LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 944 - நட்பியல்

Next Kural >

அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
முன் உண்ட உணவு செரித்த தன்மையை அறிந்து மாறுபாடில்லாத உணவுகளைக் கடைபிடித்து அவற்றையும் பசித்த பிறகு உண்ண வேண்டும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
அற்றது அறிந்து - முன்னுண்டது அற்றபடியை யறிந்து; துவரப் பசித்து - பின் மிகப்பசித்து; மாறல்ல கடைப் பிடித்துத் துய்க்க - உண்ணுங்கால் மாறுகொள்ளாத உணவுகளைக் குறிக்கொண்டு உண்க. (அற்றது அறிந்து என்னும் பெயர்த்துரை அதனை யாப்புறுத்தற் பொருட்டு. உண்டது அற்றாலும் அதன் பயனாகிய இரதம் அறாதாகலான், அதுவும் அறல் வேண்டும் என்பார், 'மிகப்பசித்து' என்றார். பசித்தல் வினை ஈண்டு உடையான்மேல் நின்றது. மாறு கொள்ளாமையாவது உண்பான் பகுதியோடு மாறுகொள்ளாமையும், கால இயல்போடு மாறுகொள்ளாமையும், சுவை வீரியங்களால் தம்முள் மாறுகொள்ளாமையும் ஆம். அவையாவன, முறையே வாதபித்த ஐயங்களானாய பகுதிகட்கு அடாதவற்றைச் செய்வனவாதலும், பெரும்பொழுது சிறுபொழுது என்னும் காலவேறுபாடுகளுள் ஒன்றற்காவன பிறிதொன்றற்கு ஆகாமையும்,தேனும் நெய்யும் தம்முள் அளவொத்து நஞ்சாதல் போல்வனவும் ஆம். அவற்றைக் குறிக்கொள்ளாது மனம் பட்டவாற்றால் துய்ப்பின், அதனானே நோயும் மரணமும் வருதலின், 'கடைப்பிடித்து' என்றார்
மணக்குடவர் உரை:
முன்பு உண்டவுணவு அற்றதனை அறிந்து பின்பு அறுமளவும் கடைப்பிடித்து உண்ணுங்கால் ஒன்றினோடொன்று மாறுகொள்ளாத உணவினை மிகவும் பசித்து உண்க. மாறுகோடலாவது நெய்யும் தேனும் இனியவாயினும் தம்மிலளவொக்குமாயின் கொல்லும்; அதுபோல்வதாம். இஃது உண்ணுங்கால் அளவறிந்துண்ணலேயன்றி மாறல்லவும் உண்ணவேண்டு மென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
அற்றது அறிந்து - முன்னுண்டது செரித்த நிலைமையை அறிந்து; துவரப் பசித்து-முற்றப் பசித்தபின்; மாறுஅல்ல கடைபிடித்துத் துய்க்க- உடற்கூறு பருவம் விருப்பம் காலம் இடம் முதலியவற்றோடு மாறுகொள்ளாதனவும், மணஞ்சுவை வலிமைகளால் மாறுகொள்ளாதனவுமான, உணவுகளைக் குறிக்கொண்டு உண்க. 'அற்றது போற்றி'(642)என்றும், 'அற்றாலளவறிந்து (343) என்றும், முன்பு இருமுறை கூறியதோ டமையாது மீண்டும் இங்கு 'அற்ற தறிந்து' என்றது, செரிமானத்தின் இன்றியமையாமையை வலியுறுத்தற் பொருட்டாம். ஆசிரியர் இதை முதன்மையாகக் கொண்டதினாலேயே, இன்பத்துப்பாலில் உலகிற் சிறந்த இன்பத்தைக் கூறுமிடத்தும், " உணலினும் உண்ட தறலினிது காமம் புணர்தலி னூட லினிது", என உவமமாகக் கூறியிருத்தல் காண்க. உண்டது செரித்த பின்பும் அதன் சுவையும் மணமும் சற்று நேரம் நிற்குமாதலின் , 'துவரப்பசித்து' என்றார். பசித்தல் என்னுஞ் சினைவினை இங்கு முதல் வினையாக நின்றது. ஊதை பித்த கோழைகளை மிகுப்பனவும் குறைப்பனவுமாக உணவுகள் உடற் கூற்றோடும், இளமைக்குரிய வுணவுகளை முதுமையிலுண்பது பருவத்தொடும், அருவருப்பான தோற்றமும் நாற்றமுமுள்ள வுணவுகள் விருப்பத்தொடும், கோடைக்குரிய வுணவை மாரிநாளிலும் காலைக்குரிய வுணவை மாலையிலும் உண்பது பெரும்பொழுதும் சிறுபொழுதுமான காலத்தொடும், வெப்பநாட்டிற்குரிய வுணவைக் குளிர் நாட்டிலுண்பது இடத்தொடும், மாறுகொள்வனவாம். தேனும் நெய்யும் தம்முள் அளவொத்து நஞ்சாதல் போல்வன சுவை வலிமைகளால் மாறு கொள்வனவாம். அறுசுவைகளுள், துவர்ப்பையும் புளிப்பையும் ஊதைக் கூற்றோடும், உவர்ப்பையும் கைப்பையும் பித்தக் கூற்றோடும், இனிப்பையும் கார்ப்பையும், கோழைக் கூற்றோடும், தொடர்புபடுத்திக் கூறுவர் மருத்துவர். ஒரே சுவையுள்ள காய்கனிகள் நேர்மாறான குணஞ்செய்வதாலும், ஒரே கனி வேறுபட்ட வளர்ச்சி நிலையிலும் வேறுபட்ட நிலத்தாலும் வேறுபட்ட காலத்தாலும் சுவை வேறுபடுதலாலும், சுவையை மட்டும் நோக்காது பொருளையும் நோக்கி, ஏற்பதும் ஏற்காததும் அறிந்து கொள்வதுங் தள்ளுவதுஞ் செய்தல் வேண்டும். அயலிடங்களில் உடற்கூறு முதலியவற்றோடு மாறுகொள்ளும் உணவுகளை உண்ண நேரினுங் , அவற்றிற்குரிய மாற்றுக்களை உடனே உண்டுவிடுவது நோய் வராமல் தடுக்கும் முற்காப்பாம் ஒவ்வோருணவுப் பொருளிலும் சிற்றளவாகவோ பேரளவாகவோஒவ்வொரு குற்றமிருந்தாலும், ஒருவ ருடற்கொத்தது இன்னொருவருடற் கொவ்வாமையாலும், பித்தத்தையுங் காய்ச்சலையும் நீக்கினும் தாது வளர்ச்சியைக் குறைக்கும் இஞ்சி சுக்குபோல ஒன்றிற்காவது இன்னொன்றிற் காகாமையானும், அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாதலாலும், எல்லாவற்றின் இயல்பையும் உரையளவையால் அல்லது பட்டறிவாலறிந்து, எல்லா நிலைமைக்கும் ஏற்ப உடம்பிற்கொத்த வுணவை அளவாகவுண்டு நோயின்றி இன்புறுக என்பார். 'கடைப் பிடித்து மாறல்ல துய்க்க' என்றார். இக்குறளால் ஒத்த வுணவை நன்றாய்ப் பசித்த பின்னரே யுண்ணவேண்டு மென்பது கூறப்பட்டது.
கலைஞர் உரை:
உண்டது செரித்ததா என்பதை உணர்ந்து, நன்கு பசியெடுத்த பிறகு உடலுக்கு ஒத்து வரக்கூடிய உணவை அருந்த வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
முன்பு உண்டது சீரணமாகிவிட்டதை அறிந்து நன்கு பசிக்கும்போது உடம்பிற்கும் காலத்திற்கும் ஒவ்வாத உணவினை விலக்கி, வேண்டியவற்றை உண்க.
Translation
Knowing the food digested well, when hunger prompteth thee, With constant care, the viands choose that well agree.
Explanation
First assure yourself that your food has been digested and never fail to eat, when very hungry, whatever is not disagreeable to you.
Transliteration
Knowing the food digested well, when hunger prompteth thee, With constant care, the viands choose that well agree.

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >