LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா தொடர்கள் Print Friendly and PDF
- கலைஞர் என்னும் கலைஞன்

கலைஞர் என்னும் கலைஞன் - 2 : பராசக்தி

டி.வி.ராதாகிருஷ்ணன்,

எழுத்தாளர், நாடகக் கலைஞர்

 

 

17-10-1952 தீபாவளி நாள். தமிழ்த் திரையுலகையே திருப்பிப் போட்ட நாள் எனலாம்'


ஆம்...அன்று வெளிவந்த படம்...பராசக்தி


இன்றளவும் மக்கள் மனதை விட்டு அகலாத ஒரு படம்.


நேஷனல் பிக்சர்ஸ் பி.ஏ பெருமாள் ஏ வி எம்முடன் இணைந்து கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் எடுத்த படம்.


இப்படத்தில் சிவாஜி கணேசன் என பின்னாளில் நடிகர் திலகமாய்க் கொடிக்கட்டிப் பிறந்த வி.சி கணேசன் அறிமுகமான படம்.இப்படத்தில் அவர் நடிக்க எதிர்ப்பு இருந்தது.கே ஆர்.ராமசாமி தான் நடிக்க வேண்டும் என்றனர்.ஆனால். பெருமாள், வி சி கணேசன் தான் என்பதில் உறுதியாய் இருந்தார்.


கணேசன் நடித்தார்.முதல் நாள் படபிடிப்பில் அவர் உச்சரித்த முதல் வார்த்தை "சக்சஸ்"


படமும் சக்சஸ், அவர் திரையுலக்ப் பணியும் சக்சஸ்


கலைஞரின் வசனத்தாலும், சிவாஜி, எஸ் எஸ் ஆர்., ஆகியோரின் உச்சரிப்பாலும் அவை அப்படியே இன்னமும் உலா வந்துக் கொண்டிருக்கின்றன.


சந்திரசேகரன், ஞானசேகரன், குணசேகரன் மூன் று சகோதரர்கள் ரங்கூனில் வசித்து வருகின்றனர்.அவர்களது த்ங்கையோ மதராசில்.இரண்டாம் உலக யுத்தம் நடைபெறும் நேரம்.மதராசிற்குக் குடிப் பெயர சகோதரர்கள் நினைக்கின்றனர்.ஆனால்...சரியான போக்குவரத்து சீட்டுக் கிடைக்காததால், அவர்கள் ஒவ்வொருவரும் பிரிய நேரிடுகிறது.


அவர்களது த்ங்கை கல்யாணியோ இங்கு விதவை..கையில் ஒரு குழ்ந்தையுடன்.அவளை பாலியல் பலாத்காரம் செய்ய முயல்கிறார்கள் சமுக விரோதிகள்.அவள், வறுமை தாங்காது, தன் குழ்ந்தையை ஒரு கிணற்றில் வீசிவிட்டு தற்கொலைக்கு முயல்கிறாள்.

காப்பாற்றப்பட்டு...நீதி மன்ற கூண்டில் அவள்.அப்போது..


நீதிமன்றத்தில் சிவாஜி பேசும் கலைஞரின் இந்த வசனம் ஒலிக்காத இடங்கள் இல்லை அன்று.ஒவ்வொரு இளைஞனுக்கும் மனப்பாடம் இது.


இந்தளவு தாக்கத்தை இதுவரை எந்தப்படமும் இதுவரை ஏற்படுத்தவில்லை என உறுதியாகக் கூற்லாம்.


அந்த வசனத்தைப் பாருங்கள்-


நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளைச் சந்தித்து இருக்கிறது. புதுமையான பல மனிதர்களைக் கண்டிருக்கிறது. ஆகவே இவ்வழக்கு விசித்திரமல்ல, வழக்காடும் நான் புதுமையான மனிதனுமல்ல. வாழ்க்கைப் பாதையிலே சர்வ சாதாரணமாகக் காணக்கூடிய ஜீவன்தான்.


கோவிலிலே குழப்பம் விளைவித்தேன். பூசாரியைத் தாக்கினேன். குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம். நீங்கள் எதிர்பார்ப்பீர்கள், நான் இதையெல்லாம் மறுக்கப்போகிறேன் என்று. இல்லை நிச்சயமாக இல்லை. கோவிலிலே குழப்பம் விளைவித்தேன். கோவில் கூடாது என்பதற்காக அல்ல. கோவில் கொடியவர்களின் கூடாரமாய் இருக்கக்கூடாது என்பதற்காக. பூசாரியைத் தாக்கினேன். அவன் பக்தன் என்பதற்காக அல்ல. பக்தி பகல் வேஷமாகி விட்டதைக் கண்டிப்பதற்காக.


உனக்கேன் இவ்வளவு அக்கறை, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை, என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன். சுயநிலம் என்பீர்கள். என் சுயநிலத்தில் பொதுநலம் கலந்திருக்கிறது. ஆகாரத்திற்காக அழுக்கைச் சாப்பிட்டு தடாகத்தைச் சுத்தப்படுத்துகிறதே மீன் – அதைப் போல.


என்னைக் குற்றவாளி, குற்றவாளி என்கிறார்களே, இந்தக் குற்றவாளியின் வாழ்க்கைப் பாதையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி நிடந்து பார்த்தால் அவன் கடந்து வந்துள்ள காட்டாறுகள் எவ்வளவு என்று கணக்கு பார்க்க முடியும். பாட்டொலிக்கும் குயில்கள் இல்லை என் பாதையில், படமெடுத்தாடும் பாம்புகள் நெளிந்திருக்கின்றன. தென்றலைத் தீண்டியதில்லை நான். ஆனால் தீயைத் தாண்டியிருக்கிறேன். கேளுங்கள் என் கதையை! நீதிபதி அவர்களே! தீர்ப்பு எழுதுவதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்.


தமிழ்நாட்டிலே இத்திருவிடத்திலே பிறந்தவன் நான். பிறக்க ஒரு நாடு பிழைக்க ஒரு நாடு. தமிழர்களின் தலையெழுத்துக்கு நானென்ன விதிவிலக்கா? ரங்கூன்! அது உயிரை வளர்த்தது. என்னை உயர்ந்தவன் ஆக்கியது. திருமணக் கோலத்தில் இருந்த என் தங்கையைக் காண வந்தேன். மோசடி வழக்கிலே ஈடுபட்டு இதோ குற்றவாளிக் கூண்டிலே உங்கள் முன் நிற்கிறாளே இந்த ஜாலக்காரி ஜூலி, இவள் வலையில் விழுந்தவர்களில் நானும் ஒருவன். பணப் பெட்டியைப் பறிகொடுத்தேன். பசியால் மெலிந்தேன் நலிந்தேன், கடைசியில் பைத்தியமாக மாறினேன்.


காண வந்த தங்கையைக் கண்டேன். கண்ணற்ற ஓவியமாக. ஆம் கைம்பெண்ணாக, தங்கையின் பெயரோ கல்யாணி. மங்களகரமான பெயர். ஆனால் கழுத்திலே மாங்கல்யமில்லை. செழித்து வளர்ந்த குடும்பம் சீரழிந்துவிட்டது. கையில் பிள்ளை. கண்களிலே நீர். கல்யாணி அலைந்தாள். கல்யாணிக்காக நான் அலைந்தேன்.


கல்யாணிக்குக் கருணை காட்டினர் பலர். அவர்களிலே காளையர் சிலர் அவளுடைய காதலைக் கேட்டனர். கொலை வழக்கிலே ஈடுபட்டு உங்கள் முன் நிற்கிறானே இக்கொடியவன் வேணு, இவன் பகட்டால் என் தங்கையைக் கற்பழிக்க முயன்றான். நான் தடுத்திராவிட்டால் கல்யாணி அப்போதே தற்கொலை செய்து கொண்டிருப்பாள்.


கடவுள் பக்தர்களும் கல்யாணிக்குக் கருணை காட்ட முன்வந்தார்கள். பிரதி உபகாரமாக அவள் கடைக்கண் பார்வையைக் கேட்டனர். அதில் தலையானவன் இந்தப் பூசாரி. கல்யாணியின் கற்பைக் காணிக்கையாகக் கேட்டிருக்கிறான் – பராசக்தியின் பெயரால், உலக மாதாவின் பெயரால். கல்யாணி உலகத்தில் புழுவாகத் துடித்தபடியாவது உயிரோடு இருந்திருப்பாள். அவளைத் தற்கொலை செய்து கொள்ளத் தூண்டியது இந்த பூசாரிதான். தன் குழந்தையை இரக்கமற்ற உலகத்தில் விட்டுச் செல்ல அவள் விரும்பவில்லை. தன் குழந்தை ஆதரவற்றுத் துடித்துச் சாவதைக் காண அவள் விரும்பவில்லை. அவளே கொன்றுவிட்டாள். விருப்பமானவர்களைக் கொல்வது விந்தையல்ல. உலக உத்தமர் காந்தி, அஹிம்சா மூர்த்தி ஜீவகாருண்ய சீலர், அவரே நோயால் துடித்துக் கொண்டிருந்த கன்று குட்டியைக் கொன்றுவிடச் சொல்லியிருக்கிறார், அது கஷ்டப்படுவதைக் காணச் சகிக்காமல். அந்த முறையைத்தான் கையாண்டிருக்கிறாள் கல்யாணி. இது எப்படி குற்றமாகும்?


என் தங்கை விட்டுக் கொடுத்திருந்தால், கோடீஸ்வரன் பள்ளியறையிலே ஒரு நாள் – மானத்தை விலை கூறியிருந்தால், மாளிகை வாசியின் மடியிலே ஒரு நாள் – இப்படி ஓட்டியிருக்கலாம் நாட்களை. இதைத்தானா இந்த நீதிமன்றம் விரும்புகிறது?


பகட்டு என் தங்கையை மிரட்டியது. பயந்து ஓடினாள். பணம் என் தங்கையைத் துரத்தியது. மீண்டும் ஓடினாள். பக்தி என் தங்கையை பயமுறுத்தியது. ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள். அந்த ஓட்டத்தைத் தடுத்திருக்கவேண்டும். வாட்டத்தைப் போக்கியிருக்கவேண்டும். இன்று சட்டத்தை நீட்டுவோர். செய்தார்களா? வாழவிட்டார்களா என் கல்யாணியை?


அரசு வக்கீல்: குற்றவாளி யார் யார் வழக்கிற்கோ வக்கீலாக மாறுகிறார்.


குணசேகரன்: யார் வழக்கிற்குமில்லை. அதுவும் என் வழக்குதான். என் தங்கையின் வழக்கு. தங்கையின் மானத்தை அழிக்க எண்ணிய மாபாவிக்கு புத்தி புகட்ட அண்ணன் ஓடுவதில் என்ன தவறு? கல்யாணி தற்கொலை செய்துகொள்ள முயன்றது ஒரு குற்றம். குழந்தையைக் கொன்றது ஒரு குற்றம். நான் பூசாரியைத் தாக்கியது ஒரு குற்றம். இத்தனைக் குற்றங்களுக்கும் யார் காரணம்? கல்யாணியைக் கஞ்சிக்கில்லாமல் அலையவிட்டது யார் குற்றம்? விதியின் குற்றமா? அல்லது விதியின் பெயரைச் சொல்லி வயிறு வளர்க்கும் வீணர்களின் குற்றமா? பணம் பறிக்கும் கொள்ளைக் கூட்டத்தை வளரவிட்டது யார் குற்றம்? பஞ்சத்தின் குற்றமா? அல்லது பஞ்சத்தை மஞ்சத்திற்கு வரவழைக்கும் வஞ்சகர்களின் குற்றமா? கடவுள் பெயரால் காம லீலைகள் நடத்தும் போலிப் பூசாரிகளை நாட்டிலே நடமாட விட்டது யார் குற்றம்? கடவுளின் குற்றமா? அல்லது கடவுளின் பெயரைச் சொல்லி காலட்சேபம் நடத்தும் கயவர்களின் குற்றமா? இக்குற்றங்கள் களையப்படும் வரை குணசேகரன்களும் கல்யாணிகளும் குறையப்போவதில்லை. இதுதான் எங்கள் வாழ்க்கை ஏட்டில் எந்தப் பக்கம் புரட்டினாலும் காணப்படும் பாடம், பகுத்தறிவு, பயனுள்ள அரசியல் தத்துவம்


பூசாரி, சிவாஜியின் விதவைத் தங்கையிடம் முறைகேடாக நடப்பான்.அப்போது அவனைக் கண்டிக்க வரும் சிவாஜி அம்பாள் சிலையின் பின்னே இருந்து பேசுவார்.பூசாரி, "அம்பாளா பேசறது" என்பான்.


அதற்கு சிவாஜி, "அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள்?" என்பார் சிவாஜி


பெரும் சர்ச்சைக்கு உள்ளான வசனமாய் இது அமைந்தது


பராசக்தி தமிழ் சினிமாவின் ஒரு புதிய அலை. பராசக்தி படத்தின் வசனங்கள் மட்டுமல்ல, அதன் திரைக்கதைகூட நவீனமானது, எளிமையானது. எளிய மக்களையும் மனதில் கொண்டு எழுதப்பட்டது.


படத்தில் சிவாஜியின் காதலியாக வரும், பண்டரிபாய் பெரியாரின் சுயமரியதை கொள்கையை கடைபிடிக்கும் பெண். ஆணைவிட அதாவது கதாநாயகனைவிட புத்திசாலி. பண்டரிபாயின் சகோதரர், சுயமரியாதை கொள்கைகளை பிரச்சாரம் செய்யும் சொற்பொழிவாளர் கதாபாத்திரம்.


படத்தின் கடைசிக் காட்சியில், பண்டரிபாய்க்கும் சிவாஜிக்கும் திருமணத்தை முடித்துவிட வேண்டும் என்று குடும்பத்தார், பேசிக்கொள்வார்கள். திருமணத்தை வைதீக முறைபடி நடத்த வேண்டும் என்று சொல்லும்போது, ‘அதெல்லாம் எதற்கு? தாலிகூட வேண்டாம். இரண்டு மாலை. ஒரு சொற்பொழிவாளர் போதும்’ என்று பெரியாரின் சுயமரியாதை திருமண முறையை வலியுறுத்திதான் படம் முடியும்.


பிச்சைக்காரர்களை மிகக் கேவலமாக சித்தரித்து நகைச்சுவை செய்கின்றன இன்றையத் தமிழ் சினிமாக்கள். ஆனால் அந்தக் காலத்திலேயே, பிச்சைக்காரர்களை மரியாதைக்குரியவர்களாக காட்டிய ஓரே படம் பராசக்திதான்.


ரங்கூனில் இருந்து சிவாஜி கப்பலில் வந்து சென்னையில் இறங்கியவுடன், தன்னிடம் பிச்சை கேட்கும் குரலை, விமர்சிப்பார். அந்த விமர்சனம்கூட பிச்சைக்காரரை குறைசொல்வதாக இல்லாமல், சமூகத்தைகுறை சொல்வதாகதான் இருக்கும். பிறகு எஸ்.எஸ.ஆர்., பிச்சைகாரர்களுக்காக சங்கம் வைத்து அவர்களின் உரிமைக்காக போராடுபவராகவும் வருவார்.


. மக்களுக்கு தேவையில்லாத அல்லது ஆபத்தான கருத்தை பாராசக்தி சொல்லவில்லை. மாறாக பல புதிய சீர்திருத்தக் கருத்துக்களைத்தான் சொன்னது.


இப்படத்திற்கு இசையும் கைகொடுத்ததை மறக்க முடியாது.


சுதர்சனம் இசையில்

 

1)எல்லோரும் வாழ வேண்டும் எம்.எல்.வி., டி எஸ் பகவதி பாடினர்

2)காகாகா (சி எஸ் ஜெயராம்)

3)நெஞ்சு பொறுக்குதிலையே (பாரதியார் பாடல் பாடியவர் ஜெயராமன்)

4)ஓ ரசிக்கும் சீமானே (எம் எஸ் ராஜேஸ்வரி)

5)பெண்ணே ஒரு தொல்லையா (டி எஸ் பகவதி)

6) நேசம் ஞானம் (பாரதிதாசன் பாடல் ஜெயராமன் பாடினார்)

7) கொஞ்சும் மொழி (டி எஸ் பகவதி)

8)பூமாலை நேயேன் (டி எஸ் பகவதி)

9) புது பெண்ணின் மனசைத் தொட்டு(டி எஸ் பகவதி)

முதல் பாடலும் நான்காவது பாடலும் கடைசி பாடலும் அண்னல்தாங்கே என்பவர் எழுதினார்

2,5,7.8 படல்களை எழுதியவர் உடுமலை நாராயணகவி

 

 

தொடரும்.....  

 


ரங்கோன் ராதா
by Swathi   on 25 Aug 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கலைஞர் என்னும் கலைஞன் - 25 : எங்கள் தங்கம் கலைஞர் என்னும் கலைஞன் - 25 : எங்கள் தங்கம்
கலைஞர் என்னும் கலைஞன் - 24 : வண்டிக்காரன் மகன் கலைஞர் என்னும் கலைஞன் - 24 : வண்டிக்காரன் மகன்
கலைஞர் என்னும் கலைஞன் - 23 : பூக்காரி . அணையா விளக்கு கலைஞர் என்னும் கலைஞன் - 23 : பூக்காரி . அணையா விளக்கு
கலைஞர் என்னும் கலைஞன் - 22 : பிள்ளையோ பிள்ளை கலைஞர் என்னும் கலைஞன் - 22 : பிள்ளையோ பிள்ளை
கலைஞர் என்னும் கலைஞன் - 21 : வாலிப விருந்து கலைஞர் என்னும் கலைஞன் - 21 : வாலிப விருந்து
கலைஞர் என்னும் கலைஞன் - 20 : தங்கத் தம்பி கலைஞர் என்னும் கலைஞன் - 20 : தங்கத் தம்பி
கலைஞர் என்னும் கலைஞன் - 19 : மறக்கமுடியுமா கலைஞர் என்னும் கலைஞன் - 19 : மறக்கமுடியுமா
கலைஞர் என்னும் கலைஞன் - 18 : பித்தனா கலைஞர் என்னும் கலைஞன் - 18 : பித்தனா
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.