சிறுநீரகக் கோளாறால் பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல கன்னட நடிகரும், முன்னாள் அமைச்சருமான அம்ப்ரீஷ் காலமானார்.
கன்னட சினிமா உலகின் சூப்பர் ஸ்டாராகத் திகழ்ந்தவர் அம்ப்ரீஷ் (வயது 66), இவர் 1972ல் வெளியான ‘நாகரஹாவு’ என்ற கன்னடப் படத்தில் சிறு வேடத்தின் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனார். பின்னர் கதாநாயகனாக பல வெற்றிப்படங்களை கொடுத்தார்
மொத்தம் 208 திரைப்படங்களில் நடித்து சாதனை படைத்தவர். கன்னட சினிமாவில் அதிக திரைப்படங்களில் நடித்த நடிகர் விஷ்ணுவர்த்தனுக்குப் (230) பிறகு 2வது இடத்தில் அம்ப்ரீஷ் உள்ளார். இவர், நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘பிரியா’ உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்து உள்ளார். மேலும், 1994ல் காங்கிரசில் இணைந்து அரசியலில் அடியெடுத்து வைத்த அவர், மாண்டியா தொகுதியில் போட்டியிட்டு 3 முறை எம்பியாகவும், 2006 முதல் 2008 வரை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை இணை அமைச்சராகவும் பதவி வகித்தார்.
2008ல் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பாயம்அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும், 2013 முதல் 2016 வரை சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் மாநில வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். இந்த நிலையில், சிறுநீரகக் கோளாறு, சுவாசக் கோளாறு காரணமாக பெங்களூரு விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக அவர் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.
அவரது மறைவுக்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி, தேவகவுடா, முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கன்னட நடிகர் நடிகைகள் மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து உள்ளனர். அம்ப்ரீஷ், நடிகர் ரஜினிகாந்த்தின் நெருங்கிய நண்பராவார்.அம்ப்ரீசின் மனைவி சுமலதா, தமிழ் திரைப்பட நடிகை. இவர்களுக்கு அபிஷேக் என்ற ஒரு மகன் உள்ளார்.
|