LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் அறிஞர்கள்

"கப்பலோட்டிய தமிழன்' வ.உ.சிதம்பரனார்

சென்ற சில வருஷங்களாகச் சில அறிவாளிகள் நம் தமிழ்ப் பாஷையில் சில எழுத்துக்கள் குறைவாயிருக்கின்றன வென்றும், அக்குறையை நிவர்த்திக்கத்தக்க பிற பாஷை எழுத்துக்களேனும், பிற சில குறிகளேனும் நம் தமிழ்ப்பாஷை எழுத்துக்களோடு சேர்க்கப்பட வேண்டுமென்றும் கூறி வருகின்றார்கள். ஆனால், அவர்களில் ஒருவரும் அவை சேர்க்கப்படுதல் நம் தமிழ்ப் பாஷைக்காவது, அதன் வளர்ச்சிக்காவது இன்றியமையாததென்று காட்டத்தக்க காரணம் ஒன்றையும் இதுகாறும் கூறிலர்.


இச்சேர்க்கை நம் தமிழ்ப் பாஷைக்கு இன்றியமையாததென்று காட்டக் கருதி, நமது நண்பர் ஸ்ரீ சி.சுப்பிரமணிய பாரதியவர்கள் சென்ற ஆடி மாதத்தில் வெளிவந்த நமது "ஞானபாநு'வில் "தமிழில் எழுத்துக்குறை' என்னும் தலைப்பெயரோடு ஒரு நிரூபம் வரைந்துள்ளார்கள். அந்நிரூபத்தில் மேற்கண்ட சேர்க்கையைச் செய்ய வேண்டுமென்பதற்காகக் கூறப்பட்டுள்ள காரணம் ஒன்றே. அஃதாவது பிற பாஷைகளின் மனிதப்பெயர், நகரப்பெயர் முதலியவற்றிற் சிலவற்றை அப்பாஷையாளர் உச்சரிக்கும் சப்தத்தில் நாம் உச்சரிக்குமாறு செய்யத்தக்க சில எழுத்துக்கள் நமது தமிழ்ப் பாஷையில் இல்லையென்பதே நமது நண்பரவர்கள் தமது நிரூபத்தின் ரு-வது (ரு-5) பகுதியில் ""ஸம்ஸ்க்கிருதச் சொற்களை ஸம்ஸ்க்கிருத வழக்கப்படி நாம் உச்சரிக்க வேண்டிய அவசியமில்லை யாதலால், நமக்கு அந்த எழுத்துக்கள் வேண்டுவதில்லை யென்று சிலர் ஆúக்ஷபிக்கலாம். சரி - நியாயமென்று வைத்துக்கொள்வோம்'' என்று கூறுகிறார்கள். அச்சிலர் பிற பாஷைகளின் மனிதப்பெயர், நகரப்பெயர் முதலியவற்றையும் அவ்வவ் பாஷைகளின் வழக்கப்படி நாம் உச்சரிக்க வேண்டிய அவசிய மில்லையாதலால், நமக்கு அந்த எழுத்துக்கள் வேண்டுவதில்லையென்று கூறுகின்றனர். இக்கூற்றையும் நமது நண்பரவர்கள் சரி, நியாயமென்று வைத்துக்கொள்வோம் என்று அங்கீகரிக்கக் கடமைப்பட்டுள்ளார்கள்.

முந்திய ஆக்ஷபமும் பிந்திய கூற்றும் வேறல்ல வாகலான். அவ்வாறு நமது நண்பரவர்கள் அங்கீகரிப்பார்களாயின் நமது தமிழ்ப் பாஷை எழுத்துக்களோடு பிற சில பாஷை எழுத்துக்களையேனும் பிற சில குறிகளையேனும் சேர்த்தல் இன்றியமையாத தென்பதைக் காட்டத்தக்க காரணம் ஒன்றும் நமது நண்பரவர்கள் நிரூபத்தில் கூறப்படவில்லை யென்பது அதனைப் பார்த்த மாத்திரத்தில் விளங்கும். அவ்வின்றியமையாமையைக் காட்டத்தக்க காரணம் ஒன்றேனும் நமது நண்பரவர்களாலாவது அவர்களைப் போன்ற வேறு பாஷாதிருத்தக்காரர்களாலாவது கூறப்படுமாயின் அப்போது நமது தமிழ்ப் பாஷை எழுத்துக்களோடு பிற சில பாஷை எழுத்துக்களைச் சேர்ப்பதா, பிற சில குறிகளைச் சேர்ப்பதா என்னும் விஷயத்தைப் பற்றிச் சிந்திக்கவும், தீர்மானிக்கவும் நாம் முன்வரக் கடமைப்பட்டுள்ளோம். நிற்க.
சுதேசமித்திரனைச் சென்ற 15 வருஷங்களாகப் படித்து வருகிற ஓர் அய்யங்கார், நமது நிதானக் கட்சித் தலைவருடைய Gokale என்ற பெயரை "கோக்களே' என்று உச்சரித்து நமது நண்பரவர்களுக்குத் தப்பாகத் தோன்றியதும், நமது ஸ்ரீ அரவிந்தரவர்களின் தமிழ் உபாத்தியாயர் ஒரு வங்காளியின் Brendhiranath Gupth என்ற பெயரைத் தமிழர் "பிரேந்திரநாத தத்த குப்தர்' என்றுதான் வாசிப்பரென்று கூறியது நமது அரவிந்தரவர்களுக்குச் சிரிப்பு உண்டு பண்ணியதும் நமது சமஸ்கிருதப் பண்டிதர்களும் வங்காளிப் பண்டிதர்களும் "பழனி', "கிழவி' என்னும் தமிழ்ச் சொற்களை "பளனி', கிளவி' எனவும், "அறம்', மறம்' என்னும் தமிழ்ச் சொற்களை "அரம்', மரம்' எனவும், "மன்றம்', கன்று' என்னும் தமிழ்ச் சொற்களை "மந்ரம்', "கந்ரு' எனவும் ஊர்ழ்ண்ஸ்ரீங்ள், ஊர்ன்ழ்ற்ட் என்னும் ஆங்கிலச் சொற்களை போர்ப்ஸ், போர்த் எனவும் ழங்ஹப், ழங்ய்ண்ற்ட் என்னும் ஆங்கிலச் சொற்களை "ஜீல்', "ஜெனித்' எனவும் உச்சரிக்குங்கால் நாம் தப்பென்று கூறுவதையும் நமது ஆங்கில நண்பர்கள் சிரிப்பதையும் போன்றனவேயன்றி வேறல்ல.

தெய்வ பாஷையென்றும், பூரண பாஷையென்றும், பல பாஷைகளுக்கும் தாய்ப்பாஷை யென்றும் சொல்லப்படுகிற ஸமஸ்கிருத பாஷை எழுத்துக்களோடும் பல புதுமைகளையும் திருத்தங்களையும் கொண்டுள்ள பாஷையென்று சொல்லப்படுகிற வங்காளிப் பாஷை எழுத்துக்களோடும் ழ, ற, ன, ஊ, ழ என்னும் எழுத்துக்களையாவது அவற்றின் ஒலிகளைக் குறிக்குங் குறிகளையாவது சேர்ப்பதற்கு நமது நண்பரவர்களும் அரவிந்தரவர்களும் முயற்சித்து வெற்றி பெறுவார்களாயின், அவர்கள் நமது தமிழ் மக்களுக்கு ஒப்பற்ற வழிகாட்டிகளாவார்கள். பின்னர் நமது தமிழ் மக்கள் அவர்களைப் பின்பற்றத் துணிவார்கள்.

இதுகாறும் தமிழ்ப்பாஷை எழுத்துக்களில் குறையுளது அல்லது தமிழ்ப்பாஷையில் குறையுளது என்று கூறியவர்களில் ஒருவரும் தமிழ் இலக்கண - இலக்கியங்களைப் பூரணமாகக் கற்றுணர்ந்தவராவது, சமஸ்கிருத சம்பந்தமில்லாதவராவது சமஸ்கிருத பாஷையில் மேற்சொல்லிய திருத்தங்களையோ வேறு திருத்தங்களையோ செய்ய வேண்டுமென்று கூறியவராவது காணப்படவில்லை யென்றும், அவர்கள் நம் தமிழ்ப் பாஷையைத் திருத்த முற்படுகின்றார்களோ வருத்த முற்படுகின்றார்களோ என்றும் நம் தமிழ் மக்களிற் சிலர் ஐயமுறுகின்றனர்.
அவருடைய அவ்வையத்தை நிவர்த்திப்பதற்காகவாவது நம் தமிழ்ப் பாஷையில் திருத்தம் செய்யவேண்டுமென்று கூற முன் வருபவர்கள் தமிழ் இலக்கணங்களுக்கெல்லாம் மூலமென்று சொல்லப்படத் தக்கதாயுள்ள தொல்காப்பியம் ஒன்றையும் தமிழ் இலக்கியங்களுக்கெல்லாம் சிறந்தவையென்று சொல்லப்படத் தக்கனவாயுள்ள சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, திருக்குறள், கலிங்கத்துப்பரணி, கலித்தொகை, திருக்கோவையார் முதலியவற்றில் ஒரு சிலவற்றையுமாவது பூரணமாகக் கற்க வேண்டுவது இன்றியமையாதது. இது நிற்க.

ஒரு பாஷைச் சொற்களை அப்பாஷை எழுத்துக்களாலேயே எழுதப்படுதல் நன்றென்றும், பிறபாஷை எழுத்துக்களால் எழுதப்படுதல் தீதென்றும் சில அறிஞர் கூறுகின்றனர். அவ்வாறு அவர் கூறுவதற்குரிய காரணங்களிலொன்று, ஒரு பாஷைச் சொற்கள் மற்றொரு பாஷை எழுத்துக்களால் எழுதப்படுமானால் நாளடைவில் உலகிலுள்ள பல பாஷைச் சொற்களும் பிற பாஷைச் சொற்களோடு கலந்து எவையெவை என்னென்ன பாஷைச் சொற்களென்று தெரியாமற் போகுமென்பது. மற்றொன்று, ஒவ்வொரு பாஷைக்கும் புதிது புதிதாக இலக்கணங்களும் அகராதிகளும் எழுத நேருமென்பது. இன்னொன்று, ஒவ்வொரு பாஷை அகராதியும் இலக்கணமும் உலகத்திலுள்ள பல பாஷைகளின் பல சொற்களையும் கொள்ள நேருவதுடன், பல பாஷைகளில் பலவாறு உச்சரிக்கப்படும் சொற்களெல்லாம் பலமுறை எழுதப்பெற நேருமென்பது. இன்னுமொன்று கடைசியாக, உலகத்திலுள்ள சகல பாஷைகளின் சகல சொற்களையும் கொண்டுள்ள அகராதிகளும் இலக்கணங்களும் ஒவ்வொரு பாஷையிலும் எழுதப்படவும் அவற்றை ஒருவரும் கற்க முடியாமற் போகவும் நேருமென்பது.

ஒவ்வொருவரும் அவரவர் இஷ்டப்படி (பிறரை வருத்தாதவாறு) நினைக்கவும் பேசவும் செய்யவும் விடுதலே சுதந்தர இலக்கணமென்பது போல ஒவ்வொரு பாஷையாசிரியரும் விதித்துள்ளபடியே அவ்வப்பாஷையினர் பிறபாஷைச் சொற்களை உபயோகித்துக் கொள்ளுமாறு விடுதலே சுதந்தர இலக்கணமெனவும் கூறுகின்றனர்.

நம் தமிழ்ப் புலவரோ தமது இனிய பாஷையானது யாவராலும் எளிதாகக் கற்கப்படத்தக்கவாறு முப்பது எழுத்துக்களுக்குள் அமைந்திருக்கிறதென்றும், வேறு பாஷை எழுத்துக்களை இதன் எழுத்துக்களோடு சேர்த்து இதன் எழுத்தெண்ணிக்கையை அதிகமாக்கி, இதனைக் கற்பதற்குக் கஷ்டமடையுமாறு செய்தல் கூடாதென்றும், அந்நிய பாஷையினரோடு சம்பந்தம் வைத்துக்கொள்ள விரும்பும் அரசர், வணிகர் முதலியோர் மாத்திரம் மேற்குறித்தவாறு தமிழ்ப் பாஷையில் இல்லாத பிற பாஷை சப்தங்களைக் குறிக்கும் அவ்வப்பாஷை எழுத்துக்களைக் கற்றாள வேண்டுமென்றும் கூறுகின்றனர்.

இதுகாறும் கூறப்பட்டுள்ளவற்றையும் இவைபோன்ற பிறவற்றையும் நமது நண்பர்கள் சிந்தித்து, தமிழ்ப் பாஷை எழுத்துக்களிற் பிறபாஷை எழுத்துக்களையோ அவற்றின் சப்தத்தைக் கெடுக்கும் குறிகளையோ சேர்ப்பதும், தமிழ் நாட்டுக் கிராமங்களில் உழவுத் தொழில் செய்து ஊரைவிட்டு வெளியேறாதிருக்கும் தமிழ் மக்களும், பிற பாஷையினரின் சம்பந்தம் வேண்டாத தமிழ் மக்களும் அவற்றைக் கற்க வேண்டுவதும் அவசியம்தானா என்பதைத் தீர்மானித்து அதனைத் தக்க காரணங்களோடு நமது "ஞானபாநு' மூலமாக வெளியிடுவார்களாக!

by Swathi   on 10 Apr 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.