LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் அறிஞர்கள்

கி.வா.ஜகந்நாதன்

தமிழில் சொல் வளம் மேலும் மேலும் வளர்ச்சி பெற்றதற்குரிய காரணங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். தமிழர் வாழ்வில் புறவாழ்க்கைக்குரிய பொருள்களும் சிந்தனைக்குரிய கருத்துக்களும் நாளடைவிலே பெருகி வந்தது ஒரு காரணம். புலவர்கள் இலக்கியங்களை சிருஷ்டி செய்யும்போது பல திரி சொற்களை ஆக்கிக்கொண்டது மற்றொரு காரணம். வேற்று நாட்டுப் பொருளும் கருத்தும் இலக்கியமும் தமிழர் வாழ்க்கையிலே கலந்தது மூன்றாவது காரணம்.


வாழ்க்கை விரிய விரிய, மனிதன் உலவும் இடம் விரிகிறது. அவனுடைய நோக்கம் விரிகிறது. அவனுக்குப் பழக்கமான மக்கள் விரிகின்றனர். ஆகவே, அவனுடைய பேச்சும் இவற்றுக்கு ஏற்றபடி விரிகிறது. தமிழ் மொழியிலே சொல் வளம் நிரம்பியிருப்பதற்குக் காரணம் தமிழர்களுடைய பரந்த நோக்கமே ஆகும். இந்தியாவில் வழங்கும் மொழிகளுக்குள் தமிழே சொல் வளத்தில் தலைசிறந்து நிற்கிறது.

மொழியைப் பற்றி ஆராயும் புலவர்கள் சிலசில மொழிகளை இனம் பிரித்திருக்கிறார்கள். இந்தியாவில் முக்கியமான இரண்டு இனங்களைக் காணலாம். வடநாட்டிலே வழங்கும் மொழிகளிலே பெரும்பான்மை ஓர் இனத்தைச் சேர்ந்தவை. அவற்றை உடன்பிறந்தார் என்று வைத்துக் கொள்ளலாம்.

ஆங்கிலம் அந்த இனத்துக்குத் தாயாதியாகும். நெடுங்காலத்துக்கு முன் ஒரு குடும்பமாக இருந்து பிறகு பிரிந்துபோன மொழி அது. இந்த மொழியினத்தை "இந்திய ஐரோப்பிய மொழிக்கூட்டம்' (ஐய்க்ர்-உன்ழ்ர்ல்ங்ஹய் ஞ்ழ்ர்ன்ல் ர்ச் கஹய்ஞ்ன்ஹஞ்ங்ள்) என்று மொழி வரலாற்றை ஆராய்ச்சி செய்கிறவர்கள் குறிப்பார்கள். தென்னாட்டில் உள்ள தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு என்பவற்றைத் "திராவிட மொழிக் கூட்டம்' என்று குறிக்கிறார்கள்.
பழங்காலத்தில் இந்த முறையிலே வகைப்படுத்தவில்லை. ஆனால், இலக்கண அமைதியில் வடநாட்டு மொழிகளுக்கும் தென்னாட்டு மொழிகளுக்கும் பெரிய வேறுபாடுகள் இருப்பதை அவர்கள் உணர்ந்திருந்தார்கள்.

எழுத்து, சொல், பொருள் என்ற மூன்று வகையிலும் தமிழுக்கென்று சிறப்பான அமைதி ஒன்று இருப்பதை அவர்கள் கவனித்தார்கள்.
ஒருமொழி இன்ன இனத்தைச் சேர்ந்தது என்று தெரிந்து கொள்வதற்கு அதன் வாக்கிய அமைப்பே சரியான உதாரணமாக இருக்கும். வெறும் சொற்களை மாத்திரம் வைத்துக்கொண்டு இந்த மொழி இன்ன குடும்பத்தைச் சேர்ந்தது என்று சொல்ல முடியாது.

"நாத தத்துவத்திலிருந்து படிப்படியாக மற்ற தத்துவங்கள் உண்டாயின', "சூரிய மண்டலமாகிய பெரிய அக்கினி உருண்டையிலிருந்து பூமி முதலிய உருண்டைகள் சிதறுண்டு பிறந்தன' என்ற செய்திகள் சமய நூலிலும் விஞ்ஞான நூலிலும் கண்ட உண்மைகள். அவற்றை நாம் தெரிந்து வைத்துக்கொள்கிறோம்.

நம்முடைய வாழ்க்கை முறையும் அந்தப் பழைய நிலையும் ஒன்றுக்கொன்று பயன்படும் என்று சொல்வதற்கில்லை. அப்படித்தான் வடமொழியும், தென்மொழியும் ஒன்றன் முகத்தை மற்றொன்று நோக்காமல், இயற்கையான பிரிவுக்கு உட்பட்டு வழங்கின என்று சொல்லும் நிலையும் சரித்திரத்துக்குப் பயன்படும்; நமக்குப் பயன்படாது.

சரித்திர காலத்துக்கு முந்தியே தமிழ் இலக்கிய காலம் தொடங்கிவிட்டது. சரித்திரத்துக்கு எட்டாத காலத்தில் இயற்றப்பெற்றது தொல்காப்பியம். அதாவது, அதன் காலத்தை ஆராய்வதற்குரிய சாதனங்கள் சரித்திர ஆராய்ச்சியாளர்களுக்கு இன்னும் கிட்டவில்லை. அத்தகைய தொல்காப்பியத்திலே வடமொழித் தொடர்பு தமிழ் நாட்டில் எவ்வளவு வேரூன்றி இருக்கிறதென்பது புலப்படுகிறது.

வடநாட்டிலிருந்து தென்னாட்டுக்கும், தென்னாட்டில் இருந்து வடநாட்டுக்கும் மக்கள் சென்று தங்கி வாழ்ந்தார்கள். இந்த வாழ்க்கைக்கு இயற்கையிலும் செயற்கையிலும் தடையொன்றும் இருக்கவில்லை.
மக்கள் தம்முள்ளே கலந்து வாழ்ந்தால், கருத்துக் கலப்பும் மொழிக் கலப்பும் அமைவது இயற்கையே. ஆனால், தமிழ்மொழி தன் மரபை மாற்றிக் கொள்ளவில்லை. வடமொழியிலிருந்து நாளடைவில் அது எவ்வளவோ விஷயங்களைப் பெற்றுக்கொண்டது. இன்று நாம் ஆங்கிலத்திலிருந்து சொல்லும் பொருளும் பெறவில்லையா? எந்த நாட்டிலும் எந்த மொழியிலும் இத்தகைய கலப்பைக் காணலாம்.

கலப்பு இல்லாத நிலை வாழ்க்கையின் அறிகுறி அல்ல; விரிவு உண்டாவது கலப்பினால்தான்; ஒடுக்கம் ஏற்படுவது பிரிந்து தனித்து நிற்பதனால்.
தமிழ் தன் வாக்கிய மரபை இழக்கவில்லை. அதனோடு சார்ந்த தெலுங்கு முதலியவைகளும் வாக்கிய மரபில் இன்றும் தமிழைப் பின்பற்றியே நடக்கின்றன. எழுத்திலும் சொல்லிலும் வடமொழியிலிருந்து அதிகமாக அவை கடன் வாங்கிக்கொண்டன. தமிழ் அந்த அளவுக்கு வாங்கிக் கொள்ளவில்லை. இயற்கையான செல்வம் படைத்தவர்கள் கடன் வாங்க யோசிப்பார்கள் அல்லவா? ஆனால், அடியோடு கதவைச் சாத்தி மூடி உள்ளே வராதே என்று சொல்லவில்லை. ஏனெனில், வடமொழி எங்கிருந்தோ வரவில்லை. இமயம் முதல் குமரி வரையில் மொழிகள் வேறாக இருந்தாலும் உள்ளம் ஒன்றாகத்தான் இருந்தது.

அறம், பொருள், இன்பம், வீடு என்ற உறுதிப் பொருள்களைப் பற்றி இந்திய நாடாகிய நாவலந் தீவு முழுவதும் ஒரே மாதிரியாக எண்ணியது. இலக்கியத்திலே வெவ்வேறாக இருந்தாலும் சாத்திரங்களிலே இந்தியா ஒருமைப்பாட்டைக் காட்டியது.

பழங்காலத்தில் சமய நூல், பிற சாத்திரங்கள் யாவும் பெரும்பாலும் வடமொழியில்தான் இருந்தன. காரணம் என்ன? அது அறிவைப் பொதுவாக்கும் கருவியாக உதவியது.

இமயம் முதல் குமரி வரை வடமொழி வல்லார் பலர் இருந்தனர். தமிழ் நாட்டிலும் பலர் இருந்தனர். தொல்காப்பியரே சிறந்த வடமொழிப் புலவர்.
சமய சாத்திரங்களும், பிற கலைகளும் மனித சாதிக்கே பொதுவானவை. இந்தியா அனைத்தும் ஒன்று என்ற நினைவிலே இந்த நாட்டுக்கு ஒரு தனிச் சால்பு அமைந்திருந்தது. அதை வற்புறுத்தும் சாத்திரங்கள் இந்தியர் அனைவருக்கும் பயன்பட வேண்டுமானால், பொது மொழி ஒன்றில்தானே இருக்க வேண்டும்? ஆதலின் சமய நூல்களும் பிறவும் வடமொழியில் எழுந்தன. அந்த நூல்களில் மொழி பிரதானம் அன்று; கருத்தே பிரதானம்.
புலமையுள்ளவர்கள் படித்து அறிந்தார்கள்; பிறருக்கும் தெரிவித்தார்கள். ஆகவே, மண்டல மொழிகளில் இலக்கிய வளம் மாத்திரம் தடையின்றி வளர்ந்து வந்தது. இப்படி அமைந்த வாழ்வில் தமிழுக்கென்று ஒரு தனி இடம், வடமொழிக்கென்று ஒரு தனி இடம் அமையவில்லை. இரண்டும் அடுத்தடுத்தே வளர்ந்தன. இரண்டு மொழிகளிலும் வல்லார் பலர் இருந்தனர். ஆகவே, மொழிக் கலப்பு இயற்கையாகவே அமைந்தது. வடமொழியிலிருந்து பல சொற்கள் மண்டல மொழிகளில் கலந்தன; தமிழிலும் கலந்தன.
சமயம், இந்தியா அனைத்துக்கும் பொதுவான கலைகள் ஆகிய இத்துறைகளிலே பல சொற்கள் வந்து கலந்தன; பலவகையிலும் கலந்தன. வடமொழி இந்தியாவின் சாத்திர மொழி, தமிழ்நாடு நாவலந் தீவைச் சேர்ந்ததுதானே? ஆகவே, அதன் தொடர்பு தமிழுக்கு முரணாக இருக்கவில்லை. ஆனால், தமிழ் தன் மரபு கெடாமல் சொற்களை மாத்திரம் வடமொழியிலிருந்து பெற்றது. பல சொற்களைத் தன்னுடைய இயற்கைக்குப் பொருந்த மாற்றிக்கொண்டது. பல சொற்கள் தமிழா வடமொழியா என்று தெரிந்துகொள்ள முடியாதபடி மாற்றம் அடைந்தன.

வடமொழிக்கும் தமிழ்ச் சொற்கள் சென்றன. அம்மொழியைத் தனியே பேசும் கூட்டத்தினர் இல்லாமையால் அதில் அதிகக் கலப்பு ஏற்படவில்லை. இயற்கையாக இணைந்து பழகும் வாழ்க்கையிலேதான் கலப்பு நிகழும்; பேச்சு மொழியிலும் கலப்பு ஏற்படும். நூலளவில் நின்ற மொழியில் அவ்வளவு கலப்பு நிகழாது.

"வடசொற்களைத் தமிழில் சேர்த்துக் கொண்டது எப்போது?' என்று காலக் கணக்காகக் குறிப்பது எளிதன்று. பழங்காலத்தில் நூலளவில் வடமொழிக் கலப்புக் குறைந்தும், பேச்சில் மிகுந்தும் இருந்திருக்க வேண்டும். இன்றும் பேச்சில் அதிகமாகவே இருக்கிறது.

வெறும் நூல் வழக்கிலே உள்ள வடசொற்களை மாத்திரம் பார்த்தால், ஏதோ திடீரென்று வடசொற்கள் தமிழில் படையெடுத்து வந்தது போலத்தான் தோன்றும். நூல் வழக்கைக் காட்டிலும், பேச்சு வழக்கில் வடசொற்கள் மிகுதியாக வழங்கியதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். இதற்குச் சிறந்த சான்றாக இருப்பவை சாசனங்கள்.

ஒரு குறிப்பிட்ட காலத்தில் உண்டான நூலை எடுத்து அதில் உள்ள வடசொற்களைக் கணக்கிட்டுப் பாருங்கள்; அதே காலத்தில் எழுந்த கல்வெட்டுகளில் உள்ள வடசொற்களைப் பாருங்கள். கல்வெட்டுகளில் அவை மிகுதியாகவே இருப்பது தெரியவரும்.

வடசொல் தமிழில் புகுந்தது இயற்கையான நெறி. அதனைத் தொல்காப்பியர் அறிந்து இலக்கணம் வகுத்திருக்கிறார்.

""வடமொழிக்கே உரிய எழுத்துகளை விட்டுத் தமிழுக்கும் வடமொழிக்கும் பொதுவான எழுத்துகளால் அமைந்த வட சொற்கள் தமிழிலே செய்யுளிலே வரும்'' என்றும், ""தமிழில் இல்லாத ஒலியாக இருந்தாலும் வேறுவிதமானாலும் தமிழின் இயல்புக்கு ஏற்றபடி சிதைந்து வழங்கலாம்; அது புலவர்களுக்கு உடன்பாடே'' என்றும் சொல்கிறார்.

கிருஷ்ணனைக் "கண்ணன்' என்றும், சிவ: என்பதைச் "சிவன்' என்றும், ஆக்ஞை என்பதை "ஆணை' என்றும் திரித்துக் கொண்டது இந்த இலக்கணத்திலே அமையும். இந்த இரண்டு வகையையும் முறையே "தற்சமம்' என்றும் "தற்பவம்' என்றும் பிற்காலத்து இலக்கணக்காரர்கள் குறிப்பார்கள்.
தென்மொழி, வடமொழியிலிருந்து சொற்களை ஏற்றுக்கொண்டது இன்று நேற்றல்ல; தொல்காப்பியர் காலத்துக்கு முன்பிருந்தே அது நிகழ்ந்து வருகிறதென்பதற்குத் தொல்காப்பியம் சாட்சியாக நிற்கிறது.

காரணப்பெயர்களுள் சில...
அடுப்பு -அடுதலுக்கு (சமைத்தலுக்கு) உரியது.
அண்ணன் - குடும்பத்தில் தலைமை நிலை எய்தும் பெருமைக்கு உரியவன் (அண்ணல்-பெருமை).
அமக்களம் - அமர்க்களம் என்னும் சொல்லின் சிதைவு.
அமர்க்களம் - போர் நடக்கும் இடத்தில் காணப்படும் அடி, குத்து, பேரோசை.
அரவணைத்தல் - பாம்புகள் ஒன்றோடு ஒன்று
தழுவிக்கொண்டு அணைத்து இன்புறுமாம்.
(அரவு+ அணைத்தல்) அதனால் அரவணைத்தல்
என்னும் தொடர், அன்புடன் தழுவி வாழ்தலுக்குக் கூறப்படுகிறது.
அரை - ஒவ்வொருவர் உயரத்தில் அரைப் பகுதியாக இருப்பதால் இடுப்பு, "அரை' எனப்படும்.
அறை - வீட்டு அறை. பகுதி பகுதியாக பகுக்கப்படுவதால், ஒரு பகுதி "அறை' எனப்பட்டது.
ஆறு - வழியை அறுத்துக் கொண்டு ஓடுவது ஆறு.
இடுக்கண் - கண் இடுக்கும்படியாக உள்ள அளவுகடந்த துன்பம்.
உலகம் - நீர் உலர்வதால் ஏற்பட்டது உலகம்.
உள்ளம் - மனம் உள்ளுவதற்கு - நினைப்பதற்கு இடமாய் இருப்பது. (மனம் என்பது மூளையில் இருப்பது. இருதயத்தில் இருப்பதாக நினைப்பது தவறு).
ஊருணி - ஊராரால் உண்ணப்படும் நீரை உடையது.
எருது - ஏர் உழுவதற்கு உரியது.
ஒத்திகை - ஒத்து இருக்கை. நாடகம் நல்ல முறையில் ஒத்திருக்கிறதா என்று பார்த்தல்.
ஓநாய் - கோணாய் என்பது ஓநாய் என மருவிற்று (கோள்+நாய்-கோணாய். கோள்-வலிமை).
கடல் - கடப்பதற்கு அரியது என்று முற்காலத்தில் கருதப்பட்டதால் கடல் எனப்பட்டது.
கரி - கருநிறமுடையது கரி (யானை) எனப்படும்.
கிழக்கு - பள்ளமாய் இருக்கும் திசை கிழக்கு.
குடை - குடைவாய் இருப்பது.
குடம் - உட்பகுதி குடைவாய் - வளைந்து இருப்பது.
குடுவை - குறுகிய வாயை உடையது.
குளம் - குளிப்பதற்கு உரியது.
சோறு - சொல்-நெல். சொல்லுள் (நெல்லுள்) இருப்பது சோறு.
தட்பம் - தண்மை (குளிர்ச்சி) உடையது.
தந்தை, தாய் - தன்னைத் தந்தவன் - தந்தவள்
தாலாட்டு - தால்-நாக்கு. நாவை ஆட்டிப் பாடுவது.
தோப்பு - மரங்களின் தொகுப்பு. தொகுப்பு என்பதன் மரூஉ தோப்பு.
படை - படு-கொல். கொல்லும் கருவிக்குப் படை என்பது பெயர்.
புடைவை - புடை-பக்கம். பக்கத்தில் கொய்சகம் வைத்துக் கட்டுவது. புடவை என மருவி
வழங்குகிறது.
புடலங்காய் - புழல்-துவாரம். துவாரமுடைய காய். "ழ'கரம், "ட'கரமாயிற்று.
முன்தானை - சேலையின் முற்பகுதி. தானை-துணி.
வண்ணான் - இச்சொல் மலையாளத்தில் "மண்ணான்' என வழங்குகிறது. மண்ணுதல் -கழுவுதல். துணியைத் துவைத்துத் தருபவன். தமிழில் "ம'கரம் "வ'கரமாயிற்று.
விதவை - கணவனோடு வாழும் தவம் இல்லாதவள்.
விழா - விழைந்து (விரும்பி) நடத்துவது

by Swathi   on 10 Apr 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்.. கணித்தமிழ் வல்லுனர் திரு மு.சிவலிங்கம் அவர்கள் மறைந்தார் - தமிழுக்காக தொண்டு செய்தவர் - அஞ்சலி செலுத்துவோம்..
பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி பன்மொழிப் புலவர் மயிலை சீனி.வேங்கடசாமி
ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞர் பூராடனார் க. தா. செல்வராசகோபால்
எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி எழுத்தாளரும், இலக்கியவாதியுமான நா.பார்த்தசாரதி
நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் சி.சு.செல்லப்பா
மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார் மிகச்சிறந்த இலக்கிய ஆளுமை மு. அருணாசலனார்
நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்... நாடகம் மற்றும் நாடகம் தொடர்பாக என் சேகரிப்பில் உள்ள தொகுப்புகள்...
வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக. வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை அன்னைத்தமிழில் எழுதிடுக.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.