LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் அறிஞர்கள்

"கவியோகி மகரிஷி' டாக்டர். சுத்தானந்த பாரதியார்

தமிழின் தலைவிதி தமிழர் கையில் உள்ளது; தமிழர் கால வேகத்தையறிந்து முன்னேற வேண்டும். தமிழ் ஏதோவொரு காலத்தில், தொண்டர்நாதனைத் தூதிடைவிடுத்தது; முதலையுண்ட பாலகனையழைத்தது; எலும்பைப் பெண்ணாக்கியது; மறைக்கதவைத் திறந்தது; எமகண்டத்தையும் வென்றது; மந்திரத் திறமை பெற்று விளங்கிற்று; தொல்காப்பியமென்னும் பொற்காப்பணிந்தது; சிலம்பு குலுங்க நடை தவழ்ந்தது; முன்னே திபேத்து மட்டும் தமிழ் வழங்கியது; ஹீப்ரு மொழியிலும் புகுந்தது; மேனாட்டுடனே வாணிபஞ் செய்தது; யவனரையும் சோனகரையும் பணியாளராகப் பெற்றது. தமிழ்ச் சித்தர் சீனத்திலுலாவினர். தமிழ் வணிகர் பொன்னும் முத்தும் வாரிக் குவித்தனர். தமிழரின் தேக்குக் கப்பல் உலகையெல்லாம் வாணிப வெற்றி கொண்டது. தமிழர் மொழி தனி மொழி. தமிழர் நாகரிகம் தற்காலத்து முற்போக்காளரும் வியக்கத்தக்கது. வள்ளுவரையும், சேக்கிழாரையும், அப்பரையும், மணிவாசகரையும், கம்பனையும், நம்மாழ்வாரையும், ஒüவைப் பிராட்டியையும் ஈன்ற தமிழ்த் தாயின் பெருமை அளவு கடந்ததே. எல்லாம் சரிதான்!

"இன்று தமிழரின் நிலைமை எப்படியுள்ளது? தமிழரைப் பிற நாட்டார் எப்படி மதிக்கின்றனர்? தமிழை மற்ற மொழியினர் எவ்வாறு கருதுகின்றனர்?' என்று சற்று அனுபவ வாயிலாக ஆராய்ந்தால், தமிழ் படுஞ்சிறுமை நமது மனத்தைக் குத்தும். தமிழ்ப் புலவர் மணிகள் கூடுமிடங்களில், ""கன்னடமும் களி தெலுங்கும் கவின் மலையாளமுந் துளுவும் உன்னுதரத்துதித்தெழுந்து... ஆரியம்போல் சீரிளமைத்திறம்...'' எல்லாம் பாடலாம். ஆனால் ஓர் ஆந்திரன் காதிற் படும்படி, ""ஆந்திரம், தமிழினின்று உதித்தது'' என்று வாயெடுங்கள் பார்ப்போம்: ""அரவம் அத்வானம்'' என்று இடித்துரைப்பான் தெலுங்கன். தமிழினின்று உதித்தனவென முன்னே ஒப்புக்கொண்ட மொழிகளும் இன்று ஆரியத்தையே தாயாகப் பாராட்டத் தொடங்கியுள்ளன.

கி.மு. 5000-இல் பரதகண்டமெல்லாம் தமிழே பரவியிருந்தது. சிந்து மாகாணத்திலுள்ள மொஹஞ்சதாரோ, ஹரப்பா என்னுமிடங்களில் மண்ணிற்கடியே இரண்டு பெரிய திராவிட நகர்களைக் கண்டுபிடித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். அதிலுள்ள பொருளெல்லாம் தமிழர் நாகரிகச் சின்னங்களேயாம். தமிழைச் சார்ந்த மொழிகள் பன்னிரண்டென்பர். இவையே முற்காலம் இந்தியர் மொழியாயிருந்தன. அவற்றுள் இராஜ் மஹால், ஓராயன், கூயி, கோண்டு, தூடா, கோடா முதலிய மொழிகள் வளர்ச்சியற்றுப்போயின. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, குடகு முதலியன நன்கு வளம் பெற்றவை. 300 ஆண்டுகளுக்கு முன்பே தலை தூக்கிய வங்கத்திற்கு உலகிற் பெருமதிப்புள்ளது. அக்பர் காலத்திலெழுந்த இந்தி, இந்திய மொழியானது. ஆங்கிலமும், பிரெஞ்சும், ஜர்மனும் காலத்தை ஆளுகின்றன. இம்மொழிச் செல்விகளெல்லாம் செங்கோல் பிடித்துலாவும் புகழ் வனத்தில் நமது தமிழன்னை எங்கே! அந்தோ! தமிழை நினைத்தால் நல்லதங்காள் கதைதான் முன்னே நிற்கிறது; சந்திரமதிதான் கண்ணீர் வடித்து எதிரே நிற்கிறாள். பிள்ளைகளே தாயை மதிக்கவில்லையே! பிறர் எப்படி அவளை மதிப்பர்?

பதினெண் கீழ்க்கணக்கும், ஐம்பெருங் காப்பியங்களும், கம்பச் சித்திரமும், சைவ-வைணவத் தொண்டரின் தீஞ்சுவையருட்பாக்களும் உள்ளன. ஆனால், அவற்றோடு தமிழ் நின்று விடுவதா? தமிழ்க் கலை வற்றாத உயிராக ஓடி, உலகிற்கே உண்ணீராகப் பெருக வேண்டாவா? பிரெஞ்சு லாரூஸ் அகராதியையும், ஆங்கிலப் பேரகராதியையும், வங்கம், ஹிந்தியில் வர்ணப் படங்களுடன் வரும் நூல்களையும் ஒருபுறம் பார்த்துவிட்டு, மற்றொருபுறம் தற்காலத் தமிழையும் பாருங்கள். அம்மொழிகளினும் உயர்ந்த அருட் செல்வம் தமிழுக்குள்ளது. அது கதிர் வீசிப் பரவ வேண்டும். புதுப் புதுத் துறையிற் புகுந்து அவரவர் திறனுக்கேற்றவாறு தமிழர் தமிழை வளர்க்க வேண்டும்.

உலகில் எங்கு ஓர் அரிய நூல் எழுதப் பெற்றாலும், ஹிந்தி உடனே அதைத் தனதாக்கிக் கொள்ளுகிறது. வங்கத்தில் ஓர் அரிய நூல் வெளிவந்தால், உடனே ஐரோப்பிய மொழிகளில் அது உலாவுகிறது. ஒரு வங்காளி முதலில் தனது தாய்மொழிப் பத்திரிகையைப் படித்தே, ஆங்கிலத்தைத் தொடுகிறான். எவ்வளவு ஆங்கிலப் புலமை வாய்ந்த வங்காளியும் தனது சகோதர வங்காளிக்குத் தாய்மொழியிலேயே கடிதம் எழுதுகிறான்; அவனுடன் தாய்மொழியே பேசுகிறான். படித்த தமிழன், எடுத்ததும், ""கமான் சார், பீச்சுக்குப் போவோம்; இன்று வெதர் ப்ளெசண்டாயிருக்கிறது'' என்று பேசுகிறான். ஆங்கிலந் தெரிந்த தமிழரில் எத்துணைப்பேர் தமிழ்ப் பத்திரிகை படிப்பவர்?

""என்ன சார் தமிழ்? இங்கிலீஷில் டிலைட்புஃல், ஹாப்பி, ஜாயஸ் என்று வகையான இன்பம் இருக்கிறதே; இதற்கெல்லாம் தமிழிற் சொற்களுண்டோ?''
 என்று ஒருவர் கேலியாகக் கேட்டார். அடுத்தவரும், ""ஆமாம் சார் தமிழிலே என்ன இருக்கிறது? ஏதோ சில தமிழைய்யாக்கள், "குசுடுதுபுறு' என்று சத்தம் போடுகிறார்கள்'' என்றார்.

""அன்பரே, "தமிழே இன்பம்'. அந்த இன்பம் ஆங்கிலத்திலுள்ளது போலவே, ஓகை, உவப்பு, மகிழ்வு, களிப்பு, இனிமை, கனிவு எனப் பலவகைப்படும்'' என்று பளிச்செனச் சொன்னதும் அவர் வாய் பிறகு நீளவில்லை.

தமிழுக்கு இந்நாட்டில் முதன்மை பெற உரிமையுண்டு. அதுதான் முன்மொழி, தொன்மொழி. இதை யாரும் மறுக்கமுடியாது. நாடெல்லாம் பரவியிருந்து, இன்று ஒரு சிறு எல்லையில் துடித்துக் கொண்டிருக்கும் நம் நாட்டு முன்மொழியான தமிழ்மொழி வளர்ச்சியும், அரசியல் இயக்கத்தில் ஆதரவும் பெறவேண்டும். வட மொழிக்கும், ஹிந்திக்கும் எவ்வளவு பொதுவுரிமையுண்டோ அதைவிட நூறு பங்கு தமிழுக்கு உண்டென்போம். இன்று தமிழ் பேசுவோர் தொகை குறைந்ததினால், தமிழின் பெருமை குறைந்ததாகுமா? வேதம் படிப்போர் மிகச் சிறு தொகையினர் எனில், வேதத்தின் பெருமை குறைந்துபோமோ?

 இன்னும் உறங்கினால், தமிழ், பிற மொழிகளுக்குப் பலியாகும். தமிழ்போன பிறகு, தமிழர் உயிர்ப்பிணமாயிருந்தென்ன பயன்? பிறகு, லெமூரியாவைப் பற்றி நாம் இப்போது பேசுவது போலவே இனி வரும் உலகோர், ""ஒரே ஒரு காலத்தில் "தமிழ்' என்று ஒரு மொழியிருந்ததாம். தமிழர் என்ற ஒரு மரபினர் இருந்தார்களாம். அவர்களைக் கால வெள்ளம் கொண்டுபோயிற்றாம்!'' என்று பேசுவர். தமிழைச் சிரஞ்சீவியாக்க வாருங்கள் தமிழர்களே!

ஹிந்துஸ்தானி வந்த பிறகு, தமிழுக்கு ஒரு புதிய ஆற்றல் பிறந்துள்ளது. தூக்கம் ஒழித்து துணிவுற்றெழுந்தோம். இனி, "எம்மை எந்த அயல் மொழியும் விழுங்கக் காணிலோம்; எம்மொழிக்கும் எமது தாய்மொழி தாழ்ந்ததன்று' என்றுணர்ந்தோம். தமிழன்பர்களே! இப்போது நமது பெருமையும் உரிமையும் அறிந்தோம். இத்துடன் நாம் அயர்ந்து போகக்கூடாது. ஒவ்வொரு தமிழனும் இவ்வாறு உறுதி பூணட்டும்:

 ""நான் தமிழன். தமிழ் எனது தாய்மொழி. நான் தமிழுக்கே, தமிழர் உயர்விற்கே, தமிழ் நாட்டின் முன்னேற்றத்திற்கே வாழ்வேன். நான் எதைச் செய்தாலும் தமிழ், தமிழர், தமிழ்நாடு ஆகிய இவை பெருமை பெறவே செய்வேன். தமிழுக்கும், தமிழ் நாட்டுக்கும், தமிழருக்கும் கேடு சூழும் எதனையும் துணிந்தெதிர்த்து வெல்லுவேன். என்னுயிரை மறந்தாலும், தமிழை மறவேன். என்னுடலைச் செகுத்தாலும், தமிழைக் கைவிடேன். எனது தமிழ் மொழிதான் உலகில் முதன் முதல் தோன்றிய முதுமொழி. எனது அன்னையை மீண்டும் மொழியரசியாக அரியணையேற்றவே நான் உயிர் வாழ்வேன். என்னுயிர் உள்ளமட்டும் ஒவ்வொரு நாளும், தமிழ் முன்னேற்றத்திற்காகவும், தமிழர் தலைநிமிர்ந்து உலகில் ஓங்கவும், இரண்டு மணி நேரமாவது ஏதாயினும் பயனுள்ள ஒரு தொண்டு செய்வேன். அத்தொண்டு செய்தாலன்றி, நான் உணவு கொள்ளேன். காலையும் மாலையும் எனது தமிழ் நாட்டைத் தமிழாலயமாகக் கருதித் தமிழ் வாழவே திருவருளை வணங்குவேன். "என் தாய் வாழ்க' என்ற மந்திரத்தை எப்போதும் நினைப்பேன். என்னை எதிர்த்த அன்னியருக்குத் தமிழின் பெருமையை, தமிழ்ப் பெரியாரின் சிறப்பை, தமிழ் நாட்டின் மாண்பை விளக்குவேன். இன்றியமையாத சமயமன்றி, மற்றெப்போதும் தமிழிலேயே பேசுவேன்; எழுதுவேன். எந்தாய் வாழ்க! எந்தாய் வாழ்க!'' இவ்வுறுதி தமிழன் உயிர்ப்பாகும்.

by Swathi   on 10 Apr 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.