயேற முடிந்தது?
மல்லிகாவின் அழுகையில் குளித்த முகம் நினைவுக்கு வந்தது. எத்தனை முறை இவளைச் சிரிக்க வைத்திருக்கிறேன்! தலையில் குட்டி அழ வைத்த நாட்களில் கூட கிச்சுக் கிச்சு மூட்டி சிரிக்க வைத்திருக்கிறேன். இன்று ஏன் அவளை அழ வைத்தேன்? ஏன் இப்படி எனக்கு அணுக்கமான, எனக்குச் சொந்தமான குடும்பத்தை வருத்தத்தில் ஆழ்த்தினேன்? நான் செய்தது சரியா, பிழையா?
“நன்னி இல்லாத நாய்க்கெல்லாம் இப்படி வாரிக் கொட்டினா இப்படித்தான் பேசும்” என்று அப்பா சொன்னது நினைவுக்கு வந்தது.
“அப்ப இத்தினி நா தின்ன சோத்தயும் திருப்பிக் குடுத்திருவியா? இத்தினி நா அவங்க ஊட்ல இருந்து அவ தண்ணிய குடிச்சி அவ கட்டில்ல படுத்துப் பொரண்டியே, திருப்பிக் குடுத்திருவியா?”
குரூரமான கேள்விகள். ஆனால் அவனால் பதில் சொல்ல முடியாத கேள்விகள். நன்றி கெட்டவன்தானா? ஏன் நன்றி கெட்டேன்? ஒரு புதிய காதலி முளைத்து விட்டதனாலா? அவளுடைய மோகம் என்னை மயக்கி விட்டதா? அதனால் என் அன்புக்குரிய அனைவரையும் பகைத்துக் கொள்ளத் துணிந்து விட்டேனா?
மனதின் ஆழத்தில் இன்னொரு குரல் இந்தக் குற்றங்களைச் சரிப்படுத்த முன் வந்தது. இல்லை. இதில் ஒன்றும் நன்றி கெட்ட தனம் இல்லை. நான் யாரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதை என் மீது திணிக்க யாருக்கும் உரிமை இல்லை. பெற்றோர்களின் வாழ்க்கையிலும் அத்தையின் வாழ்க்கையிலும் நான் இரண்டறக் கலந்திருந்தாலும் என் வாழ்க்கை என தனியாக ஒன்று இனி உருவாக வேண்டும். அது என் விருப்பத்தில் உருவாக வேண்டும். அதில் என் மனைவியாக அகிலாதான் இருப்பாள். அவளை அந்த இடத்திலிருந்து மறுக்க வேறு யாருக்கும் – பெற்றோர்க்குக் கூட – உரிமை இல்லை.
ஆனால் இதையெல்லாம் இன்னும் அமைதியாகவும் அவசரமில்லாமலும் அசிங்கப் படுத்தாமலும் செய்திருக்கலாம். அசிங்கப் படுத்தியது நானல்ல. அத்தை இப்படி ஆவேசமாக திருமணப் பேச்சை எடுத்து தன்னை நெருக்காமல் இருந்தால் இதனை இதமாக உரிய காலத்தில் எடுத்துச் சொல்லிச் செய்திருக்கலாம். அத்தையின் முரட்டுப் புத்திதான் அத்தனையையும் இப்போது அசிங்கப் படுத்தியிருக்கிறது.
மல்லிகாவை நினைந்து உண்மையிலேயே பரிதாபப் பட்டான். அப்பாவியாக இருந்து தன் அம்மாவின் ஆசை காட்டல்களுக்கு ஆளாகி அந்த ஆசைகளின் ஏமாற்றத்திற்கு இப்போது பலியாகிப் போனாள். “சொல்லுடா, சொல்லு! உன் வாயாலேயே சொல்லிட்டுப் போ. இத்தன நாள் உன்னோட நெனப்பிலியே திரிஞ்சாள்ல, அவ மனசில நெருப்ப அள்ளிக் கொட்டு!” என்று அத்தை அவனை விரட்டியிராவிட்டால் மல்லிகாவிடமும் மென்மையாக இதை எடுத்துச் சொல்லியிருக்க முடியும். அத்தை தனக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தின் வெறியில் தன்னைச் சுற்றியுள்ளவர்களின் உணர்வுகளையும் பிய்த்து எறிவது என்று முடிவு செய்து விட்டாள்.
“நான் அவலட்சணம், நான் புத்தியில்லாத முட்டாள்” என்று மல்லிகா மீண்டும் மீண்டும் கூறித் தன்னைத் தண்டித்துக் கொண்டது நினைவுக்கு வந்தது. இது திடீர் என்று ஏற்பட்டதல்ல. மல்லிகாவின் உள்ளே நீண்ட நாட்களாகப் புதைந்து கிடந்த தாழ்வு மனப்பான்மை முற்றாக மேலே வந்து அவளை ஆக்கிரமித்துக் கொண்டது தெரிந்தது.
அவள் உண்மையில் அழகி. ஆனால் இந்தத் திடீர் நிராகரிப்பு அவளை தன்னைத்தானே பழித்துக் கொள்ளத் தூண்டியிருக்கிறது. அவள் பக்கத்தில் நீண்ட நேரம் இருந்து ஆறுதல் கூறியிருந்திருக்க வேண்டும் என்று அவன் நெஞ்சம் ஏங்கியது. ஆனால் அதற்கு அத்தை கொஞ்சமும் இடம் வைக்கவில்லை. அதற்குரிய சூழ்நிலையை ஏற்படுத்தித் தரவில்லை.
அகிலாவை நினைத்தான். அவள் நினைப்பு ஒரு துன்ப நிவாரணிக் களிம்பு போல, ஈரமான மழைத் தூறல் போல, மனதில் படர்ந்தது. அகிலாவை அடைவதற்கான உறுதியான காலடி எடுத்து வைத்தாயிற்று. இனித் திரும்ப முடியாத பயணம். அதிலே ஒரு பெருந் ததடைக்கல்லாக இருந்த அத்தையைத் தாண்டியாகிவிட்டது. சிறு நெருடலாக இருந்த மல்லிகாவையும் ஒதுக்கியாயிற்று. ஆனால் அகிலா…?
“இந்தக் காதல் எவ்வளவு தூரம் சரி, எவ்வளவு தூரம் பிழைன்னு தெரியல. ரொம்ப சீக்கிரமா பழகி ரொம்ப சீக்கிரமா முடிவுக்கு வந்திடறோமோன்னு ஒரு சந்தேகம்! இதுக்கு இன்னும் கொஞ்சம் கால அவகாசம் கொடுத்து பின்னால எல்லாத்தையும் உறுதி செய்யலாமேன்னு ஒரு தயக்கம்!” என்று அவள் கூறியது நினைவுக்கு வந்தது.
நெடுஞ்சாலையில் இரவு கவிந்திருந்தது. ஏதோ ஓர் ஊருக்குப் பிரியும் சந்திப்பை பஸ் கடந்து கொண்டிருந்தது. அந்தக் கிளைப் பாதை ஏதோ ஓர் இருளடைந்த ஊரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அந்த சந்திப்பில் மட்டும் சில நூறு மீட்டர்களுக்கு பிரகாசமான மஞ்சள் ஹேலோஜன் விளக்குகள் ஒளியுமிழ்ந்து கொண்டிருந்தன. அதைக் கடந்ததும் மீண்டும் இருள் கவிந்தது. கொஞ்ச நேரமாவது தூங்க முடியுமா என்று பார்க்க கணேசன் இருக்கைக்குள் ஆழ்ந்தான்.
***
——————————————————————————–
30
மாலையில் அறையில் உட்கார்ந்தவாறு நூலகத்தில் இருந்து கடன் பெற்று வந்த ஒரு கணினிப் பாடநூலிலிருந்து குறிப்புகள் எடுத்துக் கொண்டிருந்தாள் அகிலா. கொஞ்ச நேரம் நூலைப் பார்ப்பதும் அப்புறம் கொஞ்சம் வெறித்து ஜன்னல் கண்ணாடிகள் வழியாக வெளியில் தெரியும் காட்சிகளைப் பார்ப்பதுமாக இருந்தாள். அந்த மலாய் மொழிபெயர்ப்பு நூல் அவளைக் குழப்பிக் கொண்டிருந்தது. எவ்வளவுதான் விரிவுரைகள் மலாயிலேயே நடந்தாலும் இறுதியில் ஆங்கில மூல நூலைப் பார்த்தால்தான் முழு விஷயமும் புரிகிறது. ஆங்கில மூலநூலைத் தேடிக் கிடைக்காததனால்தான் இந்த மலாய் நூலைத் தூக்கி வந்தாள். ஆனால் அவளுக்கு வேண்டிய விடைகள் அதில் கிடைக்காமல் அது அவளை அலைக்கழித்தது.
பாடத்தில் மனம் ஈடுபடாமல் இருப்பதற்கு அது மட்டும் காரணமல்ல என்பது அவளுக்குப் புரிந்தது. தீபாவளி முடிந்து அவள் பல்கலைக் கழகம் திரும்பி இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. ஆனால் வந்த நாளிலிருந்து கணேசனைப் பார்க்க முடியவில்லை. அவள் அலோர் ஸ்டாரிலிருந்து திரும்பி பினாங்கில் பஸ் விட்டு இறங்கிய போதே கணேசன் தன்னை அழைத்துப் போக வந்திருப்பானா என்று ஒரு நப்பாசையுடன் எட்டி எட்டிப் பார்த்தாள். அவன் இல்லை. நேற்றுத்தான் தன் வீட்டில் தீபாவளி முடித்துக் கொண்டு கிள்ளானுக்குப் போயிருப்பவன் இத்தனை சீக்கிரம் வந்திருப்பான் என்று எதிர்பார்க்கும் தன் முட்டாள் தனத்தைக் கடிந்து கொண்டாள்.
நசநசவென தூறிக் கொண்டிருந்த மழையில் குளுகோரிலிருந்து துணிப் பையைத் தூக்கிக் கொண்டு நடந்து விடுதிக்குள் வருவதற்குள் அவள் முற்றாக நனைந்து போய்விட்டாள். நடந்து கொண்டிருக்கும் போதே அன்றைக்கு கணேசனுடன் தொப்பரையாக நனைந்து அவன் மோட்டார் சைக்கிள் பின்னால் உட்கார்ந்து அவனைக் கட்டிக் கொண்டு பல்கலைக் கழகத்துக்குத் திரும்பிய நினைவு வந்து கிளுகிளுக்கச் செய்தது.
அவளுடைய இந்தியத் தோழிகள் யாரும் பல்கலைக் கழகத்திற்குத் இன்னும் திரும்பியிருக்கவில்லை. அவரவர் ஊர்களிலும் வீடுகளிலும் இன்னும் தீபாவளியைக் கொண்டாடிக் கொண்டிருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டாள். தோழிகள் இல்லாத, குறிப்பாக கணேசன் இல்லாத வளாகம் அவளுக்கு வெறிச்சோடிக் கிடந்தது. வளாகம் திரும்பிய முதல் இரவிலேயே தனிமை உணர்ச்சி தீவிரமாக மேலோங்கி இருந்து. நாளைக்கு எல்லோரும் திரும்பி விடுவார்கள். வளாகம் முன்பு போல கலகலப்பாக இருக்கும் என்று தனக்குச் சொல்லிக் கொண்டாள்.
மாலதி மறுநாள் வந்துவிட்டாள். காலை விரிவுரை முடிந்தவுடன் சந்தித்து இருவரும் கேன்டீனில் சாப்பிடப் போனார்கள். அகிலா சுற்றுமுற்றும் பார்வையை அலைய விடுவது யாருக்காக என்று மாலதிக்குத் தெரிந்துதானிருந்தது.
“என்ன, உங்க ஆள இந்தப் பக்கத்திலியே காணோமே! இன்னும் திரும்பிலியா? திரும்பியிருந்தா பலகாரத்த ஈ மொய்க்கிற மாதிரி இந்நேரம் இங்க வந்திருப்பாரே!” என்று மாலதியே அந்தப் பேச்சைத் தொடங்கினாள்.
“தெரியில மாலதி. ஒரே நாள்ள வந்திர்ரேன்னுதான் போனாரு! அத்தை வீட்டில விருந்து ரொம்ப பலம் போல!” என்றாள் அகிலா. மாலதியைப் பார்த்து அது ஒரு வேடிக்கை என்பது போலச் சிரித்தாள். உள்ளுக்குள் மாலதிக்கு மறைத்து உள்ளம் ஏங்கியது.
“தீபாவளிக்கு வீட்டுக்கு வந்திருந்தாரா? அந்தக் கதை சொல்லவே இல்லியே!” மாலதி கேட்டாள்.
“வந்திருந்தார். என்ன சொல்ல வேண்டியிருக்கு? எல்லா விருந்தாளிகளும் மாதிரி வந்து போனாரு, அவ்வளவுதான்!”
“ஏய், மறைக்கிற பாத்தியா! இவர் எல்லா விருந்தாளிகளையும் போல இல்லியே! இவர் ரொம்ப சிறப்பான விருந்தாளின்னு உங்க அப்பா அம்பாவுக்குக் காட்டுறதுக்குத்தான நீ கூப்பிட்டிருந்த?”
மாலதியிடம் மறைக்க முடியாது. அதோடு யாரிடமாவது சொல்ல வேண்டும் போல இருந்தது. காதல் செய்திகள் சாம்பிராணிப் புகை போல. மறைத்து வந்தாலும் பறந்து மூக்கில் நுழைந்து விடும்.
“அப்பா அவரப் பார்த்து நல்ல முறையில சிநேகமாத்தான் பேசினார் மாலதி. ஆனா அம்மா அவர்கிட்ட முகங்கொடுத்தே பேசில!”
“ஏன்?”
“என்னமோ தெரியில! ஒரு காரணமில்லாத வெறுப்பு. நான் அவர அறிமுகப் படுத்தப் பார்த்த போதும் வேணும்னே வெலகிப் போய்ட்டாங்க!”
“அப்படியா? அப்ப கணேசன் வருத்தப் படுலியா?”
“தெரியில. அப்புறம் அவரோட பேசிற சந்தர்ப்பம் கெடைக்கில. இனி வந்தாதான் கேக்கணும்!”
கொஞ்ச நேர மௌனத்துக்குப் பிறகு அகிலாவே சொன்னாள்: “அன்னைக்கு ராத்திரி அம்மா என்னப் பிடிச்சிக்கிட்டாங்க. ஏன் இங்கக் கூப்பிட்டேன்னு திட்டினாங்க. ஆளப் பாத்தா தோட்டக் காட்டான் மாதிரி இருக்கு, எனக்குக் கொஞ்சங்கூடப் பிடிக்கிலன்னாங்க!”
மாலதியின் முகத்தில் கலவரம் படர்ந்தது. “அப்ப ரொம்ப சீரியசாத்தான் வெறுக்கிறாங்க போல இருக்கு! அப்பா என்ன சொன்னாரு?”
“அப்பா மொதல்ல ஆதரவா பேசினாரு. ஆனா கடைசியில ‘இப்ப அம்மாவுக்கு இவ்வளவு பிடிக்காமப் போயிட்டதினால நீ பழக்கத்தக் கொஞ்சம் குறைச்சிக்கிட்டு, மற்றவர்களைப் போல அவர ஒரு சாதாரண நண்பராகவே வச்சிக்கியேன். இல்லன்னா அம்மாவோட பகைச்சிக்க வேண்டி வரும்’ அப்படிங்கிறாரு”
“அப்ப ரெண்டு பேரும் வேண்டான்னு சொல்லிட்டாங்களா? அப்புறம் என்ன செய்யப் போற அகிலா?”
அகிலா சாப்பாட்டுத் தட்டைப் பார்த்தவாறிருந்தாள். அப்புறம் பேசினாள்: “வந்ததிலிருந்து ரொம்ப யோசிச்சுப் பார்த்திட்டேன் மாலதி. இந்த விஷயத்தில அப்பா அம்மாவோட பிற்போக்குத் தனத்த என்னால ஒத்துக்க முடியில. என்னோட வாழ்க்கைக்கு வேண்டியவர நான் தேர்ந்தெடுக்க எனக்கு உரிமை இல்லியா? ஆகவே நான் கணேசன் மேல உள்ள என் பிரியத்த மாத்திக்கப் போறதில்ல!” என்றாள். அந்தத் தருணத்தில் அந்த உறுதி இன்னும் பலப் பட்டது.
“பிரியம்னா… காதல்னு தெளிவா சொல்லேன்!”
“ஆமா. காதல்தான். அது என்ன பெரிய குத்தமா?”
மாலதி கொஞ்சம் யோசித்துப் பேசினாள்: “எனக்குத் தெரியாதம்மா. இதுவரைக்கும் எனக்கு அப்படி நடந்ததில்ல. என்னப் பாத்து இளிச்ச எந்த ஆம்பிளயும் இதுவரைக்கும் காதல்னு எங்கிட்ட வந்ததில்ல. நானும் அப்படி யாரையும் தேடிப் போனதுமில்ல. எங்க அப்பா அம்மா பாத்து வைக்கிற யாரையும் கட்டிக்கிறதுன்னு நான் முடிவு பண்ணிட்டேன்!”
“அப்படின்னா நான் செய்றது தப்புங்கிறியா?”
“ஐயோ! அப்படி இல்ல. எனக்குத் தெரியாத விஷயம் பத்தி நான் யாருக்கும் ஆலோசனை சொல்லத் தயாரா இல்லன்னுதான் சொன்னேன்!”
கொஞ்ச நேரம் மௌனமாகச் சாப்பிட்டார்கள். திடீரென எதையோ நினைத்துக் கொண்டது போல மாலதி கேட்டாள்: “கணேசன் இன்னும் கேம்பசுக்குத் திரும்பி வரலன்னு ஒனக்கு நிச்சயமாத் தெரியுமா?”
அகிலா திடுக்கிட்டாள். “ஏன் அப்படி கேக்கிற மாலதி?”
“இல்ல, நீ சொல்றதப் பார்த்தா தனக்கு உங்க வீட்டில கிடைச்ச வரவேற்பில கோவமாகி ஒருவேள உன்னப் பாக்க வேண்டான்னு இருக்காரோ என்னமோ”
அகிலா கலவரமடைந்தாள். அப்படியும் இருக்குமா?
*** *** ***
அன்று இரவும் அதற்கடுத்த நாளான இன்றும் கூட கணேசனை வளாகத்தில் காணவில்லை. விரிவுரைக்குப் போய் வரும் போதெல்லாம் அவன் மோட்டார் சைக்கிள் எங்காவது தென்படுகிறதா என்று சுற்றிப் பார்த்தாள். காணவில்லை. அவனுடைய நண்பர்கள் சிலரைப் பார்த்தாள். ஆனால் கணேசனைப் பற்றிக் கேட்க வெட்கமாக இருந்தது.
இன்று முழுவதும் விரிவுரைகளில் மனம் செல்லில்லை. செய்ய வேண்டிய எசைன்மெண்டுகள் இரண்டு மூன்று இருந்தன. ஒன்றைக்கூட ஆரம்பிக்க முடியவில்லை. நூலகத்தில் உட்கார்ந்தால் ஒருவேளை கணேசன் வெளியில் இருப்பானோ என்று மனம் தேட வைத்தது. வெளியே இருக்கும் போது ஒருவேளை நூலகத்தின் உள்ளே இருப்பானை என்று தேடவைத்தது. இன்று முழுவதும் இந்தத் தவிப்பு இருந்து கொண்டே இருந்தது.
மாலதி ரொம்பவும்தான் கலவரப் படுத்தி விட்டாள். அப்படி இருக்குமா? கோபித்துக் கொண்டுதான் தன்னை மறைத்துக் கொண்டிருக்கிறானா? அம்மா அன்றைக்கு நடந்து கொண்டது அவனுக்குப் பெரிய அவமானமாகப் பட்டிருக்குமா? அவன் விடைபெற்றுப் போவதற்கு முன் “அவங்களுக்கு டென்ஷன் வரதுக்கு நான் வந்தது காரணமில்லாம இருந்தா சரி!” என்று சொன்னதை நினைத்துப் பார்த்தாள். உண்மையில் கோபப்பட்டுப் பேசினானா? தான்தான் புரிந்து கொள்ளவில்லையோ?
அல்லது இன்னும் கிள்ளானிலிருந்து திரும்பவில்லையா?
அவள் ஜன்னலுக்கு அப்பால் விடுதிக்கு வரும் குறுகிய சாலை இருந்து. அதில் மோட்டார் சைக்கிள்கள் வந்த போதெல்லாம் அது அவனுடைய மோட்டாரா என்று பார்த்தாள். ஒன்றும் இல்லாத போது தூரத்தில் தெரிந்த குன்றுகளைப் பார்த்தாள். சூரியன் சூடு குறைந்து விழுந்து கொண்டிருந்தது. அடிவானம் சிகப்புச் சாயம் பூசிக் கொள்ளத் தொடங்கியிருந்தது. அது அவளுடைய தனிமையை இன்னும் அதிகப் படுத்தியது.
அறைக்குள் இருப்புக் கொள்ளவில்லை. ஆனால் எங்கு போவதென்றும் தெரியவில்லை. நூலகத்துக்குப் போகலாம். ஆனால் பிடிக்கவில்லை.
அவள் அறைக் கதவை யாரோ தட்டினார்கள். யார்? மாலதி வந்திருப்பாளோ? இருக்காதே! மாலதிக்கு இன்று மாலை டியுடோரியல் இருக்கறதென்று சொன்னாளே!
கணேசன்? முடியாது. ஆண்கள் பெண்கள் விடுதிக்குள் அறை ஏறி வர முடியாது. ஒருவேளை கீழே இருந்து ஆள் அனுப்பியிருப்பானோ! ஆசைகள், ஆசைகள். ஆயிரம் ஆசைகளோடு ஓடிக் கதவைத் திறந்தாள். ஜெசிக்கா!
ஜெசிக்காவா? எப்படி, ஏன் வந்தாள்? கடைசியாகச் சண்டையிட்டுப் போன பிறகு ஜெசிக்கா ஒரு நாளும் அவளோடு பேசியதில்லை. ஆனால் பின்னால் வேறு காதலனைப் பிடித்துக் கொண்டு கணேசன் மீதுள்ள ஆசைகள் தணிந்து விட்டிருந்த பொழுது அகிலாவைப் பார்த்து ஓரிரு முறை புன்னகைத்து நட்பைக் காட்டிக் கொண்டிருக்கிறாள். ஆனால் ஒரு நாளும் நின்று பேசியதில்லை. இன்றைக்கு ஏன் அறை தேடி வந்தாள்?
“ஹாய்” என்றாள் ஜெசிக்கா. அவளுடைய முத்திரைச் சிரிப்பு அப்படியே இருந்தது.
“ஹாய் ஜெசிக்கா! என்ன ஆச்சரியம்! திடீரென்று தேடி வந்திருக்கிறாயே!” என்றாள் அகிலா.
“இப்படி வந்த உன்னைத் தொந்திரவு படுத்தியதற்கு மன்னித்துக் கொள் அகிலா. ஆனால் உனக்குச் சொல்ல வேண்டிய செய்தி இருக்கிறது” என்றாள். சிரிப்பு மறைந்திருந்தது.
“என்ன செய்தி?”
“கணேசனைப் பற்றிய செய்தி” என்றாள்.
அகிலாவுக்குத் திகீரென்றது. கணேசனுக்கு என்ன? ஏன் இப்படி இவள் செய்தி கொண்டு வர வேண்டும்? “ஏன், அவருக்கு என்ன? எங்கே அவர்?” என்று கேட்டாள்.
“பதட்டப் படாதே! கணேசனுக்கு ஒன்றுமில்லை. கிளாங்கில்தான் இருக்கிறார். கொஞ்ச நேரத்திற்கு முன் என்னிடம் ·போனில் பேசினார்!”
“என்ன பேசினார்?”
ஜெசிக்கா அறையைச் சுற்றிப் பார்த்தாள். பின் பேசினாள்: “நான் நினைக்கிறேன், நாம் கீழே போய் பேசுவது நல்லது. கேன்டீனுக்குப் போவோம். ஒரு ஒதுக்குப் புறமான இடத்தில் உட்கார்ந்து பேசுவோம்!” என்றாள்.
“என்னை மிகவும் பயப்படுத்துகிறாய் ஜெசிக்கா. அவசரமான செய்தியாக இருந்தால் இப்போதே சொல்லிவிடு!” என்றாள் அகிலா.
“அவசரம் ஒன்றுமில்லை. ஆனால் மிக முக்கிய செய்திதான். வா, தனிமையில் உட்கார்ந்து ஆறுதலாகப் பேசுவோம்!”
ஜெசிக்காவை வெளியே இருக்கச் சொல்லிவிட்டு அகிலா உடை மாற்றிக் கொண்டு புறப்பட்டாள். கேன்டீனை நோக்கி மௌனமாக நடந்தார்கள். என்ன செய்தி கொண்டு வந்திருக்கிறாள்? ஏன் இந்த முஸ்தீபும் மர்மமும்? கணேசனுக்கு ஆபத்தில்லை என்று தெரிந்தது. அவன் கிள்ளானிலிருந்து ·போன் செய்திருக்கிறான் என்று தெரிந்தது. அகிலா தேடுவாள் என்று தெரிந்து தான் இன்னமும் வளாகத்துக்குத் திரும்பவில்லை என்ற செய்தியைச் சொல்லச் செய்திருக்கிறான் என்று தெரிந்தது.
ஆனால் அதற்கு மேல் என்ன செய்தி? “இதோடு இந்த உறவு முறிந்தது என்று சொல்லிவிடு” என்று தன் உயிர்த் தோழியை விட்டுச் சொல்லச் செய்திருக்கிறானா? “என்னால் அவள் முகத்தில் முழிக்க முடியாது!” என்று சொல்லியிருக்கிறானா? அம்மாவின் வெறுப்பு இத்தனை தூரத்துக்குக் கொண்டு வந்து விட்டதா? மனம் கற்பனைகளை இரட்டிப்பாக்கிக் கொண்டேயிருந்தது.
கேன்டீனில் கூட்டம் இன்னும் சேரவில்லை. ஆளுக்கொரு பானம் வாங்கிக் கொண்டு மிக ஒதுக்குப் புறமான இடத்துக்குப் போனார்கள்.
“உன்னிடம் பேச வேண்டும் என்று பல முறை நான் நினைத்ததுண்டு. ஆனால் உன்னோடு நான் சண்டையிட்ட சம்பவம் எனக்கு நினைவுக்கு வந்து எனக்கே வெட்கமாகப் போகும். அதனால் உன்னைச் சந்திக்க எனக்கு தைரியம் வருவதில்லை!” என்றாள் ஜெசிக்கா.
அகிலா சிரித்தாள். “உனக்கா தைரியம் இல்லை. இந்தப் பல்கலைக் கழகத்திலேயே நீதான் பெரிய தைரியசாலி என்பதுதான் உண்மை!” என்றாள்.
“எல்லா தைரியங்களையும் விட மன்னிப்புக் கேட்பதற்குத்தான் அதிக தைரியம் வேண்டும். என்னை மன்னித்து விடு அகிலா!” என்றாள்.
“நான் அதையெல்லாம் மறந்து விட்டேன். நீயும் மறந்து விடு!” என்றாள் அகிலா.
“நன்றி. கணேசன் மிக நல்வன். அவனைக் காதலனாக அடைந்த நீ அதிர்ஷ்டசாலி”
அகிலாவுக்குப் பொறுமை குறைந்தது. இதற்காகவா கூப்பிட்டாள்? தன் பழைய காலக் காதல் வாழ்க்கையைச் சொல்லி ஆயாசப் படவா அறையைத் தேடி வந்தாள்? “என்ன ஜெசிக்கா! கணேசனைப் பற்றி முக்கியமான விஷயம் சொல்ல வேண்டு மென்று சொல்லி பழைய விஷயங்களைப் பேசுகிறாயே!”
ஜெசிக்கா சிரித்தாள். “அவசரப் படாதே! நிறைய விஷயம் சொல்ல வேண்டியிருக்கிறது!”
திடீரென்று ஜெசிக்காவின் இந்த வருகைக்கு ஒரு உள் நோக்கம் இருக்கும் என அகிலாவுக்குத் தோன்றியது. தன் காதலைக் குலைக்கும் ஏதோ ஒரு விஷக் கதையை அவள் சொல்லப் போகிறாள் என்று நினைத்தாள். இவளிடம் மிக கவனமாக இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வு தோன்றியது.
“முதலில் கணேசன் நேராக எனக்குப் ·போன் செய்த காரணம் ஐசேக் மாநாட்டுக்கான செயலகத்தில் எங்களுக்கு தனி நேரடி ·போன் இருப்பதால்தான். விடுதியில் உனக்கு ·போன் செய்து பிடிப்பது கடினம். இரண்டாவதாக நீண்ட நேரம் பேச முடியாது. ஆகவேதான் என்னை தூதாக அனுப்பியிருக்கிறார்.”
உண்மைதான். விடுதியில் அவளுக்கு ·போன் செய்வதில் பல சிரமங்கள் உள்ளன. ஆனால் என்ன தூது?
“மேலும் நான் இன்னும் அவருடைய சிநேகிதியாக இருக்கிறேன். காதலியாக இருக்க ஆசைப் பட்டேன். முடியவில்லை. ஆகவே சிநேகிதியாக இருக்கிறேன். உனக்கு ஆட்சேபனை இல்லையல்லவா?” என்று சிரித்தாள்.
“இல்லை ஜெசிக்கா. உன்னைக் காதலியாக கணேசன் நினைத்திருந்தாலும் நான் குறுக்கே நிற்க மாட்டேன்” என்றாள் அகிலா. ஆனால் அது வேடிக்கைப் பேச்சு என அவளுக்கே தெரிந்தது.
“எனக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லை!”
“சரி விஷயத்தைச் சொல்!” என்று அவசரப் படுத்தினாள் அகிலா.
“கணேசன் சொன்ன செய்தி இதுதான். கணேசன் தீபாவளிக்கு அடுத்த நாள் கிள்ளானிலிருந்து பஸ் ஏறி பினாங்குக்குத் திரும்பி விட்டாராம். இரவு பினாங்கை அடைந்து தன் அறையை அடைந்த போது அவருடைய அறைத் தோழன் பாதுகாவல் அலுவலகம் அவரை பலமுறை அறையில் வந்து தேடியதாகச் செய்தி சொல்ல பாதுகாவல் அலுவலகத்திற்கு அந்த இரவில் அவசரமாகச் சென்றிருக்கிறார். அங்கே கணேசன் உடனடியாக கிள்ளானுக்கு அத்தை வீட்டுக்குப் ·போன் செய்ய வேண்டும் என்று செய்தி சொல்லியிருக்கிறார்கள்!”
“ஏன்?” திகிலோடு கேட்டாள் அகிலா.
ஜெசிக்கா தனது பானத்தைக் கொஞ்சமாக உறிஞ்சினாள்.
“தீபாவளி அன்று இரவு கணேசன் தனது வீட்டுக்குப் போன போது கொஞ்சம் கலவரம் நடந்திருக்கிறது!”
“என்ன கலவரம்?”
“அவன் தீபாவளி அன்றைக்கு வீட்டுக்கு வரவில்லை என்று சண்டை போட்டிருக்கிறார்கள்”
அகிலாவுக்குக் கொஞ்சம் குற்ற உணர்ச்சி வந்தது. தன் வேண்டு கோளினால்தானே அவன் அத்தை வீட்டுக்குப் போகாமல் தன் வீடு வர வேண்டியிருந்தது!
“ஆமாம். தீபாவளி அன்றைக்குக் காலையில் அலோர் ஸ்டாருக்கு எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார்!”
“தெரியும்! எனக்கு எல்லா விவரமும் தெரியும். கணேசனின் அத்தைக்கு ஒரு மகள் இருக்கிறாள் தெரியுமா?”
“சொல்லியிருக்கிறார்!”
“அவர்கள் இருவருக்கும் அத்தை கல்யாணம் பேசி முடித்திருப்பது தெரியுமா?”
அகிலா திடுக்கிட்டாள். இந்த விஷயம் பற்றி கணேசன் சொன்னதே இல்லையே. அத்தை மகள் பற்றிப் பேச்செடுத்த போதும் அதை அலட்சியமாகத்தான் உதறியிருக்கிறான்.
“எனக்குச் சொல்லவில்லை ஜெசிக்கா!”
அவள் குரலில் இருந்த ஏமாற்றத்தை ஜெசிக்கா புரிந்தது போலப் பேசினாள். “இதோ பார். இதைத் தவறாக எடுத்துக் கொள்ளாதே! அத்தைக்கு இப்படி ஒரு எண்ணம் இருந்தாலும், மல்லிகாவுக்கும் அந்த ஆசை இருந்தாலும், கணேசனுக்கு அந்த எண்ணம் ஒரு நாளும் இல்லை. என்னிடம் பல முறை அதைச் சொல்லியிருக்கிறார்!”
“சரி, அதற்கென்ன இப்போது? என்ன ·போன் கால் வந்தது என்று சொல்!”
“அவசரப் படாதே, சொல்கிறேன்! தீபாவளி அன்று அத்தை திருமணப் பேச்சை எடுத்திருக்கிறார். உடனடியாக மல்லிகாவைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தியிருக்கிறார். கணேசன் அதை உறுதியாக மறுத்திருக்கிறார். அவர் உன்னைத்தான் கல்யாணம் செய்து கொள்ளப் போவதாகவும் அவர்களிடம் வெளிப்படையாகக் கூறியிருக்கிறார்!”
அகிலாவுக்குக் கலவரமாக இருந்தது. கணேசன் குடும்பத்தில் ஒரு சண்டை உண்டாகத் தான் காரணமாக அமைந்து விட்டோமே என்ற வருத்தம் வந்தது. ஆனால் கணேசனின் உறுதி மகிழ்ச்சியைத் தந்தது. தான் அம்மாவின் பேச்சைக் கேட்டு அதற்கு எதிரிடையாக முடிவு எடுத்ததைப் போலத்தான் கணேசனும் செய்திருக்கிறான் என்பது நிம்மதியாக இருந்தது.
ஆனால் அந்தக் தையெல்லாம் ஏன் இந்த ஜெசிக்காவிடம், அதுவும் ·போனில்…?
“அத்தையிடமும் மல்லிகாவிடமும் அந்த முடிவைச் சொல்லி விட்டுத்தான் பஸ் ஏறி இங்கு வந்திருக்கிறார். வந்து சேர்ந்தவுடன்தான் ·போன் செய்தி வந்திருக்கிறது!”
“என்ன செய்தி!”
“கணேசன் முன்னரேயே இந்த விஷயத்தை என்னிடம் ஒரு முறை சொல்லியிருக்கிறார். நான்தான் இதெல்லாம் வெறும் மிரட்டல் என்று தட்டிக் கழித்தேன்!” என்றாள் ஜெசிக்கா.
“என்ன மிரட்டல் ஜெசிக்கா? யார் மிரட்டினார்கள்? தெளிவாகச் சொல்!”
“அந்த அத்தை மகள் மல்லிகா முதலிலேயே ஒரு முறை கணேசன் தன்னைத் திருமணம் செய்து கொள்ளாமல் போனால் விஷத்தைக் குடித்து இறந்து விடுவேன் என்று மிரட்டியிருக்கிறாள். ஆனால் கணேசன் அதை ஒரு வேடிக்கையாக எடுத்துக் கொண்டார்”
திகில் புகுந்த மனதுடன் அகிலா கேட்டுக் கொண்டிருந்தாள்.
“அந்தப் பெண் அன்றிரவு சொன்னது போலச் செய்து விட்டாளாம். ஏதோ வீட்டிலிருந்த விஷத்தைக் குடித்து விட்டாளாம். இரவில் தூக்கிச் சென்று மருத்துவ மனையில் சேர்த்து விட்டுப் ·போன் செய்திருக்கிறார்கள். அதைக் கேட்டதும் கணேசன் இரவோடு இரவாக மோட்டார் சைக்கிளிலேயே கிள்ளானுக்குப் போய்விட்டார்!”
அகிலா உறைந்து போய் ஜெசிக்காவை வெறித்துப் பார்த்தவாறிருந்தாள்.
“கவலைப் படாதே! அவள் உயிரைக் காப்பாற்றி விட்டார்கள். கணேசன் நாளைக்கு அல்லது நாளன்றைக்குத் திரும்பி விடுகிறேன் என்று சொல்லச் சொன்னார்”
என்ன சொல்வதென்று தெரியவில்லை. முதலில் வந்த திகில் கொஞ்சம் அகன்ற போது உள்ளத்தைப் பெரிய கருமேகம் போலத் துக்கம் வந்து கவ்வியது. ஏன் தான் புனிதம் என்று நம்பிக் கொண்டிருக்கும் நட்பு இவ்வளவு மூர்க்கமான எதிர் விளைவுகளைத் தோற்றுவிக்கிறது? ஏன் உறவுகளையும் மனிதர்களையும் பலி கொள்ளுகிறது? என்ன செய்து விட்டோம் இருவரும்? பெரும் குற்றம் செய்து விட்டோமா?
அகிலா முகத்தைப் பொத்திக் கொண்டு ஜெசிக்காவின் முன் அழ ஆரம்பித்தாள்.
***
——————————————————————————–
31
மருத்துவமனைக் கட்டிலின் விளிம்பில் கைகளைக் கோர்த்துக் கொண்டு தலையை அதில் சற்று நேரம் சாய்த்ததில் கணேசனுக்குத் தூக்கம் சுழற்றி அடித்தது. இரண்டு நாட்களாகச் சரியாகத் தூக்கம் இல்லை. மருத்துவ மனையில் வார்டில் அடிக்கடி எழுந்து நடப்பதும் கட்டிலுக்கு அருகில் உட்கார்ந்து மல்லிகாவின் முகத்தை ஏக்கத்தோடு பார்ப்பதும், வெளியே போய் கேன்டீனில் ஏதாவது கிடைத்ததை அவசரமாகச் சாப்பிட்டு விட்டு அவள் கண் விழித்து விட்டாளா என்று பார்ப்பதற்காக மீண்டும் லி·ப்டில் ஏறி ஓடி வருவதுமாக இருந்தான்.
மல்லிகா எந்த நேரமும் மீண்டும் கண் விழிக்கலாம் என அவளை மாறி மாறி வந்து பார்த்த இரண்டு டாக்டர்களும் சொல்லியிருந்தார்கள். ஏற்கனவே இரு முறை விழி திறந்து ஓரிரு விநாடிகள் பார்த்து விட்டு மீண்டும் மயங்கிப் போனாள். குடலிலிருந்து விஷம் எல்லாம் வெளியாகிவிட்டது என டாக்டர்கள் கூறியிருந்தார்கள். நுரையீரலுக்கு காற்று சீராகப் போய் வந்து கொண்டிருந்தது. அவள் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. ஆனால் தொண்டையின் உள் ஓரங்கள் புண்ணாயிருக்கின்றன என்று டாக்டர் சொல்லியிருந்தார். அந்தப் புண் நாளாவட்டத்தில் ஆறிவிடும் என்று கூறியிருந்தார்கள். இப்போதைய முக்கிய சிகிச்சை அவள் இதய ஓட்டத்தைச் சீராக்குவதற்காகத்தான் என்று சொல்லிப் போனார்கள்.
கொஞ்ச நேரம் முன்புதான் அத்தை வீட்டுக்குத் திரும்பிப் போனாள். “எதுக்கும் வீட்டுக்குப் போயி கொஞ்சம் கோழி சூப் வச்சி எடுத்திட்டு வந்திர்ரேன் கணேசு. புள்ள கண்ண முழிச்சவொண்ண கொஞ்சம் சூப் வாயில ஊத்தலாம்” என்று சொல்லிவிட்டுப் போனாள். அப்பாவும் அம்மாவும் நேற்றிரவு முழுக்க மருத்துவ மனையில் இருந்து விட்டு இன்றைக்குத்தான் எஸ்டேட்டுக்குத் திரும்பியிருந்தார்கள்.
முந்தாநாள் இரவு பினாங்கு – கோலாலம்பூர் நெடுஞ்சாலையில் நான்கு ஐந்து மணி நேர மோட்டார் சைக்கிள் பயணம் அவன் உள்ளத்தையும் உடலையும் உலுக்கிப் போட்டிருந்தது. இரண்டு ஓய்விடங்களில் பெட்ரோல் போட நிறுத்திய சந்தர்ப்பங்களில் அத்தை வீட்டுக்குப் ·போன் செய்து பார்த்தான். ஒரு பதிலும் இல்லை. முன்னிரவில் பினாங்கிலிருந்து போன் செய்த போது அவன் ·போனை எதிர்பார்த்து பதில் சொல்வதற்கென்று பக்கத்து வீட்டுக்காரர் ஒருவரைதன் வீட்டில் காவல் வைத்துப் போயிருந்தாள் அத்தை. அவர்தான் மல்லிகா பற்றிய விஷயத்தைச் சுருக்கமாகச் சொன்னார்.
“துங்கு அம்புவான் ரஹிமா ஆஸ்பத்திரிக்குத்தான் கொண்டு போயிருக்காங்க. தம்பி ·போன் பண்ணா நேரே அங்க வந்திரச் சொன்னாங்க!” என்று மட்டும் அவர் சொன்னார். பின்னர் கடமை முடிந்தது என்று அவரும் போய்விட்டார். அப்புறம் ·போனை எடுத்துப் பேச வீட்டில் யாரும் இல்லை.
மல்லிகா உயிரோடு இருக்கிறாளா இல்லையா என்ற தகவல் தெரியாத அந்த ஐந்து மணி நேரமும் அவன் மனம் புயலாக இருந்தது. அந்த நெடுஞ்சாலையில் அந்த நடு நிசியில் பேய்க்காற்று முகத்தில் அறைந்து கொண்டிருக்க அவன் மோட்டார் சைக்கிள் என்ஜின் போலவே அவன் மனமும் இடைவிடாது ஓங்கி ஓலமிட்டவாறு இருந்தது.
“என்ன செய்து விட்டாய்? என்ன செய்து விட்டாய்?” என்று மனம் குத்திக் குத்தி கேட்டவாறு இருந்தது. “என் அன்புக்கினிய ஒரு உயிரை நானே வதைத்து விட்டேனா?” என்ற கேள்வி எழுந்து அவனைக் குற்ற உணர்ச்சியில் ஆழ்த்தியது. ஏற்கனவே எச்சரித்திருக்கிறாள். சாமி சாட்சியா, எங்கம்மா சாச்சியா நான் ஒங்களத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன். அப்படி ஒரு வேள நீங்க எனக்கு புருஷனா கிடைக்காமப் போனா நான் தற்கொலை பண்ணிக்கிட்டு செத்தே போயிடுவேன் மாமா! இது சத்தியம், இது சத்தியம்!” என்று தெளிவாகக் கூறியிருக்கிறாள். இருந்தும் என் காதல் மூர்க்கத்தில் அதை நான்தான் அலட்சியம் செய்து விட்டேன்.
ஹெல்மெட்டுக்குள் வழிகின்ற கண்ணீரை அவன் துடைத்துக் கொள்ள வேண்டியிருந்தது.
“இல்லை இது என் குற்றம் இல்லை! அத்தை வளர்த்துவிட்ட இந்த ஆசைகளுக்கும் மல்லிகா வளர்த்துக் கொண்ட ஒரு தலைக் காதலுக்கும் நான் பொறுப்பில்லை” என்ற ஒரு தற்காப்பு வாதமும் எழுந்தது.
“இருந்தாலும் மல்லிகாவின் மென்மையான மனதைப் புரிந்து கொள்ளாமல் அலட்சியமாக அவளிடம் முடிவைச் சொல்லிக் கை கழுவி வந்தது உன் குற்றம்தான். அவள் செத்தால் நீதான் அதற்குக் காரணம்” என்று மனத்தின் இன்னொரு பகுதி எதிர் வாதம் செய்தது. கோபத்திலும் தாபத்திலும் மனம் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது.
விடியற்காலை நான்கு மணிக்கு அவன் கிள்ளானை அடைந்து ஆஸ்பத்திரியை அடைந்து இரவு நர்சிடம் விவரம் சொல்லி அறுவை சிகிச்சை வார்டை அடைந்த போது அத்தையுடன் அப்பா அம்மாவும் இருந்தார்கள். அத்தை அவனைக் கண்டதும் ஓவென்று அழத் தொடங்கினாள். அவளைத் தோளைப் பிடித்து ஆறுதல் சொல்லி என்ன நடக்கிறது என்று கேட்டான். “வயித்தக் களுவுறாங்களாம் அப்பா! ஒண்ணும் விவரமா சொல்ல மாட்டேங்கிறாங்க! வந்தவொடன உள்ளுக்குக் கொண்டு போயிட்டாங்க. இங்கதான் உக்காந்து காவல் காத்துக்கிட்டு இருக்கோம். பாவிப் பொண்ணு இப்படி பண்ணிட்டாளே! எனக்கு ஒரே பிள்ளையாச்சே!” என்று அத்தை அழுதாள்.
கொஞ்சங் கொஞ்சமாக அவளிடமிருந்து வந்த வார்த்தைகளில் தான் கிள்ளானில் இருந்து புறப்பட்டுப் போனவுடன் மல்லிகா தன் அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டதாகவும், நீண்ட நேரம் சத்தமில்லாமல் இருப்பதைக் கண்டு பக்கத்து வீட்டுக்காரர்கள் உதவியுடன் கதவை உடைத்துப் பார்த்த போது தோட்டத்துக்குத் தெளிக்கும் பூச்சி விஷ போத்தலுடன் வாயில் நுரை தள்ள கைகால்கள் வலித்துக் கொண்டு அவள் கிடந்ததாகவும் உடனே அவளைக் காரில் ஏற்றி இங்கு கொண்டு வந்ததாகவும் தெரிந்தது.
அப்பா கனல் கக்கும் விழிகளுடன் உட்கார்ந்திருந்தார். அம்மா வழக்கம் போல் பயந்து போய் ஒரு மூலையில் ஒடுங்கியிருந்தாள். இருவரும் அவனிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை. அத்தை கூட மல்லிகாவின் இப்போதைய நிலைமையைப் பற்றிப் பேசியதைத் தவிர்த்து இதற்கு முன் நடந்த எந்த விஷயத்தைப் பற்றியும் பேசவில்லை.
ஒரு வகையில் அந்த மௌனம் ஆறுதலாக இருந்தாலும் அவர்கள் பேசாமல் உள்ளுக்குள் அடக்கிக் குமுறிக் கொண்டிருந்த அந்த எண்ணங்கள் அவனுக்குத் தெரிந்தன. அவன் அவர்கள் உள்ளத் திரையில் ஒரு கொலைகாரனாக உலவி வருவதை அவனால் ஊகிக்க முடிந்தது. உண்மையா? தான் கொலைகாரனா? இப்படி நடந்து விட்டதற்கெல்லாம் தேனே காரணமா? அவனுக்கே சரியாகத் தெரியவில்லை.
அன்றிரவும் மறுநாள் பகல் முழுவதும் மல்லிகா கோமாவில் இருந்தாள். அவளுக்குத் தொடர்ந்து செலைன் ஏற்றிக் கொண்டிருந்தார்கள்.
மறுநாள் இரவு இரண்டு முறை முனகிக் கண் விழித்து மீண்டும் மயக்கத்தில் ஆழ்ந்து விட்டாள். பக்கத்தில் இருப்பவர்கள் யாரையும் அவள் தெரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. மண்ணிலிருந்து பிடுங்கிப் போட்ட செடி போல வாடிப் போய்க் கிடந்தாள்.
முதல் நாள் காலையில் ஒரு இந்தியப் போலிஸ்காரர் வந்து விசாரித்தார். பெயர் எல்லாம் கேட்டு எழுதிக்கொண்டு எப்படி நடந்தது என்று கேட்டார். “இல்லங்க, பொண்ணுக்கு இருமல் இருந்திச்சி. இருமல் மருந்துன்னு நெனச்சி இந்த பூச்சி மருந்த எடுத்துச் சாப்பிட்டிடிச்சி, வேற ஒண்ணும் இல்ல” என்று அத்தை அவசரம் அவசரமாக விளக்கம் கொடுத்தாள்.
“இது என்ன காதல் தோல்வியா?” என்று கேட்டுச் சிரித்தார் அவர்.
“அய்யோ அப்படியெல்லாம் ஒண்ணுமில்லிங்க!” என்றாள் அத்தை.
“பரவால்லம்மா, சொல்லுங்க! ஒரு மாசத்துக்கு எப்படியும் ஒரு கேசு ரெண்டு கேசு பாத்துக்கிட்டுத்-தான இருக்கிறோம்! அதிலியும் நம்ப புள்ளைங்கதான் ஆ ஊன்னா விஷத்த தூக்கிக்கிறாங்க! இருமல் மருந்துக்கும் விஷத்துக்கும் வித்தியாசம் தெரியாம இருக்கிறதுக்கு என்ன இது சின்னக் கொழந்தயா?” என்றார் அவர்.
அத்தை தயங்கிச் சொன்னாள்: “கேஸ் கீஸ்னு ஆவாம பாத்துக்கணுங்க!”
“அதெல்லாம் ஆகாது. எல்லா கேசயும் கோர்ட்டுக்குக் கொண்டு போறதின்னா எங்களுக்கு வேற வேலயே செய்ய முடியாது! உண்மையச் சொல்லுங்க. பதிஞ்சு வச்சிக்கிறோம். இதுக்கு மேல கேஸ் ஒண்ணும் இல்லாம பாத்துக்கிறோம்!” என்றார்.
“ஆமாங்க! ஒரு பையன விரும்பிச்சி. அது நடக்கலேன்னவொண்ண ஒரு கோவத்தில இப்படி செஞ்சிடிச்சி!”
“நீங்க முடியாதின்னிட்டிங்களா? அந்தப் பிள்ளய அடிச்சிங்களா?”
“அய்யோ அப்படியெல்லாம் இல்லிங்க. இது கொஞ்சம் குழப்பமான விஷயம்!” ஒரு முறை கணேசனைப் பார்த்து விட்டு அத்தை அமைதியானாள்.
என்ன மருந்து குடித்தாள், ஏன் வீட்டில் இருந்தது, என்றெல்லாம் கேட்டு எழுதிக் கொண்டு அவர் போய்விட்டார். போகும் போது கணேசனைப் பார்த்து “இந்தப் பையனா?” என்று கேட்டார். யாரும் அவருக்கு பதில் சொல்லவில்லை. “இந்த இந்தியர்கள் எந்த நாளும் திருந்த மாட்டார்கள்” என்பது போலத் தலையாட்டிவிட்டு அவர் போய்விட்டார்.
*** *** ***
மருத்துவ மனையில் மல்லிகாவுடன் தனித்து இருந்த போது அவன் மனம் அலை மோதியது. அவள் துவண்டு போய்க் கிடந்தாள். பெண்மை அழகென்று ஒன்றும் இல்லாத சோர்ந்த தசைப் பிண்டமாய்க் கிடந்தாள். தலை முடி அலங்கோலமாக இருந்தது.
எப்படி இருந்தவள்! எப்படி ஆடி ஓடிக் குதித்துத் திரிந்தவள்! எத்தனை துடுக்கான வாய்ப்பேச்சு! எத்தனை ஆசைகளைத் தேக்கி வைத்திருந்த மனது! இப்போது அவை எதையும் பற்றிய பிரக்ஞை இல்லாமல் கிடக்கிறாள். இவ்வளவு தீவிரமான ஆசைகளைத் தேக்கி வைத்துக்கொண்டு வாழவேண்டும் என்று துடிக்கின்ற ஒரு பெண்ணுக்கு அந்த வாழ்க்கையை பட்டென்று முடித்துக்கொள்ள வேண்டும் என்ற துணிவு எங்கிருந்து வருகிறது? ஏன் இப்படிச் செய்தாய் மல்லிகா? என்ன நினைத்து இப்படிச் செய்தாய்?
நான் ஒருவன் உனக்குக் கணவனாய் வாய்க்காவிட்டால் என்ன? உனக்குக் கணவனாக வர எத்தனையோ பேர் காத்திருப்பார்களே! ஏன் என்னை மட்டும் உயிர்க்கொம்பாய்ப் பிடித்தாய்? ஏன் என்னையே பற்றிக் கொண்டாய்? நான் வேறு ஒரு கொடி என்மீது படர இடம் கொடுக்க விரும்புகிறேன். உனக்குப் பற்றிக் கொள்ள இன்னும் எத்தனையோ கொம்புகள் உண்டே! என்னிலிருந்து உன்னைப் பிய்த்துப் போட வைத்தாயே! உன்னைக் கொலை செய்ய முயன்ற குற்றவாளியாய் என்னையே ஆக்கி விட்டாயே!
அவன் கண்களில் கண்ணீர் படர்ந்தது.
திடீரென்று மல்லிகா அசைந்தாள். முனகினாள். கண்களை சிரமப்பட்டுத் திறந்தாள். அவள் கையைப் பற்றினான் கணேசன். கண்களை விழித்து வெறுமையாகப் பார்த்தாள். “யாரு?” என்று கேட்டாள்.
“நாந்தான் மல்லிகா” என்றான்.
“மாமா! கண்ணு சரியா தெரிய மாட்டேங்குதே!” என்றாள். சொல் குழறலாக இருந்தது. அவள் பேசுவதைப் புரிந்து கொள்ள சிரமப் படவேண்டியிருந்தது. இடது கையை மட்டும் தூக்கி அவன் கைகளைத் தடவினாள்.
“இப்பதான விழிச்சிருக்கே. ஓய்வெடுத்துக்க!” என்றான்.
“தண்ணி வேணும்!” என்று ஈனசுவரத்தில் சொன்னாள்.
அவன் எழுந்து தாதியைக் கூப்பிட்டான். ஒரு மலாய் தாதி வந்தாள். மல்லிகாவின் தலையை ஒரு கையால் தாங்கியவாறு அவளுக்குத் தண்ணீர் கொடுத்தாள். மீண்டும் படுக்க வைத்தாள். “மறுபடி தண்ணீர் கேட்டால் தாராளமாகக் கொடுக்கலாம். தண்ணீர் குடிப்பது நல்லது” என்று சொல்லி மீதியிருந்த தண்ணீரை கண்ணாடிப் பாத்திரத்தோடு அங்கேயே வைத்துச் சென்றாள்.
மல்லிகா அவனைப் பார்த்து பலவீனமாகப் புன்னகைத்தாள். அவள் கைகளைப் பாசத்தோடு மீண்டும் இறுக்கினான். இடது கையால்தான். வலது கை படுக்கை மீதே கிடந்தது.
“எப்படியிருக்கு மல்லிகா?” என்றான்.
“அதான் நான் பொழச்சிக்கிட்டேனே! இனிமே நல்லாத்தான் இருப்பேன்! இப்பதான் உங்க முகம் லேசா தெரியுது. ஆனா கண்ண ஏதோ மறைச்சிருக்கிற மாதிரி இருக்கு” என்றாள். அவளையே பார்த்திருந்தான்.
“அம்மா எங்கே?” என்று கேட்டாள்.
“வீட்டுக்குப் போயிருக்காங்க. சூப் பண்ணி எடுத்துக்கிட்டு வர்ரேன்னு சொன்னாங்க! இப்ப வந்திருவாங்க!”
விழிகளைச் சுழல விட்டு கொஞ்சம் மருண்டாள். “எந்த ஆஸ்பத்திரி?”
“துங்கு அம்புவான் ரஹிமா!”
“எப்ப வந்தேன்?”
“ரெண்டு நாளாச்சி!”
“ரெண்டு நாளாச்சா?” களைத்துக் கண் மூடினாள். எதையோ விழுங்குவது போல அவள் தொண்டைக் குழி அசைந்தது. அப்புறம் வலியால் முனகினாள். சற்றுப் பொறுத்துக் கண் திறந்தாள். “நீங்க பினாங்குக்குப் போகலியா?”
“போனேன். செய்தி வந்தது. உடனே வந்திட்டேன்!”
அவனைப் பாவமாகப் பார்த்தாள். “உங்க எல்லாருக்கும் பெரிய சிரமத்தக் கொடுத்திட்டேன்!”
“அதப்பத்தி இப்ப என்ன? நீ பேசாம ஓய்வெடுத்துக்க!” என்றான்.
“இந்த சோத்துக் கை பக்கம் அப்படியே மரத்துப் போன மாதிரி இருக்கே!” என்றாள்.
அந்தப் பக்கத்தை கைகளால் அழுத்தினான். ஆனால் அவளுக்கு அந்தத் தொடு உணர்ச்சி இருந்ததாகத் தெரியவில்லை.
“மாமா! உங்ககிட்ட ஒண்ணு சொல்லணும்!”
“இப்ப வேண்டாம் மல்லிகா! ஓய்வெடுத்துக்க!”
“இல்ல! இப்பவே சொல்லணும். கேளுங்க! உங்க காதலி பேரென்ன?” என்றாள்.
“அத இப்பப் பேச வேணாம் மல்லிகா!”
“இல்ல சொல்லுங்க!”
“அவ பேரு அகிலா!”
“மாமா. நீங்க அகிலாவையே கல்யாணம் பண்ணிக்குங்க! எனக்கு முழு சம்மதம்!”
“இப்ப அந்தப் பேச்சு வேணாம் மல்லிகா…!
“இல்ல! விஷம் குடிச்சி மயக்கம் வர முன்னாலேயே எனக்கு இந்த நெனப்பு வந்திடுச்சி. பெரிய முட்டாள் தனம் செஞ்சிட்டமேன்னு அப்பவே நெனச்சேன்! நல்ல வேள! உங்களுக்கு இந்த செய்தியச் சொல்றதுக்கு ஆண்டவன் எனக்கு உயிர் பிச்சை கொடுத்திருக்கான். நெசமாத்தான் சொல்றேன். நீங்க அகிலாவயே கல்யாணம் பண்ணிக்குங்க! எனக்குப் பூரண சம்மதம்!”
அவள் கைகளைத் தன் கண்களுக்குள் புதைத்துக் கொண்டான். இலேசான கண்ணீரில் அது நனைந்தது.
அவள் கண்கள் மூடி மீண்டும் மயக்கத்தில் ஆழ்ந்தாள்.
*** *** **
அத்தை திரும்பி வந்த போது அவள் கண்விழித்துப் பேசியதைப் பற்றிச் சொன்னான். ஆனால் என்ன பேசினாள் என்று சொல்லவில்லை. அத்தை அவளை மெதுவாகத் தொட்டு “மல்லிகா, கண்ணு!” என்று கூப்பிட்டாள். அவள் கண் விழித்துப் பார்த்தாள். “அம்மா” என்றாள்.
அத்தை அவளைக் கட்டிக் கொண்டு ஓவென்று அழுதாள். “இப்படிப் பண்ணிட்டியே கண்ணு! இந்த அம்மாவ உட்டுட்டுப் போவப் பாத்தியே! நீ போயிட்டா எனக்கு வேற யாரு இருக்கா இந்த ஒலகத்தில? நான் ஒண்டிக்கட்டயா இருப்பேனா? நீ போயிட்டா நான் இருப்பேனே? நானும் பின்னாலேயே வந்திருக்க மாட்டேன்?”
மல்லிகா அம்மாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள். குழறிக் குழறி பேசினாள். “அழுவாதம்மா! இனிமே அப்பிடியெல்லாம் செய்ய மாட்டேன்! அழுவாத!” என்றாள்.
அத்தை கண்களைத் துடைத்துக் கொண்டு மல்லிகாவுக்கு அவசரம் அவசரமாக சூப்பை எடுத்து ஊட்ட ஆரம்பித்தாள். கணேசனை ஒரு கண்ணால் பார்த்துக் கொண்டு அவள் சூப்பை மெதுவாக உறிஞ்சிக் குடித்தாள். சூப் வாயின் ஓரத்தில் வழிந்தது.
ஒரு இந்திய டாக்டர் தாதியுடன் வந்தார். “ஓ நல்லது! கண் முழிச்சிருக்கே உங்க பொண்ணு!” என்று சந்தோஷப் பட்டார். அத்தையையும் கணேசனையும் ஒரு முறை பார்த்துப் புன்னகைத்துவிட்டு பதிவேட்டை எடுத்துப் புரட்டிப் பார்த்தார். மல்லிகாவின் இமைகளை இழுத்துக் கண்களைப் பரிசோதித்தார். விளக்கு அடித்துப் பார்த்தார். ஸ்டெதெஸ்கோப்பை வைத்து இருதயத் துடிப்பைப் பார்த்தார். “நன்றாக இருக்கிறது!” என்றார். தொண்டையின் பக்கங்களை அழுத்திய போது மல்லிகா வலியால் முனகினாள். பின்னர் அடிவயிற்றை அமுக்கினார். அப்போதும் அவள் வலியால் துடித்தாள்.
அவள் வலது கையையும் இடது கையையும் தூகிப் பார்த்தார். வலது கை துவண்டு கிடந்தது.
“எப்படி இருக்கு டாக்டர்?” என்று அத்தை படபடப்புடன் கேட்டாள்.
அத்தையைப் பார்த்து டாக்டர் சொன்னார்: “தொண்டை ரொம்பப் புண்ணா இருக்கம்மா. அது ஆற ஒரு வாரம் ரெண்டு வாரம் ஆகும். மருந்து குடிக்கணும். அதே போல கல்லீரலும் பாதிக்கப் பட்டிருக்கு. அதை எக்ஸ்ரே எடுத்துப் பார்க்கணும். கண்கள்ள பாதிப்பு இருக்கு. ஒரு பக்கம் கை விளங்காம இருக்கு. அதையெல்லாம் சோதிச்சுப் பார்க்கணும். இன்னும் ரெண்டு நாள் ஆஸ்பத்திரியில இருக்கட்டும். அப்பறந்தான் சொல்ல முடியும் ”
“புள்ளைக்கு ஒண்ணும் ஆயிடாதே!” என்று அத்தை கேட்டாள்.
“உயிருக்கு ஒண்ணும் ஆபத்தில்ல. பயப்படாதீங்க!” என்று சொல்லி விட்டு டாக்டர் நடந்தார். கணேசன் அவர் பின்னாலேயே போனான். அத்தையின் காதுக்கெட்டாத தூரம் வந்தவுடன் “டாக்டர்” என்று அவரைக் கூப்பிட்டான். அவர் நின்று “என்ன?” என்பது போல அவனைத் திரும்பிப் பார்த்தார்.
“ஏன் ஒரு பக்கம் கை விளங்கிலன்னு சொல்றிங்க?” என்று கேட்டான்.
“இப்ப தெளிவா சொல்ல முடியாது. தொடு உணர்ச்சி குறைவாத்தான் இருக்கு. பரிசோதிச்சி கவனிச்சாத்தான் சொல்ல முடியும். பாருங்க, விஷங் குடிச்சி கிட்டத்தட்ட மூணு மணி நேரம் போய்தான் கொண்டாந்திருக்காங்க. இதுக்கிடையில அந்தப் பெண்ணுக்கு வலிப்பு வந்து மூச்சுத் திணறல் ஏற்பட்டு மூளைக்கு பிராண வாயு போறது தடைப் பட்டிருக்கு. அதினால மூளையின் சில பகுதிகள் பாதிக்கப்படிருக்கு. இதினால ‘பார்ஷியல் பேரலிசி]ஸ்’ ஏற்பட்டிருக்கு. அதினாலதான் ஒரு பக்கம் விளங்கில. முகத் தசைகள் கூட சரியா அசையில. அதினாலதான் வாய் குழறுது” என்றார். கணேசன் அதிர்ந்து நின்றான்.
“பாத்திங்களா! ஒரு கோவத்தில ஒரு கணத்தில செய்றது வாழ்நாள் முழுக்க பாதிச்சிருது. இந்தப் பெண்ண யாராவது இனி கிட்டவே இருந்து கவனிச்சிக்கிட்டு இருக்கணும். சும்மா உடம்புக்காக மட்டுமில்ல! இந்த அதிர்ச்சியிலிருந்து அந்தப் பொண்ணு மீண்டு வரும் போது அதனுடைய மன நலத்தையும் யாராவது பக்கத்திலிருந்து கவனிச்சிக்கத்தான் வேணும். நீண்ட நாளைக்கு தெராப்பி தேவைப் படலாம். அவங்க அம்மாகிட்ட சொல்லுங்க!” டாக்டர் அடுத்த நோயாளியைக் கவனிக்க அகன்று விட்டார்.
கணேசன் நின்ற இடத்திலிருந்து மல்லிகாவின் கட்டிலைத் திரும்பிப் பார்த்தான். அத்தை பாசமாக அவளுக்கு சூப் ஊட்டிக் கொண்டிருந்தாள். சூப் வாயில் ஒரு பக்கம் ஒழுக ஒழுக அதைத் துடைத்துக் கொண்டிருந்தாள். இருவரும் என்னவோ பேசிக் கொண்டிருந்தார்கள். மீண்டும் மல்லிகாவின் கட்டிலுக்குத் திரும்ப நினைத்த கணேசன் அப்படிச் செய்யாமல் அங்கேயே கொஞ்ச நேரம் நின்றான். பின்னர் திசை திரும்பி வார்டை விட்டு வெளியே வந்தான். லி·ப்டில் ஏறி கீழே வந்தான்.
மருத்துவ மனைக்கு வெளியே கார் பார்க்கை அடுத்திருந்த புல் வெளிக்கு வந்தான். வெயில் மங்கியிருந்த நேரம். மருத்துவ மனையில் நோயாளிகளைப் பார்க்கும் நேரமாதலால் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. கையில் பழங்களுடனும் உணவுப் பொட்டலங்களுடனும் மலர்களுடனும் உறவினர்கள் மருத்துவ மனை வாசலுக்குள் நுழைந்தவாறிருந்தார்கள்.
தனியிடத்தை நாடினான். ஒரு மரத்தின் நிழலிலிருந்த இரும்பு நாற்காலி ஒன்றில் உட்கார்ந்தான். முன்னால் நடந்து கொண்டிருக்கும் காட்சிகளைக் கொஞ்ச நேரம் வெறித்துப் பார்த்தவாறிருந்தான். நெஞ்சில் விம்மல் வந்தது. அடக்கப் பார்த்தான். மற்றவர்கள் பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்ற வெட்கம் வந்தது. முகத்தைக் கைகளால் மூடினான். அழுகை வெடித்து வந்தது. விம்மி அழுதான்.
***
——————————————————————————–
32
காலையில் இரண்டு மணி நேர விரிவுரையையும் அதைத் தொடர்ந்து இரண்டு மணி நேரம் கணினி பயிற்சி வகுப்பையும் முடித்துக் கொண்டு 12 மணிக்கு மண்டபத்தை விட்டு வெளியே வந்தாள் அகிலா. நண்பகல் வெயில் சுட்டெரித்தது. விரிவுரை மண்டபத்தின் இதமான குளிர் சாதனத்திலும் மிதமான விளக்கொளியிலும் நான்கு மணி நேரம் தொடர்ந்து இருந்துவிட்டு வந்தவளுக்கு பளீரென்ற வெயிலில் கண்கள் கூசின. இரண்டு நாட்களுக்கு முன் மழை பெய்ததற்குப் பிறகு வளாகத்தில் இப்படித்தான் வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. மழையும் வெயிலுமாக திடீரென்று மாறி மாறி வருகின்ற இந்த பினாங்குத் தீவின் பருவ நிலை அகிலாவுக்குக் கொஞ்சம் விசித்திரமாக இருந்தது. வெயில் நாட்களில் கொஞ்சமும் காற்றின் அசைவே இல்லாத வெப்பமாக இருக்கிறது. கடல் சூழ்ந்த தீவில் இருக்கிறோம் என்ற உணர்வே இருப்பதில்லை.
எங்கே போவது என்று யோசித்தவாறு அகிலா கொஞ்ச நேரம் யோசித்தவாறு நின்றிருந்தாள். வயிறு பசித்தது. காலையிலும் ஒன்றும் பசியாறவில்லை. சாப்பிடப் போக வேண்டும். ஆனால் தனியாகப் போகத் தயக்கமாக இருந்தது. மாலதிக்குக் காலையில் விரிவுரைகள் இல்லை. ஆகவே நூல் நிலையத்துக்குப் போவேன் என்று சொல்லியிருந்தாள். அங்கு போனால் அவளைப் பிடித்து இருவருமாக சாப்பிடப் போகலாம் என்று நினைத்து நூல் நிலையத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
சாலை நெடுகிலும் காட்டுத் தீ மரங்களில் பூக்கள் கொத்துக் கொத்தாகப் பூத்திருந்தன. வெயிலில்தான் இவை இப்படிப் பூக்கின்றன. இந்த வளாகத்தில் இரண்டு வண்ணங்களில் அவை இருந்தன. ஒன்று இரத்தச் சிவப்பு. இன்னொன்று இளஞ்சிவப்பு. இரண்டுமே கிளைகளின் நுனிகளில் புஸ்ஸென்று பூத்து கிளையையே மூடிவிடும். கீழே உதிர்ந்திருக்கும் போது கம்பளமாக இருக்கும். அவற்றை மிதித்து நடக்க அகிலாவுக்குக் கால் கூசியது.
வளாகம் முழுதும் உள்ள அங்சானா மரங்களில் கூட சிறு சிறு பூக்கள் பூத்து இப்படித்தான் உதிர்ந்திருக்கின்றன. கார்கள் அவற்றின் மீது ஓடி அரைக்கும் வரை அழகான கம்பளமாக இருக்கும். அப்புறம் சிதறிப் பொடிப்பொடியாகி மழை வந்தால் சேறும் ஆகிவிடும். இந்தப் பூக்கள் கிளைகளில் இரண்டு மூன்று நாட்கள்தான் தங்குகின்றன. அப்புறம் கிளைகளில் இலைகள் மட்டும்தான் மிச்சமிருக்கும்.
துணை வேந்தர் இல்லத்தின் அருகிலும் நுண்கலைப் பிரிவுக் கட்டத்தின் எதிரிலும் உள்ள இரண்டு ஒற்றைக் கொன்றை மரங்களிலும் கூட இப்போது பூக்கள் குலை குலையாகப் பூத்திருக்கின்றன. கண்ணைப் பிரிக்கும் மஞ்சள் வண்ணத்தில் யாரோ பூக்கார அம்மாள் வியாபாரத்துக்காகக் கவனமாக அடுக்கிக் கட்டி தொங்கவிட்டிருப்பது போல… சீன லேன்டர்ன் விளக்குகள் போல… அன்றைக்கு ஷங்ரிலா ஹோட்டலில் பார்த்த சரவிளக்குகள் போல…
ஷங்ரிலாவை நினைத்தவுடன் கடற்கரைக்குச் சாப்பிடப் போய் மோட்டார் சைக்கிளில் கணேசனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு மழையில் நனைந்து திரும்பி வந்த சிருங்காரமான நினைவுகள் வந்தன. அதைத் தொடர்ந்து அவனைப் பார்த்து நான்கு நாட்கள் ஆகிவிட்டன என்ற எண்ணம் வந்தது. ஏன் இப்படி நினைவுகள் துருத்திக் கொண்டு வருகின்றன?
இந்த இரண்டு நாட்களாக அகிலாவின் மனதைக் கப்பியுள்ள இருள் இன்னும் கலையவில்லை. விழித்திருக்கும் நேரமெல்லாம் ஒரு இளம் பெண் விஷமருந்தி மருத்துவ மனைக் கட்டிலில் அலங்கோலமாகப் படுத்திருக்கும் காட்சிதான் வந்தது. அந்தப் பெண்ணின் கோர முடிவிற்கு எப்படியோ தானும் ஒரு காரணம் என்ற எண்ணம் வந்து நெஞ்சைத் திடும் திடும் என்று உலுக்கியது.
என்ன ஆயிற்று கணேசனுக்கு? போய் நாட்கள் நான்கு ஆகிவிட்டன. ஜெசிக்கா வந்து செய்தி சொல்லியே இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. ஆனால் அவனைக் காணவில்லை. கிள்ளானில் நிலைமை ரொம்ப மோசமாகிவிட்டதா? குடும்பத்தில் பூகம்பங்கள் வெடித்திருக்குமா? மல்லிகா நிலைமை எப்படி? பிழைத்திருப்பாளா? ஏன் இப்படி என்னை இருளில் விட்டுப் போனான்? எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று மனம் துடித்தாலும் எந்தக் கேள்விக்கும் பூரணமான விடை கிடைக்கவில்லை. நேற்று இதைப் பற்றி மாலதியிடம் பேசும் போதும் அகிலா மீண்டும் அழுதாள். மாலதிக்கு தோளைப் பிடித்து ஆறுதல் சொல்ல முடிந்ததே தவிர விடைகள் ஏதும் சொல்ல முடியவில்லை.
நூல் நிலையத்தை அடைந்து மாலதியைத் தேடிப் பிடித்த போது அவள் புத்தகத்தின் மீது கவிழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.
அவளை உலுக்கி “இப்படித்தான் படிக்கிறிங்கிளா மாலதி?” என்று கேட்டாள்.
“சீ! படு போரிங்கா இருக்கு இந்தப் பாடம். தூக்கமும் வருது, துக்கமும் வருது!” என்று சொன்னவாறு மாலதி புத்தகத்தை அடையாளம் வைத்து மூடிவிட்டு எழுந்து வந்தாள். நூல் நிலையத்தை விட்டு வெளியே வந்து கேன்டீனை நோக்கி நடந்து கொண்டிருந்த போது மாலதி கேட்டாள்: “அப்புறம், உங்க ஆளு சேதியெல்லாம் சொன்னாரா?”
அகிலா அதிர்ச்சியடைந்தாள். “எந்த ஆளு?”
“அதான், உங்க கணேசன்!”
“கணேசனா? இன்னும் வரவே இல்லியே!”
மாலதி அவளை அதிசயமாகப் பார்த்தாள். “நேத்து ராத்திரி அவர கேம்பஸ்ல பார்த்தேனே! மோட்டார் சைக்கிள்ல போனாரே! எப்படியும் நேத்தே உன்னை வந்து பாத்திருப்பாருன்னு நெனச்சனே!” என்றாள்.
அகிலாவுக்கு திகீரென்றது. நேற்று இரவே வந்து விட்டானா? அப்புறம் ஏன் என்னைப் பார்க்க வரவில்லை? சென்ற நான்கு நாட்கள் அவனைப் பார்க்காதிருந்த ஏக்கம் அவனை உடனே பார்த்துவிட வேண்டுமென்று துடிக்க வைத்தது. எங்கே எப்போது எப்படி என்றெல்லாம் மாலதியைத் துளைத்தெடுத்தாள்.
“ராத்திரி பூமி புத்ரா பேங்க் ஏடிஎம் மெஷின்ல காசெடுக்கப் போயிருந்தேன். அப்ப அவர் மோட்டார் சைக்கிள்ள போனதப் பார்த்தேன். ஆனா அவர் என்னைப் பாக்கில!” என்றாள்.
“எப்படியிருந்தார்?”
“ராத்திரியில சரியா தெரியில அகிலா. ஆனா ரொம்ப சோர்வா இருக்கிற மாறிதான் தெரிஞ்சது! கொஞ்சம் தாடி வளந்த மாதிரியும் இருந்தது!”
அவனுடைய துயரமான கோலத்தை எண்ணி மனம் சோகப் பட்டது. அவனுக்குப் பக்கத்தில் இருந்து அவன் தோள்களைத் தழுவி ஆறுதல் சொல்ல வேண்டும் போலவும் இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக கிள்ளானில் என்ன நடந்தது, மல்லிகாவின் நிலைமை என்ன என்று கேட்டுத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் அவளைப் பிய்த்துத் தின்றது. ஆனால்… ஏன் என்னைப் பார்க்க வரவில்லை? நேற்றிரவு திரும்பியவன் இன்று காலை முழுவதும் தன் பக்கம் திரும்பாமல்… ஏன் இந்த அலட்சியம்? ஒரு வேளை…
கேன்டீனில் சாப்பிட அமர்ந்த போது கேட்டாள்: “அவர்தான்னு நிச்சயமா தெரியுமா மாலதி? வேற யாரையாவது பாத்திட்டு…”
“சீ! அவர்தான் அகிலா. கணேசன்தான். எனக்குத் தெரியாதா என்ன? தெளிவாப் பாத்தேன்!” என்று உறுதிப் படுத்தினாள்.
“நேற்று திரும்பிட்டவரு ஏன் இன்னும் என்னை வந்து பார்க்கல?”
மாலதி கொஞ்சம் மௌனமாயிருந்து சொன்னாள். “எத்தனையோ வேலைகள் இருக்கலாம். எல்லாம் முடிஞ்சி வந்து பாப்பாரு பாரேன்!”
அகிலாவுக்கு அது அத்தனை சாதாரணமானதென்று தோன்றவில்லை. கணேசனை உள்ளுக்குள் ஏதோ ஒன்றிருந்து வருத்துகிறது. இந்த நான்கு நாட்களில் கிள்ளானில் நடந்தவை அவனை மாற்றியிருக்கின்றன. அது என்ன மாற்றம்? எப்படித் தெரிந்து கொள்வது? இதயம் திகில் கொண்டது.
கணேசனிடம் விரிவாகப் பேசவேண்டுமென்று எண்ணினாள். எப்படியென்று தெரியவில்லை. தானாக அவனைத் தேடிப் போக முடியாது. அதற்குத் தேவையில்லை. அது சரியில்லை. அவன் வரும் வரை காத்திருக்க வேண்டும். ஆனால் மனசு காத்திருக்கப் பொறுமையில்லாமல் அலைக்கழித்தது.
மாலதி மௌனத்தைக் கலைத்துப் பேசினாள்: “அந்தப் பொண்ணப் பத்தி உங்கிட்ட இதுக்கு மிந்தி சொல்லியிருக்காரா அகிலா!”
“எந்தப் பொண்ணு?”
“அதான், விஷங் குடிச்சிச்சே, அந்த பொண்ணு!”
“மல்லிகான்னு அத்தை பொண்ணு ஒருத்தி இருக்கான்னு சொல்லியிருக்காரு.”
“ரெண்டு பேருக்கும் காதல்னு சொல்லியிருக்காரா?”
“இல்ல! அந்தப் பொண்ணு தனக்கு தங்கச்சி மாதிரின்னுதான் சொல்லியிருக்கார்”
மாலதி மௌனமாகச் சாப்பிட்டாள். அவள் மௌனத்தில் ஏதோ ஒரு அர்த்தம் இருப்பதாக அகிலாவுக்குத் தோன்றியது.
“என்ன நெனைக்கிறிங்க மாலதி?”
“இல்ல, அண்ணனோட காதல் சேதி கேட்டு விஷங்குடிக்கிற தங்கச்சி உண்டா இந்த ஒலகத்திலன்னு யோசிக்கிறேன்!”
அகிலாவும் பலமுறை யோசித்து விட்டாள். மல்லிகாவின் பேச்சு வரும்போதெல்லாம் அதை அலட்சியமாகத்தான் உதறியிருக்கிறான். ஆனால் இப்போது வந்திருக்கும் செய்தி வேறாக இருக்கிறது. அப்படியானால் கணேசன் இத்தனை நாள் தன்னை ஏமாற்றினானா? தன்னிடம் பச்சை பச்சையாகப் பொய் சொன்னானா? கணேசனா? அந்தக் காதல் வழியும் கனிந்த கண்களுடைய என் கணேசனா? அவனாலும் ஏமாற்ற முடியுமா?
தனிமையில், இரவில், தான் கனிந்திருக்கும் வேளையில் “இவளுக்கு என்ன தெரியும், முட்டாள்?” என்று உள்ளுக்குள் நினைந்து கொண்டு “அவ என் தங்கச்சி மாதிரி!” என்று பொய் சொன்னானா? தன் உணர்வுகளோடு விளையாடினானா? இன்று அந்தப் பொய்கள் அவனுடைய அந்தப் பழைய காதலியின் தற்கொலை முயற்சியால் வெளிப்பட்டு விட தன்னைப் பார்க்க வெட்கி மறைந்திருக்கிறானா? நான் அவ்வளவு ஏமாளியாகவா ஆகிவிட்டேன்? என்னை ஒரு பொம்மைபோல ஆட்டி வைத்திருக்கிறானா? அவன் கையில் உள்ள சூத்திரக் கயிறுகள் என்னைப் பிணித்திருப்பதை அறியாமல்தான் இத்தனை நாள் ஆடியிருக்கிறேனா? இதற்காகத்தான் அன்பான அம்மாவையும் அப்பாவையும் பகைத்துக்கொள்ளத் துணிந்தேனா? மாலதிக்குத் தெரியாமல் மனம் உள்ளுக்குள் அழுதது.
“இன்னைக்குக் கோயிலுக்கு வாரியா?” என்று கேட்டாள் மாலதி.
தூக்கத்திலிருந்து விழித்தவள் போல “என்ன சொன்னிங்க மாலதி?” என்று கேட்டாள் அகிலா.
“இன்னைக்கு வெள்ளிக் கிழமையாச்சே, கோயிலுக்குப் போகலாமான்னு கேட்டேன்!”
வெள்ளிக் கிழமைகளில் குளுகோரில் உள்ள அம்மன் கோயிலுக்கு பெரும்பாலான இந்து மாணவர்கள் போவார்கள். போகவேண்டும் என்றுதான் தோன்றியது. ஆனால் ஒரு வேளை கணேசன் தன்னைத் தேடி வந்தால் என்ற எண்ணம் எழுந்தது. இல்லை. அவன் தேடி வருவான் என்று காத்திருக்க வேண்டாம். நேற்று இரவிலிருந்து என்னைத் தேடி வரவில்லை. ஒரு வேளை இனி என்றுமே தேடி வர மாட்டான். அவனுக்காகக் காத்திருக்கத் தேவையில்லை.
இப்போது உள்ள குழப்பத்துக்குக் கோயிலுக்குப் போவது நல்லதுதான். கொஞ்சமாவது ஆறுதல் கிடைக்கும்.
“சரி மாலதி. கோயிலுக்குப் போகலாம். நீங்க வந்து கூப்பிடுங்க!” என்றாள்.
*** *** ***
கணகணவென மணிச் சத்தத்துடன் தீபத்தெட்டு மேலெழுந்து அம்பாளின் முகத்தைப் பிரகாசப் படுத்தியது. அகிலா கை தூக்கிக் கும்பிட்டாள். மனதுக்கு இதமாக இருந்தது. மனப் படபடப்புகளை கொஞ்ச நேரமாவது மறந்திருக்க முடிந்தது.
கோயிலில் வெள்ளிக் கிழமை கூட்டம் அதிகமாகத்தான் இருந்தது. பல்கலைக் கழக மாணவ மாணவியர் கூட்டமாக வந்திருந்தார்கள். மாணவர்கள் ஜிப்பாவில் வந்திருந்து திருநீறும் சந்தன குங்குமப் பொட்டுகளும் வைத்துக் கொண்டு இந்துக்களுக்கான அடையாளங்களோடு இருக்க இந்த ஒரு நாள்தான் அவர்களுக்குச் சந்தர்ப்பம். இதை பயன் படுத்திக் கொள்ள அவர்கள் எப்போதும் ஆர்வம் காட்டுவார்கள். மாணவிகள் பெரும் பாலோர் பஞ்சாபி ஆடைகளிலும் சிலர் சேலையிலும் வந்திருந்தனர். அகிலா அடக்கமான சேலை அணிந்து வந்திருந்தாள்.
கணேசன் அங்கு எங்காவது இருக்கிறானா என அகிலா பலமுறை சுற்றிப் பார்த்து விட்டாள். அவனைக் காணவில்லை. பலமுறை அவளோடு அவன் இந்தக் கோயிலுக்கு வெள்ளிக் கிழமைகளில் வந்திருக்கிறான். அவள் சேலையில் தன் ஜிப்பா உரச அணுகி நின்றிருக்கிறான். அப்போதெல்லாம் இந்த வேளைகள் பூரணத்துவம் பெற்றது போல அவளுக்குத் தோன்றும்.
ஆனால் இன்று அவள் தனியாக இருந்தாள். தோழியர்கள் பலர் இருந்தும் சூழ்நிலை பூரணமாகவில்லை. கண்கள் தேடியதைவிட இதயம் அதிகமாகத் தேடியது. ஏன் காணவில்லை? ஏன் என்னைத் தேடி வரவில்லை? கிள்ளானிலிருந்து என்ன மர்மங்களைச் சுமந்து வந்திருக்கிறான்? ஏன் என்னிடம் பகிர்ந்து கொள்ளவில்லை? ஏன் என்னிடமிருந்து ஒளிந்திருக்கிறான்?
விபூதி வாங்கிக் கொண்டு சந்தனம் குங்குமமும் வாங்கிக் கொண்டு கூட்டம் இறுக்கம் தளர்ந்து பிரிந்தது. “சுத்திக் கும்பிட்டு வந்திடலாம் அகிலா” என்று மாலதி முன்னால் நடந்தாள். அகிலா அவளைப் பின் தொடர்ந்தாள்.
விநாயகர் சிலை வைக்கப் பட்டிருக்கும் அரசமரத்துக்கு அடியில் விநாயகரை வணங்கிவிட்டு மரத்தை அவள் சுற்றி வந்த போது இருட்டிலிருந்து “அகிலா” என்ற குரல் கேட்டது. யார் குரல் என்று பளிச்சென்று தெரிந்துவிட்டது. இதற்காகவே இத்தனை நேரம் காத்திருந்தவளைப் போல “கணேஷ்!” என்றாள்.
ஐந்து நாள் தாடி அவன் தாடையில் அடர்த்தியாக இருந்தது. முகம் சோம்பியிருந்தது. தொளதொளப்பான ஜிப்பா அணிந்திருந்தான். முகத்தில் கொஞ்சமும் செழிப்பில்லை.
“எப்ப வந்திங்க கணேஷ்? ஏன் என்னப் பாக்க வரல?” அவள் குரல் தளுதளுத்தது. அழுது விடுவோம் போலத் தோன்றியது. தலை குனிந்து கொண்டாள். அவன் அவள் கைகளைப் பிடித்தான்.
“உங்கிட்ட நெறயப் பேச வேண்டியிருக்கு. இங்க முடியாது. என்னோட வா அகிலா!” என்றான்.
“சரி. இருங்க. மாலதி கிட்ட சொல்லிட்டு வந்திர்ரேன்!”
அவனை விட்டு முன்னே போய்விட்ட மாலதியைத் தேடி ஓடினாள். அவன் வந்திருப்பதைச் சொன்னாள். “ஆமா, நான் பார்த்தேன்!” என்றாள் மாலதி குறும்புச் சிரிப்புடன்.
“நீ போ மாலதி! நான் அவரோடயே திரும்பி வந்திர்ரேன்!”
மாலதி சரியென்று போனாள்.
*** *** ***
“வாழ்க்கையில நாம் விரும்பிறதப் போல பெரும்பாலான விஷயங்கள் நடக்கிறதில்ல! அதினால இனிமே எதுக்காகவும் ஆசைப்பட்டுத் திட்டம் போடக் கூடாதுன்னு முடிவு செஞ்சிட்டேன் அகிலா!” என்றான் கணேசன்.
எஸ்பிளனேடில் மிருதுவான காற்று வீசிக் கொண்டிருந்தது. நாள் முழுவதும் காய்ந்த வெயிலுக்கு அது ஒன்றுதான் ஒத்தடம் கொடுப்பது போல இருந்தது. அலைகள் மிக மெதுவாக வந்து அந்த கற்சுவரின் மீது உராய்ந்து கொண்டிருந்தன. கூட்டம் வழக்கம் போல இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும் இருந்த மன நிலையில் கூட்டத்தை அவர்கள் கவனிக்கவில்லை.
கோயிலிலிருந்து அவளைத் தன் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு அவன் அவளை நேராக இங்கு கொண்டு வந்தான். அவன் தோள்களை முன்பு போல கட்டிப் பிடிக்காவிட்டாலும் அழுத்தமாகப் பிடித்துக் கொண்டுதான் வந்தாள் அகிலா. வரும் வழி முழிவதும் அவன் ஒன்றுமே பேசவில்லை.
எஸ்பிளனேடில் மோட்டார் சைக்கிளைப் பூட்டி வைத்து விட்டு இந்தத் தடுப்புச் சுவரின் மேல் வந்து உட்கார்ந்தும் மௌனமாகத்தான் இருந்தான். அவள்தான் அதைக் கலைத்தாள். “என்ன நடந்திச்சின்னு சொல்லுங்க கணேஷ். இப்படி மௌனமாகவே இருந்தா எப்படி? என்னை ரொம்பக் கலவரப் படுத்திறிங்க!” என்றாள்.
“மன்னிச்சுக்க அகிலா. எங்கிருந்து ஆரம்பிக்கிறதுன்னு தெரியல. ஜெசிக்காவப் பாத்த போது உங்கிட்ட சில விஷயங்கள சொல்லிட்டதா எங்கிட்ட சொன்னா!”
“எப்ப ஜெசிக்காவப் பாத்திங்க?”
“நேத்து ராத்திரி! நான் வந்து சேர்ந்த வொடனே!”
ஜெசிக்காவப் பார்க்க அவனுக்கு நேரமிருந்திருக்கிறது. தன்னைப் பார்க்க நேரமில்லாமல் போனதா?
“ஏன் என்ன வந்து பாக்கல கணேஷ்?”
அவள் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான். “பார்க்க ரொம்ப தயக்கமா இருந்திச்சி அகிலா. தைரியம் வரல!” என்றான்.
“என்னப் பாக்க ஏன் தைரியம் வேணும் உங்களுக்கு?”
“பாக்கிறதுக்கு இல்ல. உங்கிட்ட சொல்ல இருக்கிற விஷயங்களுக்காக!”
அவளுக்குப் புரியவில்லை. அவன் தொடர்ந்து சொல்லுவான் என எதிர் பார்த்தாள். சொல்லவில்லை. இருட்டிக் கிடந்த கடலைப் பார்த்தவாறிருந்தான்.
“சரி. மல்லிகா எப்படி இருக்காங்க? அதையாவது சொல்லுங்க!”
“இன்னும் ஆஸ்பத்திரியிலதான் இருக்கு. இன்னும் சரியா சாப்பிட முடியில. தண்ணி அல்லது சூப்தான் சாப்பிட முடியிது. திரவ ஆகாரங்கள மட்டும்தான் சாப்பிட முடியுது. கெட்டி ஆகாரம் சாப்பிட முடியில. ரொம்ப இளைச்சிப் போயிட்டா!”
அவன் குரலில் இருந்த சோகம் அவளையும் கப்பிக் கொண்டது. எவ்வளவு மாற்றமாக இருக்கிறது அவன் பேச்சு! சில மாதங்களுக்கு முன் இதே இடத்திற்கு வந்திருந்த போது எவ்வளவு காதல் ஒழுகப் பேசினான்! அந்த இரவு எவ்வளவு பிரகாசமாக இருந்தது! இந்த விளக்குகள் எவ்வளவு சிருங்காரமாக இருந்தன! ஏன் அத்தனையும் இவ்வளவு சீக்கிரத்தில் மங்கிப் போய்விட்டன? என்னை விட்டு விலகிக் கொண்டிருக்கிறானா? இது பிரிவுக்கு முகமனா?
“விஷம் சாப்பிட்ற அளவுக்கு என்ன நடந்திச்சி கணேஷ்? உங்க அத்தை மகளுக்கு உங்க மேல இவ்வளவு ஆசை இருக்குன்னு நீங்க எங்கிட்ட சொல்லவே இல்லியே!”
“எனக்குத் தெரியில அகிலா! தெரிஞ்சிருந்தாலும் அத அலட்சியப் படுத்தப் பார்த்தேன். அவ எங்கிட்ட சொன்ன போதும் அத விளையாட்டா எடுத்துக்கிட்டேன். அவ கிட்ட சொல்லித் திருத்த முடியும்னு நெனச்சேன்”
“உங்களுக்கு..?”
“எனக்கு அவ மேல கொஞ்சமும் ஆசையில்ல அகிலா. நான் சொல்றத சத்தியமா நம்பு. அன்பு இருக்கு, ஆனா ஆசை இல்ல. என்னைக்குமே இருந்ததில்ல. இப்போதும் இல்ல. ஆனா அவ மனசில அந்த ஆசை இப்படி மரம் போல வளந்திருக்கிறது எனக்குத் தெரியாமப் போச்சி!”
கொஞ்ச நேரம் மௌனமாக இருந்தார்கள். பின் அவனே பேசினான்: “மல்லிகாவுக்கு இனிமே பல கஷ்டங்கள் இருக்கு. அவளுக்கு ஏற்பட்டிருக்கிற சில பாதிப்புகள் நிரந்தரமா இருக்கக் கூடும்னு டாக்டர்ங்க சொல்றாங்க. விஷத்தினால ஏற்பட்ட வலிப்பும் மூச்சுத் திணறலும் வந்திருக்கு. அதனால மூளைக்கு இரத்தம் போகாம அவள் உடம்பு ஒரு பக்கம் விளங்காமப் போச்சி. ஒரு கையைத் தூக்கவே முடியில. முகத்தில ஒரு பக்கம் இழுத்துக்கிச்சி. பேச்சுகூட குழறி குழறித்தான் வருது” தயங்கிச் சொன்னான்: “கண்கள்ள பார்வை கூட ரொம்ப மங்கலாகத்தான் இருக்கு!”
“ஐயோ!” என்றாள் அகிலா.
“சொல்லு அகிலா. இப்படி ஆயிட்ட பெண்ண யாரு கட்டிக்குவாங்க?”
ஏன் அந்தக் கேள்வியைக் கேட்கிறான் என அகிலாவுக்கு விளங்கவில்லை. என்ன சொல்வதென்று தெரியவில்லை. பேசாமல் இருந்தாள்.
“அகிலா! நான் ரொம்ப ஆசப்பட்டுட்டேன். எனக்குன்னு விதிக்கப் பட்டிருந்த வரையறைகளை மீறி என்னுடைய விருப்பத்துக்கு என் வாழ்க்கைய அமைக்கணும்னு அளவுக்கு மீறி ஆசைப் பட்டுட்டேன். அந்த மீறல்களுக்கெல்லாம் எனக்குப் பெரிய தண்டனை கிடைச்சிப் போச்சி!”
“என்னத்த மீறிட்டிங்க கணேஷ்? ஏன் அப்படிச் சொல்றிங்க?”
“என்னுடைய சூழ்நிலைகள என்னுடைய குடும்பத்தார்கள் முன்னமே வரையறுத்து வச்சிருந்தாங்க. குறிப்பா என் அத்தை. அப்புறம் எங்கப்பா. ஆனா அதையெல்லாம் உடைச்சி மீறணும்னு நெனச்சேன். புதுசா என் மனசுக்கு ஏத்தாப்பில ஒரு வாழ்க்கைய அமைச்சிக்கணும்னு தீர்மானம் பண்ணினேன். உன்ன சந்திச்ச போது அதுக்கு ஒரு அருமையான வாய்ப்பு கிடைச்சதாத் தெரிஞ்சிச்சி. அதினாலதான் உன்ன அத்தன பலமா நான் பிடிச்சிக்கிட்டேன்!”
நானும் அப்படித்தான் என அகிலா நினைத்தாள். நானும்தான் எனக்கு விதிக்கப்பட்ட வரையறைகளை உடைக்க நினைத்தேன். அதற்காகத்தான் உன்னைப் பற்றினேன். ஆனால்..
“ஆனா, இந்த அப்பாவிப் பொண்ண அந்தக் கணக்கில சேர்க்க மறந்திட்டேன் அகிலா! அவள் நான் போட்ட கணக்கையெல்லாம் மாத்திட்டா!”
“அப்படின்னா?”
அவன் முகத்தையே பார்த்திருந்தாள். ‘ஆகவே, என்ன செய்வது? சொல் கணேஷ். சொல். இன்னும் என்னை மர்மத்திலும் படபடப்பிலும் வைத்திருக்காதே!’ என்று அவள் மனம் கூவிக் கொண்டிருந்தது.
“என்ன மன்னிச்சிடு அகிலா! ஏதாகிலும் ஒரு வகையில உன்னை நான் ஏமாற்றியிருந்தா என்ன மன்னிச்சிடு. இனி நான் மல்லிகாவுக்குத்தான் வாழ்வு கொடுக்கணும். என்னை விட்டா இனி அவளுக்கு வாழ்வு அமையாது. அதினால அத்தையும் உடைஞ்சு போவா. என் பெற்றோர் குடும்பமும் சிதைஞ்சி போவும்! என்ன மன்னிச்சிடு அகிலா! என்ன மறந்திடு! என்ன மறந்திடு!” அழுதான்.
அகிலாவின் கண்களிலும் நீர் ஊறியது. அவனுக்கு என்ன பதிலைச் சொல்வதென்று அவளுக்குத் தெரியவில்லை. இது இவ்வளவு எளிதானதா? “சரி, சரி, அதனாலென்ன? வேண்டான்னா மறந்திட்டா போச்சி!” என்று சொல்லிவிட முடியுமா? விரும்பினால் ஏற்றிக் கொள்ளவும் விரும்பாவிட்டால் அணைத்துவிடவும் இது என்ன வெறும் மெழுகு வர்த்தியா?
ஏன் இவன் என் வாழ்வின் குறுக்கே வந்தான் என ஒரு கணம் நினைத்துப் பார்த்தாள். நான் அமைதியானவளாக, என்னுடைய கல்வியையே முதன்மையாக எண்ணித்தானே இந்தப் பினாங்குக்கு வந்தேன்! அநதப் பாதையில் ஏன் இந்தப் புயல்? விதி இவனை என் வாழ்வின் குறுக்கே கொண்டு வந்து போட்டதா? அவனே தேடி வந்தானா? அல்லது நான் தேடி அவனை அடைந்தேனா? இந்தக் கட்டத்தில் அது ஒன்றும் விளங்கவில்லை. எப்படியோ அது நடந்தது. ஒரு விதை, ஒரு முளை, ஒரு தளிர், ஒரு இலை, ஒரு செடியென்று படிப்படியாக வளர்ந்து விட்டது.
இப்போது அதைப் பிடுங்கிப் போட்டு விடு என்கிறான். இன்னொருத்தியின் விதி இங்கே குறுக்கே வந்து விட்டது. எப்படி வந்தது? நான் முகம் பார்க்காத, நான் அறிந்திராத, என் வாழ்க்கையில் எந்த ஒரு சம்பந்தமும் இல்லாத இளம் பெண் என் வாழ்க்கையைப் பாதிக்கிறாள். எந்த நியதி இவளையும் என்னையும் பிணைத்தது? எந்த வலையால் ஒரு கோடியில் நானும் கண்ணுக்குத் தெரியாத இன்னொரு கோடியில் அவளுமாக அகப்பட்டுக் கொண்டிருக்கிறோம்?
“எனக்குத் தெரியும் அகிலா! நான் எவ்வளவு பெரிய துரோகின்னு நீ நெனைப்பேன்னு எனக்குத் தெரியும். நானே என்னை மன்னிக்க முடியில! உன் வாழ்க்கையில நான் குறுக்கே வந்திருக்கக் கூடாது. என்னை இப்படி உன்மீது திணிச்சிருக்கக் கூடாது. உன் மனத்தோட நான் விளையாடி இருக்கக் கூடாது. என்னை மன்னிச்சிடு!”
யார் யாரை மன்னிப்பது? எதற்காக மன்னிப்புக் கோர வேண்டும்? இதில் யார் குற்றம் செய்தார்கள்? நாமெல்லாம் இந்த வாழ்க்கை மேடையில் ஆட்டுவிக்கப் படுகிறோம். இந்த நாடகத்தில் சிலர் ஜெயிக்கிறார்கள். சிலர் தோற்கிறார்கள். ஜெயித்தவர்கள் கெக்கலித்துச் சிரிக்கிறார்கள். மற்றவர்கள் அழுகிறார்கள், உன்னையும் என்னையும் போலத்தான் கணேஷ்!
வானம் இருண்டு வந்தது. இன்றைக்கும் மழை வரப் போகிறதா? நான் இன்பமாக இருப்பதாக நினைக்கும் போதெல்லாம் மழைதான் வந்து கெடுக்கிறது.
“என்ன சொல்ற அகிலா?” கணேசன் கேட்டான்.
“மழை வர்ர மாதிரி இருக்குது! என்னத் திரும்ப கொண்டு போய் விட்டிடுங்க!”
“நான் சொன்னதுக்கு நீ ஒரு பதிலும் சொல்லியே!”
யோசித்தாள். ஏன் அவசரமாக பதில் சொல்ல வேண்டும்? அவசரத்தால் என்ன நன்மை விளையும்? ஏன் திடீர்த் தீர்வுகளைத் தேட வேண்டும்?
“நாம ரெண்டு பேருமே இப்ப ரொம்ப உணர்ச்சி வசப்பட்டிருக்கோம், கணேஷ். என்ன கொஞ்சம் யோசிக்க விடுங்க! அதுக்கப்புறம் இன்னொரு முறை சந்திச்சி இதப் பத்திப் பேசுவோமே!” என்றாள். அவள் முகத்தைக் கொஞ்ச நேரம் ஏறிட்டுப் பார்த்தான். அவள் என்ன சொல்கிறாள் என்பது தனக்குப் புரியவில்லை என்பது போலப் பார்த்தான்.
“அகிலா! உங்கிட்ட இருந்து மனப் பூர்வமான ஒரு பதிலை என் காதால கேட்காம என் மனசு சமாதானமடையாது. சொல்லு!” என்றான்.
“கணேஷ். நீங்க என்ன செய்ய வேணும்னு முடிவு பண்ணிட்டிங்க. சொல்ல வேண்டியத சொல்லிட்டிங்க. அதுக்கு என்னிடமிருந்து உங்களுக்கு ஒரு பதிலே தேவையில்லையே!” என்றாள்.
“இல்ல அகிலா! இந்த முடிவு சரிதானான்னு சொல்லு! இது உனக்கு சம்மதமான்னு சொல்லு! இல்லன்னா என்னுடைய மனப் போராட்டத்துக்கு ஒரு முடிவே இருக்காது!” என்றான்.
அகிலா கடலைப் பார்த்து யோசித்தவிறிருந்தாள். பின் பேசினாள். “சொல்றேன் கணேஷ். ஆனா ஏன் இப்படி அவசரப் பட்றீங்க? எல்லாரும்தான் இந்த உலகத்தில அவசரப் பட்றாங்க. உங்க அத்தை, உங்க அத்தை பொண்ணு, எங்க அம்மா, எல்லாருக்குமே விடைகள் அவசரமாத்தான் தேவைப் படுது. நீங்களும் அவசரப் படணுமா? என்னையும் அவசரப் படுத்தணுமா?”
“எனக்கு சமாதானமா இல்ல! என் மனசு அடங்க மாட்டேங்குது. உனக்குத் துரோகம் செஞ்சிட்டேன்னு என்னக் குத்துது” அவள் பதில் சொல்லவில்லை.
மழைத் துளிகள் விழ ஆரம்பித்தன. நடந்து திரும்பினார்கள். அவள் பின்னால் உட்கார்ந்ததும் மோட்டார் சைக்கிளை உதைத்துக் கிளப்பி நகருமுன் அவன் கேட்டான்.
“என் மேல கோபமா அகிலா? அதையாவது சொல்லேன்!”
“கோபப்பட எனக்கு உரிமை இருக்கு! கோபமும் இருக்கு. ஆனா பயப்படாதீங்க, உங்க அத்த மகள் மாதிரி முட்டாள் தனமான காரியத்தில நான் ஈடுபட மாட்டேன்”
மோட்டார் சைக்கிள் நகர்ந்தது. அவன் தோள்களை உறுதியாகப் பிடித்து உட்கார்ந்திருந்தாள் அகிலா.
வரும் வழியில் மழை வலுத்தது. அதே மழை. அன்று போலத்தான். அவன் மழைக்கோட்டை எடுத்து முன் பக்கமாகக் கையை நுழைத்துப் போத்திக் கொண்டு அவளுக்கும் ஒரு பகுதியைக் கொடுத்தான். அவள் அவன் இடுப்பை வளைத்துப் பிடித்தாள். மழை உடம்பையெல்லாம் நனைத்து, சேலையையும் ரவிக்கையையும் நனைத்து உடம்போடு ஒட்ட வைத்தது. குளிர் எடுக்க ஆரம்பித்தவுடன் மார்புகள் உரச அவனை இன்னும் இறுக்கமாகக் கட்டிப் பிடித்துக் கொண்டாள் அகிலா.

         அத்தை வீட்டுக்குத் திரும்பி வந்தும் கணேசனுக்கு இதயம் கனத்திருந்தது. பேச்சும் கலகலப்பும் குறைந்து விட்டது. அந்த இருட்டான எண்ணங்களை அகற்றி மனதை மகிழ்ச்சியாக்க வேண்டும் என்பதற்காக அன்று இரவு அகிலாவிடம் போன் பண்ணிப் பேசினான்.

 

           அவள் குரலில், கொஞ்சலில் இருட்டில் ஒளி பாய்ச்சும் சக்தி இருக்கும் என எதிர்பார்த்தான். ஆனால் அன்று வழக்கத்திற்கு மாறாக அகிலா தயங்கித் தயங்கிப் பேசினாள்.“ஏன் அகிலா தயக்கமா பேசிற?” என்று கேட்டான்.“இல்ல கணேஷ், நேத்து வீட்டில ஒரு பேச்சுவார்த்தை நடந்திச்சி. யாருக்கு ·போன் பண்ணி இப்படி ரகசியமாப் பேசிறன்னு என்னப் பிடிச்சிக்கிட்டாங்க!”“இனிமே ·போன் பேசக் கூடாதுன்னு சொன்னாங்களா?”“சீச்சீ! என் அப்பா அம்மா அப்படிப் பட்டவங்க இல்ல. அப்படியெல்லாம் கட்டுப்பாடு போடல.

 

           ஆனா ஒரு சாதாரண நண்பராக இல்லாம, அதற்கு மேல யாரோட பழகினாலும் எங்ககிட்ட வந்து முதல்ல அறிமுகப் படுத்திட்டு பழகுன்னு அப்பா சொல்லிட்டாரு!”“என் பேர சொல்லிட்டியா?”“சொல்லிட்டேன். ஆனா முழுக்கவும் சொல்லல. அப்பாவோட அந்த அறிவுரைக்குப் பிறகு உங்கள முறையா வீட்டுக்குக் கொண்டாந்து அறிமுகப் படுத்தாம உங்களோட ரொம்ப நேரம் பேசிறது சரியில்லன்னு படுது.

 

       ”கணேசன் கொஞ்ச நேரம் ஒன்றும் பேசத் தோன்றாமல் அமைதியாக இருந்தான்.“என்ன பேசாம இருக்கிங்க கணேஷ்?”“என்ன சொல்றதுன்னு தெரியில. உங்கூட ·போன்ல பேசாம எப்படி இருக்கிறதுன்னு நெனச்சா கவலையா இருக்கு!”“கொஞ்சம் அவங்க வார்த்தைக்கு மதிப்புக் கொடுத்து நடந்துக்குவோம் கணேஷ்! அடுத்த பருவம் தொடங்கினவுடன ஒரு நாள் எங்க வீட்டுக்கு நாம ரெண்டு பேரும் சேந்து வருவோம். எங்க பெற்றோர்களுக்கு உங்கள அறிமுகப் படுத்தி வச்சிர்ரேன்!”“உங்க வீட்டுக்கு வர்ரதுக்கு பயமா இருக்கு அகிலா!”“பயப்படாதீங்க! அப்பா ரொம்ப நல்லவர். பண்பானவர்.

 

       தன்னுடைய எதிரியக் கூட சத்தமா பேசமாட்டார்!”“என்ன ஏத்துக்குவாங்களா உக்க பெற்றோர்!”“நிச்சயமா! உங்கள அவங்களுக்கு நிச்சயமா பிடிக்கும்! இப்பவே அந்த ரேகிங் சம்பவத்தில நீங்க எனக்கு உதவி பண்ணினதக் கேட்டு அப்பாவுக்கு ரொம்ப நல்ல அபிப்பிராயம் உங்க மேல!”“சரி அகிலா!”“வச்சிரட்டுமா?”“சரி அகிலா!”வைக்கவில்லை. தொடர்ந்து டெலி·போனை காதில் வைத்துக் கேட்டவாறிருந்தான்.“அப்புறம் ஏன் வைக்காம இருக்கிங்க?”“நீதானே வச்சிர்ரேன்னு சொன்ன, வச்சிர வேண்டியதுதானே!”“ஊஹ¥ம், நீங்க மொதல்ல!”“முடியாது நீதான்!”கொஞ்ச நேரம் கொஞ்சல் சிணுங்கல்களைக் கேட்டு விட்டு ·போனைக் கீழே வைத்தான்.

 

          அன்றிரவு சாப்பாட்டின் போது மல்லிகா பெரிதாக முறையீடு செய்தாள்: “பாரும்மா இந்த அத்தான் இப்பல்லாம் எங்கிட்ட சரியா பேசவே மாட்டேங்குது. சிரிக்கிறது கூட இல்ல! ஒரு புஸ்தகத்த எடுத்து படிச்சிக்கிட்டே இருக்கு. இல்லன்னா டெலி·போன்ல யார் கிட்டயோ ரொம்ப நேரம் பேசிக்கிட்டே இருக்கு!”“ஏய் மண்டு! நான் யுனிவர்சிட்டியில படிக்கிறேன்னு தெரியுந்தான உனக்கு? படிக்கிறவன் புஸ்தகத்த எடுத்துப் படிக்கிறதில என்ன ஆச்சர்யம் ஒனக்கு?” என்று திட்டினான்.“அதான் உங்க யுனிவர்சிட்டி லீவு விட்டுட்டாங்கள! அப்புறம் ஏன் லீவிலியும் படிக்கிற?”“யுனிவர்சிட்டி லீவு உன் பள்ளிக்கூட லீவு மாதிரியில்ல. லீவிலியும் எங்களுக்கு எவ்வளவோ வேலைகள் இருக்கு.

 

          படிக்கிறதுக்கும் நெறயப் பாடம் இருக்கு!”“·போன்ல மாத்திரம் எப்படி ரொம்ப நேரம் பேசிற?”“அது எல்லாம் பாட சம்பந்தமாத்தான். என் ·பிரன்ட்சுங்க சந்தேகம் கேக்கிறாங்க. நான் சொல்றேன்!” பச்சையாகப் பொய் சொன்னான்.“சரி. பரவால்ல! இன்னைக்கு ஒரு நாளைக்கு என்ன படம் பாக்க கூட்டிக்கிட்டுப்போ. கிள்ளான்ல “எஜமான்” படம் விளையாடுது. ரஜினி படம்!”கணேசனுக்குச் சலிப்பாக இருந்தது. “படமா? தோ பாரு மல்லிகா! நான் படமெல்லாம் பாக்கிற மூட்ல இல்ல! நீ எப்போதும் போற மாதிரி உங்க அம்மாவோட போயிட்டு வா! என்ன விட்டுடு!” என்றான்.“எல்லாருமா போயிட்டு வருவோமேப்பா.

 

        புள்ள ஆசயா கேக்கிதில்ல!” என்று அத்தையும் சிபாரிசுக்கு வந்தாள்.“இல்ல அத்த! நீங்க போயிட்டு வாங்க!” என்றான்.அத்தை அவனைக் கொஞ்சம் சந்தேகக் கண்ணோடு பார்த்தாள். “என்னமோ உங்கப்பா ஊட்ல இருந்து திரும்பினதில இருந்து ஒரு மாதிரியாத்தான் இருக்கே! என்ன நடந்திச்சி அங்க?”அத்தையைப் பார்த்தான். இவளிடம் எந்த அளவுக்கு மனம் விட்டுச் சொல்ல முடியும் என்பது அவனுக்கு நிச்சயமில்லாமல் இருந்தது. ஆனால் சொல்லத்தான் வேண்டும். என் நலனில் அக்கறை உள்ளவள். இந்த விஷயத்தில் சம்பந்தம் உள்ளவள். ஆகவே தயங்கித் தயங்கிச் சொன்னான்.“இல்ல அத்த! அப்பா ரொம்ப குடிக்கிறாரு.

 

      அம்மா ஒண்ணும் தெரியாதவங்களா இருக்காங்க. அப்பாவுக்குச் சொல்லி மாத்திறதுக்கு அவங்களுக்கு முடியில. நான் அதச் சொல்லி கொஞ்சம் திருத்தலான்னு பாத்தா கொஞ்சங்கூட நான் சொல்றது அவங்களுக்கு விளங்க மாட்டேங்குது. நேத்து கொஞ்சம் பேசினதும் அப்பா கோவிச்சிக்கிட்டாரு. ராத்திரி முழுக்க தனியா உக்காந்து என்னையே திட்டிக்கிட்டு இருக்காரு!”“இவ்வளவுதானா?” என்று ‘பூ’ என்று அந்த விஷயத்தை ஊதித் தள்ளினாள் அத்தை. “இது தெரிஞ்ச விசயந்தான கணேசு! அண்ணங் குடிச்சிக் குடிச்சி சீரளிஞ்சாச்சி! மூளையே செத்துப் போச்சி! அதுகிட்ட போய் சொன்னா இதெல்லாம் எடுபடுமா? உங்கம்மா இருக்கே, அதுக்கு ஒரு எளவும் வௌங்காது. நான் ஒருத்தி இருந்து ஆதரிச்சி வர்ரதினால ரெண்டு கௌங்களும் ஒருமாதிரியா இருக்கு. இல்லன்னா அவங்க கதி என்னாவும்? உங்கப்பா சம்பாதிக்கிறது அதோட பாதி குடிக்குக் கூடக் காணாது”கணேசன் மீண்டும் தயங்கினான்.

 

        அத்தையிடம் சொல்ல வேண்டிய விஷயம் இருந்தது. ஆனால் அவள் மனம் புண்படாமல் எப்படிச் சொல்வது என்று தயங்கினான். அத்தை கேட்பாளா? அல்லது அப்பாவைப் போலவே கோவித்துக் கொண்டு விவாதத்தைத் திசை திருப்புவாளா என்று தெரியவில்லை. இருந்தும் மெதுவாகச் சொன்னான்:“அத்த! நீங்களாவது அப்பாவுக்கு இப்படி ஏராளமா தண்ணி வாங்கிக் குடுக்கிறத நிப்பாட்டலாமில்ல! நீங்க குடுக்கிறத நிறுத்தினா அவருக்கு இவ்வளவு குடிக்க வழியில்லியே!”“ஆமாம்மா! நீதான் இப்படி தண்ணி வாங்கி வாங்கிக் குடுத்து அவங்களக் கெடுக்கிற!” என்று மல்லிகாவும் குறுக்கிட்டுப் பேசினாள்.“சீ, நீ சும்மா கெட!” என்று அதட்டினாள் அத்தை. “சாப்பிட்டல்ல, போய் கைய களுவு!” மல்லிகா பயந்து போய் சாப்பாட்டுத் தட்டை தூக்கிக் கொண்டு ஓடிவிட்டாள்.

 

     “என்னா பேசிற கணேசு? என்னா பேசிற?” அத்தையின் சுருதி ஏறிவிட்டது. “நான் குடிக்க வாங்கிக் குடுக்கலன்னா என்னா ஆவும் தெரியுமா? ஒங்கம்மாதான் ஒத பட்டு சாவும். அது சம்மதமா ஒனக்கு? இப்பவே ரெண்டு நாளக்கி ஒரு தடவ அடி ஒததான். உங்கம்மா யாருகிட்டயாவது சொல்லியனுப்பும். உடனே கொஞ்சம் காசு அனுப்பி வச்சி சமாதானப் படுத்துவேன். இல்லன்னா உங்கம்மா என்னைக்கோ செத்துப் போயிருக்கும்!”கணேசன் சாப்பாடு இரங்காமல் தட்டை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அத்தை சொல்வதில் உள்ள கசப்பான உண்மை புரிந்தது. இந்தக் குடும்பத்தைக் கையில் போட்டுக் கொள்ள ஒரு உபாயமாகத்தான் அத்தை அவர்களோடு இத்தனை கரிசனமாக இருக்கிறாள். அப்பாவை மதுப் பித்தராக்கிவிட்டாள். இப்போது அவரால் அதில் இருந்து மீள முடியாது. அத்தை தண்ணி வாங்கி ஊற்றுவதை நிறுத்தி விட்டால் நிலைமை சீரடையப் போவதில்லை. இன்னும் மோசமாகத்தான் போகும்.

 

            அத்தை சுருதி இறங்கி அன்பாகப் பேசினாள்: “கணேசு! இங்க பாரு! உங்க அப்பா அம்மா பத்தின கவல ஒனக்கு எதுக்கு? நான் இவ்வளவு காலம் அவங்களப் பராமரிக்கில? அந்த மாதிரி அதுங்க ரெண்டையும் நான் பாத்துக்கிறேன்! நீ கவலய உடு!”“அதுக்கில்ல அத்த! எத்தனை நாள் அவங்கள உங்க பொறுப்பில விட்டிருக்க முடியும்? அடுத்த வருஷம் எனக்கு படிப்பு முடிஞ்சிடும். அந்த சமயத்தில அம்மாவும் அப்பாவும் ரிட்டையராயிடுவாங்க. ஒரு வேலையில அமர்ந்தப்புறம் நான்தான அவங்கள வச்சி பாக்கணும். அப்ப இந்த மாதிரியே இருந்தாங்கன்னா நல்லா இருக்குமா?” என்றான்.“கணேசு! இதெல்லாம் எனக்குத் தெரியாதின்னு நெனச்சிக்கிட்டு இருக்கியா? இதப் பாரு! இந்த ரெண்டு கௌத்தோடயும் நீ இருந்து குப்பை கொட்ட முடியாது. இது ரெண்டையும் நீ மடியில தூக்கி வச்சிக்கிறதுக்கவா நான் இவ்வளவு கஷ்டப்பட்டு ஒன்னப் படிக்க வச்சிக்கிட்டு இருக்கிறேன்? ஒனக்கு அந்தக் கவலயே வேணாம். நீ பாட்டுக்கு படிச்சி உத்தியோகம் பாக்கிறதப் பாரு. இந்த கௌங்கள நான் கவனிச்சிக்கிறேன்!”“என்ன சொல்றிங்க அத்தை? உங்க வீட்டிலியே கொண்டி வச்சிப் பாத்துக்கப் போறிங்களா?”“சீச்சீ! நம்ப வீட்ல வச்சிக்கிறதா? நாறடிச்சிருவாங்க! என்ன சொல்றன்னா, இவங்க தோட்டத்த உட்டு வெளியேர்னவொண்ண இவங்களக் குடி வைக்கிறதுக்குன்னு இந்தக் கிள்ளான்லியே ஒரு கம்பத்து வீட்ட வாங்கிப் போட்டிருக்கேன். ஒரு சின்ன தோட்டங்கூடப் போட்டுக்கலாம்.

 

         வசதியான வீடுதான். அங்க இருந்திட்டுப் போவட்டும். நாம அடிக்கடி போய் பாத்துக்குவோம்!” என்றாள்.இதை நல்லெண்ணத்தோடு செய்கிறாளா, அல்லது அவர்களை நிரந்தரமாகத் தன் கட்டுப் பாட்டில் வைத்திருப்பதற்காக இப்படி சூழ்ச்சி பண்ணுகிறாளா என்பது அவனுக்கு விளங்கவில்லை.“அத்தை! நீங்க சொல்றது எனக்கு விளங்குது. ஆனா பையன் படிச்சி முன்னேறிட்டவொடனே அப்பா அம்மாவ கவனிக்காம உட்டுட்டான்னு ஊர்ல பேச மாட்டாங்களா?”“கணேசு! ஊர்ப் பேச்சா பெரிசு? ஊர்ல உள்ளவங்களா ஒனக்கு ஒதவி பண்ணுனாங்க? இல்ல உங்க அப்பா அம்மாதான் ஒன்னப் படிக்க வச்சிப் பெரிய ஆளா ஆக்கினாங்களா? யார் பேச்சயும் நீ சட்ட பண்ண வேணாம். நான் ஊர்ப் பேச்சையெல்லாம் கேட்டுக்கிட்டு ஒக்காந்திருந்தேன்னா இப்ப உங்க மாமா விட்டுட்டுப் போன இத்தன சொத்தையும் வச்சி ஆக்கியம் பண்ண முடியுமா? எனக்குத் தெரியாதின்னு நெனச்சிக்கிட்டிருக்கியா? இந்த ஊர்ல ஆளு மதிப்போட இருந்தா முன்னுக்குப் பாக்கிற போது ஈ ஈன்னு இளிப்பாங்க.

 

            முதுகு திரும்பினவொண்ண “இதப் பாரு இந்தப் படிப்பில்லாத முண்டத்துக்கு எத்தன ராங்கி!”ம்பாங்க. இதையெல்லாம் சட்டை பண்ண முடியுமா? நீ ஏன் அதையெல்லாம் நெனைக்கிற? நீ பாட்டுக்கு படிப்ப முடிச்சி உத்தியோகம் பாத்துக்கிட்டு கல்யாணத்தையும் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இரு. உங்க அப்பா அம்மா எம் பொறுப்பு. என் அண்ணனுக்கு அண்ணிக்கு சாகிற வரையில நான் கஞ்சி ஊத்திறேன். அவங்க ஒன்னத் தொந்திரவு பண்ணாம நான் பாத்துக்கிறேன். சரியா? கவலப் படாத! எங்க சிரி பாக்கலாம்?” என்றாள்.கை கழுவி வாய் துடைத்துக் கொண்டு அந்தப் பக்கம் வந்த மல்லிகா அவன் தாடையைப் பிடித்து “ஆமா அத்தான், கொஞ்சம் சிரி!” என்று கொஞ்சினாள்.ஒரு வறண்ட புன்னகையை உதிர்த்தான். அதில் உயிர் இல்லாமல் இருந்தது. மல்லிகாவின் கையை லேசாகத் தள்ளிவிட்டான்.

 

        அத்தை சொல்லும் முடிவு சுமுகமாக இருந்தது. ஆனால் அதில் ஏதோ ஒரு குறை இருப்பது போலும் இருந்தது. முன்பு அவனுடைய பெற்றோர்களின் பொறுப்புக்களையெல்லாம் அத்தை அபகரித்துக் கொண்டாள். இப்போது மகன் என்ற அவனுடைய பொறுப்புக்களையும் அபகரித்துக் கொள்ளப் பார்க்கிறாள்.தனது பெற்றோர்களின் பொறுப்புக்களை அவள் ஏற்றுத் தன்னை வளர்த்து ஆளாக்கியதில் சம்மதம் இருந்தது. ஆனால் தனக்கு வயது வந்து வசதிகளும் வரும் காலத்தில் தனக்குரிய பொறுப்புக்களையும் அவள் ஏற்றுக் கொள்ள முன் வந்திருப்பது வேண்டாததாகத் தோன்றியது. அப்படியானால் தான் என்ன அத்தையின் விளையாட்டுக்களுக்கு ஏற்ப தலையாட்டுகின்ற ஒரு பொம்மையா? அதில் தனக்குப் பெருமை இல்லை எனத் தோன்றியது.அவன் அப்பா நேற்றிரவு வாயிலிருந்து சோறு தெறிக்கப் பேசிய பேச்சு நினைவுக்கு வந்தது:

 

          “நீயும் அவ வூட்டுல ஒக்காந்துதான சாப்பிட்ற? அது ஒனக்கு வெக்கமா இல்லியா? நீ என்னைக்காச்சும் எனக்குக் காசு குடுத்திருக்கியா? ஒன்னால எனக்கு என்ன பிரயோஜனம்? மூணு புள்ளைங்கள பெத்து எனக்கு என்ன பிரயோஜனம்? யாராவது என்னக் கவனிக்கிறிங்களா?”அத்தையிடம் மீண்டும் பேசினான்: “அதுக்கு இல்ல அத்த! நீங்க அவங்க மேல அன்பு காட்றது சரி! ஆனா நாளைக்கு மல்லிகாவுக்குக் கல்யாணம் காட்சின்னு ஒண்ணு நடந்த பிறகு அதும் அது புருஷனும் எதுக்கு இந்தக் கௌங்கள கட்டிக்கிட்டு மாரடிக்கிறிங்கன்னு கேட்டா என்ன செய்விங்க?”அத்தை அதிர்ச்சியடைந்து அவனைப் பார்த்தாள்.

 

         மல்லிகாவும் ஒன்றும் புரியாமல் குழம்பி அவனைப் பார்த்தாள். கொஞ்ச நேரம் அங்கு குழப்பமான மௌனம் நிலவியது. அப்புறம் அத்தை திடீரென்று வெடித்துச் சிரித்தாள். எதற்குச் சிரிக்கிறாள் என கணேசனுக்குப் புரியவில்லை.“என்ன அத்த! இது சிரிக்கிற விஷயமா?” என்று கேட்டான்.“ஆமா! சிரிக்காம பின்ன என்ன பண்றது? கணேசு, ஒன் மனசில இருக்கிறது இப்பதான் எனக்குப் புரியிது! ஏன் புள்ள இப்படி பயந்து பயந்து தயங்கித் தயங்கிப் பேசுதுன்னு மனசுக்குள்ள நெனச்சிக்கிட்டே இருந்தேன். இப்பதான் புரியிது!”“என்ன புரியிது அத்த?”“அதாவது, எங்கடா இந்த மல்லிகாவ எனக்குக் குடுக்காம வேற ஆளுங்களுக்கு அத்த கட்டி வச்சிறப் போறாளோங்கிற பயம் ஒனக்கு வந்திருக்கில்ல கணேசு? அப்படி ஆயிட்டா இந்த கௌட்டு அப்பாவையும் அம்மாவையும் யார் வச்சி பாக்கப் போறாங்க அப்படிங்கிற கவல வந்திருக்கில்ல கணேசு? அப்படித்தான? சொல்லு!”குழம்பியிருந்தான்.

 

      அத்தை வேறு மாதிரி அர்த்தம் பண்ணிக் கொண்டாள். இதற்கு ஆமாம் என்று சொல்வதா இல்லையென்று சொல்வதா என்று யோசித்துச் சொன்னான்: “அத்த! மல்லிகாவுக்கு என்ன விட ஒசந்ததா எத்தனையோ மாப்பிள்ளங்க கெடைப்பாங்கதான். நீங்க விருப்பம் போல கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியதுதான!”“கணேசு! ஒனக்கு அந்த பயமே வேணாம். உங்கிட்ட சொத்து இல்ல, சொகம் இல்லன்னு எனக்குத் தெரியும். உன் அப்பா அம்மா முன்ன நின்னு ஒனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிற நெலமையில இல்லன்னும் எனக்குத் தெரியும். அவங்க எனக்கு சமமான அந்தஸ்து உள்ள ஜனங்க இல்லன்னும் தெரியும். ஆனா ரத்த சொந்தம் விட்டுப் போகுமா? நான் விட்ருவேனா? எத்தன ஒசந்த மாப்பிள்ளங்க இருந்தா என்னா? அதெல்லாம் எனக்குக் கால் தூசு. மல்லிகா ஒனக்குத்தான்னு அவ பொறந்தப்பவே போட்டு வச்ச கணக்கு. அத யாரு மாத்திறது?”கணேசன் அயர்ந்து போயிருந்தான்.

 

    மல்லிகா தனக்கு ஒத்த பெண் அல்ல என்று சொல்ல வாய் வரவில்லை. படிப்பிலும் அறிவிலும் முதிர்ச்சியிலும் அவள் இணையானவள் அல்ல. அழகில் கூட இணையானவள் இல்லை. உட்கார்ந்தே சாப்பிட்டு ஊளைச் சதை வைத்துப் போயிருக்கிறாள். அளவாகச் சாப்பாட்டு பயிற்சி பண்ணி உடம்பை இரும்பாக வைத்திருக்கும் அவனுக்குப் பக்கத்தில் அவள் புளி மூட்டை போல இருந்தாள். உணர்வில் அனுதாபமும் பாசமும் காட்டப்பட வேண்டிய ஒரு வெகுளித் தங்கையாக மண்டுத் தங்கையாக மனதில் நின்றாள். அண்மையில் அகிலா வந்து எல்லாவற்றுக்கும் அவனுக்கு இணையாக மனதுக்குள் உட்கார்ந்தவுடன் தனக்கு வாழ்க்கைத் துணையாக இன்னொருத்தியை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.ஆனால் அத்தை மல்லிகாவை எங்கோ தூக்கி வைத்திருக்கிறாள். மல்லிகாவின் தகுதிக்குத் தன் தகுதி குறைவாக இருப்பதாக நினைக்கிறாள். அப்படித் தகுதி குறைந்திருந்தும் உன்னை ரத்த சொந்தத்தால் மாப்பிள்ளையாக்கிக் கொள்ளத் தயாராக இருக்கிறேன் என்று சலுகை காட்டிப் பேசுகிறாள்.

 

      அத்தைக்கு என்ன பதில் சொல்ல முடியும்?இதை வேறு வகையில் அத்தைக்கு விளக்க வேண்டும் என எண்ணினான். தன் மனதில் என்ன இருக்கிறது என்பதை எப்படியாவது அவளுக்கு உணர்த்தி அவள் மனதை மாற்றி விட வேண்டும். இதை உரிய நேரத்தில் செய்யாவிட்டால் இது முற்றிப் போகும். காலம் கடந்து விடும்.“அத்தை! பொறக்கும் போது கணக்குப் போட்டு வைக்கிறதுங்கிறதெல்லாம் அந்தக் காலத்தில. இந்தக் காலத்தில பிள்ளைங்களோட மனசப் பொறுத்துத்தான ஜோடி அமையும்? ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் விரும்பிறது, மனசு ஒத்துப் போறது முக்கியம் இல்லியா? அதக் கேட்டுத் தெரிஞ்சிக்க வேணாமா? பெரியவங்க மட்டும் முடிவு பண்ணிட்டா போதுமா?” என்றான்.அத்தை அவனை குழப்பமாக வெறித்துப் பார்த்தாள். அப்புறம் மீண்டும் வெடித்துச் சிரித்தாள்.“என்ன அத்த, நான் சீரியசாப் பேசிக்கிட்டிருக்கேன் நீங்க சிரிக்கிறிங்கள!”“சிரிப்புத்தான் வருது கணேசு ஒம் பேச்சக் கேட்டா! அதாவது, எங்கடா இந்த மல்லிகா வேற யாரையாவது மனசில வச்சிக்கிட்டு இருக்காளோன்னுதான கேக்கிற? ரெண்டு வருஷம் இப்பிடிப் பிரிஞ்சி போயி பினாங்கில இருந்திட்டமே, இவ வேற ஆளத் தேடிக்கிட்டாளான்னு ஒனக்கு கவலை வந்திரிச்சி, அப்பிடித்தான? ஏன் கணேசு? எம்பிள்ளய எனக்குத் தெரியாது? நான் அப்படியா பிள்ளய வளத்திருப்பேன்?”மீண்டும் அத்தை தப்பாகப் புரிந்து கொண்டாள் என்று தெரிந்தது.

 

      மீண்டும் விஷயத்தைத் தலைகீழ் ஆக்கிவிட்டாள். அவளுக்கு விளக்கியாக வேண்டும். “அது இல்ல அத்த…” என்று ஆரம்பித்தவனை வெட்டி நிறுத்தின்னாள் அத்தை. “மல்லிகா! இங்க வாம்மா! நீயே மனசு தொறந்து உங்க அத்தான்கிட்ட சொல்லிடு! உங்க அத்தான் ஒரு வேள உனக்கு வேற ஆள் மேல விருப்பமான்னு கேக்குது! உங்க அத்தான கல்யாணம் பண்ணிக்க ஒனக்கு மனப்பூர்வமா சம்மதமா இல்லையான்னு சொல்லிடு!”மல்லிகா ஏதோ சொல்ல வாய் திறந்தாள். அத்தை திடீர் என தடுத்தாள். “இரு, இரு! நான் உள்ள போயிட்றேன்! நான் இங்க இருந்தா எனக்குப் பயந்துகிட்டுதான் நீ சொல்றேன்னு உங்க அத்தான் நெனைக்கும்!”அத்தை விருட்டென்று எழுந்து கை கழுவி விட்டு அறையை நோக்கிப் போனாள். “இப்ப பேசுங்க ரெண்டு பேரும்” என்று கதவைச் சாத்திக் கொண்டாள்.கணேசன் மல்லிகாவைப் பரிதாபமாகப் பார்த்தான். அவள் முகத்தில் குபீரென்று வெட்கம் ஏறியிருந்தது. “மல்லிகா! உங்கம்மா தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க! நான் சொல்ல வந்து என்னன்னா…”திடீரென்று வந்து அவன் கையைப் பற்றிக் கொண்டாள். தன் நெஞ்சின் மேல் அதை வைத்து அழுத்திக் கொண்டாள். அவளுடைய மெல்லிய வழவழப்பான மேல்சட்டையின் ஊடே அவள் இள மார்புகளுக்கிடையே அவள் இதயம் படபடவென்று துடித்துக் கொண்டிருந்து அவன் விரல்கள் மூலம் ஊடுருவியது.கண்களில் நீர் பனிக்க மல்லிகா பேசினாள்: “மாமா! உங்களுக்கு ஏன் இப்படி ஒரு சந்தேகம் வந்திச்சி? சந்தேகம் வர்ர மாதிரி நான் நடந்திக்கிட்டேனா? இப்ப சொல்றேன்! சாமி சாட்சியா, எங்கம்மா சாச்சியா நான் ஒங்களத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன். அப்படி ஒரு வேள நீங்க எனக்கு புருஷனா கிடைக்காமப் போனா நான் தற்கொலை பண்ணிக்கிட்டு செத்தே போயிடுவேன் மாமா! இது சத்தியம், இது சத்தியம்!

 

        “காதல் என்பது இத்தனை சிக்கலானதாக இருக்கும் என நான் நினைக்கவே இல்லை” என்றான் கணேசன். ஜெசிக்கா வாய்விட்டு சிரித்தாள். அவள் வாயில் பாதி கடியுண்ட மெக்டோனால்ட்ஸ் ஹேம்பர்கரிலிருந்து தக்காளிச் சட்டினி சிதறித் தட்டில் விழுந்தது.“காதல் என்பது மிகவும் சுலபமானது என நினைத்துக் கொண்டாயா? இந்த ஹேம்பர்கர் போல நினைத்தவுடன் வாங்கி சிரமமில்லாமல் சாப்பிட்டு நிம்மதியாக ஏப்பம் விடலாம் என நினைத்தாயா? சலித்துவிட்டது என்று தோன்றும்போது தூக்கி அதோ இருக்கிற குப்பைத் தொட்டியில் வீசி விட்டுப் போய்விடலாம் என நினைத்தாயா?” என்று அவனைக் கேட்டாள்.வளாகத்துக்குத் திரும்பி வந்ததிலிருந்து கணேசனுக்கு முதுகை முறிக்கின்ற வேலைகள் இருந்தன. அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐசெக் ஆசியப் பிரதேச மாநாட்டிற்கான வேலைகள் குவிந்து கிடந்தன. ஐசெக் சங்கத் தலைவரும் பெரும்பாலான செயற்குழு உறுப்பினர்களும் விடுமுறையைப் பாதியில் முடித்துக் கொண்டு இந்த வேலைகளைக் கவனிக்க வெள்ளனத் திரும்பியிருந்தார்கள். ஜெசிக்காவும் திரும்பியிருந்தாள்.திறப்பு விழாவுக்குக் கல்வி அமைச்சரை அழைப்பதிலிருந்து பேராளர்களுக்கு இருப்பிடம், உணவு முதலிய வசதிகளை ஏற்பாடு செய்யும் பொறுப்புக்களை எல்லாரும் சேர்ந்தே செய்தார்கள். ஏராளமான கடிதங்கள் எழுத வேண்டியிருந்தது. ஏராளமான தொலைபேசி அழைப்புக்கள் செய்ய வேண்டியிருந்தது.

 

        பல்கலைக் கழக மாணவர் விவகாரப் பிரிவு அதிகாரிகளை அடிக்கடி சந்தித்துப் பேச வேண்டியிருந்தது. ஏராளமான அரசாங்க அலுவலகங்களிலிருந்து ஏராளமான அனுமதிகள் பெற அலைய வேண்டியிருந்தது.ஜெசிக்காவும் கணேசனும் அணுக்கமாக இருந்து பணியாற்ற வேண்டியிருந்தது. ஜெசிக்கா முற்றாக மாறிப் போயிருந்தாள். கணேசன் மீது அவளுக்கு இன்னும் அன்பு இருந்தது. ஆனால் முன்பு இருந்த பிரேமை இல்லை. ஒரு சக நண்பன் என்பதைத் தவிர்த்த எந்த உணர்ச்சியையும் அவள் காட்டவில்லை.அவளுடைய புதிய காதலன் சுதாகரன் ஒரு சிறிய கார் வைத்திருந்தான். அவனுக்கு ஐசெக்கில் எந்த வேலையும் இல்லை என்றாலும் ஜெசிக்காவின் அருகில் இருப்பதற்காக அவனும் வளாகத்திற்கு விடுமுறை முடிவதற்கு முன்னரே திரும்பியிருந்தான். அவனிடம் நிறையப் பணமிருந்தது. ஒவ்வொரு இரவிலும் புதிது புதிதாக உடுத்திக் கொண்டு ஜெசிக்கா அவனோடு இரவு விடுதிகளுக்குப் போய் மறுநாள் காலையில் தூக்கம் மிகுந்த கண்களுடன் வந்து கொட்டாவி விட்டபடியே இருந்தாள்.

 

       மத்தியான வேளைகளில் கணேசனும் அவளும் வேலையிலிருந்து ஓய்வெடுத்துக் கொண்டு அடிக்கடி சாப்பிடப் போனார்கள். தன் காதல் வாழ்க்கையைப் பற்றி அவள் கூச்சமில்லாமல் பேசினாள். அவள் பேசக் கேட்டுக் கேட்டு கணேசனுக்கும் கூச்சம் விட்டுப் போயிற்று. கொஞ்சம் கொஞ்சமாக அவளிடம் தன் அந்தரங்கங்களை அவன் சொல்ல ஆரம்பித்திருந்தான். அன்று மத்தியான வேளையில் ‘மெக்டோனால்ட்ஸ் போய் ஹேம்பர்கர் சாப்பிட்டு வரலாம் வா’ என்று அவள் அவனை இழுத்துக் கொண்டு போயிருந்த வேளையில் மல்லிகாவைப் பற்றி அவளிடம் சொல்ல வேண்டியதாயிற்று. “நீயில்லாவிட்டால் நான் செத்து விடுவேன்” என்று அவள் சொன்னதை ஜெசிக்காவிடம் சொன்னான். அவளை எப்படி சமாதானப் படுத்தி மாற்றுவது தனக்குத் தெரியவில்லை என்றான்.அப்போதுதான் ஜெசிக்கா வாயிலிருந்து தக்காளி சாஸ் ஒழுகச் சிரித்தாள். “நானும் அப்படிச் சொல்லியிருந்தால் ஒரு வேளை உன்னைத் தக்க வைத்துக் கொண்டிருக்கலாம், இல்லையா கணேசன்?” என்று கேட்டாள்.

 

       “அந்த அதிர்ஷ்டம் எனக்கு இல்லாமல் போனதே!” என்று சிரித்தவாறு வேடிக்கையாகச் சொன்னான்.“ஆனால் அதிர்ஷ்டம் எனக்குத்தான். எனக்கு ஒரு அருமையான காதலன் கிடைத்திருக்கிறான் பார். உன்னை விடப் பணக்காரன், புத்திசாலி. இவனை விட்டு உன்னை எப்படிச் சுற்றிக் கொண்டிருந்தேனோ தெரியவில்லை!” என்றாள்.கணேசனுக்கு அவள் உண்மையாகச் சொல்லுகிறாளா விளையாடுகிறாளா என்பது தெரியவில்லை. “அவனுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம் நான் அவனை விட மென்மையானவன் என்பதாய்த்தான் இருக்க வேண்டும். நான் அவனை விட நல்ல உணர்ச்சி மிக்க காதலனாக இருந்திருப்பேன். அந்த வாய்ப்புத்தான் விட்டுப் போய்விட்டது!” என்றான்.ஜெசிக்கா அலட்சியமாகச் சிரித்தாள். “சுதா போல தீவிரமான காதலன்தான் எனக்குப் பொருத்தம். யாருக்கு வேண்டும் மென்மை? இப்போது பார், உனது மென்மையால் எந்தக் காதலியை ஏற்றுக் கொள்வது என்று தெரியாமல் தவிக்கிறாய்! உறுதியான முடிவுகள் எதையும் உன்னால் செய்ய முடியவில்லை!” என்று அவனைப் பழித்தாள்.“அப்படி இல்லை ஜெசிக்கா! என் மனதில் எந்த சந்தேகமும் இல்லை! அகிலாதான் என் காதலி.

 

        மல்லிகாவை ஒரு விளையாட்டுத் தோழியாகத்தான் இதுவரை கருதி வந்தேன். அவள் இத்தனை ஆசைகளைத் தானே உருவாக்கி வைத்திருப்பாள் என்று எதிர் பார்க்கவில்லை. அவள் இத்தனை உறுதியாக இருப்பாள் என்றும் நினைக்கவில்லை!”“அப்படியானால் ‘எனக்கு வேறு காதலி இருக்கிறாள். என்னை விட்டுத் தொலை’ என்று நேராகச் சொல்வதற்கென்ன? என்னிடம் நீ அப்படிச் சொல்லவில்லையா?”“உன்னிடமும் அத்தனை கொடூரமாகச் சொல்லவில்லையே ஜெசிக்கா. நான் மென்மையானவன் என்று அப்போதே சொன்னேன் இல்லையா? உன்னிடம் மெதுவாகத்தானே எடுத்துச் சொன்னேன்!”“அப்படியே அவளிடமும் சொல். தற்கொலை செய்து கொள்வேன் என்பதெல்லாம் ஒரு பயமுறுத்தல். ஒரு உத்தி. அவ்வளவுதான். எந்தப் பெண்ணும் அவ்வளவு எளிதில் உயிரை விட்டுவிட மாட்டாள்!”ஜெசிக்காவின் பேச்சு அவனுக்கு ஆறுதலாக இருந்தது. ஆமாம். அப்படித்தான் இருக்க வேண்டும். கல்யாணத்துக்காகச் சத்தியம் பண்ணுவதையும் தற்கொலைசெய்து கொள்வதையும் இந்த மல்லிகா ஏராளமான மூன்றாந்தரத் தமிழ்ப் படங்களைப் பார்த்துக் கற்றுக் கொண்டிருக்கிறாள். ஆகவேதான் இந்த வசனங்கள் பேசுகிறாள். உண்மை வாழ்க்கை என்று வரும்போது புரிந்து கொள்வாள்.

 

       அவளிடம் முறையாக எடுத்துச் சொல்ல வேண்டும்.யோசித்தவாறு ஹேம்பர்கரைக் கடித்துக் கொண்டிருந்த போது அகிலா அடுத்த வாரம் திரும்பி விடுவாள் என்ற நினைப்பு வந்தது.வளாகம் கணேசனுக்கு வெறிச்சென்றிருந்தது. ஆனால் விடுமுறையாக இருந்தாலும் வளாகத்தில் மாணவர்கள் நடமாட்டம் இல்லாமல் இல்லை. வளாகத்துக்கு வெளியே இருந்து தொலைக்கல்வி மூலம் படிக்கும் ஓ·ப் கேம்பஸ் மாணவர்கள் நிறைய இருந்தார்கள். விடுமுறையில் மட்டுமே இவர்கள் சில வாரங்கள் வளாகத்துக்கு வந்து விரிவுரையாளர்கள் மூலமாக சில விரிவுரைகள் கேட்டு சந்தேகங்களும் கேட்டுத் தெளிவு பெறுவார்கள்.அனைவரும் வேலை செய்கின்ற முதிர்ந்த மாணவர்கள். குடும்பம் உள்ளவர்கள். பள்ளிக்கூட நாட்களில் வறுமையாலும் வேறு காரணங்களாலும் உயர்கல்வி பெறும் வாய்ப்புக்களைத் தவற விட்டவர்கள். இப்போது அவர்கள் முகங்களில் உயர்கல்வி பெறுகின்ற தாகம் இருந்தது. நூலகங்களிலும் புத்தகக் கடைகளிலும் அவர்கள் கூட்டமே அதிகமாக இருந்தது.குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு முழு நேர வேலையும் பார்த்துக் கொண்டு இவர்கள் படிப்பதற்குப் படும் கஷ்டம் கணேசனுக்குப் பரிதாபமாக இருந்தது. விரைவாக முன்னேறி வரும் மலேசியாவில் ஒரு பட்டம் இல்லாவிட்டால் தங்கள் முன்னேற்றம் முடங்கி விடும் என்பதை அவர்கள் கொஞ்சம் தாமதமாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

 

       தங்களைச் சுற்றியுள்ள மற்றவர்கள் முன்னேறுவதைக் காணக் காண தாங்களும் அந்தப் போட்டியில் ஈடுபட வேண்டும் என்னும் மனநெருக்குதல் அவர்களுக்கு அதிகமாகிவிடுகிறது. ஆகவேதான் தற்காலிகமாகத் தங்கள் சுகங்களைத் துறந்து பட்டக் கல்வி பெற வந்திருக்கிறார்கள். சிலருக்கு ஏழு எட்டு வருடங்கள் நீடிக்கும் நீண்ட பயணமாக அது அமைந்து விடுகிறது.அந்த வகையில் தான் எவ்வளவு அதிர்ஷ்டசாலி என்பதை எண்ண கணேசனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. படிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்தன. படிப்பை கிரகித்துக் கொள்ள மூளையில் போதுமான அறிவு இருந்தது. முன்னேற வேண்டும் என்ற உந்துதல் மனதில் இருந்தது. பல்கலைக் கழகத்தில் எளிதாக இடம் கிடைத்தது. எல்லாவற்றுக்கும் மேலாக தனக்குக் காவல் தேவதையாக ஒரு அத்தை வந்து சேர்ந்தாள்.கிள்ளானை விட்டுப் புறப்பட்ட போது அத்தை அவனை மிக விசேஷமாகக் கவனித்துக் கொண்டாள்.

 

        அவனுக்கு மருமகன் ஸ்தானம் உறுதிப் படுத்தப் பட்டுவிட்டதைப் போலவே நடந்து கொண்டாள். ஒவ்வொரு பருவ விடுமுறை முடியும் போதும் அவன் கையில் அவனுடைய கல்விக் கட்டணம் சாப்பாடு அனைத்துக்குமாக இரண்டாயிரம் வெள்ளி கொடுத்ததனுப்புவது வழக்கம். இந்த முறை 500 வெள்ளி அதிகமாகக் கொடுத்தனுப்பினாள்.“நல்ல பொருளா வாங்கிச் சாப்பிடு, கணேசு! உடம்ப நல்லா பாத்துக்க! எதப் பத்தியும் கவலப் படாத! அத்தை இருக்கேன்ல! எல்லாத்தையும் கவனிச்சுக்குவேன்!” என்று சொல்லி பஸ் நிலையம் வரை வந்து வழியனுப்பினாள்.“போய் மறக்காம ·போன் பண்ணு மாமா!” என்று கொஞ்சி விடை கொடுத்தாள் மல்லிகா. ஏனோ அவளோடு அவனால் முன்பு போல சரளமாகப் பேச முடியவில்லை. “மாமா! தீவாளி வருது. மறந்திராம வந்திரு!” என்று நினைவூட்டினாள்.“ஆமா கணேசு! ரெண்டு நாளைக்கு மிந்தியே வந்திரு. நீ ஒண்ணும் புது உடுப்பு வாங்க வேணாம்.

 

       எல்லாம் நான் எடுத்து வைக்கிறேன். உன் சைசெல்லாம் எங்கிட்ட இருக்கு. இங்க கிள்ளான்ல சௌரியமா வாங்கலாம்!” என்று அத்தையும் உற்சாகமாகச் சொன்னாள்.“சரி அத்தை!” என்று பஸ் ஏறினான்.எவ்வளவு மாணவர்கள் இருந்தாலும் திரும்பி வந்ததிலிருந்து கணேசனுக்கு வளாகம் வெறுமையானதாகத்தான் இருந்தது. அகிலா அங்கே இல்லை என்பதே முக்கிய காரணம். அகிலா அவன் வாழ்க்கைக்குள் வந்ததிலிருந்து அவன் மனசுக்குள் புதிய புதிய உணர்ச்சிகள் வந்திருந்தன. அழகுணர்ச்சி அதிகமாக இருந்தது. அவள் பக்கத்தில் இருந்த வரை வளாகத்தின் அழகிய மரங்களிலும் செடிகளிலும், வளாகத்தின் எல்லையிலிருந்த குன்றுகளிலும் எதிர்ப்புறத்திலிருந்த கடலிலும் காதல் பூச்சுப் பூசியிருந்தது. தொட்ட இடத்திலிருந்தெல்லாம் காதல் வாசனை வந்தது. அவள் இல்லாத இந்த வேளைகளில் இந்த அழகெல்லாம் வீணாகப் போவது போலத் தோன்றியது. இத்தனை பரபரப்பான வேலைகளுக்கிடையிலும் அவன் மனதைத் தனிமை பிழிந்து கொண்டிருந்தது.அவன் மனதைப் பிழிய உண்மையில் பல விஷயங்கள் இருந்தன. கிள்ளான் போய் பெற்றோர்களைப் பார்த்து அத்தையையும் பார்த்து வந்ததிலிருந்து அவன் மனதில் ஒருவித புகை கவ்வியிருந்தது. அவனுடைய வாழ்க்கையில் புதிய குழப்பமான திருப்பங்கள் உருவாகியிருக்கின்றன என்று தோன்றியது. எதிர்காலத் திசை தெளிவாகத் தெரியவில்லை.

 

        மல்லிகா எப்போது இந்தத் திருமண விஷயத்தை இவ்வளவு நிச்சயமாக மனதில் கொண்டாள் என்று அவனுக்குப் புரியவில்லை. அவள் மூக்கில் சளி ஒழுக உருளைச் சக்கரம் வைத்து ஓட்டிக் கொண்டிருந்த நாள் முதல் அவளை அவனுக்குத் தெரியும். அவன் அவளோடு ஆயிரம் தடவை சண்டை போட்டிருக்கிறான். நூற்றுக் கணக்கான தடவை தலையில் கொட்டி அழ வைத்திருக்கிறான். அவளும் கையில் கிடைத்ததைத் தூக்கி அடித்து அவனை விரட்டியிருக்கிறாள்.அத்தை உத்தரவிடும் நேரத்திலெல்லாம் அவளுக்குப் பாவாடை கட்டி சட்டை போட்டு விட்டிருக்கிறான். முகத்திற்குப் பௌடர் பூசி விட்டிருக்கிறான். அவளுக்காகப் பரிந்து மற்ற பிள்ளைகளிடம் சண்டை போட்டிருக்கிறான். அவளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து அதைச் சரியாகச் செய்யாத போதெல்லாம் அவளுக்குத் தண்டனை கொடுத்து வாத்தியாராக இருந்திருக்கிறான்.அவள் மேல் பாசம் உண்டு. அன்பு உண்டு. ஆனால் காதல்? அது எந்த நாளும் வந்ததில்லை. அவள் புஷ்பித்து அவள் அங்கங்களில் செழிப்பு பூசி அவள் முகத்தில் புதிய வெட்கம் வந்த போது கூட அவையெல்லாம் தனக்கு என அவன் நினைத்ததில்லை.

 

        அவள் அணுக்கம் அவனுக்கு எந்த நாளும் மோகம் ஊட்டியதில்லை.வீட்டில் அத்தையும் மற்றவர்களும் அவர்களுக்கு முறை வைத்துப் பேசும் போதும் “கட்டிக்கிறியா? கட்டிக்கிறியா?” என்று கேட்ட போதும் அதை ஒரு பெரும் விளையாட்டு என்றுதான் நினைத்திருக்கிறான்.மல்லிகாவுக்கும் அவனைப் பற்றி அதே நினைப்புத்தான் இருக்கும் என்பதைத் தவிர வேறு மாதிரி அவனால் நினைக்க முடியவில்லை. அத்தை பேசும் இந்தத் திருமண விளையாட்டுப் பேச்சுக்களை மல்லிகாவும் விளையாட்டு என்று புறக்கணித்திருப்பாள் என்றுதான் நம்பினான். ஆனால் அது சரியில்லை என்று இப்போது விளங்கிவிட்டது.மல்லிகாவும் தானும் கணவன் மனைவியாகவா? முடியவே முடியாது என அவன் மனம் சொல்லியது. அத்தை இதற்காகத் திட்டம் போட்டிருக்கலாம். எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது அப்படித்தான் தெரிகிறது. பல வருடங்களுக்கு முன்பிருந்தே இப்படி ஒரு திட்டத்தை மனதில் வைத்துக் கொண்டு தன் பெற்றோர்களை வளைத்துத் தன் கைக்குள் போட்டுக் கொண்டிருந்திருக்கலாம். அவர்கள் மேல் அத்தைக்கு இத்தனை அக்கறை பொங்கி வழிவதற்கு இதுதான் காரணம் என விளங்கியது.ஆனால் தன்னோடு தோழியாகவும் தங்கையாகவும் பழகிய மல்லிகாவுக்கும் இந்த கல்யாண நோக்கம் இருக்கும் என்பது அவனுக்கு வேடிக்கையாக இருந்தது. அத்தை இதை ஆழமாக விதைத்திருக்கிறாள். மல்லிகாவுக்கு வேறு வெளி உலகத்தைக் காட்டவில்லை. வேறு ஆண்களோடு சரளமாகப் பழகி தனக்கு வேண்டியவனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள அவளுக்கு ஒரு வாய்ப்புக் கொடுக்கவில்லை.அத்தையின் உலகமும் மிகக் குறுகியதுதான்.

 

        தானாகக் குறுக்கிக் கொண்டாள். அவளுக்கு ஆடம்பரமாக வாழத் தக்கப் பணம் இருந்தது. ஆனால் அந்த மாதிரி வாழுகின்ற மற்றவர்களுடன் சமமாகப் பழகப் போதிய அனுபவமோ வளர்ப்போ குடும்பப் பின்னணியோ இல்லை. தன் செல்வத்தைப் பயன் படுத்தித் தனக்குத் தாளம் போடுபவர்களும் தலையாட்டுபவர்களுமாக இரண்டு மூன்று கொடுக்கல் – வாங்கல் ஆட்களை மட்டும் வெளி உலகத் தொடர்புக்கு வைத்துக் கொண்டாள்.குடும்பம், உறவு என்று சொல்வதற்குத் தன் பெற்றோர்களை வைத்துக் கொண்டாள். அவர்கள் அவள் கையில் வாங்கிச் சாப்பிட்டு அவளால் வாழுகிறார்கள். அவள் சொன்னதற்கு மறுப்பிருக்காது. அவர்கள் மேல் ஆதிக்கம் செலுத்துகின்ற ஆனந்தம் அத்தைக்கு இருந்தது.அதோடு கணேசன் என்ற அவளுக்கு வேண்டிய முக்கியமான பொருளும் அங்கிருந்தது. கணேசனை மருமகனாக வளைத்துப் போட்டு விட்டால் அத்தையின் எதிர்காலம் பற்றிய பிரச்சினையும் வாரிசுப் பிரச்சினையும் தீரும். அந்நியர்களோடு போய் அவள் சம்பந்தம் வைத்துக் கொள்ள வேண்டியதில்லை. அவர்களோடு சமமாகப் பழக வேண்டிய நாகரிகம் தனக்கு இல்லையே என்ற தாழ்வு மனப்பான்மையில் உழலத் தேவையில்லை. கணேசனையும் கணேசனின் பெற்றோர்களையும் அவள் முழுதாக ஆதிக்கம் செலுத்த முடியும்.

 

         சாகும் வரை இந்தக் குடும்பத்தின் தலைவியாகவும் அதிகாரியாகவும் இருந்து சாக முடியும்.அத்தை போட்டிருக்கிற இந்த “மாஸ்டர் பிளேனுக்கு” தான் ஒரு வெறும் கருவிதான் என கணேசனுக்குப் புரிந்தது. அது புரிந்ததும் அத்தையின் மேல் அவனுக்கு இத்தனை நாள் இல்லாத பெரும் வெறுப்பும் வந்தது.இந்த அத்தை தன்னை இத்தனை நாள் இப்படிப் பயன்படுத்திக் கொண்டது போகட்டும். இனியும் அதற்குத் தான் தலையாட்டிக் கொண்டிருக்க முடியாது என எண்ணினான். அத்தையின் இந்த ஆதிக்கத்திலிருந்து விலக வேண்டும். படிப்புச் செலவுக்கு இப்போதைக்கு அவளைத்தான் நம்பிக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. ஆனால் அது பெரிய விஷயம் அல்ல. இன்னும் ஒரு வருஷம்தான் இருக்கிறது. படிப்புக்குக் கடன் வாங்கலாம். பகுதி நேர வேலை பார்த்துச் சம்பாதிக்கலாம். எத்தனையோ மாணவர்கள் அப்படித்தான் படிக்கிறார்கள்.தன் பெற்றோர்களையும் அவளுடைய ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க வேண்டும். அதில் பல சிரமங்கள் இருக்கின்றன.

 

          அப்பாவிடமும் அம்மாவிடமும் கடுமையாகப் பேசி அப்பாவுடைய குடிப் பழக்கத்தை மாற்ற வேண்டும். படிப்பு முடிந்ததும் அவர்களை அடிமை வாழ்க்கையில் கட்டிப் போட்டிருக்கின்ற அந்தத் தோட்ட வாழ்க்கையிலிருந்து வெளியேற்றிப் பட்டணப் புறத்தில் தன்னோடு வைத்துக் கொள்ள வேண்டும்.ஆனால் மல்லிகா? அவளை அவன் புண் படுத்த விரும்பவில்லை. பச்சைப் பிள்ளை. ஒருவேளை நன்றாக எடுத்துச் சொன்னால் கேட்டுக் கொள்வாள். உலகம் பெரியது. அவளுக்கேற்ற எத்தனையோ மாப்பிள்ளைகள் கிடைப்பார்கள். “நானே உனக்கு என்ன விட அழகான, அன்பான, எடுத்ததுக்கெல்லாம் ஒன் தலையில கொட்டாத மாப்பிள்ளையா பாத்து கட்டி வைக்கிறேன் மல்லிகா” என்று சொல்லி அவள் மனதை மாற்ற வேண்டும். அவள் வெகுளி. கண் முன் கண்டதைப் பிடித்துக் கொண்டிருக்கிறாள். அவள் காணாதவை, அவள் தாய் அவளுக்குக் காணாமல் ஒளித்தவை, ஆயிரம் இருக்கின்றன என அவளுக்குக் காட்ட வேண்டும். இந்த வருடம் தீபாவளிக்கு கிள்ளான் திரும்பும் போது கொண்டாட்டப் பரபரப்புக்கள் ஓய்ந்த பின் அத்தையிடம் உட்கார்ந்து விரிவாகப் பேசவேண்டும்.

 

          முடிந்த வரை அவள் கோபித்துக் கொள்ளாமல் இதமாக… இயலாவிட்டால் உறுதியாக, தேவையானால் முரட்டுத் தனமாக.“அவ்வளவு திமிர் வந்திருச்சா ஒனக்கு! இனிமே ஒரு சல்லிக் காசு ஒனக்கோ ஒங்குடும்பத்துக்கொ குடுக்க மேட்டேன்!” என்பாள்.“உங்க பணத்த நீங்களே வச்சிக்கிங்க! நான் கடன் வாங்கி படிச்சிக்கிறேன். வேல செய்ய ஆரம்பிச்சதும் உங்க கடன தூக்கி எறிஞ்சிட்றேன்!” என்று சொல்ல வேண்டும்.எல்லாவற்றுக்கும் அகிலாவின் துணை வேண்டும். தன் பெற்றறோர்களைத் திருத்த, அவர்களைப் பராமரிக்க, அத்தையோடு பேசி வெல்ல, மல்லிகாவுக்கு வெளி உலகத்தைக் காட்ட, எல்லாவற்றிற்கும் தனக்கு பக்க பலமாக நிற்க அகிலா அவனுக்கு வேண்டும்.இன்னும் இரண்டொரு நாட்களில் அகிலா திரும்பி விடுவாள். அவளோடு உட்கார்ந்து ஆழமாகப் பேச வேண்டும். தன் மனத்தையும் வாழ்க்கைப் பின்னணியையும் திறந்து காட்ட வேண்டும்.

 

          “என் கையை உறுதியாகப் பிடித்துக் கொண்டு என் பக்கத்தில் எந்நாளும் நில் அகிலா!” என்று சொல்ல வேண்டும்.ஆனால் காதல் அரும்பி வருகின்ற இந்த நேரத்தில் குடும்பத் துயரங்களை இப்படி விரிவாகச் சொல்ல வேண்டுமா? காதல் என்ற இந்தத் தளிர் ஒரு மகிழ்ச்சியான காற்றை சுவாசித்து, ஆசை, மோகம் என்ற நீர் பருகி உறுதியான செடியாக வளர காலம் தர வேண்டாமா? அதற்குள் “என் பெற்றோர் இப்படி!” “என் அத்தை மகள் இப்படி!” என்று சொல்லி அந்த இன்ப நேரங்களைக் கெடுத்துக் கொள்வதா?அகிலா அவற்றைத் தாங்குகிற பெண்ணா? அல்லது இந்தத் தொல்லைகளெல்லாம் வேண்டாம் என்று ஓடுகிற பெண்ணா? தெரியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிந்து கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் கொஞ்சம் காலம் கழித்துச் சொல்லலாம். அவசரமில்லை. சிக்கல்களை அவிழ்க்க இன்னும் ஒரு வருடம், ஒன்றரை வருடம் இருக்கிறது.முதலில் அகிலாவை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். அவள் அணுக்கத்தை அனுபவிக்க வேண்டும். அவள் ஸ்பரிசத்தில் மயக்கம் காண வேண்டும். மல்லிகாவைப் போல அல்லாமல், ஜெசிக்காவைப் போல அல்லாமல் பார்த்த அளவில் போதை தரும் ஓவியமாக இருக்கிறாள். பக்கத்தில் போனால் மோகம் தரும் மோகினியாக இருக்கிறாள்.அகிலாவுக்காகத் தவிப்புடன் காத்திருந்தான்.***

 

             “என்ன உங்களுக்குப் பிடிச்சிருக்கா?” என்று கேட்டாள் அகிலா.கடலை ஒட்டியிருந்த தென்னை மரங்களின் கீற்றுக்களை சிலுசிலுவென்று ஆட்டி விளையாடிக் கொண்டிருந்த முன்னிரவுக் காற்றில் புரட்டாசி மாதத்து முழு நிலவு வானத்தில் பழுத்து ‘ஆ’வென்று தொங்கிக் கிடந்தது. பினாங்கின் வட நீரிணைக் கடலைப் பாலாக்கி அந்த நீண்ட பினாங்குப் பாலத்துக்குப் பொன் முலாம் பூசி “இந்தக் காட்சிகளெல்லாம் உனக்காகத்தான், உனக்காகவேதான்” என்று இயற்கை அள்ளி வழங்கியிருந்த ஆனந்தம் அவளை இந்தக் கேள்வியைக் கேட்க வைத்தது. அவர்கள் வி.சி. பாறையை ஒட்டிய புல் தரையில் உட்கார்ந்திருந்தார்கள். கணேசனின் கையை தன் கையில் இறுகக் கோத்துக் கொண்டு தன் மடியில் உரிமையோடு வைத்துக் கொண்டிருந்தாள் அகிலா. இந்த இடத்தில் முன்பும் பல முறை அவள் கணேசனோடு உட்கார்ந்து பேசியிருக்கிறாள். ஆனால் இந்தப் பூரண நிலவின் முழு மந்திரமும் இன்றுதான் அவளுக்குப் புலனானது. இது இளம் உள்ளங்களுக்கான போதை மருந்து. காதலுக்கான சொக்குப்பொடி. காவியங்களுக்கான முதலடி. அந்தச் சூழ்நிலையில் அந்தக் கேள்வியைத்தான் கேட்க அவளுக்குத் தோன்றியது.“என்ன உங்களுக்குப் பிடிச்சிருக்கா?”அவனுக்கு அவளைப் பிடித்திருக்கிறதென்பது தெரிந்துதான் இருந்தது. ஆனால் அதை அவன் வாயால் கேட்க வேண்டும் போல் இருந்தது. இந்த இரவு வேளைக்கான இன்ப சங்கீதமாக அந்தப் பதில் இருக்கும் என்று நினைத்தாள்.“சொல்லுங்க! என்ன உங்களுக்குப் பிடிச்சிருக்கா?”அவன் அவள் தோள்களோடு அழுத்தி உரசிச் சிரித்தான்.

 

                “உன்னைப் பிடிக்காமலா இப்படி இந்த இருட்டுல உன்னோட உக்காந்திருக்கேன் அகிலா?”“கேள்விக்கு பதில் கேள்வியா சொல்லாம நேரா பதில் சொல்லுங்க?”“எப்படி?”“நான் சொல்ல மாட்டேன். நீங்களே சொல்லுங்க?”“இன்னும் என் மேல நம்பிக்கை இல்லியா?”“பாத்திங்களா? மறுபடி கேள்விதான வருது? வேண்டாம் முழு வாக்கியமா பதில் சொல்லுங்க!”சிரித்துச் சொன்னான்: “உன்ன எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அகிலா!”“என்னைக் காதலிக்கிறிங்களா?”“இதென்ன கேள்வி?”“பதில் சொல்லுங்க!”“ஏன் இத்தன கேள்வி?”“உங்களுக்கு ஏன் இத்தன மறு கேள்விங்க? பதில மட்டும் சொல்லுங்க!”மீண்டும் சிரித்துச் சொன்னான்: “உன்னை என் உயிருக்குயிரா காதலிக்கிறேன் அகிலா!”அவன் மார்பில் நிம்மதியாக முகம் புதைத்தாள். “உயிருக்கு உயிராக” என்பதற்கான சரியான அர்த்தம் என்ன என்று புரியவில்லை. ஆனால் அந்த மாதிரி அர்த்தத்துக்கு அப்பாற்பட்ட உறுதிகள் அந்த நேரத்துக்குப் பொருந்தியிருந்தன.

 

          “நானும் அப்படித்தான் கணேஷ். உங்கள உயிருக்குயிரா காதலிக்கிறேன்!” அவள் கண்களில் கொஞ்சம் கண்ணீர் கட்டியது. முழு நிலவு அதில் கொஞ்சம் கலங்கித் தெரிந்தது.அதற்கு மேல் அந்த நேரத்தில் அவனிடம் பேச வேண்டும் என்று அவளுக்குத் தோன்றவில்லை. அவன் தன் கையை அவள் கைகளில் இருந்து பிரித்துக் கொண்டு அவள் தோள்களை இறுக அணைத்துக் கொண்டான். அதில் இனந் தெரியாத சுகம் இருந்தது.“தாயார் அணைத்திருந்த அணைப்பு முண்டு – நான்தந்தை மடி கிடந்த பழக்கமுண்டுநீயாரோ நான் யாரோ தெரியவில்லை – இங்குநேர்ந்தது என்ன வென்று புரியவில்லை”என்றோ கேட்ட பாடல் அவள் காதுகளில் கேட்டுக் கொண்டிருந்தது.இரவுக் காற்றின் குளிர் உடைகளுக்குள் எல்லாம் ஊர்ந்து கொண்டிருந்தாலும் உடல் வெப்பமாக இருந்தது. அவளுடைய கன்னம் அவன் மார்பில் ஒட்டிக் கிடந்தது. அவளுடைய மூச்சு அவன் மார்பில் பட்டு எதிர்த்த போதெல்லாம் அந்தச் சூடு அவள் மேலும் தெறித்தது. அவனுடைய முத்தங்கள் அவள் உதடுகளில் இனித்துக் கொண்டிருந்தன. அவனுடைய சட்டைப் பொத்தானை நெருடியவாறிருந்தாள். இமையை நெறித்து கண்களை உயர்த்திப் பார்த்தால் புன்னகைக் கீற்று விழுந்திருந்த அவன் உதடுகள் தெரிந்தன. மீண்டும் தலை தாழ்த்தியிருந்தாள்.

 

        “என்ன பேச்சையே காணும் அகிலா?”மீண்டும் பேசாமல் இருந்தாள். “ஏதாகிலும் பேசு என் கண்ணு!” என்றான். பேசாமலே இருந்தாள்.“என் மேல கோபமா அகிலா?” என்றான்.“ஏன் கோபப் படணும்?”“கண்ணுன்னு கூப்பிடதினால!”“இல்ல கணேஷ்! உங்களுக்கு நான் இவ்வளவு இடம் கொடுத்தாச்சி! இதுக்குப் பிறகா இந்த “கண்ணு”காகக் கோவிச்சிக்கப் போறேன். கோபம் இல்ல. இனிப்பாதான் இருக்கு! மறுபடி கூப்பிடுங்க!”“என் கண்ணு!” அணைப்பை இறுக்கினான். மீண்டும் மௌனமானாள்.இதுதான் காதல் என்பதா? இதைத்தானா சினிமாவில் பார்த்து, பாடல்களில் கேட்டு, நாவல்களில் படித்து, தோழிகளுடன் பேசி, இரவில் மெய்மறந்து கனாக் கண்டு, என்று இது விளையும் என்று ஏங்கியிருந்தேன்? என்ன இது? என்ன செய்கிறேன்? இது சரியா? இது ஒளித்து மறைத்துச் செய்யும் குற்றமா? இது என் மனம் இழுக்கும் இழுப்புக்கு நான் ஓடுகின்ற தவறான நடத்தையா? இதுதான் கெட்டுப் போவது என்பதா? நான் இப்போது கெட்டுப் போகிறேனே? கெட்டுப் போவது என்பது ஏன் இத்தனை இன்பமாக இருக்கிறது? இந்த இன்பத்தோடு இந்தக் குற்ற உணர்ச்சி ஏன் வருகிறது? ஏன் அம்மாவின் நினைவு வருகிறது?

 

          விடுமுறை எப்போது முடியும் எனக் காத்திருந்தாள். ஒருநாளைக்கு முன்னாலேயே பெட்டியை எல்லாம் அடுக்கித் திரும்பத் தயாராக இருந்தாள்.“நாளைக்கு போனா எப்ப திரும்ப வருவ?” என்று அன்றிரவு அம்மா கேட்டாள். அந்தக் கேள்வியில் வழக்கமான அன்பு இருந்ததை விட ஏதோ ஒரு சந்தேகம் இருந்தது என அகிலாவுக்குத் தோன்றியது.“பார்ப்போம்மா! நிறைய வேலைகள் இருக்கும். எப்பப்ப ஓய்வு கெடைக்குதோ அப்ப வாரேன்!” என்றாள்.“தோ இங்க இருக்கிற பினாங்கில இருந்து வர்ரதுக்கு எதுக்கு ஓய்வு? ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவ பஸ் ஏறி வந்திர வேண்டியதுதான?” என்றாள் அம்மா.“பஸ் ஏறி வர்ரது பெரிசில்ல அம்மா. ஆனா விரிவுரையாளர்கள் குடுக்கிற எசைன்மென்டெல்லாம் வாரக் கடைசியிலதான் செய்ய முடியும். லைப்ரரிக்கும் போய் உக்காந்து ஆறுதலா அப்பதான் படிக்கலாம்!”“இங்க இருந்த போது நீ வீட்டில இருந்து படிக்கிலியா? அப்படி வீட்டுக்கு வந்து படிக்க வேண்டியதுதான? ஒன் படிப்ப நாங்க கெடுக்கிறமா?” என்று அம்மா மீண்டும் வாதிட்டாள்.

 

         அம்மாவுக்குத் தன்மேல் கடுமையான சந்தேகம் விழுந்துவிட்டது என்று தோன்றியது. ஏன் இப்படிச் சந்தேகிக்கிறாள்? ஏன் இது பற்றி எரிச்சல் படுகிறாள். அன்று இரவு இது பற்றித் தெளிவாகப் பேசியிருந்தாலும் அவள் பயம் இன்னமும் தீரவில்லை என்று தோன்றியது. மகள் கெட்டுப் போவதற்குத் தயாராகிவிட்டாள் என்றே அவள் உள்ளம் கணக்குப் போட்டுவிட்டதாகத் தோன்றியது.“சரிம்மா! எப்ப எல்லாம் ஓய்வு கிடைக்குதோ அப்ப எல்லாம் வந்திர்ரேன். நீ சொல்றது போல இரண்டு வாரத்துக்கு ஒருமுறை வேணுன்னாலும் கண்டிப்பா வந்திர்ரேன்! அவ்வளவுதான உனக்கு வேணும்? அப்படியே செய்திட்றேன்!” என்றாள்.அம்மா முறைத்துப் பார்த்தாள். “என்ன கிண்டல் பண்றியா அகிலா?” என்றாள்.அகிலா பெரு மூச்சு விட்டாள். “அடிக்கடி வரமுடியாதின்னாலும் கோவிச்சிக்கிற! சரி ரெண்டு வாரத்துக்கு ஒருமுற வந்திர்ரேன்னு ஒப்புக் கொண்டாலும் கோவிச்சிக்கிர! நான் என்னதான் பண்றது?”அம்மா கொஞ்ச நேரம் முறைத்துப் பார்த்தவாறு இருந்தாள். அப்புறம் முகம் சோர்ந்து வேறு புறமாகத் திருப்பிக்கொண்டாள். கண்களைத் துடைத்தாள்.அகிலா அவள் தோளைப் பிடித்தாள்.

 

        “ஏம்மா இப்படி சந்தேகப் பட்ற? நான் கெட்டுப் போகணும்னு நெனைச்சா நீ கொடுக்கிற ரெண்டு வார இடை வேளையில கெட்டுப் போக மாட்டேனா? ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவ இங்க வந்து உன்னுடைய விசாரணைகளுக்கு பதில் சொல்லிட்டு நான் திரும்பிப் போயிட்டா உனக்குத் திருப்தியாயிடுமா? உங்கிட்ட பொய் சொல்லி ஏமாத்த எனக்குத் தெரியாதா?”அம்மாவின் முகத்தை வலுக்கட்டாயமாகத் திருப்பினாள். “இதோ பாரும்மா! ஒரு காலமும் இந்தக் குடும்பத்துப் பேருக்குக் களங்கம் வர்ர மாதிரி நான் நடந்துக்க மாட்டேன். ஆனா அதுக்காக இல்லாத கட்டுப்பாடெல்லாம் போட்டு என்னக் கட்டிப் போட்டுடாதம்மா! மத்த பெண்களப் போல சகஜமா நடந்துக்க எனக்கு சுதந்திரம் கொடு!” என்றாள்.அம்மா அவளைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள். “எனக்கு உம்மேல நம்பிக்கை இருக்கு கண்ணு! கவனமா நடந்துக்க! அவ்வளவுதான்!” என்று சிரித்தாள் அம்மா.

 

      இவ்வளவும் பேசிய பின், இத்தனை உறுதி கொடுத்த பின் இப்படிக் கட்டிப் பிடித்துக் கொண்டிருப்பது குற்றமில்லையா என்று மனம் கேட்டவாறே இருந்தது.விடுமுறை முடிந்து பல்கலைக் கழகத்துக்கு பஸ்ஸில் வந்து பெட்டியுடன் இறங்கியபோது கணேசன் பஸ் நிலையத்தில் அவளுக்காகக் காத்திருந்தான். தோளில் கைபோட்டு வரவேற்றான். பெட்டியுடன் அவளை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு விடுதியில் கொண்டு வந்து விட்டான். அன்று மாலையில் வெளியில் சென்று சாப்பிட்டுவிட்டு இரவில் இந்தப் பௌர்ணமிச் சந்தரனின் ஈர்ப்பில் இங்கு வந்தார்கள். சில வாரங்கள் அவனைப் பிரிந்திருந்ததில் அவன் நினைவு இன்னும் அதிகமாகி ஒரு காட்டுக் கொடி போல தன் மனத்தில் படர்ந்து கிடந்ததை அவளால் உணர முடிந்தது.தன் உள்ளம் விரும்பியவனை பார்ப்பதும் பேசுவதும் எப்படித் தவறாகும் என்று உள்ளம் எதிர்வாதம் செய்தது. இப்படி இவனோடு தனிமையில் இருப்பது தவறாகுமா? கையைப் பிணைத்துக் கொள்வதும் தோளையும் துடையையும் உரசிக் கொள்வதும் தவறாகி விடுமா? முத்தம் பரிமாறிக் கொள்வது தவறாகுமா? தவறு இல்லையென்றால் தவறு எங்கிருந்து ஆரம்பிக்கும்? அம்மா போட நினைக்கும் கட்டுப்பாடுகளின் எல்லை என்ன? தான் எடுத்துக் கொள்ளவிருக்கும் சுதந்திரத்தின் எல்லைதான் என்ன?அந்த எல்லைகளைக் கணித்துக் கொண்டா இந்த சந்திப்பு நடக்கிறது? இது போதும்; இதற்கு மேல் வேண்டாம் என்று எந்தக் கட்டத்தில் நான் சொல்ல வேண்டும்? இந்த இரவின் போதைகள் தலைக்கு ஏறிவிட்டால் எல்லா எல்லைகளையும் தாண்டிப் போய்விடுவேனா? மனதில் பயம் வந்தது.அவன் மார்பில் புதைந்திருந்த முகத்தைப் பிரித்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்தாள்.

 

        “என்ன அகிலா?” இரவில் அவன் வார்த்தைகள் மிருதுவாக வந்தன. அவள் முடியைக் கோதினான்.“ஏதோ தவறு செய்றமோன்னு அடிக்கடி ஒரு சந்தேகம் வருது கணேஷ்!” என்றாள்.“காதலிக்கிறது தவறுன்னு சொல்றியா அகிலா? உலகத்தில எல்லாருந்தான காதலிக்கிறாங்க?”“உலகத்தில எல்லாரும் காதலிக்கிறதில்ல! எவ்வளவு பேரு ஒழுங்கா முறையா அப்பா அம்மா பாத்துக் குடுக்கிற வாழ்க்கைத் துணைய கட்டிக்கிட்டு இருக்காங்க! அப்படி இல்லாம நமக்கு நாமே ஜோடியத் தேடிக்கிறது கொஞ்சம் தறுதலைத் தனந்தானே!”“எல்லாரும் காதலிக்கிறாங்க அகிலா. தங்கள் உள்ளத்தில தனக்குப் பிடிச்ச ஒரு பெண்ணையோ ஆணையோ காதலிக்கத்தான் செய்றாங்க. ஆனா பலருக்கு அந்தக் காதல் உள்ளத்தை விட்டு வெளியேற முடியிறதில்ல. ஆனா அதினால என்ன? நாம் பெற்றோர்கள் சம்மதம் கேட்டுத்தான கல்யாணம் பண்ணிக்கப் போறோம்! ஆனா அதுக்குக் காலம் வரணுமில்லியா?”கால் பக்கத்தில் பனி ஈரம் தோய்ந்திருந்த ஒரு புல்லைப் பிடுங்கியவாறு சொன்னாள்: “அம்மா இந்த முறை என்ன பல மாதிரி கேள்வி கேட்டாங்க?”“எப்படி?”“அந்தப் பையன் ஏன் இத்தன தடவ உனக்குப் ·போன் பண்ணனும்னு கேட்டாங்க!”“ஒரு நண்பர்னு சொல்ல வேண்டியதுதான?”“சொன்னேன்.

 

          அவங்களுக்கு திருப்தி ஏற்படல! ‘நீ இப்படி ஆம்பிள பசங்களோட சுத்திறதுக்குத்தான் நாங்க உன்னக் கொண்டி யுனிவர்சிட்டியில விட்டமா?’ன்னு பொரிஞ்சி தள்ளுனாங்க!”“நீ என்ன சொன்ன?”“ஆண்களும் பெண்களும் கலந்து படிக்கிற இடத்தில கலந்துதான் பழக வேண்டியிருக்கு. இதை எப்படித் தடுக்கிறதின்னு தெரியிலன்னு சொன்னேன்”கணேசன் கொஞ்சம் யோசித்துச் சொன்னான்: “அப்ப உனக்கும் மனந்திறந்து “அவர் என் காதலர்னு” சொல்ல முடியில, இல்லியா?”அவனை நிமிர்ந்து பார்த்தாள். “முடியில கணேஷ்! அதுக்குக் காலம் வரல. அம்மாகிட்ட இப்படிச் சொன்னா ஒடைஞ்சி போவாங்க. அதோட எனக்கே என் மனசுக்கு நிச்சயமா தெரியில!” என்றாள்.“என்ன தெரியல?”“இந்தக் காதல் எவ்வளவு தூரம் சரி, எவ்வளவு தூரம் பிழைன்னு தெரியல. ரொம்ப சீக்கிரமா பழகி ரொம்ப சீக்கிரமா முடிவுக்கு வந்திடறோமோன்னு ஒரு சந்தேகம்! இதுக்கு இன்னும் கொஞ்சம் கால அவகாசம் கொடுத்து பின்னால எல்லாத்தையும் உறுதி செய்யலாமேன்னு ஒரு தயக்கம்!”“சரிதான் அகிலா! கால அவகாசம் கொடுக்கிறதில எனக்கு ஒண்ணும் ஆட்டசேபனை இல்ல! ஆனா உங்கம்மா இப்படி அவசரமா இந்தப் பேச்ச எடுக்காம இருந்திருந்தா இந்தப் பிரச்சினையே வந்திருக்காதில்ல! அவங்க அவசரப்பட்டு உன்ன இப்படி நேருக்கு நேர் கேக்கப் போயித்தான இப்படி இக்கட்டான நிலம வந்திருக்கு!”“அவங்களோட பயம் எனக்குப் புரியிது கணேஷ்.

 

      நாலு பேரு நம்மப் பார்த்திட்டு பேசிட்டா அவங்க குடும்ப மானம் போயிடும்னு அவங்க பயப்பட்றாங்க!”“உங்க அப்பா என்ன சொன்னார்?”“அப்பா ரொம்ப பரந்த மனம் உள்ளவரு! ‘நீ யாரோட வேணுன்னாலும் பழகு. ஆனா ஒரு வேள பல்கலைக் கழகத்தில நீ எந்த ஆணோடயாவது ஒரு நண்பன்கிற அளவுக்கு மேல பழக ஆரம்பிச்சிட்டேன்னா அந்தப் பையன வீட்டுக்குக் கொண்டு வந்து எங்களுக்கு அறிமுகப் படுத்தி வச்சிரு’ன்னு சொன்னாரு”“அப்புறம் ஏன் இப்ப பயம் அகிலா?”அவன் முகத்தை நேராகப் பார்த்தாள். “கண்டிப்பா நாம் கல்யாணம் பண்ணிக்குவோமா கணேஷ்?”“எனக்கு எந்த சந்தேகமும் இல்ல! உனக்கு?”தலை குனிந்தாள். “எனக்குக் குழப்பமா இருக்கு கணேஷ். உங்கள எனக்குப் பிடிக்குது. உங்களோட இப்படி ஒட்டியிருக்கப் பிடிக்குது. ஆனா கல்யாணங்கிறது நான் தீர்மானிக்க முடியாத விஷயம் போலவும், எனக்காக இதுவரைக்கும் எல்லாமும் செஞ்சிக் கொடுத்திருக்கிற பெற்றோர்கள் தீர்மானிக்க வேண்டிய விஷயம் போலவும் இருக்கு!”“அப்ப அவுங்கிட்ட கூடிய சீக்கிரம் பேசித் தீர்மானிச்சிக்குவோமே!”“அப்படி செய்யலாம். அதினாலதான் கூடிய சீக்கிரம் உங்கள வீட்டுக்கு வரச் சொல்லலாம்னு இருக்கேன்!”“எப்ப?”“அடுத்த மாசத்தில தீபாவளி வருதுல்ல. அன்னைக்கு வாங்களேன். தீபாவளிக்கு விருந்துக்கு வந்த மாதிரியும் இருக்கும். எங்க பெற்றோர்கள சந்திச்ச மாதிரியும் இருக்கும்.”ஒரு திடீர்க் காற்றின் விசிறலில் இலைகள் சலசலத்தன. பௌர்ணமி நிலவு இன்னும் மேலே ஏறியிருந்தது. வானில் கொஞ்சம் கருமேகங்கள் கூடியிருந்தன. தூரத்தில் கடலில் இரவுப் படகு ஒன்று “டுப் டுப்” என்று சத்தம் எழுப்பிக்கொண்டு பாலத்தின் அடியில் போய்க் கொண்டிருந்தது.“சரி அகிலா!” என்று அவன் சொன்னான். அந்தச் சொற்களில் கொஞ்சம் சோர்வும் தயக்கமும் இருந்தது போல அகிலாவுக்குத் தோன்றியது.***

 

         தீபாவளி அவன் நினைத்ததைவிட அதிவேகமாக வந்து கொண்டிருப்பதாகத் தோன்றியது. அதற்கு முக்கிய காரணம் அவன் முன் குவிந்து விட்ட வேலைகளும் இடையறாத அலைச்சலும்தான். அவனுடைய நிறுவன நிர்வாகப் பாடத்திற்காக இந்தப் பருவத்தில் கேஸ் ஸ்டடி (case-study) ஒன்று செய்ய ஒன்று செய்ய வேண்டியிருந்தது. அதற்காகப் பினாங்கின் பழம் பெரும் நிறுவனமான பர்காத் ஸ்டோர்ஸை அவன் தேர்ந்தெடுத்திருந்தான். அந்த நிறுவனத்தின் தமிழ் முஸ்லிம் உரிமையாளர்கள் அவனுக்கு எல்லா ஒத்துழைப்பையும் தந்தார்கள். அவர்கள் நிறுவனத்திற்கு பல நாட்கள் சென்று நிர்வாகிகளுடன் உட்கார்ந்து பேசி கோப்புக்களைப் பார்த்து குறிப்பெடுத்து எழுத வேண்டியிருந்தது.ஐசேக் மாநாட்டுக்கான ஏராளமான மனுபாரங்கள் வரத் தொடங்கியிருந்தன. இரவில் ஜெசிக்காவுடன் உட்கார்ந்து அவற்றுக்கெல்லாம் பதில் எழுத வேண்டியிருந்தது. தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் தனது தோட்டப்புற மாணவர் சேவைத் திட்டத்தை நிர்வகிப்பதில் அவனுடைய உதவியைக் கோரியிருந்தது.

 

        அகிலாவும் அந்தக் குழுவில் இருப்பதால் உற்சாகமாக ஒப்புக் கொண்டிருந்தான்.இதற்கிடையே தீபாவளி நினைவுகள் வந்து கொண்டேயிருந்தன. அகிலாவின் வீட்டுக்குச் சென்று அவளுடைய பெற்றோர்களைச் சந்திப்பதை அவன் ஒரு வித மனப் படபடப்புடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். இது ஒரு நல்ல தொடக்கமாகத் தோன்றியது. ஆனால் நினைவு தெரிந்ததிலிருந்து அத்தை வீட்டில்தான் அவன் தீபாவளி கொண்டாடுவது வழக்கம். பினாங்கு வந்ததிலிருந்து சென்ற இரண்டு வருடங்களிலும் அவன் தீபாவளிக்குத் தவறாமல் போய் வந்திருக்கிறான்.“ஆமா கணேசு! ரெண்டு நாளைக்கு மிந்தியே வந்திரு. நீ ஒண்ணும் புது உடுப்பு வாங்க வேணாம். எல்லாம் நான் எடுத்து வைக்கிறேன். உன் சைசெல்லாம் எங்கிட்ட இருக்கு. இங்க கிள்ளான்ல சௌரியமா வாங்கலாம்!” என்று அத்தை சொன்னது இன்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது.

 

        அகிலாவுக்கு வாக்குக் கொடுத்த போது அத்தை வீட்டுக்குப் போகவேண்டும் என்ற நினைவு இல்லாமல் இல்லை. ஆனால் அவள் இதனை இத்தனை முக்கியமாக எண்ணிக் கேட்கும் பொழுது எந்தக் காரணம் கொண்டும் அதை ஒத்திப் போடுவதென்பது அவளை வருந்தச் செய்யலாம் என்ற எண்ணம் வந்து தடுத்தது. தீபாவளிக்கு ஒரு நாள் முன்னால் அல்லது பின்னால் அவள் வீட்டுக்குப் போவதும் கூட சரியானதாக இருக்காது. அது தீபாவளி விருந்தினராக வருவதைப் போல் இல்லாமல் விஷேச வருகையாகப் போய்விடும். ஆகவே தான் ஒப்புக் கொண்டது சரிதான் என்று தோன்றியது.அதோடு அத்தையின் ஆதிக்கத்தை எதிர்ப்பதென்று முடிவு செய்தாயிற்று. அதற்கு இந்த தீபாவளிக்குப் போகாமல் இருப்பதே ஒரு நல்ல தொடக்கம் என்றும் சொல்லிக் கொண்டான். அத்தை இழுத்த இழுப்புக்கெல்லாம் இனிப் போகப் போவதில்லை.

 

        ஓரிரண்டு முறை “முடியாது” “வரமாட்டேன்” என்று சொல்லப் பழகிக் கொள்ள வேண்டும்.ஆனால் அதை அத்தைக்கோ மல்லிகாவுக்கோ அறிவிப்பதைத் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தான். அவசரமில்லை, நாளைக்குச் சொல்லிக் கொள்ளலாம் என்றும் இன்னும் இரண்டு வாரம் இருக்கிறதே என்ன அவசரம் என்றும் நாட்கள் தள்ளிப் போயின. அத்தையிடம் இதைச் சொன்னால் கோபப் படுவாள். டெலிபோனிலேயே கத்துவாள். மல்லிகாவிடம் சொன்னாலும் உடனே அழுது அத்தையைத்தான் கூப்பிடுவாள். அப்படி இப்படியாக அழுது தன்னைக் கிள்ளானுக்கு வரச் செய்து விட்டால் அகிலாவுக்குத் தான் கொடுத்த வாக்கு தவறிப் போகும் என்ற பயமே அவனை இப்படித் தள்ளிக் கொண்டிருந்தது.இதற்கிடையே அகிலா இரண்டு முறை அவனிடம் கேட்டு உறுதிப் படுத்திக் கொண்டாள்.தீபாவளிக்கு முதல் நாள் கிள்ளான் போய்விட்டு அன்று காலை கிள்ளானில் பஸ் ஏறி மாலையில் அலோர்ஸ்டார் போகலாமா என்றும் நினைத்தான். ஆனால் கிள்ளான் போய்ச் சேர்ந்து விட்டால் அத்தையிடமிருந்து தப்பித்து வரமுடியாது. பெற்றோர் வீட்டுக்கும் போய் வரவேண்டியிருக்கும்.

 

       ஒரு காலையில் இதெல்லாம் முடிக்க முடியாது. ஆகவே தீபாவளி காலை அகிலாவின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் போய்த் திரும்பிவிட்டு பினாங்கிலிருந்து பஸ்பிடித்தால் இரவில் கிள்ளான் போய் விடலாம். அதன் பின் ஒரு நாள் இருந்து வரலாம். அதுதான் நல்லது என முடிவு செய்தான்.ஆனால் இதன் காரணங்களை அத்தையிடம் சொல்ல முடியாது. ஏதாகிலும் பொய் சொல்லித்தான் சமாளிக்க வேண்டும்.தீபாவளிக்கு இரண்டு நாள் இருக்கும் போது ஒரு மாலை தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அத்தை வீட்டுக்குப் போன் பண்ணினான். மல்லிகாதான் பேசினாள்: “மாமா, எப்ப வர்ரிங்க? உங்களுக்கு நீலக் கலர்ல ஒண்ணும் பச்சைக் கலர்ல ஒண்ணுமா ரெண்டு சட்டை எடுத்திருக்கோம். ரெண்டு ஜீன்ஸ் வாங்கியாச்சி. அன்டர்வேர் கூட வாங்கி வச்சிருக்காங்க அம்மா!” என்றாள்.“சரி, அம்மாவக் கூப்பிடு மல்லிகா!” என்றான்.

 

        “அத்தை போனுக்கு வந்தாள். “நல்லா இருக்கியா கணேசு? என்னா போனதில இருந்து கூப்பிடவே இல்லியே!” என்றாள்.“ரொம்ப வேல அத்த! அதுனாலதான் கூப்பிடல!”“அப்படியா? சரி அப்ப தீவாளிக்கு வந்திடுவதான?“அதச் சொல்லத்தான் கூப்பிட்டேன் அத்த! தீபாவளி அன்னிக்கின்னு பார்த்து ஒரு முக்கியமான வேல வந்திடுச்சி! அதினால தீபாவளி காலையில வர முடியாது. அன்னைக்கு ராத்திரிதான் வரமுடியும்னு நினைக்கிறேன்!”அத்தையின் அதிர்ச்சி நிறைந்த முகம் நூற்றுக்கணக்கான கிலோமீட்டருக்கு அப்பாலிருந்தாலும் அவன் மனதில் தோன்றி கலவரப்படுத்தியது.“என்னா சொல்ற கணேசு? என்ன அப்படி தல போற வேல? அதுவும் தீபாவளி அன்னைக்கு!”“இங்க எங்க இந்திய மாணவர் சங்கம் அனாதைப் பிள்ளைகளுக்கெல்லாம் தீபாவளி அன்னைக்குக் காலையில ஒரு விருந்து நடத்திறாங்க அத்த! அத நடத்திறத என் பொருப்பில விட்டிருக்காங்க! நாந்தான் இருந்து செய்ய வேண்டியிருக்கு. அத முடிச்சிட்டு மத்தியானம் பஸ் ஏறி ராத்திரிக்கு அங்க வந்து சேந்திர்ரேன்!”“என்னா இப்படி பண்ணிட்ட கணேசு!” அத்தையின் பெரு மூச்சில் ஏமாற்றத்தோடு ஆத்திரமும் இருந்தது எனத் தெரிந்தது.

 

      “வேற அங்க இருக்கிற பிள்ளைங்கள பாத்துக்க சொல்லக் கூடாதா? நான் காலையில உங்க மாமாவுக்கு சாம்பிராணி போட்டாகணுமே!”“நீங்க போடுங்க அத்த! கண்டிப்பா நான் ராத்திரி வந்து சேர்ந்துர்ரேன். வச்சிரட்டுமா அத்த?” பதில் வருமுன் போனை வைத்தான்.குற்ற உணர்வு நகங்கொண்டு உள்ளத்தைப் பிராண்டியது. தன் செய்தியால் அத்தையின் வீட்டில் இருள் கொஞ்சம் சூழ்வதை அவனால் கற்பனை செய்ய முடிந்தது. மல்லிகா சிணுங்கிச் சிணுங்கி இன்று சாப்பிடாமல் இருக்கப் போகிறாள் என்று தெரிந்தது. இந்தச் செய்தி தன் பெற்றோர் வீட்டுக்கும் பரவி அங்கும் கருமேகங்கள் கூடுவதையும், அன்றிரவு அப்பா கள் குடித்த பிறகு தோட்டம் முழுவதும் தெரியுமாறு கூச்சல் போட்டுக் கத்தப் போவதையும் நினைத்துப் பார்க்க முடிந்தது. இதன் விளைவாக அம்மா அடி வாங்குவாரா, இன்றிரவு? மனம் கலவரப்பட்டது.ஏன் செய்தேன் என்றும் தன்னையே கேட்டுக் கொண்டான். ஒரு குடும்பத்தில் இத்தனை கலவரங்கள் ஏற்படும் விளைவுகள் தெரிந்திருந்தும் ஒரு பொய்யைச் சொல்ல வேண்டியது அவசியம்தானா என்று தன்னையே கேட்டான். அது தவிர்க்க முடியாதது என்று விடையையும் கூறிக் கொண்டான். அத்தையிடமோ மல்லிகாவிடமோ உண்மையைக் கூறி அனுமதி பெற்றிருக்க முடியாது. இதைத் தவிர வேறு வழியில்லை.காதலின் மூர்க்கமும் காதலியின் ஈர்ப்பும் தனது குற்றத்தை மனதுக்குள் சமன் செய்ய விடுதி நோக்கி நடந்தான்.

 

     தீபாவளி அன்று காலையில் விடுதியில் தனியனாக எழுந்திருக்கும் போது என்னவோ போல் இருந்தது. இன்று தீபாவளிக்கு விசேஷமாக என்ன செய்வதென்று தெரியவில்லை. எப்போதும் வீட்டில் உள்ளவர்கள் யாராவது விரட்டி விரட்டியே எல்லாம் செய்து பழக்கமாகிவிட்டது. எண்ணெய் வைத்துக் குளிக்கலாமென்றால் அறையில் எண்ணெயோ சிகைக்காயோ இல்லை. ஷாம்பூ மட்டும் போட்டுக் குளித்து வந்தான்.உடுத்திக் கொள்ள புதிது ஏதும் எடுத்து வைக்க வில்லை. பழையதில் நல்லதாகப் போட்டுக் கொண்டான்.வணங்குவதற்கு அறையில் கடவுள் படம் ஏதும் இல்லை. அவனுடைய துணிப் பெட்டியைத் திறந்தால் மூடியின் உள் பக்கத்தில் கணேசர் படம் ஒன்று இருக்கும். அதை வணங்கி கொஞ்சம் திருநீறு இட்டுக் கொண்டான். அவனுடைய தீபாவளி வழிபாடு அதனோடு முடிந்தது.வளாகத்தில் மருந்துக்குக் கூட ஒரு இந்திய மாணவர் இல்லை. அவனுடைய மலாய் அறைத் தோழன் கூட விடுமுறையைப் பயன் படுத்திக் கொண்டு வீட்டுக்குப் போய்விட்டான்.விடுதிக் கண்டீனுக்குச் சென்று கிடைத்ததை வாங்கிச் சாப்பிட்டான். அத்தையின் வீட்டில் இன்று இறைச்சிக்கறி மணக்கும் பசியாறல் இருக்கும். தோசை இருக்கும். வெள்ளையும் மஞ்சளுமாக இந்தியப் பலகாரங்களும் சிகப்பும் பச்சையுமாக மலாய்ப் பலகாரங்களும் செய்து வைத்திருப்பாள்.

 

      “சாப்பிடு கணேசு, சாப்பிடு கணேசு!” என்று அத்தை ஊட்டாத குறையாக அவனை வலியுறுத்தியிருப்பாள்.இன்று இப்படி இருப்பாள்? முகம் சூம்பிப் போயிருப்பாளா? மல்லிகா எப்படி இருப்பாள்? இன்று இரவு அவர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சியை எண்ணி மனம் கொஞ்சம் மருண்டது.ஏற்கனவே சொன்ன ஒரு பொய்யை நிறுவ இன்னும் எத்தனை கூடுதல் பொய்கள் சொல்ல வேண்டும்? அத்தையின் முகத்தை நேராகப் பார்த்துச் சொல்ல முடியுமா? சொல்லும் போது தன் முகம் நேராக இருக்குமா? தன் அகத்தின் அழுக்கு முகத்தில் தெரிந்து விடுமா?ஆனால் அகிலாவின் வீட்டுக்குப் போகப் போகிறோம் என்ற நினைப்பு விரைவாக வந்து கலவரங்களை மாற்றியது. அவளுடைய பெற்றோர்களை முதன் முதலில் சந்திக்கப் போவதை நினைத்து ஒரு வித படபடப்பு வந்தது. அவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? அவர்கள் மனதில் ஒரு நல்லெண்ணம் எழும்படி செய்வது எப்படி? காதல் வேகத்தில் வந்திருக்கிறேன் என்பது பச்சையாகத் தெரியாமல் அடக்கமாக நடந்து கொள்வது எப்படி? மனதில் ஒத்திகை பார்த்துக் கொண்டே இருந்தான்.அலோர் ஸ்டார் இதற்கு முன் அவன் பார்த்திராத ஊர். அகிலா வீட்டுக்கு வழி சொல்லியிருந்தாள்.

 

    “அப்படியே வழி தவற விட்டிட்டிங்கன்னா எந்த இந்தியர் வீட்டிலாவது வாத்தியார் மயில்சாமி வீடுன்னு கேளுங்க, சொல்லுவாங்க!” என்றாள். ஆசிரியர் வேலை பார்க்கத் துவங்கிய காலத்திலிருந்து அங்கேயே இருக்கிறார். அரசியல், சமுதாய இயக்கங்கள் அனைத்திலும் இருக்கிறார். அகிலாவின் தந்தை அந்த ஊரில் பிரபலமான மனிதராக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.கெடா மாநிலத்தின் நெற் களஞ்சியப் பகுதிகளில் மலாய்க் கம்பங்கள் நெடுஞ்சாலையின் இரு மருங்கிலும் நிறைய இருந்தன. காற்றைக் கிழித்துக் கொண்டு அந்த நெடுஞ்சாலையில் போகும் போது அகிலா அவன் மனதில் நிறைந்திருந்தாள். இந்த வருகை சாதாரண தீபாவளி வருகை இல்லை. அது அகிலாவின் பெற்றோர்களுக்கும் தெரிந்திருக்கிறது என்ற பிரக்ஞை அவனுக்கு இருந்தது.” ‘ஆனா ஒரு வேள பல்கலைக் கழகத்தில நீ எந்த ஆணோடயாவது ஒரு நண்பன்கிற அளவுக்கு மேல பழக ஆரம்பிச்சிட்டேன்னா அந்தப் பையன வீட்டுக்குக் கொண்டு வந்து எங்களுக்கு அறிமுகப் படுத்தி வச்சிரு’ன்னு சொன்னாரு” என அகிலா தன் தந்தையின் சொற்களைச் சொல்லிக் காட்டியது அவன் மனதில் பதிந்திருந்தது. ஆகவே இன்று அவன் “ஒரு நண்பன்கிற அளவுக்கு” மேற்பட்டவன் என்பதை குடும்பம் புரிந்து கொள்ளும். அவனைக் கூர்ந்து பார்க்கும். அவனை எடை போடும்.

 

         அலோர் ஸ்டாரின் புறநகர் பகுதியில் ஒற்றை மாடி வரிசை வீடுகளில் ஒன்றாக வீட்டு எண் தவிர தனித்து அடையாளம் சொல்ல முடியாத அந்த வீட்டுக்கு முன்னால் அவன் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, தலைக் கவசத்தைக் கழற்றிவிட்டு சீப்பால் தலைசீவி முகத்தைத் துடைத்துக் கொண்டான். அந்தக் காலை பத்து மணிக்கு வீட்டில் கூட்டம் இல்லை. வரவேற்பறையில் ரேடியோ முழங்கிக் கொண்டிருந்தது. கதவு திறந்திருந்தது. நுழை வாசலில் “வருக, வணக்கம்” என்று தங்க நிறத் தாள் அலங்காரமாகக் கட்டப்பட்டிருந்தது.கதவுக்குப் பக்கம் போனபோது கூட ஆட்களைக் காணோம். ஆனால் உள்ளே பேச்சு சத்தம் கேட்டது. யாரை எப்படிக் கூப்பிடுவதென்று தெரியவில்லை. ரொம்ப வெள்ளன வந்து விட்டோமா, அழையாத விருந்தாளி போல என்று எண்ணினான். சப்பாத்தைக் கழற்றி சாக்சையும் கழற்றி ஒதுப் புறமாக வைத்துவிட்டு வாசலில் அடியெடுத்து வைத்த போது ஒல்லியாக வேட்டி கட்டிய பெரியவர் வந்தார். இவர்தான் அப்பாவா?“வாங்க” என்று வாய் நிறையக் கூப்பிட்டார்.

 

          “வணக்கம், தீபாவளி வாழ்த்துகள்” என்றான்.“வணக்கம். தீபாவளி வாழ்த்துகள் உங்களுக்கும். நீங்க….?”“நான் அகிலாவோட படிக்கிறேன். கணேசன்!”அவர் முகம் மலர்ந்தது. “ஓ சரி சரி. நீங்கதானா அது? அகிலா சொன்னிச்சி நீங்க வருவிங்கன்னு. உக்காருங்க தம்பி!” என்றார்.உட்கார்ந்தான். உள்ளே பார்த்து “அகிலா!” என்று கூப்பிட்டார். உள்ளிருந்து ஓடிவந்தாள்.அப்போதுதான் கோவிலுக்குப் போய் வந்த களை தெரிந்தது. திருநீறும் சந்தனமும் கருப்புச் சாந்துப் பொட்டும் கூந்தலில் சூடிய மல்லிகைச் சரம் தோளின் இருபக்கமும் சரிய….புதுச் சேலை அணிந்திருந்தாள். அவளை அதிகமாக அவன் சேலையில் பார்த்ததில்லை. உடலைக் கவ்வியிருந்த அந்த மெல்லிய பட்டில் வண்ணக் கண்ணாடித் தாளில் சுற்றப்பட்ட ஈரங்காயாத மஞ்சள் ஒற்றை ரோஜா போல நளினமாக இருந்தாள்.சிரித்தாள். “வாங்க கணேஷ்!” என்றாள். அப்பாவைப் பார்த்து “அப்பா இவரு..” என்று ஆரம்பித்த போது “தெரியும்மா, தம்பி பேர் சொன்னிச்சி! தம்பிக்கு சாப்பிட ஏதாவது கொண்டு வந்து குடும்மா!” என்றார்.

 

          டெலிபோன் அடித்தது. மயில்சாமி போய் எடுத்து யாருடனோ பேசிக் கொண்டிருந்தார்.“என்ன அகிலா! வீட்டில யாரையுமே காணுமே! நான் ரொம்ப வெள்ளன வந்திட்டேனா?” என்று கேட்டான்.“எல்லாம் பதினொருமணிக்கு மேலதான் வருவாங்க. காலையில கோயிலுக்குப் போய் இப்பதான் திரும்பி வந்தோம். அம்மா சமையல்ல இருக்காங்க. தம்பி எங்கயோ கூட்டாளி வீட்டுக்கு ஓடிட்டான். இப்ப வந்திருவான்” என்றாள்.வீடு சுத்தமாக இருந்தது. ஆடம்பரம் ஒன்றும் தெரியவில்லை. சாதாரண அலமாரிகளும் மேசை நாற்காலிகளும் இருந்தன. நடுநாயகமாக ஒரு தொலைக்காட்சிப் பெட்டியும் வீடியோவும் இருந்தன. சாப்பாட்டு மேசைமேல் பலகாரங்கள் இருந்தன. ஒரு அழகிய மலர்க்கொத்து இருந்தது. அவள் அங்கு இருந்ததால் வீடு அதிகக் களையுடன் தோன்றியது.“வீடு கண்டு பிடிக்கிறது சுலபமா இருந்ததா?” என்று கேட்டாள்.மயில்சாமி இன்னும் டெலிபோனில் பேசிக்கொண்டிருக்கிறார் என்ற தைரியத்தில் தணிந்த குரலில் “உன் வாசனையைப் பிடிச்சிக்கிட்டே வந்திட்டேன்!” என்றான். நாணிச் சிரித்து முகம் தாழ்த்தினாள். “உங்க ஊருக்கு இதுக்கு முன்னால நான் வந்ததே இல்ல அகிலா. ரொம்ப அழகா இருக்கு!” என்றான்.“அரச நகரம் இல்லியா, அப்படித்தான் இருக்கும்!” என்றாள்.மயில்சாமி டெலிபோனை வைத்து விட்டு வந்தார்.

 

        “தம்பி என்ன படிக்கிறிங்க?” என்று கேட்டார்.பாடம், வருடம் சொன்னான். அந்தப் படிப்புக்கு வேலை வாய்ப்புக்கள் எப்படி என்று கேட்டார். நல்ல வாய்ப்புக்கள் உள்ளன என்று சொன்னான். சொந்த ஊர், ஆரம்பக்கல்வி பற்றிக் கேட்டார். சொன்னான். இது முகமனுக்காகவா அல்லது தன் பின்னணியை ஆராய்வதற்காகவா என்று அவனுக்குத் தெரியவில்லை.“என்ன அகிலா நீயும் கதை கேட்டுக்கிட்டு உக்காந்திருக்க! போயி சாப்பிடப் பலகாரங் கொண்டாந்து குடு! அம்மாவை வரச்சொல்லு” என்றார். அகிலா எழுந்து ஒரு விசிறலாக முந்தானை பறக்க உள்ளே போனாள்.“நீங்க அகிலாவுக்குச் செஞ்ச உதவி, அதனால ஏற்பட்ட சிரமம் எல்லாம் அது விவரமா சொன்னிச்சி தம்பி. ரொம்ப நன்றி!” என்றார்.“நன்றியெல்லாம் எதுக்குங்க? தற்செயலா செஞ்ச உதவி!” என்றான்.“இருந்தாலும் அதனால நீங்க எவ்வளவு சிரமம் அனுபவிக்க வேண்டியதாய்ப் போச்சி!”“நம் பையனுங்க சில பேருதான் இப்படி என்ன இக்கட்டுல மாட்டி விட்டுட்டாங்க. ஆனா இப்ப எல்லாம் ஒரு வகையா சரியாப் போச்சு” என்றான்.

 

      “பல்கலைக் கழகத்திலேயே குண்டர் சங்கமா? என்னால நம்ப முடியில தம்பி!” என்றார்.“இப்பதான் சிலர் ஆரம்பிக்க முயற்சி பண்ணினாங்க. இதுவரையில இப்படி நடந்ததில்ல பாருங்க. இனிமேலும் நடக்காது. பல்கலைக் கழக அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுத்திருக்காங்க. இனிமே அப்படி நடக்க வழியில்ல” என்றான். பல்கலைக் கழகத்தை விட்டுக் கொடுக்காமல் பேசினான்.அகிலா பலகாரங்களும் இனிப்பு பானமும் கொண்டுவந்து வைத்தாள். ஆனால் அவன் எதிர் பார்த்தைப் போல அவளுடைய அம்மா வரவில்லை. அவர்களைப் பேசவிட்டு அப்பா உள்ளே போனார்.“உங்க அப்பா ரொம்ப அன்பானவரா இருக்காரு அகிலா!” என்றாள்.“பத்து நிமிஷங்கூட பேசில. அதுக்குள்ள எப்படித் தெரியும் உங்களுக்கு?” என்றாள்.“பேசின வரைக்கும் தெரியுதில்ல! ஒரு தலைமை ஆசிரியருக்கு உள்ள கண்டிப்பு கூட இல்லியே” என்றான்.“அதெல்லாம் பள்ளிக்கூடத்திலதான் தலைமை ஆசிரியர். வீட்டில அவரு அப்பாதான்!” என்றாள்.வாசலில் நிழல் தெரிந்தது.

 

         ஒரு ஐந்து இளம் பையன்கள் நுழைந்தார்கள். அவர்களில் முன் நின்றவனை “இவன்தான் என் தம்பி!” என்று அறிமுகப் படுத்தி வைத்தாள். “ஹலோ அங்கிள்!” என்றான். அது கேட்கக் குளிர்ச்சியாக இருந்தது. அதோடு தன் நண்பர்களுடன் பலகாரம் சாப்பிட உள்ளே போய்விட்டான்.உள்ளே போயிருந்த மயில்சாமி வெளியே வரவும் வாசலில் இன்னும் சில மலாய்க்கார நண்பர்கள் உள்ளே வரவும் சரியாக இருந்தது. அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் சொல்லி உட்கார வைத்தார் அவர். கணேசனையும் அவர்களுக்கு அறிமுகப் படுத்தி வைத்தார். வந்தவர்களில் ஒருவர் தேசியப் பள்ளியின் ஆசிரியர்; சொந்தத் தொழில் செய்யும் பக்கத்து வீட்டுக்காரர் குடும்பத்தோடு; மயில்சாமியோடு படித்து பெரிய மனிதராக இருக்கும் டத்தோ ஒருவர். அவருடைய அழகிய டத்தின் மனைவியுடன்.அனைவரும் கணேசனுடன் முகமனுக்காகப் பேசினார்கள். தம் பிள்ளைகள் அறிவியல் பல்கலைக் கழகத்தில் பயில்வது பற்றிச் சொன்னார்கள். அப்புறம் மயில்சாமியோடு கட்டித் தழுவி ஊர்க்கதைகளும் அரசியலும் பழைய நினைவுகளுமாகக் கலந்து கலந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

 

       அகிலாவின் அம்மா சிறிது நேரம் வெளியில் வந்து வந்தவர்களை வரவேற்றுவிட்டு உள்ளே போய் சாப்பாடு எடுத்து வைப்பதில் முனைப்பாக இருந்தார். அவன் பக்கம் வரவில்லை. வாய்ப்பில்லையா, தெரியவில்லையா அல்லது வேண்டாமென்றிருக்கிறாரா என்று புரியவில்லை. அகிலாவும் அம்மாவுக்குத் துணையாக ஓடிக் கொண்டிருந்தாள். அவ்வப்போது கணேசனைக் கண்ணால் பார்த்துப் புன்னகைப்பதோடு சரி.மேலும் சிலர் வந்தார்கள். வீட்டில் கூட்டம் நெருக்கியது. அவனுக்குத் தனிமை அதிகமாக இருந்தது. தன் இருக்கையை இன்னொரு பெண்மணிக்கு விட்டுக் கொடுத்து நின்று கொண்டிருந்தான். அகிலா ஓடிவந்து அவனை இழுத்துக் கொண்டு சாப்பாட்டு மேசை அருகில் கொண்டு விட்டாள். காகிதத் தட்டைகளில் ஒன்றைக் கையில் கொடுத்து “சாப்பிடுங்க” என்றாள். அப்புறம் வேறு யாரையோ கவனிக்கப் போய்விட்டாள்.கணேசன் தட்டில் இடியப்பமும், பூலுட்டும் நிரப்பிக் கொண்டு அவற்றில் கறி பெய்து ஒரு ஓரத்துக்கு எடுத்துக் கொண்டு வந்தான். சாப்பாடு சுவையாக இருந்தது. ஆனால் தனியாகச் சாப்பிடவேண்டியிருந்தது. அந்தக் கூட்டத்தில் அவனையொத்த வயதினர் யாரும் இல்லை. வந்தவர்கள் ஜோடி ஜோடியாக குடும்பக் கதை பேசிக் கொண்டிருந்தார்கள்.சாப்பிட்டுக் கை கழுவினான்.

 

       மயில்சாமி மட்டும் வந்து “என்ன தம்பி, முடிச்சிட்டிங்களா? இன்னுங் கொஞ்சம் சாப்பிடலாமே!” என்றார். போதும் என்றான். அகிலாவின் அம்மா சாப்பாடு கொண்டு வருவதும் சமயலறைக்குள் போவதுமாக இருந்தார். அவன் பக்கம் அவர் பார்வை திரும்பவில்லை.இன்னும் சிலர் வர சிலர் விடைபெற்றுப் போனார்கள். அவனுக்கும் இடத்தை அடைத்துக் கொண்டு நிற்காமல் போவது நல்லது எனப் பட்டது. அகிலாவைப் பிடிக்க முடிந்தபோது சொன்னான்: “நான் புறப்படலாம்னு பாக்கிறேன் அகிலா!”“என்ன அவசரம் கணேஷ்? கொஞ்சம் நேரம் இருங்க, போகலாம்!” என்றாள்.“இல்ல அகிலா! நான் பினாங்கு திரும்பி, முடிஞ்ச சீக்கிரம் பஸ் பிடிச்சி கிள்ளானுக்குப் போயாகணும். இப்ப போகலன்னா ரொம்ப நேரம் ஆயிடும்!”“அப்படியா!” அவனைப் பார்த்தவாறு விழிகள் படபடக்க ஏதோ யோசித்தவாறிருந்தாள். அப்புறம் அவன் கையை உறுதியாகப் பிடித்தாள். அவனை இழுத்துக் கொண்டு சமயலறைக்குச் சென்றாள். அங்கு அவள் அம்மாவும் அவருக்கு உதவியாக இன்னொரு பெண்ணும் இருந்தார்கள்.

 

      “அம்மா, இவருதான் கணேஷ்! எங்கூடப் படிக்கிறவரு, வருவாருன்னு சொன்னேன்ல!”ஒரு விநாடி நிமிர்ந்து பார்த்து “அப்படியா, வாங்க!” என்று மீண்டும் தலை குனிந்து வேலையில் ஈடுபட்டார். “இதோ இவங்க எங்க சின்னம்மா! இங்க பக்கத்திலதான் இருக்காங்க!” என்று அறிமுகப் படுத்தினாள்.“வாங்க தம்பி! அகிலாவுக்கு ரொம்ப உதவி பண்ணினிங்களாமில்ல! ரொம்ப நன்றி!” என்றார் அந்தச் சின்னம்மா.“பரவால்லிங்க! சின்ன விஷயம்!” என்றான்.“இப்படிப் புது இடத்தில அண்ணன் மாதிரி இருந்து ஒருத்தர் ஒதவி செய்றது ஒரு பொம்பிள பிள்ளைக்கு தைரியந்தானே!” என்று தொடர்ந்தார் அந்தச் சின்னம்மா. கொஞ்சம் முட்டாள் தனமாகச் சிரித்தான்.அகிலாவின் அம்மா ஏதோ ஒரு சாப்பாட்டைத் தூக்கிக் கொண்டு மீண்டும் வரவேற்பறைக்குப் போய்விட்டார். சமயலறையில் அதற்கு மேல் நிற்பதற்குக் காரணமில்லாமல் இருவரும் வெளியே வரும்போது அம்மா எதிரில் வந்தார். அகிலா அவரைத் தடுத்து “அம்மா, கணேஷ் போகணும்கிறாரு!” என்றாள்.“சரிம்மா, போயிட்டு வரட்டும்.

 

பலகாரங் குடுத்தியா?” என்று கேட்டுக் கொண்டே பதிலுக்கக் காத்திராமல் நடந்தார்.வரவேற்பறையில் மயில்சாமி எதிர்ப்பட்டார். “என்ன தம்பி கிளம்பிட்டிங்களா?” என்று கேட்டார். “ஆமாங்க, நான் இனி பினாங்கு போய், கிள்ளானுக்குப் போகணும்!” என்றான்.“அப்படியா, சரி! முடிஞ்ச போது வந்து போங்க!” என்றார்.அகிலா மோட்டார் சைக்கிள் வரைக்கும் வந்தாள். அவன் ஏறி உட்கார்ந்து தலைக் கவசத்தை அணிந்து கொண்டான். கொஞ்சம் வருத்தமான குரலில் சொன்னாள்: “அம்மாவுக்கு சரியான டென்ஷன் கணேஷ்! வீடு நெறய ஆட்கள் வந்துட்டாங்கள்ள! அதினாலதான் அவங்களால முகங் குடுத்து பேச முடியல!” என்றாள்.“பரவாயில்ல அகிலா. அவங்களுக்கு டென்ஷன் வரதுக்கு நான் வந்தது காரணமில்லாம இருந்தா சரி!” என்றான்.கையைப் பிடித்து அழுத்தி விடை கொடுத்தாள். “வாரேன் அகிலா! கேம்பஸ்ல பார்ப்போம்!” என்று சொல்லி அவன் மோட்டார் சைக்கிள் நகர்ந்த போது தம்பி பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கும் கையாட்டி நகர்ந்தான்.நெடுஞ்சாலையில் முகத்தில் காற்று அறைய பினாங்கு நோக்கி விரைந்த போது மனதில் கொஞ்சம் வெறுமை இருந்தது. “இவ்வளவுதானா அறிமுகங்கள்? இதற்காகவா அத்தையிடம் இத்தனை பொய் சொல்லி வந்தேன்?” என்று கேட்டுக் கொண்டான். அந்த வீட்டில் தனக்குக் கொஞ்சம் நிராகரிப்பும் இருந்தது என்பதை அவனால் உணர முடிந்தது.ஆனால் அகிலாவின் கனிவு, மயில்சாமியின் திறந்த மனதுடனான உபசரிப்பு ஆகியவை ஆறுதலாக இருந்தன. இன்றிரவு அத்தையைச் சந்தித்து தான் காலையில் வரமுடியாத காரணத்தை எப்படிச் சொல்லி விளக்குவது என்ற யோசனையில் மனது மீண்டும் கலவரமடைந்தது.

 

        எக்ஸ்பிரஸ் பஸ் விட்டிறங்கி உள்ளூர் பஸ் பிடித்து அத்தையின் வீட்டை அடைந்த போது இருட்டி விட்டிருந்தது. அத்தை வீட்டுக்குப் போகும் வழியில் நடந்து போன போது சில இந்தியர் வீடுகளில் தீபாவளி விருந்துகள் இன்னும் நடந்து கொண்டிருந்தன. வழி முழுவதும் நிறைய விருந்தினர்களின் கார்கள் ஓரத்தையெல்லாம் அடைத்துக் கொண்டு நின்றன. அந்த வீடுகளில் ஆட்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. கலகலவென்ற சத்தங்கள் கேட்டுக் கொண்டிருந்தன.ஆனால் அத்தை வீட்டில் அந்தக் கலகலப்பெல்லாம் ஒன்றும் காணோம். வரவேற்பறையில் ஒரு மங்கலான விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது. தொலைக்காட்சிப் பெட்டியிலிருந்து வெளிச்சம் தெறித்து விழுந்து கொண்டிருந்தது.கேட்டில் இருந்த அழைப்பு மணியை அழுத்தினான். மல்லிகா எட்டிப் பார்த்தாள். அவள் முகம் பிரகாசமானது அந்த அரையிருட்டிலும் தெரிந்தது. “அம்மா, மாமா வந்திரிச்சி…” என்று சொல்லியவாறு வீட்டுக் கம்பிக் கதவைத் திறந்து வெளியே வந்து பூட்டியிருந்த கேட்டையும் திறந்தாள்.

 

    “இப்பதான் உங்களுக்கு வழி தெரிஞ்சதா மாமா?” என்ற கேள்வியில் கிண்டல் மட்டும் அல்லாது கோபமும் இருந்தது.“சௌக்கியமா மல்லிகா?” என்று கேட்டுக் கொண்டே உள்ளே வந்தான். டெலிவிஷனில் ஏதோ உள்ளூர் கலை நிகழ்ச்சி தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியாக ஓடிக் கொண்டிருந்தது. யாரோ சினிமாவில் பாடிய பாட்டுக்கு வாயசைத்தவாறு பத்துப் பனிரெண்டு பெண்களும் ஆண்களும் அதே சினிமாவின் விரசமான நடனத்தை யந்திரத் தனமாக ஆடிக் கொண்டிருந்தார்கள். அத்தையைக் காணோம்.“எங்க அத்தை?” என்று கேட்டான்.“இருக்காங்க! வருவாங்க, நல்லா வாங்கப் போறிங்க!” என்றாள்.“ஏன் வாங்கப் போறேன்? அதான் வந்திட்டேனே!” என்றான் ஒரு அசட்டுச் சிரிப்புடன்.“ஆமா, வந்திட்டிங்க! நேத்தே வந்திருந்து எங்களோட காலையில இருந்து தீவாளி கும்பிடாம, யாரோ வெளி ஆளு மாதிரி வந்திருக்கிங்கள… ஏன் வெள்ளனே வர்ல மாமா?” அவள் குரல் குழைந்து தளுதளுக்க ஆரம்பித்தது. அழ ஆயத்தம் செய்கிறாள் என்று தோன்றியது.“அட அதான் வந்திட்டனே, அப்புறம் என்ன மல்லிகா! நீ போய் எனக்கு தீபாவளி சாப்பாடு எடுத்து வை. பசியோட வந்திருக்கேன்!” என்றான்.

 

      அத்தை உள்ளிருந்து வந்தாள். “ஆமா, எடுத்து வைடி! விருந்தாளி வந்திருக்கார்ல! போய் உபசாரம் பண்ணு! கேக்கிறதில மாத்திரம் வெக்கம் இல்ல!” சீறினாள்.“ஏன் அத்த இவ்வளவு சூடா இருக்கிங்க?” என்று கேட்டான்.“ஆமா, ஆமா! ஒண்ணும் தெரியாதவன் மாதிரி கேட்டுக்க! எவ்வளவு மானாக்கேடா போச்சி எனக்கு இன்னக்கி காலயில?” என்றாள்.“என்ன மானக் கேடு அத்த?”“சாம்பிராணி போட வீட்டில ஒரு ஆம்பிள இல்ல. காலையில வீட்டுக்கு வர்ரவங்கல்லாம், எங்க கணேசக் காணோம், வரலியா, வரலியான்னு கேக்கிறாங்க. பதில் சொல்லி மாளல எனக்கு! என்ன அநியாயம் பண்ணிட்ட இந்த வருஷம் நீ…?”“இல்ல அத்த, முக்கியமா தவிர்க்க முடியாத வேல இருந்ததினாலதான நான் வர முடியாம போச்சி! நான்தான் போன்ல உங்களுக்குச் சொன்னன…!”அத்தை அதைக் கேட்கத் தயாராக இல்லை. “அது என்னா தீவாளி அன்னைக்கி அப்படிப்பட்ட வேல உனக்கு? உங்க யுனிவர்சிட்டி வாத்தியாருங்களுக்கு இன்னக்கி தீவாளின்னு தெரியாதா? அவங்க ஊட்டில எல்லாம் தீவாளி கொண்டாட மாட்டாங்களா? யாருன்னு சொல்லு நான் வந்து கேக்கிறேன்!”பொய்யைத் தொடர வேண்டியிருந்தது: “இதல்லாம் லெக்சரர்ஸ் குடுக்கிற வேலயில்ல அத்த. மாணவர்கள் தாங்களா செய்த ஏற்பாடு. அத என் தலையில போட்டுட்டாங்க!” என்றான்.

 

         “அதெப்படி தீவாளி அன்னைக்குன்னு செய்வாங்க? ஒரு நாள் மின்ன பின்ன செய்ய மாட்டாங்களா? இங்கிருந்து போயி உன்னாட்டம் படிக்கிற எத்தன பேரு திரும்பி வந்திருக்காங்க! ஒனக்கு மாத்திரந்தான் ஸ்பெஷலா?”அத்தை தன் பொய்களுக்கு உள்ளே ஊடுருவி விட்டாள் எனத் தெரிந்தது. தான் நினைத்தது போல அவள் இந்த விஷயங்களில் அத்தனை வெகுளியாக இல்லை. தன்னையொத்த மற்ற மாணவர்கள் திரும்பி வந்ததைப் பார்த்து பேசியும் இருப்பாள் எனத் தெரிந்தது. ஆனால் தான் வராததற்குக் காரணமாக அவள் எதைச் சந்தேகிக்கிறாள் எனத் தெரியவில்லை.தொடர்ந்து இன்னுமொரு ஐந்து நிமிடக்கள் பொரிந்து கொண்டே இருந்தாள் அத்தை. ஒவ்வொரு வாக்கியத்தின் முடிவிலும் அவளை எதிர்த்துப் பேச வேண்டும் என்று தோன்றியது. ஆனால் இந்த விஷயம் இன்னும் பெரிதாகிவிடும் என்ற பயம் இருந்தது. மல்லிகா பயந்தவாறு ஒரு மூலையில் இருந்தாள்.ஒரு இடைவெளி ஏற்பட்டபோது சொன்னான்: “ஏன் அத்த இந்த விஷயத்த இவ்வளவு பெரிசா எடுத்துக்கிறிங்க? முடிஞ்சா வந்திருக்க மாட்டேனா? முடியாமப் போச்சி, மன்னிச்சிக்குங்க!”அத்தை முறைத்தபடி நின்றாள். “அதாவது, பிள்ளைய ரெண்டு மூணு வருஷம் தனியா விட்டதில கொஞ்சம் துளுத்துப் போச்சி! அதான் விஷயம்.

 

        எல்லாம் நான் உங்க அப்பாகிட்ட சொல்லி வச்சிருக்கேன். அங்க போய் கேட்டுக்க! நாளக்கி அங்க போவதான? இல்ல அதுக்கும் நேரமில்லன்னு ஓடிடுவியா?”“இல்ல அத்த நாளக்கி போய் அப்பாவயும் அம்மாவயும் பாத்துட்டுத்தான் போவேன்” என்றான்.என்ன சொல்லி வைத்திருக்கிறாள் அத்தை? அவனுக்கு அவள் மீது எரிச்சலாக வந்தது. ஏன் இத்தனை அதிகாரம் செலுத்துகிறாள்? தன் மீது ஏன் இத்தனை குறைவான மரியாதை வைத்திருக்கிறாள்? பல்கலைக் கழகம் போய் படிக்கும் அளவுக்கு வளர்ந்தாயிற்று. அடுத்த வருடம் ஒரு நிறுவனத்தில் பெரிய பொறுப்பில் இருக்கப் போகும் பட்டதாரி. இன்னும் சின்னப் பொடியனைப் போலவே நடத்துகிறாள். நான்தான் ரொம்பவும் பணிந்து பணிந்து இடம் கொடுத்து விட்டேனோ எனக் கேட்டுக் கொண்டான். இனி கொஞ்சம் சிலிர்க்க வேண்டும். திரும்பப் பேசவேண்டும். “நான் விரும்பிய இடத்துக்குப் போவேன், அதைப்பற்றி உனக்கென்ன அத்தை?” என்று கேட்க வேண்டும். ஆனால் கொஞ்சம் காலம் போகட்டும் என இருந்தான்.அத்தை உள்ளே போய்விட்டாள்.

 

     மல்லிகா அங்கு வந்து பரிவோடு அவன் கையைப் பற்றினாள். அவனை இழுத்துக் கொண்டு சாப்பாட்டு மேசைக்குப் போனாள்.வழக்கமான ஆடம்பரமான தீபாவளிச் சாப்பாடு இருந்தது. “சாப்பிடு மாமா, சாப்பிடு! பசிக்குதின்னு சொன்னேல்ல! சாப்பிடு! இந்த அம்மாவுக்கு புத்தியே இல்ல. தீவாளியும் அதுவுமா எப்படிப் புடிச்சிப் பேசிடிச்சி பாரு! நீ சாப்பிடு! ” என்று மல்லிகா கனிவோடு வற்புறுத்தியபடி இருந்தாள்.அத்தை தனக்குக் கொடுத்த வரவேற்பினால் ஏற்பட்ட எரிச்சலில் வயிற்றில் சுரந்த அமிலங்களால் அவன் பசிதான் செத்துப் போயிருந்தது.*** *** ***மல்லிகா கொடுத்த புதுத் துணிகளை அணிந்து கொண்டு வீட்டில் காலையில் பசியாறிவிட்டு அவன் அப்பா வீட்டுக்குப் புறப்பட அத்தையிடம் சொல்லிக் கொள்ளச் சென்ற போது “இரு, ட்ரைவர் இப்ப வந்திடுவாரு! நானும் வர்ரேன்!” என்றாள். அத்தை தன் கூட வருவது அவனுக்குச் சற்றும் பிடிக்கவில்லை. “ஏன் உங்களுக்குச் சிரமம் அத்தை? நான் பஸ் பிடிச்சிப் போயிட்றனே!” என்றான்.“பரவால்ல இரு. நானும் அங்க போக வேண்டிய வேலை இருக்கு” என்றாள். தானும் வருகிறேன் என்று கிளம்பிய மல்லிகாவை அத்தையே தடுத்து விட்டாள்.“சும்மா கெட, ஒனக்கு அங்க வேல இல்ல! அந்த சுப்பையா செட்டியார் வந்து கொஞ்சம் காசு குடுக்கிறேன்னு சொல்லியிருக்காரு. வாங்கி வை!” என்று அதட்டி அவளை வரவிடவில்லை.

 

         அப்பாவின் தோட்டப்புற வீடு எப்போதும் போல்தான் இருந்தது. நேற்று முடிந்த தீபாவளியின் எஞ்சிய களையாக. வீட்டில் ஒரு நிரந்தரமான பீர் மணம் இருந்தது. ஓரத்தில் பீர் போத்தல்கள் குவிக்கப்பட்டிருந்தன. ஆட்டிறைச்சி கோழியிறைச்சியின் தின்ற எச்சங்கள் சமயலறையிலிருந்து இன்னும் வெளியேறவில்லை. அத்தையின் உபயத்தில் நேற்று விருந்து மிகவும் உச்சமாக இருந்திருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டான். அத்தையோடு அவன் நண்பகலில் போய்ச் சேர்ந்த போது அப்பா இன்னும் தூங்கிக் கொண்டிருந்தார்.அம்மா போய் அவரை உலுக்கி உலுக்கி எழுப்பினாள். அவர் புரண்டு உறுமி “ஏன் தொந்திரவு பண்ற?” என்று சீறி விழுந்து, “ஓ தங்கச்சி வந்திருக்கா? இதோ வந்தர்ரேன்!” என்று எழுந்து தூக்கக் கலக்கத்தில் கணேசனை கண்ணைக் குறுக்கிப் பார்த்து ஒரு வெறுப்பை உமிழ்ந்து விட்டு பின்னால் குளியலறைக்குப் போனார்.“நேத்து அக்கா வந்திருந்திச்சிப்பா, பிள்ளைங்களோட. இருந்திட்டு ராத்திரிதான் போனாங்க!” என்று அம்மா பட்டும் படாமலும் சின்னச் சின்னக் குடும்பக் தைகளைச் சொல்லிக் கொண்டிருந்தாள்.

 

         அவனுக்குக் குடிக்கக் கோப்பி கலந்து கொடுத்து சில முறுக்கு வகையறாக்களும் எடுத்து வைத்தாள். அத்தை ஒன்றும் சாப்பிடாமல் பேசாமல் உர்ரென்று இருந்தாள்.அப்பா வந்ததும் விசாரணை ஆரம்பமாயிற்று. “அதென்ன அப்படி தீவாளிக்குக் கூட வர முடியாம ஒரு படிப்பு? இந்த உலகம் முளுக்க தீவாளிக்கு லீவு உட்றாங்க! ஒனக்கு மட்டும் லீவு உட்றதில்லியா? வருஷத்துக்கு ஒருநாளு மச்சான் படத்துக்கு சாம்பிராணி போடணும்னு தங்கச்சி எப்படி காத்துக்கிட்டு இருக்குது? ஒன்ன மகன் மாறி வச்சிப் பாக்கில? சோறு போட்ல? காசு குடுக்கில? இப்படித்தான் நன்னி செலுத்திறதா? அப்பாங்கிற மரியாத இல்ல, அம்மாங்கிற மரியாத இல்ல, தாயப்போல வளத்தாளே அத்தைங்கிற மரியாத இல்ல! புள்ளங்க ரொம்ப கெட்டுப் போச்சி!” என்று பினாத்திக் கொண்டே இருந்தார்.நேற்றிரவு கொஞ்சம் பீர் உள்ளே இறங்கிய மயங்கிய நிலையில் அத்தை இந்த வார்த்தைகளை அவர் வாயில் திணித்திருக்க வேண்டும். அது இப்போது கக்கப்படுகிறது எனப் புரிந்து கொண்டான்.“கெட்டுப் போனது மாத்திரமில்ல அண்ண! ரொம்ப துளுத்துப் போச்சி! மீசை வந்திடுச்சி, படிப்பு கொஞ்சம் ஏறிடுச்சி! திமிர் ஏறிப் போச்சி!” என்று அத்தை உடன் வாசித்தாள்.

 

       கணேசனால் சும்மா இருக்க முடியவில்லை. “ஏன் அத்த அதயே திருப்பித் திருப்பிப் பேசிறிங்க! நான் வேணுமானா வராததுக்கு மன்னிப்பு கேட்டுக்கிறேன்! விடுங்க!” என்றான்.கொஞ்ச நேரம் அமைதி நிலவியது. அப்புறம் அப்பா கேட்டார்: “என்னமோ படிப்பு படிப்புன்னு அலையிற. எதுக்கு படிப்பு? படிச்சி வேல பாத்து என்னா அப்படி சம்பாரிச்சி கிளிக்கப் போற! படிக்காதவன்லாம் அந்த பிஸ்னசு, இந்த பிஸ்னசுன்னு ஆயிரம் ஆயரமா சம்பாரிக்கிறான்! படிப்பாம் படிப்பு!”என்ன சொல்லுகிறார் என்று புரியவில்லை. அவருக்கும் தனது படிப்புக்கும் எந்த சம்பந்தமுமில்லை. ஒருநாளும் படிப்பு பற்றிக் கேட்டதுமில்லை. ஒரு காசும் கொடுத்ததும் இல்லை. அப்படிச் சம்பந்தமில்லமல் ஒதுக்கி வைத்திருந்த விஷயத்தை இப்படி இழுத்துப் பேசுவதேன்? அவரை அண்ணாந்து பார்த்தான்.“அத்த ஒரு நல்ல கட வச்சிக் குடுக்கிறேன்னு சொல்லுது, இங்கயே கிள்ளான்லியே! பெரிசா, மினிமார்க்கெட் மாதிரி! நாலு ஆளுங்கள வச்சி நடத்தலாம். உக்காந்து சம்பாரிக்கலாம். என்ன சொல்ற?”அதிர்ச்சியோடு அத்தையைப் பார்த்தான்.

 

     “என்ன அத்தை இது?” என்றான்.“ஆமா. ஒரு மினிமார்க்கெட் வெலைக்கு வருது. நல்ல இடம்னு சொல்றாங்க. அருமையான வியாபாரம். ஒரு நாளக்கி ஆறாயிரம் ஏழாயிரம் வெள்ளிக்கு வியாபாரம் நடக்குதாம். நெறய சரக்கோட தர்ரன்னு சொல்றாங்க! வாங்கிப் போட்டா ஒன்னோட எதிர்காலத்துக்கு நல்லது!” என்றாள்.அவனுக்கு மேலும் அதிர்ச்சியாக இருந்தது. “என்ன சொல்றிங்க அத்தை. என்னோட எதிர்காலத்தப் பத்தி இப்ப என்ன?” என்றான்.“வேறென்னா, அப்பா சொல்ற மாதிரி நீ என்ன படிப்புப் படிச்சாலும் எவ்வளவு சம்பாரிக்க முடியும் சொல்லு. ரெண்டாயிரம் வெள்ளி சம்பாரிப்பியா? இப்பவே மாசத்துக்கு எல்லாச் செலவும் போக அந்த மினிமார்க்கெட்டில 20 ஆயிரம் வெள்ளி சம்பாரிக்கலான்னு சொல்றாங்க. யாரு ஒனக்கு அந்த மாதிரி சம்பளம் குடுப்பாங்க சொல்லு! இப்ப இந்த மாதிரி ஒரு சான்ஸ் இனி நமக்கு வருமா? அதான் இப்பவே வாங்கிப் போட்டு வியாபாரத்தில பூந்திட்டின்னா ஓஹோன்னு இருக்கலாம். அதுக்குத்தான்…!”தன்னை தன் இடுப்பில் கட்டி வைத்துக் கொள்ள அத்தை ஒரு இனிப்பு வலை வரிக்கிறாள் எனத் தெரிந்தது. இருபதாயிரம் முப்பதாயிரம் என்று ஆசை காட்டுவதெல்லாம் தன்னை அவள் கால் விரல்களுக்குக் கீழ் அழுத்திக் கொள்ளப் போடுகிற திட்டம் எனத் தெரிந்தது.

 

      தான் அத்தையிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்காக எத்தனை தீவிரமாகத் திட்டம் தீட்டுகிறேனோ அதைவிடத் தீவிரமாக தன் அடிமைச் சாசனத்தை நீட்டிக்க அத்தை திட்டம் தீட்டுவதாகப் பட்டது. தான் தொடர்ந்து படிப்பது தன் சுதந்திரத்திற்கு வழி வகுத்துவிடும் என்று அத்தை தெரிந்து கொண்டாள். தனக்கு இறக்கைகள் முளைத்துத் தான் தன் சொந்த முயற்சியில் பறப்பது அத்தைக்குப் பிடிக்கவில்லை. ஆகவே தன் பணபலத்தைக் காட்டி அந்த இறக்கையை நறுக்க நினைக்கிறாள்.“அத்தை! என் படிப்பு அடுத்த வருஷம் முடிஞ்சிடும். அது வரைக்கும் எனக்காக நீங்க எந்தத் திட்டமும் போட வேண்டாம். இப்ப அவசரப் பட்டா படிப்பு வீணாப் போயிடும். ஆகவே இந்த விஷயத்தில எனக்கு சம்மதம் இல்ல!” என்றான். அவனுடைய துணிச்சல் அவனுக்கே வியப்பாக இருந்தது.அப்பா கத்தினார்: “நான் என்ன சொன்னேன் தங்கச்சி! இதெல்லாம் சொல் பேச்சு கேக்கிற பிள்ளையா? அதெல்லாம் நாம சொல்றபடி கேக்காது! நல்லதுக்குத்தான சொல்றாங்கன்னு தெரியாது. தலையில திமிர் பிடிச்சிப் போச்சி. எனக்குத் தெரியுமே!” என்றார்.“அப்ப மத்ததயும் சொல்லிடுங்க அண்ண!” என்றாள் அத்தை. அடுக்கடுக்காகத் திட்டங்கள் வைத்திருக்கிறார்கள் என்று தெரிந்தது. இதைப் பற்றி இந்த இரண்டு பேரும் தான் இல்லாத வேளையில் விரிவாகப் பேசியிருக்கிறார்கள் என்றும் தெரிந்தது.

 

        “ஆமா, சொல்லிட வேண்டியதுதான்” என்று தொடங்கினார் அப்பா. “சரி, உனக்குத்தான் தொழிலுக்கு ஒரு நல்ல வழி காட்டுனா வேணாங்கிற. என்னமோ படிச்சி கிளிச்சிட்டுத்தான் மறு வேலங்கிற. எப்படியோ தொலஞ்சி போ. ஆனா இப்ப தங்கச்சியோட மவ எவ்வளவு நாளா காத்திட்டு இருக்கு. அதுக்கும் வயிசாயிக்கிட்டு போவதில்ல! அதுக்கு ஒரு வளி பண்ணிட்டுப் போய்ப் படிச்சிட்டு வா!”என்ன வழி? மல்லிகாவுக்குத் தான் ஏன் வழி சொல்ல வேண்டும்? புரியவில்லை.“என்ன சொல்றிங்க அப்பா? மல்லிகாவுக்கு இப்ப என்ன?” என்றான்.“அதான் வயசுக்கு வந்த பொம்பிள பிள்ளய எவ்வளவு நாள் சும்மா ஊட்டுலயே வச்சிக்கிட்டு இருக்கிறதுன்னு தங்கச்சி கவலப் படுது!”“அதுக்கு?”“உடனே நாள் பாத்து ஒரு கல்யாணத்தப் பண்ணிட்டா அப்புறம் கவல இருக்காது”“யாருக்கும் யாருக்கும் கல்யாணம்?”அத்தை திடீரென்று சீறினாள்: “பாத்திங்களா அண்ண! என்னமோ ஒண்ணும் தெரியாது மாதிரி பேசிறத! அன்னைக்கும் இந்த மாதிரிதான், என்னமோ தனக்கு சம்பந்தமிலாத மாதிரி பேச்சி! நீங்க சொன்ன மாதிரி யுனிவர்சிட்டி போனதில இருந்து பேச்சு நடத்தயெல்லாம் கொஞ்சம் மாறித்தான் போச்சி!”“என்ன சொல்ல வர்ரிங்க அத்த? கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்!”“இன்னும் என்னா வௌக்கமா சொல்றது? சீக்கிரமா அடுத்தடுத்த மாசத்தில மல்லிகாவக் கல்யாணம் பண்ணிக்கிட்டு அப்புறம் போய் படிப்ப முடிச்சிட்டு வான்னுதான் சொல்றேன்!”அதிர்ந்தான். எதற்காக இப்படி அவசரப் படுகிறார்கள்? ஏன் இப்படி அதிவிரைவாகத் திட்டங்கள் தீட்டியிருக்கிறார்கள்? புரியவில்லை. அப்பாவுக்கும் அத்தைக்குமிடையிலான இந்த ரகசியப் பேச்சுகள் தான் நினைத்ததை விட மிகவும் ஆழமாக இருக்கின்றன என்று மட்டும் தெரிந்தது.

 

         “அத்தை! இது என்ன தீடீர்ன்னு இப்படி ஒரு குண்ட போட்றிங்க? கல்யாணத்த பத்தி இப்ப நான் நெனைக்கவே இல்ல. படிப்பு ரொம்ப கஷ்டமா இருக்கு. ஆகவே அது முடிஞ்சி அடுத்த வருஷம் பரிட்சை எழுதி முடிச்சப்புறம்தான் கல்யாணத்தப் பத்தி யோசிக்கணும். எதுக்கு இப்படி திடீர்னு அவசரப் பட்டுச் செய்யணும்?”அப்பா தனது வழக்கமான பாட்டைப் பாடினார்: “நான் சொல்லுல தங்கச்சி? நம்ப சொல்றது ஒண்ணயும் கேக்க மாட்டான். திமிருன்னா அப்படி ஒரு திமிரு!”அத்தை கேட்டாள்: “ஏம் பண்ணிக்கக் கூடாது? உனக்கு என்ன கஷ்டம்? எல்லா வேலயும் நான் பாக்கிறேன். நாள் பாக்கிறதில இருந்து விருந்து ஏற்பாடு, தாலி எல்லாம் நான் செஞ்சுத் தரேன் உனக்கு. நீ ஒரு மூணு நாள் லீவு எடுத்திட்டு வந்து தாலிய மட்டும் கட்டிட்டுப் போ! போய் உன் படிப்பப் பாரு! யாரு வேணாங்கிறா?”“ஏன் இப்படி ஒரு அவசரம் அத்தை? நான் என்ன ஓடியா போயிடப் போறேன்?”“ஓடத்தான விருப்பப் பட்றாப்பில இருக்கு! நாலு எழுத்து படிக்கத் தெரிஞ்சவொடனே எங்க வீடெல்லாம் நாகரிகமில்லாமப் போச்சி! அதான் தீவாளிக்குக் கூட வர விருப்பமில்லாமப் போச்சி! அப்படி மாறிட்ட போது எங்க வீட்டுப் பொண்ண நாங்கதான பாதுகாக்கணும்! அதுக்காகத்தான் சொல்றேன்!”தலைகுனிந்து யோசித்தான்.

 

           அத்தைக்குத் தன் மீது பெரிய அழிக்க முடியாத சந்தேகம் விழுந்து விட்டது. அகிலாவையும் தன்னையும் இணைத்து யாராவது அவளிடம் சொல்லியிருப்பார்களா? இருக்கலாம்! இந்தப் பக்கமிருந்து தனக்குத் தெரிந்த மாணவர்கள் அங்கே பல்கலைக் கழகத்தில் படிக்கிறார்கள். அவர்கள் மூலமாகத் தகவல் வந்திருக்கலாம். அதனால்தான் அத்தை இப்படி கண்ணி வைத்துத் தன்னைப் பிடிக்கிறாள்.என்ன சொல்வது என்று யோசித்தான். தற்காலிகச் சமாதானங்கள் சொல்லி இப்போதைக்கு விடுபடலாம். ஆனால் இதற்காக மேலும் பல பொய்கள் சொல்ல வேண்டி வரும். இப்போதே உண்மையச் சொல்லி விடுதலை வாங்கிக் கொள்ளலாம். இதனால் பூகம்பம் வெடிக்கும். பிரளயம் வரும். ஆனால் உண்மையாலும் உறுதியாலும்தான் இதனைச் சமாளிக்க வேண்டும். அத்தையின் முந்தானையில் தான் முடிந்து வைக்கப்படுவதிலிருந்து அவிழ்த்து வெளியேற இதுதான் நல்ல தருணம்.அகிலா என்னும் அரிய காதலி தன் எதிர்கால வாழ்க்கையை ஒளிமயமாக்க அங்கே காத்திருக்கிறாள். அவளைக் கைப்பிடித்துத்தான் தன் கனவுக் குடும்பத்தை அமைக்க வேண்டும். அது பணமில்லாத, ஆடம்பரமில்லாத வாழ்வாக இருக்கலாம். ஆனால் காதல் தோய்ந்த மனம் ஒன்றித்த வாழ்வாக இருக்கும். இந்த அத்தையின் முரட்டு ஆதிக்கத்திலிருந்து வெளியேற அது ஒன்றுதான் வழி.அத்தையை நேராகப் பார்த்தான். “அத்தை! இந்த கல்யாணத்துக்கு நான் சம்மதிக்க முடியாது!”அத்தை அவனை கனல் கக்கும் விழிகளால் முறைத்துப் பார்த்தாள். “முடியாதா? ஏன் முடியாது? எனக்கு காரணம் சொல்லு!”“ஏன்னா, நான் என்னோட படிக்கிற இன்னொரு பெண்ண விரும்பிறேன்! அதத்தான் கல்யாணம் செய்துக்கப் போறேன்!” என்றான்.வீடு திகைத்திருக்க அப்பா மட்டும் உரத்த குரலில் கூவினார்: “நானு சொன்னனா இல்லியா? அத்தினியும் திமிரு, ஒடம்பு முளுக்கத் திமிரு!

 

         அம்மாவின் முகத்தில் ஏன் இத்தனை கனல் இருக்கிறதென்று அகிலாவுக்குப் புரியவில்லை. தீபாவளியன்று மாலை வரை விருந்தினர் வருகின்ற நேரமெல்லாம் அவர்களோடு புன்னகைத்து உரையாடி உபசரித்துக் கொண்டுதான் இருந்தாள். எல்லாரும் போய் வீடு ஓய்ந்த பிறகு பாத்திரங்களைக் கழுவ ஆரம்பிக்கும் போது உம்மென்று ஆகிவிட்டாள். வீட்டில் ஒருவருடனும் பேசவில்லை. கேட்ட கேள்விகளுக்கு “உம்” “ஊகூம்” என்று முனகலில் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள். தம்பி அருண் எதையோ கேட்கப் போக “போடா, போய் வேலயப் பாரு!” என்று விரட்டினாள்.கணேசன் வந்து போனதற்கும் அம்மாவின் மனமாற்றத்திற்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறதென்று அகிலாவுக்குத் தெரிந்தது. ஆனால் அது ஏன் எனப் புரியவில்லை. கணேசனோடு அம்மா பேச மறுத்து முகத்தைத் திருப்பிக் கொண்ட போதே அவளுக்கு கணேசன் அங்கு வந்திருப்பதில் விருப்பமில்லை என்று புரிந்து கொண்டாள். அப்பா மிகவும் நாகரிகத்துடன் நடந்து கொண்டார். அன்பாக உபசரித்தார். முகமன்களைக் குறைவில்லாமல் செய்தார். ஆனால் அதற்கு மேல் ஒன்றும் பட்டுக் கொள்ளாமல் இருந்தார்.கணேசனை இப்படித் தீபாவளிக்கு வரச் சொன்னது தவறோ என நினைத்தாள். ஆனால் அப்பாவின் உத்தரவின் பேரில்தானே வரவழைத்தாள்! அதுவும் தீபாவளிக்கு முன் கூட்டியே பெற்றோர்களுக்குத் தெரிவித்திருந்தாள். அப்படித் தெரிவித்த போதும் அப்பா “அப்படியாம்மா! அதுக்கென்ன, நல்லா வரட்டும்!” என்று சொன்ன போது அம்மா மட்டும் ஒன்றும் சொல்லாமல் மௌனம்தான் சாதித்தாள்.

 

         அன்று இரவு வீடு களைத்திருந்தது. தீபாவளித் துணிகளைக் களைந்து விட்டு இரவு உடுப்புகளுடன் தொலைக்காட்சி முன்னால் அனைவரும் சோர்ந்து கிடந்த போது அம்மா திடீரென ஆரம்பித்தாள்: “அந்தப் பையன் ஏன் நம்ம வீடு தேடி வரணும்?”அகிலா தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஆழ்ந்திருந்ததால் இந்தக் கேள்வியை அவளால் சரியாகக் கிரகித்துக் கொள்ள முடியவில்லை.“என்ன கேட்ட அம்மா?”“அந்தப் பையன், அதான் உன் ·பிரண்டு, ஏன் இவ்வளவு தூரம் நம்ம வீடு தேடி வரணும்?” குரலில் கோபமும் எரிச்சலும் இருந்தன.அகிலாவுக்கு ஏனோ அப்பாவைப் பார்க்க வேண்டும் போலத் தோன்றியது. ஏறிட்டுப் பார்த்தாள். அவர் பதில் சொல்லவில்லை. அகிலாவே பதில் சொல்ல வேண்டும் என்பது போலத் திரும்பப் பார்த்தார்.அகிலா சொன்னாள். “என்ன கேக்கிற அம்மா? இன்னைக்குத் தீபாவளி! அவர் என் ·பிரன்டு! வீட்டுக்கு வந்ததில என்ன தப்பு? அவரப் போல எத்தனயோ ·பிரண்டுங்க வந்து போனாங்க. அவர் மட்டும் ஏன் வரக்கூடாது?”“மத்த ·பிரண்டுங்க அக்கம் பக்கத்தில உள்ளவங்க. ஏற்கனவே நமக்குத் தெரிஞ்சவங்க! ஆனா கிள்ளான்ல வீடு இருக்கிற பையன், தீபாவளி அன்னைக்கு அவங்க வீட்டையெல்லாம் விட்டுட்டு இங்க முன்ன பின்ன அறிமுகம் இல்லாத ஊருக்கு வரணும்னு என்ன இருக்கு?” தொடர்ந்து கேட்டாள்.

 

      “நாந்தான் வரச் சொன்னேன்! வந்து எங்க வீட்டப் பாத்துப் போங்கன்னு சொன்னேன்! இதில என்ன தப்பு? அவர் வரப் போரார்னு ஏற்கனவே உங்கிட்டியும் அப்பா கிட்டியும் சொல்லியிருக்கேனே!”அப்பா வேடிக்கை பார்த்தவாறிருந்தார். இந்த உரையாடலில் வெளியே இருந்து பார்ப்பதையே விரும்பியவர் போல இருந்தார்.“எனக்கென்னமோ இதல்லாம் நல்லதா படல! முன்ன பின்ன தெரியாதவங்கள இப்படி பெரிசா ஊட்டுக்கு நடுவுல கொண்டு வந்து உக்கார வச்சிக்கிறது அழகா இருக்கா?”“யார் முன்ன பின்ன தெரியாதவங்க? என்னுடைய நண்பர், எனக்குப் பல்கலைக் கழகத்தில உதவி செய்தவர்னு எத்தன தடவ சொல்லியிருக்கேன்?” அகிலாவின் குரலிலும் சூடு ஏறியது.“என்னடி நண்பர்? யுனிவர்சிட்டியில நண்பர்னா அங்கயே வச்சிக்கனும்? ஏன் வீட்டுக்குக் கொண்டு வர்ர? அவங்க குடும்பத்தப் பத்தி தெரியுமா? நல்லவங்களா கெட்டவங்களா என்ன மாதிரி பரதேசிங்கன்னு தெரியுமா? அந்தப் பையனப் பாத்தா சுத்த தோட்டக்காட்டான் மாதிரி தெரியுது. அதுங்களோடல்லாம் உனக்கு என்ன பளக்கம் வேண்டி கிடக்கு?”அம்மாவின் சீற்றமும் இந்த உதாசீன மிக்க பேச்சும் அகிலாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. கணேசன் வந்தது பற்றி அம்மா விருப்பமில்லாமல் இருக்கிறாள் என்று தெரிந்திருந்தாலும் இத்தனை வெறுப்பை அவள் உமிழ்வாள் என்பதை அவள் எதிர்பார்க்கவில்லை.தன்னைத் தற்காக்க அப்பா கூட முன்வராமல் இருந்தது அவளுக்குத் தவிப்பாக இருந்தது.

 

    கணேசனைப் பற்றி அம்மா முரட்டுத் தனமாக வீசும் சொற்களுக்குத் தானும் அதே தீவிரத்தில் பதில் சொன்னால் நிலைமை சூடாகிவிடும் என்று தெரிந்தது. ஆனால் தன் உள்ளத்தில் ஒரு பாசமான இடத்தில் வைத்திருக்கும் கணேசன் என்ற தனது நண்பனை — காதலனை — இப்படி உதாசீனப் படுத்தும் அம்மாவின் போக்கை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என்ன சூடான சொற்களால் பதில் சொல்லுவது என்று அவள் கொஞ்சம் யோசித்துக் கொண்டிருந்த போது அப்பா பேசினார்:“என்ன வனஜா, எதுக்காக இப்படிப் பேசிற? ஒரு நல்ல நாளும் அதுவுமா தன்னோட படிக்கிற நண்பர வீட்டுக்கு வரச் சொல்றதில என்ன தப்பு? நீ பேசிறது எனக்கே சரியா புரியில! பிள்ளைக்கு எப்படிப் புரியும்?”“ஆமா, இப்படி நீங்க எடங்குடுத்து எடங்குடுத்துத்தான் இவ இப்படிக் கெட்டுப் போயிட்டா! அன்னைக்கே அவ இந்தப் பையன வரச்சொல்றன்னு சொன்ன போது அதெல்லாம் வேண்டான்னு நீங்க தடுத்திருக்கனும். அப்படிச் செய்யாம நீங்களும் அவ கூடச் சேந்துக்கிட்டு கொஞ்சிறதினாலதான் அவளும் தலைக்கு மேல போறா!” அப்பாவிடமும் சீறினாள்.

 

      “என்ன பேசிறன்னு எனக்குப் புரியலியே! தீவாளி அன்னைக்கு ஒரு ·பிரண்டு வீட்டுக்கு வந்திட்டுப் போறதுக்கு நீ இப்படி கோவிச்சிக்கிறியே!”“ஏங்க, இந்தப் பையன் வெறும் கூட்டாளி இல்ல, இவங்களுக்கு இடையில என்னமோ இருக்குன்னு உங்களுக்குத் தெரியிலியா? போற போது அந்தப் பையன் இவ கைய பிடிச்சி சொல்லிட்டுப் போற அளவுக்கு இது முத்திப் போயிருக்கு. உங்களுக்கு சம்மதமா இதில? இதெல்லாம் மொளையிலேயே வெட்டி எறிய வேணாமா?”தம்பி தான் பார்த்ததை அம்மாவிடம் சொல்லியிருக்கிறான் எனத் தெரிந்தது. அகிலா அவனை முறைத்தாள். அவன் அப்பாவித் தனமாக தொலைக்காட்சியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.ஆனால் தம்பி இதை உடைத்துச் சொல்லியிருப்பதில் ஒரு நன்மை இருப்பதாகவும் தோன்றிற்று. ஒரு வகையில் கணேசனை வீட்டுக்கு வரச் செய்ததே தன் பெற்றோரின் உணர்வுகளை ஆழம் பார்ப்பதற்குத்தானே! ஆகவே அதுதான் இப்போது நடக்கிறது. கணேசனின் கையைத் தான் பிடித்ததும், அவன் கையைப் பிடித்து அழுத்த அனுமதித்ததும் கூட பெற்றோருக்கும் தெரியட்டும் என்ற மன தைரியத்தில் நடந்ததுதான். ஆகவே தன் மனதைத் திறந்து சொல்ல இது சந்தர்ப்பம்தான் என அவளுக்குத் தோன்றியது. ஆனால் அதைக் கொஞ்சம் மறைமுகமாகவும் மெதுவாகவும் சொல்வது அவசியம் என எண்ணினாள்.“போய்ட்டு வாரேன்னு கை குலுக்கிப் போனாரு. அதுவும் தப்பா?” என்று கேட்டாள்.“இந்த நடிப்பெல்லாம் எங்கிட்ட வேணாம். எனக்குத் தெரியாதுன்னு நெனைச்சிக்காத. நீ அளவுக்கு மீறிப் போற. இதில எனக்குக் கொஞ்சம் கூட இஷ்டமில்ல!”அகிலா தலை குனிந்திருந்தாள். பேசவில்லை.அப்பா பேசினார்.

 

        “என்ன இந்த விஷயத்த இவ்வளவு பெரிசு படுத்திற வனஜா? என்ன தப்பு நடந்து போச்சு இப்போ?”“நீங்க இப்படியே எடங் குடுத்தீங்கன்னா இனிமேதான் நடக்கப் போவுது பெரிய தப்பு. இந்தப் பையன எனக்கு ஒரு துளிக் கூடப் பிடிக்கில. இகவே இந்தப் பளக்கம் வேண்டான்னு சொல்லிருங்க! இல்லன்னா, தன் இஷ்டப்படிதான் செய்வேன்னா இனிமே அவ எங்கிட்ட பேசவே வேணாம். அம்மாங்கிறவ ஒருத்தி வேணான்னு அவ இஷ்டத்துக்குப் பண்ணிக்கிட்டும்!”அம்மா சரேலென எழுந்து அறைக்குள் போய் விட்டாள்.கொஞ்ச நேரம் அந்த இடம் பேச்சடைத்துக் கிடந்தது. அப்பா நாற்காலியில் சாய்ந்து யோசித்தவாறு இருந்தார். தம்பி படம் பார்ப்பதாக நடித்துக் கொண்டிருந்தான். அகிலா அடக்கி அடக்கிப் பார்த்து தவிர்க்க முடியாமல் மெல்ல விம்ம ஆரம்பித்தாள்.“நீ ஏம்மா இப்ப அளுவுற? அம்மா ஏதோ கோபத்தில பேசுது. விட்டுத் தள்ளு!” என்றார் அப்பா ஆறுதலாக.“இப்ப இவ்வளவு பேசிற மாதிரி நான் என்ன குத்தம் செஞ்சிட்டேன் அப்பா?”“எனக்கும் சரியா தெரியில அம்மா! அம்மாவுக்குக் கோவம் தணியட்டும். நான் கேட்டுப் பாக்கிறேன்!” என்றார்.அந்த இறுக்கத்தில் கொஞ்ச நேரம் மௌனமாகக் கழிந்தது. தொலைக் காட்சிப் படத்தின் எல்லா அர்த்தங்களும் அந்த சூழ்நிலையின் தீவிரத்தில் தொலைந்து போக முதலில் தம்பி அங்கிருந்து சத்தமில்லாமல் நழுவி அறைக்குப் போனான். அகிலா தொலைக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தாலும் அவள் மனதில் வேறு குழப்பமான படங்கள் ஓடிக் கொண்டிருந்தன. அப்பாவும் கண்களும் மனமும் குவியாமல் தொலைக் காட்சியை வெறித்தவாறிருந்தார்.அங்கு மேலும் நடப்பதற்கு ஒன்றுமில்லை என்று தெரிந்து கொண்டு அகிலா எழுந்து படுக்கப் போனாள்.

 

         மறுநாள் அவள் பினாங்குக்கு பஸ் ஏற அவளை பஸ் நிலையத்தில் கொண்டு வந்து விட்டார் அப்பா. கூட வரத் தயாரான தம்பி அருணை அவரே வேண்டாம் என்று சொல்லிவிட்டார். “போய்ட்டு வாரேம்மா!” என்று அகிலா கூவிச் சொன்ன போதும் சமையலறையில் இருந்த அம்மாவிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.அரை மணி நேரம் முன்னதாகவே அவளை அவசரப் படுத்தி அழைத்து வந்தார். ஒரு மரத்தடியில் காரைப் போட்டு விட்டு அகிலாவிடம் பேசினார்.“ராத்திரி அம்மாகிட்ட பேசினேன் அம்மா! அது ரொம்ப பிடிவாதமா இருக்கிது!” என்றார்.“என்ன பிடிவாதம் அப்பா?”“அந்தப் பையனோட உனக்குப் பழக்கம் இருக்கக் கூடாதாம். இப்ப இருக்கிற பழக்கத்த முறிச்சிக்க சொல்லுது!”“ஏனாம்?”“தெரில அம்மா. அந்தப் பையனப் பாத்தவொடனே உங்கம்மாவுக்குப் பிடிக்காம போச்சி!”“ஏன் அப்படி? அவர சரியா ஏறெடுத்தும் பாக்கில. ஒரு வார்த்த கூட பேசில. அப்புறம் ஏன் இப்படி சொல்றாங்க?”“எனக்குத் தெரியிலம்மா! உண்மையிலேயே அதோட மனப் போக்கு விளங்கல! அந்தப் பையனப் பார்த்தா நல்ல குடும்பத்துப் பையனா தெரியில, சுத்தத் தோட்டக் காடு மாதிரி இருக்குது அப்படின்னு கன்னா பின்னான்னு பேசுது. நான் சொல்றது எதையும் காதில போட்டுக்க மாட்டேங்குது” பெரு மூச்சு விட்டவாறு காரின் ஜன்னலூடே தெரிகின்ற மரத்தின் கிளையைப் பார்த்தவாறிருந்தார்.

 

          “ஏன் அப்பா, பல்கலைக் கழகத்தில எனக்கு நண்பர்கள்னு சிலர் இருக்கத்தான வேணும்! அவர்கள்ள எனக்கு வேண்டியவர்கள தேர்ந்தெடுக்க எனக்குத்தானே தெரியும்! அம்மா வந்து எனக்குத் தேர்ந்தெடுத்துக் குடுக்க முடியுமா?” அவள் குரலில் கொஞ்சம் கோபம் நுழைந்தது.அப்பா கொஞ்ச நேரம் ஓய்ந்திருந்து கொஞ்சம் தணிந்த குரலில் பேசினார்: “இந்தப் பையன் சாதாரண நண்பர் இல்லன்னு அம்மா நெனைக்குது. உன்னுடைய காதலனா இருக்கும்னு நெனைக்குது. அதனாலதான் இத்தனை ஆவேசம் வருது!”அகிலா மௌனமாக இருந்தாள். அப்பா தலை திருப்பி அவளை நேரடியாகப் பார்த்துக் கேட்டார்: “அது சந்தேகப் பட்றது உண்மையா அகிலா?”உண்மையா? அப்பாவுக்கு என்ன பதில் சொல்வது என்று அகிலாவுக்குத் தெரியவில்லை. அவள் மனமே இன்னும் உறுதிப்படவில்லை போல இருந்தது. கணேசனை எனக்குத் தெரியுமா? அழகன், அறிவாளி, நல்லவன் என்று நினைத்திருந்தேன். ஆனால் முதல் முறை பார்த்த அம்மாவின் மனதில் அவன் இப்படியெல்லாம் தோன்றவில்லை. உதாசீனப் படுத்தத் தக்க தோட்டக் காட்டானாகத் தோன்றியிருக்கிறான். தான்தான் தவறு செய்து விட்டேனோ? எனது தற்காப்புகள் அனைத்தும் இழந்திருந்த ஆதரவற்ற ஒரு அசாதாரண சந்தர்ப்பத்தில் அவனுடைய அறிமுகம் கிடைத்ததால் அறிவு பின்னின்று உணர்ச்சி முந்தி நிற்க கண்டவுடன் காதல் என்று கொண்டு விட்டேனோ?“நீ இப்படி மௌனமா இருக்கிறதப் பார்த்தா அம்மா சந்தேகப் பட்றது சரின்னுதான் நெனைக்க வேண்டியிருக்கு!” என்றார் அப்பா.நிமிர்ந்து பார்த்தாள்.

 

           “பழக்கம் கொஞ்சம் நெருக்கமா இருக்கிறது உண்மைதான் அப்பா. ஆனா அதுக்காக கல்லாணம் வரைக்கும் நான் வந்திட்டேன்னு சொல்ல முடியாது. நல்லவரா இருக்கிறாரு. எனக்கு ஆதரவா இருக்கிறாரு. மனசுக்குப் பிடிச்சவரா இருக்கிறாரு! அவ்வளவுதான்!”“அப்படின்னாம்மா, இப்ப அம்மாவுக்கு இவ்வளவு பிடிக்காமப் போயிட்டதினால நீ பழக்கத்தக் கொஞ்சம் குறைச்சிக்கிட்டு, மற்றவர்களைப் போல அவர ஒரு சாதாரண நண்பராகவே வச்சிக்கியேன். இல்லன்னா அம்மாவோட பகைச்சிக்க வேண்டி வரும். இல்லியா?”அகிலாவுக்கு ஒன்று தெரிய வேண்டியிருந்தது: “அம்மா சொல்றது இருக்கட்டும் அப்பா. நீங்க என்ன சொல்றிங்க?”அப்பா யோசிப்பதற்குக் கொஞ்ச நேரம் எடுத்துக் கொண்டார். அப்புறம் சொன்னார்: “முதல் பார்வையில ஒருத்தரப் பத்தி சொல்ல முடியாது. பையனப் பார்த்தா கொஞ்சம் சாதாரணமாத்தான் இருக்குது. நமக்குத் தெரிஞ்ச நல்ல குடும்பங்கள்ளியே இத விடவும் நல்ல நாகரிகமான படிச்ச அழகான பிள்ளைகள் எவ்வளவோ பேர் இருக்காங்களே. அதோடு கூடம்மா, இந்த விஷயங்கள்ள என்ன விட உங்கம்மாவுக்கு ஒரு உள்உணர்வு இருக்கு. அது முதல்ல சொல்றது தப்புங்கிற மாதிரி பட்டாலும் பின்னால அது சரியா இருந்திருக்கிறத நான் வாழ்க்கையில பல தடவ பாத்திருக்கிறேன். ஆகவே இந்த விஷயத்தில நான் உங்கம்மாவோட உணர்ச்சிக்குத்தான் மதிப்புக் கொடுக்க விரும்புறேம்மா! பரவால்ல நீ யோசிச்சிப் பாரு. நீயும் படிச்ச பிள்ள! உன் விருப்பத்தையும் நான் மதிக்கிறேன். உன் எதிர்காலத்த நீயே தீர்மானிக்கிறதும் முக்கியம்தான். ஆனா குடும்பத்தப் பகைச்சிக்காம அதச் செய்ய முடிஞ்சா எவ்வளவோ நல்லா இருக்கும் இல்லியா?”

 

 

             நெடுஞ்சாலையில் காட்சிகள் நகர்ந்து கொண்டிருந்தன. ஏர் கண்டிஷன் உள்ள பஸ்ஸில் இறுக்க மூடிய ஜன்னல்களிலிருந்து பார்க்கின்ற போது அவை சத்தம் எழுப்பாக ஊமைப் படங்களாகத் தெரிந்தன. அளவாக வெட்டி அலங்காரம் செய்யப்பட்டிருந்த நெடுஞ்சாலை விளிம்புகளில் அழகிய குட்டையான மரங்கள் அணிவகுத்து இருந்தன.அப்பா தன்னை மிகவும் குழப்பி விட்டிருக்கிறார் என அகிலாவுக்குத் தோன்றியது. அம்மா சொன்னது செய்தது எல்லாவற்றையும் விடவும் அப்பா சொன்னதுதான் அவளை மிகவும் பாதித்திருந்தது. அம்மா தன்னைச் சுற்றியுள்ள சமுதாயத்தில் தன் மதிப்பைக் காத்துக்கொள்வதையே ஒரு பெரிய விஷயமாக நினைக்கிறாள். அவளுடைய முதிராத மனதில் இந்த சமுதாயப் பேச்சுதான் வாழ்வு-சாவுப் பிரச்சினையாக முக்கியத்துவம் பெற்று அவள் மூளையில் பாசியாக ஒட்டிக் கொண்டிருக்கிறது.ஆனால் அப்பா தன் முதிர்ச்சியில் சோர்ந்திருக்கிறார். வீட்டின் தலைமைத்துவத்தை அம்மாவிடம் ஒப்படைத்துவிட்டு அவளுடைய புடவை முந்தானையில் தற்காப்புத் தேடிக் கொள்கிறார் என்று தோன்றியது. குடும்பத்தின் பெருமை என்பது அம்மாவின் சொற்படி மூட நம்பிக்கைகள் மிகுந்த வழியானாலும் பாதுகாப்பான பாதைகளில் நடப்பதுதான் என்று ஆக்கிக் கொண்டார்.இந்த இரண்டு பிற்போக்குவாதிகளுக்குத் தானும் தலை குனிந்து போகவேண்டுமா என அகிலாவின் மனம் சீறியது.

 

          தன் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தடுக்கத் தனக்கு எந்த உரிமையும் இல்லை என்பது போலப் பேசுகிறார்களே! தான் படித்ததவள் என்பதையும் நவீனமான எதிர் காலத்தில் வாழப் போகிறவள் என்பதையும் மறந்து விடுகிறார்களே!கணேசனுக்கு என்ன குறை என்று அவர்கள் நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை. அவன் அசாதாரண அழகனல்ல. ஆனால் எந்தப் பெண்ணின் நெஞ்சையும் கவரும் தோற்றமுடையவன்தான். அவனுக்கு நல்ல குணங்கள் இருக்கின்றன. அவன் குடித்தோ சிகரெட் புகைத்தோ அவள் பார்த்ததில்லை. தன் கண்ணுக்குத் தெரியாமல் செய்வானோ என்னவோ தெரியவில்லை. அப்படி இருந்திருந்தால் தெரியாமல் இருந்திருக்காது.அவனைத் “தோட்டக்காட்டான்” என்று அம்மா சொன்னது அகிலாவை வெகுவாகப் புண் படுத்தியது. இது என்ன புதிய இழிஜாதியா? இன்னுமா அவன் தோட்ட வேலைக்காரன்? அவன் படிக்கவில்லையா? நாளை நிர்வாகத் துறையில் பட்டம் பெற்றால் ஆயிரக் கணக்கில் சம்பளம் வாங்கும் அதிகாரம் உள்ளவனாக இருக்கப் போகிறானே. அதையெல்லாம் ஒதுக்கி விட்டு அவன் பூர்வீகம் தோட்டப்புறமாக இருப்பதால் இப்படி எடுத்தெறிந்து பேசுவதா? அவன் என்ன ஜாதி என்பது இந்த நவீன காலத்தில் முக்கியமா?எல்லாம் தெரிந்த அப்பாவும் ஏதோ அவன் நாகரிகமில்லாதவன் என்பது போலத்தானே பேசுகிறார். தனக்குத் தெரிந்த குடும்பங்களில் நாகரிகமுள்ள எத்தனையோ பிள்ளைகள் இருக்கிறார்கள் என்று சொன்னால் கணேசன் நாகரிகமில்லாதவன் என்றுதானே அர்த்தம்! அப்படி என்ன நாகரிகமில்லாதவனாக நடந்து கொண்டான் கணேசன்?கணேசனுடன் தான் பழகியிருக்கும் பல்வேறு சந்தர்ப்பங்களை அகிலா நினைத்துப் பார்த்தாள். அவன் இதுவரை தன்னை ஒரு பூப்போலத்தான் நடத்தியிருக்கிறான்.

 

          தன் எண்ணங்களை மதித்திருக்கிறான். தான் இடம்கொடுக்காமல் அவன் தன்னைத் தொட்டதில்லை. தான் வேண்டாம் என்ற எதையும் தன் மேல் அவன் திணித்ததில்லை.கணேசனுடைய பெற்றோர்கள் ஒருவேளை தோட்டத்திலேயே வாழ்ந்த, பட்டண நாகரிகம் தெரியாதவர்களாக இருக்கக் கூடும். அவர்கள் பழைய தலைமுறை. தன்னால் அவர்களை அனுசரித்துப் போக முடியும். கணேசன் – அகிலா வாழ்க்கை முறையை அவர்கள் தீர்மானிக்க வேண்டியதில்லை. தன் வாழ்க்கையின் மேல் அவர்கள் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்க வேண்டியதில்லை. அதற்குக் கணேசனும் அனுமதிக்க மாட்டான். ஆகவே அவர்களோடு தாங்கள் சமாதான சகவாழ்வு நடத்த முடியும். அதே போலத்தான் தன் பெற்றோர்களும் தன் வாழ்க்கை மீது ஆதிக்கம் செலுத்த அனுமதிக்க வேண்டியதில்லை என அகிலா முடிவு செய்து கொண்டாள்.கணேசனுக்கும் தனக்குமுள்ள காதலால், அன்பால் ஒரு புதிய குடும்பத்தைத் தாங்கள் அமைத்துக் கொள்ள முடியும். அவன் பார்வை கனிவானதாக இருக்கிறது. என் மேல் ஆதிக்கம் செலுத்த அவன் நினைக்கவில்லை. அவன் மேல் ஆதிக்கம் செலுத்த நானும் நினைக்கவில்லை. எங்கள் குடும்பம் அமைதியான இனிமையான இணக்கமான குடும்பமாக இருக்கும். அம்மா – அப்பாவின் பத்தாம் பசலித் தனங்கள் அதில் குறுக்கிடத் தான் அனுமதிக்கக் கூடாது.கிட்டத்தட்ட “நான் என்னோட படிக்கிற இன்னொரு பெண்ண விரும்பிறேன்! அதத்தான் கல்யாணம் செய்துக்கப் போறேன்!” என்று கணேசன் தன் அத்தையிடம் சூளுரைத்த அதே நேரத்தில், கணேசன்தான் தன் வருங்காலக் கணவன் என்ற எண்ணம் அகிலாவின் மனதிலும் உறுதிப் படத் தொடங்கியிருந்தது.

 

 

         அத்தையின் காரில் கிள்ளானுக்குத் திரும்பி வரும் போது கணேசன் வாய் மூடிக் கிடந்தான். காரில் மௌனம் கனத்துக் கிடந்தது. அத்தை முகத்தில் சவக்களைதான் இருந்தது. டிரைவரும் நிலைமையைப் புரிந்து கொண்டு “உம்” என்று ஓட்டி வந்தார்.பகல் முழுவதும் அப்பாவின் வீட்டில் அத்தையும் அப்பாவுமாகச் சேர்ந்து அவனைத் தார்தாராய்க் கிழித்துப் போட்டார்கள். அவனால் அந்த வீட்டின் கூரை இடிந்து விழுந்து விட்டதென்றும் குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லாம் செத்து மண்ணாய்ப் போகப் போகிறார்கள் என்னும் செய்திகளை வெவ்வேறு கடுமையான வார்த்தைகளால் இருவரும் மாறி மாறிச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அடுத்தடுத்த வீட்டுக்காரர்கள் சத்தம் கேட்டு எட்டிப் பார்க்கிறார்களே என்ற நாணம் ஏதும் இல்லாமல் பேசினார்கள்.“யாரு அந்த வேசச் சிறுக்கி? எனக்குக் காட்டு! என்ன சொக்குப் பொடி போட்டு உன்ன மயக்கினான்னு நேரா நாலு வார்த்த கேக்கிறேன்!” என்று அத்தை சொன்ன போது அவனுக்கு கோபம் எரிமலையாகக் குமுறி எழுந்தது. நான் இதயத்தில் சூட்டிய பூவை இப்படிக் குதறுகிறாள். நான் புனிதமானதாக எண்ணிக் காப்பாற்றுகின்ற எண்ணங்களின் மீது எச்சில் உமிழுகிறாள். அவள் குரல்வளையைப் பற்ற வேண்டும் போல் கோபம் வந்தது. ஆனால் பல்லைக் கடித்துக் கொண்டு அமைதியாக இருந்தான். இந்தச் சந்தர்ப்பத்தில் இந்தக் கோபாவேசங்கள் நிலைமையை இன்னும் மோசமாக்கும் என்றுதான் அவனுக்குத் தோன்றியது.இடையே ஓரிரண்டு முறை காதல் என்பதும் கல்யாணம் என்பதும் சம்பந்தப் பட்டவர்களின் சொந்த விஷயம் என்பதை கணேசன் அவர்களுக்கு உணர்த்த முயன்றான். அவர்கள் விவாதக் கூச்சலில் அது விகாரமான பதில்களைத்தான் பெற்றது.

 

         “ஓ, அப்ப இத்தன நாள் எங்கையில காசு வாங்கித் தின்னது ஒன் சொந்த விஷயமா? புஸ்தகத்துக்கு இத்தன வெள்ளி, சாப்பாட்டுக்கு இத்தன வெள்ளின்னு கணக்குப் பாத்து வாங்கிட்டுப் போனது சொந்த விஷயமா?” என்று அத்தை கத்தினாள்.“நன்னி இல்லாத நாய்க்கெல்லாம் இப்படி வாரிக் கொட்டினா இப்படித்தான் பேசும்” என்று அப்பா தாளம் போட்டார்.“அத்த, நீங்க கொடுத்த காச எல்லாம் நான் வேலக்கிப் போயி சம்பாரிச்சி திருப்பிக் குடுத்திட்றேன். நீங்க எனக்கு இன்னமே எந்தக் காசும் கொடுக்க வேணாம்!” என்றான்.“அப்ப இத்தினி நா தின்ன சோத்தயும் திருப்பிக் குடுத்திருவியா? இத்தன நா அவ ஊட்ல இருந்து அவ தண்ணிய குடிச்சி அவ கட்டில்ல படுத்துப் பொரண்டியே, திருப்பிக் குடுத்திருவியா?” என்று அப்பா கேட்டார்.அவனால் பேச முடியவில்லை. ஒரு கட்டத்தில் எரிச்சலடைந்து சோர்ந்து போய் தன் பையை மட்டும் தூக்கிக் கொண்டு வெளியேற முயன்றான்.

 

      “நில்லு, எங்க போற?” என்று அத்தை அதட்டினாள்.“நான் போறேன் அத்தை. இங்க இருந்தா இப்படியே பேசிக்கிட்டே இருப்பிங்க. என்னால எந்த பதிலும் சொல்ல முடியாது. நான் சொல்ல வேண்டியதை சொல்லியாச்சி. அதுல எந்த மாத்தமும் இல்ல. ஆகவே நான் இப்படியே போய் பஸ் பிடிச்சி பினாங்குக்குத் திரும்பிப் போறேன்!” என்றான்.வீடு கொஞ்ச நேரம் அதிர்ந்து இருந்தது. அப்புறம் அத்தை சொன்னாள்: “இதோட முடிஞ்சி போச்சா கணேசு? இப்படி வெளியாயிட்ட எல்லாம் சரியாப் போயிடுமா? அப்ப சரி. ஆனா எம்பிள்ளைக்கு யாரு பதில் சொல்றது? நான் எப்படி அவ மொகத்த பார்த்து ‘ஒன் மாமன் ஒன்ன ஏச்சிட்டு இன்னொருத்தியோட போயிட்டான்னு’ சொல்றது? நீயே வா. இப்பவே எங்கூட வந்து நீயே அவ மொகத்த பாத்து சொல்லிட்டு எங்க வேணுமானா தொலஞ்சி போ!” என்றாள்.கணேசனுக்கு அந்த இடத்தை விட்டு உடனே அகன்று விட வேண்டும் என்றிருந்தாலும் இந்த அத்தையின் முகத்தில் இனி எந்த நாளும் விழிக்க வேண்டாம் என்று இருந்தாலும், இவ்வளவு தூரம் வந்த பிறகு இந்த விஷயத்தை மல்லிகாவிடம் சொல்லாமல் போவது நல்லதல்ல என்றே பட்டது. அவள் எனக்கு எதிரியல்ல. அவளும் என் அன்புக்கு உகந்தவள்தான். அவள் இவர்களைப் போல வயதிலும் உணர்விலும் முற்றிப்போன கட்டையல்ல.

 

       இளம்பெண். இளைய புதிய தலைமுறை. காதல் என்பது என்ன என சொன்னால் அவளுக்குப் புரியும். அதிலும் அத்தையால் இந்த விஷயம் விகாரப் படுத்தப் பட்டும் கொச்சைப் படுத்தப்பட்டும் அவளுக்குச் சொல்லப் படுவதை விட தானே அவளுக்கு இதமாக எடுத்துச் சொல்லலாம். நிலைமையை உணர வைக்கலாம் அதுதான் சரி.அத்தையுடன் மீண்டும் காரில் ஏறினான். ஆனால் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கவில்லை. கிள்ளான் வந்து சேரும் வரை ஒரு பேச்சும் பேசவில்லை. அத்தை பிரயாணம் முழுவதிலும் விம்மி விம்மி அழுது கண்களைத் துடைத்துக் கொண்டே இருந்தாள்.காரிலிருந்து இறங்கியவுடன் “ஏம்மா இவ்வளவு லேட்டா வர்ரிங்க?” என்று மல்லிகா தனக்கே உரிய குழந்தைத் தனத்துடன் சிணுங்கினாள். அத்தை ஒரு பதிலும் சொல்லாமல் கண்களைத் துடைத்துக் கொண்டு உள்ளே போனாள். மல்லிகா புதிர் நிறைந்த கண்களால் கணேசனைப் பார்த்தாள்.கணேசன் வரவேற்பறையில் நாற்காலியில் உட்கார்ந்தான். மல்லிகாவின் முகத்தை உற்றுப் பார்த்தான். அவள் வந்து அவன் பக்கத்தில் உட்கார்ந்தாள். “ஏன் மாமா அம்மா ஒரு மாதிரியா இருக்காங்க? உங்க வீட்டில ஏதாச்சிம் சண்டையா?” என்று கேட்டாள்.அவளைப் பார்க்கும் போது அவள் இன்னும் குழந்தையாகிவிட்டது போலத் தெரிந்தது. தான் சொல்லப் போகும் விஷயத்தை எப்படி எடுத்துக் கொள்வாள்.

 

         “அப்படியா, சரி அதினால என்ன!” என்று தோள்களைக் குலுக்கிக் கொண்டு உதறி விடுவாளா? அல்லது அவள் அம்மா குமுறி எழுந்ததைப் போல எழுந்து ஏசுவாளா? “உன்னால் என் வாழ்வே சூன்யமாகிவிட்டதே” என்று சினிமா பாணியில் அழுவாளா? அவனால் தீர்மானிக்க முடியவில்லை.ஜெசிக்காவுடன் இதைப் பற்றி அவன் ஒருமுறை பேசிய நினைவு வந்தது. கொஞ்சம் தைரியமும் வந்தது.“என்ன மாமா பேசாம இருக்கிங்க?” என்றாள்.அதற்குள் உள்ளே போயிருந்த அத்தை மீண்டும் வரவேற்பறைக்கு வந்தாள். “சொல்லுடா, சொல்லு! உன் வாயாலேயே சொல்லிட்டுப் போ. இத்தன நாள் உன்னோட நெனப்பலியே திரிஞ்சாள்ல, அவ மனசில நெருப்ப அள்ளிக் கொட்டு!” என்றாள்.அத்தையின் முன்னிலையில் இந்த விஷயத்தைப் பேச முடியாது என்று தெரிந்தது. “மல்லிகா இப்படி வா!” என்று அவளை இழுத்துக் கொண்டு தான் வழக்கமாகப் படுத்துக் கொள்ளும் தன்னறைக்குள் அவளை இழுத்துப் போனான். அவனுடைய சாமான்கள் புத்தகங்கள் பல இன்னும் அந்த அறையில் இருந்தன. இவற்றையெல்லாம் வெளிப்படுத்தும் நாள் வந்து விட்டது என்பதுதான் அவன் மனதில் விளைந்த முதல் நினைப்பாக இருந்தது.

 

        மல்லிகா கலவரத்துடன் படுக்கையின் மேல் உட்கார்ந்தாள். அவன் முகத்தைக் கூர்ந்து பார்த்த படி இருந்தாள்.“மல்லிகா, ஒங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லப் போறேன். ஆர்ப்பாட்டம் பண்ணாம அமைதியா கேளு!” என்றான்.“ஏன் அம்மா இப்படிச் சத்தம் போட்றாங்க? அவங்க சொல்றது ஒண்ணும் வௌங்கிலிய! என்ன நடந்திச்சி?” என்று கேட்டாள்.மனதைத் திடப் படுத்திக் கொண்டு சொன்னான்: “மல்லிகா, இன்னக்கி எங்க வீட்டில அத்தை உன் கல்யாணப் பேச்ச எடுத்தாங்க!”“என்ன பேச்சு? என்ன சொன்னாங்க!”“உடனே எனக்கும் ஒனக்கும் கல்யாணம் நடக்கணும்னாங்க!”கொஞ்சம் வெட்கப்பட்டவள் போல் சிறு புன்னகையை இழைய விட்டாள். ஆனால் அது மின்னலாக மறைந்து மீண்டும் அவள் கண்களில் கலவரம்தான் நிறைந்தது.“ஒடனேன்னா, எப்ப?”“இப்பவே, இந்த வருஷமே!”“ஏன் அம்மாவுக்கு இவ்வளவு அவசரம்? அடுத்த வருஷம் உங்க படிப்பு முடிஞ்சவொண்ணதான இதப்பத்திப் பேசிறதா இருந்தது!” என்றாள்.“நான் கல்யாணத்துக்குத் தயாரா இல்ல மல்லிகா!”மல்லிகா கொஞ்சம் அகலமாகவே சிரித்தாள். “எனக்கும் ஒண்ணும் அவசரமில்ல மாமா! இதுதானா பிரச்சின? நான் அம்மாகிட்ட சொல்லிட்றனே, அடுத்த வருஷம் வச்சிக்கலாம்னு!”“அப்படி இல்ல மல்லிகா! அது இல்ல பிரச்னை!”மீண்டும் அவனைக் கலவரத்துடன் பார்த்தாள். “அப்புறம் என்ன பிரச்னை?” என்று கேட்டாள்.அவளுடைய கைகளைப் பிடித்தான்.

 

      “மல்லிகா, நான் ஒண்ணக் கல்யாணம் செஞ்சிக்க முடியாதுன்னு அத்தை கிட்ட சொல்லிட்டேன்!” என்றான்.அதிர்ந்து போனாள். அவளுடைய கண்களில் கண்ணீர் ஊற ஆரம்பித்தது. “முடியாதுன்னா? ஏன் அப்படி…?”“எனக்கு இன்னொரு பெண் இருக்கா, எங்க பல்கலைக் கழகத்தில. நாங்க ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் பிரியப் பட்றோம். அவளத்தான் நான் கல்யாணம் செஞ்சிக்கப் போறேன்”அதிர்ச்சியில் குழம்பிப் போயிருந்தாள். அவனைக் கண் விரித்துப் பார்ப்பதும் படுக்கையை வெறித்துப் பார்ப்பதுமாக இருந்தாள். கண்களில் கண்ணீர் பெருகி வழியத் தொடங்கியது.“மல்லிகா, நான் சொல்றத அமைதியா கேளு! நாம் ரெண்டு பேரும் ஒண்ணா வளந்தவங்க. ஒன்மேல எனக்கு ரொம்பப் பிரியம் இருக்கு. ஆனா ஒன்ன ஒரு தங்கச்சி மாதிரிதான் என்னால நினைக்க முடியுது மல்லிகா!” என்றான்.அவனுக்கு ஒரு பதிலும் சொல்லாமல் அழுதவாறே இருந்தாள். அவள் பேசாத நிலையில் அவன்தான் பேச்சைத் தொடர வேண்டியிருந்தது.“நீயே சொல்லு! என்னைக்காச்சும் உங்கிட்ட நான் தவறாப் பழகியிருக்கேனா? ஒன்ன காதலிக்கிறேன்னு சொல்லியிருக்கேனா? கல்யாணத்தப் பத்தி எப்பவாவது பேசியிருக்கேனா?”மீண்டும் பேச்சில்லை.

 

      “ஒன்ன நான் ரொம்ப விரும்புறேன் மல்லிகா. எனக்கு என்னைக்குமே நீ ஒரு தங்கைதான். அதனாலதான் உங்கம்மோவோட விருப்பத்துக்கு என்னால சம்மதிக்க முடியில!”நீர் குளங்கட்டியிருந்த கண்களால் அவனை நிமிர்ந்து பார்த்தாள். “அப்ப என்ன உங்களுக்கு வேண்டாமா?” என்று தேம்பல்களுக்கிடையில் கேட்டாள்.“நீ எனக்கு வேணும் மல்லிகா. ஒரு தங்கையா இரு!” என்றான்.“என்ன உங்களுக்குப் பிடிக்கிலியா? ஏன் திடீர்னு பிடிக்காம போச்சி? நான் என்ன தப்பு செஞ்சேன்?”“நீ ஒரு தப்பும் செய்யில! ஒன்ன எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. ஆனா….!”“நான் அழகா இல்லியா மாமா? அவ, நீங்க விரும்பிற பொண்ணு இன்னும் ரொம்ப அழகா இருக்கிறாளா?”“சீ! ஒன்னோட அழகுக்கு என்ன கொறச்சல்? அவ ஒண்ணும் பெரிய அழகியில்ல…!”“ஆனா நல்லாப் படிச்சவ, இல்ல? நல்லா பேசத் தெரிஞ்சவ, கெட்டிக்காரி! என்னப் போல படிக்காத முட்டாள் இல்ல!”“ஏன் இப்படிப் பேசிற மல்லிகா. அதெல்லாம் எனக்கு முக்கியமில்ல! இது மனசு சம்பந்தப் பட்ட விஷயம். எங்கள ஒருத்தருக்கொருத்தர் ரொம்ப பிடிச்சிப் போச்சி!”“அப்ப என்னப் பிடிக்கில. இன்னொருத்தியப் பாத்த வொண்ண நான் அவலட்சணமாவும் முட்டாளாவும் போயிட்டனா?”“ஏன் இப்படிப் பேசிற மல்லிகா? அதெல்லாம் இல்ல. உன்ன என் மனைவியா நான் நெனச்சதே இல்ல. இதெல்லாம் எங்க அப்பாவும் உன் அம்மாவும் தாங்களா நெனைச்சிக்கிட்டு பேசிப் பேசி உன் மனசில ஏத்தின நம்பிக்கை. அதை நீ நம்ப வேணாம்!”“அப்பவெல்லாம் பேசாமதான இருந்திங்க! அப்பவே ஏன் அப்படிச் சொல்லல! இவ எனக்கு வேணாம் அவலட்சணம், முட்டாள்னு அப்பவே சொல்லியிருந்தா நான் அப்பவே உங்கள மறந்திருப்பேனே!”கொஞ்ச நேரம் குற்ற உணர்ச்சியில் வாய் மூடி இருந்தான். பின் பேசினான்:

 

       “அப்ப எல்லாம் அத நான் வேடிக்கையாதான் நெனச்சேன். அப்புறம் அது சீரியஸ்னு தெரிஞ்சப்பவும் மறுத்து சொல்ல தைரியம் இல்லாமப் போச்சி. ஆனா இப்ப அதை வெளிப்படுத்திற நேரம் வந்திருச்சி. நான் என்ன செய்ய முடியும் மல்லிகா?”“நான் அவலட்சணம், நான் புத்தியில்லாத முட்டாள்” மீண்டும் மீண்டும் அதையே சொல்லி அழுதாள்.“என்ன மல்லிகா இது! நீ அவலட்சணமும் இல்ல, முட்டாளும் இல்ல. அழகான புத்திசாலியான நல்ல பொண்ணு. உன்னக் கட்டிக்க எத்தனயோ பேர் தயாரா இருப்பாங்க! நானே ஒனக்கு மாப்பிள்ள பாத்துக் கட்டி வைக்கிறேன் பார் மல்லிகா!” என்றான்.“வேணாம், ஒனக்கெதுக்கு அந்த சிரமம்? எனக்கெதுக்கு இனிமே மாப்பிள்ளையும் கல்யாணமும் கருமாதியும். எனக்கு ஒண்ணுமே தேவையில்ல! இனி வாழ்நாள் முழுக்க நான் அவலட்சணமாவும் முட்டாளுமாவே இருந்திட்டுப் போறேன்!” ஓங்கி அழுதாள். அறையிலிருந்து எழுந்து ஓடினாள். வரவேற்பறையில் காத்திருந்த அவளுடைய அம்மாவைக் கட்டிக் கண்டு குலுங்கி அழுதாள்.

 

       “பாத்துக்கிட்டல்லம்மா! உங்க மாமன் எவ்வளவோ நாளா திட்டம் போட்டு வச்சிருந்திருக்கான். எப்படா படிப்பு முடியும், இவங்ககிட்ட இருந்து கறக்கிறதெல்லாம் கறந்துகிட்டு சமயம் வரும் போது எல்லாத்தையும் கைகழுவிட்டுப் போயிடுவோம்னு காத்துக்கிட்டே இருந்திருக்கான். இப்ப பிள்ளை தலை தூக்கியாச்சி, மீசை மொளச்சாச்சி. இந்த படிப்பிறிவில்லாத மூட ஜனங்களோட சகவாசம் வேணான்னு தூக்கிப் போட்டாச்சி! நம்பதான் ஏமாந்த முட்டாள்களா ஆயிட்டோம்!” அத்தை மல்லிகாவை அணைத்துக் கொண்டு பேசிக் கொண்டேயிருந்தாள்.கணேசன் அறையிலிருந்து வெளியே வந்தான். “அத்தை நீங்க என்னக் கொஞ்சம் கூடப் புரிஞ்சிக்காம அசிங்கமா பேசிறிங்க. நீங்க என்ன ஆளாக்கிப் படிக்க வச்சதுக்கு என் தோலச் செருப்பா தச்சிப் போட நான் தயார். அந்த நன்றிய என்னைக்கும் மறக்க மாட்டேன். ஆனா என் தங்கையா நெனச்சிருக்கிற மல்லிகாவ…”அவன் முடிப்பதற்குள் அத்தை சீறினாள்.

 

         “என்ன தங்கச்சி தங்கச்சின்னு இன்னைக்குப் புதிசா ஆரம்பிச்சிருக்கிற? இத்தன நாள் மொறப் பொண்ணு, இன்னொருத்தி வந்தவுடனே தங்கச்சியா? ஒரு நாளாவது அவளத் தங்கச்சின்னு கூப்பிட்டிருப்பியா? என்ன அண்ணன்னு கூப்பிடுன்னு அவளுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கியா? திடீர்னு அண்ணன் வேஷம் போட்றியா?”இந்த அத்தைக்குத் தன் உணர்வுகளை விளக்கிச் சொல்ல முடியாதென்று உறுதியாகிவிட்டது. விளக்கம் சொல்லச்சொல்ல அதை விகாராமாக்கிக் கொண்டிருக்கிறாள். இனி இதை வளர்த்த வேண்டாம் என்று தோன்றியது.“அத்தை, இப்ப நான் என்ன சொன்னாலும் அது எடுபட மாட்டேங்குது. உங்க கோபம் கொஞ்சம் தணிஞ்சவொடனே இதப் பத்திப் பேசுவோம். நான் போயிட்டு வாரேன் அத்தை!” தன் துணிப் பையை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.வாசலில் நின்றான். “மல்லிகா! உன் அழுகையும் அதிர்ச்சியும் தீர்ந்தவொடன அமைதியா நெனச்சிப் பாரு. நான் சொல்றது உனக்குப் புரியும். உம்மேல எனக்கு எந்தக் கோவமும் இல்ல. கொஞ்ச நாள் கழிச்சி நான் போன் பண்றேன். போயிட்டு வாரேன்!” இறங்கி நடந்தான்.

 

        நெடுஞ்சாலையில் அந்த எக்ஸ்பிரஸ் பஸ் காற்றைக் கிழித்துக் கொண்டு போய்க் கொண்டிருந்தது. பினாங்குக்கான பஸ்ஸைப் பிடித்து அவன் ஏறி உட்கார்ந்த போதே மாலை ஆகிவிட்டது. மத்தியானம் அவனுக்கு யாரும் சாப்பாடு போடவில்லை. சாப்பாடு வாங்கிச் சாப்பிட வேண்டும் என்னும் எண்ணமும் மறந்து போயிருந்தது. வழியெல்லாம் உள்ளம் பெரும் குற்ற உணர்ச்சியால் அவதிப் பட்டுக் கொண்டேயிருந்தது.என்ன செய்து விட்டேன்! அமைதியாகப் போய்க் கொண்டிருந்த இந்த இரண்டு குடும்பங்களிலும் அவலப் புயலை எழுப்பியதற்கு நான்தானா காரணம் என்று மனம் கேட்டுக் கொண்டே இருந்தது. அத்தை என்னதான் தந்திரக்காரியாக இருந்தாலும் அவள்தான் தனக்கு அம்மாவாக இருந்து அனைத்தும் செய்தவள். அவள் காண்பித்த உலகத்தில்தான் அவன் இத்தனை நாள் வாழ்ந்து கொண்டிருந்தான். “அத்தை, படம் பாக்கப் போறேன் காசு குடுங்க!” என்று பள்ளிக்கூட நாளிலிருந்து அவளிடம் உரிமையாகக் கேட்டு பழகியிருக்கிறான். இன்று எப்படி அந்த அத்தையை இந்த அளவுக்கு எதிரியாக எண்ண முடிந்தது? எப்படி அவளை எதிர்த்துப் பேசி விவாதிக்க முடிந்தது? எடுத்தெறிந்துவிட்டு வெளெயேற முடிந்தது?மல்லிகாவின் அழுகையில் குளித்த முகம் நினைவுக்கு வந்தது.

 

         எத்தனை முறை இவளைச் சிரிக்க வைத்திருக்கிறேன்! தலையில் குட்டி அழ வைத்த நாட்களில் கூட கிச்சுக் கிச்சு மூட்டி சிரிக்க வைத்திருக்கிறேன். இன்று ஏன் அவளை அழ வைத்தேன்? ஏன் இப்படி எனக்கு அணுக்கமான, எனக்குச் சொந்தமான குடும்பத்தை வருத்தத்தில் ஆழ்த்தினேன்? நான் செய்தது சரியா, பிழையா?“நன்னி இல்லாத நாய்க்கெல்லாம் இப்படி வாரிக் கொட்டினா இப்படித்தான் பேசும்” என்று அப்பா சொன்னது நினைவுக்கு வந்தது.“அப்ப இத்தினி நா தின்ன சோத்தயும் திருப்பிக் குடுத்திருவியா? இத்தினி நா அவங்க ஊட்ல இருந்து அவ தண்ணிய குடிச்சி அவ கட்டில்ல படுத்துப் பொரண்டியே, திருப்பிக் குடுத்திருவியா?”குரூரமான கேள்விகள். ஆனால் அவனால் பதில் சொல்ல முடியாத கேள்விகள். நன்றி கெட்டவன்தானா? ஏன் நன்றி கெட்டேன்? ஒரு புதிய காதலி முளைத்து விட்டதனாலா? அவளுடைய மோகம் என்னை மயக்கி விட்டதா? அதனால் என் அன்புக்குரிய அனைவரையும் பகைத்துக் கொள்ளத் துணிந்து விட்டேனா?மனதின் ஆழத்தில் இன்னொரு குரல் இந்தக் குற்றங்களைச் சரிப்படுத்த முன் வந்தது. இல்லை. இதில் ஒன்றும் நன்றி கெட்ட தனம் இல்லை.

 

        நான் யாரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதை என் மீது திணிக்க யாருக்கும் உரிமை இல்லை. பெற்றோர்களின் வாழ்க்கையிலும் அத்தையின் வாழ்க்கையிலும் நான் இரண்டறக் கலந்திருந்தாலும் என் வாழ்க்கை என தனியாக ஒன்று இனி உருவாக வேண்டும். அது என் விருப்பத்தில் உருவாக வேண்டும். அதில் என் மனைவியாக அகிலாதான் இருப்பாள். அவளை அந்த இடத்திலிருந்து மறுக்க வேறு யாருக்கும் – பெற்றோர்க்குக் கூட – உரிமை இல்லை.ஆனால் இதையெல்லாம் இன்னும் அமைதியாகவும் அவசரமில்லாமலும் அசிங்கப் படுத்தாமலும் செய்திருக்கலாம். அசிங்கப் படுத்தியது நானல்ல. அத்தை இப்படி ஆவேசமாக திருமணப் பேச்சை எடுத்து தன்னை நெருக்காமல் இருந்தால் இதனை இதமாக உரிய காலத்தில் எடுத்துச் சொல்லிச் செய்திருக்கலாம். அத்தையின் முரட்டுப் புத்திதான் அத்தனையையும் இப்போது அசிங்கப் படுத்தியிருக்கிறது.மல்லிகாவை நினைந்து உண்மையிலேயே பரிதாபப் பட்டான். அப்பாவியாக இருந்து தன் அம்மாவின் ஆசை காட்டல்களுக்கு ஆளாகி அந்த ஆசைகளின் ஏமாற்றத்திற்கு இப்போது பலியாகிப் போனாள். “சொல்லுடா, சொல்லு! உன் வாயாலேயே சொல்லிட்டுப் போ. இத்தன நாள் உன்னோட நெனப்பிலியே திரிஞ்சாள்ல, அவ மனசில நெருப்ப அள்ளிக் கொட்டு!” என்று அத்தை அவனை விரட்டியிராவிட்டால் மல்லிகாவிடமும் மென்மையாக இதை எடுத்துச் சொல்லியிருக்க முடியும்.

 

       அத்தை தனக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தின் வெறியில் தன்னைச் சுற்றியுள்ளவர்களின் உணர்வுகளையும் பிய்த்து எறிவது என்று முடிவு செய்து விட்டாள்.“நான் அவலட்சணம், நான் புத்தியில்லாத முட்டாள்” என்று மல்லிகா மீண்டும் மீண்டும் கூறித் தன்னைத் தண்டித்துக் கொண்டது நினைவுக்கு வந்தது. இது திடீர் என்று ஏற்பட்டதல்ல. மல்லிகாவின் உள்ளே நீண்ட நாட்களாகப் புதைந்து கிடந்த தாழ்வு மனப்பான்மை முற்றாக மேலே வந்து அவளை ஆக்கிரமித்துக் கொண்டது தெரிந்தது.அவள் உண்மையில் அழகி. ஆனால் இந்தத் திடீர் நிராகரிப்பு அவளை தன்னைத்தானே பழித்துக் கொள்ளத் தூண்டியிருக்கிறது. அவள் பக்கத்தில் நீண்ட நேரம் இருந்து ஆறுதல் கூறியிருந்திருக்க வேண்டும் என்று அவன் நெஞ்சம் ஏங்கியது. ஆனால் அதற்கு அத்தை கொஞ்சமும் இடம் வைக்கவில்லை. அதற்குரிய சூழ்நிலையை ஏற்படுத்தித் தரவில்லை.அகிலாவை நினைத்தான். அவள் நினைப்பு ஒரு துன்ப நிவாரணிக் களிம்பு போல, ஈரமான மழைத் தூறல் போல, மனதில் படர்ந்தது. அகிலாவை அடைவதற்கான உறுதியான காலடி எடுத்து வைத்தாயிற்று. இனித் திரும்ப முடியாத பயணம். அதிலே ஒரு பெருந் ததடைக்கல்லாக இருந்த அத்தையைத் தாண்டியாகிவிட்டது. சிறு நெருடலாக இருந்த மல்லிகாவையும் ஒதுக்கியாயிற்று. ஆனால் அகிலா…?“இந்தக் காதல் எவ்வளவு தூரம் சரி, எவ்வளவு தூரம் பிழைன்னு தெரியல. ரொம்ப சீக்கிரமா பழகி ரொம்ப சீக்கிரமா முடிவுக்கு வந்திடறோமோன்னு ஒரு சந்தேகம்! இதுக்கு இன்னும் கொஞ்சம் கால அவகாசம் கொடுத்து பின்னால எல்லாத்தையும் உறுதி செய்யலாமேன்னு ஒரு தயக்கம்!” என்று அவள் கூறியது நினைவுக்கு வந்தது.நெடுஞ்சாலையில் இரவு கவிந்திருந்தது. ஏதோ ஓர் ஊருக்குப் பிரியும் சந்திப்பை பஸ் கடந்து கொண்டிருந்தது. அந்தக் கிளைப் பாதை ஏதோ ஓர் இருளடைந்த ஊரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அந்த சந்திப்பில் மட்டும் சில நூறு மீட்டர்களுக்கு பிரகாசமான மஞ்சள் ஹேலோஜன் விளக்குகள் ஒளியுமிழ்ந்து கொண்டிருந்தன. அதைக் கடந்ததும் மீண்டும் இருள் கவிந்தது. கொஞ்ச நேரமாவது தூங்க முடியுமா என்று பார்க்க கணேசன் இருக்கைக்குள் ஆழ்ந்தான்.

 

       மாலையில் அறையில் உட்கார்ந்தவாறு நூலகத்தில் இருந்து கடன் பெற்று வந்த ஒரு கணினிப் பாடநூலிலிருந்து குறிப்புகள் எடுத்துக் கொண்டிருந்தாள் அகிலா. கொஞ்ச நேரம் நூலைப் பார்ப்பதும் அப்புறம் கொஞ்சம் வெறித்து ஜன்னல் கண்ணாடிகள் வழியாக வெளியில் தெரியும் காட்சிகளைப் பார்ப்பதுமாக இருந்தாள். அந்த மலாய் மொழிபெயர்ப்பு நூல் அவளைக் குழப்பிக் கொண்டிருந்தது. எவ்வளவுதான் விரிவுரைகள் மலாயிலேயே நடந்தாலும் இறுதியில் ஆங்கில மூல நூலைப் பார்த்தால்தான் முழு விஷயமும் புரிகிறது. ஆங்கில மூலநூலைத் தேடிக் கிடைக்காததனால்தான் இந்த மலாய் நூலைத் தூக்கி வந்தாள். ஆனால் அவளுக்கு வேண்டிய விடைகள் அதில் கிடைக்காமல் அது அவளை அலைக்கழித்தது.பாடத்தில் மனம் ஈடுபடாமல் இருப்பதற்கு அது மட்டும் காரணமல்ல என்பது அவளுக்குப் புரிந்தது. தீபாவளி முடிந்து அவள் பல்கலைக் கழகம் திரும்பி இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. ஆனால் வந்த நாளிலிருந்து கணேசனைப் பார்க்க முடியவில்லை. அவள் அலோர் ஸ்டாரிலிருந்து திரும்பி பினாங்கில் பஸ் விட்டு இறங்கிய போதே கணேசன் தன்னை அழைத்துப் போக வந்திருப்பானா என்று ஒரு நப்பாசையுடன் எட்டி எட்டிப் பார்த்தாள். அவன் இல்லை. நேற்றுத்தான் தன் வீட்டில் தீபாவளி முடித்துக் கொண்டு கிள்ளானுக்குப் போயிருப்பவன் இத்தனை சீக்கிரம் வந்திருப்பான் என்று எதிர்பார்க்கும் தன் முட்டாள் தனத்தைக் கடிந்து கொண்டாள்.

 

        நசநசவென தூறிக் கொண்டிருந்த மழையில் குளுகோரிலிருந்து துணிப் பையைத் தூக்கிக் கொண்டு நடந்து விடுதிக்குள் வருவதற்குள் அவள் முற்றாக நனைந்து போய்விட்டாள். நடந்து கொண்டிருக்கும் போதே அன்றைக்கு கணேசனுடன் தொப்பரையாக நனைந்து அவன் மோட்டார் சைக்கிள் பின்னால் உட்கார்ந்து அவனைக் கட்டிக் கொண்டு பல்கலைக் கழகத்துக்குத் திரும்பிய நினைவு வந்து கிளுகிளுக்கச் செய்தது.அவளுடைய இந்தியத் தோழிகள் யாரும் பல்கலைக் கழகத்திற்குத் இன்னும் திரும்பியிருக்கவில்லை. அவரவர் ஊர்களிலும் வீடுகளிலும் இன்னும் தீபாவளியைக் கொண்டாடிக் கொண்டிருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டாள். தோழிகள் இல்லாத, குறிப்பாக கணேசன் இல்லாத வளாகம் அவளுக்கு வெறிச்சோடிக் கிடந்தது. வளாகம் திரும்பிய முதல் இரவிலேயே தனிமை உணர்ச்சி தீவிரமாக மேலோங்கி இருந்து. நாளைக்கு எல்லோரும் திரும்பி விடுவார்கள். வளாகம் முன்பு போல கலகலப்பாக இருக்கும் என்று தனக்குச் சொல்லிக் கொண்டாள்.மாலதி மறுநாள் வந்துவிட்டாள்.

 

       காலை விரிவுரை முடிந்தவுடன் சந்தித்து இருவரும் கேன்டீனில் சாப்பிடப் போனார்கள். அகிலா சுற்றுமுற்றும் பார்வையை அலைய விடுவது யாருக்காக என்று மாலதிக்குத் தெரிந்துதானிருந்தது.“என்ன, உங்க ஆள இந்தப் பக்கத்திலியே காணோமே! இன்னும் திரும்பிலியா? திரும்பியிருந்தா பலகாரத்த ஈ மொய்க்கிற மாதிரி இந்நேரம் இங்க வந்திருப்பாரே!” என்று மாலதியே அந்தப் பேச்சைத் தொடங்கினாள்.“தெரியில மாலதி. ஒரே நாள்ள வந்திர்ரேன்னுதான் போனாரு! அத்தை வீட்டில விருந்து ரொம்ப பலம் போல!” என்றாள் அகிலா. மாலதியைப் பார்த்து அது ஒரு வேடிக்கை என்பது போலச் சிரித்தாள். உள்ளுக்குள் மாலதிக்கு மறைத்து உள்ளம் ஏங்கியது.“தீபாவளிக்கு வீட்டுக்கு வந்திருந்தாரா? அந்தக் கதை சொல்லவே இல்லியே!” மாலதி கேட்டாள்.“வந்திருந்தார். என்ன சொல்ல வேண்டியிருக்கு? எல்லா விருந்தாளிகளும் மாதிரி வந்து போனாரு, அவ்வளவுதான்!”“ஏய், மறைக்கிற பாத்தியா! இவர் எல்லா விருந்தாளிகளையும் போல இல்லியே! இவர் ரொம்ப சிறப்பான விருந்தாளின்னு உங்க அப்பா அம்பாவுக்குக் காட்டுறதுக்குத்தான நீ கூப்பிட்டிருந்த?”மாலதியிடம் மறைக்க முடியாது. அதோடு யாரிடமாவது சொல்ல வேண்டும் போல இருந்தது. காதல் செய்திகள் சாம்பிராணிப் புகை போல.

 

        மறைத்து வந்தாலும் பறந்து மூக்கில் நுழைந்து விடும்.“அப்பா அவரப் பார்த்து நல்ல முறையில சிநேகமாத்தான் பேசினார் மாலதி. ஆனா அம்மா அவர்கிட்ட முகங்கொடுத்தே பேசில!”“ஏன்?”“என்னமோ தெரியில! ஒரு காரணமில்லாத வெறுப்பு. நான் அவர அறிமுகப் படுத்தப் பார்த்த போதும் வேணும்னே வெலகிப் போய்ட்டாங்க!”“அப்படியா? அப்ப கணேசன் வருத்தப் படுலியா?”“தெரியில. அப்புறம் அவரோட பேசிற சந்தர்ப்பம் கெடைக்கில. இனி வந்தாதான் கேக்கணும்!”கொஞ்ச நேர மௌனத்துக்குப் பிறகு அகிலாவே சொன்னாள்: “அன்னைக்கு ராத்திரி அம்மா என்னப் பிடிச்சிக்கிட்டாங்க. ஏன் இங்கக் கூப்பிட்டேன்னு திட்டினாங்க. ஆளப் பாத்தா தோட்டக் காட்டான் மாதிரி இருக்கு, எனக்குக் கொஞ்சங்கூடப் பிடிக்கிலன்னாங்க!

 

      ”மாலதியின் முகத்தில் கலவரம் படர்ந்தது. “அப்ப ரொம்ப சீரியசாத்தான் வெறுக்கிறாங்க போல இருக்கு! அப்பா என்ன சொன்னாரு?”“அப்பா மொதல்ல ஆதரவா பேசினாரு. ஆனா கடைசியில ‘இப்ப அம்மாவுக்கு இவ்வளவு பிடிக்காமப் போயிட்டதினால நீ பழக்கத்தக் கொஞ்சம் குறைச்சிக்கிட்டு, மற்றவர்களைப் போல அவர ஒரு சாதாரண நண்பராகவே வச்சிக்கியேன். இல்லன்னா அம்மாவோட பகைச்சிக்க வேண்டி வரும்’ அப்படிங்கிறாரு”“அப்ப ரெண்டு பேரும் வேண்டான்னு சொல்லிட்டாங்களா? அப்புறம் என்ன செய்யப் போற அகிலா?”அகிலா சாப்பாட்டுத் தட்டைப் பார்த்தவாறிருந்தாள். அப்புறம் பேசினாள்: “வந்ததிலிருந்து ரொம்ப யோசிச்சுப் பார்த்திட்டேன் மாலதி. இந்த விஷயத்தில அப்பா அம்மாவோட பிற்போக்குத் தனத்த என்னால ஒத்துக்க முடியில. என்னோட வாழ்க்கைக்கு வேண்டியவர நான் தேர்ந்தெடுக்க எனக்கு உரிமை இல்லியா? ஆகவே நான் கணேசன் மேல உள்ள என் பிரியத்த மாத்திக்கப் போறதில்ல!” என்றாள். அந்தத் தருணத்தில் அந்த உறுதி இன்னும் பலப் பட்டது.“பிரியம்னா… காதல்னு தெளிவா சொல்லேன்!”“ஆமா. காதல்தான். அது என்ன பெரிய குத்தமா?”மாலதி கொஞ்சம் யோசித்துப் பேசினாள்: “எனக்குத் தெரியாதம்மா. இதுவரைக்கும் எனக்கு அப்படி நடந்ததில்ல. என்னப் பாத்து இளிச்ச எந்த ஆம்பிளயும் இதுவரைக்கும் காதல்னு எங்கிட்ட வந்ததில்ல. நானும் அப்படி யாரையும் தேடிப் போனதுமில்ல. எங்க அப்பா அம்மா பாத்து வைக்கிற யாரையும் கட்டிக்கிறதுன்னு நான் முடிவு பண்ணிட்டேன்!”“அப்படின்னா நான் செய்றது தப்புங்கிறியா?”“ஐயோ! அப்படி இல்ல. எனக்குத் தெரியாத விஷயம் பத்தி நான் யாருக்கும் ஆலோசனை சொல்லத் தயாரா இல்லன்னுதான் சொன்னேன்!”கொஞ்ச நேரம் மௌனமாகச் சாப்பிட்டார்கள்.

 

        திடீரென எதையோ நினைத்துக் கொண்டது போல மாலதி கேட்டாள்: “கணேசன் இன்னும் கேம்பசுக்குத் திரும்பி வரலன்னு ஒனக்கு நிச்சயமாத் தெரியுமா?”அகிலா திடுக்கிட்டாள். “ஏன் அப்படி கேக்கிற மாலதி?”“இல்ல, நீ சொல்றதப் பார்த்தா தனக்கு உங்க வீட்டில கிடைச்ச வரவேற்பில கோவமாகி ஒருவேள உன்னப் பாக்க வேண்டான்னு இருக்காரோ என்னமோ”அகிலா கலவரமடைந்தாள். அப்படியும் இருக்குமா?*** *** ***அன்று இரவும் அதற்கடுத்த நாளான இன்றும் கூட கணேசனை வளாகத்தில் காணவில்லை. விரிவுரைக்குப் போய் வரும் போதெல்லாம் அவன் மோட்டார் சைக்கிள் எங்காவது தென்படுகிறதா என்று சுற்றிப் பார்த்தாள். காணவில்லை. அவனுடைய நண்பர்கள் சிலரைப் பார்த்தாள். ஆனால் கணேசனைப் பற்றிக் கேட்க வெட்கமாக இருந்தது.இன்று முழுவதும் விரிவுரைகளில் மனம் செல்லில்லை. செய்ய வேண்டிய எசைன்மெண்டுகள் இரண்டு மூன்று இருந்தன. ஒன்றைக்கூட ஆரம்பிக்க முடியவில்லை. நூலகத்தில் உட்கார்ந்தால் ஒருவேளை கணேசன் வெளியில் இருப்பானோ என்று மனம் தேட வைத்தது. வெளியே இருக்கும் போது ஒருவேளை நூலகத்தின் உள்ளே இருப்பானை என்று தேடவைத்தது.

 

         இன்று முழுவதும் இந்தத் தவிப்பு இருந்து கொண்டே இருந்தது.மாலதி ரொம்பவும்தான் கலவரப் படுத்தி விட்டாள். அப்படி இருக்குமா? கோபித்துக் கொண்டுதான் தன்னை மறைத்துக் கொண்டிருக்கிறானா? அம்மா அன்றைக்கு நடந்து கொண்டது அவனுக்குப் பெரிய அவமானமாகப் பட்டிருக்குமா? அவன் விடைபெற்றுப் போவதற்கு முன் “அவங்களுக்கு டென்ஷன் வரதுக்கு நான் வந்தது காரணமில்லாம இருந்தா சரி!” என்று சொன்னதை நினைத்துப் பார்த்தாள். உண்மையில் கோபப்பட்டுப் பேசினானா? தான்தான் புரிந்து கொள்ளவில்லையோ?அல்லது இன்னும் கிள்ளானிலிருந்து திரும்பவில்லையா?அவள் ஜன்னலுக்கு அப்பால் விடுதிக்கு வரும் குறுகிய சாலை இருந்து. அதில் மோட்டார் சைக்கிள்கள் வந்த போதெல்லாம் அது அவனுடைய மோட்டாரா என்று பார்த்தாள். ஒன்றும் இல்லாத போது தூரத்தில் தெரிந்த குன்றுகளைப் பார்த்தாள். சூரியன் சூடு குறைந்து விழுந்து கொண்டிருந்தது. அடிவானம் சிகப்புச் சாயம் பூசிக் கொள்ளத் தொடங்கியிருந்தது. அது அவளுடைய தனிமையை இன்னும் அதிகப் படுத்தியது.அறைக்குள் இருப்புக் கொள்ளவில்லை. ஆனால் எங்கு போவதென்றும் தெரியவில்லை. நூலகத்துக்குப் போகலாம். ஆனால் பிடிக்கவில்லை.அவள் அறைக் கதவை யாரோ தட்டினார்கள்.

 

         யார்? மாலதி வந்திருப்பாளோ? இருக்காதே! மாலதிக்கு இன்று மாலை டியுடோரியல் இருக்கறதென்று சொன்னாளே!கணேசன்? முடியாது. ஆண்கள் பெண்கள் விடுதிக்குள் அறை ஏறி வர முடியாது. ஒருவேளை கீழே இருந்து ஆள் அனுப்பியிருப்பானோ! ஆசைகள், ஆசைகள். ஆயிரம் ஆசைகளோடு ஓடிக் கதவைத் திறந்தாள். ஜெசிக்கா!ஜெசிக்காவா? எப்படி, ஏன் வந்தாள்? கடைசியாகச் சண்டையிட்டுப் போன பிறகு ஜெசிக்கா ஒரு நாளும் அவளோடு பேசியதில்லை. ஆனால் பின்னால் வேறு காதலனைப் பிடித்துக் கொண்டு கணேசன் மீதுள்ள ஆசைகள் தணிந்து விட்டிருந்த பொழுது அகிலாவைப் பார்த்து ஓரிரு முறை புன்னகைத்து நட்பைக் காட்டிக் கொண்டிருக்கிறாள். ஆனால் ஒரு நாளும் நின்று பேசியதில்லை. இன்றைக்கு ஏன் அறை தேடி வந்தாள்?“ஹாய்” என்றாள் ஜெசிக்கா. அவளுடைய முத்திரைச் சிரிப்பு அப்படியே இருந்தது.

 

       ஹாய் ஜெசிக்கா! என்ன ஆச்சரியம்! திடீரென்று தேடி வந்திருக்கிறாயே!” என்றாள் அகிலா.“இப்படி வந்த உன்னைத் தொந்திரவு படுத்தியதற்கு மன்னித்துக் கொள் அகிலா. ஆனால் உனக்குச் சொல்ல வேண்டிய செய்தி இருக்கிறது” என்றாள். சிரிப்பு மறைந்திருந்தது.“என்ன செய்தி?”“கணேசனைப் பற்றிய செய்தி” என்றாள்.அகிலாவுக்குத் திகீரென்றது. கணேசனுக்கு என்ன? ஏன் இப்படி இவள் செய்தி கொண்டு வர வேண்டும்? “ஏன், அவருக்கு என்ன? எங்கே அவர்?” என்று கேட்டாள்.“பதட்டப் படாதே! கணேசனுக்கு ஒன்றுமில்லை. கிளாங்கில்தான் இருக்கிறார். கொஞ்ச நேரத்திற்கு முன் என்னிடம் ·போனில் பேசினார்!”“என்ன பேசினார்?”ஜெசிக்கா அறையைச் சுற்றிப் பார்த்தாள். பின் பேசினாள்: “நான் நினைக்கிறேன், நாம் கீழே போய் பேசுவது நல்லது. கேன்டீனுக்குப் போவோம். ஒரு ஒதுக்குப் புறமான இடத்தில் உட்கார்ந்து பேசுவோம்!” என்றாள்.“என்னை மிகவும் பயப்படுத்துகிறாய் ஜெசிக்கா. அவசரமான செய்தியாக இருந்தால் இப்போதே சொல்லிவிடு!” என்றாள் அகிலா.“அவசரம் ஒன்றுமில்லை. ஆனால் மிக முக்கிய செய்திதான். வா, தனிமையில் உட்கார்ந்து ஆறுதலாகப் பேசுவோம்!”ஜெசிக்காவை வெளியே இருக்கச் சொல்லிவிட்டு அகிலா உடை மாற்றிக் கொண்டு புறப்பட்டாள். கேன்டீனை நோக்கி மௌனமாக நடந்தார்கள். என்ன செய்தி கொண்டு வந்திருக்கிறாள்? ஏன் இந்த முஸ்தீபும் மர்மமும்? கணேசனுக்கு ஆபத்தில்லை என்று தெரிந்தது. அவன் கிள்ளானிலிருந்து ·போன் செய்திருக்கிறான் என்று தெரிந்தது.

 

        அகிலா தேடுவாள் என்று தெரிந்து தான் இன்னமும் வளாகத்துக்குத் திரும்பவில்லை என்ற செய்தியைச் சொல்லச் செய்திருக்கிறான் என்று தெரிந்தது.ஆனால் அதற்கு மேல் என்ன செய்தி? “இதோடு இந்த உறவு முறிந்தது என்று சொல்லிவிடு” என்று தன் உயிர்த் தோழியை விட்டுச் சொல்லச் செய்திருக்கிறானா? “என்னால் அவள் முகத்தில் முழிக்க முடியாது!” என்று சொல்லியிருக்கிறானா? அம்மாவின் வெறுப்பு இத்தனை தூரத்துக்குக் கொண்டு வந்து விட்டதா? மனம் கற்பனைகளை இரட்டிப்பாக்கிக் கொண்டேயிருந்தது.கேன்டீனில் கூட்டம் இன்னும் சேரவில்லை. ஆளுக்கொரு பானம் வாங்கிக் கொண்டு மிக ஒதுக்குப் புறமான இடத்துக்குப் போனார்கள்.“உன்னிடம் பேச வேண்டும் என்று பல முறை நான் நினைத்ததுண்டு. ஆனால் உன்னோடு நான் சண்டையிட்ட சம்பவம் எனக்கு நினைவுக்கு வந்து எனக்கே வெட்கமாகப் போகும். அதனால் உன்னைச் சந்திக்க எனக்கு தைரியம் வருவதில்லை!” என்றாள் ஜெசிக்கா.அகிலா சிரித்தாள். “உனக்கா தைரியம் இல்லை. இந்தப் பல்கலைக் கழகத்திலேயே நீதான் பெரிய தைரியசாலி என்பதுதான் உண்மை!” என்றாள்.“எல்லா தைரியங்களையும் விட மன்னிப்புக் கேட்பதற்குத்தான் அதிக தைரியம் வேண்டும். என்னை மன்னித்து விடு அகிலா!” என்றாள்.“நான் அதையெல்லாம் மறந்து விட்டேன். நீயும் மறந்து விடு!” என்றாள் அகிலா.“நன்றி. கணேசன் மிக நல்வன். அவனைக் காதலனாக அடைந்த நீ அதிர்ஷ்டசாலி”அகிலாவுக்குப் பொறுமை குறைந்தது.

 

        இதற்காகவா கூப்பிட்டாள்? தன் பழைய காலக் காதல் வாழ்க்கையைச் சொல்லி ஆயாசப் படவா அறையைத் தேடி வந்தாள்? “என்ன ஜெசிக்கா! கணேசனைப் பற்றி முக்கியமான விஷயம் சொல்ல வேண்டு மென்று சொல்லி பழைய விஷயங்களைப் பேசுகிறாயே!”ஜெசிக்கா சிரித்தாள். “அவசரப் படாதே! நிறைய விஷயம் சொல்ல வேண்டியிருக்கிறது!”திடீரென்று ஜெசிக்காவின் இந்த வருகைக்கு ஒரு உள் நோக்கம் இருக்கும் என அகிலாவுக்குத் தோன்றியது. தன் காதலைக் குலைக்கும் ஏதோ ஒரு விஷக் கதையை அவள் சொல்லப் போகிறாள் என்று நினைத்தாள். இவளிடம் மிக கவனமாக இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வு தோன்றியது.“முதலில் கணேசன் நேராக எனக்குப் ·போன் செய்த காரணம் ஐசேக் மாநாட்டுக்கான செயலகத்தில் எங்களுக்கு தனி நேரடி ·போன் இருப்பதால்தான். விடுதியில் உனக்கு ·போன் செய்து பிடிப்பது கடினம். இரண்டாவதாக நீண்ட நேரம் பேச முடியாது. ஆகவேதான் என்னை தூதாக அனுப்பியிருக்கிறார்.”உண்மைதான். விடுதியில் அவளுக்கு ·போன் செய்வதில் பல சிரமங்கள் உள்ளன. ஆனால் என்ன தூது?“மேலும் நான் இன்னும் அவருடைய சிநேகிதியாக இருக்கிறேன். காதலியாக இருக்க ஆசைப் பட்டேன். முடியவில்லை. ஆகவே சிநேகிதியாக இருக்கிறேன். உனக்கு ஆட்சேபனை இல்லையல்லவா?” என்று சிரித்தாள்.“இல்லை ஜெசிக்கா.

 

          உன்னைக் காதலியாக கணேசன் நினைத்திருந்தாலும் நான் குறுக்கே நிற்க மாட்டேன்” என்றாள் அகிலா. ஆனால் அது வேடிக்கைப் பேச்சு என அவளுக்கே தெரிந்தது.“எனக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லை!”“சரி விஷயத்தைச் சொல்!” என்று அவசரப் படுத்தினாள் அகிலா.“கணேசன் சொன்ன செய்தி இதுதான். கணேசன் தீபாவளிக்கு அடுத்த நாள் கிள்ளானிலிருந்து பஸ் ஏறி பினாங்குக்குத் திரும்பி விட்டாராம். இரவு பினாங்கை அடைந்து தன் அறையை அடைந்த போது அவருடைய அறைத் தோழன் பாதுகாவல் அலுவலகம் அவரை பலமுறை அறையில் வந்து தேடியதாகச் செய்தி சொல்ல பாதுகாவல் அலுவலகத்திற்கு அந்த இரவில் அவசரமாகச் சென்றிருக்கிறார். அங்கே கணேசன் உடனடியாக கிள்ளானுக்கு அத்தை வீட்டுக்குப் ·போன் செய்ய வேண்டும் என்று செய்தி சொல்லியிருக்கிறார்கள்!”“ஏன்?” திகிலோடு கேட்டாள் அகிலா.ஜெசிக்கா தனது பானத்தைக் கொஞ்சமாக உறிஞ்சினாள்.“தீபாவளி அன்று இரவு கணேசன் தனது வீட்டுக்குப் போன போது கொஞ்சம் கலவரம் நடந்திருக்கிறது!”“என்ன கலவரம்?”“அவன் தீபாவளி அன்றைக்கு வீட்டுக்கு வரவில்லை என்று சண்டை போட்டிருக்கிறார்கள்”அகிலாவுக்குக் கொஞ்சம் குற்ற உணர்ச்சி வந்தது. தன் வேண்டு கோளினால்தானே அவன் அத்தை வீட்டுக்குப் போகாமல் தன் வீடு வர வேண்டியிருந்தது!“ஆமாம்.

 

         தீபாவளி அன்றைக்குக் காலையில் அலோர் ஸ்டாருக்கு எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார்!”“தெரியும்! எனக்கு எல்லா விவரமும் தெரியும். கணேசனின் அத்தைக்கு ஒரு மகள் இருக்கிறாள் தெரியுமா?”“சொல்லியிருக்கிறார்!”“அவர்கள் இருவருக்கும் அத்தை கல்யாணம் பேசி முடித்திருப்பது தெரியுமா?”அகிலா திடுக்கிட்டாள். இந்த விஷயம் பற்றி கணேசன் சொன்னதே இல்லையே. அத்தை மகள் பற்றிப் பேச்செடுத்த போதும் அதை அலட்சியமாகத்தான் உதறியிருக்கிறான்.“எனக்குச் சொல்லவில்லை ஜெசிக்கா!”அவள் குரலில் இருந்த ஏமாற்றத்தை ஜெசிக்கா புரிந்தது போலப் பேசினாள். “இதோ பார். இதைத் தவறாக எடுத்துக் கொள்ளாதே! அத்தைக்கு இப்படி ஒரு எண்ணம் இருந்தாலும், மல்லிகாவுக்கும் அந்த ஆசை இருந்தாலும், கணேசனுக்கு அந்த எண்ணம் ஒரு நாளும் இல்லை. என்னிடம் பல முறை அதைச் சொல்லியிருக்கிறார்!”“சரி, அதற்கென்ன இப்போது? என்ன ·போன் கால் வந்தது என்று சொல்!”“அவசரப் படாதே, சொல்கிறேன்! தீபாவளி அன்று அத்தை திருமணப் பேச்சை எடுத்திருக்கிறார். உடனடியாக மல்லிகாவைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தியிருக்கிறார். கணேசன் அதை உறுதியாக மறுத்திருக்கிறார். அவர் உன்னைத்தான் கல்யாணம் செய்து கொள்ளப் போவதாகவும் அவர்களிடம் வெளிப்படையாகக் கூறியிருக்கிறார்!”அகிலாவுக்குக் கலவரமாக இருந்தது.

 

       கணேசன் குடும்பத்தில் ஒரு சண்டை உண்டாகத் தான் காரணமாக அமைந்து விட்டோமே என்ற வருத்தம் வந்தது. ஆனால் கணேசனின் உறுதி மகிழ்ச்சியைத் தந்தது. தான் அம்மாவின் பேச்சைக் கேட்டு அதற்கு எதிரிடையாக முடிவு எடுத்ததைப் போலத்தான் கணேசனும் செய்திருக்கிறான் என்பது நிம்மதியாக இருந்தது.ஆனால் அந்தக் தையெல்லாம் ஏன் இந்த ஜெசிக்காவிடம், அதுவும் ·போனில்…?“அத்தையிடமும் மல்லிகாவிடமும் அந்த முடிவைச் சொல்லி விட்டுத்தான் பஸ் ஏறி இங்கு வந்திருக்கிறார். வந்து சேர்ந்தவுடன்தான் ·போன் செய்தி வந்திருக்கிறது!”“என்ன செய்தி!”“கணேசன் முன்னரேயே இந்த விஷயத்தை என்னிடம் ஒரு முறை சொல்லியிருக்கிறார். நான்தான் இதெல்லாம் வெறும் மிரட்டல் என்று தட்டிக் கழித்தேன்!” என்றாள் ஜெசிக்கா.“என்ன மிரட்டல் ஜெசிக்கா? யார் மிரட்டினார்கள்? தெளிவாகச் சொல்!”“அந்த அத்தை மகள் மல்லிகா முதலிலேயே ஒரு முறை கணேசன் தன்னைத் திருமணம் செய்து கொள்ளாமல் போனால் விஷத்தைக் குடித்து இறந்து விடுவேன் என்று மிரட்டியிருக்கிறாள். ஆனால் கணேசன் அதை ஒரு வேடிக்கையாக எடுத்துக் கொண்டார்”திகில் புகுந்த மனதுடன் அகிலா கேட்டுக் கொண்டிருந்தாள்.“அந்தப் பெண் அன்றிரவு சொன்னது போலச் செய்து விட்டாளாம். ஏதோ வீட்டிலிருந்த விஷத்தைக் குடித்து விட்டாளாம். இரவில் தூக்கிச் சென்று மருத்துவ மனையில் சேர்த்து விட்டுப் ·போன் செய்திருக்கிறார்கள். அதைக் கேட்டதும் கணேசன் இரவோடு இரவாக மோட்டார் சைக்கிளிலேயே கிள்ளானுக்குப் போய்விட்டார்!”அகிலா உறைந்து போய் ஜெசிக்காவை வெறித்துப் பார்த்தவாறிருந்தாள்.

 

       “கவலைப் படாதே! அவள் உயிரைக் காப்பாற்றி விட்டார்கள். கணேசன் நாளைக்கு அல்லது நாளன்றைக்குத் திரும்பி விடுகிறேன் என்று சொல்லச் சொன்னார்”என்ன சொல்வதென்று தெரியவில்லை. முதலில் வந்த திகில் கொஞ்சம் அகன்ற போது உள்ளத்தைப் பெரிய கருமேகம் போலத் துக்கம் வந்து கவ்வியது. ஏன் தான் புனிதம் என்று நம்பிக் கொண்டிருக்கும் நட்பு இவ்வளவு மூர்க்கமான எதிர் விளைவுகளைத் தோற்றுவிக்கிறது? ஏன் உறவுகளையும் மனிதர்களையும் பலி கொள்ளுகிறது? என்ன செய்து விட்டோம் இருவரும்? பெரும் குற்றம் செய்து விட்டோமா?அகிலா முகத்தைப் பொத்திக் கொண்டு ஜெசிக்காவின் முன் அழ ஆரம்பித்தாள்.***

 

       மருத்துவமனைக் கட்டிலின் விளிம்பில் கைகளைக் கோர்த்துக் கொண்டு தலையை அதில் சற்று நேரம் சாய்த்ததில் கணேசனுக்குத் தூக்கம் சுழற்றி அடித்தது. இரண்டு நாட்களாகச் சரியாகத் தூக்கம் இல்லை. மருத்துவ மனையில் வார்டில் அடிக்கடி எழுந்து நடப்பதும் கட்டிலுக்கு அருகில் உட்கார்ந்து மல்லிகாவின் முகத்தை ஏக்கத்தோடு பார்ப்பதும், வெளியே போய் கேன்டீனில் ஏதாவது கிடைத்ததை அவசரமாகச் சாப்பிட்டு விட்டு அவள் கண் விழித்து விட்டாளா என்று பார்ப்பதற்காக மீண்டும் லி·ப்டில் ஏறி ஓடி வருவதுமாக இருந்தான்.மல்லிகா எந்த நேரமும் மீண்டும் கண் விழிக்கலாம் என அவளை மாறி மாறி வந்து பார்த்த இரண்டு டாக்டர்களும் சொல்லியிருந்தார்கள். ஏற்கனவே இரு முறை விழி திறந்து ஓரிரு விநாடிகள் பார்த்து விட்டு மீண்டும் மயங்கிப் போனாள். குடலிலிருந்து விஷம் எல்லாம் வெளியாகிவிட்டது என டாக்டர்கள் கூறியிருந்தார்கள். நுரையீரலுக்கு காற்று சீராகப் போய் வந்து கொண்டிருந்தது. அவள் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. ஆனால் தொண்டையின் உள் ஓரங்கள் புண்ணாயிருக்கின்றன என்று டாக்டர் சொல்லியிருந்தார். அந்தப் புண் நாளாவட்டத்தில் ஆறிவிடும் என்று கூறியிருந்தார்கள். இப்போதைய முக்கிய சிகிச்சை அவள் இதய ஓட்டத்தைச் சீராக்குவதற்காகத்தான் என்று சொல்லிப் போனார்கள்.கொஞ்ச நேரம் முன்புதான் அத்தை வீட்டுக்குத் திரும்பிப் போனாள்.

 

      “எதுக்கும் வீட்டுக்குப் போயி கொஞ்சம் கோழி சூப் வச்சி எடுத்திட்டு வந்திர்ரேன் கணேசு. புள்ள கண்ண முழிச்சவொண்ண கொஞ்சம் சூப் வாயில ஊத்தலாம்” என்று சொல்லிவிட்டுப் போனாள். அப்பாவும் அம்மாவும் நேற்றிரவு முழுக்க மருத்துவ மனையில் இருந்து விட்டு இன்றைக்குத்தான் எஸ்டேட்டுக்குத் திரும்பியிருந்தார்கள்.முந்தாநாள் இரவு பினாங்கு – கோலாலம்பூர் நெடுஞ்சாலையில் நான்கு ஐந்து மணி நேர மோட்டார் சைக்கிள் பயணம் அவன் உள்ளத்தையும் உடலையும் உலுக்கிப் போட்டிருந்தது. இரண்டு ஓய்விடங்களில் பெட்ரோல் போட நிறுத்திய சந்தர்ப்பங்களில் அத்தை வீட்டுக்குப் ·போன் செய்து பார்த்தான். ஒரு பதிலும் இல்லை. முன்னிரவில் பினாங்கிலிருந்து போன் செய்த போது அவன் ·போனை எதிர்பார்த்து பதில் சொல்வதற்கென்று பக்கத்து வீட்டுக்காரர் ஒருவரைதன் வீட்டில் காவல் வைத்துப் போயிருந்தாள் அத்தை. அவர்தான் மல்லிகா பற்றிய விஷயத்தைச் சுருக்கமாகச் சொன்னார்.“துங்கு அம்புவான் ரஹிமா ஆஸ்பத்திரிக்குத்தான் கொண்டு போயிருக்காங்க. தம்பி ·போன் பண்ணா நேரே அங்க வந்திரச் சொன்னாங்க!” என்று மட்டும் அவர் சொன்னார். பின்னர் கடமை முடிந்தது என்று அவரும் போய்விட்டார். அப்புறம் ·போனை எடுத்துப் பேச வீட்டில் யாரும் இல்லை.

 

       மல்லிகா உயிரோடு இருக்கிறாளா இல்லையா என்ற தகவல் தெரியாத அந்த ஐந்து மணி நேரமும் அவன் மனம் புயலாக இருந்தது. அந்த நெடுஞ்சாலையில் அந்த நடு நிசியில் பேய்க்காற்று முகத்தில் அறைந்து கொண்டிருக்க அவன் மோட்டார் சைக்கிள் என்ஜின் போலவே அவன் மனமும் இடைவிடாது ஓங்கி ஓலமிட்டவாறு இருந்தது.“என்ன செய்து விட்டாய்? என்ன செய்து விட்டாய்?” என்று மனம் குத்திக் குத்தி கேட்டவாறு இருந்தது. “என் அன்புக்கினிய ஒரு உயிரை நானே வதைத்து விட்டேனா?” என்ற கேள்வி எழுந்து அவனைக் குற்ற உணர்ச்சியில் ஆழ்த்தியது. ஏற்கனவே எச்சரித்திருக்கிறாள். சாமி சாட்சியா, எங்கம்மா சாச்சியா நான் ஒங்களத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன். அப்படி ஒரு வேள நீங்க எனக்கு புருஷனா கிடைக்காமப் போனா நான் தற்கொலை பண்ணிக்கிட்டு செத்தே போயிடுவேன் மாமா! இது சத்தியம், இது சத்தியம்!” என்று தெளிவாகக் கூறியிருக்கிறாள். இருந்தும் என் காதல் மூர்க்கத்தில் அதை நான்தான் அலட்சியம் செய்து விட்டேன்.ஹெல்மெட்டுக்குள் வழிகின்ற கண்ணீரை அவன் துடைத்துக் கொள்ள வேண்டியிருந்தது.“இல்லை இது என் குற்றம் இல்லை! அத்தை வளர்த்துவிட்ட இந்த ஆசைகளுக்கும் மல்லிகா வளர்த்துக் கொண்ட ஒரு தலைக் காதலுக்கும் நான் பொறுப்பில்லை” என்ற ஒரு தற்காப்பு வாதமும் எழுந்தது.“இருந்தாலும் மல்லிகாவின் மென்மையான மனதைப் புரிந்து கொள்ளாமல் அலட்சியமாக அவளிடம் முடிவைச் சொல்லிக் கை கழுவி வந்தது உன் குற்றம்தான். அவள் செத்தால் நீதான் அதற்குக் காரணம்” என்று மனத்தின் இன்னொரு பகுதி எதிர் வாதம் செய்தது.

 

       கோபத்திலும் தாபத்திலும் மனம் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது.விடியற்காலை நான்கு மணிக்கு அவன் கிள்ளானை அடைந்து ஆஸ்பத்திரியை அடைந்து இரவு நர்சிடம் விவரம் சொல்லி அறுவை சிகிச்சை வார்டை அடைந்த போது அத்தையுடன் அப்பா அம்மாவும் இருந்தார்கள். அத்தை அவனைக் கண்டதும் ஓவென்று அழத் தொடங்கினாள். அவளைத் தோளைப் பிடித்து ஆறுதல் சொல்லி என்ன நடக்கிறது என்று கேட்டான். “வயித்தக் களுவுறாங்களாம் அப்பா! ஒண்ணும் விவரமா சொல்ல மாட்டேங்கிறாங்க! வந்தவொடன உள்ளுக்குக் கொண்டு போயிட்டாங்க. இங்கதான் உக்காந்து காவல் காத்துக்கிட்டு இருக்கோம். பாவிப் பொண்ணு இப்படி பண்ணிட்டாளே! எனக்கு ஒரே பிள்ளையாச்சே!” என்று அத்தை அழுதாள்.கொஞ்சங் கொஞ்சமாக அவளிடமிருந்து வந்த வார்த்தைகளில் தான் கிள்ளானில் இருந்து புறப்பட்டுப் போனவுடன் மல்லிகா தன் அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டதாகவும், நீண்ட நேரம் சத்தமில்லாமல் இருப்பதைக் கண்டு பக்கத்து வீட்டுக்காரர்கள் உதவியுடன் கதவை உடைத்துப் பார்த்த போது தோட்டத்துக்குத் தெளிக்கும் பூச்சி விஷ போத்தலுடன் வாயில் நுரை தள்ள கைகால்கள் வலித்துக் கொண்டு அவள் கிடந்ததாகவும் உடனே அவளைக் காரில் ஏற்றி இங்கு கொண்டு வந்ததாகவும் தெரிந்தது.அப்பா கனல் கக்கும் விழிகளுடன் உட்கார்ந்திருந்தார். அம்மா வழக்கம் போல் பயந்து போய் ஒரு மூலையில் ஒடுங்கியிருந்தாள்.

 

         இருவரும் அவனிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை. அத்தை கூட மல்லிகாவின் இப்போதைய நிலைமையைப் பற்றிப் பேசியதைத் தவிர்த்து இதற்கு முன் நடந்த எந்த விஷயத்தைப் பற்றியும் பேசவில்லை.ஒரு வகையில் அந்த மௌனம் ஆறுதலாக இருந்தாலும் அவர்கள் பேசாமல் உள்ளுக்குள் அடக்கிக் குமுறிக் கொண்டிருந்த அந்த எண்ணங்கள் அவனுக்குத் தெரிந்தன. அவன் அவர்கள் உள்ளத் திரையில் ஒரு கொலைகாரனாக உலவி வருவதை அவனால் ஊகிக்க முடிந்தது. உண்மையா? தான் கொலைகாரனா? இப்படி நடந்து விட்டதற்கெல்லாம் தேனே காரணமா? அவனுக்கே சரியாகத் தெரியவில்லை.அன்றிரவும் மறுநாள் பகல் முழுவதும் மல்லிகா கோமாவில் இருந்தாள். அவளுக்குத் தொடர்ந்து செலைன் ஏற்றிக் கொண்டிருந்தார்கள்.மறுநாள் இரவு இரண்டு முறை முனகிக் கண் விழித்து மீண்டும் மயக்கத்தில் ஆழ்ந்து விட்டாள். பக்கத்தில் இருப்பவர்கள் யாரையும் அவள் தெரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. மண்ணிலிருந்து பிடுங்கிப் போட்ட செடி போல வாடிப் போய்க் கிடந்தாள்.

 

         முதல் நாள் காலையில் ஒரு இந்தியப் போலிஸ்காரர் வந்து விசாரித்தார். பெயர் எல்லாம் கேட்டு எழுதிக்கொண்டு எப்படி நடந்தது என்று கேட்டார். “இல்லங்க, பொண்ணுக்கு இருமல் இருந்திச்சி. இருமல் மருந்துன்னு நெனச்சி இந்த பூச்சி மருந்த எடுத்துச் சாப்பிட்டிடிச்சி, வேற ஒண்ணும் இல்ல” என்று அத்தை அவசரம் அவசரமாக விளக்கம் கொடுத்தாள்.“இது என்ன காதல் தோல்வியா?” என்று கேட்டுச் சிரித்தார் அவர்.“அய்யோ அப்படியெல்லாம் ஒண்ணுமில்லிங்க!” என்றாள் அத்தை.“பரவால்லம்மா, சொல்லுங்க! ஒரு மாசத்துக்கு எப்படியும் ஒரு கேசு ரெண்டு கேசு பாத்துக்கிட்டுத்-தான இருக்கிறோம்! அதிலியும் நம்ப புள்ளைங்கதான் ஆ ஊன்னா விஷத்த தூக்கிக்கிறாங்க! இருமல் மருந்துக்கும் விஷத்துக்கும் வித்தியாசம் தெரியாம இருக்கிறதுக்கு என்ன இது சின்னக் கொழந்தயா?” என்றார் அவர்.அத்தை தயங்கிச் சொன்னாள்: “கேஸ் கீஸ்னு ஆவாம பாத்துக்கணுங்க!”“அதெல்லாம் ஆகாது. எல்லா கேசயும் கோர்ட்டுக்குக் கொண்டு போறதின்னா எங்களுக்கு வேற வேலயே செய்ய முடியாது! உண்மையச் சொல்லுங்க. பதிஞ்சு வச்சிக்கிறோம். இதுக்கு மேல கேஸ் ஒண்ணும் இல்லாம பாத்துக்கிறோம்!” என்றார்.“ஆமாங்க! ஒரு பையன விரும்பிச்சி. அது நடக்கலேன்னவொண்ண ஒரு கோவத்தில இப்படி செஞ்சிடிச்சி!”“நீங்க முடியாதின்னிட்டிங்களா? அந்தப் பிள்ளய அடிச்சிங்களா?”“அய்யோ அப்படியெல்லாம் இல்லிங்க. இது கொஞ்சம் குழப்பமான விஷயம்!” ஒரு முறை கணேசனைப் பார்த்து விட்டு அத்தை அமைதியானாள்.என்ன மருந்து குடித்தாள், ஏன் வீட்டில் இருந்தது, என்றெல்லாம் கேட்டு எழுதிக் கொண்டு அவர் போய்விட்டார். போகும் போது கணேசனைப் பார்த்து “இந்தப் பையனா?” என்று கேட்டார். யாரும் அவருக்கு பதில் சொல்லவில்லை. “இந்த இந்தியர்கள் எந்த நாளும் திருந்த மாட்டார்கள்” என்பது போலத் தலையாட்டிவிட்டு அவர் போய்விட்டார்.

 

       மருத்துவ மனையில் மல்லிகாவுடன் தனித்து இருந்த போது அவன் மனம் அலை மோதியது. அவள் துவண்டு போய்க் கிடந்தாள். பெண்மை அழகென்று ஒன்றும் இல்லாத சோர்ந்த தசைப் பிண்டமாய்க் கிடந்தாள். தலை முடி அலங்கோலமாக இருந்தது.எப்படி இருந்தவள்! எப்படி ஆடி ஓடிக் குதித்துத் திரிந்தவள்! எத்தனை துடுக்கான வாய்ப்பேச்சு! எத்தனை ஆசைகளைத் தேக்கி வைத்திருந்த மனது! இப்போது அவை எதையும் பற்றிய பிரக்ஞை இல்லாமல் கிடக்கிறாள். இவ்வளவு தீவிரமான ஆசைகளைத் தேக்கி வைத்துக்கொண்டு வாழவேண்டும் என்று துடிக்கின்ற ஒரு பெண்ணுக்கு அந்த வாழ்க்கையை பட்டென்று முடித்துக்கொள்ள வேண்டும் என்ற துணிவு எங்கிருந்து வருகிறது? ஏன் இப்படிச் செய்தாய் மல்லிகா? என்ன நினைத்து இப்படிச் செய்தாய்?நான் ஒருவன் உனக்குக் கணவனாய் வாய்க்காவிட்டால் என்ன? உனக்குக் கணவனாக வர எத்தனையோ பேர் காத்திருப்பார்களே! ஏன் என்னை மட்டும் உயிர்க்கொம்பாய்ப் பிடித்தாய்? ஏன் என்னையே பற்றிக் கொண்டாய்? நான் வேறு ஒரு கொடி என்மீது படர இடம் கொடுக்க விரும்புகிறேன். உனக்குப் பற்றிக் கொள்ள இன்னும் எத்தனையோ கொம்புகள் உண்டே! என்னிலிருந்து உன்னைப் பிய்த்துப் போட வைத்தாயே! உன்னைக் கொலை செய்ய முயன்ற குற்றவாளியாய் என்னையே ஆக்கி விட்டாயே!அவன் கண்களில் கண்ணீர் படர்ந்தது.திடீரென்று மல்லிகா அசைந்தாள். முனகினாள். கண்களை சிரமப்பட்டுத் திறந்தாள். அவள் கையைப் பற்றினான் கணேசன். கண்களை விழித்து வெறுமையாகப் பார்த்தாள். “யாரு?” என்று கேட்டாள்.“நாந்தான் மல்லிகா” என்றான்.

 

          “மாமா! கண்ணு சரியா தெரிய மாட்டேங்குதே!” என்றாள். சொல் குழறலாக இருந்தது. அவள் பேசுவதைப் புரிந்து கொள்ள சிரமப் படவேண்டியிருந்தது. இடது கையை மட்டும் தூக்கி அவன் கைகளைத் தடவினாள்.“இப்பதான விழிச்சிருக்கே. ஓய்வெடுத்துக்க!” என்றான்.“தண்ணி வேணும்!” என்று ஈனசுவரத்தில் சொன்னாள்.அவன் எழுந்து தாதியைக் கூப்பிட்டான். ஒரு மலாய் தாதி வந்தாள். மல்லிகாவின் தலையை ஒரு கையால் தாங்கியவாறு அவளுக்குத் தண்ணீர் கொடுத்தாள். மீண்டும் படுக்க வைத்தாள். “மறுபடி தண்ணீர் கேட்டால் தாராளமாகக் கொடுக்கலாம். தண்ணீர் குடிப்பது நல்லது” என்று சொல்லி மீதியிருந்த தண்ணீரை கண்ணாடிப் பாத்திரத்தோடு அங்கேயே வைத்துச் சென்றாள்.மல்லிகா அவனைப் பார்த்து பலவீனமாகப் புன்னகைத்தாள். அவள் கைகளைப் பாசத்தோடு மீண்டும் இறுக்கினான். இடது கையால்தான். வலது கை படுக்கை மீதே கிடந்தது.“எப்படியிருக்கு மல்லிகா?” என்றான்.“அதான் நான் பொழச்சிக்கிட்டேனே! இனிமே நல்லாத்தான் இருப்பேன்! இப்பதான் உங்க முகம் லேசா தெரியுது. ஆனா கண்ண ஏதோ மறைச்சிருக்கிற மாதிரி இருக்கு” என்றாள். அவளையே பார்த்திருந்தான்.“அம்மா எங்கே?” என்று கேட்டாள்.“வீட்டுக்குப் போயிருக்காங்க. சூப் பண்ணி எடுத்துக்கிட்டு வர்ரேன்னு சொன்னாங்க! இப்ப வந்திருவாங்க!”விழிகளைச் சுழல விட்டு கொஞ்சம் மருண்டாள். “எந்த ஆஸ்பத்திரி?”“துங்கு அம்புவான் ரஹிமா!”“எப்ப வந்தேன்?”“ரெண்டு நாளாச்சி!”“ரெண்டு நாளாச்சா?” களைத்துக் கண் மூடினாள். எதையோ விழுங்குவது போல அவள் தொண்டைக் குழி அசைந்தது. அப்புறம் வலியால் முனகினாள். சற்றுப் பொறுத்துக் கண் திறந்தாள்.

 

           “நீங்க பினாங்குக்குப் போகலியா?”“போனேன். செய்தி வந்தது. உடனே வந்திட்டேன்!”அவனைப் பாவமாகப் பார்த்தாள். “உங்க எல்லாருக்கும் பெரிய சிரமத்தக் கொடுத்திட்டேன்!”“அதப்பத்தி இப்ப என்ன? நீ பேசாம ஓய்வெடுத்துக்க!” என்றான்.“இந்த சோத்துக் கை பக்கம் அப்படியே மரத்துப் போன மாதிரி இருக்கே!” என்றாள்.அந்தப் பக்கத்தை கைகளால் அழுத்தினான். ஆனால் அவளுக்கு அந்தத் தொடு உணர்ச்சி இருந்ததாகத் தெரியவில்லை.“மாமா! உங்ககிட்ட ஒண்ணு சொல்லணும்!”“இப்ப வேண்டாம் மல்லிகா! ஓய்வெடுத்துக்க!”“இல்ல! இப்பவே சொல்லணும். கேளுங்க! உங்க காதலி பேரென்ன?” என்றாள்.“அத இப்பப் பேச வேணாம் மல்லிகா!”“இல்ல சொல்லுங்க!”“அவ பேரு அகிலா!”“மாமா. நீங்க அகிலாவையே கல்யாணம் பண்ணிக்குங்க! எனக்கு முழு சம்மதம்!”“இப்ப அந்தப் பேச்சு வேணாம் மல்லிகா…!“இல்ல! விஷம் குடிச்சி மயக்கம் வர முன்னாலேயே எனக்கு இந்த நெனப்பு வந்திடுச்சி. பெரிய முட்டாள் தனம் செஞ்சிட்டமேன்னு அப்பவே நெனச்சேன்! நல்ல வேள! உங்களுக்கு இந்த செய்தியச் சொல்றதுக்கு ஆண்டவன் எனக்கு உயிர் பிச்சை கொடுத்திருக்கான். நெசமாத்தான் சொல்றேன். நீங்க அகிலாவயே கல்யாணம் பண்ணிக்குங்க! எனக்குப் பூரண சம்மதம்!”அவள் கைகளைத் தன் கண்களுக்குள் புதைத்துக் கொண்டான். இலேசான கண்ணீரில் அது நனைந்தது.அவள் கண்கள் மூடி மீண்டும் மயக்கத்தில் ஆழ்ந்தாள்.

 

       அத்தை திரும்பி வந்த போது அவள் கண்விழித்துப் பேசியதைப் பற்றிச் சொன்னான். ஆனால் என்ன பேசினாள் என்று சொல்லவில்லை. அத்தை அவளை மெதுவாகத் தொட்டு “மல்லிகா, கண்ணு!” என்று கூப்பிட்டாள். அவள் கண் விழித்துப் பார்த்தாள். “அம்மா” என்றாள்.அத்தை அவளைக் கட்டிக் கொண்டு ஓவென்று அழுதாள். “இப்படிப் பண்ணிட்டியே கண்ணு! இந்த அம்மாவ உட்டுட்டுப் போவப் பாத்தியே! நீ போயிட்டா எனக்கு வேற யாரு இருக்கா இந்த ஒலகத்தில? நான் ஒண்டிக்கட்டயா இருப்பேனா? நீ போயிட்டா நான் இருப்பேனே? நானும் பின்னாலேயே வந்திருக்க மாட்டேன்?”மல்லிகா அம்மாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள். குழறிக் குழறி பேசினாள். “அழுவாதம்மா! இனிமே அப்பிடியெல்லாம் செய்ய மாட்டேன்! அழுவாத!” என்றாள்.அத்தை கண்களைத் துடைத்துக் கொண்டு மல்லிகாவுக்கு அவசரம் அவசரமாக சூப்பை எடுத்து ஊட்ட ஆரம்பித்தாள். கணேசனை ஒரு கண்ணால் பார்த்துக் கொண்டு அவள் சூப்பை மெதுவாக உறிஞ்சிக் குடித்தாள். சூப் வாயின் ஓரத்தில் வழிந்தது.ஒரு இந்திய டாக்டர் தாதியுடன் வந்தார். “ஓ நல்லது! கண் முழிச்சிருக்கே உங்க பொண்ணு!” என்று சந்தோஷப் பட்டார். அத்தையையும் கணேசனையும் ஒரு முறை பார்த்துப் புன்னகைத்துவிட்டு பதிவேட்டை எடுத்துப் புரட்டிப் பார்த்தார்.

 

       மல்லிகாவின் இமைகளை இழுத்துக் கண்களைப் பரிசோதித்தார். விளக்கு அடித்துப் பார்த்தார். ஸ்டெதெஸ்கோப்பை வைத்து இருதயத் துடிப்பைப் பார்த்தார். “நன்றாக இருக்கிறது!” என்றார். தொண்டையின் பக்கங்களை அழுத்திய போது மல்லிகா வலியால் முனகினாள். பின்னர் அடிவயிற்றை அமுக்கினார். அப்போதும் அவள் வலியால் துடித்தாள்.அவள் வலது கையையும் இடது கையையும் தூகிப் பார்த்தார். வலது கை துவண்டு கிடந்தது.“எப்படி இருக்கு டாக்டர்?” என்று அத்தை படபடப்புடன் கேட்டாள்.அத்தையைப் பார்த்து டாக்டர் சொன்னார்: “தொண்டை ரொம்பப் புண்ணா இருக்கம்மா. அது ஆற ஒரு வாரம் ரெண்டு வாரம் ஆகும். மருந்து குடிக்கணும். அதே போல கல்லீரலும் பாதிக்கப் பட்டிருக்கு. அதை எக்ஸ்ரே எடுத்துப் பார்க்கணும். கண்கள்ள பாதிப்பு இருக்கு. ஒரு பக்கம் கை விளங்காம இருக்கு. அதையெல்லாம் சோதிச்சுப் பார்க்கணும். இன்னும் ரெண்டு நாள் ஆஸ்பத்திரியில இருக்கட்டும். அப்பறந்தான் சொல்ல முடியும் ”“புள்ளைக்கு ஒண்ணும் ஆயிடாதே!” என்று அத்தை கேட்டாள்.“உயிருக்கு ஒண்ணும் ஆபத்தில்ல. பயப்படாதீங்க!” என்று சொல்லி விட்டு டாக்டர் நடந்தார்.

 

       கணேசன் அவர் பின்னாலேயே போனான். அத்தையின் காதுக்கெட்டாத தூரம் வந்தவுடன் “டாக்டர்” என்று அவரைக் கூப்பிட்டான். அவர் நின்று “என்ன?” என்பது போல அவனைத் திரும்பிப் பார்த்தார்.“ஏன் ஒரு பக்கம் கை விளங்கிலன்னு சொல்றிங்க?” என்று கேட்டான்.“இப்ப தெளிவா சொல்ல முடியாது. தொடு உணர்ச்சி குறைவாத்தான் இருக்கு. பரிசோதிச்சி கவனிச்சாத்தான் சொல்ல முடியும். பாருங்க, விஷங் குடிச்சி கிட்டத்தட்ட மூணு மணி நேரம் போய்தான் கொண்டாந்திருக்காங்க. இதுக்கிடையில அந்தப் பெண்ணுக்கு வலிப்பு வந்து மூச்சுத் திணறல் ஏற்பட்டு மூளைக்கு பிராண வாயு போறது தடைப் பட்டிருக்கு. அதினால மூளையின் சில பகுதிகள் பாதிக்கப்படிருக்கு. இதினால ‘பார்ஷியல் பேரலிசி]ஸ்’ ஏற்பட்டிருக்கு. அதினாலதான் ஒரு பக்கம் விளங்கில. முகத் தசைகள் கூட சரியா அசையில. அதினாலதான் வாய் குழறுது” என்றார். கணேசன் அதிர்ந்து நின்றான்.“பாத்திங்களா! ஒரு கோவத்தில ஒரு கணத்தில செய்றது வாழ்நாள் முழுக்க பாதிச்சிருது. இந்தப் பெண்ண யாராவது இனி கிட்டவே இருந்து கவனிச்சிக்கிட்டு இருக்கணும். சும்மா உடம்புக்காக மட்டுமில்ல! இந்த அதிர்ச்சியிலிருந்து அந்தப் பொண்ணு மீண்டு வரும் போது அதனுடைய மன நலத்தையும் யாராவது பக்கத்திலிருந்து கவனிச்சிக்கத்தான் வேணும்.

 

       நீண்ட நாளைக்கு தெராப்பி தேவைப் படலாம். அவங்க அம்மாகிட்ட சொல்லுங்க!” டாக்டர் அடுத்த நோயாளியைக் கவனிக்க அகன்று விட்டார்.கணேசன் நின்ற இடத்திலிருந்து மல்லிகாவின் கட்டிலைத் திரும்பிப் பார்த்தான். அத்தை பாசமாக அவளுக்கு சூப் ஊட்டிக் கொண்டிருந்தாள். சூப் வாயில் ஒரு பக்கம் ஒழுக ஒழுக அதைத் துடைத்துக் கொண்டிருந்தாள். இருவரும் என்னவோ பேசிக் கொண்டிருந்தார்கள். மீண்டும் மல்லிகாவின் கட்டிலுக்குத் திரும்ப நினைத்த கணேசன் அப்படிச் செய்யாமல் அங்கேயே கொஞ்ச நேரம் நின்றான். பின்னர் திசை திரும்பி வார்டை விட்டு வெளியே வந்தான். லி·ப்டில் ஏறி கீழே வந்தான்.மருத்துவ மனைக்கு வெளியே கார் பார்க்கை அடுத்திருந்த புல் வெளிக்கு வந்தான். வெயில் மங்கியிருந்த நேரம். மருத்துவ மனையில் நோயாளிகளைப் பார்க்கும் நேரமாதலால் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. கையில் பழங்களுடனும் உணவுப் பொட்டலங்களுடனும் மலர்களுடனும் உறவினர்கள் மருத்துவ மனை வாசலுக்குள் நுழைந்தவாறிருந்தார்கள்.தனியிடத்தை நாடினான். ஒரு மரத்தின் நிழலிலிருந்த இரும்பு நாற்காலி ஒன்றில் உட்கார்ந்தான். முன்னால் நடந்து கொண்டிருக்கும் காட்சிகளைக் கொஞ்ச நேரம் வெறித்துப் பார்த்தவாறிருந்தான். நெஞ்சில் விம்மல் வந்தது. அடக்கப் பார்த்தான். மற்றவர்கள் பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்ற வெட்கம் வந்தது. முகத்தைக் கைகளால் மூடினான். அழுகை வெடித்து வந்தது. விம்மி அழுதான்.

 

       காலையில் இரண்டு மணி நேர விரிவுரையையும் அதைத் தொடர்ந்து இரண்டு மணி நேரம் கணினி பயிற்சி வகுப்பையும் முடித்துக் கொண்டு 12 மணிக்கு மண்டபத்தை விட்டு வெளியே வந்தாள் அகிலா. நண்பகல் வெயில் சுட்டெரித்தது. விரிவுரை மண்டபத்தின் இதமான குளிர் சாதனத்திலும் மிதமான விளக்கொளியிலும் நான்கு மணி நேரம் தொடர்ந்து இருந்துவிட்டு வந்தவளுக்கு பளீரென்ற வெயிலில் கண்கள் கூசின. இரண்டு நாட்களுக்கு முன் மழை பெய்ததற்குப் பிறகு வளாகத்தில் இப்படித்தான் வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. மழையும் வெயிலுமாக திடீரென்று மாறி மாறி வருகின்ற இந்த பினாங்குத் தீவின் பருவ நிலை அகிலாவுக்குக் கொஞ்சம் விசித்திரமாக இருந்தது. வெயில் நாட்களில் கொஞ்சமும் காற்றின் அசைவே இல்லாத வெப்பமாக இருக்கிறது. கடல் சூழ்ந்த தீவில் இருக்கிறோம் என்ற உணர்வே இருப்பதில்லை.எங்கே போவது என்று யோசித்தவாறு அகிலா கொஞ்ச நேரம் யோசித்தவாறு நின்றிருந்தாள். வயிறு பசித்தது. காலையிலும் ஒன்றும் பசியாறவில்லை. சாப்பிடப் போக வேண்டும். ஆனால் தனியாகப் போகத் தயக்கமாக இருந்தது. மாலதிக்குக் காலையில் விரிவுரைகள் இல்லை. ஆகவே நூல் நிலையத்துக்குப் போவேன் என்று சொல்லியிருந்தாள். அங்கு போனால் அவளைப் பிடித்து இருவருமாக சாப்பிடப் போகலாம் என்று நினைத்து நூல் நிலையத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

 

         சாலை நெடுகிலும் காட்டுத் தீ மரங்களில் பூக்கள் கொத்துக் கொத்தாகப் பூத்திருந்தன. வெயிலில்தான் இவை இப்படிப் பூக்கின்றன. இந்த வளாகத்தில் இரண்டு வண்ணங்களில் அவை இருந்தன. ஒன்று இரத்தச் சிவப்பு. இன்னொன்று இளஞ்சிவப்பு. இரண்டுமே கிளைகளின் நுனிகளில் புஸ்ஸென்று பூத்து கிளையையே மூடிவிடும். கீழே உதிர்ந்திருக்கும் போது கம்பளமாக இருக்கும். அவற்றை மிதித்து நடக்க அகிலாவுக்குக் கால் கூசியது.வளாகம் முழுதும் உள்ள அங்சானா மரங்களில் கூட சிறு சிறு பூக்கள் பூத்து இப்படித்தான் உதிர்ந்திருக்கின்றன. கார்கள் அவற்றின் மீது ஓடி அரைக்கும் வரை அழகான கம்பளமாக இருக்கும். அப்புறம் சிதறிப் பொடிப்பொடியாகி மழை வந்தால் சேறும் ஆகிவிடும். இந்தப் பூக்கள் கிளைகளில் இரண்டு மூன்று நாட்கள்தான் தங்குகின்றன. அப்புறம் கிளைகளில் இலைகள் மட்டும்தான் மிச்சமிருக்கும்.துணை வேந்தர் இல்லத்தின் அருகிலும் நுண்கலைப் பிரிவுக் கட்டத்தின் எதிரிலும் உள்ள இரண்டு ஒற்றைக் கொன்றை மரங்களிலும் கூட இப்போது பூக்கள் குலை குலையாகப் பூத்திருக்கின்றன.

 

        கண்ணைப் பிரிக்கும் மஞ்சள் வண்ணத்தில் யாரோ பூக்கார அம்மாள் வியாபாரத்துக்காகக் கவனமாக அடுக்கிக் கட்டி தொங்கவிட்டிருப்பது போல… சீன லேன்டர்ன் விளக்குகள் போல… அன்றைக்கு ஷங்ரிலா ஹோட்டலில் பார்த்த சரவிளக்குகள் போல…ஷங்ரிலாவை நினைத்தவுடன் கடற்கரைக்குச் சாப்பிடப் போய் மோட்டார் சைக்கிளில் கணேசனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு மழையில் நனைந்து திரும்பி வந்த சிருங்காரமான நினைவுகள் வந்தன. அதைத் தொடர்ந்து அவனைப் பார்த்து நான்கு நாட்கள் ஆகிவிட்டன என்ற எண்ணம் வந்தது. ஏன் இப்படி நினைவுகள் துருத்திக் கொண்டு வருகின்றன?இந்த இரண்டு நாட்களாக அகிலாவின் மனதைக் கப்பியுள்ள இருள் இன்னும் கலையவில்லை. விழித்திருக்கும் நேரமெல்லாம் ஒரு இளம் பெண் விஷமருந்தி மருத்துவ மனைக் கட்டிலில் அலங்கோலமாகப் படுத்திருக்கும் காட்சிதான் வந்தது. அந்தப் பெண்ணின் கோர முடிவிற்கு எப்படியோ தானும் ஒரு காரணம் என்ற எண்ணம் வந்து நெஞ்சைத் திடும் திடும் என்று உலுக்கியது.என்ன ஆயிற்று கணேசனுக்கு? போய் நாட்கள் நான்கு ஆகிவிட்டன. ஜெசிக்கா வந்து செய்தி சொல்லியே இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. ஆனால் அவனைக் காணவில்லை. கிள்ளானில் நிலைமை ரொம்ப மோசமாகிவிட்டதா? குடும்பத்தில் பூகம்பங்கள் வெடித்திருக்குமா? மல்லிகா நிலைமை எப்படி? பிழைத்திருப்பாளா? ஏன் இப்படி என்னை இருளில் விட்டுப் போனான்? எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று மனம் துடித்தாலும் எந்தக் கேள்விக்கும் பூரணமான விடை கிடைக்கவில்லை.

 

        நேற்று இதைப் பற்றி மாலதியிடம் பேசும் போதும் அகிலா மீண்டும் அழுதாள். மாலதிக்கு தோளைப் பிடித்து ஆறுதல் சொல்ல முடிந்ததே தவிர விடைகள் ஏதும் சொல்ல முடியவில்லை.நூல் நிலையத்தை அடைந்து மாலதியைத் தேடிப் பிடித்த போது அவள் புத்தகத்தின் மீது கவிழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.அவளை உலுக்கி “இப்படித்தான் படிக்கிறிங்கிளா மாலதி?” என்று கேட்டாள்.“சீ! படு போரிங்கா இருக்கு இந்தப் பாடம். தூக்கமும் வருது, துக்கமும் வருது!” என்று சொன்னவாறு மாலதி புத்தகத்தை அடையாளம் வைத்து மூடிவிட்டு எழுந்து வந்தாள். நூல் நிலையத்தை விட்டு வெளியே வந்து கேன்டீனை நோக்கி நடந்து கொண்டிருந்த போது மாலதி கேட்டாள்: “அப்புறம், உங்க ஆளு சேதியெல்லாம் சொன்னாரா?”அகிலா அதிர்ச்சியடைந்தாள். “எந்த ஆளு?”“அதான், உங்க கணேசன்!”“கணேசனா? இன்னும் வரவே இல்லியே!”மாலதி அவளை அதிசயமாகப் பார்த்தாள்.

 

        “நேத்து ராத்திரி அவர கேம்பஸ்ல பார்த்தேனே! மோட்டார் சைக்கிள்ல போனாரே! எப்படியும் நேத்தே உன்னை வந்து பாத்திருப்பாருன்னு நெனச்சனே!” என்றாள்.அகிலாவுக்கு திகீரென்றது. நேற்று இரவே வந்து விட்டானா? அப்புறம் ஏன் என்னைப் பார்க்க வரவில்லை? சென்ற நான்கு நாட்கள் அவனைப் பார்க்காதிருந்த ஏக்கம் அவனை உடனே பார்த்துவிட வேண்டுமென்று துடிக்க வைத்தது. எங்கே எப்போது எப்படி என்றெல்லாம் மாலதியைத் துளைத்தெடுத்தாள்.“ராத்திரி பூமி புத்ரா பேங்க் ஏடிஎம் மெஷின்ல காசெடுக்கப் போயிருந்தேன். அப்ப அவர் மோட்டார் சைக்கிள்ள போனதப் பார்த்தேன். ஆனா அவர் என்னைப் பாக்கில!” என்றாள்.“எப்படியிருந்தார்?”“ராத்திரியில சரியா தெரியில அகிலா. ஆனா ரொம்ப சோர்வா இருக்கிற மாறிதான் தெரிஞ்சது! கொஞ்சம் தாடி வளந்த மாதிரியும் இருந்தது!”அவனுடைய துயரமான கோலத்தை எண்ணி மனம் சோகப் பட்டது. அவனுக்குப் பக்கத்தில் இருந்து அவன் தோள்களைத் தழுவி ஆறுதல் சொல்ல வேண்டும் போலவும் இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக கிள்ளானில் என்ன நடந்தது, மல்லிகாவின் நிலைமை என்ன என்று கேட்டுத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் அவளைப் பிய்த்துத் தின்றது. ஆனால்… ஏன் என்னைப் பார்க்க வரவில்லை? நேற்றிரவு திரும்பியவன் இன்று காலை முழுவதும் தன் பக்கம் திரும்பாமல்… ஏன் இந்த அலட்சியம்? ஒரு வேளை…கேன்டீனில் சாப்பிட அமர்ந்த போது கேட்டாள்: “அவர்தான்னு நிச்சயமா தெரியுமா மாலதி? வேற யாரையாவது பாத்திட்டு…”“சீ! அவர்தான் அகிலா. கணேசன்தான். எனக்குத் தெரியாதா என்ன? தெளிவாப் பாத்தேன்!” என்று உறுதிப் படுத்தினாள்.“நேற்று திரும்பிட்டவரு ஏன் இன்னும் என்னை வந்து பார்க்கல?”மாலதி கொஞ்சம் மௌனமாயிருந்து சொன்னாள்.

 

      “எத்தனையோ வேலைகள் இருக்கலாம். எல்லாம் முடிஞ்சி வந்து பாப்பாரு பாரேன்!”அகிலாவுக்கு அது அத்தனை சாதாரணமானதென்று தோன்றவில்லை. கணேசனை உள்ளுக்குள் ஏதோ ஒன்றிருந்து வருத்துகிறது. இந்த நான்கு நாட்களில் கிள்ளானில் நடந்தவை அவனை மாற்றியிருக்கின்றன. அது என்ன மாற்றம்? எப்படித் தெரிந்து கொள்வது? இதயம் திகில் கொண்டது.கணேசனிடம் விரிவாகப் பேசவேண்டுமென்று எண்ணினாள். எப்படியென்று தெரியவில்லை. தானாக அவனைத் தேடிப் போக முடியாது. அதற்குத் தேவையில்லை. அது சரியில்லை. அவன் வரும் வரை காத்திருக்க வேண்டும். ஆனால் மனசு காத்திருக்கப் பொறுமையில்லாமல் அலைக்கழித்தது.மாலதி மௌனத்தைக் கலைத்துப் பேசினாள்: “அந்தப் பொண்ணப் பத்தி உங்கிட்ட இதுக்கு மிந்தி சொல்லியிருக்காரா அகிலா!”“எந்தப் பொண்ணு?”“அதான், விஷங் குடிச்சிச்சே, அந்த பொண்ணு!”“மல்லிகான்னு அத்தை பொண்ணு ஒருத்தி இருக்கான்னு சொல்லியிருக்காரு.”“ரெண்டு பேருக்கும் காதல்னு சொல்லியிருக்காரா?”“இல்ல! அந்தப் பொண்ணு தனக்கு தங்கச்சி மாதிரின்னுதான் சொல்லியிருக்கார்”மாலதி மௌனமாகச் சாப்பிட்டாள். அவள் மௌனத்தில் ஏதோ ஒரு அர்த்தம் இருப்பதாக அகிலாவுக்குத் தோன்றியது.

 

       “என்ன நெனைக்கிறிங்க மாலதி?”“இல்ல, அண்ணனோட காதல் சேதி கேட்டு விஷங்குடிக்கிற தங்கச்சி உண்டா இந்த ஒலகத்திலன்னு யோசிக்கிறேன்!”அகிலாவும் பலமுறை யோசித்து விட்டாள். மல்லிகாவின் பேச்சு வரும்போதெல்லாம் அதை அலட்சியமாகத்தான் உதறியிருக்கிறான். ஆனால் இப்போது வந்திருக்கும் செய்தி வேறாக இருக்கிறது. அப்படியானால் கணேசன் இத்தனை நாள் தன்னை ஏமாற்றினானா? தன்னிடம் பச்சை பச்சையாகப் பொய் சொன்னானா? கணேசனா? அந்தக் காதல் வழியும் கனிந்த கண்களுடைய என் கணேசனா? அவனாலும் ஏமாற்ற முடியுமா?தனிமையில், இரவில், தான் கனிந்திருக்கும் வேளையில் “இவளுக்கு என்ன தெரியும், முட்டாள்?” என்று உள்ளுக்குள் நினைந்து கொண்டு “அவ என் தங்கச்சி மாதிரி!” என்று பொய் சொன்னானா? தன் உணர்வுகளோடு விளையாடினானா? இன்று அந்தப் பொய்கள் அவனுடைய அந்தப் பழைய காதலியின் தற்கொலை முயற்சியால் வெளிப்பட்டு விட தன்னைப் பார்க்க வெட்கி மறைந்திருக்கிறானா? நான் அவ்வளவு ஏமாளியாகவா ஆகிவிட்டேன்? என்னை ஒரு பொம்மைபோல ஆட்டி வைத்திருக்கிறானா? அவன் கையில் உள்ள சூத்திரக் கயிறுகள் என்னைப் பிணித்திருப்பதை அறியாமல்தான் இத்தனை நாள் ஆடியிருக்கிறேனா? இதற்காகத்தான் அன்பான அம்மாவையும் அப்பாவையும் பகைத்துக்கொள்ளத் துணிந்தேனா? மாலதிக்குத் தெரியாமல் மனம் உள்ளுக்குள் அழுதது.“இன்னைக்குக் கோயிலுக்கு வாரியா?” என்று கேட்டாள் மாலதி.தூக்கத்திலிருந்து விழித்தவள் போல “என்ன சொன்னிங்க மாலதி?” என்று கேட்டாள் அகிலா.

 

      “இன்னைக்கு வெள்ளிக் கிழமையாச்சே, கோயிலுக்குப் போகலாமான்னு கேட்டேன்!”வெள்ளிக் கிழமைகளில் குளுகோரில் உள்ள அம்மன் கோயிலுக்கு பெரும்பாலான இந்து மாணவர்கள் போவார்கள். போகவேண்டும் என்றுதான் தோன்றியது. ஆனால் ஒரு வேளை கணேசன் தன்னைத் தேடி வந்தால் என்ற எண்ணம் எழுந்தது. இல்லை. அவன் தேடி வருவான் என்று காத்திருக்க வேண்டாம். நேற்று இரவிலிருந்து என்னைத் தேடி வரவில்லை. ஒரு வேளை இனி என்றுமே தேடி வர மாட்டான். அவனுக்காகக் காத்திருக்கத் தேவையில்லை.இப்போது உள்ள குழப்பத்துக்குக் கோயிலுக்குப் போவது நல்லதுதான். கொஞ்சமாவது ஆறுதல் கிடைக்கும்.“சரி மாலதி. கோயிலுக்குப் போகலாம். நீங்க வந்து கூப்பிடுங்க!” என்றாள்.கணகணவென மணிச் சத்தத்துடன் தீபத்தெட்டு மேலெழுந்து அம்பாளின் முகத்தைப் பிரகாசப் படுத்தியது. அகிலா கை தூக்கிக் கும்பிட்டாள். மனதுக்கு இதமாக இருந்தது. மனப் படபடப்புகளை கொஞ்ச நேரமாவது மறந்திருக்க முடிந்தது.கோயிலில் வெள்ளிக் கிழமை கூட்டம் அதிகமாகத்தான் இருந்தது. பல்கலைக் கழக மாணவ மாணவியர் கூட்டமாக வந்திருந்தார்கள். மாணவர்கள் ஜிப்பாவில் வந்திருந்து திருநீறும் சந்தன குங்குமப் பொட்டுகளும் வைத்துக் கொண்டு இந்துக்களுக்கான அடையாளங்களோடு இருக்க இந்த ஒரு நாள்தான் அவர்களுக்குச் சந்தர்ப்பம். இதை பயன் படுத்திக் கொள்ள அவர்கள் எப்போதும் ஆர்வம் காட்டுவார்கள். மாணவிகள் பெரும் பாலோர் பஞ்சாபி ஆடைகளிலும் சிலர் சேலையிலும் வந்திருந்தனர்.

 

     அகிலா அடக்கமான சேலை அணிந்து வந்திருந்தாள்.கணேசன் அங்கு எங்காவது இருக்கிறானா என அகிலா பலமுறை சுற்றிப் பார்த்து விட்டாள். அவனைக் காணவில்லை. பலமுறை அவளோடு அவன் இந்தக் கோயிலுக்கு வெள்ளிக் கிழமைகளில் வந்திருக்கிறான். அவள் சேலையில் தன் ஜிப்பா உரச அணுகி நின்றிருக்கிறான். அப்போதெல்லாம் இந்த வேளைகள் பூரணத்துவம் பெற்றது போல அவளுக்குத் தோன்றும்.ஆனால் இன்று அவள் தனியாக இருந்தாள். தோழியர்கள் பலர் இருந்தும் சூழ்நிலை பூரணமாகவில்லை. கண்கள் தேடியதைவிட இதயம் அதிகமாகத் தேடியது. ஏன் காணவில்லை? ஏன் என்னைத் தேடி வரவில்லை? கிள்ளானிலிருந்து என்ன மர்மங்களைச் சுமந்து வந்திருக்கிறான்? ஏன் என்னிடம் பகிர்ந்து கொள்ளவில்லை? ஏன் என்னிடமிருந்து ஒளிந்திருக்கிறான்?விபூதி வாங்கிக் கொண்டு சந்தனம் குங்குமமும் வாங்கிக் கொண்டு கூட்டம் இறுக்கம் தளர்ந்து பிரிந்தது. “சுத்திக் கும்பிட்டு வந்திடலாம் அகிலா” என்று மாலதி முன்னால் நடந்தாள். அகிலா அவளைப் பின் தொடர்ந்தாள்.விநாயகர் சிலை வைக்கப் பட்டிருக்கும் அரசமரத்துக்கு அடியில் விநாயகரை வணங்கிவிட்டு மரத்தை அவள் சுற்றி வந்த போது இருட்டிலிருந்து “அகிலா” என்ற குரல் கேட்டது. யார் குரல் என்று பளிச்சென்று தெரிந்துவிட்டது. இதற்காகவே இத்தனை நேரம் காத்திருந்தவளைப் போல “கணேஷ்!” என்றாள்.

 

      ஐந்து நாள் தாடி அவன் தாடையில் அடர்த்தியாக இருந்தது. முகம் சோம்பியிருந்தது. தொளதொளப்பான ஜிப்பா அணிந்திருந்தான். முகத்தில் கொஞ்சமும் செழிப்பில்லை.“எப்ப வந்திங்க கணேஷ்? ஏன் என்னப் பாக்க வரல?” அவள் குரல் தளுதளுத்தது. அழுது விடுவோம் போலத் தோன்றியது. தலை குனிந்து கொண்டாள். அவன் அவள் கைகளைப் பிடித்தான்.“உங்கிட்ட நெறயப் பேச வேண்டியிருக்கு. இங்க முடியாது. என்னோட வா அகிலா!” என்றான்.“சரி. இருங்க. மாலதி கிட்ட சொல்லிட்டு வந்திர்ரேன்!”அவனை விட்டு முன்னே போய்விட்ட மாலதியைத் தேடி ஓடினாள். அவன் வந்திருப்பதைச் சொன்னாள். “ஆமா, நான் பார்த்தேன்!” என்றாள் மாலதி குறும்புச் சிரிப்புடன்.“நீ போ மாலதி! நான் அவரோடயே திரும்பி வந்திர்ரேன்!”மாலதி சரியென்று போனாள்."வாழ்க்கையில நாம் விரும்பிறதப் போல பெரும்பாலான விஷயங்கள் நடக்கிறதில்ல! அதினால இனிமே எதுக்காகவும் ஆசைப்பட்டுத் திட்டம் போடக் கூடாதுன்னு முடிவு செஞ்சிட்டேன் அகிலா!” என்றான் கணேசன்.

 

     எஸ்பிளனேடில் மிருதுவான காற்று வீசிக் கொண்டிருந்தது. நாள் முழுவதும் காய்ந்த வெயிலுக்கு அது ஒன்றுதான் ஒத்தடம் கொடுப்பது போல இருந்தது. அலைகள் மிக மெதுவாக வந்து அந்த கற்சுவரின் மீது உராய்ந்து கொண்டிருந்தன. கூட்டம் வழக்கம் போல இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும் இருந்த மன நிலையில் கூட்டத்தை அவர்கள் கவனிக்கவில்லை.கோயிலிலிருந்து அவளைத் தன் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு அவன் அவளை நேராக இங்கு கொண்டு வந்தான். அவன் தோள்களை முன்பு போல கட்டிப் பிடிக்காவிட்டாலும் அழுத்தமாகப் பிடித்துக் கொண்டுதான் வந்தாள் அகிலா. வரும் வழி முழிவதும் அவன் ஒன்றுமே பேசவில்லை.எஸ்பிளனேடில் மோட்டார் சைக்கிளைப் பூட்டி வைத்து விட்டு இந்தத் தடுப்புச் சுவரின் மேல் வந்து உட்கார்ந்தும் மௌனமாகத்தான் இருந்தான். அவள்தான் அதைக் கலைத்தாள். “என்ன நடந்திச்சின்னு சொல்லுங்க கணேஷ். இப்படி மௌனமாகவே இருந்தா எப்படி? என்னை ரொம்பக் கலவரப் படுத்திறிங்க!” என்றாள்.“மன்னிச்சுக்க அகிலா. எங்கிருந்து ஆரம்பிக்கிறதுன்னு தெரியல. ஜெசிக்காவப் பாத்த போது உங்கிட்ட சில விஷயங்கள சொல்லிட்டதா எங்கிட்ட சொன்னா!”“எப்ப ஜெசிக்காவப் பாத்திங்க?”“நேத்து ராத்திரி! நான் வந்து சேர்ந்த வொடனே!”ஜெசிக்காவப் பார்க்க அவனுக்கு நேரமிருந்திருக்கிறது. தன்னைப் பார்க்க நேரமில்லாமல் போனதா?“ஏன் என்ன வந்து பாக்கல கணேஷ்?”அவள் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான். “பார்க்க ரொம்ப தயக்கமா இருந்திச்சி அகிலா. தைரியம் வரல!” என்றான்.“என்னப் பாக்க ஏன் தைரியம் வேணும் உங்களுக்கு?”“பாக்கிறதுக்கு இல்ல. உங்கிட்ட சொல்ல இருக்கிற விஷயங்களுக்காக!”அவளுக்குப் புரியவில்லை. அவன் தொடர்ந்து சொல்லுவான் என எதிர் பார்த்தாள். சொல்லவில்லை.

 

     இருட்டிக் கிடந்த கடலைப் பார்த்தவாறிருந்தான்.“சரி. மல்லிகா எப்படி இருக்காங்க? அதையாவது சொல்லுங்க!”“இன்னும் ஆஸ்பத்திரியிலதான் இருக்கு. இன்னும் சரியா சாப்பிட முடியில. தண்ணி அல்லது சூப்தான் சாப்பிட முடியிது. திரவ ஆகாரங்கள மட்டும்தான் சாப்பிட முடியுது. கெட்டி ஆகாரம் சாப்பிட முடியில. ரொம்ப இளைச்சிப் போயிட்டா!”அவன் குரலில் இருந்த சோகம் அவளையும் கப்பிக் கொண்டது. எவ்வளவு மாற்றமாக இருக்கிறது அவன் பேச்சு! சில மாதங்களுக்கு முன் இதே இடத்திற்கு வந்திருந்த போது எவ்வளவு காதல் ஒழுகப் பேசினான்! அந்த இரவு எவ்வளவு பிரகாசமாக இருந்தது! இந்த விளக்குகள் எவ்வளவு சிருங்காரமாக இருந்தன! ஏன் அத்தனையும் இவ்வளவு சீக்கிரத்தில் மங்கிப் போய்விட்டன? என்னை விட்டு விலகிக் கொண்டிருக்கிறானா? இது பிரிவுக்கு முகமனா?“விஷம் சாப்பிட்ற அளவுக்கு என்ன நடந்திச்சி கணேஷ்? உங்க அத்தை மகளுக்கு உங்க மேல இவ்வளவு ஆசை இருக்குன்னு நீங்க எங்கிட்ட சொல்லவே இல்லியே!”“எனக்குத் தெரியில அகிலா! தெரிஞ்சிருந்தாலும் அத அலட்சியப் படுத்தப் பார்த்தேன். அவ எங்கிட்ட சொன்ன போதும் அத விளையாட்டா எடுத்துக்கிட்டேன். அவ கிட்ட சொல்லித் திருத்த முடியும்னு நெனச்சேன்”“உங்களுக்கு..?”“எனக்கு அவ மேல கொஞ்சமும் ஆசையில்ல அகிலா. நான் சொல்றத சத்தியமா நம்பு. அன்பு இருக்கு, ஆனா ஆசை இல்ல. என்னைக்குமே இருந்ததில்ல. இப்போதும் இல்ல. ஆனா அவ மனசில அந்த ஆசை இப்படி மரம் போல வளந்திருக்கிறது எனக்குத் தெரியாமப் போச்சி!”கொஞ்ச நேரம் மௌனமாக இருந்தார்கள். பின் அவனே பேசினான்: “மல்லிகாவுக்கு இனிமே பல கஷ்டங்கள் இருக்கு. அவளுக்கு ஏற்பட்டிருக்கிற சில பாதிப்புகள் நிரந்தரமா இருக்கக் கூடும்னு டாக்டர்ங்க சொல்றாங்க.

 

    விஷத்தினால ஏற்பட்ட வலிப்பும் மூச்சுத் திணறலும் வந்திருக்கு. அதனால மூளைக்கு இரத்தம் போகாம அவள் உடம்பு ஒரு பக்கம் விளங்காமப் போச்சி. ஒரு கையைத் தூக்கவே முடியில. முகத்தில ஒரு பக்கம் இழுத்துக்கிச்சி. பேச்சுகூட குழறி குழறித்தான் வருது” தயங்கிச் சொன்னான்: “கண்கள்ள பார்வை கூட ரொம்ப மங்கலாகத்தான் இருக்கு!”“ஐயோ!” என்றாள் அகிலா.“சொல்லு அகிலா. இப்படி ஆயிட்ட பெண்ண யாரு கட்டிக்குவாங்க?”ஏன் அந்தக் கேள்வியைக் கேட்கிறான் என அகிலாவுக்கு விளங்கவில்லை. என்ன சொல்வதென்று தெரியவில்லை. பேசாமல் இருந்தாள்.“அகிலா! நான் ரொம்ப ஆசப்பட்டுட்டேன். எனக்குன்னு விதிக்கப் பட்டிருந்த வரையறைகளை மீறி என்னுடைய விருப்பத்துக்கு என் வாழ்க்கைய அமைக்கணும்னு அளவுக்கு மீறி ஆசைப் பட்டுட்டேன். அந்த மீறல்களுக்கெல்லாம் எனக்குப் பெரிய தண்டனை கிடைச்சிப் போச்சி!”“என்னத்த மீறிட்டிங்க கணேஷ்? ஏன் அப்படிச் சொல்றிங்க?”“என்னுடைய சூழ்நிலைகள என்னுடைய குடும்பத்தார்கள் முன்னமே வரையறுத்து வச்சிருந்தாங்க. குறிப்பா என் அத்தை. அப்புறம் எங்கப்பா. ஆனா அதையெல்லாம் உடைச்சி மீறணும்னு நெனச்சேன். புதுசா என் மனசுக்கு ஏத்தாப்பில ஒரு வாழ்க்கைய அமைச்சிக்கணும்னு தீர்மானம் பண்ணினேன்.

 

      உன்ன சந்திச்ச போது அதுக்கு ஒரு அருமையான வாய்ப்பு கிடைச்சதாத் தெரிஞ்சிச்சி. அதினாலதான் உன்ன அத்தன பலமா நான் பிடிச்சிக்கிட்டேன்!”நானும் அப்படித்தான் என அகிலா நினைத்தாள். நானும்தான் எனக்கு விதிக்கப்பட்ட வரையறைகளை உடைக்க நினைத்தேன். அதற்காகத்தான் உன்னைப் பற்றினேன். ஆனால்..“ஆனா, இந்த அப்பாவிப் பொண்ண அந்தக் கணக்கில சேர்க்க மறந்திட்டேன் அகிலா! அவள் நான் போட்ட கணக்கையெல்லாம் மாத்திட்டா!”“அப்படின்னா?”அவன் முகத்தையே பார்த்திருந்தாள். ‘ஆகவே, என்ன செய்வது? சொல் கணேஷ். சொல். இன்னும் என்னை மர்மத்திலும் படபடப்பிலும் வைத்திருக்காதே!’ என்று அவள் மனம் கூவிக் கொண்டிருந்தது.“என்ன மன்னிச்சிடு அகிலா! ஏதாகிலும் ஒரு வகையில உன்னை நான் ஏமாற்றியிருந்தா என்ன மன்னிச்சிடு. இனி நான் மல்லிகாவுக்குத்தான் வாழ்வு கொடுக்கணும். என்னை விட்டா இனி அவளுக்கு வாழ்வு அமையாது. அதினால அத்தையும் உடைஞ்சு போவா. என் பெற்றோர் குடும்பமும் சிதைஞ்சி போவும்! என்ன மன்னிச்சிடு அகிலா! என்ன மறந்திடு! என்ன மறந்திடு!” அழுதான்.அகிலாவின் கண்களிலும் நீர் ஊறியது. அவனுக்கு என்ன பதிலைச் சொல்வதென்று அவளுக்குத் தெரியவில்லை. இது இவ்வளவு எளிதானதா? “சரி, சரி, அதனாலென்ன? வேண்டான்னா மறந்திட்டா போச்சி!” என்று சொல்லிவிட முடியுமா? விரும்பினால் ஏற்றிக் கொள்ளவும் விரும்பாவிட்டால் அணைத்துவிடவும் இது என்ன வெறும் மெழுகு வர்த்தியா?ஏன் இவன் என் வாழ்வின் குறுக்கே வந்தான் என ஒரு கணம் நினைத்துப் பார்த்தாள்.

 

     நான் அமைதியானவளாக, என்னுடைய கல்வியையே முதன்மையாக எண்ணித்தானே இந்தப் பினாங்குக்கு வந்தேன்! அநதப் பாதையில் ஏன் இந்தப் புயல்? விதி இவனை என் வாழ்வின் குறுக்கே கொண்டு வந்து போட்டதா? அவனே தேடி வந்தானா? அல்லது நான் தேடி அவனை அடைந்தேனா? இந்தக் கட்டத்தில் அது ஒன்றும் விளங்கவில்லை. எப்படியோ அது நடந்தது. ஒரு விதை, ஒரு முளை, ஒரு தளிர், ஒரு இலை, ஒரு செடியென்று படிப்படியாக வளர்ந்து விட்டது.இப்போது அதைப் பிடுங்கிப் போட்டு விடு என்கிறான். இன்னொருத்தியின் விதி இங்கே குறுக்கே வந்து விட்டது. எப்படி வந்தது? நான் முகம் பார்க்காத, நான் அறிந்திராத, என் வாழ்க்கையில் எந்த ஒரு சம்பந்தமும் இல்லாத இளம் பெண் என் வாழ்க்கையைப் பாதிக்கிறாள். எந்த நியதி இவளையும் என்னையும் பிணைத்தது? எந்த வலையால் ஒரு கோடியில் நானும் கண்ணுக்குத் தெரியாத இன்னொரு கோடியில் அவளுமாக அகப்பட்டுக் கொண்டிருக்கிறோம்?“எனக்குத் தெரியும் அகிலா! நான் எவ்வளவு பெரிய துரோகின்னு நீ நெனைப்பேன்னு எனக்குத் தெரியும். நானே என்னை மன்னிக்க முடியில! உன் வாழ்க்கையில நான் குறுக்கே வந்திருக்கக் கூடாது. என்னை இப்படி உன்மீது திணிச்சிருக்கக் கூடாது. உன் மனத்தோட நான் விளையாடி இருக்கக் கூடாது. என்னை மன்னிச்சிடு!”யார் யாரை மன்னிப்பது? எதற்காக மன்னிப்புக் கோர வேண்டும்? இதில் யார் குற்றம் செய்தார்கள்? நாமெல்லாம் இந்த வாழ்க்கை மேடையில் ஆட்டுவிக்கப் படுகிறோம்.

 

இந்த நாடகத்தில் சிலர் ஜெயிக்கிறார்கள்.சிலர் தோற்கிறார்கள். ஜெயித்தவர்கள் கெக்கலித்துச் சிரிக்கிறார்கள். மற்றவர்கள் அழுகிறார்கள், உன்னையும் என்னையும் போலத்தான் கணேஷ்!வானம் இருண்டு வந்தது. இன்றைக்கும் மழை வரப் போகிறதா? நான் இன்பமாக இருப்பதாக நினைக்கும் போதெல்லாம் மழைதான் வந்து கெடுக்கிறது.“என்ன சொல்ற அகிலா?” கணேசன் கேட்டான்.“மழை வர்ர மாதிரி இருக்குது! என்னத் திரும்ப கொண்டு போய் விட்டிடுங்க!”“நான் சொன்னதுக்கு நீ ஒரு பதிலும் சொல்லியே!”யோசித்தாள். ஏன் அவசரமாக பதில் சொல்ல வேண்டும்? அவசரத்தால் என்ன நன்மை விளையும்? ஏன் திடீர்த் தீர்வுகளைத் தேட வேண்டும்?“நாம ரெண்டு பேருமே இப்ப ரொம்ப உணர்ச்சி வசப்பட்டிருக்கோம், கணேஷ். என்ன கொஞ்சம் யோசிக்க விடுங்க! அதுக்கப்புறம் இன்னொரு முறை சந்திச்சி இதப் பத்திப் பேசுவோமே!” என்றாள். அவள் முகத்தைக் கொஞ்ச நேரம் ஏறிட்டுப் பார்த்தான். அவள் என்ன சொல்கிறாள் என்பது தனக்குப் புரியவில்லை என்பது போலப் பார்த்தான்.“அகிலா! உங்கிட்ட இருந்து மனப் பூர்வமான ஒரு பதிலை என் காதால கேட்காம என் மனசு சமாதானமடையாது. சொல்லு!” என்றான்.“கணேஷ். நீங்க என்ன செய்ய வேணும்னு முடிவு பண்ணிட்டிங்க. சொல்ல வேண்டியத சொல்லிட்டிங்க. அதுக்கு என்னிடமிருந்து உங்களுக்கு ஒரு பதிலே தேவையில்லையே!” என்றாள்.“இல்ல அகிலா! இந்த முடிவு சரிதானான்னு சொல்லு! இது உனக்கு சம்மதமான்னு சொல்லு! இல்லன்னா என்னுடைய மனப் போராட்டத்துக்கு ஒரு முடிவே இருக்காது!” என்றான்.

 

      அகிலா கடலைப் பார்த்து யோசித்தவிறிருந்தாள். பின் பேசினாள். “சொல்றேன் கணேஷ். ஆனா ஏன் இப்படி அவசரப் பட்றீங்க? எல்லாரும்தான் இந்த உலகத்தில அவசரப் பட்றாங்க. உங்க அத்தை, உங்க அத்தை பொண்ணு, எங்க அம்மா, எல்லாருக்குமே விடைகள் அவசரமாத்தான் தேவைப் படுது. நீங்களும் அவசரப் படணுமா? என்னையும் அவசரப் படுத்தணுமா?”“எனக்கு சமாதானமா இல்ல! என் மனசு அடங்க மாட்டேங்குது. உனக்குத் துரோகம் செஞ்சிட்டேன்னு என்னக் குத்துது” அவள் பதில் சொல்லவில்லை.மழைத் துளிகள் விழ ஆரம்பித்தன. நடந்து திரும்பினார்கள். அவள் பின்னால் உட்கார்ந்ததும் மோட்டார் சைக்கிளை உதைத்துக் கிளப்பி நகருமுன் அவன் கேட்டான்.“என் மேல கோபமா அகிலா? அதையாவது சொல்லேன்!”“கோபப்பட எனக்கு உரிமை இருக்கு! கோபமும் இருக்கு. ஆனா பயப்படாதீங்க, உங்க அத்த மகள் மாதிரி முட்டாள் தனமான காரியத்தில நான் ஈடுபட மாட்டேன்”மோட்டார் சைக்கிள் நகர்ந்தது. அவன் தோள்களை உறுதியாகப் பிடித்து உட்கார்ந்திருந்தாள் அகிலா.வரும் வழியில் மழை வலுத்தது. அதே மழை. அன்று போலத்தான். அவன் மழைக்கோட்டை எடுத்து முன் பக்கமாகக் கையை நுழைத்துப் போத்திக் கொண்டு அவளுக்கும் ஒரு பகுதியைக் கொடுத்தான். அவள் அவன் இடுப்பை வளைத்துப் பிடித்தாள். மழை உடம்பையெல்லாம் நனைத்து, சேலையையும் ரவிக்கையையும் நனைத்து உடம்போடு ஒட்ட வைத்தது. குளிர் எடுக்க ஆரம்பித்தவுடன் மார்புகள் உரச அவனை இன்னும் இறுக்கமாகக் கட்டிப் பிடித்துக் கொண்டாள் அகிலா.

by parthi   on 15 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
வேணாம் புள்ளை வேணாம் புள்ளை
வந்த நோக்கம்…? வந்த நோக்கம்…?
நான் அவனில்லை நான் அவனில்லை
கரடியின் கர்வம் கரடியின் கர்வம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.