LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- மற்றவர்கள்

கரடியின் கர்வம்

கரடியின் கர்வம்

            கடல் கடந்து அமெரிக்காவில் “சான்பிரான்சிஸ்கோ” போன்ற மிகப்பெரிய நகரத்தில் வசித்து கொண்டிருந்தாலும் அவர் நினைவுகள் எப்பொழுதும் இந்தியாவை சுற்றித்தான் இருக்கிறது. இறப்பதற்கு முன்பு நான் இந்தியாவுக்கு செல்வேனா?

            இந்த சிந்தனை ஒவ்வொரு நாளும் விழிப்பின் போது அவர் மனம் அவரிடம் கேட்டு கொண்டிருக்கும் வினா?

          இந்தியா போய் என்ன செய்ய போகிறேன்? முப்பத்தி இரண்டு வருடமாக காட்டிலாகா மருத்துவ அதிகாரியாக பல காடுகளில் சுற்றி திரிந்து ஓய்வு பெற்று விட்டு மகளுக்காக அமெரிக்கா வந்தவர் அவர். பதினைந்து வருடங்களை அமெரிக்காவிலேயே கழித்து விட்டவர்.

      அந்திம காலம் தன்னை நெருங்குகிறதோ என்னும் எண்ணம் அவருக்கு எப்பொழுது தோன்றியது?

       ஆம் அன்று மகளின் குடும்பத்துடன் அங்கிருந்த “விலங்குகள் பூங்காவிற்கு  செல்லும்போதுதான், அதுவும் கரடி ஒன்றை நேருக்கு நேராய் பார்த்த போதுதான் அவருக்கு தன்னுடைய நாடு என்பதே ஞாபகம் வந்தது.

         எல்லோரும் கரடியின் இருப்பிடத்தை தாண்டி சென்ற பின்னாலும் அவரால் அந்த இடத்தை விட்டு வர முடியவில்லை. அதுவரை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த மக்களை, சட்டை செய்யாமல் தேங்கியிருந்த அந்த அழுக்கடைந்த குட்டைக்கருகே உட்கார்ந்திருந்த கரடி திரும்பி பார்த்தது.  அவரை கண்டதும் பாய்ந்து வந்தது. அருகில் அதை வேடிக்கை பார்க்க நின்று கொண்டிருந்த பார்வையாளர்கள் நடுவில் வேலி இருப்பதை மறந்து சிதறி ஓடினர்.அவர் ஓடவில்லை, அதனை சந்திக்கும் ஆவலுடன் உற்று நோக்கி நின்று கொண்டிருந்தார்.

        அவரின் அனுபவ மருத்துவ அறிவு அதனுக்கு வயதாகி கொண்டிருந்த தையும், அதன் கண்களில் தேங்கியிருந்த ஒரு வித வெறுமையையும் உணர முடிந்தது. இருவரும் நேருக்கு நேராய் நின்று கொண்டிருந்தார்கள். இப்பொழுது அதனுடைய விழிகளை அவரால் பார்க்க முடிந்தது. அப்பொழுது தான் தான் கண்டிப்பாய் இந்தியா போக வேண்டும் என்னும் எண்ணம் அவருள் உதயமானது, அது மட்டுமல்ல, திடீரென தன்னை வயது முதிர்ச்சி வந்து சூழ்ந்து கொள்வதையும் உணர்ந்து கொண்டது.

       “கிரேண்ட் பா” கிரேட் நீங்க, எல்லாரும் கரடி வர்றதை பார்த்துட்டு ஓடறப்ப நீங்க மட்டும் கொஞ்சம் கூட பயப்படாம, நகராம அங்கயே நின்னீங்க,

        மகள் கேள்வி கேட்டு கொண்டிருந்த தன் மகள் மகனிடம் சொல்லி கொண்டிருந்தாள், “எங்க டாடி” காட்டுக்குள்ளயே சுத்துனவரு, அவருக்கு தெரியும், மிருகங்களோட குணம், அவள் குரலில் பெருமை.

         அவர்களுக்கு பதில் சொல்லவில்லை என்றாலும் அவர் மனதுக்குள் வந்து நின்ற அந்த கரடி…!

        முதன் முதலில் மேற்கு மலை தொடருக்கு உட்பட்ட நீலகிரி மலைகளில் தான் அவருக்கு காட்டிலாகாவில் விலங்குகள் மருத்துவராக பணியில் சேர குறிப்பாணையை அரசு தந்திருந்தது.

         மழை மழை இடைவிடாத மழையில் காட்டிற்கு நடுவே அகழி ஒன்றை ஏற்படுத்தி அதில் இவர்களது மருத்துவமனை இருந்தது. இவரின் இளம் வயதும், அந்த காட்டை பற்றிய ஆவலும் இவரை தினமும் காட்டுக்குள் சென்று ஊடுருவி போய் பார்க்க சொன்னது.

        அவர் வயதுடைய மூத்த அதிகாரியாய் இருந்த” லிங்கப்பா” அவருடன் எப்பொழுதும் காட்டுக்குள் கூட செல்வார். ஒவ்வொரு முறையும் அவருடன் செல்லும் போது விலங்குகளின் இயல்பும் அது கோபம் வரும் பொழுதும், மகிழ்ச்சியாய் இருக்கும்போது நடந்து கொள்ளும் முறையையும் சொல்லிக்கொண்டே வருவார்.

       அப்படி சொல்லிக்கொண்டு வரும் பொழுதுதான் அவர் இந்த கரடியை பற்றி சொன்னார். நல்ல வாட்டசாட்டமான கரடி ஒன்று இங்கு சுற்றி கொண்டிருக்கிறது.  அது எப்பொழுதுக் கோபமான மன நிலையில் இருக்கிறது.

       உங்களுக்கு எப்படி தெரியும் கோபமான மன நிலையில் இருக்கிறதென்று?

        நாங்கள் ஒவ்வொரு முறையும் காட்டுக்குள் செல்லும் போது விலங்குகளை எந்த வித தொந்தரவும் செய்யாதவாறு தான் நடந்து கொள்ளுவோம், அப்படி இருந்தும் இரண்டு முறை எங்களை பார்த்து ஆக்ரோஷமாக தாக்க வந்தது. நல்ல வேளையாக ஜீப்பில் ஏறி தப்பித்தோம். நாம் இப்படி நடந்து கொண்டிருக்கும் போது எங்காவது வந்து விட்டால் அவ்வளவுதான்…!

        ஆனால் அவர் அங்கு இருந்தவரை கரடியை இவர் நேருக்கு நேராய் சந்திக்கும் வாய்ப்பு வரவேயில்லை, என்றாலும் இரண்டு மூன்று முறை அது இவரது இருப்பிடத்தை தாண்டி சென்றதை  இருப்பிடத்தில் இருந்த வன காவலர்கள் பார்த்திருக்கிறார்கள்

        ஒரு நாள் பணி முடிந்து இருப்பிடத்துக்கு வந்தவர், பொழுதை எப்படி கடப்பது? என்று தெரியாமல் காலாற உள்புறமாக நடக்க ஆரம்பித்தார். சற்று தொலைவுதான் நடந்திருப்பார். பின்புறம் புதரில் இருந்து சல சலவென்ற சத்தம், நடந்து கொண்டிருந்தவர் சட்டென நின்றார்.  அனுபவ அறிவு அந்த இடத்தை விட்டு ஓட சொன்னாலும், ஓடினால் பின்புறம் இவரை கவனித்து கொண்டிருக்கும் விலங்குக்கும் விரட்டி வர வாய்ப்பாகி விடும் என்றும் மனது எச்சரித்தது.

       இரண்டு மூன்று நிமிடம் அசையாமல் நின்றவர் மெல்ல தன் உடலை திருப்பினார். புதருக்குள் இருந்து அவரையே உற்று நோக்கி கொண்டிருந்த உருவத்தை கண்டவுடன் இவரது சப்தனாடியும் ஒடுங்கியது. என்னதான் “தியரிட்டிக்கலாகவும்” சின்ன சின்ன விலங்குகளுடன் பழகிய அனுபவம் இருந்தாலும் மிகப்பெரிய கரடி ஒன்றை நேருக்கு நேராய் பார்ப்பது இதுதான் முதல் தடவை. அது மட்டுமல்ல எந்த ஆயுதமும் இல்லாமல் இப்படி ஒரு இக்கட்டான நிலைமையில் நின்று கொண்டிருப்பது..!

         கரடி தன் உடலை ஓரடி முன் வைத்து அப்படியே இவரையே பார்த்து கொண்டிருந்தது, ஐந்து நிமிடம் எந்த அசைவும் இல்லாமல் நின்று கொண்டிருந்தார். மெல்ல தன் உடலை பின் புறமாக கொண்டு சென்று அப்படியே நகர்ந்து செல்வதை புதர்களின் சல சலப்பை வைத்து கண்டு கொண்டார்.

        இதுதான் முதல் தடவை என்றாலும் அதன் பின் வாரம் இரண்டு அல்லது மூன்று முறை அதை சந்திக்கும் வாய்ப்பு வந்து கொண்டே இருந்தது. ஆனால் இருவருக்கும் ஒரு வித இடைவெளியும் இருந்தது. அந்த மூத்த அதிகாரி சொல்லியிருந்த ஆக்ரோசத்தை அது அவரிடம் காட்டவே இல்லை. ஆனால் அவருடன் பணியில் இருந்த ஒரு சில வன அதிகாரிகள் லிங்கப்பா சொன்னதைத் தான் சொன்னார்கள்.

        அவருக்குள் ஒரு கேள்வி எழுந்து கொண்டே இருந்தது. ஏன் என்னிடம் அதனுடைய இயல்பான கோபத்தை காட்டவில்லை என்பதுதான். அதை விட இன்னொன்றையும் கவனித்தார். அது அவரை சந்தித்தாலும் சட்டை செய்யாமல் நடந்து செல்லும் போது, அதனுள் தென்பட்ட ஒரு கர்வம் “இது என்னுடைய இடம்” மனித கூட்டங்களுக்கு இங்கு இடமில்லை, என்பது போல கம்பீரமாய் நடந்து செல்வதை பார்த்து வியந்திருக்கிறார்.

        அதன் பின் இவருடைய பணி பல்வேறு மாநிலங்களில் உள்ள காடுகளில் தொடர்ந்தாலும் இந்த கரடியின் முதல் சந்திப்பு மட்டும் மறக்கவே முடியவில்லை.

       அவருக்குள் குற்ற உணர்ச்சியும் பெருகி கொண்டே வந்தது.  முப்பது வருடங்களுக்கு மேல் உணவு, தேவைகளை நிறைவேற்றி அவரது குடும்பத்தையும் காப்பாற்றியது இந்த காடு, ஆனால் நான்..?

        அம்மாவும் இல்லாமல் எப்படி நீ இந்தியாவில் போய் இருக்கப்போறே? மகளின்  கேள்விக்கு நம்ம ஊருல இருக்கற வீட்டுல ஒரு மாசம் இருக்கறேன், வாடகைக்கு இருக்கறவங்க எனக்கு ஒருத்தனுக்குத்தானே, சாப்பாட்டு விசயத்தை பாத்துக்கறேன்னுட்டாங்க. அப்படியும் முடியலையின்னா வந்துடறேன், மகளை சமாதானப்படுத்தினார்.

         சார் அந்த ஏரியாவுக்குள்ள போயிட்டு திரும்பி வர அஞ்சாயிரம் ரூபாய் ஆகும், சொன்ன “கால்டாக்சி ஓட்டுநரை” சரிப்பா போலாம். ஆனா உள்ளே விடுவாங்களா? அவன் சிரித்தான் என்ன சார் நீங்க உங்களுக்கு என்ன ஒண்ணும் தெரியாதா?

         அதிர்ச்சியாக இருந்தது, அன்று கிட்டத்தட்ட ஐந்தாறு கிலோ மீட்டர் அடர்ந்த காட்டு பாதை வழியாக “வனத்துறை ஜீப்பில்” சென்றால்தான் உள் வனத்தையே அடைய முடியும், அதற்கும் வெளியாட்களுக்கு அனுமதி கிடையாது. ஆனால் இப்பொழுது..!

       “ கால்டாக்சி” சர்வ சுதந்திரமாய் உள்ளே செல்ல அதன் முன்னாலும் பின்னாலும் இது போல பல வண்டிகள் வந்து கொண்டும் சென்று கொண்டும் இருந்தன.

      என்னப்பா..இப்படி வண்டிக போனா மிருகங்களுக்கு தொந்தரவு ஆகாதா?

      இங்க ஒரு “ஆஸ்ரமமே” இருக்கு, இங்க போற வர்ற வண்டிக எல்லாம் அங்கதான் போயிட்டு வந்து கிட்டிருக்காங்க, நீங்களும் அங்க தான் போறீங்கன்னு நினைச்சேன்.

       இல்லப்பா நான் “பாரஸ்ட் ஆபிசு” ஒண்ணு உள்ள இருந்துச்சு, அங்க போகணும்னு நினைச்சேன்.

       அப்படீங்களா அது கொஞ்ச தூரம் போயி “ரைட்ல” திரும்பும், அங்க அவங்க “செக் போஸ்ட்” வச்சிருப்பாங்க, எங்களை விடமாட்டாங்க. நான் வெளியவே நின்னுக்கறேன்.

       இறங்கி அலுவலகத்துக்குள் சென்று தன்னை அறிமுகப்படுத்தி கொண்டாலும் மனதளவில் சோர்ந்து போயிருந்தார்.

        அலுவலக வாசலில் நின்றவாறு அந்த காட்டையே பார்த்து கொண்டிருந்தவருக்கு இந்த இடத்தில்தானே, இவரை பார்த்து விட்டு அந்த கரடி கர்வமாய் நடந்து சென்றது ஞாபகம் வந்தது. “மனித கூட்டங்களுக்கு இங்கு என்ன வேலை? என்று கேட்பது போல..!

        சொன்னா கேட்டாத்தானே மகள் தந்தையை செல்லமாய் கோபித்து கொண்டாள். அவருக்கு அமெரிக்காவின் அந்த நாலு பக்க சுவர் அடைப்பே இப்பொழுது பாதுகாப்பாய் தோன்றியது.

Bear thought
by Dhamotharan.S   on 22 Nov 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தியானம் தியானம்- ஒரு “பத்தி” (பாரா) கதை தியானம் தியானம்- ஒரு “பத்தி” (பாரா) கதை
இறுதி இறுதி
உறவுகளோடு உறவாக உறவுகளோடு உறவாக
யானையும் மூப்பனும் யானையும் மூப்பனும்
மீண்டு வர முடியும் மீண்டு வர முடியும்
தர்ப்பணம் தர்ப்பணம்
நேர்மை என்பது இவ்வளவுதான்..! நேர்மை என்பது இவ்வளவுதான்..!
அவரவர்களின் யதார்த்தம் அவரவர்களின் யதார்த்தம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.