தெய்வம் வீற்றிருக்கும் இடத்தின் கோவிலில் முன்பகுதியில் உள்ள பரந்த இடத்தில் தெய்வத்தின் உருவத்தை வண்ணப்பொடிகளால் வரைவதும், அத்தெய்வத்தைப் போற்றிப் பாடுவதும் ஆகிய இரு கூறுகளைக் கொண்டது களமெழுத்தும் பாட்டும் ஆகும். இக்கலையில் காளி படத்தை வரைவது பெருவழக்காக உள்ளது. இப்படத்தை கலை வெளிப்பாடாக மட்டுமின்றி காளியாகவே கருதுகின்றனர். இக்கலையானது கேரளத்தில் பரவலாக நிகழ்கிறது. தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பகவதி அம்மன் கோவிலிலும், பத்மநாபபுரம் கோவிலிலும் இக்கலை முன்பு நிகழ்ந்தது. இப்போது கன்னியாகுமரி மாவட்டங்களில் சில இடங்களில் உள்ள கோவில்களில் நிகழ்த்தப்படுகிறது. இக்கலையை நிகழ்த்தும் கலைஞருக்கு வயது வரம்பு இல்லை. பெண்கள் இக்கலையை நிகழ்த்துதல் கூடாது என்றும் உள்ளது. மூத்த கலைஞரே களத்தில் படம் வரைவதாகவும், சம்பிரதாயங்கள் முடிந்த பிறகு, படம் வரைந்த மூத்த கலைஞரே அதனை அழிக்கவும் உதவுவதாகவும் உள்ளது. இக்கலைஞர்கள் இதனைத் தொழிலாகச் செய்யவில்லை. இக்கலையில் ஈடுபடும் கலைஞர்கள் பிற தொழில்களில் ஈடுபடுவதாகவும், குறைந்த ஊதியமே இக்கலைக்குக் கலைஞர்கள் பெற்றுக் கொண்டாலும் கோவிலைச் சார்ந்தவர்களால் மதிப்புடன் நடத்தப்படுகின்றனர். அதனால் இக்கலை நலிந்து விடாமல் இன்றும் வாழ்கிறது.
|