LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா தொடர்கள் Print Friendly and PDF
- கலைஞர் என்னும் கலைஞன்

கலைஞர் என்னும் கலைஞன் - 6 : மனோகரா

 டி.வி.ராதாகிருஷ்ணன்,

 எழுத்தாளர், நாடகக் கலைஞர்

 

ஜூபிடெர் பிக்சர்ஸ் தயாரிப்பான மனோகரா வெளியான நாள் 3-7-1954.

 

திரைக்கதை- வசனம் கலைஞர்..இயக்கம் எல் வி பிரசாத்.

 

இது பம்மல் சம்பந்த முதலியாரின் கதை.மேடை நாடகமாக நடிக்கப்பட்டு 1936ல் திரைப்படமாக வந்தது.பின்னர் கே ஆர் ராமசாமியால் மீண்டும் மேடையில் நடிக்கப்பட்டது.இந்நாடகத்தில் சிவாஜி கணேசன் அரசியாக பெண் வேடத்தில் நடித்திருந்தார்.

 

வெள்ளித்திரையில்...


சிவாஜி, கண்ணாம்பா,ராஜகுமாரி, , எஸ் ஏ நடராஜன், ஜாவர் சீதாராமன் ஆகியோர் நடித்தனர்.

 

ஒவ்வொருவரும் போட்டிக் கொண்டு நடித்தனர்.யார் நடிப்பு சிறப்பு எனச் சொல்லுவதே கடினம்.

 

டி ஆர் ராஜகுமாரி, வசந்த சேனை என்ற வில்லி பாத்திரத்தில் மிகவும அருமையாக நடித்தார்.

 

மனோகரானகவே வாழ்ந்தார் சிவாஜி.

 

கண்ணாம்பா மனோகரின் தாயாக வாழ்ந்தார்.

 

பின்னாளில் இப்படம் பற்றி பேசும்போது சிவாஜி கணேசன் சொன்னாராம்.."என் நடிப்பு...நான் பேசிய வசனங்கள் அனைத்தையும் தன் ஒரே வரி வசன உச்சரிப்பிலும், நடிப்பாலும் தகர்த்தெறிந்துவிட்டார் கண்ணாம்பா என்று.அந்த ஒரு வரி வசனம்..

 

"பொறுத்தது போதும் மனோகரா..பொங்கி எழு" என்பதே.

 

சிவாஜி கணேசன் ..சங்கிலியால் கட்டப்பட்டு அரசவையில் பேசிய வசனம்...

 

அரசர்: மனோகரா! உன்னை எதற்காக அழைத்திருக்கிறேன் தெரியுமா?

 

மனோகரன்: திருத்திக் கொள்ளுங்கள் அரசே! அழைத்து வரவில்லை என்னை. இழுத்துவரச் செய்திருக்கிறீர்கள்.

 

அரசர்: என் கட்டளையைத் தெரிந்து கொண்டிருப்பாய் நீ.

 

மனோகரன்: கட்டளையா இது? கரை காண முடியாத ஆசை! பொன்னும், மணியும், மின்னும் வைரமும் பூட்டி மகிழ்ந்து கண்ணே முத்தே என்றெல்லாம் குலவிக் கொஞ்சி, தந்தத்தால் ஆன கட்டிலிலே, சந்தனத் தொட்டிலிலே, `வீரனே! என் விழி நிறைந்தவனே!' என்று யாரைச் சீராட்டி பாராட்டினீர்களோ அவனை அந்த மனோகரனை சங்கிலியால் பிணைத்து, சபை நடுவே நிறுத்தி சந்தோஷம் கொண்டாட வேண்டும் என்ற தங்கள் தணியாத ஆசைக்குப் பெயர் கட்டளையா தந்தையே?

 

அரசர்: நீ நீதியின் முன்னே நிற்கும் குற்றவாளி! தந்தையின் முன் தனயனல்ல இப்போது!

 

மனோகரன்: குற்றவாளி! நான் யாருக்கு என்ன தீங்கிழைத்தேன்? என்னால் பாதிக்கப்பட்டவர்கள் யார்? அரசே! தந்தையின் முன் தனயனாக அல்ல, பிரஜைகளில் ஒருவனாக கேட்கிறேன். கொலை செய்தேனா? கொள்ளையடித்தேனா? நாட்டைக் கவிழ்க்கும் குள்ளநரி வேலை நான் செய்தேனா? குற்றம் என்ன செய்தேன் கொற்றவனே, குற்றம் என்ன செய்தேன்? கூறமாட்டீர்களா? நீங்கள் கூறவேண்டாம்.

 

இதோ அறங்கூறும் அமைச்சர்கள் இருக்கிறார்கள். மறவர் குடிப்பிறந்த மாவீரர்கள் இருக்கிறார்கள்! மக்களின் பிரதிநிதிகள் _இந்த நாட்டின் குரல்கள் இருக்கிறார்கள். அவர்கள் கூறட்டும்... என்ன குற்றம் செய்தேன்?

 

சபையோர்: குற்றத்தை மகாராஜா கூறத்தான் வேண்டும்.

 

அரசர்: இது உங்களுக்கு சம்பந்தம் இல்லாதது.

 

மனோகரன்: சம்பந்தம் இல்லாதது சபைக்கு வருவானேன்? குடும்பத்தகராறு கொலு மண்டபத்துக்கு வரும் விசித்திரத்தை சரித்திரம் இன்றுதான் முதன் முதலாகச் சந்திக்கிறது மகாராஜா!

 

அரசர்: போதும் நிறுத்து... வசந்த விழாவில் நீ செய்த தவறுக்காக வசந்த சேனையிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும்.

 

மனோகரன்: அதற்குத்தான் காரணம் கேட்கிறேன்!

 

அரசர்: எதிர்த்துப் பேசுபவர்களுக்கு ராஜசபையில் என்ன தண்டனை தெரியுமா?

 

மனோகரன்: முறைப்படி மணந்த ராணிக்கு சிறைத்தண்டனை அளித்துவிட்டு, மூலையில் கிடந்ததற்கு முடிசூட்டியவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனையை விடக் குறைவானதுதான்.

 

அரசர்: ஆத்திரத்தைக் கிளப்பாதே! நிறைவேற்று. அரசன் உத்திரவு.

 

மனோகரன்: அரசன் உத்திரவென்ன? ஆண்டவனின் உத்திரவுக்கே காரணம் கேட்க ஆரம்பித்து விட்டார்கள். அரசே! சிறைச்சாலைக்குச் செல்ல வேண்டும் தாய் என்று கேள்விப்பட்ட பின்னும் அடங்கிக் கிடப்பவன் ஆமை!

 

அரசன்: தாய்க்கும், தந்தைக்கும் வேற்றுமை அறியா மூடனே! தந்தையின் ஆணை கேட்டு தாயாரின் தலையை வெட்டி எறிந்த பரசுராமனைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறாயா நீ?

 

மனோகரன்: பரசுராமன் அவதாரம். மனோகரன் மனிதன்!"

 

வேறு ஒரு காட்சியில் வசனம்

 

புருஷோத்தமரே! புரட்டுக்காரியின் உருட்டு விழியில் உலகத்தைக் காண்பவரே! மானமொன்றே நல்வாழ்வெனக் கொண்டு வாழ்ந்த மறவேந்தர் பரம்பரையில் மாசாக வந்தவரே! மயிலுக்கும் மந்திக்கும் வித்தியாசம் தெரியாத மதிவாணரே! குளிர் நிலவைக் கொள்ளிக்கட்டையெனக் கூறிய குருடரே! என் தாய் அன்பின் பிறப்பிடம், அற நெறியின் இருப்பிடம், கருணை வடிவம், கற்பின் திருவுருவம், மாசற்ற மாணிக்கம், மாற்றுக் குறையாத தங்கம். அவர்களை அவதூறு கூறிய அங்கங்களை பிளந்தெறிவேன். இந்த துரோகப் பேச்சுக்கும் உம்மைத் தூண்டிவிட்ட துரோகியின் உடலை துண்டாடுவேன். துணிவிருந்தால், தோளில் வலுவிருந்தால், எடுத்துக் கொள்ளும் உமது வாளை. தடுத்துக் கொள்ளும் உமது சாவை. தைரியமில்லாவிட்டால், தளுக்குக்காரியின் குலுக்குச் சிரிப்பிலே நீர் கோழையாகிவிட்டிருந்தால், ஓடி விடும். புறநானூற்றின் பெருமையை மூட வந்த புழுதிக் காற்றே! புறமுதுகு காட்டி ஓடும்! கலிங்கத்துப் பரணியை மறைக்க வந்த காரிருளே! கால் பிடரியில் இடிபட ஓடும்! ஓடும்! ஓலமிட்டு ஓடும்! ஓலமிட்டு ஓடும்! ஓங்காரக் கூச்சலிட்டு ஓடும்! ஏன், அவமானமாக இருக்கிறதா? என் அன்னையை தூஷித்த சின்னஞ்சிறு புழுவே, ஏன் சிலையாக மாறிவிட்டீர்? ஏ ராஜ விக்ரகமே! பழி வாங்கும் பக்தன் பூஜை செய்ய வந்திருக்கிறான். அப்படியே நில்லும்! அசையாமல் நில்லும்! இந்த சித்து வேலைக்காரியின் ரத்தத்தைக் கொண்டு உமக்கு அபிஷேகம் செய்கிறேன். இந்த நாசக்காரியின் நரம்புகளால் உமக்கு மாலை சூட்டுகிறேன். முல்லைச் சிரிப்பென புகழ்வீரே, மோக போதையில்! அந்தப் பல்லை எடுத்து உமக்கு அர்ச்சனை செய்கிறேன்.

 

இந்த அளவிற்கு வசனங்களையும், தமிழையும், உச்சரிக்கும் நடிகர்களையும் இன்றைய திரையுலகில் பார்ப்பது அரிது..அரிது..அரிதாகும்

 

நல்ல கதையமைப்பும், அருமையான வசனங்களும், கலைஞர்களின் நடிப்பும் இருந்தால் அப்படத்தை மக்கள் வரவேற்பார்கள் என்ற பொருள் பட ஆனந்தவிகடன் இப்படத்திற்கு விமரிசனம் எழுதியது

 

எஸ் வி வெங்கட்ராமன்,டி வி ராமநாதன் இசையில் வந்த பாடல்கள்.

 

சிங்கார பேண் கிளியே பேசு (ஏ எம் ராஜா, ராதா ஜெயலட்சுமி).

 

நிலவில் உல்லாசமாய் ஆடலாம் (மோதி, ரத்னம்).

சந்தேகம் இல்லை(எஸ் வி வெங்கட்ராமன், சி எஸ் பாண்டியன்).

 

என்னைப் பாரு என் அழகைப் பாரு (டி வி ரத்னம்).

 

 

 

தொடரும்.....
ரங்கோன் ராதா
by Swathi   on 25 Aug 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கலைஞர் என்னும் கலைஞன் - 25 : எங்கள் தங்கம் கலைஞர் என்னும் கலைஞன் - 25 : எங்கள் தங்கம்
கலைஞர் என்னும் கலைஞன் - 24 : வண்டிக்காரன் மகன் கலைஞர் என்னும் கலைஞன் - 24 : வண்டிக்காரன் மகன்
கலைஞர் என்னும் கலைஞன் - 23 : பூக்காரி . அணையா விளக்கு கலைஞர் என்னும் கலைஞன் - 23 : பூக்காரி . அணையா விளக்கு
கலைஞர் என்னும் கலைஞன் - 22 : பிள்ளையோ பிள்ளை கலைஞர் என்னும் கலைஞன் - 22 : பிள்ளையோ பிள்ளை
கலைஞர் என்னும் கலைஞன் - 21 : வாலிப விருந்து கலைஞர் என்னும் கலைஞன் - 21 : வாலிப விருந்து
கலைஞர் என்னும் கலைஞன் - 20 : தங்கத் தம்பி கலைஞர் என்னும் கலைஞன் - 20 : தங்கத் தம்பி
கலைஞர் என்னும் கலைஞன் - 19 : மறக்கமுடியுமா கலைஞர் என்னும் கலைஞன் - 19 : மறக்கமுடியுமா
கலைஞர் என்னும் கலைஞன் - 18 : பித்தனா கலைஞர் என்னும் கலைஞன் - 18 : பித்தனா
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.